வெங்கட் சாமிநாதன்
இம்மாதம் சிறுகதைகளின் வருகை இன்னமும் குறைந்துவிட்டது. வருத்தம் என்னவென்றால், போனமாதம் வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், நல்ல கதைகள் எண்ணிக்கை குறையவில்லை. இம்முறை அதற்கும் கேடுகாலம்.
இம்மாதம் வந்துள்ள கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று என்று சொல்லக் கூடியது பழையவரும் தேர்ந்த கையுமான பழமை பேசியினது தான். கொழுகொம்பு
அன்னிய சூழலில் தொடர்ந்து இருந்த போதிலும், பிறந்த மண்ணின் வாசம் விடாது, அதே சமயம் வாழும் அன்னிய மண்ணின் சூழலில் ஆழ்ந்த அனுபவம் நிறைந்த வாழ்நிலைகளை எழுதுகிறவர். இம்முறை மனிதனுக்கும் நாய்க்கும் இடையேயான உறவில் வாய் பேசாத ஜீவனின் நம்பிக்கையை மனிதன் பொய்க்கைச் செய்யும் கணங்களில் மனிதன் அதைக் குற்ற உணர்வோடு உணரச் செய்வது நன்றாக இருந்தாலும் அதை அதிக அலங்கார வார்த்தைகளால் நிரப்பாது செய்திருக்கலாம். இது காறும் பழமை பேசியின் எழுத்துக்களில் நான் காணாத ஒரு புதிய மாற்றம் இது
ஒரு உதாரணத்திற்கு ஆரம்பத்தையே எடுத்துக்கொள்ளலாம்,
நித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் சிரம் உயர்த்திப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் மெய்ப்புலங்கள் யாவும் நான்கு உருவங்களுக்குள் கட்டுண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. நான் மெதுவாய் எனும் கூட்டுக்குள் புகுந்து சன்னல் ஓரத்துக்குப் போய், சிறிதே சிறிதாய் திரை விலக்கிப் பார்த்தேன். ஒட்டு மொத்த நீலவண்ணத்தையும் வானக்கூரைக்கு அடித்திருந்தான் இயற்கை தேவன்.
எனக்கு இது வேண்டாம் என்று தோன்றுகிறது. மற்றபடி, அவரது சுதந்திரம் இது.
இருப்பினும் அவரது கதை கொழு கொம்பு தான் வந்தவற்றில் சிறந்தது
பழமை பேசிக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வெ.சா..
இந்த மாத சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்ற கதைகள்:
எழுச்சி
கல்யாணப் புடவை
“ ஐ லவ் யூ “
“ திருட்டுப் பூனைகள் “
மை லிட்டில் ரெட் வேகன்
கொழுகொம்பு
மனதின் உயரம்….
அன்பு நண்பர்களே,
’சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பார்கள். படைப்புத் திறனும் அப்படித்தான் அல்லவா. எழுத எழுத மெருகேறிக் கொண்டேயிருக்கும் இல்லையா. வெ.சா. ஐயா போன்று சிறந்த விமர்சகரின் மோதிரக் கையால் குட்டுப்பட நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனைப் பயன்படுத்தி நம் திறமையையும் வளர்த்துக் கொள்ளலாமே.. இன்னும் நிறைய சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து தங்கள் படைப்புகளை வரவேற்கிறோம். இந்த முறையும் பரிசுக்கு உரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு பழமைபேசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
பவள சங்கரி

Leave a Reply