படக்கவிதைப் போட்டி – 200
அன்பிற்கினிய நண்பர்களே!
உங்கள் நல்லாதரவுடன் படக்கவிதைப் போட்டி, 200ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இதில் தொடர்ந்து பங்கேற்கும் படைப்பாளர்களுக்கும் நிழற்படக் கலைஞர்களுக்கும் படங்களைத் தேர்ந்தெடுக்கும் சாந்தி மாரியப்பன், ராமலட்சுமி, சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் மேகலா இராமமூர்த்தி, வெளியிட்டு வரும் ஆசிரியர் பவளசங்கரி உள்ளிட்ட அனைவருக்கும் வல்லமை சார்பில் நன்றிகள், பாராட்டுகள், வாழ்த்துகள்.
இந்த வாரத்திற்கு சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்குகிறோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
நன்றியால் நல்லுணவு…
தயக்கம் வேண்டாம் தம்பிகளே
தாயவள் கொணர்வாள் நமக்குணவு,
பயமெதும் வேண்டாம் பிள்ளைகளே
படுத்தி டுங்கள் தரையினிலே,
வயிறு பசித்தால் மனிதர்தான்
வழிமுறை யெல்லாம் மறந்திடுவார்,
உயிராய் மதிக்கும் நன்றிகாட்டி
உணவுடன் வருவாள் நம்தாயே…!
செண்பக ஜெகதீசன்…
எழுதுங்கள் புதிய பாடல்
_______________________
கற்றுக்கொள்ளுங்கள் எங்களிடம்
கட்டியணைத்து உறவாட
அண்ணன் தம்பி ஆனாலும்
அடித்துக் கொள்ளாமல்
பார்த்த உணவைக் கூடிப்
பகிர்ந்து உண்ணுவோம்
மாடி வீட்டில் வாழ்ந்தாலும்
மண் தெருவில் ஓடினாலும்
ஏளனம் செய்யோம் ஒருபோதும்
எதிர்ப் படும் எம் நண்பர்களை
இருந்தால் குதியாட்டம்
இல்லாவிட்டால் குடியாட்டம்
வெந்ததைத் தின்று
விதிவந்தால் மாளும் கூட்டத்தில்
அத்தனைக்கும் ஆசை
அளவுகடந்த பொறாமை
அடுத்தவனை அழிக்க
அனுதினமும் ஒருதிட்டம்
குற்றவாளிகளின் கூட்டம்
குறைவில்லாமல் பெருகுவதால்
காவல் துறைக்கு எப்போதும்
கடமை செய்ய உதவுகிறோம்
வெடிகுண்டைத் தேட
வேகமாய் அழைப்பார் எம்மை
நாலடியார் காலத்தில்
நல்ல நண்பனுக்கு உவமையாய்
எம்மைச் சொன்ன நீர் இன்று
எல்லாவற்றுக்கும் யாம் தான்
என எழுதுங்கள் புதிய பாடல்
உங்களோடு உங்களாய்
உங்கள் வீட்டில் நாங்கள்
சரிசமமாய்ப் பழகி
சங்கடங்கள் தீர்க்கின்றோம்
பிறக்காத பிள்ளைகளாய்
பேசாத தோழனாய்
உறவுக்காரனைப் போல்
உரிமையாய் வாழ்கின்றோம்.
தாயாரை காணவில்லை
—————————————-
தாயாரை காணவில்லை
தந்தையார் யார் என்று தெரியவில்லை
வாயாரச் சொல்லியழ வழியுமில்லை
நாயாக பிறந்துவிட்டோம் நடுத்தெருவில் கிடக்கின்றோம்
ஓயாமல் தேடி அலைந்து திரிந்து விட்டோம்
ஒரு வழியும் பிறக்கவில்லை
ஒருவரையும் காணத்தான் முடியவில்லை
ஓரமாய் படுத்து விட்டோம்
பசியடங்கா எங்கள் பாழ்(ல்) வயிறுப்
பசியாற்ற எங்காவது கால் வயிற்றுக் கஞ்சி தேடி
திசை தெறியமல் திரியும் எம் அன்னை
திரும்பி வருவாளோ மாட்டாளோ யார் அறிவார்?
தறிகெட்டு ஒடித்திரியும் வண்டியின் சக்கரத்திலோ
குறிவைத்து சுடுகின்ற குறவன் துப்பாக்கி குண்டிலோ
பொறிவைத்து பிடிக்கும் ஊர் சேவகன் கயிற்றிலோ
வெறி விலங்கு கடியிலோ சிக்காம சீக்கிரம் வந்திட வேணு சாமி
மண்ணில் மனிடராய் பிறந்திருந்தால்
மடியிலிட்டு தாலாட்ட உற்றார் உறவினர்கள் உண்டு
மண்தரையில் கிடக்கின்ற எங்களை
மனமிறங்கி மனைக்கு அழைக்க யாருண்டு
நாயாக நாங்கள் இருந்தாலும் நட்புடனே நல்லோர் சொன்ன
நல்வழியில் தான் சென்றிடுவோம் – நாளும் வாலாட்டி
நன்றியுடன் தான் காலடியில் காத்துக்கிடப்போம்
நல்லோரே நாங்களும் வாழ நல்வழிகாட்டி நலங்காப்பீர்
யாழ். பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
9789739679
basgee@gmail.com
noyyal.blogspot.in
செம்பவள கண்ணுகளா ! செல்லமணி குட்டிகளா !
செம்மண் சாலையிலே சேர்த்தணைத்து விளையாடும் நீங்களெல்லாம்
செம்பருதி சுடர் கதிரின் புது ஒளியோ
செழுமை மிகு நிலமகளின் உயிர்துடிப்போ
மந்தை மண்ணினிலே கிடக்கும் நமக்கு
தந்தை தாய் அருகில் இல்லை அதனாலே
சந்தையில் விலை கூவி விற்றிடுவார் என
சிந்தையிலே என்ன எண்ணில சிந்தனையோ
ஒருதாய்பிள்ளைகள் நாம் எல்லோரும்
ஒற்றுமையின் பலத்தாலே கட்டுண்டோம்
ஒரு சிறு பொழுது விலகி பிரிந்தாலும் அஃது
ஒரு பெரும் துயர் அதை தாங்கமாட்டோம்
எல்லோருக்கும் எங்களை பிடிக்கும்
என்றாலும் சில கற்கள் எம்மை வந்து அடிக்கும்
எங்களுக்கும் வாழ்வு உண்டு நாளை
எல்லோருக்கும் அது ஓரு நல்வேளை
தூக்கிப்போடு துன்பத்தை துள்ளி ஆடு இன்பத்தில்
இரவும் பகலும் இணைந்தே ஒரு நாளாகும்
இன்பம் துன்பம் சேர்ந்ததே வாழ்வாகும்
இதை உணர்ந்தால் எல்லாம் சிறப்பாகும்
தரையில் கிடக்கின்ற எங்களுக்கும்
தன்னம்பிக்கை கொஞ்சம் உண்டு
தலைநிமிர்வோம் தடை தாண்டி
தலைமையேறெப்போம் தகுதிகளோடே
யாழ்.நிலா. பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
9789739679
basgee@gmail.com
noyyal.blogspot.in
நாய் தன் குட்டிகளிடம்..
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
-ஆ. செந்தில் குமார்.
ஒருநாள் நன்றியின் மறுபெயர் நாயென்கும்.. அதுவே
மறுநாள் நன்றி கெட்ட நாயேயென்கும்..
சிறிதளவு உணவளித்து காவலுக்கு நில்லென்கும்..!!
நா பிறழ்ந்துப் பேசும்.. இந்த
நா அடக்கம் அற்ற
நா உள்ள மாந்தக் கூட்டம்.. (ஒருநாள்)
வாலாட்டும் குணத்தாலே.. நமைத்
தாலாட்டும் இவ்வுலகு என்
றெல்லாம் நீவிர் எண்ணிவிடாதீர்.. (ஒருநாள்)
பொல்லாத உலகிது.. பல கற்றும்
கல்லாத நிலையில் உழன்று
அல்லாதன செயும் மாந்தக் கூட்டம்.. (ஒருநாள்)
இறைபடைப்பின் உயிர்களெல்லாம்.. இத்
தரையில் தனித்துவாழ நமக்குமட்டும்
நிறைவிலா அடிமை வாழ்க்கை.. (ஒருநாள்)
பசித்திருக்கப் பழகிடுவீர்.. உமது
கசிந்துருகும் மொழிக்கெல்லாம்
அசையாத இதயங்கள் இங்கு ஏராளம்.. (ஒருநாள்)