சி. திருமலைச்செல்வி

முனைவர்பட்ட ஆய்வாளர்

(பதிவு எண். 9156)

ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி

குற்றாலம் – 627 802

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

திருநெல்வேலி – 627 012.

—————————————————

ஒரு மொழியின் சிறப்பினையும் வளத்தினையும் அறிய அம்மொழியில் எழுந்துள்ள காப்பியங்களே பெரிதும் துணைநிற்கின்றன. இக்காப்பியங்களை இலக்கண நூல்கள் தொடர்நிலைச் செய்யுள் என்று குறிப்பிடுகின்றன.

தமிழில் தோற்றம் பெற்ற காப்பியங்கள், காப்பியங்களின் பொருள், தமிழின் இரட்டைக் காப்பியங்களில் இடம்பெறும் தூதுப் பொருண்மைகள், வளர்ச்சிநிலை ஆகியன குறித்து இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.

காப்பியம் – பொருள் விளக்கம்                                                                           

‘காப்பியம்’ என்ற சொல் உணர்த்தும் பொருள் குறித்தும், காப்பியம் என்ற சொல்லின் மொழியாக்கம் குறித்தும் பல்வேறு கருத்து நிலைகள் ஆய்வாளர்களிடையே நிலவுகின்றன.

‘காப்பியம்’ என்ற சொல் ‘காவ்யம்’ என்ற வடசொல்லின் திரிபு என்பதைப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, கி.வா. ஜெகந்நாதன், நா. பார்த்தசாரதி முதலானோர் குறிப்பிடுகின்றனர்.

கலைக்களஞ்சியம் காப்பியம் என்பதற்கு, ‘காவ்யம் என்பதன் திரிபு’ (கலைக்களஞ்சியம், தொகுதி – 6, ப. 247) என்றே குறிப்பிடுகின்றது.  ஆயினும், அ. சிதம்பரனார், துடிசைக்கிழார் முதலானோர் காப்பியம் என்பதனைக் காப்பு + இயம் = காப்பியம் எனக் கொண்டு அது தமிழிச்சொல்லே என நிறுவுகின்றனர்  (சோம. இளவரசு, காப்பியத்திறன், ப. 17).

தமிழிக் காப்பியங்கள்

தமிழில் தொன்மைக் காலத்திலேயே காப்பியங்கள் இருந்திருக்க வேண்டும் என்றாலும் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள், கிடைத்துள்ள காப்பியங்களை வகுத்தும் தொகுத்தும் அவற்றைப் பாகுபாடு செய்துள்ளனர்.

தமிழின் தொன்மையான இலக்கிய வடிவங்களில் காப்பியங்களும் ஒன்று என்பதனையும், அவை அளவால், பொருளால் பகுக்கப்பட்ட திறத்தினையும், ‘‘கி.மு. 2ஆம் நூற்றாண்டளவில் தமிழ்மொழி காப்பிய நிலத்தில் அடியெடுத்து வைத்தது. சிலப்பதிகாரம் தோன்றியது.  இதுவே தமிழின் முதல் காப்பியம். இதனைத் தொடர்ந்து மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலான நூல்கள் இயற்றப்பட்டன.  இவை ஐந்தும் ஐம்பெரும் காப்பியங்கள் எனப் பெயர்பெற்றன. இவை பெருங்காப்பியம் என்று பிரிக்கப்பட்டமையால் வேறு ஐந்து நூல்கள் ஐஞ்சிறு சிறுகாப்பியம் என அழைக்கப்பெற்றன.  அவை உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி என்பனவாகும்” (சோம. இளவரசு, தமிழ் இலக்கிய வரலாறு, ப. 58)  என்று சோம. இளவரசு குறிப்பிடுகிறார்.

தமிழில் இரட்டைக் காப்பியங்கள்

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்களாகப் போற்றப் பெறுகின்றன.  காரணம், ‘இளங்கோ பாட சாத்தனார் கேட்டார்’ என்ற பதிகச் செய்தி இதற்குக் காரணமாகலாம்.  அதோடு மட்டுமல்லாது சிலப்பதிகாரம் முன்கதை; அதன் தொடர்ச்சியான பின்கதையாக மணிமேகலை அமைவதாகும். இரண்டு காப்பயிங்களும் முப்பது காதைகளைக் கொண்டமைந்தவை. இவ்வாறான தொடர்பு காரணமாகவே இரட்டைக்காப்பியம் என்ற கருத்தாக்கம் தோன்றியது.  சிலப்பதிகாரப் பதிகமும் அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையுமே இதற்குச் சான்றுகளாகச் சொல்லப்படுகின்றன.

கோவலன், கண்ணகி கதையுடன் மணிமேகலையின் தாய் மாதவிக்கு நீக்கமுடியாத தொடர்பிருத்தலும், கோவலனுக்கு அம்மாதவியிடம் பிறந்த மணிமேகலையைப் பற்றியதே காப்பியம் ஆதலும், மணிமேகலைக் காப்பிய நிகழ்ச்சிகள் பலவற்றிற்குக் காரணங்கள் சிலப்பதிகாரக்கதையில் உள்ளவாறு காட்டப்படுதலும், சிலப்பதிகார நிகழ்ச்சிகள் சிலவற்றிற்கு மணிமேகலை விளக்கம் போன்றிருத்தலும் இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என்ற கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளன.

