க. பாலசுப்பிரமணியன்

அன்பே சிவம்

திருமூலர்-1-3

சில நேரங்களில் நமது மனதில் தோன்றக்கூடிய கேள்வி – அனைத்தையும் துறந்த வாழக்கையை வாழ்ந்தால்தான் இறைவனை அடைய முடியுமா? கோவில்களுக்கோ அல்லது வேறு வழிபாட்டுத் தலங்களுக்கோ சென்றால்தான் இறைவனின் அருள் கிடைக்குமா? பக்தியுடன் இறைவனை பூஜித்தாலோ அல்லது அவனுடைய திருநாமங்களை போற்றிக்கொண்டிருந்தாலோதான் இறைவனின் அருளுக்குப் பாத்திரம் ஆவோமா? கனிகளும் மலர்களும் மற்ற படையல்களும் இறைவனுக்குப் படைத்தால் தான் இறைவனின் அருளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியுமா? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்த வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் இந்த அருள் பெறுவதற்கு வேறு ஏதாவது வழிகள் உள்ளனவா?

சபரி கொடுத்த எச்சில் பழத்தையும் அன்புடன் ஏற்று அருளிய இராமன், ஒரு பிடி அவல் கொண்டுவந்த நண்பனின் கால்களைக் கூட பிடித்துவிட்ட கண்ணன், பிட்டுக்கு மண்சுமந்த பரமேஸ்வரன், குருதிவழியும் கண்களைக் காலால் முட்டுக்கொடுத்துக்கொண்டு தன் கண்களையே தானமாகக் கொடுத்த வேடன் கண்ணப்பனுக்கு அருளிய ஈசன் இவர்களுக்கெல்லாம் அருளவில்லையா?

பட்டினத்தார் பாடுகின்றார்

கல்லா லெரியுண்டுங் காலா லுதையுண்டுங் காளைகையில்

வில்லா லடியுண்டு முன்னாள் விடமுண்டு மேலிளித்துப்

புல்லாற்  புறமெரி யேகம்ப வாணர் பதாம்புயத்தின்

சொல்லார் செவியினிற் கேளா திருந்ததென் றொல்வினையை

“மக்கள் சேவையை மகேசன் சேவை” என்று எத்தனை தவ முனிவர்கள் எடுத்துரைத்திருக்கின்றார்கள்.” ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது பக்தியின் இன்னொரு வடிவமில்லையா? – என்றெல்லாம் கேள்விகள் நம் மனத்தினில எழத்தான் செய்கின்றன.

ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது. இறைவனிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு பக்தனின் வேண்டுதலுக்கு  இணங்கி இறைவன் அவருடைய வீட்டுக்கு உணவு அருந்துவதற்கு வருவதாக உறுதி  அளிக்கின்றான். பக்தனோ மேளதாளங்கள் முழங்க ஒரு பெரிய விருந்துக்கே ஏற்பாடு செய்கின்றான். பின்பு தன் வீட்டு வாசலில் இறைவனின் வருகைக்காகக் காத்திருக்கின்றான். ஆனால் இறைவன் வருவதாயில்லை. அங்கே ஒரு நாய் வாலைக்குழைத்துக்கொண்டு வந்து நிற்கின்றது. பக்தனோ அந்த நாயை விரட்டுகின்றான். மீண்டும் மீண்டும் அந்த நாய் அந்த இடத்தையே சுற்றி வருகின்றது. பொறுமையிழந்த பக்தன் ஒரு தடியால் அந்த நாயை மிரட்டி விரட்டுகின்றான். இறைவன் அங்கே வரவில்லை. இரவில் மனம் நொந்த பக்தன் இறைவனைச் சாடுகின்றான். கொடுத்த வாக்குப்படி நீ வரவில்லையேயென்று. இறைவன் சிரித்துக் கொண்டே கூறுகின்றான்.” நான் வந்திருந்தேன் உனக்குத் தான் தெரியவில்லை .. நான் நாயின் வடிவில் வந்திருந்தேன். நீயோ வேறெங்கேயோ தேடிக்கொண்டிருந்தாய் ” என்கிறார்.

உலகின் எல்லா உயிரினங்களிலும் இறைவனின் ஆட்சி உள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனின் இந்தத் திருவிளையாடல்களை உணர்ந்தவராகிக் கூறுகின்றார் ” பலவுருவுந் தன்னுருவே யாய பெருமான்”

.”காக்கை குருவி எங்கள் சாதி ..” என்று.பாடிய பாரதியின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன. அன்பின் வடிவமாக ஆட்சி செய்யும் ஈசன் அன்பிலே சிவமாக அவதரிக்கின்றான். இதை உணர்ந்து எல்லா  உயிரினங்களிடமும் நிபந்தனையில்லாத, எதிர்பார்ப்புக்கள் இல்லாத அன்பு செலுத்தும் பொழுது இறைவனின் அருளாட்சியை நம்மால் உணர முடிகின்றது.

திருமூலர் கூறுகின்றார்

அன்பினுள் ளான்புறத் தானுட ளாயுள்ளான்

முன்பினுள் வான்முனி வர்க்கும் பிரானவன்

அன்பினுள் ளாகிஅமரும் அரும்பொருள்

அன்பினுள் வார்க்கே அணைதுணை யாமே

எனவே எல்லா உயிரினங்களையும் இறைவனின் ஆட்சிக்குச் சான்றாகக் கருதி அனைத்தின்பாலும் அன்பெனும் அறத்தை கைப்பிடித்தால் அதுவே இறைவனை தரிசிப்பதற்கு இறைவனோடு இறவாடுவதற்கும் ஒரு வழியாக அமையும். “அன்பின் வழியது உயிர்நிலை” என்று வள்ளுவம் கூறியதை நினைவில் கொள்ளுதல் அவசியம். மாணிக்க வாசகரோ “அன்பில் விளைந்த ஆர் அமுதே” என்று இறைவனைப் போற்றி வணங்குகின்றார்

உலக மக்களுக்கு அன்பின் வலிமையை எடுத்துரைக்க கபீர்தாஸ் கூறுகின்றார் “மூட்டை மூட்டையை நூல்களை படித்தும் பேரறிஞரானவர் எவருமில்லை அன்பு என்னும் இரண்டரை அட்சரங்களை படித்தவனைப் போல் அறிஞரைக் கண்டதில்லை “

“அன்பே சிவம்” என்ற அறிய கருத்தினை நம் முன் வைக்கும் திருமூலர் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.

அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

(தொடருவோம் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *