க. பாலசுப்பிரமணியன்

குருவே சரணம்

திருமூலர்-1

இறைவனின் திருவடிகளை  அடைவதற்கு  எத்தனையோ வழிகள் இருக்கிறன. இதுதான் சரி என்ற எந்த ஒரு வழியையும்  ஏற்கமுடியாது நிலையில் மனம் உள்ளது. அந்த நேரத்தில் மனம் சஞ்சலத்திற்கு உட்பட்டு வழிதெரியாமல் திண்டாடுகின்றது. அத்தகைய நேரத்தில்  இருளடைந்த மனதிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி ‘உனக்கு இதுதான் சரியான வழி ” என்ற சொல்லி  வழிநடத்த ஒரு  குருவின் துணை தேவைப்படுகின்றது. அவரே துயருற்ற உள்ளத்திற்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் தென்படுகின்றார். இதனால் தான் பண்டைய காலங்களிலிருந்து  “குகுவின் பெருமை ” எடுத்துச் சொல்லப்படுகின்றது.

எப்படிப்பட்டவரை நாம் குருவாகக் கொள்ள வேண்டும்? ஒரு முறை குருவின் பாதங்களில் சரணடைந்து விட்டால் எப்படி அவரோடு நாம் உறவாட வேண்டும்? திருமூலர் கூறுகின்றார்:

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

உள்ள பொருள் உடல் அவ்வையுடன் ஈக:

எல்லாத்தணியும் இடைவிடாதே நின்று

தெள்ளி அரியச் சிவபதம் தானே.  

அகத்தில் உள்ள மலத்தை நீக்கி இருளைக் களைந்து ஒளிமயமான இறைவனின் இணையில்லா அனுபூதியை நமக்கு அளிப்பவரன்றோ குரு? அப்படிப்பட்ட குரு நமக்குக்  கிடைக்காவிட்டால், முற்றிலும் முதிர்ச்சியடைந்து மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியாது தன்னுடைய ஆணவத்தால் தன்னை குருவாக நினைக்கின்ற ஒருவர் குருவாக அமைந்துவிட்டால் அப்படிப்பட்ட சீடனின் நிலை என்னவாகும்? அழகாக விளக்குகின்றது திருமந்திரம்:

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழு மாறே. 

முருகப் பெருமானின் அருள் பெற்ற  அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் முருகனை அழைத்து அவன் அருளை நாடும் பொழுது :”குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.” என அழைக்கின்றார்.

“ விவேக சூடாமணி”  என்ற வடமொழியில் வரையப்பட்ட நூலில் குருவின் பெருமைகளை விளக்கு ஆதி சங்கரர் ” குரு கருணையின் கடல்” என்றும் “அறிவோடு அடக்கமும் உள்ளடக்கியவர்” என்றும் விளக்குகின்றார்.

“குருவும் இறைவனும் ஒரேநேரத்தில் என் முன்னே வந்து நின்றால் நான் யார் பாதங்களில் முதலில் விழுவேன் ” என்ற கேள்வி எழுந்த பொது கபீர்தாசர்  சிறிதும் தயக்கமின்றி “முதலில் நான் குருவின் பாதங்களையே நாடுவேன். ஏனெனில்  அவர் தான் எனக்கு இறைவனை அடைய வழி காட்டியவர் ” என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்

பட்டினத்தாரோ ” இறைவா, குருவாகவும் நீ என்  உள்ளிருந்ததை நான் அறியாத மூடனாக இருந்து விட்டேனே ” என்ற கருத்தை வெளிப்படுத்தும் வண்ணம் கூறுகின்றார்:

குருவாய்ப் பரமாகித் குடிலைசத்தி நாதவிந்தாய்

அருவா யுருவான தறிகிலேன் பூரணமே

குரு  நமக்கு  எவ்வாறு வழி காட்டுகின்றார்?  நம்முடைய  உள்ளத்தையும் சிந்தையையும் சீராக்கி நம்மை பக்குவப்படுத்துவதில் அவர் பங்கு என்ன? இதற்குத் திருமூலரின் விளக்கம் நம்மை வியக்க வைக்கின்றது.

கருத்த இரும்பே கனம தானான்

மரித்திரும்  பாகா வகையது போலக்

குறித்த அப்போதே  குருவருள் பெற்றான்

மறித்துப் பிறவியில் வந்தணு கானே

எவ்வாறு இரும்பு  ரசவாதத்  தமையினால் மாற்றம் கண்டு தங்கமாக ஒளிர்கின்றதோ அவ்வாறே குருவின் திருவடிகளில் அடைக்கலம் கொண்ட  சீடன் தன்னுள் இருக்கும் மலங்களை நீக்கி ஒளிர்கின்றன. அது மட்டுமல்ல,  ஒரு முறை தங்கமாக மாறிய  உலோகம் எவ்வாறு மீண்டும் இரும்பாக மாறாதோ அதுபோல் பண்பட்ட உள்ளம் கொண்ட சீடன் ஒரு முறை இறை அனுபூதிக்கு பாத்திரமாக ஆனபின்னே மீண்டும் உலக மாயைகளுக்கு தன்னை இரையாக்கிக் கொள்ளமாட்டான் . ஆகவே குருவின் அருள் ஒவ்வொரு  சீடனுக்கும் இன்றி அமையாதது. அந்த  குருவினுடைய அருள் கிட்ட நாம் என்ன செய்ய வேண்டும் ?

குருவிடம் பூரண நம்பிக்கை கொண்டு, அவர் சொற்களை  தலைமேற்கொண்டு  அவருடைய பாதங்களில் முழுவதுமாக தங்களை அர்ப்பணித்துக்கொண்டால்  குருவின்  முழு  அருளும் ஆசியும் நமக்குக்  கிட்டும். இந்த நம்பிக்கை அவரை நம்முடைய  அக மலத்தை  அறிந்து  அதற்குத் தேவையான முயற்சிகள் மூலம் அவைகளை நீக்கி நம்முடைய உள்ளத்தை பரிசுத்தமாக்கி  இறை உணர்வின் பாதை தன்னில் கொண்டு சேர்க்கும். திருமூலரின் கீழ்கண்ட பாடல் இந்த நம்பிக்கைக்கு  ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றது.

இருவி  னைநேரோப்பில்  இன்னருட் சக்தி

குருவென வந்து குணம்பல நீக்கித்

தருமெனு  ஞானத்தால் தன் செய லற்றலால்

திரிமலந்  தீர்த்து  சிவனவ  னாமே .

தொடரும் …

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *