நவராத்திரி 03 (பாடல்)
இசைக்கவி ரமணன்
வாக்கிலொளி மின்னவைத்து
வாழ்விலிருள் பின்னவைத்து
வக்கணையாய் நீ அடிக்கும் கூத்து, இதை
வாழ்த்திடுவர் தூற்றிடுவர் பார்த்து, அம்மா
போக்கிடமே தெரியாமல்
போகும்நதி போலே என்னைப்
புரட்டிப் புரட்டி எடுக்கின்றாய், பொருள்
புரியவில்லை சிரிக்கின்றாய்
பார்க்குமிடம் அத்தனையும்
நீக்கமற நீயிருந்தும்
ஏக்கமெனும் பேய்க்கெனை நேர்ந்தாயே! உயிரில்
எறும்பென எங்கோ ஊர்ந்தாயே! அம்மா
சீக்கிரமே வந்துநில்லுன்
சித்திரத்துப் புன்னகையைச்
செந்தமிழின் தேன்குடத்தில் தேக்கி, இசைப்பேன்
சிந்தனை அபஸ்வரத்தை நீக்கி!
எந்தவினை என்றன்வினை
எந்தவிதி என்றன்விதி
இந்தப் பொய்க்கு இத்தனை அலங்காரம்! அம்மா
எவரிடம் உன்றன் அகங்காரம்? அம்மா
சொந்தமென நாமிருவர்
சொல்லிசொல்லி முத்தமிட்ட
அந்தக்கணம் ஒன்று மட்டும் நிசமே! அந்த
அன்பில் ஒருவர் ஒருவர் வசமே!
சந்தனத்து நந்தவனம்
சக்தியுன்னைக் கொண்டமனம்
சாவுமொரு ஜீவகளை பூணும், பூமி
சார்ந்திடாத மேன்மைபல தோணும்
சந்தையிலே வெய்யிலிலே
சாக்கடையின் ஓரத்திலே
தந்ததென்ன வோஇந்தப் பாடம்? அம்மா
தாங்கவில்லையே விந்தை வேடம்!
என்னபந்தம் இந்தபந்தம்
என்னசொந்தம் இந்தசொந்தம்
ஏழையென்றும் தூங்கியதும் உண்டோ? நீ
எனக்கென ஏங்கியதும் உண்டோ?
மின்னல்களை மீட்டுமுன்றன்
மென்விரலில் என்றன்மனம்
மீண்டும்மீண்டும் கொள்ளை அடிக்கின்றாய், ஏனோ
மிரண்டவனைப் போட்டு வதைக்கின்றாய்
நட்டநடு நெஞ்சுக்குள்ளே
கொட்டக்கொட்ட விழித்திருக்கும்
நாயகியுன் ஒற்றைவிழி என்றும், அதை
நாடும்பொழு தெல்லாமதில் குன்றும்! அந்தக்
கொட்டங்களும் போதும் இந்தக்
கொட்டகையும் போதும், அங்கே
கொட்டிக் கிடக்கின்ற சோழியாடி, நாம்
கொஞ்சிமகிழ் வோம்தமிழில் பாடி!
20.09.2017 / வியாழன் / காலை 7.07