கவிஞர் இடக்கரத்தான்

எப்படியோ போகட்டும் நாடு – என்று எகத்தாளம் பேசுவதும் கேடு – தொடர்ந்து தப்புமிக நடப்பதனை துணிச்சலுடன் எதிர்க்கும் மனம் கொள்ளு – தீங்கு – கிள்ளு!
எப்படியோ போகட்டும் என்று – உன்னுள் இருக்கின்ற மனசாட்சி கொன்று – பெரும் தப்படியில் செல்வாரை தடுக்கமனம் இல்லாமை குற்றம் – அவலம் – முற்றும்!
தன்னலத்தார் முகத்திரையும் கிழியனும் – அவர் தலைக்கனமும் முற்றிலுமே அழியனும் – என்றும் பன்னலமும் காக்குமுயர் பண்புள்ளம் கொண்டோரின் உறவு – நல்ல – வரவு!
நாட்டுநலம் தனைமுற்றும் மறப்பார் – குள்ள நரித்தனங்கள் செய்துவந்து பறப்பார் – பெரும் வேட்டையிட்டு நாடுதனை வேதனையில் தள்வாரை விரட்டு – சக்தி – திரட்டு!
உன்னாலும் முடியுமடா தம்பி – நாடு உன்னையுமே இருக்குமிக நம்பி – நாளும் முன்நோக்கிச் செல்வதுதான் முழுவெற்றி கொணருமென்று முழக்கு – வெளுக்கும் – கிழக்கு!
சொன்னதைச் செய்திடலாம் நம்பு – இந்த செகத்தைநம்பு கோலாலும் நெம்பு – வான் மின்னலெனச் செயல்பட்டு மேன்மைமிக நாடடைய வைப்பாய் – செயலில் – மெய்ப்பாய்!
பத்துவிரல் மூலதனம் இருக்கு – என்று பயமின்றி மீசைதனை முறுக்கு – சிறு சத்தமின்றி வெற்றியுனை சங்கமித்து ஆற்றல்பறை சாற்றும் – ஊர் – போற்றும்!
தன்னம்பிக் கைதனையும் பெருக்கு – உயர்வை தடுத்துவரும் எதிர்ப்புதனை உருக்கு – என்றும் உன்னைப்புறம் தள்ளும்குறு உணர்வுகளை வேருடனே கிள்ளு – வாகை – அள்ளு!

கவிஞர் இடக்கரத்தான் – 03.12.2018

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *