Blog

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 15

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 15 – பிறனில் விழையாமை

    குறள் 141:

    பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
    தறம்பொருள் கண்டார்க ணில்

    மத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படுத அறியாம இந்த ஒலகத்துல அறத்தையும் பொருளையும் ஆஞ்சு அறிஞ்சவங்ககிட்ட கெடையாது.

    குறள் 142:

    அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
    நின்றாரிற் பேதையா ரில்

    அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்பட்டு அவன் வீட்டு வாசல்ல போயி நிக்குதவன் மத்த எல்லா வழிலயும் பாவம் செஞ்ச கெட்ட மனுசன விட தாழ்த்தியானவன்.

    குறள் 143:

    விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்தொழுகு வார்

    சந்தேகப்படாம நம்பி பழகின மனுசரோட பொஞ்சாதி மேல ஆசப்பட்டு தப்பா நடக்குதவனக்கு  உயிர் இருந்தாலும் செத்த பொணத்துக்கு சமந்தான்.

    குறள் 144:

    எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்

    தினையளவு கூட யோசிக்காம அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படுதவரு எத்தாம் பெரிய மனுசனா இருந்தாலும் அவரோட மரியாத கெட்டுப் போவும்.

    குறள் 145:

    எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி

    இது சுளுவான காரியம்னு நெனைச்சி அடுத்தவன் பொஞ்சாதிக்கிட்ட தப்பா நடக்குதவன் எப்பமும் மறஞ்சு போவாம நெலச்சு நிக்க பாவத்துக்கு ஆளாவான்.

    குறள் 146:

    பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்

    அடுத்தவன் பொஞ்சாதிகிட்ட அத்து மீறி நடக்குதவன விட்டுபோட்டு பகை, பாவம், பயம், பழி ங்குத நாலும் விலகி போவாது.

    குறள் 147:

    அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
    பெண்மை நயவா தவன்

    அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படாதவன தான் அற வழில குடும்பம் நடத்துதவன்னு சொல்லுதோம்.

    குறள் 148:

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
    கறனென்றோ ஆன்ற வொழுக்கு

    மத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படாம இருக்குதது அறம் மட்டுமில்ல. படிச்ச பெருமக்களுக்கு அது நெறஞ்ச ஒழுக்கமும் கூட.

    குறள் 149:

    நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
    பிறற்குரியாள் தோள்தோயா தார்

    சுத்திவர கடல் இருக்குத இந்த ஒலகத்துல எல்லா நல்லதும் யாருக்கு கெடைக்கும்னு நெனைச்சு பாத்தோம்னா அது அடுத்தவருக்கு சொந்தமானவளோட தோள சேராம இருக்குதவருக்குதான்..

    குறள் 150:

    அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
    பெண்மை நயவாமை நன்று

    ஒருத்தன் நல்லது செய்யாம பாவத்தையே செய்யுதவனா இருந்தாக்கூடா அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படாம இருக்குதது நல்லது.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • தமிழாட்டாரே

    – ஏறன் சிவா
    அறிவென நினைத்துக் கொண்டு
            ஆங்கிலப் பள்ளி நூறு
    தெருவெலாம் திறந்து வைத்தோம்!
             தென்மொழியை மறந்தோம்!
    பெருமையாய் அதனை எண்ணிப்
             பேதமைக் கடல் குளித்தோம்!
    சிறையினில் மாட்டிக் கொண்டோம்!
              செந்தமிழ் நாடிழந்தோம்!
    அருந்தமிழ் வேண்டா மென்று
              அயலாரின் சூழ்ச்சி தன்னில்
    அறிவினை இழந்து விட்டோம்!
               ஆண்மையைத் தொலைத்து விட்டோம்!
    திறமைகள் மறந்து விட்டோம்!
             தீந்தமிழ்ச் சுவடி யை..நாம்
    இரையெனக் கொடுத்து விட்டோம்
             இழிநிலை அடைந்து விட்டோம்!
    அருந்தமிழ் மீட்சி ஒன்றே
                அழிந்ததை மீட்டெடுக்கும்!
    அறையினில் தூங்கு கின்ற
               அரிச்சுவடிகளை யெல்லாம்;
    முறையாகத் தொகுத்து மக்கள்
               மூளையில் புகுத்தி விட்டால்;
    உறக்கங்கள்  முற்றாய்த்  தீரும்
                உணர்வெழும் தமிழ்நாட் டாரே!
     26/02/2019
    Share
  • சேக்கிழார் பா நயம் – 26

    -திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி .

    ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
    காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன “முன்னே
    மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை
    மாட்சியில் காட்ட வைத்தேன்” என்றனன் மாயை வல்லான்.

    அடிமை ஓலை உண்டு என்று முதிய அந்தணர் கூறக் கேட்ட  சுந்தரர்  ‘’ஆளோலை உண்டு!’’  என்று கூறிய  இவ்வந்தணர் மொழியின் உண்மையை அறிந்து கொள்ளும் அவாவினராய் அவரைநோக்கி `ஐயா! அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே. அதனைக் காட்டுக! உண்மையை அறிவேன்` என்றார்.

    `நீ அவ்வோலையைக் காணுதற்குத் தகுதி உடையவனா? அதனை இவ் அவையோர் முன்னிலையில் காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் எனக்கு நீ அடிமைத் தொழில் செய்தற்கே உரியவன்` என்றார் அந்தணர். அம்மொழிகேட்டு வெகுண்ட நம்பிகள் விரைந்தெழுந்து அவ்வேதியர் கையிலுள்ள ஓலையைப் பறிக்கச் சென்றார். அந்நிலையில் அம்முதியவர் விரைந்து ஓடினார். அவரைத் தொடர்ந்து நம்பியாரூரரும் ஓடினார். மாலும் அயனும் தொடர ஒண்ணாத அவரைவலிந்து பின்தொடர்ந்த ஆரூரர் அம் முதியவர் கையிலுள்ள ஓலையைப்பறித்து `அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் என்ன முறை` என்று சொல்லிக் கொண்டு அவ்வோலையைக் கிழித்து எறிந்தார்.

    இந்த  இடத்தில் மையல் மானுடமாய்  சுந்தரர்  தவறு செய்யத்   தொடங்கி  விட்டார்.  ஓலையைப் பறிகொடுத்த முதியவர் `இது முறையோ முறையோ` வெனக் கூவி அழுதரற்றினார். அதனைக்கேட்ட அங்குள்ளவர்கள் அவ்விருவரையும் விலக்கினர். முதியவரை நோக்கி `உலகில் இதுவரை இல்லாத இவ்வழக்கைக் கொண்டுவந்து நிற்கும் முதியவரே! நீர் வாழும் ஊர் எது` என்று வினவினர். அதுகேட்ட முனிவர் `நான் வாழும் ஊர் நெடுந்தொலைவிலுள்ள தன்று; மிகவும் அண்மையிலுள்ளதாகிய திருவெண்ணெய் நல்லூரேயாகும். நம்பி யாரூரனாகிய இவன் என்கையிலுள்ள ஓலையை வலியப் பிடுங்கிக் கிழித்தெறிந்துவிட்டான். அதன் மூலமாக அவன் என் அடிமை என்ற உண்மையை உறுதிப்படுத்திவிட்டான்` என்றார். அம் மொழிகேட்ட நம்பியாரூரர் இம் முதியவர் வழக்காடுவதில் பழக்கப்பட்டவர் போலும் என்று தம்முள் எண்ணி அம் முதியவரை நோக்கி `நும்முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராய் இருக்கு மானால் உமது பிழைபட்ட வழக்கை அங்கேயே பேசித் தீர்த்துக்கொள்வோம்` என்றார்.

    முதியவர் `நீ திருவெண்ணெய்நல்லூர்க்கு வந்தாலும் நான்மறை உணர்ந்த அவையத்தார் முன்னிலையில் உன் பாட்டன் எழுதிக்கொடுத்த மூல ஓலையைக் காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்துவேன்` என்று கூறிக் கோலை ஊன்றிக் கொண்டு முன்னே சென்றார். அவரைப் பின்தொடர்ந்து நம்பியாரூரரும் சென்றார். இவ்வழக்கு என்னாகுமோ எனக் கலங்கிய நிலையில் சுற்றத்தாரும் உடன் சென்றனர்.

    திருவெண்ணெய்நல்லூர் அவையில்:

    திருவெண்ணெய் நல்லூரை அடைந்த முதியவர், அந்தணர் நிறைந்த பெரும் சபையின் முன் சென்றார். அவையத்தாரை நோக்கித் `திருநாவலூரனாகிய இவன் என் அடியான். என் அடிமை ஓலையை வலிந்து பிடுங்கிக்கிழித் தெறிந்துவிட்டு உங்கள் முன் வந்துள்ளான். இதுவே என் வழக்காகும்` என்று கூறினார். அது கேட்ட அவையத்தார் `ஐயா! அந்தணர் மற்ற வர்க்கு அடிமையாதல் இவ்வுலகில் இதுவரை இல்லையே` என்றனர். இது பொருந்தாவழக்கு என்றும் தெரிவித்தனர். அம் முதியவர் அவர்களைநோக்கி `இவ்வழக்கு எவ்வாறு பொருத்தமற்றதாகும்? இவன் கிழித்த ஓலை அவன் பாட்டன் எழுதிக்கொடுத்ததாகும்` என்று கூறினார்.

    அதைக்கேட்ட அவையோர் ஆரூரரை நோக்கி `நும் பாட்டனார் எழுதிக்கொடுத்த ஓலையை வலியவாங்கிக் கிழித் தெறிவது உனக்கு வெற்றிதரும் செயலோ? இம்மறையவர், தம் வழக்கைப் பொருத்தமாக எடுத்துக் கூறினார். உம்முடைய கருத்து யாது` என்று கேட்டார்கள்.

    நாவலூரர் அவையோரைப்பார்த்துப் `பெரியோர்களே நான் ஆதிசைவ அந்தணன் என்பதை நீங்கள் அறிவீர்கள் முதியோராகிய இவ் அந்தணர் உலக வழக்குக்கு மாறாக என்னை அடிமை கொண்ட தாகச் சாதிப்பது மனத்தால் உணர்தற்கெட்டாத மாயையாக உள்ளது. இதைக் குறித்துத் தெளிந்து உணர என்னால இயலவில்லை எனக் கூறினார். அதைக்கேட்ட அவையத்தார் அம்மறையவரை நோக்கி `நம்பியாரூரரை அடிமைஎனக் கூறும் இவ்வழக்கிற்கு ஆட்சி, ஆவணம், சாட்சி என்ற மூன்றனுள் ஒன்றைக்கொண்டு உறுதிப் படுத்தல் வேண்டும்` என்று கூறினர்.

     ஆட்சியில் , ஆவணத்தில், அன்றி மற்று அயலார் தங்கள்
    காட்சியில்,  மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன “

    முதியவர் `நாவலூரன் சினம் மிகுதியால் என் கையிலிருந்து பறித்துக்கிழித்த அடிமைச் சீட்டு படியோலையாகும். அதன் மூல ஓலையை அவையத்தார்முன் காட்டுதற்கென்றே போற்றிவைத் துள்ளேன். இவன் முன்போல் கிழித்தெறியாதபடி நீங்கள் பார்த்துக் கொள்வீரேயாயின் அவ்வோலையைக் காட்டுவேன்` என்றார்.

     “முன்னே  மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை
    மாட்சியில் காட்ட வைத்தேன்” என்றனன் மாயை வல்லான்.

    அவையத்தாரும் அதற்கு உறுதியளித்தனர். முதியவர் மூல ஓலை யாகிய ஆவணத்தை அவையோரிடம் கொடுத்தார். கரணத்தான் ஓலையைப் படிக்கத் தொடங்கினான்.

     இந்த அந்தணர்  அவைநிகழ்ச்சிகளில், முதலில் அந்த முதிய  அந்தணர், ‘’நின்ற இசைவால்  யான் முன் உடையதோர்  பெரு வழக்கு!’’ என்கிறார். இதனை இக்காலக் குற்றவியல்  சட்டம், ‘’cause  based on mutual  agreement’’ என்று காட்டும். அடுத்து, சுந்தரர்,’’அந்தணர்மற்றோர்அந்தணருக்கு  அடிமையாதல் இல்லை.’’  என்றார். இது,  ஆட்சி வகையின் , சாதிக் செருக்கு எனப்படும் உலகியலைக்  குறிக்கும். இதனை இக்காலச்  சட்டம், ‘’cause  based  on  common   rights ‘’ என்று ஆவணப்படுத்தும்.அடுத்து  சுந்தரர் அந்தணரைத்  தொடர்ந்து விரட்டிச் சென்று , ஓலையைக் கவர்ந்து , கிழிக்கிறார்! இது செய்த தவறுக்கு மேலும் தவறு செய்தல் என்ற குற்றத்தின் பாற்படும்.  மேலும் இது , சாட்சியத்தைக் கலைத்தல் என்ற non bailable offence ஆகும். ‘‘அந்தணர், மற்றோர் அந்தணருக்கு  அடிமை யாகலாம் ‘ என்பதற்கு ஆதாரம் evidance உண்டா? அதனை ஆட்சி conventional , ஆவணம்  documental  ,அயலார் தங்கள்  சாட்சி witness  ஆகிய மூவகை ஆதாரங்களுள்  ஒன்றைக் காட்டுக’’ என்று அவையோர் கூறினர். அப்போது முதிய அந்தணர்  என்னிடம் ‘மூல ஓலை’ original evidence  உள்ளது! அதையும் சுந்தரர் கிழித்து விட்டால்? என்று கேட்கிறார். இதனைச் சட்டப் பாதுகாப்பு என்பர். அந்த ஓலையை வாங்கிய அந்தணர்கள்  அவை மரபு  தெரிந்த கரணத்தான்  ஒருவரிடம் கொடுத்து அதன் உண்மை genuneness  , தொன்மை antiquity ஆகியவற்றை ஆராயக் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சி யில் அந்தக்காலச்  சோழரின் அமைச்ச ராகிய சேக்கிழாரின்  நீதி , சட்டம் பற்றிய  அறிவைக் காட்டும் நயம் மிகுந்துள்ளது!

    Share
  • அழியாத பிளாஸ்டிக்

    -நாகேஸ்வரி அண்ணாமலை

     

    அடுத்த அறுபது நொடிகளில், அதாவது ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதுமுள்ள மக்கள் பத்து லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களையும் இருபது லட்சம் பிளாஸ்டிக் பைகளையும் வாங்குவார்களாம். இவையெல்லாம் முற்றிலும் அழிந்து போவதற்கு ஆயிரம் வருஷங்களுக்கு மேல் ஆகுமாம். இது இப்படி நடந்துகொண்டிருக்க அவற்றில் சில மிகவும் நுண்ணிய துகள்களாக உடைந்து எண்ணிலடங்காத அளவில் கடலில் கலந்துவிடுகின்றன. இவை கடல் நீரிலும் குடிநீரிலும் நாம் தினமும் உபயோகிக்கும் உப்பிலும் காணப்படுகின்றன. மேலே குறிப்பிட்டவற்றோடு அவை போய்ச் சேரும் இன்னொரு இடம் மனிதனின் குடலுமாகும்.

    ஃபின்லாந்து, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போலந்து, ரஷ்யா, பிரிட்டன், ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளிலிருந்து எட்டு பேரின் மலத்தைச் சோதித்தபோது எல்லோர் மலங்களிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருந்தனவாம். இப்போதைக்கு மனிதனின் ஆரோக்கியத்திற்கு எந்தவித ஆபத்தும் இவற்றால் இல்லையென்றாலும் இன்னும் நிறையப் பேர்களைப் பரிசோதித்து விபரம் சேகரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுசெய்திருக்கிறார்கள்.

    பிளாஸ்டிக் நுண்துகள்களால் மனிதனுக்கு ஆபத்து எதுவும் இல்லையென்று இப்போதைக்கு முடிவுசெய்யப்பட்டிருந்தாலும் எத்தனையோ மிருகங்கள் பிளாஸ்டிக்கினால் பாதிக்கப்படுகின்றன. கடல்வாழ் மீன்கள் எத்தனையோ இந்த பிளாஸ்டிக் பைகளை விழுங்கி உயிர் இழந்திருக்கின்றன.

    சமீபத்தில் பதினேழு பவுண்டு எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் ஒரு திமிங்கலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக்கின் கெடுதல்கள் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். போப் பிரான்சிஸ், இந்த பூமி கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டது. இதை மாசுபடுத்தினால் கடவுளை நிந்திப்பதற்குச் சமம் என்கிறார். உலகில் எல்லோருக்கும் பிளாஸ்டிக்கின் இன்னொரு பக்கம் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் அதன் உபயோகத்தால் பல வசதிகள் இருப்பதால் தொடர்ந்து உபயோகித்து வருகிறோம். சிலர் அது மறு சுழற்சி செய்யப்பட்டால் வீணாவதில்லை என்று நினைக்கிறார்கள். இது மிகவும் தவறு. மறுசுழற்சி செய்யப்படும்போது எத்தனை பொருள்கள் வீணாகின்றன. மேலும் ஒரு குறுகிய சதவிகிதமே மறுசுழற்சி செய்வதன் மூலம் திரும்பக் கிடைக்கிறது. அதனால் reduce, reuse, recycle என்ற மந்திரத்தை நாம் பின்பற்ற வேண்டும். முதலில் கூடியவரை பிளாஸ்டிக் பொருள்களின் (எல்லாப் பொருள்களையும் என்றுகூட நான் சொல்லுவேன்) உபயோகத்தைக் குறைக்க வேண்டும். இயற்கை வளங்களைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். அதற்குமேல் வாங்கித்தான் தீர வேண்டுமென்றால் அந்தப் பொருளைத் தாங்கிவந்த டப்பாக்களை மறுபடி உபயோகப்படுத்துங்கள். அதற்கு மேலும் தேவையென்றால் இவற்றை மறுசுழற்சி செய்யும் இடங்களில் சேர்த்துவிடுங்கள்.

    அமெரிக்காவில் இப்போது பால், தயிர், வெண்ணெய் ஆகிய எல்லாம் பிளாஸ்டிக்கில் அல்லது பிளாஸ்டிக்கோடு இன்னொரு பொருள் சேர்த்துச் செய்யப்பட்ட டப்பாக்களில்தான் கிடைக்கின்றன. அமெரிக்கர்கள் இவற்றையெல்லாம் உபயோகித்துவிட்டுக் கீழே தூக்கி எறிவதைப் பார்த்தால் என் நெஞ்சமெல்லாம் வலிக்கும். சில சூப்பர்மார்க்கெட்டுகளில் சொந்தப் பைகளைக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு பைக்கு ஏழு சென்ட் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த மாதிரி உத்திகள்கூட அதிகப் பலனை விளைவிக்கவில்லை. அமெரிக்காவில் எல்லா நகரங்களும் பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்கத் தங்களாலான முயற்சிகளைக் கடைப்பிடிக்க முயன்று வருகின்றன. எதுவும் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்த மாதிரி தெரியவில்லை.

    அமெரிக்காவில் எதையும் sterilize பண்ணுவதால் அமெரிக்கர்களுக்கு நோய்தடுப்புச் சக்தி மிகவும் குறைந்துபோய்விட்டது. யாரும் குழாயிலிருந்து தண்ணீர் குடிப்பதில்லை. எல்லாம் பாட்டில்கள்தான்.

    அமெரிக்காவில் வசித்தாலும் நாங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைத்து வருகிறோம். பார்ட்டிகளுக்குப் போனால் எங்கள் சொந்தப் பிளேட்டுகளையும் டம்ளர்களையும் எடுத்துச் செல்கிறோம். பிரயாணம் செய்யும்போதோ வேறு எங்காவது வெளியில் செல்லும்போதோ கையோடு உணவை எடுத்துச் சென்றால் திரும்ப உபயோக்கிக்கக் கூடிய பிளேட்டுகளில்தான் எடுத்துச் செல்கிறோம். அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து கழுவி உபயோகப்படுத்துகிறோம். பிளாஸ்டிக்கில் கொண்டுபோயிருந்தால் அங்கேயே குப்பைக் கூடையில் எறிவதற்கு வசதியாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் அப்படிச் செய்வதில்லை.

    அமெரிக்காவில் ஓட்டல்களில் நாம் உண்டதுபோக மீதியை வீட்டிற்கு எடுத்து வந்துவிடலாம். அதனால் நம்மை யாரும் குறைவாக நினைக்க மாட்டார்கள். இப்போது இது எல்லோரும் ஒப்புக்கொண்ட பழக்கமாகிவிட்டது. ஓட்டல் சர்வர்களே doggie bag-ல்போட்டுக் கொடுக்கவா என்று நம்மிடம் கேட்பார்கள். இப்படி மிஞ்சிய உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் பைகளுக்கு doggie bag என்று பெயர். (அமெரிக்கர்கள் தாங்கள் உபயோகிக்கும் உணவில் 40 சதவிகிதத்தை வீணடிக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் கூறுவது இன்னொரு விஷயம்.)

    ரொட்டித் துண்டுகளோடு சாப்பிடும் peanut butter என்னும் நிலக்கடலை வெண்ணெயைச் சூப்பர் மார்க்கெட்டுகளில் பாட்டில்களிலோ பிளாஸ்டிக் டப்பாக்களிலோ விற்கிறார்கள். இப்போது கடைகளில் தினமும் மெஷினில் அரைத்து விற்கிறார்கள். தினமும் தயாரிக்கப்படும் இதில் preservative எதுவும் சேர்ப்பதில்லை. ஆனால் இப்படித் தினமும் தயாரிக்கப்படுவதையும் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்கிறார்கள். பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்க எண்ணிய நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து கண்ணாடி பாட்டில்களைக் கொண்டுபோய் கடையிலேயே அரைத்து எங்கள் பாட்டில்களில் போட்டுத் தரச் சொன்னோம். நாங்கள் அப்படிக் கேட்டவுடன், “ஷெல்பில் நிறைய இருக்கிறது. அதில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். திரும்பத் திரும்ப உபயோகிக்கக் கூடிய பாட்டில்களையே நாங்கள் விரும்புவதால் பிளாஸ்டிக் வேண்டாம் என்றும் எங்கள் பாட்டில்களிலேயே மெஷினில் அரைத்ததைப் போடும்படியும் சொன்னோம். கடை ஊழியர்களுக்கு அது புரியவே இல்லை. பிளாஸ்டிக்கை விட கண்ணாடி பாட்டில் கனமாக இருக்கும், அதனால் எங்களுக்குக் கொஞ்சம் குறைவாகவே கடலை வெண்ணெய் கிடைக்கும் (பிளாஸ்டிக் டப்பாக்களில் கடலை வெண்ணெயை நிரப்பி அதன் எடையைக் கணக்கிட்டு விலையைக் குறிப்பார்கள்) என்று கூறிப் பார்த்தார்கள். நாங்கள், “அதனால் பரவாயில்லை. பாட்டில்களில் அதைப் பெறுவதுதான் எங்கள் முக்கிய நோக்கம்” என்று எவ்வளவோ கூறிப்பார்த்தும் அவர்களுக்கு விளங்கவில்லை. பின் கடை மேனேஜரை வரவழைத்துப் பல முறை அவருக்கு விளக்கிய பிறகு வேண்டா வெறுப்பாக எங்கள் பாட்டில்களில் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள்.

    சென்ற ஒரு வருஷமாகக் கடை ஊழியர்களுக்கு எங்களுடைய இந்தப் பழக்கம் பழகிவிட்டதால் போனவுடனேயே எந்தத் தகராறும் செய்யாமல் எங்கள் பாட்டில்களிலேயே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடை இப்போது மூடப்பட்டுவிட்டது. இன்னொரு கடையிலும் இதே மாதிரி அன்றன்றே செய்து விற்கிறார்கள் என்று அறிந்து அங்கு போய் வாங்க முயன்றோம். இந்தக் கடையிலும் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் அதற்குச் சொன்ன காரணம் எங்களிடம் சிரிப்பை வரவழைத்துவிட்டது. அவர்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்கள் சுத்தமானவையாம் (sterilized); எங்கள் பாட்டில்கள் சுத்தம் செய்யப்படாதவையாம் (unsterilized); இதனால் எங்களுக்கு ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டு நாங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துவிடுவோமாம்! “எங்கள் பாட்டில்களில் நீங்கள் கொடுத்தாலும் நாங்கள் உங்கள் மீது வழக்குப் போட மாட்டோம் என்று எழுதிக் கொடுத்தால் எங்கள் பாட்டில்களில் நிரப்பிக் கொடுப்பீர்களா?” என்று கேட்டும் அந்தப் பகுதியில் இருந்த ஊழியர் ஒத்துக் கொள்ளவில்லை. பின் கடை மேனேஜரிடம் கேட்டு, அவரிடம் நிறைய பேசி அவரை இதற்குச் சம்மதிக்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. கடைசியாக அவர் சம்மதித்தாலும் கடலை வெண்ணெயின் எடையையும் விலையையும் கடையின் பெயரையும் குறிக்கும் ‘ஸ்லிப்பை’ பாட்டிலின் மேல் ஒட்டக் கூடாது என்று கூறிவிட்டார்கள். அந்த ‘ஸ்லிப்பை’க் கையில் வைத்திருந்து எல்லாச் சாமான்களுக்கும் விலைபோட்டு மொத்த பில்லையும் தயாரிப்பவரிடம் அதைக் காட்டிவிட்டு அதைக் கீழே போட்டுவிடுமாறு கூறினார்கள். எங்கள் பாட்டில்களில் அவர்கள் போட்டுக் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இருக்கக் கூடாதாம்!

    சுத்தம் என்ற பெயரில் அமெரிக்கா எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று பாருங்கள்!

    அமெரிக்கா இருக்கட்டும். இப்போது தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் உபயோகத்திற்குத் தடை வந்திருப்பதாக அறிந்தோம். ஊழலுக்கு ஒரு உதாரணமாகத் திகழும் தமிழ்நாட்டில் இந்தத் தடை எப்படி அமுல்படுத்தப்படுகிறது என்றும் மக்கள் எவ்வளவு தூரம் ஒத்துழைக்கிறார்கள் இருக்கிறார்கள் என்றும் அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது.

    Share
  • 22 பேர் பெற்ற பிரமதேய நிலக் கல்வெட்டு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    மேலதிருமாணிக்கம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் 

    மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம் என்ற ஊரில் அமைந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர் கல்வெட்டு.

    பிரமதேயம் என்றால் பிராமணர்க்கு இறையிலியாக வழங்கும் நிலம் என்று தெரியும் ஆனால் அது எப்படியானது என்று விளங்கத் தெரியாது. இக்கல்வெட்டில் அது பற்றிய தெளிவு ஏற்படுகின்றது. வாணகோவரையன் கட்டித் தந்த 22 வீட்டுக் கல்வெட்டை நினைவுபடுத்துவதாக இக்கல்வெட்டு உள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் விக்கிரம பாண்டியனின் 13 ஆம் ஆட்சி ஆண்டில் தென்முட்ட நாட்டு மணிக்கயத்து சிவன் கோவிலுக்கும், குலசேகர மங்கலத்து நாயனார்க்கும் வழங்கிய தேவதானத்தின் எல்லையும் கருநிலக்குடி நாட்டு பிரம்மதேயத்தில் ஒவ்வொரு பிராமணரின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கான பங்கினை அரை முதல் ஒன்றேகால் நிலம் வரை குறிப்பிடுகின்றது. இந்த வேறுபாடு அவரவர் பொறுப்பிற்கும் தகுதிக்கும் தக்கவாறு அமைந்ததாகலாம். இவர்கள் பெரும்பாலும் சுற்றத்தாராகவே உள்ளனர் என்பது எண்ணிப் பார்க்கத்தக்கதாக உள்ளது. இதில் செய்தி கிடைக்கின்ற அளவில் 21 பிராமணர்கள் இருப்பது தெரிகின்றது இதற்கு மேலும் இருக்கக்கூடும். ஆனால் இக்கல்வெட்டு இறுதி முற்றும் முன்பு உள்ள பகுதி சிதைந்துள்ளதால் அதில் இடம்பெற்றோரின் பெயர்கள் அவர்கான பங்குகள் அறிய முடியாமல் உள்ளது.   இந்த பிரமதேயம் நன்செய், புன்செய் அல்லாத வீட்டு அடிமனை என்றே கொள்ளத்தக்கது. அப்படியானால் வீடு கட்டித் தரப்பட்டதா என்ற செய்தியும் அறியமுடியாமல் உள்ளது.

    கல்வெட்டு:

    ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் ஜயமகள் / திருப்புயத்திருப்ப எழுக / டலளவு நிலமகள் புணர / க் கடவுள் மேருவி[ற்] கயல் / விளையாட _ _ _ / வந்தம் _ _ _/ நெடு _ _ _ வெண்கு / டைநிழ _ _ _ செங்கோ / ல் நடப்பக் [கருங்]கலி துரந்து / வேத வீதி _ _ / _ _ _ / ஞ்ச வீரமும் _ _ _ புகழுமிகளணி விளங்க _ _ _ / மதிப்பெருச் சடை முடி நாத / னிம்ப திகழ்மணி முடி சூடி வி / ளங்கிய மணியணி வீரஸிம்ஹா / சனத்து வீற்றிருந்தருளிய [கோ] மாறபன்மரான திரிபுவனச் சக்கரவ / த்திகள் ஸ்ரீ விக்கிரம பாண்டிய [தே] / வற்கு யாண்டு13 வது ஸ்ரீ பாண் / டி மண்டலத்து மதுரை உதைய / வளநாட்டுத் தென் / முட்ட நாட்டு திரு / மணிக்கயத்து உடை / யார்த் திருமணிக்கய / முடைய  நாயனார் தேவ / தானம். கருநிலக்குடி நா / ட்டு ப்ரஹ்மதேய[ம்] ஸ்ரீ குலைசே / கரச் [சதுர்வேதி மங்]கலத்து / டைய நாயனார் தேவதான / _ _ _ க் கய நல்லூர் மூலப்பி /_ _ _ / லை[ப் பெ]ருந்தலைக் குளத்தில் வய / லில் மேல் வரம்புக்கு மேற்[கு] / பெருந்தலை குளத்தில் வயலில் / வாயல்ப் பவளசேரிக்கு நின்றும் / _ _ _ ப்போன பெருவ / [ழியே]ய்க் கொண்டு நாலப் பொய் / [கையார்] இக் குளத்துக்கு பாய்கி / ற காலுக்கு மேற்கும் தென்னெல்லை /அத்தாணி நல்லூர்[க்கா] லுக்கு  வடக்கும் மேல்லெல் / லை கிழவர்குறிச்சி வயலுக் / கு கிழக்கும் ஆனை சுரத்தில் நின் / றும் தெற்கு நோக்கிப் போகிற / வழிக்கு கிழக்கும் வடவெல்லை /  தலைமலை ஆற்றுக்கு தெற்கும் இ / _ _ _ / [மா] _ _ _ மும் கீணோக்கிய கிணறும் [மற்றும்] / யெப் பேற்பட்டனவும் / _ _ _ ளிச் / _ _ த்து இருந்து ஸ்ரீ மாஹே[ஸ்வர] _ _ _ / வாஜ கோத்ரத்து _ _ _ / த்துமு _ _  திறபடி _ _ _  / _ _ _ _ / தம்பி ஸுப்ரஹ்மண்ய பட் / டன் பாக[ம்] ஒன்றும் இக்குடியில் / இக்கோத்திரத்து இச்சூத் / திரத்து சுந்தரத் தோளுடை / யான் பட்டன் பாகம் முக்கா / லும் இவன் தம்பி சோலை பிரா / ன் பட்டன் பாகம் அரையும் இவ / ன் மகன் ஸுப்ரஹ்மண்ய பட்டன் பாகம் / அரையும் இக்குடியில் ஸ்ரீ க்ருஷ்ண பட்டன் பாக / ம் ஒன்றும் இக்குடியில் சோலைப் பி / [ரான் பாக]ம் ஒன்றும் இக்[குடியி] / _ _ _ ட வில்லி பட்டன் பா _ _ _ / _ _ _ ப கோத்திரத்து வெ / பிரான் பட்டன் பாகம் _ _ _  கோத்திரத்து / _ _ _ _ / ஒன்றும் இவன் _ _ _ / ண் காடுடைய _ _ _ / இவன் தம்பி _ _ _ / பாகம் ஒன்று _ _ _ / ம் ஹரி கோத்ரத்து இ / ஸுத்திரத்து குரவசேரி ஸ்ரீ / குமார பட்டன் பாகம் ஒன் / றும் [ஸ்வத்தாப] கோத்ரத்து வேற்புறத்து ஸுப்ரஹ்மண்ய ப / ட்டன் பாகம் ஒன்றே காலும் / இக்குடியில் இவன் தம்பி மருளாள / ப் பெருமாள் பட்டன் பாகம்  ஒன்றும் பாரத்து / வாரிய கோத்திரத்து இஸூத்திரத்துக்கு ரோவி / கேசவ பட்டன் பாகம் ஒன்றும் ஹரிதகோத் / திரத்து _ _ _ ஸூத்திரத்து பிறையம்புரத்து சிவநாரா / யண பட்டன் பாகம் ஒன்று இவன் தம்பி / அருளாளப் பெருமாள் பட்டன் பாகம் ஒன்றும் காஸ்ய / ப கோத்திரத்து உருப்புட்டூர் இராமபிரான் பட்டன் / பாகம் ஹரித கோத்ரத்து இஸூத்திரத்து கோமபுறத்து பா / கம் ஒன்றே காலும் இவன் தம்பி முற்றுமாண்டான் _ _ _ / யும் _ _ _ இவன் மகன் திருவரங்கம் _ _ _ / இஸூத்திரத்து காரம்பி செட்டுதிருவேங் _ _ _ / யும் வஸிஷ்ட கோத்திரத்து இ ஸூத்திரத்து _ _ _ / ஒன்றும் இக் கோத்திரத்து இஸூத்திரத்து _ _ _ / பாகம் _ _ _ இ கோத்திரத்து இஸூத்திரத்து / _ _ _

    இக்குடியில் – இக்கோவிலில் பணிசெய்யும்; அல்லது இவ்வழியில், கோத்திரத்தில் வந்த (lineage) அல்லது இவ்வூரைச் சேர்ந்த.

    விளக்கம்: விக்கிரம பாண்டியனின் மெய்கீர்த்தி முதலில் இடம் பெறுகின்றது. அன்றைய திருமணிக்கயம் இன்று திருமாணிக்கம் ஆகிவிட்டது. மேற்கு திசையை குறிக்கும் மேல என்பது ஊருக்கு முன்னொட்டாகிவிட்டது. இதில் பிரமதேய நிலம் பெற்ற 22 பிராமணர் கோத்திரமும் பெயரும் இன்னார்க்கு இன்னார் உறவு என்பதும் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. 97 வரிகளுக்கு மேல் செல்வதாக இக்கல்வெட்டு உள்ளது. மன்னவர் கோவில் தமது எனக் கருதியதாலும் அதில் பணியாற்றுவோர் தமது பணியாளர் என்று கருதியதாலும் இவ்வாறு அளப்பரிய கொடைகளை ஈந்துள்ளனர் போலும். அடிமனையை வைத்து என்ன செய்வது? வீட்டை யார் கட்டித்தருவது என்ற கேள்வி எழுகிறது? ஆனால் கல்வெட்டு நடுநடுவே சிதைந்துள்ளதைப் போல இறுதியில் சிதைந்துள்ளதே!! அதனால் கற்பனையை கைவிடவேண்டியது தான். பிற பழங் கோவில்கள் போல இக்கோவிலை அண்டி ஆறு பாய்ந்தது கல்வெட்டில் குறிக்கப்பெறுகின்றது.

    Share
  • நலம்… நலமறிய ஆவல்…. (147)

    -நிர்மலா ராகவன்

    மதிப்பீடுகள்

    `எதிர்வீட்டில் என்ன, இப்படி கண்ணில் அறைகிறமாதிரி சுவருக்கு வண்ணம் பூசியிருக்கிறார்களே!’

    `இவ்வளவு குண்டாக இருக்கிறாள்! இவள் தினமும் உடுத்துவதோ கெட்டிச்சரிகைபோட்ட பட்டுப்புடவைதான்! நன்றாகவா இருக்கிறது?’

    ஒருவரை அறிமுகப்படுத்தினால், மேலும் கீழுமாகப் பார்த்து அவரை எடைபோடுவர் சிலர் — நம் ஆடையணிகள் நம் குணத்தை அப்படியே பறைசாற்றிவிடுவதுபோல்!

    அவன் என்ன அப்படி, இவள் என்ன இப்படி!

    பிறர் செய்வதில் தனக்கு என்னென்ன பிடிக்கவில்லை என்று ஆராய்ந்து, அதை வெளிப்படையாகக் கூறுவது சராசரி மனிதனின் குணம்.

    ஏன் மனிதனுக்கு இப்படி ஒரு குணம்?

    தன்னைப்பற்றி உயர்வாக எண்ணுகிறான், அல்லது தன் குறைகளைப் பிறர் அறிவதற்குமுன் தான் முந்திக்கொள்ளவேண்டும் என்ற துடிப்பு.

    எப்போதும் பிறரைக் குறைவாக மதிப்பிடுபவர்கள் தம்மையே பிறர் குறைகூறினால் கொதித்து எழுவார்கள்.

    நாம் ஒருவரிடம் என்னென்ன குணங்கள் பிடிக்கவில்லை என்கிறோமோ, அவையே நம்மிடமும் இருக்கிறது என்பதுதான் விந்தை.

    `கண்ணில் அறைகிறமாதிரி’ வீட்டின் வெளியே வண்ணம் பூச அந்த வீட்டுக்காரர் மூன்று இடங்களில் வேலை பார்த்து, நிறையச் செலவழித்து, தன் திருப்திக்கேற்ப அமைத்திருக்கிறார். அதைக் குற்றம் கூறப் பிறருக்கு என்ன தகுதி?

    பட்டுப்புடவைகளையே உடுத்துபவளுக்கு அதை வாங்க வசதி இருக்கிறது. அவளுக்குப் பிடித்ததைச் செய்கிறாள். `உடலை விமானப் பணிப்பெண்போல் ஆக்கிக்கொண்டு பிறகு அம்மாதிரியான புடவைகள் வாங்கலாம் அல்லது, இதற்காகவே இன்னொரு பிறவி எடுக்கலாம்,’ என்ற நியாயமான ஆசைகளைத் தள்ளிப்போட முடியுமா? பிறர் தன்னை ஏற்கும்படி அவள் எதற்காக நடக்க வேண்டும்?

    பிடிக்காதவர்களைப்பற்றியோ அல்லது பொறாமையாலோ, சிலர் அவதூறாகப் பேசுவது முற்றிலும் உண்மையாக இருக்காது.

    `நான் செய்வதுதான் சரி!’ என்று சாதிப்பவர்களால் பிறரைப் புரிந்துகொள்ள முடியாது. இவர்கள் சில வெற்றிகளை அடைந்திருக்கலாம். அதனால் மட்டும் அவர்கள் எண்ணங்கள் எல்லாமே சரியாகிவிடுமா?

    `ஒருவர் தன் மனதைப் பாதித்தவைகளைப்பற்றிக் கூறுவதை எவராலும் புரிந்துகொள்ளமுடியாது – அவர்களும் அதேபோல் ஒன்றை அனுபவித்திருந்தாலே ஒழிய,’ என்பவரின் கதையைக் கேட்போமா?

    கோபாலனின் காதல் திருமணம் சில ஆண்டுகளுக்குள் அவர் விவாகரத்து கேட்கும் அளவுக்கு முறிந்துபோயிற்று. தான் எவ்வளவு அனுசரணையாக இருந்தாலும் அதைப் பெரிதாக நினைக்காது, தனது கடந்தகால வாழ்க்கையை ஓயாது குத்திக்காட்டியவளுடன் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்வது இயலாத காரியம் என்று தோன்றிப்போனதுதான் காரணம். பலரிடம் அதுபற்றிச் சொல்லி, தன் மனப்புண்ணுக்கு மருந்து தேடினார்.

    “ஒருத்தருக்குமே புரியவில்லை. `அப்படியா?’ என்று பட்டுக்கொள்ளாது கேட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். இல்லையேல், அறிவுரை கூற ஆரம்பித்துவிடுகிறார்கள்,” என்று அரற்றினார் என்னிடம்.

    ஒருவர் மனம் நொந்து நம்மிடம் பேச ஆரம்பிக்கும்போது, அவருக்கு அந்த சமாசாரம் எவ்வளவு முக்கியம் என்று புரிந்து வாய் திறவாது கேட்டுக்கொள்ள வேண்டும்.

    நம் முகபாவத்திலிருந்தே, `இவளுக்கு நாம் சொல்ல வருவது புரியும்,’ என்ற நம்பிக்கை வர, மேற்கொண்டு பேசுவார்கள். சற்றே அமைதி பெறவும் வழியிருக்கிறது.

    ஆனால், பிறர் பேசிக்கொண்டிருக்கும்போதே, `அடுத்து நாம் என்ன சொல்லலாம்?’ என்றுதானே யோசனை போகிறது!

    கோபாலன் ஆறுதலை நாடினார் – மதுவில்.

    இப்போது உலகம் அவரைப் பழித்தது: `இந்தக் குடிகாரனுடன் எவளால் வாழமுடியும்?’

    அவர் அப்படி நடக்கும் சூழ்நிலை ஏன் அமைந்தது என்று யாருமே யோசிக்கவில்லை.

    பிறரைப் புரிந்துகொண்டு, அவர்களது கண்ணோட்டத்தில் பார்த்தால் எதுவும் தவறாகத் தோன்றாது.

    கதை

    தாய்லாந்தில் ஓர் உணவுக்கடையில் நானும் என் மகளும் உட்கார்ந்திருந்தோம். ஒரு பெண் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் ஒலி கேட்டு, நான் திரும்பிப் பார்த்தேன்.

    சற்றுத் தொலைவில் பதினைந்து வயது மதிக்கத்தக்க அந்நாட்டுப் பெண் ஒருத்தியும், அவளைவிட முதியவர்களான இரு வெள்ளைக்காரர்களும் அமர்ந்திருந்தனர். அவர்கள் என்ன சொன்னாலும் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்.

    `இவ்வளவு சிறிய பெண் இத்தொழிலைப்போய் செய்கிறாளே!’ என்ற அதிர்ச்சி எழுந்தது.

    என் கண்களை சந்தித்த அப்பெண்ணின் முகத்தில் சிரிப்பு மறைந்தது. அவமானம் எழ, தலை குனிந்தது.

    இந்தச் சிறுமியை நோகடித்துவிட்டோமே என்று என்னையே நான் கடிந்துகொண்டேன்.

    அதன்பிறகு என் மகள் என்னுடன் சண்டை பிடித்தாள்: “ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருப்பாள். விலைமாதுவாக இருப்பது அவள் தேர்ந்தெடுத்த தொழில். அவள் சம்பாதித்து, குடும்பத்தைக் காக்கவேண்டிய நிலை இருக்கலாம். இந்த தொழிலைச் செய்பவர்கள் சில முறையாவது பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகி இருப்பார்கள். நம் நிலையிலிருந்து அவர்களை எடைபோடக்கூடாது!”

    எவ்வளவு உண்மை!

    அன்று நான் ஒரு நல்ல பாடம் கற்றேன்.

    கதை

    கோலாலம்பூரில் நடந்த ஒரு குறும்பட நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். பெண்ணைப்போல் ஆடையணிகள் அணிந்திருந்த இளைஞன் வரவேற்பாளராக அமர்ந்திருந்தான்.

    முதலில் நான் அவனைச் சரியாகக் கவனிக்கவில்லை. அவன் கொடுத்த காகிதத்தைப் பார்த்ததும் எந்த இடத்திலிருந்து வந்திருக்கிறான் என்று புரிய, சட்டென தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தேன். அடையாளக்கார்டு மறுக்கப்பட்ட நிலையில், வயிறு பிழைக்க வேறு எந்தத் தொழிலுக்கும் போகமுடியாத அவலம். எங்களிருவர் கண்களும் சந்தித்தன. அவனை அங்கீகரிக்கும் விதத்தில் லேசாகப் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து அகன்றேன்.

    நான் என் இருக்கையில் அமர்ந்தபின், யதேச்சையாகத் திரும்ப, “ஹாய்!” என்று முகமெல்லாம் சிரிப்பாக முகமன் கூறினான் அதே இளைஞன்.

    நான் கையை உயர்த்தி, அதையே திரும்பக் கூறினேன்.

    தன் பக்கத்தில் இருந்தவளிடம் (இருந்தவனிடம்?), “என் ஃப்ரெண்ட்!” என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டான்.

    மற்றவன் என்னை ஏக்கத்துடன் பார்க்க, “Hello! How are you?” என்று அவனுக்கும் சற்று உரக்கவே முகமன் கூறினேன்.

    கையை உயர்த்தி, ஆர்ப்பாட்டமாக `ஹலோ’ சொல்வது என் வழக்கமில்லை. இருந்தாலும், இவர்களுக்குப் பிறர் தம்மை ஏற்பது எவ்வளவு முக்கியம் என்று புரிந்திருந்தது. அவனுடைய முகத்தில் அப்போது தோன்றிய மகிழ்ச்சி!

    எவரையும் அவர் இருப்பதுபோலவே ஏற்றால் வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

    தன்னையே பிடித்துப்போனவர்கள் பிறரைத் தாழ்வாக எடைபோட மாட்டார்கள். நாம் இருப்பதுபோலவே நம்மை நாமே ஏற்க என்ன தடை!

    Share
  • சுவரற்ற வீட்டில் எனக்கான தனியறை

    -கவிஞர் பூராம்

    உடல்பூத்து மலர்ந்த நாளொன்றில்
    காற்றின் இருத்தலைப் போலக் காமம்
    வாடையின் காற்று உள்ளத்தை உருக்குலைக்க
    இரவுகள் இங்கிதம் மறந்தொழிய
    ஊற்றெடுக்கும் உள்ளொளியில் துணைதேடி
    கனவுகளோடு நானும்

    தொடுதலின் வெற்றுக் கற்பனைகளில்
    பண்பாட்டுப் பாறையின் சுமையில்
    நிறம் மாறிய ஓவியமாக மனம்!

    துணையின் தேவையில் கண்டடைந்த
    வாழ்க்கையில் காத்திருக்கிறேன்
    முதல் காமமுத்தத்திற்காக!

    அவனோடு வாழ்ந்துவிட
    துணிந்துவிட்ட துணிச்சலில் சிறு உடைப்பு
    உதடுகளின் உரசலில் நாசியில்
    மோதிச் சென்ற வாசனை
    தன்னிலை இழந்த வயிறும் மனமும்

    காமத்தின் தேவையில்
    சேர்த்துவைத்த பொக்கிஷங்கள்
    கேட்பாறற்றுக் குப்பைத்தொட்டியில்
    முகச்சிரிப்பில் உடல் பூரிப்பில்
    கடந்துசெல்லும் ஒவ்வொரு இரவிலும்
    நகும் காலம்!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(246)

    – செண்பக ஜெகதீசன்

    அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க

    ணல்ல லுழப்பதாம் நட்பு.

           -திருக்குறள் -787(நட்பு)

     

    புதுக் கவிதையில்…

    அழிவுதரும்

    தீவழிச் செல்கையில்

    தடுத்து நிறுத்தி,

    ஆக்கந்தரும் நல்வழி

    செல்லாதபோது

    செல்லவைத்து,

    அழிவு வரும்போது

    கைவிட்டு அகன்றிடாமல்,

    உடனிருந்து

    துன்பம் அனுபவிப்பதே

    தூய நட்பு…!

     

    குறும்பாவில்…

    தீயவழி செல்லாமல் தடுத்து நிறுத்தி,

    நல்வழியில் நடக்கவைத்து, அழிவுவந்தால்

    உடனிருந்து துன்புறுதலே நட்பு…!

     

    மரபுக் கவிதையில்…

    அழிவைத் தந்திடும் தீவழியில்

    ஆசையில் செல்கையில் தடுத்தேதான்

    வழியது நல்லதாய்க் காட்டியதன்

    வழியே நம்மைச் செல்லவைத்து,

    அழிவது வாழ்வில் வரும்பொழுதில்

    அகன்றே நம்மைக் கைவிட்டிடும்

    பழியதைப் பெறாமல் இடரிலும்நம்

    பக்க மிருப்பதே நட்பாமே…!

     

    லிமரைக்கூ..

    தீயவழியில் நாம்செல்வதைத் தடுத்து

    நல்வழியில் நமைச்செலுத்தி, நல்லநண்பர்,

    நம்துன்பத்திலும் துணையிருப்பார் அடுத்து…!

     

    கிராமிய பாணியில்…

    நட்பிதுதான் நட்பிதுதான்

    நல்ல நட்பிதுதான்,

    துன்பத்திலயும் தொணயிருக்கும்

    நல்ல நட்பிதுதான்..

     

    கெட்டவழியில நாமபோனா

    கேடுவராமத் தடுத்துநெறுத்தி

    நல்லவழியில நம்ம நடக்கவச்சி,

    கேடுவாற காலத்தில ஓடாம

    கூடயிருந்தே துன்பப்படுறதுதான்

    கொறயில்லாத நட்பாவும்..

     

    அதால

    நட்பிதுதான் நட்பிதுதான்

    நல்ல நட்பிதுதான்,

    துன்பத்திலயும் தொணயிருக்கும்

    நல்ல நட்பிதுதான்…!

     

     

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 14

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை

     

    குறள் 131:

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்

    ஒழுக்கம் அத உடையவங்கள ஒசத்தியா காட்டுததால அத நம்ம உயிர விட மேம்பட்டதா நெனைச்சி போற்றுதோம்.

    குறள் 132:

    பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை

    எதனாலயும் அழிஞ்சி போவாத ஒழுக்கத்த விரும்பி காத்துக்கிடணும். ஏம்னா எல்லா அறத்திலயும் வாழ்க்கைக்கு தொணையா நிக்குதது ஒழுக்கம் மட்டுந்தான்.

    குறள் 133:

    ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்

    ஒழுக்கம் ஒடையவரா வாழுதது தான் ஒசந்த குடிப்பிறப்புக்கு பெருமை. ஒழுக்கம் தவறினவங்கல்லாம் இழிந்த குடில பொறந்ததாவே நெனைக்கப்படுவாங்க.

    குறள் 134:

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

    பார்ப்பான் தான் கத்துகிட்ட வேதத்த மறந்தாக்கூட பொறவு இன்னொருக்க படிச்சிக்கிடலாம். ஆனா அவன் பொறந்த ஒசந்த குலத்துக்குண்டான ஒழுக்கத்திலேந்து பிசகினாம்னா குலத்திலயும் தாழ்ந்துட்டதாவே நெனைப்பாங்க.

    குறள் 135:

    அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு

    பொறாமைல புழுங்குதவனுக்கு செல்வம் இல்லாம போகுதது போல ஒழுக்கம் இல்லாதவனுக்கு ஒசந்த வாழ்க்க இல்லாம போவும்.

    குறள் 136:

    ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து

    ஒழுக்கம் தவறினா குத்தம் கொற உண்டாவும்னு அறிஞ்சி நெஞ்சுறுதி இருக்க படிச்ச பெரியவங்க எத்தன சங்கடம் வந்தாலும் ஒழுக்கமா நடந்துகிடுவாங்க.

    குறள் 137:

    ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவ ரெய்தாப் பழி

    ஒழுக்கத்தினால ஒருதங்களுக்கு ஒசத்தி உண்டாவும். ஒழுக்கம் இல்லாதாவங்கள வேண்டாத பழி பாவம் அண்டும்.

    குறள் 138:

    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும்

    நல்லொழுக்கம் சந்தோசமா நல்லா வாழுததுக்கு தொணையா நிக்கும். தீயொழுக்கம் எப்பமும் தீராத துன்பத்த மட்டுமே கொடுக்கும்.

    குறள் 139:

    ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்

    மறதியால கூட தீய சொல்ல தங்க வாயால சொல்லுதது ஒழுக்கம் ஒடையவங்களால ஏலாது.

    குறள் 140:

    உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
    கல்லா ரறிவிலா தார்

    ஒலகத்து ஒசந்தவங்க ஏத்துக்கிட்ட ஒழுக்கம் ங்குத கொணத்தோட வாழ கத்துக்கிடாதவங்க எத்தன படிச்சிருந்தாலும் புத்தியில்லாதவங்க தான்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • 40 குடும்பத்து 105 அடிமைகள் பற்றிய கல்வெட்டு – கொறுக்கை வீரட்டேசுவரர் கோயில்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கொறுக்கை என்னும் தேவாரப் பாடல் பெற்ற தலம். இங்குள்ள வீரட்டேசுவரர் கோயில் மகாமண்டபம் வடக்கு சுவர் கல்வெட்டு. இது மூன்றாம் இராசராசனின் 19 ஆவதுஆட்சி ஆண்டில் (கி.பி. 1235) வெட்டிய கல்வெட்டு என்பது எழுதமைதியால் கணிக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் குடும்பம் குடும்பமாக அடிமைகளாக கோவிலுக்கும் தனிஆள்களுக்கும் விற்றுக் கொண்ட செய்தி உள்ளது. இவர்களுக்குள்ள உறவுமுறையும் குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடன்வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் ஓட்டாண்டி (திவால்) ஆகி அடிமைசெய்வாராக ஆனார்களா? அல்லது சாதி நீக்கி ஊராரால் ஒதுக்கப்பட்டு அடிமையாக வந்தார்களா? அல்லது ஏதேனும் நேர்த்திக்கடன் செலுத்த அடிமை ஆனார்களா? அல்லது கோவில் சலுகை ஒன்றைப் பெற அடிமை ஆனார்களா? இப்படி எந்த முடிவும் கொள்வதற்கு இடம் தரும்படியாக கல்வெட்டில் எந்த ஒரு துப்பும் இல்லை. சிலர் இறைவனுக்கு அடிமையாய் தாமே ஒப்புக்கொண்டவர், விலைக்கு விற்றுக் கொண்ட அடிமைகள் சிலர், இன்னும் சிலர் விலைக்கு வாங்கி தானம் கொடுக்கப்பட்ட அடிமைகள்.

    இதற்கும் முற்பட்ட இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அடிமையானோரும் இக்கல்வெட்டின் பிற்பகுதியில் குறிக்கப்படுகின்றனர். விந்தையாக இந்த அடிமைகளின் பெயர்களை உற்று நோக்கும் போதும்; இதில் குறிக்கப்பட்டுள்ள அகமுடையாள் என்ற பிராமணர் வீட்டில் புழங்கும் சொல்லையும் நோக்க இந்த அடிமைகள் பலரும் பிராமண குடும்பத்தவர் என்று தெரிகின்றது. சில அரசுகுடியோர் பெயரும் இடம்பெறுகின்றது. இணைப்பில் உள்ள 2/1994 கல்வெட்டின் இறுதியில் சில பிராமணர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். அதைக் கொண்டு இவர்கள் பிராமணர் என முடிவுகட்டப் பட்டது. கல்வெட்டு பாடத்தை படிக்கும் முன் அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிக்குவரி விளக்கத்தை படித்தால் இதன் பொருளை நன்றாக தெரிந்து கொள்ளலாம். பின்பு கல்வெட்டு பாடத்தை படித்தால் எளிதாக பொருள் புரியும். 

    கல்வெட்டு பாடம்:

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜ தேவற்கு யாண்டு பத்தொன்பதாவது விருதராஜ பயங்கர [வளநாட்டுக்] குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமு[டை]யார் மூலபிருத்தியரான சண்டேசுர தேவ[ற்]கு [திருவாய்மொழிந்]தருளின திருமுகப்படி பெற்ற அடிமைக்கும் பலர் பக்கலும் விலைகொண்ட அடிமைக்கும் தானத்தால் பெற்ற அடிமைக்கும் கல்வெட்டினபடி திருமுகப்படி  ஆழ்வாரடிமையாய் பெற்ற ஆச்சபிடாரன்,  இவன்  அகமுடையாள் சோழி. இவன் மகன் எழுவடியான் இவந் தம்பி தேவன் இவன் தம்பி திருவெண்காடு டையான் இவந் தம்பி வள்
    2. ளல். இந்த ஆச்சபிடாரன் மகள் ஆளுடையாள். இவள் மகன் திருவெண் காடுடையாந் இவந் தம்பி மணவாளன். இவந் தங்கை ஆண்ட நங்கை இவள் தங்கை செல்வம். வீரவிநோதவேளான் இவந் தம்பி சிங்க பிரான். இவன் தங்கை மண்டையாண்டி அழ[கி]யாந் மகந் வ _ _ _ [த]ங்கை செல்வம். இவள் மகன் பெருமாள். இவன் தங்கை ஆண்டாள். சிவசரணத்தின் அகமுடையாள் மண்டை இவள் மகந் பெருங்காடந் இவந் தம்பி வேங்கடம் இவந்தம்பி வள்ளல் இவந் தங்கை பெற்றாள். இவள் _ _ _  உடையாந் இவன் தங்கை பெரியாள். இந்தப் பெருங்காடந் சிறிய தாய் ஆழ்வா நங்கை. இவள் மகந் வடையாந் இவந்தம்பி பெருமாள். இவந் தங்கை பெரியாள். இவள் மகள் ஆண்டாள் இ
    3. ப்பெரியான் தங்கை செல்வம். இவள் ம[க்]கள் உமையாண்டாள் சீவேதவனப் பெருமாள் நங்கை. இச்செல்வத்தின் தங்கை பொற்சாத்தி. தாழஞ்சேரிக் கம்பந் மருமகன் திருவீரட்டானமுடையான். கோவிந்தன் ஆச்சபிடாரன் உடப்பிறந்தாள் நாராயணி. இவள் மகள் செல்வம். இவள் மகந் திருவெண் காடுடையாந். இவந்தம்பி செல்வந் இவந்தம்[பி உய்]யவந்தாந் இவந் தம்பி இருள்நீக்கி. கவிணிந உத்தம சோழந் சூரிய தேவர் தாநம் பண்ணி[னபே]ர், ஆடவலாந் கொத்தில் செல்வி. இவள் மக்கள் இவள் தங்கை பெற்றாள் கொத்து. இவள் தங்கை திருச் சிற்றம்பல முடையாள். சடையன் அகமுடையாள் செல்லகொத்து. வெண்ணைக் கூத்தந் அகமுடையாள் பெருங்காடி. மகந் கோவிஞ்சி கொத்து இவள் தங்[கை] மந்றமுடையாள் கொத்து. இவ
    4. ள் தம்பி திருச்சிற்றம்பலமுடையாந். நாற்பத்தெண்ணாயிரம் பிச்சந் அகமுடையாள் நங்கை கொத்து. சந்திரந் அ[க]முடையாள் திருவிந் கொத்து. கீர்த்தி நாராயணஞ் சிங்கப் பிராந் பக்கல் தாநத்தால் பெற்ற சந்திரசேகர திருவெண்காட்டு நங்கை. இவள் மகந் சோறுடையான் இவன் தங்கை பெற்றாள். கவிணியன் சூரியதேவந் தெக்ஷணாமூர்த்தி பக்கல் விலை கொண்டுடைய பெருங்காடனந் கெங்கை இவன் மகந் திருச்சிற்றம்பல முடையாந் பெருங்காடி பாரத்துவாஜி. தில்லை நாகந் பெரியநம்பி பக்கல் கொண்டுடைய வீரட்டந் சொறி. இவள் மகந் பிடாரந் தவுமியந் வெண்காடு தேவந். சோமாசி _ _ _ மா[றனும்], கண்ணுவநந் கருமாணிக்கம் சீரிளங்
    5. கோ பட்டநும் பக்கல் கொண்ட வீரட்டந் பெற்றாள். கவிணியந் சூரிய தேவந் திருச்சிற்றம்பல முடையாந் பக்கல் விலை கொண்ட பெருங்காடந் சோறுடையான். தவுமியந் வெண்காடு தேவந், திருச்சிற்றம்பல முடையாந் பட்டசோமாசியார் பக்கல் கொண்ட தத்தபட்டன்திரு. இவள் மகந் அற்ப சந்தோஷி வீரட்டந் இவந் தங்கை ஆண்டமை. பிரமதேச ராஜராஜச் சருப்பேதி மங்கலத்து பாரத்துவாஜி திருவிக்கிரமனும், இவந் தம்பி உ[மா சகி]தந் திருச்சிற்றம்பல முடையானும் பக்கல் கொண்டுடைய கூத்தாடி சூற்றிய தேவி இவள் மகள் மண்டையாண்டி. இவள் தம்பி கண்ணந் இவள் தங்கை
    6. பெற்றாள். இவந்தம்பி இராம தேவந். இவந் தங்கை உமையாண்டாள் இவள் தம்பி திருநட்டப் பெருமான். பெற்ற கோவில் சோழ விழுப்பரையன் பக்கல் கொண்ட கேசவந் சீ _ _ _ _. இவன் மகந் பெற்றாந் கேசவந் வேதம் உடைய பிரான். இவன் தங்கை அவையம் புக்காள் இ _ _ _ _ கள் கூத்தாடி நங்கை. இவன் தங்கை _ _ _ க்குடுத்தி. திருமங்கலத்து அரயந் அரயந் நாகந் பிள்ளையாழ்வாந்நாந குலோத்துங்க சோழக் கெணியாத ராயர் பக்கல் விலை கொண்ட அரயந் உடையாண்டி. இவள் மகள் அம்மச்சி. நித்தந் திருவடியும், நித்தந் சிங்கனூரானும் பக்கல் கோயில் கொண்டு இவன் பக்க
    7. ல் பெற்ற நித்தந் னம்பி. இவந் தம்பி சிங்கப்பிரான். தவுமியந் வெண்காடு தேவந், ஆதித்த தேவந் பக்கல் கொண்ட வீரட்டந் சோறுடையாள். இவள் மகள் ளாசு பாரத்துவாசி. இரவிதாஸந் சக்கரபாணி, பிராம்மணி வாழ்வி தாட்சானி பக்கல்   கொண்ட பிராந்தக தேயந் ஸ்ரீகிருஷ்ணந். திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ஒன்பதாவது கவினிய நாகனூர் ஆதி சண்டேசுர தேவர்கு விற்ற அடியாள் ஆவாள். இவ்வூர் கவுணியன் சூரிய தேவன் திருச் சிற்றம்பல முடையான் பக்கல் விலை கொண்டுடையநாய் இத்தேவர் சிவநாமத்து இக்கவிணியன் நாகனூரன் சூற்றி பெருங்காடி பின்பு இவன் பெற்ற மகள் உ  
    8. டையள். இவன் தங்கை பெரியாள். இவள் தம்பி சூற்றி. இவன் தங்கை சோறாண்டி. இவன் தம்பி தியம்பகன்.இ பெண்களில் பெரியாள் மகன் சூற்றி. இஎவாண்டை நாளில் வரகூரான ஜயஸிம்ஹ குலகாலச் சருப்பேதி மங்கலத்து காஸ்யபந் தவதேவிசந் _ _ _ _ பட்டநாந அருமாரி நம்பி  ஆதிசணேடேசுவர தேவற்க்கு விற்றுக் குடுத்த அடிமையாளாவாள் பொற்ப்பா _ _ _ யும், இவள் மகள் உய்யவந்தாளும். இவள் தங்கை செல்வமும் [கல்வெட்டு எண் 2] திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜாயிராஜ தேவற்கு யாண்டு ஏழாவது நாளில் விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு ஆற்றூராந ராஜநாராயணச் சருப்பேதி மங்கலத்து திருபுவன மாதேவிச்சேரி குரவிசிரின வீரட்டந்
    9. பிராமணி உய்ய வந்தாள் சாநி கோமுத்தந் மகன் குரவிநாராயண பட்டநை முதுகண்ணாகக் கொண்டு இவ்வுய்யவந்தாள் [சா]நி பக்கல் காசு 60 காசு அறுபதுக்கு  விலைகொண்ட நங்கை மகள் அம்மையாண்டாள். இவள் மகள் பெரியாண்டாள் இவள் தங்கை நித்த[கல்யா]ணப் பிச்சந் _ _ _ _ இவள் தங்கை குளுந்தாள், இவ[ள்] தங்கை னங்கை. திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க தேவற்கு யாண்டு பத்தாவது செயங்கொண்டு சோழ வளநாட்டு விளைநாட்டு விளைநகரான நித்த விநோதச் சருப்பேதி மங்கலத்துப் பாலாசிரி[ய]ந் இளைய சங்[கர]ச் சிவனும், இவந் பிந்நோ நாத்தமையன் மகந் சிவந் சங்கரநும் பக்கல் பத்தொந்பது காசுக்கு விலைகொண்ட [அடிமை] அரை
    10. யா நாகமுடையாள். இவள் மகள் சோறுடையாள் செல்வி. இவள் மகள் சோறுடையாள் சீதேவி நங்கை. இவள் மகள் சோறுடையாள் ஆழ்வாந் நங் _ _ _ _ ள் மகன் சோறுடையான் பெருங்காடன். இவன் மகன் சோறுடையாந் புற்றிடங் கொண்டான்.

    ஆழ்வாரடிமை – இறைஅடிமை; அகமுடையாள் – மனைவி (பிராமணர் வழக்கு); பட்டன் – சமஸ்கிருத அறிஞனான வேத பிராமணன்; வேளான் – அரசன், அரசமரபினர்; பிடாரன் – ஆசிரியர், மருத்துவர்; பக்கல் – சார்பாக, on behalf; சாநி – பிராமணப் பெண் பெயர்ப் பின்னொட்டு; முதுகண் – supervisor, caretaker, கங்காணி; 

     

    விளக்கம்: 1 – 2 வரிக்கு > பிராமணன் ஆச்சபிடாரன் குடும்பம் அவன் மகள் குடும்பம் என இரு குடும்பத்தில் பேரன், பேத்திகள் உட்பட 7 ஆடவர், 4 மகளிர் இறைவனுக்கு தம்மை அடிமை ஆக்கினர். வீரவிநோத வேளான் அரசகுடியினர் ஆவார். இவரது பேரன், பேத்திகள் உட்பட இரு குடும்பத்தில் 4 ஆடவர், 3 பெண்கள் தம்மை இறைவனுக்கு அடிமை ஆக்கினர். பிராமணர் சிவசரணத்தின் பேரன் பேத்திகள் உள்ளிட்ட 5 குடும்பத்து உறவினர் 6 ஆடவர், 9 மகளிர் தம்மை இறைவனுக்கு அடிமை ஆக்கினர்.

    விளக்கம்: 3 – 4 வரிக்கு > 1 மருமகன். பிராமணர் ஆச்சபிடாரன் உடன்பிறந்தாள் பேரன், பேத்தி உட்பட 3 குடும்பத்து 5 ஆடவர் 2 மகளிர் தம்மை இறைவனுக்கு அடிமை ஆக்கினர். சூரியதேவர் தானமாகக் கொடுத்த அடிமைகள், கொத்தில் செல்வி குடும்பத்தில் 3 மகளிர். சடையன் மனைவி ஒருத்தி. வெண்ணைக் கூத்தன் 2 குடும்பத்தில் 2 ஆடவர், 2 மகளிர். நாற்பத்தெண்ணாயிரம் பிச்சன் மனைவி குடும்பத்தில் இருவர். சந்திரன் குடும்பத்தில் மனைவி ஒருத்தி. சிங்கப் பிராந் சார்பாக ஒரு குடும்பத்து 1 ஆண், 2 மகளிர் தானமாகத்  தரப்பட்டனர். தக்ஷிணாமூர்த்தி சார்பாக விலை கொடுத்து பெற்ற ஒரு குடும்பத்து பிராமண அடிமைகள் 2 ஆடவர். பெரியநம்பி சார்பாக விலைக்கு பெற்ற அடிமை ஒரு குடும்பத்து 1 ஆண், 1 பெண்.

    விளக்கம்: 5 -6 வரிகள் > சோமாசி & கண்ணுவந் ஆகிய இருவர் சார்பாக விலைக்கு வாங்கிய ஒரு குடும்பத்து அடிமை 1 ஆண். கவிணியன் விலையால் கொண்ட ஒரு குடும்பத்து அடிமை 1 ஆண். பட்டசோமாசியார் சார்பாக விலைக்கு பெற்ற ஒரு குடும்பத்து பிராமண அடிமைகள் 2 ஆடவர், 1 மகளிர். பிராமணர் திருவிக்கிரமன், தம்பி உமாசகிதன் இருவர் சார்பில் ஒரு குடும்பத்து 4 ஆடவர், 3 மகளிர் விலைக்கு வாங்கப்பட்டனர். அரசகுடி விழுப்பரையன் விலையாகக் கொண்ட 2 குடும்பத்து அடிமைகள் 3 ஆடவர், 2 மகளிர். அரசகுடி அரயன் பிள்ளையாழ்வான் ஒரு அரசகுடும்பத்து அடிமைகளான 2 பெண்ணை விலைக்கு வாங்கினான்.

    விளக்கம்: 7 – 8 வரிகள் > நித்தன்திருவடி & சிங்கனூரன் இந்த இருவர் சார்பாக கோயில் பெற்ற அடிமைகள் ஒரு குடும்பத்து 2 ஆண்கள். தவுமியன் & ஆதித்தன் இந்த இருவர் சார்பாக பெற்ற அடிமை ஒரு பிராமண குடும்பத்து 2 பெண்கள். சக்கரபாணி & பிராம்மணி என்ற பிராமணர் சார்பாக 1 குடும்பத்து அடிமை 1 ஆண். இதற்கு முன்பு மூன்றாம் குலோத்துங்கன் 9 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1187) விலைக்கு வாங்கி இறைவனுக்கு உரிமையாக்கி விடப் பட்டவர் குறிக்கப்படுகின்றனர். நாகனூர் கவுணியன் ஒரு குடும்பத்து ஒரு பெண்ணை இறைவனுக்காக விற்றான். சூரியதேவன் சார்பாக பெற்ற அடிமை 2 குடும்பத்து 5 ஆடவர், 2 மகளிர் ஆவர். அருமாரி நம்பி இறைவனுக்கு விற்றுக் கொடுத்த அடிமை 1 குடும்பத்து 3 மகளிர் ஆவர்.

    விளக்கம்: 9 – 10 வரிகள் > இரண்டாம் இராசராசனின் 7 ஆம்ஆட்சி ஆண்டில் (கி.பி. 1153) பிராமணி சாநி சார்பாக கோவிலுக்கு தானமளிக்க அவள் மகன் மேற்பார்வையில் 1 குடும்பத்து 5 மகளிர் 60 காசுக்கு வாங்கப்பட்டனர். மூன்றாம் குலோத்துங்கன் 10 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1188) பாலாசிரியன் & சங்கரசிவன் சார்பில் 19 காசுக்கு 3 குடும்பத்து 2 ஆடவர், 3 மகளிர் விலைக்கு வாங்கப்பட்டு கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டனர்.

    ஆக நான்கு வெவ்வேறு காலங்களில் மூன்று வேந்தர் ஆட்சியில் 40 குடும்பத்து 48 ஆடவர், 57 மகளிர் என 105 அடிமைகள் கோவிலுக்கு தம்மைத் தாமே தானமாகத் தந்தும், பிறரால் பணம் கொடுத்து வாங்கப் பெற்று கோவிலுக்கு தானமாகத் தரப்பட்டவர்களும் ஆவர். இந்த அடிமைத்தனம் ஏதோ ஒரு நம்பிக்கையின் காரணமாக நடந்தேறியதாகவே தோன்றுகிறது. எண்ணிப் பார்க்கையில் சிறுபிள்ளை விளையாட்டாகவே உணரமுடிகிறது. ஆனால் பலரும் இக்கல்வெட்டுகளை பலவராகப் புரிந்துகொண்டு திட்டிதீர்த்து வெறுப்பை உமிழ்கிறார்கள்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பக். 202-205, 2004, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.

    Share
  • 2019 பிப்ரவரி 22 தேதி ஜப்பான் கழுகு என அழைக்கப்படும் ஹயபூஸா -2 “ரியூகு” முரண்கோளில் இறங்கியுள்ளது

    -சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu

    Japan Eagle Hayabusu -2 Lands on Asteriod Ryugu

    [February 22,  2019]

    1. https://youtu.be/qeMwAdquDYM
    2. https://youtu.be/8H4aZX_8hMA
    3. https://youtu.be/mgfc0jliVjA

    நிலவினில் முதற்தடம் வைத்து
    நீத்தார் பெருமை யாய்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத்
    தவ்விய தளவுளவி களை 
    நாசாவும்
    ஈசாவும் கொண்டு இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    விண்வெளியில் வால்மீன் ஒன்றை
    விரட்டிச் சென்று வால் வீசிய
    தூசியைப் பிடித்து வந்தார்
    காசினிக்கு !
    வக்கிரக் கோள் மாதிரி எடுத்து
    வையத்தில் இறக்கிடும்
    இப்போது ஜப்பானின்
    ஹயபூசா முதல் விண்ணுளவி
    அயான் எஞ்சனை இயக்கி
    ஆறு பில்லியன் மைல் கடந்து
    சீராய் மாதிரி கொணரும் !
    ஹயபூசா -2 இன்று ரியூகுவில் இறங்கும் !
    பூர்வ உயிர் மூலவிகள்
    வேர் காணப் புறப்படும்
    ஆர்வத் தளவுளவி.
    2025 ஆண்டில்
    அமெரிக்க விண்வெளித்  தீரர்
    வக்கிரக் கோளில்
    வைப்பர் தம் கொடி !

       [January 16, 2019]
    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu

    ஜப்பான் கழுகு ஹயபூசா -2 விண்கப்பல் புதிய முரண்கோளில் இறங்கியுள்ளது.

    2018 ஆண்டு முதலாய் ஜப்பான் கழுகு என்னும் ஹயபுசா -2 தளவுளவி ரியூகு முரண்கோளை விரட்டிப் பிடிக்க முயன்று, 2019 பிப்ரவரி 22 இல் வெற்றிகரமாய் தகுந்த இடத்தில் இறங்கி யுள்ளது. அதன் குறிக்கோள் முரண்கோள் ரியூகுவின் தள மாதிரி மண்ணை எடுத்துச் சேகரித்து, புவிக்கு மீளும் சுய இயக்குத் திட்டம். சின்னஞ் சிறு மண் மாதிரிகளைச் சேமிக்க தளவுளவி யில் பல்வேறு சுடும் கருவிகள் [Firing Projectiles] அமைக்கப் பட்டுள்ளன. முரண்கோள் ரியூகு [ C-Type] [கார்பன் மூலக்கூறுகள்] கொண்டது. அவை 4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு சூரிய மண்டலம் எப்படி இருந்திருக் கலாம் என்று விளக்கம் அளிக்கும். அவற்றில் உயிரின மூலவிகள் தோன்றத் தேவையான பூர்வ ஆர்கானிக் புரோட்டீன்கள் செழிக்கும் அமினோ ஆசிடுகள் [Amino acids] என்று எதிர்பார்க்கப் படுகிறது. சூரிய மண்டலத்தில் உள்ள முரண்கோளில் மூன்றில் இருபங்கு [68%] கார்பன் மூலக்கூறுகள் கொண்டவை யாக [C-TYPE] கருதப் படுகின்றன. ஜப்பான் சுய இயக்குத் தளவுளவி ஹயபூசா -2 போல் நாசா விஞ்ஞானிகளும் ஆசிரிஸ் – ரெக்ஸ் விண்ணுளவி [Osiriis-Rex Spacecraft] தற்போது “பென்னு” என்னும் C-TYPE முரண்கோளை [BENNU ASTEROID] ஆராய்ந்து வருகிறது. 1500 அடி அகலம் உடைய “பென்னு ” முரண்கோள் ரியூகுவை விடச் சிறியது. அதன் மாதிரி மண்ணை 2023 இல் தான் நாசா புவிக்கு மீட்டுக் கொண்டுவரும். ஜப்பான் புவிக்குக் கொண்டுவரும் ரியூகு மாதிரி மண் 2020 இல் கிடைக்கும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu

    Image result for Japan Hayabusa -2 landed on Ryugu
     

    ஜப்பான் விண்வெளித் தேடலில் முன்னோடி முயற்சிகள்

    சூரிய மண்டல மூலாதாரத் தோற்றத்தை ஆய்வு செய்யும் விண்வெளித் தேடல் பயணங்களில், சூரியனைச் சுற்றும் முரண்கோள்களைச் [Asteroids] சுற்றி, அவற்றில் தடம் வைத்து மாதிரி மண்ணை எடுத்துப் பூமிக்கு மீளும் யந்திர சுய இயக்கப் பொறி நுணுக்கத்தில் ஜப்பானை யாரும் மிஞ்ச முடியாது. அந்த பயணங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது ஜப்பானின் “ஹயபுஸா-2” விண்ணுளவி. அடுத்து புரியப் போகும் சாதனை பிப்ரவரி 22, 2019 இல் நிகழப் போகிறது. அதாவது 880.மீடர். [540 அடி] விடமுள்ள “ரியூகு” முரண்கோளில் ஹயபுஸா -2 இன் தளவுளவி இறங்கப் போகிறது. முரண்கோளில் தடமிடும் இடம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.. 2018 ]செப்டம்பரில் ஜப்பான் விண்வெளி ஆணையகம் [JAXA – JAPAN AEROSPACE EXPLORATION AGENCY] 10 கி.கிராம் [22 பவுண்டு] பளு உள்ள மாஸ்காட் [MASCOT] [MOBILE ASTEROID SURFACE SCOUT] என்னும் தளவுளவியை ஏவி வெற்றிகரமாக அங்கே இறக்கியுள்ளது.

    Japan Landers
    மாஸ்காட் தளவுளவியின் கருவிகள் படங்களைப் பல்வேறு அலை நீளங்களில் பதிவு செய்யும். நுண்ணோக்கி மூலம் முரண்கோளின் தாதுக்களை ஆய்வு செய்யும். தள உஷ்ணத் தையும், காந்த சக்தியையும் அளக்கும். ஜப்பானிய “கழுகு” எனக் கருதப்படும் ஹயபூஸா – 2 ஒரு சமயலறை ரெஃப்ரிஜெரேட்டர் அளவு கொண்டது. 2014 டிசம்பரில் ஏவப்பட்ட ஹயபுஸா 2 அனுப்ப ஆகும் நிதிச் செலவு சுமார் U$ : 260 மில்லியன். அது ரியூகு மாதிரி மண்ணை 2020 ஆண்டில் பூமிக்குத் தானாய்க் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவ்விதம் எடுக்கப் பட்ட மண் மாதிரிகள் பிரபஞ்ச உயிரினங்கள் பற்றிய தகவலை விஞ்ஞானிகளுக்கு கூறும். அத்துடன் வேறு எந்த மூலகங்கள் [Elements] சேர்ந்து, பூமியில் உயிரினங்கள் தோன்றின என்றும் அறிவிக்கும்.

    ஜப்பான் கழுகு -2 பயணம்

    Information News

    1. https://www.nytimes.com/2019/02/21/science/ryugu-asteroid-hayabusa2.html  [February 21, 2019]
    2. https://www.dailymail.co.uk/sciencetech/article-6215311/Japans-hopping-Ryugu-robots-send-video-surface-asteroid-180million-miles-away.html
    3. https://www.breitbart.com/news/touchdown-japan-probe-hayabusa2-lands-on-distant-asteroid/
    4. https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
    5. https://www.express.co.uk/news/science/1090651/Asteroid-landing-live-stream-japan-hayabusa-asteroid-ryugu-landing-watch-online
    6. http://www.the-japan-news.com/news/article/0005561687 [February 22, 2019]
    7. https://en.wikipedia.org/wiki/Hayabusa2  [February 23, 2019]

    -S. Jaybarathan  [jayabarathans@gmail.com] February 23, 2019]  [R-1]

    Share
  • புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னும் தாய்மை

    இந்தியாவிலேயே முதல் முறையாக வாடகைத்தாய் முறையில் இடமாற்று அறுவை சிகிச்சை செய்த கருவகத்தில் இருந்து கருமுட்டையை வயிற்றுப் புறதோலின் வழியே உறிஞ்சி எடுத்துப் பெண் குழந்தை பிறப்பு.

    27 வயதுடைய, திருமணமாகி 3 வருடங்கள்  2014 வருடம் (21/7/2014) கர்ப்பப்பை மற்றும் ஒரு கருவகத்தை நீக்கிவிட்டனர். குழந்தை பிறப்பு மற்றும் மகளிர் நலத்தினை கருத்தில் கொண்டு ,பிறகு அதற்கு ரத்தஓட்டம் சீராக உள்ளதா என்பதையும் தக்க பரிசோதனை செய்து உறுதி செய்ததுக்கொண்டனர்.

    இந்த பெண்மணிக்கு எங்கள் மருத்துவமனையில் கருவகத்தை ஊக்குவிக்கும் ஊசிபோட்டு கருமுட்டையை வளரசெய்து, உறிஞ்சி எடுத்து கணவரின் விந்தணுவுடன் இணைய செய்து, சோதனைக்குழாய் குழந்தை சிகிச்சை முறையில் வாடகை தாய்கருப்பையில் செலுத்தி, அதன்மூலம் 16/2/2019 அன்று மாலை 5:26 மணிக்கு, பெண்குழந்தை பிறந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பதிவுசெய்வதில் ஜிஜி மருத்துவமனை மிகுந்த பெருமை அடைகிறது. குழந்தை நலமாக 2.62 kg எடையுடன்உள்ளது.

    இந்த மாதிரி கருவக இடமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு “லாப்ராஸ்கோப்பி” முறையில் வயிற்றுப் புறத்தின் வழியாக மட்டுமே கருமுட்டையை உறிஞ்சி எடுத்து இருப்பதாக மருத்துவ இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

    ஆனால் இந்தப் பெண்மணிக்குக் கருமுட்டையை வலதுபுற வயிற்றுப் பகுதியின் தோல் வழியே ஒலியதிர்வுக் கருவி (ஸ்கேன்) உதவியுடன் கருமுட்டையை உறிஞ்சி எடுத்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    புற்றுநோய் ஆரம்ப நிலை மற்றும் பாதித்தவர்கள் அந்த சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்பு அவர்களுடைய

    1. கருமுட்டை,
    2. இணைந்த கரு மற்றும்
    3. விந்தணுக்களை

    பல வருடங்கள் உறைய வைத்து சேமிக்கலாம். இவை மட்டுமே பல வருடங்களாக சிகிச்சை முறையில் இருந்து வருகின்றன. இதன் மூலமாக ஆரோக்கியமான குழந்தைகள் உலகம் முழுவதும் பல பிறந்துள்ளன.

    ஆனால் இப்போது

    1. கருவகத்தை வயிற்றுப் புறத்தின் உட்பகுதியில் ரேடியேஷன் பாதிக்காத அல்லது குறைந்த அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடத்தில் இடமாற்று சிகிச்சை முறையில் வைத்துக்கொள்ளலாம்.
    2. கருவகத் திசுவினைப் பதப்படுத்தி அதனை மீண்டும் புற்றுநோய் சிகிச்சைக்கு பின்மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்திக்கொள்ளலாம். இந்தக் கருவகத் திசு உறைய வைத்த முறை மூலம் 2004 ஆம் ஆண்டு டாக்டர் ஜாக்கஸ்டோன்னஸ் (Dr Jacques Donnez from Saint-Luc in Brussels) குழந்தை பிறக்கச் செய்துள்ளார்.

    சவால்கள்:

    1. இந்தக் கருவக மாற்று அறுவை சிகிச்சையினால் ஒரு சில நேரத்தில் ரத்த ஓட்டம் சரியாக செயல்படாமல் போவதுண்டு.
    2. கருவக இடமாற்று அறுவை சிகிச்சையினால் ஒரு சில சமயத்தில் முதிர்ந்த கருமுட்டையை உறிஞ்சி எடுப்பது சவாலாகவே இருக்கும்.

    நன்மைகள்:

    கருவக இடமாற்று அறுவை சிகிச்சையினால் சொந்த மரபியல் குழந்தையைப் பெற்றெடுக்க இயலும். இந்த முறை புற்றுநோய் ஆரம்ப நிலை மற்றும் பாதித்தவர்களுக்கு ஒரு வர பிரசாதமாகவே இருக்கும். ஜிஜி மருத்துவமனை இப்போது கருவக திசு பதப்படுத்துதல் முறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

    Share
  • 1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்

    -த. சீனிவாசன்

    கணியம் அறக்கட்டளை

    அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை

    • Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள் சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
    • FreeTamilEbooks.com தளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்கூறு நல்லுலகெங்கும் வாழும் பல்திறப்பட்ட ஆர்வலர்கள் தொடர்ந்து மின்னூலாக்கத்தில் ஊக்கத்துடன் ஈடுபட்டுவருகின்றார்கள்.
    • ta.wikisource.org தளத்தில் விக்கிப்பீடியா குழுவினருடன் இணைந்து 2000 க்கும் மேற்பட்ட மின்னூல்கள் எழுத்துணரி (OCR) மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டு, மெய்ப்பு (Proof Reading) பார்க்கப்பட்டு வருகின்றன.

    இப்பணிகளுக்குத் தேவையான பல்வேறு மென்பொருட்கள் உருவாக்கப் பட்டு, கட்டற்ற மென்பொருட்களாக (Free Open Source Software) வெளியிடப்படுகின்றன.

    தன்னார்வலர்களே  இத்தகு முயற்சிகளுக்கு பின்புலமாகவும் பக்கபலமாகவும் இருந்து வருகின்றனர். இப்பணிகள் தமிழ் மொழி சார்ந்த இலக்குகளை அடைவதற்கு சிறந்த வெளியை ஏற்படுத்தி தந்துள்ளது. ஆர்வலர்கள் இணைந்து பணியாற்றவும் வழிவகுத்துள்ளதுடன், நம்பிக்கையூட்டுவதாகவும் உள்ளது.

    மாணவர் பதிப்பகம்

    சென்னையில் உள்ள மாணவர் பதிப்பகத்தார் 30 ஆண்டுகளாக, புழக்கத்தில் இல்லாத, அரிய பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், தமிழின மேன்மைக்கு வித்திட்ட சான்றோர் நூல்களையும், தேடி எடுத்து, பொருள் வழிப் பிரித்து, சீராக அச்சிட்டு வருகின்றனர்.

    அவர்கள் வெளியிட்ட முக்கிய எழுத்தாளர்களின் முழுத் தொகுதிகள் குறிப்பிடத் தக்கவை. பாவாணர், சாமி சிதம்பரனார், நா.மு.வே நாட்டார், மயிலை.சீனி.வெங்கடசாமி, வெள்ளை வாரணர், இளங்குமரனார், திரு.வி.க, இராசமாணிக்கனார், சாமிநாத சர்மா, ஔவை துரைசாமி, முடியரசன், ந.சி. கந்தையா, மறைமலையடிகள், வ.சுப. மாணிக்கனார், அப்பாத்துரையார் ஆகியோரின் எல்லாப் படைப்புகளும்  வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் பல்வேறு பழந்தமிழ் அகராதிகள், சொற்களஞ்சியங்கள், கருணாமிர்த சாகரம் போன்ற இசை நூல்கள், பண்டைய தமிழ் இலக்கிய நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    நூல் பட்டியல்

    1. பாவேந்தர் பாரதிதாசன் – 167 நூல்கள்
    2. கா. அப்பாத்துரையார் – 98 நூல்கள்
    3. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் – 80 நூல்கள்
    4. சாமிநாத சர்மா நூல்திரட்டு – 76 நூல்கள்
    5. ந.சி.க. நூல் திரட்டு – 65 நூல்கள்
    6. திரு.வி.க. தமிழ்க்கொடை – 54 நூல்கள்
    7. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் – 53 நூல்கள்
    8. மறைமலை அடிகள் – 52 நூல்கள்
    9. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் – 37 நூல்கள்
    10. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் – 39 நூல்கள்
    11. மாணிக்க விழுமியங்கள் – 34 நூல்கள்
    12. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் – 32 நூல்கள்
    13. ஔவை துரைசாமி உரைவேந்தர் தமிழ்த்தொகை – 32 நூல்கள்
    14. புலவர் குழந்தை படைப்புகள் – 28 நூல்கள்
    15. சங்க இலக்கியக் களஞ்சியம் – 22 நூல்கள்
    16. கவியரசர் முடியரசன் படைப்புகள் – 22 நூல்கள்
    17. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை – 21 நூல்கள்
    18. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் – 20 நூல்கள்
    19. தொல்காப்பிய உரைத்தொகை – 19
    20. பதினெண் கீழ்க்கணக்கு – 18 நூல்கள்
    21. தமிழ் இலக்கணப் பேரகராதி (கோபாலையர்) – 18 நூல்கள்
    22. இராகவன் நூற்களஞ்சியம் – 16 நூல்கள்
    23. சதாசிவப் பண்டாரத்தார் – 16 நூல்கள்
    24. தொல்காப்பியம் (உரைகளுடன்) – 15 நூல்கள்
    25. செவ்விலக்கிய கருவூலங்கள் -15 நூல்கள்
    26. தேவநேயப் பாவாணர் – 13 நூல்கள்
    27. தமிழக வரலாற்று வரிசை – 12 நூல்கள்
    28. நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் – 10 நூல்கள்
    29. செம்மொழிச் செம்மல்கள் – 10 நூல்கள்
    30. பி. இராமநாதன் – 10 நூல்கள்
    31. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் – 10 நூல்கள்
    32. கருணாமிர்த சாகரம் -7 நூல்கள்
    33. ஐம்பெருங் காப்பியங்கள் – 5 நூல்கள்
    34. முதுமொழிக் களஞ்சியம் – 5 நூல்கள்
    35. சுப்புரெட்டியார் – 3 நூல்கள்
    36. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதி – 3 நூல்கள்
    37. உவமைவழி அறநெறி விளக்கம் – 3 நூல்கள்
    38. யாழ்ப்பாண அகராதி -2 நூல்கள்
    39. ந.சி. கந்தையா அகராதிகள் – 2 நூல்கள்
    40. நீதி நூல்கள் – 2 நூல்கள்
    41. குறுந்தொகை விளக்கம் (இராகவன் ஐயங்கார்) – 1 நூல்

    மொத்த பக்கங்கள் – 2 இலட்சத்துக்கு மேல்

    மொத்த நூல்கள் – 1,165

    நாட்டுடைமை நூல்களை மின்னூல்களாக வெளியிடுதல்

    தமிழ் இணையக் கல்விக் கழகம் நாட்டுடைமை நூல்களை PDF கோப்புகளாக வெளியிட்டுள்ளது. அவற்றை விக்கி மூலம் பங்களிப்பாளர்கள், OCR கருவி மூலம் எழுத்துகளாக மாற்றி, அதில் ஏற்பட்ட பிழைகளைக் களைந்து வருகின்றனர்.

    கடும் மனித உழைப்பையும் நேரத்தையும் கோரும் பணி இது. இப்போதுள்ள சுமார் 2000 மின்னூல்களைப் பிழைத்திருத்தம் செய்து உரை வடிவில் வெளியிட சில பத்தாண்டுகள் ஆகலாம்.

    இந்நிலையில், நாட்டுடைமை நூல்களை அச்சு நூல்களாக வெளியிடும் மாணவர் பதிப்பகம், அவற்றை உரை வடிவிலும் வைத்திருக்கக் கூடும் என்றெண்ணி, அவர்களிடம் இது பற்றி உரையாடினோம். அவர்களது பதிப்புகள் அனைத்தும் ஒருங்குறி எழுத்துருவில் வேர்ட் ஆவணங்களாகவே இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ந்தோம்.

    விக்கிமூலத்தில் proof read பணிகள் பற்றியும், கணியம் அறக்கட்டளை, FreeTamilEbooks.com வெளியீடுகள் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்தோம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் அனைவருக்கும் இலவசமாகவே மின்னூல்களை தருவது அறிந்து மகிழ்ந்து வாழ்த்தினர்.

    தம்மிடம் உள்ள 1000க்கும் மேற்பட்ட மின் நூல்களின் [2 இலட்சத்துக்கு மேல் பக்கங்கள்] ஒருங்குறியில் உள்ள வேர்டு ஆவணங்களை, கணியம் அறக்கட்டளை இலவசமாக வெளியிடுவதற்கு தருவதாக உறுதி கூறினர். அவையாவும் இலவச மின்னூலாக வெளிவரும்போது தமிழின் அரும்பெரும் படைப்புகள் அனைவரது கைகளிலும் தவழும் இனிய நிலை உருவாகும்.

    மாணவர் பதிப்பகத்தாரின் பெரும்பணிகளுக்கும், 1000 க்கும் மேற்பட்ட நூல்களை pdf ஆக அல்லாமல் ஒருங்குறி வடிவில் தருவதற்கும், அதற்கான தட்டச்சு செலவின் ஒரு பகுதியையாவது தருவதாக உறுதி கூறினோம்.

    இதற்கான நன்கொடையாக ரூபாய் 5 லட்சம் அளிப்பதாக இசைந்தோம். நாம் ஒரு பக்கத்திற்கு எவ்வளவு நன்கொடையாக செய்கிறோம் என்று எண்ணினால், அது ஒரு மிகச் சிறிய தொகை [2.5 ரூபாய் /பக்கம்].

    கணியம் அறக்கட்டளையின் பணிகள் யாவும் தன்னார்வலர்களாலும், வாசகர்களின் நன்கொடைகளாலும் மட்டுமே நடப்பதை விவரித்து, இரண்டு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம்.

    அவர்களிடமிருந்து நூல்களைப் பெற்ற பின், அவற்றுக்கு அட்டைப்படம் சேர்த்து, விக்கிப்பீடியாவின் துணைத்திட்டமான விக்கிமூலம் தளத்திலும் (https://ta.wikisource.org), கூடவே கிண்டில், கைபேசி, கணினி என அனைத்து மின்னணுக் கருவிகளிலும் படிக்கும் வகையில், epub, mobi, A4 PDF, 6 inch PDF ஆகிய வடிவங்களில் FreeTamilEbooks.com இலும், வெளியிடுவோம்.

    நன்கொடை வேண்டுகோள்

    இரண்டு மாதங்களில் ரூபாய் 5 லட்சம் நன்கொடை பெறுதல் என்பது பெரும் பணி தான். ஆயினும் கணியம் அறக்கட்டளையின் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இச்செய்தியை கொண்டு சென்று சேர்க்க வேண்டுகிறோம். பல நூறு பேரின் நன்கொடைகளும் இந்த இலக்கை எட்ட பேருதவி புரியும்.

    தமிழின் மீதும், தமிழ் நூல்கள், மின்னூல்கள் மீதும் ஆர்வம் கொண்ட உங்கள் அனைவரையும் மார்ச்சு 30, 2019 அன்றுக்குள், நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்.

    வெளிப்படைத்தன்மை

    வங்கி விவரங்கள்

    Kaniyam Foundation
    Account Number : 606 1010 100 502 79
    Union Bank Of India
    West Tambaram, Chennai
    IFSC – UBIN0560618

    நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

    தொடர்புக்கு

    த. சீனிவாசன் – 9841795468
    அன்வர் – 8124782351 (வாட்சப் எண்)

    kaniyamfoundation@gmail.com

    Share
  • படக்கவிதைப் போட்டி 200-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    200ஆவது வாரமாக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படக்கவிதைப் போட்டிக்குத் தொடர்ந்து பங்களிப்பு செய்துவரும் படைப்பாளிகளுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும், போட்டிக்கு வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுத்துத் தந்துவரும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும், இப்போட்டியைத் தொடர்ந்து வல்லமை மின்னிதழில் இடம்பெறச் செய்துவரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், அனைத்திற்கும் மேலாய் இப்போட்டிக்கு வரும் கவிதைகளை வாசித்தும் நேசித்தும் தம் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்ற வல்லமை வாசகர்களுக்கும் என் நனிநன்றி!

    ஒன்றையொன்று அணைந்துகிடக்கும் அழகிய நாய்க்குட்டிகளைத் தன் புகைப்படக் கருவியில் அள்ளியெடுத்து வந்திருக்கின்றார் புகைப்படக்கலை வல்லுநர் திருமதி. சாந்தி மாரியப்பன். அவருக்கு என் நன்றி!

    நன்றி எனும் குணத்துக்குச் சொத்தாக இருப்பதனால்தான் நாய்களை வீட்டுக்கேற்ற காவலனாகவும், உற்ற தோழனாகவும் மனிதர்கள் அன்றுதொட்டு இன்றுவரை பயன்படுத்தி வருகின்றனர்.

    “நட்புக்கு நன்றிமிகு நாயனையாரைத் தேர்; உணவளிக்கும் பாகனையே கொல்லும் யானையனையாரைத் தவிர்” என்று அறிவுறுத்துகின்றது நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி.

    யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
    கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
    மெய்யதா வால்குழைக்கும் நாய்.
    (நாலடி – 213)

    மனங்கவர் நாய்க்குட்டிகள் குறித்துக் கவிவடிக்கச் செந்நாப் புலவர்கள் சிலர் சீரிய கற்பனைகளுடன் காத்திருக்கின்றார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!

    *****

    ”உணவோடு தாய் வரும்வரை ஓய்வெடுப்போம் தரையினிலே என்று அன்னையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாய்க்குட்டிகள் இவை” என்று நவில்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நன்றியால் நல்லுணவு…

    தயக்கம் வேண்டாம் தம்பிகளே
    தாயவள் கொணர்வாள் நமக்குணவு,
    பயமெதும் வேண்டாம் பிள்ளைகளே
    படுத்தி டுங்கள் தரையினிலே,
    வயிறு பசித்தால் மனிதர்தான்
    வழிமுறை யெல்லாம் மறந்திடுவார்,
    உயிராய் மதிக்கும் நன்றிகாட்டி
    உணவுடன் வருவாள் நம்தாயே…!

    *****

    ”தாயாரைக் காணாமல் தவித்திருக்கும் எம்மீது தறிகெட்டு ஓடித்திரியும் வண்டியின் சக்கரமோ, குறிவைத்துச் சுடுகின்ற குறவனின் துப்பாக்கி குண்டோ, பொறிவைத்துப் பிடிக்கும் ஊர்ச்சேவகனின் கயிறோ படாதிருக்கவேண்டுமே” என்று பதைபதைக்கும் நாய்க்குட்டிகளைக் காண்கிறோம் திரு. யாழ் பாஸ்கரனின் கவிதையில்.

    தாயாரைக் காணவில்லை

    தாயாரைக் காணவில்லை
    தந்தையார் யார் என்று தெரியவில்லை
    வாயாரச் சொல்லியழ வழியுமில்லை
    நாயாகப் பிறந்துவிட்டோம் நடுத்தெருவில் கிடக்கின்றோம்

    ஓயாமல் தேடி அலைந்து திரிந்து விட்டோம்
    ஒரு வழியும் பிறக்கவில்லை
    ஒருவரையும் காணத்தான் முடியவில்லை
    ஓரமாய்ப் படுத்து விட்டோம்

    பசியடங்கா எங்கள் பாழ்(ல்) வயிற்றுப்
    பசியாற்ற எங்காவது கால் வயிற்றுக் கஞ்சி தேடி
    திசை தெரியாமல் திரியும் எம் அன்னை
    திரும்பி வருவாளோ மாட்டாளோ யார் அறிவார்?

    தறிகெட்டு ஓடித்திரியும் வண்டியின் சக்கரத்திலோ
    குறிவைத்துச் சுடுகின்ற குறவன் துப்பாக்கி குண்டிலோ
    பொறிவைத்துப் பிடிக்கும் ஊர்ச்சேவகன் கயிற்றிலோ
    வெறி விலங்கு கடியிலோ சிக்காமல் சீக்கிரம் வந்திட வேணும் சாமி

    மண்ணில் மானிடராய்ப் பிறந்திருந்தால்
    மடியிலிட்டுத் தாலாட்ட உற்றார் உறவினர்கள் உண்டு
    மண்தரையில் கிடக்கின்ற எங்களை
    மனமிறங்கி மனைக்கு அழைக்க யாருண்டு

    நாயாக நாங்கள் இருந்தாலும் நட்புடனே நல்லோர் சொன்ன
    நல்வழியில் தான் சென்றிடுவோம் – நாளும் வாலாட்டி
    நன்றியுடன் தான் காலடியில் காத்துக்கிடப்போம்
    நல்லோரே நாங்களும் வாழ நல்வழிகாட்டி நலங்காப்பீர்!

    இவரே (திரு. யாழ் பாஸ்கரன்), தன்னுடைய மற்றொரு பாடலில், ”இன்பம் துன்பம் சேர்ந்ததே வாழ்வாகும்; இதை உணர்ந்தால் எல்லாம் சிறப்பாகும்; தரையில் கிடக்கின்ற எங்களுக்கும் தன்னம்பிக்கை உண்டு; தலைநிமிர்வோம் நாளை” என்று
    நாய்க்குட்டிகளை நம்பிக்கையின் நாயகர்களாக்கியிருக்கக் காண்கிறோம்.

    செம்பவளக் கண்ணுகளா! செல்லமணிக் குட்டிகளா!
    செம்மண் சாலையிலே சேர்த்தணைத்து விளையாடும் நீங்களெல்லாம்
    செம்பருதிச் சுடர்க் கதிரின் புது ஒளியோ
    செழுமை மிகு நிலமகளின் உயிர்த்துடிப்போ

    மந்தை மண்ணினிலே கிடக்கும் நமக்கு
    தந்தை தாய் அருகில் இல்லை அதனாலே
    சந்தையில் விலை கூவி விற்றிடுவார் எனச்
    சிந்தையிலே என்ன எண்ணிலாச் சிந்தனையோ

    ஒருதாய்ப்பிள்ளைகள் நாம் எல்லோரும்
    ஒற்றுமையின் பலத்தாலே கட்டுண்டோம்
    ஒரு சிறு பொழுது விலகிப் பிரிந்தாலும் அஃது
    ஒரு பெரும் துயர் அதைத் தாங்கமாட்டோம்

    எல்லோருக்கும் எங்களைப் பிடிக்கும்
    என்றாலும் சில கற்கள் எம்மை வந்து அடிக்கும்
    எங்களுக்கும் வாழ்வு உண்டு நாளை
    எல்லோருக்கும் அது ஒரு நல்வேளை

    தூக்கிப்போடு துன்பத்தைத் துள்ளி ஆடு இன்பத்தில்
    இரவும் பகலும் இணைந்தே ஒரு நாளாகும்
    இன்பம் துன்பம் சேர்ந்ததே வாழ்வாகும்
    இதை உணர்ந்தால் எல்லாம் சிறப்பாகும்

    தரையில் கிடக்கின்ற எங்களுக்கும்
    தன்னம்பிக்கை கொஞ்சம் உண்டு
    தலைநிமிர்வோம் தடை தாண்டி
    தலைமையேற்போம் தகுதிகளோடே

    *****

    ”நன்றியின் மறுபெயர் நாய் என்று பேசும் இதே மாந்தக்கூட்டம் மறுநாளே நன்றிகெட்ட நாயென நம்பேர் சொல்லி ஏசும். பசித்திருக்கப் பழகிடுவீர் பிள்ளைகளே! பிறர் துயர்கண்டு அசையாத நெஞ்சங்களுக்கு இங்கே பஞ்சமில்லை” என்று உலகறியாத் தன் குட்டிகளுக்கு வஞ்சக உலகை அடையாளம் காட்டும் தா(நா)யைப் படைத்திருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    நாய் தன் குட்டிகளிடம்…

    ஒருநாள் நன்றியின் மறுபெயர் நாயென்கும்.. அதுவே
    மறுநாள் நன்றி கெட்ட நாயேயென்கும்..
    சிறிதளவு உணவளித்துக் காவலுக்கு நில்லென்கும்..!!

    நாப் பிறழ்ந்து பேசும்.. இந்த
    நா அடக்கம் அற்ற
    நா உள்ள மாந்தக் கூட்டம்.. (ஒருநாள்)

    வாலாட்டும் குணத்தாலே.. நமைத்
    தாலாட்டும் இவ்வுலகு என்
    றெல்லாம் நீவிர் எண்ணிவிடாதீர்.. (ஒருநாள்)

    பொல்லாத உலகிது.. பல கற்றும்
    கல்லாத நிலையில் உழன்று
    அல்லாதன செயும் மாந்தக் கூட்டம்.. (ஒருநாள்)

    இறைபடைப்பின் உயிர்களெல்லாம்.. இத்
    தரையில் தனித்துவாழ நமக்குமட்டும்
    நிறைவிலா அடிமை வாழ்க்கை.. (ஒருநாள்)

    பசித்திருக்கப் பழகிடுவீர்.. உமது
    கசிந்துருகும் மொழிக்கெல்லாம்
    அசையாத இதயங்கள் இங்கு ஏராளம்.. (ஒருநாள்)

    *****

    நாய்க்குட்டிகளை வைத்தொரு வாழ்வியல் ஆய்வையே நிகழ்த்தியிருக்கின்றார்கள் நம் வித்தகக் கவிகள்! பாராட்டுவோம் அவர்களை!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    எழுதுங்கள் புதிய பாடல்

    கற்றுக்கொள்ளுங்கள் எங்களிடம்
    கட்டியணைத்து உறவாட
    அண்ணன் தம்பி ஆனாலும்
    அடித்துக் கொள்ளாமல்
    பார்த்த உணவைக் கூடிப்
    பகிர்ந்து உண்ணுவோம்
    மாடி வீட்டில் வாழ்ந்தாலும்
    மண் தெருவில் ஓடினாலும்
    ஏளனம் செய்யோம் ஒருபோதும்
    எதிர்ப்படும் எம் நண்பர்களை
    இருந்தால் குதியாட்டம்
    இல்லாவிட்டால் குடியாட்டம்
    வெந்ததைத் தின்று
    விதிவந்தால் மாளும் கூட்டத்தில்
    அத்தனைக்கும் ஆசை
    அளவுகடந்த பொறாமை
    அடுத்தவனை அழிக்க
    அனுதினமும் ஒருதிட்டம்
    குற்றவாளிகளின் கூட்டம்
    குறைவில்லாமல் பெருகுவதால்
    காவல் துறைக்கு எப்போதும்
    கடமை செய்ய உதவுகிறோம்
    வெடிகுண்டைத் தேட
    வேகமாய் அழைப்பார் எம்மை
    நாலடியார் காலத்தில்
    நல்ல நண்பனுக்கு உவமையாய்
    எம்மைச் சொன்ன நீர் இன்று
    எல்லாவற்றுக்கும் யாம் தான்
    என எழுதுங்கள் புதிய பாடல்
    உங்களோடு உங்களாய்
    உங்கள் வீட்டில் நாங்கள்
    சரிசமமாய்ப் பழகி
    சங்கடங்கள் தீர்க்கின்றோம்
    பிறக்காத பிள்ளையாய்…
    பேசாத தோழனாய்…
    உறவுக்காரனைப் போல்
    உரிமையாய் வாழ்கின்றோம்!

    ”வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகும் இந்த மானுடக்கூட்டம் அடுத்தவனை அழிப்பதிலேயே ஆயுளைக் கழிப்பதால் காவல்துறையின் சேவை நாட்டுக்குத் தேவையாயிருக்கின்றது. காவல்துறை தன் கடமையைச் செவ்வனே செய்ய நாங்கள் துணைநிற்கின்றோம் சேவகராய். நாட்டுக்கு மட்டுமா…? வீட்டுக்கும் காவல் நிற்கின்றோம் பிறக்காத பிள்ளைகளாய்!” என்று நாய்களின் சமூகத் தொண்டை அவற்றின் வாயாலேயே தன் பாட்டில் விண்டுரைக்க வைத்திருக்கும் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்றறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 201

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஹஃபீஸ் இஸ்ஸாதீன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share