Blog

  • வளமான பாரதம் எப்போது?

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியாவில் 89% அதிகப்படியான மழையோ, பெய்யவேண்டிய அளவான மழையோ பெய்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 600 பேர் பெரும்மழையினால் உயிரிழந்துள்ளனர். இரண்டு இலட்சத்து இருபதினாயிரம் மக்கள் தங்கும் வீடுகள் இழந்து பாதுகாப்புப் பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அசாமில் மட்டும் 1 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். வடக்கே கங்கை, பிரம்மபுத்ரா ஆகிய நதிகளிலும் பெரும் வெள்ளம். இந்த வெள்ளம் ஒரிசாவையே புரட்டிப் போட்டுள்ளது. குஜராத் மக்களும் தாங்கொணாத் துயரில் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் குடி நீர் கூட இல்லாமல் மக்கள் அல்லலுற்று தெருவில் இறங்கிப் போராடும் நிலையே உள்ளது. இப்படி இரண்டு பக்கங்களிலும் நேர் எதிராக வாழும் சூழலே நம் இந்தியாவில் நிலவுகிறது. மொழிவாரி மாநிலம் இருக்கட்டும் என்றாலும் நதிகள் மாநில வாரியாக இல்லாமல் அனைத்து நதிகளும் தேசிய உடைமையாக்கப்பட்டு கங்கை – காவேரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினால் ஊழலற்ற பாரதமாக மட்டுமல்லாமல் வளமான பாரதமாகவும் மாறும் என்பது உறுதி. இதன் முதற்கட்டமாக அந்தந்த பகுதிகளில் இருக்கும் நதிகளை இணைத்து இந்த அரியப் பணியை தொடங்கி வைக்கலாம். இதற்கு பொருளாதாரம் ஒரு பிரச்சனை என்றால், நதிநீர் இணைப்பிற்காக ஒரு தனி வரியை ஏற்படுத்தினாலும் மக்கள் மனமுவந்து கட்டக்கூடும். வெள்ளத்தால் உயிரிழக்கும் துயரச் சம்பவங்களும் நடைபெறாமல் தவிர்க்கலாம். ஊழலற்ற பாரதம் என்பதோடு வளமான பாரதத்தையும் மக்கள் எதிர் நோக்கியுள்ளார்கள் என்பதே உண்மை.

    Share
  • மூதறிஞர்கள்(ராஜாஜி & சோ. சார்)….!

    RAJAJI.....!

    ”அடியேன் இரண்டு ஓவியங்கள் கிண்டியில் பொறியியல் படிக்கும் காலத்தில் வரைந்தேன்….இருவருமே மூதறிஞர்கள்….ஒருவர் ‘’ராஜாஜி’’….மற்றவர் ‘’சோ ராமாசாமி’’ அவர்கள்….என்னிடம் இருப்பது மூதறிஞர் திரு.ராஜாஜி அவர்களின் ஓவியம்(இணைத்துள்ளேன்)….திரு. சோ சார் அவர்களின் ஓவியம் டாக்டர் ஜெகதீஸன் சாரிடம் உள்ளது….. ஓவியத்தில் கையெழுத்து வாங்கி தருவதாக ஓவியத்தை வாங்கிச் சென்ற எங்கள் குடும்ப வைத்தியர்(டாக்டர் ஜெகதீஸன் ‘’சோ சாருக்கு’’ நெருங்கியவர்) இப்போது சொர்கத்தில் உள்ளார்(’’டாக்டர் சோ வந்துருக்கார் சொர்கத்திற்கு கையெழுத்து வாங்கி வையுங்கள் அடியேன் வருகையில் கலெக்ட் செய்து கொள்கிறேன்’’)திரு சோ. சார் அவர்களின் ஓவியத்தை மீண்டும் வரைந்தேன்(இணைத்துள்ளேன்)…..’’ராஜாஜி’’ ஓவியத்தில் வாங்கித் தருவதாகச் சொன்ன என் தாத்தாவும் சொர்கம் சென்று விட்டார்….!’’ராஜாஜி’’ ‘’சோ’’ ’’ஜெகதீஸன்’’ மூவரும் சொர்கம் சென்றுவிட்டார்கள்…இருவரின் கையெழுத்துதான் இல்லை அந்தோ….!

    Cho....8888....!

    எனது ‘’சாக்லேட்-கிருஷ்ணா’’ ‘’சோ சாரின்’’ ‘’சம்பவாமி யுகே யுகே’’, வாலி சாரின் ‘’கலியுகக் கண்ணன்’’ inspiration என்றால் மிகையாகாது….திரு.ராஜாஜியும், திரு வெங்கடகிருஷ்ணைய்யங்காரும்(எனது தாத்தா) சொர்கத்தில் ‘’ஸ்வந்திரா பார்ட்டி’’ அமைக்கச் சென்றுள்ளார்கள்….அடியேன் பூமியில்….!

    வாழ்க மூதறிஞர்கள் இருவரும்….. வளர்க அவரது புகழ்….

    என்னால் முடிந்த இரங்கற்பா சோ சாருக்கு….

    ‘’சே’’என்(று) எவருமே சொல்லமாட் டார்துக்ளக்
    ‘’சோ’’என்ற ராமசாமி சொல்வதை; -’’நா’’வென்ற
    நாடகத் தந்தை நயத்தகு வாக்கது
    ஆடகச் செம்பொன் அழகு’’….கிரேசி மோகன்….!

    விவேகா ஃபைன் -ஆர்ட்ஸ் பூஜைப் பாடலில் ‘’ஆடகச் செம்பொன் மேனி முருகனே ‘’(நீலு அண்ணா குரல் தனியாகக் கேட்கும்) என்ற வரி வரும்….முருகரும் அழகு ,சோ சாரின் எழுத்தும் அழகு’’…..!

    Share
  • மணிமேகலையில் கூறப்படும் கடல் பெண் தெய்வங்கள்

    -முனைவர். இரா.ஜெயஸ்ரீ 

         பொங்கிப் பெருகி அலைமோதும் நீரைப் பார்த்த தமிழர்கள் அந்த நீருக்குக் கடல் என்று பெயரிட்டனர். கடத்தற்கு இயலாதது என்ற பொருளை இச்சொல் தாங்கி நிற்கிறது.

    manimekalai

         தமிழ்ப்பெரும் புலவர் தண்டமிழ் ஆசான் சாத்தனார் என்பவரால் புத்த சமயக் கருத்துக்களை நிறுவுவதற்கு எழுந்த காப்பியம் மணிமேகலை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த இக்காப்பியம் பெண்ணின் பெருமைக்குப் பெருமை சேர்ப்பது. இயற்கைக்கு அப்பாற்பட்ட இயற்கை இறந்த காட்சிகள் இந்நூலுள் அதிகம். இக்கட்டுரை மணிமேகலையில் கூறப்படும் கடல் பெண் தெய்வங்கள் குறித்தும் கடல் குறித்தும் ஆராய்கிறது.

    சம்பாபதி

         மணிமேகலைக் காப்பியத்தின் பதிகத்திலேயே சம்பாபதி பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு அப்பெயரும், சம்பாபதியால்தான் உண்டானது என்று புனைந்துரைக்கப்பட்டுள்ளது.

         பிரமதேவன் நாவலந்தீவிற்கே முதன்மையான பதியாக “சம்பாபதி” என்னும் கடல் தெய்வத்தின் பெயரால் இந்நகரை உருவாக்கினான் என்பது அதன் காலப்பழமையைச் சுட்டுகிறது.

         “தெய்வக் கருவும் திசை முகக்கருவும்
         செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
         என் பெயர்ப் படுத்தவிவ் விடும்பெயர்; மூதூர்
         நின்பெயர்ப் படுத்தேன் வாழிய என” (மணி. விழாவறை காதை-(28-31)

         சம்பாபதி காவிரித்தாய்க்கு ஆசியுரை வழங்குவதுபோல் கூறப்படுகிறது. சம்பாபதி நாவலந்தீவின் காவல் தெய்வம். விரித்த செஞ்சடை, செவ்வொளியால் சிவந்த திருமேனி கொண்டு அழகு விளங்கும் மேருவின் உச்சியிலே தோன்றியவள் அவள். சக்கரவாளக்கோட்டமுரைத்த காதையில், தனது மகனை இழந்து தவிக்கும் கோதமை என்ற தாய்க்கு உளவியல் உண்மையை உரைப்பவளாக இவள் காட்டப்படுகின்றாள்.

    மணிமேகலா தெய்வம்

         மணிமேகலா தெய்வம் கோவலனின் குலதெய்வம். “அதன் பெயரையே மாதவி மகளுக்கு இடுக” என்று கோவலன் கூறிய செய்தியும் சிலம்பினுள் காணலாம். உதயகுமரனுக்கு அஞ்சி மணிமேகலை பளிக்கறை புகுந்தாள். அவன் அகன்றவுடன் மணிமேகலையை மணிமேகலா தெய்வம் வான்வழி எடுத்துச்சென்று மணிபல்லவத்தீவில் விடுகிறது.

         “உருவுகொண்ட மின்னே போலத்
         திருவில் இட்டுத் திகழ்தரு மேனியாள்”                     (சக்கரவாளக் கோட்டமுரைத்த காதை 9-10)   என்று பெண்ணுருவம் கொண்டு வந்த ஒரு மின்னல் கொடியைப் போலவும், இந்திரவில்லைப் போலவும் ஒளிபரப்பி அழகினைத் தந்து கொண்டிருக்கின்ற திருமேனி உடையவளாகவும் அவள் தோற்றம் உரைக்கப்படுகிறது.

         உதயகுமரனிடமிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனைகள் கூறுகிறாள். வாழ்க்கையின் அரிய உண்மைகளை மணிமேகலா தெய்வம் கூறுவதுபோல,

         “அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
         கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
         மிக்க நல்லறம் விரும்பாது, வாழும்
         மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ?”

                         (சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை (101-104)     என்று கூறுவதன் மூலம், “இறப்பு உறுதி என்பது தெரிந்தும் நல்லற நெறிகளில் விருப்பமின்றி மக்களுள் வாழ்வோரும் உள்ளனரே” என்ற உலகியல் உண்மைகளைச் சாத்தனார் உரைக்கிறார்.

    மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடையே மணிமேகலையைக் கொண்டு போய்ச் சேர்த்தபின் இரவிலே புகாருக்கு வந்து அரசகுமாரனுக்கு அறிவுரையும் சொல்கிறது. பின்பு மணிமேகலையின் முற்பிறப்புக் கதையினைக் கூறியதோடு மூன்று மந்திரங்களையும் மணிமேகலைக்கு உபதேசித்து மறைந்தது.

    தீவதிலகை

         பாத்திரம் பெற்ற மணிமேகலையின் முன்னர்த் தீவதிலகை தோன்றினாள்.

         “பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை
         தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன்
         தீவதிலகை என்பெயர் – இது கேள்”     (பாத்திரம் பெற்றகாதை (27-29)

         என்று, “ பழுதற்ற தோற்றத்தினை உடைய நன்மையைத் தரக்கூடிய இந்த மாணிக்கப் பீடிகையைக் காவல் காக்கும் பணியினை மேற்கொண்டிருக்கின்ற தீவதிலகை யான்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாள். இலங்கையில் யாழ்ப்பாணப் பகுதியில் “இரத்தினகிரி” எனும் ஒரு நகரமும், “சமனெலை” எனவும் வழங்கப்படும் “சிவனொளி பாதமலை” இதுவே என்பாரும்  உளர்.

         மணிமேகலைக் காப்பியத்தின் பாவிகமான பசிப்பிணி போக்குதலைத் தீவதிலகை வாயிலாகக் கூறுகிறார் காப்பிய ஆசிரியர்.

         குடிப்பிறப்பு அழிக்கும், விழுப்பம் கொல்லும்
         பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
         நாணணி களையும்; மாணெழில் சிதைக்கும்;
         பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும், 
         பசிப்பிணி எனும் பாவி”     (பாத்திரம் பெற்றகாதை (76-80)     என்று பசிப்பிணி பற்றிக்கூறி, அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கையிலே மணிமேகலை பெற்ற பின்பு தீவதிலகையின் திருவடிகளை வணங்கினாள் மணிமேகலை.

    நாகநாடு

         ஆதிரையாளின் கணவன் சாதுவன் மரக்கலம் ஏறிப்பொருள் தேடிவர மரக்கலத்தில் பயணம் செய்த காட்சியானது

         “நளியிரு முந்நீர் வளிகலன் வெளவ”
         ஒடிமரம் பற்றி ஊர்திரை உதைப்ப” (ஆதிரை பிச்சையிட்ட காதை (13-14)     என்று கடல்சார் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.

         மணிமேகலையில் 24, 28, 29 ஆகிய காதைகளில் சோழநகரம் கடலால் அழிந்து ஒழிந்த காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. கடல்கோளின் பேரழிவையும், முழு அழிவையும் நேரில் பார்த்தவர்கள் தமிழர்கள் எனலாம். அழிந்த நாகர்நாடு இன்றைய நாகப்பட்டினத்திற்குத் தென்கிழக்காக இருந்திருக்கலாம் என்பர் அறிஞர். க.பா.அறவாணன். (தமிழ் மக்கள் வரலாறு, 134).

    கடல் சார்ந்த உவமைகள்

         மணிமேகலையின் பாட்டி சித்திராபதி உதயகுமரனிடம் சென்று அவன் மணிமேகலையை மணம் செய்து கொள்ளவேண்டும் என்று கூறினாள். அப்போது அவன் அடைந்த மகிழ்ச்சியைக் குறிப்பிடும் போது,

         “ஓங்கிய பௌவத்து உடைக்கலப் பட்டோன்
         வான்புணைப் பெற்றென” (உதயகுமரன் அம்பலம் புக்க காதை 05-66)

    என்ற உவமை குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அலைகள் மிக்கெழுந்து பொங்கிய கடலிடையே மரக்கலம் உடைபட்டுச் சிக்கிய ஒருவன். சிறந்ததோர் புணையினைத் தான் உயிர்தப்பிச் செல்வதற்கு உதவியாகப் பெற்றாற்போல உள்ளம் மகிழ்ந்தான்” என்று கடல் இங்கே காட்சி உவமையாக்கப்பட்டுள்ளது.

    கந்திற்பாவை

         உதயகுமரன் காஞ்சனனால் கொலை செய்யப்பட்ட பிறகு சாதாரண பெண்ணைப்போல அழுது புலம்பிய மணிமேகலையை கந்திற்பாவை தெளிவிக்கிறது. அவள் உயர்கதிக்குச் செல்ல இருப்பவள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

    புண்ணியராசன்

         நாகபுரத்தை அரசாள்வோன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராசன். அவன் மணிகேலையை நீ யார்? என்று வினவ, அவள் தன் கையிலுள்ள ஓடு அவனுடையதே என்றும், மணிபல்லவத்துப் பீடிகையைத் தொழுது பழம்பிறப்பு உணருமாறும் கூற அவனும் கப்பலில் புறப்படுகின்றான். தீவதிலகை புகார் கடலால் கொள்ளப்பட்டதைக் கூறுகிறாள்.

         “அணிநகர் தன்னை அலைகடல் கொள்க”
         என இட்டனள் சாபம், பட்டது இதுவால்”                      (ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை (199-200)  என்று மணிமேகலா தெய்வம் புகார் நகரத்தைக் கடலுள் பட்டு அழியச் சாபமிட்ட செய்தி உரைக்கப்பட்டுள்ளது.

         நாம் வாழுகின்ற இந்த புவிக்கோளின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்டு இருக்கின்றது. உலக நாடுகளின் மொத்தக் கடற்கரை நீளம் 3,15,000 மைல்கள். கடலில் உள்ள தண்ணீர் மொத்த எடை 1,450,00,00,00,00,000,0000 மெட்ரிக் டன்கள் புவியின் மொத்த எடையில் 0.0022 விழுக்காடு. தமிழகத்தில் 1000 கிலோ மீட்டர் நீளம் கடற்கரை உள்ளது. நாம் கடலுக்கு அருகிலேயே வசித்தாலும் அதைப்பற்றி சிந்திப்பதில்லை.

         நமது பழந்தமிழ்ப் பெருமை மீட்போம்!
         கடல் அறிவில் புகழ் குவிப்போம்!

    ***

    ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள் 

    1)    ஐம்பெருங்காப்பியங்கள், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ) இளங்கனி பதிப்பகம், சென்னை.

    2)    மணிமேகலை, புலியூர்க் கேசிகன்.

    3)    க.ப.அறவாணன், தமிழ் மக்கள் வரலாறு, தமிழ்க்கோட்டம், சென்னை.

     

     

    Share
  • பக்கத்து வீடு

    ராஜகவி ராகில்

     

     

    நகரம்

    சீமெந்துக் காடு

    தொலை தூரம் பக்கத்து வீடு

     

    கிராமம் சோலை

    உள் அறைக்குள் பூத்திருக்கும்

    பக்கத்து வீடு

     

    பக்கத்து வீட்டோடு

    பகை கொண்டவன்

    மனிதப் படியிலிருந்து கீழ் இறங்கியவன்

     

    தாகமென்றால்

    கிணற்றோடு வரும்

    பக்கத்துவீடு

     

    பக்கத்து வீடு

    சுவாசம்

    ஒவ்வொரு நாளும் பலகறி வீட்டில்

     

    புன்னகை கண்ணீர்

    பரிமாறுகின்ற பாத்திரம்

    பக்கத்து வீடு

     

    அடுப்பு எரியவில்லை

    அடுத்த வீட்டு நெருப்பில்

    உனக்காகப் பொங்கும் பால்

     

    பக்கத்து வீடுதான்

    முதல் முற்றம் சுற்றம்

     

    பக்கத்து வீடு

    லட்டு

    இனிக்கத் தொடங்கும்  இதய நா

     

    நரம்புகளில் தாலாட்டு ஒலிக்கும்

    பக்கத்து வீடு

    தாய் மடி போலானால்

     

    தூக்கம் தைக்கும்

    பக்கத்து வீடு

    முள்ளென்றால்

     

    பக்கத்து வீட்டோடு காதல் உண்டெனில்

    ஒவ்வொரு நாளும்

    மகிழ்ச்சிக்கு நடக்கும்

    திருமணம்

     

    Share
  • கல்யாணம்

     ரா.பார்த்தசாரதி 

     

    கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல காளை வந்தான்

    கழுத்தில் தாலி ஏறும் வேளை  வந்தது

    மாப்பிள்ளை  காசு கேட்டதால் கல்யாணம் நின்றது

    கல்யாண சந்தையில் மாப்பிள்ளை  ஒரு வியாபார பொருள்

     

    பிள்ளையை விற்கும் பெற்றோரை  பாருங்கள்

    தன்மானம் விற்று, சன்மானம் கேட்கின்ற விபரீதம் பாருங்கள்

    பிள்ளையின் படிப்பும், வேலையும் சந்தைப்பொருள்  ஆனதே

    கரும்பு தின்ன கூலி கேட்கும் அவலம்  ஆனதே!

     

    வரதட்சணை உங்களை பூம்,பூம் மாடாக்கியதே

    வருங்காலத்தில் வரதட்சிணை மறைமுகமாக வசூலாகிறதே

    வரதட்சணைக்கு  தடை விதியுங்கள்

    பெண்ணின் இதயத்தை தட்சணையாக கேட்டிடுங்கள்!

