குறளின் கதிர்களாய்…(489)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(489)
அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்.
–திருக்குறள் – 203 (தீவினையச்சம்)
புதுக் கவிதையில்…
தமக்குத் தீங்கு செய்வோர்க்கும்
தண்டனையாகத்
தீமை செய்யாமல் விடுவதே
அறிவு அனைத்திலும்
தலையாய அறிவெனத்
தரணியோர் கூறுவர்…!
குறும்பாவில்…
தம்மை வருத்துவோர்க்கும் பதிலாகத்
தீய செயல்களைச் செய்யாமல் விடுதலே
அறிவிலெல்லாம் முதன்மையானதெனக் கூறுவர்…!
மரபுக் கவிதையில்…
தீங்கே தமக்குச் செய்வோர்க்கும்
திரும்பத் தீமை செய்யாமல்
தாங்கிக் கொண்டே விட்டிடுதல்,
தரணி மாந்தர் கொண்டுள்ள
ஓங்கும் அறிவு பலவற்றுள்
ஒன்றாய் உயர்ந்தே முதல்நிலையைத்
தாங்கும் தகுதி உள்ளதெனத்
தரணி யெங்கும் கூறுவரே…!
லிமரைக்கூ…
தமக்குச் செய்வோர்க்கும் தீங்கு,
தீமை செய்யாமல் விட்டிடுதல் அறிவிலெல்லாம்
தலையாய அறிவென்பர் ஆங்கு…!
கிராமிய பாணியில்…
செய்யாத செய்யாத
தீம செய்யாத,
அடுத்தவங்களுக்கு ஒருநாளும்
கெடுதல் செய்யாத..
தனக்கு ஒருத்தன்
கெடுதல் செஞ்சாலும்
தாங்கிக்கிட்டே
திரும்ப அவனுக்குக்
கெடுதல் செய்யாம விடுறது,
அறிவிலயெல்லாம் மொதல்தரமான
ஒசந்த அறிவுண்ணு
எல்லாரும் சொல்லுவாங்க..
அதால
செய்யாத செய்யாத
தீம செய்யாத,
அடுத்தவங்களுக்கு ஒருநாளும்
கெடுதல் செய்யாத…!