இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (249)

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். அடுத்தொரு மடலில் உங்களுடன் உரையாடுவதில் மனமகிழ்வடைகிறேன். சமீபத்தில் அமேரிக்காவில் ஒரு நகரத்தில் மக்களுக்கிடையிலான இனத்துவேஷம் பயங்கர உருவெடுத்தது. விளைவாக நிறவேற்றுமைக்கெதிராகக் குரல் கொடுக்கும் ஓர் இள அமெரிக்க நங்கை இனத்துவேஷி ஒருவரால் காரினால் அடித்துக் கொல்லப்பட்டார். இது நடந்தது திரு. டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் அதிபராயிருக்கும் அமேரிக்க நாட்டில் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். இதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்று பார்ப்போமா?

அந்த நகரில் அமெரிக்க வரலாற்றில் முக்கியமாகக் கருதப்படும் சரித்திரப் பிரசித்தி பெற்ற இராணுவத் தளபதி ஒருவரின் சிலை பலவருடங்களாக வைக்கப்பட்டிருந்தது. அவ்வமேரிக்கத் தளபதியின் காலத்தில் அடிமை முறை நடைமுறையிலிருந்தது. அந்நடைமுறைகளுக்கமைய அத்தளபதியும் பல ஆப்பிரிக்க அடிமைகளைக் கொண்டிருந்தார். ஆனால் இன்றைய அந்நகரத்தில் பல கறுப்பு இனத்தவர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இப்போது அச்சிலை அகற்றப்பட வேண்டும், அச்சிலை இருப்பதால் அது தமது மனதை சஞ்சலத்துக்குள்ளாக்கிறது எனும் கோஷத்தை அந்நகர கறுப்பு இனத்தவர் முன்வைத்தார்கள். அது எப்படி முடியும் ? அது எமது சரித்திர முக்கியம் வாய்ந்ததொரு சிலை அதை அகற்றுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நகரப் பழமைப் பெருமைகளை மதிக்கும் வெள்ளை இனத்தவர் கோஷமிட்டார்கள். எங்காவது ஓரிடத்தில் இனங்களுக்கிடையில் சிறிய பேதமேற்படாதா? அங்கு தாம் புகுந்து ஓர் அரசியல் குழப்பநிலையை உருவாக்கலாம் என்று காத்திருந்த அதிதீவிர இனத்துவேஷிகளை உள்ளடக்கிய தீவிரவாத அமைப்பு அந்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள். விளைவாக அங்குள்ள வெள்ளை இனத்தவர்களின் உணர்வுகளை ஒன்று திரட்டி ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்துக்கு எதிராக இனத்துவேஷத்தை எதிர்க்கும் அந்நகர மக்கள் தாமும் ஓர் எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள். அவ்வூர்வலத்தில் தான் ஒரு இனத்துவேஷி அணியின் மீது தனது மோட்டார் வாகனத்தை மோதியதில் ஓர் இளநங்கை உயிரிழந்தாள்.

அதே பாணியில் இங்கிலாந்தில் சில சிலைகளை அகற்ற வேண்டுமென சில பகுதிகளில் இருந்து கிளம்பியுள்ளது. இது இங்கிலாந்தில் ஊடகங்களில் பல விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது. இங்கேதான் பல முக்கியமான வினாக்கள் எழுப்பப் படுகின்றன. மனித வாழ்க்கை பலவிதமான மாற்றங்களுக்குள்ளாகின்றது. ஆதி மனிதனுக்கும், இன்றைய மனிதனுக்கும் இடையில் காணப்படும் வித்தியாசங்கள் எண்ண முடியாத அளவுக்கு இருக்கின்றன. அன்றைய நிலையில் இருந்து இன்றைய நிலைக்கு மனிதன் மாற்றம் அடையும்போது அவனுடைய வாழ்க்கை முறைகளும் பலவிதமான மாற்றங்களுக்குள்ளாகி வந்துள்ளது. இவ்வாழ்க்கைமுறைகளில் சில இன்றைய உலகுக்கு ஏற்றுக் கொள்ளப்படக்கூடியனவாகவும், வேறுசில ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகவும் இருக்கின்றன. ஆனால் நடந்தவைகள் சரித்திர உண்மைகளே! அவைகளின் மாறுபடாத, திரிபடையாத பதிவுகள்தாம் மனிதனின் வாழ்க்கைச் சரித்திரம் ஆகிறது. எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நடைபெற்ற ஒன்றை நாம் இல்லையேன்று கூறிவிடமுடியாது. அப்படிக் கூறிவிடுவதால் மட்டும் அவை இல்லாமல் போய்விடாது.

அதில் ஒரு பகுதிதான் மனிதனை மனிதன் அடிமைகொள்ளும் நிகழ்வும். ஒரு காலத்தில் அடிமைகளைக் கொண்டிருந்த தலைவர்கள் தான் பின்பு அடிமைத்தளையை உடைத்தெறிந்தவர்களாகவும் இருந்தார்கள் என்பதும் உண்மையே! அதில் ஓர் அங்கமாகத்தான் சில இடங்களில் சிலர் சரித்திர அடையாளங்களாக நிலைநிறுத்தப்படுகிறார்கள்.அப்படி நிறுத்தப்படுபவர்கள் சிலைகளின் சரித்திரத்தில் சில கறுப்பு நிகழ்வுகள் இருந்தால் அச்சிலைகளை பார்ப்பதன் மூலம் அத்தகைய நிகழ்வுகளை இனி உலகில் நடந்தேற அனுமதிக்கக்கூடாது எனும் உறுதி மனதில் ஏற்படவேண்டும். வெறுமையாக அச்சிலையை அகற்றி விடுவதால் மட்டும் சரித்திரத்தை மாற்றியமைத்து விட முடியாது.

சரித்திர உண்மைகள் சரித்திர உண்மைகளே! ஆனால் அவற்றின்மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் மட்டும் முன்னேற்றப்பாதையில் உலகில் அமைதியையும்,சமாதானத்தையும் முன்னிலைப்படுத்துபவையாக இருக்க வேண்டும்.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க