     

    உங்கள் அன்பை பெண்ணுக்கு கைமாறாய் கொடுத்திடுங்கள்

    மகள் இல்லா வீட்டில் , மருமகளை மகளாக நினைத்திடுங்கள்

    மகன் இல்லா வீட்டில்  மருமகனை மகனாய் நினைத்திடுங்கள்

    மாப்பிளைகளே வரும் காலத்தில், பூம்,பூம் மாடாய் இருக்காதீர்கள்

     

    வரதட்சணை  இல்லா வாழ்க்கைத்  துணையை நாடுங்கள்

    பணத்தை குறிக்கோளாய் என்றும் நினைத்திடாதே

    படிப்பிற்கும், அறிவுக்கும், மதிப்பு அளித்து விடு

    விட்டுக்கொடுத்து  வாழ்வதே நன்மை என நினைத்திடு  !

     

     

     

     

    Share
  • பாமரகீர்த்தி: 1: 1

    -இன்னம்பூரான்
    ஜூலை 20 2017

    அரிஜன அய்யங்கார்

    innam

    சென்னை கன்னிமரா நூலகத்தில் இன்றும் கிடைக்கக்கூடிய 923.254 SAM நம்பர் உள்ள நூலின் பெயர் பார்ப்பவரின் கவனத்தைக் கவரும். அதை 1953இல் பதிப்பித்த கணேசர் பதிப்பகத்துக்கும். அதன் ஆசிரியர் திரு.கூ. சம்பந்தம் அவர்களுக்கும் நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

    தற்காலம் இன பேதம், ஜாதி பேதம், மத பேதம் ஆகியவற்றை ஒழிக்கவேண்டும் என்று பிரசாரம் செய்யும் அன்பர்களில் பலர், தடம் மாறி, பிராமணர்களை மட்டும் தாக்குவதில் ஈடுபட்டு வருகிறார்கள். தப்பித்தவறிக் கூடக் கண்கூடாகத் தெரியும் மற்ற ஜாதிகளின் அவலங்களையும், ஜாதிபேதத்தையே அடித்தளமாக வைத்து இயங்கும் அரசியல் தந்திரங்களையும் அவர்கள் கண்டு கொள்ளுவது இல்லை. கடுஞ்சொல் வீசுவது அவர்கள் கையாளும் யுக்தி; திரித்துரைப்பது அவர்களின் வாடிக்கை; அரைத்த மாவை அரைப்பது அவர்களின் கலை; ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு, மாட்டை தூக்கி ஆட்டில் போட்டு கல் உரலை ஆட்டுவது அவர்களின் மாயாஜாலம் என்பது கண்கூடு. அவர்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை பொறுத்தாளவேண்டியவை தான். அதுதான் நம் பண்பாக இருக்கவேண்டும் என்பதால், வரலாற்றின் அடிப்படையில், ஆதாரத்துடன் எழுதப்படும் இந்த பாமரகீர்த்தியையும் குதறலாகாது என்பது என் கருத்து.

    ‘திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அதாவது ஜாதியை படைத்தவன் பிராமணன்; ஜாதியை வைத்து தமிழர்களிடையே பிரிவினையை உண்டாக்கியவன் பிராமணன்; தலித்துகளிடம் தீண்டாமையை ஏற்படுத்தியவன் பிராமணன்: – என்று ஜாதியின் பெயரால் நிகழும் அனைத்திற்கும் பிராமணர்களே காரணம் என்ற கருத்து மையப்படுத்தப்பட்டது.’

    மனிதவியல் உலகளவில், மனிதனின் வக்கிரம் நேற்றும், இன்றும், நாளையும் இருப்பதை உறுதி செய்கிறது. அஃப்ரோ அமெரிக்கர்களை அடிமைப்படுத்தி, கொடுமை செய்த க்ளுஸ்கான் பார்ப்பனன் அல்லன். ஆனால் இந்தியாவின் நசுக்கப்பட்டவர்களுக்கு நலன் தரும் தூணாக திகழ்ந்த மஹாத்மா பூலே (1827-1890) அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் உறுதுணையாக இருந்தவர்கள் நான்கு பிராமண நண்பர்களே. இரட்டை டம்ளர் சமுதாயத்துக்கும் பிராமணர்களுக்கும் ஸ்நானபிராப்தி கூடக் கிடையாது. அவர்களுக்குக் கட்டப்பஞ்சாயத்து செய்யத் தெரியாது. அவர்கள் ஒரு காலகட்டத்தில் கல்வியின் நல்வரவாக ஆதிக்கம் செலுத்தியது உண்டு. மற்ற ஜாதியினர் போல, அவர்களில் நியாயமற்ற ஆதிக்கம் செலுத்தியவர்களும் உண்டு.  அதற்காக, அவர்கள் மீது ஈ வே ரா மாதிரி காறி உமிழ்வது கண்ணியமற்ற போக்கு.  திரு.வி.க. அவர்களின் தேசபக்தன் போல இயங்க வேண்டும். அதே காலகட்டத்தில் தான் தென்னிந்தியாவில் ராஜவிசுவாசமுடைய ஜஸ்டிஸ் கட்சி கோலோச்சியது. மேல்தட்டின் உச்சாணிக்கிளையில் அமர்ந்த அந்த் பிராமணல்லாதார் தன்னார்வ குழுக்களும், கட்சிகளும் நசுக்கப்பட்டவர்களை ஆதரிக்கவில்லை என்றாலும் ஹரிஜன் என்ற காந்தியின் நாமகரணத்துக்கும், அவர் ‘வைஷ்ணவ ஜனதோ’ என்று பக்தி பாடலை அனுபவிக்கும் பின்னணியில் திருமால் பக்தர்களான ஐயங்கார்களுக்கும் ஓர் ஒப்புமை இருக்கிறது என்று ஒர் நண்பர்அரிஜன அய்யங்கார்’ பற்றி அவரிடம் பிரஸ்தாபித்தபோது, ‘எனக்கு இன்று உணர்த்தினார். ஹரிஜன் என்ற சொல் காந்திஜியின் சமுதாயச் சீர்திருத்தத்துக்கும், அரசியலுக்கும் உதவியது. தலித் என்ற சொல் தற்கால அரசியல் அம்பு. தமிழ்ச் சொல்லும் அல்ல. கலோனிய அரசு இவர்களை ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ (Depressed Classes) என்றது. நான் இங்கிலாந்தின் மக்கள் ஆலோசனை மன்றம் பயன்படுத்தும்  ‘நசுக்கப்பட்டவர்கள்’ என்ற சொல்லை (Oppressed classes) என்று உபயோக்கிறேன். அவர்களை நசுக்குவதில் பிராமணர்கள் உள்பட எல்லா மேல்தட்டு ஜாதிகளும் ஈடுபட்டிருந்தன.

    ‘பல முக்கியமான பிராமணர்கள் எப்படி தலித்துகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதன்வழி நீங்களும் வாழவேண்டும் என்பதே.’ என்று மேற்படி நூலை முன்வைத்து திரு. கே.சி. லட்சுமி நாராயணன் எழுதிய ‘தலித்துகளும் பிராமணர்களும்’ பற்றி திரு.ஹரன் பிரசன்னா கூறியது நமது சமுதாயத்தை மேன்மைப் படுத்தக்கூடிய கருத்தாக, எனக்குப்படுகிறது.

    ‘உண்மையில் தலித்துகள் தங்கள் மீது ஆதிக்கத்தை நிகழ்த்தும் உண்மையான ஆதிக்க சாதிகள் எவை என்பதை உணரவேண்டும் என்பதே இந்நூலின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. தேவையான நூல்தான். அதே சமயத்தில், இந்நூல் பிராமணர்கள் தலித்துகளுக்கு ஆற்றிய பங்குக்கு முக்கியமான ஆவணமாகவும் திகழும். அரிஜன அய்யங்கார், கக்கனின் குருநாதர், வைத்தியநாத ஐயர், அம்பேத்கரின் ஆசிரியர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் அபாரம். தலித்துகள் புரிந்து கொள்ளவேண்டும், தலித் தலைவர்கள் உணரவேண்டும் என்னும் ‘சாதி’ நூலுக்கான க்ளிஷேவைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதேபோல் பிராமண வெறுப்பாளர்கள் எளிதில் எரிச்சலடையும் சில வரிகள் ஆங்காங்கே தென்படுவதையும் தவிர்த்திருந்திருக்கலாம். மற்றபடி மிக மிக முக்கியமான ஆவண நூல் இது.’ என்று ஹரன் பிரசன்னா பாரபக்ஷம் இல்லாமல் சொல்வது ஒரு நல்வழியை நமக்குக் கோடு காட்டுகிறது.

    ‘கே.சி.லட்சுமி நாராயணன் அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் அல்லது எந்த இயக்கத்தையும் தாக்கி எழுதவில்லை என்பது பாராட்டத்தக்க விஷயம் ஆகும். நூல் முழுக்க பிராமணர்கள் ஜாதியை உண்டு பண்ணவில்லை; பிராமணர்களுக்கும் தலித்துகளுக்கும் விரோதமில்லை; தலித்துகளுக்கு உதவிய பிராமணர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் – என்று நிறுவுவதிலேயே நூல் தொடர்ந்து செல்கிறது’ என்று தன் விமர்சனத்தில் அவர் கூறுகிறார்.

    சென்னை கன்னிமரா நூலகத்தில் இன்றும் கிடைக்கக்கூடிய 923.254 SAM நம்பர் உள்ள நூலின் பெயர்: அரிஜன அய்யங்கார்.

    இது மானாமதுரை வரலாறு. அங்கு அமெரிக்கா மிஷன் பள்ளியில் ஒரே ஒரு நசுக்கப்பட்டோர் சமூகத்தைச் சார்ந்த மாணவன் திரு.கூ.சம்பந்தத்தை, அவர்களின் பெற்றோரின் அனுமதியுடன்  அவரைத் தன் இல்லத்தில் வைத்துப் பராமரித்தார். பல இன்னல்கள் பட்ட பிறகு தான் அவரால் சம்பந்தத்தை வெள்ளையன் செட்டியார் பள்ளியில் சேர்க்கமுடிந்தது. நானும் அந்த மாதிரி இன்னல்பட்டுத் தோற்றுப் போயிருக்கிறேன். நன்கு படிக்கக்கூடிய நசுக்கப்பட்டோர் இனம் சார்ந்த அன்னையின் விருப்பத்தை நிறைவேற்ற, மிகவும் கஷ்டப்பட்டு ஒரு புகழ் பெற்ற பள்ளியில் சேர்த்தேன். அவனுடைய இனம் பற்றி விண்ணப்பத்தில் பார்த்த தலைமை ஆசிரியர் முகம் சுளித்தார். பள்ளிக் கட்டணம் ஏழையிடமிருந்து வராதோ என்ற சப்பைக்கட்டைக் கூறி தப்பிக்க முனைந்தார். நான் வருடத்துக்கு கட்டினேன். ஆனால், சக மாணவர்களின் இடை விடா கேலிக்கு பயந்து அவனே விலகி விட்டான். இங்கிலாந்திருந்து என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும் நான் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நகராட்சி பள்ளியில் சேர்ந்து நன்றாகப் படித்து, இப்போது நல்ல வேலையில் இருக்கிறான். இது நடந்தது கி.பி.2000. இதிலிருந்து திரு, அரிஜன அய்யங்கார் எத்தனை இன்னல்களுக்கு எதிர்நீச்சல் போட்டிருப்பார் என்று ஊகித்துக்கொள்ளலாம்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    http://www.haranprasanna.in/blog/wp-content/uploads/2011/08/dalit-and-brahmins.jpg

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (244)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். ஒருவாரம் தப்பி மீண்டும் உங்களுடன் மடல் வாயிலாக உறவாட விழைகிறேன். அனைவரது உள்ளத்தின் அடியிலும் வாலிபக்கால கோலங்கள் எங்கோ ஒரு மூலையில் உறைந்து கிடக்கின்றன. முதுமையின் வாசலில் நுழைந்து வாழ்வின் அனுபவ அத்தியாயங்களைப் புரட்டும்போது சிற்சில வேளைகளில் எமக்குப் புத்துணர்ச்சி அளிப்பதற்காக எமது இளமைக்கால இனிமைகளைத் தட்டிப் பார்க்கத் தேவையாகிறது.. இதயம் எனும் வீணையில் இளமைக்கால இனிய அனுபவங்கள் எனும் சங்கீதப் புத்தகத்தைத் தூசு தட்டி ஞாபக ராகங்களை இசைக்கும்போது எழும் உன்னத இசை உள்ளத்தைத் தாலாட்டி மகிழ்விப்பது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொதுவான ஒரு அனுபவமாகும்.
    சரி எதற்காக சக்தி இந்த ஆரம்பத்தோடு மடல் வரைய முற்பட்டான் என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகிறது. காரணம் இருக்கிறது ஒவ்வொருவாரமும் இனிய உறவுகளாம் உங்களுடன் மடல் வாயிலாக மனம் திறப்பது என்பது எனக்கு இப்போது ஒரு சம்பிரதாயச் சடங்காகி விட்டது. ஒரு வாரம் மடல் வரையத் தப்பினால் கூட உள்ளத்தில் ஏதோ தவறிழைத்தது போன்ற உணர்வு. உள்ளத்தை நெருடும். சரி இனி விடயத்துக்கு வருவோம். நான் இங்கிலாந்துக்கு மாணவனாக புலம் பெயர்வதற்கு முன்னால் கடைசியாக எழுபதுகளின் மத்திய பகுதியில் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கல்வி பயின்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில். சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னால் கனடா ரோரோன்றோவில் வசிக்கும் என்னுடன் அதே காலக் கட்டத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் 70பதுகளில் யாழ் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றை மிகவும் கோலாகலமாக வெற்றிகரமாக நடத்தினார்கள்.
    அதற்கு பல தரப்புகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தாலும் இன்னோபின்னோரான காரணங்களினால் என்னால் கலந்து கொள்ள முடியாது போய்விட்டிருந்தது.. ஆனால் அந்த ஒன்றுகூடலின் மகிழ்வான தருணங்களை அதில் கலந்து கொண்ட நண்பர்கள் எடுத்துரைத்த போது எனது மனதில் ஏதோ ஒரு பெரிய வாழ்வில் ஒரேயொரு முறை கிடைக்கக் கூடிய இனிய தருணத்தைத் தழுவ விட்டது போன்ற மனக்குறை நிழலாடியது. இபோது 2017ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு மீண்டும் அதே போன்ற ஒன்று கூடல் நிகழ்வை அதே ரோரொன்றோ நகரத்தில் நிகழ்த்த நண்பர்கள் ஒரு வருடத்தின் முன் முடிவு செய்து அறிவித்த போது தவற விட்ட மகிழ்வான தருணம் மீண்டும் என் வீட்டுக் கதவைத் தட்டுவதைப் போன்ற ஒரு எண்ணம் மனதில் ஆனந்தத்துளிகளை அள்ளித்தெளித்தது.
    என் வாழ்க்கையில் யாருடன் அனைத்தையும் கலந்தாலோசிப்பேனோ , யாரை எனது உற்றதோழியாகக் கருதுகிறேனோ . . . அதுதான் எனது மனைவியுடன் இதைப்பற்றிக் கலந்தாலோசித்தேன். சுமார் 41 வருடங்களின் பின்னால் சந்திக்கப் போகும் எனது பல நண்பர்களை சந்திக்கும் ஆவல் என்னுள்ளத்தில் எத்தனை தூரம் ஆழப்பரவியுள்ளது என்பதை என் மனைவி நன்கறிவாள். ஆயினும் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நாம் மேற்கொண்ட சென்னை விஜயம், அதைத்தொடர்ர்ந்து வரும் நவம்பர் மாதம் நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்த கப்பற்பயணம் என்பனவற்றிக்கு தனது விடுமுறை நாட்களைப் பகிர்ந்து கொண்ட என் மனைவியின் வேலையிலிருந்து மேலதிக விடுமுறை பெற்றுக்கொள்வது அவளுக்கு மிகவும் கடினமாகப் பட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் விருப்ப ஓய்வூதியம் பெற்றுக்கொண்ட எனக்கு வருடமெல்லாம் லீவுதானே ! என்பதைச் சுட்டிக்காட்டிய என் மனைவி ஏன் நான் தனியாக கனடா சென்று இவ்வொன்றுக்கூடல் சந்தர்ப்பத்தில் நண்பர்களின் உறவில் திளைக்கக் கூடாது எனும் வினாவை எழுப்பி என்னை இந்நிகழ்வை நோக்கித் தனியாக பிரயாணம் செய்ய தூண்டி விட்டாள். எங்கு சென்றாலும் எனது மனைவியுடனேயே செல்லும் எனக்கு எமது முப்பத்தியாறு வருட திருமண வாழ்வில் தனியாக மேற்கொள்ளும் மூன்றாவது பயணம். முந்தைய இரு பயணகங்களைப் பற்றி மற்றைய மடல்களில் பேசுவோம்.
    சரி நண்பர்களைச் சந்திக்கப் போகிறோம் என்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்டாக இருந்தாலும் எனது அம்மா வகையிலான சின்னம்மாக்கள் சிலர் கனடாவில் இருப்பது அப்பெரியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டுமே எனும் ஒரு அவாவையும் எனக்கு ஏற்படுத்தியது. அந்நாளும் வந்தது அதாவது ஜூலை 19ம் திகதி விண்ணேகி விட்ட என் அன்னையின் 96வது அகைவைத் தினத்தில் லண்டன் கட்விக் விமானநிலையத்தில் இருந்து எயார் ட்ரான்சாட் விமானத்தில் புறப்பட விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டேன். விமான ஊர்ந்து செல்லத் தொடங்கியது, “டிங்”, “டிங்” எனும் சத்தம் “கப்டன் பேசுகிறேன், எமது விமானத்தின் எஞ்சின்களில் ஒன்று சில பிழையான சமிக்ஞைகளைக் காட்டுகிறது. நாம் திரும்ப விமானத்தை நிறுத்திச் சில பரிசோதனைகளைச் செய்த பின்னர் மீண்டும் அறிவிக்கிறேன்” என்றார். “ போச்சுடா ! ஆரம்பிச்சுட்டாங்கய்யா , ஆரம்பிச்சுட்டாங்க ” என்று வடிவேல் பாணியில் உள்லம் ஓலமிட்டாலும், பரவாயில்லை அனைத்தையும் பரிசோதித்துச் செல்வது நமக்குத்தானே பாதுகாப்பு ” எனும் எண்ணமும் உள்ளத்தின் ஓரத்தில் மின்னலிட்டது.
    ஒருவழியாக அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து என்னையும் எனது மனைவியையும் எனது மைந்தன், மருமகள், பேத்தி ஆகியோரைப்பிரிந்து செல்லும் வேதனையை ஈடு கட்டும் நண்பர்களின் சந்திப்பு எனும் மகிழ்வினையும் கொண்டு கனக்கும் என் இதயத்தையும் சுமந்து கொண்டு எயார் ட்ரான்ஸிட் விமானம் கனடா ரொரான்றோ விமான நிலையத்தை நோக்கிப் பறந்தது.. சரி இனி என்ன விமான நிலையத்தில் எனது உற்ற நண்பன் காத்திருப்பான் பைகளைத் தூக்கிக் கொண்டு அவனுடன் செல்ல வேண்டியதுதானே ! எனும் எண்ணத்தில் ரொரான்றோ விமான நுழையத்தின் குடிவரவு பகுதியை நோக்கி நடக்கும் போதுதான் வளைந்து, வளைந்து பத்துப் பதினொரு வளைவுகளுக்குள்ளால் வரிசையில் செல்ல வேண்டிய நிலையக் கண்ணுற்றதும் பயணத்தின் முடிவு ஒன்றும் அத்தனை இலகுவாக முடியப் போவதில்லை என்பதை உணர்ந்தேன். ஒருவாறு உத்தியோக பரிவர்த்தனைகளை முடித்துக் கொண்டு என்னை நோக்கிக் காத்திருந்த என் உயிர் நண்பனுடன் அவன் வீடு வந்து சேர்ந்ததும் தான் அடுத்த கட்ட நிகழ்வை ஆனந்தத்துடன் நோக்கக் கூடியதாகவிருந்தது.
    அனைத்துக்கும் மேலாக எனது மூத்த சகோதரன் கனடாவில் வசிப்பரின் மகன் ஒரு ஆண்மகவுக்குத் தந்தையாகி என் அண்ணனை தாத்தாவாக்கிய நிகழ்வும் நிகழ்ந்ததினால் அண்ணன் வகையிலான் எனது பேரனைக் காணும் பாக்கியமும் கிடைத்தது. சரி நான் இத்தனையும் குறிப்பிட்டதன் காரணம் ஏன் எனது கடந்த வார மடல் தடைபட்டுப் போனது என்பதை விளக்குவதற்காக என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா ?

    ஆமாம் ” இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ” எனும் எனது பத்தியை இப்போது கனடாவில் இருந்துதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

    இன்னும். . . . வரும். . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender

    களிப்பில் திளைத்துக் களைத்துச் சலித்துப்
    புளிக்கும் பழமாம்இப் பூமி -ஒளித்த
    நிலத்தை வராகமாய் நெம்பிய ஆயர்
    குலத்தோனின் கால்கண்கை கூப்பு….

    உதித்தவா நேற்று, மிதித்தவா இன்று,
    நதிக்கரை நந்தகோபன் நாட்டை :-எதிர்த்ததாய்
    மாமா அனுப்பிய மல்லர் களையன்று
    கோமாளி ஆக்கியவா காப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • மீண்டும் முதல்வராகிறார்!

    பவள சங்கரி

    பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பிரதமர் அவரைப்பாராட்டி தமது சுற்றுரையில் இனி ஊழலை ஒழிப்பதில் இருவரும் இணைந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்!

    நிதிஷ்குமார் மீண்டும் பீகார் மாநில முதல்வராக உறுதிமொழி எடுக்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சுசில் மோடி அவர்கள் துணை முதல்வராகிறார். நடு இரவில் ஆளுநரைச் சந்தித்து நிதிஷ்குமார் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்க அழைக்குமாறு கோரினார். அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது!

    Share
  • விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!

    பவள சங்கரி

    பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகளை நீக்கி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிதி ஆதாரங்களை முடக்கி வைத்ததை இரத்து செய்தும் அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலமாக விடுதலைப் புலிகளின் அமைப்பின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வு கிடைத்திருக்கிறது.

    Share
  • சர்வம் கிருஷ்ணார்ப்பணம்….!

    கிரேசி மோகன்
    ————————————————————–

    சர்வம் கிருஷ்ணார்ப்பணமே கிருஷ்ணா! கிருஷ்ணா!
    மர்மம் இதை அறிவார் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    கர்மம் தனைத் துறப்பார் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    தர்மமே தலைகாக்கும் கிருஷ்ணா! கிருஷ்ணா!

    சேடன் படுத்திருந்தாய் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    மாடுகள் மேய்க்கவந்தாய் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    ஆடலக் காளிங்கன்மேல் கிருஷ்ணா! கிருஷ்ணா!
    நாடகம் பாகவதம் கிருஷ்ணா! கிருஷ்ணா!….

    ஏற்றிய தீபம் அகலை எரித்தது கிருஷ்ணா கிருஷ்ணா
    சாற்றியமாலை சுறுக்காய் ஆனது கிருஷ்ணா கிருஷ்ணா
    ஊற்றிய வெண்ணை உறைந்து போனதே கிருஷ்ணா கிருஷ்ணா
    தேற்றிடு எம்மை தெய்வ நாயகா கிருஷ்ணா கிருஷ்ணா….!கிரேசி மோகன்….!

    Share
  • என்னருமை தாயே பாராளும் நீலாயதாக்ஷியே

    நாகை ராமஸ்வாமி

    unnamed

    சிந்தனை செய்திட்டால் சித்தியும் சித்தியாக்கும்                      சிந்தனையில் வந்தமர் செந்தூர வண்ணவளே                           வந்தனை செய்துன் மலர்ப்பதம் பணியுமெனை                             என்ன வேண்டுமென செவியதில் கேட்பின்

    என்னென்ன வேண்டுமோ அத்துணையும் தந்தனை                     என்னென்ன தகுமோ அதனையும் அளித்தனை                            சின்னவன் எனை நீ சீர்தூக்கி விட்டனை                               வண்ணமிகு வாசமலர் திருமேனி வருடிட                               புன்னகை பூக்குமுன் கருணை முகம் கனிந்திட                           பண்ணுடன் நின் துதி பாடவும் பணித்தனை

    வேறென்ன வேண்டும் திருவே நின் துணையன்றி                      வேறென்ன வேண்டும் நினைப் பணிவதன்றி                            வேறென்ன வேண்டும் நின் நாம ஸ்மரணமன்றி                       வேறென்ன வேண்டும் நின் தாள் நிழலன்றி                        என்றுரைப்பேன்  என்றே உரைப்பேன்                                 என்னருமை தாயே பாராளும் நீலாயதாக்ஷியே

     

    37/2017                                           

    நாகை வை. ராமஸ்வாமி

    http://mio.to/album/Kalakkad+R.+Srinivasan%2C+Kalakkad+R.+Thyagarajan%2C+Lata+Ramchand%2C+Praveena+Avanthikrishan/Nagai+Sri+Neelayadakshi+Ambal+Devotional+Songs+-+Vol+1

    Website links to listen to Ambal songs 

    Raaga.Com  http://play.raaga.com/tamil/album/Nagai-Sri-Neelayadakshi-Ambal-Devotional-Songs-Vol-1-songs-TD02593

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170726 - Gopika geetham -Tiruvadippooram -lr

    ’’ஆடிப்பூ ரத்தாள்அவ் ஆண்டாள் அரங்கனால்,
    நாடினாள் வைகுண்ட நாட்டாமை: -பாடினாள்
    வில்லிபுதூர் வீதி வளையவந்து, பாற்கடல்
    பள்ளிகொண்டான் பாசுரம்மூ பத்து( மூபத்து -முப்பது திருப்பாவை)’’….கிரேசி மோகன்….!

    Share
  • Today II

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் ஜின்மன்
    தமிழாக்கம் : பவள சங்கரி

     

    இன்று II

    heart_handsஆகா ஆன்மா,

    எல்லையற்ற வெளியில் ஓர் ஊதா
    எம் ஆன்மா, வேதனையிலும், தனிமையிலும்!
    இன்றோர் பனித்துகளாய் இருந்துவிடு
    அந்த பாறையில் மோதி துகள்களாய் பறந்துவிடு.

