-தமிழ்த்தேனீ

 

ஏங்க ஒரு உதவி  என்றாள் காயத்ரி  சொல்லு என்றார் ஸ்வாமிநாதன். ஒண்ணும் இல்லே  இந்த உள்ளே  ஒரு வேலையா இருக்கேன் திடீர்ன்னு மழை வரா மாதிரி இருக்கு என்றாள் காயத்ரி

பாத்துப் பாத்து கட்டின வீடு  மழையே வந்தாலும் அந்த உள்ளே  ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராது என்று கூறிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டார்  ஸ்வாமிநாதன்  ஏதோ விரதத்தை  மீறினாற்ப் போல்.

அய்யே  போறும் வழியாதீங்க  கொல்லைப் புறம்  துணி காயப் போட்டிருக்கேன்   நனைஞ்சிடப் போகுது . அதையெல்லாம்  எடுத்துகிட்டு வாங்கன்னு சொல்ல வந்தேன்  என்றாள் காயத்ரி.

சரி என்று சொல்லிவிட்டு  கொல்லைப்புறம் விரைந்தார் ஸ்வாமிநாதன்.  .

அதிர்ந்தே பேசாமல்   இனிமையாகவே செஞ்சாலும் செய்வார், அப்பிடியே இஷ்டம் இல்லேன்னா    இனிமையாவே செய்யாம விட்டுடுவார் .கொஞ்சம் வழிஞ்சாலும்  நல்ல புருஷன்தான்  .

அது சரி ஏன் இவரு  ரெண்டு நாளா இப்பிடி  கேட்ட கேள்விக்கு ஹும் ,இல்லே ,ஆமா  ன்னு  சுருக்கமா  பதில் சொல்றாரு  . ஏதோ  ரெண்டு வார்த்தை அவரை மறந்து பேசிட்டு  நாக்கை வேற கடிச்சிக்கறாரு , என்ன ஆச்சு இவருக்கு  திடீர்ன்னு காயத்ரிக்கு  சந்தேகம் .  சரி துணிகளை எடுத்திட்டு வரட்டும் கேப்போம் என்று  வேலையைத் தொடர்ந்தாள் காயத்ரி

காயப் போட்ட துணிகளை எடுத்துக்கொண்டு  உள்ளே நுழைந்து மௌனமாக  ஒவ்வொரு துணியாக மடிக்கத்  தொடங்கினார் ஸ்வாமிநாதன்

நான் மடிச்சு வெச்சிக்கறேன் .  ஆமா நீங்க பாட்டுக்கு  கலகலன்னு இருப்பீங்களே  என்ன ஆச்சு ஏன் ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்கீங்க. ஏதாவது கேட்டா ஒத்தை வார்த்தையிலே  பதில் சொல்றீங்க.

ஹும்ம்  ஒண்ணுமில்லே என்றார் ஸ்வாமிநாதன்

 

இந்தாங்க காப்பி சாப்பிடுங்க என்று அவள் நீட்டிய காப்பியை வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு  அப்படியே மேசை மேல் காப்பியை வைத்துவிட்டு   சோபாவில் உட்கார்ந்தார்  ஸ்வாமிநாதன் .. ஏன் காப்பி நல்லா இல்லையா வெச்சிட்டீங்க என்றாள் காயத்ரி

எல்லாம் நல்லாத்தான் இருக்கு   என்று கூறிவிட்டு  தொலைக் காட்சியைப் பார்க்கத் தொடங்கினார்  ஸ்வாமிநாதன்

ரெண்டு நாளா நான் கோவமா இருக்கேன் . ஒண்ணுமே தெரியாத மாதிரி எப்பிடி இவ்ளோ இயல்பா  இருக்கா இவ.  எனக்கு ரெண்டு நாளாக் கோவம்ன்னு இவளுக்கு  தெரியவே தெரியாதா ,  போச்சு ! எனக்கு கோவம்னே இவளுக்கு  தெரியலேன்னா  நான் கோவிச்சிகிட்டு  என்னா ப்ரயோசனம், இப்பிடி ஒரு நிலமை ஒரு ஆம்பிளைக்கு வரக் கூடாது என்று நினைத்துக்கொண்டார்  ஸ்வாமிநாதன்.

சரி நீங்க டீவீ பாருங்க நான் போயி இருக்கற வேலையைக் கவனிக்கறேன் என்று எழுந்தாள் காயத்ரி.  இவளுக்கு எப்படியாவது  தான் கோபமாய் இருப்பதை உணர்த்த வேண்டும் என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்வதாய் நினைத்துக்கொண்டு  சாதாரணமாய் வைத்துக்கொண்டார்.

இதோ பாருங்க எனக்கு உங்களைப் பத்தி  நல்லாத் தெரியும் .உங்களுக்கு கோவப்படத் தெரியாது ஏன் அனாவசியமா முகத்தை கோவமா வெச்சிக்கணும்னு ட்ரை பண்ட்ரீங்க , என்றாள்   காயத்ரி

சிரித்துக் கொண்டே என் மேலே கோவம்னா சொல்ல வேண்டியதுதானே   என்றாள் காயத்ரி.

ஓ வாய்விட்டு சொன்னாத்தான் புரியுமா எனக்கு கோவம்னு , ரொம்பக் கஷ்டம் . என்னை கவனிச்சு பாத்திருந்தாலே  தெரிஞ்சிருக்குமே, அது சரி நீ எங்கே என்னைக் கவனிக்கறே   என்றார்  ஸ்வாமிநாதன் சுய இரக்கமாய் .

சரி விடுங்க ரெண்டு நாளா  நிறைய வேலை, நான் ஏதோ நினைப்புலே உங்களை கவனிக்கலே  . உங்களுக்கு என் மேலே கோவமே வராதுன்னு நான் நெனைச்சிட்டு இருந்தேனே. உங்களுக்கு என் மேலே கோபம் கூட வருமா  . அடடா எங்க வீட்டுலே உங்களைப் பத்தி நல்லா விசாரிச்சுதானே  என்னை உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாங்க ஒங்களுக்கு கோவமே வராதுன்னு சொன்னாங்களே  என்றாள் நமட்டுச் சிரிப்புடன் காயத்ரி .

ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொண்டு வந்து அவர் முகத்தருகே பிடித்துக்கொண்டு  இதோ இந்தக் கண்ணாடியிலே உங்க முகத்தை  பாருங்க,இப்போ சொல்லுங்க நீங்க கோவமா இருக்கீங்களா என்றாள் .

அவருக்கே அவர் முகத்தைப் பார்க்க பாவமாய் இருந்தது. ஒரு சதவிகிதம் கூட அந்த முகத்திலே கோவமே தெரியலே. அட ஆமா என் முகத்திலே கோவமே தெரியலையே, நான் ரொம்பக் கோவமா முகத்தை வெச்சிண்டு இருக்கேன்னு  நெனைச்சிண்டு இருந்தேன். என்றார் ஸ்வாமிநாதன்.

இப்போ சொல்லுங்க உங்களுக்கு என் மேலே, அதுவும் என் மேலே என்ன கோவம் என்றாள் காயத்ரி.  ஸ்வாமிநாதன் சொன்ன பதிலைக் கேட்டு  சிரிப்பாய் வந்தது காயத்ரிக்கு

அதானே ப்ரச்சனை ! நான் எதுக்கு கோவிச்சிகிட்டேன்னு யோசிச்சு பாக்கறேன் . ஆனா ரெண்டு நாளா யோசிக்கறேன். எதுக்கு கோவம் வந்துதுன்னே  மறந்து போச்சே என்றார்  ஸ்வாமிநாதன். சிரித்தாள்  காயத்ரி

இப்போ எதுக்கு சிரிக்கறே ! இந்தச் சிரிப்புலே மயங்கித்தானே கல்யாணமே பண்ணிகிட்டேன். உனக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு நான் பயந்த சுபாவம் உள்ளவன் ஏமாளின்னு அதான் என்னை ஏமாத்தறே என்றார்  ஒரு விதப் பெருமையுடன்

நீங்களா பயந்தவர் , நீங்களா ஏமாளி .  அடேங்கப்பா  என் கிட்டேயே இப்பிடி சொல்றீங்களே அப்பிடியே  கொஞ்சம் நேத்திக்கு  அந்த பஸ்லே நடந்ததை நெனைச்சுப் பாருங்க,  அப்பா என்னா வீரம்  என்னா வீரம்  நானே பயந்து போயிட்டேன், எல்லாருமே பயந்து போயிட்டாங்களே

அதுவா அது ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்திலே என்னை அறியாம வந்துது. பின்ன  கல்யாணம் செஞ்சிண்டு முதன் முதலா ஆசையா உனக்குன்னு நான் ஒரு புடவை எடுத்துக் குடுத்தேன் , அதை ஒருத்தன் பஸ்லே எடுத்தான். அவ்ளோதான் எனக்கு எங்கேருந்து அவ்ளோ வீரம் வந்துதுன்னே தெரியலே. அவனைப் போட்டு சாத்து சாத்துனு நல்லா சாத்திட்டேன். ஆனா ஒண்ணு இப்போ நெனைச்சா கூட பயமா இருக்கு . அவன் என்னை ஒரு அடி அடிச்சிருந்தாக் கூட நான் மயங்கி விழுந்திருப்பேன். நல்ல வேளை கையும் களவுமா பிடிபட்டுட்டமேன்னு அவன் பயந்து போயிட்டான் அதுனாலே நான் தப்பிச்சேன் என்றார்.

இதோ பாருங்க   கோபம் பாபம் சண்டாளம்னு சொல்வாங்க  இந்த உலகத்திலே யாரு நம்மைப் பார்த்து பயப்படறாங்களோ அவங்களுக்கு நம்ம மேலே கோவம் வரும் ,  யாரைப் பாத்து நாம பயப்படறமோ அவங்க மேலே நமக்கு   கோவம் வரும். நீங்க பயப்பட மாட்டீங்க,அதுனாலே  கோப்ப்படவும் மாட்டீங்க , வீரமான ஆம்பிள்ளை நீங்க என்றாள் காயத்ரி.

ஸ்வாமிநாதனுக்கு அவரை நினைத்தே பெருமையாக இருந்தது

ஏங்க உங்க கிட்டே சொல்லணும்னு நெனைச்சேன்  ஒரு குட்டிக் காக்காய் நம்ம வீட்டிலே  மரத்திலேருந்து கீழே விழுந்துடுத்து, அதுக்கு சாப்பாடு வைக்கலாம்னு போனா அந்தப் பெரிய காக்காய்  என்னைத் துரத்துது

அட்டா பாவம் அந்தக் காக்காய் குஞ்சுக்கு பசிக்கும் இந்த மேசை மேலே இருக்கற இட்லியை போட்டுட்டு வரேன் என்றபடி புழக்கடைப் பக்கம் போய் இட்லியைக் காக்காய்க் குஞ்சுக்கு போட்டுவிட்டு  உள்ளே வந்து  காயத்ரி ஒரு அதிசியம் பாரேன்

நான் இட்லியை போடலாம்னு போனேன். அதே காக்காய் என்னையும்  துரத்த ஆரம்பிச்சுது. நான் அந்தக் காக்காய்கிட்ட  உன் குட்டிக்கு வயிறு பசிக்கும் அதுக்குதான் இட்லி போடப் போறேன். நான் உன் குட்டியை ஒண்ணும்  செய்ய மாட்டேன்  அப்பிடீன்னு பேசினேன்.

அது அந்தக் காக்காய்க்கு  என்ன புரிஞ்சுதுன்னு தெரியலே அப்புறம் என்னைத் துரத்தவே இல்லே , அமைதியா   மதில் சுவத்துமேலே உக்காந்து பாத்துகிட்டே இருக்கு . அதுக்கு நல்லது செய்யறவங்க யாருன்னும் புரியுது. ஆனாலும் குட்டிக்கு ஏதேனும் ஆபத்து வராம பாதுகாக்கணும்னு  ஜாக்கிரதையாவும் இருக்கு என்றார்.    ஏன் காயத்ரி இந்தக் காக்காய் கூட இவ்ளோ புரிஞ்சுக்கறதே ஆச்சரியமா இல்லே என்றார்.

வாசலில் யாரோ ஆழைப்பு மணியை அழுத்தினார்கள் . எதிர் வீட்டு ஜானகியம்மா , அடேடே  வாங்க வாங்க   என்றாள் காயத்ரி

இதோ பாருங்க  காயத்ரிம்மா ஏதோ என் பொண்ணு பஸ் ஸ்டாண்டிலே நின்னு ஒரு பையன்கூட  பேசிகிட்டு இருந்தாளாம் .நீங்க என் பொண்ணைக் கூப்பிட்டு கண்டிச்சீங்களாமே  என்றாள்

ஆமாங்க ஒங்க பொண்ணு அந்தப் பையன்  நல்ல ப்ரெண்டுன்னு சொல்லுது அனுபவப் பட்டவங்களுக்கு  பாத்தவுடனே தெரியும் இது சாதாரண ப்ரெண்ட்ஷிப்  இல்லேன்னு. அந்தப் பையன்  சரியான பையன் இல்லே. நம்மவீட்டு எதிர்லே இருக்கீங்க ,உங்க பொண்ணு அவனை நம்பி ஏமாந்து போயிடப் போறாளேன்னு  எச்சரிச்சேன் . நானே உங்ககிட்ட வந்து சொல்லணும்னு இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க  என்றாள் காயத்ரி

இதோ பாருங்க என் பொண்ணை எப்பிடி வளக்கணும்னு எனக்கு தெரியும். நீங்க அனாவசியமா அவகிட்ட பேசாதீங்க . நாங்க பாத்துக்கறோம் நீங்க உங்க வேலையைப் பாருங்க நான் வரேன் என்றபடி போனாள் ஜானகி

 

என்ன காயத்ரி  இது உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. நீ நல்ல எண்ணத்திலே சொல்றேன்னு புரிஞ்சிக்காம பேசறாங்க அந்தம்மா

அவங்களுக்கும் தெரியும் நான் நல்ல எண்ணத்திலேதான் சொல்றேன்னு. அவங்க பொண்ணு செய்யறதும் தெரியும்  இருந்தாலும் அதை என்கிட்ட ஒத்துக்க அவங்களுக்கு மனமில்லே அதுனாலெ  அவங்க பொண்ணு கெட்டுப் போகமாட்டா  நல்ல  பொண்ணு அப்பிடீன்னு அவங்களை அவங்களே  ஏமாத்திகிட்டு என் கிட்ட நடிக்கறாங்க

முன்னாலே பள்ளம் இருக்குன்னு சொன்னா  ஒன் வேலையைப் பாத்துகிட்டு போ அப்பிடீன்னு சொல்லிட்டு    பள்ளத்திலே விழுந்துட்டு நீ வாயை வெச்சே நான் பள்ளத்திலே விழுந்துட்டேன்னு  சொல்றவங்கதான் மனுஷங்க

ஆனா ஒண்ணுங்க அஞ்சறிவு படைச்ச எதுக்கும் நடிக்கத் தெரியாதுங்க , ஆறறிவு  மனுஷங்கதான்  நடிப்பாங்க என்றாள் காயத்ரி    நீ சொல்றது சரிதான்  என்று மீதி இருந்த காப்பியைக் குடிக்க ஆரம்பித்த அவருக்கு   திடீர்ன்னு ஒரு சந்தேகம்

நமக்கும் நடிக்கத் தெரியலையே   அப்போ நமக்கு  அஞ்சறிவா, ஆறறிவான்னு !  மறுபடியும் அவருக்கு கோபம் வந்தது.

அவரையே பார்த்துக்கொண்டிருந்த காயத்ரி

அவர் மனதைப் படித்தாற்போல்  சிரித்தாள்

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on "பெண்மை"

  1. ் அதிகப்படி சுப்பீரியாரிடி காம்ப்ளெக்ஸ் இப்படிப்பேசவைக்கும் அதாவது தங்கள் மேல் தவறே இல்லாததுபோல.. கதை உலகவாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுகிறது..

  2. குடும்பக்கதை கல கலப்பாக போகிறது. கணவன் மனைவி பாத்திரம் இயல்பாக இருக்கிறது.

  3. ‘இருந்தாலும் அதை என்கிட்ட ஒத்துக்க அவங்களுக்கு மனமில்லே ..’
    இது தான் பாயிண்ட். இந்த மனசு படுத்தற பாடு!

  4. சுவாமிநாதனுக்கு மட்டும் அல்ல. பல சமயங்களில் பல மனிதர்கள் செய்யும் செயல்களைப் பார்த்தால் அவர்களுக்கு ஐந்தறிவா? அல்லது ஆறறிவா? என்ற ஐயம் எழுகிறது.

  5. மிகவும் சுவாரஸ்யமான எழுத்துக்கள்.
    பொதுவாக நாம் குறைபட்டுக்கொள்ளும் 
    ஒரு வார்த்தை ” நல்லது சொன்னாலே யாருக்கும் பிடிக்காது” என்று..
    இது நிதர்சனமான உண்மை. 
    இவனுக்கு என்ன.. இவன் வீட்டில இப்படி ஒன்னு நடந்து 
    நாம இவன் சொன்ன மாதிரி சொன்னா .. நம்மள சும்மா விடுவானா…
    எதற்கும் எந்த செயலுக்கும் தம்மை 
    நியாயப்படுத்திக்கொள்ளத் துடிக்கும் மனித ஜென்மம்.
    ===
    அருமையான கதை .. முடிவில் நமக்கும் நடிக்கத் தெரியலியே…
    நாமளும் ஐந்தறிவோ ??!! என்ற வார்த்தைகள் 
    நெஞ்சில் பசுமரத்து ஆணியை செருகி நின்றது..
    ==
    வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.