Blog

  • யோகக்கலையின் இராணி ஞானம்மாள்!

    பவள சங்கரி

    download

    பல நேரங்களில் பெறுபவர்களின் தன்மையின் அடிப்படையில் விருதுகள் பெருமைப்படுவதுண்டு. அந்த வகையில் இந்த முறை பத்மஸ்ரீ விருதும் பெருமை அடைந்துள்ளது!

    2018 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள ஞானம்மாள் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் பிறந்தவர். 98 வயதான, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் யோகக் கலையில் கைதேர்ந்தவர். தற்போது கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வருகிறார். தமது தாத்தா மன்னார்சாமி என்பவடமிருந்து ஞானம்மாள் யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டுள்ளார். ஞானம்மாளின் மாணவர்கள், லண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, சீனா, ஆஸ்திரேலியா, போன்ற பல்வேறு நாடுகளின் யோகா போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றுள்ளனர்.

    unnamed

    1920 இல் பிறந்தவர் 98 வயதைக் கடந்தும் தம் முறையாகக் கற்ற யோகக்கலையை இன்றும் தொடர்வதோடு, பல ஆயிரம் பேர்களுக்கு முறையாகப் பயிற்சியும் அளித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்றவர்களில் 600க்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதிலும் யோகா பயிற்சி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் தன் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கு யோகா பயிற்சியை அளித்துவருகிறார்.  ஒரு சித்த வைத்தியருக்கு வாழ்க்கைப்பட்ட இவருக்கு 2 மகனகள், 3 மகள், 11 பேரன் பேத்திகள் உள்ளனர். இவருடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே யோகா பயிற்றுநர்கள் என்பதோடு இவர்தம் மகன்கள், மகள்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள் என அனைவருமே யோகா ஆசிரியர்கள். தாங்கள் வசிக்கும் இடங்களில் யோகா பயிற்சி மையங்கள் வைத்து நடத்திவருபவர்கள். இவர்களும் பல பரிசுகளையும் வென்றவர்கள்.

    தனக்குப் படிப்பு எதுவும் இல்லை என்றும் ஒன்றாம் வகுப்பு மட்டும் போனதுகூட நினைவில் இல்லை என்கிறார். யோகா மட்டுமில்லாமல் கிராமத்து வைத்தியத்திலும் தங்கள் குடும்பம்தான் ஊருக்குள்ளே அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்ததாகச் சொல்லும் ஞானம்மாள் பாட்டியின் வீட்டில் ஒருவரும் ஊசி, மருந்து ஆகியவற்றை எடுத்துக்கொண்டது இல்லையாம். தன் குடும்பத்தில் அனைவருக்கும் சுகப் பிரசவம் ஆனதற்கும் யோகாதான் காரணம் என்கிறார் ஞானம்மாள். இன்றுவரை இவருக்கு மூக்குக் கண்ணாடியின் தேவை ஏற்படவே இல்லை. ஊசியில் நூல் கோத்து, துணி தைக்கிற அளவு பார்வைத் திறன் இருக்கிறது என்பதோடு செவித்திறனும் நன்றாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மூட்டு வலி, கைகால் வலி என எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்.

    தன் அம்மா 50 முக்கியமான ஆசனங்களைச் செய்வதோடு, பெண்களில் இந்த வயதில் இவ்வளவு ஆசனங்கள் செய்கிறவர் இந்திய அளவில் இவர் மட்டுமாகத்தான் இருக்கும் என்ற பெருமையும் பெற்றவர் என்கிறார் இவருடைய மூன்றாவது மகன் பாலகிருஷ்ணன். மேலும் தன் அம்மாவின் யு-டியூப் காணொளியை இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள் என்றும் இவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    திருப்பூரில் சர்வதேச இளைஞர் யோகா கூட்டமைப்பு சார்பாக 2012-இல் நடந்த போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று அதன் மூலம் அந்தமான் சென்றிருக்கிறார். பிறகு 2013 பிப்ரவரியில் அந்தமானில் 60 பேர் கலந்துகொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ஏற்கனவே குடியரசுத்தலைவரிடம் பெண் சக்தி விருதைப் பெற்றுள்ள ஞானம்மாள் தற்போது மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 21

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவனிடம் எதுவும் பேசாமல் சிறிதுநேரம் மௌனமாய்ச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த தோழி பின்னர்ப் பேசலுற்றாள்…

    ஐய!  என் தோழியாகிய தலைவி, முன்பெல்லாம்
    neemவேம்பின் பச்சைக் காயைத் தந்தால்கூட அதை இனிய மணமுள்ள  வெல்லக்கட்டி என்று பாராட்டிக் கூறினீர். இப்பொழுதோ  பாரியென்னும் வள்ளலின் பறம்பு மலையிலுள்ள சுனையில் ஊறிய தெளிந்தநீரைத் தை மாதத்தில் குளிர்ச்சியாகத் தந்தாலும்கூட, அது வெப்பமாகவும், உவர்ப்புச் சுவை உடையதாகவும் இருக்கின்றது என்கிறீர். உம் அன்பின் தன்மை அத்தகையதாய் உள்ளது!” என்று கூறிப் பெருமூச்செறிந்தாள்.

    வேம்பின் பைங்காய்என் தோழி தரினேjaggery
    தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
    பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
    தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
    வெய்ய உவர்க்கும் என்றனிர்
    ஐய அற்றால் அன்பின் பாலே.   (குறுந்: 196 – மிளைக்கந்தனார்)

    அவள் வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த தலைவனுக்கு, பூவுலக இன்பமும், தேவருலக இன்பமும் பொன்னொளிர் மேனிகொண்ட தலைவியின் தோள்தழுவி வாழும் இன்பத்துக்கு ஈடில்லை என்று தான் எண்ணியிருந்த அற்றைத் திங்கள் நினைவுக்கு வந்தது.

    விரிதிரைப்  பெருங்கடல்  வளைஇய உலகமும்
    அரிதுபெறு  சிறப்பிற்  புத்தேள்  நாடும்
    இரண்டும்  தூக்கிற்  சீர்சா  லாவே
    பூப்போல்  உண்கண்  பொன்போல்  மேனி
    மாண்வரி  அல்குற்  குறுமகள்
    தோள்மாறு  படூஉம்  வைகலோ  டெமக்கே.   (குறுந்: 101 – பரூஉமோவாய்ப் பதுமன்)
     

    தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு. (1103) எனும் குறளும் இதே கருத்தையே வழிமொழிந்து பேசுவது எண்ணி இன்புறத்தக்கது. 

    தலைவனுக்கு அன்று தலைவி தந்த வேப்பங்காய் மட்டுமா இனித்தது?

    ”ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு” என்று தலைவி சமைத்த புளிப்பாகலையும் களிப்போடு உண்டவன்தானே அவன்?

    எனவே தோழியின் குற்றச்சாட்டுக்குத் தக்க மறுமொழி கூறவியலாமல் தடுமாறியபடி ஏதோ சொல்ல முற்பட்டான். அவனை இடைமறித்த தோழி, ”தலைவ! தலைவிபால் அன்றிருந்த காதலும் அன்பும் இன்று உம்மிடம் இல்லை என்பதில் எமக்கு ஐயமில்லை” என்றாள் திட்டவட்டமாக.

    தலைவன் முகம்வெளிறி நின்றான்.

    பேச்சைத் தொடர்ந்த தோழி, ”உம்மைச் சொல்லிக் குற்றமில்லை ஐயா! குளிர்ந்த, விளையாடுவதற்கு இனிமையான அருவியில் honeyநெடுநேரம் நின்றிருந்தால் கண்கள் சிவப்பதும், அளவுக்கு அதிகமாக உண்டால் இன்சுவையுடைய தேனும் புளித்துப்போவதும் இயல்புதான். அதுபோல் தலைவி உமக்கு முன்பு இனியவளாக இருந்தாள்; நெடுங்காலம் பழகியதால் இன்று இன்னாதவள் ஆகிவிட்டாள்.   உமக்கு நினைவிருக்கிறதா?  எம் தந்தையின் ஊரில், கடுமையான நஞ்சுடைய பாம்புகள் ஓடும் தெருவில்,  நடுங்குதற்குரிய எங்கள் பெருந்துன்பத்தை முன்பு நீர் களைந்தீர்” என்று தலைவனுடைய முந்தைய அன்புடைமையை நினைவூட்டிய தோழி,  இப்பொழுது எம்மைப் பிரிவதாக  இருந்தால், எம் வீட்டில் எம்மைக் கொண்டுபோய் விட்டுவிடுவீராக என்றாள் முகத்தில் கடுமைதோன்ற.

    நீர்நீ  டாடிற்  கண்ணுஞ்  சிவக்கும்
    ஆர்ந்தோர்
      வாயில்  தேனும்  புளிக்கும்
    தணந்தனை  யாயினெம் இல்லுய்த்துக் கொடுமோ
    அந்தண்  பொய்கை  யெந்தை  யெம்மூர்க்
    கடும்பாம்பு
      வழங்குந்  தெருவில்
    நடுங்கஞர்
      எவ்வங்  களைந்த  வெம்மே(குறுந்: 354 – கயத்தூர் கிழான்)

    ”ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்” என்ற உவமை, “பழகப் பழகப் பாலும் புளிக்கும்” எனும் இன்றைய பழமொழியை நினைவூட்டுகின்றது. ”உமக்கு யாம் வேண்டாதவர்களானால் எம்மை எம் இல்லத்தில் கொண்டுபோய் விட்டுவிடவும்” என்று தோழி கூறுவதுகூடப் பெண்கள் கணவனிடம் கோபித்துக்கொண்டால் தம் தாய்வீட்டுக்குச் செல்லவிரும்பும் இன்றைய நடப்புக்கு ஒத்துப்போகின்றது.

    காலங்கள் மாறினும் நம்மிடம் நிலவிவரும் சில பழக்கவழக்கங்கள், சொலவடைகள் அன்றுதொட்டு இன்றுவரை மாறாது ஒத்திருப்பதைக் குறுந்தொகைப் பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன.

    தோழியின் கடுஞ்சொற்கள் தலைவனின் நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்து அவனை வாட்டின. தலைவியிடம் தான் அன்று பாராட்டிய உழுவலன்பும் இப்போது அதிலிருந்து வழுவி ஒழுக்கந் தவறிவிட்ட தன்னுடைய அவலநிலையும் அவனை நாணவைத்தன.

    தோழியிடம் தன் தவற்றுக்கு மன்னிப்பு வேண்டினான்.

    ”ஐயா! உம்மை மன்னிப்பதற்கு நான் யார்? தலைவியிடம் பேசிப் பார்க்கிறேன். அவள்தான் உம்மை மன்னித்து ஏற்பதா வேண்டாமா என்று முடிவுசெய்யவேண்டியவள்” என்றுகூறிவிட்டு இல்லத்தினுள் சென்றாள்.

    உள்ளே சாளரத்தின் திரைக்குப் பின்னே சாய்ந்துநின்றிருந்த தலைவி, இவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். எனவே தோழி நடந்தவற்றை அவளிடம் மீண்டும் ஒருமுறை விளக்கமுற்பட்டபோது ’வேண்டாம்’ என்று செய்கையால் தடுத்து,

    ”நீ என்ன சொல்ல வருகின்றாய்? தலைவனை நான் மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறாயா?” என்று சீறினாள்.

    ”அப்படியெல்லாம் நான் சொல்லவரவில்லை. தலைவர் தன் தவற்றை உணர்ந்துவிட்டதாகத் தெரிகின்றது. மீண்டும் உன்னோடு சேர்ந்துவாழ விரும்புகின்றார். உன் விருப்பமென்ன?” என்று கேட்டாள் தோழி.

    ”என் விருப்பமா?” என்று கேட்டுவிட்டு விரக்தியாகச் சிரித்த தலைவி,

    ”தலைவர் இருக்கும் ஊருக்கும் நாமிருக்கும் இந்த ஊருக்குமிடையே வருவதற்கு அரிதான மலைகள் ஏதுமில்லை; இடந்தோன்றாது மறைத்து நிற்கும் மரங்களுள்ள ஊரினுரும் அல்லர் அவர்;  கண்ணாலே காணும்படி, விரைவில் வருதற்குரிய அண்மையான இடத்திலிருந்தும், முனிவரை அணுகி வாழ்பவர்களைப்போல் மனத்தால் நீங்கி வாழ்கின்ற அவர்மீது நான் முன்பொரு காலத்தில் அன்புடையவளாக இருந்தேன். அந்த அன்பு இப்பொழுது மறைந்து விட்டது” என்றாள் வேதனையோடு.

    மலையிடை  யிட்ட  நாட்டரு மல்லர்
    மரந்தலை  தோன்றா  ஊரரு  மல்லர்
    கண்ணிற்  காண  நண்ணுவழி  யிருந்தும்
    கடவுள்  நண்ணிய  பாலோர்  போல
    ஒரீஇ  ஒழுகும்  என்னைக்குப்
    பரியலென்  மன்யான்  பண்டொரு  காலே.       (குறுந்: 203 – நெடும்பல்லியத்தன்/நெடும்பல்லியத்தை)

    ’முனிவரை அண்டிவாழும் உயர்குலத்தவன்’ என்று தலைவனை எள்ளல் செய்த தலைவி, தான் இழிகுலத்தவளாக இருப்பதால்தான் அவன் உள்ளூரிலேயே இருந்தும் தன்னைக் காணவரவில்லை போலும் எனும் நகைக்குறிப்பைப் புலப்படுத்தி, அவனை ஏற்றுக்கொள்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதைத் தோழிக்குத் தெளிவுபடுத்துகின்றாள். 

    களவுக்காலத்தில் காடும் மலையும் மழையும் புயலும் கடந்துவந்து காதல் வளர்த்தவன், கற்புக் காலத்தில் அருகிலேயே இருந்தும் தன்னைக் காணவும் பேணவும் இல்லை என்னும் தலைவியின் வருத்தத்தில் தவறுண்டோ?

    புறத்தொழுக்கம் மேற்கொண்ட தலைவனை ’இல்லில் நுழையற்க’ என்று கண்டிக்கும் உரிமை கற்புடைத் தலைவிக்கு உண்டு. அதனை ’அஞ்சவந்த உரிமை’ என்பர் தொல்காப்பியர். அதனடிப்படையில் தலைவனை மீண்டும் இல்லில் சேர்க்க இயலாதென்றாள் தலைவி.

    [தொடரும்]

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180125 - Yadavabhyudayam 09 VastrApaharanam- wm watercolour indian ink 24x32cms Desika:”  Casting of ones vasanas, (Krishna takes away the clothes) one bathes in Krishnaanubhava, which destroys all sins. Then the gopikas appeal to get their clothes back. But he makes them to come out with folded hands, to discard their identification with the body (daehathma buddhi) — and surrender — to qualify for mukthi. Then he gives them their new cloaks, under the pretext of giving back their clothes, cleansed with the kundhamukundha sambandha. (kun dhyati, kills sins, moksha dadathi, mukundah) Until this happens, the cycle of births will continue.  Contact with the branch of the kundha tree to cleanse it of the illusion of daehatma Sambandam.   When this realization dawns, with his grace, one is released from the cycle of births.
    180125 – Yadavabhyudayam 09 VastrApaharanam- wm watercolour indian ink 24x32cms
    Desika:” Casting of ones vasanas, (Krishna takes away the clothes) one bathes in Krishnaanubhava, which destroys all sins. Then the gopikas appeal to get their clothes back. But he makes them to come out with folded hands, to discard their identification with the body (daehathma buddhi) — and surrender — to qualify for mukthi. Then he gives them their new cloaks, under the pretext of giving back their clothes, cleansed with the kundhamukundha sambandha. (kun dhyati, kills sins, moksha dadathi, mukundah) Until this happens, the cycle of births will continue.
    Contact with the branch of the kundha tree to cleanse it of the illusion of daehatma Sambandam.
    When this realization dawns, with his grace, one is released from the cycle of births.

    நீல யமுனையில் நீந்திய கோபியர்
    சேலைப் புதையலை சேகரித்தோன் -நாளை
    சபையில் துரோபதை சோகம் களைந்து
    அபயம் அவளுக்(கு) அளிப்பு….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • உலகம் போற்ற வாழ்கிறார் !

     

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

     
    கத்தியின்றி ரத்தமின்றி
    யுத்தமொன்று நடத்திய
    உத்தமராம் காந்திமகான்
    உயர்வுபெற்று நிற்கிறார்
    சத்தியத்தை மனதிலேற்றி
    சாதனைகள் செய்திட்ட
    உத்தமராம் காந்திமகான்
    உலகம்போற்ற வாழ்கிறார் !

    உணவைமாற்றி உடையைமாற்றி
    உள்ளமதை உறுதியாய்
    தெளிவையூட்டி சிறப்பைக்காட்டி
    சிந்தனையை ஊட்டினார்
    அழிவில்லாத வழியைக்காட்டி
    அன்புகருணை பேசியே
    அகிலவுலகும் போற்றும்வண்ணம்
    அண்ணல்காந்தி வாழ்கிறார் !

    உண்ணாநோன்பை உலகம்வியக்க
    உத்தமரும் காட்டினார்
    மண்ணின்மாண்பை வியந்துநின்று
    மகான்காந்தி போற்றினார்
    தன்னைபெற்ற தாயைக்காந்தி
    தலைவணங்கி நின்றிட்டார்
    தரணிபோற்றும் மனிதராக
    காந்தியின்று வாழ்கிறார் !

    அடக்குமுறை வெள்ளையரை
    அஹிம்சையாலே வென்றிட்டார்
    அன்புகொண்டு காந்திமகான்
    அனைவரையும் அணைத்திட்டார்
    அரக்ககுணம் காந்திமுன்பு
    அழிந்தொழுந்து போனதால்
    அண்ணல்காந்தி உலகமெங்கும்
    அன்புருவாய் வாழ்கிறார் !

    சாந்தி சமாதானம்காண
    காந்திமகான் உழைத்திட்டார்
    சக்தியெலாம் ஒன்றுசேர்த்து
    சரித்திரமே படைத்திட்டார்
    நீதியினைத் தெய்வமாக்கி
    நெஞ்சமதில் நிறைத்திட்டார்
    நீங்காமல் உலகமெங்கும்
    நின்றுகாந்தி வாழ்கிறார் !

    Share
  • குடியரசு கொண்டாடும் பாரத மாதாவுக்கு வாழ்த்துக்கள்

     

    பறக்கின்றது !

    தேசிய சுதந்திரக் கொடி

    பறக்கின்றது !
    சுதந்திரமான தென்றலதன்

    சுந்தரமான தாலாட்டில்

    தன்னை மறந்தின்று

    சோதரரின் மேன்மை பரப்பிடும்

    இந்தியத் தேசியக்கொடி

    பறக்கின்றது.
    அந்நிய ஆதிக்கத்திலிருந்து

    அன்னை பாரதமாதா

    முற்றாக தன்னை விடுவித்த

    பெருமை சாற்றுமிந்த

    குடியரசுத் தினத்தில்

    கொடி பறக்கின்றது.
    முன்னை எம் பாட்டன்

    முத்தமிழ்க் கவிஞன்

    முப்பெரும் புலவன் பாரதியின்

    முழுமுதற் கனவு மெய்ப்படவே

    பாரத தேசியக்கொடி

    குடியரசான தினத்தை

    உலகிற்கியம்பிய வண்ணம்

    வண்ணக்கொடி பறக்கின்றது
    ஜயன் வ.உ.சி, சுபாஷ் சந்திரபோஸ்

    சுப்பிரமணி சிவா, திருப்பூர் குமரன்

    வ.வெ.சு ஜயர் என எத்தனையோ

    சுதந்திரப் போராட்ட வீரர்களின்

    தாயகக் கனவுகளின் ஆதாரமாய்

    குடியரசு நாமடைந்தோம் என

    கும்மியடித்திங்கு பாரதக் கொடி

    நிமிர்ந்தே பறக்கின்றது
    உலக அரங்கிலே

    தனக்கென ஓர் தனியிடத்தை

    தன் மக்கள் உழைப்பின்

    திறன் கொண்டு பெற்றிட்ட

    பாரத அன்னை இக்குடியரசு தினத்தில்

    ஏற்றமுடன் நிமிர்ந்தே நின்று

    தேசியக்கொடி மூலம் தன் பெருமை

    பறைசாற்றும் வகையிலின்று

    கொடி பறக்கின்றது.
    குடியரசு தினத்தில் என் இனிய

    அன்பு தமிழக, மற்றும் இந்திய

    சோதர, சோதரியர்க்கு அன்பான

    வாழ்த்துக்கள் கூறி வாழ்த்துகிறேன்
    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • குடியரசு தின நல்வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    Republic Day 26th January hd wallpapers
    1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மக்களாட்சியை அறிவித்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1950, சனவரி 26, காலை 10.18 மணி முதல் இந்திய குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள், அம்பேத்கர், கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கைதான் ஆகியோர் ஆவர்.

    1976ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42வது சட்டத் திருத்தத்தின்படி, “சமதர்மம்’,”மதச்சார்பின்மை’, “ஒருமைப்பாடு’ என்ற மூன்று வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டன.

    indexகுடியரசுத்தலைவர் என்பவர் நம் நாட்டின் முப்படைகளுக்கும் தளபதியும், முதல் குடிமகனும் ஆவார். ஆனால் நம் நாட்டில் இது பெயரளவிலேயே மதிப்புமிக்க பதவியாக இருந்து வருகிறது. நம் இந்தியக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத், மிக எளிமையான ஒரு தலைவராக இருந்தவர். 1946ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இவர் 1950 முதல் 1962 வரை இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பெற்றார்.

    இவருடைய பதவிக் காலத்தில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது தடைகளையும் மீறி களம் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். விடுதலைப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்ட இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். மிகப் புகழ் பெற்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர், ஆசிரமத்தில் கழிவறையைச் சுத்தம் செய்வது,பாத்திரம் துலக்குவது போன்ற சாதாரணப் பணிகளைச் செய்து வந்தார். உண்மையான சேவை மனப்பான்மையுடன் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் இவர். அதிக முறை, குடியரசு தின விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர். இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு தலைமை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகிய நம் இந்தியாவின் தற்போதைய, 14 வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றிருப்பவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஆவார்.

    உலகளவில் ஆன்மீக நாடாகப் பார்க்கப்படும் நம் இந்தியாவில் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் நாட்டின் நல்ல பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நிகழ்ந்துள்ளதும் வருந்தத்தக்கது. நம் நாடு வல்லரசாக ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் இன்று நல்லரசாக அமைந்து மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை சிரமமின்றி நடத்துவதற்கேனும் வழிவகை அமைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. இந்த நிலை விரைவில் மாற்றம் பெற்று நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதோடு அமைதியும் நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(260)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். சுமார் இரண்டு வாரங்களின் பின்னால் மடல் மூலம் உங்களுடன் மனம் திறக்கிறேன். இரண்டு வாரங்கள் இரண்டே நாட்கள்போல ஓடிவிட்டன. ஆனால் இந்த இரண்டு வாரங்கள் தனக்குள் அடக்கிக் கொண்ட விடயங்களோ பற்பல. சில இனிமையானவை, சில கனமானவை, சில கசப்பானவை, சில மறக்கப்பட வேண்டியவை என எத்தனையோ ரகமான விடயங்களைத் தனக்குள் தாங்கிக் கொண்டே காலம் நடைபோடுகிறது. இந்த இரண்டு வாரங்களில் என் நிகழ்வுகளை நான் எடுத்துப் பார்க்கிறேன். இதிலே விந்தை என்னவென்றால் “இங்கிலாந்திருந்து ஒரு மடல் ” எனும் இந்தப் பத்தி இவ்வாரம் முத்தமிழின் பிறப்பிடமாம், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து வரையப்படுவதுதான். ஆம் நான் எனது வருடாந்தர தமிழ்த்தேடல் தாகசாந்திக்காக மேற்கொள்ளும் சென்னை விஜயத்தின் நடுப்பகுதியில் இருக்கிறேன்.

    வழமைபோல இம்முறை என் விஜயத்தின் முத்தாய்ப்பாக அமையும் சென்னைப் புத்தக விழாவினோடு இம்முறை வேறு சில நிகழ்வுகளும் எனது நெஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இம்மாதம் 13ஆம் திகதி எனது ஒன்பதாவது நூலான “உள்ளத்தின் மொழியே, தமிழெனும் நதியாய்” மணிமேகலைப் பிரசுரத்தினரால் அவர்களது வெளியீட்டு விழாவில் சென்னைப் புத்தக விழா மேடையில் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருந்த மதிப்பிற்குரிய முன்னை நடிகர், தற்போதைய முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரான திரு. சிவகுமார் முன்னிலையில் இந்நூல் வெளியிடப்பட்டது உள்ளத்துக்கு மேலும் மகிழ்வையளித்தது. இவ்விழாவில் நடிகை லக்ஷ்மி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் மேலும் பல அறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

    நான் சென்னைக்குக் கிளம்பும் முன்னரே எனது இனிய நண்பர்களில் ஒருவரான “இசைக்கவி” ரமணன் அவர்கள் நான் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்வுகளைப் பற்றிய ஒரு சிறு பட்டியலையே அனுப்பியிருந்தார். இசைக்கவி ரமணன்1ரமணன் அவர்களின் அற்புத ஆற்றலை அளவின்றி ரசிப்பவன் நான். அவருடைய சொற்பொழிவுகளை இலண்டனில் தொலைக்காட்சி மூலமும், யூ ட்யூப் மூலமும் பார்த்து ரசிப்பவன். அவரின் கவித்திறனோடு எவ்வித பின்னணி இசையுமின்றி அற்புதமாகப் பாடும் அவரது ஆற்றலையும், அன்னைத் தமிழே வியந்து போகும் வண்ணம் தமிழை உச்சரிக்கும் அவரது தமிழாற்றலையும் வியப்போடும், மகிழ்வோடும் ரசிப்பவன் நான். அவரது பட்டியலில் அவர் தான் வசனமெழுதி, நடிக்கும் “பாரதி யார்?“ எனும் நாடகத்தைப் பற்றியும் அவை சென்னையில் நான் நிற்கும் வேளையில் அரங்கேறும் இடங்களையும் மிக அழகாக அட்டவணைப் படுத்தித் தந்திருந்தார். 11ஆம் திகதி காலை சென்னை வந்திறங்கினேன். 12ஆம் திகதி மாலை சென்னை ஏக்மோரில் அமைந்துள்ள “மியூசியம் ஹால் ” நாடக அரங்கில் நன்கொடையாளர்களுக்கான நிகழ்வில் எனக்காக ஓர் இடம் ஒதுக்கி ஏற்படு செய்திருந்த அன்பு நண்பர் “இசைக்கவி” ரமணன் அவர்களின் அன்பு அவரின் இனிமையான உள்ளத்துக்கும், நல்ல நட்புக்கு அவர் கொடுக்கும் முதலிடமும் எமக்கு நன்றாகப் புரிகிறது.

    சரியாக மாலை 6.15க்கு நாடகம் ஆரம்பிப்பதாக இருந்தது. அன்றும் புத்தகக் கண்காட்சியில் நண்பர் காந்தி ரமணன்2கண்ணதாசன் அவர்களின் பதிப்பகம் வெளியிட்ட ” கலாம் ” எனும் நூலின் வெளியீடு நிகழ்ந்தது. அதனைக் காண்பதற்காகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற நான் சரியாக ஆறுமணிக்கு அந்த நாடக அரங்கிலே இருக்க வேண்டும் என்று கூறியதன் பிரகாரம் நேரத்துக்கு முதன்மையளிக்கும் எனது மற்றொரு உற்ற நண்பரான ரவி தமிழ்வாணன் அவர்கள் என்னைச் சரியாக 5.55 மணிக்கு அந்த நாடக அரங்க வாயிலிலே இறக்கி விட்டிருந்தார். நாடகமும் சரியான நேரத்துக்கு ஆரம்பித்தது.

    அழகான அந்த ஆங்கிலேயக் காலத்து புராதனக் கட்டிட அரங்கம் தனக்கேயுரிய மிடுக்குடன் காட்சியளித்தது. கணினியின் உதவியுடன் அழகிய ரமணன்3பின்னணிக் காட்சிகளை நாடக அரங்கிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். மகாகவி பாரதியாரைப் பற்றி ஏறக்குறைய அனைத்துத் தமிழர்களும் ஏதோ ஓர் அளவில் அறிந்திருப்பார்கள். என்னைப் போன்ற கவிதை எனும் ஆழியின் கரையிலிருந்து மணல்வீடு கட்டி விளையாடுவோர் ஆர்வ மிகுதியால் பாரதியாரின் வாழ்வுச் சரிதத்தை எம்மால் படிக்கக் கூடிய அளவிற்குப் படிப்போம். ஆனால் இந்த நாடகமோ ஒரு புதுப்பரிணாமத்தில் பாரதியாரை எமக்கு எடுத்துக் காட்டியது. ஒரு விளக்கவுரையுடன் , மாபெரும் தீச்சுவலையுடன் ஆரம்பித்த அந்நாடகத்தின் ஆரம்பச்சுவாலை அந்த மகாகவியின் நெஞ்சத்தில் எரிந்த கவிதைக் கனலை எனக்கு ஞாபகமூட்டியது.

    இந்நாடகத்தின் அமைப்பு அற்புதமானது, பாராட்டத்தக்கது. பாரதியாரின் கவிதைகளில் மிகவும் புகழ்பெற்ற கவிதைகள் பாடப்பட்ட காலத்தையும், அக்கவிதை பாடப்பட்ட இடத்தையும் கட்டம் கட்டமாகப் பிரித்து அக்கவிதையின் பிறப்புக்கான ரமணன்4பின்னணியை நாடகக் காட்சிகளாகக் கொடுத்திருந்தார்கள். இதற்காக அவர்கள் பாரதியாரின் வாழ்வு பற்றிய ஆராய்ச்சியை எத்தனைத் துல்லியமாகச் செய்திருப்பார்கள் என்பதை எம்மால் உணர முடிகிறது. காட்சியமைப்பு,  அக்காட்சிகளுக்கான விளக்கம், அதனோடு சம்பந்தப்பட்ட பின்னணிக் காட்சிகளை நாடகத் திரையில் கணினியின் உதவியோடு ஏற்றிய நேர்த்தி அனைத்தும் நாடக உலகின் முத்திரையாய் இந்நாடகத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது.

    இந்நாடகத்தின் நாயகன் மகாகவி பாரதியாரே என்பது நான் சொல்லித் தெரிவதில்லை. அப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் எனது இனிய இசைக்கவி ரமணன். பாரதியார் எனும் வேடமல்ல அவர் மகாகவி பாரதியாராகவே மாறிவிட்டார். எனது வாழ்க்கைக் காலத்திலே இதுவரை எத்தனையோமுறை நான் சென்னை வந்திருக்கிறேன். எனது சென்னை விஜயங்களில் எது என்னை அவ்விஜயத்தை மேற்கொண்டதன் முழுப்பயனையும் அடைய வைத்தது எனும் கேள்வி எழுப்பப்பட்டால் அது 2018 விஜயம் என்பதே எனது விடையாகும். ஏனென்கிறீர்களா ? அவ்விஜயத்தின் போது நான் எது நடக்க முடியாது என்று எண்ணியிருந்தேனோ அது நடந்து விட்டது. ஆம் நான் “மகாகவி” பாரதியாரை நேரடியாகத் தரிசித்து விட்டேன்!  இசைக்கவி ரமணன் பாரதியாரை எமது முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். இதுவரை வீரபாண்டிய கட்டபொம்மன், சிவபெருமான், வீரவாகு, அப்பர், இராஜஇராஜ சோழன், வ.உ.சி ஜயா அவர்களை எமது கண்முன்னால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கொண்டு வந்து நிறுத்தினார். இன்று நடிகர் திலகம் இருந்திருந்தால் நண்பர் இசைக்கவி ரமணன் அவர்களைப் பாரதியாராக மேடையில் பார்த்தப் பின்பு அவரை பாரதியார் வேடம் ஏற்கச் சொன்னால் தயங்கியிருப்பார் என்றே சொல்ல வேண்டும்.

    அத்தகையதோர் அருமையான இயற்கையான நடிப்பு. பாரதியாரின் வசனங்களை அவர் உச்சரித்த விதம், உச்சரிக்கும் போது அவர் காட்டிய பாவங்கள், கவிதைகளைத் தெளிவுற வீரமாகப் பேசிய விதம், பேச்சிலிருந்த தெளிவு, ஏற்ற இறக்கங்கள் அப்பப்பா ! இதைச் சொல்லில் விவரிப்பது மிகவும் கடினம். நாடகப் பயிற்சிக்கென இயங்கும் அமைப்புகள் அனைத்தும் தமது மாணவர்களை இந்நாடகத்துக்கு அழைத்து வரவேண்டிய கட்டாயத்தை இந்நாடகம் உருவாக்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

    இந்நாடகத்தில் பங்கு பற்றி நடித்த அனைவருமே தமக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரப் படைப்புகளை திறம்பட, அழகுறச் செய்தது பாரதியாராக வேடமேற்ற ரமணன் அவர்களின் நடிப்புக்கு பெருந்துணையாக இருந்தது என்பது மிகையாகாது. குறிப்பாக செல்லம்மாவாக நடித்தவரும், பாரதியாரின் நண்பராக நடித்தவரும் அப்பாத்திரங்களில் அபாரமாக நடித்திருந்தனர். இந்த நாடகத்தைப் பார்த்த பின்னால் பாரதியாரின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளைப் பற்றி அறிவதோடு பாரதியார் தன் வாழ்வில் எத்துணைத் துயரங்களை எதிர்கொண்டார் என்பதையும், அதனை எவ்வாறு தாங்கிக் கொண்டார் என்பதனையும் தத்ரூபமாக நடித்துக் காட்டியிருந்த ரமணனின் நடிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    இந்நாடகத்தைப் பார்த்த சில நாட்களின் பின்னால் நண்பர் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன். அன்று சாயந்தரம் இந்நாடகம் ரசிக ரஞ்சன சபாவில் நடைபெறுவதாக இருந்தது; நான்கூட இரண்டாவது தடவையாகப் போவதாக இருந்தேன். தானும் அன்று மாலை இந்நாடகத்திற்குப் போகப் போவதாக சொல்வேந்தர் குறிப்பிட்டார். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் என்னால் அன்று மாலை போக முடியவில்லை. ஆனால் அன்று மாலை ரசிக ரஞ்சன சபா ஹால் நிரம்பி வழிந்ததாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் உள்ளே செல்ல முடியா நிலையில் இருந்ததாகவும் அறிந்தேன். அத்துடன் இந்நாடக இறுதியில் சில வார்த்தைகள் பேசும்படி விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க பேச எழுந்த சொல்வேந்தர் தொண்டை கரகரக்க உணர்ச்சிவசப்பட்டு அந்நாடகம் கொடுத்த தாக்கத்தின் உணர்ச்சிகளை வெளிக்காட்டினார் என்பது இந்நாடகத்தின் ஆழத்தைத் தொட்டுக் காட்டுவதோடு நண்பர் இசைக்கவி ரமணனின் நடிப்பாற்றலை எடுத்தியம்புகிறது.

    இந்நாடகம் தொடர்ந்து மதுரை மற்றும் பல நகரங்களில் மேடையேற்றப்படுகிறது. மீண்டும் மார்ச் மாதம் 11ஆம் திகதி வாணி மஹாலில் மேடையேற்றப்படுகிறது. இந்நாடகத்தைப் பார்க்கத் தவறினால் வாழ்வில் ஒரு மிகப்பெரிய அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்களாவீர்கள் என்பது திண்ணம். “பாரதி யார்?” எனும் கேள்விக்கு “பாரதியார்” தமிழரின் சரித்திர அடையாளம் என்பது அசைக்க முடியாத உண்மையாகிறது. அதைக் கண்முன்னால் கொண்டுவந்த நண்பர் இசைக்கவி ரமணன் இதுபோல இன்னும் பல அற்புத ஆக்கங்களை அளிக்க எல்லாம்வல்ல பராசக்தி துணை புரிவாளாக.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 3

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    322978

    வீட்டில் சைமன் மனைவி, மெட்டீரினா, குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுத்துப் படுக்க வைத்து விட்டு, சைமன் அதிகமாக வெளியே உண்டிருப்பானென்று நினைத்துத் தானும் உண்ட பின் மீதியிருந்த ரொட்டியை மறு நாளுக்காகச் சேமித்து வைத்தாள். பின், சைமனின் பழைய கிழிந்த கோட்டை எடுத்துத் தைக்க ஆரம்பித்தாள். சைமன் அதிகாலையில் போனவன் இன்னும் திரும்பவில்லையே, அவன் புது கோட்டுத் தைக்கத் தோல் வாங்கியிருப்பானா? கடைக்காரன் அவனை ஏமாற்றி விடக்கூடாதே, எட்டு ரூபிள்கள் அதிகப் பணமல்லவா? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

    மெட்ரீனா கதவைத் திறந்ததும், வெறுங்கையோடு சைமன் ஒரு புதிய மனிதனோடு நிற்பதையும், அந்த மனிதன் தலையில் தொப்பி இல்லாமலும் கம்பளியிலான செருப்புகள் அணிந்திருந்ததையும் கவனித்தாள். கணவனிடமிருந்து மதுவாடை வருவதை உணர்ந்ததும் அவன் தோல் வாங்காமல் அந்தப் பணத்தில் ஒன்றும் இல்லாதவனோடு சேர்ந்து குடித்துக் கொண்டு அவனையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறானென்று நினைத்தாள். அவள் மனம் ஏமாற்றத்தால் வெடித்து விடும் போலிருந்தது. அவர்கள் இரண்டு பேரும் வீட்டினுள் வந்த போது அந்த அன்னிய மனிதன் இளைஞனாகவும் கணவனுடைய கோட்டு மாத்திரம் அணிந்து கொண்டு வேறு ஆடைகள் ஒன்றும் இல்லாமலும் தலையில் தொப்பியில்லாமலும் ஒரே இடத்தில் தலை குனிந்த வண்ணம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து இவன் நல்லவனல்ல என்ற தீர்மானத்திற்கு வந்தாள். சைமன் தலையிலிருந்த தொப்பியை எடுத்துக் கீழே வைத்து விட்டுப் பெஞ்சில் அமர்ந்து, ஒன்றும் நடக்காதது போல் அந்த மனிதனின் கைகளைப் பிடித்து அருகே அமரச் சொன்னான். மெடீனா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு முகத்தைச் சுளித்தாள்.

    சைமன் அவளுடைய கோபத்தைக் கண்டு கொள்ளாதவன் போல், மெட்ரீனாவிடம் இருவருக்கும் உணவு பரிமாறச் சொன்னான். மெடீனாவின் கோபம் இரட்டித்தது. அவள், “நீ கோட்டுக்குத் தோல் வாங்கப் போனவன், அதை வாங்காமல் இருந்த கோட்டையும் கொடுத்து விட்டுக் குடித்திருப்பது மட்டுமல்லாமல், இன்னொரு ஆடையற்ற குடிகாரனையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாய், நான் சமைத்திருக்கிறேன், ஆனால் குடிகாரர்களுக்குச் சாப்பாடு கிடையாது” என்றாள்.

    “நிறுத்து மெட்ரீனா, நான் சொல்வதைக் கொஞ்சம் கேள், இந்த மனிதன் எப்படிப் பட்டவென்று——–“ மெடிடீனா அவனை மேலும் பேசவிடவில்லை.

    “நீ பணத்தை என்ன செய்தாயென்று சொல்லவில்லை”.

    சைமன் கோட்டுப் பையிலிருந்து மூன்று ரூபிள் நோட்டுகளையும் எடுத்தான். அவளுடைய கோபம் தீரவில்லை. பணத்தை வேகமாக எடுத்துக் கொண்டு, ”குடிகாரர்களுக்குச் சாப்பாடு கொடுக்க முடியாது” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
    “மெடீனா, அதிகம் பேசாதே. நான் சொல்வதைக் கேள்”.

    அதற்கு மெடீனா “நீ என்ன மகா புத்திசாலியா? உன் பேச்சைக் கேட்பதற்கு? நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்பவேவயில்லை. நீ ஒரு குடிகாரன். என் தாய் கொடுத்த லினன் துணியையும் விற்றுக் குடித்தாய்” இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களைத் திரும்பவும் சொல்லிச் சத்தமிட்டாள். சைமன் பலமுறைகள் தான் இருபது கோபெக்குகளுக்குத்தான் குடித்ததையும், எப்படி அந்த மனிதனைக் கண்டான் என்று சொல்ல முயற்சி செய்தும் பலனில்லை.

    மெடீனா பேசுவதை நிறுத்தாமல் சைமன் மீது பாய்ந்து “என் கோட்டைக் கழற்றிக் கொடு, இது ஒன்றுதான் எனக்கிருப்பது” என்று கத்திக் கோட்டைப் பிடித்து இழுத்தாள். சைமன் கோட்டைக் கழற்ற முயலும் போது அவள் இழுத்த வேகத்தில் கோட்டுக் கையின் தையல் பிரிந்து விட்டது.

    அவள் அவனைச் சபித்துக் கொண்டே கோட்டைத் தலையில் போட்டுக் கொண்டு தன் கோபத்தைத் தணிக்க வெளியே செல்லக் கதவருகே போனவள், வந்திருப்பவன் எப்படிப்பட்டவன் என்று அறிய ஆவல் தோன்றியதும் தயங்கி நின்றாள்.

    தொடரும்

    Share
  • தனித்துப்போன கிழவி !

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++

    unnamed

    அடடா, தனித்துப் போன மனிதர்

    அனை வரையும் நோக்கு !

    அடடா, தனித்துப் போன மனிதர்

    அனை வரையும் நோக்கு !

    திருமணம் நடந்த கிறித்துவக் கோயிலில்

    எடுக்கிறாள் அப்பம் ஒன்றை

    அப்பாவிக் கிழவி !

    கனவுகளுடன் வாழ்பவள் !

    காத்துக் கிடப்பாள் முகம் காட்டி

    கதவருகே

    பாத்திர மொன்றை வைத்து !

    யாருக் காக அது ?

    எங்கிருந்து வருவாரோ

    தனித்துப் போன மனிதர் எல்லாம் ?

    எதனைச் சேர்ந்தவர்

    தனித்துப் போன அனைவரும் ?

    புனிதர் பாதிரியார் போதனை களை

    கேட்பார் யாருமில்லை !

    நெருங்கி

    வருவார் யாருமில்லை !

    பாரங்கே அந்த மனிதனை !

    கிழிந்த போர்வையை

    இருட்டிலே

    தைத்துக் கொண்டி ருக்கிறான் !

    எவரு மில்லை அருகில் !

    கவலைப் படுவது யார் ?

    அன்றைய நாளில்

    கிழவி செத்துப் போனாள்

    கிறித்துவ ஆலயத்தில் !

    புதைக்கப் பட்டாள் பெயருடன்;

    யாரும் வரவில்லை !

    கை மண்ணை துடைத்து பாதிரியார்

    புதை பூமியில் நடந்தார் !

    யாரையும் காப்பாற்ற வில்லை !

    எங்கிருந்து வருகிறார்

    தனித்துப் போனவர் மனிதர் ?

    எதனைச் சேர்ந்தவர்

    தனித்துப் போன மனிதர் ?

    ++++++++++++++

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180124 - Yadavabhyudayam 08 -lr - indian ink -watercolour - After stealing butter, Krishna hides from the gopikas. He prays to his jingling ornaments to be silent and not give him away.
    180124 – Yadavabhyudayam 08 -lr – indian ink -watercolour – After stealing butter, Krishna hides from the gopikas. He prays to his jingling ornaments to be silent and not give him away.

    ”மந்தி யொடுகண்ணன் மாற்றாள்தோட் டத்(து)அறையில்
    வந்து டுவார்களோ! வால்சுருட்டிக் -குந்தடா,
    வானரத் தோடன்னை பூணனியி டம்வேண்டல்,
    நா(ன்)நரன் ஆனதே னோ!’’….!

    (OR)….!
    ‘மந்தி யொடுகண்ணன் மாற்றாள்தோட் டத்(து)அறையில்
    வந்து டுவார்களோ! வால்சுருட்டிக் -குந்தடா:
    அன்னை அலங்காரம்(Ornaments) சொன்னசொல் கேட்குமா!
    கண்ணன் நாரணனைக் கேட்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கண்டேன் அனுமனை

    இன்றல்ல, என்றுமே ‘’அனுமத் ஜெயந்தி”….அனுமார் சிரஞ்சீவி ஆயிற்றே….ஆதலால் உங்கள் மேலான பார்வைக்கு….!

    கண்டேன் அனுமனை
    —————————

    efa08c2843227abcbce69ff60f81db6e

    காப்பு
    ———-
    சேரதீ சென்றிலங்கை சேதாரம் செய்தோனே
    மாருதி ராமன் மனமகிழ்வே -சாரதியாய்
    என்பால் தமிழோட்டும் நண்பன் ரவிமகிழ
    வெண்பாவில் வந்துநீ குந்து….
    ————————————————————–

    அனுமந்த ராயா அசகாய சூரா
    தினமுந்தன் பாதம் தொழுவேன் -எனையிந்த
    பாழும் மனமென்ற ஆழியைத் தாண்டிட
    தோழா கொடுத்திடு தோள்….(1)

    அனுதினம் ராமா யணமதை ஓதும்
    அனுமனே அஞ்சனை அன்பே -கணுவிலா
    பக்திக் கரும்பே பயமிலா வாழ்க்கை
    சித்திக்கச் செய்வாய் சரண்….(2)

    வினய வடிவம் விழிகளில் பாஷ்பம்
    கணைவிடு ராமன் கதையே -துணையாய்
    அணையா விளக்காய் அமர்ந்த அனுமான்
    இணையே(தும்) இல்லா இறை….(3)

    பாரிஜாத வாசம் பணிராமன் காரியம்
    வேறுஜாதி வானரம் மாருதி -மாறுவேடம்
    பூண்டுவந்த ருத்திரன் பூமிவாயு புத்திரன்
    வேண்டுவோர்தம் வீட்டில் வரவு….(4)

    அண்ணல் நினைப்பினால் கண்ணில் பனித்திரை
    விண்ணில் பறந்தோன் வெகுளியாய் -திண்ணையில்
    ஸ்ரீ£ராம் ஜெயராம் ஜெயஜெய ராமென்று
    தீராத் தவத்தில் திளைப்பு….(5)

    வீரன் வினயன் வெகுசமர்த்தன் ஈசனவ
    தாரன் ரகுநாதன் இஷ்டவேலைக் -காரன்
    கடல்கடந்து அய்யன் கணையாழி தந்த
    உடல்கடந்தோன் உள்ளம் உணர்….(6)

    இந்திர ஜித்தனின் தந்திரக் கட்டகல
    எந்திர வேகத்தில் ஏகிய -சுந்தரன்
    வெற்ப்பெடுத்து வந்தவனின் வீரக் கழல்களை
    நிர்பயம் கொள்ள நெருங்கு….
    நிர்பயத்தில் மூழ்த்தும் நெருப்பு….(7)

    ”ராம்”புகல் மந்திரம் ஜாம்பவான் உந்துதல்
    வான்புக ஓங்கிய வானரம் -தேன்புகும்
    கூந்தலாள் சூடாமணி ஏந்தி எஜமான்முன்
    சேர்ந்தனன் சேவடி சேர்….(8)

    புரவிகள் ஏழினைப் பூட்டிய தேரில்
    இரவியோ(டு) ஏகி உயர்ந்த -அறிவினைப்
    பெற்ற கவிக்குல பேரொளியை காகுத்தர்(கு)
    உற்ற அனுமன்தாள் பற்று….(9)

    வாயு குமாரன் வலிமிகு தோளினன்
    ஆய கலைகள் அறிந்தவன் -தூயநல்
    நெஞ்சினன் தொல்லை அழிப்பவன் தாயவள்
    அஞ்சனை மைந்தன் அரண்….(10)

    வாயு குமாரன் வலிமிகு தோளினன்
    ஆய கலைகள் அறிந்தவன் -மாயவன்
    அஞ்சன வண்ணனின் ஆருயிர்த் தோழனை
    நெஞ்சினில் வைக்க நிறைவு….(11)

    சினத்தீ இராவணன் சீர்மல்கு தீவில்
    கணத்தில்தீ வைத்து அசோக (OR) கொளுத்தி-வனத்தில்
    கணையாழி தந்தன்னை கண்ணீர் துடைத்தோய்
    வினையாழி தாண்டிட வை….(12)

    எஜமானன் ராமனுக்(கு) என்றும் பணிந்த
    நிஜமான பக்தன் அனுமான் -புஜத்தில்
    வடைமாலை சார்த்தி வணங்கி உறங்க
    விடிகாலை காண்போம் வியப்பு….(13)

    எங்கு இராமன் காதை நிகழ்ந்தாலும்
    அங்கு விழியிலா னந்தபாஷ்பம் -பொங்கிவர
    கைத்தாளம் இட்டு குதூகலிக்கும் மருதியின்
    மெய்த்தலம் சிந்திக்க மாண்பு….(14)

    திடமான பக்தி தெளிவான ஞானம்
    கடமை தவறாத கர்மம் -அடைய
    அனுமானை அஞ்சனை மைந்தனை என்றும்
    மனமாறப் போற்றி மகிழ்….(15)

    தன்பலம் காட்டா தவசீலன் தர்மமென்றால்
    தன்பலன் பாரா(து) உழைப்பவன் -தன்புலன்
    ஐந்தினை ஆளும் அனுமனை, வாயு
    மைந்தனைப் பாடல் மகிழ்வு….(16)

    சுந்தர காண்ட சுருதி உரைக்கும்
    மந்திர வாசக மாருதியே -எந்திரமாய்
    உண்டு உறங்கி உலகக் கிணற்றில்
    மண்டூகம் ஆச்சே மதி….(17)

    பொறிகளின் சூழ்ச்சியால் பெண்களின் காமக்
    குறிகளில் வீழ்ந்திட வாழ்க்கை -நெறிதவறி
    கஜ்ராஹோ கெட்டகனா காணாது கண்விழிக்க
    பஜ்ரங் பலீ பணி….(18)

    திருத்துழாய் காட்டில் கருத்துடன் ராமன்
    திருப்பெயர் ஓதும் தவமே -மருத்துவக்
    குன்றேந்தி வந்தோய் குணமயக்கம் போக்கிட
    இன்றேந்தி வாருமய்யா இங்கு….(19)

    பொன்னும் கிடைக்கும் புதனும் அகப்படும்
    எண்ணும் எழுத்தும் இருவிழியாய் -மின்னும்
    கவிக்குல முக்யன் கமல பதங்கள்
    தவிக்கையில் தோன்றும் துணைக்கு….(20)

    மூவாசை கொள்ளா முனிவன் (OR)முதல்வோன் ரகுராம
    சேவாசை கொண்ட சிவரூபந் பூவாச
    சேவைசெய் ஆசை சிவரூபன் -பூவாச
    அன்னையைக் கண்டு அசோக வனத்திடை
    இன்னலைத் தீர்த்தோன் இவன்….(21)

    ஆஞ்ச நேயன் அசாத்திய சாதகன்
    காஞ்சன அன்னையைக் கண்டன்று -வாஞ்சையாய்
    வில்லாளி நாயகன் வாக்களிப்பை விண்டுரைத்த
    சொல்லாளி சுந்தரன்பேர் சொல்லு….(22)

    புலன்களாம் ஐவரோடு ஆறா காது
    விலங்கினைப் பூட்டிய வாயு -குலன்மகன்
    தாசரதி தோழன் தசகண்ட ராவணன்
    வாசலெதிர் வந்தோன்வால் வாள்….
    வாசலெதிர் வந்தோன்சீர் பேசு….(23)

    இராமன் இளையோன் இருதோள் இருக்க
    இராவணன் போரில் இறக்க -அரோஹரன்
    அம்சனே அஞ்சனை ஆண்மகனே வானர
    வம்சனே வாழியநின் வாகு….(24)

    குரங்கெண்ணம் காக்க மருந்துண்ண வைக்க
    விரைந்தோடிக் கண்டாய் வரையை -திருந்தேன்
    மலைநிகர்த்த நீயிருக்க மற்றெதையோ நாடினேன்
    தலையிருக்க வாலாடும் தீங்கு….(OR)
    தலையிருக்க வாலாட்டத் தோடு….(25)

    அறிவில் கதிரொளி ஆற்றலில் ஈசன்
    திருவில் ஜனகமகள் தாசன் -உறவில்
    குகனோடு ஆறானான் காகுத்தன் நட்பில்
    நிகரில்லா மாருதியை நண்ணு….(OR)….(26)

    அறிவிலோ ஆசானாம் ஆற்றலில் ஈசன்
    திருவிலோ ஜானகிக்கு தாசன் -உறவில்
    குகனோடு ஆறாம் ரகுநாதன் தேர்வு
    நிகரில்லா மாருதியை நண்ணு….(27)

    வானரம் ஆயிரம் வாயைப் பிளந்திட
    வானுற ஓங்கிநீள் வாரிதி -ஜாணுற
    தாவி இலங்கைக்கு மேவிய மாருதியை
    சேவிக்க சித்திக்கும் சத்து….(28)

    உரம்கொடுக்கும் ஓங்க, கரம்கொடுக்கும் தாங்க
    அரன்படைத்த அம்சன் அனுமான் -வரம்கொடுக்கும்
    காலில் சிரம்கிடக்க, ஏழு மரம்தடுத்தும்
    வாலி திறன்முடித்தோன் வாழ்த்து….(29)

    பகுத்தறி வாளன் பரமராம பக்தன்
    அகத்துறை ஆன்மன் அனுமான் -மகத்துவம்
    பாடு ,மலர்ப்பதம் நாடு இகத்துடன்
    வீடும் இணைந்திடும் வாழ்வு….(30)

    தத்துவமாய் சைவன், தரணியில் ராமனின்
    வித்தாய் விளைந்ததால் வைணவன் -மத்வ
    மதமூலன் வாயு மகனனுமான் ராசி
    பதமூலம் ஆசி பலன்….(31)

    இராமவென்று கூறல் இராமவுரு காணல்
    இராமகதை கேட்டல், இருப்பு -இராமன்கால்
    என்றிருக்க மாருதிபோல், என்றும் குணசீலக்
    குன்றுச்சியில் வைக்கும் குரங்கு….(32)

    சீதை துயர்தீர்க்க வாத மகனாக
    பூதலம் வந்தவுமை பாகனை -ஆதவன்
    கூடவே சென்றன்று பாடம் பயின்றோனை
    நாடவே நாடுமுனை நாடு….(33)

    சேராது துஷ்ட சகவாசம், சேர்ந்தாலும்
    மாறாது மனம்வாயு மைந்தனின் -பேரோத
    தீராத வல்வினைகள் தூராதி தூரத்தில்
    ஓரோரம் ஓடும் ஒளிந்து….(34)

    வாலால் சகோதரன் வாயுமகன் பீமனின்
    தோளா ணவகர்வம் தீர்த்தோனே -காளான்
    எனவகந்தை என்னுள் எழுந்திடும் போது
    மனமுவந்து ஆளென் மனது….(35)

    பாரத யுத்தத்தில் பார்த்தனின் சாரதி
    தேரதன் உச்சி திகழ்ந்தோனே -நூறதை
    பாண்டவர் வெல்ல பலமாக வீசினாய்
    காண்டீப வேள்வியில் காற்று….(36)

    வாடா மலரன்னை சூடா மணிபெற்று
    ஓடோடி அண்ணலை ஓம்பிய -நாடகம்
    சுந்தர காண்டத்தை எந்திரமாய்ச் செப்பினும்
    மந்திரம் ஆகிடும் மெய்….(37)

    கைத்தலம் பற்றிய கூடலாள் கூறிட
    மைத்துனர் கால்பிடிக்க மாருதியாய் -வைத்திய
    நாதரே வந்தீரோ நானிலத்தில் நாரணர்
    தூதரான தேவா துணை….(38)

    காமம் உலோபம் குரோதம் அகங்காரம்
    நாமம் அனுமனென நாவுறைக்க -போமாம்காண்
    தோளால் சிரஞ்சீவி தூக்கிவந்த மாருதியின்
    வாளாம் அவனுடைய வால்….(39)

    ஆதவனோ(டு) ஏகிவான் வீதியிலே மெய்ப்பொருளை
    பேதமறக் கற்ற பவுருஷத்தை -மேதினியில்
    கால்முடியும் நாள்முன்பே கால்பிடித்துக் கும்பிடுவீர்
    கால்மடி புத்திரன் காப்பு….(40)

    கணையாழி வெல்லும், மனையாள் துறக்கும்
    அணையா நெருப்பில் தோன்றும் -இணைபிரியா
    சொல்லும் பொருளுமாம் ராமனும் தோழனும்
    வில்லை நிகர்த்தது வால்….(41)

    நிலையாமை நீங்கும் நிரந்தரம் கூடும்
    அலைபாயும் நெஞ்சம் அடங்கும் -சிலைராமன்
    தூதன் அனுமானின் பாத கமலத்தைப்
    போதும் பணிவோர் தமக்கு….(42)

    நெஞ்சாம் அசோக வனத்தின் அரக்கியர்
    அஞ்சாம் அவைதாண்டி, ஆன்மாவை -வெஞ்சிறைவாழ்
    வேள்விதீ சீதையை கேள்விக் கணையாழியால்
    தோள்வலியோன் மாருதிபோல் தேடு….(43)

    நெஞ்சாம் அசோக வனத்தின் அரக்கியர்
    அஞ்சாம் அவைதாண்டி, ஜீவனாய் -வெஞ்சிறைவாழ்
    அன்னையை மீட்டான்ம அண்ணலிடம் சேர்பிக்க
    முன்வந்த மாருதியாய் மாறு….(44)

    வரம்கொடுக்கும் தெவம், கரம்கொடுக்கும் தோழன்
    திறன்கொடுக்கும் வானர தூதன் -சரம்தொடுக்கும்
    காகுத்தன் தந்த கணையா ழியாலன்னை
    சோகத்தைத் தீர்த்தோன் சரண்….(45)

    சரண்சுந் தரன்தாள் சரண்சுந் தரன்வால்
    அரன்சம் பவித்தான் அவன்பால் -அறம்பொருள்
    இன்பம் அளிப்பான் இராமன் சகவாச
    நண்பனாய் மாற்றுமவன் நட்பு….(46)

    நட்புக்காய் சுக்ரீவன், நாவில் அயக்ரீவன்
    நுட்பத்தால் ராகவன் நண்பனாக -கட்புலன்கள்
    கொன்ற அனுமனவன் கூறி வெகுண்டெழுந்து
    சென்றழித்தான் தீவில்தீ சேர்த்து….(47)

    சேர்ந்ததெலாம் செல்லாது, சுற்றமோ பொல்லாது
    வார்த்தைகள் கூற்றின்முன் வெல்லாது -ஆர்த்தழுது
    ஓ !நரனே அப்போது ஓய்ந்திடாய் இப்போதே
    வனர வீரனை வாழ்த்து….(48)

    வாழ்த்தியவன் வாகை விளம்பிட ஜாம்பவான்
    ஆழ்திரை ஆழிமேல் ஆதவனாய் -பாழ்படுத்த
    லங்கா புரிசென்று அங்கசோகக் கானுறையும்
    செங்கமலத் தாள்கண்ட சேய்….(49)

    சேயாய் இருக்கையில் சூரியனை சாப்பிட
    தாயார் தடுத்தும் தவிர்த்துவான் -பாய
    வெகுண்ட சுரர்கோன் வயிரத்தால் தாக்க
    அகண்ட(து) அனுமன் அடல்….(50)

    அடலவன் மோனம் கடலவன் ஞானம்
    சுடர்விடும் ராமம் சுகித்து -அட!இவன்
    எத்திறமும் அஞ்சிடும் ருத்திரன் அம்சமே
    சித்தமொரு மித்திவனைச் சேர்….(51)

    சேர்ந்த கவிக்குள சேற்றுச்செந் தாமரை
    நேர்ந்தரா மாயண நுட்பொருள் -சோர்ந்த
    மனமதில் பூக்க மகிழ்வு, நமஓம்
    அனுமதே நாமம் அணி….(52)

    அணிவான் அடக்கம் அயோத்தி இராமன்
    பணிவரக் கொள்வான் பதட்டம் -கனவிலும்
    அய்யனிடு காரியத்தை மெய்ப்பட வைத்திடச்
    செய்யும் இவன்தொழில் சீர்….(53)

    சீராகச் செல்ல சுவாஸத்தை நேர்படுத்தி
    காரோத ஆழக் கடல்தாண்டி -ஸ்ரீராமன்
    தாஸனெனச் சொல்லி தஸகண்டன் முன்வாலால்
    ஆஸனம் கொண்டோன் அழகு….(54)

    அழகண்ணல் ஏவல், அழகாழி தாவல்
    அழகுகணை யாழிசேர் ஆவல் -அழகனுமன்
    மோதிரக் கையால்நம் தீதறக் குட்டிலுண்டு
    ஆதிரையோன் அன்பே அரன்….(55)

    அரனவன் அம்சம், அரியவன் வம்சம்
    திறனடியார் தீங்கு துவம்சம் -பரணதில்
    வைத்த பொருளாக வாழ்நாள் வரைக்கும்
    கைத்தலம் உண்டனுமன் காப்பு….(56)

    காப்பதற்கு காசின்றி குட்டிகளைப் போட்டிடுவோர்
    ஆப்படைந்த மந்தியென்(று) அன்றுரைத்தார் -ஆப்பக்கை
    பந்தி அருளை பறிமாறும் சம்மந்தி
    நந்தி தனிலேறும் நீறு….(57)

    நீறுபூத்த அக்கினியாய் சேறுபூத்த தாமரையாய்
    வேரசோகத் தில்வாடு வைதேஹி -மாறசித்தம்
    அஞ்சண வண்ணன் அனுப்பிய தூதனென
    குஞ்சுக் குரங்கானான் குன்று….(58)

    குன்றுருவம் காட்டி, கணையாழி தந்தம்மா
    சென்றிடலாம் ஸ்ரீராமன் சேவடிக்கு -என்றுரைக்க
    சீதை மறுத்தணி சூடா மணியளிக்க
    காதை குறிப்புணர்ந்தான் கால்….(59)

    கால்வாசி மைந்தன் அரைவாசி வானரமுக்
    கால்போதும் (OR) காலமும் யோகி முழுமுதற் -காலகாலன்
    பூரணன் சிரஞ்சீவி நாரணன் காரியக்
    காரணன் மாருதியைக் கொள்….(60)

    கொள்வான் கரத்தில் கதாயுதம், சித்தத்தில்
    கொள்வான் இராமன் கதாஅமுதம் -கொள்வான்
    அளவுவிஸ்வ ரூபன் அணிகவிக்கு தீபம்
    பிளவுபடா வாயுமகன் பார்….(61)

    பாரழைக்க வந்த பரமசிவா, பார்த்தன்தன்
    தேரழைக்க வந்த தருமதுரை -யாரழைக்க
    என்மூச்சுக் காற்றினில் உன்எஜ மான்கொடி
    விண்வீச்சுக் கொள்ளும் விளம்பு….(62)

    விளங்கிடத் தேரில் விரையும் கதிரோன்
    விளம்பிட சாத்திரங்கள் விண்ணில் -குளம்பிடி
    சத்தப் புரவிகள் ஒத்துப் பறந்தவன்
    மெத்தப் படித்தஅனு மன்….(63)

    மன்னுபுகழ் கோசலை மைந்தன் இராகவன்
    கண்ணுபட ஆனந்தக் கூர்ச்செறிந்து -பண்ணிசைத்து
    ராமஜபம் செய்தபடி ராப்பகல் பாராத
    நாமசங் கீர்த்தனனை நாடு….(64)

    நாடவ ளுக்கவள் நாய கனயோத்தி
    நாடிவ னுக்கோவில் நாணிழுப்பான் -நாடகம்
    போடுமிடம், ஆனந்த பாஷ்பம் சொரிந்திடப்
    பாடுமிவன் ஆடிப் பெருக்கு….(65)

    பெருக்கிட நீளும் பிறவியாம் வாலில்
    நெருப்பிட லங்கா நகர -உருக்கெட
    குச்சுமச் செல்லாம்தீ காம தகனமாய்
    வச்சுக் குளிர்ந்ததரன் வால்….(66)

    வாளாய் இருப்பதேன் வாலே எனக்குமட்டும்
    ஆளாளுக் கெல்லாம் அருள்கிறாய் -மாளா,
    பிறவா வரம்தா இறைவா இலையேல்
    தரவா குருவாய் தவம்….(67)

    தவபரதன் தற்கொலைத் தீர்வைத் தடுக்க
    அவசரமாய் சென்றிட, அண்ணல் -தவவிருந்தில்
    சேர்த்துனது பங்குண்ண சாப்பாட்டு ராமனென
    பேர்தலத்தில் பெற்றானப் போது….(68)

    போதன்னை ஜானகியைப் பார்த்தற்கு சாட்சியாய்
    தீதிலங்கை தீவுக்குத் தீவைத்தான் -சோதரர்க்கு
    அண்ணன் இருப்பை அறிவித்து சாட்சியாய்
    விண்ணுயரும் வேள்வித்தீ வைப்பு….(69)

    வைப்பாய் அவன்நாமம் வாக்கில், மனம்செயலில்
    கைப்பாவை யாயிருந்து காட்சிகளை -துய்ப்பாய்நீ
    சாட்சியாய் வாழ்ந்து சகலமும் அர்பணிக்க
    ஆட்சிஅவன் ஆதாயம் ஆளூ….(70)

    ஆளாள் உரைப்பர் அதையிதை நம்பென்று
    மாலாலா காததை மாருதியின் -மேலேறும்
    ஊற்றுக் குளிவெண்ணை ஊசா உளுந்துவடை
    சாற்றும் திருத்துழாய் சேர்ப்பு….(71)

    சேரான் அதமனை சீர்வாலி ஆனாலும்
    மீறான் சுக்ரீவ மத்யமனை -வாரான்
    ரமித்திடும் உத்தமன் ராமனெனக் கண்டு
    இமைத்திடும் முன்படைந்தான் ஈர்ப்பு….(72)

    ஈர்ப்பான் வரமளித்து, தீர்ப்பான் வினைகணக்கு
    கோர்ப்பான் கணைதொடுப்போன் கையில் -சேர்ப்பான்.
    வடைமாலை சூட்டி அடியார்கள் வேண்ட
    அட!மாலைக் குள்பார் அளிப்பு….(73)

    அளித்திட அன்று அவுடதக் குன்று
    செலுத்திட இந்திர ஜித்தன் -பலிக்கணை
    லக்குமணன் வானர லட்சங்கள் காப்பாற்ற
    திக்கிமையம் சென்றுவந்த தேசு….(74)

    தேசுலாவும் தேகனை, மாசிலா பூந்துழாய்
    வீசுவாசத் தோளனை, வைகுண்ட -ஈசனம்ச
    நேய ரகுவம்ச நாயகன் தூதனை
    வாயு குமாரனை வாழ்த்து….(75)

    வாழ்த்த வசிட்டன், வணங்க விபீஷணன்
    தாழ்த்தி அங்கதன் தாங்கவாள் -ஏழ்த்தல
    ராஜ்ஜியம் ஏற்றிடும் ராகவன் பாதத்தில்
    பூஜ்ஜியன் கண்ணீர் பளிங்கு….(76)

    பளிங்கு மரகதப் பர்வதம், பக்தி
    துலங்கிடும் மார்கழித் திங்கள் -நிலம்தொடு
    தாரக பிம்பம் வேறகம் கண்டதுஆல்
    வேரது பாருக்கு வந்து….(77)

    வந்தாராம் வாழ்ந்தாரம் நொந்துநூ லானாராம்
    தந்தாராம் கர்ணத்தில் தாரகத்தை -கங்காராம்
    ஏன்மூக்கைச் சுற்றிநீ ஈசன் தொடுகின்றாய்
    காண்முக்கண் மாருதியின் கண்….(78)

    கண்மூடிக் கானில் கிழக்குரங்காய் கால்நீட்டி
    பின்னாடி வந்தவாசி பீமனைத்தன் -முன்னாடி
    சோதிக்க ,போரிலவன் சாதிக்க மாரணைத்து
    ஆதிக்கம் கூட்டினாய் அன்று….(79)

    அன்றரன், பின்பைந்தில் ஒன்றிணைந்த அஞ்சனைக்
    கன்றவன், கிஷ்கிந்தைக் காவலவன் -என்றும்
    அராவணைப் பள்ளி நராயணன் அம்ச
    இராமனின் கீதை இவன்….(80)

    இவனிராமன் நண்பன், இனத்தவர் போற்றும்
    இவன்மந் திகள்மந் திரியாம் -இவனகந்தை
    ஆசறுக்கும் ஆசிரியன் நேசிப்போர் சேவகன்
    வீசுவாசி பூதம்தெய் வம்….(81)

    தெய்வமே, துன்புறுத்தும் ஐவரை ஆட்கொண்டு
    உய்யவகை காட்டு உலகினில் -பெய்யவா
    பந்தமறு கர்மத்தை, பக்தியை, ஞானத்தை
    மந்தனென்மேல் மாருதி மா….(82)

