வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (10)

பவள சங்கரி

இரசனையில் செல்வந்தராகவும், பொறாமையிலிருந்து விடுதலை பெற்றவராகவும், அடுத்தவரின் நன்மைகளைக் கொண்டாடுபவராகவும், இல்லாத மற்றும் இரக்கமற்ற வேளையிலும் இன்னும் நெருக்கமான பெருந்தன்மையுடனான இருதயத்தினாலான அன்பு – இவை அனைத்துமே பணத்தினால் வாங்க முடியாத பரிசுகள்.
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் (1850 – 1894)

தயங்காமல் வழங்கவேண்டிய உற்சாகமான பரிசு!

தத்தித் தத்தி முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தையைப் பார்த்தவுடன் யாருடைய குழந்தை என்ற பாரபட்சமில்லாமல் ‘ஆகா, அருமையாக நடந்துவிட்டாயே. நீ பெரிய ஆளாகிவிட்டாயே என் செல்லமே…’ என்றெல்லாம் மனமார பாராட்டத் தோன்றும். அந்தக் குழந்தையும் அதனைப் புரிந்து கொண்டு பெருமையாக அடுத்த அடியை எடுத்து வைக்க முயலும். அந்த சின்னச்சின்ன பாராட்டுகள் மூலமாகவே குழந்தை ஒவ்வொரு காரியமாக செய்து வளர்ந்து வருகிறது. வளர்ந்த பிறகும் மனிதர்களிடம் இந்த எதிர்பார்ப்பு அப்படியே நிலைத்துவிடுகிறது. பாராட்டுகளுக்கும், புகழுக்கும் பெருவிருப்பம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். நம்முடைய அந்த மனம் திறந்த நேர்மையான பாராட்டும் அவருக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அது யதார்த்தமான நல்லெண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. இதனால் மனமும் இலகுவாகி நம் பணியையும் உற்சாகத்துடன் கவனிக்க வழிவகுக்கிறது. அடுத்தவர்களின் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அதிகரிக்கும் விதமாக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நாம் செய்யும் இந்த சிறிய காரியம் அவருடைய நல்லலெண்ணத்தை முழுமையாக சம்பாதித்துக் கொடுத்துவிடுகிறது. ஆக நம் சூழலுக்கு ஏற்றவாறு நம்மைச் சுற்றியுள்ள நம் சக மனிதர்களிடம் நம்மைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவதன் மூலம் நம்மைச் சுற்றியும் நல்ல விசயங்கள் நடந்து நம் வெற்றிப் பாதையை சீரமைப்பதையும் உணர முடியும்.

கடந்த காலத்தில் நடந்துபோன தவறுகளை இறுகப் பிடித்துக்கொண்டு குற்ற உணர்ச்சியிலிருந்து மீளாமல் தவிப்பது நம்மில் பலரின் இயல்பாகாவே இருக்கிறது. தவறே செய்யாத மனிதன் என்ற ஒருவன் இந்த உலகில் பிறந்திருக்கப் போவதில்லை. சின்னச் சின்ன தவறுகளே நம்மைப் புடம் போட்ட பொன்னாக ஆக்குகிறது. செய்த தவறையே திருத்திக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பது மட்டுமே நிம்மதியைக் குலைக்கக்கூடியது. குற்ற உணர்ச்சியை ஒதுக்கி விட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் நம் மனதைச் செலுத்துவது அறிவார்ந்த செயல்.

கடந்த காலம் என்பது உடைந்த பானை
எதிர் காலம் என்பது மதில் மேல் பூனை
நிகழ் காலம் என்பது கையில் வீணை

மீட்க முடியாத கடந்த காலத்தை எண்ணிக் கொண்டிருப்பதை விட்டு, என்ன நடக்கப் போகிறது என்று உறுதியாக தெரியாத எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையையும் அளவாக நிறுத்தி, சுகமான இராகங்களை இசைக்கக் கூடிய வீணையான நிகழ் காலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சுகமாக வாழலாமே. சில நேரங்களில் நம் உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போல அன்பான மனைவிக்கு சிடுமூஞ்சியான கணவனோ அல்லது அமைதியான கணவனுக்கு அதிரடியான மனைவியோ வாய்ப்பதும் உண்டு. இது போன்ற நேரங்களில் எதிர்மறையான அவர்களின் செயல்களைப் பொருட்படுத்தாமல், தவிர்த்து வந்தாலே நாளடைவில் அவர்களே சலிப்படைந்து தங்களுடைய எதிர் வினைகளை குறைத்துக் கொள்ளக் கூடும். அதை விடுத்து ஒவ்வொன்றிற்கும் எதிர்வாதம் செய்வது என்று ஆரம்பித்தால் நம் வாழ்நாளில் பெரும் பகுதி அதிலேயே கழிந்துப் போவதோடு நம் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு காரியத்தையும் நிதானமாகவும், மகிழ்ச்சியுடனும், செய்யும் வழமையை மேற்கொண்டாலே நம் அகம் குளிர்ந்து முகம் பொலிவுறும் என்பதில் ஐயமில்லை அல்லாவா? அகத்தின் அழகுதானே முகத்தில் தெரியும்?

படத்திற்கு நன்றி:

http://1.bp.blogspot.com/-_RbK8VLphH4/UOm42iJPH2I/AAAAAAAAAC0/FWP9rRUUZqY/s1600/inspirational-quotes-5.jpg

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (10)

 1. எதிர்வாதம் செய்யாது, தொடர்ந்து பொறுமையையும், நிதானத்தையும் நாம் கடைப்பிடிப்பதன் வாயிலாக மற்றவர்களின் எதிர்மறையான அணுகுமுறையினைக்கூட நாம் மாற்ற முடியும் என்று நீங்கள் கூறியிருப்பது சத்தியமான வார்த்தை.
  வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது “The past is history, the future is a mystery, but today is a gift—that’s why they call it ‘the present’” என்று கூறுவார்கள். ஆகவே நீங்கள் கூறியபடி கடந்ததை நினைத்துக் கலங்காமல் நடக்கவேண்டிய காரியங்களை மகிழ்வுடன் செய்யப் பழகுவதே வெற்றிக் கனியைப் பறிக்க உதவும். தன்னம்பிக்கை வளர்க்கும் தரமான சிந்தனைகளைத் தொடர்ந்து அளித்துவரும் அன்பிற்குரிய கட்டுரையாசிரியர் பவளா அவர்களுக்குப் பாராட்டுக்கள்!!

 2. “எதிர்மறையான அவர்களின் செயல்களைப் பொருட்படுத்தாமல், தவிர்த்து வந்தாலே நாளடைவில் அவர்களே சலிப்படைந்து தங்களுடைய எதிர் வினைகளை குறைத்துக் கொள்ளக் கூடும்” – கணவன் மனைவி இடையே மட்டும் இன்றி, மற்ற உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இடையேயும் மற்றும் அலுவலகத்திலும் கூட இந்த முறையைப் பின்பற்றி வெற்றி இலக்கை அடைய முடியும்.

  தொடர்ந்து வெற்றிக்கான இரகசியங்களை எளிமைப் படுத்தி வழங்கி வரும் ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள்.

 3. ஆசிரியர் வெற்றி படிக்கட்டுக்கு அழைத்தும் செல்லும் தொடரில் எதிர் மறையை என்ன செய்யலாம் என்பதை சரியாக சொல்லியுள்ளார். அத்தகைய செயல்களை அலட்சியப்படுத்தினாலே போதும் அந்த செயலும் அந்த நபரும் பின் வாங்கி விடுவர்,

 4. அருமையான மேற்கோள். அதையடுத்து அருமையான கட்டுரை.
  இரசனையில் செல்வந்தராகவும் ~ ரசிகமணி டீ.கே.சி.
  பொறாமையிலிருந்து விடுதலை பெற்றவராகவும் ~ அண்ணல் காந்தி.

  அடுத்தவரின் நன்மைகளைக் கொண்டாடுபவராகவும் ~ காமராசர்;

  இல்லாத மற்றும் இரக்கமற்ற வேளையிலும் இன்னும் நெருக்கமான பெருந்தன்மையுடனான இருதயத்தினாலான அன்பு ~நேருஜி;

  – இவை அனைத்துமே பணத்தினால் வாங்க முடியாத பரிசுகள்.

 5. ஒருவரைப் பாராட்டுவதும் ஊக்குவிப்பதும் ஒருவர் மேன்மேலும் வளர உதவும் என்பது சத்தியமான கருத்து. அது போல்,’எந்த ஒரு காரியத்தையும் நிதானமாகவும் மகிழ்ச்சியுடனும் செய்யும் வழமையை மேற்கொண்டாலே, நம் அகம் குளிர்ந்து முகம் பொலிவுறும்’ என்பது ‘பதறாத காரியம் சிதறாது’ என்னும் பொன்மொழியை நினைவூட்டுகிறது.

  என்ன வார்த்தைகள் சொல்லிப் பாராட்டவென்றே தெரியவில்லை. இது மனவளக் கட்டுரைத் தொடர் மாத்திரமல்ல. படித்துப் பின்பற்ற வேண்டிய பொக்கிஷம்.

Leave a Reply

Your email address will not be published.