Blog

  • படக்கவிதைப் போட்டி – 200

    அன்பிற்கினிய நண்பர்களே!

    உங்கள் நல்லாதரவுடன் படக்கவிதைப் போட்டி, 200ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இதில் தொடர்ந்து பங்கேற்கும் படைப்பாளர்களுக்கும் நிழற்படக் கலைஞர்களுக்கும் படங்களைத் தேர்ந்தெடுக்கும் சாந்தி மாரியப்பன், ராமலட்சுமி, சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் மேகலா இராமமூர்த்தி, வெளியிட்டு வரும் ஆசிரியர் பவளசங்கரி உள்ளிட்ட அனைவருக்கும் வல்லமை சார்பில் நன்றிகள், பாராட்டுகள், வாழ்த்துகள்.

    இந்த வாரத்திற்கு சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்குகிறோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • வாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடுகள்

    -துக்கை ஆண்டான்

    ஸ்வஸ்திஸ்ரீ வாணகோவரையன் (ஓலை சிற்றகழி ஊரவர் கண்டு தங்களூரில்) இருபத் தெட்டாவது முதல் மகனார் சவுண்(ட)பர் நம(க்)கு நன்றாக வைத்த அ(கர)த்துக்குப் பேர் கொண்ட பட்டர்கள் இருபத்தொரு(வரு)க்கு த(ங்க)ளூரிலே ஒருவர்க்கு ஒரு (ம)னையும்  புன்செய் நிலத்திலே ஒருவருக்கு ஒன்(ற)ரையாக வ(ந்த) புன்செய் நிலம் முப்ப(த்)தொன்றரையும் வைத்திய விருத்திக்கு ஒரு மனையும் பு(ன்)செய் நிலத்திலே ஒன்றரை நிலமும் “ஆகப்பேர் இருபத்திருவருக்கும் மனை இருபத்திரண்டும் புன்செய்) நிலம் முப்பத்திரு வேலியும் இறையிலி ஆக இட்டோம். இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொண்டு நமக்கு நன்றாக சந்திராதித்த(வ)ரையும் இறையிலிஆக அனுபவிப்பார்களாகப் பண்ணுவதே.” இவை வாணகோ(வ)ரையன் எழுத்து.

    இப்பட்டர்கள் குடியிருக்கிற மனைகளுக்கு நிலம் காலும் பாடிகாப்பானுள்ளிட்ட பணி செய் மக்களுக்கு நிலம் காலும் ஆக நிலம் முப்பத்திரு வேலியும் சந்திராதித்தவரையும் இறையிலி ஆக விட்டோம். இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொண்டு அனுபவிப்பார்களாகப் பண்ணவதே.(கன்னட மொழியில் கையெழுத்து உள்ளது)

    இடம்: பெரம்பலூர் வட்டம் சித்தளி கிராமம். வரதராஜபெருமாள் கோவில் மகாமண்டபம் தென்சுவரில் வெட்டப்பட்ட 19 வரி கல்வெட்டு.

    மகன் – கீழ்ப்படிந்த வீரன், subordinate soldier; மனை – வீடு.

    விளக்கம்: மூன்றாம் இராசராசனுக்கு 28 ஆவது ஆட்சிஆண்டில் (1244 AD) அவனுக்கு அடிபணிந்து ஆட்சிபுரிந்த மூன்றாம் அதிகார நிலை அரையனான வாணகோவரையன் தனக்கு உடல்நலம் தேறவேண்டி அவனுக்குக் கீழ்படிந்த வீரனான சவுண்டபர் அகரம் வைக்கிறான். அந்த அகரத்தை செய்த இன்றைய சித்தளியான அன்றைய சிற்றகழி ஊர் பிராமணர் 21 பேருக்கும், ஒரு மருத்துவரின் வளர்ச்சிக்கும் ஆக 22 பேருக்கு பேர் ஒருவருக்கு ஒரு வீடும், 1-1/2 புன்செய் நிலமும் பெறும்படியாக 32 வேலி நிலமும் அரசவரி இன்றி வழங்கப்படுகின்றது. இந்நிலங்கள் மகதேசன் கோலால் அளந்து கொடுக்க ஏற்பாடானது. நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை இப்படி நடக்கவேண்டும் என்று வாணகோவரையன் ஆணைஓலை வெளியிட்டான். வாணர் கோலார் பகுதியில் இருந்து வந்ததால் அவர் தாய்மொழி கன்னடம் என்பதால் இறுதியில் கன்னடத்தில் கையொப்பம் இட்டான்.

    இந்த பிராமண வீடுகளை ஒட்டி நிலம் காலும் ஒதுக்கப்படுகின்றது. அவை கொல்லைப்புறமாக இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகின்றது. இவர்களுடன் பாடிகாவல் உள்ளிட்ட பிற பணியாளருக்கும் இறையிலியாக தலைக்கு கால்நிலம் என 32 வேலி நிலம் நிலவும் ஞாயிறும் நின்று நிலைக்கும் வரை செல்லக் கடவதாக வழங்கப்படுகின்றது.

    22 பேருக்கு 32 வேலியை வகுத்தால் ஒருவருக்கு ஒன்றரையாக (1.45) நிலம் கிட்டுகின்றது. இந்த ஒன்றரையில் கால் என்பது சற்றொப்ப 0.242 என வருகின்றது. அப்படியானால் பாடிகாவல் உள்ளிட்ட பிற கோவில் பணிசெய்வோருக்கு நிலம்கால் என்ற அளவில் 32 வேலி நிலத்தை வகுத்தால் 128 பேர் நிலம் பெறுகின்றனர். ஆக ஒரு பழைய கோவில் ஊரை திருத்திச் சீரமைத்து பெரிய ஊராக அமைத்தான் வாணகோவரையன் என்பது விளங்குகின்றது.  இந்த கால்நிலம் பெறும் 128 பேரில் 22 பிராமணரும் அடங்குவர் என்று தெரிகின்றது. அந்த 22 பேரைக் கழித்தால் 128 – 22 = 106 பிராமணரல்லாதார் நிலம் பெற்றனர். இந்த கால்நிலம் என்பது பயிர் நிலமல்ல மாறாக அவர்கள் தம் சொந்த செலவில் வீடு கட்டிக் கொள்வதற்கே என்று புரிகின்றது. பிராமணருக்கு அரசனே வீடு கட்டிக் கொடுத்ததால் அவை அளவில் பெரியவாகவும் கிணறு உடையவாகவும் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை.

    அதேநேரம் கால்நிலம் பெற்றவர்கள் எளியோர் என்பதால் அவர்களால் அதிகம் செலவழித்து பெரிய வீடு கட்ட முடியவில்லை என்பதோடு கிணறு வெட்டினால் கூடுதல் செலவாகும் எனபதால் கிணறுஅற்ற சிறு வீடுகளாகவே அவர்தம் வீடுகள் காட்சிப்படுகின்றன. கால்நிலம் என்பதும் சிறுபரப்பு நிலத்துண்டு தான் அதுவே சிறிய வீட்டிற்கும் காரணமாகின்றது.

    மற்றொரு மடலாடல் குழுவில் 3 ஆண்டுகள் முன் பிராமணர் பிறர் வீடுகள் கிணறு அமையா வண்ணம் தடுத்துவிட்டனர் என்று தொல்லியலாளர் பத்மாவதி என்பவர் கருத்து கூறியதாக பதிவான போது அதை மறுத்து பிராமணர் வீடுகள் கிணறுடன் இருப்பதற்கு அவை வேந்தர், மன்னர், அரையர்களால் பெருஞ்செலவு செய்து  கட்டப்பட்டவை. பிறருடைய வீடுகள் கிணறு இன்றி சிறியவாக இருப்பதற்கு காரணம் அவர்தம் வீடுகள் அவர் தம் சொந்த செலவால் கட்டப்பட்டதே காரணம் என்று பிழையை சுட்டிக் காட்டினேன். தொல்லியலாளர் பத்மாவதி திராவிட கருத்தியலின் தாக்கத்தால் அவ்வாறு தவறான ஒரு கருத்தை கல்வெட்டில் செய்தியாக கூறப்பட்டுள்ளது என திணித்துள்ளார் என்று எடுத்துரைத்தேன். இப்போது போல அப்போது என்னால் கல்வெட்டுச் சான்று ஏதும் தரஇயலவில்லை என்பதே குறை.

    தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்கள் தம் சொந்தக் கருத்தை கல்வெட்டுச் செய்தியாக புகுத்தாமல், திணிக்காமல் இருப்பதுவே சாலவும் நன்று, அல்லவிட்டால் பல தலைமுறைக்கு அத்தவறான கருத்து எடுத்துச் செல்லப்பட்டு சமூகத்தில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் என்பதே நடப்பு உண்மை.

    இப்போது இந்தக் கல்வெட்டின் மூலம் பெரம்பலூர் வட்டம் சித்தளி ஊரில் மட்டும் அல்ல, கோவில் அமைந்த பிற எல்லா ஊர்களிலும் இதே முறையில் தான் பிராமணருக்கு வீடும், பிறருக்கு வீட்டு மனை மட்டும் என வழங்கப்பட்டன. அதனால் தான் பிராமண வீடுகள் கிணறுள்ள பெரிய வீடாகவும், பிறருக்கு கிணறற்ற சிறிய வீடாகவும் அமைந்தன என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.  இன்றும் கோவில் ஊர்க் கிராமப் புறங்களில் வீடுகள் இதே நிலையில்தான் அமைந்துள்ளன என்பதைக் கண்டு தெளியலாம். இந்த வேறுபாட்டிற்கு ஏற்றத்தாழ்விற்கு வேந்தர், மன்னர், அரையர் தாம் காரணமே ஒழிய பிராமணர் காரணகர் அல்லர். அப்படியான நிலையில் பிராமணரைப் பழிப்பது நன்றன்று.

    வேந்தர், மன்னர், அரையரான அரசர், நாட்டுக் கிழான் ஆகிய நாலடுக்கு அதிகார அமைப்பு பிராமணருக்கு வேத பாடசாலை அமைத்து கல்வி புகட்டி, கோவில் கட்டி வேலைவாய்ப்பு தந்து குடியிருக்க வீடும் ஏற்படுத்தித் தந்தது என்ற வகையில் 4 அகவை முதல் இறக்கும் காலம் வரை பாதுகாவலராக உத்தாரமாக (supportive) இருந்து தந்தைக்கு ஒப்பான நிலையில் பேணியதற்கு பிராமணர் நன்றி உணர்வுள்ளவராக இருத்தல் வேண்டும். ஆளப்பிறந்தவர், ஆண்டகுடி, மண்ஆண்டவர், அடக்கிஆண்டவர் என்று மார்தட்டிக் கொள்வோர் காரணமின்றி பிராமணரைப் பழிப்பது என்பது இதில் அவர்கள் போற்றும் அரசகுடியோரை பழிப்பதாகவே கருதத்தக்கதாக உள்ளது.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி III, பக். 100. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, எழும்பூர், சென்னை – 8

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 7.1

    -மீனாட்சி பாலகணேஷ்

     (7. அம்புலிப்பருவம்)

     “என் மகன் தன் முகத்து நெற்றிச் சுட்டி அசைய, கிண்கிணிச் சதங்கைகள் ஒலிக்கத் தவழ்ந்து போய்ப் புழுதியை அளைந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். உனக்குக் கண்கள் இருந்தால் இங்கு வந்து என்மகன் கோவிந்தன் செய்யும் இக்கூத்தினைக் கண்டு செல்வாயாக,” எனப் பெருமையும் பொய்யாக, வரவழைத்துக் கொண்ட சலிப்புமாகத் தாய் கூறுவதாகப் பாடியுள்ளார் பெரியாழ்வார்.

    தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்ப்
    பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
    என்மகன் கோவிந்தன் கூத்தி னைஇள மாமதீ
    நின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே நோக்கிப்போ.

    (பெரியாழ்வார் திருவாய்மொழி-5)

    தனது கண்ணின் கருமணியாகிய சிறுகுழந்தையை உறங்கவைக்கப் பாடுவாள் தாய்; அவன் உணவுண்ணவும் அவனுடன் விளையாடவும் அவனுக்குத் தகுந்த நண்பர்களைத் தேடுவாள். வானில் உலவும் முழுமதி குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒரு உறவு- சிறு குழந்தைகளால் அம்புலிமாமா என அவன் அறியப்படுபவன்.

    குழந்தை கிருஷ்ணனும் அதற்கு விதிவிலக்கல்லவே? சந்திரனைத் தன் சிறு குட்டனுடன் விளையாட அழைக்கிறாள் அன்னை யசோதை (பெரியாழ்வார் கூற்றாக). மேலும் அவனுடைய குறும்புகளையெல்லாம் தன்னுடன் வந்து, சேர்ந்து ரசித்து மகிழவும் நிலாவைக் கூப்பிடுகிறாள்.

    அம்புலிமாமாவும் சளைத்தவனில்லை. தனக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அவனுக்கு மமதையை உண்டாக்கி விடுகிறது போலுள்ளது! விரைவில் வருவதில்லை. அவ்வண்ணமே அசையாது வானில் நிற்கிறான். அப்போது தாயுடன் சேடியரும் சேர்ந்து, சாம, தான, பேத, தண்ட உபாயங்களைப் பயன்படுத்தி சந்திரனைக் ‘குழந்தையுடன் விளையாடவா’வென அழைக்கின்றனர்.

    பிற்காலத்தில் எழுந்த அனைத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களிலும் ஏழாம் பருவமாக வைக்கப்பட்டுள்ள அம்புலிப்பருவத்தில் இத்தகைய உபாயங்களால் அம்புலியை அழைப்பது அழகுறப் பாடப்பட்டுள்ளது. குழந்தை கிருஷ்ணனின் குறும்புகளை விவரிக்கும் பெரியாழ்வாரின் பல பாசுரங்கள் பிற்காலத்துப் பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியவகைக்கு வித்திட்டவை.

    சாம, தான, பேத, தண்ட உபாயங்களைப் பயன்படுத்திப் பாட வேண்டும் எனும் இலக்கண விதியின்படி அம்புலிப்பருவம் பாடுவதற்கு மிகவும் அரிதானது எனப்படும். ‘காசினியில் பிள்ளைக் கவிக்கு அம்புலி புலியாம்,’ எனும் சொற்றொடரே இதனாற்றான் எழுந்ததெனலாம்.

    குழந்தையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கியமான பருவம். தன்னைச் சுற்றியுள்ள உலகம், அதில் நிகழ்பவை இவற்றினைக் கண்டும், தாய்தகப்பன், செவிலியர் இவர்கள் கூறுவதனைக் கேட்டும் தன் அறிவினை வளர்த்துக்கொண்டு, உலகைப் பற்றிய தனது கருத்துக்களை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொள்ளும் பருவத்தின் துவக்கம் இதுவாகும்.

    பெரியாழ்வார் பாசுரங்களிலும் சாம, தான, பேத, தண்ட உபாயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவை இலக்கிய இன்பத்தை, அதன் சுவையை மேலும் இனிதாக்குகின்றன. அவற்றையும் மற்ற பிள்ளைத்தமிழ்ப் பாடல்களுடன் வரிசைக்கிரமமாகக் காணலாம்.

    மேற்காணும் பாடலில் தாய் சமாதானமாக (சாம உபாயத்தால்) நிலாவை அழைப்பதைக் காண்கிறோம்.

    சாம உபாயத்தில் குழந்தையையும் சந்திரனையும் ஒப்பிட்டுப் பல காரணங்களைக்கூறி, ‘இவனும் உனக்கு சமமானவன்; இணையான புகழ் கொண்டவன்,’ எனத் தாய் கூறுவதாகக் காணலாம்.

    தன் குழந்தை உலகிலுள்ள அனைவரிலும் உயர்வானவன் என்பது தாய்மையின் பெருமிதம். ‘போனால் போகின்றது. எவ்வாறாயினும் இந்நிலா அவனுடன் விளையாட வந்தால் போதும்,’ எனும் எண்ணத்தில் இருவரையும் சமமாக ஒப்பிட்டுப் பேசுவதாக அமைந்த பாடல்கள் சுவையானவை. வரகவி மார்க்கசகாய தேவர் இயற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழின் அம்புலிப் பருவத்திலிருந்து இவ்வண்ணம் சாம உபாயத்திலமைந்த ஒரு பாடல்.

    ‘நிலவே! ஆலகால விஷமாகிய நீலநிற நஞ்சினை உண்ட சிவபிரானின் சடையில் நீ உள்ளாய்! இம்முருகனும் நஞ்சையுண்ட பெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவன். நீ சக்கரவாள கிரியைச் சுற்றிவருவாய்; இவன் பூமியைச் சுற்றி வருவான்.

    ‘நீல ஊணினர்க ணாவை நீயிவனு
    நீல ஊணினர்க ணானவன்
    நேமி யங்குவடு சூழ்வை நீயிவனு
    நேமியங்கு சூழ்பவன்’

    ‘நீ அரிய மான் வடிவினை உன் பக்கத்தில் கொண்டுள்ளாய்! (சிவனார் கையில் மானை ஏந்தியுள்ளார்). முருகனும் அரியதொரு மான்பெற்ற குறவள்ளிமானைத் தன் பக்கம் கொண்டுள்ளான். நீ இருளை ஒழிப்பாய்; இவனும் அடியார்களின் அறியாமை எனும் இருளை ஒழிப்பவன்.’

    ‘ஏல நீயரிய மானு ளாயிவனும்
    என்று மோரரிய மானுளான்
    இருளு மாசினையோ ழிப்பை நீயிவனும்
    இருளு மாசினையொழிப்பவன்’

    ‘நீ ஓலமிடும் கடலின் அலையில் எழுகின்றனை (ஓலமாமலையில் எழுவை- ஓலமாம் அலையில் எழுவை); இவனும் ஒப்பற்ற கயிலைமலையின்கண் (ஓல மாமலையின்கண்) எழுந்தருளுபவன். இவ்வாறு உனக்கு நிகரான முருகன் உன்னை விளையாட வாவென்று அழைக்கிறான். வந்துவிடு,’ எனத் தாயும் செவிலியரும் அழைக்கின்றனர்.

    ‘ஓல மாமலையி லெழுவை நீயிவனும்
    ஒப்பி லாமலையி லெழுபவன்
    உனக்கி வாறுநிக ராத லால்இவன்
    உனக்கு வாவியழை யாநின்றான்
    ஆலு மாமயிலன் ஆடுதற் கமுத
    அம்பு லீவருக வருகவே
    அமரர் பரவுகர புரியன் உளமகிழ
    அம்புலீ வருக வருகவே.’

    குமரகுருபரனாரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும் சாம உபாயத்தில் அழகிய கருத்துக்களைக் கூறிச் சேடியரும் செவிலியரும் அம்புலியை அழைப்பதனைக் காணலாம்: அவள் எக்காரணங்களால் சந்திரன்பால் அன்புகொண்டு அவனைத் தன்னுடன் விளையாட அழைக்கிறாள் எனக் கூறுகின்றனர்: “கற்கண்டு போலினிக்கும் மழலைமொழி பேசுபவள் எங்கள் மீனாட்சி அம்மை. அப்படிப்பட்ட இவ்வம்மைக்கு நீயும் ஒருகலாபேதம் என்று கலைகளும் மறைகளும் முறையிடுவதனால் உன்னை விளையாட அழைக்கிறாள்; (அம்மையும் சிவபிரானைப் போன்று எட்டுத் திருவுருவங்களை உடையவள்; அவற்றுள் ஒன்று சந்திரன் ஆவான்; ஆகவே அவன் கலாபேதம் எனப்படுவான்). அம்மை வேதங்களால் கலைநிதி எனவும் போற்றப்படுபவள்; ஆகவே கலைகளும் மறைகளும் கொண்ட சந்திரன் உன்னையும் தன்னைப் போன்றவன் எனக் கருதினாள்.

    ‘கண்டுபடு குதலைப் பசுங்கிளி இவட்கொரு
    கலாபேதம் என்னநின்னைக்
    கலைமறைகள் முறையிடுவ கண்டோ அலாதொண்
    கலாநிதி எனத்தெரிந்தோ…’

    “வண்டுகள் மொய்க்கும் மாலைகளை அணிந்த தந்தையான மலயத்துவச பாண்டியனின் குலமுதல்வன் சந்திரனாகிய நீ என்பதாலோ, வளரும் சடைமுடியில் எம்பிரான் குளிர்ச்சிபொருந்திய கண்ணியாக, மாலையாகத் தரித்திருப்பதனை எண்ணியோ உன்னை அழைத்தனள் இவள்.

    ‘வண்டுபடு தெரியல் திருத்தாதையார் மரபின்
    வழிமுதல் எனக்குறித்தோ
    வளர்சடை முடிக்கெந்தை தண்ணறும் கண்ணியா
    வைத்தது கடைப்பிடித்தோ…’

    “மேலும், ஆழமான திருப்பாற்கடலில் தோன்றிய திருமகளான தோழியுடன் நீயும் பிறந்ததனை அறிந்தோ, உன்னை இவள் விரைந்துவா எனக் கூவி அழைக்கும் பேறு பெற்றாய்!

    “விரைந்து இவளுடன் விளையாட வருவாயாக,” எனக் கூறி அழைக்கும் அருமையான பாடல் இதுவாம்.

    ‘குண்டுபடு பாற்கடல் வரும்திருச் சேடியொடு
    கூடப்பிறந்த தோர்ந்தோ
    கோமாட்டி இவள்நின்னை வம்மெனக் கொம்மெனக்
    கூவிடப் பெற்றாய் ………’

    இவ்வாறெல்லாம் அம்புலியை ஒருவாறு சமாதானமாக, இதமாகக் கூறி அழைக்கும் சாம உபாயம் அன்னைமாருக்கே கைவந்த கலை போலும்! அதனைப் பாடுவது பிள்ளைத்தமிழ்ப் புலவர்களின் சிறப்பாகும்!

    *****

    ஒன்பது கோள்களுள் ஒன்றான சந்திரன் வானில் நிலைபெற்றவன்; கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவான் என அன்னையும் குழந்தையும் எண்ணிக்கொண்டால் அதற்கு அவனா ஒப்புக்கொண்டான்? ஆயினும் அன்னையும் செவிலியரும் சலிக்காமல் அடுத்த உபாயமான தானம் என்பதனைப் பயன்படுத்தி அவனை வருமாறு அழைக்கின்றனர்.

    “ஒளிபொருந்திய சந்திரனே! என் மகன் எவ்வளவு பெருமை பெற்றவன் என உனக்குத் தெரியுமா?  உயர்வு தாழ்வு எனப்பார்க்காமல் எல்லாருடனும் கூடியிருந்து மகிழ்கின்றவன்; திருமகளைத் தனது மார்பில் கொண்டவன். தனது அழகான வாயில் ஊறும் அமுதத்துடன் கூடிய மழலைச் சொல்லால் உன்னைக் கூவிக்கூவி அழைக்கிறான் பார்! இவ்வாறு  இக்குட்டன் கூப்பிடும்போது ஓடோடி வர வேண்டாமோ? உனக்கென்ன காது கேட்கவில்லையோ? நீ செவிடோ?” என்கிறாள் தாய்.

    ‘இவன் தகுதி என்ன? உனது தகுதி என்ன? தராதரம் பார்க்காமல் குழந்தை உன்னை விளையாட அழைத்தால் நீ செவிடனாக நிற்கிறாயே,’ என ஏளனம் செய்கிறாள்.

    அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுற
    மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
    குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்
    புழையில வாகாதே நின்செவி புகர்மாமதீ!

    (பெரியாழ்வர் திருமொழி-5)

    குழந்தை நிலவுடன் விளையாட ஆசைப்படுகிறான்; அதுவோ வருவதாக இல்லை! தாயின் உள்ளம் குழந்தைக்கு ஏதாவது சமாதானமாகக் கூறி அவனை அமைதிப்படுத்த வேண்டும் என எண்ணுவதனால், சந்திரனை இகழ்ந்து கூறுவதன்மூலம் தனது ஆற்றாமையை ஒருவாறு போக்கிக் கொள்ள விழைகிறது. சந்திரனால் உடனே இறங்கியோடி வரவியலாது என்று தாய்க்குத் தெரியாதா?

    குழந்தையின் குழந்தை உள்ளத்திற்கேற்ப அவள் எண்ணங்களையும், விரிந்தோடும் உளவியல் சிந்தனைகளையும் அழகுறச் சித்தரிப்பவை பிள்ளைத்தமிழின் அம்புலிப்பருவப் பாடல்கள். குமரகுருபரனார் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடலைக் காண்போமே!

    சந்திரனிடம் அன்னை கூறுகிறாள்: “நிலவே! நீ வானமண்டலத்திலேயே இருப்பாயாகின், உனது கொடிய பகைவர்களான பாம்புகள் (இராகு, கேது) உன்னை விழுங்கி விக்கவும், பின் கக்கவும் கூடித் துயரடைவாய். (கிரகண சமயத்தில் சந்திரன் மறைந்து பின் வெளிப்படுவதனை விழுங்கப்பட்டுப் பின்பு உமிழப்பெற்று எனக்கூறினார் புலவர்)

    “வெயிலைப் பரப்பும் ஒளிமிகுந்த சூரியமண்டலத்தில் புகுந்து இருப்பையாகின் உன்னுடைய சிறந்த ஒளி மழுங்கப்பெற்று வருந்துவாய்.”

    விண்டலம் பொலியப் பொலிந்திடுதி யேலுனது
    வெம்பணிப் பகைவிழுங்கி
    விக்கிடக் கக்கிடத்தொக்கிடர்ப் படுதிவெயில்
    விரியும் சுடர்ப்பரிதியின்
    மண்டலம்புக்கனை இருத்தியெனின் ஒள்ளொளி
    மழுங்கிட அழுங்கிடுதி…

    “ஈசனின் பொன்போன்ற சடையில் வைத்துக்கொள்ளப்படுவாயானால், அங்குள்ளபாம்பு உன்னைச் சுற்றிக்கொள்ளுமோ எனும் அச்சம் கொண்டு உறங்காமல் விழித்திருப்பாய். மேலும், வாசமிகுந்தகூந்தலை உடைய இப்பெண் மீனாட்சியின் சிறிய திருவடிகளில் அவளுடைய ஊடலைத் தணிவிக்கப் பெருமான் மணியும்போது, உன் குடல் கலங்குமாறு மிதிபடுவாய் அல்லவோ?

    ………………………………பொன்
    வளர்சடைக் காட்டெந்தைவைத்திடப் பெறுதியேல்
    மாசுணம் சுற்றஅச்சம்
    கொண்டுகண் துஞ்சா திருப்பதும்மருப்பொங்கு
    கோதையிவள் சீறடிகள்நின்
    குடர்குழம் பிடவே குமைப்பதும்பெறுதி

    “ஆகவே அனைத்து இடங்களும் உனக்குப் பாதுகாப்பற்றவை! ஆகவே எமது இளவரசியிடம் வந்து அடைக்கலம் புகுவாய். அவளை அடைந்தால் அண்டங்களையும் எல்லா உலகங்களையும் பெறுவாய்,” எனவெல்லாம் அச்சமூட்டி, ஆசை காட்டுகின்றனர்!

    …………………………………….எம்
    கோமாட்டி பாலடைந்தால்
    அண்டபகி ரண்டமும் அகண்டமும்பெறுதியால்
    அம்புலீ ஆடவாவே.

    சின்னஞ்சிறு குழந்தை நிலவினைத் தனது விளையாட்டுத்தோழனாகவே எண்ணிக் கொள்கின்றது. அவன் கீழிறங்கி வாராதபோது வருந்தி அழுகையும் அடமுமாகச் சினம் கொள்கின்றது. உணவுண்ணவும் மறுக்கின்றது.

    பணிப்பெண்கள் பல உபாயங்களை மாற்றிமாற்றிப் பயன்படுத்தி, அம்புலியைத் தங்கள் சிறுமியுடன் விளையாட வருமாறு அழைக்கின்றனர். அம்புலி அவ்வளவு எளிதாக வந்துவிடுவானா என்ன? அவனும் செருக்குற்று நிற்கிறான். ‘இவர்களழைத்து இந்தச்சிறுமியுடன் நான் விளையாடப்போக வேண்டுமோ? நான் உலகிற்கே தலைவனான சிவபிரானின் சடையில் குடியிருப்பவன், இப்பெண்கள் என்னை மிரட்டி விரட்டினால் விரட்டட்டுமே, பார்த்து விடலாம்,’ என மெத்தனமாக இருக்கிறான்!

    உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழிலிருந்து நாம் காணப்போகும் தான உபாயத்திலமைந்தவொரு பாடலென்று, அழகானதொரு தொன்மத்தை உள்ளடக்கி, நகைச்சுவை பொங்க, தோழியர் சந்திரனை அச்சுறுத்தியும் ஏளனம் செய்தும் நகைப்பதனை விவரிக்கின்றது.

    நீ கீழிறங்கி இச்சிறு பெண்ணுடன் விளையாட வந்தால் என்னென்ன பெறலாம் எனத் தான உபாயத்தில் -அழகான சொல்விளையாட்டாகப் பல கதைகளைப் பகிர்ந்துகொண்டு, அம்புலியைக் கூப்பிடுகிறாள் பாடலில் வல்ல செவிலித்தாய் ஒருத்தி! அவற்றைக் கொஞ்சம் கேட்கலாமா?

    புலி எனும் ஒரு சொல்லைப் பல பொருட்களில் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி அமைந்ததும் மிகுந்த சுவைகொண்டதுமான இப்பாடல், சோணாசல பாரதியார் என்பவரால் திருவருணை உண்ணாமுலையம்மை மீது இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூலில் காண்பதாகும்.

    “புலிக்கால்முனிவரான வியாக்கிரபாதர், பதஞ்சலி எனும் முனிபுங்கவர் ஆகிய அருந்தவமுனிவர்கள் போற்றும் சிறந்த ஊர் திருப்புலிநகர். அவ்வூரின்கண் வாழ்ந்தவரும் சிவ அபராதம் செய்தவர்களை வாளால் கண்டனம் செய்தவருமான கோட்புலிநாயனார் என்னும் பெருமைமிக்க ஒரு அடியாருக்கும், அவ்வூரிலேயே வாழ்ந்த வள்ளல்தன்மை மிகுந்த மற்றொரு அடியாரான சிறப்புலி நாயனாருக்கும் பேரருள் செய்தவன் நமது சிவபெருமான்.

    “அந்தப் பிரான் உமையம்மை தன்னிடம் ஊடல்கொண்டபோது என்னசெய்தார் தெரியுமா? அவளது ஊடலைத் தீர்க்கும்வகையில் அவளைத் தன்னுடன்சேர்த்து இறுகத்தழுவிக்கொண்டு (புல்லிக்கொண்டு) அவளை நகைபுரியச் செய்யும்வண்ணம் வினோதமான பல செய்திகளையும், தான் செய்த நகைப்புக்குரிய செயல்களையும்  கூறினார்: “தேவி! யாம் ஒரு புலியின் தோலையுரித்து அதனை எம் இடையில் அணிந்துள்ளதைப்பாராய்! இது தாருகாவனத்து முனிவர்கள் மிகுந்த கருவம்கொண்டு அபிசார வேள்வி செய்து வரவழைத்து என்மீது ஏவிய கொடியபுலியின் தோல்,” என்று அந்தக் கதையினை நகைத்தவண்ணம் உமையாளுக்குக் கூறினான்.

    “அதுகேட்ட நமது உமையவளும், “பெருமைவாய்ந்த என் நாதன் ஒரு வெம்புலியைத் தோல்உரித்தனன்; நாமும் ஒரு வண்புலித்தோலை நமது நாதனுக்கு இணையாக உரிக்க வேண்டும்,” என்று விரும்பினாள்; ஆகவே அவள் தன்னுடன் விளையாடவா எனக் காரணம்காட்டி என்னை அழைக்கிறாள் என்று அச்சம்கொண்டு இந்த அம்புலி சிவபிரானின் தலையை இறுகப்பற்றிக்கொண்டு (கம்புல்லி) வராமல் இருக்கிறது போலும்,” என ஒருபெண் கூறவும்,

    “அம்புலியே! கேட்டனையோ இந்தக்கதையை? காலம் தாழ்த்தாது வந்தாயானால், இந்தக் கவுரியின் அருளைப்பெற்று உய்யலாம் தெரியுமா?” என்கிறாள் ஒருத்தி!

    குறும்பு செய்பவர்களை, “உன் தோலை உரித்து விடுவேன்,” எனப் பெரியவர்கள் சினந்துகொள்வது வழக்கல்லவா?

    “ஒருவேளை அவளுடைய மாற்றாளாகிய கங்கையோடு நட்புப்பூண்டவன் இந்த அம்புலியாகிய திங்கள்புலி எனச்சினம் கொள்வாள் உமையம்மை எனும் அச்சமோ என்னவோ!” எனச் சிலபெண்கள் குறும்புபேசிக் களிக்கின்றனர்.

    “அதனாலென்ன? ‘இவன் அம்புலி! உன்னோடு விளையாட வந்தனன் தாயே! இவன்மீது சினம்கொள்ளாதே!’ எனக்கூறித் தப்பவைத்துவிடுவோம்! ‘அச்சங்கொள்ளாதே நிலவே! அண்ணாமலையானுக்கு இனியவளான இந்த உண்ணாமுலையுடன் விளையாட வந்துவிடு!” எனக்கூறி அம்புலியை அழைக்கிறாள் செவிலித்தாய்!

    செம்புலி பதஞ்சலி யெனுந்தவர்கள் போற்றத்
    திருப்புலி நகர்க் கண்டனஞ்
    செய்தருளி வாட்புலி யெனும் பெரிய கோட்புலி
    சிறப்புலிக் கருளுநாதன்
    வெம்புலி யுரித்தன னெனப்புலவி தீரும்வண
    மெய்ப்புலி நகைத்துரைக்கின்
    வெற்றிகொள நாமுமொரு வண்புலி யுரித்துமென
    வேண்டிவரு கென்றெனளெனக்
    கம்புலி யிருத்தியோ தாழாது வருதியேற்
    கவுரியருள் பெற்றுய்யலாம்
    கங்கை யொடு பழகுதிங் கட்புலியே னாவெனைக்
    காயினென் செய்வதென்னி
    லம்புலி யெனச் சொலித் தப்புவிப் பேமுண்மை
    யம்புலீ யாடவாவே
    அண்ணா மலைக்கினிய யுண்ணா முலைக்கனியோ
    டம்புலீ யாடவாவே.

    (மெய்ப்புலி- உடலினைப்புல்லி, தழுவி; கம்புலி- சிவபிரான் தலையை இறுகப்பற்றி)

    இப்பாடலிலும் இப்பிள்ளைத்தமிழ் நூலில் காணும் இன்னும் பலபாடல்களிலும்  ‘சொல்பின்வருநிலையணி’ மிக அழகாகக் கையாளப்பட்டுள்ளது. இப்பாடலில் புலி எனும் சொல் பலபொருள்களைக்கொண்டு (புலி- வேங்கை; வாட்புலி, கோட்புலி, வண்புலி, மெய்ப்புலி, புல்லி (தழுவி), திங்கட்புலி, அம்புலி) அமைந்து இனிய சந்தநயத்துடன் பயில்வோருக்குக் கவிதையின்பம் தருகின்றது.

    தாருகாவனத்து முனிவர்கள் செய்த சிறுமைச்செயல் பற்றிய தொன்மமும் நகைச்சுவையாக விளக்கப்பட்டுள்ளது.

    தாய்மார்கள், சேடியர்களின் கற்பனைகள் விரிந்தோட, தொன்மங்களும், சந்திரன் தொடர்பான குறும்புக் கதைகளும் சேர்த்துப் புனையப்பெற்ற இதுபோன்ற பல பாடல்கள் பிள்ளைத்தமிழின் நயத்தை மிகைப்படுத்துகின்றன. தானமும் பேதமுமான உபாயங்கள் இணைந்ததொரு பாடலை அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழில் கண்டு களிக்கலாம்.

    தனது பிறந்ததினமான ஆவணித்திங்கள் சதுர்த்தியினில் விநாயகப்பெருமான் உலகுளோர் பூசனை செய்து படைத்த கனிகள், கடலை, பால், பொரி, சேர்ந்த பணியாரங்களை உண்டு, அதனால் பெருத்த வயிறுடன் தந்தையைக் காணச் சென்றுகொண்டிருக்கிறார். உண்டமயக்கத்தில் அவர் ஆடியசைந்து  நடப்பதனைக் கண்டு வானிலுள்ள சந்திரன் நகைக்கிறான். சினமடைந்த விநாயகர் அவனை ஒளியிழக்குமாறு சாபம் கொடுக்கிறார். பின் தவறுக்கு மன்னிப்புக் கோரியதனால் மாதத்திலொரு நாள் மட்டும் முழுமையான ஒளிபெற சாபவிமோசனம் அருளுகிறார்.

    ‘ஒளியூறும் ஆவணித் திங்கள் சதுர்த்தியினில்
    உலகுளோர் புரியும்விரதத்து
    உறுகனிகள் கடலைபய னோடியல் பொரியமுதுண்டு (பயன்- பால்)
    உரத்துப் பெருத்தஉதரம்
    களியூறு முக்கட் பிரானைவந் திக்குமக்
    காலையில் கால்மேலுறக்
    கண்டுநீ நகைபுரிந் துண்ட சாபமும்…’

    தட்சயாகத்தில் இளையவீரன் என அறியப்படும் வீரபத்திரர் எல்லாரையும் அழிக்கும்போது சந்திரனையும் தன் காலால் தேய்த்து அழித்தார்.  பின்பு அனுக்கிரகம் பெற்று உயிர்பெற்றான் சந்திரன். அவ்வாறு காலால் தேய்த்து நசுக்கப்பட்டபோது ஒருதுளி அமுதம் துளித்ததாம்.

    அதனால், “விநாயகனை ஏற்று இரந்து வேண்டிக் கொண்டாயானால் சுகவாழ்வு பெறலாம். பயமின்றி வாழலாம். ஆகவே அரும்பாத்தை வேதகணபதியுடன் ஆடவா அம்புலியே!” என அழைக்கின்றனராம்.

    ……………………………………. உன்
    கருத்தறியு மிளையவீரன்
    துளியூறும் அமுதம் துளிப்பஇரு கால்கொண்டு
    துவையவிட் டதுமுனக்கே (உனக்கே தெரியும்)
    தோற்றுமத னாலிவனை ஏற்றிரவு கோடியேல்
    சுகமலால் பயமில்லையென்று
    அளியூறு வருமரும் பாத்தைபுரி மழகளிறோடு
    அம்புலீ ஆடவாவே
    ஆதிகண பதியாகும் வேதகண பதியினுடன்
    அம்புலீ ஆடவாவே.

    இவ்வாறு நயங்களும் தொன்மங்களும் விளங்கும் பாடல்கள் எண்ணற்றவை.

                (தொடரும்)

     

    *****

    Share
  • சேக்கிழார் பா நயம் – 24

    -திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    கயிலாயத்தில் சுந்தரருக்கு வரமளித்தவாறே தென் திசையில் தமிழ்நாட்டில் மையல் மானுடமாய் மயங்கும்போது தடுத்தாட் கொள்ள , சிவபெருமான் புத்தூரில் எழுந்தருளினார். அப்போது   ஒரு மூத்த அந்தணர் வடிவு  கொண்டு சுந்தரர் திருமணம் நடைபெறும் இடத்தில் தோன்றினார்!  அவ்வாறு தோன்றும்  பொழுது, மேலே மிகவுயர்ந்து , கீழே மிகவும் தாழ்ந்து  பிரமனும் திருமாலும் மிக முயன்றும் அடி  முடி  தேடவரிய,  மிகப்பெரிய அனல் உருவத்துடன் வந்த சிவபிரான்,எளிய அந்தக் கோலத்தில் தம்மை ஒடுக்கிக் கொண்டு தோன்றினார்.

    மிகப்பெரிய படைப்புக் கடவுளும், காக்கும் கடவுளும் அறிந்து கொள்வதற் கரியவர்,  எளிய மானிடர்கள் அறிந்து கொள்வதற்கரிய முதிய அந்தணராகத் தோன்றினார்! அவரை ஊர்மக்கள் அறிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டும் வகையில்,முன்பு வானையும் மண்ணையும் அளந்த அனற்பேருருவுடன்

    தோன்றிய சிவபிரான் என்றுகூறிய சேக்கிழார், இக்கதையைப் படித்தறியும்  நமக்கு மட்டும்  புலப்படும் வகையில் முதிய அந்தணராய்த் தோன்றினார், என்று பாடுகிறார்!

    இங்கே அந்தப் புத்தூர் மக்களுக்குப்புலப்படாத அந்தண வடித்துவத்துடன் சிவபிரானே  தோன்றினார் என்று கூறுவதில்தான் சேக்கிழாரின் திறமை புரிகிறது! நமக்குத் தெரிந்த சிவபெருமான், புத்தூர் மக்கள் மட்டுமே  புரிந்து கொள்ள இயலாத, முதிய  அந்தணராய்த் தோன்றினார், என்று சேக்கிழார் பாடுகிறார்! இதனை சிவக்கவிமணி,

    ‘’பெருந்தேவர்க்கும் அரியனாகிய பெருமான் அன்புசெய்வார்க்கு  எளியவன்  என்பதை ,

    நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்

    நல்லசிவ ஞானத்தால் நானழியவல்லதனால்

    ஆரேனு மன்புசெயி னங்கே தலைப்படுங்காண்

    ஆரேனுங் காணா வரன்

    என்ற சாத்திரத்தால் அறியலாம். அகந்தை கொண்ட இருவர்க்கும் அரியவர், தாமே அன்புடைய ஒருவர்க்கு எளியவராயினமையும், அவர்கள் தேடவும் ஒளித்தவர் இவர் மறுப்பவும் விடாது வழக்கிட்டுப் பற்றியமையும் குறிப்பு.’’

    என்று எழுதுகிறார்! ஆகவே தம்பால்  மிகவும் அன்புகொண்ட சுந்தரர் அறியாமல் வாதாடிய போதும் தம்மை அறிவித்துக்  கொள்ள வந்தார்! இதனை மேலும் சுவைபட , அவர் கொண்ட அந்தண  வடிவத்தை விளக்குகிறார்!

    தம் நெற்றிக்கண்ணை மறைத்த துணிப்படலம் போலக் குழைத்த திருநீறணிந்த நெற்றியும், அதனருகே மிகவும் மூத்தமையால் தளர்ந்து நெற்றியில்  விழும் நரைத்த சடையும், காதில் உருத்திராட்சக் குழைகளும், மார்பில் பழைய மெலிந்த பூணூலும், அதனை மறைத்த வெண்மையான உத்தரீயமும், வெயிலை மறைப்பதற்கு உரிய குடையும், வயிற்றின் கீழே சரிந்த பழைய கோவணமும்,  அதனை மூடிய பழைய ஆடையும் உடையவராய் வந்தார். அவர் கரத்தில் வெண்மையான துணியைச் சுற்றி, தர்ப்பைக்கயிற்றால் கட்டிய சிறுமூங்கில் கழியை ஏந்திக்கொண்டு , தள்ளாடிய நடையுடன் வந்தார்!

    அவ்வாறு வந்த மூத்த அந்தணரின் வடிவத்தை நோக்கி, ஓர் இளைஞனின் பேரழகு    காலப்போக்கில் அகவை முதிர்ந்தால் உண்டாகும் சுருக்கங்களுடன் தோன்றுவது போல இருக்கிறதே  என்று அவ்வூர் மக்கள் ஐயம் கொண்டார்கள்! மேலும் பேரழகே  மூப்படைந்தால் அவ்வடிவம்  இப்படித்தான் இருக்குமோ என்றும் ஐயம் கொண்டார்கள்! திருவிளையாடற்புராணத்தில் சிவபிரான் விருத்தராக வந்தார். அதனை,

    “கரிந்தநீள் கயல்உன்னின் அரையும்முது  திரைகவுளும் கனைக்கும் நெஞ்சும்
    சரிந்தகோ  வணஉடையும்  தலைப்பனிப்பும்  உத்தரியம்  தாங்கும்  தோளும்
    புரிந்தநூல் கிடந்தலையும்  புண்ணியநீ றணிமார்பும்  பொலிய  நீழல்
    விரிந்ததோர் தனிக்குடையும் தணடூன்றிக் கவிழ்ந்தசையும் மெய்யும் தாங்கி.

    ஒருத்தராய் உண்டிபல  பகல்கழிந்த  பசியினர்போல்  உயங்கி  வாடி
    விருத்தவே   தியராய்வந்து  அகம்புகுத”

    என்று பாடுகிறது. அங்கு  மெலிந்து  தளர்ந்த  திருமேனி வருணிக்கப் பெற்றது.  பெரியபுராணத்திலும் முதியவராக வந்த திருக்கோலம் வருணிக்கப்   பெறுகிறது. ஆனால்  அந்த முதுமையிலும் ஓர் அழகு விளங்கியதைச்  சேக்கிழார் கூறுகிறார்!   வேதியராகிய இவருடைய தோற்றம், உண்மை வைதிக நெறியே உருவாகி   விளைந்த மூலப்பொருளோ, என்றும் ஐயுற்றார்கள். இந்த வடிவுடன், திருமண மண்டபத்துள்  தோன்றிய முதிய அந்தணரை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்! இதனைச் சேக்கிழார்,

     ‘’மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ

     அத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோ

     மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ 

     இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி ‘’

    என்று பாடினார். ஒருவருடைய உடலழகு மூப்படைய, மூப்படைய அழகை  இழப்பது உலகின் இயல்பு! ஆனால்,  இந்த வடிவம் பேரழகே மூத்த வடிவமோ? என்று மக்கள் நினைத்தனர்! முதுமையின் படிவமே  அழகுதானோ? என்றும் எண்ணினர். வேதம் ஓதுவதால் அக அழகு,  முக அழகாக ஒளிவீசும்! வேதம் ஓதியும், சமுதாயத் தொண்டாற்றியும், தமிழின் இனிமையை எங்கும்  கூறியும், இசைபாடியும் வயதில் மூத்த பெரியோர்களாகிய மகாபெரியவர், காந்தியடிகள், வாரியார் சுவாமிகள், எம்.எஸ்.சுப்புலட்சுமி , கஸ்தூரிபா  ஆகியோரின் அழகு, அவர்களின் முதுமையிலும்  பார்த்துக்கொண்டே இருக்கத்  தோன்றுகிறதல்லவா? இதுதான் மூப்பின் அழகு! வேதத்தின் சிறப்பை ஓதி ஓதி உணர்ந்தமையால் பூசலார் நாயனாரின் அழகு மிகுந்தது  என்பதைப் பூசலார் நாயனார் புராணத்தில்,

    ‘’வாய்மைப்   பொருள்பெறு    வேதநீதிக்   கலையுணர்   பொலிவின்    மிக்கார் ‘’

    என்று பாடுகிறார்!  ஆகவே அகத்தின்  அழகுதான்  புறத்தின்  அழகாகப்  பொலியும்!  அத்தகையோர் அகவை ஏற ஏற, அழகும் ஏறும். ஆதலால் இப்பாடலில்  அழகின்  முதிர்வு, மூப்பு, கலையுணர்வு ஆகிய  முப்பரிமாணங்களும் கூறப்பெறுகின்றன. இங்கே இளமை அழகின்  கர்வத்தினை, முதிய,  அறிவுநிறைந்த , கலையுணர்வு மிக்க அழகு எளிதில்  வென்றடக்கிய  சிறப்பு,   நயம்படக் கூறப்பெறுகிறது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 11

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 11 – செய் நன்றியறிதல்

     

    குறள் 101:

    செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது

    நாம எந்த ஒதவியும் செய்யாத போதும் ஒருத்தங்க நமக்கு ஒதவியா இருந்தாங்கன்னா அதுக்கு பதிலா வானத்தையும், பூமியையும் குடுத்தாக் கூட சமமா இருக்காது.

    குறள் 102:

    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது

    நமக்கு நெருக்கடியா இருக்கும்போது ஒருத்தங்க செஞ்ச ஒதவி சின்னதா இருந்தாலும் நம்மளோட நெருக்கடிய நெனச்சோம்னா அந்த ஒதவி பூமிய விட பெரிசா தோணும்.

    குறள் 104:

    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார்

    தினையளவு செஞ்ச ஒதவியையும் அதோட பயன அறிஞ்ச நல்லவங்க பனையளவு பெரிய ஒதவியா நெனச்சிக்கிடுவாங்க.

    குறள் 105:

    உதவி வரைத்தன் றுதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து

    ஒதவிங்கறது எம்புட்டு செஞ்சாங்கன்னு பாத்து மதிக்குதது இல்ல, அந்த ஒதவிய பெறுதவங்களோட கொணத்த பொறுத்து ஒதவியோட மதிப்பு  மாறிக்கிடும்.

    குறள் 106:

    மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
    துன்பத்துள் துப்பாயார் நட்பு

    குத்தங்குறை இல்லாதவங்களோட ஒறவ மறக்கக் கூடாது. துன்பத்துல தொணையா இருந்தவங்களோட நட்ப விட்டுடக் கூடாது.

    குறள் 107:

    எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமந் துடைத்தவர் நட்பு

    தன்னோட துன்பத்த போக்கி ஒதவி செஞ்சவங்கள  ஏழேழு பொறப்பிலயும் நெனைச்சிக்கிடுவாங்க நல்லவங்க.

    குறள் 108:

    நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று

    ஒருத்தன் நமக்கு செஞ்ச ஒதவிய மறக்குதது நல்லதில்ல. அவன் செஞ்ச தீங்க அப்பமே மறக்கது நல்லது.

    குறள் 109:

    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன் றுள்ளக் கெடும்.

    முன்ன ஒருக்க நன்ம செஞ்சவன் பெறகு நம்ம கொலை செய்யுதது கணக்கா பெரிய தீம செஞ்சாலும் அவன் முன்ன செஞ்ச நன்மைய நெனைச்சோம்னா நம்ம மனசிலேந்து அவன் செஞ்ச பெரிய தீம காங்காம போயிடும்.

    குறள் 110:

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு

    எந்த அறத்த மறந்தவங்களுக்கும் பாவத்த கழுவுததுக்கு வழி உண்டு. ஒருத்தன் செஞ்ச ஒதவிய மறந்து தீம செஞ்சவனுக்கு வழியே கெடையாது.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • (Peer Reviewed) நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

    முனைவா் பு.பிரபுராம்
    முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை,
    காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

               நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

    யசோதர காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சண்டமாரி (நாட்டார் தெய்வம்) வழிபாட்டு மரபுகளையும் சமண தத்துவங்களையும் ஒப்பிட்டு ஆராய்வது, இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். “நிறுவன மயமாக்கப்பட்ட சமயமான சமணம் தன் தத்துவத்தின் துணைகொண்டு நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கீழ்நிலைக்குத் தள்ளி, நாட்டாரைச் சமணச் சார்புடையோராக மாற்றியது” என்ற கருதுகோள் இவ்வாய்வில் கையாளப்பட்டுள்ளது. இக்கட்டுரைக்கான முதன்மைச் சான்றாதாரம், யசோதர காவியம். இக்காவியம், ஐந்து சருக்கங்களில் மொத்தம் 330 பாடல்களைக் கொண்டுள்ளது.


