நவராத்திரி – 04
இசைக்கவி ரமணன்
பாதையாய்த் தோன்றிப் பயணமாய் நீள்கிறாள்
பக்கத் துணையாய்ப் பரிந்து வருகிறாள்
ஆதரவில் அன்னையாய், கண்டிப்பில் தந்தையாய்
அக்குவே றாணிவேறாய் அத்தனையும் ஆய்கிறாள்
காதலே தேகமாய்க் கட்டழகாய், நெஞ்சின்
கவனத்தை ஈர்த்துக் கரத்தில் முகர்கிறாள்
சோதனை செய்து புடம்போட்டுக் காய்ச்சுவாள்
சுவடு துளியுமின்றிச் சுத்தமாய் நீக்கிடுவாள்
நெற்றித் திரையிலோ நெஞ்சிலோ நேர்வருவாள்
நேரத்தைக் காலத்துள் நேரே மறைத்திடுவாள்
சற்றும் அசையாமல் சாயாமல் பார்த்திடுவாள்
சாரத்தைக் காட்டிச் சலனத்தைச் சாந்திசெய்து
உற்றுற் றவள்விழி ஊடுருவும் போதில்
உயிர்போகும்; போனவுயிர் உள்நுழையும்; வந்தவுயிர்
பெற்ற அனுபவத்தைப் பேணமுடி யாமல்
பெயர்க்க முயன்று பிழைபோல் விழுகையிலே
வெற்றிச்சங் கூதிடுவாள்! வெள்ளித்தண் டைகிலுங்க
வேதவடி வாளன்று வீதியிலே தென்படுவாள்
என்னவித மெல்லாம் எனக்கருள் செய்கின்றாள்!
ஏழைக் குடிலை எழில்ராணி ஆள்கின்றாள்
மின்னல் களையோலைக் கீற்றாய்ப் புனைகின்றாள்
வீழும் நிலவொளியில் விந்தை வனைகின்றாள்
அன்னை எனைமுழுதாய் ஆட்கொண்டாள்; அந்தரங்க
அம்பலத்தில் தேவியென ஆழ அமர்ந்துகொண்டாள்
சொன்ன விதம்கொஞ்சம்; சொல்லாத தேமிஞ்சும்
நம்புவ தொன்றே நலம்!