Blog

  • நவராத்திரி – 04

    இசைக்கவி ரமணன்

     

    IMG-20170921-WA0042

     

    பாதையாய்த் தோன்றிப் பயணமாய் நீள்கிறாள்

    பக்கத் துணையாய்ப் பரிந்து வருகிறாள்

    ஆதரவில் அன்னையாய், கண்டிப்பில் தந்தையாய்

    அக்குவே றாணிவேறாய் அத்தனையும் ஆய்கிறாள்

    காதலே தேகமாய்க் கட்டழகாய், நெஞ்சின்

    கவனத்தை ஈர்த்துக் கரத்தில் முகர்கிறாள்

    சோதனை செய்து புடம்போட்டுக் காய்ச்சுவாள்

    சுவடு துளியுமின்றிச் சுத்தமாய் நீக்கிடுவாள்

     

    நெற்றித் திரையிலோ நெஞ்சிலோ நேர்வருவாள்

    நேரத்தைக் காலத்துள் நேரே மறைத்திடுவாள்

    சற்றும் அசையாமல் சாயாமல் பார்த்திடுவாள்

    சாரத்தைக் காட்டிச் சலனத்தைச் சாந்திசெய்து

    உற்றுற் றவள்விழி ஊடுருவும் போதில்

    உயிர்போகும்; போனவுயிர் உள்நுழையும்; வந்தவுயிர்

    பெற்ற அனுபவத்தைப் பேணமுடி யாமல்

    பெயர்க்க முயன்று பிழைபோல் விழுகையிலே

    வெற்றிச்சங் கூதிடுவாள்! வெள்ளித்தண் டைகிலுங்க

    வேதவடி வாளன்று வீதியிலே தென்படுவாள்

     

    என்னவித மெல்லாம் எனக்கருள் செய்கின்றாள்!

    ஏழைக் குடிலை எழில்ராணி ஆள்கின்றாள்

    மின்னல் களையோலைக் கீற்றாய்ப் புனைகின்றாள்

    வீழும் நிலவொளியில் விந்தை வனைகின்றாள்

    அன்னை எனைமுழுதாய் ஆட்கொண்டாள்; அந்தரங்க

    அம்பலத்தில் தேவியென ஆழ அமர்ந்துகொண்டாள்

    சொன்ன விதம்கொஞ்சம்; சொல்லாத தேமிஞ்சும்

    நம்புவ தொன்றே நலம்!

     

    Share
  • பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்..!

    பெருவை பார்த்தசாரதி

     

    rainy

     

     

     

     

     

     

     

     

     

    நஞ்சுக்கொடி மூலம்தான் பிள்ளையும் தாயுமோர்..

    ……….நல்லுறவுக்கு மேன்மையாய் உலகுக் குதாரணமாம்.!

    அஞ்சு விரலாலவள் தானீன்றமகவை அனுதினமும்..

    ……….ஆரத்தழுவி முத்தம் கொடுக்கும் அன்புத்தாயாம்.!

    விஞ்சி நிற்குமன்பைதன் பிஞ்சுமனங்களில் தேக்கி..

    ……….வெள்ளை மனதுடன் வெளிப்படுத்துவாள் அன்னை.!

    பிஞ்சுக்குழவிக்கு கொஞ்சி அமுதூட்ட!…அழைப்பாள்..

    ……….ஓடும்பிறை நிலவையும்! தூவும்செல்ல மழையையும்.!

     

    துஞ்சும் குழவியழகைத் தன்கருப்பையுள் உணர்ந்து..

    ……….தாலாட்டுப் பாடுபவள்தான் தாயெனும் தெய்வமாம்.!

    மிஞ்சுகின்ற துன்பமும் கவலையுமவள் மனதில்..

    ……….மறைந்தோடும்…நொடியில் தன்மகவை ஈன்றவுடன்.!

    அஞ்சும் குழந்தையை அரவணைக்க அவளழைத்தால்..

    ……….ஆவலோடு ஆவின் கன்றுபோலத் தவழ்ந்தோடிவரும்.!

    பிஞ்சுமனங்கள் பெரிதே மகிழ்ச்சியுற!..வான்முகிலும்..

    ……….பிறைநிலவும் மழைத்துளியும் அழையாமலே வருமாம்.!

     

    அழுமுன்னே குழந்தையின் தேவையெது வெனவறிந்து

    ……….அமுதூட்டும் செய்கையால் அவனியிலோங்கி நிற்பாள்.!

    தழுதழுக்கு மன்பைதன் தொண்டையுள் அடக்கும்..

    ……….தாய்காட்டும் அன்பைவிட மேலாகும் அன்பிலையாம்.!

    முழுநிலவை வான்மேகம் மறைக்கும் செயலைப்போல்..

    ……….முடங்காத அன்பைதன் முகத்திலே மறைத்திருப்பாள்.!

    வழுவாதிருக்கும் இப்பண்பினால் “அன்னை” என்பாள்..

    ……….வாழுமுலகில் தனக்கீடா யவருமிலாது சிறந்திருப்பாள்.!

    ========================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::18-09-17

    நன்றி:: கூகிள் இமேஜ்.

    Share
  • நவராத்திரி நாயகியர் (4)

    க. பாலசுப்பிரமணியன்

     

    மகாலட்சுமி

    goddess-lakshmi

    மலர்மேல் அமர்ந்தவளே மனமெல்லாம் நிறைந்தவளே

    புலர்கின்ற பொழுதெல்லாம் புதிதாகப் பிறப்பவளே

    கொடுக்கின்ற கைகளுக்கு குறைவின்றித் தருபவளே

    நிறைவான மனதினிலே நிலையாக நிற்பவளே !

     

    மண்ணோடு மழையும் மாசற்ற காற்றும்

    மதிகொண்ட கலையும் மலைக்காத மனமும்

    பண்ணோடு இசையும் பாரெல்லாம் பயிரும்

    பகிர்ந்திடும் மனமும் பரிவுடன் தந்தாயே !

     

    அறிவும் செல்வமே உறவும் செல்வமே

    அன்புடை நட்பும் அழிவிலாச் செல்வமே

    அயராத உழைப்பும் அயர்ந்த உறக்கமும்

    அளவான பசியும் அளவில்லாச் செல்வமே !

     

    பொன்னுக்கும் புழுதிக்கும் பொதுவான பொருளாகி

    பூவாகப் பொழிலாகப் புவியெல்லாம் ஒளிர்வாயே !

    இசைதழுவும் இமைதன்னில் துகிலாகித் துளிர்பவளே

    அசைகின்ற உலகெல்லாம் அரசாளும் அன்னலட்சுமியே !

     

    ஒருகாசு இடைவைத்து உழைப்பில் உளம்வைத்தோர்

    திருநாளை உரமாக்கித் திருவெல்லாம்  தருபவளே !

    முன்னைக்கும் பின்னைக்கும் உயிரூட்டும் நிகழ்வினையே !

    முதிர்கின்ற மூப்பினிலே முன்காலத்தின் முகவுரையே !

     

    முத்தொடு பவளங்கள் முடிவில்லா இரத்தினங்கள்

    முப்புரத்தின் செல்வங்கள் முழுதாகக் கொடுத்தாலும்

    முளைக்கின்ற ஆசையில் முடிவின்றி வாடும்

    மூடர்கள் துயர்நீக்கி முக்தியினைத் தருவாயே !

     

    Share
  • வேறொரு வனிதை!

    jaya

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++

    வேறொரு வனிதை எனக்கு! இப்போது
    வேறொரு வனிதை!
    உனைத் தவிர வேறொருத்தி
    எனக்கில்லையென
    நானுரைக் கும்படிச் செய்தவள் நீ!
    ஆனால் மெய்யாக
    இன்று முதல்
    நானொரு புது நங்கை நாடுகிறேன்!
    முட்டாள் இல்லை நான்;
    இட்ட மில்லா தவளை நானென்றும்
    ஏற்றுக் கொள்வ தில்லை!
    வேறொரு வனிதை எனக்கு! இப்போது
    வேறொரு வனிதை!

    நான் சந்தித்த நாரீ மணிகள் சிலர்!
    எல்லாப் பெண்களை விடவும், மிக்க
    இனியவள் அவள்!
    இவ்வுலகில் எவளும் செய்ய
    இயலாததைச் செய்து காட்டினாள்!

    நானுரைப்பேன்!
    இன்று முதல் நிறுத்திக் கொள் நீ
    என்முன் வருவதை!
    ஏனெனில் எனக்கி ருக்கிறாள்
    வேறொருத்தி; இப்போது
    வேறொருத்தி!
    மரிக்கும் வரை எனை நேசிக்கும்
    வனிதை அவள்!
    இன்ப துன்பங்களில் எப்போதும்
    என்னுடனே இருப்பவள்!

    உன்னுடன் மகிழ்வாய் வாழ வில்லை
    என்று நான் கூற வில்லை!
    ஆனால் இன்று முதல்
    நானொரு புதிய நங்கையை
    நாடி விட்டேன்!
    இறுதி வரை எனை நேசிக்கும்
    ஒரு பெண்ணை!

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (249)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். அடுத்தொரு மடலில் உங்களுடன் உரையாடுவதில் மனமகிழ்வடைகிறேன். சமீபத்தில் அமேரிக்காவில் ஒரு நகரத்தில் மக்களுக்கிடையிலான இனத்துவேஷம் பயங்கர உருவெடுத்தது. விளைவாக நிறவேற்றுமைக்கெதிராகக் குரல் கொடுக்கும் ஓர் இள அமெரிக்க நங்கை இனத்துவேஷி ஒருவரால் காரினால் அடித்துக் கொல்லப்பட்டார். இது நடந்தது திரு. டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் அதிபராயிருக்கும் அமேரிக்க நாட்டில் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். இதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்று பார்ப்போமா?

    அந்த நகரில் அமெரிக்க வரலாற்றில் முக்கியமாகக் கருதப்படும் சரித்திரப் பிரசித்தி பெற்ற இராணுவத் தளபதி ஒருவரின் சிலை பலவருடங்களாக வைக்கப்பட்டிருந்தது. அவ்வமேரிக்கத் தளபதியின் காலத்தில் அடிமை முறை நடைமுறையிலிருந்தது. அந்நடைமுறைகளுக்கமைய அத்தளபதியும் பல ஆப்பிரிக்க அடிமைகளைக் கொண்டிருந்தார். ஆனால் இன்றைய அந்நகரத்தில் பல கறுப்பு இனத்தவர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இப்போது அச்சிலை அகற்றப்பட வேண்டும், அச்சிலை இருப்பதால் அது தமது மனதை சஞ்சலத்துக்குள்ளாக்கிறது எனும் கோஷத்தை அந்நகர கறுப்பு இனத்தவர் முன்வைத்தார்கள். அது எப்படி முடியும் ? அது எமது சரித்திர முக்கியம் வாய்ந்ததொரு சிலை அதை அகற்றுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நகரப் பழமைப் பெருமைகளை மதிக்கும் வெள்ளை இனத்தவர் கோஷமிட்டார்கள். எங்காவது ஓரிடத்தில் இனங்களுக்கிடையில் சிறிய பேதமேற்படாதா? அங்கு தாம் புகுந்து ஓர் அரசியல் குழப்பநிலையை உருவாக்கலாம் என்று காத்திருந்த அதிதீவிர இனத்துவேஷிகளை உள்ளடக்கிய தீவிரவாத அமைப்பு அந்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள். விளைவாக அங்குள்ள வெள்ளை இனத்தவர்களின் உணர்வுகளை ஒன்று திரட்டி ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்துக்கு எதிராக இனத்துவேஷத்தை எதிர்க்கும் அந்நகர மக்கள் தாமும் ஓர் எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள். அவ்வூர்வலத்தில் தான் ஒரு இனத்துவேஷி அணியின் மீது தனது மோட்டார் வாகனத்தை மோதியதில் ஓர் இளநங்கை உயிரிழந்தாள்.

    அதே பாணியில் இங்கிலாந்தில் சில சிலைகளை அகற்ற வேண்டுமென சில பகுதிகளில் இருந்து கிளம்பியுள்ளது. இது இங்கிலாந்தில் ஊடகங்களில் பல விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது. இங்கேதான் பல முக்கியமான வினாக்கள் எழுப்பப் படுகின்றன. மனித வாழ்க்கை பலவிதமான மாற்றங்களுக்குள்ளாகின்றது. ஆதி மனிதனுக்கும், இன்றைய மனிதனுக்கும் இடையில் காணப்படும் வித்தியாசங்கள் எண்ண முடியாத அளவுக்கு இருக்கின்றன. அன்றைய நிலையில் இருந்து இன்றைய நிலைக்கு மனிதன் மாற்றம் அடையும்போது அவனுடைய வாழ்க்கை முறைகளும் பலவிதமான மாற்றங்களுக்குள்ளாகி வந்துள்ளது. இவ்வாழ்க்கைமுறைகளில் சில இன்றைய உலகுக்கு ஏற்றுக் கொள்ளப்படக்கூடியனவாகவும், வேறுசில ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகவும் இருக்கின்றன. ஆனால் நடந்தவைகள் சரித்திர உண்மைகளே! அவைகளின் மாறுபடாத, திரிபடையாத பதிவுகள்தாம் மனிதனின் வாழ்க்கைச் சரித்திரம் ஆகிறது. எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நடைபெற்ற ஒன்றை நாம் இல்லையேன்று கூறிவிடமுடியாது. அப்படிக் கூறிவிடுவதால் மட்டும் அவை இல்லாமல் போய்விடாது.

    அதில் ஒரு பகுதிதான் மனிதனை மனிதன் அடிமைகொள்ளும் நிகழ்வும். ஒரு காலத்தில் அடிமைகளைக் கொண்டிருந்த தலைவர்கள் தான் பின்பு அடிமைத்தளையை உடைத்தெறிந்தவர்களாகவும் இருந்தார்கள் என்பதும் உண்மையே! அதில் ஓர் அங்கமாகத்தான் சில இடங்களில் சிலர் சரித்திர அடையாளங்களாக நிலைநிறுத்தப்படுகிறார்கள்.அப்படி நிறுத்தப்படுபவர்கள் சிலைகளின் சரித்திரத்தில் சில கறுப்பு நிகழ்வுகள் இருந்தால் அச்சிலைகளை பார்ப்பதன் மூலம் அத்தகைய நிகழ்வுகளை இனி உலகில் நடந்தேற அனுமதிக்கக்கூடாது எனும் உறுதி மனதில் ஏற்படவேண்டும். வெறுமையாக அச்சிலையை அகற்றி விடுவதால் மட்டும் சரித்திரத்தை மாற்றியமைத்து விட முடியாது.

    சரித்திர உண்மைகள் சரித்திர உண்மைகளே! ஆனால் அவற்றின்மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் மட்டும் முன்னேற்றப்பாதையில் உலகில் அமைதியையும்,சமாதானத்தையும் முன்னிலைப்படுத்துபவையாக இருக்க வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • SHODASA MAHALAKSHMI POOJA 22.09.2017

    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 26 வகயான புஷ்பங்களை கொண்டு ஷோடச மஹாலக்ஷ்மி பூஜை

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நவராத்ரியை முன்னிட்டு வருகிற வெள்ளிக்கிழமை 22.09.2017 காலை 8.00 மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் சன்னதி முன்பு உலக மக்கள் மஹாலக்ஷ்மியின் அருளுடன் ஐஸ்வர்யம், ஆனந்தம், ஆரோக்யம் பெற கீழ்கண்ட 26 வகையான புஷ்பங்களுடன் ஸ்ரீ ஷோடச மஹாலக்ஷ்மி பூஜை நடைபெறவுள்ளது.

    1. அல்லிப்பூ – செல்வம் பெருகும்

    2. பூவரசம்பூ – உடல் நலம் பெருகும்

    3. வாடமல்லி – மரணபயம் நீங்கும்

    4. மல்லிகை – குடும்ப அமைதி

    5. காசாம்பூ – நன்மைகள்

    6. அரளிப்பூ – கடன்கள் நீங்கும்

    7. அலரிப்பூ – இன்பமான வாழ்க்கை

    8. ஆவாரம் பூ – நினைவாற்றல் பெருகும்

    9. கொடிரோஜா – குடும்ப ஒற்றுமை

    10. ரோஜா பூ – நினைத்தது நடக்கும்

    11. மருக்கொழுந்து – குலதெய்வம் அருள்

    12. சம்பங்கி – இடமாற்றம் கிடைக்கும்

    13. செம்பருத்தி பூ – நோயற்ற வாழ்வு

    14. நந்தியாவட்டை – குழந்தை குறை நீங்கும்

    15. சங்குப்பூ – தரித்ரம் நீங்க

    16. மனோரஞ்சிதம் – குடும்ப ஒற்றுமை, தேவ ஆகர்¬ணம்

    17. தாமரைப்பூ – செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சி பெறும்

    18. நாகலிங்கப்பூ – லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்

    19. முல்லை பூ – தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்

    20. நித்திய கல்யாணி பூ *முன்னேற்றம் பெருகும்

    21. பவளமல்லி – தைவீக அருள் பெற

    22. மரிக்கொழுந்து – செல்வம் பெற

    23. வில்வம் – மஹாலக்ஷ்மி அரிள் பெற

    24. துளசி – நோய்கள் அகல

    25. தாழம்பூ – அம்பாள் அருள் பெற

    26. அருகம்புல் – வினைகள் அகல.

    இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
    மேலும் தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
    கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
    வாலாஜாபேட்டை-632513
    தொலைபேசி : 04172-230033 / 09443330203
    www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in
    Email : danvantripeedam@gmail.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கல்லில் கலைநயம் சொல்லில் பொருள்மயம்
    துள்ளும் அபிநயம் தோற்றம் -உள்ளும்
    புறமும் உலவிப் பெருகும் பலவாம்
    இறைவன் அறிவே இவள்….

    ”த்யான த்யாத்ரு த்யேய ரூபி”
    —————————————–

    170921 Mahalaya 03-Maa Brahmacharini -watercolour -papyrus- lr

    எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
    எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
    தின்னும் பசியவள் தீராத தாகமவள்
    உண்ணா முலையவளை உண்….!

    இறையவள், நான்கு மறையவள், நாதர்க்(கு)
    அரையவள், தீவளிவான் அப்பு -தரையவள்
    பக்தித் துறையவள் முக்தி அறையவள்
    சக்தியுறை பாதம் சரண்….!

    முதிர்ந்த தவத்தோர் மரத்தில் இருந்து
    உதிர்ந்த சருகுகளை உண்பர்: -புதிரிவளோ,
    உண்ணா மலையாய், உறுதியுடன் நின்றடைந்தாள்
    பின்நாள் அபர்ணா பெயர்….!

    வெண்பா அல்ல வேறு….!
    ——————————————–
    கொள்பவள் கற்பகம், வெல்பவள் காளி, கவிபுனையச்
    சொல்பவள் பாரதி, செல்வமகள் லஷ்மி, சேர்த்தணைத்து
    செல்கையில் தாயார், சினந்திட தோப்பனார், நேசமதை
    நல்கிட நண்பன் நலம்தரு தோழியின் நானிலத்தே (OR)தோழி எனஅவளே….கிரேசி மோகன்….!

    அம்பாள் பஞ்சகம்
    (க்ரேஸி மோகன்)
    —————————————————————————————————————————

    மதியது கொண்டவனின் – மரகத
    மங்கைக்கடியவன் முன்
    விதியது வீழ்ந்திடுமே ! – வெவ்விய
    வினையது சாய்ந்திடுமே !
    கதிர் முன் பனி போலே – கவலைகள்
    கரைந்து போகுது பார் !
    எதிர் வரும் துன்பெமெலாம் -என்னிடம்
    என்னிடம் ஏவல் செய்யுது பார்! (1)

    கருமயிலே, பரமன் -கபாலி
    கணவருடன் அழகாய்த்
    திருமயிலாப் புரியில் -திகழும்
    தேவி பராசக்தீ !
    ஒரு பொழுதும் மறவேன் -உமையே
    ஓமெனும் மந்திரமாய்
    உறைபவளே வருவாய் -உலகில்
    உழலுமெனக் கருள்வாய் (2)
    அம்மா என்றுனையே -அடியேன்
    ஆசை மனம் கொண்டு
    இம்மா புவியினிலே -இயம்ப
    இமயக் கரு முகிலே
    சும்மா நிற்பதுவும் -சரியோ
    சொல்வாய் சிவ சக்தீ !
    பெம்மான் சொக்கருடன் -பிடியே
    பிள்ளை என் முன் வருவாய் ! (3)

    பச்சை நிறத்தவளே -பதியின்
    பாகம் கொண்டவளே
    அச்சை ஒடித்திடுமோர் -அழகன்
    ஆனை முகன் தாயே !
    மெச்சத் தகும் ஊராம் -மயிலை
    மாது மஹா காளி !
    பிச்சை அளித்திடுவாய் -பரமே
    பக்குவ மனமதனை ! (4)

    வள்ளிக் குறுதுணையாய் -வேலன்
    வளர்ந்த தொரு மலையாம்
    வெள்ளிப் பனி மலையில் -வாழும்
    வேந்தற் குரியவளே !
    உள்ளக் கோவிலதில் -உனை நான்
    உறங்க வைத்திடுவேன்
    தெள்ளத் தமிழ முதால் -தாயுனைத்
    தாலாட் டிடுவேனே ! (5)

    *********************************************************************

    Share
  • “வல்லமை தாராயோ” – மாணவர் மாணவியர் கவிதைப் போட்டி

    பவள சங்கரி

    IMG-20170921-WA0034

    சென்ற வாரம் 11.09.2017 – திங்கள் கிழமையன்று மாலை பாரதி நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீராம் ஸ்போர்ட்ஸ் அகாடமி, நம் வல்லமை இணைய இதழ், லீட் மனிதவள மேம்பாட்டு பயிலரங்கு இணைந்து நடத்திய பாரதி விழா சிறப்பாக நடந்தது. நம் வல்லமை சார்பில் “வல்லமை தாராயோ” என்ற தலைப்பில் மாணவர் மாணவியர் கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு பரிசாக நூல்கள் வழங்கப்பட்டன. இந்த சிறப்பான நிகழ்ச்சி மிகச்சிறந்த கவிஞரும், இலக்கியவாதியுமான ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார் அவர்கள் தலைமையில் , திரு சிவநேசன் (ராம்கே எலக்ட்ரிகல்ஸ்) திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் சிறப்புரையுடன், ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு சிவானந்தம், குடி நீக்கு மருத்துவ மையம், மருத்துவர் ஜீவானந்தம் , கவிஞர் இடக்கரத்தான், முனைவர் ரமேஷ், கவிஞர் சேலம் பாலன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது.

    Share
  • எம்.ஜி.சுரேஷின் இரு நாவல்களை முன் வைத்து…….

     முனைவர். ஜ.பிரேமலதா, 

    தமிழ்  இணைப் பேராசிரியர், 

    அரசு கலைக் கல்லூரி,

     சேலம் -636 007

    எம்.ஜி.சுரேஷின் இரு நாவல்களை முன் வைத்து…….

    (அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும், சிலந்தி)

    தமிழ் நாவலாசிரியர்களில் மேலை நாட்டு கொள்கைகளின் தாக்கத்தின் அடிப்படையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்களில் தமிழவன், சாருநிவேதிதா, ஜெயமோகன், எம்.ஜி.சுரேஷ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் பின்நவீனத்துவத்தை உள்வாங்கிக் கொண்டு அதை படைப்புகளில் வெளிப்படுத்துபவர் எம்.ஜி.சுரேஷ். இவர் தன்னுடைய நாவல்களே தமிழின் முதல் பின்நவீனத்துவ நாவல்கள் என்று இணையதளத்தில் பேட்டி கொடுத்துள்ளார். பின்நவீனத்துவம் பற்றியும் அவை அவருடைய நாவல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள முறைகள் பற்றியும் அவருடைய அலெக்சாண்டரும் தேநீரும், சிலந்தி என்ற இரு நாவல்களில் மட்டுமே இக்கட்டுரை ஆராய்கிறது.

    இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கான கருவியாக விளங்குகின்றன. தற்கால தொழில்நுட்பம் மிகுந்த சூழலின் நவீனத்தன்மைக்கேற்ப படைப்பிலக்கியங்களிலும் நவீனத்துவமும், அதிலும் மேம்பட்ட பின்நவீனத்துவமும் தேவைப்படுகின்றன. நவீனத்துவம் என்பது மரபிலிருந்து விடுவித்துக் கொள்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. இது பன்முகம், நடப்பியல், மிகை நடப்பியல், இருத்தலியல் என்ற பல கொள்கைகளை வளர்த்தெடுத்தது. அதிலிருந்து பிறந்த அதனினும் மேம்பட்ட பின்நவீனத்துவம் தற்கால உலகில் பேசப்படுகிற பொருளாக வளர்ந்துவிட்ட சூழலில் அதன் கொள்கைகளாகத் தலித்தியம், பெண்ணியம் போன்ற  கொள்கைகள் உருவாயின. நாவல்களில் பின் நவீனத்துவத்தின் தேவை குறித்து “”””வாழ்க்கை முழுமைகளில் இல்லை. பின்னங்களின் தென்பட்ட வாழ்வு பிறகு அப்படியும் இல்லை என்றாகிவிடும் நிலைமை வாழ்க்கையில் எல்லாமே குழம்பிவிட்டது. வாழ்வின் பல்வேறு பரிமாணங்கள் தாறுமாறாகிக் கிடக்கின்றன. உறவுகள் எல்லாம் சிக்கலாகிவிட்டன. எதிலும் நிச்சயமில்லை. எதுவும் நேரலாம் பற்றிக் கொள்வதற்கான எதார்த்தம் என ஒன்றுமில்லை. நிரந்தரம் என்று எதுவுமில்லை. இந்தச் சூழலில்தான் பின் நவீனத்துவம் பேசப்படுகிறது (ப.81-82) என்று சிவ மங்கையர்க்கரசி இலக்கிய இயக்கங்கள் நூலில் குறிப்பிடுகிறார்.

    பின்நவீனத்துவம் இலக்கியத்திற்கு என வரையறுக்கப்பட்ட எல்லாவிதமான எல்லைகளையும் மீறுவதையும், பல வடிவச் சோதனைகளில் ஈடுபடுவதையும், உலகில் தோற்றுவிக்கப்பட்ட பல கருத்துக்களின் போதாமையையும், மையத்தை மறுத்து அனைத்தையும் பரவலாக்குவதையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது.

    இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள ஒவ்வொன்றிற்குமான முக்கியத்துவத்தை உணர்ந்து எதையும் பொதுமைப்படுத்த முயலாமல், அதனதன் இயல்பிலேயே இருக்க மனித மனம் விட்டுவிடவேண்டும் என்கிறது. இக்கருத்தியல் தளத்தில் எம்ஜி.சுரேஷின் இருநாவல்களும் இயங்குகின்றன. சிலந்தி நாவல் மனநலக் காப்பகத்திலுள்ள பைத்தியங்களைப் பற்றிப் பேசுகிறது. அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீர் மன நலக்காப்பகத்திற்கு வெளியே தங்களை வெற்றியாளர்களாகவும், புத்திசாலிகளாகவும் கருதி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் பைத்தியங்களைப் பற்றிப் பேசுகிறது.

     

    வடிவ சோதனை

    அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும், சிலந்தி என்ற இரு நாவல்களிலும் வடிவச் சோதனைகளைச் செய்திருக்கிறார். அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் நாவலில் ஒரு கதையல்ல பல கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத கதைகளைப் பல பரிமாணத்தில் காலங்களை மாற்றி, களங்களை மாற்றி, பாத்திரங்களை மாற்றிச் சொல்லிச் செல்கிறார். நேர்க்கோட்டிலும் முன்னும் பின்னும், குறுக்கும் நெடுக்குமாக கதைகள் நகர்கின்றன. இதில் அத்தியாயங்களும், பாகங்களும் இடம்பெறவில்லை. தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம் என்ற பாகுபாடுகளும் இல்லை. நாவலின் நடுப்பக்கத்தில் கதை இரண்டாக ஒரே பக்கத்தில் பிரிக்கப்படுகிறது. மேல்பகுதியில் ஒரு காலத்திற்கான கதையும், கீழ்ப்பக்கத்தில் வேறொரு காலத்திற்கான கதையும் சொல்லப்படுகின்றன. நான்கு வகையான அலெக்சாண்டர்களின் வாழ்க்கையின் வழி கதை நகர்கிறது.

    சிலந்தி நாவலில் வாசகர் ஆணாக இருப்பின், ஒரு போக்கிலும், பெண்ணாக இருப்பின் மற்றொரு போக்கிலும் கதை புரிந்துகொள்ளப்படுகிறது. பொதுவாக வாசகன் நாவல்களில் பங்கு பெறுவதில்லை. ஆனால் இந்நாவலில் வாசகன் தான் துப்பறிவாளன். நடந்த கொலைகளையும், நடக்கும் கொலைகளையும், இனி நடக்கப்போகும் கொலைகளையும் வாசகன் தான் பொறுப்பேற்று குற்றவாளி யார் எனக் கண்டறிய வேண்டும். இதில் கொலையாளிகள் என்று தன்னைக் கூறிக் கொள்பவர்கள் அனைவரும் மன நோயாளிகள் என்பதால் வாசகன் முழு விழிப்புணர்வோடு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூர்ந்து கவனிக்கும் வகையில் கதை அமைந்துள்ளது. இந்நாவலிலும் பல கதைகள் இடம்பெற்றுள்ளன. வாசகனும் நாவலில் பங்கு பெறும் வகையில் பின் நவீனத்துவப் போக்கை எம்.ஜி.சுரேஷ் கடைப்பிடித்துள்ளார். இந்நாவலிலும் 274ம் பக்கம் முதல் 307ம் பக்கம் வரை கதையை இரு கூறாகப் பிரித்து ஆண்வாசகர் எனில் ஒரு மாதிரியான கதைப்போக்கும், பெண் வாசகர் எனில் மற்றொரு வகையான கதைப்போக்கும் என்ற முறையில் இடமும் வலமுமாகக் கதை நகர்கிறது. பொதுவாக நாவல் ஒரு முடிவைத்தான் கொண்டிருக்கும் இந்நாவல் ஆண் வாசகருக்கு வேறு முடிவையும், பெண் வாசகருக்கு வேறொரு முடிவையும் தருகிறது. ஏழு நாள்கள் ஏழு நிகழ்ச்சிகள் பல குறுக்கீடுகள், கட்டட அமைப்பிற்கான வரைபடங்கள் என நாவல் பின்நவீனத்துவப்பாணிக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது.

    தளங்கள்

    அலக்சாண்டரும் ஒருகோப்பைத் தேநீரும் என்ற நாவலில் எதிர்கால மனிதர்களைச் சந்திக்கும் மகாஅலெக்சாண்டர் எல்லா உலகங்களுக்கும் போய் வருகிற சாத்தியம் இருப்பதை அறியும்பொழுது, ‘அந்த அந்தக் காலங்களுக்குப் போய் எல்லா உலகங்களையும் ஜெயிக்கவேண்டும்’ என்ற உந்துதல் ஏற்படுவதாகக் கூறுகிறான் (ப.378). இந்த மோசமான உந்துதல் தான் மனித குலத்துக்கு எதிராகத் திரும்பியிருப்பதாகவும், யாரோ ஒருவனின் உந்துதலினால் ஒட்டு மொத்த உலகமே பாதிக்கப்படுவது எவ்வகையிலும் நியாயம் என்று எம்.ஜி.சுரேஷ் மற்றொரு அலக்ஸின் வழியாகக் கேள்வி கேட்கிறார். இந்த மோசமான உந்துதல்தான் மனிதனைச் சாதி, மதம், சமயம், அரசியல், பொருளாதாரம் எனப் பல பிரிவாகப் பிரித்தாள்கிறது என்பதை இவ்விரு நாவல்களும் பல்வேறு கோணங்களிலிருந்து எடுத்துரைக்கின்றன. எனவேதான் இவருடைய நாவல்கள் தமிழகச் சூழலையோ, இந்தியச் சூழலையோ உள்ளடக்கமாகக் கொள்ளாமல் உலகளாவிய சூழலையே குறிவைக்கின்றன. உலகளாவிய வரலாறு, பொருளியல், ஆதிக்க அரசியல், இனவெறி உலகின் எதிர்கால நிலை, எளிய மக்களின் வாழ்க்கை, நாகரிகம் குறித்தான ஐயம் போன்ற பல்வேறு தளங்களில் இரு நாவல்களும் பயணிக்கின்றன.

    மனிதர்கள் காமம், பணம், வெற்றி, மொழி, இனம், அதிகாரம், திரைப்படம், அறிவியல் போன்றவற்றின் மீது வெறிகொள்ளும்போது, அந்த வெறி உச்சநிலைக்குச் செல்லும்போது உளவியல் சிக்கல்களுக்கு ஆளாவதை இவ்விரு நாவல்களும் பரக்கப் பேசுகின்றன. மனிதர்களின் குரூரமான ஆசையை நோக்கிய பயணம் ஒருபக்கம் தன்னழிவையும், மறுபுறம் உலக அழிவையுமே சந்திக்கும் என்பதை இருநாவல்களும் பல மாந்தர்கள் வழி எடுத்துரைக்கின்றன. மனிதனை இயல்பாக இருக்கவிடாமல், நாகரிகம் என்ற பெயரில் செயற்கையைப் புகுத்தும் சமூகம் மனப்பிறழ்வுடைய மனிதர்களையே உற்பத்தி செய்கின்றது. சமூகத்தில் வாழும் எந்த மனிதனும் சமநிலை மனநிலையோடு வாழ்வதற்குத் தடையாக இருப்பவை ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமுமே என்பதே இருநாவல்களின் அடித்தளம். மன்னர்களின் காலம் முதல் சிலந்தி நாவல் குறிப்பிடும் தற்காலம் வரையிலும் மனிதர்கள் ஆளும் வர்க்கத்தினரின் ஆசைக்கே தம் வாழ்வைத் தொலைத்து வருவதைப் பதிவு செய்கிறார்.

    தொடக்க கால மனிதனை விட தற்கால மனிதன் மிகப்பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளான். அவனுடைய மனநிலைப் பிறழ்விற்கு காரணமான சமூகச் சூழலின் சீரழிவை எடுத்துக்கூறி இன்றைய நவீன மனிதன் தனக்கே எதிரியாகி இருப்பதையும் இதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளையும் எச்சரிக்கும் உணர்வோடே கதையை நகர்த்திச் செல்கிறார். சிலந்தி நாவல் மொழி, அரசியல், திரைப்படம், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட அனைத்து சமூக மதிப்பீடுகளையும் சந்தேகமுற்று ஒவ்வொன்றிற்குள்ளும் ஒழுங்கீனங்களைக் கண்டறிந்துள்ளது. அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீர் மகாஅலெக்சாண்டர் முதல் எதிர்கால அலெக்சாண்டர்கள் வரையுள்ள அனைத்துப் பாத்திரங்களையும் அவற்றின் பலங்களோடும் பலவீனங்களோடும் வெளிப்படுத்துகிறது.

    புதுமை, பழமை, மரபு போன்றவை கேள்விக்கும் கேலிக்கும் ஆளாக்கப்பட்டு மனிதத்தை மட்டுமே இருநாவல்களும் முன்னிறுத்துகின்றன. எல்லா சமூக மதிப்பீடுகளையும் மாற்றுக் கோணத்தில் ஆராய்ந்து அவற்றிற்கான காரணம் மனிதன் இயல்பாக இல்லாமல் இருப்பதுதான் என்ற கருத்தியலை முன் வைக்கின்றன.

     

    கடந்தகால அலெக்ஸாண்டர்

    அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் என்ற நாவலில் தாய் ஒலிம்யாசும் தந்தை பிலிப்பும், ஆசான் சாக்ரடிஸீம், குறிக்கோள் என்ற பெயரில் மகா அலெக்சாண்டரின் மென்மைத்தன்மையே அசுரத்தன்மையாக மடைமாற்றம் செய்கிறார்கள். இதன் விளைவாக இருமை நிலையில் மனப்போராட்டத்திற்கு ஆளாகும் மகா அலெக்சாண்டர் அகச்சீரழிவையும் புறச்சீரழிவையும் சந்திக்கிறான். மனதினால் மேலும் மேலும் கோழையாகிறான். தன் நண்பர்களையும் நலம் விரும்பிகளையும் இழக்கிறான்.

    தாய் ஒலிம்பியாசும் தந்தை பிலிப்பும் கிரேக்க மாவீரன் அகிலஸின் வாரிசாக அவனைப் பார்க்கிறார்கள். ஆசான் அரிஸ்டாட்டிலும் ஓருலகக் கூட்டாட்சி அலெக்சாண்டர் போன்ற மாவீரர்களால் சாத்தியமே என்று நம்புகிறார். இதனால் அன்பும் மென்மையும் கொண்ட மகாஅலெக்சாண்டர் போர் என்ற பெயரில் பல இனமக்களைக் கொன்று குவிக்கிறான். மிகக் கொடூரமான முறையில் வெற்றி பெறுகிறான். மறுபுறம் அவனுடைய மென்மை உணர்வு அவன் நிகழ்த்திய பேரழிவுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

    பாரசீக இளவரசி ருக்ஸானாவைச் சந்திக்கும்பொழுது அவனுடைய அடக்கி வைக்கப்பட்ட மென்மை உணர்வுகள் விழித்துக்கொள்கின்றன. போர்க்குணம் மறைந்து அன்பு மேலோங்குகிறது. அன்பு மேலோங்கிய நிலையில் இதுவரை அவன் நம்பி வந்த பிம்பங்கள் உடையத் தொடங்குகின்றன.

    கிரேக்கர்கள்தான் அறிவாளிகள், பண்பானவர்கள், நாகரிகம் மிகுந்தவர்கள், நிர்வாகிகள் என்ற பிம்பம் உடைந்து அவர்களைவிடப் பாரசீகர்கள் பல வகைகளில் உயர்ந்தவர்களாக இருப்பதை அறிகிறான். அதுவரை கிரேக்கம் பாரசீக மக்களை காட்டு மிராண்டிகள் என்று  கருதி வந்தது பொய் என உணர்கிறான். பாரசீகத்திலேயே நீண்ட நாள் தங்குகிறான். அவர்களுக்கும் தன் அரசாட்சியில் சம பங்கு தருகிறான். போர் வெறி கொண்டலைந்தபோது கிரேக்கர்களைத் தவிர மற்ற அனைத்து இனங்களையும் காட்டுமிராண்டிகள் என நினைத்து அவர்களை இனப்படுகொலை செய்ததை நினைத்து வருந்துகிறான். எந்த இனத்திற்காகப் படுகொலைகள் செய்தானோ அவன் அந்த இனத்தைச் சேர்ந்தவன் இல்லை என்ற உண்மையும் அவனை பலமுறை நிலை குலைய வைக்கிறது.

    தாய் ஒலிம்பியா கிரீஸில் பிறந்தவள். தந்தை பிலிப் மாசிடோனியன். இருநாடுகளும் கிரேக்கத்திலிருந்தாலும் கீரிஸில் பிறந்தவர்களே கிரேக்கர்கள் என தாய் ஒலிம்பியா கூறிக்கொள்கிறாள். அவளிடம் எதிர்த்துப் பேசாமல் தந்தை பிலிப் ‘தானும் ஒரு கிரேக்கனே’ எனத் தனக்குள் சமாதானப்படுத்திக் கொள்கிறான். இதே சிக்கலே மகாஅலெக்சாண்டருக்கும் எழுகிறது. ஒரு அரண்மனை விருந்தில் கிரீஸில் பிறந்தவனிடம் மாசிடோனியனைத் தாழ்ந்தவனாகக் கருதுகிறாயா எனத் தானாகவே கேட்கிறான். அவன் ஆம் என்று சொல்ல அவனைக் கொன்றுவிடுகிறான். அவனுடையே முதல்போரே கிரீஸைத் தாக்கி அம்மக்களை அழித்து அந்நாட்டைக் கைப்பற்றியதுதான். அவனுடைய தாழ்வு மனப்பான்மை எதிர்வினையாற்றி கிரீஸை அடிமைப்படுத்தி மகிழ்கிறது. மறுபுறம் கிரேக்கர்கள், மாவீரர்களைத் தேவ தூதர்களாகக் கருதியதுபோல தன்னையும் கடவுளாகக் கருதவேண்டும் என விரும்புகிறான். கிரேக்க மாவீரனான அகிலஸின் வாரிசாகவே தன்னைக் கருதிக்கொண்டு, அவன் வெல்லாத உலகை தான் வெல்ல வேண்டும் என அகிலஸின் வெற்றிகளை விஞ்ச விரும்புகிறான்.

    இதற்காக உளவியல் ரீதியாக எதிரிகளை நிலைகுலைய வைத்தும், பின்புறமிருந்து தாக்கியும், மூர்க்கமாக முன்னறிவிப்பின்றி மக்களை அழித்தும். கொடூரமான தண்டனைகளைக் கொடுத்தும், அறமற்ற வழியில் நாடுகளைக் கைப்பற்றுகிறான். மக்களை அழித்தொழித்து அவர்கள் பிணங்களின் மீது ஆட்சி செலுத்தும் தன்னை, பாதிக்கப்பட்ட மக்கள் அன்பின் திருவுருவமான கடவுளாக வணங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

    தனிமனிதனோ, அரசனோ தம் இனவரலாறுகளின் மீதான மிகைப் புனைவுகளினால் இயல்பான வாழ்க்கையைத் தொலைத்து மனப்பிறழ்விற்கு ஆளாவதால், எம்.ஜி.சுரேஷ் நாவல் முழுக்க வரலாற்று வாதத்தை கேலிக்குள்ளாக்குகிறார்.

    வட்டாரம் சார்ந்த தனித்தன்மைகள் புறக்கணிக்கப்பட்டு, இனம் சார்ந்த மிகைப் புனைவுகளினால் உலகம் இன்று சந்தித்து வரும் உளவியல் சிக்கல்கள் ஏராளமானவை. எனவேதான் எம்.ஜி.சுரேஷ் உலகப்பொதுமை குறித்து எதிர்காலத் தேவையை நிராகரிக்கிறார். அதைப்போலவே வரலாறு குறித்தான கருத்தியலையும் நிராகரிக்கிறார். வரலாறு சொல்லப்பட்ட கண்ணோட்டத்திலேயே நாம் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை மகாஅலெக்சாண்டரின் வாழ்க்கை வழி விளக்குகிறார். மகாஅலெக்சாண்டர் மாவீரன், அஞ்சாநெஞ்சன், கடவுளாக வழிபடப்பட்டவன் போன்ற அவனைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை உடைத்தெறிகிறார். இசைக் கலைஞனான அலெக்சாண்டர் மன்னர் மரபில் பிறந்ததினால் இறக்கும் வரை தான் விரும்பிய வாழ்வை வாழ முடியாமல் தன் மென்தையான மனநிலைக்கு மாறான போர்ச்சூழலிலேயே வாழ்கிறான். தந்தை பிலிப்பை விட, மாவீரன் அகிலஸைவிடதான் உயர்ந்த மாவீரனாகப் போற்றப்பட வேண்டுமே என்ற அச்சம் அவனை சதா அரித்துக் கொண்டே இருக்கிறது. ஒருபுறம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களையும் கொலையும் நிகழ்த்தும் அவன் மறுபுறம் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைத்து துடிதுடிக்கிறான்.

    பாரசீக மன்னனைக் கொன்று பாரசீகம் தன்காலில் விழக் காரணமாக இருந்த படைவீரனைப் பாராட்டுவதற்குப் பதில், பாரசீகமன்னனின் மகளை மணந்திருந்த நிலையில் அவளை மகிழ்விக்கும் நோக்கில் அவள் தந்தையைக் கொன்றவனை அவள் கண்முன்னாகவே கொடூரமாகக் கொல்கிறான். இதனால் ருக்ஸானா மகிழ்வாள் என நினைத்திருக்க, அவளோ பயந்து மனதினால் அவனைவிட்டு விலகிவிடுகிறாள். இது அலெக்சாண்டருக்கு மிகப்பெரிய மனப்போராட்டத்தை ஏற்படுத்திவிட, மனைவியையும், அவள் நாட்டு மக்களையும் மகிழ்விக்க அவர்களை போல உடையணிவதும், அவர்களின் கடவுளைப் போல தன்னை அலங்கரித்துக் கொள்வதுமான வேடிக்கைப் பொருளாக மாறி பலரின் நகைப்பிற்கு ஆளாகிறான்.

    மீண்டும் படைதிரட்டி தன்னை மாவீரன் என நிரூபிக்க, நினைத்துப் படைத்திரட்டும்போது அவனுடைய பரைவீரர்களே அவனை எதிர்க்கிறார்கள். ஒரு மன்னனாக இருந்து ஆணையிடாமல், உண்ணாவிரதமிருந்தும், அறைக்குள் நுழைந்து கதவைச்சாத்திக் கொண்டும்தான் நினைத்ததைச் சாதித்துக்கொள்கிறான்.

    ஞானி டயோஜினஸிடம் ‘தன்னால் எதையும் சாதிக்கமுடியும் என்று திமிராகப் பேசும்பொழுது’ மனதால் ஒரு செயலை நடத்திப் பார்த்த பின்பே உடம்பு ஜெயிக்கிறது என்று தன் மன வலிமையை மிகைப்படுத்திக் கூறுகிறான். அவரோ ‘உடம்பு மறுத்துவிட்டால்?.. என்று எதிர்கேள்வி எழுப்புகிறார். மரணப்படுக்கையில்தான் உண்மை உணருகிறான். குதிரை புலி பாலஸ்தான் நிழலைக் கண்டு தானே பயந்து மிரண்டது போல, தன் நிழலைக் கண்டு பிரமித்து உலகை வெல்ல முடியும் என்று நினைத்து இயல்பு வாழ்வைத் தொலைத்ததை உணர்கிறான். உண்மையில் மன்னனாக வாழாமல் வெற்றியை யாசிக்கும் பிச்சைக்காரனாக வாழ்ந்திருப்பதையும், தன் அகந்தையைச் சாதாரண காய்ச்சல் வீழ்த்திவிட்டதையும் உணர்க்கிறான் மகா அலெக்சாண்டர்.

    மாவீரன் என்ற போர்வையை நீக்கி, மனப் போராட்டமும், தாழ்வு மனப்பான்மையும், மனப்பிறழ்வும் கோமாளித்தனங்களும், மனசாட்சியும் உடைய எளிய மனிதனாக எம்.ஜி.சுரேஷ் காட்டியுள்ளார். பருவ வயதில் காதல் வயப்பட்ட அனீலியாவை நினைத்து மரணப்படுக்கையில், தன் இழந்துபோன வாழ்விற்காக ஏங்குகிறான். பல இளவரசிகளை மணந்திருந்தாலும், அவர்களுடன் வாழாமலே போரில் ஈடுபட்டது, ருக்ஸாவின் வயிற்றில் வளரும் குழந்தையைக் காண வாய்ப்பில்லாமல் மரணத்தை நெருங்குவது, அவன் பெற்ற வெற்றிகளை அவன் காதுபடவே வீரர்கள் கேலி பேசுவது, இலட்சியம் முழுமையாவதற்குள் எழமுடியாமல் வீழ்ந்து கிடப்பது போன்றவையெல்லாம் மாவீரன், பேரரசன் என்ற பிம்பத்தை உடைத்து அவன் கடவுள் அல்ல, எளிய சாதாரண மனிதனே என்பதை அவனுக்கு உணர்த்துகின்றன.

    நாவலில் இரண்டு இடங்களில் மகா அலெக்சாண்டர் அழுகிறான். அவனுடைய கோமாளித்தனங்களைக் கண்டு அவனுடைய படைவீரர்கள் கிழக்குநோக்கிப் போரிட வரமுடியாது என மறுக்கும் பொழுது ‘தான் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தினால்’ அழுகிறான். வரலாற்று ஆசிரியர்கள் தன்னை பாடாமல் போய்விடுவார்களோ என்று அச்சப்படுகிறான். மரணப்படுக்கையில் தந்தை பிலிப்பிடம் கனவுலகில் பேசும்பொழுது ‘அலெக்ஸ் நீ அம்மானின் மகனல்ல. மனிதனாகிய தன் மகன் என்பதால் நீயும் இறப்பாய் என்று பிலிப் கூறும்பொழுது ‘போரில் வென்ற மக்களைக் கட்டுப்படுத்தவே தான கடவுளாக’ நடித்ததாகவும்,  புரியாமல் தன் வீரர்கள் தன்னை பைத்தியம் என்று கேலி பேசியதாகவும்’ கூறி அழுகிறான். நண்பன் ஹெபாஸ்டின் குடிப்பழக்கத்தினால் இறந்துவிட, அவன் ஆத்மா சாந்தியடைய ஒரு பழங்குடி இனம்தையே பலியிடுகிறான். அப்பாவி மக்களை கொன்று குவித்தற்காக ஏற்பட்ட மன உறுத்தலைப் போக்க மிதமிஞ்சி குடிக்கிறான்.

     

    நிகழ்கால – இலங்கை அலெக்ஸ்

    இலங்கை அலெக்ஸ் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் ஏற்பட்ட போரின் விளைவுகளில் அகதியாகி நாடுநாடாக அலைகிறான். கலைஞனான சர்வதேச குற்றவாளி கார்லோஸின் உதவியினால் பணம் சம்பாதிப்பதற்காக கிரேக்கம் வருகிறான். கிளியோபாட்ரா போல ஒரு பழைய மம்மியை மாற்றி விற்பனை செய்து பெரும் பணம் ஈட்டி நிம்மதியான வாழ்வை அமைத்துக் கொள்வதே அவனுடைய நோக்கம். ஓவியக் கலைஞனான அவன் சர்வதேச குற்றவாளியான கார்லோஸிடம் பழகுகிறான். இதையறியாத சிங்கள ராணுவம் அவனை வேவு பார்க்க ரனிலை அனுப்புகிறது. அகதியான அலெக்ஸ் படும் சிரமங்களுக்கு சற்றும் குறைந்ததில்லை ரனில் படும் துன்பங்கள். ஒரு நாட்டின் எதிரிகளாகக் கருதும் மக்களை மட்டுமல்லாமல் தன் சொந்த நாட்டு மக்களையும் போர் துன்புறுத்துவதை எம்.ஜி.சுரேஷ் இப்பாத்திரம் வழி பதிவு செய்கிறார். கிரேக்க நாட்டில் இலங்கை அலெக்ஸ் சந்திக்கும் ருக்ஸானா குர்திஸ்தான் தீவிரவாதி என்று தன்னை வெளிப்படையாகவே அறிவித்துக் கொள்கிறாள். இலங்கைத் தமிழர்களைப் போலவே குர்திஸ்தான் மக்களும் தம் உரிமைக்காகப் போராடி வருவதை வெளிப்படுத்தும் அவள் சர்வதேச அரசியலை அறிந்து வைத்திருக்கிறாள். வரலாற்றுப் பேராசிரியை என்ற பெயரில் சர்வதேச குற்றவாளி கார்லோஸைச் சந்தித்து உதவி கேட்கிறாள். உலகெங்கும் நிகழ்த்தப்படும் போர் வன்முறைகளினால் கலைஞர்களும் பெண்களும் அகதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் மாறி வாழ்க்கையைத் தொலைத்திருப்பதை சற்று அழுத்தமாகவே எம்.ஜி.சுரேஷ் கூறுகிறார்.

    2300ம்  ஆண்டில் உலகின் நிலை

    தீவிரவாதி ருக்ஸானாவுடன் இணைந்து 2300ம்  ஆண்டிற்குச் செல்லும் அலெக்சாண்டர் அங்கு கடலுக்கடியில் குப்பைகளாக ஒதுக்கப்பட்ட ஐம்பது வயதிற்கு மேற்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறான். தொடர்ந்த போரினால் விளைநிலங்கள் பாழாகி விவசாயம் குறைந்து, உணவு பஞ்சத்தினால் ஐம்பது வயதிற்குமேல் வாழும் மனிதர்கள் குப்பைகளைப்போல கடலுக்கடியில் வாழிடம் அமைத்து ஒதுக்கப்பட்ட நிலையை அறிகிறான். வெள்ளைக்காரர்களும், நீக்ரோக்களும் முழுமையும் அழிந்த அந்த எஞ்சிய உலகினை மக்கள் தொகை மிகுதி உடையவை என்பதினால் சீனாவும் இந்தியாவம் ஆள்கின்றன. இந்த நிலைமை ஏற்படக் காரணமான மூன்றாம் உலகப்போரை எந்த நாடும் தொடங்கவில்லை. எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களைக் குவித்தல், தற்செயலாக ஒரு நாட்டில் வெடித்த குண்டை, எதிரிதான் போட்டு விட்டான் எனக்கருதி அனைத்து நாடுகளும் தன் பலத்தைக் காட்ட யுத்தத்தைத் துவங்கியதே காரணம் என்கிறார். இப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை ஒரு எச்சரிக்கையாக முன்வைக்கிறார்.

    இன்டியானாபோலிஸ்

    இலங்கை அலெக்சாண்டர் செல்லும் எதிர்காலம் ‘இன்டியானாபோலிஸ்’ இன்னும் நாகரிகம் மிகுந்ததாக இருக்கிறது. குளோனிங் மனிதர்கள் குரங்குகளைப் பேசவைக்கும் கருவிகள், பறக்கும் கார்கள் வந்துவிட்டன. இது பல போர்களுக்குப் பின் எஞ்சிய பகுதி. இதை ஆளும் சேர்மன் அலெக்ஸாண்டர் இந்திய, பாகிஸ்தான் உள்ளிட்ட மக்கள் தொகையில் எஞ்சிய மக்களை சர்வாதிகாரியாகி ஆள்கிறான். குளோனிங் மனிதர்கள் சாதாரண மனிதர்களாகிய அதீத மனிதர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்கிறார்கள். இதற்குக்காரணம் குளோனிங் பெண்களைக் கடத்திச் செல்ல அதீத மனிதர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதீத மனிதர்களின் பெண்களைக் குளோனிங் மனிதர்கள் நினைத்துப் பார்க்க உரிமையில்லை. பேசும் மனிதக் குரங்குகள் குளோனிங் பெண்களைக் காதலிக்கின்றன. குளோனிங் பெண்களும் மனிதக் குரங்களை ஏற்றுக் கொள்கின்றனர். குளோனிங் மனிதர்கள் உதிரி பாகங்களுக்காகவே உருவாக்கப்படுவதால் அவர்கள் அதீத மனிதர்களுக்கெதிராக போரிடுகின்றனர். கிளர்ச்சி செய்யும் குளோனிங் மனிதர்களை எப்போதும் அதீத மனிதர்கள் அழிக்கக் காத்திருக்கிறார்கள். எனவே நகரமெங்கும் பதுங்கு குழிகள். மறுபுறம் சேர்மன் அலெக்சாண்டரை உபமனிதர்களாகிய மனிதக்குரங்குகளும் எதிர்க்கின்றன. இந்த எதிர்காலத்தில் உபமனிதர்களாகிய மனிதக்குரங்குகள் அதீத மனிதர்களுக்கும், குளோனிங் மனிதர்களுக்கு எதிராக யுத்தத்தைப் புரிகின்றன. பேசவும், ஆயுதங்களைக் கையாளவும் சிந்திக்கவும் தெரிந்த இந்த உபமனிதர்கள் ஓருலகக் கூட்டாட்சி நடத்தும் அலெக்ஸாண்டரை பாதுகாப்புகளை மீறி கொல்ல முயல்கின்றன. பொட்டல் வெளிகளாக எஞ்சியிருக்கும் உலகை மனிதர்கள் மட்டுமின்றி அவர்கள் தொழில்நுட்பத்தில் உருவான குளோனிங் மனிதர்களும், உபமனிதர்களும் அழிப்பார்கள் என்று எதிர்காலத்தைக் கணித்துள்ளார் எம்.ஜி.சுரேஷ்.

    ருக்ஸானா செல்லும் எதிர்காலம்

           கம்யூன் போன்ற கூட்டுச் சமுதாய வாழ்வை மேற்கொள்ளும் உலகில் எஞ்சிய மக்களின் உலகம். இங்கு ஆண்பெண் பேதமில்லை. தனிமனிதனின் வெற்றி தோல்விகள் கொண்டாடப்படுவதில்லை. எங்கும் சமத்துவம் வேண்டும் என்பதற்காக, அதீத அறிவுத்திறன் கொண்டவர்கள் குழந்தைகளாக இருக்கும்பொழுதே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதீத அழகு கொண்ட பெண்களின் நிலையும் இதுவே. இவர்களின் ஆற்றல் மட்டுப்படும் வகையில் பயிற்சி கொடுக்கப்படுகிறார்கள். போக்குவரத்து, தொழில் நுட்பம் போன்றவற்றில் அறிவியலின் தாக்கம் மிகுந்து வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாம் என வளமாகவே இருக்கிறது. ஆனால் குடும்பம் என்ற அமைப்பு தகர்க்கப்பட்டு, மனிதப் பிணைப்புகள் அற்றுப்போய், வசதிகள் மட்டுமே கிடைக்கும் சூழலை வெறுக்கும் மக்கள் பெருகிப் போகிறார்கள். எந்தவித குறிக்கோளுமற்ற, உந்துதலுமில்லாத வாழ்க்கையை வெறுக்கும் மக்கள் கூட்டங்கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    மாற்றுப் பார்வை

    சர்வதேசத் தீவிரவாதியான கார்லோஸை கருணைமிக்கவனாக, பாதிக்கப்படும் மக்களின் வாழ்விற்கு நலம் சேர்ப்பவனாகக் காட்டுகிறார். அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்குமான அணுபரிமாற்றத்தில் குர்திஸ்தான் போன்ற எளிய நாடுகள் பாதிக்கப்படுமென்று அணு ஆயுதங்களைக் கடத்திக் கடலுக்குள் ஒளித்து வைக்கிறான்.

    இலங்கை அலெக்ஸின் வாழ்விற்கு உதவுவதுபோல், அவனை ஒற்றரிய வந்துள்ள ரனிலுக்கும் உதவுகிறான். தன் கூட்டாளிகள் மனம் திருந்தி வாழ விரும்பும்பொழுது, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவ முன் வருகிறான். குர்திஸ்தான் மக்களின் நியாயமானப் போராட்டத்திற்கு மறைமுகமாக பல உதவிகள் செய்கிறான். இந்நாவல் ஆளும் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்த மன்னர்களின் முகத்தைத் துகிலிரிக்கிறது. அவர்களின் போர் வெறியினால் உலகம் சீரழிந்துவிட்டதோடு, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதைப் பதிவு செய்கிறது. மக்களைக் காக்க வேண்டிய ஆட்சியாளர்களும், மன்னர்களும் புகழ்போதையினால் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் பிணங்களின் மீது வெற்றிக் கொடி நட்டுக் கொண்டிருக்க, அவர்களை எதிர்க்கும் மக்கள் நலனுக்காகப் பாடுபடும் ஒருவனோ தீவிரவாதி என்ற பெயரில் சர்வதேச குற்றவாளியாகி தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். எனவேதான் எம்.ஜி.சுரேஷ் மார்க்ஸியமும் ஜனநாயகமும் படுதோல்வி அடைந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.

