Blog

  • இந்த வார வல்லமையாளர் – 301: விமானப்படை வீரர் அபிநந்தன்

    இந்த வார வல்லமையாளர் என விமானப்படை வீரர் அபிநந்தனை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர் என்னும் கிராமத்தைப் பூர்விக ஊராகக் கொண்ட சிம்மக்குட்டி வர்த்தமானன் என்னும் விமானப்படை அதிகாரியின் மகன் திரு. அபிநந்தன். பாகிஸ்தான் படையினரால் சுடப்பட்டு, பாகிஸ்தான் ஆளும் காஷ்மீர் பகுதியில் பிடிபட்ட அபிநந்தன், திரும்பவும் இந்தியா வந்துள்ளார். அவரை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். இவர் நாடு திரும்பியதால் இந்தியா – பாகிஸ்தான் போரும் அதனால் ஏற்படும் அழிவுகளும் தடுக்கப்பட்டுள்ளன.

    அபிநந்தன் வாழியவே!

    இந்திய  நாட்டின்   வலிமையைக்  காட்டிட
    எல்லை கடந்தவன்  மீண்டான்!- அவன்
      எழுந்து  பறந்த  விமானம்  வீழினும்
            எதிரியைத்   தாழ்த்திஉ   யர்ந்தான்!

    நொந்திடச்  செய்தவர்  கொடுமைகள்  தாங்கிநம்
         சொந்தச்ச   கோதரன்  மீண்டான்! – அவன்
       நுண்ணறி வுத்திறன்  காட்டியே   வெற்றியில்
           நூழிலா  டும்திறன்  கொண்டான்!

    தந்தையி  னுள்ளம்  பெருமிதம்  கொண்டிட
           மைந்தனாய்த்  தாயகம்  வந்தான்! –  அவன்
        வந்தனன்  எம்அபி  நந்தனன்  என்றே
            வாழ்த்தும்   ஒலியிடை வந்தான்!

    விழித்திடும்  கண்முன்  வேல்பாய்ந்  திடினும்
           அழித்திமைக்  காதவன்   மீண்டான்! – தன்
       தொழிலென  நாட்டினைக்  காத்திடு  தோழன்
              சூரனாய்த்  தாய்நிலம்  மீண்டான்!

    மொழியெலாம்  தோற்றிட  முயற்சியில்  வென்றவன்
          விழிகள்  நிறைந்திட  மீண்டான்! – தனை
        அழித்திடும்  எமனையும்  அலட்சியம் செய்தே
              ஆர்ப்புடன்  நம்மிடை    நின்றான்!

    தவப்பெருந்  தாயுளம்  சந்தோஷங்  கொண்டிடத்
          தந்தையைக்  கண்டுப  ணிந்தான்! – தனை
       அவமதித்  தோர்வாய்  அடைந்திட நம்முன்
           சுயமதிப் போங்கிட  வந்தான்!

    சாகா  வரத்தினைப்  பெற்றநம்  மைந்தன்
          வாகா  எல்லைக  டந்தான்! –  நாம்
       ஆஹா, ஆஹா! என்றுபு  கழ்ந்திட
            அஞ்சனை  மைந்தனாய்  வந்தான்!

    கோலங்கள்  வாசலில்  இடுவோம் பூரண
         கும்பத்  துடன்வர  வேற்போம்! – நம்
      குலமெலாம்  வீரமே  கொண்டிட வேண்டிக்
           கூடிக்கு  லாவியே  நிற்போம்!

                                       –  திருச்சி  புலவர் இராமமூர்த்தி.
    அபிநந்தன் கும்மி
    1)
    வாழி அபிநந்தன் வாழிய வாழிய
    வான்புகழ் கொண்டனை வாழியவே
    ஆழி அலைபோலென் உள்ளமடா! – கவி
    ஆர்த்துப் பெருக்குது வெள்ளமடா!
    2)
    வாளினைப் போலுன்றன் மீசையடா! –  வடி
    வேலினைப் போன்றதுன் நாசியடா!
    தோளினைப் போலென்று காட்டிடவே – பல
    தொன்மலைக் கூட்டமும் கேட்குதடா!
    3)
    கூரிய பார்வையைத் தீட்டிடவே – கதிர்
    கோடிக் கிரணத்தைக் காட்டுகிறான்
    நேரினில் வந்தென்றன் பாட்டினிலே – அவன்
    நித்தமும் நின்றிட ஏட்டினிலே!
    4)
    மாசில் இரவிலோர் ஆதவன் போலன்று
    வானத்தில் பாய்ந்தனை தாக்கிடவே!
    தூசு நிகர்த்ததாய் அந்நியர் ஊர்தியைத்
    துண்டு பலகோடி ஆக்கினையே!
    5)
    சக்தியில் மிக்கவான் ஊர்திகளில் – பகை
    தாக்கிட வந்திடக் கண்டவுடன்
    அக்கண மேவுள வன்மையால் அன்றோநீ
    அஞ்சாமல் பாய்ந்தனை வானத்திலே!
    6)
    மாடுகள் பூட்டிய வண்டியைக் கொண்டதோர்
    வல்லமை மிக்கதோர் ஊர்தியினை
    சாடிடச் சென்றவுன் சாதனையை – எங்கள்
    தண்டமிழ் என்றென்றும் போற்றிடுமே!
    7)
    வீசிப் புடைத்திடும் ஓர்முறம் ஏந்தியே
    வேங்கையை ஓட்டிய சாகசம்போல்
    பேசும் புவிஅபி நந்தனே நீயந்தப்
    பேயவர் தம்மையே ஓட்டியதை!
    8)
    முன்னம் இருப்பது மூள்பகை ஊர்திகள்
    மூன்றென்று கண்டாலும் அஞ்சா மலே
    நன்று விரட்டியே மாட்டினைப்போல் அந்த
    நாசகர் தம்மைநீ ஓட்டினையே!
    9)
    குண்டொன்று போட்டுநீ  தாக்கிட ஓரூர்தி
    குட்டிக் கிரணத்தைப் போடவதன்
    துண்டொன்று பாய்ந்துன்றன் ஊர்தியை அல்லவா
    தொட்டுத் தொளத்ததும் கண்டனையே!
    10)
    விண்ணில் இருந்துடன் வேகம் குதித்தனை
    வித்தைச் சிறகினை ஏந்தியநீ!
    மண்ணில் இறங்கிய பூமிய தோகொடும்
    வஞ்சகர் நாடென்று கண்டனையே!
    11)
    சுற்றிலும் காதகர் சூழ்ந்துனை நின்றாலும்
    சோர்வெதும் அண்டாமல் நின்றனைநீ!
    முற்றிலும் நின்றவர் கல்லாலும் சொல்லாலும்
    மோதிப் புடைத்திடும் போதினிலும்
    12)
    ஆழ இதயத்தில் ஊறிடும் பற்றினால்
    அஞ்சாமல் நாட்டினைப் போற்றிடவே
    வாழிய பாரதம் வாழிய என்றுநீ
    மாவொலி செய்தனை கேட்டிடவே!
    13)
    அந்நியர் நாட்டினர் கையினில் உன்னுடை
    ஆவணம் சிக்குதல் ஆகாதென
    அந்நிலை கண்டுநீ தின்னத் தொடங்கினை
    ஆவிதை என்னென்று சொல்லிடுவேன்!
    14)
    தின்று முடித்திட நேரம் இலையெனச்
    சிந்தை உணர்ந்திட ஓடியங்கோர்
    சின்னக் குழியொன்றில் நீரினைக் கண்டுநீ
    முன்னம் குதித்ததை என்னசொல்வேன்!
    15)
    ஆவணம் யாவையும் வேகம் அழித்தபேர்
    ஆண்மை நிறைந்தவோர் வித்தகன்நீ!
    காவியம் காட்டிடும் சாகசம் தன்னைநீ
    கண்ணெதிர் காட்டிய அற்புதன்நீ!
    16)
    எத்தனை கேள்விகள் யாரெங்கு கேட்டாலும்
    எத்தனம் ஏதிலும் மாட்டவில்லை!
    சித்தம் உயர்ந்துள சிங்கமே என்றுன்னைச்
    செந்தமிழ் பாடிடும் நித்தமுமே!  (வாழி)
    – சிவசூரி.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • தவறிழைப்பது ஆண்களின் பிரத்தியேக உரிமையோ?

    -நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல் – 148

     

    தவறிழைப்பது ஆண்களின் பிரத்தியேக உரிமையோ?

    `அவர் தானுண்டு, தன் காரியம் உண்டு என்றிருப்பார்!’ என்று சிலரைக் குறிப்பிடுவதுண்டு.

    `நான் செய்வதில் அநாவசியமாகக் குறுக்கிடாமல் இருக்கிறார்!’ என்று பிறரை மெச்சி, அதனால் எழும் நிம்மதி எல்லோருக்கும், எப்போதும் வந்தால் உலகின் கதி என்னவாகும்?

    கணவனோ, மனைவியோ, ஒருவரை ஒருவர் நிந்திக்கும்போது, `இது அவர்கள் குடும்ப விவகாரம்!’ என்று பிறர் ஒதுங்கிப்போவதால் நிலைமை மோசமாகத்தான் ஆகிறது. பிறர் குறுக்கிட்டால், தன்மானம் கருதியாவது ஒற்றுமையாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்களே!

    கதை

    எங்கள் எதிர்வீட்டிலிருந்து பெருங்குரல் எழுந்தது. ஆண்ட்ரூ தன் மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தான். (நாற்பத்து ஐந்து வயதிருக்கும். ஆனாலும், அவனது நடத்தையால் மரியாதை கொடுக்கத் தோன்றவில்லை). அடக்க ஒடுக்கமான மனைவியைத் தான் பழகும் விலைமாதர்களைப்போல் என்றெல்லாம் பழித்த அவச்சொல்லை என்னால் தாங்க முடியவில்லை.

    ஆக்னஸ் எனக்கு நெருங்கிய சிநேகிதி. `கணவனுக்கு அடங்கியிருப்பதுதான் நல்ல பெண்ணுக்கு அடையாளம்’ என்று பொறுத்துப் போய்க்கொண்டிருந்தாள்.

    அந்த அர்த்த ராத்திரியில் நான் மட்டும் தனியாக அவர்கள் வீட்டுக்குப்போய் தட்டிக் கேட்டால் நன்றாக இராது என்று, என் கணவரையும் எழுப்பி அழைத்துப் போனேன்.

    அவர்கள் வீட்டுக் கதவை நான் தட்டித் தட்டி உடைக்காத குறை. ஒரு வழியாக வந்து கதவைத் திறந்த ஆண்ட்ரூ, “அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் அவரவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் அவர்களைப் பாராட்டுகிறேன்!” என்றான், ஆத்திரத்துடன். `உன்னை யார் அழைத்தது?’ என்று சொல்லாமல் சொல்கிறானாம்!

    நான் அயராது, “என் கணவர் இப்படி என்னை வதைத்தால், அப்போது யாராவது உதவி செய்ய வந்தால், நான் நன்றியோடு இருப்பேன்,” என்றேன்.

    உள்ளேயிருந்து பெரிய விம்மல் கேட்டது.

    இருபது ஆண்டுகளாகத் தான் படும் பாட்டைப் பெற்றோர்களிடம்கூடக் கூறியதில்லை ஆக்னஸ். கணவனிடம் அப்படி ஒரு விசுவாசம். (வதை படுகிறவர்கள் வதைப்பவர்களைத்தான் முதலில் நாடுவார்களாம்). வெளிப்பார்வைக்கு கண்டிப்பும் கறாருமாக இருப்பதைப்போல் பாசாங்கு காட்டுவாள்.

    தவறு தன்மேல் இல்லை, தனக்கும் ஆதரவு காட்ட ஒரு சிலராவது இருக்கிறார்கள் என்று தெளிந்ததும், கணவனுக்கு எதிராக நடக்கும் துணிச்சல் வந்தது அவளுக்கு. விரைவிலேயே, மேற்படிப்பைச் சாக்காக வைத்து வெளிநாடு போனாள் – கணவனை (கயவனை?) தனியே தவிக்க விட்டுவிட்டு.

    பிறரது வாழ்க்கையில் எதற்காக குறுக்கிடுகிறோம்?

    நம் செய்கையால் ஒருவருக்கு நிம்மதியோ, மகிழ்ச்சியோ கிடைத்தால், அதைப் பார்த்து நாமும் எதையோ சாதித்ததுபோல் மகிழ்வு உண்டாகிறதே! இப்படி நடந்தால் இரு தரப்பினருமே பயனடைகிறார்கள்.

    சில சமயம், நாம் நல்லதென்று எதையாவது செய்யப்போய், அது எதிர்பாராத விளைவுகளில் கொண்டுவிடுகிறது. அவர்களுக்கு எழும் அவமானத்தை நம் பக்கம் திருப்ப முனைவார்கள்.

    கதை

    “நாம்ப பெரிய புள்ளை ஆயாச்சு. வகுப்பிலே ஒக்காந்திருக்கையிலே தமிழ் படிச்சுக் குடுக்கற வாத்தியார் என் தோளிலே கை போடறாருங்க, டீச்சர்!” என்று புகார் செய்தாள் அம்மாணவி.

    வாரத்திற்கு ஒரு முறை, சனிக்கிழமைகளில் மட்டும் தமிழ் கற்றுக் கொடுப்பது அந்த மனிதனின் வேலை. பள்ளி விடுமுறையாதலால், அப்போதுதான் அங்கு நிறைய பேர் இருக்க மாட்டார்கள்.

    அந்த நிகழ்வைப் பற்றி ஒரு தமிழ் பத்திரிகையில், என் தனிப்பட்ட பகுதியில், எழுதினேன். ஊர், பெயரெல்லாம் கிடையாது.

    சில நாட்கள் கழித்து, அந்த வாத்தியாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, தொலைபேசிவழி.

    “இப்போது எல்லாருக்கும் அது நான்தான் என்று தெரிந்துவிட்டது. ஒரே ஷேம்!” என்று ஒரேயடியாகக் கத்தினான்.

    வகுப்பில் மாணவியைக் கட்டியணைத்து, அவளுக்குத் தர்ம சங்கடத்தை உண்டுபண்ணுவது அவனைப் பொறுத்தவரை தவறில்லை.

    நான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவனோ நிறுத்துவதாகத் தெரியவில்லை.

    பொறுக்க முடியாது போக, “உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது!’ என்று சொல்லிவைத்தேன். (எதிராளியைச் சமாளிக்க, அவர்கள் பக்கம் சாய்ந்துவிட வேண்டும்).

    சட்டென்று அடங்கினான். “அது நானில்லை என்று எழுதிவிடுங்கள்,” என்று உத்தரவு பிறந்தது.

    எப்படி எழுதுவது?

    `தன் மாணவியிடம் வகுப்பில் முறைகேடாக நடந்துகொண்டது இன்னார் இல்லை,’ என்றா? `எங்கப்பா குதிருக்குள்ளே இல்லை!’ என்ற கதைபோல் இருக்கிறதே!

    எதற்காக எழுதுவது?

    வயதில் தன்னைவிட மிகச் சிறியவளான ஒரு பெண்ணிடம் ஒருவர் முறைதவறி நடக்கிறார். அவரை எதிர்க்கும் சக்தியோ, பாதுகாப்போ அற்ற அப்பெண் பயந்து நடப்பதை ஏற்கிறாள். இதைப் பார்த்தும் பார்க்காதது போல், அறிந்தும் எதுவும் செய்யாமல் இருப்பது சுயநலமின்றி வேறென்ன! இந்த நிலை பரவலாக நடக்க வழிவகுப்பதுபோல் ஆகிவிடுமே!

    `நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது, என்னை அடிக்கடி வெளியே அழைத்துப் போவார் என் உறவினர். வீடு திரும்பியதும் ஏதேதோ செய்வார். அப்போது அது பாலியல் வதை என்று எனக்குப் புரியவில்லை. எல்லாச் சிறுமிகளுக்கும் அப்படித்தான் நடக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்!’ என்று சமீபத்தில் ஒரு பெண் தினசரியில் எழுதியிருந்தாள்.

    தனக்கு நடந்தது தகாத காரியம் என்று அவளுக்கு ஏன் தோன்றவில்லை?

    யாரும் இந்த அவலங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசி, முன்னெச்சரிக்கை செய்யவில்லை.

    `ஆண்களும், பெரியவர்களும் என்ன செய்தாலும் பெண்ணாய் பிறந்துவிட்டவர்கள் பொறுத்துப் போகவேண்டும்!’ என்று வலியுறுத்தி, நம்பவும் வைத்திருப்பார்கள்.

    இப்படி நம்மில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்!

    இந்த நிலவரம் பொறுக்காது, தீய நடத்தை கொண்ட எவனையோ பற்றிப் பெண்கள் எழுதினால், பல ஆண்கள் ஒன்றுசேர்ந்து, பெண்களைத்தான் சாடுகிறார்கள்.

    `நீங்க ஆண்களைத் தாக்கி எழுதறீங்களே! நாங்க பெண்களைப்பத்தி எழுதினா?” என்று ஒருவர் என்னிடம் சவால் விட்டார்.

    சில ஆண்கள் செய்வது அடாத செயல் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால், ஒப்புக்கொள்ளும் நேர்மையோ, தைரியமோ குறைவு.

    “எழுதுங்களேன்! நானா வேண்டாங்கறேன்?” என்றேன். நானே அப்படி எழுதியுமிருக்கிறேனே!

    தவறு என்று தெரிந்தே செய்வது என்ன, ஆண்களின் பிரத்தியேக உரிமையா, அல்லது சாமர்த்தியமா?

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 17

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 17 – அழுக்காறாமை

    குறள் 161:

    ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
    தழுக்கா றிலாத இயல்பு

    மனசில பொறாம இல்லாம வாழுத கொணத்த ஒருத்தன் தனக்கான ஒழுக்க நெறியா நெனைச்சிக்கிடணும்.

    குறள் 162:

    விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்

    ஒருத்தன் யார்கிட்டயும் பொறாமைப் படாம இருந்தாம்னா அவன் பெத்த பேறு ல அதுக்கு ஒப்பா வேற எதுவும் இல்ல.

    குறள் 163:

    அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
    பேணா தழுக்கறுப் பான்

    மத்தவங்க வாழ்க்கைல ஒசருதது பொறுக்காம பொறாமப் படுதவன் அறத்தால வர புண்ணியத்த வேண்டாம் னு மறுத்து சொல்லுதவனாவான்.

    குறள் 164:

    அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
    ஏதம் படுபாக் கறிந்து

    பொறாமையால கெடுதல் வெளையும் னு அறிஞ்சி புத்தியுள்ளவங்க தீமையான செயல செய்யமாட்டாங்க.

    குறள் 165:

    அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
    வழுக்கியுங் கேடீன் பது

    பொறாமை உள்ளவங்களுக்கு வேற எதிரி தேவையில்ல. அவங்க கொணமே அவங்கள தோக்கடிச்சிடும்.

    குறள் 166:

    கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉ மின்றிக் கெடும்

    ஒதவியா ஒருத்தங்களுக்கு கொடுக்குதத கண்டு பொறாம படுதவனோட கொணம் அவன மட்டுமில்லாம அவனோட சொந்தக்காரங்களையும் சேத்து சோறும், உடுப்பும் இல்லாம அலைய உட்டுரும்.

    குறள் 167:

    அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்

    பொறாம கொணம் கொண்டவன திருமகள் னு சொல்லுத லச்சுமி தன்னோட அக்காள் மூதேவிக்கு அடையாளம் காட்டிபோட்டு நகந்துகிடுவா.

    குறள் 168:

    அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்

    பொறாமன்னு சொல்லுத பாவி ஒருத்தனோட சொத்த அழிச்சி அவன கெட்ட வழில போக விட்டுரும்..    .

    குறள் 169:

    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்

    பொறாம இருக்குதவன் வளமா வாழுததும், பொறாம இல்லாத நல்லவன் வேதன படுததும் ஆராஞ்சுபாக்க வேண்டியவை.

    குறள் 170:

    அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
    பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்

    பொறாம பட்டதனால ஒருத்தனுக்கு பெரும கெடச்சிது னு ஒலகத்துல இல்ல. பொறாம இல்லாதவங்க தாழ்ந்துட்டாங்க ன்னும் இல்ல.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(247)

    -செண்பக ஜெகதீசன்

    பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லா தார்.

    -திருக்குறள் -728(அவை அஞ்சாமை)

    புதுக் கவிதையில்…

    நல்லோர் அவையில்
    பல்லோர்க்கும் புரியும்படி
    நல்ல நூலின் பொருளை,
    அச்சத்தால்
    எடுத்துரைக்க இயலாதவர்
    எத்தனை நூல் கற்றிருந்தாலும்,
    அவரால்
    எந்தப் பயனுமில்லை
    இந்த உலகத்துக்கே…!

    குறும்பாவில்…

    அச்சத்தால் நல்ல அவையினர்முன்
    அவரறிய நூற்பொருள் எடுத்துரைக்கத் தெரியாதவன்
    பலநூல் கற்றிருந்தும் பயனிலை அவனிக்கே…!

    மரபுக் கவிதையில்…

    நல்லோர் நிறைந்த அவைதனிலே
    நல்ல நூலதன் பொருளதுதான்
    எல்லோ ருக்கும் புரிந்திடவே
    எடுத்து ரைக்க அஞ்சிநிற்கும்
    வல்லமை யில்லா ஒருவர்தான்,
    வகைகள் பலவாய் நூற்களையே
    கல்வி யென்றே கற்றிருந்தும்
    காசினிக் கவரால் பயனிலையே…!

    லிமரைக்கூ..

    அதுவேயவன் திறமையின் எல்லை,
    அவையஞ்சி நூற்பொருளுரைக்கத் திறனில்லை,
    பலநூல் கற்றுமவனால் பயனே இல்லை…!

    கிராமிய பாணியில்…

    பயப்படாத பயப்படாத
    பேசுறதுக்குப் பயப்படாத,
    படிச்சத எடுத்துச்சொல்லி
    சபயில
    பேசுறதுக்குப் பயப்படாத..

    நல்லவுங்க சபயில
    எல்லாருக்கும் புரியிறாப்புல
    படிச்ச பொத்தகத்தில உள்ள பொருள
    எடுத்துச்சொல்ல முடியாம
    பயந்து நிக்கிறவன்,
    எவுளவு பெரிய படிப்பும்
    எத்தின பொத்தகம் படிச்சிருந்தாலும்,
    அவுனால
    எந்தப்பயனுமில்ல ஒலகத்துக்கே..

    அதுனால,
    பயப்படாத பயப்படாத
    பேசுறதுக்குப் பயப்படாத,
    படிச்சத எடுத்துச்சொல்லி
    சபயில
    பேசுறதுக்குப் பயப்படாத…!

     

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 14

    சி. ஜெயபாரதன், கனடா

    என் இழப்பை நினை,

    எனினும் போக விடு எனை !

    [Miss me, But let me go]

    ++++++++++++++

    [43] ஈமச் சடங்கு

    உயிருள்ள மானிடப் பிறவிக்கு
    உரிய மதிப்பளிப்பது
    நியாயமே மனித நேயமே.
    அது போல்
    உயிரிழந்த சடலத்துக்கும்
    பயண முடிவில்
    மரியாதை புரிவது
    மனித நாகரீகம். மனித நேயமே.
    பிரம்மாண்ட மான
    வரலாற்றுச் சின்னமான
    பிரமிடைக் கட்டினர்
    ஃபெரோ வேந்தர்கள்
    தமது உயிரிழக்கும் சடலத்துக்கு
    முன்பாகவே !
    மும்தாஜ் மனைவிக்கு
    உலக ஒப்பற்ற,
    எழில் கொலு மாளிகை,
    தாஜ் மகாலை எழுப்பினார்
    ஷாஜஹான் !
    துணைவிக்கு நான் இரங்கற்
    பாமாலை வடித்துச் சூட்டினேன்.
    ஐம்பத்தாறு ஆண்டுகள்
    உடனிருந்து
    இடர், துயர், இன்பத்தைப்
    பகிர்ந்து
    கடமை, உடைமை
    வறுமை, செழுமை, திறமையில்
    தானும் பங்கெடுத்து
    மரித்த என் துணைவிக்கு
    உரிய மரியாதை
    அளிப்பது என் இறுதிக் கடமை,
    அதுவே ஈமச் சடங்கு !
    மௌன மாளிகையில்
    ஆரவர மின்றி ஆடம்பர மின்றி
    ஊரார், உற்றார், உறவினர்
    கூடி இருக்க,
    நீத்தார் பெருமை நினைப்பது
    ஈமச் சடங்கு !
    தகன மாளிகையில் அன்பர் சூழக்
    கடவுளை நினைத்து,
    சடலைத்தை
    அக்கினி மூலமாய்
    வழியனுப்பி வைத்தோம்.
    தங்க உடம்பு
    குடத்துச் சாம்பல் ஆனது.
    துணைவி புரிந்த
    நல்வினை எல்லாம் அன்று
    நாலுபேர் பேசி
    நினைவில் வைத்தோம்.
    செல்லும் போது
    சொல்லாமல் பிரிந்த துணைவிக்கு
    “போய் வா” என்று
    வாயால் சொல்லும் வாடிக்கை
    விடை தரவில்லை !
    ஆயினும்
    காதில் துணைவி முணுத்தது :
    என் இழப்பை நினை !
    எனினும் போக விடு எனை !

    ++++++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.
    சி. ஜெயபாரதன்

    Share
  • பேனா எனும் பிறப்புறுப்பு

    -பாலு

    அந்த அந்தி நேரத்தில் ஆண்டுகள் கழித்து கேத்ரினைக் காண்கிறான் திவாகர். சந்தோஷ் நாராயணன் இசையுடன் மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது கோயம்பேடு நிறுத்தத்தில் கேத்ரின் ஏறுவதைக் கண்டதும் தன் காதணிகளைக் கழற்றினான்.

    திவாகரும் கேத்ரினும் கல்லூரிக் காலத்து நண்பர்கள். கல்லூரியில் திவா, தீபாவைக் காதலித்துக் கொண்டிருந்தான். திவாகருக்கும் தீபாவிற்கும் கேத்ரின் தான் வெள்ளைப் புறா. திவாவிற்காகப் பல உதவிகள் செய்திருக்கிறாள் கேத்ரின். திவாவும் தீபாவும் சண்டை போட்டுக் கொண்ட சமயத்தில் அவர்களைச் சேர்த்து வைப்பதற்கான முயற்சியும் எடுத்தாள். ஆனால் பலன் பெறவில்லை. கல்லூரிப் படிப்பு முடிந்தபோது, திவா – தீபா காதலும் முடிந்திருந்தது.

    இப்போது இரண்டரை ஆண்டுகள் கழித்து, திவாவால் கேத்ரினைத் தான் பார்க்க முடிந்ததே தவிர தீபாவைத் தொடர்புகொள்ளக் கூட முடியவில்லை. கேத்ரினும் திவாவும் புன்னகைத்துக் கொண்டனர். திவா அவளிடம் தன்னருகில் வந்து அமருமாறு சைகை செய்தான்.

    “எப்படி டா இருக்க?” என்றாள் கேத்ரின்.

    “ஏதோ இருக்கேன். நீ எப்படி இருக்க? மேடம் ரொம்ப பிஸி ஆகிட்டீங்க போல? ஆளையே பாக்க முடியல! கடைசியா டிகிரி செர்டிபிகேட் வாங்குனப்ப பார்த்தது!” என்றான் திவா.

    “ஊர்ல இருந்தேன் டா.. இப்போ ரீசெண்டா தான் சென்னை வந்தேன். இங்கதான் வொர்க் அதிகமா இருக்கு. சோ, ரூம் எடுத்துத் தங்கிட்டேன்”

    “என்ன வொர்க் பண்ற?”

    “இப்பத்திக்கி ஒரு மேகசின்ல கன்டென்ட் ரைட்டரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன்”

    “ஓ! குட்”

    “நீ எங்க வொர்க் பண்ற திவா?”

    “நான் எங்கயும் வொர்க் பண்ல. இப்போ ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். பார்ப்போம்! வாழ்க்கை என்ன எங்க கூட்டிட்டு போகுதுனு” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டான் திவா.

    “ஓ வாவ்! ஆல் தி பெஸ்ட் டா” என்றதும் திவா புன்னகைத்தான். இரண்டு நிமிட மௌனத்திற்குப் பிறகு

    “கேத்ரின்.. தீபா வ பாக்குறியா? அவ எங்க இருக்கா? ஏதாச்சும் விவரம் தெரியுமா?”

    “இல்ல திவா.. காலேஜ் முடிஞ்சி அப்புறம் அவள பாக்கவே இல்ல.. ரெண்டு மூனு தடவ கால் பண்ணி பேசுனேன். அப்புறம் அந்த நம்பருக்கு கால் போகவே இல்ல.. நா ஜெயா கிட்ட கேட்டு தீபாவோட புது நம்பர் இருந்தா வாங்கி உனக்கு அனுப்புறேன். உன் நம்பர் குடு” என்று திவா எண்களை வாங்கிக் கொண்டாள்.

    அன்று முதல் திவாகரும் கேத்ரினும் நிறைய பேசிக் கொண்டனர். ஆனால் கேத்ரின் ஜெயாவிடம் தீபாவின் எண்களைக் கேட்கவும் இல்லை திவாகரும் அதைப் பற்றி கேட்டுக்கொள்ளவில்லை. இப்படியே ஒரு மாதம் கழிந்தது.

    திவாகர் நன்றாக கவிதை எழுதுவான். ஒரு அழகான பெண்ணைப் பார்த்து விட்டால் அந்த இரவு அவளுக்காக ஒரு கவிதை எழுதாமல் அவன் கண்ணிமைகள் மூடா. அவன் கவிதை டைரியில் நூற்றுக்கணக்கான அழகிகள் குடித்தனம் செய்து வருகின்றனர். அவன் கவிதைகளை ஒரு சில நண்பர்களுக்கு மட்டும் பகிர்வான். இன்று அவன் ஏதோ ஒரு அழகிக்காக எழுதிய கவிதையைத் தன் நண்பர்களுக்கு அனுப்பும்போது கேத்ரினுக்கும் அனுப்பினான்.

    “என் இலக்கியத்தில்
    பல அந்தாதிகளும் நீ
    பல ஹைகூக்களும் நீ
    பல ருஷ்ய கவிதைகளும் நீ”

    என்று திவாகர் அனுப்பிய கவிதையைப் படித்து விட்டு கேத்ரின், அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். “எனக்காக நீ எழுதிய கவிதை மிகவும் அழகாக உள்ளது. இதை விட அருமையாக யாராலும் காதலை வெளிப்படுத்த முடியாது. நல்ல வேளையாக நான் சொல்வதற்கு முன்பே நீ சொல்லிவிட்டாய்!”

    இதைப் படித்ததும் திவாகர் ஒரு நிமிடம் ஆச்சரியமடைந்தான். அதே சமயம் அவனுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏனெனில் திவாகருக்கும் கேத்ரினைப் பிடித்திருந்தது. கடந்த ஒரு மாதமாக அவன் நிறைய அவளிடம் பகிர்ந்திருக்கிறான். ‘இது காதலா? நட்பா?’ என்ற குழப்பத்தில் இருந்தவனுக்கு அவன் பேனாவாலும் ஏதோ ஒரு அழகியாலும் பதில் அறிய முடிந்தது.

    திவாகரும் கேத்ரினும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். நிறையப் பேசி, நிறையச் சுற்றி, நிறைய இசை கேட்டு, திகட்டத் திகட்டக் காதலித்தார்கள். கேத்ரினின் காதல் மழையில் நனைந்து கொண்டிருந்த திவாகர் தன் பேனாவை எடுத்து

    ‘எழுத்துகள் அடங்காக் காவியம் நீ
    வர்ணங்களில் அடங்கா ஓவியம் நீ
    ரௌத்திரம் பழகி எழும் பாரதி நீ

    ‘என்று எழுதி கேத்ரினிடம் அவளுக்கான முதல் கவிதையை கொடுத்தான். அவள் அதை படிக்கும்போது வெட்கத்தோடு புன்னகை மிளிர்ந்தது.

    “எப்படி இருக்கு?” என்றான் திவா.

    “எல்லாம் ஓகே. அது ‘அடங்காக் காவியம்’ இல்ல. ‘அடங்கா காவியம்’ நடுல ‘க்’ வராது என்று கேத்ரின் சொன்னதும் திவாகருக்கு ‘ஏன் தான் கவிதை கொடுத்தோமோ’ என்றாகிவிட்டது (உண்மையில் அடங்காக் காவியத்துக்கு ஒற்று மிகும்). அன்று முதல் திவா அவளுக்காகக் கவிதை எழுதுவதையே விட்டுவிட்டான். கேத்ரின் திவாவின் காதலை பெற முடிந்ததே தவிர, கவிதையைப் பெற முடியவில்லை. இப்படியே சில நாட்கள் கடந்தன.. திவா கேத்ரினிடம் கவிதைகளைத் தவிர எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டான். கேத்ரின், திவாவிடம் காமத்தைத் தவிர எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டாள். ஆம்! இருவரும் இதுவரை ஒரு முத்தம் கூட கொடுத்துக் கொள்ளவில்லை. இதைப் பற்றி கேத்ரினுக்கு ஒரு வருத்தமும் இல்லை. திவா தான் கவலைப்பட்டான். ஒரு நாள் வெட்கத்தை விட்டு அவளிடமே கேட்டுவிட்டான்.

    “கேத்ரின்.. நம்ம கிஸ் பண்ணிக்கலாமா?”

    “ஹ்ம்ம்… பட், இப்ப வேணாம்”

    “ஏன்?”

    “எனக்கு மூட் இல்ல”

    “அப்ப எப்போ?”

    “எனக்கு எப்போ கொடுக்கணும்னு தோணுதோ, அப்போ நானே தரேன்”

    “அப்போ எனக்கு மூட் இல்லன்னா?”

    “ஓ! பாக்றேன். நான் கொடுக்கும்போது நீ எப்படி அவாய்ட் பண்றன்னு” என்று திமிராகக் கூறினாள். திவாகர், கோபத்துடன் தன் டைரியை எடுத்து,

    ‘நான் என்றோ
    ஒருநாள்
    எழுதப் போகும்
    ஏதோ ஒரு புத்தகத்தில்
    ஏதோ ஒரு பக்கத்தில்
    ஏதோ ஒரு வரியில்
    அவள் கொல்லப்படுவாள்
    அல்லது முத்தமிடப்படுவாள்
    என்பது மட்டும்
    எனக்குத் தெரியும்’

    என்று கேத்ரினுக்கான தன் இரண்டாவது கவிதையை எழுதினான். ஆனால் இதையும் அவளிடம் காண்பிக்கவில்லை. தவறாக எடுத்துக்கொள்வாள் என்பதற்காக அல்ல. இதிலும் தப்பும் தவறுமாக ஏதாவது பிழை காண்பாளோ என்று பயந்துதான். இரண்டு நாட்களுக்குப் பிறகு. திவாகர் ஆர்வமாகத் தன் நாவலை எழுதிக் கொண்டிருந்தான். எழுதுவதற்கு முன்பு வசனத்தைச் சொல்லிப் பார்த்துக் கொள்வது திவாகரின் வழக்கம். அந்தச் சமயத்தில் கேத்ரின் தன் வீட்டிற்குள் வருவதைப் பார்த்ததும் அமைதியாக எழுதினான். சண்டையை சமாதானப் படுத்துவதற்கு கேத்ரினே திவாவை முத்தமிட்டாள். அவள் சொன்னது போல் இவனால் அதை மறுக்க முடியவில்லை. அவன் வாழ்க்கையில் பெற்ற மிகப் பெரிய முத்தம் அதுதான். ஓர் உரையாடலின் தொடக்கமாக தேநீர் இருப்பது போல, ஒரு காதலின் தொடக்கமாக உரையாடல் இருப்பது போல, ஒரு முத்தத்தின் தொடக்கமாகக் காதல் இருப்பது போல, ஒரு கலவியின் தொடக்கமாக இந்த முத்தம் இருந்தது. திவாகர் எழுதி வரும் நாவலில் கதாநாயகன் தன் காதலைத் தெரிவிக்கும் முன்னமே இந்தக் கலைஞனைக் காம வசத்தில் இழுத்துவிட்டாள் கேத்ரின். காமம் தீர்ந்த பின்பு பெருமூச்சு விட்டபடி,

    “திவா. சே சம்திங் நைஸ்” என்றாள் கேத்ரின்.

    “நா உன்ன இந்த அளவுக்கு லவ் பண்ணுவேன்னு நினைச்சி கூட பாக்கல தீபா” என்று திவா சொன்னதும் அதிர்ந்து போனாள் கேத்ரின்.

    கண்ணீரைத் துடைத்தபடி ஆடையை அணிந்துகொண்டு வேகமாய் வெளியேறிய கேத்ரினிடம்

    “ஐயோ கேத்ரின்! அது என் நாவல்ல வர வசனம். நீ தப்பா எடுத்துக்காத” என்று சமாதானம் சொல்லி, அவளையே பின்தொடர்ந்தான் திவாகர்.

    இவர்கள் காதல் சேர, அந்தக் கவிதை காரணமாக இருந்ததுபோல் இவர்கள் காதல் பிரிய அந்த வசனம் காரணமாகி விடுமோ? எழுத்தாளர்களின் வாழ்க்கையில் இந்த வார்த்தைகள் இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கின்றனவோ?

    Share
  • (Peer Reviewed) சிலம்பில் பெண்களின் அவல நிலை

    கு.வளா்மதி,
    உதவிப் பேராசிரியா்,
    தமிழ்த் துறை,
    தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி

    சிலம்பில் பெண்களின் அவல நிலை

    முன்னுரை

              ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையானது, ‘சிலப்பதிகாரம்’ ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒற்றுமைப் பண்புகளால் ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்று போற்றப்படுகின்றன. இன்பமும் துன்பமும் நிறைந்த மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மையப்படுத்தியே இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இலக்கியங்களில் கதைமாந்தா் படுகின்ற துன்ப நிலையைக் கண்டு வாசகா்கள் இரக்கம் கொள்கின்றனா். இந்தத் துன்ப நிலையே ‘அவலம்’ என்று கூறப்படுகின்றது. குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தில் பெரும்பான்மையும் அவலம் இடம் பெற்றுள்ளதால், இது ‘அவலக் காப்பியம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. ஒரு காப்பியத்தில் முதன்மை மாந்தா், துணை மாந்தா் என்று மாந்தா்கள் பலா் இருப்பா். இளங்கோவடிகள் தோற்றுவித்த மாந்தா்கள் அவா் நினைத்த செயலை வெற்றியோடு செய்து முடித்து விடுகின்றனா். சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள மாந்தா்களில் பலா் – முக்கியமாக முதன்மை மாந்தா்கள் ‘அவல மாந்தா்’களாகவே காணப்படுகின்றனா். ‘சிலம்பில் பெண்களின் அவல நிலை’ பற்றி ஆராய்வதே இங்கு நோக்கமாகின்றது.

    அவலம் – விளக்கம்

                    அவலம் என்பதற்கு ‘வருத்தம்’ அல்லது ‘துன்பம்’ என்று பொருள் கொள்ள முடியும். இதனை ஆங்கிலத்தில் ‘Tragedy’ என்று கூறுகின்றனா்.

                    க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, “அவலம் என்பதற்கு வருந்தத்தக்க அல்லது இரங்கத்தக்க நிலை”1 என்று பொருள் கூறியுள்ளது.

                    தொல்காப்பியா் ‘அவலம்’ என்பதனை ‘அழுகை’ என்னும் பொருள்படக் கூறியுள்ளார்.

                            “இழிவே இழவே அசைவே வறுமையென

                             விளிவில் கொள்கை அழுகை நான்கே” 2

                என்று அவலம் தோன்றுவதற்குரிய நிலைக் களன்களைத் தொல்காப்பியா் குறிப்பிட்டுள்ளார். ‘இவை நான்கும் தன்கண் தோன்றினும், பிறன்கண் தோன்றினும் அவலமாகும்’ என்பது பேராசிரியரின் கருத்தாகும்.

    சிலப்பதிகாரத்தில் அவலத்தின் நிலைக் களன்கள்

                சிலப்பதிகாரத்தில் பிறரால் இகழப்பட்டு எளியனாகும் துன்பத்தைத் தரும் அவலமான ‘இழிவு’ என்பது காணப்படவில்லை. ஏனெனில், இந்நிலை பின்னால் மாறும்; அதை மாற்றும் நிலைமையும் வந்து சேரும்.

                ‘இழவு’ என்பது மீட்க முடியாத தன்மை உடையதாக – பேரிழப்பாகத் தோன்றினால், அவலம் மேலோங்கும். அன்புடையாரின் உயிரிழப்பு, இணையற்ற இழப்பாகச் சிலம்பில் காட்டப்பட்டுள்ளது.

                ஓா் உயர்ந்த குறிக்கோளினைக் கொண்டு படைக்கப்படும் காப்பியத்தில் வறுமை களைந்து வளம் சேர்க்க வேண்டும் என்னும் உயரிய நோக்கம் மிக்கிருப்பதால், ‘வறுமை’ என்ற நிலையில் சிலப்பதிகாரத்தில் மிகுதியும் அவலச் சுவை இடம்பெறவில்லை என்று கூறமுடியும்.

                ‘அசைவு’ என்பது, முன்பு இருந்த நன்னிலை மாறிப் பொலிவு கெட்டு, வேறொரு துயர நிலையை எய்தி அதனால் இறந்துபடுதல் என்பதாகும். தன் செயல்களினாலோ, குறைபாட்டினாலோ பலரும் போற்ற வாழ்ந்தவன் வீழ்ந்து படுகின்ற நிலையே இவ்வசைவாகும். இவ்வாறு வீழ்ச்சியுறுகின்ற அவல வீரர்களுக்காக இரக்கமும் அனுதாபமும் ஏற்படுவது இயற்கை.

                இவை தவிர, பிரிவின்கண் தோன்றும் அவலமும் பெரிதாகச் சிலப்பதிகாரத்தில் காட்டப்பட்டுள்ளது.

    சிலப்பதிகாரக் காப்பியப் போக்கு

                சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள், ‘புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்’ என்று மூன்று காண்டங்களாகப் பகுத்துள்ளார். சிலப்பதிகாரக் காப்பியப் போக்கைக் கொண்டு ஐந்து பகுதிகளாகப் பகுக்க முடியும்.

    1. ‘கோவலன் – கண்ணகி திருமணத்தில் தொடங்கி, கண்ணகியின் பிரிவுத் துயர் வரை (1 – 4 காதைகள்)
    2. மாதவியிடம் மையல் கொண்ட கோவலன், மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் சேரும் வரை (5 – 8 காதைகள்)
    1. புகாரிலிருந்து கோவலன் – கண்ணகி மதுரை செல்லுதல் வரை (9 -12 காதைகள்)
    2. கோவலன் கொலைக்களப்பட்டது முதல் கண்ணகி வழக்குரைத்து, மதுரையை எரிப்பது வரை (13 – 23 காதைகள்)
    3. கண்ணகி பத்தினித் தெய்வமாகும் இறுதி நிகழ்ச்சி வரை (24 – 30 காதைகள்)’

                 காப்பியத்தின் தொடக்கத்தில் திருமணம், அதனைத் தொடர்ந்து மாதவியுடன் ஊடல், கண்ணகியின் கனவு, மதுரை வாழ்க்கையில் அவலம் என்று இறுதி வரை சிலப்பதிகார கதைப் பின்னலில் அவலத்தைக் காண முடிகின்றது.

    அவல மாந்தா்கள்

                சிலப்பதிகாரத்தில் பெண்மாந்தருள் ‘கண்ணகி, மாதவி, பாண்டிமாதேவி’ ஆகியோர் அவல மாந்தர்களாகக் காட்சியளிக்கின்றனர்.

                கதையின் இறுதியில் ‘மாதரி, கவுந்தி, கண்ணகியின் பெற்றோர், மாதவி, மணிமேகலை’  ஆகியோருக்கு நேரிட்ட அவலத்தை மாடலன் தொகுத்துக் கூறுகின்றான். மாதவி மேற்கொண்ட துறவு, அவலத்தை மிகுவிப்பதாக உள்ளது.

    அவலமே வாழ்க்கை – கண்ணகி

               சிலம்பில் கண்ணகியையே முதலில் அறிமுகம் செய்கின்றார் இளங்கோவடிகள்! கண்ணகி உற்ற அவலமெல்லாம் கோவலனால் நேர்ந்தவையே ஆகும். புகாரில் கணவனோடு மகிழ்ந்திருந்த மகிழ்ச்சியை விட   கணவனைப் பிரிந்து வருந்தும் துன்பம் மிகுதி; மதுரையில் மாதரி இல்லத்தில் மகிழ்ந்திருந்த மகிழ்ச்சியை விட, கணவன் கொல்லப்பட்டுக் கிடந்த அவலம் மிகுந்தது. ஒரு மென்மையான பெண்ணின் நல்ல பண்புகள் கூட, வலிய ஆடவனின் குறைகளுக்கு முன்னால் அவளை அவலத்திற்குள் தள்ளுகின்றன. கணவனை இழந்த கண்ணகியே அவலச் சுவையின் ஆழத்தைக் காட்டுகின்றாள்.

                மாதவி ஆர்வ நெஞ்சமொடு, கோவலனோடு அகம் மகிழ்ந்திருந்த வேளையில் கண்ணகி கையற்ற நெஞ்சினளாக வருந்துகின்றாள். இன்பம் துய்ப்பதற்குரிய இளமை வீணே கழிந்தது, கண்ணகிக்கு! அவள் இளமையெல்லாம் வாட, அணிகலன்களை எல்லாம் களைந்து, அவலமாகக் காட்சியளிக்கின்றாள்.

    “கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து

     விலங்கி நிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப”3

                             “அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய,

                              மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்

                             கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்,

                             மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்”4

            தன்னைப் புறக்கணித்த கணவனைப் பற்றியும், காரணமாக அமைந்த மாதவியைப் பற்றியும் பழித்து ஒரு சொல்லும் சொல்லாத கண்ணகியின் பண்புநலன்கள், படிப்பவர் உள்ளத்தைத் துன்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன.

                வெளியுலகம் அறியாதவளாக, கணவன் என்ற நிஜத்தின் நிழலாக வாழும் கண்ணகி, மாதவியின் பொருட்டுத் தன்னைப் பிரிந்தவன் மீண்டும் வந்ததும் ‘சிலம்புள கொண்மின்’ என்று புன்னகைக்கின்றாள்; வேறு பேச்சில்லை. ‘ஏன் பிறந்தீர்? தற்போது வந்த காரணம் என்ன?’ என்று வினவின், மீண்டும் பிரிவானோ? என்ற அச்சத்தால் அவள் அமைதியாக இருந்திருக்கலாம். உளவியல் அடிப்படையில், இது ஒரு சிறந்த உத்தியாகும். ஒருவன் தவறிழைக்கும்போது, சுட்டிக் காட்டித் திருத்துதல் நலம். அவனே திருந்தி வாழும்போது அதனைப் பற்றிப் பேசாதிருத்தலே சிறப்பு. கண்ணகியும் இதனையே கையாளுகின்றாள்.

                ‘வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்’ என்ற பெருமைக்குரிய கண்ணகி, அவலத்தின் தொடர்ச்சியாகப் புகாரிலிருந்து மதுரைக்கு நடந்தே வருகின்றாள்.

                                           “ ‘மதுரை மூதூர் யாது?’ என வினவ

                                           ஆறுஐங்காதம் நம்அகல்நாட்டு உம்பர்”5

                கோவலனைத் திருத்துவதற்கோ, மீண்டும் அழைப்பதற்கோ எந்த முயற்சியும் செய்யாத கண்ணகி, மதுரை செல்லலாம் ‘எழுக’ என்றவுடன் உடன் சென்றவள், கவுந்தியடிகளின் ஆதரவால் மாதரி வீட்டில் தங்கியிருக்கும் வேளையில்தான், அதுவும் தனது தவறுகளை எண்ணிக் கோவலன் வருந்திய பின்னரே சிறிது பேசுகின்றாள்.

                                       “அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்

                                        துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

                                        விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”6

                என மனை வாழ்க்கைக்குரிய அறங்களைக் கணவனோடு கூடி நிறைவேற்றும் நல்ல மனைவியாக வாழ முடியாத தன்னுடைய அவல நிலையை முதலில் கூறுகின்றாள், கண்ணகி! பெற்றோருக்கும் மற்றோருக்கும் தன் துன்பம் தெரியாத வண்ணம் தான் வாழ்ந்ததைச் சொன்ன கண்ணகி இறுதியில்,

                                          “போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும்

                                         மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்

                                         ஏற்றெழுந்தனன் யான்”7

                 என்று முடிக்கின்றாள். குலத்திற்கு ஒவ்வாத, ஒழுக்கக் கேடுகளைத் தாங்கள் புரிந்தீர். யானோ பெண்களுக்கே உரிய கற்பு நெறியைக் கடைப்பிடித்ததால் ‘எழுக’ என்றவுடன் எழுந்தேன் என்பது, கண்ணகியின் பேச்சு!

                 கணவனின் தவறுகளைக் கண்டிக்காத, அவனோடு விவாதம் செய்யாத, தனக்கென ஒரு சுயம் இல்லாத, தன்னைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கத் தெரியாத ‘கண்ணகி’யே சிலப்பதிகாரத்தில் அவலத்தின் முழு உருவாகத் திகழ்கின்றாள்.

                மதுரையில் கணவனோடு சில நாட்கள் வாழும் வாய்ப்பே கண்ணகிக்குக் கிடைத்தது. சிலம்பு விற்று வருவார், சிறந்த வாழ்க்கை அமையும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் கணவன் ‘கள்வன்’ என்று கொலை செய்யப்பட்டான் என்பது அவலத்தை மிகுவிக்கும் காட்சியாக அமைந்துள்ளது.

    “கணவனைப் பிரிந்த அவலம் அவளைமிகு மானுடநிலைக்கு உயர்த்தியது;

     கணவனை இழந்த அவலம் அவளைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியது”8

                என்று ம.ரா.போ.குருசாமி குறிப்பிட்டுள்ளார். காலம் காலமாக அடிமைப்பட்டு, வதைபட்டு, பத்தினியாக உருவெடுத்து நிற்கும் ஓர் அடிமை வர்க்கத்தின் எச்சமே, கண்ணகி. அவ்வாறு வாழ்ந்தவள், பாண்டியன் என்ற ஆடவனை, அரசனை எதிர்த்ததன் மூலம் புரட்சிப் பெண்ணாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். சிந்தித்தால், இங்கும் தன்வாழ்வு சீரழிந்ததற்காக அல்லாமல், கணவனுக்கு ஊறு நோ்ந்து விட்டதற்காகவே கண்ணகி பொங்கி எழுவதை உணர முடிகின்றது.

                அடிமைகளிடம்தான் புரட்சி மனப்பான்மை தோன்றும். அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வாழும் ஒரு சமூகம் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு வகையில் தனது எதிர்ப்பைக் காட்டும் கண்ணகியும் நீதி இறந்ததற்காகப் போராடவில்லை. தன் கணவன் கொல்லப்பட்டுவிட்டான் என்பதாலேயே சீறுகின்றாள். அடிமனத்தில் அடக்கி வைத்திருந்த கண்ணகியின் உள்ளக் குமுறல்கள், எரிமலையாக வெடித்துச் சீறியதில் வியப்பொன்றும் இல்லை.

                                        “மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்

                                         கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் வையைக்கோன்

                                         கண்டளவே தோற்றான்”9

                 கண்ணகி, மதுரை மாநகரில் தலைவிரி கோலத்துடன், கலங்கிய உள்ளத்துடன் நீதி கேட்க வரும்போது, அவளது அலங்கோலம் அவளது அவலத்தைப் பிரதிபலிக்கின்றது.

                 கோவலன் கொலையுண்டபின், அவனைத் தேடி அலைந்து, அவன் உடல் கிடக்குமிடம் சென்று கதறி அழும் கண்ணகியின் நிலை, அவலத்தின் உச்சக்கட்டமாகும். இதனை,

                                        “அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்

                                         தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்ற”10

                  என்கிறார் இளங்கோவடிகள்! புகார் நகரில் அமைதியாக வாழ்ந்த கண்ணகி, மதுரையில் அரசனை எதிர்க்கவும், நகரை எரிக்கவும் காரணம், அவள் பெற்ற  ‘அவலக் கொடுமைகளே’ ஆகும்.

                 கணவனை இழந்தபின் கற்புடைப் பெண்களைப் போல் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. தன் கணவனைப் பறிகொடுத்த கண்ணகியின் வாழ்வில்தான் அவலம் மிகுந்திருக்கின்றது. காப்பியத் தலைவியான கண்ணகி படுகின்ற துன்பங்களே, சிலப்பதிகாரக் கதையின் அவலத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன. பிற பாத்திரங்கள் படுகின்ற துன்பத்தைக் காட்டிலும், கண்ணகி படுகின்ற அவலமே மிகுதியாகும்.

    மாதவி சந்திக்கும் அவலம்

                 கணிகையர் குலத்தில் பிறந்தாலும் குலமகளாக வாழ ஆசைப்பட்ட மாதவியின் வாழ்வு, அவல வாழ்வாக அமைந்துள்ளது. கணவன் போன்ற கோவலனால் ஐயப்பட நேரிட்ட ஒரே அவலப் பாத்திரம், இரக்கத்திற்குரிய ‘மாதவி’ ஒருத்தி மட்டுமே! மாதவியின் இந்திர விழா ஆட்ட முத்திரைகளும் வேடப் புனைவுகளும் அவையோரின் ஆரவாரப் பாராட்டுகளும் கோவலன் மனத்தில் வெறுப்பையே விளைவித்தன. ஆழமான இந்த வெறுப்பின் அடையாளமாகவே கானல்வரிப் பாட்டில் கண்ணகியின் மேன்மையைப் பாராட்டிப் புகழ்கின்றான், கோவலன்.

                                            “மன்னும் ஓர் குறிப்பு உண்டு,

                                            இவன்தன் நிலை மயங்கினான் எனக்

                                            கலவியால் மகிழ்ந்தாள் போல்,

                                            புலவியால் யாழ் வாங்கித்

                                            தானும் ஓர் குறிப்பினாள் போற்,

                                            கானல் வரிப்பாடல் – பாணி”11

                    மாதவியின் மனத்தைப் புண்படுத்த வேண்டும் என்று கோவலன் பாடுகின்றான். மாதவி அதே துன்பத்தைக் கோவலனுக்கு உண்டாக்க, அவள் பாட  இருவரும் மனம் புண்பட்டுப் பிரிய நேரிடுகின்றது. தான் அடைந்த பிரிவுத் துன்பத்தைக் கோவலனுக்குப் புலப்படுத்தினால், தன் மீது இரக்கம் கொண்டு அவன் வரமாட்டானா? என்பதே மாதவியின் ஏக்கம். அந்த ஏக்கமும் பொய்த்து, அவலத்தை மிகுவிக்கிறது.

                                         “இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது,

                                          கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்”12

                  கோசிகனிடம் மாதவி கொடுத்து அனுப்பிய இரண்டாம் மடல், அவளுடைய அவல உள்ளத்தின் உச்சமாக அமைந்துள்ளது. கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்ததும் மாதவி தன் அழகு நலன்களையெல்லாம் தொலைத்து, மணிமேகலையுடன் துறவு மேற்கொள்கிறாள். கோவலனைப் பிரிந்து, அவன் இறந்தவுடன் துறவு பூணும் மாதவி பாத்திரம் அவலத்திற்கு உரியதாகும்.

    அரசியின் இறப்பு – அவலம்

                 சிறப்பு மிகுந்த பாண்டிய மன்னன், நாடக மகளிரின் நடனத்தால் ஊடல் கொண்ட அரசியின் ஊடல் தீர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளான். சூழ்நிலைக்கேற்ப பொற்கொல்லனின் வருகை அமைகிறது.

     “வினைவிளை காலம் ஆதலின், யாவதும்

      சினைஅலா; வேம்பன் தேரான் ஆகி”13

                      கதைப் போக்கை நடத்தி வைக்கின்ற பொற்கொல்லன்தான் ‘கள்வன்’ என்பது மன்னனுக்குத் தெரியாதது பேரவலமாக அமைந்துள்ளது.

                 வழக்குரைக்க வந்த கண்ணகியைக் கண்டதும் ‘கணவனை இழந்தாள் கடையகத்தாளே’ என்று வாயிற்காவலன் கூறியமை, பாண்டிய மன்னனின் நினைவுக்கு வரவில்லை. அவன் வாழ்க்கையில் பரபரப்பூட்டப் போகும் ஒன்றைப் பற்றி அறியாதவனாக இருக்கும் பாண்டிய மன்னனின் நிலை இரங்கத்தக்கதாக உள்ளது.

                                                    “ ‘நற்றிறம் படராக் கொற்கை வேந்தே!

                                                      என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே!’எனத்

                                                       தேமொழி! உரைத்தது செவ்வை நன்மொழி;

                                                       யாம் உடைச்சிலம்பு முத்துஉடை அரியே”14

                 ‘தேராமன்னா! செப்புவது உடையேன்’ என்று தனியாக வந்து நீதி கேட்கும் கண்ணகியின் அவலத்துடன், புகழ்மிக்க, செங்கோலாட்சி புரிந்த பாண்டிய மன்னன், நீதிநெறி பிழைத்தமை கவலைக்கிடமாக உள்ளது. கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பை உடைத்து தன் அறியாமையை இந்தப்பெண் உணர்ந்து தெளியட்டும் என்பது பாண்டிய மன்னனின் எதிர்பார்ப்பு. மன்னனின் நம்பிக்கையும் நல்ல எண்ணமும் ஒரு  நொடிப் பொழுதிற்குள் நொறுங்கி விடுகின்றது. இதனால், பாண்டிய மன்னன் மீது இரக்கம் ஏற்படுகின்றது. கண்ணகி உடைத்த  சிலம்பில் இருந்து மாணிக்கப்பரல் பாண்டிய மன்னனின் முகத்தில் தெறித்து விழுந்ததும், தன்னை முதன்முதலாக உணரத் தொடங்குகின்றான்.

                                                      “யானோ அரசன்? யானே கள்வன்

                                                      மன்பதை காக்கும் தென்புலம் காவல்

                                                      என்முதல் பிழைத்தது; கெடுக என்ஆயுள்என

                                                       மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே”15

                 பாண்டிய மன்னனின் இறப்பு மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், பொற்கொல்லனுக்கு அடுத்த குற்றவாளியாக மன்னன் காணப்படுவான்; ஆனால், தனக்குத் தானே கெடுமொழி கூறிக்கொண்டு சாகக்கூடிய கொடும்சாவே அவன் மீதுள்ள வெறுப்பைத் துடைத்து விடுகின்றது.

                                                   “கணவனை இழந்தோருக்குக் காட்டுவதுஇல் என்று

                                                    இணைஅடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி!”16

                பாண்டிய மன்னனின்  இறப்பு, அரசியின் முடிவுக்குக் காரணமாக அமைந்து, சிலப்பதிகாரக் காப்பியத்தில் மேலும் அவலத்தை மிகுவிக்கின்றது.

    அவலத்தின் பயன்கள்

                இலக்கியங்களில் இடம்பெறும் கதை மாந்தருக்கு அவலம் நேரும்போது, வாசகன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் நிலையில் தான் இருந்திருந்தால், இத்தகைய அவலம் தனக்கும்  நேரிட்டிருக்குமே என்ற அச்சம் ஏற்படும். அதன் காரணமாக அவலத்திற்கு உள்ளானவர்கள் மீது இரக்கமும் தோன்றுகின்றது. பார்ப்பவர் உணர்வு வெளிப்பாட்டிற்கு இத்தகைய இலக்கியங்கள் வடிகாலாக அமைந்துள்ளன. இதோடு,  அவலத்தின் மூலம் இளமை, செல்வம், யாக்கை போன்றவற்றின் நிலையாமையை  எடுத்துக் காட்டி, வாழ்க்கையின் இலக்கைத் தெளிவுபடுத்துகின்றான், படைப்பாளன். மனித வாழ்வில் நிறைந்துள்ள இன்னல்களை அறிவதன் மூலம் உலக வாழ்வின் இயல்பு குறித்தும், வாழ்வில் ஏற்படும் நம்பிக்கை குறித்தும் அறிந்துகொள்ள முடிகின்றது.

    தொகுப்புரை

                சிலப்பதிகாரத்தில் ‘அவலம்’ என்ற சொல், ‘வருத்தம் (அல்லது) இரக்கம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் பாத்திரப் படைப்பு நடப்பியல் வாழ்வில் காணக்கூடிய மாந்தர்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் காப்பியம் – ‘அவலக் காப்பியம்’ ஆதலின் அவலத்தை மிகுவிக்கும் ‘சொல்லாட்சிகள்’ இடம் பெற்றுள்ளன. அவலக் காப்பியமான சிலப்பதிகாரத்தில் எதிர்பாராமல் நடைபெறும் சில தற்செயலான நிகழ்ச்சிகள் அவலத்திற்குக் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளன. சிலப்பதிகாரத்தில் எதிர்நோக்கும் நிகழ்ச்சிகளுக்கு முரணான எதிர்த்திருப்பங்கள் நடந்து, அவலத்தை மிகுவிப்பதாக உள்ளன. ‘துன்ப மாலை’ என்ற காதை, கண்ணகியின் தீராத் துயரத்தை எடுத்துரைக்கின்றது. தற்குறிப்பேற்ற அணி போன்றவற்றின் மூலமும் அவலம் வெளிப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் ‘ஊழ்வினை’ ஒரு கதாப்பாத்திரம் போல் செயல்பட்டு, அவல நிகழ்ச்சிகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

    அடிக்குறிப்புகள்

    1. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.50
    2. தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூற்பா – 5
    3. புகார்க் காண்டம், அந்திமாலை சிறப்புச்செய் காதை, 70,71
    4. புகார்க் காண்டம், அந்திமாலை சிறப்புச்செய் காதை, 47-50
    5. புகார்க் காண்டம், நாடுகாண் காதை, 41,42
    6. மதுரைக் காண்டம், கொலைக்களக் காதை, 71-73
    7. மதுரைக் காண்டம், கொலைக்களக் காதை, 81-83
    8. ம.ரா.போ.குருசாமி, சிலம்பு வழிச் சிந்தனை, ப.55
    9. மதுரைக் காண்டம், வழக்குரை காதை, வெண்பா – 3
    10. மதுரைக் காண்டம், ஊர்சூழ்வரி, 64,65
    11. புகார்க் காண்டம், கானல்வரி, கட்டுரை, 24
    12. மதுரைக் காண்டம், புறஞ்சேரி இறுத்த காதை, 90,91
    13. மதுரைக் காண்டம், கொலைக்களக் காதை 148,149
    14. மதுரைக் காண்டம், வழக்குரை காதை, 65-68
    15. மதுரைக் காண்டம், வழக்குரை காதை, 75-78
    16. மதுரைக் காண்டம், வழக்குரை காதை, 80,81

    ==========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பண்டைக் காலம் தொடங்கி இன்றுவரை பெண்கள் எதிர்நோக்கும் அவலங்களுக்குக் காரணங்கள் மாறினாலும், இன்னல்கள் இன்னமும் அதே போலவே நீடிக்கின்றன.

    சிலம்பில் சித்திரிக்கப்பட்டுள்ள பெண்களின் அவலம் குறித்த இக்கட்டுரை, அவலத்தின் இலக்கண விளக்கம் தொடங்கி எந்தப் பாத்திரம் யாருடைய எந்தச் செயலால் அவலமுறுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. கண்ணகியின் அவலம் குறித்துப் பேசும் பலரும் பெண்ணியம், அடிமைத்தனம் என்ற ஒரே கோட்டைப் பற்றிக் கொண்டு வாதிடுவர். இந்த ஆய்வுக் கட்டுரையில், அப்படியான கருத்துகளை வலுப்படுத்தாமல், கணவனிடம் கொண்ட அன்பு, சூழலால் உண்டான விளைவுகள், பிற மாந்தரின் செயல் விளைவுகள் என்ற நோக்கில் அவளின் அவலங்களை ஆய்ந்திருப்பது பாராட்டுக்குரியது. மாதவி படும் அவலம், துறவு மூலம் காணும் தீர்வு, அரசன் நீதி தவறியதால் உயிர் நீக்கும் அரசியின் அவலம் – இங்ஙனம் அவலங்கள் அவர்கள் பாத்திரப் படைப்பை மெருகேற்றுவதையும் இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.

    இந்த ஆராய்ச்சியைப் பன்முகங்களில் விரிவுபடுத்தும் முகமாக, கண்ணகியின் அவலங்கள், அதற்குக் காரணமான நிகழ்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கலாம். மாதவி மற்றும் அரசியின் அவலங்கள், பிற பாத்திரங்களின் அவலம், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், பாத்திரம் செம்மையுறும் விதம் குறித்து விரிவாக இந்த ஆராய்ச்சியைப் பெரிய அளவில் எடுத்துச் செல்லும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இந்தப் பெண்களின் பாத்திரப் படைப்பு மூலம், தற்காலச் சமுதாயம் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்ற கோணத்திலும் ஆய்வுகளை விரிவாக்கலாம்.

    காப்பியப் பெண்களின் அவலங்கள் மூலம் அவர்கள் வாழ்வு மாறியது எங்ஙனம், அவர்கள் கற்றது என்ன, அதன் மூலம் பிறர் அறியும் பாடங்கள் என்ன என்ற கருத்துகளை வலியுறுத்தும் இக்கட்டுரை, காரணங்கள் மற்றும் விளைவுகளையும் விரிவாகவும் சிறப்பாகவும் ஆராய்ந்து, நம் பாராட்டுகளைப் பெறுகிறது.

    ==========================================================

    Share
  • முதன்முதல் இஸ்ரேல் விண்வெளித் தேடல் ஆணையகம் ஏவிய நிலாத் தளவுளவி நிலவு நோக்கிச் செல்கிறது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++

    1. https://youtu.be/kzu4-h41xWY
    2. https://youtu.be/hESyPm1vxpA
    3. https://youtu.be/zOL1hqtGRnA
    4. https://youtu.be/XZULKCMq1T4
    5. https://youtu.be/BZ2r7Cc_Z9g
    6. https://youtu.be/01p-4YfMXm8
    7. https://youtu.be/kWnx0p2aez4
    8. http://live.spaceil.com/
    9. https://www.space.com/israel-moon-lander-first-maneuver.html
    10. https://www.space.com/43188-israel-first-moon-lander-spaceil-beresheet-photos.html
    11. https://www.space.com/spacex-israeli-moon-lander-satellites-launch-success.html
    12. https://youtu.be/Xfg-Az1cOsA

    +++++++++++++++++++++++

    SpaceX Private Launching of Israel Moon Lander

    [February 21, 2019]

    +++++++++++++++++

    https://www.spacex.com/

    இஸ்ரேல் முதன்முதல் ஏவிய நிலாத் தளவுளவி நிலவைச் சுற்றி வந்து, இறங்கப் போகிறது. 

    2019 பிப்ரவரி 21 இல் தனியார் ஏவுகணை ஸ்பேஸ்X [SPACEX], [Falcon -9 Rocket] பிளாரிடா கெனாவரல் முனையிலிருந்து கிளம்பி, முதல் முதல் இஸ்ரேலின் நிலாத் தளவுளவியைச் [Lunar Lander : Beresheet]  சுமந்து கொண்டு, 2019 ஏப்ரல் 11 ஆம் தேதி நிலவில்  இறங்கத் திட்டமிடப் பட்டுள்ளது. [Beresheet means Genisis].  சுயமாய் இயங்கும் தளவுளவியின் எடை : 585 கி.கி. [1290 பௌண்டு].  இதுவே நாசா, ஈசா போலின்றித் தனியார் நிறுவனம் முதன்முதல் புரியும் விண்வெளிச் சாதனை.  இது பலவித முறைகளில் விண்வெளி முதன்மை முயற்சியாகக் கருதப் படுகிறது.  இது தனிநபர், ஆப்ரிக்கச் செல்வந்தர் இலான் மஸ்க் [Elon Musk] இஸ்ரேல் நிலாத் தளவுளவியைத் தனது ராக்கெட் [SpaceX] மூலம் முதன்முதல் தூக்கிச் செல்வது.  மிகக் குறைவான நிதிச் செலவில் நிலவைச் சுற்றவும், விண்சுற்றிக் கப்பலின்றி, தளவுளவி நேராக நிலவில் இறங்கவும் முயல்வது.

    தளவுளவி பூமியைச் சுற்றி வேகம் மிகுந்து நீள்வட்டப் பாதை  ஒவ்வொரு சுற்றிலும் புவியீர்ப்பு விசையால் நீட்சி ஆகிறது.

    ++++++++++++

    தளவுளவி பூமியைச் சுற்றி வேகம் மிகுந்து நீள்வட்டப் பாதை  ஒவ்வொரு சுற்றிலும் புவியீர்ப்பு விசையால் நீட்சி ஆகி, முடிவில் நிலவை நெருங்கும் போது, வேகம் தணிக்கப் பட்டு, நிலவின் ஈர்ப்பு தன்னைச் சுற்றிவர இழுத்துக் கொள்கிறது. 

    மேலும் ராக்கெட் ஆற்றலில், அசுர ராக்கெட் அபெல்லோ -11 போலின்றி ஒரே பாய்ச்சலில் நிலவுக்குச் செல்லாது,  பூமியைப் பன்முறை சுற்றிவந்து, புவியீர்ப்பு சுழல்வீச்சு [Gravitational Flyby Swing] ஆற்றலில், ஒவ்வொரு சுற்றிலும் வேகம் மிகுந்து, நீள்வட்டப் பாதை நீட்சியில் நிலவை நெருங்குவது. சிக்கனமான  இம்முறையை  வெற்றி கரமாகச் செய்து காட்டியது இந்தியா.  சந்திரயான் நிலவைச் சுற்றியது,  மங்கல்யான் செவ்வாய்க் கோளைச் சுற்றியது இப்படித்தான்.  எட்டு ஆண்டுகளாய் இஸ்ரேல் நிபுணர்  திட்டமிட்டுச் செய்த பிரிசீட் நிலாத்  தளவுளவி [Beresheet Lunar Lander] ஏப்ரல் 11 ஆம் தேதி நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    ஏவிய பிறகு தூக்கிச் சென்ற ராக்கெட், பணி முடிந்து, பாது காப்பாக சுய இயக்கத்தில், திட்டமிட்ட இடத்தில் புவிக்கு மீட்சியானது.  இது மீண்டும் பயன்படுத்தப் படும்.  இந்த இஸ்ரேல் சிக்கன மலிவு நிலாத் திட்டம் 100 மில்லியன் டாலருக்குள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    Israel Lunar Lander Assembly

    Artist  Picture View of Israel Luna Lander

    [April 11, 2019]

    Israel Space Centre Control Room

    +++++++++++++++++++

    Space News :

    1. https://www.space.com/43188-israel-first-moon-lander-spaceil-beresheet-photos.html
    2. https://www.space.com/israel-moon-lander-first-maneuver.html
    3. https://www.theguardian.com/world/2019/feb/22/israel-first-lunar-lander-blasts-into-space-florida-spacex-beresheet
    4. https://www.space.com/spacex-israeli-moon-lander-satellites-launch-success.html
    5. https://youtu.be/kzu4-h41xWY
    6. https://youtu.be/zOL1hqtGRnA
    7. https://youtu.be/Xfg-Az1cOsA
    8. https://youtu.be/hESyPm1vxpA
    9. https://youtu.be/XZULKCMq1T4
    10. https://youtu.be/BZ2r7Cc_Z9g
    11. https://youtu.be/01p-4YfMXm8
    12. https://youtu.be/kWnx0p2aez4
    Share
  • [நூல் அறிமுகம்] (Peer Reviewed) ஆனந்த் நீலகண்டனின் ”Vanara: The Legend of Baali, Sugreeva and Tara”: மாற்றி யோசிக்கப்படும் பழைய கதையின் யதார்த்தம்

    முனைவர் ம.பிரபாகரன்,
    இளநிலை ஆய்வாளர்,
    பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (EFEO),
    புதுச்சேரி.

    ஆனந்த் நீலகண்டனின் ” Vanara: The Legend of Baali, Sugreeva and Tara ”: மாற்றி யோசிக்கப்படும் பழைய  கதையின் யதார்த்தம்

    சென்ற ஆண்டு(2018)  வெளியான ஆனந்த் நீலகண்டனின்  ” Vanara: The Legend of Baali, Sugreeva and Tara ” ( 304 pages, Published November 14th 2018 by Penguin Random House) என்ற ஆங்கில நாவலைச் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதனை ஆய்வு நோக்கில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற  என் அவாவே இக்கட்டுரை. கட்டுரையைத் தொடங்குவதற்கு முன் இந்நாவலை எழுதிய  ஆனந்த் நீலகண்டன் பற்றிய  குறிப்பைத்  தருவது பயனுடையதாயிருக்கும் என்று கருதுகிறேன்.

    பின்வரும் ஆசிரியர் குறிப்பு விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.

    ஆனந்த் நீலகண்டன்:

    Anand Neelakantan (born 5 December 1973) is an Indian author,columnist, screenwriter, television personality and motivational speaker. He has authored four fiction books.His debut work Asura, The Tale of the Vanquished is based on the Indian epics of Ramayana. His next book series was Ajaya-Roll of the Dice , Ajaya – Rise of Kali based ,the two books on the epic Mahabharata told from Kaurava perspective. Anand’s books voice the suppressed party or the defeated party.

    Anand Neelakantan also had signed with The producers of Baahubali, the blockbuster film for a 3 book Series based on their film Baahubali and the series will be a prequel to the film. The first book of this trilogy , Rise of Sivagami was released in March 2017. Netflix has announced a webseries on the book. His books have been translated to different languages such as Hindi, Malayalam, Tamil, Telugu, Kannada, Marathi, Bengali ,Gujarati, Assamese and Indonesian Bahasa.

    Anand’s Asura is one of the 100 books to be read in a life time as per Amazon. The book has sold more than half a million copies across the years. Three of Anand Neelakantan’s books have been shortlisted for crossword award during the respective years and he is also listed as one among the 100 top celebrities in India in 2015, 2017 by ForbesIndia. All his books have got critical accreditions from various people across the world

    Anand also writes a column for New Indian Express on current affairs and his fortnightly column is called Acute Angle (நன்றி- விக்கிப்பீடியா)

    வானரா என்ற இந்த நாவல், பழைய இராமாயணத்தில் சொல்லப்பட்ட வாலி, சுக்ரீவன் கதையைத் தலைகீழாக யோசித்திருக்கிறது அல்லது மாற்றி யோசித்திருக்கிறது. நமக்கெல்லாம் இராமாயணத்தில்  வாலி என்று சொன்னவுடன், அவன், தன் தம்பி சுக்கீரிவனின்  மனைவி ரூமா மீது  கொண்ட  மோகத்திற்காக,  அவனை அடித்து விரட்டி விட்டு, தம்பி மனைவியை அபகரித்துக்கொண்டான்; அவன் எவ்வளவுதான் வீரனாக இருந்தாலும்  தம்பி மனைவி மீது ஆசை கொண்டதால் அவன்  ஒரு துஷ்டன் என்ற கருத்தே ஞாபத்திற்கு வரும். ஏனென்றால் வால்மீகி, கம்பன் ஆகியோர் எழுதிய இராமாயணத்தில் வாலி பற்றி அப்படி ஒரு பார்வையே காணப்படுவதாலும் அது நமக்கு சிறு வயதிலிருந்தே திரும்பத் திரும்ப கதைகளின் வாயிலாகவும் பாடங்களின் வாயிலாகவும் தொலைக்காட்சித் தொடர்களின் வாயிலாகவும்  சொல்லப்பட்டதாலும் வாலியைப் பற்றி அப்படி ஒரு கருத்து நம்முள் நிலைத்துவிட்டது.

    தமிழில், பழைய இராமாயண வாலியை அடியொற்றி ”வாலி” என்றொரு சினிமா எடுக்கப்பட்டதும், அது பெரிய வெற்றியைப் பெற்றதும் இங்குச் சுட்டிக் காட்டத்தக்கது. இராமாயணம் நடந்த கதையல்ல என்று கூறுவாரும் அது நடந்த கதையே என்று கூறுவாரும் உள்ளனர். அது நடந்த கதையோ, நடக்காத கதையோ அதுவல்ல நம் பிரச்சினை. எந்தக்  கதையும் திடீரென்று தான்தோன்றியாக உருவாகிவிட முடியாது. எல்லாக் கதைகளுக்கும் சமூக அடிப்படையும் சமூக உளவியலும் உண்டு என்பதை மறுக்க முடியாது.

    ஒரு கதை ஏன் படைக்கப்படுகிறது? அதன் நோக்கம் என்ன? என்று பார்ப்பதும் ஒரு கதை எந்தச் சூழலில் இருப்பவர்களால் எழுதப்படுகிறது? என்று கவனிப்பதும் மிகவும் அவசியமானதாகும். நோக்கத்திற்காகவே கதை எழுதப்படுமா? அது எப்படி? படைப்பாளி தான் கண்டதை எழுதுகிறான். அது எப்படி ஒரு குறிப்பிட்ட நோக்கிற்காக எழுதப்பட்டது என்று கூற முடியும்? என்று கேட்கலாம். நோக்கத்திற்காக எழுதப்பட்ட கதைகளும் உண்டு. நோக்கம் சூழலில் மறைந்து கிடக்கும் கதைகளும் உண்டு. சூழல் சுயேச்சையாக இயங்கும் தன்மை உடையது என்று மார்க்ஸ் கூறுவதை இவ்வண் கருதுக.

    இராமனைத்  தன் கதையில் கடவுளாக்க ஆசைப்பட்டவர் வால்மீகி என்பர். இராமனை மனிதனாகக் காண விரும்பியவர் கம்பன் என்பர். இப்படி படைப்பளர்களின் விருப்பம் கதையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.  எங்ஙனமாயினும்  கதைகளுக்கு  நோக்கம் இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. நிற்க.

    வானரா நாவல், பழைய இதிகாச கதையைக் கருவாகக் கொண்டது ஆகையால், ஏன் இதிகாச, புராணக் கதைகளை ஏன் திரும்பித் திரும்பி எழுத வேண்டும் என்ற விமர்சனத்தையும் இவ்விடத்தில் நினைவு கூர வேண்டியிருக்கிறது. வால்மீகி இராமாயணத்தை எழுதி முடித்த பிறகு ஏன் கம்பன் அதை  மீண்டும் தமிழில்  எழுதினார்? ஏன் பல்வேறு மொழிகளில் இராமாயணம் திரும்பத் திரும்ப எழுதப்பட்டது? வியாசர் எழுதியதற்குப் பிறகு மகாபாரதமும் மீண்டும்  பலமுறை பல்வேறு மொழிகளிலும்  எழுதப்பட்டுவிட்டனவே ஏன்  தற்போது மகாபாரதத்தை ஜெயமோகன் திரும்ப எழுதுகிறார்? என்ற கேள்வி இங்கு நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

    இன்று புராணக் கதைகள், இதிகாசக் கதைகள் போன்றவை, தொலைகாட்சித் தொடர்களாக ஏன் மீண்டும் மீண்டும் எடுக்கப்படுகின்றன? அதற்கான சமூகத்  தத்துவப் பின்புலம் என்ன? என்று நாம் கேட்க வேண்டியுள்ளது. ஏனென்றால்  சமூகத்தின் உளவியலைப் புரிந்து கொண்டால்தான் கடந்த கால கதைகளுக்கு நிகழ்கால அர்த்தம் உண்டு என்பதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அப்போது பழைய கதைகள் மீண்டும் மீண்டும் எழுதுவதற்கான தேவையையும் அதற்குப் பின்னால் இருக்கும் நோக்கத்தையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

    பழைய கதைகளைத் திருப்பி எழுதும் போது பெரும்பாலும் இரண்டு வித போக்குகள் பின்பற்றப்படுகின்றன. முதலாவது, இருக்கும் கதையை அப்படியே திருப்பிச் சொல்வது, இரண்டாவது பழைய கதையை நிகழ்கால அரசியல், சமூகப் பண்பாட்டினை விளக்கப் பயன்படுத்துவது. இவற்றுள் ஆனந்த் நீலகண்டனின் ‘ வானரா ‘ என்ற இந்த நாவல் இரண்டாவது வகையைச் சேர்ந்தது எனலாம்.

    இந்தியாவின் நிகழ்கால அரசியல் மற்றும் சமூகப் பண்பாட்டினை விமர்சன பூர்வமாக அவர்  வாலியின் கதையின் மூலம் விளக்கும் திறம் வரவேற்கப்பட வேண்டியது. இந்தியாவில் மக்கள் உளவியல் உருவாக்கத்தில் தொன்மக் கதைகள் வகிக்கும் பெரும் பங்கை யாரும் மறுத்துவிட முடியாது. அதே போல இந்திய வரலாற்று உருவாக்கத்திலும் தொன்மக் கதைகள் வகிக்கும் பங்கு கணிசமானது. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட ஆனந்த் நீலகண்டன், தற்கால அரசியல், சமூகப் பண்பாட்டை  விமர்சனப்பூர்வமாக அணுகுவதற்கு இதிகாச கதையாகிய வாலியின் கதையை அல்லது  கிஷ்கிந்தை படலத்தைப் பயன்படுத்துகிறார்.

    இந்த முறைமையைத்தான் அவர் இவருடைய முந்தைய நாவல்களான அஜயா (இரண்டு புத்தகங்கள்), அசுரா ஆகிய நாவல்களுக்கும் பயன்படுத்தியிருந்தார். வரலாறு சொல்லப்பட்ட கதைகளில் மட்டுமே இல்லை; சொல்லப்படாத அவற்றின் பக்கங்களிலும் இருக்கும்; அவ்வரலாறு, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்குரிய உண்மையான வரலாறாகவும் இருக்கும் என்பதையே ஆனந்த் நீலகண்டனின் வானரா என்னும் இந்நாவல் மட்டுமல்ல, இவரின் முந்தைய நாவல்களும் கூறுகின்றன.

    நிகழ்ந்து நடந்து முடித்துவிட்ட நிகழ்ச்சிகள், கதைகள் போலவே சொல்லப்படுகின்றன. நேற்றைக்கு நடந்த ஒரு விபத்தை நேரிலே பார்த்தவர் இன்னொருவரிடம் அதைச் சொல்லும் போது அதைக் கதை போலவே சொல்கிறார். நாம் இங்கு என்ன சொல்ல வருகிறோம் என்றால் இறந்தகால நிகழ்ச்சிகள் நிகழ்காலத்தில் சொல்லப்படுகிற போது, அவை கதைகளாகவே மாறிவிடுகின்றன. அதைச் சொல்பவர்களின் நோக்கங்களும் அதில் இடம் பெற்றிருக்கும்.

    ஒரு நிகழ்ச்சி  இரண்டு பேரால் சொல்லப்படும் போது அல்லது பலரால் சொல்லப்படும் போது வேறு வேறு வகையில் சொல்லப்பட வாய்ப்புண்டு. விருமாண்டி படத்தில் ஒரே கதை  கொத்தாளத்  தேவரால் (பசுபதி) சொல்லப்படும் போது  விருமாண்டிக்கு (கமல்ஹாசன்) எதிரானதாக அமைந்து   விருமாண்டியை வில்லனாக காட்டும். அதே கதை விருமாண்டியால் சொல்லப்படும் போது அது கொத்தாளத் தேவரை வில்லனாக காட்டும். இங்குப் பார்வையாளர் என்ன நினைக்கிறார். கொத்தாளத்தேவர்  சொல்வது சரியா? விருமாண்டி சொல்வது சரியா? படத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள் சூழல்களின் பின்னணியில்  விருமாண்டியை நல்லவனாகவும், கொத்தாளத் தேவரை வில்லனாகவும் புரிந்துகொள்ள பார்வையாளரைத் தூண்டும். இதில் முடிவு எடுக்க வேண்டியவர் பார்வையாளரே. இது போன்ற ஒரு பார்வைதான் இந்த வானரா நாவல் என்று கூறலாம்.

    வால்மீகியும், கம்பனும் பார்த்த பார்வையிலிருந்து வேறுபட்டு ‘வாலி’யை இவர் பார்க்கிறார். பெண்ணால் வீழ்ந்தவர்கள் என்று கூறப்படும் புராண நாயகர்களுள் வாலியையும் ஒருவராக வைத்துச் சொல்வது வழக்கம். ஆனால் இந்நாவலைப் படித்தால் வாலி, பெண்ணால் வீழவில்லை. சுக்ரீவனின் துரோகத்தால் விழுந்தார் என்பது  ஒருவரின் சிந்தனையில் பசுமரத்தாணி போல் பதியும். ஏனென்றால் இந்நாவலில் சுக்ரீவனின் மனைவி மீது வாலி இச்சை கொள்ளவில்லை. மாறாக  வாலியின் மனைவி  ‘ தாரா ‘ மீதுதான் சுக்ரீவன் இச்சை கொண்டு வாலியின்  வீழ்ச்சிக்குக் காரணமாகிறார். சுருக்கமாக இந்நாவலின் கதையைச் சொல்ல முயல்வோம்:

    சுக்ரீவன், தாராவை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஆனால் தாரா, வாலியைத் தீவிரமாகக் காதலிக்கிறார்;  தாராவின் அன்பால் நெகிழ்ந்த வாலி, அவளை மணமுடிக்கிறார். அதன் பின்னும் சுக்ரீவன், தாரா மீது கொண்ட இச்சையை விடவில்லை. அண்ணன் வாலி, தம்பியை மிகவும் நம்புகிறார். ஆனால் தம்பி சுக்ரீவன், அண்ணன் மனைவி என்று தெரிந்த பின்னரும் தாராவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று எண்ணுகிறார். ஒரு கட்டத்தில் தாராவை அடைவதற்கு வாலிக்குக் கள்ளில் நஞ்சு கலக்கும் அளவுக்குக் கூட போய்விடுகிறார் சுக்ரீவன். இது தாராவுக்கு தெரிகிறது. இருந்தும் வாலியிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் வாலி, தம்பியை மிகவும் நம்புகிறார்.

    எனினும்  கடைசியில்  ஒருவழியாக வாலி, சுக்ரீவனின் இச்சையை அறிந்து கொள்கிறார். அவரை அடித்து உதைத்து நாட்டை விட்டுத் துரத்துகிறார். சுக்ரீவன் வாலியுடன் சண்டைக்கு வரும் நேரத்தில் எல்லாம் வாலி அவரை நன்றாக அடித்து உதைத்தாரே தவிர, ஒருபோதும் கொல்லத் துணியவில்லை. காரணம்,  தம்பி சுக்ரீவன்  மீது அவருக்கு அவ்வளவு அன்பு. இதை ஒருமுறை வாலியே தாராவிடம் கூறுகிறார். தன் தம்பியை அடித்து விரட்டிய பிறகு தம்பி மனைவி ‘ரூமா’, சுக்கிரீவன் போய்விட்டதால் தனக்கு வாலியே கணவனாக வேண்டும் என்கிறாள். அவரை அடைய தந்திரங்கள் செய்கிறார். அதற்கு வாலி, தன் தம்பி மனைவி ஒரு போதும் தனக்கு மனைவியாக ஆக முடியாது. தம்பி மனைவி மரியாதைக்குரிய ஸ்தானம் வகிப்பவர் என்று ரூமாவை முற்றிலும் விலக்கிவிடுகிறார்.

    இப்படி வாலியின் எண்ணப் போக்கு இருக்க, சுக்ரீவன், அனுமனிடம்  வாலி தன் மனைவியை அபகரித்துவிட்டார் என்று கூறி நம்ப வைக்கிறார். அனுமன் சூழ்நிலைகளின் பாதிப்பால் உண்மையில் வாலி, சுக்ரீவனின் மனைவியை அபகரித்து விட்டதாகவே நினைத்து விடுகிறார். உண்மை தெரியாத அனுமரும் சுக்ரீவனை நல்லவர் என்று நம்பி இராமன், இலக்குமணர்களிடம் வாலி, சுக்ரீவனின் மனைவியை அபகரித்துவிட்டதாகக் கூறி, அவர்கள் இருவரும் சுக்ரீவனின் மனைவி ‘ரூமா’ வை மீட்டுக் கொடுத்தால், சீதையை இராவணனிடம் இருந்து மீட்க அவர் உதவுவார் என்று கூறுகிறார். உண்மை தெரியாத இராமரும் இலட்சுமணரும்,  சுக்ரீவனின் பொய்யை நம்பிவிடுகின்றனர்.

    இறுதியில் இராமரின்  துணையுடன் சுக்ரீவன், தன் அண்ணன் வாலியைக் கொல்லத் துணிகிறார். கொன்றும் விடுகிறார். வாலியின் வதத்திற்குப் பிறகு தாராவைச் சுக்ரீவன் அடைய முயன்றாலும் உண்மை தெரிந்த தாரா, சுக்ரீவனை முற்றிலும் வெறுத்து ஒதுக்கிவிடுகிறார். இறுதியில் சுக்ரீவன், வானர சேனைகளுடன் இராமனுக்கு உதவியாக சென்று சீதையை மீட்க உதவுகிறார். வாலியின் மகன் அங்கதனும் அவர்களுடன் செல்கிறான். வெற்றிக்குப் பிறகு சுக்ரீவன், அங்கதன் மற்றும்  போரில் அழிந்தது போக மீதமுள்ள படையுடன் கிஷ்கிந்தை திரும்புகிறார்.

    அதற்குப் பிறகும் சுக்ரீவன், தாராவிடம் கொண்ட மோகத்தைக் கைவிடவில்லை. சுக்ரீவன் தன் காதலைத் தாராவிடம் சொல்கிறார். தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறார். தாரா, அவரை விலக்கிவிடுகிறார். தன் இறுதிக் காலத்தைக் கிஷ்கிந்தை அரச மாளிகைக்கு  வெளியே வாலியின் நினைவுடன் வாழ்கிறார் தாரா. கதையின் மிகச் சுருக்கத்தையே நாம் இங்குச் சொல்லியிருக்கிறோம்.  ஒருவர் கதையைப் படித்தால் இன்னும் பல ஆச்சரியமான, சந்தோசமான, துக்கமான தருணங்களை அங்கே உணர முடியும்.

    இனி இக்கதையின் மையத் தன்மையை இங்குச் சுட்டிக் காட்ட வேண்டும்:

    இந்நாவல், மாற்றி யோசிக்கும் தன்மைக்கு உதாரணம் என்று மேலே கூறினோம். இன்னும் தெளிவாகக் கூறப் போனால் இந்நாவல், மரபான சிந்தனையில் மாற்றத்தை கோருகிறது. இம்மாற்றம் கதையில் மட்டுமல்ல பண்பாட்டு மாற்றமாகவும் இருக்க வேண்டும் என்கிறது. பண்பாட்டு மாற்றமா? எப்படி? என்று உடனே ஒருவருக்குக்  கேள்வி எழும். வானரர் என்ற சொல்  வனநரர் என்பதன் திரிபு என்ற பொருளில் நாவல் ஆசிரியர் பயன்படுத்துகிறார். வனநரர் என்பது காட்டில் வாழும் மக்கள் தொகுதியினரைச் சுட்டும் சொல். இந்தக் காடுவாழ் மக்களே வானரர் என்று அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறும் நீலகண்டன் அவர்கள் வைதீகத்தால் ஒடுக்கப்பட்டதாலே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கதையின் ஊடாகச் சொல்லிச் செல்கிறார்.

    வைதீகத்தின் கோரப் பிடியில் இருந்து தன் மக்களை விடுவிக்கும் கதாநாயகனாகவே வாலி படைக்கப்பட்டுள்ளார். வனநரர்களின் பண்பாட்டுச் சூழல்கள் நன்றாக நாவலில் படம் பிடித்துக் காட்டப் பெற்றுள்ளன. வனநரர்கள் எனப்படும் வானரர்களின் பண்பாடு,  வைதீகர்களின்  பண்பாட்டிலிருந்தும், வைதீகத்தின் எதிரியான அசுரர்களின் பண்பாட்டிலிருந்துமே வேறுபாடு உடையதாகக் காணப்படுகின்றது.

    அசுரர்கள் நகர பண்பாட்டை நோக்கி முன்னேறும் பொழுது அவர்களுக்குள் ஏற்படும் ஏற்றத் தாழ்வு பிரச்சனைகள், வனநரர்கள் சமூகத்தில் இல்லாததைக் காணும் வாலி தான் அசுரர்களைப் போல் தன் சமூகமும்  நகரமயப்படுவதை வெறுக்கிறார். முதலில் அசுரர்களின் நகரத்தை விடப் பெரிய நகரத்தை உருவாக்க நினைக்கும் வாலி, பின்பு அசுரர்கள் மத்தியில் நகரப் பண்பாட்டின் விளைவாக ஏற்பட்ட கொடூரமான இயற்கை மீறிய பண்பாட்டுச் சீரழிவுகளைக் கண்டு தன் நகரக் கனவைக் கைவிடுகிறார். இந்நாவலில் வனநரர்களின் சமூகப் பண்பாடு ஆதிக்கம் செலுத்தும்  வைதீகப் பண்பாட்டிலிருந்து முற்றிலும் விலகி நிற்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் நாவலாசிரியர்.