    சண்டமாரி வழிபாடு

    ஓதயநாட்டு இராசபுரத்து அரசனான மாரிதத்தன், அவந்திநாட்டு உஞ்சயினியின் அரசனான யசோதரன், அவன் தாய் சந்திரமதி ஆகிய அரச மரபினரும் பொதுமக்களும் சண்டமாரிக்கு உயிர்ப் பலியிட்டு விழா எடுத்த காட்சிகள் யசோதர காவியத்தில் உள்ளன. அக்காட்சிகளிலுள்ள கதையாடல்கள், சண்டமாரி வழிபாட்டில் நிகழ்த்தப்படும் சடங்குகளையும் அவ்வழிபாடு குறித்த நம்பிக்கைகளையும் அளிக்கின்றன.

    ஆண்டுதோறும் வேனிற்காலத்திலும் ஐப்பசித் திங்களிலும் காளிதேவிக்கு விழா எடுக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. அவ்வாறு விழா நிகழ்த்தப்படாவிடின், தேவியானவள் மனம்திரிந்து வெகுளுவாள், துன்பத்தைச் செய்கின்ற நோய்கள் பலவற்றையும் உண்டுபண்ணுவாள், உயிரைக் கொள்ளுதற்குரிய தீங்குகள் பலவற்றையும் செய்வாள், மேலும் பல தீங்குகளும் வந்தடையும் என்பது போன்ற நம்பிக்கைகளை மக்கள் கொண்டிருந்தனா்.

     

              “என்றும் இப்பரு வத்தினோ டைப்பசிச்

               சென்று தேவி சிறப்பது செய்துமஃ

               தொன்றும் ஓரல மாயினம் ஒன்றலா

               நன்ற லாதன நங்களை வந்துறும்” (யசோ.15)

              “நோவு செய்திடும் நோய்பல ஆக்கிடும்

               ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்

               தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்

               காவன் மன்ன! கடிதெழு கென்றனா்” (யசோ. 16)

    ஐப்பசி மாதத்துப் பூா்ணிமைக்கு முன்னதாகிய அட்டமிக்குப் பின்வரும் நாள்களுள் குற்றமில்லாது நிலவும் செவ்வாய்க்கிழமையில் உயிர்ப்பலியிட்டு காளிதேவியின் வீரகண்டையணிந்த திருவடியில் வீழ்ந்து வணங்கினால், அவள் அப்பலியேற்று, பலியிடுவோர்பால் விருப்பமுற்று அவா்க்குத் தீங்கு வராது காப்பாள் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவி வந்தது.

                          “ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கப் பின்னா்

                        மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற்

                        கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளாய்

                        மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு மென்றாள்”             

                                                                                                                                                                 (யசோ.136)

    மேலும், மக்கள் காளிதேவி கோவிலை வலம்வந்து தங்கள் இடா்களைய வேண்டுமென்று வணங்கும் முறைமையைக் கொண்டிருந்தனா். அத்துடன் மயில், கோழி, பன்றி, ஆடு, எருமை முதலிய விலங்கினங்களில் இரட்டைகளையும்(Animal Sacrifice) மனிதருள் இரட்டையரையும்(Human Sacrifice) பலியிட்டு வணங்கும் சடங்கு சண்டமாரிக்கு உகந்ததாகக் கருதப்பட்டது.

                “மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்

               தேவி யெம்மிடா் சிந்துக என்றரோ” (யசோ.19)

              “மன்னன் ஆணையின் மாமயில் வாரணம்

               துன்னு சூரகம் ஆடெரு மைத்தொகை

               இன்ன சாதி விலங்கி லிரட்டைகள்

               பின்னி வந்து பிறங்கின கண்டனன்” (யசோ. 20)

              “யானிவ் வாளினின் மக்களி ரட்டையை

               ஈன மில்பலி யாக இயற்றினால்

               ஏனை மானுயா் தாமிவ் விலங்கினில்

               ஆன பூசனை யாற்றுதல் ஆறெனா” (யசோ. 21)       

    இவ்வாறு ஆண்டுதோறும் மக்களால் கொண்டாடப்படும் தெய்வம், சண்டமாரி. மனிதப் பலி, விலங்குப் பலி ஆகிய பலிகளை ஏற்று அருள்தரும் நாட்டார் தெய்வமாக அவள் விளங்கினாள். சண்டமாரிக்கு விழா எடுப்பின் தீமையகன்று, நன்மை வந்துசேரும் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டிருந்தனா்.

    சண்டமாரி ஒரு துருத்தேவதை

              நாட்டார் தெய்வமான சண்டமாரியின் உருவச் சிலையைப் பாவத்தின் (தீவினையின்) வடிவம் என்று காவிய ஆசிரியா் கற்பிதம் செய்கிறார்.

                         “பாவ மூா்த்தி படிவ மிருந்தவத்

                        தேவி மாடம்…” (யசோ. 19)

    மேலும் சண்டமாரி மிகுந்த கோபமுடையவள், நடுநிலைமை இல்லாதவள், அவள் மெய்ப்பொருள்களைக் கேட்டறிந்த கேள்வியறிவும் நுண்ணிய நூல்களைக் கற்ற கல்வியறிவும் இல்லாத கீழ்மக்கள் வழிபடும் துருத்தேவதை(கொடிய தெய்வம்) என்றும் பதிவு செய்கிறார்.

                       “சண்டகோபி தகவிலள் தத்துவம்

                        கொண்ட கேள்வியுங் கூரறி வுமிலாத்

                        தொண்டா் கொண்டு தொழுந்துருத் தேவதை

                        சண்ட மாரி தனதிட மெய்தினான்” (யசோ. 18)

    காவிய ஆசிரியா் சண்டமாரியின் பண்பினைக் கொடியதெனக் கூறுவதோடு, அத்தெய்வத்தை வழிபடும் தொண்டா்களை கல்வியறிவும் கேள்வியறிவுமற்றோர் என்றும் கற்பிதம் செய்கிறார்.

    காளி வழிபாடு தீது என்ற சித்திரிப்பு

    ஓதயநாட்டு மக்களின் விழாவயா்வு குறித்த அவாவிற்கிணங்கி மாரிதத்தன் (அரசன்) நகரின் தென்திசைக்கண் உள்ள காளிதேவி கோயிலைச் சென்றடைந்தான். அவன் சென்ற செய்தியைச் சித்திரிக்கும் காவிய ஆசிரியா், “காளிக்கு விழா எடுக்கலாம் என்று நகரமாந்தா் கூறியவுடன் அருளறமாகிய நன்னெறிக்கண் சென்று அறிவு தெளியாதவனாதலால் இச்செயல்(விழா) தீது என்று கூறாமல் இது நல்லதே என்று நகர மாந்தரிடம் மாரிதத்தன் உரைத்தான்” என்கிறார்.

                         “என்று கூறலும் ஏதமி தென்றிலன்

                        சென்று நல்லறத் திற்றெளி வின்மையால்

                        நன்றி தென்றனன் நன்னகரப்புறத்

                        தென்தி சைக்கண் சிறப்பொடு சென்றனன்” (யசோ.17)

    இதன்வழி, காளி வழிபாடு தீது தரும் என்ற சித்திரிப்பினைக் அவா் வழங்குகிறார். மேலும், காளி வழிபாடு செய்வோர் நன்னெறிக்கண் சென்று அறிவு தெளியாதோர் என்றும் உரைக்கிறார்.

    உயிர்ப்பலி வழிபாட்டைக் காட்டிலும் அருக நெறி உயா்ந்தது

    ஓதய நாட்டு மக்கள் கொற்றவைக்கு விலங்குகளுள் இரட்டையைப் பலியிடக் கருதி நிற்க, அரசன் மாரிதத்தன் மக்களுள் உடலியற் குறையற்ற இரட்டையரைப் பலியிடக் கருதினான். அத்தகு இரட்டையரைக் கொணா்க என்று சண்டகருமனுக்கு ஆணையிட, அச்சண்டகருமன் சுதத்த முனிவரின் சங்கத்துள் துறவோராய் இணைந்திருந்து, பிச்சையேற்பதற்காய் நகா்க்குள் நுழைந்த இரட்டையராகிய அபயருசியையும் அபயமதியையும் பலிக்கெனக் கொணா்ந்து பலிபீடத்தின் முன் நிறுத்தினான். பலிக்கு முன் “தங்கட்கு இறைவனாகிய வேந்தன் நிலத்தின்மேல் நீண்டகாலம் வாழ்வானாக என்று வாழ்த்துக” என்று சூழ்ந்திருந்த தளபதி முதலாயினோர் அவ்விரட்டையரைப் பணித்தனா். வறிய புன்முறுவலுடன் பின்வருமாறு மன்னனை அவா்கள் வாழ்த்தத் தொடங்கினா்.

                         “மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா

                        தறவியன் மனத்தை யாகி ஆருயிர்க் கருள்ப ரப்பிச்

                        சிறையென பிறவி போக்குந் திருவறம் மருவிச் சென்று

                        நிறைபுக ழுலகங் காத்து நீடுவாழ் கென்று நின்றார்” (யசோ.60)

    உலகுயிர்களை வருத்தாமல் அருளறம் நிறைந்த மனமுடையனாய் எல்லா உயிர்களுக்கும் அருளைச் செய்து, உயிர்க்குச் சிறைபோல்வதாகிய பிறப்பினைக் கெடுக்கும் சினேந்திரன் கூறிய அறத்தைக் கடைப்பிடித்து ஒழுகி, அழியாப் புகழை நிறுவி, உலகத்தை இனிது காத்தளித்து, நெடிது வாழ்வாயாக என்று அபயருசியும் அபயமதியும் மன்னனை வாழ்த்தினா். பிறவியானது உயிர்க்குச் சிறைபோன்றது. அவ்வாறு மீண்டும் பிறத்தலை ஒழிக்க வேண்டுமாயின் சமண அறங்களைக் கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்றும் பலி வழிபாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும் இப்பகுதி வலியுறுத்துகிறது.

    யசோதரனும் சந்திரமதியும் பலி வழிபாட்டால் விலங்கு கதியடைதல்

    யசோதரன் தனக்குத் தீய நிமித்தங்கள் நிகழ்ந்ததாகத் தன் தாய் சந்திரமதியிடம் கூறுகிறான். உனக்குத் தெய்வமான காளிதேவிக்கு நீ உயிர்ப் பலியிட்டு வழிபடின், அத்தீயநிமித்தம் நீங்கி, நல்லவை நிகழும் என்று சந்திரமதி உபாயம் உரைக்கிறாள். யசோதரன் உயிர்க்கொலை செய்யின், மறுமையில் தேவ கதியடைவதற்கான தகுதி அகலும், இடா்பல விளையும் என்கிறான். ஆகவே காளிக்கான உயிர்ப்பலியிடலை மறுக்கிறான்.

                          “யானுயிர் வாழ்த லெண்ணி யெளியவா் தம்மைக் கொல்லின்

                        வானுய ரின்ப மேலால் வருநெறி திரியும்….” (யசோ.140)

                       “இன்றுயிர் கொன்ற பாவத் திடா்பல விளையு மேலால்” (யசோ. 141)

    உயிரைக் கொல்லாது மாவால் கோழிசெய்து அதனைச் சண்டமாரிக்குப் பலியிடலாம் என்று சந்திரமதி பதில் உரைக்கிறாள். இவ்வுரையாடலில் யசோதரனின் மனவோட்டமாக ஒரு செய்தியைக் காவிய ஆசிரியா் பதிவு செய்கிறார். “உயிருடைய பொருளொன்றின் வடிவினைச் செய்து அதனைப் பலியிடுவதும் உயிர்க்கொலையேயாம் என்னும் ஓா் அருவருப்பினை யசோதரன் தன் மனத்தே கொண்டிருந்தான்” என்கிறார்.

                “உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்கொலை போலு மென்னும்

               பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவில் மன்னன்

               செயிர்த்தவ ளுரைத்த செய்கை செய்தவற் கிசைந்த தென்றான்

               அயிர்ப்பதென் அறத்தின் திண்மை யறிவதற் கமைவி லாதான்” (யசோ.144)

    இவ்வாறு, விலங்குயிர்களைப் பலியிடுவதற்குப் பதிலாக, மக்களால் பதிலீடாகக் கருதப்படும் பொருள்களைப் பலியிடுவதுகூட (Substitute for animal sacrifice) அருவருப்பான செயல் என்ற சித்திரிப்பினைச் சமணம் வழங்குகிறது.

    பின்பு யசோதரன் விலங்குப் பலிக்குப் பதிலீடாகிய பாவனைப் பலிக்கு ஒப்புகிறான். சண்டமாரியை வணங்கிப் படைக்கப்பட்ட மாக்கோழியைத் தலையறிந்து அவன் பலியிட, அது கூவித் துடித்து வீழ்ந்து இறக்கிறது. இதனைக் கண்டு மனம்பொறாத யசோதரன், துறவுபூணும் எண்ணம் கொண்டான். ஆயின் யானைப் பாகனுடன் கள்ளவொழுக்கம் புரியும் யசோதரனின் மனைவி அமிர்தமதி, யசோதரனையும் அவன் தாய் சந்திரமதியையும் உணவில் விடம்கலந்து கொன்றுவிடுகிறாள். அவ்விருவரின் உயிர்களும் விலங்கு கதியை அடைகின்றன. யசோதரனின் மகன் யசோமதி, அவந்திநாட்டு உஞ்சயினிக்கு அரசனாகிறான்.

    யசோதரன், விந்தமலைச் சாரலில் மயிலாகப் பிறக்கிறான். சந்திரமதி, உஞ்சயினி நகா்ப்புறத்துச் சேரியில் நாயாகப் பிறக்கிறாள். அம்மயிலும் நாயும் அரசனாகிய யசோமதியின் அடைக்கலமாக வளா்கின்றன. ஒருநாள் மயில், அட்டபங்கனைக் கண்டு, அவன் கண்களைக் குத்திவிட்டுப் போகிறது. அதனால் அமிர்தமதி அதனைக் கல்லெறிந்து வீழ்த்த, நாய் அம்மயிலை வாயால் கவ்விக் கொன்றுவிடுகிறது. அதுகண்ட அரசன் ஆராயாது, நாயைக் கொல்கிறான். பின் மயில் முள்ளம்பன்றியாகப் பிறந்துழலும்போது, நாய் கருநாகமாய் வரக்கண்டு அதைக் கொல்கிறது. அப்பன்றியைச் சிங்கம் என்று கருதிய கரடி, பாய்ந்து கொன்றுவிடுகிறது. பன்றி மீனாய்ப் பிறக்க, கருநாகம் முதலையாய்ப் பிறக்கிறது. அரண்மனையில் பணியாற்றும் கூனியை முதலை கொல்ல, முதலையை அரசன் கொன்றுவிடுகிறான். வலையிற்பட்டு மீன் மாள்கிறது. முதலை ஒரு பெண்ணாடாய்ப் பிறக்க, மீன் ஆணாடாய்ப் பிறந்து அப்பெண்ணாட்டைக் கூடுகிறது. அதனைக் கண்ட கிடாவொன்று ஆணாட்டை மோதிக் கொல்ல, அது பெண்ணாட்டின் கருவில் தங்கிப் பிறக்கிறது. வேட்டைக்குச் சென்ற யசோமதியால் தாயாடு கொல்லப்படுகிறது. தகா் மட்டும் புலைச்சேரியில் வளா்கிறது. அத்தகா் யசோமதியின் முன்னோர் சிரார்த்தத்திற்காகக் கொல்லப்படுகிறது. யசோதரனாகிய அந்த ஆடு, மீண்டும் ஆடாகப் பிறக்கிறது. சந்திரமதியாகிய ஆடு, எருமையாய்ப் பிறக்கிறது. எருமை அரசனின் மாவை முட்டிக் கொல்ல, அரசன் அவ்வெருமையைக் கொன்றுவிடுகிறான். அமிர்தமதியின் உணவிற்காகத் தகா் கொல்லப்படுகிறது. பின்பு யசோதரனும் சந்திரமதியும் நகா்மருங்கில் உள்ள பறைச்சேரியில் கோழிகளாகப் பிறக்கின்றனா். யசோமதி அக்கோழிகள் இரண்டையும் கண்டு விருப்பமுற்று அரண்மனைக்குக் கொணா்ந்து வளா்க்கிறான். இறுதியில் அக்கோழிகள் இரண்டும் யசோமதி எய்த அம்பினால் இறந்துபட்டு யசோமதியின் மனைவியான புட்பாவலியின் மணிவயிற்றில் அபயமதியாகவும் அபயருசியாகவும் பிறப்பெய்துகின்றன.

    யசோதர மன்னனும் அவன் தாய் சந்திரமதியும் விலங்கு கதியில் பிறந்து அடைந்த இவ்வகைத் துன்பங்களுக்கு, முற்பிறப்பில் அவா்கள் மாவால் செய்யப்பட்ட கோழியொன்றைக் கொன்றதே காரணமாகும் என்று காவியம் கற்பிதம் செய்கிறது.

                “இன்னுமீ தைய கேட்க யசோமதி தந்தை யாய

               மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக்

               கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்பம்

               பின்னவா் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ” (யசோ.250)

    இவ்வாறு பலிவழிபாட்டால் மறுமையில் தேவ கதியடைவதற்கான தகுதி அகன்று, உயிர்க்குத் தீமை விளையும் என்ற தத்துவாத்தச் சிந்தனையைக் காவியம் வழங்குகிறது. விலங்குப் பலிக்குப் பதிலீடான பாவனைப் பலியால் யசோதரனும் சந்திரமதியும் மறுமையில் விலங்குகளாகப் பிறந்து பல்வேறு துன்பங்களை அடைந்தனா் என்றும் உரைக்கிறது. ஆகவே இத்தகு பலி வழிபாட்டுடன் இணைந்த நாட்டார் தெய்வ வழிபாட்டை விட்டகன்று, சமண நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோளைக் காவியம் விடுக்கிறது.

    முடிவுகள்

    • தத்துவார்த்த அடிப்படையில் நாட்டார் தெய்வ வழிபாடு கீழானது என்று யசோதர காவியம் கற்பிதம் செய்கிறது. நாட்டார் தெய்வத்தின் உருவமானது பாவத்தின் வடிவம் என்ற மாயத் தோற்றத்தினை உருவாக்க, அக்காவியம் முயன்றுள்ளது.
    • நாட்டார் தெய்வத்திற்கு உயிர்ப்பலியிட்டு வழிபடல் பாவம் (தீவினை) என்ற கருத்தியலை மக்கள் மனத்தில் விதைப்பதற்காகவே யசோதர காவியம் படைக்கப்பட்டுள்ளது. அப்பாவத்தால் மறுமையில் உயிர்க்குத் தீய பலன் கிட்டும் என்றும் காவிய ஆசிரியா் எச்சரிக்கிறார். இத்தத்துவார்த்த அச்சுறுத்தலுக்கு அஞ்சியோர், நாட்டார் வழிபாட்டை விடுத்து, சமண சமயத்திற்கு மடைமாறிய காட்சிகள் பல, காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சான்றாக மாரிதத்தன், சண்டமாரி வழிபாட்டை விட்டகன்று சமண நெறியேற்றதைக் கூறலாம்.
    • மேலும், நாட்டார் தெய்வத்திற்கு உயிர்ப் பலியிடுதலைப் பாவம் (தீவினை) என்று கருதிய மக்கள், அதற்குப் பதிலீடாக (Substitute for animal sacrifice) உயிரற்ற பொருட்களைப் பாவனைப் பலியாக அளித்தனா். அதன்வழி, தங்கள் தெய்வ வழிபாட்டைத் தொடா்ந்தனா். அவ்வாறு நாட்டார் வழிபாட்டில் நிலைநின்ற மக்களையும் சமணம் தன்வழிக்குத் திருப்ப முயன்றுள்ளது. அதற்கு யசோதரனின் கதையைப் பக்கபலமாக அமைத்துக்கொண்டது.

    முதன்மைச் சான்றாதாரம்

    * யசோதர காவியம் மூலமும் உரையும் – ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (உரையாசிரியா்),  2009, சாரதா பதிப்பகம், சென்னை.

    =======================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    முதற்கண் முனைவர் பு.பிரபுராம் அவர்களை வாழ்த்தி, என் மதிப்பாய்வை வழங்குகிறேன்.

    ஆய்வாளர் தன் ஆய்வுக் கருவாக, “நிறுவன மயமாக்கப்பட்ட சமயமான சமணம் தன் தத்துவத்தின் துணைகொண்டு நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கீழ்நிலைக்குத் தள்ளி, நாட்டாரைச் சமணச் சார்புடையோராக மாற்றியது” என்ற கருதுகோளை முன்வைக்கிறார். இக்கூற்று சற்று அதிகப்படியாகத் தோன்றுகிறது.

    யசோதர காவியத்தின் ஆசிரியர், தான் நூல் ஆக்கியதற்கான காரணத்தைத் தொடக்கத்தில் கூறியதை (நூல் நுவல் பொருள் – பாடல் எண் – 4) இவ்வாய்வாளர் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. யசோதரம் ஆசிரியர் இப்பாட்டில், “வெவுரு செய்யும் வினைப்பய னிற்றேனத் தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே” என்று நூல் யாத்ததற்கான காரணத்தை தெரிவிக்கிறார். உயிர்களுக்கு வினைவரும் வழியை அடைப்பதையும், தீவினை இதுவென்று தெரிவித்து, நல்வினைப் பயனை அடைவிப்பதற்கும் வடநாட்டில் வழங்கிய இக்கதையைத் தமிழில் ஆக்கியிருக்கிறார். இதுவே இந்நூலின் நோக்கமாகவும், அந்நோக்கத்தின் ஊடே பயணிக்கும்போது, தீவினைக்குக் காரணமானவற்றை அகற்ற, கதைக்கு ஏற்றவாறு சில புனைவுகள் மூலம் கொல்லாமை அறம் சூழ மாந்தர்களைப் படைத்து தன் நூலின் நோக்கமான “பாவனையின் மூலம் செய்யும் செயலும் தீவினைக்கு வித்தாகும்” என்பதை அறிவுறுத்துகிறார்.

    அப்படித்தான் மனித, மிருக பலியீடு என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி நாட்டார் மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்காக இந்நூல் எழுதியிருப்பது போன்று தன் ஆய்வைக் குறித்திருப்பது, சமண அறத்தையும், சமண இலக்கியங்களின் நோக்கத்தையும் ஆய்வாளர் எளிதில் உள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.

    இவ்வாய்வாளர் இக்கட்டுரையின் தலைப்பை “ சமணம் மறுக்கும் நாட்டார் வழிபாட்டு மரபு” என்று தலைப்பிட்டிருந்தால் நன்றாக அமையும். என் மதிப்பாய்வு, ஆய்வை குறைகூறும் நோக்கில் அமைந்ததன்று.

    =======================================================

    Share
  • இந்த வார வல்லமையாளர் (299) – இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்

    ஆஸ்கார் விருதுகளைப் பத்து ஆண்டு முன்னர் பெற்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் அவர்களை இவ்வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. கணினி தொழில்நுட்பத்தை சினிமா இசையில் புகுத்தியவர். மேற்கத்திய சங்கீதத்தின் வளர்ச்சியை உள்வாங்கி இந்திய திரையிசையாக தமிழ், ஹிந்தி மொழிகளில் தருவதில் மிக வல்லவர் ரகுமான். ‘இளையராஜா 75’ என்ற பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தன் குருவை வாழ்த்தி ‘கீபோர்ட்’ வாசித்து புகழ்மிக்க புன்னகைமன்னன் படப்பாடலை மீண்டும் இசைத்தார். மும்பை, ஹாலிவுட் இசையமைப்புகளில் நீண்ட காலம் செலவிட்ட இரகுமான் இப்போது சென்னையில் நேரத்தைச் செலவிடுகிறார். ராஜீவ் மேனன் இயக்கி, மதன்கார்க்கி பாடல்களுடன் “சர்வம் தாள மயம்” என்ற கர்நாடக சங்கீத உலகம் பற்றிய நல்ல திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது. வாழ்த்துகள் திரு. இரகுமானுக்கும், அவர் இன்னும் தர இருக்கும் தமிழின் புத்திசைப் பாடல்களுக்கும்!
    சாஸ்திரீய சங்கீதம் என்னும் பிரவாகத்தில் இந்தியாவின் பழைய சமூக அமைப்பில் இரு கோடிகளும் இணைவது 3000+ ஆண்டுகளாய் நிகழ்ந்துவருகிறது. பாணர், நாட்டார் இசைக் கலைகள், நாட்டிய மரபுகள் மேட்டிமை மரபுகளாக உருமாற்றம் ஆகின்றன. இந்த ம்யூஸிக்காலஜி ஸப்ஜெக்ட்டை வெகுஜனங்கள் பார்க்கும் சினிமாக்களிலே விட்டுவிடுகிறார்கள் என்கிறார் ‘டெஸ்லா’ கணேஷ்.

    காத்தவராயன் சினிமாவை எடுத்துக்கொள்ளுங்கள். சிவாஜி – சாவித்திரி படம்.இதில் தும்புரா வாசித்துக்கொண்டு சிவாஜி கிழவனாக நடிப்பார். தும்பி (பஞ்சாபில்) – தும்புரு (> தம்புரா). இது மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் பரவியுள்ளது. தும்பி = சுரைக்குடுவை. ‘வரவு எட்டணா செலவு பத்தணா’… துந்தனா என்னும் பாட்டிலே வரும்.  இதுபோன்ற கருவியை வைத்துக் கொண்டு வில் யாழ் வாசிப்பது கின்னரம். ‘கிழவி சொன்னால் கின்னாரக் காரனுக்கு ஏறாது’ (பழமொழி). காத்தவராயன் கதை என்னும் நாட்டுப்புறக் கதை டெஸ்லா கணேஷ் சொல்லும் செய்தியை உள்ளடக்கியது. ஆரியமாலா – கின்னரம் வாசிக்கும் பாணன் காத்தவராயன்.  கின்னரம் ~ ராவணஹஸ்தம் (Pre-Violin History):
    https://groups.google.com/forum/#!topic/santhavasantham/aMK2Pa10Wvc

    3000+ ஆண்டுக்கு முன்னும் ஜாதி அமைப்பின் இரு கோடிகளும் இசையில் சந்தித்துள்ளன. இதைத்தான் குசீலவர் (Cf. Kuyiluvar in Sangam Tamil) பாடல்களும், கிரவுஞ்ச வதை என்னும் வான்மீகியின் பாலகாண்ட சருக்கமும் காட்டிநிற்கின்றன. சாம கானம் பாடும் போது ‘wish-chant’ என்னும் பாடலுக்கு க்ரௌஞ்ச-ஸாமன் எனப் பெயர். விளரி எனத் தமிழிசை கூறும் தைவத ஸ்வரம் (6th note – high note in sapta svaras, dedicated to Asuras and Brhaspati) அன்றில்/க்ரௌஞ்சம் ஏங்கும் பாடல் ரிக்வேதத்தில் சில பாட்டுகளைப் பாட பாணர், குயிலுவரிடம் இருந்து உள்வாங்கப்பட்டுள்ளது. மிக நீண்ட பயணம் இந்தியாவின் சங்கீதம், அதில் சுடரும் விண்மீன் ரகுமான்.

    செம்பூழிக் காலத்தை ஆராய்கிறேன். பீர் என்ற சிந்து மாகாணத்தில் உருவான சொல் தமிழ் அடிப்படைத் தாது கொண்டது. பிரான், பிராட்டி; தம்பிரான் (சைவ ஆதீனங்கள்), தம்புராட்டி (கேரள தரவாடுகள்) ஓர்மிக்கவும்.  பீர் எனுஜ் சொல் அறபி, ஈரான், வடமொழி போன்ற மொழிகளில் அதன் வேர் காட்டவியலாது. சூபி பீர் அவர்களிடம் பக்தி பூண்டு ரகுமானின் தாயாருடன் இஸ்லாம் மதத்தைத் தழுவியவர் ரகுமான். திலீப் என்பது பெற்றோர் இட்ட பெயர். வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி சங்கீதமும், அதன் முன்னனிக் கலைஞர்களுடனும் புதிய படைப்புகளைத் தந்து புகழும், பணமும் ஈட்டுகிறார். இவரது பாடல்கள் என்றால்  படமே ஹிட் தான்.

    “He suggested the names: “Abdul Rahman” and “Abdul Rahim” and said that either name would be good for me. I instantly loved the name “Rahman.” It was a Hindu astrologer who gave me my Muslim name.” https://scroll.in/article/699665/Why-I-converted:-The-transformation-of-Dilip-Kumar-into-AR-Rahman

    https://scroll.in/reel/897429/10-things-we-learnt-about-ar-rahman-from-the-authorised-biography-notes-of-a-dream

    https://indianexpress.com/article/lifestyle/books/ar-rahman-biography-notes-of-a-dream-ar-rahman-oscar-5444054/

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • காலை நடை

    -விவேக்பாரதி

    நடக்க நடக்க நீண்டிடும் சாலை
    நடுவில் எத்தனை நிறுத்தங்கள்!
    நாடிய சிலவும் வேண்டிய சிலவும்
    நகர்ந்து போகும் வழக்கங்கள்!
    வெடித்த சாலை வெண்ணீர்ப் பாலை
    வேகக் காற்றும் இடையிடையே
    மெலிந்த தென்றல் சோலைக் காட்சி
    மெதுவாய்ப் படரும் வழிவழியே!

    பூவின் வாசம் ஓரிடத் தில்நான்
    புயல்வ சத்தில் ஓரிடத்தில்
    புன்னகை மட்டும் மாறா மல்நான்
    புரியும் நடைதான் யாரிடத்தில்?
    தாவும் குரங்காய் மனமும் செல்லத்
    தண்ணீர் தேடும் நிமிடங்கள்
    தடித்துப் புடைக்க உண்டக ளைப்பில்
    தடுமா றுகிற பயணங்கள்!

    முதுகு வளைய மூட்டை தூக்கி
    முறுவ லிப்பதும் நானேதான்
    முடியா தெனவென் மனத்துச் சுமையால்
    முனகி நிற்பதும் நானேதான்
    அதுவாய் வந்தோர் தனிவே தாளம்
    அழுத்திக் கட்டிப் பிடிக்கிறது
    ஆயிரம் கதைகள் கேட்டுக் கேட்டே
    அழுகைக் கவிதை கொடுக்கிறது!!

    11.02.2019

    Share
  • என் மனத்தோழி

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார்.

    இப்பொழுது யாராவது என்னிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது.

    “மதன், மருத்துவர் என்ன கேட்டார்னு கேளுங்களேன். நீங்க வெளில தானே இருந்தீங்க.”

    “என்ன கேக்கணும். சொல்ல வேண்டியதை நீயே சொல்லு.” இது மதன்.

    எரிச்சலாக வந்தது எனக்கு.

    “இப்போ சம்பந்தமில்லாமல் மதன் என்னய இங்க எதுக்கு கூட்டி வந்திருக்கார். அவருக்கு ஏதும் பிரச்சினையா?”

    அமைதியாக ஜானவியுடன் பேச ஆரம்பித்தேன். அவள் எப்போதும் மறுக்காமல் கலகலவென்று பேசுவாள். எல்லா விஷயங்களையும் கேட்டு வந்து எனக்காகச் சொல்லுவாள். பொறுமையாக மருத்துவரிடம் நடந்த உரையாடலைக் கேட்டாள். இப்போதான் எனக்கு திருப்தி.

    அவளுடன் இருப்பது தனி சந்தோசம் தான்.

    ஜானவி இருக்கும் வரை எனக்கு யாரும் தேவையில்லை.  அவள் தினமும் டி.வி.யில் செய்திகள் பார்ப்பதால் பெரும்பாலும் அவைகளைப் பற்றி விவாதிப்போம். பின் சிறிது நேரம் சமயற்கலை.

    சாயங்காலம் வாக்கிங் போகும்போது உடற்பயிற்சி பற்றி. பூங்காவில் அமர்ந்திருப்பவர்கள் பற்றி பேசுவோம். மற்றவர்களைப் பற்றி அதிகம் வம்பு பேச அவளுக்குப் பிடிக்காது. என்னைப் போலவே அவளுக்கும் பிடித்த கலர் மஞ்சள் தான். .

    நான் படித்த அத்தனை கதைப் புத்தகங்களையும் அவளும் படித்திருப்பதால் கதைகளை திரும்பவும் நினைவு கூர்வோம்.

    தமிழ் பேச ஆளில்லாத பஞ்சாபில் எனக்கு ஜானவி மட்டும் தான் உற்ற தோழி.

    “நீ பேசாவிட்டால் என்ன. எனக்கு ஜானவி இருக்கிறாள்!” என மதனிடம் சொன்னதற்குப் பின் தான் அவசரமாக விடுப்பு எடுத்தார் சென்னை வர. ஆனால் அவளைப் பற்றி அவர் ஒருகேள்வி கூட கேட்கவில்லை.

    ஜானவியும் எங்களுடன் சென்னை வந்துள்ளாள்.  நேற்று தொலைக்காட்சியில் பார்த்த சினிமா கதையை சொல்லிக் கொண்டிருக்கிறாள். முன்பெல்லாம் ரேடியோவில் ஒலிச்சித்திரம் என மூன்று மணிநேர சினிமா கதையச் சுருக்கி ஒரு மணி நேரம் ஒலிபரப்புவார்களே. அதுபோல அவளும் கதையைச் சுருக்கி சொல்கிறாள். கண்ணை மூடிக்கொண்டு நான் கேட்டுக் கொண்டிருகிறேன்.

    ஏனோ இந்த மதனுக்கு மட்டும் இருப்பு கொள்ளவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார் மருத்துவரின் வருகைக்காக.

    மருத்துவர் வந்தவுடன் அவரை விசாரிப்பார் போல. எதற்காக இத்தனையும். புரியவில்லை.  கேட்டால் மட்டும் சொல்லிவிடவா போகிறார்.

    இங்கு வந்ததிலிருந்து திரும்பத் திரும்ப தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    “உனக்கு என்னைப் பற்றி குறை சொல்ல வேண்டும் எனத் தோன்றினால் தாரளமாக மருத்துவரிடம் சொல். நான் வேணும்னாலும் திரும்ப வெளில உக்காந்துக்கறேன்.”

    “மதனுக்கு என்ன ஆச்சு. நான் ஏன் குறை சொல்லணும்.  கொஞ்ச நேரம் முன்னால தானே மனநல மருத்துவர் முன்னால உக்காந்தேன்.  எங்கிட்ட  கேட்ட பல கேள்விகளையும் அதுக்கு நான் சொன்ன பதிலையும் இப்பதான் ஜானவி கிட்ட சொன்னேன்.”

    திரும்பவும் மனதுள் அசை போட்டேன் நேரம் போவதற்காக.

    “உங்கள் பெயர் …”

    “சரண்யா”

    “உங்களுக்கு பிடித்த விஷயங்களைப் பட்டியலிட்டுச் சொல்லுங்கள்.”

    “பேசப் பிடிக்கும். முக்கியமா வம்பு கேட்கப் பிடிக்கும். அறிவுரை சொல்லப் பிடிக்கும். கூட்டமா உக்காந்து நேரம் போக்குவது பிடிக்கும். படம் பார்க்கப் பிடிக்கும்……”

    “எதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காது. எது எரிச்சலைக் கொடுக்கும்.”

    “பேசாம இருப்பது. தனியா இருப்பது. அவ்வளவு தான்.”

    இன்னும் அடுக்கடுக்கான கேள்விகள்.

    சிறிது நேரத்துக்குப்பின் மருத்துவர் கூறினார்.

    “சரண்யா உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சாதாரணமா எல்லாப் பெண்களுக்கும் உள்ள குணம் தான் உங்ககிட்டயும்  இருக்கு. பயப்படத்தேவையில்லை.”

    “மனச அமைதியாகவும் சந்தோஷமாகவும் வச்சுக்கோங்க. அவ்வளவு தான்.”

    “மதன் உங்கள் மனைவி தேவையில்லாமல் மனச குழப்பிக்கறாங்க. அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. டேக் கேர்.”

    “இல்லை டாக்டர் உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்.”

    “நான் எங்க பயப்பட்டேன். எப்ப சொன்னேன் எனக்கு பிரச்சினைனு. என்ன இது. இங்கேந்து வெளில போனவுடனே மதன ஒரு பிடி பிடிக்கணும். அவர் என்ன லூசா.”

    யோசித்துக் கொண்டிருக்கும்போதே மருத்துவர் திரும்பி வந்தார்.

    அவர் மதனிடம்

    “நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே…” .என ஆரம்பித்தார்.

    “டாக்டர் நீங்க அவளோட தோழிகள் பத்தி கேட்டீங்களா.” இது மதன்

    மருத்துவர் சந்திராவுக்கு ஒரே ஆச்சரியம். இதெல்லாம் ஒரு விஷயமா என.

    “ஓ… இது தான் பிரச்சினையா மதன்?” எனக் கேட்டுவிட்டு டாக்டரை நோக்கி பேசத் தொடங்கினேன்.

    “எனக்கு இப்போ ஒரே ஒரு தோழி தான். அவ பேரு ஜானவி. அவள நீங்கல்லாம் பாக்க முடியாது. எனக்கு வேணும் னு நெனைக்கும்போது என் கூட மட்டும் பேசுவா.”

    மருத்துவர் இருக்கையை விட்டு எழுந்தே விட்டார். அப்படின்னா ஜானவி ஒரு……..

    “என் கற்பனைத் தோழி அவ்வளவு தான். எனக்கு பேச ஆளில்லாததால் நானே உருவாக்கி வளர்த்துவிட்ட கற்பனைப் பாத்திரம்.”

    “மதன் அதிகம் பேச மாட்டார். வேலைப் பளு வேறு. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச பாஷை தெரியாது. அதனால அப்டி செஞ்சேன்.”

    “இதுக்குத்தான் இவ்ளோ பயமா மதன். எங்கிட்ட கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேனே. கவலைப்படாதீங்க.  எனக்கு ஒண்ணும் ஆகாது.”

    எழுந்து வெளியேறினேன் என் மனத் தோழி ஜானவியுடன்.

    புரிந்தும் புரியாமல் பின் தொடர்ந்தார் மதன்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(244)

    செண்பக ஜெகதீசன்

    எனைத்துங் குறுகுத லோம்பல் மனைக்கெழீஇ

    மன்றிற் பழிப்பார் தொடர்பு.

    -திருக்குறள் -820(தீ நட்பு)

     

    புதுக் கவிதையில்…

     

    தனியே வீட்டிலிருக்கையில்

    தணியாத நட்புடன் இருப்பதாய்க் காட்டி,

    பலரோடு அவையிலிருக்கையில்

    பழித்துப் பேசுவோர் நட்பு,

    கொஞ்சமும் நம்மை

    அணுகவிடவே கூடாது…!

     

    குறும்பாவில்…

     

    வீட்டிலே நட்புடையோர்போல நடித்து

    மன்றத்திலே பழித்துப்பேசுவோர் தொடர்பு,

    மிகச்சிறிதாயினும் தவிர்த்திடுக…!

     

    மரபுக் கவிதையில்…

     

    வீட்டில் தனியே இருக்கையிலே

    வேண்டிய நண்பராய்ப் பழகியபின்,

    கூட்டமாய் அவைதனில் உளநேரம்

    குறைகள் பலவும் கூறியேதான்

    காட்டமாய்ப் பழித்துப் பேசுவோர்தம்

    கூட்டு யென்றும் வேண்டாமே,

    காட்டும் நட்பு சிறிதெனிலும்

    கொள்ளா ததனைத் தவிர்ப்பீரே…!

     

    லிமரைக்கூ…

     

    நட்பாவார் வீட்டில் தனியே,

    மன்றினில் பழிப்பார், அவர்தம் நட்பு

    சிறிதெனிலும் வேண்டாம் இனியே…!

     

    கிராமிய பாணியில்…

     

    வேண்டாம் வேண்டாம்

    கெட்டவுங்க நட்பு,

    வேதனதரும் கெட்டநட்பு

    வேண்டவே வேண்டாம்..

     

    தனியா வீட்டில இருக்கயில

    தொணயா நல்ல

    நண்பனா நடிச்சவந்தான்,

    சபயில கூட்டமா இருக்கயில

    பழிச்சி நம்மப் பேசுனாண்ணா,

    இனிமேலும் அவன்தொடர்பு

    கொஞ்சங்கூட வேண்டாமே..

     

    அதால

    வேண்டாம் வேண்டாம்

    கெட்டவுங்க நட்பு,

    வேதனதரும் கெட்டநட்பு

    வேண்டவே வேண்டாம்…!

     

     

    Share
  • 2019 பிப்ரவரி 22 இல் ஜப்பான் ஹயபூஸா -2 தளவுலவி “ரியூகு” முரண்கோளில் தடம் வைக்கப் போகிறது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    ++++++++++++++++++

       [January 16, 2019]
     
    ++++++++++++++++

    நிலவினில் முதற்தடம் வைத்து

    நீத்தார் பெருமை யாய்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்
    தவ்விய தளவுளவி களை 
    நாசாவும்
    ஈசாவும் கொண்டு இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    விண்வெளியில் வால்மீன் ஒன்றை
    விரட்டிச் சென்று வால் வீசிய
    தூசியைப் பிடித்து வந்தார்
    காசினிக்கு !
    வக்கிரக் கோள் மாதிரி எடுத்து
    வையத்தில் இறக்கிடும்
    இப்போது ஜப்பானின்
    ஹயபூசா முதல் விண்ணுளவி
    அயான் எஞ்சனை இயக்கி
    ஆறு பில்லியன் மைல் கடந்து
    சீராய் மாதிரி கொணரும் !
    முரண்கோள்  ஒன்றைப் பிடிப்பார் !
    பூர்வ உயிர் மூலவிகள்
    வேர் காணப் புறப்படும்
    ஆர்வத் தளவுளவி.
    2025 ஆண்டில்
    அமெரிக்க விண்வெளித்  தீரர்
    வக்கிரக் கோளில்
    வைப்பர் தம் கொடி !

    ++++++++++++++++

     
    ஜப்பான் விண்வெளித் தேடலில் முன்னோடி முயற்சிகள்
     
    சூரிய மண்டல மூலாதாரத் தோற்றத்தை ஆய்வு செய்யும் விண்வெளித் தேடல் பயணங்களில், சூரியனைச் சுற்றும் முரண்கோள்களைச் [Asteroids] சுற்றி, அவற்றில் தடம் வைத்து மாதிரி மண்ணை எடுத்துப் பூமிக்கு மீளும் யந்திர சுய இயக்கப் பொறி நுணுக்கத்தில் ஜப்பானை யாரும் மிஞ்ச முடியாது.  அந்த பயணங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது ஜப்பானின் “ஹயபுஸா-2” விண்ணுளவி.   அடுத்து புரியப் போகும் சாதனை பிப்ரவரி 22, 2019 இல் நிகழப் போகிறது.  அதாவது 880.மீடர். [540 அடி] விடமுள்ள “ரியூகு” முரண்கோளில்  ஹயபுஸா -2 இன் தளவுளவி இறங்கப் போகிறது.  முரண்கோளில் தடமிடும் இடம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது..  2018 ]செப்டம்பரில் ஜப்பான் விண்வெளி ஆணையகம் [JAXA – JAPAN AEROSPACE EXPLORATION AGENCY]  10 கி.கிராம் [22 பவுண்டு] பளு உள்ள மாஸ்காட்   [MASCOT] [MOBILE ASTEROID SURFACE SCOUT] என்னும் தளவுளவியை  ஏவி வெற்றிகரமாக  அங்கே இறக்கியுள்ளது.
    Japan Landers
    மாஸ்காட் தளவுளவியின் கருவிகள் படங்களைப் பல்வேறு அலை நீளங்களில் பதிவு செய்யும்.  நுண்ணோக்கி மூலம் முரண்கோளின் தாதுக்களை ஆய்வு செய்யும்.  தள உஷ்ணத் தையும், காந்த சக்தியையும் அளக்கும்.  ஜப்பானிய  “கழுகு” எனக் கருதப்படும் ஹயபூஸா – 2 ஒரு சமயலறை ரெஃப்ரிஜெரேட்டர் அளவு கொண்டது.  2014 டிசம்பரில் ஏவப்பட்ட ஹயபுஸா 2 அனுப்ப ஆகும் நிதிச் செலவு சுமார் U$ : 260 மில்லியன்.  அது ரியூகு மாதிரி மண்ணை 2020 ஆண்டில் பூமிக்குத் தானாய்க் கொண்டு வரும்  என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அவ்விதம் எடுக்கப் பட்ட மண் மாதிரிகள் பிரபஞ்ச உயிரினங்கள் பற்றிய தகவலை  விஞ்ஞானிகளுக்கு கூறும்.  அத்துடன் வேறு எந்த மூலகங்கள் [Elements] சேர்ந்து, பூமியில் உயினங்கள் தோன்றின என்றும் அறிவிக்கும்.

    ஜப்பான் கழுகு -2 பயணம்

    +++++++++++++++++

    [This computer graphics image provided by the Japan Aerospace Exploration Agency (JAXA) shows an asteroid and asteroid explorer Hayabusa2. The Japanese space explorer that will try to blow a crater in an asteroid and bring back samples from inside is nearing its destination after a 3 1/2 -year journey. The unmanned Hayabusa2 has arrived at the asteroid Wednesday, June 27, 2018, about 280 million kilometers (170 million miles) from Earth.]

    +++++++++++++++++++

    ஜப்பான் விண்ணுளவி முரண்கோள் ரியூகுவை முற்றுகை இடுகிறது.

    2018 ஜூன் 27 இல் நெடுந்தூரம் பயணம் செய்யும் ஜப்பானின் விண்ணுளவி ஹயபூஸா -2 அடுத்தோர் முரண்கோள் ரியூகூவை [Asteroid Ryugu] 20 கி.மீ.  [12 மைல்] உயரத்தில் வட்டமிட்டு வருகிறது.  முரண்கோள் ரியூகூ  பூமியிலிருந்து சுமார் 300 மில்லியன் கி.மீ. [187 மில்லியன் மைல்] தூரத்தில் உள்ளது.  “மனித இனத்துக்கு இது ஓர் மாபெரும் அண்டவெளிச் சாதனை,” என்று சொல்கிறார் ஜாக்ஸா திட்ட மேலாளர் [(JAXA) Japan Aerospace Exploration Agency]  யூச்சி சூடா [Yuichi Tsuda].  ஐக்கிய நாடுகளின் அகில நாட்டு முரண்கோள் தினமான  [International Asteroid Day] 2018 ஜூன் 30 தேதிக்கு முன்னால் இந்நிகழ்ச்சி நேர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

    Shoemaker Asteroid

    ஹயபூஸா என்றால் “கழுகு” என்று பொருள்.  குளிர்ச் சாதனப் பெட்டி [Refrigerator] அளவு இருக்கும்.  ஜப்பானின் முதல் கழுகு 2010 இல் உருளைக் கிழங்கு போன்ற, ரியூகூவைச் சிறிய முரண்கோள் ஒன்றைத் தொட்டு மாதிரி மண், பூமிக்குக் கொண்டு வந்தது.  இது இரண்டாவது குழுகு. 2014 டிசம்பரில் ஏவப்பட்டது.  திட்ட நிதி ஒதுக்கு : 274 மில்லியன் டாலர். [2014 நாணய மதிப்பு]. பயணக் காலம் : 1302 நாட்கள். கடக்கும் தூரம் : 3.2 பில்லியன் கி.மீ. [19 பில்லியன் மைல்].  ஹயபூஸா -2 தளவுளவியாக முரண்கோளில் இறங்கி, 18 மாதங்கள் முரண்கோளைச் சோதனை செய்யும்.  அந்த நாட்களில் தகுந்த இடமொன்றைத் தேர்ந்து மண் மாதிரிகளைச் சேமித்துக் கொண்டு அது பூமிக்கு மீளும்.

    Japan’s Hayabusa 2 probe has reached the asteroid Ryugu, thought to contain organic matter from the dawn of the solar system. (Artist rendering courtesy of JAXA)

    ம?ண் மாதிரிகளைத் தோண்டிச் சேமிக்கப் பயன்படும் கருவி யின் பெயர் : தகர்ப்பி  [Impactor].  தகர்ப்பி 2. கி.கி. [4 பவுண்டு] தாமிரச் சுத்தியலால் குத்தித் தோண்டி, தரைக்குக் கீழ் உள்ள மண்னை எடுத்துக் கொள்ளும்.  சூரியக் கதிர் தாக்காத, காற்றோட்டம் மாற்றாத மண்ணைச் சோதிப்புக்கு எடுத்துக் கொண்டு புவிக்கு  மீளு ம்.   அவற்றில் உயிர்மூலவி உள்ளதா என்பது  பூமியில்  ஆராயப்படும்.  பிரபஞ்சத் தோற்றப் பூர்வக் கோளான ரியூகூ முரண்கோளில், ஏதாவது ஆதார அடிப்படை யில்  உள்ளதா என்றும் அறியப்படும்.

    ஹயபுஸா -2 தளவுளவி  500 மீடர் அகலமுள்ள முரண்கோளில் 30 செ.மீ. அகலக் குண்டைப் போட்டு, அது வெடித்து ஏற்படும் ஒரு மீடர் குழியில் மண் மாதிரி எடுக்கும்.    அக்குழி மண் மாதிரி சூரியக் கதிரடிப் பெருமளவு  தாக்காமல்  புதைந்து கிடப்பது.   அந்த மாதிரி மண் முரண் கோளின் இரசாயனப் பூர்வ நிலையைக் காட்டும்.   உயிரனப் பூர்வ மூலவிகளை அறிய முரண்கோள் மாதிரியில் அமினோ அமிலம் [Amino Acids]  இருப்பது நிரூபிக்கப் பட வேண்டும்.

    மகடோ  யோஸிகாவா  [ஹயபூஸா -2  ஜப்பான் விண்வெளித் தேடல் குழு]


    “ஜப்பான் முதல் தளவுளவி ஹயபுஸா, புத்தகத்தில் சொல்லி வைத்தபடித் துல்லியமாகத் தென் ஆஸ்திரேலியப் பாலைவனத்தில் வந்திறங்கிப் பயணத்தை முடித்தது. மேலும் தவிர்க்க வேண்டிய தளங்களில் விழாமல் தப்பிக் கொண்டது.  ஜப்பானிய நிபுணர் எங்கு வந்து விண்சிமிழ் விழத் திட்ட மிட்டாரோ அங்கு பாதுகாப்பாய் வந்து இறங்கியது.”

    டக்லஸ் ஜெர்ரி ஊமெரா சோதனை ஆளுநர் (JAXA)

    “முதல் தளவுளவி மீண்டு வருமா என்று விஞ்ஞானிகள் கவலையோடு அச்சத்தில் இருந்த சமயத்தில், விண்சிமிழ் எதிர்பார்த்ததை விட மென்மையாக இறங்கியதைப் பார்த்து நாங்கள் பேருவகை அடைந்தோம்.  நாலாண்டுகள் நீடிக்க அமைக்கப் பட்ட விண்கப்பல் ஏழாண்டுகள் தொடர்ந்து பணிசெய்ய அதன் மின்கலன்கள் (Batteries) சாகாமல் இயங்கியதைக் கண்டு பூரிப்படைந்தோம்.”

    யோஷியூக்கி ஹசேகா (JAXA Associate Executive Director)

    “மீண்ட விண்சிமிழ் பாலை மணலில் இரவு பூராவும் கிடந்தது.  பகலில் விஞ்ஞானிகள் அதைக் கண்டதும் எடுத்துக் கொண்டார்கள்.  அப்பகுதியில் வசித்த பூர்வீகக் குடிவாசிகள் தமது சொந்தமான புனிதத் தெய்வீகத் தளங்களில் விழவில்லை என்று மகிழ்ந்தனர்.  நல்ல வேளை விண்சிமிழ் நொறுங்காது முழுமையாகப் பாலை மணலில் கிடந்தது.

    ஜப்பான் விண்வெளி ஆய்வக (JAXA) அறிவிப்பு

    ஜப்பான் 2014 இல் அனுப்பும் இரண்டாம் விண்கப்பல் ஹயபுஸா -2 முரண்கோளில் உயிரின மூல இரசாயனத்தைத் தேடும்

    முதல் விண்கப்பல் ஹயபுஸாவைச் செம்மைப் படுத்தி ஜப்பான் 2014 ஆண்டில் வக்கிரக் கோள் [Asteroid : 1999 JU3] ஒன்றை நோக்கி அனுப்பி அதன் மண் மாதிரியை எடுத்துப் பூமிக்கு மீளும் அடுத்தோர் அரிய விண்வெளிச் சாதனை புரியத் திட்டமிட்டுள்ளது.   இந்த தளவுளவி 2018 இல் குறிப்பிட்ட வக்கிரக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  தளவுளவி அதன் மண் மாதிரியை எடுத்து பூமிக்கு 2020 ஆண்டில் மீளும் என்று திட்ட மிடப் பட்டுள்ளது.   விண்கப்பல் முரண் கோளை நெருங்க 4 ஆண்டுகளும், திரும்பி வர 2 ஆண் டுகளும் நீடிக்கப் பல பில்லியன் தூரப் பயணமும், மெதுவாக இயங்கும் அயான் எஞ்சின்களும் பிரதான காரணங்கள்.   மனிதரற்ற இந்த விண்வெளித் தேடலுக்கு ஆகும் நிதித்தொகை 2 பில்லியன் டாலர்.   ஹயபுஸா -2 மண் மாதிரி எடுக்கப் போகும் முரண்கோள் பெயர் 1999 JU -3.  அதன் அகலம் ஒரு கிலோ மீடர் [சுமார் அரை மைல் ]. முரண் கோளில் உயினங் களுக்கு விதையிட்ட ஆர்கானிக் மூலக்கூறுகள் [Organic Molecules] உள்ளனவா என்று மண் மாதிரியில் தேடப்படும்.

    ஹயபுஸா -2 தளவுளவி  500 மீடர் அகலமுள்ள முரண்கோளில் 30 செ.மீ. அகலக் குண்டடைப் போட்டு, அது வெடித்து ஏற்படும் ஒரு மீடர் குழியில் மண் மாதிரி எடுக்கும்.    அக்குழி மண் மாதிரி சூரியக் கதிரடிப் பெருமளவு  தாக்காமல்  தரைக் கடியில் புதைந்து கிடப்பது.

    அந்த மாதிரி மண் முரண் கோளில் உயிரின மூலவி தோன்றக் காரணமான இரசாயனப் பூர்வ நிலையைக் காட்டும்.   உயிரனப் பூர்வ மூலவிகளை அறிய முரண்கோளில் அமினோ அமிலம் [Amino Acids]  இருப்பது நிரூபிக்கப் பட வேண்டும்.

    நாசா ஸ்டார்டஸ்ட் வால்மீன் குறிப்பணி [Stardust Comet Mission] மூலம் வால்மீன் வாலில் [Comet : Wild 2]  அமினோ அமிலங்கள் இருப்பதை மெய்ப்பித்தது.    ஆனால் வெப்பப் படக்காட்சியில் [Thermal Imaging]  கரிக் கலவைகள் [Carbon Compounds] இருப்பதை வானியல் விஞ்ஞானிகள் முன்பே அறிந்தனர்.

    ஹயபுஸா -2  விண்கப்பலில் உள்ள வேறுபாடுகள்

    முதல் ஹயபுஸா விண்கப்பலில் ஒரு தளவுளவி இறங்கியது.  ஆனால் அது நிரம்ப அளவு மாதிரி மண் ஏனோ எடுக்க முடியாமல் போய் திட்டமிட்டவருக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.  இரண்டாவது விண்கப்பலில் இரட்டைத் தளவுளவிகள் முரண்கோளில் இறங்குவதற்குச் சேர்க்கப் பட்டுள்ளன.  மேலும் முக்கியக் கருவிகள் யாவும் செம்மையாக்கப் பட்டு இரட்டிக்கப் பட்டுள்ளன.    முதல் தளவுளவியை விட மிகையான மண் மாதிரி எடுக்க இரண்டாவது விண்கப்பல் தயார் செய்யப் படுகிறது.  இரண்டாம் விண்கப்பலும் முதல் ஹயபுஸா போல் அயான் எஞ்சினால் இயங்குவது.

    .  

    முதன்முதல் பூமிக்கு ஹயபுஸா -1  கொண்டுவந்த  வக்கிரக்கோள் மாதிரி மண்

    2010 ஜூன் 14 ஆம் தேதி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் பூமியில் விழுந்த ஒரு விண்சிமிழை (Space Capsule) தேடிக் கண்டுபிடித்து எடுத்தார்கள். அந்தச் சிமிழ் முரண் கோள் (Asteroid) ஒன்றின் மாதிரி மண்ணை எடுத்து வந்திருக்கலாம் என்பது அறிவிக்கப் பட்டிருக்கிறது.  அந்த முரண் கோளின் பெயர் : இடோகாவா (Asteroid # 25143- Itokawa).  அதைப் பாலவனத் தளத்தில் பாதுகாப்பாய் இறங்கிடத் திட்டமிட்ட ‘ஊமெரா இராணுவத் தளத்தில் (Woomera Military Zone) விழ வைத்தது ஜப்பான் அனுப்பிய விண்ணுளவி  ‘ஹயபுஸா” (Hayabusa).  ஜப்பன் மொழியில் ஹயபுஷா என்றால் ‘கழுகு’ என்று அர்த்தம்.  வெப்பக் கவசம் பூண்ட விண்சிமிழ் (Heat-Resistant Capsule) பாராசூட் குடையால் தூக்கி வரப்பட்டு சிதையாமல் இறங்கி விழுந்து கிடப்பதைக் கண்டார்கள். அதே சமயத்தில் சிமிழைச் சற்று முன் இறக்கிய ஹயபுஸா விண்ணுளவி கவசமில்லாமல் சூழ்வெளி வாயு மண்டலத்தில் வரும்போது உராய்வுச் சூட்டில் எரிந்து வானத்தில் சுடர் ஒளி வீசி மறைந்தது !

    “ஜப்பான் விண்ணுலவி, புத்தகத்தில் சொல்லி வைத்தபடித் துல்லியமாகத் தென் ஆஸ்திரேலியப் பாலைவனத்தில் வந்திறங்கிப் பயணத்தை முடித்தது. மேலும் தவிர்க்க வேண்டிய தளங்களில் விழாமல் தப்பிக் கொண்டது.  ஜப்பானிய நிபுணர் எங்கு வந்து விண்சிமிழ் விழத் திட்ட மிட்டாரோ அங்கு பாதுகாப்பாய் வந்து இறங்கியது.” என்று டக்லஸ் ஜெர்ரி ஊமெரா சோதனை ஆளுநர் (JAXA) கூறினார்.

    “விண்ணுளவி மீண்டு வருமா என்று விஞ்ஞானிகள் கவலையோடு அச்சத்தில் இருந்த சமயத்தில், விண்சிமிழ் எதிர்பார்த்ததை விட மென்மையாக இறங்கியதைப் பார்த்து நாங்கள் பேருவகை அடைந்தோம்.  நாலாண்டுகள் நீடிக்க அமைக்கப் பட்ட விண்கப்பல் ஏழாண்டுகள் தொடர்ந்து பணிசெய்ய அதன் மின்கலன்கள் (Batteries) சாகாமல் இயங்கியதைக் கண்டு பூரிப்படைந்தோம்.” என்று யோஷியூக்கி ஹசேகா (JAXA Associate Executive Director) கூறினார்.

    ஜப்பான் ஹயபூஸா விண்ணுலவியை ஏவியதின் நோக்கம்

    ஆறு பில்லியன் மைல்கள் (5 பில்லியன் கி.மீ) சுற்றுப் பயணம் செய்து முதன்முறை ஒரு முரண்கோளைத் தள ஆய்வு செய்து பூமிக்குத் திரும்பி வரலாற்றுப் புகழ் பெற்ற ஜப்பானின் ஹயபுஸா விண்ணுளவி 2003 மே மாதம் 9 இல் எம். வி ராக்கெட் மூலம் (M.V. Rocket) ஜப்பானின் காகோஷிமா (Kagoshima) ஏவுகணை விண்வெளித் தளத்திலிருந்து ஏவப் பட்டது.  உளவிய முரண் கோளின் பெயர் இடோகாவா என்று ஜப்பான் மொழியில் பெயரிடப் பட்டது.  வக்கிரக் கோளின் அளவு : (540 மீடர்X270 மீடர்X210 மீடர்.) (1800′X900′X700′). விண்ணுளவி முரண் கோளை நெருங்கிய நாள் : 2005 செப்டம்பர் மாத நடுவில்.  ஹயபுஸா முரண் கோளின் வடிவம், சுழற்சி, தள அமைப்பு, நிறம், உட்பொருள் கலப்பு, திணிவு (Composition & Density), வரலாறு போன்றவை 2005 நவம்பரில் இறங்கிய போது ஆய்வு செய்யப் பட்டன.  ஆனால் தளத்தில் மண் மாதிரியை உறிஞ்ச முயன்ற போது ஏற்பட்ட ஒரு கருவியின் பிழையால் திட்டமிட்டபடிப் போதிய அளவு மண் மாதிரி சிமிழில் சேமிப்பாக வில்லை என்று அஞ்சப் படுகிறது.  ஓரளவு தூசி மட்டும் உள்ளே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சோதனைக்குச் சிமிழைத் திறக்கும் போதுதான் தூசியின் இருப்பு உறுதி செய்யப்படும்.  விண்சிமிழ் ஆஸ்திரேலியப் பாலையில் வந்திறங்கிய தேதி ஜூன் 13, 2010.

    விண்ணுலவி ‘மினர்னா’ வென்னும் (Mini-Lander MINERVA -Micro Nano Experimental Robot Vehicle for Asteroid) ஒரு சிறு தளவுளவியைத் தூக்கிச் சென்றது.  ஆனால் அது முரண் கோளின் தளத்தில் சரியான தருணத்தில் இறங்காமல் போனது அடுத்த தவறு.  இதற்கு முன்பு விண்கப்பல்கள் கலிலியோ, நியர் சூமேக்கர் போன்றவை (Spaceships : Galileo & NEAR Shoemaker) முரண் கோள்களை அண்டினாலும், எவையும் இதுவரை ஹயபுஸா போல் மாதிரி மண்ணை உருவிக் கொண்டு சோதிக்கப் பூமிக்கு மீண்டதில்லை.  2000 இல் நியர் சூமேக்கர் விண்கப்பல் முரண் கோள் 433 ஈராஸில் (Astroid : 433 Eros) கட்டுப்பாடுடன் இறங்கித் தடம் வைத்தது.  ஆனால் தளவுளவியாக அது இயங்கத் தயாரிக்கப் படாததால், அதன் நகர்ச்சி நிறுத்தம் ஆனது.  ஹயபுஸா முரண் கோள் தளத்தைத் தொட்டு மீண்ட முதன்மை விண்வெளிக் கப்பலென்று “கின்னஸ் உலகப் பதிவுகளில்” (Guinness World Record) பெயர் அடைய ஜப்பான் விண்வெளி ஆய்வகம் (JAXA) தீவிரமாய் முனைந்து வருகிறது.


    ஹயபுஸா -1 விண்ணுளவியின் தனிச் சிறப்புக்கள் என்ன ?

    விண்ணுளவி இரண்டு ஆண்டுகளுக்குப் பரிதியின் ஒளியால் இயங்கும் சீனான் வாயு பயன்படும் அயான் எஞ்சின்கள் (Xenon Ion Engine, Powered By Sun) நான்கைப் பயன்படுத்தி நீண்ட தூரம் (சுமார் 6 பில்லியன் மைல்) பயணம் செய்தது.  விண்கப்பல் மெதுவாகச் சென்றாலும் நீண்ட தூரம் உந்திச் செல்ல முடிந்தது.  மிகக் குன்றிய ஈர்ப்பு விசை கொண்ட முரண் கோளை அண்டியதும் ஹயபுஸா அதனைச் சுற்றாமல் பரிதி மையப் பாதையிலே (Heliocentric Orbit) கோள் அருகில் சென்றது.

    மினர்வா என்னும் மிகச் சிறு ‘சுய இயக்கு வாகனத்தைத்’ (Robotic Vehicle) தூக்கிச் சென்றது விண்ணுளவி.  ஆனால் கடைசி நேரத்தில் அது இயங்காமல் போனது விஞ்ஞானி களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.  அந்தச் சாதனத்தின் எடை 590 கிராம் (10 செ.மீ. உயரம், 12 செ.மீ. விட்டம்).  சூரிய சக்தியைப் பயன்படுத்திய விண்ணுளவி ஒரு ‘சுழற்சி கன ஆழியின்’ (A Rotating Flywheel) மூலம் முரண் கோளின் மிகச் சிறிய ஈர்ப்பு ஆற்றல் முற்போக்கை ஆதரவாக்கிக் கொண்டு முரண் கோள் மீது குதித்து மிதந்தது.

    2005 நவம்பர் 12 இல் மினர்வா முரண் கோளில் இறங்க பூமியிலிருந்து சமிக்கை அனுப்பப் பட்டு இயக்கப் பட்டது.  ஆனால் அந்த சமிக்கை ஆணை வருவதற்குள் ஹயபுஸா விண்ணுளவியின் ‘உயரமானி’ (Altimeter) முரண்கோளி லிருந்து உயரம் 44 மீடர் (150 அடி) என்று அறிந்து ‘சுய உயரச் சீரமைப்பு’ (Auto Alitude Keeping Sequence) ஏற்பாடு இயங்க ஆரம்பித்தது.  அதாவது மினர்வா வாகனம் சரியான உயரத்தில் இறங்காமல் விண்ணுளவி மேலேறும் தருணத்தில் கீழிறங்கத் துவங்கியது.  ஆதலால் முரண் கோளில் மினி வாகனம் இறங்காமல் விண்வெளியில் தடுமாறி நழுவிப் போனது ! மினர்வா இறக்கம் திட்டப்படி நிகழ்ந்திருந்தால் அதுவே விண்வெளி வரலாற்றின் முரண் கோளில் தாவிய முதல் விண்வெளி விட்டிலாகப் (Space Hopper) பெயர் எடுத்திருக்கும்.

    இதுவரை முரண் கோள் மண் மாதிரிக்கு விஞ்ஞானிகள் எரி விண்பாறை மாதிரியையே (Meteorite Samples) விளக்கத்துக்கு எடுத்துக் கொண்டார்கள்.  அது நியாயமற்ற ஒப்பீடாகும்.  ஹயபுஸா முரண் கோளின் தனிப்பட்ட மாதிரியைச் சோதித்து அந்தப் பழைய பிரச்சனையைத் தீர்த்து வைக்கும்.  முரண் கோள்களும் எரி விண்பாறைகளும் ஒன்றா அல்லது வேறானவையா என்பதைத் தெளிவாக நிர்ணயம் செய்யப் போகிறது என்று ஹயபுஸா திட்ட விஞ்ஞானி ஹஜிமி யானோ (Hajime Yano) சொல்கிறார்.

    ஜப்பான் விண்வெளி ஆய்வகத்துக்கு (JAXA) ஹயபுஸா திட்டம் நுணுக்கப் பொறியியல் துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகப் பெருமை கொள்கிறது.  ஸெனான் வாயுவைப் பயன்படுத்தி ஆறு பில்லியன் மைல் நீண்ட பயணத்துக்கு நான்கு அயான் ராக்கெட் எஞ்சின்களை வெற்றிகரமாக இயக்கியது ஒரு தனிச் சிறப்பே.  சுயத் தூண்டு நகர்ச்சி, ஒளித் தூண்டு நகர்ச்சி, ஆழ்வெளித் தகவல் தொடர்பு, ஈர்ப்பாற்றல் சிறுத்த கோள்களுடன் நெருக்க மிதப்பு (Autonomus & Optical Navigation, Deep Space Cumminication & Command, Close Movements on Space Objects with Low Gravity) போன்றவை விருத்திக்கு ஜப்பானின் ஹயபூஸா வெற்றி வழி வகுத்து முன்னோடியாய் நிற்கிறது.

    ஹயபுஸாவில் இயங்கிய நான்கு அயான் ராக்கெட் எஞ்சின்கள்

    தற்போது அயான் ராக்கெட் எஞ்சின்கள் துணைக்கோள் சுற்று வீதிச் சீராக்கத்துக்கும், முரண் கோள்களை நெருங்குவதற்கும் பயன்படுகின்றன !  இன்னும் 30 ஆண்டுகளில் செவ்வாயிக்கு மனிதர் விண்கப்பலில் சென்று வரவும், தங்கும் விடுதிகளை அங்கே அமைக்கவும் தொடர்ந்து உபயோகிக்கப்படும்.  100 ஆண்டுகளில் நாமிருக்கும் இந்த சூரிய மண்டலத்தை விட்டு அடுத்த பரிதி மண்டலத்தின் பூமியைச் சுற்றி வரலாம்.  அங்கே தடம் வைத்திடலாம்.  அதாவது நீடித்த விண்வெளிப் பயணங்களுக்குப் பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின்கள்தான் இனிப் பயன்படுத்தப்படும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

    Rocket Engines Type Thrust (Pound Force) Specific Impulse (Seconds) Lifetime Fuel Usage
    Saturn V F-1 (1x) (1960 years) Chemical 1,700,000 298 minutes
    Space Shuttle Main Engine (1x) (1980 years) Chemical 500,000 440 minutes
    NSTAR Ion Engine   (1) Electric 0.02 3300 years
    NEXT  Ion Engine     (2) Electric 0.07 4300 years
    VASIMR® VX-200(New Plasma Rocket)(2005) Electric 1 5000 >years

    ஆயினும் முதலில் பூமியை விட்டுப் பளுக் கப்பல் கிளம்ப பழைய இரசாயன ராக்கெட்டுகள்தான் தேவைப்படும்.  அயான் ராக்கெட் எஞ்சின்களுக்கு ஆரம்பத்தில் புவியீர்ப்பை எதிர்த்து விண்கப்பலைத் தூக்கிச் செல்ல போதிய உந்தாற்றல் இருப்பதில்லை.  கனமான சாதனங்களை, விண்வெளிக் கப்பலை எடுத்துச் செல்லத் தேவையான பேரளவு உந்தாற்றலை இரசாயன ராக்கெட்டுகள் முதல் ஒரு சில நிமிடங்கள் தருவதற்குத் தக்க தகுதி பெற்றவை.  சிறிது நேரம் ராக்கெட்டுக்கு விரைவாக்கம் மிகுதியாக அளிக்க இரசாயன எரிசக்தியே அயான் ராக்கெட்டை ஆற்றலை விடத் தகுதி பெற்றது.  அதற்கு ஏராளமான திரவ எரிசக்தி தேவைப்படுகிறது.  சுற்றுப் பாதையில் ஏவிய விண்கப்பலை நுணுக்கமாகத் திசை திருப்பவும், சீராக செலுத்தவும், நீண்ட காலப் பயணத்துக்கு உந்து சக்தி அளிக்கவும் அயான் எஞ்சின்கள் உபயோகமாகின்றன.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 10

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 10 – இனியவை கூறல்

    குறள் 91:

    இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

    ஒருத்தங்க வாய்லேந்து வருத சொல்லு நேசத்தோடயும் வஞ்சகமில்லாததாவும், உண்மையாவும் இருந்துச்சுன்னா அதத் தான் இன்சொல் னு சொல்லுதோம்.

    குறள் 92:

    அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்

    சிரிச்ச மொகத்தோட இனிய சொல் பேசுதது மனசு குளிந்து மத்தவங்களுக்கு  ஒரு பொருள கொடுக்குதத விட ஒசந்தது.

    குறள் 93:

    முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
    இன்சொ லினதே அறம்

    சிரிச்ச மொகத்தோட பாத்து மனசார இனிமையா பேசுததே அறம் னு சொல்லுதோம்.

    குறள் 94:

    துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
    இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

    இனிய சொல்ல பேசி நயமா பழகுதவங்களுக்கு துன்பம் ங்குத வறும அண்டாது.

    குறள் 95:

    பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற

    தன்னையவிட குறச்சலான தகுதி உள்ளவங்ககிட்டயும் அடக்க ஒடுக்கமா இனிமையா பேசுதது தான் ஒருத்தனுக்கு நக நட்டு மாதிரி. மத்தது இல்ல.

    குறள் 96:

    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்

    பொறத்தியாருக்கு நல்லது செய்யுத இனிய சொல்ல மனசார சொன்னாம்னா அவனுக்குள்ளாரயும் நாட்டிலயும் தர்மம் வளந்து நிக்கும்.. பாவம் கொறைஞ்சு போவும்.

    குறள் 97:

    நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல்

    நல்ல பயனத் தருத நல்ல பண்புலேந்து நீங்காத சொல்ல சொல்லுதவனுக்கு அது மகிழ்ச்சியகொடுத்து நல்லது செய்யும்.

    குறள் 98:

    சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பம் தரும்

    பொறத்தியாருக்கு துன்பம் கொடுக்குததுங்குத கெட்ட கொணம் இல்லாத நல்ல இனிய சொல்லு அவன் வாழுத காலத்துலயும் , செத்த பெறகும் அவனுக்கு புகழ கொடுக்கும்.

    குறள் 99:

    இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது

    இனிய சொல்லு மகிழ்ச்சிய கொடுக்கும்னு தெரிஞ்சிக்கிட்ட ஒருத்தன் மத்தவங்க மனசு நோவ கடுமையா பேசுதது எத எதிர்பாத்து?

    குறள் 100:

    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

    இனியமையா பேசுததுக்கு சொல் இருக்கும் போது  அத விட்டுபோட்டு கடுமையா பேசுதது பழத்த ஒதுக்கி வச்சி காய பறிச்சு திங்குததுக்கு சமானம்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • பிரதி பிம்பங்களின் நேரம்

    மூலம்சி.வி.பாலகிருஷ்ணன்

    மலையாளத்திலிருந்து தமிழில்முனைவர் நா.தீபா சரவணன்

     

    ஏழு வயதான ரெஷ்மி படுக்கையறைக்குப் பரபரப்புடன் கடந்து சென்றாள்.

    “மா…….ம் வாட் ஈஸ் கோயிங் ஆன்?”  அவள் கேட்டாள்.

                    அகிலா படுக்கை மீது திறந்து வைக்கப்பட்டிருக்கும் சூட் கேஸில் சீலைகளையும், உள்ளாடைகளையும், வேறு சில துணிகளையும் அலங்கோலமாக எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள். சில துணிகள் பீரோவிற்கு முன்பாகச் சிதறிக் கிடந்தன.

                     “மா……..ம் வாட் ஈஸ் கோயிங் ஆன்? வை டோன்யு ஸ்பீக்”ரெஷ்மி மறுபடியும் கேட்டாள்.

                    அகிலா ஒரு விளக்கத்திற்கும் தயாரில்லை. பீரோவிலிருந்து ரெஷ்மியின் சில ஆடைகளையும் எடுத்துப் பெட்டியில் வைத்தாள். பிறகு ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பிளாஸ்டிக் பெட்டியும்.

                    ரெஷ்மியின் பரபரப்பு அதிகரித்தது. தனது கேள்விக்குப் பதில் கிடைக்காததால் அவள் அம்மாவை முரைத்துப் பார்த்துக் கொண்டு அறையின் நடுவில் நின்றாள்.

                    அகிலா சூட்கேஸை மூடினாள். ரெஷ்மி அப்போதுதான் அம்மாவின் கண்களைக் கவனித்தாள். அவை கலங்கியிருந்ததன . முகபாவம் கோபமும் வீராப்பும் கலந்திருந்தது. வேடமோ முற்றிலும் அநாகரிகமாக அழகுபடுத்தப் படாமல் வலது கையில் சூட்கேஸைப் பிடித்துக் கொண்டு இடதுகையை ரெஷ்மிக்கு நேராக நீட்டினாள்.

                    “கமோ………..ன்”

                    இருவரும் வெளியிலிறங்கி நடந்தனர். வரவேற்பறையில் டெலிவிஷனுக்கு நேர்முகமாக சிவந்த சோஃபாவில் உட்கார்ந்திருந்த ராமமூர்த்தி ஸ்டார் மூவிஸில் ‘திவன் ஆம்டு போக்ஸர்’படத்தை ரசித்துக் கொண்டிருந்தார். துணைக்கு வோட்காவும் சிகரெட்டும். அவரின் முன்னால் வந்ததும் அகிலாவின் முகபாவம் மேலும் கர்வமானது. ரெஷ்மியைப் பிடித்த பிடியும் முறுகியது.

                    ராமமூர்த்தி டம்ளரைக் கீழே வைத்து எழுந்தார்.

                    “நில்லு……..!” அவர் கூறினார்.

                    அகிலா அதைக் கேட்காமலேயே கதவை நோக்கி நடந்தாள். கதவு திறந்து கிடந்திருந்தது. அகிலாவும் ரெஷ்மியும் வெளியில் இறங்கினார்கள். ரெஷ்மி திரும்பிப் பார்த்தாள். ஒருநிமிடம் அகிலா சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டுக் கதவை இழுத்துச் சாத்தினாள். ராமமூர்த்தியின் பார்வையில் சாத்திய கதவு மட்டும்தான் தெரிந்தது. அவர் சிந்தை கலங்கி நின்றார்.

                    டெலிவிஷன்ஸ்க்ரினில் ’திவன் ஆம்டு பாக்ஸர்’ தொடர்ந்து கொண்டிருந்தது. ராமமூர்த்தி மறுபடியும் பார்க்கத் தொடங்கினார். பாதி தீர்ந்த டம்ளரை அவர் கையிலெடுத்தார். அதிலிருந்த மீதி வோட்காவைக் குடித்துவிட்டுக் கனநேரத்திற்கு அசையாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு எழுந்து டெலிபோனுக்கு அருகில் சென்றார். சில எண்களை டயல் செய்தார்.

                    “ரேகா…….. அவ மகளயும் கூப்பிட்டு எறங்கி போயிட்டா. இனிமேல் நமக்கு இந்த பெட்ரூமையே உபயோகிக்கலாம். இப்போ ஃப்ரிதானே. உடனே ஒரு டாக்சி பிடிச்சு இங்கவா. எத்தன நிமிஷத்துக்குள்ள?. பிஃப்டீன்? ஓ.கே”

                    அவர் ரிசீவரை க்ராடலில் திரும்ப வைத்துவிட்டு முகம் முழுவதும் விசித்திரப் பொலிவுடன் படுக்கையறைக்கு நடந்தார்.

                    அகிலா மகளுடன் மெயின் ரோட்டில் டாக்ஸியை எதிர்பார்த்து நின்றாள். பாதை வழியாக பல வண்டிகளும் சத்தமிட்டுக் கொண்டு சென்றன.

                    படுக்கை விரிப்பையும் தலையணைக் கவரையும் மாற்றிவிட்டு ஒரு வேலையை அழகாக முடித்ததன் திருப்தியுடன் வெளியிலிறங்கினார் ராமமூர்த்தி. அப்போதுதான் அவர் ஜன்னல் வழியாக மனைவியையும் மகளையும் பார்த்தார். அவர் ஜன்னலுக்கருகில் மறைந்து நின்று கொண்டு அவர்களைப் பார்த்தார். அகிலா ஒரு டாக்சிக்குக் கை காண்பித்த போதும் பயணிகள் இருப்பதாலோ என்னவோ அவ்வண்டி நிற்காமல் போனது. ரெஷ்மி அம்மாவின் கையைப் பிடித்தாள். அம்மாவின் மனதை மாற்ற முயற்சிக்கும் விதமாக மீண்டும் மீண்டும் ஏதோ கூறுவதைப் பார்த்த ராமமூர்த்தியின் முகம் மாறியது.

                    “ப்ளீஸ் மம்மி நமக்குத் திரும்பிப் போயிடலாம்”என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

                    கதவு திறக்கப் படுகின்ற சத்தம் கேட்டு ராமமூர்த்தி முகம் உயர்த்தவில்லை. ரெஷ்மி ஓடி வந்து சிரித்துக் கொண்டே கன்னங்களில் முத்தமிட்ட போதுதான் மிகவும் சந்தோஷமடைவதாக பாவிக்க அவர் முயற்சி செய்தார். அகிலா அவரின் முகத்தைப் பார்க்காமல் சூட்கேஸை எடுத்துக்கொண்டு நேராக படுக்கையறைக்குச் சென்றாள்.

                    வெளிப்பாதையில் ஒருடாக்சி வந்து நின்றது. ரேகா வெளியலிறங்கினாள். ரிமோட் கன்ட்ரோலின் பட்டனில் ராமமூர்த்தியின் விரல் அமர்ந்தது. டெலிவிஷன்ஸ்க்ரின் நொடியிடையில் சூன்யமானது………….

    _____________________________________________________________________

    முனைவர் நா.தீபாசரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
    கோவை

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 9

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 9 – விருந்தோம்பல்

    குறள் 81:

    இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு

    குடும்ப வாழ்க்கைல பொருளச் சேத்து காப்பாத்தி  குடித்தனம் நடத்துதது எல்லாம் வந்த விருந்தாளிய நல்ல படியா கவனிச்சி ஒதவியா இருக்கதுக்காகத்தான்.

    குறள் 82:

    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

    விருந்தாளி வீட்டுக்கு வெளிய இருக்கும்போது உள்ள ஒக்காந்து தான் மட்டும் தனியா சாப்பிடுதது சாவாம இருக்கதுக்காக சாப்பிடுத அமிழ்தம் னாலும் அது நல்ல பழக்கமில்ல.

    குறள் 83:

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று

    தெனைக்கும் வர விருந்தாளிய நல்ல கவனிச்சு பேணுததனால ஒருத்தன் வறுமைப்பட்டு வாழ்க்கைல அழிஞ்சி போயிடமாட்டான்.

    குறள் 84:

    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந் தோம்புவான் இல்

    வர விருந்தாளிய சிரிச்ச மொகத்தோட வரவேத்து பேணுதவனோட வீட்ல சொத்து சொகத்த கொடுக்கும் மகாலச்சுமி வந்து குடியிருப்பா.

    குறள் 85:

    வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்

    விருந்தாளிக்கு மொதல்ல சாப்பாடுபோட்டு பொறவு தான் சாப்பிடுதவனோட நெலத்துல விதைய விதைக்கவும் வேணுமா?

    குறள் 86:

    செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு

    வர விருந்தாளிய நல்ல கவனிச்சி அவுங்க போன பெறகு அடுத்த விருந்தாளி எப்பம் வருவாரு னு காத்துகெடக்குத மனுசன வானத்துல இருக்க தேவர்ங்க எல்லாம் தங்களோட விருந்தாளியா நெனச்சி கவனிப்பாங்க.

    குறள் 87:

    இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன்

    விருந்தாளியப் பேணுததும் யாகம் மாதிரிதான். அதனால கெடைக்க நன்மை இவ்வளவுனு அளந்து சொல்ல ஏலாது. அது வர விருந்தாளியோட தகுதிய பொறுத்து மாறிக்கிடும்.

    குறள் 88:

    பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார்

    விருந்தாளிய கவனிக்குத யாகத்த செய்யாதவங்க தங்ககிட்ட இருக்க செல்வத்த சிரமப்பட்டு காத்து அத இழக்குத நிலை வருதபோது எந்த தொணையும் இல்லாம ஆயிட்டோமே னு வெசனப்படுவாங்க.

    குறள் 89:

    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு

    விருந்தாளிய உபசரிச்சி பேணாதவங்க முட்டாளுங்க. அவங்க கிட்ட எவ்ளோ பணம் இருந்தாலும் தரித்திரம் பிடிச்சவங்களாவே நெனைக்கப் படுவாங்க.

    குறள் 90:

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து

    மோந்து பாத்த ஒடனே வாடுத பூ அனிச்சம். அதப் போல வாங்க னு கூப்பிடுத சமயம்  லேசா மூஞ்சிய காட்டினாலே விருந்தாளிங்க வாடிப் போயிருவாங்க.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

     

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 12

    -சி. ஜெயபாரதன், கனடா

     

    என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

    [Miss me, But let me go]

     ++++++++++++++

     

    [39] அணையாத கனல்

    ஏற்றி வைத்த உன்

    மெழுகுவர்த்தி ஒருநாள்

    காற்றடிப்பில்

    பட்டென அணைந்து விடும் !

    எரியும் விளக்குகள்

    எல்லாமே

    ஒருநாள் அணைந்து போகும் !

    உன் உடம்பும்

    ஒரு மெழுகு வர்த்தியே !

    அதிலே ஆட்சி புரியும்

    ஆத்ம உயிரும் ஓர்

    தீக்கனல் சக்தியே !

    ஒருநாள்

    அணைந்து போகும் தீக்கனல் !

    என் வீட்டில் வாழ

    ஏற்றி வைத்த

    ஓர் கலங்கரை விளக்கு

    என் துணைவி !

    அவள் நடமாடும் தீபம் !

    குப்பெனப் புயலில் அணைந்து

    எங்கும் இருள் மயம் !

    துணைவிக்கு

    அன்று நான் இட்ட தீ

    அணைந்தது,

    ஆனால் அதனால்

    எனது நெஞ்சில் பற்றிய தீ

    இதுவரை

    அணைய வில்லை ! அது

    அணையுமா ? அணையுமா ? என்றும்

    அணையுமா ?

     

    +++++++++++++++

     

     [40] அறுந்த தொப்புள் கொடி

    பிறந்த சிசுவுக்கு இருப்பது

    ஒன்றில்லை ,

    தொப்புள் கொடிகள்

    இரண்டு !

    பெற்ற தாயுடன்

    இணைந்தது ஒன்று !

    தெரிவது

    மனித கண்ணுக்கு !

    சேயிக்குத் தெரியாமல்

    இயங்கி வருவது

    இரண்டாவது தொப்புள் கொடி !

    படைப்பாளியுடன்

    பிணைந்தது !

    ஆத்மப் பிணைப்பு அது !

    உயிர்ப் பிணைப்பு !

    தெரியும் தொப்புள் கொடி

    அறுத்தால்

    சேய் தானாய் இயங்கும் !

    தெரியாத

    தொப்புள் கொடி அறுந்தால்

    செத்துவிடும் சேய் !

    துணைவிக்கு அறுந்து போனது

    பிணைப்புக் கொடி !

     

    +++++++++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.

    சி. ஜெயபாரதன்

    +++++++++++++++

    Share