Blog

  • தடமாறும் சொற்கள்

    முனைவர் வே. சுமதி

    தொப்புள் கொடியில்
    முளைவிட்ட
    சொற்பிளம்புகள்
    அறுக்கப்பட்டு
    ஆனந்தஜோதியாய்
    ருத்ரதாண்டவமாடுகிறது….
    பல நேரங்களில்
    உக்கிரமாகவே
    பிரசவமாகி,
    தலைவிரிகோலாமாய்
    தாண்டவமாடுகிறது…
    வலிகளான சொற்கள்
    மௌனத்தின்
    பாதைகளில்
    விழிகளை நோக்கி
    ஒற்றைக்காலில்
    கூத்தாடுகிறது….
    எண்ணங்களின்
    எண்ணற்ற வடிவங்களும்
    நல்லநேரம் பார்த்தே
    நிதானமாய்
    பிரயோகிக்கப்படுகிறது
    கானல்நீராய்…
    யுகயுகமாய் காத்திருந்த
    ஆயுதங்களின்
    கூர்முனைகள்
    நெம்புகோலால்
    பழுதுபார்க்கப்படுகிறது
    புழுக்களிடம்…..

    முனைவர் வே. சுமதி,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி.

    Share
  • கன்னியர் எழுவர் வழிபாடு

    அ.அன்புவேல் எம்.ஏ.,எம்..ஃபில்.,பி.எட்.,(பி.எச்டி)

    தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,

    விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(மகளிர்)

    சங்ககிரி. சேலம் மாவட்டம்.

    அலைப்பேசி: 96004 13310.

    மின்னஞ்சல்-:anbuvelm@gmail.com

    —————————–

    அறிமுகம்

    ஏழு கன்னிமார் என்பவை சகோதரத்துவ உறவுடைய தெய்வீக சக்திகளான ஏழு கன்னிமார்களின் தொகுதியாகும் இந்த ஏழு என்ற எண்ணிக்கையிலான பெண் குழுத்தெய்வங்கள் பல்வேறு சமூகங்களில் வழிபடப்பட்டு வருகின்றன. இனக் குழு மரபுகளிலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் மரபுகளிலும் கன்னடம், தெலுங்கு, போன்ற மொழிகள் பேசும் மக்கள் சமய மரபுகளிலும், வடமொழி மரபுகளிலும் ஏழு பெண் தெய்வங்கள் பற்றிய நம்பிக்கைகளும் வழிபாடுகளும் காணப்படுகின்றன.

    தமிழகத்தில் கன்னியர் எழுவர்

    மாதாக்கள் வழிபாடு தமிழகத்தில் பரவலாக இடம் பெற்றிருப்பதாகும் ஏழு கன்னிகளைப் போல தமிழ்நாட்டு வட்டாரத் தன்மைகளைக் கொண்டிராத இந்த சப்தமாதாக்கள்,தம்முடைய பெயர்கள், புராணங்கள், குணவியல்புகள் போன்ற இதர கூறுகள் அடிப்படையில் வடமொழி மரபுக்குரியனவாக விளங்குகின்றன. சைவ சமய சார்புடையவனவாகத் திகழ்கின்றன. குளக்கரை, காடு, மற்றும் வெட்டவெளிகளிலும் தனிக்கோயில் கொண்டிருக்கும் சப்தமாதக்கள், சிவன் கோயில்களின் பிரகாரங்களையும் அலங்கரிக்கின்றன. இங்கெல்லாம் அவை துணைத் தெய்வங்களாகவே உள்ளன. ஏனைய துணைத் தெய்வங்களுக்குப் பூசை செய்யப்படுவது போலவே இவற்றுக்கும் பூசை செய்யப்படுகிறது. சப்தமாதாக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பெயர்களும், விசேடமான இயல்புகளும் புராணக்கதைகளும் நூல்களில் பதிவாகியுள்ளன. அபிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி ஆகியவையே சப்தமாதாக்கள். சிவன் கோயில் பிரகாரங்கள் தனிக்கோயில்களில் இடம் பெற்றிருக்கும் சப்தமாதாக்களின் சிலைகள் தத்தமது உருவ இயல்பைச் சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் மரத்தடியில் வெட்டவெளியில் இருப்பதால் இவற்றிற்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதில்லை. இன்றைய சூழ்நிலையில் ஏனைய பலதெய்வங்கள் பெற்றிருந்த செல்வாக்கை இவை இழந்துவிட்டன எனலாம். ஆனால் புராணசமய வழிபாட்டைவிட நாட்டுப்புற சமய வழிபாடு வேறுபட்டது.

    “நாட்டுப்புறசமயத்தில் தமிழகத்தின்; தென்மாவட்ட கிராமங்களில் மாரியம்மன், காளியம்மன், பத்ரகாளியம்மன், அரியநாச்சியம்மன் காந்தாரியம்மன், வண்டிமலைச்சியம்மன், உமையம்மாள் ஆகிய எழுவரை வழிபடுகின்றனர்” 1

    என்று டாக்டர் துளசிராமசாமி குறிப்பிடுவதிலிருந்து தென்தமிழகத்தில். கன்னியர் எழுவருக்கும் வழங்கியப் பெயர்களை அறியமுடிகிறது.

    ஆந்திரம் மற்றும் கருநாடகத்தில் கன்னியர் எழுவர்

                கர்நாடகத்திலும் ஏழுசகோதரிகள் பற்றிய குறிப்பு இருக்கிறது. வொய்ட்கெட் என்பவர் தமது நூலில் எழுமாரித் தெய்வங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.

    “அன்னம்மா, சந்தேஸ்வரம்மா, மாயேஸ்வரம்மா, மரம்மா, உடலம்மா, கொக்கலம்மா, சுகஜம்மா ஆகியவை அந்த ஏழுதெய்வங்களாகும். இந்த ஏழு தெய்வங்களுக்கும் துணைத்தெய்வமாக முனிஸ்வரர் என்ற ஆண் தெய்வம் இருக்கிறது”.2

    ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் கண்டுகுறு வட்டத்தில் பொதுவாக கீழ்க்  கண்டவாறு ஏழு சகோதிரிகள் பற்றி அழைக்கிறார்கள்.

    “போலேரம்மா, அங்கம்மா, முத்தியாலம்மா, தில்லி, பொலசி, பங்காரம்மா, மாதம்மா ஆகியனவாகும், பாலேரம்மா என்பது அம்மை நோய் கடவுளாகும். இது நம் மாரியம்மன் போன்ற தெய்வமாகும். இந்த ஏழு தெய்வங்களுக்கும் துணைத்தெய்வமாக போத்திராஜ் என்ற ஆண் தெய்வம் இருக்கிறது”.3

    ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலுள்ள ஏழு சகோதிரிகளும் வீட்டுத் தெய்வமாகவும், ஊர்த்தெய்வமாகவும் வழிபடப்படுகின்றனர் . இதுபோன்று தான் தமிழகத்திலும் வழிபடுகிறார்கள்.

    புராணசமயத்தில்; கன்னியர் எழுவர்

    காஸ்யப முனிவருக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். ஒருவன் ஹிரண்யாசன் மற்றொருவன் ஹிரண்யகசிபு ஆகியோராவர். திருமால் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாசனையும், நரசிம்மஅவதரம் எடுத்து  ஹிரண்யகசிபுவையும் கொன்று விடுகிறார். ஹிரண்யாசனின் மகன் திருமால் பக்தனாக மாறி அரச வாழ்வை துறந்தான். அவனுக்குப்பின் ஆட்சி செய்த அந்தகாசூரன் தமது ஆழ்ந்த தவத்தின் பயனாக பிரம்மாவிடமிருந்து பலவித வரங்களைப் பெற்றான். அதன் காரணமாக அகங்காரமடைந்த அந்தகாசூரன் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவன் அவர்களின் புகார்களை கேட்டுக்கொண்டிருக்கும் போதே அந்தகாசூரன் பார்வதியை தூக்கிச் செல்வதற்காக கைலாய மலைக்கு வந்துவிட்டான். சிவன் மிகவும் கோபமுற்றார் அந்தகாசூரனை அழிப்பதற்கு பூதகணங்களுடன் முற்பட்டார். திருமால் மற்றும் கடவுள்கள் அனைவரும் புறமுதுகிட்டோடினர். சிவன் மட்டும் தனித்து நின்று அசுரன் மீது அம்பு மாறிகளை பொழிந்தார்.  அம்புகள் அசுரன் மீதுபாய்ந்து உடலை துளைத்தன.  இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.  இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் மண்ணில் விழ விழ  பல அந்தகாசூரர்கள் தோன்றினர். சிவன் தமது திரிசூலத்தால் உண்மை அந்தகாசூரனைக் கொன்றார்.

    திருமால் சக்கராயுதத்தால் பிற அந்தகாசூரர்களைக் கொன்றுறொழித்தார்.  அந்தகாசூரர்களின் உடலில் இருந்து பீறிட்டு எழுந்த இரத்தம் மண்ணில் விழுவதைத் தடுப்பதற்காக சிவன் தமது வாயிலிருந்து எழும் தீயிலிருந்து யோகேஸ்வரி எனும் சக்தியை உருவாக்கினார்.  அதே காரணத்துக்காக இந்திரன் முதலானோர்களும் தங்களது சக்திகளை மனைவிகளை அனுப்பினர்.  அவர்களே பிராமணி, மகேஸ்வரி, கௌமாரி, வைஸ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டா ஆகியோர் ஆவர்.  இவர்கள் முறையே பிரம்மன், மகேஸ்வரர், குமரன், விஸ்ணு, வராகர், இந்திரன், எமன் ஆகியோரின் மனைவிகள் ஆவர் என்று புராணங்கள் குறிப்பிடுகிறது.  ஆனால் வராக புராணம் மட்டும் தாய்மார்கள் எண்மர் என்று குறிப்பிடுகிறது.  சிவன் தோற்றுவித்த யோகேஸ்வரியையும் இது சேர்க்கிறது.  தாய்மார் எண்மர் கொண்டசிற்பம் ஒன்று திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் உள்ளது.   இச்சிற்;பம் ‘அஸ்டமாத்திரிகா’ என்று அழைக்கப்படுகிறது இவர்கள் எண்மரும் எட்டுவகையான குணநலன்களை சித்தரிக்கின்றனர்.  அவை முறையே யோகேஸ்வரி காமத்தையும், பிராமண தற்பெருமையும்,  மகேஸ்வரி குரோதத்தையும், கௌமாரி மாகத்தையும், வைஸ்ணவி லோபத்தையும், வாராகி அசூயையும், இந்திராணி மாத்சார்யத்தையும், சாமுண்டா பொய்மையையும் குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.

    “சும்ப–நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப் போர் புரியும்போது அவளுக்கு உதவியாக இத்தேவிகளை உற்பவித்தனர் என்று மார்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. மேலும் காளிதாசரின் குமாரசம்பவம் எனும் காவியததில் சப்தகன்னியர் சிவபெருமானின் பணிப்பெண்டிர் என்ற குறிப்பும் காணப்படுகிறது”4.

                            கன்னியர் எழுவர் பற்றி மற்றொரு புராணகதையில் மகிசாசூரன் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டும் என வரம் பெற்றிருந்தான். அதனால் தேவர்களும், முனிவர்களும் மகிசாசூரனால் துன்பமடைந்தனர். அனைவரும் சிவபெருமானிடம் சென்று தங்களை காத்தருளுமாறு வேண்டினர். உமையம்மையிடம் அனைவரையும் காத்தருளுமாறு வேணடினார் சிவபெருமான் அதனால் உமையம்மை தன்னிலிருந்து சப்தகன்னியர்களை தோற்றுவித்து மகிசாசூரனை அழித்தார். மகிசாசூரன் கொல்லப்பட்டதால் சப்தகன்னியர்களை கொலைப்பாவம் சூழ்ந்தது. அதனை நீக்கவேண்டி சிவபெருமானிடம் சப்தகன்னியர்கள் வேணடினர் சிவபெருமான் கோலியனூர் எனும் தலத்தில் தன்னை வழிபட்டுவருமாறு கூறினார். சப்தகன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான வீரபத்ரனை உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு தட்சணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்து கொலைப் பாவத்தைநீக்கினார் என்றும் கூறப்படுகிறது.

    இவ்வெழுவர் உருவங்களும் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்கள் கொண்டு காணப்படும்;  மேலிருகரங்களி;ல் அவைகளுக்குரிய படைக்கலன் களையும் கீழிருக்கைகள் அபயவரத நிலையையும் கொண்டிருக்கும்.  இடகாலை மடக்கி ஆசனத்தி;ன் மீது வைத்து வலக்காலை கீழே தொங்க விட்டநிலையில் காணப்படுவர்.  எழுவர் உருவங்களோடு சிவனது உருவம் யோகேஸ்வரராக அல்லது வீரபத்ரராகவும் இதனோடு விநாயகரது உருவமும் காணப்படும். தாய்மார் எழுவரும் அமர்ந்துயிருக்க அவர்களின் வலப்பக்கம் கடைசியில் வீரபத்ரரும் இடபக்கம் கடைசியில் விநாயகரும் அமர்ந்திருப்பர். அமர்ந்த நிலையில் காணப்படும் தாய்மார்கள் உருவங்கள் சில இடங்களில் நின்ற நிலையிலும் காணப்படுகின்றன.  நான்கு கரங்கள் மூன்று தலைகள் எனப் பலவாறு பல இடங்களில் வைத்து வழிபாடு செய்கின்றனர்.  ஆயுதங்கள் ஏந்தியும் படைகலன்களைக் கொண்டும், வாகனங்களைக் கொண்டும் காட்சியளிக்கின்றனர். பாட்னா அருங்காட்சியகத்தில் உள்ள அன்னையர் எழுவர் சிற்பங்களில் அவைகளின் இடது தொடைகளின் மேல் குழந்தைகள் காணப்படுகின்றன. இவை கி.பி 12 ஆம் நூற்றாண்டுச் சார்ந்தவை எனக் கருதப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் குழந்தைகள் வைத்திருப்பது போன்ற சிலைகள் எங்கும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தமிழகத்தில் சப்தகன்னிகளாகத்தான் (மணமாகாதப் பெண்களாக) வழிபட்டிருக்கிறார்கள் என எண்ணுவதற்கு இடம் ஏற்படுகிறது.

    தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரம் கலிங்கத்துப்பரணி, தக்கையாபரணி, திருமந்திரம் போன்ற இலக்கியங்களில் தாய்மார் எழுவர் பற்றியக் குறிப்புகள் காணப்படுகிறது.  மேலும் ரிக் வேதத்திலும் தாய்மார் எழுவர் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.

    கோயில்களில் கன்னியர் எழுவர்

     சிவன் திருமால் கோயில்களிலும் ஐயனார், செல்லியம்மன் போன்ற சிறுதெய்வ வழிபாட்டுக் கோயில்களிலும் கன்னியர் எழுவர், கன்னிமார் எனவும் வைத்து வழிபட்டு வருகின்றனர். ஏழு கன்னிமார் வழிபாடு கிராமகோயில்களில் தொன்று தொட்டு மிக முக்கியமான வழிபாட்டுச் சடங்காகவே வழக்கிலிருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  கன்னிக்கோயில், கன்னிமார்கோயில், கன்னிமாரம்மன் கோயில் என்று சுட்டப்படும் கன்னிமார்க்கென்றே அமைந்த தனிக்கோயில்களில் மட்டுமின்றி இருபத்தொரு பந்தி தெய்வங்களில் இடம்பெறும் கோயில்களிலும் கன்னிமார் சிலைகள் இடம் பெறுகின்றன. ஏழு கற்கள் வைத்து வழிபடும் வழக்கம். இன்றும் கிராமப்புற பகுதிகளில் காணப்படுகின்றது.  காடுறை தெய்வக் கோயில்களிலும், மலைப் பகுதிகளிலும் கன்னியர் எழுவரின் சிலைகள் வைத்து வணங்கப்படுகின்றது. சான்றாக சின்னக்கல்வராயன் மலைப் பகுதியில் கல்லூர் என்ற கிராமத்தில் கன்னிமார்களுக்கென்று தனி வழிபாட்டிடம் அடர்ந்த சோலைக்குள் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் கன்னிமார்க் கோயில்கள் நீர்நிலைகள் ஒட்டியே அமைந்துள்ளன. இன்றும் சில இடங்களில் கன்னிமார் ஆறு, கன்னிமார் ஓடை, கன்னிமார்ஏரி, கன்னிமார்க்;குளம் என்று நீர்நிலைகளுக்குப் பெயர் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டங்களிலும் கிராமப்புற மக்கள் மலைகளிலும், காடுகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் மாலை நேரங்களில் கன்னிமார்கள்  நடமாடுவதாக நம்புகின்றனர்.

    நிறைவாக

    தமிழகத்தில் தாய்மார் எழுவர் வழிபாடு பல்லவர் காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து இருந்து வருகிறது.  தாய்மார் எழுவரின் உருவ அமைப்புகள் சில காலகட்டங்களில் சில வித மாறுதல்களும் பெற்றிருக்கின்றன. இதனால் கன்னியர் எழுவர் வழிபாட்டு முறையானது பெருந்தெய்வ வழிபாட்டு முறையிலும், சிறுதெய்வ வழிபாட்டு முறையிலும் இன்றியமையாத ஒரு இடம் வகிக்கிறது என்பதை அறியமுடிகிறது. சோழர் காலத்திய கோயில்கள் அதற்கு முந்தையகால கோயில்களிலும் கன்னியர் எழுவர் சிற்றாலயங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. அதற்குப் பிற்காலத்தில் கன்னியர் எழுவர் வழிபாடு அருகிவிட்டது. கன்னியர் எழுவர் வழிபாடு இந்தியா முழுவதிலும் இருந்ததற்குச் சிற்ப ஓவிய செப்புப் படிமத் தடயங்கள் பல உண்டு. ஆனால் இவர்களுக்குத் தனிச் சிற்றாலயங்கள் எழுப்பும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமே உண்டு.

    ————————————–

    அடிக்குறிப்புகள்

    1. 1. டாக்டர் துளசிராமசாமி, நாட்டுப்புறத்தெய்வங்கள்- பக்கஎண் – 48
    2. இந்திரன் (தொ.ஆ) வேரும் விழுதும; – பக்கஎண் – 20
    3. மேலது, பக்கஎண் – 21
    4. சப்தகன்னியர் வரலாறும் வழிபாடும் தினமலர் நாளிதழ்;சிறபபுத் தொகுப்பு டிசம்பர் – 2016

    துணைநூற் பட்டியல்

    1. இந்திரன் (தொ.ஆ) வேரும் விழுதும்;

    அலைகள் வெளியீடு

    கோடம்பாக்கம் சென்னை– 17

    முதற்பதிப்பு – 2000

    1. இராமசாமி துளசி. முனைவர் நாட்டுப்புறத்தெய்வங்கள்

    விழிகள் பதிப்பகம்

    வேளச்சேரிசென்னை– 42

    முதற்பதிப்பு– 2000

    இதழ்

    1. சப்தகன்னியர் வரலாறும் வழிபாடும் தினமலர் நாளிதழ்

    சிறப்புத் தொகுப்பு

    சென்னைபதிப்பு – 2016

     

     

     

     

    Share
  • திருஞான சம்பந்தர் பாடல்களில் இராவணன் குறித்த தொன்மங்கள்

    ர.சுரேஷ்
    உதவிப்பேராசிரியர்
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
    கோயம்பத்தூர்

    ————————————–

    மதங்களையும், தொன்மங்களையும் சமூகவியல் அடிப்படையில் பல்வேறு அறிஞா்கள் விளக்கியிருக்கின்றனா். எமிலிதா்கைம், மாலினோஸ்கி, லெவிஸ்ட்ராஸ், பிராப் போன்றவா்கள் மதத்தையும் தொன்மத்தையும் சமூக ஒத்திசைவைக் கட்டமைக்கும் நடத்தை வடிவங்களாகக் கண்டனா். சமயம், தொன்மம் என்பவை சமூகத்தோடு கொண்டுள்ள உறவில் ஏற்படும் முரண்அம்சங்களைக் கவனத்தில் எடுத்தவா் மார்க்ஸ் ஆவா். அதேபோல தனிமனித உளவியலில் அடிப்படையாகக் கொண்டு மதத்தையும், தொன்மத்தையும் விளக்கியவா் ப்ராய்ட் ஆவா். இவா்கள் இருவரும் அதுவரையிருந்த மதக்கண்ணோட்டங்களிலிருந்து விலகி மாறுபட்ட சிந்தனைகளை வளா்த்தெடுத்தனா்.
    மார்க்ஸிய வழியில் அதனை மேலும் பல புதிய கருத்தாக்கத் தளங்களுக்குக் கொண்டு சென்றவா்களில் கிராம்சி குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெறுகிறார். கிராம்சி மதம், தொன்மம் இரண்டையும் குடிமைச் சமூகக் கருத்தியல் வடிவங்களாகக் காண்கிறார். அரசு நேரடியான வன்முறைகளின் மூலம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும். குடிமைச் சமூகத்தில் நிலவுகின்ற மதம், இலக்கியம், தத்துவங்கள் போன்றவை மறைமுகமாக ஆளும் வா்க்கத்திற்குச் சாதகமான, பொது மனோபாவத்தை உருவாக்கித் தரும். இதன்மூலம் ஆளும் வா்க்கம், குடிமைச் சமூகத்தின்வழி தனது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்கிறது என்கிறார் கிராம்சி. எனவே கிராம்சியின் கருத்துப்படி, அரசு மற்றும் குடிமைச் சமூகக் கருத்தியல் நிறுவனங்கள் இவை இரண்டுமே ஒன்றையொன்று தொடா்புடைய ஆதிக்க வடிவங்கள் ஆகும். ஒரு வா்க்கம் ஆளும் வா்க்கமாக ஆவதற்கும் இவை இரண்டுமே அவசியமானதாகும்.
    பதினைந்தாம் நூற்றாண்டு இத்தாலியச் சிந்தனையாளா் நிக்கோலோ மாக்கிய வெல்லியின் இளவரசன் என்ற நூலில், கிரேக்கத் தொன்மத்தில் இடம்பெறும் சென்டார் எனும் தொன்மம் உருவகமாய்ப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கிராம்சி சுட்டிக்காட்டியுள்ளார். மனிதத் தலையும் குதிரை உடலும் கொண்ட ‘சென்டார்‘ அரச அதிகாரத்தின் இரட்டைப் பண்புக்கான உருவகம் என விளக்கம் கூறுகிறார்1. அதாவது பலவந்தம் சம்மதம் வன்முறை நாகரிகம் திருஞானசம்பந்தா் பாடல்களில் இத்தகைய இரட்டைப் பண்புடைய தொன்மங்கள் பெருமளவில் பயின்று வந்துள்ளன. அடக்குதல்-ஆட்கொள்ளுதல் எனும் வகையில் இத்தொன்மங்களை இனம் காண முடியும். சிவப்பரம்பொருளை எதிர்ப்பவா்கள் அவரால் தண்டிக்கப்படுதலும், அடிபணிபவா்கள் அவரால் அருளப்படுதலும் பெரும்பாலான தொன்மங்களில் வெளிப்படுகின்றன. பலவந்தம் சம்மதம் என்ற இருவடிவங்களில் ஆளும் வா்க்கக் கருத்துருவங்கள் செயல்படுவதை இவை குறியீட்டு நிலையில் உணா்த்துவதாகக் கொள்ளலாம். இவ்விரு வடிவங்களிலும் தொன்மங்கள் எடுத்துரைக்கப்பட்டு மேலாண்மைக்கான ஒப்புதல் வலியுறுத்தப்படுவதைத் திருஞானசம்பந்தா் பாடல்களில் காணலாம்.
    திருஞானசம்பந்தா்பாடல்களில் இராவணன் பற்றிய தொன்மம்:
    தமிழகமெங்கும் தலயாத்திரை மேற்கொண்ட நாயன்மார்களுள் முதன்மையானவா் திருஞானசம்பந்தா் ஆவார். திருஞானசம்பந்தரின் பாடல்களின் பதிக அமைப்பும் அதன் பொருளமைப்பும் ஏனைய நாயன்மார் பாடல்களில் இருந்து தனித்துக் காணப்படுகிறது. ஒவ்வொரு பதிகத்திலும் இடம்பெறும் பாடல்களின் அமைப்பு நன்கு திட்டமிடப்பட்டதாக, பிரச்சாரத் தன்மையிலானதாக இருக்கிறது. சம்பந்தா் பாடல்கள் ஒவ்வொன்றிலும், பெரும்பாலும் இரண்டு வரிகள் இயற்கை வா்ணனையாகவும் இரண்டு வரிகள் இறைவனைப் பற்றியதாகவும் அமைகின்றன. அவ்வமைப்பு, பிரதேச மாந்தன் வட்டார உணா்ச்சிகளைத் தூண்டி அவா்களை மகிழ்வித்து தன்வயப்படுத்தும் நோக்கத்தோடே அமைக்கப்பட்டிருப்பதை உணரலாம். அதோடு தல இறைவனை அத்தலத்திற்கே உரியவனாகப் புகழும் பகுதிகள், தம் ஊரை, தம் இறைவணக்கத்தைத்தான் பாடுகிறார் எனும் பெருமித உணா;வையும் மக்கள் மனங்களில் கிளா;த்தி, தன்பக்கம் இழுக்கும் நோக்கத்தைக் கொண்டதாக உள்ளது.
    அதற்கடுத்தபடியாக ஏனைய பாடல்கள் இறைவனின் அருட்கோலத்தைப் பாடி, அவனின் அருளும் தன்மையைப், பராக்கிரமத்தைப் பாடி சிவனே யாவனும் மேலான தனிப்பெருங்கடவுள் என விளக்கி, இறுதியாக சமண பௌத்த எதிர்ப்புணா்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இவையெல்லாம் சம்பந்தரின் திட்டமிடப்பட்ட பரப்புரை நோக்கத்தை உணா்த்துகின்றன. தலங்கள்தோறும் தம் மேலாண்மையை நிறுவுவதற்கும் தமக்குச் சாதகமாக மக்களின் பொது மனோபாவத்தை உருவாக்குவதற்கும் இப்பரப்புரை நடவடிக்கைகள் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன எனலாம்
    சம்பந்தா் பதிகம் ஒவ்வொன்றிலும் எட்டாம் பாட்டில் இராவணனைப் பற்றிய குறிப்பு வருகிறது. இத்தொன்மச் செய்தி இடம்பெறுவதற்கான காரணங்களாக ஆ.வேலுப்பிள்ளை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
    “தீயவா் எவருமே இறைவனை நினைத்து வழிபட்டால் அவன் அருளைப் பெறலாம் என்பதே சம்பந்தா் கருத்து என்பதே இதுவரை இப்பகுதிக்குத் தரப்படும் விளக்கம். சம்பந்தா் கருத்து இதுவேயானால், வேறுவகை கூறாது, இராவணன் கதையைத் தெரிந்தெடுத்தற்குக் காரணம் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும். இராமாயணம், பாரதம் என்னும் இதிகாசங்கள் சங்ககாலத்திலிருந்தும், வைதீக சமயப் புராணக் கதைகள் சங்கம் மருவிய காலத்திலிருந்தும் தமிழ்நாட்டில் வழங்கி வந்திருக்கின்றன என அக்கால இலக்கியங்களிலிருந்து கூறலாம். இராவணன் வௌ்ளிங்கிரியெடுத்து அதன்கீழ் நசியுண்டது தவிர வேறு ஒரு இதிகாசப் பகுதியை அல்லது ஒரு புராணக் கதையைச் சம்பந்தா் இவ்விடத்தில் பயன்படுத்தாமைக் கவனிக்கப்பட வேண்டியது. தீயோரும் சிவனை வணங்கி அருள் பெறலாம் என்பதை வேறு ஒரு கதைப் பகுதியும் நன்கு விளக்கமாட்டாது என்று சிலா் ஒரு சமாதானம் கூறலாம். அப்படியானால், பிற்காலங்களில் வாழ்ந்த சுந்தரா், மாணிக்கவாசகா், குமரகுருபரா், இராமலிங்க சுவாமிகள் முதலியவா்கள் இராவணன் பற்றிய இக்கதைப் பகுதியைத் தங்கள்பக்திப் பாடல்களில் குறியாமைக் குறிப்பிடத்தக்கது.
    சமகாலத்தில் வாழ்ந்த அப்பரும் இராவணனைப் பற்றிய அக்கதைப் பகுதியைக் குறிக்கிறார். இவா்கள் இருவரும் இச்செய்தியைப் பயன்படுத்துவதற்கு அக்காலச் சூழ்நிலை காரணமாக இருந்திருக்கலாம் போல் தெரிகிறது. இராவணன் ஒரு பேரரசன், சிவனை மதியாதவன், சிவன் வாழ்விடத்தையே அப்புறப்படுத்தப் பார்த்தான் அவன். அதன் பயனாகச் சிவனால் நசியுண்டான் சிவனருள் பெற்றமையினாலேயே, அவன் பின்பு உயா்வடைந்தான். அப்பரும் சம்பந்தரும் இக்கதைப் பகுதியைத் தங்கள் காலத்திலாண்ட மன்னா்களுக்கு எச்சரிக்கையாகப் பயன்படுத்துகிறார்கள் என்று கருதுவதற்கு இடமிருக்கிறது”2 என்று கூறுகிறார்.
    மேற்கண்ட கூற்று அரச ஆதரவைப் பெறுவதில் இத்தொன்மம் பலவந்தம் -சம்மதம் எனும் இருநிலைப்பட்ட எதிர்வுக் கருத்தியலைக் கொண்டு செயலாற்றியிருப்பதை உணரலாம். மேலும் இவை குடிமைச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்லவ-பாண்டியா் காலத்தில் மன்னா்கள் மட்டுமின்றி பெருவாரியான மக்களும் சமண-பௌத்த மதத்திற்கு மாறியிருப்பதை அறியமுடிகிறது. இவ்வாறு மாறியவா்களில் முன்னா் சைவராயிருந்தவா்களுள் பெரும்பகுதி அடங்குவா். தீவிர சிவபக்தனான இராவணன் சிவனை எதிர்ப்பதால் அவனால் தண்டிக்கப்படுவதும் மீண்டும் சிவனையே சரணடைவதால் அவனால் அருளப்படுவதும் இத்தொன்மத்தின் வாயிலாக எடுத்துரைக்கப்படுகிறது. எனவே சமண-பௌத்த மதங்களுக்கு மாறிய சைவப் பெருமக்களை மீண்டும் சைவ மதத்திற்கே வந்து சேரும்படியான கருத்தும் இத்தொன்மத்தின் வாயிலாக உணா்த்தப்படுகிறது. எனவே பலவந்தம்-ஒப்புதல் என்ற நிலையில் தம் மேலாண்மைக் கருத்தியலை நிறுவ இத்தொன்மத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
    பச்சமும் வலியும் கருதிய அரக்கன்
    பருவரை எடுத்த திண்தோள்களை அடா்வித்து,
    அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள்”3
    “ஆவா! என அரக்கன் அலற அடா்த்திட்டு
    தேவா! என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட
    கோவே! எருக்கத்தம் புலியூர் மிகு கோயில்
    தேவே!4
    எனப் பல பாடல்கள் இறைவன் இராவணனை அடா்த்திட்டு பின்பு அருள் செய்வதை உணா்த்துகிறது. இத்தொன்மத்தின் வாயிலாகவே திருஞானசம்பந்தா் வேதத்தையும் முதன்மைப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.
    தீது இரா மலை எடுத்த(வ்) அரக்கன்
    நீதியால் வேத கீதங்கள் பாட5
    அந்தரத்தில்-தோ் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப
    சுந்தரா்தன் திருவிரலால் ஊன்றி, அவன் உடல் நொpத்து
    மந்திரத்த மறைபாட, வாள் அவனுக்கு ஈந்தானும்6
    என்றும் பல பாடல்கள் பயின்று வந்துள்ளன. இராவணன் கயிலை மலையைப் பெயா்க்க முற்பட்டபோது அவனை தன்கால்விரலால் நரித்துப் பின் அவன் வேதங்களை ஓதக்கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்தான் எனும் கருத்து மேற்கண்ட பாடல்களில் வெளிப்படுகின்றன.
    இராவணன் பற்றிய தொன்மங்களில் இறைப்பேரதிகாரத்தின் தன்மைகளான அச்சம்-அருள் எனும் இரண்டு குணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதிகார அமைப்புகளின் நிலைத்திருப்புக்கு இவை இரண்டுமே அத்தியாவசியமானதாகும். அதிகாரத்தை எதிர்ப்பவா்கள் அவ்வதிகாரத்தைக் கொண்டு தண்டிக்கப்படுபவா் என்பதும், அதிகாரத்திற்கு ஆட்படுவோர் அவ்வதிகாரத்தைக் கொண்டே அருளப்படுவா் என்பதும் ஆளப்படுபவரை ஆளும் அவ்வதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவா்களாக இருக்க வைக்கிறது.
    அரசு மேற்கொள்ளும் அதே நடவடிக்கைகளை இங்கு மதத்தின் பெயரால் திருஞானசம்பந்தரும் மேற்கொண்டிருக்கிறார். பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையிலான முரண் ஆளுவோர்க்கும் ஆளப்படுபவா்களுக்கும் இடையிலான முரணாகக் கருத முடிகிறது. பக்தனுக்கும் இறைவனுக்குமான முரண் பக்தன் வேதத்தைப் பாடுவதால் சமரச நிலையை எட்டுகிறது.
    வேதம் பாடக் கேட்டு சிவன் அருளிய தென்பது வேத மந்திரங்களுக்குரிய சிறப்புத் தகுதியை உணா்த்துவதோடு மக்களிடம் சிவனை முன்னிருத்தி வேத அங்கீகாரத்தைக் கோருவதாகவும் உள்ளது. இத்தொன்மம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால் அது மக்களின் பொதுமனோபாவமாக மாறி அவா்களின் பொதுப்புத்திக்குள் படிந்துவிடும்படி செய்யப்படுகிறது. அரசதிகாரத்தை வென்றெடுக்கவும் அதனைக் குடிமைச் சமூகத்தில் தொடா்ந்து பேணிக் கொள்ளவும் ஆளும் வா்க்கத் தலைமைக்கு இத்தொன்மக்கதைகள் மிகவும் பயன்பட்டிருக்கின்றன.

    அடிக்குறிப்புகள்
    1. எஸ்.வி. ராஜதுரை, வ.கீதா, கிராம்சி புரட்சியின் இலக்கணம், ப.399.
    2. ஆ. வேலுப்பிள்ளை, தமிழா் சமய வரலாறு, பக.70-71.
    3. சம்பந்தா் தேவாரம் முதல் திருமுறை, திருஅச்சிருபாக்கம், பா.77.8.
    4. மேலது., திருஎருக்கத்தம் புலியூர்,பா.89.8
    5. மேலது., திருமார்பேறு, 114:8.
    6. மேலது., திருகோளிலி, 62:8.

    ——————————–

    துணைநூற்பட்டியல்

    1.ராஜதுரை எஸ்.வி., கீதா வ., – கிராம்சி புரட்சியின் இலக்கணம்,
    விடியல் பதிப்பகம்,
    கோயம்புத்தூர்.
    2010.
    2.வேலுப்பிள்ளை ஆ., – தமிழா் சமய வரலாறு,
    குமரன் புத்தக இல்லம்,
    கொழும்புஇசென்னை.
    2011.

    3.கோபாலையா் டி.வி., (ப.ஆ.) – ஞானசம்பந்தா் தேவாரம்,
    (பண்முறைத் தொகுப்பு),
    பிரெஞ்சு ஆய்வுநிறுவன வெளியீடு,
    புதுச்சேரி. 1984.

    Share
  • இரட்டைக் காப்பியங்களில் தூது

     

    சி. திருமலைச்செல்வி

    முனைவர்பட்ட ஆய்வாளர்

    (பதிவு எண். 9156)

    ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி

    குற்றாலம் – 627 802

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

    திருநெல்வேலி – 627 012.

    —————————————————

    ஒரு மொழியின் சிறப்பினையும் வளத்தினையும் அறிய அம்மொழியில் எழுந்துள்ள காப்பியங்களே பெரிதும் துணைநிற்கின்றன. இக்காப்பியங்களை இலக்கண நூல்கள் தொடர்நிலைச் செய்யுள் என்று குறிப்பிடுகின்றன.

    தமிழில் தோற்றம் பெற்ற காப்பியங்கள், காப்பியங்களின் பொருள், தமிழின் இரட்டைக் காப்பியங்களில் இடம்பெறும் தூதுப் பொருண்மைகள், வளர்ச்சிநிலை ஆகியன குறித்து இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.

    காப்பியம் – பொருள் விளக்கம்                                                                           

    ‘காப்பியம்’ என்ற சொல் உணர்த்தும் பொருள் குறித்தும், காப்பியம் என்ற சொல்லின் மொழியாக்கம் குறித்தும் பல்வேறு கருத்து நிலைகள் ஆய்வாளர்களிடையே நிலவுகின்றன.

    ‘காப்பியம்’ என்ற சொல் ‘காவ்யம்’ என்ற வடசொல்லின் திரிபு என்பதைப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, கி.வா. ஜெகந்நாதன், நா. பார்த்தசாரதி முதலானோர் குறிப்பிடுகின்றனர்.

    கலைக்களஞ்சியம் காப்பியம் என்பதற்கு, ‘காவ்யம் என்பதன் திரிபு’ (கலைக்களஞ்சியம், தொகுதி – 6, ப. 247) என்றே குறிப்பிடுகின்றது.  ஆயினும், அ. சிதம்பரனார், துடிசைக்கிழார் முதலானோர் காப்பியம் என்பதனைக் காப்பு + இயம் = காப்பியம் எனக் கொண்டு அது தமிழிச்சொல்லே என நிறுவுகின்றனர்  (சோம. இளவரசு, காப்பியத்திறன், ப. 17).

    தமிழிக் காப்பியங்கள்

    தமிழில் தொன்மைக் காலத்திலேயே காப்பியங்கள் இருந்திருக்க வேண்டும் என்றாலும் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள், கிடைத்துள்ள காப்பியங்களை வகுத்தும் தொகுத்தும் அவற்றைப் பாகுபாடு செய்துள்ளனர்.

    தமிழின் தொன்மையான இலக்கிய வடிவங்களில் காப்பியங்களும் ஒன்று என்பதனையும், அவை அளவால், பொருளால் பகுக்கப்பட்ட திறத்தினையும், ‘‘கி.மு. 2ஆம் நூற்றாண்டளவில் தமிழ்மொழி காப்பிய நிலத்தில் அடியெடுத்து வைத்தது. சிலப்பதிகாரம் தோன்றியது.  இதுவே தமிழின் முதல் காப்பியம். இதனைத் தொடர்ந்து மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலான நூல்கள் இயற்றப்பட்டன.  இவை ஐந்தும் ஐம்பெரும் காப்பியங்கள் எனப் பெயர்பெற்றன. இவை பெருங்காப்பியம் என்று பிரிக்கப்பட்டமையால் வேறு ஐந்து நூல்கள் ஐஞ்சிறு சிறுகாப்பியம் என அழைக்கப்பெற்றன.  அவை உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி என்பனவாகும்” (சோம. இளவரசு, தமிழ் இலக்கிய வரலாறு, ப. 58)  என்று சோம. இளவரசு குறிப்பிடுகிறார்.

    தமிழில் இரட்டைக் காப்பியங்கள்

    சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்களாகப் போற்றப் பெறுகின்றன.  காரணம், ‘இளங்கோ பாட சாத்தனார் கேட்டார்’ என்ற பதிகச் செய்தி இதற்குக் காரணமாகலாம்.  அதோடு மட்டுமல்லாது சிலப்பதிகாரம் முன்கதை; அதன் தொடர்ச்சியான பின்கதையாக மணிமேகலை அமைவதாகும். இரண்டு காப்பயிங்களும் முப்பது காதைகளைக் கொண்டமைந்தவை. இவ்வாறான தொடர்பு காரணமாகவே இரட்டைக்காப்பியம் என்ற கருத்தாக்கம் தோன்றியது.  சிலப்பதிகாரப் பதிகமும் அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையுமே இதற்குச் சான்றுகளாகச் சொல்லப்படுகின்றன.

    கோவலன், கண்ணகி கதையுடன் மணிமேகலையின் தாய் மாதவிக்கு நீக்கமுடியாத தொடர்பிருத்தலும், கோவலனுக்கு அம்மாதவியிடம் பிறந்த மணிமேகலையைப் பற்றியதே காப்பியம் ஆதலும், மணிமேகலைக் காப்பிய நிகழ்ச்சிகள் பலவற்றிற்குக் காரணங்கள் சிலப்பதிகாரக்கதையில் உள்ளவாறு காட்டப்படுதலும், சிலப்பதிகார நிகழ்ச்சிகள் சிலவற்றிற்கு மணிமேகலை விளக்கம் போன்றிருத்தலும் இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என்ற கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளன.

    ‘‘உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்

    உரைசாலடிகள் அருள மதுரைக்

    கூலவாணிகள் சாத்தன் கேட்டான்”

    (சிலப்பதிகாரம், பதிகம். 87-88)

    எனக் குறிப்பிடுவதும்,

     

    ‘‘இளங்கோ வேந்தன் அருளிக்கேட்ப

    வளங்கெழு கூலவாணிகன் சாத்தன்

    மரவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு

    ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனென்”

    (சிலப்பதிகாரம், பதிகம். 95-96)

    எனக் குறிப்பிடுவதும்.

    ‘‘மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய

    சிலப்பதிகாரம் முற்றும்”     (மேலது, பதிகம். 17-18)

    எனச் சிலப்பதிகாரக் கதை மணிமேகலையில் முற்றுப் பெற்றுள்ளது எனக் கூறுவதும் இதற்குச் சான்றுகளாகும்.

    சிலப்பதிகாரத்தில் தூது

    சிலப்பதிகாரத்தில் அகப்பொருள் மரபுகளை இளங்கோவடிகள் காப்பியக் கட்டமைப்புக்கு ஏற்றவகையில் சிறப்புறப்படைத்துள்ளார்.  இதனைக் கானல்வரியில் அமைந்தள்ள பாடல்களில் காணமுடிகிறது.  இவற்றோடு அகப்பொருள் துறைகளில் ஒன்றாகத் தூதுரைக்கும் பாங்கினையும் கதையோட்டத்தில் பொருத்திக் காட்டியுள்ளார்.

    கானல்வரிக் காதையில், தலைமக்கள் தூதுவிடுக்கும் குறிப்போடு தன்னிடத்து மிகுந்து எழுந்த காதல் உணர்வை வெளிப்படுத்தும் புலம்பல்களாக வரும் பாடல்கள் தூதுப் பொருளில் அமைந்துள்ளன.

    ‘‘நேர்ந்ததன் காதலர் நேவி நெடுந்திண்டேர்

    ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே

    பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே

    ஈர்ந்தண் துறையே இதுதகா தென்னீரே”

    (சிலப்பதிகாரம், கானல்வரி, பா. 75)

    எனவரும் அடிகளில் தலைவன் தேர்ச்சுவட்டை அழித்த கடல் ஓசையையும், குளிர்ச்சி பொருந்திய பொழிலையும், ஆணும் பெண்ணுமாகப் புணர்ந்தாடும் அன்னங்களையும், ஈரச்செறிவுடன் கூடிய கடற்துறையையும் தலைவி அழைத்து, தலைவன் தன்னை மறந்திருக்கும் செயல் தகாது என்று உரைக்குமாறு வேண்டி நிற்பதனைக் கூறும் பாங்கினைக் காணலாம்.  அஃறிணைப் பொருள்களை அழைத்துத் தன் துயர்தீர்க்க உதவுமாறு உரைக்கும் தூதுப் பொருண்மை இப்பகுதியில் புலப்படுகிறது.

    கானல்வரியில் அமைந்த மற்றொரு பாடலில், தலைவி குருகு ஒன்றை அழைத்து, தன்னுடைய  நாட்டில் படர்ந்த கானற்பகுதியை அடையாமல் தலைவன் நாட்டில் நிறைந்த கானற்பகுதிக்குச்
    சென்று அங்குள்ள தலைவனிடம் தன் துன்பத்தை உரைக்குமாறு வேண்டுவதனை,

    ‘‘அடையல் குருகே யடையலெங் கானல்

    அடையல் குருகே யடையலெங் கானல்

    உடைதிரைநீர்ச் சேர்ப்பற் குறுநோ யுரையாய்

    அடையல் குருகே யடையலெங் கானல்”

    (சிலப்பதிகாரம், பா. 46)

    என்னும் பாடற்பகுதி உணர்த்துகின்றது. இதில் குருகினைத் தூதாக விடுப்பதனைக் காணலாம். மேலும் இதில் ‘குருகே’ என்பதில் தூது விடுக்கும் பொருளும், ‘உடைநீர்ச் சேர்ப்பன்’ என்பதில் தூது விடுக்கப்படும் தலைவனும், ‘உறுநோய் உரையாய்’ என்பதில் தூதுரைக்க வேண்டிய செய்தியும் பொருந்த வந்துள்ளதனைக் காணலாம்.

     

    சிலம்பில் காமமிக்க கழிபடர்கிளவி

    சிலப்பதிகாரத்தில் காமம் மீதூர்ந்த நிலையில் கானலிடத்தில் சென்று ஆங்கு நிறைந்திருக்கும் பல்வேறு அஃறிணைப் பொருட்களை அழைத்துப் புலம்பும் காமமிக்க கழிபடர்கிளவித் துறைப் பாடல்களைக் காணலாம். இவ்வாறு தூதாக விடுக்கப்படும் பொருள்களில் அன்னம், மாலைப்பொழுது ஆகியன இடம்பெற்றுள்ளன.

    ‘‘சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்

    சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்

    ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்

    சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்” 

    (சிலப்பதிகாரம், பா. 23)

    என்னும் பாடற்பகுதியில் அன்னத்தை விளிப்பதையும்,

    ‘‘பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ

    வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை

    மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்

    ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை

    தீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை

    தூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு களிவியால்”

    (சிலப்பதிகாரம், பா. 49-50)

    என்னும் பாடலில் மாலையை விளிப்பதனையும் காணலாம்.

    இளங்கோவடிகள் காப்பிய நிலையில் தூதினை ஓர் இலக்கிய உத்தியாகவே பயன்படுத்தியுள்ளார்.  மாதவி தன்னை விட்டுப் பிரிந்த கோவலனைக் காண வயந்தமாலை என்னும் தோழியிடத்தில் மலர்க்கடிதம் வரைந்து அனுப்பியதும், வெளியிடம் சென்று கோவலனைக் கண்டு பேசக் கோசிகமாணியைத் தூதாக விடுத்ததும் தூதுப் பொருண்மை உடைய பகுதிகளாகும்.

    காப்பியக் காலத்தில் தூதுவிடுத்த முறை பற்றிய செய்திகள் மாதவி, வசந்தமாலையைத் தூதாக அனுப்பும் நிலைப்பாட்டிலிருந்து தெளிவாகிறது.  மாதவி, கோவலனுக்குத் தூது அனுப்பிய நிலையினை இளங்கோவடிகள்,

    ‘‘சண்பகம் மாதவி தமாலம் கருமுகை

    வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த

    அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை

    எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த

    முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு

    விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட

    ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்

    ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்

    திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,

    ……………..  ……………….. ……………..

    தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து

    விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,

    பசந்த மேனியள் படர்உறு மாலையின்

    வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்

    தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்”

    (சிலப்பதிகாரம், ஊர் அலர் எடுத்த காதை, பா. 1-9)

    என்று எடுத்துரைக்கின்றார். மேலும் இக்காப்பியத்தில் காதல் செய்தியைக் கூறப் பெண் ஒருத்தியைத் தூதாகப் பயன்படுத்துதலும், தலைவனைத் தன்னிலும் உயர்ந்தவனாக எண்ணிய நிலையில் கோசிகமாணியைப் போன்ற தவசியைத் தூதுவராகப் பயன்படுத்துதலும் அக்காலப் பண்பாட்டையும், மாதவியின் உயர்சிறப்பையும் காட்டுவனவாக அமைந்துள்ளன. மேலும், நகருக்குள்ளாகத் தூது செல்லும் நிலை மட்டுமே பெண்ணுக்கு உரியது என்பதும், வெளியிடங்களுக்குத் தூதாகச் செல்வது ஆடவர்க்குரியது என்பதும் இதனால் தெளிவாகின்றது. மேலும் தூதுச் செய்தியை வாய்மொழியாகக் கூறுவதேயன்றிக் கடிதம் மூலமாகவும் கொடுத்தனுப்புவது உண்டு என்பது இதனால் தெளிவாகின்றது.

    இவை மட்டுமன்றி வேறு சில இடங்களிலும் சிலப்பதிகாரத்தில் தூது பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

    பொதிய மலையிடத்தில் உள்ள அகத்திய முனிவன் பெற்ற தென்றல் என்ற தூதன் இளவேனில் வருகையைக் குயிலுக்கு உரைத்தான் என்று குறிப்பிடும் பகுதியில்,

    ‘‘பொதியில் மாமுனி பயந்த இளங்கால் தூதன்”

    (அ. ஆனந்தநடராசன், தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, ப. 56)

    என்று தூது பற்றிய குறிப்பினைக் காணலாம். இதில் இளவேனில் வருகையைக் குயிலோனுக்கு உரைத்தல் என்ற தூதுச் செய்தியும், தூதன் என்ற குறிப்பால் இச்செய்தியை ஆடவரே உணர்ந்தனர் என்ற செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    கால்கோட் காதையில் தூதர்கள் அரசியலில் பெற்றிருந்த சிறப்பினை இளங்கோவடிகள்,

    ‘‘காற்றூ தாளரைப் போற்றிக் காமின்”13

    என்று குறிப்பிடுகின்றார். நடுகற்காதையில் கடைக்கண்ணின் நோக்கத்தைத் தூது என்னும் பெயரால் அகப்பொருள் மரபுநிலைக்கேற்ப,

    ‘‘சிதாரிபரந்த செழுங்கதைத் தூதும்”14

    என்று குறிப்பிடுதலைக் காணமுடிகின்றது. தன் இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்த திருமால், தன் அடியால் பாண்டவர்க்குத் தூதாகவும் சென்றார் என்ற குறிப்பையும்,

    ‘‘பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி”15

    என்று சிலப்பதிகாரத்தில் காணமுடிகின்றது. இவ்வாறாகச் சிலப்பதிகாரத்தில் தூது பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளதனைக் காணமுடிகின்றது.

    மணிமேகலையில் தூதுக் குறிப்புகள்

    மணிமேகலையில் தூது குறித்த செய்திகள் வெளிப்படையாக எவ்விடத்திலும் இடம்பெறவில்லை. எனினும் குறிப்பால் தூதுப் பொருண்மையை உணர்த்தும் பகுதிகள் உள்ளன.

    சித்ராபதி வயந்தமாலையை மாதவியிடம் ஊரலர் எடுத்துரைக்கச் சொல்லி அனுப்புவதும், தன்னிலைமையைச் சித்திராபதிக்கும், தோழிமார்க்கும் எடுத்துக்கூறி சொல்லி, வயந்தமாலையையே மாதவி அனுப்புவதும் தூதுப் பொருண்மையுடையன. இதனை,

    ‘‘நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள்

    காவல் தெய்வம் தேவர்கோற்கு எடுத்த

    தீவகச் சாந்திசெய்தரு நல்நாள்

    மணிமேகலையொடு மாதவி வாராத்

    தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர்

    சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கல்

    தத்துஅரி நெடுங்கண் தன்மகள் தோழி

    வயந்தமாலையை வருக எனக்கூஉய்

    பயன்கெழு மாநகர் அலர் எடுத்து உரை என”16

    என்னும் பகுதியால் அறியலாம்.

    ‘‘மணிமேகலையை மணிபல்லவத் தீவில் வைத்துள்ள செய்தியை மாதவியிடம் கூறச்சொல்லி சுதமதியிடம் தெய்வம் கூறுவதும், அச்செய்தியைச் சுதமதி கூறுவதும் தூதுக் கூறுகளை வெளிப்படுத்தவல்லனவாகும். ஆனால் தூது என்ற சொல்லே மணிமேகலையில் வெளிப்படையாக இடம் பெறவில்லை என்பது நோக்கத்தக்கது”17 என்று அ. ஆனந்தநடராசன் தூது என்ற சொல் மணிமேகலையில் இடம்பெறாது இருப்பதைச் சுட்டியுள்ளார்.

    மணிமேகலை தூதுப் பொருண்மையுடன் இடம்பெற்றிருப்பினும் அதில் தூது என்பது வெளிப்படையாக அமையவில்லை எனத் தெளியலாம்.

    முடிவுரை

    இரட்டைக் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆகிய இரண்டும் காப்பியத் தன்மை மிகுந்து தமிழின்பம் நல்கும் நூல்களாக அமைந்துள்ளன. இவற்றில் தூது பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளமை  அறியமுடிகின்றது.

    சிலப்பதிகாரத்தின் கானல்வரியில் தூது பற்றிய செய்திகள் விளக்கமாக இடம்பெற்றுள்ளன.  மாதவி தன் ஆற்றாமையைத் தீர்த்து வைக்குமாறு குருகு, அன்னம் மாலைப்பொழுது போன்றவற்றைத் தூது விடுப்பதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.  இவை காமமிக்க கழிபடர் கிளவித்துறை சார்ந்தனவாகவும், தூது இலக்கியத் தன்மையைக் கொண்டவையாகவும் அமைந்துள்ளன.

    சித்திராபதியின் தூதுவராக வயந்தமாலை மாதவியிடம் சென்றுள்ளதை மணிமேகலை வழி அறியமுடிகிறது. மணிமேகலையில் தூது என்ற சொல் இடம்பெறவில்லை.

    இரட்டைக் காப்பியங்களிலும் தூது ஓர் காப்பிய அங்கமாகவே இடம்பெற்றுள்ளதையும், அவை கதையோட்ட்த்திற்குப் பெருந்துணை புரிந்துள்ளதையும் இவ்ஆய்வு கட்டுரையால் அறியமுடிகிறது.

    துணைநூற்பட்டியல்

    1. அடியார்க்கு நல்லார் (உ.ஆ) சிலப்பதிகாரம்

    தமிழ்ப் பல்கலைக்கழகம்

    தஞ்சாவூர்

    முதற்பதிப்பு – 1990.

     

    1. கலைக்களஞ்சியம் தொகுதி – 6

    தமிழ் வளர்ச்சிக்கழகம்

    சென்னை

    முதற்பதிப்பு – 1955.

     

    1. இளவரசு, சோம., இலக்கிய வரலாறு

    மணிவாசகர் பதிப்பகம்

    சென்னை

    ஐந்தாம் பதிப்பு – 2002.

     

    1. ஆனந்த நடராசன், அ., தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

    அண்ணாமலை நகர்

    முதற்பதிப்பு – 1997.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    இலைஇலை(இல்லை)நீர் ஏற்பேன், தலைவணங்கி பார்த்தா
    நிலையாமை சொல்லி நிமிர* -கலையாகும்,
    கீதை கொடுத்திடுவேன் குந்திமக னேகேளாய்
    பாதை வகுத்தோன் பகிர்வு…கிரேசி மோகன்….!

    * -எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர் -ராமர்….!
    -கொடுத்தது கண்டனர், கீதையைக் கேட்டனர் -கண்ணன்….!

    Share
  • வாகை அள்ளு!

    கவிஞர் இடக்கரத்தான்

    எப்படியோ போகட்டும் நாடு – என்று எகத்தாளம் பேசுவதும் கேடு – தொடர்ந்து தப்புமிக நடப்பதனை துணிச்சலுடன் எதிர்க்கும் மனம் கொள்ளு – தீங்கு – கிள்ளு!
    எப்படியோ போகட்டும் என்று – உன்னுள் இருக்கின்ற மனசாட்சி கொன்று – பெரும் தப்படியில் செல்வாரை தடுக்கமனம் இல்லாமை குற்றம் – அவலம் – முற்றும்!
    தன்னலத்தார் முகத்திரையும் கிழியனும் – அவர் தலைக்கனமும் முற்றிலுமே அழியனும் – என்றும் பன்னலமும் காக்குமுயர் பண்புள்ளம் கொண்டோரின் உறவு – நல்ல – வரவு!
    நாட்டுநலம் தனைமுற்றும் மறப்பார் – குள்ள நரித்தனங்கள் செய்துவந்து பறப்பார் – பெரும் வேட்டையிட்டு நாடுதனை வேதனையில் தள்வாரை விரட்டு – சக்தி – திரட்டு!
    உன்னாலும் முடியுமடா தம்பி – நாடு உன்னையுமே இருக்குமிக நம்பி – நாளும் முன்நோக்கிச் செல்வதுதான் முழுவெற்றி கொணருமென்று முழக்கு – வெளுக்கும் – கிழக்கு!
    சொன்னதைச் செய்திடலாம் நம்பு – இந்த செகத்தைநம்பு கோலாலும் நெம்பு – வான் மின்னலெனச் செயல்பட்டு மேன்மைமிக நாடடைய வைப்பாய் – செயலில் – மெய்ப்பாய்!
    பத்துவிரல் மூலதனம் இருக்கு – என்று பயமின்றி மீசைதனை முறுக்கு – சிறு சத்தமின்றி வெற்றியுனை சங்கமித்து ஆற்றல்பறை சாற்றும் – ஊர் – போற்றும்!
    தன்னம்பிக் கைதனையும் பெருக்கு – உயர்வை தடுத்துவரும் எதிர்ப்புதனை உருக்கு – என்றும் உன்னைப்புறம் தள்ளும்குறு உணர்வுகளை வேருடனே கிள்ளு – வாகை – அள்ளு!

    கவிஞர் இடக்கரத்தான் – 03.12.2018

    Share
  • கவிஞர் குலோத்துங்கன் (பேரா. வா. செ. குழந்தைசாமி) விருது, அண்ணா பல்கலை, டிசம்பர் 16, 2018 – காலை 10 மணி

    கவிஞர் குலோத்துங்கன் (பேரா. வா. செ. குழந்தைசாமி) விருது, அண்ணா பல்கலை, டிசம்பர் 16, 2018 – காலை 10 மணி. அனைவரும் வருக.

     

    Share
  • சேக்கிழார் பா நயம் – 14 

    =======================

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ————————————————–

     

    திருவாரூரில் மனுநீதிச் சோழன் மைந்தன் ஏறிச்  சென்ற தேர்க்காலில் அடிபட்டு மரணமடைந்த கன்றுக்காக அரசன் மனம் கலங்குகிறான். அப்போது மறையோர் இதற்குப் பிராயச்சித்தம் என்ற கழுவாயை மறைநூலில் சொன்னபடியம், மனுநீதி முறைப்படியும் செய்தால் அரசன் மைந்தன் செய்த தவறுக்குக்  கழுவாய்  தேடலாம் என்கிறார்கள். மறைநூலையும் மனுநீதியையும் நன்கறிந்த மன்னன், அமைச்சர்களும் வேதியர்களும் கூறியதை ‘ வழக்கு’என்றே ஒத்துக்கொள்ள வில்லை! அதனைச் சழக்கு என்று இகழ்கிறான். ‘’நான் மைந்தனை இழக்கிறேனே என்ற வருத்தத்தால் , எனக்கு நீங்கள் கூறும்  வழக்கம், தான் இப்போதுதான் ஈன்ற, மிகவும்  இளமையான கன்றினைப் பறிகொடுத்து அதனால் அந்தத்  தாய்ப்பசு அடையும் மிகுந்த வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தாகி , அந்நோயைத்  தீர்க்குமா?’’ என்று கேட்கிறான். அதனை அடுத்து எக்காலத்துக்கும், எந்நாட்டிற்கும், எப்போதும் பொருந்தும் ஓர் அரச நீதியை வகுத்துக் கூறுகிறான்.

    ‘’ஒருநாட்டைக் காக்கும் அரசன் அக்காவல் கடமையைச் செய்யும்போது, நாட்டுக்கு, அதாவது நாட்டு மக்களுக்கு வாழ்க்கையில் இடையூறாகி, விளைவிக்கும் மிகப்பெரிய ஐவகை அச்சங்களையும்  தீர்த்து அரசாளவேண்டும்’’ என்கிறான். அவை: தன்னால் , தன்பரிசனத்தால், பகைத்திறனால் , கள்வரால், மற்ற கொடிய உயிர்களால் நிகழும் அச்சசங்களாகும்.  மற்ற நால்வகைகளாலும் வரும் இடையூறுகளை அரசன்தானே தீர்க்க வேண்டும்? ஆனால் அரசன் தன்னால் வரும் இடையூற்றினைத் தானே தீர்க்கும் கடப்பாடு உடையவன் ஆவான். அவனாலேயே வரும் இடையூற்றை யார் தீர்க்க வல்லார்?

    ஒருமுறை இராமன் நீராடக் செல்லும் போது , குளக்கரையில் தம் வில்லை நேராகத் தரையில் ஊன்றி நிறுத்தி விட்டு, நீர்நிலையில் நீராடித் திரும்பினான். அப்போது தாம் ஊன்றிய வில்லின் கீழே கொஞ்சம் குருதியைக் கண்டான்! உடனே வில்லை எடுத்துக் கீழே பார்த்தான். அவனது ஊன்றிய வில்லின் கீழே ஒரு தவளை நசுங்கிக் காயத்துடன் இருந்தத்தகு. இராமன் பதறிப்போய் அந்தத் தவளையைக் கையில் ஏந்தித் தடவிக் கொடுத்து காயத்துக்கு மருந்திட்டான். அவன் கரம் பட்டவுடன் தவளையின் அச்சமும் நோயும் நீக்கியது. அவன் தவளையிடம் ‘’ தவளையை நீ குளத்தில் இருந்து கத்தும் ஓசை மிகவும் பெரிதாகவே இருக்குமே? நான் வில்லை ஊன்றிய நேரத்தில் உன்மேல் என் வில்லின் நுனி பட்டு அழுத்திய போது, நீ வலிதாங்காமல் கத்தியிருந்தால், இப்படிக்கு காயம் அடைந்திடிருக்க மாட்டாயே?’’ என்றார். உடனே தவளை வேறெவராலும் எனக்குத் தீங்கு நேர்ந்தால், நான் இராமா, காப்பாற்று! என்று உன்னை வேண்டுவேன்.  ஆனால் உன்னாலேயே எனக்குத் தீங்கு வந்தால் உன்னைவிடப் பெரிய கடவுளாக  யாரையும் நான் அறியேனே!’’ என்றதாம். ஆம்! அரசன் தன்னால் மக்களுக்கு வரும் இடையூற்றைத் தீர்க்க , அந்நாட்டின் அரசனைவிடப் பெரியவர் இல்லாததால் தானே அந்த அச்சத்தை நீக்க வேண்டும். அதனை இந்த வரிசையில் ‘’தன்னால்’’ என்ற சொல்லால் தன்னை முதலில் கூறினான். அரசனால் மக்களுக்கு வரும் இடையூறுகள், அதிக வரியை வசூலித்தல்,அதனையும் வன்முறையால் கவர்தல், மிகுந்த ஏழைக்கு  வரிவிலக்கு அளிக்காமல் , அவரிடமும் உள்ளதைப் பிடுங்குதல், மக்களை வருத்தும் தீங்குகளை நீக்காதிருத்தல், மக்கள் காண்பதற்கு  அரிய நிலையில்காவலர் நடுவில்  இருத்தல், கடுமையான சொற்களைக் கூறுதல், தன்னை இடித்துக் கூறும் நல்லவர் சொல்லை மதித்து ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல், அறநிலையங்களின் சொத்துக்களை அபகரித்தல் ஆகியவை.  இவை என்றைக்கும், எந்நாட்டுக்கும், இன்றைக்கும்பொருந்துவன அல்லவா?

    அடுத்துத்  தன்  பரிசனத்தால் என்ற தொடர். அரசனின் பரிசனம் என்பன, அவரால் நியமிக்கப் பெற்றும், அவரது உறவு, நட்பு முதலான சலுகையைப் பெற்றும் , இறுமாப்புடன் அதிகாரம் செலுத்துவோர். இவர்களை புறநானூறு, வயலில் தாமே புகுந்து அழிவுகளை செய்யும் யானைகளை போன்றோர் என்று கூறுகிறது. அவர்களது தகுதி மீறிய அடக்குமுறையையும் சேக்கிழார் குறிக்கிறார். அதிகாரிகளுக்கு சட்டத்தைக்  கடைப்பிடிக்கத்  தெரியுமே தவிர  நியாயத்தை வழங்கத் தெரியாது. சட்டப்படி வெள்ள  நிவாரணமோ, பஞ்ச நிவாரணமோ வழங்க இடப்பட்ட ஆணையைச் செயல் படுத்துவார்கள். அது சரியான நிவாரணத்தை அளித்து , நியாயமான  முழு உதவியையும் செய்யுமா என்பதை உறுதி செய்ய முடியாது. முழு வீட்டையும் வெள்ளத்தில் இழந்தவர் அரசின் எளிய நிவாரணத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

    அடுத்து ஊனமிகு பகைத்திறத்தால் என்ற தொடர். நாட்டை அழித்து வென்று மக்களை துன்புறுத்தும் வேற்று நாட்டுப் பகைவர், உள்நாட்டிலேயே அழிவுச் செயல்கள் செய்து மக்களைத் துன்புறுத்துவோர், அவர்கள் மக்கள் மேய்க்கும் பசுக்களைக் கவர்வர். கொள்ளையிட்டு மக்களின் பொருள்களைக் கவர்வோர். பெண்களைக் கற்பழித்துத் துன்புறுத்திக் கொல்வோர் ஆகியோராவர். இவர்களைத் தலையெடுக்க விடாமல் அடக்கி வைக்கவும், அழிக்கவும் வேண்டும்.

    அடுத்து கள்வர். இவர்கள் உள்நாட்டில்  வழிப்பறி செய்வோர்.இவர்களை தண்டிக்க   வேண்டும்.இழந்தவற்றை மீட்டெடுத்து வழங்க வவேண்டும். அடுத்து உயிர்கள். அவை மக்களைத் துன்புறுத்தி,அடித்து உண்ணும் கொடிய விலங்குகள். இவற்றை வேட்டையாடுவது மன்னன் செயல்.

    ‘’பயந் தீர்த்துக் காத்தலே காவலன் கடமை என்பதை “இத்தனை காலமு நினது சிலைக்கீழ்த் தங்கி இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம்’’ என்று கண்ணப்பர்புராணத்தில் மக்கள் கூறும் பாதுகாவல்  நிலை.இந்நாள் நவீனர் அரசாட்சியிலே நமது நாட்டுக் குற்றத்தீர்வு நீதிச்சட்டமும், குடிகளின் உயிருடம்புகளையும், உடைமைகளையும், காவல்புரிதலையே குறிக்கோளாகக் கொண்டு, உடம்பைப் பொறுத்த குற்றங்கள் – உடைமையைப் பொறுத்த குற்றங்கள் என்று (Offences against perosn & offences against property) இரு பெரும் பிரிவுகளாக வகுத்ததும், அக்குற்றம் செய்தார்க்குத் தண்டம் விதித்ததும், குற்றங்கள் நிகழாமல் குடிகாவல் விதித்ததும், இங்கு வைத்து ஒப்பு நோக்கிக் காணத்தக்கன’’. என்று சம்பந்த சரணாலயர் கூறுகிறார். இனி சேக்கிழார் எழுதிய முழுப்பாடலையும் படிப்போம்.

    “மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்
     தான்  அதனுக்கு இடையூறு தன்னால், தன் பரிசனத்தால்,
     ஊன மிகு பகைத் திறத்தால், கள்வரால், உயிர்கள்  தம்மால்
     ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ?”

    இந்தப்பாடல் இக்கால மக்களின் அச்சம் போக்கும் அரசின் கடமைகளைப் பொதுவாகக் கூறுகிறது.அக்காலச் சோழரின் முதலமைச்சரான சேக்கிழாரின் தீர்க்க தரிசனம் இதில் தெரிகிறது.

    Share
  • மருதூர் அந்தாதியில் இடம்பெற்றுள்ள புராணக்கூறுகள்

    -திருமதி. ப. மாக்கில்மா

    இலக்கிய உலகில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய சிற்றிலக்கியங்கள் பொருள் அமைப்பிலும் வடிவ அமைப்பிலும் சங்க இலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைகளாகப் பாட்டியல் நூலார் பாகுபடுத்தியுள்ளனர். அவற்றுள் “அந்தாதி”என்பது சிற்றிலக்கிய வகையினுள் ஒன்றாகும். அந்தாதி இலக்கியங்களுள் தலைமலை கண்ட தேவர் இயற்றிய மருதூர் அந்தாதி என்னும் நூலில் அமைந்துள்ள புராணக் கூறுகளான மார்க்கண்டேய வரலாறு, அடிமுடி தேடுதல், மாலுக்கு சக்கரம் அளித்தல் முப்புரம் எரித்தது, பிரமன் சிரம் கொய்தது, பாம்பை அணியாகக் கொண்டது, அருச்சனனுக்கு அருளியது முதலியன பற்றி ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    புராணம்  விளக்கம்

    புராணம் என்பது பழங்கதை. மாக்கதை எனப் பெயர் பெறுகிறது.காலம் செல்லச் செல்ல இவையே சமயத்தின் ஊடாடுகிறது. சமயம் புராணத்திற்குக் கருவியாக அமைகிறது. சைவ சமயத்திலும், புராண வரலாறுகள் சமய பக்திக்கும் நல்லொழுக்கத்திற்கும் நடைமுறையில், உயர்ந்த ஞானத்தையும் சாமானியப் புராணக் கதையையும் தழுவி எழுந்தவையே கோயில்கள். கோயில்களில் ஸ்தூலமான பொருள் புராணக் கதைகளேயாகும்.

    புராணக்கூறு என்பது இறைவன் செய்துள்ள அற்புதச் செயல்கள்,இறைவன் கொண்ட இல்பலி போன்ற இறைவனின் செயல்கள் பற்றி மருதூர் அந்தாதி மூலம் கீழ்க்கண்டவாறு காணலாம்.

    மார்க்கண்டேய வரலாறு

      மார்க்கண்டேயரது பெற்றோரின் தவத்தை மெச்சிய இறைவன் அவர்களிடத்து “அறிவும் திறமும் உடைய பதினாறு ஆண்டுகள் ஆயுளையுடைய மகனா? அன்றி அறிவற்ற நீண்ட ஆயுளையுடைய மகனா? யார் வேண்டும்? எனக் கேட்க அவர்கள் அறிவுடைய பதினாறு வயது ஆயுளையுடைய மகனையே வேண்டிப் பெற்றார்” அதன்படி மார்க்கண்டேயனுக்கு பதினாறு வயதில் இறப்பு என்று குறிக்கப்பட்டது. பதினாறாவது வயது முடியும் தருவாயில் அவரது உயிரைக் கொல்லுதற்காக இயமன் வர அந்நிலையில் மார்க்கண்டேயர் இறைவனை விடாது வழிபாடு செய்தார். குறிப்பிட்ட காலம் வந்ததும் இயமன் எங்கு தேடியும் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசி அக்கயிறு சிவலிங்கத்தின் மீதுப்படடது. சினங்கொண்ட சிவபெருமான் இயமனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறாக வயது இருக்குமாறு அருளுகிறார். இப்புராணக் கருத்தை,

         “முனியாய மானுடர்க் காவந்
                  துகனை முனிந்தவனே”1  என்று மருதூரந்தாதி பாடல் வரிகள் விளக்குகின்றன.

    அடிமுடி தேடுதல்

     படைத்தற் பிரமனும், காத்தற் திருமாலும் தமக்குள் யார் பெரியவர் என்று போட்டி மேற்கொண்டு தம் கருத்தைச் சிவபெருமானிடம் முறையிட்டனர்.”உங்கள் இருவரில் ஒருவர் எனது திருவடியையும் ஒருவர் திருமுடியையும் காணுதல் வேண்டும். கண்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்ளே பெரியவர்கள்”என்று சிவபெருமான் கூறுகிறார். திருமால் பன்றியாக உருவெடுத்து அடியையும், பிரமன் அன்னமாக உருவெடுத்து முடியையும் தேடிச் சென்றனர். சிவபிரான் அவர்கள் காணமுடியாத வண்ணம் சோதி வடிவமாகத் தோற்றமளித்தார். இப்புராணக் கருத்தை,

          “யாலை யனங்கம் வருந்தியுந்
                    தேடற் கரியவன்கை”2  என்ற பாடல் வரிகள் காட்டுகின்றன.

    மாலுக்குச் சக்கரம் அளித்தது

    சிவபெருமான் உள்ள சக்கராயுதம் “சலந்தாசுரன்”என்ற அசுரனைக் கொன்ற சிறப்புடையது. அவ்வரிய சக்கராயுதத்தைப் பெறுதற்காகத் திருமால் ஆயிரம் மலர்கள் கொண்டு சிவனை நாள்தோறும் வழிபட்டார். ஒரு நாள் வழிபாட்டின் போது ஆயிரம் மலர்களில் ஒரு மலர் குறைவது கண்டு, அதற்காக வருந்தாது அம்மலருக்குப் பதில் தான் தன் கண்ணையே மலராக இட்டு வழிபட்டார். மாலின் இவ்வன்பிற்கு இரங்கிச் சிவன் சக்கராயுதத்தை மாலுக்கு வழங்கினார். இப்புராணக் கருத்தினை,

                         “ ரஞ்சக் கருத்தை யரிக்களித்
                           தார்மரு தூர ரங்கி”3

    என்ற மருதூரந்தாதி பாடல் வரிகள் விளக்குகின்றன.

    முப்புரம் எரித்தது

    தாருகாட்சன், கமலாடசன், வித்துயுன்மாலி மூவரும் பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகளாக மாறுவதற்குரிய வரத்தினைப் பிரம்மாவிடம் பெற்றனர். அவ்வசுரர்கள் அக்கோட்டைகளோடு பறந்து சென்று தாம் விரும்பிய ஊர்களை அழித்து விட்டு மீண்டும் தம்மிடம் வந்துவிடுவர் இவனது துன்பம் தாங்காது தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவ்வசுரர்களை அழிப்பதற்காகப் பூமியைத் தேராக்கி, சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாக்கி, நாள் வேதங்களைக் குதிரையாக்கி, பிரம்மனை தேர்ப்பாகனாக்கி, மேருவை வில்லாக வளைத்தார். வாசுகியை நாணாக்கினார். திருமாலை அம்பாகவும் கொண்டார். இவர்கள் தத்தம் உதவியால் சிவன் முப்புரங்களை அழிக்கப் போகிறார் என எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது சிவபெருமான் இதனைக் கேட்டு சிரிக்க அச்சிரிப்பே முப்புரங்களை எரத்தது. இப்புராணக் கருத்தை,

                    “ பகைத்த பருப் பதங்கடந் தான்”4    என்ற மருதூரந்தாதிப் பாடல் வரி குறிப்பிடுகிறது.

    பிரமன் சிரம் கொய்தது

    பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைச் சிவபிரான் கிள்ளி எரிந்ததாகப் பல கதைகள் கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று அந்தாதியில் இடம்பெற்றுள்ளது. பிரமன் சிவபெருமானினும் தான் உயர்ந்தவராக எண்ணிப் பிதற்றியமையால் பெருமான் அவ்வாறு பிதற்றிய தலையைக் கொய்து எறிந்தார்.என்றும் சிவபெருமான் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்றும் பிரமன் வரம் கேட்டபோது, அப்பெருமான் இட்ட சாபத்தால் ஐந்தாவது தலை வெடித்து உதிர்ந்தது என்றும் புராணக்கதைகள் பலவாகக் காணப்பெறுகின்றன இதனை,

                                “கையாலை யனங்கங்கொண் டோன்மரு
                                 தூர னடி வணங்கே”5 ஏன்ற பாடல் வரி குறிப்பிடுகிறது.

    பாம்பை அணியாகக் கொண்டது

    கருடனும் பாம்பும் ஒரு தந்தையின் இரு மனைவியரின் மக்கள். இவர்களுக்குள் பல காரணங்களால் பகைமை ஏற்பட்டு கருடன், பாம்புகள்,  கருடனுக்கு அஞ்சி சிவபெருமானிடம் அடைக்கலம் புகுந்தன. சிவபெருமான் அவற்றைத் தமது அணிகளாக அணிந்து கொண்டார்.இப்புராணக் கருத்தை,

                  “………………………………உய்ய
                  வரியர விந்தம் புனைவோன்
                  சிலம்பி லதர்மனித”6 என்ற பாடல் வரிகளில் குறிப்பிடுகின்றன.

    அருச்சனனுக்கு அருளியது

    பாண்டவர்களின் இளையவர் அருச்சுனன் தன் பங்கு நாட்டைப் பெறவேண்டும் எனப் பாண்டவர்கள் கவலை கொண்டிருந்தனர். அச்சமயம் இந்திரன் ஒரு முதிய அந்தணன் வடிவில் தோன்றி அருச்சுனனை ஒத்த வீரர் உலகில் இல்லை என்றும் சிவபெருமானை நேரில் கண்டு படைக்கலங்களைப் பெற்று எதிரிகளை வெல்லலாம் என்றும் அறிவுரை வழங்கினார்.அவ் ஆலோசனைப்படி அருச்சுனன் காட்டில் கடுந்தவம் இருந்தார். அப்பொழுது ஒரு பன்றி அவரைக் கொல்ல வருவது போல் நெருங்கி வந்தது. வீரம் மிகுந்துள்ள அருச்சுனன் பூசையை மறந்து வில்லை வளைத்து பன்றியை நோக்கி எய்தார். பன்றி அம்பு பட்டு விழுந்தது. அக்கணையை எய்தவன் ஒரு வேடுவன். இவர்கள் இருவரின் முதலில் எய்தவர் யார் என்ற விவாதம் ஏற்பட்டு அதன் வழி அவர்கட்குள் விற்போரும் நடந்தது. விற்போரில் வெல்ல எண்ணி வேடனின் தாளை அருச்சுனன் பிடித்தார். அங்கு வேடுவனைக் காணவில்லை. அவ்வேடுவன் மிகப்பொலிவு பெற்ற சிவபெருமானாகி உமையுடன் காட்சி அளித்தார். அருச்சுனன் வணங்க அவர் படைக்கலங்களையும் வரங்களையும் அருளினார். இறைவனின் இத்தகைய அற்புதச் செயல்களைப்

             “பார்த்ததற்கு வாய்த்த வெற்றி
             முலரம்பை யாரஞ் சடையார்”7 என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.

    இவ்லாறு ஆசிரியர் மருதூர் அந்தாதி நூலுள் உள்ள புராணக் கூறுகளான மார்க்கண்டேய வரலாறு, அடிமுடி தேடியது, முப்புரம் எரித்தது, பிரமன் சிரம் கொய்தது. பாம்பை அணியாகக் கொண்டது, அருச்சுனனுக்கு அருளியது போன்ற புராணக்கூறுகள் ஆகியவற்றை இம் மருதூரந்தாதி நூலின் மூலம் தெற்றென விளக்கியுள்ளார்.

    ஆய்வு முடிவுகள்

    புராணம் பற்றிய கருத்துக்கள் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இறைவனின் அற்புதச் செயல்களான அருச்சுனனுக்கு அருளியது, பாம்பை அணியாகக் கொண்டது, முப்புரம் எரித்தது போன்ற அற்புத நிகழ்வுகள் எழுந்த சூழல் விளக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருவடியையும் திருமுடியையும் தேடும் பொருட்டாகத் திருமாலும் பிரமனும் தேவியும் காணமுடியாத இறைவன் சோதி வடிவாக எழுந்த சூழல் விளக்கப்பட்டுள்ளது. இறைவன் திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்த நிகழ்வு விளக்கப்பட்டுள்ளது. இறைவன் பிரமனது சிரம் கொய்த நிகழ்வு பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

    அடிக்குறிப்புகள்

    1. மருதூரந்தாதி பாடல் எண் – 79
    2. மருதூரந்தாதி பாடல் எண் – 10
    3. மருதூரந்தாதி பாடல் எண் – 29
    4. மருதூரந்தாதி பாடல் எண் – 67
    5. மருதூரந்தாதி பாடல் எண் – 10
    6. மருதூரந்தாதி பாடல் எண் – 8
    7. மருதூரந்தாதி பாடல் எண் – 16

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
    விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்),
    வீராச்சிப்பாளையம், சங்ககிரி.

     

    Share
  • கொளஞ்சியின்  கவிதைகளில் பெண்களின் நிலை

    -ர. பரமேஸ்வரி

    முன்னுரை:

    கொளஞ்சியின் கவிதைகளில் பல்வேறு செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெண்கள் சமுதாயத்தில் தன்னுரிமை பெற்றவர்களாகவும் அனைவருக்கும் நிகரான முறையிலும் இடம்பெறுதல் அவசியம். சமுதாயத்தில் பெண்களின் நிலைகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    சமுதாயத்தில் பெண்களின் நிலைகளாவன:

    பெண்களின் நிலைகளை பல்வேறு கவிதைகளில் எடுத்துகூறியுள்ளார். எந்நிலையிலும் பெண்களுக்கு இத்தகைய நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்தப்படுகின்றது.

    1. விதவை நிலை
    2. கைம்பெண் மறுமணம்
    3. வரதட்சணை
    4. பாலியல் வன்கொடுமை
    5. பெண்சிசுக் கொலை

    விதவை நிலை:

    ஒரு பெண்ணுடைய வாழ்விற்குத் தாலி வேலியைப் போன்றது. ஒரு பெண் திருமணம் ஆனபிறகு கணவன் இறந்துவிட்டால்; அவளை விதவை என்று அழைக்கின்றனர். திருமணம் ஆகாதவரை கன்னி என்று சமுதாயம் கூறுகின்றது. கணவன்  இறந்துவிட்டால் உடனே அந்தப் பெண்ணின் தாலியைக் கழற்றிவிட்டு பூவும், பொட்டும் இல்லாமல் விதவைக் கோலத்தினை அடைகின்றாள்.

    உதாரணமாக, ஊட்டியில் மலர்க்கண்காட்சி நடக்கின்றது. அவள் மட்டும் மலரை சூடிக்கொள்ளமுடியாமல் அழுகிறாள் என்பதை,

          “ஊட்டியில் மலர்க்கண்காட்சி, எல்லா மலரும்
          கண்சிமிட்டி சிரித்தன, அவள் மட்டும்
          மலரைச் சூடிக்கொள்ள முடியாமல்
          தனியே அழுகிறாள்.” என்ற கவிதை வரிகள் மூலம் பெண்ணின் நெஞ்சுக் குமுறலை எடுத்துக்காட்டுகின்றார். மேலும் கைம்பெண்ணின் அவலநிலையை,

            “சிறகு அறுந்து போன வண்ணத்துப் பூச்சு”

    என்ற வரிகள் பெண்ணின் மனதை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்குகின்றன என்பதை நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றார். விதவை இல்லாத, பெண்கள் சமுதாயமாக மாறவேண்டும் என்றும், விதவைப் பெண்ணின் நிலையைப் பற்றியும் பாவேந்தர் எடுத்துக்காட்டுவதாவது,

          “பேடகன்ற அன்றிலைப் போல் மனைவி செத்தால்
          பெருங்கிழவன் காதல் செயப்பெண் கேட்கின்றான்
          வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
          மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ”

    பூவும் பொட்டும் அணியும், மணியும் தானே போயிற்று. உயிர் உடலின் உணர்ச்சி என்னிடம்தான் இருக்கின்றது என்ற பெண்ணாக இருந்து பேசுகின்றார் பாவேந்தர்.

    கைம்பெண் மறுமணம்:

    கணவனை இழந்த பெண்கள் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டால் இந்தச் சமுதாயம்  நிம்மதியாக வாழவிடுவதில்லை. கணவனை இழந்தவள் கைம்பெண் அல்ல என்ற கருத்தினை உலகிற்கு உணர்த்துதல் வேண்டும். அவளுக்கும் உயிர் உணர்ச்சி மறுமணம், வாழ்வு இவை அனைத்தும் உண்டு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதனை,

          “கணவனை இழந்தவள் கைம்பெண் அல்ல
          கருத்தை விலக்குங்கள் அவளுக்கும் உயிருண்டு
          அவளுக்கும் உணர்ச்சியுண்டு, அவளுக்கும் மறுமணம் உண்டு
          அவளுக்கும் வாழ்வு உண்டு உணர்ந்து பாருங்கள்” என்ற வரி கைம்பெண்ணின் உடைய மறுமணம் பற்றி விவரிக்கிறது. கைம்பெண்ணின் மறுமணம் பற்றி விவரிக்கப்படுகிறது.

    மேலும் கைம்பெண்ணை வாழவிடாமல் துன்பத்திற்கு ஆளாக்குகின்ற நிலையினை,

          “மாலையிட்ட மணவாளன்  இறந்துவிட்டால்
          மங்கை நல்லாள் என்ன செய்வாள் அவளை நீங்கள்
          ஆலையிட்ட கரும்பாக்கி உலக இன்பம்
          அணுவளவும் அடையாமல் சாகச் செய்வீர்” என்ற வரிகளின் வாயிலாகப் பெண்களை வாழவிடாமல் துன்பப்படுத்தும் நிலையினை பாரதிதாசன் எடுத்தியம்பியுள்ளார்.

    வரதட்சிணை:

    நாட்டின் முதிர்கன்னிகள் பெருகுவதற்கு அடிப்படையான காரணம் என்னவென்பதை ஆராய்ந்து பார்த்தால் வரதட்சணைக் கொடுமையே ஆகும். ஆரம்பத்தில் மணமகனுக்கு என்று சில பரிசுப்பொருட்களை பெண் வீட்டாரே விரும்பிக்கொடுத்தனர். நாளடைவில் அப்பரிசுப்பொருளை கேட்டுப்பெறும் நிலையானது  ஏற்பட்டு விட்டது.

    ஒரு வீட்டில் விடிந்தால் திருமணம் நடக்கஇருக்கின்றது. பெண் வீட்டில் நகைகளை எப்படி போடுவது என்ற கவலை. மாப்பிள்ளை வீட்டில் எப்படி வாங்குவது என்ற கவலை. இதனை கொளஞ்சிக் கவிஞர் அவர்கள்,

         “வாழ்க்கை ஒப்பந்தம் விடிந்தால் திருமணம்
          பெண் வீட்டிற்குத் திருமணக் கவலை
          பாவம் மாப்பிள்ளைக்கோ  நகைகள் பற்றிய கவலை
          எப்பொழுது ஒழியும் வரதட்சணைக் கொடுமை”

    என்ற கவிதை வரிகள் பெண்களின் மனக்குமுறலைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும் வரதட்சிணைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது

    “திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது சொர்க்கத்தில் அல்ல.
             ரொக்கத்தில் தங்கத்தில்….”

    என்ற கவிதை வரிகளில் அமைந்த கருத்தினை மாற்றியமைத்திடல் வேண்டும். இதைப்போன்ற நிகழ்வுகள் பெண் இனத்திற்கு நடக்கக்கூடாது என்பது வலியுறுத்திக் கூறப்படுகிறது.

    பாலியல் வன்கொடுமை:

    இன்று பாலியல் வன்கொடுமையானது அதிக அளவில் நிகழ்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை  வெளியில் அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் இதுபற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் வயிற்றுப் பசிக்காக விலைமகளாக மாறும் நிலையினைக் காணமுடிகிறது. இதனை,

           “எனக்கு வயிற்றுப்பசி உனக்கு உடற்பசி
            பாய்விரித்தாள் பந்திக்குத் தயாரானாள்
            இருள் அப்பிக்கொண்டது”

    என்ற வரிகளின் வாயிலாக பெண்களின் சமுதாயமானது துன்ப நிலையினை எய்துகின்றது என்பதை விளக்கியுள்ளார்.

    முடிவுரை

    விதவையின் நிலை, கைம்பெண் நிலை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்கொடுமை, இன்றைய பெண்கள் படும் அவல நிலையினையும் பெண்கள் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களை எல்லாம் கொளஞ்சி தமது கவிதையின் வாயிலாக உலகிற்கு உணர்த்தியுள்ளார் என்பது அறியமுடிகிறது.

    அடிக்குறிப்பு:

    1.கொளஞ்சிக் கவிதைகளின் தொகுப்பு
    2. பாரதிதாசன் கவிதைத்தொகுப்பு பக்க எண் : 40
    3. இலக்கிய வரலாறு, மு. வரதராசன், பக்க எண் 28
    4. தலித்தியம், சங்க இலக்கியம், பக்க எண் 38.

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
    விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்),
    சங்ககிரி, சேலம் மாவட்டம்.

     

    Share
  • வளங்கொடுக்கும் வாழ்விலென்றும்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    பார்வையினை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார்
         வாய்பேச இயலாமல் வகைவகையாய் இருக்கின்றார்
    கையிழந்து காலிழந்து பலரிப்போ இருக்கின்றார்
         கருத்தளவில் அவர்களெல்லாம் கனதியுடன் வாழுகிறார்

    குறைபாடு இல்லாமல் பிறந்தவர்கள் யாவருமே
         குறைபாடு உடையாரை குறையுடனே நோக்குகிறார்
    குறையுடனே பிறந்துவிட்டோம் எனவெண்ணும் குறையுடையார்
        குறைபற்றி நினையாமல் நிறைவுநோக்கி நகர்கின்றார்

    வலது குறைந்தவர்கள் எனும்வர்க்கம் இப்போது
       மாற்றுத் திறனாளிகளாய் மலர்ந்துமே நிற்கிறது
    நிலம்மீது வந்து பிறந்துவிட்ட அனைவருமே
       நலம்பற்றி எண்ணிவிட்டால் நல்வாழ்வு அமையுமன்றோ

    புலனிழந்து விட்டுவிட்டோம் எனவெண்ணி இருக்காமல்
       புலனுடையார் ஆற்றுகின்ற அத்தனையும் ஆற்றுகிறார்
    நலந்திகழும் எண்ணமதை நாளுமவர் மனமிருத்தி

        புலனுடையார் வியந்தேற்ற பொறுப்புடனே வாழுகிறார்

    குறைவந்து விட்டதென மறைந்துமவர் நிற்காமல்
        குறையுடனே துணிந்திறங்கி குவலயத்தில் வாழுகிறார்
    குறையில்லா வகையினிலே பிறந்துவிட்ட  நிலையினிலும்
         கறையுடைய மனத்தினராய் வாழுதலே குறையன்றோ

    மாற்றுத் திறனாளிகளாய் மலர்ந்துநிற்கும் மாந்தர்தமை
         மாறாத மனமுடைய மாந்தரெலாம் மனமிருத்தி
    மாசுநிறை மனமதனில் மாசுதனை அகற்றிநின்றால்
        மாற்றமது வந்துநின்று வளங்கொடுக்கும் வாழ்விலென்றும்

    Share
  • நூல் மதிப்புரை – இரட்டைக் காப்பியங்களில் துணைநிலை மாந்தர்

    மதிப்புரையாளர் – சோம. கிருஷ்ணமூர்த்தி (முனைவர் பட்ட ஆய்வாளர்)

    நூலாசிரியர் – முனைவர் த. ஆதித்தன்

    வெளியீடு – முக்கடல் பதிப்பகம்

    11, முப்பத்து மூன்றாம் தெரு,

    பாலாஜி நகர் விரிவு 3

    புழுதிவாக்கம்

    சென்னை – 600 091

    கைப்பேசி : 9444365642

    ISBN 978-81-907781-7-7

    முதல் பதிப்பு : ஏப்ரல் 2017

    பக்கம் : 152 விலை : ரூ. 120

       தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கிய, இலக்கண வகைகள் பல்கிப் பெருகியுள்ளன. அதிலும் குறிப்பாக, காப்பியங்கள் மிகப் பெருமை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவை ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங் காப்பியங்கள் என வகைப்படுத்தப் பட்டுள்ளன.

         சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன முறையே ஐம்பெருங் காப்பியங்களாகவும் நீலகேசி, சூளாமணி, நாககுமார காவியம், உதயண குமார காவியம், யசோதர காவியம் ஆகியன முறையே ஐம்பெருங் காப்பியங்களாகவும் பட்டியலிட்டுள்ளனர்.

         ஐம்பெருங் காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என வழங்கப்படுகின்றன. ஏனெனில் கதைத் தொடர்பாலும் காலத் தொடர்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதால் அவ்வாறு வழங்கப்பெறுகின்றது.

          மறுபிறப்புக் கொள்கைகளைப் பல்வேறு சமயங்களும் எடுத்துக் கூறுவது போல் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் மறுபிறப்பு பற்றியும் முற்பிறவி மாந்தர்களைப் பற்றியும் அவர்களது வரலாறு மற்றும் காப்பியப் போக்கிற்கு எவ்வாறு துணைபுரிகின்றனர் என்பதைப் பற்றியும் நூலாசிரியர் முதல் இயலில் தௌpவுபடுத்தியுள்ளார்.

         சிலப்பதிகாரக் காப்பியத்தில் உள்ள கோவலன், கண்ணகி, மாதவி  ஆகியோர் சமணத் தொடர்புடையவர்களாகவும் அவர்களது மகள் மணிமேகலை பௌத்தத் தொடர்புடையவளாகவும் இருப்பதையும், இந்தத் திடீர் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதனையும் நூலாசிரியர் விளக்கியுள்ள திறம் சிறப்பிற்குரியது.

         மணிமேகலையின் சிறப்பிற்கு அமுதசுரபியும் ஒரு காரணமாகும். மணிமேகலைக் காப்பியத்தில் வரும் புண்ணியராசன்தான் முற்பிறவியில் ஆபுத்திரனாகவும் அவனிடம்தான் அமுதசுரபி இருந்ததையும் அது எவ்வாறு மணிபல்லவத்தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கைக்கு வந்தது என்பதையும் பின்னர் மணிமேகலைக்குக் கிடைத்த விதத்தையும் நூலாசிரியர் மிகவும் நிரலாகக் கூறியுள்ளார்.

        இல்லறமே நல்லறம் என்பதற்கேற்ப குடும்பவாழ்க்கை என்பது மிகச் சீரிய அமைப்பாகும். தனிமனிதன் குடும்பமாவதும் குடும்பம் சமுதாயமாவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சமுதாயம் நலம் பெற குடும்பச் சூழ்நிலையே அடிப்படை ஆதாரமாகும்.

        சிலப்பதிகாரத் துணைநிலை மாந்தர்களில் இல்லற மாந்தர்களாகப் பலர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் மாசாத்துவான் – அவனது மனைவி, மாநாய்கன் – அவனது மனைவி, கார்த்திகை – வார்த்திகன், பாண்டியன் நெடுஞ்செழியன் – கோப்பெருந்தேவி, சேரன் செங்குட்டுவன் – வேண்மாள், மாதரி, ஐயை போன்றோர் இடம் பெற்றிருப்பதனை நூலாசிரியர் மிகத் தௌpவாக இரண்டாம் இயலில் எடுத்தாண்டுள்ளார்.

        மணிமேகலைக் காப்பியத்தில் துணைநிலை மாந்தர்களில் இல்லற மாந்தர்களாகச் சுதமதி, கோதமை, ஆதிரை – சாதுவன், பீலிவளை – நெடுமுடிக்கிள்ளி, வயந்தமாலை ஆகியோர் இடம்பெற்றிருப்பதனையும் நூலாசிரியர் அழகாக விளக்கியுள்ளார்.

         துறவறம் என்பது குடும்ப வாழ்க்கையை விட்டு விலகுவது அல்ல. மாறாக, உலகப் பொருள்களின் மேலுள்ள பற்றுக்களை விடுதலே துறவறமாகும்.

        இரட்டைக் காப்பியங்களில் துணைநிலை மாந்தர்களில் துறவற மாந்தர்கள் பற்றி இவ்வியல் விளக்குவதாக அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் மாடலன் மறையோன், மாங்காட்டு மறையோன், கவுந்தி அடிகள் ஆகியோர் துறவற மாந்தர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். அவர்களுள் மாடலன் மறையோன் சைவத் துறவியாகவும் மாங்காட்டு மறையோன் வைணவத் துறவியாகவும் கவுந்தி அடிகள் சமணத் துறவியாகவும் காட்டப்பட்டுள்ளனர்.

        மணிமேகலையில் அறவண அடிகள், விருச்சிக முனிவர் துணைநிலை மாந்தர்களுள் துறவற மாந்தர்களாக இடம்பெற்றுள்ளனர்.

    “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”

    “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்”

    “ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்”

    என்ற கோட்பாட்டை உடைய சிலப்பதிகாரமும்,

    “மனித நேயத்தை” உணர்த்துவதற்காகவே படைக்கப்பட்ட மணிமேகலையும் சிறந்த இரட்டைக் காப்பியங்களாகவும் அந்தக் காப்பிய வளர்ச்சிக்குப் பெருந்துணையாகவும் துணைமை மாந்தர்கள் முதன்மைத் தன்மையுடன் விளங்குவதை நூலாசிரியர் ஆய்வு நோக்கில் கையாண்டுள்ள திறம் மிகவும் போற்றுதலுக்குரியது. இந்நூலானது ஆய்வு மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டி நூலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

    மதிப்புரையாளர் – சோம. கிருஷ்ணமூர்த்தி (முனைவர் பட்ட ஆய்வாளர்)

    தமிழ்த்துறைத் தலைவர்,

    பிர்லா பொதுப் பள்ளி,

    தோகா, கத்தார்.

      —————————————————————————————————————————

    Share
  • பசுமை இந்தியா

    –முனைவர் இரா. இராமகுமார்

    தீவாகிய மனங்களை
    தீபகற்பமாய்
    கொள்ளை கொண்ட இந்தியா.
    குமரி முதல்
    இமயம் வரை
    பசுமையை ஆடையாக்கியதால்
    கொள்ளையனும்
    விரும்பும் இந்தியா.
    பசுமையில்
    சுமையிருப்பினும்
    பார்வையில்
    பாவையிருப்பினும்
    அயல்நாட்டவரும்
    சுற்றுலாவாய்
    விரும்பும் இந்தியா.
    மூன்றாம் உலகப்போருக்கு
    இந்திய வரைபடத்தில்
    இடமில்லை.
    பசுமைையைப் போருக்கு
    அழைப்பதில்
    நியாயமில்லை……”

    “நஞ்சையும் புஞ்சையும்
    தேசத்தின் உடல்.
    சமுத்திரங்கள்
    சரித்திரத்தின் திடல்.
    ஆறுகளும் நதிகளும்
    பாரத உடை.
    வயல்வெளிகளே
    பாமரனின் நடை.
    அருவிகள் கூந்தலாயின
    சோலைகள்
    தங்குமிடமாயின.
    காலைநேர பனித்துளி
    பசுமை நெற்றிக்கு
    திலகமாயின.
    வறுமையைப் போக்கிட
    பறவைகளும்
    இரை தேடின.
    வளமையை காட்டிட
    காடுகளும்
    வகிடு எடுத்தன.
    என் இந்தியா என்பது
    தலையாக சுய நலம்.
    நம் இந்தியா என்பதே
    இதயமாய் பெருமிதம்.

    விதை நெல்லாய்
    மாநிலங்கள்.
    விதைப்பவர்களாய்
    பாரதப் புதல்வர்கள்.
    புண்ணியத்தை
    அறுவடையாக்கிட
    நாள்தோறும் பசுமை தேசத்தில்
    தானங்களும் தர்மங்களும்…..
    இயற்கையை
    வளப்படுத்திட
    நாள்தோறும்
    கருணையும் மனிதமும்
    எங்கே !
    பாரதத்தின்
    பசுமையை பகையாக்காதீர்….!
    சீற்றங்கள் இயற்கையின்
    கோபமல்ல!
    மாற்றங்கள் செயற்கைக்கு அழகல்ல!
    பழமைக்கு வளம் சேர்ப்போம்
    புதுமை இந்தியாவிற்கு
    வலிமை சேர்ப்போம்.

    முனைவர் இரா. இராமகுமார்,
    எம்.ஏ., எம்.எட்., எம்பில்., பி.எச்.டி.,
    எம்.ஏ(வரலாறு).  அக்ரி(உ)., த.பண்டிட்.,
    டி.டி.எட்., நெட்., ஜே.ஆர்.எப்
    உதவிப் பேராசிரியர் & நெறியாளர்,
    தமிழ் உயராய்வு மையம்,
    விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம்,
    கன்னியாகுமரி மாவட்டம் – 629 701
    அலைபேசி  9994054671
    மின்னஞ்சல் drrksir121314@gmail.com

    Share
  • படக்கவிதைப் போட்டி 189-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. பார்கவ் கேசவனின் இப்புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் என் நன்றிகள்.

    வளைந்து செல்லும் தார்ச்சாலை ஓரத்தில் வளர்ந்துநிற்கும் தருக்களின் வனப்பும் அவை சிந்தும் வண்ணங்களும் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் பெருவிருந்தளிக்கின்றன.

    இயற்கை அன்னை நமக்களித்த அரிய வரம் இந்த மரங்கள்! வெயில் தணிக்க நிழலும், பயிர் தழைக்க மழையும் தருபவை மரங்களே என்றுணர்ந்து மானுடர் அவற்றை அழியாமல் காக்கும் காலமே இவ்வையத்தின் வசந்த காலம்!

    இனி, படத்திற்குப் பொருத்தமாய்ப் பாட்டிசைக்கக் காத்திருக்கும் வித்தகக் கவிஞர்களை வரவேற்போம்!

    *****

    ”இருமருங்கிலும் பசுமையும் இதமான தென்றலும் வருடும் இப்படத்தில் காணுமோர் இன்பப் பாதையா மானுடரின் இலட்சியப் பாதை என வினவுதிராயின் இல்லை என்றே மொழிவேன்; அஃது இருளும் இடையூறும் தடைசெய்யும் துன்பப் பாதையே; எனினும் முயன்றால் அதனையும் கடக்கலாம்; சாதனை படைக்கலாம்” என ஊக்கமூட்டுகிறார் முனைவர் மு. புஷ்பரெஜினா.

    இலட்சியப் பாதை

    இருமருங்கிலும் பசுமை
    இதமான தென்றல்
    இனிமையான சூழல்
    இளமையின் தேடலுக்கு
    இயற்கையின் கொடை
    இன்றுதான் பிறந்தோமோவென
    இதயங்களைப் பூரிப்பாக்கும்
    இன்பக் கனவுகளை
    இதழோரம் இசைக்கவைக்கும்
    இல்லங்களின் இன்பவுலா
    இங்கல்லவோ முழுமையடையும்
    இலக்கியங்களின் இயற்கையையும்
    இணையற்றதாக்கிடுமே
    இலட்சியப் பாதை இத்தகையதோவெனில்
    இல்லையென்றே இயம்பிட இயலும்
    இருளும் இடர்களும்
    இடையூறாக நெருக்கிடினும்
    இறை பேராற்றலுடன்
    இடையறாது இயன்றால்
    இறுதிவரை உறுதியாக
    இலட்சியப்பாதை இனித்திடுமே…

    *****

    ”தெவிட்டாத இன்பமூட்டும் தெளிவான இந்தப் படம் கடந்த விடுமுறையில் நண்பர்களோடு கண்டுவந்த மலைப் பாதையின் வண்ணப்படம். எப்போதும் பார்த்து இரசிக்கத் தோதாய்க் கைப்பேசியில் காட்சிதருகின்றது மாட்சியோடு” என்கிறார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    மகிழ்ச்சிப் பாதை

    கட்டிடக் காடுகள்
    கணிசமாகிப் போன நகரில்
    ஆரவாரத்துடன் காலையில்
    அவசரமாகக் கிளம்பி
    வாகன நெரிசலிலே
    வகையாகச் சிக்குண்டு
    அலுவலகம் சென்றமர்ந்து
    அலுக்காமல் பணி செய்து
    மாலை வேளையிலே
    மரங்களற்ற சாலையிலே
    மாசுபட்ட காற்றால்
    மனம் துயர்ப் படும்போது
    தெவிட்டாத இன்பமூட்டம்
    தெளிவான இப்படம்
    நல்ல காற்றை சுவாசிக்க
    நானும் நண்பர்களும்
    கடந்த வருட விடுமுறையில்
    கண்டுவந்த மலைப்பாதை
    கைப்பேசியில் இப்போ
    காட்சியாய் கண்முன்னே
    காலத்தால் அழியாது
    கடுகளவும் மாறாது
    நிழலாகத் தொடரும்
    நிஜமான இப்பாதை.

    *****

    ”காட்டுப் பாதையை விரிவாக்க எண்ணிச் சாலையோரம் நிற்கும் வனப்பான சோலைகளை வெட்டிவீழ்த்த எண்ணமிடாதீர்!” என்று எச்சரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அழிக்காதீர்…

    காட்டுப் பகுதிச் சாலையிதைக்
    கண்டு களிப்பீர் மானிடரே,
    வேட்டை யாடும் நீங்களிந்த
    வனப்பை யழித்திட வேண்டாமே,
    காட்டுப் பாதையை விரித்திடவே
    கரையில் மரத்தை வெட்டவேண்டாம்,
    போட்டது போதும் வனமழித்து
    போட வேண்டாம் வறட்சிவழியே…!

    *****

    ”போராட்டமின்றி வாழ்க்கையில்லை; நேரான நெடும்பாதையில் போராடிவெல்லப் புறப்படு!” என்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வாழ்க்கைப் போராட்டம்!

    நேரான பாதை நெடும்பயண வாழ்க்கையை
    போராடி வெல்லப் புறப்படு..! – போராட்டம்
    இன்றியே வாழ்க்கையும் இல்லை புரிந்தபின்
    என்று மெதுவும் எளிது..!

    தன் மற்றொரு கவிதையில், ”பாதையென்றால் பள்ளமும் மேடும் இருக்கவே செய்யும்; கவனத்தோடு சென்றால் வாழ்க்கையில் வெல்லலாம்!” என்று ஊக்கமூட்டுகின்றார்.

    பாதை காட்டும் வாழ்வியல்..!

    பாதையென் ருந்தாலே பள்ளமும் மேடுமுண்டு
    காதையும் தீட்டியே கண்ணையும் பாதைமேல்
    வைத்தால்தான் உண்டுநல் வாழ்க்கைப் பயணம்.!
    அனுபவத் தால்நீ அறி..!

    *****

    நல்ல கவிதைகளை வெல்லத் தமிழில் அள்ளித் தந்திருக்கும் கவிஞர்கட்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    எங்கே போகிறோம்?

    போய்ச்சேரும் இடம் அது தெரியாமல்
    சாலை அது சிறப்பாய் இருந்து பயன் இல்லை
    நோக்கம் அது இல்லா வாழ்வும் என்றும்
    சிறப்பாய் இருக்கச் சாத்தியம் இல்லை
    தொலைநோக்கும் பார்வை ஒன்று வேண்டும்
    அதை நோக்கிப் பாதை போட வேண்டும்
    வழி நடத்திச் செல்ல
    யாரையும் எதிர்பார்த்து நீ இருந்தால்
    அவர் பாதையில் நீ நடக்க,
    கொண்ட நோக்கம் அது மாறிப்போகும்
    பகுத்தறிவோடு நீ இருந்து
    கொண்ட நோக்கம் தனை நோக்கி
    புதிய பாதையை நீ அமைத்திடு!
    எழுச்சி ஒன்று நெஞ்சில் வேண்டும்
    கனவாய் அது தோன்ற வேண்டும்
    இயற்கையோடு கைகோத்து தினம் போராடு!
    மரங்களின் நிழல் கூடஒளியாய் உன்னைத் தொடர்ந்திடும் பாரு
    புகைப்படத்தில் தோன்றும் பாதையில் கூட
    இரு புறம் இருக்கும் மரத்தின் நிழலது
    இடைவெளி விட்டுத் தோன்ற ஏணிப்படிகளாய் தோன்றியதே!
    முன்னேறும் பாதை இது என்று உணர்த்தி
    தடை ஏதும் இன்றி முன்னேறி வர அழைப்பு விடுத்தனவே
    பயம் அதை போக்கிடு இன்றோடு!
    தைரியமாய் முன்னேறு வெற்றி தொடர்ந்திடும் உன் பின்னோடு!

    ”தொலைநோக்குப் பார்வையோடும் பகுத்தறிவுச் சிந்தனையோடும் உனக்கான பாதையில் நடைபோடு! அப்போது மரங்களின் நிழல்கூட உனக்கு ஒளியாகும்! நடந்திட ஏணிப் படியாகும்” என்று நம்பிக்கை விதைகளைத் தூவிடும் பாவுக்குச் சொந்தக்காரரான திரு. இராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181204-DWA The 100 enemies within A4 Canson 200gsm -600dpi wcol wm

    நம்முள் கிடக்குது நூறு பகைவர்கள்
    கம்னு கிடக்கலாமோ காண்டீபா! -ஜம்னுநீ
    தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்னைக்கேள்
    நூறை ஒடுக்க நிமிர்”….கிரேசி மோகன்….!

    Share