    மேலும் இந்நாவலில்  வனநரர்கள், வைதீகத்தின் ஆதிக்கத்திற்குள் இருப்பதே சரி; வைதீக ஆதிக்கத்திற்குள், அசுரர்களின் ஆதிக்கத்திற்குள் அடிமையாக இருந்தால் உணவாவது கிடைக்கும்; இல்லையேல் செத்துப் போக வேண்டியது வரும் என்று நினைக்கும் வனநரர்களின்  முன்னோடிகளையும்  காண முடிகிறது. இப்போக்குடையவர்களை வாலி வெறுக்கிறார். வாலியின் சமூக நோக்கு ஆதிக்கத்திற்கு எதிரானதாக இருந்த போதிலும் ஒரு கட்டத்தில் அது நகரப் பண்பாட்டிற்கு எதிராக திரும்புவதன் பலவீனத்தைத் தாராவின் சிந்தனை, பேச்சு ஆகியவற்றின் வாயிலாக நாவலாசிரியர் சரியாக உணர்த்துகிறார்.

    மேலும் வைதீகத்தின் ஆன்மா வழியிலான பக்தி மார்க்கமே  ஒருவரை உய்விக்க கூடியது என்ற எண்ணமுடையவராக  அனுமன் இருப்பதையும்; அவர் பக்தி அடிப்படையில் வைதீகத்தை சுவீகரித்தவராகவும் நாவலில் காட்டப்படுகிறார். அனுமனின் சமூகவியல் நோக்கு இன்னும் அழுத்தமாக நாவலில் பதிவு செய்யப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சுக்ரீவனைப் பொறுத்தவரை அவருக்கு வனநரர்களின் சமூக முன்னேற்றம் என்பதெல்லாம் பற்றி கவலை ஒன்றும் இல்லை. அவர் சுயநலத்தின் மொத்த உருவமாக இருக்கிறார். அவருக்குத் தாராவும் அவரது மகிழ்ச்சியும் மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன. இதற்காக வாலியை இராமனின் துணையோடு கொன்றும் விடுகிறார். அனுமனைப் போல இராமனும் இலட்சுமணனும்  சுக்ரீவனின் நடிப்பில் ஏமாந்து போகின்றனர். தம்பி மனைவியை அபகரித்தவன் வாலி என்றே நம்பியும் விடுகின்றனர்.

    ஒருவேளை சுக்ரீவனின் நாடகம், இராமனுக்குத் தெரிந்திருந்தால் இராமன் என்ன செய்திருப்பார்? என்பது நாவலின் போக்கில் நமக்குச் சொல்லப்படவில்லை. வாலி, வைதீக ஆதிக்கத்திற்கு எதிரானவர். நிச்சயம் இராமனுக்கு இராவணனை வீழ்த்த உதவி செய்யமாட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் இவ்விசயத்தில் வாலி இராமனை நிச்சயம் எதிர்த்து நின்றிருப்பார் என்றே நாம் கதையின் போக்கு வைத்து  அனுமானிக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் அண்ணன் மனைவியை அபகரிக்க நினைத்த சுக்ரீவனின் துணையை இராமன் நாடியிருப்பாரா? அல்லது அவரைக் கொன்றிருப்பாரா? இதெல்லாம் கதைக்கு அப்பாற்பட்ட விசயம்.

    நாம் ஏற்கெனவே கூறியது போல  சுக்ரீவனின் ‘அண்ணி மோகம்’, அனுமனுக்குத் தெரியாது. காரணம், சந்தர்ப்ப சூழல், சுக்ரீவனை அனுமன் நம்பும்படி செய்து விடுகிறது. அனுமனுக்கு சுக்ரீவனின் ‘அண்ணி மோகம்’  தெரிந்திருந்தால், நிச்சயம் அவர் சுக்ரீவனுக்கு உதவியிருக்க மாட்டார் என்பதற்கான குறிப்பை நாவலில் ஆசிரியர்  தெளிவாகத் தெரிவிக்கின்றார். அப்படி அனுமனுக்கு தெரிந்தால் அவர்  இராம, இலக்குவரிடம் கூறி சுக்ரீவனுக்கு உதவ வேண்டாம் என்று அவர்களைத் தடுத்திருப்பார்; ஆனால் வாலியின் உதவி நிச்சயம் கிடைக்காது என்பதையும் அவர் அவர்களுக்கு உணர்த்தியிருப்பார்; இது எல்லாம் கதைக்கு அப்பாற்பட்ட விசயம் என்றாலும் நமக்கு இப்படியெல்லாம் சிந்திப்பதற்கு நாவல் களம் வழங்குகிறது.

    கதையில் வாலியின் தந்தை ஸ்தானம் வகிக்கும் அரவாணியாகிய  ரிக்ஷராஜா கதாபாத்திரம், குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. ஏனெனில் ரிக்ஷராஜாவே, வானர இனம் வைதீகத்திற்கும் அசுரர்களுக்கும் அடிமைப்பணி செய்யப் பிறந்ததல்ல; அதற்கு சுயமரியாதை என்பது அவசியம்; வைதீக, அசுர ஆகிய பிற ஆதிக்கப் பண்பாட்டிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக செயல்படுவதற்குரிய செயல்வன்மை வானர இனத்திற்கு உண்டு  என்று முழங்கி, வானர மக்கள் முன்னேற்றத்திற்காகச் சிந்திப்பதில்  வாலிக்கும் முன்னோடியாக விளங்குகிறார்.

    அவரே வாலி, சுக்ரீவன் ஆகியோரை அழைத்துக்கொண்டு போய் மகாபலியிடம் பயிற்சி பெற வைக்கிறார்; வாலியின் மீது அளவு  கடந்த நம்பிக்கையும், பாசமும் உடையவராக இருக்கிறார்; சுக்ரீவனின் வஞ்சகத்தை அறிந்து கொதிக்கிறார்; சுக்ரீவனை எச்சரிக்கவும் செய்கிறார்.  சுக்கிரீவன் அவரை உதைத்து இகழ்கிறார்; உதைகள் பட்டாலும்   வாலியைக் காக்கும் எண்ணமே அவர் மனத்தில் முதன்மையாக இருக்கிறது. இறுதியில் தாராவைக் காக்க,  காளை முட்டிப் பலியாகிறார். இந்நாவலில் மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கதாபாத்திரம், வாலி வளர்க்கும் ‘குட்டி ஓநாய்’. வாலியின் மீது அது கொண்ட அன்பு, தாராவின் அன்பை விட ஒருபடி மேலாக இருப்பதை  இந்நாவலைப் படிக்கும் ஒருவர் புரிந்துகொள்வார். கடைசியாக இந்நாவலின் பாவிகத்தைப் (மைய கருத்து) பின்வருமாறு சொல்லி, இக்கட்டுரையை முடிப்போம்

    மொத்தத்தில் இந்நாவல், காலம் காலமாக வழங்கி வரும் மரபான சிந்தனைகளில் இருக்கும் ஆதிக்கப் போக்கை இனம் காட்டி முற்போக்கு அடிப்படையில்  மாற்றி யோசிப்பதற்கான தேவையை வலியுறுத்துவதாக இருக்கிறது.

    ===============================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    வாநரா என்று இந்த ஆசிரியர் அறிமுகப்படுத்தியுள்ள நாவலின் மூல வடிவம் கிடைக்காததால் வாசித்து அறிய முடியவில்லை. இந்தக் கட்டுரையின் ஆசிரியர் விவரித்துள்ளதன் அடிப்படையில் இது, இடதுசாரிச் சிந்தனையின் அடிப்படையில் புனையப்பட்டுள்ள நாவல் என்ற தோற்றம் கிடைக்கிறது. அடிப்படையில் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் எல்லோரும் எப்படிச் சிந்திப்பார்களோ அதே கோணத்தில்தான் இந்த நாவல் இயங்கியிருக்கிறது என்று தெரிகிறது. இடதுசாரியினரும் பெரியாரியர்களும் சிந்திக்கும் விதத்தில்தான் நாவல் புனையப்பட்டுள்ளது. எனவே, இக்கட்டுரையாசிரியர் சொல்வது போல ‘மாற்றி யோசிப்பதன்’ அடிப்படை ரேகைகள் கூட இந்தப் புனைவில் வெளிப்படவில்லை என்பது புலனாகிறது. மாற்றி யோசிப்பது என்பதை விளக்குவதற்காக இக் கட்டுரையாசிரியர் ‘வாலி’ திரைப்பட எடுத்துக்காட்டை முன்வைத்திருப்பது, கம்பன், வால்மீகி போன்றோரின் இலக்கியத் திறனைத் திரைப்படங்களின் துணையோடு அளவிட்டுவிட முடியும் என்பதுபோன்ற தோற்றத்தைத்தான் தருகிறது.

    மற்றபடி, இக்கட்டுரை, மேற்படி நாவலுக்கு நல்ல அறிமுக முயற்சி என்று கொள்ளத்தக்கது. ஆய்வு என்ற முறையில் இதில் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

    ===============================================================

    Share
  • நூல்நோக்கம்

    -விவேக்பாரதி

    சித்தார்த்தனாகும் புத்தன்கள் – கவிஞர் சிபு

    போதிமரம், சித்தார்த்தன், புத்தன், ஞானம் இவற்றை அடித்துத் துவைத்துப் பிழிந்து சாயம் உலர்த்திப் போட்டிருக்கும் புத்தகம் “சித்தார்த்தனாகும் புத்தன்கள்”. ஏழெட்டு மாதங்கள் தவமாய்த் தவம் கிடந்து இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது என்றால் எத்தனை வெட்டல் ஒட்டல்களைக் கடந்து வந்திருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனால் மற்ற புத்தகங்களைப் போல ஓரிரவில் கடந்து சென்றுவிட முடியாத அடர்த்தி பக்கத்திற்குப் பக்கம் வலுக்கிறது. இடையிலோ, தொடக்கத்திலேயோ, நிறைவிலோ நம்மை ஒருகணம் புத்தக வரிகளை மறந்து அகவரிக்குள் பயணப்பட வைக்கும் கவிதைகள். நான்கே நான்கு கதாப்பாத்திரங்களைக் குழந்தை விளையாடும் பொம்மை ராஜாங்கத்தைப் போல மாற்றிமாற்றி நண்பனாய், சேவகனாய், அரசனாய், அடிமையாய், கேள்வியாய், விடையாய் போட்டு உருட்டி எடுத்து நம்மையும் தன்னுடன் இழுத்துக்கொண்டே போகிறது இந்தப் புத்தகத்தின் மூலம் தான் பிறந்தாகச் சொல்லிக் கொள்ளும் “சிபு” என்கிற குழந்தை.

    ஆரம்பத்திலேயே நம் அகத்தை வென்று விடுகிறார் சிபு,

    “இந்தப் புத்தகத்தில் புத்தர் உட்பட மனிதர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை” மற்றும் “கற்பனைகளைத் தவிற மற்ற எதுவும் கற்பனைகள் அல்ல”

    இந்த வரிகளே நம்மை அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் என்று படிக்கத் தூண்டுகிறது.

    எடுத்த எடுப்பில் எடுப்பான அணிந்துரை வழங்கியிருக்கிறார் கார்த்திக் இமயவரம்பன் அவர்கள். கவிஞர் சிபுவிடன் மிக நெருக்கமாகப் பழகிக் கொண்டிருக்கும் அவர் சிபுவைக் குறித்து அளவிட்டுச் சொல்லியிருப்பவை யாவும் புத்தகத்தில் மறைமுகமாக அவர் முகம் பார்க்கத் தோதாக அமைகின்றன. வைரவரி வானரசன் அவர்களது நயவுரை நயம் மிகுந்த உரை. தன்னுடைய உரையாகக் கவிஞர் தான் சொல்லியிருப்பதையும் சொல்லவிருப்பதையும் காட்டுகிறார். இவையெல்லாம் எல்லாப் புத்தகத்திலும் இயல்புதான் என்றாலும் எல்லாப் புத்தகத்தை விட இதனை மாறுதலாகச் செய்ய வேண்டுமென்ற எத்தணம் வெற்றியைத்தான் சேர்த்திருக்கிறது. எதார்த்தமே இந்தக் கவிஞரின் உயிர்நாதமாக விளங்குகிறது என்பது மிகவும் பாராட்டவும் வரவேற்கவும் தக்கது. பொதுவாகவே “கவிதை விற்பனைப் பொருளன்று” இது அனைவரும் அறிந்த வாசகம். மேலும் கவிஞர்கள் விற்பனை உத்திகளில் விலைபோவதில்லை. ஆனாலும் விற்பனை உத்திகளைக் கவிஞர்கள், சிபு போல வளர்த்துக்கொள்ளலாம் என்று நான் எங்கும் நிறுவத் தயாராக உள்ளேன். அகம் சார்ந்த ஒரு பயணத்தை இந்தச் சமுதயத்திற்குத் தர நினைக்கும் சிபு, அதனை இந்தக் கால நவீன இலக்கிய வடிவத்திலும், அதிகப் படியான கவிதை உள்ளீட்டு ஜாலங்கள் இல்லாத நிலையிலும் படைத்திருப்பது மிகவும் பாராட்டுவதற்கும் பின்பற்றுவதற்கும் உரியது.

    கவிதைக்குள், கதைக்குள், சரி கவிதைக் கதைக்குள் நுழைந்தால் முதலில் நாம் சந்திப்பது ஒரு செய்தியாளனை,

    “செய்தியாளன்
    ஆவதற்கு முதற்தகுதி
    பிணங்களைக் கண்டு
    அழக்கூடாது…

    எரியும் உடலை
    எக்காரணம் கொண்டும்
    அணைக்கக் கூடாது…”

    இவை சிபுவின் எதார்த்த அளவீட்டின் உச்சம் என்று கொள்ளலாம். படிப்படியாக செய்தியாளன் ஞானத்தையும் புத்தனையும் சித்தார்த்தனையும் போதி மரத்தையும் சந்திக்கிறான். அவற்றிடம் வழக்கமாகக் கேள்வி கேட்டு வாங்கிக் கொள்கிறான். திறனாய்வு அல்லது விமர்சனம் என்று இதனை நகர்த்திக் கொண்டு போவதற்கு முன்னம் ரசித்த பகுதிகளை வாசக ரசிகனாகச் சொல்லிவிடுவது என்று எனக்குத் தோணுகிறது. அதன்படி பார்த்தோமானால் சித்தார்த்தனாகும் புத்தன்கள் மொத்தமும் எதார்த்தத்தின் சிகரம். இந்த எதார்த்தத்தையும் கற்பனைக் கதையையும் வடதுருவ தென்துருவமாகக் கண்டுவந்த நம் சமுதாயத்திற்கு இவை இரண்டும் பக்கத்து வீட்டு அங்காளி பங்காளிகள் என்று காட்ட முயன்றிருக்கிறார் கவிஞர். என்னைப் பொறுத்தமட்டில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

    “எனக்குத் தெரியும்
    அந்தப் பூக்காரிக்குக்
    கணவன் இல்லை…
    எதற்கவளுக்கு
    இத்துணைப் பெரிய பொட்டு?
    பூக்கள் விற்கவா?”

    இந்த வரிகள் நம்மை அந்தப் பூக்காரி அருகில் அமர வைக்காமல் செல்லா. சமுதாயம் சில நிலைகளில் சில வேஷங்களைச் சீருடையாக நம்பி ஏற்கின்றது. விபூதி பட்டை அடித்த முதல் பெஞ்ச் மாணவன், சிடுமூஞ்சி பேருந்து நடத்துநர் என்பது போல..

    செய்தியாளன் ஞானம் என்கிற பொருளை, ஆளை, சக்தியை என்னவோ ஒன்றைத் தன் கண்களால் காண்கிறான். தன் பழக்க தோஷத்தில் அதற்கு முன்னமும் பேனாவை நீட்டிக் கேள்விகள் கேட்கத் தொடங்குகிறான்., அவன்,

    “நீதான் புத்தனுக்குக் கிடைத்தாயா?” என்று கேட்க,

    “நான் கிடைத்ததால்தான்
    அவன் புத்தன்,
    இல்லையேலவன்
    சிறுவன் சித்தார்த்தன்”

    என்று ஏளனமாக ஞானம் பதில் சொல்கிறது. இவ்விடம் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைப்பதில் வியப்பொன்றும் இல்லை. பொதுவாக நாம் பொருட்களின் மீதும் தகுதிகளின் மீதும் பற்று கொள்கிறோம். சில சமயங்களில் அவற்றால் கர்வமும் கொள்கிறோம். நம் மனம் அதனால் ஆனந்தமும் திருப்தியும் அடைகிறது, இஃதொரு பக்கம் இருக்க, பொருட்களோ, தகுதிகளோ நம்மை என்ன நினைக்கும்? புத்தனை நான் அடைந்ததால் தான் அவன் புத்தன் ஆனான், இல்லையேல் அவன் சித்தார்த்தனாகவே இருந்திருப்பான் என்று ஞானம் சொல்வதாக இங்குக் காட்டப்பட்டிருக்கும் நிலை, நம் வாழ்வில் எதுவும் நிலையானது இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.

    நான் முன்னம் குழம்பினேன், அல்லது குழப்பினேன் என்று வைத்துக்கொள்வோம். எது ஞானம்? சக்தியா? தகுதியா? ஆற்றலா? அடிப்படையா? ஆளா? பொருளா? மாயையா? குணமா? எத்தனை கேள்விகள்! இதற்கு விடையைக் குழப்பி விட்ட சிபுவிடமே கேட்கலாம் என்று பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள்.

    “உன்னைக் கிழித்து
    உன்னையே தைக்க,
    உன் கையிலுள்ள
    கத்திரிக்கோலும், ஊசி நூலும்
    தான் ஞானம்”

    உலகியல் என்பது நம் யாவருக்கும் அனுக்கமான ஒரு புள்ளி தான். அது நம்மால் கற்பனை செய்யப் படவேண்டியது அன்று. கண்ணால் கண்டுகொள்ளத் தக்கது. அப்படிப்பட்ட உலகியல் இந்தப் புத்தகத்தில் நிரம்பிக் கிடக்கின்றது. தற்போதைய சமுதாயத்தின் இருள் பக்கங்கள் வெட்டவெளிச்சமாக கவிஞரின் சொற்களில் அம்பலமாகின்றன.

    “போதிமரமெங்கே?
    யார் வீட்டுக் கொட்டகையில்
    கரையான் அரித்துக் கிடக்கிறது?”

    “இராஜகுமாரனுக்கு
    மட்டும் தான்
    உன் ஞானக் கீற்றில்
    கூரை போடுவாயா?

    சொல்

    முதலில் நீ
    எந்தக் காக்கையின்
    மலக்குடலிலிருந்து
    சுகப்பிரசவமாய்க்
    கபிலவஸ்துவில்
    விழுந்து முளைத்தாய்
    நினைவிருக்கிறதா?”

    போன்றவை அந்த உலகியலின் எடுத்துக்காட்டுகள். கவிஞர் தத்துவம், அறிவியல், காதல், விரக்தி என்று எல்லா துறைகளையும் வம்புக்கிழுத்தபடியே இருக்கிறார். இவர் கதையில் போதிமரமே பாவம் மரம் வெட்டிப் பிழைக்கக் கையில் கோடரியோடு அலைகின்றது.

    சிபுவின் எள்ளல் முழுக்கமுழுக்க சமுதாய நலத்தின் விழைவாக ஒலிக்கின்றது.

    “வேண்டுமென்றால்
    அரசு போதி மரங்களுக்கு
    மேற்கூரை போடுங்கள்,

    ஒருவேளை
    ஏழைச் சித்தார்த்தன்கள்
    தியானிக்க வரலாம்!”

    இதைவிடச் சிறந்த துள்ளலும் எள்ளலும் கிடைக்குமா? வானம்பாடி காலத்துக் கவிஞர் தான் இங்கு வந்தாரோ என்றெண்ண வைக்கும் அற்புதமான வீச்சு.

    “கிட்டுவதை எல்லாம்
    புனிதமாகக்
    கருதுங்கள், உங்களை
    விட்டுச் சென்ற
    அத்தனையும்
    போதிமரம் தான்..”.

    “பசியின்மையில்
    சிந்திய சோற்றுப் பருக்கை
    பசியில் போதிமரம்!

    குளிருக்கு இதம்,
    கருகும் விறகு
    போதிமரம்..
    விழுந்து
    எழுந்திரு,
    தாயின் அதட்டல்
    போதிமரம்..
    பிரம்பை நேசி,
    பள்ளியே போதிமரம்.
    துரோகம் சுவை,
    தந்தவன் போதிமரம்,
    நெரிசல்தான் மன்னித்துவிடு
    மிதித்தவன் போதிமரம்,

    இறங்கித் தேடு
    உன் இன்னொரு பையை,
    பயணம் போதிமரம்..

    போதிமரங்கள், வெறும்
    நிழலை மட்டும் தருவதில்லை,

    சொட்டும் சூட்டையும்
    சுறுக்கென்ற பாடத்தையும்
    தரும்..”

    கவிஞர் வரையறைகள் செய்வதில் வாழ்க்கையைக் கழிக்கிறார் போலும். கண் பார்க்கும் அனைத்தையும் வரையறுக்கிறார்.

    “பூமியின் மேல்பக்கம்
    தோண்டப்பட்ட
    நுணுக்கமான
    ஆழம்தாம், நம்வானம்..”

    ஒருநாள் என் பராசக்தி அந்தாதியில் எழுதினேன்,

    “அறிந்தவை யாவும் அரியதென் றேதான் அளத்திடுவார்!
    அறிந்தவை ஏதும் அவறறி வில்லை அறிந்தவர்கள்
    அறிந்தவை தம்மை அனுபவிப் பாரன்றி ஆள்நிறைந்தே
    அறிந்தவை தோறும் அலட்டுகி லாரென தம்பிகையே! (50)”

    இதனை மிகவும் எளிமையாக்கித் தர இயலும் என்றால் அது கவிஞர் சிபுவால் நிகழ்ந்திருக்கிறது.

    “ஆழத்தில் இறங்கியவர்கள்
    ஆசிரமத்துக்குத்
    திரும்பியதில்லை,
    அவர்கள் ஆழமாகவே
    ஆகிவிடுகிறார்கள்..”

    அடுத்தென்ன சித்தார்த்தனைத் தேடுகிறான் செய்தியாளன். அவனைத் தேடும் தருவாயில் இவன் உதிர்த்துக்கொண்டே செல்லும் புலம்பல்களை உங்களுக்குச் சொல்லி வீணாக்க விரும்பவில்லை என்று கடந்தாலும்,

    “இப்போது
    எந்தக் குப்பைத் தொட்டிக்குள்
    தொப்புள்கொடியில்
    எறும்பு மொய்க்கத்
    தியானம் செய்கிறாய்?”

    என்ற இந்த வரிகள் என்னை கடக்க முடியாமல் நிறுத்துகின்றன. இளவரசன் சித்தார்த்தனை மட்டுமே பார்த்திருக்கும் நமக்கு இந்தக் கேள்விகள் எத்தனை சித்தார்த்தன்கள் உலகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பயணித்துக்கொண்டும் படுத்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

    இதோ அதையும் கவிஞரே சொல்கிறார்,

    “இன்று
    எத்தனையோ
    சித்தார்த்தன்கள்
    இருக்கிறார்கள்,
    ஒரு புத்தன்கூட
    வெளிச்சத்திற்கு
    வருவதில்லை.”

    விட்டால் இப்படி வரிக்குவரி ரசனைக் குவியல்களைக் காட்டி நீங்கள் ரசிக்கவே வைக்கப்பட்டிருக்கும் சில பிரத்யேகமான இடங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை. மேற்படி சித்தார்த்தனாகும் புத்தன்கள் நூல் இந்தக் காலத்து நவீன கவிதை வடிவத்தில் எழுதப் பட்டிருப்பதும், கவித்துவ உள்ளீடுகள் என்று வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக இருப்பதும் நான் முன்னமே சொன்னதைப் போல மிகவும் மெச்சி வியக்கத்தக்கது.

    இலக்கண மரபைக் கழற்றிய ஒரு மனநிலையில் பயணிக்கும் உரைவீச்சுக் கவிதைகளுக்கும் இலக்கணம் என்பது கட்டாயமாகிறது. உரைவீச்சுக் கவிதைகளும் எழுதப்படுகிற மொழி தமிழ் என்பதனால் தமிழ் மொழிக்கே உரிய சில அடிப்படை இலக்கணங்களை இன்றைய நவீன கவிஞர்கள் தங்கள் மனத்துக்குள் ஆழப் பதித்தாக வேண்டும். காட்டாற்று வெள்ளமும் கண்களுக்கு அச்சம் கொடுத்தால் பயனில்லை தானே. அந்த வகையில் புத்தகம் முழுக்க கவிச்சுவையைப் போலவே எதார்த்தமாக நிரம்பிக் கிடக்கின்றன ஒற்றுப் பிழைகளும், புணர்ச்சிப் பிழைகளும். தற்போது கவிதை எழுதும் நவீன கவிஞர்களிடம் நான் கண்டு மிகவும் நொந்து போகும் இன்னொரு சகிக்கமுடியாத பிழை, ஒருமைப் பன்மை மயக்கம். “கனவுகள் வந்தது, காட்சி விரிந்தன” என்றெல்லாம் மாற்றிமாற்றி எழுதும் பாங்கு மிகவும் சகஜமாகிப் போய்விட்டது இந்த முகநூல் சூழ் உலகில். எனது இந்த வருத்தத்தை இவ்விடம் சொல்லக் காரணம் சித்தார்த்தனாகும் புத்தன்கள் புத்தகமும் தன் பங்கிற்கு ஒருமைப் பன்மையில் பெரிய மயக்கத்தைத் தந்துகொண்டுதான் இருக்கிறது.

    கதைநோக்கமோ கற்பனை ஆற்றலோ எவ்விதச் சலனமும் இல்லாமல் இனியதொரு பிரவாகமாகத்தான் நடந்து நிறைகிறது. ஆனால் என்னைப் பொருத்தமட்டில் அதிகப்படியான எதார்த்தம் ரொம்பவே திகட்டச் செய்கின்றது. ஒருநாள்தான் வாழ்வு என்று தெரிந்திருந்தாலும் மலரை நாம் ரசிப்பதை நிறுத்துவதில்லை. கடந்தது மறையும் என்று தெரிந்திருந்தாலும் நாம் மணங்களை வெறுப்பதில்லை. நாளையே நிச்சயம் இல்லை என்ற வாழ்க்கையை நாம் வாழ்கிறோம் என்றாலும் அதற்காக நாளையைத் திட்டமிடாமல் நகர்வதில்லை. உலகியலின் எதார்த்தங்கள் என்பன எப்போதும் எல்லாராலும் உணர்ந்து அறியப்படுவன தாம். அவற்றை உணர்த்தும் முகத்தான் இந்த நூல் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும் எனக்கிது அதிகப்படியான பயத்தையும் தயக்கத்தையும் உருவாக்குகிறது என்பது திண்ணம். இந்தப் பயம் எனக்குப் புதியதல்ல, பட்டிணத்தாரின் பாடல்களைப் படித்தபோது எப்படியெல்லாம் நடுங்கினேனோ அவற்றைச் சித்தார்த்தனாகும் புத்தன்களும் எனக்குள் செய்கிறது என்பது, பல நூற்றாண்டுகள் தொடாமல் இருந்த பட்டிணத்தாரின் உணர்வுக் கடத்தலை இந்த வருடம் வெளியான ஒரு நூல் செய்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியைத் தருகிறது. கூடவே எதார்த்தங்களின் பட்டியலால் இலேசான பயமும் என்னைப் பீடிக்கிறது.

    ஆகமொத்தம் சித்தார்த்தனாகும் புத்தன்கள் உலகம் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய புத்தகம். கற்பனை, எதார்த்தம் இரண்டையும் எப்படியெல்லாம் இணைத்து, ஞான மார்க்கத்தில் கொண்டுசெல்ல முடியும் என்று ஏழெட்டு மாதங்கள் ரூம் போட்டு யோசித்திருக்கும் கவிஞர் சிபு வின் முயற்சி வானத்துக் கீழே வாழ்ந்து, வாசிக்கத் தெரிந்த அத்தனை உயிர்களுக்கும் ஒரு வரம்.

    _______________________________________

    புத்தக விமர்சனமாக வரவிருக்கும் இந்தத் தொடரில் தங்கள் புத்தகம் குறித்த விமர்சனம் இடம்பெற வேண்டில் தங்கள் புத்தகத்தின் மென்நகலையும் (SOFT COPY) அட்டைப் படத்தையும் vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

     

    Share
  • வேதாளங்கள் வாழும் கன்னக்குழி

    – கவிஞர் பூராம்

    முகத்தின் அருகில் நிலவின் ஒளி
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்
    முகம்பாா்க்கத் துண்டும்  அவளின் கன்னக்குழி!

    பூமுகத்தில் வாசனைச் சிரிப்பில்
    அடிமைப்படுத்தும் ஆவேசத்தோடு
    மனம் அப்பிக்கொண்ட முகத்தில்
    வெட்கமில்லாமல் நானும்
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்…

    ஆனந்தத்தில் தோன்றி மறையும்
    இறைகுழி அவள் கன்னத்தில்,
    வேறொன்றும் அறிய மறுக்கும்
    அறியாமையுடன் நான்
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்…

    தொிந்துதான் இருந்தது அவளுக்கு
    ரசிக்கும் ஆன்மாவின் அன்பு
    சொல்ல மறுக்கும் அவளும்
    சொல்லத் தயங்கும் நானும்
    தன்முனைப்பின் உச்சத்தில்
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்
    தப்பித்துக்கொள்ள தனியறையில்…

    பாம்பின் விடத்தோடும் ஆதி கனவுகளின்
    மங்களான நினைவோடும்
    அவளது கன்னக்குழி கண்ணின் பாவையாய்!
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்

    அவளாகிப்போனேன் அவளில்லாமல்!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 16

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 16 – பொறையுடைமை

    குறள் 151:

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை

    தம்மேல குழி தோண்டுதவன கீழவிழாம தாங்குத நெலம் போல தன்னைய எளக்காரமா பேசுதவனோட செயல கூட பொறுத்துக்கிடதுதான்  ஒசந்த கொணம்.

    குறள் 152:

    பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
    மறத்த லதனினும் நன்று

    அளவுக்கதிகமா செஞ்ச தீமயக் கூட பொறுத்துக்கிடணும். அத நெனைப்புல வச்சிக்கிடாம மறக்குதது பொறுத்துப் போவத விட நல்லது.

    குறள் 153:

    இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை

    வறுமையிலயும் பெரிய வறும வந்த விருந்தாளிய சரியா கவனிக்காம உடுதது. வலிமையிலும் பெரிய வலிம புத்திகெட்டவங்களோட செயல  பொறுத்துக்கிடதது.

    குறள் 154:

    நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
    போற்றி யொழுகப் படும்

    பொறுமையுள்ளவனா வாழுதவன தான் ஒலகம் நிறைவான மனுசன் னு சொல்லும்.

    குறள் 155:

    ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
    பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

    தனக்கு கெட்டது செய்தவன தண்டிச்சவங்கள பெரிய மனுசங்க ஒரு பொருட்டா மதிக்க மாட்டாங்க. பொறுத்துக்கிட்டவங்கள  மனசுக்குள்ளார வச்சி தங்கத்துக்கு சமமா மதிப்பாங்க.

    குறள் 156:

    ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ்

    தனக்கு கெட்டது செஞ்சவன தண்டிச்சவனுக்கு அன்னிக்கு மட்டுந்தான் சந்தோசம். அத பொறுத்துக்கிட்டவனுக்கு ஒலகம் அழியற வர புகழ் நெலச்சி நிக்கும்.

    குறள் 157:

    திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
    தறனல்ல செய்யாமை நன்று

    மத்தவன் நமக்கு கொடுமைய செஞ்சாலும் அத திரும்ப செஞ்சோம்னா அவனுக்கு நோவுமே ன்னு நெனச்சி பழி வாங்காம விடுதது நல்லது.

    குறள் 158:

    மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
    தகுதியான் வென்று விடல்

    அகராதியால (ஆணவம்) அக்கிரமம் செய்யுதவங்கள நாம நம்மளோட  பொறும கொணத்தால செயிச்சிடலாம்.

    குறள் 159:

    துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்

    அத்துமீறி நடந்துகிடுதவங்க பேசுத கடுஞ் சொல்ல பொறுத்துக்கிட்டவங்க குடும்ப வாழ்க்க வாழ்ந்தாலும் எல்லாத்தையும் துறந்த தூய துறவிக்கு சமானம் தான்.

    குறள் 160:

    உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொ னோற்பாரிற் பின்

    சோறு திங்காம நோன்பு இருக்கவங்களுக்கு இருக்க மதிப்பு கூட கடுஞ்சொல்ல பொறுத்துகிட்டவங்களுக்கு அடுத்தபடியா தான்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • படக்கவிதைப் போட்டி – 202

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.03.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 201-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ஹஃபீஸ் இஸ்ஸாதீன் எடுத்த வர்ணசாலம் காட்டும் இவ் எழிற்படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டி 201க்கு வழங்கியிருக்கிறார் திருமதி. சாந்தி மாரியப்பன். நிழற்பட நிபுணர்க்கும், அதனைத் தெரிவுசெய்த நங்கைக்கும் என் நன்றி!

    வண்ணங்களின் கலவையால் உருவானதே வனப்புமிகு இயற்கை. வண்ணங்களோடு தம் எண்ணங்களையும் பொருத்திப் பார்த்திருக்கின்றது இம் மன்பதை. ஆம்! மங்கலத்தின் அடையாளம் மஞ்சள்; வளமைக்குக் குறியீடு பசுமை; அச்சத்தின் வெளிப்பாடு சிவப்பு; தூய்மைக்குத் துணைநிற்கும் வெண்மை என்று வகைபிரித்து வைத்திருக்கின்றது அது!

    வண்ணங்களுக்கு மனித உளவியலில் தாக்கத்தை உண்டாக்கும் தன்மையும் உண்டென்கிறது இன்றைய மருத்துவ அறிவியல்.

    இதோ…நீர்த்துளிகளுக்குள் நிழற்படங்களாய் ஒளிரும் இப்பூக்களுக்குப் பாக்கள் புனையப் புறப்பட்டுவிட்டார்கள் நம் வல்லமைக் கவிஞர்கள்! அவர்களை வரவேற்போம்!

    ***** 

    பளிங்குச் சிறைக்குள் ஒளிந்திருக்கும் பாவையோ? ஆதவ ஓவியன் ஆக்கிய அற்புதச் சித்திரமோ? அகந்தை இருளுக்குள் ஒளியாய்த் துலங்கும் மறைபொருளோ? என்று இப்புகைப்படம் குறித்த தன் ஐயங்களை வரிசையாய் வெளிப்படுத்தியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்ட பாவை…

    பின்புலத்தில் இருக்கின்ற மஞ்சள் வண்ணப் பூவொன்று..
    தன் நிறத்தால் அஞ்சனம் தீட்டிய அழகுப் பனித்துளிகள்..
    தேன் துளிபோல் உருமாறிக் கண்களுக்கு விருந்தான நிகழ்வு..
    வானத்து விண்மீன்கள் தரையிறங்கிப் படைத்த பொற்குமிழ்களாய்..!!

    பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்ட..
    பாவையாக மஞ்சள் மலர்..!!

    வெளியுலகைக் காணுதற்கு மலர்ச்சியுடன்
    வர ஆயத்தமாகும் கருக்குழந்தை..!!

    தலைகீழாய்த் தொங்கியது மலைத்தொடர்..
    தனைத்தாங்கும் இத்தரணியைக் காண..!!

    பரப்பு இழுவிசையால் கட்டுண்ட..
    பனித்துளிகளின் படை அணிவரிசை..!!

    ஆதவனெனும் ஓவியன் ஒளித்தூரிகையால்..
    ஆக்கிய அற்புத வண்ணச் சித்திரம்..!!

    அகந்தையெனும் கரிய மாயத்திரையுள்ளே..
    அறிவாய் ஒளியாய் விளங்கும் மறைபொருள்..!! 

    ***** 

    ”நீர்த்துளிகளுக்குள் அழகாய் முகங்காட்டும் மலர்களைப்போல் அயர்வின்றி முயன்றால் முன்னேற்றப் பாதையும் மனத்துக்குள் காட்சியாய் விரியும்” என்று நம்பிக்கையூட்டும் நன்மொழிகளை நவில்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    கடவுள் காட்டிய காட்சி

    சோர்ந்துவிடாதே மனிதா
    சோகப்படாதே சோம்பலில்லாமல்
    தேட விழைந்தால் காணலாம்
    தேடிய பொருளைக் கண்ணெதிரே
    உன்னால் முடியாதது என
    உலகில் எப்போதும் இல்லை ஒன்று.
    மனம் இருந்தால்
    மார்க்கம் உண்டு
    தினமும் அறிவுரை கூறி
    திருத்த முயன்ற ஞானி
    புரிந்துகொள்ளாமல் மனிதர்கள்
    புத்திகெட்டு அலைவதைக்கண்டு
    வருத்தமுற்று கடவுளிடம்
    வழிகாட்ட வேண்டியதால்
    புதுவிதமாய் மனிதனுக்கு
    புத்திபுகட்ட கடவுள்
    காட்டிய எடுத்துக்காட்டே
    காட்சியாய்க் கண்ணெதிரே
    வண்ண வண்ண மலர்கள் இங்கே
    வரிசையாய் உள்ள துளிகளுக்குள்ளே
    திரும்பிப் பார்த்தால் தெரியும் அதன்
    தெளிவான முழு உருவம் அதுபோல்
    முயற்சித்துப் பார் ஒளிந்துள்ள
    முன்னேற்றப்பாதை தெரியும்
    கடவுள் சொன்ன வார்த்தைகளைக்
    காதால் கேட்டு முயற்சித்தால்
    வாழ்க்கை வளமாகும்
    வசந்தங்கள் வாடிக்கையாகும்.

     *****

    ”திரவியம் தேடி தினம் ஓடும் மனிதா…! உதிக்கும் சூரியன்; உதிரும் இலைகள், மூக்குக் கண்ணாடியாய்ப் பனித்துளி; அதிலே முகங்காட்டும் மார்கழிப் பூ என்று தினந்தோறும் நான் நிகழ்த்தும் வர்ணசாலங்களைக் கண்டு இரசித்ததுண்டோ நீ?” என்று இயற்கையன்னையின் சார்பாய் வினாவெழுப்புகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    பாடம் புகட்டிய பனித்துளிகள்

    உதிக்கும் சூரியன், உலா வரும் நிலா
    உதிரும் இலைகள், மலரும் பூக்கள்
    கூவும் குயில்கள் என
    இயற்கையின் அழகு
    அரங்கேறும் தினந்தோறும்
    திரவியம் தேடி
    தினம் ஓடும் மனிதா
    இதை என்றேனும் கண்டு ரசித்ததுண்டோ?
    தாயின் மடியில்
    உறங்கும் சுகம் தேடி
    பூமித்தாயின் மடியில் படர்ந்தாயோ?
    நடுங்கும் குளிரில் அவளைக் காத்திட
    வெண்போர்வையாய் விழுந்தாயோ?
    காலைக் கதிரவன் கைகளாய்க்
    கதிர்கள் வந்து உன்னை எழுப்பிட
    எழ மறுத்து அழுதாயோ?
    பனி உருகி நீராய்க் கரைந்தாயோ?
    நித்தம் நிகழும் நிகழ்வுகளைத்
    தெள்ளத்தெளிவாய்க் கண்டிட
    இயற்கை தந்த மூக்குக்கண்ணாடியோ
    இந்தப் பனித் துளிகள்?
    பனியில் நனைந்து
    பகலவன் கண்டு
    மலர்ந்த மார்கழிப் பூவைப்
    பனித்துளிக்குள்
    படம் பிடித்து வைத்தாயோ?
    ஓடும் மனிதா!
    ஒரு நிமிடம் நின்று இந்த
    ஒளிப்படத்தை கண்டிடு
    என்னுள் ஒளிந்திருக்கும்
    ஓராயிரம் அழகுகளைக் கண்டு ரசித்திடு!

    *****

    மென்காலைப் புலர்பொழுது பொன்மஞ்சள் மலர் கொய்து வெண்பனியாம் நூலெடுத்து நெய்த கண்ணாடிச் சித்திரச் சேலையோ இது? என்று இப்புகைப்படக் காட்சியை வி(ந)யக்கிறார் திரு. யாழ். பாஸ்கரன்.

    முத்து முத்துப் பனித்துளியில்
    முகம் காட்டிச் சிரிக்கும் மலர் இதழ்களை
    முத்தமிடத் துடிக்கும் வண்டினங்கள்
    நித்தம் நித்தம் தவிக்கிறது

    மென் காலைப் புலர் பொழுது
    பொன் மஞ்சள் மலர் கொய்து
    மின் வெண்பனி நூலெடுத்து நெய்த
    கண்ணாடிச் சித்திரச் சேலையோ இது?

    கண்கள் மயங்கும் காட்சிப்பிழைதான்
    காணக்கிடைக்காத கலை எழிலின் நிலைதான்!
    காற்று நுழைந்தால் கலைந்து விடும்
    கவனம் சிதைந்தால் கணத்தில் மறைந்துவிடும்

    சின்னச் சின்ன நீர்க்குமிழிகளுக்குள்
    சித்திரத் தூரிகைக் கொண்டு வரைந்த
    சிதைவுறா இயற்கையின் சிறந்த படைப்பு ஒளிச்
    சிதறலில் விளைந்த அழகின் சிரிப்பு

    விந்தைகள் படைக்கும் இயற்கை ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை
    விரியட்டும் வியப்பின் எல்லை இந்த
    விடியலின் விடுகதை அழகை
    விழி பருகி மதி மயங்காதார் யார் ஒருவர் உண்டோ?

    *****

    வண்ண மலர்களுக்கும் அவற்றைத் தாங்கிநிற்கும் பனித்துளிகளுக்கும் தம் எண்ணத் தூரிகைகொண்டு சொல்லோவியம் தீட்டியிருக்கும் பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    நிரந்தரமா…?

    தற்காலிகத் தஞ்சமாய்க்
    கிளையில் தொங்கும்
    நீர்த்துளிகள்…

    கிடைத்த தருணத்தை
    விடாத
    மஞ்சள் மலர்கள்,
    முகம் பார்க்கின்றன
    நீர்த்துளிக் கண்ணாடியில்-
    தற்காலிக இலவசங்களால்
    தடம்மாறும் மனிதன்போல்!

    சுடு கதிர்கள் காட்டிச்
    சூரியன் வருகிறான்,
    கதை முடிக்க…

    நிரந்தரத்தின் முன்
    தற்காலிகங்கள்
    நிலைகெட்டுப் போவதுதான்
    இயற்கையோ…?!

    ”தற்காலிகத் தஞ்சமாய்க் கிளையில் தொங்கும் நீர்த்துளிகளில் முகம்பார்க்கும் மலர்களைப் போல், தற்காலிக இலவசங்கள்பால் வசப்பட்டு நிலைகெட்டுப்போகும் மாந்தனே! என்றுணர்வாய் நீ நிரந்தரத்தின் மகத்துவத்தை?” என்ற தன் வருத்தத்தைப் பாவில் பதிவுசெய்திருக்கும், திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • பஞ்சரத்னம்

    -நிர்மலா ராகவன்

    பஞ்சரத்ன கீர்த்தனை அஞ்சு இருக்கு. ஆனா, நம்பகூட சேர்ந்து பாட இந்தத் தடவை அஞ்சுபேர்கூட இல்லியே!” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி மாமி.

    “அதனால என்ன? வீணை வாசிக்க ஒருத்தர் இருக்காங்க, இன்னும் புல்லாங்குழல் வாசிக்க, வயலின் வாசிக்க,” என்று அடுக்கிக்கொண்டே போனாள் பரம் சோதி.

    அந்த இசைக்குழுவில் இருந்தவர்களிடையே இருந்த ஒரே ஒற்றுமை – அந்த சிலரே இந்தியாவில் முறையாக கர்னாடக இசை பயின்றவர்கள் என்பதுதான்.

    அவர்களில் மூவர் திருமணத்திற்குப்பின் கோலாலம்பூர் வந்தவர்கள். கல்லூரிப்படிப்புக்கு நிறைய செலவாகும், போதாத குறைக்கு அதிகம் படித்த மாப்பிள்ளையைத் தேட வேண்டும், அவன் வரதட்சணை நிறைய கேட்பான் என்று ஏதேதோ பயங்கள் எழ, கல்யாணத்துக்கு உரிய காலம் வரும்வரை பாட்டாவது கற்றுக்கொள்ளட்டும், பெண்பார்க்க வரும்போது மதிப்பாக இருக்கும் என்ற பெற்றோரின் திட்டத்தால் பாட்டு கற்றுக்கொண்டவர்கள்.

    பரம் சோதி மட்டும்தான் மலேசிய நாட்டில் பிறந்து வளர்ந்தவள். அதனாலேயே தான் பிறரைவிட உயர்த்தி என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவள்.

    பதினைந்து வயதாக இருக்கையில், மூன்றாம் படிவ அரசாங்கப் பரீட்சையில் நிச்சயம் தேர்ச்சி பெறமுடியாது என்று புரிந்ததும், “நான் `ஊருக்குப்’ போய் பாட்டு கத்துக்கறேன்!” என்று முடிவெடுத்தாள்.

    குண்டும் கறுப்புமாக இருந்த மகளைக் கல்யாணம் செய்துகொள்ள ஒரு லட்சம் வெள்ளி கொடுத்தால்கூட ஒருவனும் வரமாட்டான் என்று தாய்க்குத் தெரிந்துதான் இருந்தது. அப்படி அள்ளிக் கொடுக்க வசதியும் இருக்கவில்லை. மகள் இந்தியா சென்றாவது தனக்கென ஒரு வழி செய்துகொள்ளட்டுமே என்று சம்மதித்தாள்.

    போன இரு வருடங்களுக்குள் ஒரு பட்டத்துடன் திரும்பிவந்தாள் பரம் சோதி.

    `இசை அரசி அப்படின்னு ஊரிலேயே பட்டம் குடுத்திருக்காங்கன்னா சும்மாவா!’ என்று, அவளிடம் வாய்ப்பாட்டும் வாத்தியமும் கற்க வந்தார்கள் பலரும். எந்தப் பரிசோதனையுமின்றி, வானொலி, தொலைகாட்சியில் பக்கவாத்தியம் வாசிக்கவும் அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

    முதலில் பெருமையாக இருந்தது. ஆனால், போகப்போக, இப்படியே இனிய குரலோ, ஞானமோ இல்லாதவர்களுக்குப் பாட்டு படித்துக்கொடுத்துக் கொண்டேதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற நிதரிசனம் புரிந்துபோக, விரக்தி எழுந்தது பரம் சோதிக்கு.

    தொலைகாட்சி நிகழ்ச்சியில், நளினி என்ற இளம்பெண் காமராவுக்கு முன்னால் கம்பீரமாக உட்கார, வாத்தியத்துடன் தான் ஒரு பக்கத்தில் அமரவேண்டிய நிலை அவமானகரமாக இருந்தது.

    புதிய மணப்பெண்ணாக இந்தியாவிலிருந்து வந்திருந்தவள்! தன்னைவிட பத்து வயதாவது இளையவளாக இருப்பாள்!

    ஆண்களுக்கு அது என்ன வழக்கம், வெகு தூரத்தில் போய் பெண்களைத் தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு வருவது? மலேசிய நாட்டில் பெண்களே கிடையாதா?

    பரம் சோதியின் மனப்போராட்டத்தைக் கவனியாது, நளினி இசையிலேயே தன் முழுமையான கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.

    `இவளை மிஞ்சவேண்டும்!’ என்று வெறியுடன் வாசித்தாள் பரம் சோதி. ஆனால் ஒன்றரை வருட இசைக்கல்வியால் நளினிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது ஒரு சிறு திருப்தி எழுந்தது சோதிக்குள்.

    `காமராவையே பாத்துக்கிட்டு பாடுங்க,’ என்று இயக்குனர் சொல்லியிருந்ததைத் தப்பாமல் கடைப்பிடித்திருந்தாள் நளினி.

    சீனர்களின் மிகச் சிறிய கண் சற்றுப் பெரியதாகத் தெரிய, வழக்கமாக காமராவை கீழிருந்து மேல் நோக்கித் திருப்புவார்கள். அதேபோல் நளினிக்கும் செய்ததில், ஏற்கெனவே பெரிதாக இருந்த அவளுடைய `இந்திய நயனங்கள்’ அளவுக்கு மீறி பெரியதாக, முறைப்பதுபோல் தோற்றமளித்தன.

    “சகிக்கலே!” என்று சொல்லிக்கொண்ட பரம் சோதி, தான் சற்றுக் கூன்போட்டு அமர்ந்திருந்ததையும் பார்க்காதிருக்க முயன்றாள்.

    `அம்மாவுக்கும் வயசாகிடுச்சு. வீட்டிலே, வெளியிலே எல்லா வேலையும் நான்தான் பாத்துக்கணும். முடியற காரியமா!’ என்று தனக்குத்தானே பரிதாபப்பட்டுக்கொண்டாள்.

    தாய் எவ்வளவு மறுத்தாலும் கேளாது, தான் எங்கு போனாலும் அவளையும் அழைத்துப்போவதை வழக்கமாக வைத்துக்கொண்டாள். அப்போதெல்லாம், `உங்களுக்குத்தான் துணை இருக்கிறதோ?’ என்று பிறரிடம் சவால் விடுவதுபோல் அவள் தலை வழக்கத்திற்கு அதிகமாகவே நிமிர்ந்திருக்கும்.

    ஆனால், அவள் நினைத்தமாதிரி அது ஒரு நல்ல மாற்று மருந்தாக இருக்கவில்லை.

    “ஹலோ, பரம் சோதி! சௌக்கியமா?” என்று முகமெல்லாம் புன்னகையாக நளினியைக் கோயிலில் பார்த்தபோது, பதிலுக்கு அவளை வெறிக்கத்தான் முடிந்தது.

    நளினியின் பக்கத்தில் அழகழகான இரு குழந்தைகள்!

    சுதாரித்துக்கொண்டு, “நீ இப்போ எல்லாம் பாடறதில்லே போல இருக்கு!” என்றாள், உபசாரமாக. மாணவ மாணவிகளின் வெவ்வேறு ஸ்ருதிக்கேற்ப ஓயாமல் கத்திக் கத்தி, தொண்டையில் இரண்டு குரல்கள் பேசின.

    நளினி புன்னகைத்தாள். “வீட்டிலே இதுகள் ரெண்டையும் பாத்துக்க வேண்டியிருக்கு. வேலைக்குவேற போறேன், இல்லையா? சாதகம் பண்ண நேரமே கிடைக்கறதில்லே, போங்கோ!”

    அவள் யதார்த்தமாகக் கூறியது சோதியின் ஆத்திரத்தைக்கிளப்பிவிட்டது. `உனக்கில்லாத குழந்தை பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது!’ என்று குத்திக்காட்டுகிறாள்!

    பட்டப்படிப்புப் படித்து வேலைக்குப் போனால்தான் பெருமையோ? தானும்தான் ஓர் ஆசிரியை – இசை ஆசிரியை!

    அதிகம் யோசிக்கவில்லை அவள். நளினியை எப்படி மட்டம் தட்டுவது என்று உடனே புரிந்துபோயிற்று.

    “தியாகராஜ ஆராதனை வருதில்ல? வந்து பாடலாமே!” என்றாள் தேன்சொட்ட. பிறகு, “பஞ்சரத்ன கீர்த்தனை பாடம்தானே?” என்றும் கேட்டுக்கொண்டாள், சந்தேகம் இல்லாவிட்டாலும்.

    ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு, “பத்து வருஷம் கத்துண்டு இருக்கேனே!” என்றாள் நளினி.

    `இரு! அப்போ உனக்கு நல்ல பாடம் கற்பிக்கறேன்,’ என்று கறுவிக்கொண்டாள் சோதி.

    அரங்கத்தில் இசைப்பிரியர்கள் நிரம்பி இருந்தார்கள்.

    சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மேடையில் பாடப்போகும் உற்சாகத்தில் நளினி நடுவில் அமரப்போனாள்.

    “நீ அங்கே போய் உக்காரு!” என்ற ஆணை பிறந்தது. பரம் சோதியின் கட்டளைக்கு மறுபேச்சின்றி கீழ்ப்படிந்தாள் அவள்.

    கடவுளுக்காகப் பாடுகிறோம். எங்கே உட்கார்ந்தால் என்ன! அதுதான் மூன்று ஒலிபெருக்கிகள் வைத்திருக்கிறார்களே என்றுதான் அவள் எண்ணம் ஓடிற்று.

    ஆனால், யாருமே எதிர்பாராவிதமாக அவை மூன்றையும் தன் எதிரில் வைத்துக்கொண்டு, வாத்தியத்துடன் நட்டநடுவில் பரம் சோதி அமர்ந்துகொண்டாள்.

    முதலில் சற்று அயர்ந்தாலும், `இந்த நல்ல நாளில் இவளுடன்போய் சண்டை பிடிப்பதாவது!’ என்று மற்றவர்கள் ஒதுங்கினார்கள். அவர்களுடைய ஆத்திரம் அடுத்து வந்த கானமழையில் வெளியாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

    “நீங்க எல்லாரும் பாடினீங்களா, இல்லே மல்லுக்கு நின்னீங்களா? நல்லவேளை, தியாகராஜர் இந்தக் கண்ராவியைப் பாக்காம சமாதி ஆயிட்டார்!” என்று ஒரு ரசிகர் வெளிப்படையாகவே கூறினார், தலையைப் பக்கவாட்டில் ஆட்டியபடி.

    அடுத்த ஆண்டு குழுவுடன் சேர்ந்து பாட காமாட்சி மாமியிடமிருந்து அழைப்பு வந்தபோது, மெல்ல மறுத்தாள் நளினி.

    “வரலியா?” கேட்டவளுக்கு ஏமாற்றம்.

    “பரம் சோதி, பரம் சோதி, பரம் சோதின்னு மூணு தடவை அழைப்பிலே போட்டு, மூணு மைக்கையும் அவ முன்னால வெச்சுடுங்கோ! நான் வரலே!” என்றாள் நளினி. தீர்மானமாக.

    தொண்டை கட்டிக்கொண்டிருந்தாலும், குரல் கம்மியிருந்தாலும், `நீதானே இப்படிப் பண்ணினே?’ என்று கடவுளிடம் சண்டைபிடித்துவிட்டு, கோயிலில் பாடுவதே மேல் என்று தோன்றிப்போயிருந்தது.

    மேலும் சில ஆண்டுகள் கழிந்தன.

    ஒரு சாயந்திர வேளையில், கோயிலுக்குள் மிகுந்த பிரயாசையுடன் நடந்து வந்துகொண்டிருந்த பரம் சோதி, நளினியைப் பார்த்தும் பாராததுபோல் போக முயற்சித்தாள். அவள் கையைப் பிடித்து நடத்திச்செல்ல ஒரு பணிப்பெண்!

    நளினியின் மனதில் ஏதோ அசைந்தது. `காலமெல்லாம் தனிமையில் வாட வேண்டியிருக்கும் என்ற வருத்தம், பாவம்! அதைத்தான் அதிகாரமாக காட்டிக்கொண்டிருக்கிறாள்!’

    அவளருகே விரைந்து, “சௌக்கியமா, சோதி? அப்பாடி! பாத்து எத்தனை நாளாச்சு!” என்று பரிவுடன் விசாரித்தாள்.

    நீட்டிய அவள் கையைத் தன் இரு கரங்களாலும் பற்றிக்கொண்டாள் பரம் சோதி.

    (குறிப்பு: பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்த தியாகப்பிரம்மம் என்ற மகான் தெலுங்கில் அமைத்த எழுநூறு பக்திப்பாடல்கள் பிரசித்தமானவை. நூற்றுக்கணக்கான புதிய ராகங்களைக் கண்டுபிடித்த பெருமை இவரைச்சாரும். இன்றுவரை, கர்னாடக இசைக்கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து, பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி, அவரது நினைவு நாளைக் கொண்டாடுகிறார்கள் – பல நாடுகளிலும்).

    Share