Blog

  • Jammi Building to get demolished soon

    Jammi Building to get demolished soon

    Baskar Seshadri

    Mylapore is all set to lose one major landmark building. The 127 years Jammi building is going for a revamp and all connected works in regard to the development project is on and any time the primitive building on Royappetah high road may get razed. This pharma major mainly became very famous due to effective ayurveda medicines. It was initially Jammi Liver cure when it was founded by Jammi Venkatramanayya decades back.

    The name he had created in this periphery for his medicines was astonishing. In 1939 Jammi Venkatramanayya passed away. This Ayurveda practitioner came from Andhra Pradesh to have his trade and soon he developed Branches in various other states. He used to conduct the Medical Camp in various locations. Now after the days of Jammi his sons are looking after the activity. All clearances are made and the Builder is all set to take over for the Project. Its BBCL, a Chennai Based Builder. Dr. Narasimmhan V Jammi is the Director of Jammi Pharmaceuticals.

    Share
  • உழைப்பவர் உழைப்பைப் போற்றிடும் உயர்தினம் !

    உழைப்பவர் உழைப்பைப் போற்றிடும் உயர்தினம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    மேதினம் என்பது விடி வெள்ளியாகும்
    வியர்வையைச் சிந்துவார் உயர்வினைக் காட்டும்
    சாதனை நாயகர் தம்மையே போற்றிட
    பூதலம் மீதிலே பூத்தநல் நாளாகும்

    உழைப்பினை நல்குவார் உழன்றுமே இருந்தனர்
    உழைப்பினை உறுஞ்சுவார் உயர்ந்துமே நின்றனர்
    உழைப்பினை நல்குவார் உணர்வுடன் எழுந்தனர்
    உழைப்பினை உறுஞ்சுவார் ஓரமாய் ஒதுங்கினர்

    முதலைக் கொடுத்தவர் முதலையாய் நின்றனர்
    முயற்சியைக் கொடுத்தவர் முடங்கியே கிடந்தனர்
    முயற்சியைக் கொடுத்தவர் எழுந்தனர் கனலாய்
    முதலைகள் அனைத்தும் சுருண்டுமே போயின

    உண்ணும் உணவும் உடுக்கும் உடையும்
    உறையும் வீடும் உழைப்பின் வரமே
    மண்ணைப் பொன்னாய் மாற்றிடும் உழைப்பை
    மாநிலம் நினைக்கவே மேதினம் வந்தது

    எத்தனை பேர்கள் இரத்தம் சிந்தினர்
    அத்தனை பேரும் உழைக்கும் மைந்தர்கள்
    உழைப்புக் கூதியம் உயர்வாய் கேட்டால்
    கேட்டவர் வாழ்வை கிழித்துமே போட்டனர்

    களைப்பே இன்றி உழைப்பைக் கொடுத்தார்
    கண்ணீர் கடலில் மூழ்கியே நின்றார்
    காசினைக் கருத்தில் கொண்டுமே இருந்தார்
    கடும் உழைப்பதனை காணா நின்றார்

    முதலை ஆண்டவர் முதலாளி ஆகினார்
    தொழிலில் இருந்தவர் துவண்டே கிடந்தார்
    வளமும் உரமும் வழங்கிய மக்கள்
    உளமும் மடிந்து உழன்றே கிடந்தார்

    எத்தனை பொருட்கள் எத்தனை உழைப்பு
    எத்தனை வேதனை இடருடன் வாழ்க்கை
    இத்தரை உழைப்பவர் சித்தத்தில் வைப்போம்
    இடரினைப் போக்கிட எல்லோரும் இணைவோம்

    ஓடப்பராய் இருந்தார் உழைத்திடு மக்கள்
    உயரப்பராய் வந்தால் உயர்ந்திடும் உழைப்பு
    வாடப்பராய் இருப்பார் மனவுறுதி கொண்டால்
    வையகமே வாகைசூடி வரவேற்ற நிற்கும்

    வையகமே வியந்து பார்த்திட்ட நாளாய்
    வருடத்தில் மேதினமே மலர்ந்துமே இருக்கு
    மேதினத்தில் வியர்வையெலாம் வெற்றியையே காட்டும்
    மேதினத்தில் உழைப்பாரை அரவணைத்து மகிழ்வோம்

    உழைப்பவர் கரங்கள் ஓங்கிட வேண்டும்
    உழைப்பவர் வாழ்வும் உயர்ந்திட வேண்டும்
    உழைப்பவர் உழைப்பை மதித்திடு நாளாய்
    உலகமே போற்றுது மேதின நாளை

    Share
  • Meet Chamu, The Author, Counsellor and Quilling arts Person

    Meet Chamu, The Author, Counsellor and Quilling arts Person

    Baskar Seshadri

    Meet Ms Chamundeeswari aka Samu. She hails from Madanapalle Andhra Pradesh and settled down in Chennai seeking Greener Pastures. She comes from a Middle-class family and had undergone all kinds of turbulence and troubles in life. Samu as a spirited person ignored all those in life and with grit and serious interest in life to come up swam all those hurdles. She works for a NGO and with her free time and keen interest started Authoring books of different kind.

    Her works always cover on Psychology as she feels that as her keen interest. Yes, she is capable of it since she had done M.SC on Psychology and Later she completed her Diploma in Geriatric. She had written on the Geriatric care, Guide on Puberty, Self-enquiry and on Special Children too. She has more plans to do such in the coming days. She has a keen interest in the welfare of the society and its People. She says she is interested to give her counselling on any issues in life. But all for a nominal fee and through online for the time being. She quips ” I do not know any language except Telugu when i landed in Chennai. But it was my keen interest that drove to me to what i am today ” Its interest that matters in life that matters are a clear case of example in my own case”.

    True to what she says. Her Books are now being sold through Amazon and Flipkart is a perfect example.

    Besides all these she is also a master in craft-work especially in Quilling art and Bead Chains. She had done plenty of them and had gifted those to many of her Friends and Relatives.

    On counselling side, she is ready to attend the people in person at their Place and if anybody is Interested, she can be reached at 9444 538 544 and Her mail id is counsellingpsychologistchamu@gmail.com – Kudos to Samu.

    Share
  • குறளின் கதிர்களாய்…(492)

    குறளின் கதிர்களாய்…(492)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(492)

    களவினா லாகிய வாக்க மளவிறந்
    தாவது போலக் கெடும்.
    – திருக்குறள் -283 (கள்ளாமை)

    புதுக்கவிதையில்…

    பிறர் பொருளைக்
    களவு செய்வதால்
    கிடைக்கும் ஆக்கம்,
    பெருகுவது போலத் தோன்றி
    இறுதியில்
    இயல்பாய் இருக்கவேண்டிய
    அளவையும் கடந்து
    இல்லாமல்
    அழிந்துவிடும் விரைவில்…!

    குறும்பாவில்…

    களவினால் கிடைக்கும் ஆக்கம்
    அளவின்றிப் பெருகுதல் போலத் தோன்றி
    அழிந்தேபோகும் எதுவும் இல்லாமலே…!

    மரபுக் கவிதையில்…

    அடுத்த மனிதர் பொருளதற்கே
    ஆசைப் பட்டே அதைத்திருடி
    எடுத்துச் சேர்க்கும் ஆக்கமெல்லாம்
    ஏற்றம் பெற்றே பெருகுதல்போல்
    கொடுக்கும் தோற்றம் நிலையில்லை,
    கூடுதல் போலத் தோன்றிடினும்
    அடுத்தே எதுவு மில்லாமல்
    அழிந்தே போகும் அறிவீரே…!

    லிமரைக்கூ…

    களவினால் வந்திடும் ஆக்கம்
    பெருகுதல்போல் தோன்றி விரைவில் அழிந்தே
    பெற்றிடும் முற்றிலும் நீக்கம்…!

    கிராமிய பாணியில்…

    செய்யாத செய்யாத
    களவு செய்யாத,
    அடுத்தவுங்க பொருளுக்கு
    ஆசப்பட்டு களவு செய்யாத..

    களவு செய்து
    சேருற செல்வமெல்லாம்
    மொதலுல
    நல்லாப் பெருகுறாப்புல தெரிஞ்சாலும்
    நாளடவுல
    கையில இருந்ததும் போய்
    எதுவுமே இல்லாம
    அழிஞ்சி போவுமே..

    அதால,
    செய்யாத செய்யாத
    களவு செய்யாத,
    அடுத்தவுங்க பொருளுக்கு
    ஆசப்பட்டு களவு செய்யாத…!

    Share
  • தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு

    தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு

    நேற்று நானும் என் அம்மா செளந்திரவல்லியும் சென்னை, அம்பத்தூர், வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் எங்கள் வாக்குகளைச் செலுத்தினோம்.

    எங்களுக்கு முன்னால் வாக்குச் செலுத்திய பெண் (வயது 60 இருக்கலாம்), எப்படி வாக்குச் செலுத்துவது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தார். வாக்குச் சாவடியில் இருந்தவர்கள், நீங்கள் அவருக்கு உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நான் அந்தப் பெண்ணிடம், யாருக்கு வாக்களிக்க எண்ணியிருக்கிறீர்களோ, அவர் பெயருக்கு எதிரில் இருக்கும் பொத்தானைச் சற்று நீண்ட நேரம் அழுத்துங்கள் என்றேன். அவர் ஒரு சின்னத்தைத் தேடினார். அது எங்கே இருக்கிறது என்று காட்டிவிட்டு வெளியே வந்தேன். அவர் அழுத்தினார். சத்தம் வந்ததும் வெளியே வந்தார்.

    மின்னணு வாக்கு எந்திரங்கள் அறிமுகமாகி, இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் அதைப் பயன்படுத்தும் வழிமுறைகள் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். எனவே, அனைவரும் வாக்களியுங்கள் என்று தேர்தல் ஆணையம், விழிப்புணர்வு ஊட்டி வருகிறது. கூடவே, எப்படி வாக்களிக்க வேண்டும் என டம்மி பெயர்கள் / சின்னங்கள் ஆகியவற்றை வைத்து, கற்றுக் கொடுக்க வேண்டும். டம்மி எந்திரங்களை எல்லா ஊர்களிலும் வைத்து, சரியாக வாக்களிப்பவர்களுக்குப் பரிசும் வழங்கலாம்.

    மேலும் சுயேச்சை என்ற சொல்லை எல்லா இடங்களிலும் சுயேட்சை என்றே எழுதி வைத்திருக்கிறார்கள். மேலும் பல பெயர்கள், பதவிகள் ஆகியவை, ஆங்கிலத்திலேயே இருந்தன. மொழியிலும் தரத்தைப் பேண வேண்டும்.

    வாக்காளர் அட்டையில் என் பெயரின் தமிழ் எழுத்துக்கூட்டலில் பிழைகள் உள்ளன. இதைத் திருத்துவதற்கு வேறு ஒரு நாளில், குறிப்பிட்ட படிவத்தை நிரப்பி அளிக்க வேண்டும் என்றார்கள். எல்லா வாக்குச் சாவடியிலும் இதற்கென ஒருவரை அமர்த்தி, கையோடு படிவத்தையும் சான்றுகளையும் பெற்றுத் திருத்தினால், இரு தரப்பிலும் நேரம் மிச்சமாகும்.

    Share
  • சித்திரைத் திருநாள்!

    சித்திரைத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தைமகள் வந்தாள் தழுவியே நின்றாள்
    கைநிறைய அள்ளித் தந்துமே நின்றாள்
    தெய்வீகம் நிறைந்தது தெளிவுமே தந்தாள்
    தித்திப்பாய் பொங்கலை ஆக்கியே நின்றாள்

    என்பின்னே சித்திரை வருகிறாள் என்றாள்
    ஏற்றபல உங்களுக்கு அளித்திடுவாள் என்றாள்
    தைமகளின் வார்த்தை தடவியே கொடுத்தது
    தளர்வகன்று சித்திரயை  வரவேற்க நின்றோம்

    சித்திரை என்றதும் நித்திரையே ஓடிவிடும்
    புத்துடுப்பு மத்தாப்பு புதுநினைப்பே எழுந்துவிடும்
    கொண்டாட்டம் குதூகலம் கூடவே சேர்ந்துவிடும்
    அத்தனையும் சித்திரைதான் அளிப்பதற்கு வந்துநிற்கும்

    தைமகளே வருடத்தில் முதல்வந்து நின்றாலும்
    சமயமது சித்திரையை முதல்மகளாய் ஆக்கிருக்கு
    சித்திரையை முன்னிறுத்திப் பஞ்சாங்கம் அமைகிறது
    அத்தனையும் சித்திரையை அடியொற்றித் தொடர்கிறது

    பஞ்சாங்கம் பார்ப்பதும் பலன்களை அறிவதும்
    பலருக்கும் பெருவிருப்பாய் சித்திரையில் அமைந்திடுமே
    பலன்பார்த்துப் பலன்பார்த்து  பரவசத்தில் மிதப்பாரும்
    பலன்சிறக்கா முழிப்பாரும் சித்திரையில் இணைந்திடுவார்

    மருத்துநீர் என்பது சித்திரையின் சிறப்பாகும்
    தலைக்கோர் இலையும் கால்களுக்கோர் இலையும்
    வைத்ததன் மேல்நின்று மருத்துநீர் தலைவைத்து
    நீராடும் வழக்கம் சித்திரையின் முக்கியமே

    மூடப் பழக்கமென்று முகஞ்சுழிக்க வேண்டாம்
    முன்னோர்கள் சிந்தனையைப் பின்தள்ள வேண்டாம்
    இயற்கை மருத்துவத்தை இணைக்கின்ற வண்ணம்
    எல்லாமே அமைவதுதான் எம்முன்னோர் எண்ணம்

    பருவ காலங்களைப் பண்டிகையோடு இணைத்து
    வருகின்ற வகையிலே வழிவகுத்தார் முன்னோர்கள்
    கருத்தூன்றிக் கவனித்தால் கருத்தாக அமையும்
    கண்மூடிப் பார்த்திட்டால் கருத்தெல்லாம் சிதறும்

    சீனிப்பலகாரம் தித்திக்கும் சோகிப் பலகாரம்
    அச்சுமுறுக்கு அமர்க்களமாய் அருமைச் சுவையோடு
    இல்லாரும் செய்வார் இருப்பார் கூடச்செய்வார்
    எல்லாமே சித்திரையை இன்பமாய் ஆக்கிடுமே

    கோவில்கள் எங்கும் கோலாகலமாய் இருக்கும்
    வாயில்கள் தோறும் மக்களாய் நிரம்பிடுவர்
    அபி‌ஷேகம் அலங்காரம் ஆண்டவனைக் குளிர்விக்கும்
    அடிபரவும் அடியாரை ஆண்டவனும் மகிழ்விப்பார்

    சித்திரையில் தேரோட்டம் நடக்கின்ற கோவிலெல்லாம்
    திரண்டடியார் சென்றுமே தேர்வடத்தைப் பிடித்திழுப்பார்
    தேர்வடத்தைப் பிடித்திட்டால் செய்தவினை அகலுமென்று
    நம்பிக்கை மனத்திலெழ வடம்பிடித்து மனம்நிறைவார்

    சித்திரையைச் சிறப்பிக்க முத்தமிழே முன்னிற்கும்
    பட்டிமன்றம் பாட்டுமன்றம் பலவுரைகள் நிகழ்ந்திடுமே
    ஆடலொடு பாடலும் ஆனந்தம் அளித்திடுமே
    அங்குமே சித்திரையும் முத்திரையாய் ஜொலித்திடுமே

    ஆன்மீகம் இருக்கும் அழகுக்கலை இருக்கும்
    அறிவியலும் இருக்கும் ஆசாரமும் இருக்கும்
    அனைத்தையும் உள்ளடக்கி அமைகின்ற திருநாளாய்
    சித்திரைத் திருநாள் சிறப்பாக மலர்கிறதே

    கருத்துடைய சித்திரையைக் களிப்புடனே பார்ப்போம்
    கைகோத்து அனைவருமே களிப்புற்று நிற்போம்
    கையணைத்து உறவுகளைக் களிப்படைச் செய்வோம்
    கற்கண்டாய், சர்க்கரையாய்க் களிசொற்கள் பகிர்வோம்

    Share
  • குரோதியிலே ஒளிர் சோதியிலே நற்சேதியிலே வருக!

    குரோதியிலே ஒளிர் சோதியிலே நற்சேதியிலே வருக!

    குரோதியிலே ஒளிர் சோதியிலே நற்சேதியிலே வருக!
    ஆதியிலே எழு நீதியிலே அடர் போதியிலே வருக!
    தேதியிலே பர வீதியிலே சரி பாதியிலே வருக!
    நேர்த்தியிலே சுப பூர்த்தியிலே உயர் கீர்த்தியிலே வருக!

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    –  அண்ணாகண்ணன்

    Share
  • குறளின் கதிர்களாய்…(491)

    குறளின் கதிர்களாய்…(491)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(491)

    கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா
    உயிரும் கைகூப்பித் தொழும்.

           –திருக்குறள் – 260 (புலால் மறுத்தல்)

    புதுக் கவிதையில்…

    எந்த உயிரையும்
    கொல்லாதவனாய்,
    எந்த உயிரின் ஊனையும்
    தின்ன மறுப்பவனாய்த்
    திடமுடன் வாழ்பவனைத்
    தரணியிலுள்ள
    எல்லா உயிர்களும்
    கைகூப்பி வணங்கும்…!

    குறும்பாவில்…

    புவியுயிர் எதையும் கொல்லாதவனாய்
    புலாலுணவைத் தின்ன மறுத்து வாழ்பவனை
    உலகுயிரெலாம் கைகூப்பி வணங்கும்…!

    மரபுக் கவிதையில்…

    உலகில் உள்ள உயிரெதையும்
         உண்ண வேண்டிக் கொல்லாமல்
    நலமாய் வாழ விடுவோனாய்,
         நாக்குச் சுவையின் காரணமாய்
    விலங்கின் ஊனை உண்ணுவதை
         விருப்ப மின்றி மறுத்தேதான்
    உலகில் வாழும் உத்தமனை
         உயிர்கள் எல்லாம் வணங்கிடுமே…!

    லிமரைக்கூ…

    உலகுயிர் எதையும் கொல்லானை
    ஊனுணவு மறுத்தே வாழ்பவனை எல்லா
    உயிரும் வணங்குமந்த நல்லானை…!

    கிராமிய பாணியில்…

    கொல்லாத கொல்லாத
    உயிரக் கொல்லாத,
    ஒணவா அதன்
    ஒடம்பத் திங்காத..

    ஒலகத்தில எந்த உயிரயும்
    கொல்லாம யிருந்து
    மாமிச ஒணவத் திங்காம
    மறுத்து வாழுறவனப் பாத்து
    மக்களெல்லாம்
    கையெடுத்துக் கும்புடுவாங்களே..

    அதால
    கொல்லாத கொல்லாத
    உயிரக் கொல்லாத,
    ஒணவா அதன்
    ஒடம்பத் திங்காத…!

    Share
  • பெரியபுராணத்தில் ஆவண மேலாண்மை

    பெரியபுராணத்தில் ஆவண மேலாண்மை

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
    கைபேசி: 6381629365
    மின்னஞ்சல் : kumaritathithan@gmail.com

    ஆவணங்கள் கடந்தகால வரலாறுகளை எடுத்தியம்புவன. அவ்வாவணம் என்பதற்குப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதன்மையான பதிவுகள் தொடங்கி சிறு நிகழ்வுகள் வரை ஆதாரத்தோடு பதிவு செய்யப்படுமானால் அவை ஆவணம் எனப்படும். அவை படிவம், பத்திரம், இலக்கியம் என எந்த வடிவத்திலும் அமைந்திருக்கலாம். அதேபோல அவை செம்பு, இரும்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களிலோ ஓலைகள், திரைச் சீலைகள், காகிதங்கள், கற்கள், போன்றவற்றிலோ, வரி வடிவமாகவோ, ஓவியங்களாகவோ, குறியீடுகளாகவோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம். இந்த ஆவணங்களைத் தொகுத்து வைத்துப் பாதுகாக்கும் இடமே ஆவணக் காப்பகம் எனப்படும்.

    நமது நாட்டில் தொன்மையான காலம் தொட்டு இவ்வகை ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. சோழர்கால கல்வெட்டுகள் மூலம் ஆவணங்களைப் பாதுகாக்கும் இடங்கள் ஆவணக்களரி என அழைக்கப்பட்டதனை அறியமுடிகிறது. பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணத்திலும் ஆவணம் குறித்தும், ஆவண மேலாண்மை குறித்தும் தரவுகள் இடம்பெற்றுள்ளன.

    பெரியபுராணத்தில் நம்பியாரூராருக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றபோது அங்கு அந்தணர் உருவில் சிவபெருமான் வந்தார். அவர் நம்பியாரூராரிடம், “எனக்கும் உனக்கும் முன்பே ஓர் ஒப்பந்தம் இருக்கிறது. அதனை மீறி திருமணம் செய்கிறாய். அவ்வழக்கை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்” என்கிறார். நம்பியாரூராரும் வழக்கை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அந்தணர் அவரிடம் அந்தக் காலத்தில் உன் தந்தையயின் தந்தை எனக்கு எழுதித்தந்துள்ள ஆவணம் – அடிமை ஓலை என்னிடம் உள்ளது என்கிறார். அந்தணரிடம் இருக்கின்ற அடிமை ஓலையைக் காட்ட சொல்கிறார் நம்பியாரூரார். அதைக் கேட்ட அந்தணர், “நீ ஓலையைப் பார்த்துப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள தக்கவனாக இல்லை. அவையில் உள்ளவர்களிடம் காட்டினால் அவர்கள் நீ எனது அடிமை என்று சொல்வார்கள்” என்கிறார்.

    ஓலையைக் காட்ட மறுத்ததும் அதனைப் பறித்திட நம்பியாரூரார் செல்ல, அந்தணர் ஓட இறுதியாக அந்தணரை எட்டிப் பிடித்து அவரிடம் இருந்த ஓலையைப் பெற்று படித்தார். அதில் அடிமை என்று அவரது முன்னோர் எழுதி வழங்கியிருப்பதைக் கண்டார். உடனே அவ்வோலையைக் கிழித்து எறிந்துவிட்டார். அந்தணர் அங்கிருந்த அவையோர்களிடம் முறையிடலானார். அந்தணரிடம் அங்கிருந்த மக்கள் உலக நடைமுறையில்லாத ஒன்றை நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க, அருகில் உள்ள திருவெண்ணெய் நல்லூர்தான் எமது ஊர் என்கிறார். அதோடு அறநிலை உணராமல் கையிலிருந்த ஓலையைப் பறித்து கிழித்ததன் மூலம் நம்பியாரூரார் எனது அடிமை என்பது உறுதியாகிவிட்டது என்றார்.

    வாதிடுவதில் வல்லவராக இவ்வந்தணர் இருக்கிறார். ஓர் ஆவணத்தைக் காட்டி இங்கே வழக்காட வந்திருக்கும் இவரை வெற்றிகொள்ள திருவெண்ணெய் நல்லூர் அறமன்றத்திற்குச் செல்வதே உகந்ததாக இருக்கும் என்றெண்ணி  அந்தணரை அங்கு அழைக்கிறார் நம்பியாரூரார்.

    திருவெண்ணெய் நல்லூர் அறமன்றத்தை அனைவரும் அடைந்தனர். அந்தணர் தனிநபராக நின்று நம்பியாரூரார் தமது அடிமை என வாதிட்டார். வாதத்தின் போது நம்பியாரூராரின் தந்தையின் தந்தை எழுதிக்கொடுத்த ஓலை ஆவணத்தைச் சாட்சியாக வைத்தே தாம் முறையீடு செய்ய வந்ததாகவும் அந்தணர் கூறுகிறார். அதனைக் கேட்ட அம்மன்றத்தார் அவரின் ஓலையை வாங்கி கிழித்துப் போட்டுவிட்டால் வெற்றியாகிவிடுமா? என்ன சொல்கிறீர் என நம்பியாரூராரைக் கேட்டனர். அதற்கு உலகியலுக்கு மாறாக இந்த  அந்தணர் பேசுகிறார். இது எனக்கு தெளிவளிக்காத ஒன்றாக உள்ளது என்றார்.

    அறமன்றத்தார் அந்தணரிடம் அனைவர் முன்னிலையில் நம்பியாரூராரை உங்கள் அடிமை என்று உரைத்ததனை மெய்ப்பிக்க வேண்டும். அதற்கு மூன்று வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

    “ஆட்சியில் ஆவணத்தில் அன்றிமற் றயலார் தங்கள்
    சாட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே
    மூட்சியிற் கிழித்த ஓலை படியோலை மூல ஓலை
    மாட்சியிற் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான்”

    (பெரியபுராணம்-202)

    இவ்வாறு நம்பியாரூரார் அடிமை என்பதற்கான நிகழ் சான்றான ஆட்சி, அடிமை என்பதற்கான ஆவணச் சான்று, அயலவர் சாட்சி என்ற மூன்றில் ஒன்றை காட்ட முடியுமா? என அற மன்றத்தார் கேட்க ஆவணச் சான்றை முன்வைக்கிறார். முன்னர் நம்பியாரூரான் கிழித்தது படிஓலை. மூல ஓலையை அறமன்றத்தில் காட்டுவதற்காக வைத்துள்ளேன் என்கிறார் அந்தணர்.

    அறமன்றத்தார் மூல ஓலையைக் காட்டச் சொன்னதும் நம்பியாரூரான் இந்த மூல ஓலையையும் பறித்துக் கிழிக்காமல் பார்த்துக்கொள்வதானால் மூல ஓலையைக் காட்டுகிறேன் என்கிறார். அவையோர் ஒத்துக்கொள்ள எடுத்துக் கொடுக்கிறார். அங்கிருந்த கரணத்தான் என்னும் எழுத்தர் அவ்வோலையைப் பெற்று சோதிக்கிறார். ஓலையின் பழைமையைச் சோதித்த பின்பு ஓலையில் இருந்த செய்தியினைப் படித்தார். அதில் ஆதிசைவ மரபிலே ஆரூரன் என்ற நான் இதன் மூலம் எல்லாரும் அறிய எழுதிவைக்கும் செய்தியானது, பெருமுனிவரான வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு நானும் என் வழியில் வருபவரும் வழிவழியாய்த் தொண்டு செய்து வருவோம் என்பதற்காக உடன்பட்டு இந்த ஓலையை மனமும் செயலும் சம்மதித்து, எழுதித்தந்தேன். இதற்கு என் கையெழுத்து என்று இருந்தது.

    ஓலையில் உள்ள செய்தியை அறிந்ததும் அதில் உள்ள ஒப்பம் நம்பியாரூராரின் பாட்டனாரின் ஒப்பம்  என்கிற உண்மையை ஆராய்கின்றனர்.

    “அந்தணர் கூற இன்னும் ஆள்ஓலை இவனே காண்பான்
    தந்தைதன் தந்தை தான்வே றெழுதுகைச் சாத்துண் டாகில்
    இந்த ஆவணத்தி னோடும் எழுத்துநீர் ஒப்பு நோக்கி
    வந்தது மொழியின் என்றான் வலியஆட் கொள்ளும் வள்ளல்”

    (பெரியபுராணம் – 207)

    இவ்வாறு அந்தணர் கூறியதால் அங்குள்ள பழைய ஆவணக் காப்பகத்தில் உள்ள ஓலைகளில் காணப்படும் நம்பியாரூராரின் தந்தையின் ஒப்பத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். அவை ஒன்றுபோல் அமைகின்றன. எனவே அந்தணருக்கு நம்பியாரூரார் அடிமை என்பதாகத் தீர்ப்பளிக்கப்படுகிறது. அந்நிலையில் நம்பியாரூரார் அந்தணரிடம் இங்கே நீங்கள் வழிவழியாக வாழ்ந்து வரும் வீட்டைக் காட்டுங்கள் என வினவுகிறார். அவர் காட்டுவதற்காக அழைத்துச் செல்கிறார். திருவருள் துறைக் கோயிலினுள் சென்றதும் அந்தணர் மறைந்துவிடுகிறார். இவ்வாறு நம்பியாரூராரைத் தடுத்து ஆட்கொண்ட கதை நமக்குத் தெரியும்.

    இக்கதையினை நுணுகி பார்க்கும் இடத்து நமது நாட்டில் தொன்மையான காலத்திலேயே ஆவண மேலாண்மையில் கொண்டிருந்த அறிவு வெளிப்படும். அக்காலத்திலேயே அறமன்றம் என்கிற நீதி வழங்கும் அவை இருந்ததையும் அறியமுடிகிறது.

    அதேபோன்று ஓலை ஆவணங்கள் படி எடுக்கப்படுவது, அவற்றின் நகல் ஆவணங்களின் பயன்பாடு ஆகியவை குறித்த பதிவுகளும் இக்கதையில் இடம் பெறுகின்றன. மேலும் ஆவணக் காப்பகம் என்கிற அமைப்பும் அக்காலகட்டத்தில் அமைந்திருந்ததையும் அங்கு ஓலை ஆவணங்கள் முறையாகப் பாதுகாக்கப் பட்டுருப்பதனையும் அறியமுடிகிறது. இவ்விலக்கிய ஆதாரம் ஆவண மேலாண்மையில் நமது முன்னோர்கள் சிறந்திருந்ததனை எடுத்துரைக்கிறது எனலாம்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(490)

    குறளின் கதிர்களாய்…(490)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(490)

    ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர்.

           –திருக்குறள் – 228 (ஈகை)

    புதுக் கவிதையில்…

    இல்லாதவர்க்கு
    இருப்பவர்கள் ஈவதால்
    இன்பம் பெருகும்
    இரப்பவர்க்கும் கொடுப்பவர்க்கும்..

    பிறர்க்குக் கொடுக்காமல்
    பொருளைச் சேர்த்துவைத்துப்
    பின்னர் அதை
    இழந்துவிடும் கொடியவர்கள்
    ஈவதால் பெறும்
    இந்ந இன்பத்தை
    அறியமாட்டார்களோ…!

    குறும்பாவில்…

    சேர்த்த பொருளைப் பிறர்க்குக்
    கொடுக்காமல் வைத்திருந்து இழந்திடும் கொடியோர்
    ஈவதின் இன்பத்தை அறியாரோ…!

    மரபுக் கவிதையில்…

    பொருளே யில்லா இரப்போர்க்குப்
        பொருளைக் கொடுத்துப் பெறுமின்பம்
    இருப்பைக் கொடுத்தோன் வாங்கியவன்
         இருவர் தமக்கும் கிடைத்திடுமே,
    இருக்கும் பொருளை ஈயாமல்
         இருட்டில் தமக்காய்ச் சேர்த்திழக்கும்
    இருண்ட மனத்துக் கொடியோரும்
         இந்த இன்பம் அறியாரோ…!

    லிமரைக்கூ…

    ஈயாக் குணத்துச் சிறியார்
    பொருளைச் சேர்த்தே இழப்பர், இல்லார்க்கு
    ஈதலின் இன்பம் அறியார்…!

    கிராமிய பாணியில்…

    குடுக்கணும் குடுக்கணும்
    இருக்கிற பொருளக் குடுக்கணும்,
    இல்லண்ணு வந்து கேக்கிறவங்களுக்கு
    இருக்கிற பொருளக் குடுக்கணும்..

    தனக்கிட்ட இருக்கிற பொருள
    இல்லாதவங்களுக்குக் குடுக்கயில
    குடுக்கிறவன் வாங்கிறவன் ரெண்டுபேருக்கும்
    இன்பம் கெடைக்கும்..
    அடுத்தவனுக்குக் குடுக்காம
    அழிஞ்சிபோகிற செல்வத்த
    சேத்து வைக்கிற கொடுமக்காரனுக்கு
    அடுத்தவருக்குக் குடுக்கிறதில உள்ள
    அந்த இன்பம் தெரியாதா..

    அதால
    குடுக்கணும் குடுக்கணும்
    இருக்கிற பொருளக் குடுக்கணும்,
    இல்லண்ணு வந்து கேக்கிறவங்களுக்கு
    இருக்கிற பொருளக் குடுக்கணும்…!

    Share
  • காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம் !

    காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    மாநிலத்தில் மொழிவளமோ வகைவகையாய் இருக்கிறது
    அவற்றுக்குள் தமிழொன்றே தனித்துவமாய் மிளிர்கிறது
    காதலை, வீரத்தைக் கண்ணியமாய்ச் சொன்னாலும்
    கடவுளையும் பக்தியையும் கருவாக்கி உயர்கிறதே

    எம்மொழியும் பக்தியினை எட்டியும் பார்க்கவில்லை
    பக்தியெனும் பெருவெளியில் பயணிக்க நினைக்கவில்லை
    எம்மொழியாம் தமிழொன்றே பக்தியினைப் பற்றியது
    இதனாலே எங்கள்மொழி தனித்துவமாய் ஒளிர்கிறது

    பக்தியை இலக்கியமாய் பாருமே பார்ப்பதற்கு
    படைத்திட எங்கள்மொழி பாருக்குள் உயர்வாகும்
    பக்திக்குள் மூழ்கிவிட்டால் பரவசமே உருவாகும்
    பரவசத்தை அளிக்குமொழி பாங்குடைய தமிழாகும்

    பக்தி இலக்கியத்தைத் தொடக்கிய முன்னோடி
    காரைக்கால் ஈன்றெடுத்த கனிவான பெண்ணாவார்
    மாதரில் மாணிக்கமாய் மாசில்லா மங்கையாய்
    மாதவத்தின் உருவமாய் வந்துமே பிறந்திட்டார்

    நல்லறமாம் இல்லறத்தில் நங்கையும் இணைந்திட்டாள்
    நற்கணவன் கைப்பிடித்து நலமுடனே வாழ்ந்திட்டாள்
    தெய்வமது சித்தத்தால் சீரான குடும்பமதில்
    தித்திக்கும் மாங்கனி திசைமாறச் செய்ததுவே

    கைப்பிடித்த கணவன் கண்ணான மனைவியைச்
    சந்தேக மனத்துடனே சஞ்சலத்துள் ஆழ்த்தினான்
    மாங்கனியின் மாயத்தை மனமேற்க மறுத்ததால்
    மாதரசி மங்கையினை மனமொதுக்கி அகன்றிட்டான்

    பதறித் துடித்தாள்  பரமனையே பற்றினாள்
    அழகுடைக் கோலத்தை அருவருப்பாய் எண்ணினாள்
    யாருமே விரும்பாத கோலத்தை மனங்கொண்டாள்
    பேயுருவைப் பெருவிருப்பாய்ப்  பெற்றிட்டாள் இறைவனிடம்

    காரைக்கால் அம்மை பேயுருவாய் மாறினார்
    கணக்கில்லாப் பேரன்பை கடவுளிடம் காட்டினார்
    பக்திப் பெருவெளியில் பயணிக்கத் தொடங்கினார்
    பரமனைப் பாடினார் பக்திக்கும் வித்திட்டார்

    அன்னைத் தமிழுக்கு அம்மையார் பெருஞ்சொத்தே
    முன்னவராய் இருந்து இணைத்திட்டார் பக்தியினை
    பக்தி இலக்கியமாய் மலர்வதற்கு வித்திட்டார்
    பசுந்தமிழும் அதையேற்றுப் பார்போற்ற எழுந்ததுவே

    இசையாலே தமிழ்பாடி இறைதுதிக்க வழிசெய்த
    எங்கள்தமிழ் முன்னோடி காரைக்கால் அம்மையே
    அவர்வகுத்த அடியொற்றி அவர்பின்னே வந்தடியார்
    ஆண்டவனைப் பண்ணோடு அன்புருகப் பாடினரே

    அந்தாதி தந்தார் பதிகமும் தந்தார்
    திருவிரட்டை மணிமாலை சிறப்பாகத் தந்தார்
    பதிகத்தைத் தொடக்கிப் பக்தியைக் காட்டி
    அந்தாதிக் கன்னையாய் ஆண்டவனைப் பாடினார்

    பக்திப் பாமரபில் முன்னோடி  அம்மையார்
    பதிகத்தைத் தொடக்கியவரும் காரைக்கால் அம்மையார்
    வெண்பாவைத் தொட்டார் விருத்தத்தை காட்டினார்
    பண்பாடிப் பக்தியிலே பலர்தொடர வழிவகுத்தார்

    இசைத் தமிழால் பாடுதற்கு இவரே வித்தாவார்
    பண்பாடிப் பக்தியினைப் பரப்புதற்கும் முன்னோடி
    நாயன்மார்  பண்ணோடு  நற்றமிழில் பாட
    காரைக் காலம்மையே தனிப்பாதை வகுத்தார்

    சைவத்தை மேலாகத் தன்னகத்தில் கொண்டார்
    தமிழ்ப் பக்தியியக்கத்தின் முன்னோடி ஆனார்
    பேயுருவை உவந்தேற்ற பெரும்பெண்ணும் ஆனார்
    பெம்மானே அம்மையென அழைத்த பெண்ணுமாவர்

    இறையுணர்வை இலக்கியத்தில் இணைத்த பெண்ணாவார்
    இறையடியில் இருப்பதை இன்பமாய் ஏற்றார்
    பேயுருவில் கயிலாயம் சென்ற பெண்ணாவார்
    பெம்மானின் கோவிலில் இருப்பிடமும் பெற்றார்

    காரைக்கால் அம்மையைக் கருத்தினிலே வைப்போம்
    காலத்தால் அழியாத கவிமரபை அளித்தார்
    திருமுறைகள் வருவதற்குத் திறவுகோல் அவரே
    அவர்தினத்தைப் புனிதமாய் அனைவருமே நினைப்போம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(489)

    குறளின் கதிர்களாய்…(489)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(489)

    அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்குஞ் செய்யா விடல்.

           –திருக்குறள் – 203 (தீவினையச்சம்)

    புதுக் கவிதையில்…

    தமக்குத் தீங்கு செய்வோர்க்கும்
    தண்டனையாகத்
    தீமை செய்யாமல் விடுவதே
    அறிவு அனைத்திலும்
    தலையாய அறிவெனத்
    தரணியோர் கூறுவர்…!

    குறும்பாவில்…

    தம்மை வருத்துவோர்க்கும் பதிலாகத்
    தீய செயல்களைச் செய்யாமல் விடுதலே
    அறிவிலெல்லாம் முதன்மையானதெனக் கூறுவர்…!

    மரபுக் கவிதையில்…

    தீங்கே தமக்குச் செய்வோர்க்கும்
         திரும்பத் தீமை செய்யாமல்
    தாங்கிக் கொண்டே விட்டிடுதல்,
         தரணி மாந்தர் கொண்டுள்ள
    ஓங்கும் அறிவு பலவற்றுள்
        ஒன்றாய் உயர்ந்தே முதல்நிலையைத்
    தாங்கும் தகுதி உள்ளதெனத்
        தரணி யெங்கும் கூறுவரே…!

    லிமரைக்கூ…

    தமக்குச் செய்வோர்க்கும் தீங்கு,                       
    தீமை செய்யாமல் விட்டிடுதல் அறிவிலெல்லாம்
    தலையாய அறிவென்பர் ஆங்கு…!

    கிராமிய பாணியில்…

    செய்யாத செய்யாத
    தீம செய்யாத,
    அடுத்தவங்களுக்கு ஒருநாளும்
    கெடுதல் செய்யாத..

    தனக்கு ஒருத்தன்
    கெடுதல் செஞ்சாலும்
    தாங்கிக்கிட்டே
    திரும்ப அவனுக்குக்
    கெடுதல் செய்யாம விடுறது,
    அறிவிலயெல்லாம் மொதல்தரமான
    ஒசந்த அறிவுண்ணு
    எல்லாரும் சொல்லுவாங்க..

    அதால
    செய்யாத செய்யாத
    தீம செய்யாத,
    அடுத்தவங்களுக்கு ஒருநாளும்
    கெடுதல் செய்யாத…!

    Share
  • மண்ணிலிருந்து மனிதம் காத்த மாதவ யோக சுவாமிகள்!

    மண்ணிலிருந்து மனிதம் காத்த மாதவ யோக சுவாமிகள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    நல்லூரான் வாசலுக்குச் சென்றுமே விட்டால்
    நமையறியா ஆனந்தம் நமக்குள்ளே பெருகும் 
    நல்லூரில் சித்தர்கள் தடம் பட்டதாலே 
    நல்லூரில் தடம்பதித்தால்  நம்மயக்கம் தீரும்

    தேரடியை நாமெல்லாம் பார்த்தபடி செல்வோம்
    தேரடியை பேரிடமாய் கண்டாரே ஓர்மனிதர் 
    பித்தான செல்லப்பர் பிரதான இடமாக
    நல்லூரான் தேரடியே நாடியே தேர்ந்தாரே 

    தன்னை மறப்பார் தன்நாமம் உரையார்
    என்னவோ பேசுவார் எடுத்தெறிந்தும் ஏசுவார்
    அழுக்குத் துணியோடு அவரென்றும் திரிவார்
    ஆனாலும் அவருக்குள் அருளொளி இருந்தது

    அருளொளி இருப்பதை ஆருமே அறியார்
    அருகணைய விளைவாரை அடித்துமே ஒதுக்குவார்
    ஞானத்தின் ஒளியாக நல்லூரில் இருந்தார்
    நல்லதொரு சீடனைக் மனமெண்ணி நின்றார் 

    தேடிய சீடன் ஓடோடி  வந்தான்
    வந்தவனை நிந்தனை செய்தவரும் நின்றார்
    சீடனோ சிக்கெனப் பிடித்துமே நின்றான்
    தேரடாவுள் தீரடாபற்று மந்திரமாக வந்ததுவங்கே 

    எப்பவோ முடந்த காரியம் நாமறியோம் 
    முழுவதும் உண்மை செப்பினார் செல்லப்பர்
    சீடன் கேட்டான் சிந்தை தெளிந்தான்
    குருவே அவரெனச் சரணம் அடைந்தான் 

    சுற்றினான் சீடன் ஒதுக்கினார் குருவும்
    முற்றிய விசராய் தோற்றினார் அங்கே
    அடித்தார் விரட்டினார் ஆக்கினை கொடுத்தார்
    அயரா நின்றார் அவரடி சீடரும் 

    செல்லப்பர் முடிவை நெருங்கிய வேளை
    சீடர் யோகர் தேடியே சென்றார்
    நில்லங்கே வார்த்தை வெளியே வந்தது
    நின்றார் யோகர் உணர்ந்துமே அகன்றார்

    யோக நாதன் யோக சுவாமியானார்
    செல்லப்பா சித்தர் உள்ளே புகுந்தார்
    கொழும்புத் துறையை கோவிலாக்கி
    அமர்ந்தார் யோகர் அனைவர்க்கும் அரணாய்

    சித்தம் தெளிந்தார் சித்தும் அறிவார்
    வித்தைகள் தெரிந்தும் விளம்பரம் இல்லார்
    மேலாம் இறையை மேலாய் எண்ணினார்
    கீழாம் குணத்தை ஆழவே அழித்தார் 

    படித்தவர் வந்தனர் பாமரர் வந்தனர்
    பிடித்ததைக் கேட்டு வாசலில் நின்றனர்
    தேவைகள் அறிந்து சுவாமிகள் கொடுத்தார்
    தெரிசனம் கொடுக்கா திட்டியும் அனுப்பினார்

    அணுகுவார் பிணியை அறிந்துமே நின்றார்
    அவரவர் அகத்தை அவரறிந் திருந்தார் 
    ஆணவம் மிக்கார் அவர்முன் வந்திடின்
    அவர்களை வைது அனுப்பியே விடுவார் 

    பொருளை நாடார் அருளை நாடினார்
    பொன்னைக் கொடுத்தால் பொங்கியே எழுவார்
    அன்பாய்க் கொடுத்தால் அகமும் மலர்வார்
    கிடைக்கும் அனைத்தையும் கொடுத்துமே மகிழ்வார் 

    திருமுறை அனைத்தையும் திரவியம் என்பார்
    பாடிப் பாடிப் பரவசம் அடைவார் 
    திரு வாசகத்தை உருகியே பாடுவார்
    அனைவரும் படித்திட ஆசையும் கொண்டார்

    நல்லூர் என்றால் உள்ளமே உருகுவார்
    நற்குரு உறைவிடம் அதுவெனப் போற்றுவார்
    எல்லை இல்லாப் பற்றுங் கொண்டார்
    நல்லூர் தந்த நம்யோக சுவாமிகள் 

    சித்தராய் இருந்தவர் தெருவெலாம் திரிந்தார்
    எத்தனை பேர்கள் அவரினை அறிந்தார்
    அறிந்தவர் தெளிந்தார் அகமது வெளுத்தது
    அவர்முகம் கண்டதே அவரவர் புண்ணியம்

    மண்ணில் இருந்து மனிதம் காத்தார்
    மாதவ யோக சுவாமிகள் வாழ்வில் 
    எண்ணில் அடங்கா ஆற்றல் அனைத்தையும்
    இயல்பினை எண்ணி ஈந்துமே உயர்ந்தார் 

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் [அங்கம் – 9]

    கற்பகதரு என்னும் அற்புதம் [அங்கம் – 9]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    காகிதங்கள் பயன்பாட்டுக்கு வராது இருந்த காலத்திலும் – பலவகையில் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா! ஆச்சரியப்படவே தேவை இல்லை! வெளிவந்த பல்துறை சார்ந்த நூல்களுமே கற்பகதருவாம் பனையின் ஓலையில் எழுதப்பட்டே  வந்திருக்கின்றன என்பதுதான் முக்கியமாகும். எங்களின் எழுத்தறிவினைச் சுமந்த பனை ஓலைச் சுவடிகள் அறிவின் சின்னம் என்பதில் பெருமை அல்லவா! ஏடு என்றாலே பனைதான்  எல்லோர் கண்முன்னே வந்து நிற்கும். ஏடு என்ற சொல்லின் வேரே பனை ஓலை அல்லவா !

    பனை ஓலை அரசாங்கத்தின் எழுதுகின்ற பொருளாகப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. காகிதம் பயன்பாட்டுக்கு வரமுன்னர் எழுதுவதற்கு எங்களுக்குக் கைகொடுத்த தெய்வமாய் பனையும் அதன் கொடையான ஓலைகளுமே விளங்கின என்பதை கருத்திருத்தல் மிகவும் அவசியமாகும்,

    பனை ஓலைச் சுவடிகள் பலவற்றை எங்களின் முன்னோர்கள் பலர் தேடிக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்றும் ஓலைச் சுவடிகளைத் தேடும் பணியில் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டும் வருகிறார்கள். பனை ஓலைச் சுவடிகளைத் தேடி உ.வே.சா என்னும் எங்கள் தமிழ்த் தாத்தா நெடும்பயணம் மேற் கொண்டார் என்பதை யாவரும் அறிவோம். அவரின் வழியில் இன்று பலரும் பயணப்பட்டு பல பனை ஓலை ஏட்டுச் சுவடிகளைப் பல இடங்களிலும் கண்டு தேடிப் பெற்றிருக்கிறார்கள் . ஓலைச் சுவடிகளை வீட்டின் கூரையில் வைத்திருந்திருந்திருக்கிறார்கள். ஓலைச் சுவடிகளைத் தேடிப் போனவர்கள் – வீட்டுக்குரியவர் கூரையில் சொருகி வைக்கப்பட்ட ஓலைச் சுவடிகளை – அவர்களிடமிருந்து பெற்ற வரலாறுகளையும் அறிந்திடக் கூடியதாக இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து ஐந்தாம் ஆண்டு வரையிலும் பத்திரப்பதிவு என்பது ஓலையி ல்த்தான் அமைந்திருந்தது. “தீட்டு” என்னும் பெயரால் இந்த எழுதப்பட்ட ஆவணங்கள் அழைக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளைத் தொகுத்து வைத்த தொகுப்பினை “கருணை” என்று பெயரிட்டு அழைத்தனர். ஓலைகளில் எழுதும் எழுத்துக்களை கேரளத்தில் – கோலெழுத்துகண்ணெழுத்து என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள்.

    செட்டி நாட்டு வணிகர்கள் தங்களின் கணக்குகளை எழுதுவதற்கு ஓலைச் சுவடிகளையே பயன்படுத்தி இருக்கிறார்கள். தம்மபதம் என்னும் பெளத்த நூல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஓலைச் சுவடியிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

    திபெத்து நாட்டில் தமிழ் நாட்டின் ஓலைச்சுவடிகள் பல கிடைத்திருக்கின்றன என்று அறிய முடிகிறது, திருவாங்கூர் பகுதியில் பழைய ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது. “அழகிய பாண்டிபுரம் பெரிய வீட்டுச் செட்டியார் ஓலைகள்” என்று இந்தப் பழைய ஓலைச்சுவடிகள் அழைக்கப்படுகின்றன.

    ஓலைச் சுவடிகள் எங்களின் மிகப்பெரிய பொக்கிஷமாகும். அந்த ஓலைச் சுவடிகளை அளித்த கற்பக தருவான பனையினை நாங்கள் எக்காலத்தும் மறந்துவிடுதல் கூடாது. அப்படி நாங்கள் மறந்து விடுவோ மேயானால் நன்றி என்னும் சொல்லையும் மறந்து விட்டவர்களாகி விடுவோம். மருத்துவம்சோதிடம் சிற்பம், ஓவியம்இலக்கியம்இலக்கணம்கணிதம்நிகண்டுநாட்டர் வழக்காறுகள்,  வரலாறு,  சமயம், தத்துவம்என்று பல்கிப் பெருகி நிற்கும் அறிவுக் கருவூலங்கள் அனைத்தையும் பனை ஓலை தன்னகத்தில் நிறைத்துக் கொண்டது. பனையின் ஓலைகள் எழுதுவதற்கு ஏற்றனவாய் அமைந்ததுவே பெரும் வரப்பிரசாதம் என்றுதான் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

    ஓலைச் சுவடிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட அறிஞர்களால் பல இடங்களில் ஓலைச்சுவடிகள் பல கிடைத்திருக்கின்றன. அந்தவகையில் திருநெல்வேலிப் பகுதியில் பல ஓலைச்சுவடிகளை அவர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். அண்ணாவிமார் வீடுகளில் நாடகச் சுவடிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். அங்குள்ள மருத்துவர்கள் மருத்துவம் சம்பந்தமான ஒலைச்சுவடிகளை வைத்து அதன்படி மருத்துவம் செய்வதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.  சோதிடர்கள்குறிசொல்லும் குறவர்கள்வில்லிசைக் கலைஞர்கள், ஓலைச் சுவடிகளைத் தம்வசம் வைத்திருந்து பாதுகாத்து வருகிறார்கள் என்பதையும் ஓலைச்சுவடி தேடிச் சென்ற வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அதுமட்டுமல்ல ஜமீந்தார்கள்பண்ணையார்கள்வீடுகளிலும் பழைய ஓலைச் சுவடிகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். கோவில்கள்பலரின் வீடுகளில் உள்ள பூஜை அறைகள்இங்கெல்லாம் ஓலைச் சுவடிகள் இருப்பதையும் கண்டிருக்கிறார்கள். கேரளப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் கன்யாகுமரி, திருநெல்வேலிஇராமநாதபுரம் மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஓலைச் சுவடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இச்சுவடிகளில் பெரும்பாலான சுவடிகள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்களில்தான் மிகுதியாக  இருப்பதாக அறிய முடிகிறது. கிராமியத் தெய்வங்கள் பற்றியகதைப்பாடல்கள்வில்லுப்பாட்டுக் கதைகள்கட்ட பொம்மன் கதைகள் அடங்கிய ஓலைச் சுவடுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்,

    இலங்கையிலும் பல ஓலைச்சுவடிகள் கிடைத்திருக்கின்றன. அனுராதபுரத்தில் 1110 வருட பழமைவாய்ந்த ஓலைச்சுவ டிகளை கண்டறிந்திருக்கிறார்கள், கேரள மணிகண்டம் என்னும் சோதிடம் பற்றிய ஓலைச் சுவடிகள்அதைவிட – குருநாடி சாத்திரம்அகத்தியர் நாடி சாத்திரம்கிரகச் சக்கர ஞான ஏடுசித்தாரூடம்ஆதித்தன் பலன் என்று சோதிடம் சம்பந்த மான சுவடிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். அகத்தியர் நூறுஅகத்தியர் வாகடம்அகத்தியர் கற்பம்அகத்தியர் உட்கரு சாத்திரம்அகத்தியர் சவுக்காரத் திறவுகோல் என்னும் பெயரில் அமைந்த மருத்துவ ஏடுகளும் கண்டறியப்பட்டிருக்கி ன்றன.

    தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பழைய நூலகத்தில் ஏறக்குறைய தொண்ணூற்று ஐயாயிரம் ஓலைச்சுவடிகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன என்பது கவனத்துக்குரியதாகும்அத்தனை ஓலைச்சுவடிப் பொக்கிஷங்களும் அறிவற்றவர்களின் அசுரத்தனத்தால் அக்கினிக்கு இரையாகிவிட்டன என்பதையும் கவலையுடன்தான் மனமிருத்த வேண்டி இருக்கிறது.

    கற்றறிந்த பெரியோர்களின் வழி காட்டலில் இளையவர்கள் பலர் கை கோர்த்து “நூலக நிறுவனம்” என்னும் அமைப்பினூடாக  பழைய ஓலைச் சுவடிகளைத் தேடி – அவற்றைச் சேகரிப்பதோடுதக்க முறை யில் சுத்தப்படுத்திப் பத்திரப்படுத்தி யாவரும் அறியும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஆடிய பாதம் வீதியில் அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து செயற்பட்டு வருகின்ற பாங்கினை யாவரும் மனமெண்ணி பெருமைப்படுவது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். இவர்களின் தேடல்கள் வழியில் பல ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. ஓலைச்சுவடிகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட வேளை கந்தபுராண ஓலைச்சுவடிகளை தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் கண்டதாகவும் அங்கிருந்து அந்த ஓலைச் சுவடி களைப் பெற்றுக் கொண்டதாகவும் அறிய முடிகிறது.

    இலங்கையில் சுவடிகளுக்கென்று கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே நூலகம் இருந்ததை அறிய முடிகிறது. பெளத்த விகாரைகள் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் இடங்களாக இருந்திருக்கின்றன. ஆரம்பகால நூலகங்கள் இன்று பல்கலைக்கழகங்களில் இருப்பதுபோல சிறப்பாக இருந்திருக்கின்றன என்றும் அறிய முடிகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில்  “சரஸ்வதி மகாலயம்” என்னும் பெயரில் ஒரு நூலகம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இயங்கி இருக்கிறது  என்பதையும் வரலாற்றால் அறிந்து கொள்ளுகிறோம்.  இங்கு பல ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலகம் அமைந்த இடம் எது என்று அறிய ஆவலாய் இருக்கிறதல்லவா அந்த இடம் தான் நாயன்மார்க்கட்டாகும்.

    இன்னுமொரு சிறந்த சுவடிகள் நூலகமும் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறது. எங்கு தெரியுமா? மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆதீனத்தில்த்தான். பல துறைகள் சார்ந்த ஓலைச் சுவடிகள் இங்கு இருந்தன என்றும் அறிகின்றோம். பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் புகழ்பூத்த பல்கலைக் கழகமாகும். சுவாமி விபுலானந்த அடிகளாரை தமிழ்த்துறைத் தலைவராய், பேராசிரியராய், அமர்த்திப் பெருமை கொள்ளவைத்த பல்கலைக்கழகமாகும். இங்கு மிகவும் சிறந்த நூல்நிலையம் அமையப் பெற்றிருக்கிறது. அந்த நூல்நிலையத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு தனி அறையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பல அரிய ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது கருத்திருத்த வேண்டிய செய்தி எனலாம்.

    மட்டக்களப்பு மான்மியம் என்னும் சிறந்த ஒரு நூலை ஆக்கியவர் வித்துவான் எவ்.எக்ஸ்.சி . நடராசன் அவர்கள். அந்த நூலினை ஆக்குவதற்கு அருந்துணையாக அமைந்தன பழைய ஓலைச் சுவடிகளே என்று அவர் தனது நூலின் முன்னுரையில் காட்டுவதும் நோக்கத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் கண்ணகி அம்மன் வழிபாடு மிகவும் பக்திபூர்வமாக இன்றும் மக்களால்  பேணப்பட்டு வருகிறது. யாழ்ப்பாண மாவட்ட த்தைவிட – கிழக்கு இலங்கையில் கண்ணகி வழிபாடு சிறப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடப் பட வேண்டிய முக்கிய செய்தி எனலாம். வைகாசி மாதத்தில் அம்மனுக்கு பல விசேடங்கள் நடைபெறும். அதில் ஒன்று “கொம்பு முறித்தல்” என்பதாகும். குளித்திப் பாடல்களும் பக்தியுடன் பாடப்படும். கண்ணகை அம்மன் கோவில்களில் பெரிய பெட்டகம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அந்தப் பெட்டகத்துள் பழைய ஓலைச்சுவடிகள் நிறையவே இருந்ததையும் நான் கண்டிருக்கிறேன். சித்திர புத்திரன் கதையினை ஏடுகளில் வைத்து அந்த ஏடுகள் வைப்பதற்கான பிணைச்சல் வடிவில் அமைந்த பலகையில் வைத்து கோவில்களில் பாடுவதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கதைகளையும் அதற்கான விளக்கங் களையும் என்னுடைய இளமைக் காலத்தில் கேட்டும் இருக்கிறேன். மாந்திரீக ஏடுகள்பில்லி சூனிய ஏடுகள்மருத்துவ ஏடுகள், சாதகம் எழுதப்பட்ட ஏடுகள்என்று பலவகைப்பட்ட ஓலைச் சுவடிகளை பலரின் வீடுகளில் நான் கண்டிருக்கிறேன். பனங்காடு என்னும் பெயருடைய கிராமத்துக்கு அயல் கிராமத்தில் வாழ்ந்தும் இருக்கிறேன். பனம்பழத்தை  சுவைத்த நினைவுகள் இன்றும் என்மனத்தில் பசுமையாய் இருக்கிறது. பனம்பழம் பற்றிய பகுதி வரும்வேளை அதனைப்பற்றி விவரமாய் பார்ப்போம்.

    ஓலைச்சுவடிகள் பல இன்னும் பலரிடம் முடங்கிப் போய் இருக்கின்றன என்று ஆராய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அவற்றையெல்லாம் சேகரித்தால் இன்னும் பல அரிய தகவல்களை எல்லாம் அறிந்திடவும் பயன்பெறவும் இயலும் அல்லவா  ! ஹாரிங்டன் என்னும் வெள்ளைக்காரர் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடமையாற்றி இருக்கிறார். அவருக்குச் சமையல் செய்தவர் பெயர் கந்தப்பன். அவர் – தான் வேலைபார்த்த அந்த துரையிடம் ஓலைச்சுவடிகள் பற்றி கூறியிருக்கிறார். கிராமங்களில் உள்ள வீடுகளில் ஓலைச்சுவடிகள் பல இருப்பது வழக்கம். ஆனால் அவர்கள் அதனை வருட த்துக்கு ஒருமுறை தீயில் இட்டு விடுவார்கள். கறையான் அரித்தால் அப்படிச் செய்வார்கள். சில வேளை பயன் அறியாமலும் தீயில் போடுவதும் உண்டு. “தீயில் இட்டு எரித்துவிடு” என்று என்னிடம் ஒப்படைக் கப்பட்ட பல ஓலைச் சுவடிகள் இருக்கின்றன என்று கந்தப்பன் சொன்னதும் – துரை அவற்றைப் பெற்று சென்னை மாகாணத்தின் வருவாய்த்துறைக்கு பொறுப்பாய் இருந்த எல்லீஸர் என்பவரிடம் ஒப்படைத்தார். எல்லீஸரிடம் ஒப்படைக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் திருக்குறள் ஓலைச்சுவடியும் இருந்திருக்கிறது என்பதுதான். முக்கியமாகும். எல்லீஸ் என்பவர் தமிழின் மீது கொண்ட காதலால் தமிழைக் கற்று கவிதை எழுதும் அளவுக்கு ஆளுமை உடையவராக விளங்கினார். திருக்குறளை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்திருக்கிறார். தமது காலத்தில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி தமக்குக் கிடைத்த ஓலைச் சுவடிகளை அச்சு வாகனம் ஏற்றினார் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.    

    ஓலைச்சுவடிகள் பல பல இடங்களில் இன்னுமே இருந்தாலும் அவற்றை எல்லாம் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் என்னும் எண்ணம் இப்பொழுது  மேலோங்கி வருவது நல்லதொரு நிலை என்றுதான் கருதல் வேண்டும். ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் பாங்கில் நூலகங்கள் பல இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் – சென்னைப்பல்கலைக்கழக கீழ்த்திசைச் சுவடி நூலகம்உ.வே.சா. நூல் நிலையம்பிரமஞான சபை நூலகம்தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, உலகத் தமிழாராய்சி நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம்ஆசியவியல் ஆய்வு நிறுவனம், காஞ்சி புரத்தில் காமகோடி பீடம் ஶ்ரீ சங்கராசாரியார் மடம்பாண்டிச்சேரியில் பிரஞ்சு இந்திய கலைக்கழகம்விருத்தா சலத்தில் குமாரதேவ மடாலயம்,  தஞ்சையில் – சரஸ்வதி மகால் நூலகம்தமிழ்ப்பல்கலைக்கழகம்தருமபுர ஆதீன மடாலயம் மயிலாடுதுறைஶ்ரீ காசி மடம் திருப்பனந்தாள் திருவாவடுதுறை ஆதீனம்மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மடம் பேரூர்கலைமகள் கல்வி நிலையம் ஈரோடுகேரளப் பல்கலைக்கழகம் கீழ்த்திசை சுவடி நிலையம் திருவனந்தபுரம்.  கள்ளிக் கோட்டை சர்வகலாசாலை. திருச்சூர் சாகித்திய அகாதமிதிருவேங்கடவன் பல்கலைக்கழகம், ஆந்திரப் பல்கலைக்கழகம்உஸ்மானியாப் பல்கலை க்கழகம்தேசிய நூலகம் கல்கத்தா.

    அரசினரின் கீழ் இயங்கும் சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் தான் உலகிலே அதிகமான  ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். இங்கு இருபத்து ஆறு  இலட்சம் ஓலைச் சுவடிகளைக் கொண்ட எழுபத்து இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து எட்டு ஓலைச்சுவடிக் கட்டுகள் இருக்கின்றன என்பது முக்கிய மாகும்.

    ஓலைச் சுவடிகள் எங்களின் முதுசொம்மாகும். அதனை நாங்கள் அனைவருமே பாதுகாப்பதற்கும்உரியமுறையில் பேணுவதற்கு இயன்றவரை உதவிடுதல் என்பது மிகமிக அவசியமாகும். கற்பகதருவாம் பனை பற்றி சொல்ல வந்துவிட்டு – ஏடுகளைப் பற்றிய புராணம் பாடுவதாய் எண்ணி விடாதீர்கள். பனையின் ஓலை இல்லை என்றால் ஏடுகள் என்பதே வந்திருக்கவே முடியாது அல்லவாஓலையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அல்லவா எங்கள் முன்னோரின் சிந்தனைகளை எம்மிடம் சேர்த்து நிற்க அருந்துணையாய் அமைந்தது அல்லவாஅப்படி அருந்துணையாய் அமைந்தனவே ஓலைச் சுவடிகள். எல்லா வற்றும் பனைதானே காரணம். பனை இல்லையேல் ஓலை வந்திருக்குமா ! ஓலை இல்லையே ஏட்டுச் சுவடிகள்தான் வந்திருக்குமா ! எனவேதான் பனையின் வரலாற்றில் ஓலைச் சுவடிகள் தொடர்பான வரலா றும் கட்டாயம் இணைக்கபடுதல் இன்றியமையாதது அல்லவா !

    விருதுநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான எஸ்.யோசப் என்பவர் மிகவும் சிறப்பான ஒரு செயலினைச் செய்திருக்கிறார். ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களையும் பனை ஓலையில் எழுதிச் சாதனை படைத்திருக்கிறார். ஓலையிலும் எழுதலாமா? ஓலை எழுதுவதற்கு உகந்ததா என்று எண்ணுகின்ற இக்காலத்தவர்களுக்கு இந்த ஆசிரியரின் சாதனையானது எங்கள் கற்பகதருவாம் பனையின் மகத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காகிதம் பயன்பாட்டில் இருக்கும் வேளையிலும்; பனை ஓலை எழுதுவதற்கு உகந்ததாய் இருக்கிறது என்பதை இவரின் சாதனை காட்டி நிற்கிறது.

    வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை
    கண்பார்க்கக் கையால் எழுதானை – பெண்பாவி
    பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாள்
    எற்றோமற் றெற்றோமற் றெற்று”

    Share
  • குறளின் கதிர்களாய்…(488)

    குறளின் கதிர்களாய்…(488)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(488)

    பல்லார் முனியப் பயனில சொல்லுவா
    னெல்லாரு மெள்ளப் படும்.

           –திருக்குறள் – 191 (பயனில சொல்லாமை)

    புதுக் கவிதையில்…

    அறிவுடையோர் பலரும் கேட்டு
    அதிக வெறுப்படையும்படி
    பயனில்லாத சொற்களைப்
    பேசுகின்றவன்
    எல்லோராலும் இகழப்படுவான்…!

    குறும்பாவில்…

    கேட்டவர் பலரும் வெறுக்கும்படி
    பயனற்ற சொற்களை மட்டும் பேசுபவன்
    எல்லோராலும் அதனால் இகழப்படுவான்…!

    மரபுக் கவிதையில்…

    அறிவு கொண்டோர் பல்லோரும்
         அதனைக் கேட்டு வெறுப்புறவே
    நெறியே யில்லா வகையினிலே
         நேர்மை ஏது மில்லாமல்
    சிறிதும் பயனே யில்லாத
         சீரே யற்ற சொற்களையே
    அறிந்தும் பேசும் ஒருவனைத்தான்
        அகில மாந்தர் இகழ்வாரே…!

    லிமரைக்கூ…

    கேட்கும் அறிவுடையார் பல்லோரும்
    வெறுப்புறவே பயனற்ற சொற்களையே பேசுபவனை
    இகழ்வர் உலகோர் எல்லோரும்…!

    கிராமிய பாணியில்…

    பேசவேண்டாம் பேசவேண்டாம்
    பொறுபில்லாம பேசவேண்டாம்,
    பயனேயில்லாத சொல்லயெல்லாம்
    யாருகிட்டயும் பேசவேண்டாம்..

    அறிவுள்ளவங்க பலரும் கேட்டு
    அதிகமா வெறுப்படயும்படி
    அளவில்லாம பயனே இல்லாத
    சொல்லயே பேசுறவன் ஒலகத்தில
    எல்லாராலுமே இகழப்படுவான்..

    அதால
    பேசவேண்டாம் பேசவேண்டாம்
    பொறுபில்லாம பேசவேண்டாம்,
    பயனேயில்லாத சொல்லயெல்லாம்
    யாருகிட்டயும் பேசவேண்டாம்…!

    Share