    மாமருந்து குன்றெடுத்தாய், மாபா ரதமிருந்தாய்
    மாபா தகத்தின்மேல் மூட்டினாய்தீ -மாதேவன்
    மாதவன் நட்புணர்த்த மாருதியாய் வந்தவரே
    வேதாந்த தேசிகராய் வா….(83)

    வாக்கில் இராமமொழி, நோக்கில் இராமவிழி
    போக்கில் இராமவழி, பூமகளின் -ஏக்கம்
    தவிர்க்க கடல்தாவு, தாசரதி தூதன்
    கவிக்குல ஞானக் கனி….(84)

    கனிமா ருதியிருக்கக் காய்மனிதர் கூட்டு
    சனிரா குகேதுபுதன் செவ்வாய் -பனிதிங்கள்
    வெள்ளி கதிரோன் வியாழன் நவகோள்கள்
    கல்லும்பா டாதோ கவி….(85)

    கவிக்குல சூரி கடும்பிரமச் சாரி
    தவக்கிளை வாழ்ராம தாரி -அவிக்கும்தீ
    வாயுவின் வாரி சுபத்திற்கோர் ஏரிகுரு
    ராயன் அனுமனைப்பா ரீர்….(86)

    ரீங்கா ரமாய்த்துவங்கி ஹூங்கா ரமாய்முடியும்
    ஆங்கார கோதண்ட ஆர்ப்பிலாழி -தேங்க
    இவனங்கம் புல்லரிக்க இஷ்வாகு ராமன்
    சிவலிங்கம் செய்தபின்பே சேது….(87)

    சேது அணையெடுக்க ஸ்ரீராமன் பேரெழுதி
    ஓதப் பரப்பில்கல் ஓய்ந்திருக்க -வாத
    மகனவன் வானர மக்களை மேய்த்து
    புகநடந்தான் லங்கா புரிக்கு….(88)

    புரிசைசூழ் லங்கா புரிக்குள் புகுந்து
    கரிசெய் இரவிலசோ கத்துள் -பரிசாய்
    சுமத்திய சோகம்சூழ் சீதையைக் கண்டான்
    சமர்த்த ராமதா ஸன்….(89)

    ஸன்னமாய் ராம சரிதம் உரைத்திடுவான்
    பின்னமாய் பூரணன் புல்லாகி -திண்ணமாய்
    சீதையார் சந்தேகம் சோகத்தைப் போக்கிடுவான்
    வேதநிகர் சொல்லின்செல் வன்….(90)

    வன்னி மரத்தடியில் வாழை மரத்தோப்பில்
    எண்ணி இருப்பான் இராமனை -கண்ணிரெண்டும்
    ஆனந்த நீர்சொரிய மோனம் தனில்மூழ்க
    வானிந்த மண்ணில் வசம்….(91)

    வசமாக்கும் கல்வி, வளமாக்கும் செல்வம்
    திசையெட்டும் வீரம் தெறிக்கும் -தசகண்டன்
    முன்பமர்ந்தோன், பொன்னின் மகனாவோன், வித்தைக்காய்
    விண்பறந்தோன் கையின் வரம்….(92)

    வரவர மாமி விலங்கு கழுதை
    உருபெறத் தேய்ந்தாற்போல் உள்ளம் -தரதர
    என்றிழுக்கும் ஐம்புலனால் பன்றியாய்ப் போனதே
    கொன்றழிக்க கொண்டா கதை….(93)

    கதைபுத்திப் பிள்ளையார் கையைப் பிடிக்க
    அதுவைம் புலக்குரங்காய் ஆச்சே -இதையுனக்கு
    சொல்வது ஏனென்றால் செய்யிரா மாயணமாய்
    நல்வழியில் நெஞ்சை நடத்து….(94)

    நடத்துனர் நானென்றால் ஓட்டுனர்நீ அன்றோ
    மடத்தன வாகனம்இம் மேனி -அடைத்திருக்கும்
    எண்ணப் பயணிகள் ஏகாந்த ஊர்செல்ல
    என்னப்பா வேகத்தை ஏத்து….(95)

    ஏத்த வழியறியேன் எட்டக் கழியறியேன்
    வாழ்த்த மொழியறியேன் வானரனே -மூழ்த்திடு
    ஆராய்ச்சி அற்ற அதுநான் அனுபூதியை
    வாராய் சிவாம்சா விரைந்து….(96)

    விரைந்து மகேந்திர வெற்பேறி நின்று
    இரைந்து இராமா இயம்ப -உறைந்து
    விலங்குகள் ஓலமிட விண்ணளந்த மாலாய்
    இலங்க இலங்கைக்(கு) இழிவு….(97)

    இழிவுற்று ஈனமாய் இங்கங்(கு) அலைந்து
    பழியுற்ற பாவப் பணத்தால் -அழிவுற்று
    காலத்தின் கோலத்தால் காடேகும் மூடாஅம்
    மூலத்தின் மூலம்வெல் மூப்பு….(98)

    மூப்படைந்து மூச்சிறைக்க முக்காலில் நின்றிடுவீர்
    காப்படைய நாளும் கதலிவனத் -தோப்படைந்து
    கைசிவக்க தாளமிட்டு காகுத்தன் பேரோதி
    மெய்சிலிர்க்கும் மாருதிதாள் மாந்து….(99)

    மாந்தர் சதமல்ல வேந்தர் சதமல்ல
    சேர்ந்த சகமும்அ சத்தே -தேர்ந்த
    அரியகல்வி கற்க அருக்கன்பின் சென்ற
    சிறியதிருத் தாளே சதம்….(100)….கிரேசி மோகன்….!

    கண்டேன் அனுமனை சுபம்
    ———————————————————————————————————

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180123 - Yadava 07 Navaneeta natyam - lr watercolour - 24x32cms Krishna dances to the beats of the churning and asks for a handful of butter.
    180123 – Yadava 07 Navaneeta natyam – lr
    watercolour – 24x32cms
    Krishna dances to the beats of the churning and asks for a handful of butter.

    ”ஆடுகின்றார் கண்ணன் அசோதை கடையலுக்கு
    பாடுகிறார் பாரதப் பாடலை -நாடுகின்றார்
    உண்டான வெண்ணையை உள்ளங்கை நெல்லியாய்
    கொண்டோ ளிடம்கீதை கேட்பு’’…கிரேசி மோகன்….!

    ‘தா’’வென்று வெண்ணையை தாமோதர் கேட்டிட,
    ’’தோ’’வென்று மாற்றான்தாய் தேவகிக்கு , -’நா’வென்ற
    கீதையை மத்தால் கடைந்து கண்ணனுக்கே,
    பாதையைக் காட்டும்அம் பா(யசோதை ஆச்சி)’’….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • ஆவலுடன் செயற்படுவோம் !

     
    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    இலக்கியமும் இலக்கணமும்
    இங்கிதமாய் அமைந்தமொழி
    வழக்கொழிந்து போகாமல்
    வாழுகின்ற தெங்கள்மொழி
    நிலத்திலுள்ள மாந்தரெல்லாம்
    நிம்மதியாய் வாழுதற்கு
    நீதியொடு வாழ்வியலை
    நீக்கமறச் சொன்னமொழி !

    அகத்திணையும் புறத்திணையும்
    அமைகின்ற வகையினிலே
    ஆழமாய் கருத்துக்களை
    அனைவருக்கும் சொன்னமொழி
    நிலத்தியல்பை வாழ்க்கையொடு
    இணைத்திடவே இலக்கியத்தை
    நெஞ்சமெலாம் பதியவைக்க
    நிறையவே தந்தமொழி !

    பக்தியினை இலக்கியமாய்
    பாரினிலே தந்தமொழி
    பலநாட்டார் வியந்துநிற்க
    குறள்தந்த பசுமைமொழி
    திருவாசகத் தேனை
    உருகிற்குத் தந்தமொழி
    திசையெல்லாம் புகழ்பரப்பி
    நிற்குதிப்போ பெருமையுடன் !

    ஆண்டவனின் அருள்பெற்ற
    அன்னைத் தமிழ்மொழியை
    அரியணையில் ஏற்றிவைத்து
    ஆட்சிமொழி ஆக்கவேண்டும்
    அழகுதமிழ் உலகெங்கும்
    அனைவரிடம் சேர்வதற்கு
    ஆர்வமுடன் இணைந்தொன்றாய்
    ஆவலுடன் செயற்படுவோம் !

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 45

    க. பாலசுப்பிரமணியன்

    அன்பே சிவம்

    திருமூலர்-1-3

    சில நேரங்களில் நமது மனதில் தோன்றக்கூடிய கேள்வி – அனைத்தையும் துறந்த வாழக்கையை வாழ்ந்தால்தான் இறைவனை அடைய முடியுமா? கோவில்களுக்கோ அல்லது வேறு வழிபாட்டுத் தலங்களுக்கோ சென்றால்தான் இறைவனின் அருள் கிடைக்குமா? பக்தியுடன் இறைவனை பூஜித்தாலோ அல்லது அவனுடைய திருநாமங்களை போற்றிக்கொண்டிருந்தாலோதான் இறைவனின் அருளுக்குப் பாத்திரம் ஆவோமா? கனிகளும் மலர்களும் மற்ற படையல்களும் இறைவனுக்குப் படைத்தால் தான் இறைவனின் அருளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியுமா? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்த வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் இந்த அருள் பெறுவதற்கு வேறு ஏதாவது வழிகள் உள்ளனவா?

    சபரி கொடுத்த எச்சில் பழத்தையும் அன்புடன் ஏற்று அருளிய இராமன், ஒரு பிடி அவல் கொண்டுவந்த நண்பனின் கால்களைக் கூட பிடித்துவிட்ட கண்ணன், பிட்டுக்கு மண்சுமந்த பரமேஸ்வரன், குருதிவழியும் கண்களைக் காலால் முட்டுக்கொடுத்துக்கொண்டு தன் கண்களையே தானமாகக் கொடுத்த வேடன் கண்ணப்பனுக்கு அருளிய ஈசன் இவர்களுக்கெல்லாம் அருளவில்லையா?

    பட்டினத்தார் பாடுகின்றார்

    கல்லா லெரியுண்டுங் காலா லுதையுண்டுங் காளைகையில்

    வில்லா லடியுண்டு முன்னாள் விடமுண்டு மேலிளித்துப்

    புல்லாற்  புறமெரி யேகம்ப வாணர் பதாம்புயத்தின்

    சொல்லார் செவியினிற் கேளா திருந்ததென் றொல்வினையை

    “மக்கள் சேவையை மகேசன் சேவை” என்று எத்தனை தவ முனிவர்கள் எடுத்துரைத்திருக்கின்றார்கள்.” ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது பக்தியின் இன்னொரு வடிவமில்லையா? – என்றெல்லாம் கேள்விகள் நம் மனத்தினில எழத்தான் செய்கின்றன.

    ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது. இறைவனிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு பக்தனின் வேண்டுதலுக்கு  இணங்கி இறைவன் அவருடைய வீட்டுக்கு உணவு அருந்துவதற்கு வருவதாக உறுதி  அளிக்கின்றான். பக்தனோ மேளதாளங்கள் முழங்க ஒரு பெரிய விருந்துக்கே ஏற்பாடு செய்கின்றான். பின்பு தன் வீட்டு வாசலில் இறைவனின் வருகைக்காகக் காத்திருக்கின்றான். ஆனால் இறைவன் வருவதாயில்லை. அங்கே ஒரு நாய் வாலைக்குழைத்துக்கொண்டு வந்து நிற்கின்றது. பக்தனோ அந்த நாயை விரட்டுகின்றான். மீண்டும் மீண்டும் அந்த நாய் அந்த இடத்தையே சுற்றி வருகின்றது. பொறுமையிழந்த பக்தன் ஒரு தடியால் அந்த நாயை மிரட்டி விரட்டுகின்றான். இறைவன் அங்கே வரவில்லை. இரவில் மனம் நொந்த பக்தன் இறைவனைச் சாடுகின்றான். கொடுத்த வாக்குப்படி நீ வரவில்லையேயென்று. இறைவன் சிரித்துக் கொண்டே கூறுகின்றான்.” நான் வந்திருந்தேன் உனக்குத் தான் தெரியவில்லை .. நான் நாயின் வடிவில் வந்திருந்தேன். நீயோ வேறெங்கேயோ தேடிக்கொண்டிருந்தாய் ” என்கிறார்.

    உலகின் எல்லா உயிரினங்களிலும் இறைவனின் ஆட்சி உள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனின் இந்தத் திருவிளையாடல்களை உணர்ந்தவராகிக் கூறுகின்றார் ” பலவுருவுந் தன்னுருவே யாய பெருமான்”

    .”காக்கை குருவி எங்கள் சாதி ..” என்று.பாடிய பாரதியின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன. அன்பின் வடிவமாக ஆட்சி செய்யும் ஈசன் அன்பிலே சிவமாக அவதரிக்கின்றான். இதை உணர்ந்து எல்லா  உயிரினங்களிடமும் நிபந்தனையில்லாத, எதிர்பார்ப்புக்கள் இல்லாத அன்பு செலுத்தும் பொழுது இறைவனின் அருளாட்சியை நம்மால் உணர முடிகின்றது.

    திருமூலர் கூறுகின்றார்

    அன்பினுள் ளான்புறத் தானுட ளாயுள்ளான்

    முன்பினுள் வான்முனி வர்க்கும் பிரானவன்

    அன்பினுள் ளாகிஅமரும் அரும்பொருள்

    அன்பினுள் வார்க்கே அணைதுணை யாமே

    எனவே எல்லா உயிரினங்களையும் இறைவனின் ஆட்சிக்குச் சான்றாகக் கருதி அனைத்தின்பாலும் அன்பெனும் அறத்தை கைப்பிடித்தால் அதுவே இறைவனை தரிசிப்பதற்கு இறைவனோடு இறவாடுவதற்கும் ஒரு வழியாக அமையும். “அன்பின் வழியது உயிர்நிலை” என்று வள்ளுவம் கூறியதை நினைவில் கொள்ளுதல் அவசியம். மாணிக்க வாசகரோ “அன்பில் விளைந்த ஆர் அமுதே” என்று இறைவனைப் போற்றி வணங்குகின்றார்

    உலக மக்களுக்கு அன்பின் வலிமையை எடுத்துரைக்க கபீர்தாஸ் கூறுகின்றார் “மூட்டை மூட்டையை நூல்களை படித்தும் பேரறிஞரானவர் எவருமில்லை அன்பு என்னும் இரண்டரை அட்சரங்களை படித்தவனைப் போல் அறிஞரைக் கண்டதில்லை “

    “அன்பே சிவம்” என்ற அறிய கருத்தினை நம் முன் வைக்கும் திருமூலர் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.

    அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்

    அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

    அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

    (தொடருவோம் )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (257)

    இவ்வார வல்லமையாளராக பைக் பந்தய வீராங்கனை சைபி அவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்

    சைபி… சாதனைகள் பல செய்திருக்கும் ஸ்டாண்டிங் பைக் ரைடர். டெய்லரிங் கடை, அவினாசி அத்திக்கடவு திட்டத் தன்னார்வலர் என இவருக்கு வேறு முகங்களும் உண்டு. கல்லூரி மாணவரான மகன் ரித்தின், ப்ளஸ் ஒன் படிக்கும் மகள் ரோஸ்மேரி ஆகியோருக்கு இவர் சிங்கிள் பேரன்ட்.  தன்னைச் சூழ்ந்த பிரச்னைகளை உதறி, நிமிர்ந்தெழுந்த கதையைச் சொல்கிறார் சைபி.

    “நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் இருக்கிற மண்வயல் கிராமத்துல ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அப்பா மேத்யூ, அன்பின் உருவம். அம்மா மேரி தன்னம்பிக்கை மனுஷி. எனக்கு ரெண்டு தம்பிகள், ஒரு தங்கை. வளர்ப்பில் எந்தப் பாலினப் பாரபட்சமும் காட்டாமல் எல்லோரையும் தைரியமா வளர்த்தாங்க. லீவு நாள்கள்ல மலைப்பகுதியில் இருக்கும் விவசாய நிலத்துக்குப் போயிட்டு வர்றதுக்காக, அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். அந்த மலையில சும்மா சல்லு சல்லுனு சைக்கிள்ல பறப்பேன். விமானத்துல போற மாதிரி இருக்கும்’’ என்கிற சைபி, பத்தாம் வகுப்புவரை படித்திருக்கிறார்.

    “அதுக்கப்புறம் வீட்டில் திருமணம் செஞ்சுவெச்சாங்க. ரெண்டு குழந்தைங்க பிறந்தாங்க. அந்தக் காலகட்டத்தில ஆக்கிரமிப்பு காரணமா எங்க நிலத்துல பாதியை இழந்துட்டோம். விவசாயமும் கைகொடுக்கலை.  நாடெங்கும் விவசாயிகள் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நிலைமை ரொம்ப மோசமாச்சு. நான் குடும்பத்தை நடத்த டெய்லரிங் கத்துக்கிட்டேன். என் கணவர், ஒருநாள் குடும்பத்தை விட்டுட்டு எங்கேயோ போயிட்டார். ரெண்டு குழந்தைங்களோட தனிமனுஷியா நின்னப்போ, அந்தத் துயரமே எனக்குத் தூண்டுகோலா இருந்தது. அவினாசி வந்து டெய்லரிங் கடை ஆரம்பிச்சேன். சுடிதார், பிளவுஸ்னு நேர்த்தியா தைச்சுக்கொடுத்ததால நிறைய வாடிக்கையாளர்கள் கிடைச்சாங்க. குடும்பம் நடத்தவும் வழி கிடைச்சது’’ என்பவர் தன் பைக் சாகசங்கள் பற்றிப் பகிர்கிறார்.

    ‘`மலை ரோட்டுல சைக்கிள் ஓட்டின ஆர்வமோ என்னமோ தெரியலை… பைக் ஓட்ட ஆசை வந்தது. அதைத் தொடர்ந்து மெள்ள மெள்ள கார், ஆட்டோ, ஜீப்னு கிடைக்கிற வாகனங்களையெல்லாம் ஓட்டிப் பழகினேன். முதல்ல பழகினதே `டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்’தான். அப்புறம் `டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்’ வாங்கினேன். அவினாசியிலிருந்து ஊட்டியில இருக்கிற அம்மாவைப் பார்க்கப்போறதுக்குக்கூட பைக்லதான்னு ஆகிடுச்சு. பைக் ஓட்டுறப்போ கெத்தா இருக்கும்.

    ‘ஒரு பொம்பளை பைக் ஓட்டுறதா’னு சாலைகளில் என்னை ஓவர்டேக் செய்யற ஆண்களுக்கு ஒரு சாதனை உணர்வு இருக்கும். நமக்குத் தேவை, பாதுகாப்பான டிரைவிங். அதனால அதையெல்லாம் நான் கண்டுக்கிறதில்ல. டென்ஷனா இருக்கும்போது ஒரு ரவுண்டு பைக்ல போயிட்டு வருவேன். இப்படித்தான் பைக் என்னில் பாதியானது’’ என்பவர், அதையே சாதனைக்களமாக மாற்றிய அனுபவத்தையும் சொல்கிறார்.

    “பைக் ஓட்டுறதுல ஏதாவது சாதனை பண்ணலாம்னு யூடியூப்ல தேடினேன். நிறைய பெண்கள் பைக்ல கிலோமீட்டர் கணக்குல டிராவல் பண்ணித்தான் சாதனை பண்ணியிருந்தாங்க. ஸ்டாண்டிங்லேயே பைக் ஓட்டுற சாதனை பண்ணலாமேனு நினைச்சு, அதுக்காகப் பயிற்சியெடுக்க ஆரம்பிச்சேன். தினமும் டெய்லரிங் ஷாப் வேலையை முடிச்சுட்டு ஒரு மணி நேரம் பிராக்டீஸ் பண்ணுவேன். நம்பிக்கை வந்ததும் ‘யூஆர்எல் வேர்ல்டு ரெக்கார்ட்’ஸுக்கு விண்ணப்பிச்சேன். அதுக்காக ஆர்வமுமா தயாரானேன்.

    ‘பொம்பளைக்கு எதுக்கு இந்த வேலை?’, ‘என்னது… நின்னுட்டே பைக் ஓட்டப்போறியா?’னு பலரும் என்னைக் கேவலமா பார்த்தாங்க. நான் அதையெல்லாம் பொருட்படுத்தலை. பல்சர் மாதிரியான பைக் என்றால் இன்னும் நிறைய சாகசங்கள் பண்ண முடியும். என்னோட பைக்ல இதெல்லாம் செய்றது கொஞ்சம் கஷ்டம். ஆனாலும், நான் முயற்சியைக் கைவிடலை. என் பையனும் பொண்ணும், ‘உன்னால நிச்சயம் முடியும்மா’ன்னு, எனக்காக அதிகாலை மூணு மணிக்கெல்லாம் அலாரம் வெச்சுடுவாங்க. நான் எழுந்து பைக் ஓட்டிப்பழகுவேன். அந்தப் பயிற்சி எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்துச்சு. `யுஆர்எல்’ அமைப்பிடம் 500 கிலோமீட்டர் ஓட்டறதா விண்ணப்பிச்சிருந்தேன். அவங்க,

    200 கிலோமீட்டர் போதும்னு சொல்லிட்டாங்க. இப்போ அந்த ரெக்கார்டை முடிச்சாச்சு. என் சாதனையை முறியடிக்க இன்னும் மூணு வருஷமாச்சும் ஆகும்’’ எனக் கூறுகையில் பெருமையும் பரவசமும் விரிகிறது சைபிக்கு.

    ‘`என்ன இருந்தாலும் என் சாகசத்தைப் புரிஞ்சிக்கிற அளவுக்குச் சமூகம் இல்லை. என்னைத் தட்டிக்கொடுக்கக்கூட ஆள் இல்லை. ஆனாலும், என் குழந்தைகள் என்னைப் பாராட்டினாலே போதும்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன். பைக் டிரைவிங் சாதனைக்காக ஓவர் டைம்தான் பார்க்க வேண்டியிருக்கு. சமாளிக்கிறது பெரும்பாடுதான். இருந்தாலும், அட்வான்ஸ்டு டைப் பைக் வாங்கணும், கின்னஸ்ல இடம் பிடிக்கணும்னு ஆசை.

    பைக் மேல நின்னுட்டு ஓட்றது, படுத்துட்டே ஓட்றதுனு இப்போ பல புதிய முயற்சிகளை ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் நிறைய சாகசங்கள், சாதனைகள் பண்ணப்போறேன். வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டுட்டேன். இந்த சாகச வெற்றி, அந்தக் காயங்களையெல்லாம் மறந்துபோகச் செய்யுது. என் பொண்ணுக்கும் ரேஸ் பைக் ஓட்டுறதுதான் லட்சியம். என் பையன், ‘உன்னை மாதிரி ஏதாச்சும் சாதனை பண்ணணும்மா’னு சொல்றான். பணம் இல்லைன்னாலும் வாழ்க்கையில இந்த சந்தோஷம் நிறைய கிடைச்சிருக்கு (நன்றி: விகடன்)

     

    வல்லமையாளர் சைபிக்கு நம் நல்வாழ்த்துகள்

     

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share