தவறிழைப்பது ஆண்களின் பிரத்தியேக உரிமையோ?
-நிர்மலா ராகவன்
நலம்… நலமறிய ஆவல் – 148
தவறிழைப்பது ஆண்களின் பிரத்தியேக உரிமையோ?
`அவர் தானுண்டு, தன் காரியம் உண்டு என்றிருப்பார்!’ என்று சிலரைக் குறிப்பிடுவதுண்டு.
`நான் செய்வதில் அநாவசியமாகக் குறுக்கிடாமல் இருக்கிறார்!’ என்று பிறரை மெச்சி, அதனால் எழும் நிம்மதி எல்லோருக்கும், எப்போதும் வந்தால் உலகின் கதி என்னவாகும்?
கணவனோ, மனைவியோ, ஒருவரை ஒருவர் நிந்திக்கும்போது, `இது அவர்கள் குடும்ப விவகாரம்!’ என்று பிறர் ஒதுங்கிப்போவதால் நிலைமை மோசமாகத்தான் ஆகிறது. பிறர் குறுக்கிட்டால், தன்மானம் கருதியாவது ஒற்றுமையாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்களே!
கதை
எங்கள் எதிர்வீட்டிலிருந்து பெருங்குரல் எழுந்தது. ஆண்ட்ரூ தன் மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தான். (நாற்பத்து ஐந்து வயதிருக்கும். ஆனாலும், அவனது நடத்தையால் மரியாதை கொடுக்கத் தோன்றவில்லை). அடக்க ஒடுக்கமான மனைவியைத் தான் பழகும் விலைமாதர்களைப்போல் என்றெல்லாம் பழித்த அவச்சொல்லை என்னால் தாங்க முடியவில்லை.
ஆக்னஸ் எனக்கு நெருங்கிய சிநேகிதி. `கணவனுக்கு அடங்கியிருப்பதுதான் நல்ல பெண்ணுக்கு அடையாளம்’ என்று பொறுத்துப் போய்க்கொண்டிருந்தாள்.
அந்த அர்த்த ராத்திரியில் நான் மட்டும் தனியாக அவர்கள் வீட்டுக்குப்போய் தட்டிக் கேட்டால் நன்றாக இராது என்று, என் கணவரையும் எழுப்பி அழைத்துப் போனேன்.
அவர்கள் வீட்டுக் கதவை நான் தட்டித் தட்டி உடைக்காத குறை. ஒரு வழியாக வந்து கதவைத் திறந்த ஆண்ட்ரூ, “அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் அவரவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் அவர்களைப் பாராட்டுகிறேன்!” என்றான், ஆத்திரத்துடன். `உன்னை யார் அழைத்தது?’ என்று சொல்லாமல் சொல்கிறானாம்!
நான் அயராது, “என் கணவர் இப்படி என்னை வதைத்தால், அப்போது யாராவது உதவி செய்ய வந்தால், நான் நன்றியோடு இருப்பேன்,” என்றேன்.
உள்ளேயிருந்து பெரிய விம்மல் கேட்டது.
இருபது ஆண்டுகளாகத் தான் படும் பாட்டைப் பெற்றோர்களிடம்கூடக் கூறியதில்லை ஆக்னஸ். கணவனிடம் அப்படி ஒரு விசுவாசம். (வதை படுகிறவர்கள் வதைப்பவர்களைத்தான் முதலில் நாடுவார்களாம்). வெளிப்பார்வைக்கு கண்டிப்பும் கறாருமாக இருப்பதைப்போல் பாசாங்கு காட்டுவாள்.
தவறு தன்மேல் இல்லை, தனக்கும் ஆதரவு காட்ட ஒரு சிலராவது இருக்கிறார்கள் என்று தெளிந்ததும், கணவனுக்கு எதிராக நடக்கும் துணிச்சல் வந்தது அவளுக்கு. விரைவிலேயே, மேற்படிப்பைச் சாக்காக வைத்து வெளிநாடு போனாள் – கணவனை (கயவனை?) தனியே தவிக்க விட்டுவிட்டு.
பிறரது வாழ்க்கையில் எதற்காக குறுக்கிடுகிறோம்?
நம் செய்கையால் ஒருவருக்கு நிம்மதியோ, மகிழ்ச்சியோ கிடைத்தால், அதைப் பார்த்து நாமும் எதையோ சாதித்ததுபோல் மகிழ்வு உண்டாகிறதே! இப்படி நடந்தால் இரு தரப்பினருமே பயனடைகிறார்கள்.
சில சமயம், நாம் நல்லதென்று எதையாவது செய்யப்போய், அது எதிர்பாராத விளைவுகளில் கொண்டுவிடுகிறது. அவர்களுக்கு எழும் அவமானத்தை நம் பக்கம் திருப்ப முனைவார்கள்.
கதை
“நாம்ப பெரிய புள்ளை ஆயாச்சு. வகுப்பிலே ஒக்காந்திருக்கையிலே தமிழ் படிச்சுக் குடுக்கற வாத்தியார் என் தோளிலே கை போடறாருங்க, டீச்சர்!” என்று புகார் செய்தாள் அம்மாணவி.
வாரத்திற்கு ஒரு முறை, சனிக்கிழமைகளில் மட்டும் தமிழ் கற்றுக் கொடுப்பது அந்த மனிதனின் வேலை. பள்ளி விடுமுறையாதலால், அப்போதுதான் அங்கு நிறைய பேர் இருக்க மாட்டார்கள்.
அந்த நிகழ்வைப் பற்றி ஒரு தமிழ் பத்திரிகையில், என் தனிப்பட்ட பகுதியில், எழுதினேன். ஊர், பெயரெல்லாம் கிடையாது.
சில நாட்கள் கழித்து, அந்த வாத்தியாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, தொலைபேசிவழி.
“இப்போது எல்லாருக்கும் அது நான்தான் என்று தெரிந்துவிட்டது. ஒரே ஷேம்!” என்று ஒரேயடியாகக் கத்தினான்.
வகுப்பில் மாணவியைக் கட்டியணைத்து, அவளுக்குத் தர்ம சங்கடத்தை உண்டுபண்ணுவது அவனைப் பொறுத்தவரை தவறில்லை.
நான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவனோ நிறுத்துவதாகத் தெரியவில்லை.
பொறுக்க முடியாது போக, “உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது!’ என்று சொல்லிவைத்தேன். (எதிராளியைச் சமாளிக்க, அவர்கள் பக்கம் சாய்ந்துவிட வேண்டும்).
சட்டென்று அடங்கினான். “அது நானில்லை என்று எழுதிவிடுங்கள்,” என்று உத்தரவு பிறந்தது.
எப்படி எழுதுவது?
`தன் மாணவியிடம் வகுப்பில் முறைகேடாக நடந்துகொண்டது இன்னார் இல்லை,’ என்றா? `எங்கப்பா குதிருக்குள்ளே இல்லை!’ என்ற கதைபோல் இருக்கிறதே!
எதற்காக எழுதுவது?
வயதில் தன்னைவிட மிகச் சிறியவளான ஒரு பெண்ணிடம் ஒருவர் முறைதவறி நடக்கிறார். அவரை எதிர்க்கும் சக்தியோ, பாதுகாப்போ அற்ற அப்பெண் பயந்து நடப்பதை ஏற்கிறாள். இதைப் பார்த்தும் பார்க்காதது போல், அறிந்தும் எதுவும் செய்யாமல் இருப்பது சுயநலமின்றி வேறென்ன! இந்த நிலை பரவலாக நடக்க வழிவகுப்பதுபோல் ஆகிவிடுமே!
`நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது, என்னை அடிக்கடி வெளியே அழைத்துப் போவார் என் உறவினர். வீடு திரும்பியதும் ஏதேதோ செய்வார். அப்போது அது பாலியல் வதை என்று எனக்குப் புரியவில்லை. எல்லாச் சிறுமிகளுக்கும் அப்படித்தான் நடக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்!’ என்று சமீபத்தில் ஒரு பெண் தினசரியில் எழுதியிருந்தாள்.
தனக்கு நடந்தது தகாத காரியம் என்று அவளுக்கு ஏன் தோன்றவில்லை?
யாரும் இந்த அவலங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசி, முன்னெச்சரிக்கை செய்யவில்லை.
`ஆண்களும், பெரியவர்களும் என்ன செய்தாலும் பெண்ணாய் பிறந்துவிட்டவர்கள் பொறுத்துப் போகவேண்டும்!’ என்று வலியுறுத்தி, நம்பவும் வைத்திருப்பார்கள்.
இப்படி நம்மில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்!
இந்த நிலவரம் பொறுக்காது, தீய நடத்தை கொண்ட எவனையோ பற்றிப் பெண்கள் எழுதினால், பல ஆண்கள் ஒன்றுசேர்ந்து, பெண்களைத்தான் சாடுகிறார்கள்.
`நீங்க ஆண்களைத் தாக்கி எழுதறீங்களே! நாங்க பெண்களைப்பத்தி எழுதினா?” என்று ஒருவர் என்னிடம் சவால் விட்டார்.
சில ஆண்கள் செய்வது அடாத செயல் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால், ஒப்புக்கொள்ளும் நேர்மையோ, தைரியமோ குறைவு.
“எழுதுங்களேன்! நானா வேண்டாங்கறேன்?” என்றேன். நானே அப்படி எழுதியுமிருக்கிறேனே!
தவறு என்று தெரிந்தே செய்வது என்ன, ஆண்களின் பிரத்தியேக உரிமையா, அல்லது சாமர்த்தியமா?