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்-19

    க. பாலசுப்பிரமணியன்

    குருவே சரணம்

    திருமூலர்-1

    இறைவனின் திருவடிகளை  அடைவதற்கு  எத்தனையோ வழிகள் இருக்கிறன. இதுதான் சரி என்ற எந்த ஒரு வழியையும்  ஏற்கமுடியாது நிலையில் மனம் உள்ளது. அந்த நேரத்தில் மனம் சஞ்சலத்திற்கு உட்பட்டு வழிதெரியாமல் திண்டாடுகின்றது. அத்தகைய நேரத்தில்  இருளடைந்த மனதிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி ‘உனக்கு இதுதான் சரியான வழி ” என்ற சொல்லி  வழிநடத்த ஒரு  குருவின் துணை தேவைப்படுகின்றது. அவரே துயருற்ற உள்ளத்திற்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் தென்படுகின்றார். இதனால் தான் பண்டைய காலங்களிலிருந்து  “குகுவின் பெருமை ” எடுத்துச் சொல்லப்படுகின்றது.

    எப்படிப்பட்டவரை நாம் குருவாகக் கொள்ள வேண்டும்? ஒரு முறை குருவின் பாதங்களில் சரணடைந்து விட்டால் எப்படி அவரோடு நாம் உறவாட வேண்டும்? திருமூலர் கூறுகின்றார்:

    கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

    உள்ள பொருள் உடல் அவ்வையுடன் ஈக:

    எல்லாத்தணியும் இடைவிடாதே நின்று

    தெள்ளி அரியச் சிவபதம் தானே.  

    அகத்தில் உள்ள மலத்தை நீக்கி இருளைக் களைந்து ஒளிமயமான இறைவனின் இணையில்லா அனுபூதியை நமக்கு அளிப்பவரன்றோ குரு? அப்படிப்பட்ட குரு நமக்குக்  கிடைக்காவிட்டால், முற்றிலும் முதிர்ச்சியடைந்து மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியாது தன்னுடைய ஆணவத்தால் தன்னை குருவாக நினைக்கின்ற ஒருவர் குருவாக அமைந்துவிட்டால் அப்படிப்பட்ட சீடனின் நிலை என்னவாகும்? அழகாக விளக்குகின்றது திருமந்திரம்:

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;

    குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

    குருடுங் குருடுங் குழிவிழு மாறே. 

    முருகப் பெருமானின் அருள் பெற்ற  அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் முருகனை அழைத்து அவன் அருளை நாடும் பொழுது :”குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.” என அழைக்கின்றார்.

    “ விவேக சூடாமணி”  என்ற வடமொழியில் வரையப்பட்ட நூலில் குருவின் பெருமைகளை விளக்கு ஆதி சங்கரர் ” குரு கருணையின் கடல்” என்றும் “அறிவோடு அடக்கமும் உள்ளடக்கியவர்” என்றும் விளக்குகின்றார்.

    “குருவும் இறைவனும் ஒரேநேரத்தில் என் முன்னே வந்து நின்றால் நான் யார் பாதங்களில் முதலில் விழுவேன் ” என்ற கேள்வி எழுந்த பொது கபீர்தாசர்  சிறிதும் தயக்கமின்றி “முதலில் நான் குருவின் பாதங்களையே நாடுவேன். ஏனெனில்  அவர் தான் எனக்கு இறைவனை அடைய வழி காட்டியவர் ” என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்

    பட்டினத்தாரோ ” இறைவா, குருவாகவும் நீ என்  உள்ளிருந்ததை நான் அறியாத மூடனாக இருந்து விட்டேனே ” என்ற கருத்தை வெளிப்படுத்தும் வண்ணம் கூறுகின்றார்:

    குருவாய்ப் பரமாகித் குடிலைசத்தி நாதவிந்தாய்

    அருவா யுருவான தறிகிலேன் பூரணமே

    குரு  நமக்கு  எவ்வாறு வழி காட்டுகின்றார்?  நம்முடைய  உள்ளத்தையும் சிந்தையையும் சீராக்கி நம்மை பக்குவப்படுத்துவதில் அவர் பங்கு என்ன? இதற்குத் திருமூலரின் விளக்கம் நம்மை வியக்க வைக்கின்றது.

    கருத்த இரும்பே கனம தானான்

    மரித்திரும்  பாகா வகையது போலக்

    குறித்த அப்போதே  குருவருள் பெற்றான்

    மறித்துப் பிறவியில் வந்தணு கானே

    எவ்வாறு இரும்பு  ரசவாதத்  தமையினால் மாற்றம் கண்டு தங்கமாக ஒளிர்கின்றதோ அவ்வாறே குருவின் திருவடிகளில் அடைக்கலம் கொண்ட  சீடன் தன்னுள் இருக்கும் மலங்களை நீக்கி ஒளிர்கின்றன. அது மட்டுமல்ல,  ஒரு முறை தங்கமாக மாறிய  உலோகம் எவ்வாறு மீண்டும் இரும்பாக மாறாதோ அதுபோல் பண்பட்ட உள்ளம் கொண்ட சீடன் ஒரு முறை இறை அனுபூதிக்கு பாத்திரமாக ஆனபின்னே மீண்டும் உலக மாயைகளுக்கு தன்னை இரையாக்கிக் கொள்ளமாட்டான் . ஆகவே குருவின் அருள் ஒவ்வொரு  சீடனுக்கும் இன்றி அமையாதது. அந்த  குருவினுடைய அருள் கிட்ட நாம் என்ன செய்ய வேண்டும் ?

    குருவிடம் பூரண நம்பிக்கை கொண்டு, அவர் சொற்களை  தலைமேற்கொண்டு  அவருடைய பாதங்களில் முழுவதுமாக தங்களை அர்ப்பணித்துக்கொண்டால்  குருவின்  முழு  அருளும் ஆசியும் நமக்குக்  கிட்டும். இந்த நம்பிக்கை அவரை நம்முடைய  அக மலத்தை  அறிந்து  அதற்குத் தேவையான முயற்சிகள் மூலம் அவைகளை நீக்கி நம்முடைய உள்ளத்தை பரிசுத்தமாக்கி  இறை உணர்வின் பாதை தன்னில் கொண்டு சேர்க்கும். திருமூலரின் கீழ்கண்ட பாடல் இந்த நம்பிக்கைக்கு  ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றது.

    இருவி  னைநேரோப்பில்  இன்னருட் சக்தி

    குருவென வந்து குணம்பல நீக்கித்

    தருமெனு  ஞானத்தால் தன் செய லற்றலால்

    திரிமலந்  தீர்த்து  சிவனவ  னாமே .

    தொடரும் …

    Share