    புகழ், பணம், போர், வெற்றி இவையெல்லாம் மன்னர்களை மட்டுமல்ல விஞ்ஞானிகளையும் விட்டுவைப்பதில்லை என்பதை ஐன்ஸ்டீன் மூலம் வெளிப்படுத்துகிறார். வாழ்வின் கடைசி காலத்தில் மகாஅலெக்சாண்டரைப் போலவே ஐன்ஸ்டீனும் மீண்டும் வாழநேர்ந்தால் யாரோ ஒரு முகம் தெரியாத மனிதனாக சாதாரண குடியானவனாக  யாராலும் அறியப்படாத மனிதனாகவே வாழ விரும்புவதாகத் தெரிவித்து தான் வாழ்வைத் தொலைத்து விட்டதாகப் புலம்பியதைப் பதிவு செய்கிறார்.

    இயல்பாக வாழத் தெரியாததாலேயே குர்திஸ்தான், ஈரான், பாலஸ்தீனம், இலங்கை போன்ற நாடுகள் போர் வெறிகொண்டு மக்களை துன்புறுத்தி வருவதையும் தற்காலத்தில் நாட்டில் நடக்கும் மத, இன, நிற, சாதிச் சண்டைகளுக்கு அதுவே பெரிதும் காரணமாக இருப்பதையும் சுட்டிச் செல்கிறார்.

    சின்ன நாடுகளில் போரைத் தூண்டிவிட்டு பெரிய நாடுகள் தங்களின் ஆயுத விற்பனையைச் சிறப்பாகச் செய்து வருகின்றன. ‘சிறிய நாடுகளிலுள்ள மக்கள், தீராத யுத்தத்தில் கண்ணி வெடியில் சிக்கி மாமிசம் சிதறினால்தான், பெரிய நாடுகளிலுள்ள மக்களின் மேஜைகளில் அந்த மாமிசத்தைப் பரிமாற முடியும். அதனால் தான் இந்த யுத்தங்களை யாரும் தடுத்து நிறுத்துவதில்லை’ (ப. 5) என்ற யதார்த்த குரூரத்தை வெளிப்படுத்துகிறார். போரின் காரணமாக ஏற்பட்ட நில அழிப்பும், நிலையற்ற ஆட்சியும், அணுஆயுதப் பெருக்கமும் ஒட்டுமொத்த பூமியையும் அழித்துவிடும் என்ற எச்சரிக்கை விடுக்கும் வகையில் நாவலில் போர் பற்றிய பதிவுகள் அழுத்தமாப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கதையின் முடிவில் உண்மையிலே அழிந்துவிட்ட பூமியில், வசிக்க முடியாத எஞ்சிய பத்தாயிரம் மக்கள் மட்டும், ஒரு செயற்கை உலகை உருவாக்கி வாழ்வதையும், அங்கு மிகச்சிறிய உயிர்கள்கூட பெரிதும் காக்கப்படுவது பற்றியும் எடுத்துரைத்து தற்கால மக்களிடம் ‘இருப்பது ஒரு பூமி’ என்ற மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பன்முகத்தன்மை

    எந்த ஒரு அமைப்பும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கின்றது. அதன் பொருண்மைத்தளங்கள் பலவாக விரிந்து செல்கின்றன. எதையும் மையப்படுத்துவதென்பது முழுமையானதாகாது. எல்லாவற்றையும் அதனதன் கோணத்திலிருந்து அவற்றின் சிக்கல்களையும், உண்மைத்தன்மையையும் ஆராயும் பார்வை தேவையானது என்ற அடித்தளத்தில் பின்நவீனத்துவம் இயங்குகிறது. இந்த அடிப்படையில் எம்.ஜி.சுரேஷ் இரண்டு நாவல்களிலும் பன்முகத்தன்மை கொண்ட பல நிகழ்ச்சிகளையும், பல பாத்திரங்களையும் படைத்துள்ளார்.

    பின்நவீனத்துவம் என்ற சொல்லிற்கு ஏற்ப அறிவு சார்ந்த பல்வேறு சிந்தனைப் போக்குகளின் தொகுப்பாக இரு நாவல்களும் விளங்குகின்றன. அலெக்சாண்டரின் வரலாறு, பாலஸ்தீன, குர்திஸ்தான், ஈரான் வரலாறு, சர்வதேச தீவிரவாதிகள், தீவிரவாதம், எதிர்கால நிலை, ஐன்ஸ்டீனின் பிற்கால வாழ்க்கை, எகிப்து பிரமிடுகளைப் பற்றிய நுணுக்கமான பிற்கால வாழ்க்கை, எகிப்து பிரமிடுகளைப் பற்றிய நுணுக்கமான செய்திகள், குஃபு பிரமிடின் அதிசயம் முதலான செய்திகளை அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் நாவல் வழி விவரிக்கின்றார். போர்ச்சூழலினால் எளிய மக்களும், பூமியின் வளங்களும் பாதிக்கப்படுவது, அரிஸ்டாட்டில், டயோனிஜனஸ் முதலிய ஞானிகளின் எதிர்பார்ப்பு, உண்மையில் நடந்து கொண்டிருப்பவை என நாவலில் பல செய்திகள் பன்முகக் கோணத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    சிலந்தி நாவலிலும் இதே பன்முகத்தன்மை உள்ளது. ஏழு நாளில் ஏழு கொலைகள் நடப்பதற்குக் காரணமாகக் கருதப்படும் ஆறு மனநிலை பிறழ்ந்தவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்கள், அச்சம்பவங்கள் நடப்பதற்குக் காரணமான சமூக சூழல், நடப்பியலில் கல்வி, அரசியல், திரைப்படம், மொழி, உளவியல் போன்றவை செலுத்தும் ஆதிக்கங்கள் இந்நாவலின் இயங்கு தளங்களாக உள்ளன.

    படைப்பாக்கத்திற்கான சுதந்திரமானப் போக்கை இவ்விரு நாவல்களிலும் காணமுடிகிறது. முறைப்படுத்தப்பட்ட அமைப்பில் கதை நகராமல் பாத்திரங்களின் மனநிலைக்கேற்ப பல யதார்த்தமான திருப்பங்களுடன் கதை இயல்பாக நகர்கின்றது. பல இடங்களில் வாசகனைத் திறந்த விவாதத்திற்கு அழைக்கும் வகையில் உலக நடப்புகளையும், எதிர்கால உலகத்தையும் எடுத்துக்கூறி முடிவை வாசகனிடமே விட்டுவிடுகிறார்.

    கட்டுடைத்தல்

    பிரமிடுகளைக் காவல் காக்கும் ஸ்பிங்ஸ் மூலமாக பல உண்மைகளைக் கட்டுடைக்கிறார். உண்மையில் காலம் என்ற ஒன்று இல்லை. எல்லாம் பாவனைதான். எல்லாக் காலங்களிலும் எல்லா மனிதனும் ஒரே மனிதனாகவே இருக்கிறான். இயல்பான வாழ்வை வாழாமல் அசாதாரண வெற்றிக்காக அலையும் மனிதர்கள் இறுதியில் தோற்றுப் போகிறார்கள். சமநிலை இழந்து உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எப்போதும் பாதிக்கப்படும் பாண்டவர்களும் அவர்களை ஏமாற்றும் கௌரவர்களும் நிறைந்ததாகவே உலகம் காணப்படுவதற்குக் காரணம் இயல்பாகவே இயற்கையாக வாழ விரும்பாத மனிதனின் மனநிலையே காரணம். அசாதாரண வெற்றிக்காக எல்லோருமே உந்தப்படுகிறோம். ஆனால் இயல்பான வாழ்வின் ஆனந்தத்தை அறியாமலே மடிகிறோம். இந்த அசாதாரண வெற்றியை நோக்கிய பயணத்தில் குடூரமான கடந்த காலத்தையம், அபத்தமான நிகழ்காலத்தையும், வைத்துக் கொண்டு வாழ்ந்துவரும் மனித இனத்தின் எதிர்காலம் மேலும் மோசமானதாகவே இருக்கும் என்கிறார்.

    நிகழ்கால இலங்கை அலெக்சாண்டர் வழி 3 வகை கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் மூன்று வகையான எதிர்காலத்திற்கும் அழைத்துச் சென்று,இன்றைய மனிதன் இனி எப்படி வாழ்வது என்பது குறித்து விழிப்புணர்வு பெற வேண்டுமென்று கூறுகிறார். இந்நிலை இப்படியே நீடித்தால் எதிர்காலங்கள் எப்படி இனி இருக்கும் என்பதையும் பதிவுசெய்கிறார்.

    போரும் மனித வாழ்வும்

    இன்றைய நவீன உலகத்தில் எங்கேனும் ஓரிடத்திலாவது அணுகுண்டு வெடிப்பு நிகழ்வதை பல ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. ஆளும் வர்க்கத்தின் போர் என்ற பெயரில் மனிதர்களைக் கூட்டம் கூட்டமாக அழித்து வருகின்றனர். மக்களின் வாழிடங்களையும் வளமான நிலங்களையும் பாழ்படுத்தி வருகின்றனர்.

    போரினால் குந்திஸ்தான், பாலஸ்தீன, இலங்கை இனமக்கள் அகதிகளாக மாறி தம் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். துருக்கி, ஈரான், ஈராக் மூன்று நாடுகளும் போரடித்தால் குண்டுபோடும் இடமாக எங்கள் நிலம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ருக்ஸானா. இன சுத்திகரிப்பு என்ற பெயரில் குர்திஸ்தான் இனமக்கள், பாலஸ்தீன மக்கள், இலங்கைத் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. பெரிய நாடுகள் ஆயுதங்களை விற்க சிறிய நாடுகளைத் தூண்டிவிட்டுப் போரை ஏற்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அழிந்ததோடு, எஞ்சியுள்ளவர்கள் சொந்தநாடு இல்லாமல் அகதிகளாக மாறிவருகின்றனர். உலகைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டுமென்று நினைப்பவர்கள் நிகழ்த்தும் போர் வன்முறைகளினால் எதிர்காலத்தில் மனித இனமும், பூமியும் அழிந்துவிடும் அபாயம் இருப்பதை அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் நாவலில் சுட்டுகின்றார். போரின் விளைவுகளை ஆறுவகையான காலங்களுக்கு கதையை நகர்த்திச் சென்று காட்டும் புதிய உத்தியை கையாண்டுள்ளார். ‘இன்றைய மனிதகுலம் தடைகளை உடைத்துக் கொண்டு இகாரஸ் போல பறக்கக் கற்றுகொண்டுவிட்டது. அதே சமயம் மிகத் தொலைவிற்குப் போய் தனக்கெதிராகவே தன் அழிவிற்கு வழி வகுத்துவிட்டது என்ற ஸ்பிங்ஸின் கூற்று ஆறு காலங்களுக்கும் பொருந்துமாறு கதையை அமைத்துள்ள விதம் பாராட்டுக்குரியது.

    ஒரு இனத்தை மிகுதிப்படுத்தும் போக்கு உலக பேரழிவிற்கே வழிவகுக்கும் என்பதால் அது தேவையற்றது என்கிறார். இயல்பாக இருப்பதே ஆனந்த வாழ்வின் அடித்தளமென்பதை ஞானி டயோனிஜஸ் வழி உணர்த்துகிறார்.

    தீராதயுத்தமும் ஏராளமான பெயர்தலும் ஒரு இனத்தின் நாகரிகத்தை அழித்துவிடும் எனப்தை எதிர்கால அலெக்ஸாண்டர்களின் வாழ்க்கைகள் மூலம் வெளிப்படுத்துகிறார். இலங்கை அலெக்ஸாண்டர் மகாஅலெக்சாண்டரை சந்திக்கும்போது, ‘இப்படி எல்லாக் காலங்களுக்கும் போய் வருகிற வாய்ப்பு இருபப்தை அறியும்போது அனைத்து உலகங்களையும் ஜெயிக்க வேண்டுமென்று உந்துதல் ஏற்படுவதாக’ கூறுகிறான். இந்த, மோசமான உந்துதல்தான் மனித குலத்துக்கு எதிராக திரும்பியிருப்பதாக, யாரோ ஒருவனின் உந்துதலுக்காக ஒட்டு மொத்த உலகமே பாதிக்கப்படுவது எவ்வகையில் நியாயம் (ப. 378) என்று வினவுகிறார்.

    ஓருலகக் கூட்டாட்சி, உலகமயமாக்கல் போன்றவை உலகை அழிவின் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதால் அது தேவையற்றது. அந்தந்த வட்டாரத்திற்குரிய தனித்தன்மைகளே அழகானவை அர்த்தமுள்ளவை என்பதே எம்.ஜி.சுரேஷின் கருத்தாகும்.

    எதிர்காலவியல்

    எதிர்காலத்தில் நிலங்கள் கந்தகப் பூமியாகி, உணவு உற்பத்தி குறைந்து கடும்பஞ்சம் ஏற்படும் என்கிறார். எனவே ஐம்பது வயதானவர்களை அரசே கொன்றுவிடும் என எச்சரிக்கிறார். எல்லா நாடுகளுமே அணு ஆயுதங்களை மணல் பரப்புகளில் குவித்து வைத்துள்ளன. இவற்றில் ஏதாவதொன்று தற்செயலாக வெடித்தால் கூட உலகப்போர் மூண்டுவிடும் வாய்ப்புள்ளதைத் தெரிவிக்கிறார். தொடரும் போர்களினால் உலகில் மக்கள் தெகை பெருக்கத்தினால் இந்தியாவும், சீனாவிம் மட்டுமே உலகில் வாழ நேரிடும். தேசம், இனம், மொழி, சாதி, சமயம் முதலான தனித்த அடையாளங்கள் அழிந்துவிடும். இனக்கலப்பு ஏராளமாக ஏற்படும். உலகப்பரப்பில் உள்ள அனைத்து மொழிகளும் கலந்த ஒரு பொதுமொழி இருக்கும். இவ்வேறுபாடுகள் அழிந்து போவதால் மனிதனுக்கு எந்த அடையாளத்தையும் குறிக்கும் பெயர்களும் இருக்கப் போவதில்லை. அதிர்ஷ்டம், நம்பிக்கை, வாய்ப்பு என்றோ எண்களோ மட்டும்தான் மக்களுக்குப் பெயர்களாக இருக்கலாம். அறிவியல் வளர்ச்சியினால்புதுமையான நவீன கருவிகள், வாகனங்கள், ரேபோக்களின் பெருக்கம், தானியங்களி வாகனங்கள், குளோனிங் மனிதர்கள், மருத்துவ தொழில் நுட்பத்தால் சிந்திக்கும் பேசும் குரங்குகள், பூமியின் எரிபொருள் வளங்கள் அழிந்து விட்டதால், காற்றாலும், சூரிய ஒளியாலும் இயங்கும் வாகனங்கள் என அறிவியல் தொழில்நுட்பம் பெருகிப் போகும் என்கிறார். தொழில் நுட்பம் எவ்வளவு மேம்படுகிறதோ அந்த அளவிற்கு மனிதர்கள் பிரிந்து வாழ்வார்கள் என்பதையும் பதிவு செய்கிறார். கலை இலக்கியங்கள் போன்சாய்போல் சுருங்கி, இருத்தலியல் சிக்கல் மிகுதியாகிவிடும் என்கிறார்.

    ஓருலகக் கூட்டாட்சி

    ஓருலக அரசு வந்தாலும் அறிவியல் தொழில் நுட்ப மேம்பாட்டினால், புதிய ஆயுதங்களைக் கொண்டு புதிய கலவரங்களும் போர்களும் ஏற்பட வாய்ப்புண்டு. குளோனிங் மனிதர்கள், தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட மனிதக் குரங்குகள் போன்றவை மனிதனுக்கு எதிராகப் போர் புரியலாம். இதனால் தொடரும் நில அழிப்புகளாலும், இன அழிப்புகளாலும் மேலும் நிலைமை மோசமடைந்திருக்கும். இறுதியில் எஞ்சிய மக்கள் ஒரே குடும்பமாக வாழநேரிடுவர். ‘எல்லோருக்கும் எல்லாமும்’ என்ற நிலை வரும். ஆனால் சமத்துவம் என்ற ஒன்றிற்காக மக்களில் புத்திசாலிகளையும், அழகிகளையும், திறமைசாலிகளையும் ஒடுக்கி வைப்பார்கள். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்வார்கள். இதனால் தொடரும் புரட்சிகளில் எஞ்சிய பூமியும் அழிந்து இறுதியில் செயற்கைக்கோளில் மனிதர்கள் தொங்கிக் கொண்டு வளமான கிரகத்தைத் தேடியலைந்து கொண்டிருப்பார்கள் என்கிறார்.

    பெண்களின் நிலை

    மகாஅலெக்சாண்டர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் மத, இன, சமயங்களாலும், போர்களாலும் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர். தொடர்ந்த போர்களினால் அரசி அடிமையாகிறாள். மகாஅலெக்சாண்டரின் மனைவி ருக்ஸானா, தன்னுடைய பாரசீக நாட்டையும், தன் தந்தையையும் அ ழித்த மகா அலெக்சாண்டரை மணந்துகொள்கிறாள். அவனுடைய வாரிசையே சுமக்கிறாள். அவனை மறுக்கும் நிலையில் அவள் இல்லை. அவனுடைய கொடூரங்களைக் கண்டு மிரண்டாலும், அவனை எதிர்க்கும் வலிமையின்றித் தன் நாட்டு மக்களுக்காக அவனுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வதுபோல நடிக்கிறாள்.

    அரசியின் நிலையே இவ்வாறெனில் மற்ற பெண்களின் நிலை எப்படியிருக்கும் என்பதை நம் ஊகத்திற்கு விட்டுவிடுகிறார். போர்களின்போது பல இனப் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், கொன்று புதைக்கப்படுகிறார்கள். மகா அலெக்சாண்டர் பல பெண்களை மணந்தாலும் எவருடன் வாழ்வதே இல்லை. இறக்கும் தருவாயில் அவர்களுக்குத்தான் இழைத்த கொடுமையை நினைத்து வருந்துகிறான்.

    இலங்கை அலெக்சுடன் வாழும் ருக்ஸானா படித்த வரலாற்றுப் பேராசிரியை. தன் குர்திஸ்தான் இன மக்களுக்காகப் போராடுகிறாள். சர்வதேச அரசியலை தெரிந்து வைத்திருக்கிறாள். தன்னைத் தீவிரவாதி என வெளிப்படையாகவே கூறிக் கொள்கிறாள். ஈரான், குர்திஸ்தான் போன்ற நாடுகளில் பெண்கள் உடைமைகளாகக் கருதப்படுவதையும், பர்தா பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஆணாதிக்க அரசியல் என்றும் சிந்திக்கிறாள். ஆனால் தன் இனமக்களின் வாழ்வாதாரத்துக்கே வழிதேடி அலையும் நிலையில் இருக்கிறாள்.

    எதிர்காலப் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். உடையிலும் உடைமையிலும் சேதமில்லை. அலெக்சாண்டர் செல்லும் எதிர்காலத்தில் அவன் மனைவி அவன் வீட்டிற்கு வரத் தாமதித்தால் திருமண ஒப்பந்தத்தை முறித்துவிடுவதாகக் கூறுகிறாள். எதிர்கால கூட்டுக்குடும்ப முறையில் ஆணும் பெண்ணும் பெரும்பாலும் தனித்தே வாழ்கிறார்கள். ஆண், பெண், குழந்தைகள் எல்லோருக்கும் சமத்துவமும் சுதந்திரமும் சாத்தியமாகியிருக்கின்றன. கட்டுப்பாடுகள் எதுவுமே கிடையாது. பெண்கள் சமைப்பதே கிடையாது. எல்லோருக்கும் பொதுவாக உணவு விடுதிகள் இருக்கின்றன. அங்கே சமையல் செய்ய விருப்பமுள்ளவர்கள் அந்த வேலைகளைச் செய்யலாம். வீடுகள் என்பவை ஓய்வெடுக்கவும் தூங்குவதற்கும் மட்டுமே தேவைப்படுகின்றன. திருமணங்கள் கட்டாயமில்லை. அதுபோலவே திருமணம் முடிந்தபின் சேர்ந்து வாழ வேண்டுமென்ற கட்டாயமுமில்லை. அதைப்போல சுய இன்பத்திற்கான கருவிகள் வந்துவிட்டதால் ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தேவையில்லை.மாதவிடாய் காலங்கள் கூட கவனத்தில் கொள்வதில்லை. அதன்மீதான கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்ந்து திருமண நாள் கூட அந்நாளில் நடத்தப்படும் என்பதால் படிப்படியாக எதிர்காலத்தில் பெண் முழு சமத்துவத்தைப் பெற்றுவிடுவாள் என்கிறார்..

    சிலந்தி

    சிலந்தி நாவலில் உளவியல் சிக்கலுக்கு ஆளாகும் நபர்களைப் பற்றியும், அவர்கள் இன்னின்ன காரணங்களினால் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் எம்.ஜி.சுரேஷ் வெளிப்படுத்துகிறார்.

    காதல்

    சாதி, மதம், சமயம், பொருளாதாரம் எனப் பல பிரிவுகளை உடைய இச்சமூகத்தில் பல காரணங்களினால் காதல் பலபேருக்கு நிறைவேறுவதில்லை. இளவயதில் ஏற்படும் காதல் மனமுறிவு பலவித உளவியல் சிக்கலை உருவாக்குகிறது. அகத்தியலிங்கம் கலை இலக்கியங்களில் ஈடுபாடு இல்லாதவன். பெலீக்ஸ் என்ற பெண்ணின் மீது ஏற்படும் ஈர்ப்பால் அவளுக்காகக் கலை இலக்கியங்களைப் படிக்கிறான். எனினும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விடுகிறார்கள். பெலீஸ் வேறொருவனை மணந்து கொண்டு தனக்கு துரோகம் செய்துவிட்டதாக நினைத்து மனப்பிறழ்வடைகிறான். மனநலக்காப்பகத்தின் காப்பாளனாகிய சலீம் இந்துவாக இருந்து ஜஹனராவிற்காக இசுலாமியனாக மாறியவன். ஆனால் ஜஹனரா அவனை விரும்புவதில்லை. எனினும் அவள் தந்தையிடம் தனக்கு மணமுடித்துத்தரும்படி கேட்கிறான். அவரோ அவனைத் தனியறையில் சங்கிலி போட்டு கட்டி வைத்து துன்புறுத்துகிறார். இதனால் மனப்பிறழ்வடைந்து ஜஹனராவையும் அவள் தந்தையையும் கொல்வதோடு பல கொலைகளுக்கும் காரணமாகிறான். நிறைவேறாத காதலால் அகத்தியலிங்கமும், சலீமும் மனப்பிறழ்வடைகிறார்கள். மகாஅலெக்ஸாண்டரும் அனிலீயா மீது கொண்ட காதல் நிறைவேறாததை மரணப் படுக்கையிலும் நினைத்து வேதனை அடைகிறான்.

    பொருளாதாரச் சூழல்

    பணம் சார்ந்த வாழ்க்கையில் இன்று காதல், வீரம், அன்பு, மனிதநேயம் போன்றவை புறந்தள்ளப்பட்டுவிட்டன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் வறுமையும் மனிதனை பெரிதும் பாதிக்கின்றன. உலகநாதன் பொறுப்பற்ற தநதையால் குடும்பபாரத்தைச் சுமக்கவேண்டி கல்வியைப் பாதியில் கைவிடுகிறான். இவனை விட மோசமாகப் படிப்பவர்கள் பிற்காலத்தில் மேலதிகாரியாகி இவனை விரட்டி வேலை வாங்கும் பொழுது தாழ்வு மனப்பான்மை சிக்கலுக்கு ஆளாகிறான். அது ஒரு கட்டத்தில் உயர்வு மனப்பான்மையாகி கண்ணில் பார்ப்பதெல்லாம் தனக்குரியதெனக் கருதத் தொடங்குகிறான். எல்.ஐ.சி. கட்டிடம், தலைமைச் செயலகம் போன்றவை தன்னுடையது என அவற்றைக் கைப்பற்ற முயலும்போது மனப்பிறழ்வடைந்தவன் என மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறான். மகா அலெக்சாண்டரும், சேர்மன் அலெக்சாண்டரும் கூட ஒரு வகையில் இவனைப் போல உடைமைப் பைத்தியங்களே.

    திரைப்படம்

    வெள்ளியங்கிரி திரைப்படப் பைத்தியம். அதன் விளைவாகத் திரைப்படத் துறையில் ஈடுபட்டு பல படங்களை எடுக்கிறான். பல உலகத்திரைப்படங்களைத் திருடி படம் எடுத்ததால் தன் படம் எது என்று கண்டுபிடிக்க முடியாத மனநிலைக்கு ஆளாகிறான். மேலும் இவன் ஆதரித்தவர்களும், இவன் மனைவியும் இவனுக்கு எதிராகத் திரும்ப அவர்களை கொல்ல முயலும்போது மனம்பிறழ்வடைந்தவன் என அறியப்படுகிறான்.

    மதம் – சோதிடம்

    சிலந்தி நாவலில் வரும் சத்திதாசன் ஆன்மீகவாதி .தாய் தந்தை இருவரையும் சிறுவயதில் பிரிந்து தாத்தா, பாட்டியிடம் வளர்கிறான். தாத்தாவின் ஆன்மீகக் கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு, ஆன்மீகத் தேடலில் ஈடுபடுகிறான். பூமியின் மீதுள்ள சக்திகோடுகளை இணைப்பதால் இந்தியா வல்லரசாகும். அந்த வல்லரசை ஆளப்போவது தான் தான் என்று நம்புகிறான். சிறுவயதில் தாய் தந்தையின் அன்பு முழுமையாகக் கிடைக்காததால் பெண்களை வெறுக்கிறான். இந்து மதத்தின் மீது ஏற்பட்ட வெறியால் கிறித்துவ, இசுலாமியர்களைத் தாக்குகிறான். மதம் – சோதிடத்தின் மீதுள்ள வெறியால் மனப்பிறழ்வடைகிறான்.

    தமிழ்ப்பற்று – இனப்பற்று

    சிலந்தி நாவலில் வரும் இராஜாமணி தமிழ்ப் படித்தவன். ஆனால் தமிழ்ப் படித்தவர்களைத் தமிழ்ச் சமூகம் தாழ்வாகப் பார்ப்பதினால் ஏற்பட்ட மன உளைச்சலினால் அரசியல் மேடைகளில் தமிழ் முழக்கம் செய்கிறான். அரசியல் ஒதுக்கப்பட்ட பெருமாள், இராஜாமணியின் தமிழினால் கவரப்பட்டு நண்பர்களாகிறார்கள். பொருளாதார நிலையில் மேம்பட ‘மின்சார நாற்காலி’ திட்டத்தைத் தமிழர்களுக்கென்று ஆரம்பித்து அதனால் பலபேர் இறந்துவிட அதனால் இருவரும் மனப்பிறழ்வடைகிறார்கள்.

    முடிவுரை

    எம்.ஜி.சுரேஷின் நாவல்கள் வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக வரலாற்றைத் தர்க்கப்பூர்வமாக ஆராய்கிறது. பல கருத்துக்களை நிராகரிக்கிறது. அரசனோ, ஆண்டியோ மையப்படுத்தலை நிராகரித்து ஆண்டான் – அடிமை, அரசன் – அகதி, முதலாளி  தொழிலாளி என்ற இருமைகளையும் மறுக்கிறது. தொன்மங்களையும் விமர்சனத்திற்குள்ளாக்குகிறது. அனைத்திற்கும் இடமுள்ள ஒரு சமூகக்கட்டுமானம் மிக இயல்பான முறையில் தேவை என்கின்றது.

    மன்னர்கள் மையமாக போற்றப்படும்போது படைவீரர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதைத் தகர்த்து படைவீரர்கள் இல்லையேல் மன்னன் இல்லை என்ற உண்மையைப் புரியவைக்க முயல்கிறது. அனைத்து தரப்பினருக்கும் மையத்தைத் தருகிறது. எல்லாப் பாத்திரங்களுக்குமே சமமான பங்களிப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. தன்னேரில்லாத் தலைவன் அல்லது ஒரு பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதையாக இல்லாமல் அனைத்தும் பரவலாக்கப்பட்டுள்ளது.

    மனநல காப்பகத்தில் அடைக்கப்பட்டவர்கள் மட்டுமே மனநோயாளிகள் அல்ல. பணம், புகழ், அறிவியல், போர், திரைப்படம், ஆன்மீகம் முதலானவற்றின் மீது வெறிகொண்டு அலையும் மனிதர்களும் மனநோயாளிகள்தான் என்பதையே எம்.ஜி.சுரேஷின் இரு நாவல்களும் முன்னிறுத்துகின்றன. வரையறை என்பதையே மறுக்கும் பின்நவீனத்துவப் பாணியில் பல வடிவச் சோதனைகளை மேற்கொண்டு கடந்த கால வரலாறுகளின் வழியான நிகழ்காலத்தையும், நிகழ்காலத்தின் வழி எதிர்காலத்தையும் பதிவு செய்து தற்போதைய மனிதன் மேற்கொள்ள வேண்டியவை எவை என்பது குறித்து சிந்திக்க வைக்கிறார். இவ்விரு நாவல்களும் தற்கால மக்கள் எதிர்காலத்தைக் குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன.

    போர், வெற்றி, காதல், பொருளாதாரம், திரைப்படம், ஆசை, மதம், சோதிடம், தமிழ், இனப்பற்று போன்றவற்றில் வெறிகொள்ளும் மனிதர்கள் மனப்பிறழ்வடைகிறார்கள். தான் எங்கே தோற்றுவிடுவோமோ என்று மனிதர்கள் மனதில் ஏற்படும் அச்சமும் அதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையுமே உயர்வு மனப்பான்மையாக வெளிப்படுகிறது. மகாஅலெக்சாண்டர் முதல் சிலந்தி நாவலில் வரும் பெருமாள் வரை அனைவரும் எதையோ அடைய நினைத்து வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். ஐன்ஸ்டீன் முதலான மேதைகள்கூட வாழ்க்கையைத் தொலைத்துவிட்டதாகக் கூறுவதிலிருந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் நிமிடங்கள் மட்டுமே உண்மையானது என உணர்ந்து வாழவேண்டும் என்பதே இருநாவல்களும் முன் வைக்கும் கருத்தியலாகும்.

    துணை நின்ற நூல்கள்

    சுரேஷ் எம்.ஜி. இஸங்கள் ஆயிரம்,மருதாவெளியீடு, சென்னை முதற்பதிப்பு 2005

    சுரேஷ் எம்.ஜி. அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும், அடையாளம்வெளியீடு, திருச்சி  முதற்பதிப்பு 2011

    சுரேஷ் எம்.ஜி சிலந்தி அடையாளம்வெளியீடு, திருச்சி.  முதற்பதிப்பு 2011

    பூமிச் செல்வம்.ஆ, பின்னை நவீனத்துவம்,அகரம், தஞ்சாவூர். முதற்பதிப்பு 2009 மங்கையர்க்கரசி.சிவ. இலக்கிய இயக்கங்கள் தமிழிலக்கியத்தின் சமூக வரலாறு, என்.சி.பி.எச்.சென்னை முதற்பதிப்பு 2004.

    Share
  • நவராத்திரி 03 (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    goddess_saraswati_seated_on_her_mount_or98

    வாக்கிலொளி மின்னவைத்து
    வாழ்விலிருள் பின்னவைத்து
    வக்கணையாய் நீ அடிக்கும் கூத்து, இதை
    வாழ்த்திடுவர் தூற்றிடுவர் பார்த்து, அம்மா

    போக்கிடமே தெரியாமல்
    போகும்நதி போலே என்னைப்
    புரட்டிப் புரட்டி எடுக்கின்றாய், பொருள்
    புரியவில்லை சிரிக்கின்றாய்

    பார்க்குமிடம் அத்தனையும்
    நீக்கமற நீயிருந்தும்
    ஏக்கமெனும் பேய்க்கெனை நேர்ந்தாயே! உயிரில்
    எறும்பென எங்கோ ஊர்ந்தாயே! அம்மா

    சீக்கிரமே வந்துநில்லுன்
    சித்திரத்துப் புன்னகையைச்
    செந்தமிழின் தேன்குடத்தில் தேக்கி, இசைப்பேன்
    சிந்தனை அபஸ்வரத்தை நீக்கி!

    எந்தவினை என்றன்வினை
    எந்தவிதி என்றன்விதி
    இந்தப் பொய்க்கு இத்தனை அலங்காரம்! அம்மா
    எவரிடம் உன்றன் அகங்காரம்? அம்மா

    சொந்தமென நாமிருவர்
    சொல்லிசொல்லி முத்தமிட்ட
    அந்தக்கணம் ஒன்று மட்டும் நிசமே! அந்த
    அன்பில் ஒருவர் ஒருவர் வசமே!

    சந்தனத்து நந்தவனம்
    சக்தியுன்னைக் கொண்டமனம்
    சாவுமொரு ஜீவகளை பூணும், பூமி
    சார்ந்திடாத மேன்மைபல தோணும்

    சந்தையிலே வெய்யிலிலே
    சாக்கடையின் ஓரத்திலே
    தந்ததென்ன வோஇந்தப் பாடம்? அம்மா
    தாங்கவில்லையே விந்தை வேடம்!

    என்னபந்தம் இந்தபந்தம்
    என்னசொந்தம் இந்தசொந்தம்
    ஏழையென்றும் தூங்கியதும் உண்டோ? நீ
    எனக்கென ஏங்கியதும் உண்டோ?

    மின்னல்களை மீட்டுமுன்றன்
    மென்விரலில் என்றன்மனம்
    மீண்டும்மீண்டும் கொள்ளை அடிக்கின்றாய், ஏனோ
    மிரண்டவனைப் போட்டு வதைக்கின்றாய்

    நட்டநடு நெஞ்சுக்குள்ளே
    கொட்டக்கொட்ட விழித்திருக்கும்
    நாயகியுன் ஒற்றைவிழி என்றும், அதை
    நாடும்பொழு தெல்லாமதில் குன்றும்! அந்தக்

    கொட்டங்களும் போதும் இந்தக்
    கொட்டகையும் போதும், அங்கே
    கொட்டிக் கிடக்கின்ற சோழியாடி, நாம்
    கொஞ்சிமகிழ் வோம்தமிழில் பாடி!


    20.09.2017 / வியாழன் / காலை 7.07

     

    Share
  • நவராத்திரி நாயகியர் (3)

    க. பாலசுப்பிரமணியன்

     

    துர்கை அம்மன்

    15-1444904554-1-hindu-goddess-durga

     

    கண்களில் கோபம், கடமையில் மோகம்

    கைகளில் சூலம், கால்களில் வேகம்

    கலியினைத் தீர்க்கும் கருணையின் ராகம்

    கனிவுடன் அழைத்தால் தாய்மையின் தாகம்

     

    தவமென நெருப்பைத் தலையினில் ஏந்தி

    தகித்துடும் கனலில் கால்களைப் பதித்து

    தாயினின் அன்பைத் தன்னுள் வைத்து

    வாவென அழைத்தால் வருவாள் துர்கை !

     

    தீதினை  விலக்கிடத் தீயாய் வருவாள்

    சூதினை உடைத்திடச் சூலமாய் வருவாள்

    சூழ்ச்சிகள் ஏவல் சுமையின்றி விலக்கி

    வாழ்வினில் ஒளியாய் வளம்தரும் தாயே !

     

    வில்லும் சங்கும் வழித்துணை வந்திட

    வாளும்  கதையும் வருவினை காத்திட

    பன்னிரு கைகள் பழவினை நீக்கிட

    பார்கவி பைரவி பாதங்கள் துணையே !

     

    இச்சைகள் நீக்கிடும் எலுமிச்சை விளக்கில்

    இருளில் ஒளியாய் கலங்கரை விளக்காய்

    அச்சங்கள் போக்கிடும் அவளிரு விழிகள்

    அன்புடன் அழைத்தேன் அருள்வாய் தாயே !

     

    அருவம் உருவம் அனைத்தும்  நீயே

    பருவம் காலங்கள் பயணங்கள் நீயே

    கருத்தின் கருவில் கண்விழி நீயே

    காத்திடு தாயே கனக துர்கையே !!

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170920 - Mahalaya 02 - Shailaputri-lr

    ‘காளை தனிலமர்ந்து, கையில் கமலமும்,
    சூலமும் கொண்டு சயிலமகள்(இமவான் புத்ரி-சயிலம் மலை) , -நாளை(DATE)
    நமக்களிக்க வந்தாள், நவராத்ரி நாளில்
    அமர்க்களம் அம்பாள் அழகு’’….கிரேசி மோகன்….!

    Share
  • உலையுள்ளே உனைக்கண்டேன் – நவராத்திரி கவிதை (2)

    இசைக்கவி ரமணன்

     

    உலையுள்ளே உனைக்கண்டேன்

    wpe7

    உற்ற பிறப்பும் உறுதுயரும் இன்பமும்
    பெற்றவளே உன்றன் பிரசாதம்! மற்று
    வினையே தெனக்கு? விதியே தெனக்கு?
    உனையேநான் என்றேன் உணர்.

    உணர்வின் முனையின் துளியாய்க் கனலும்
    குணமற்ற விந்தைக் குழந்தாய்! ரணமான
    நெஞ்சைத் தடவி நினைவைக் குலவியதைப்
    பஞ்சாக்கித் தீயாய்ப் பருகு.

    பருகப் பெருகும் பரதாகம்! நெஞ்சம்
    உருக வளரும் விரகம் – ஒருகரம்
    மெள்ளத் தலைகோதும் வேளையில் அவ்வின்பம்
    கொள்ளத்தான் ஒண்ணுமோ கூறு

    கூறும் மொழியும் குறிக்கும் பொருளுமதில்
    ஊறும் சுவையும் ஒருத்தியே! மாறும்
    உலகினில் மாறாத உண்மையே! ஏனோ
    கலகத்தி லேஇமைப்பாய் கண்

    கண்ணான கண்ணன்றோ! கட்டழகுப் பெண்ணன்றோ!
    மண்ணான வாழ்வில் மலரன்றோ! எண்ணாத
    எண்ணத்தின் பின்னிருக்கும் ஏகாந்தம் தானன்றோ!
    வண்ணத்தின் பின்னிருக்கும் வான்.

    வானயர்ந்து போனாலும் நானயர்ந்து போகாமல்
    தேனயரும் தித்திப்புத் தீந்தமிழில் – மானேயுன்
    போக்கேது மற்ற புதிர்நடையை, என்னிசை
    வாக்கில் வடித்திடுவேன் வா!

    வாவென்றால் வந்திடுவாய்; வந்தென்முன் நின்றிடுவாய்
    போவென்று சொல்லாதே! போகாதே! காவென்று
    காலில் விழுந்தவனைக் கையால் எடுத்துடனே
    காலில் அழுத்தியெனைக் கா.

    காலத்தே நேரமெனக் கண்பொத்தி நீயாடும்
    ஜாலத்தை என்னென்பேன் சாம்பவியே! ஞாலத்தே
    தூலத்தை வைத்துத் துளியொளியாய் உள்நின்ற
    கோலத்தைப் பாடுவதே சொல்.

    சொல்வேண்டும்! தக்கபடிச் சோழி விழவேண்டும்!
    நில்லென்றால் எல்லாமும் நிற்கவேண்டும் – செல்லென்றால்
    மானுடர் துன்பமெல்லாம் மாயமாய் நீங்கவேண்டும்
    ஊனுள்ளே மந்திரச்சொல் ஊற்று.

    ஊற்று பெருகட்டும்! உள்ளம் உருகட்டும்!
    மாற்றத்தின் மத்தியிலே மாறாமல் – ஏற்றம்
    நிலைக்கட்டும்! ஏலா தலைபாயும் நெஞ்ச
    உலையுள் உனைக்கண்டேன் உற்று!

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 3

    -மேகலா இராமமூர்த்தி 

    ”ஆ…! தலைவியுடனேயே இணைபிரியாத் துணையாய் நிற்கும் தோழியை மறந்தேனே! அவளை  இரந்துநின்றால் மனமிரங்காமலா போய்விடுவாள்?” என்ற எண்ணம் தலைவனின்  மனத்தில்  தோன்றவும் புதிய நம்பிக்கையொன்று அவனுள் தளிர்விட்டது. 

    தலைவியைச் சந்திக்க அடுத்தநாள் மீண்டும் அருவிச்சாரலுக்கு ஆசையோடு சென்றான் தலைவன். அவ்வமயம் தலைவியும் தோழியும் காட்டாற்றில் புணையோட்டி (தெப்பம்) விளையாடிக்கொண்டிருந்தனர். காட்டாற்றின் கரையோரம் வளர்ந்திருந்த வேங்கைமர ஓரமாய் மறைந்துநின்றபடி அக்காட்சியைக் கண்டுகளித்துக்கொண்டிருந்த தலைவன்,

    ”என்ன இது விந்தை! தளிர்புரை மேனியும் குளிர்விழிகளும் கொண்ட மெல்லியளாகிய தலைவி, தோழி புணையின் தலைப்பகுதியைப் பிடித்தால் தானும் தலைப்பகுதியைப் பிடிக்கின்றாள்; தோழி கடைப்பகுதியைப் பிடித்தால் தானும் கடைப்பகுதியைப் பிடிக்கின்றாள். தோழி புணையைவிட்டுப் புனலோடு போனால் இவளும் அவளோடு சென்றுவிடுவாள் போலிருக்கிறதே!” என வியந்தான்.

    தலைப்புணைக்  கொளினே  தலைப்புணைக்  கொள்ளும்
    கடைப்புணைக்  கொளினே  கடைப்புணைக்  கொள்ளும்
    புணைகை  விட்டுப்  புனலோ  டொழுகின்
    ஆண்டும்  வருகுவள்  போலு  மாண்ட
    மாரிப்  பித்திகத்து  நீர்வார்  கொழுமுகைச்
    செவ்வெரி  நுறழும்  கொழுங்கடை  மழைக்கண்
    துளிதலைத்  தலைஇய  தளிரன்  னோளே(குறுந்: 222.  சிறைக்குடி ஆந்தையார்) 

    ”இருதலையும் ஓருயிரும் கொண்ட பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், ஈருடலும் ஓருயிருங் கொண்டோராய் இவர்கள் இருவரும் திகழக் காண்கிறேன். என் உள்ளங்கவர் தலைவியின் காதலைப் பெற இத்தோழியே உற்றதொரு பற்றுக்கோடு எனத் தெரிந்து தெளிந்தேன்” என்று தன்னுள் கூறிக்கொண்டான்.

    மறுநாள் தோழியை மட்டும் தனியே சந்திக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தான் தலைவன். தலைவியின்றி தோழிமட்டும் தனித்துவந்த வேளையொன்றில் தான் கையுறையாக (அன்பளிப்பு) கொண்டுவந்த செங்காந்தள் மலர்க்கொத்தை  (clusters of Malabar glory lilies) அவளிடம் நீட்டினான். முன்னமே சிலமுறை தலைவனைக் கண்டவளும், கண்டபோதே (தலைவிமீது காதலுற்ற) அவன் மனத்தை அறிந்துகொண்டவளுமான தோழி, தலைவன் தந்த மலர்க்கொத்தைப் பார்த்துக் ’களுக்’கென்று சிரித்துவிட்டு,

    ”என்ன ஐயா! கொல்லன் தெருவிலேயே ஊசி விற்கிறீர்கள்!” என்று கேட்கவும், அவள் வார்த்தையின் உட்பொருள் உணராத் தலைவன், “என்ன சொல்கிறாய் பெண்ணே! சற்று விளங்கும்படியாகத்தான் சொல்லேன்?” என்றான்.

    ”ஐய! போர்க்களம் குருதியால் செங்களமாகும்படி glory lillyஅவுணர்களைக் களமாடி அழித்த செங்கோல் அம்பையும், செங்கோட்டு யானையையும் உடைய கழலும் தொடியணிந்த செவ்வேள் முருகனின் இக்குன்றம் செங்காந்தள் பூங்கொத்துக்களால் நிறைந்துள்ளதைத் தாங்கள் காணவில்லையோ” என்று குறும்பாய்க் கேட்டுவிட்டு அவன் கையுறையை மறுத்து அவ்விடம் விட்ட கன்றாள்.

    செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
    செங்கோ லம்பின் செங்கோட்டி யானைக்
    கழல்தொடிச் சேஎய் குன்றம்
    குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
      (குறுந்: 1 – தீப்புத்தேளார்/திப்புத்தோளார்)

    ”அடடா! இங்கே நோக்குமிடமெல்லாம் நீக்கமறப் பூத்துக்கிடக்கும் செங்காந்தள் மலர்களை ஏதோ கிடைத்தற்கரிய பொருளைப்போல் நான் கையுறையாய்க் கொணர்ந்தது மெய்யாகவே மடமைதான். அதனை இந்தப்பெண் எத்தனை நாசூக்காகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்! இவள் பலே கெட்டிக்காரிதான் என்பதில் ஐயமில்லை” என்று எண்ணிக்கொண்டான் தலைவன்.

    அதன்பின்னர், தலைவியும் தோழியும் வாழும் சிறுகுடியினரின் சேரிக்கு அவன் தினந்தோறும் வருவானாயினன். இவ்வாறு அவன் நாள்தவறாது தலைவியைக் காண வருவதும், அவள் அன்பு கிடைக்காது வறிதே மீள்வதும் தோழியின் மனத்தில் இரக்கத்தைச் சுரக்கச்செய்தது. தலைவியை எப்படியாவது அவனோடு சேர்த்துவைக்கவேண்டும் எனும் எண்ணம் அவளுள் எழுந்தது.

    ஒருநாள் சமயம்பார்த்துத் தலைவியிடம் தோழி மென்மையாக, ”அருமைத் தோழி! நம் சேரிக்கு நிதமும் வந்து நம்மிடம் இன்மொழி கூறுகின்றானே ஓர் இளவல்…அவன், தான் வந்தநோக்கம் நிறைவேறாததால் நொந்த மனத்தோடும் ஒளிகுன்றிய முகத்தோடும் நிற்கக் காண்கிறேன்; துன்பத்தைப் புலப்படுத்தும் அவன் பைதல்நோக்கைச் சற்றேனும் நீ மாற்ற நினையாயோ? இனிய கடுங்கள்ளையுடைய ’அகுதை’யின் (மதுரையில் வாழ்ந்த ஒரு வள்ளல்) பின்னே வெள்ளியகோலோடு நிற்கின்ற அகவன்மகளிர் (குறிசொல்லும் கட்டுவிச்சியர்), அவன் தரும் மடப்பிடிப் பரிசிலைப் பெறுதலையே தம் நோக்கமாகக் கொண்டு நிற்பதைப்போல் நீண்டநேரம் இங்கேயே நிற்கும் தலைவனும் நம்மிடம் வேறெதையோ எதிர்பார்க்கின்றான்” என்று அவன் உளக்குறிப்பைத் தலைவிக்கு உணர்த்தினாள்.

    சேரி  சேர  மெல்ல  வந்துவந்து
    அரிது  வாய்விட் டினிய  கூறி
    வைகல்  தோறும்  நிறம்பெயர்ந்  துறையுமவன்
    பைதல்  நோக்கம்  நினையாய்  தோழி
    இன்கடுங்  கள்ளின்  அகுதை  பின்றை
    வெண்கடைச்  சிறுகோ  லகவன்  மகளிர்
    மடப்பிடிப்  பரிசில்  மானப்
    பிறிதொன்று  குறித்ததவ ன்  நெடும்புற  நிலையே. (குறுந்: 298 – பரணர்)

    [ஈதொப்ப, தலைவனுக்காகத் தோழி பரிந்துபேசும் பாடலொன்று கலித்தொகையிலும் காணக்கிடைக்கின்றது.

    கயமல  ருண்கண்ணாய்  காணா  யொருவன்
    வயமான்
     அடித்தேர்வான்  போலத்  தொடைமாண்ட
    கண்ணியன்
     வில்லன்  வருமென்னை  நோக்குபு
    முன்னத்திற்
     காட்டுதல்  அல்லது  தானுற்ற
    நோயுரைக்
     கல்லான்  பெயருமற்  பன்னாளும்(கலி: 37: 1-5)]

    தலைவனின் மனத்தை உணர்த்திய தோழியைத் தன் பார்வையால் எதிர்கொண்ட தலைவி தணிந்த குரலில், ”நான்மட்டும் அவன் உள்ளம் உணரவில்லை என்றா நினைக்கிறாய்? அவன் எண்ணத்தை நான் ஏற்றுக்கொண்டால் அதனால் எனக்கு என்ன துன்பம் வருமோ என்று அஞ்சுகின்றது என் நெஞ்சம்; அதனால்தான் அவனிடமிருந்து விலகியே நிற்கிறேன் கொஞ்சம்” என்றாள் வேதனையோடு.

    ”பெண்ணே! அவனைப் பார்த்தால் உள்ளன்போடு உன்னைக் காதலிப்பவனாகவே தோன்றுகிறது. அவன் காதலை நீ ஏற்றுக்கொள்வதில் தவறொன்றுமில்லை” என்று தலைவிக்குத் துணிவூட்டினாள் தோழி. சிந்தித்துப்பார்த்த தலைவியும் தலைவனின் காதலை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாள். அவர்கள் நெஞ்சங்கலந்த நேயராயினர்.

    ஈண்டு, தோழி குறித்துச் சில வார்த்தைகள் சொல்ல விழைகின்றேன்…

    அகத்திணை இலக்கியத்தில் தலைவியின் இன்னோர் உயிராய்த் திகழ்கின்ற தோழி, அவளின் இன்ப துன்பங்களில் நேரிடையாகப் பங்குகொள்பவள். தலைவியின் காதலைச் சேர்த்துவைப்பதற்கு அவள்படும் பாடுகளும் செய்யும் சூழ்ச்சிகளும் நம்மைத் திகைக்கவைப்பன.

    இந்தத் தோழி யார்? தலைவியின் அயல்வீட்டாளா? அல்லது புதிதாக வந்து நட்புசெய்து கொண்டவளா? என்று கேட்டால் ’இல்லை’ என்றே கூறவேண்டும். இவள் தலைவியை நற்றாயினும் (தலைவியைப் பெற்ற தாய்) கண்ணுங் கருத்துமாய்ப் பேணிவளர்க்கும் செவிலித் தாயின் மகளாவாள்.

    ”தோழி தானே செவிலி மகளே” (தொல்: பொருள்: கள: 123) என்பது தொல்காப்பியம். எனவே தோழி பெரும்பாலும் தலைவியின் வீட்டில் அவளுடனேயே வளரும் அல்லது அவளுடன் அதிகநேரம் உறையும் வாய்ப்பைப் பெற்றவளாயிருப்பாள்.

    இதற்கு மறுதலையாகத் தலைவனின் தோழனாக வரும் பாங்கனோ தலைவனின் காதலைக் கண்டித்து இடித்துரைப்பானே யல்லால் தோழிபோல் துணைநிற்கும் பாங்கினன் அல்லன் என்பதும் இங்கே சுட்டுதற்குரியது.

    மீண்டும் குறுந்தொகைக்குத் திரும்புவோம்…

    நெஞ்சங்கலந்த தலைவன் தலைவியரின் நட்பு நாள்செல்லச் செல்ல நிலத்தினும் பெரிதாய், வானினும் உயர்ந்ததாய் வளர்ந்தோங்கியது.

    தலைவியை நாள்தோறும் தலைவன் சந்திக்க ஏற்ற இடத்தையும் பொழுதையும் முடிவுசெய்யும் பொறுப்பைத் தோழியே மேற்கொண்டாள். இதற்குக் ’குறியிடம்’ என்று பெயர்.

    ஒருநாள் காதலர்கள் சந்திக்குமிடத்தில் மறுநாள் அவர்கள் சந்திப்பு நிகழ்வதைத் தோழி விரும்புவதில்லை. காரணம்… இந்தக் களவுக்காதலை யாரேனும் உளவுபார்த்து ஊரார்க்கும், தலைவியின் பெற்றோர்க்கும் சொல்லிவிட்டால் அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாய், இன்புருகு சிந்தை இடுதிரியாய் இட்டுத் தலைவனும் தலைவியும் ஏற்றிய காதற் சுடர்விளக்கு அணைந்துவிடுமே எனும் அச்சந்தான்!

    [தொடரும்]

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 27

    க. பாலசுப்பிரமணியன்

    திருமந்திரத்தில் ஒரு மந்திரம்

    திருமூலர்-1

    திருமந்திரம் நமக்குக் கிடைத்த ஒரு உன்னதமான  நூல். இதன் உட்கருத்துக்களைப் புரிந்து கொள்ள பல ஆண்டுகளின் சிந்தனையும் பயிற்சியும் தேவை. இருப்பினும் அதில் மேலோங்கி நிற்கும் சில கருத்துக்கள் நம்முடைய தற்போதைய சிந்தனைக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் மிக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது. உதாரணமாக இன்றய சமுதாயத்தில் மனிதர்களின் தன்னிச்சையான போக்கும் சுயநலத்தை மட்டும் வளர்க்கும் சிந்தனைகளும் சமுதாயத்தின் அடிப்படைகளை அரித்துக்கொண்டிருக்கின்றன. “நான்” “எனது” “தனது” என்ற மாயையினால் உந்தப்பட்ட பாச உணர்வுகள் உண்மை உறவுகளையும் இறைவன்பால் இருக்கின்ற அன்பையும் விலக்கி மனிதர்களைத் தனிமரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

    ஆசைகளின்வலையில் சிக்கிக்கொண்ட நாம் நம்மை விடுவித்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றோம். சிறிய ஆசைகள் கூட நம்மைக் கட்டிப்போட்டு வாழ்க்கையின் உண்மைப் பொருளை அறிந்துகொள்ள முடியாமல் தடுத்துவிடுகின்றன.

    இந்த நேரத்தில் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகின்றது.

    ஒரு அரசன் ஒரு நாள் தன்னுடைய மந்திரியை அழைத்து “நம்முடைய நாட்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்களா? யாருக்காவது தேவைகள் ஏதாவது இருக்கின்றதா?” என்று கேட்டான்  அதற்கு பதிலளிக்கும் வகையில் “அரசே, நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை. அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள். யாரும் ஏழ்மையிலோ பசியிலோ வாடவில்லை.” என்றுரைத்தார்.

    மந்திரியின் கூற்றின் உண்மையைக் கண்டறிவதற்காக அன்றிரவு அரசர் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வந்தார். அவ்வமயம் நள்ளிரவில் ஒரு இளைஞன் வேகமாக ஓடுவதைக் கண்டு அவனை நிறுத்தி :”நண்பா, இந்த நள்ளிரவில் நீ எங்கே ஓடிக்கொண்டிருக்கின்றாய்?” எனக் கேட்டார்.

    அவனோ “நண்பரே. நான் ஒரு தொழிலாளி. இன்று மதியம் கோட்டையின் கதவின் அருகில் மன்னைத் தோண்டிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு தங்கக் காசு கிடைத்தது. நல்ல வேளை, யாரும் அதை பார்க்கவில்லை. அதை நான் அந்த இடத்தில் புதைத்து வைத்து விட்டேன். அதை எடுக்கத்தான் போய்க்கொண்டு இருக்கின்றேன். அந்தக் காசு எனக்கு பல நாள்களுக்கு உணவு வாங்க உதவியாக இருக்கும்” என்றான்.

    அவன் நிலையை உணர்ந்த அரசரோ ‘ நண்பா, ஒரு காசுக்காக நீ இவ்வளவு துன்பப்படுகின்றாயே. நான் ஒரு செல்வந்தன். உனக்கு நூறு தங்கக் காசுகள் தருகின்றேன். நீ திரும்பிச் சென்று நன்கு உறங்கு.” என்கிறார்.

    பதிலுக்கு அவனோ “மிக்க நன்றி. நண்பரே. ஆனால் நீங்கள் கொடுக்கும் பணம் தீர்ந்தபின் இந்தக் காசை தேடி நான் வரும்பொழுது இது இங்கு இருக்குமா என்று சொல்வதற்கில்லை. எனவே அதையும் எடுத்து வந்து விடுகின்றேன். பின் உங்கள் பணத்தையும் பெற்றுக்கொள்கின்றேன். ” என்று கூறினான்அரசர் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு தர நினைத்த [பணத்தை உயர்த்தியும் அந்த ஒரு தங்கள் காசின் மீது அவனது பற்று குறைவதாக இல்லை. மனம் நொந்து போன அரசர் கடைசியில் தனது உண்மை வடிவத்தை வெளிப்படுத்தி “நான் இந்த நாட்டு அரசன். எவ்வாறாவது உன் மனத்தை மற்ற நினைக்கின்றேன். ஆகவே இந்த நாட்டின் பாதிப் பகுதியை உனக்குத் தருவதாக முடிவு செய்து விட்டேன்.” என்று சொல்ல அந்தத் தொழிலாளியோ ” அரசே, என்னை மன்னித்து விடுங்கள். உங்களைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளாமல் பேசிவிட்டேன். தங்களுடைய பரந்த மனதிற்கு என் நன்றி. ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் கொடுக்கும் பாதி அந்தக் கோட்டையின் கதவு உள்ள பகுதியாக இருந்தால் மிகவும் நல்லதாக இருக்கும். நான் எப்பொழுது வேண்டுமானாலும் சென்று அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொள்ளலாம்.” என்றான்.

    நம்மில் பலரும் இது போலத்தான்… சிறிய சிறிய ஆசைகளுக்காக இறைவனின் பெரும் கருணையை இழந்து விடுகின்றோம் நமது ஆசைகளே நமக்கு வினையாக அமைகின்றன.

    இதிலிருந்து நாம் எப்படி மீளப்போகின்றோம்  பாசத்தை அறுக்க திருமந்திரம் காட்டிய வழியை விட மற்றொன்று சிறப்பாக அமைய முடியாது.

    இதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்:

    ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்

    ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்

    ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்

    ஆசை விட விட ஆனந்தமாமே

    “சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்ற கூற்றிற்கேற்ப தன்னுடைய ஒரே பாடலிலே மொத்த நூலின் கருத்தை முன்வைத்துள்ளார் திருமூலர்.

    ஆகவே மாயையின் வலைக்குள் சிக்கி ஆசைகளால் சூழப்பட்டு செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் வாழக்கையை வாழும்போது நாம் இன்ப துன்பங்களுக்கு இரையாகின்றோம்.  இந்த மாயையிலிருந்து விலகி தெளிவு பெற்றால் வாழ்க்கையின் முடிவை அமைதியுடனும் மகிழ்வுடன் சந்திக்க நாம் தயாராகி விடுகின்றோம்.

    இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்.

    தேற்றித் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்

    ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே

    மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்

    கூற்றன் வருங்கால் குதிக்கலுமாமே

    திருமந்திரம் காட்டும் இந்த வழிகள் நம் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு நல்லதொரு பாடமாக அமைந்துள்ளது.

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    தொடருவோம்

    Share