படக்கவிதைப் போட்டி 199-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. முரளிதரன் வித்யாதரன் தன் புகைப்படக் கருவிக்குள் அடைத்து வந்திருக்கும் ஆரவாரிக்கும் கடலைப் படக்கவிதைப் போட்டி 199க்கு, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து, தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.
அடடா! வெண்ணுரையாய்ப் பொங்கும் கடலலையின் அழகைக் கண்விரியக் காண்கிறோம் நாம்! இயற்கையின் பேரெழில் செயற்கையாய்ப் புனைய இயலாதது!
இக்கவின்மிகு காட்சியைப் பார்த்தால் மட்டும் போதுமா? சொல்லோவியங்களாகத் தீட்டினால் அல்லவோ காட்சியின் மாட்சி கூடும். அப்பணியைச் செய்ய கவிஞர்கள் ஐவர் காதலுடன் காத்திருக்கின்றார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
*****
”உவரிக்குக் கோபம் வந்தால் உலகையே வீழ்த்திடும்; ஆதலால் அலைகடலே! உன் எழிற்கோலத்தை மாற்றாதே! அவல அலங்கோலங்களை நிகழ்த்தாதே!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
தொடரட்டும் அழகு…
கடலில் அலைகள் ஓய்வதில்லை
காணும் அழகும் குறைவதில்லை,
உடையாய் உலகை மறைத்திருக்கும்
உவரி தனக்கும் வரும்கோபம்,
அடங்கி யிருக்கும் அலைக்கரத்தால்
அடித்தே நொறுக்கிடும் அகிலத்தையே,
தொடர்க கடலே உனதழகை
தொடர வேண்டாம் அவலங்களே…!
*****
சமூக ஊடகங்களில் சறுக்கிவிழுகின்ற தலைமுறை, சிறுத்துப்போன உள்ளங்கள், சமுதாயத்தைச் சீரழிக்கும் சிற்றின்ப விளம்பரங்கள் இவைகண்டு சீற்றம் கொண்டு ஆர்ப்பரிப்பது மனித மனங்கள் மட்டுமல்ல; மா கடலுந்தான்!” என்பது இப்படம் குறித்த திரு. ஆ. செந்தில் குமாரின் பார்வை.
கொந்தளிக்கும் அலைகடல்..
பரப்புரை செயவேண்டியதைப்
பெட்டிக்குள் அடைத்தும்..
பெட்டிச் செய்திகளைப்
பெரிது படுத்தியும்..
பதிவிடும் ஊடகங்கள்..!!
ஆயிரம் நல்லவை
அவனியில் நிறைந்திருந்தும்..
அந்தவொரு அவசியமற்றதைப்பற்றி
அதிகமாய் அங்கலாய்க்கும்..
அறிவில் குறைபாடுள்ள சமுதாயம்..!!
சமூக ஊடகங்களில்
சறுக்கிவிழுகின்ற தலைமுறை..
சிறுத்துப்போன உள்ளங்கள்..
சமுதாயத்தைச் சீரழிக்கும்
சிற்றின்ப விளம்பரங்கள்..!!
பொருள் தேடலில்
பொலிவிழந்த வாழ்க்கை..
பணத்தைக் கொண்டாடும் உலகில்
பதவிச்சண்டைகள் பெருத்து..
பண்பு பரிதவிக்கும் அவலம்..!!
இவற்றையெல்லாம் நினைந்து..
இன்னலுற்றது சிலரின்
இதயங்கள் மட்டுமல்ல..
சிலநேரங்களில் அலைகடலும் ஆழிப்பேரலையாய்..
சீற்றங்கொண்டு கொந்தளிக்கிறது..!!
*****
வெண்ணிலவுப் பெண்ணாளைக் கண்டு காதல் கொண்ட கடலரசனின் விந்தைச் செயல்களை விளம்பியிருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.
கடலுக்கு வந்த காதல்
அமைதியாய்ப் பகலெல்லாம் ஓயாமல் அலைபாய
அந்தி சாய்ந்ததும் நீ பொங்கி எழுந்தது ஏனோ
அழகான வெண்ணிலா வானில் உலா வர
ஆனந்தத்தில் பொங்கி எழுந்தாயோ?
விண்மீன்கள் சூழ வந்த வெண்ணிலவைக் காண
கரையில் வந்து நின்ற மானுடர்களின்
கால்களைக் கழுவி அழைத்தாயோ?
தொடர்ந்து வரும் அலையாய்க்
கரையில் விழுந்து சப்தம் எழுப்பி
கவனத்தை ஈர்க்க முயன்றாயோ?
வந்து நின்ற வெண்ணிலவைக் கண்டு
நிலை கொள்ள இயலாமல்
நித்தம் அலைகளாய் இயங்கினாயோ?
காதல் வந்து நெஞ்சுக்குள் நிலவை வைத்திட
ஆழ்கடல் அமைதியாய் மாறியதோ?
கலங்காது இருந்த கரையை ஓயாமல் அலையடித்து
வன்முறை செய்வது ஏனோ?
இரவென்று உறங்க முயன்ற கரையை அலையடித்து எழுப்பி
உன் காதல் கதையைச் சொல்ல முயன்றாயோ?
விடியல் வந்து இரவை விரட்டிட
விலகிச் சென்ற வெண்ணிலவை கண்டு
நெஞ்சில் புயல் ஒன்று உருவானதோ?
அமைதியாய்ப் பாயும் அலையும்
பொங்கிச் சீற்றத்துடன் பாய்ந்து
தன் இயலாமையை வெளிப்படுத்தியதோ?
இரவெல்லாம் உறங்காமல் வெண்ணிலவை எண்ணி ஓடிட
உனக்கும் மன அழுத்தம் வந்ததோ
சற்றே ஓய்வெடு அமைதியாய் அலை வீசிடு!
சூரியன் மேற்கில் சென்று ஒளியும் வரை
மீண்டும் உன் அருகில் வந்து உதித்திடுவாள்
உன் ஆசை வெண்ணிலவு!
*****
”இங்கே காதலில் ஈடுபட்டிருப்பது கரையும் நீரும் மட்டுமல்ல; காற்றும் கூடத்தான்” என்றொரு முக்கோணக் காதல் கதையைச் சொல்லிச் செல்கின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன்.
ஓயப்போவதில்லை என்று ஆா்ப்பரித்தாலும்
விடப்போவதில்லை என்று மோதினாலும்
பார்ப்பவர்க்குத்தான் வியப்பு
காற்றுக்கில்லை!
காதலிப்பது கரையும் நீரூம் மட்டுமல்ல
காற்றும்தான்!
உண்மைபோல
காற்றும் உறுதியானது.
*****
நுரைபொங்கும் கடற்காட்சியைத் தத்தம் கோணத்தில் கவனித்துக் கவி முத்துக்களை அள்ளிச் சொரிந்திருக்கும் கவிஞர்களுக்கு நம் பாராட்டுக்களைப் பகிர்வோம்!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…
காப்பாயே…கடல் தாயே!
துள்ளி வரும் வெள்ளலையே தூங்காக்
கடல்தாயின் வெண்புனல் குருதி நீதானோ?
விடிவெள்ளிதனை விளக்காக்கி மடிவலையில்
மீன்பிடிக்கும் மீனவர்க்குத் துணை நீயாமோ?
திரைகடலின் உயிர்த்துடிப்பே கரை என்ற
சிறைக்குள்ளே உன்னைக் கட்டி வைத்தது யாரோ?
விரைந்து வரும் உன் வேகம்
கரையவளின் கைஅணைப்பில் அடங்குவதென்ன மாயம்?
எங்கும் திறந்தே கிடக்கும் நெடுங்கரைக்குப்
பொங்கிவரும் வெண்ணுரையால் போர்த்த,
புத்தம் புதுப் போர்வை நித்தமும் நெய்யும்
ஓய்விலா இயற்கை நெசவாளன் நீ!
உப்புக் காற்றோடு ஊடல் கொண்டால் நீ
தப்புத் தப்பான உயரத்தில் தாவி வருகிறாய்!
இப்புவியின் நிலப்பரப்பை இடைவிடாது தாலாட்டும் நீ
அவ்வப்போது ஆழிப் பேரலையாகி எங்களை அழவைக்கின்றாய்!
எம்மாந்தர் மனம்போலே ஒரு நிலை இல்லாமல்
எழும் வீழும் உன் எழில்கண்டு களிப்புறும் வேளையிலே
எச்சரிக்கை ஏதும் இல்லாமல் எமை அள்ளிச் செல்லும்
எமனாகப் பொங்கிவந்து அழிப்பது ஏனோ?
வெப்பம் தின்று குளிரூட்டும் நீ எங்கள்
தப்புத் தவற்றை பொறுத்தருளக் கூடாதோ?
இப்புவியின் சூழல்காக்க இன்னும் ஓர்வாய்ப்பு
எப்படியாயினும் தந்திட வேண்டும் கடல் தாயே… காப்பாயே!
”துள்ளிவரும் வெள்ளலையே! நெடுங்கரைக்குப் போர்த்துதற்கு வெண்ணுரையால் போர்வை செய்யும் நீ ஒரு நெசவாளனோ? நிலையிலா மாந்தர் மனம்போல் எழும் வீழும் நீ, எங்கள் தவறுகளைப் பொறுத்தருளக் கூடாதோ?” என்று மாந்தர் தவற்றை மன்னிக்கக் கோரும் கவிதையைக் கடலன்னைக்குக் காணிக்கையாக்கியிருக்கும் திரு. யாழ் பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக தேர்வுசெய்தமைக்கு அனைவருக்கும் என் பணிவான நன்றி-யாழ். பாஸ்கரன்