‘‘உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்

உரைசாலடிகள் அருள மதுரைக்

கூலவாணிகள் சாத்தன் கேட்டான்”

(சிலப்பதிகாரம், பதிகம். 87-88)

எனக் குறிப்பிடுவதும்,

 

‘‘இளங்கோ வேந்தன் அருளிக்கேட்ப

வளங்கெழு கூலவாணிகன் சாத்தன்

மரவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு

ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனென்”

(சிலப்பதிகாரம், பதிகம். 95-96)

எனக் குறிப்பிடுவதும்.

‘‘மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய

சிலப்பதிகாரம் முற்றும்”     (மேலது, பதிகம். 17-18)

எனச் சிலப்பதிகாரக் கதை மணிமேகலையில் முற்றுப் பெற்றுள்ளது எனக் கூறுவதும் இதற்குச் சான்றுகளாகும்.

சிலப்பதிகாரத்தில் தூது

சிலப்பதிகாரத்தில் அகப்பொருள் மரபுகளை இளங்கோவடிகள் காப்பியக் கட்டமைப்புக்கு ஏற்றவகையில் சிறப்புறப்படைத்துள்ளார்.  இதனைக் கானல்வரியில் அமைந்தள்ள பாடல்களில் காணமுடிகிறது.  இவற்றோடு அகப்பொருள் துறைகளில் ஒன்றாகத் தூதுரைக்கும் பாங்கினையும் கதையோட்டத்தில் பொருத்திக் காட்டியுள்ளார்.

கானல்வரிக் காதையில், தலைமக்கள் தூதுவிடுக்கும் குறிப்போடு தன்னிடத்து மிகுந்து எழுந்த காதல் உணர்வை வெளிப்படுத்தும் புலம்பல்களாக வரும் பாடல்கள் தூதுப் பொருளில் அமைந்துள்ளன.

‘‘நேர்ந்ததன் காதலர் நேவி நெடுந்திண்டேர்

ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே

பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே

ஈர்ந்தண் துறையே இதுதகா தென்னீரே”

(சிலப்பதிகாரம், கானல்வரி, பா. 75)

எனவரும் அடிகளில் தலைவன் தேர்ச்சுவட்டை அழித்த கடல் ஓசையையும், குளிர்ச்சி பொருந்திய பொழிலையும், ஆணும் பெண்ணுமாகப் புணர்ந்தாடும் அன்னங்களையும், ஈரச்செறிவுடன் கூடிய கடற்துறையையும் தலைவி அழைத்து, தலைவன் தன்னை மறந்திருக்கும் செயல் தகாது என்று உரைக்குமாறு வேண்டி நிற்பதனைக் கூறும் பாங்கினைக் காணலாம்.  அஃறிணைப் பொருள்களை அழைத்துத் தன் துயர்தீர்க்க உதவுமாறு உரைக்கும் தூதுப் பொருண்மை இப்பகுதியில் புலப்படுகிறது.

கானல்வரியில் அமைந்த மற்றொரு பாடலில், தலைவி குருகு ஒன்றை அழைத்து, தன்னுடைய  நாட்டில் படர்ந்த கானற்பகுதியை அடையாமல் தலைவன் நாட்டில் நிறைந்த கானற்பகுதிக்குச்
சென்று அங்குள்ள தலைவனிடம் தன் துன்பத்தை உரைக்குமாறு வேண்டுவதனை,

‘‘அடையல் குருகே யடையலெங் கானல்

அடையல் குருகே யடையலெங் கானல்

உடைதிரைநீர்ச் சேர்ப்பற் குறுநோ யுரையாய்

அடையல் குருகே யடையலெங் கானல்”

(சிலப்பதிகாரம், பா. 46)

என்னும் பாடற்பகுதி உணர்த்துகின்றது. இதில் குருகினைத் தூதாக விடுப்பதனைக் காணலாம். மேலும் இதில் ‘குருகே’ என்பதில் தூது விடுக்கும் பொருளும், ‘உடைநீர்ச் சேர்ப்பன்’ என்பதில் தூது விடுக்கப்படும் தலைவனும், ‘உறுநோய் உரையாய்’ என்பதில் தூதுரைக்க வேண்டிய செய்தியும் பொருந்த வந்துள்ளதனைக் காணலாம்.

 

சிலம்பில் காமமிக்க கழிபடர்கிளவி

சிலப்பதிகாரத்தில் காமம் மீதூர்ந்த நிலையில் கானலிடத்தில் சென்று ஆங்கு நிறைந்திருக்கும் பல்வேறு அஃறிணைப் பொருட்களை அழைத்துப் புலம்பும் காமமிக்க கழிபடர்கிளவித் துறைப் பாடல்களைக் காணலாம். இவ்வாறு தூதாக விடுக்கப்படும் பொருள்களில் அன்னம், மாலைப்பொழுது ஆகியன இடம்பெற்றுள்ளன.

‘‘சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்

சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்

ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்

சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்” 

(சிலப்பதிகாரம், பா. 23)

என்னும் பாடற்பகுதியில் அன்னத்தை விளிப்பதையும்,

‘‘பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ

வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை

மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்

ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை

தீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை

தூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு களிவியால்”

(சிலப்பதிகாரம், பா. 49-50)

என்னும் பாடலில் மாலையை விளிப்பதனையும் காணலாம்.

இளங்கோவடிகள் காப்பிய நிலையில் தூதினை ஓர் இலக்கிய உத்தியாகவே பயன்படுத்தியுள்ளார்.  மாதவி தன்னை விட்டுப் பிரிந்த கோவலனைக் காண வயந்தமாலை என்னும் தோழியிடத்தில் மலர்க்கடிதம் வரைந்து அனுப்பியதும், வெளியிடம் சென்று கோவலனைக் கண்டு பேசக் கோசிகமாணியைத் தூதாக விடுத்ததும் தூதுப் பொருண்மை உடைய பகுதிகளாகும்.

காப்பியக் காலத்தில் தூதுவிடுத்த முறை பற்றிய செய்திகள் மாதவி, வசந்தமாலையைத் தூதாக அனுப்பும் நிலைப்பாட்டிலிருந்து தெளிவாகிறது.  மாதவி, கோவலனுக்குத் தூது அனுப்பிய நிலையினை இளங்கோவடிகள்,

‘‘சண்பகம் மாதவி தமாலம் கருமுகை

வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த

அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை

எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த

முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு

விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட

ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்

ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்

திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,

……………..  ……………….. ……………..

தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து

விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,

பசந்த மேனியள் படர்உறு மாலையின்

வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்

தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்”

(சிலப்பதிகாரம், ஊர் அலர் எடுத்த காதை, பா. 1-9)

என்று எடுத்துரைக்கின்றார். மேலும் இக்காப்பியத்தில் காதல் செய்தியைக் கூறப் பெண் ஒருத்தியைத் தூதாகப் பயன்படுத்துதலும், தலைவனைத் தன்னிலும் உயர்ந்தவனாக எண்ணிய நிலையில் கோசிகமாணியைப் போன்ற தவசியைத் தூதுவராகப் பயன்படுத்துதலும் அக்காலப் பண்பாட்டையும், மாதவியின் உயர்சிறப்பையும் காட்டுவனவாக அமைந்துள்ளன. மேலும், நகருக்குள்ளாகத் தூது செல்லும் நிலை மட்டுமே பெண்ணுக்கு உரியது என்பதும், வெளியிடங்களுக்குத் தூதாகச் செல்வது ஆடவர்க்குரியது என்பதும் இதனால் தெளிவாகின்றது. மேலும் தூதுச் செய்தியை வாய்மொழியாகக் கூறுவதேயன்றிக் கடிதம் மூலமாகவும் கொடுத்தனுப்புவது உண்டு என்பது இதனால் தெளிவாகின்றது.

இவை மட்டுமன்றி வேறு சில இடங்களிலும் சிலப்பதிகாரத்தில் தூது பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

பொதிய மலையிடத்தில் உள்ள அகத்திய முனிவன் பெற்ற தென்றல் என்ற தூதன் இளவேனில் வருகையைக் குயிலுக்கு உரைத்தான் என்று குறிப்பிடும் பகுதியில்,

‘‘பொதியில் மாமுனி பயந்த இளங்கால் தூதன்”

(அ. ஆனந்தநடராசன், தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, ப. 56)

என்று தூது பற்றிய குறிப்பினைக் காணலாம். இதில் இளவேனில் வருகையைக் குயிலோனுக்கு உரைத்தல் என்ற தூதுச் செய்தியும், தூதன் என்ற குறிப்பால் இச்செய்தியை ஆடவரே உணர்ந்தனர் என்ற செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கால்கோட் காதையில் தூதர்கள் அரசியலில் பெற்றிருந்த சிறப்பினை இளங்கோவடிகள்,

‘‘காற்றூ தாளரைப் போற்றிக் காமின்”13

என்று குறிப்பிடுகின்றார். நடுகற்காதையில் கடைக்கண்ணின் நோக்கத்தைத் தூது என்னும் பெயரால் அகப்பொருள் மரபுநிலைக்கேற்ப,

‘‘சிதாரிபரந்த செழுங்கதைத் தூதும்”14

என்று குறிப்பிடுதலைக் காணமுடிகின்றது. தன் இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்த திருமால், தன் அடியால் பாண்டவர்க்குத் தூதாகவும் சென்றார் என்ற குறிப்பையும்,

‘‘பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி”15

என்று சிலப்பதிகாரத்தில் காணமுடிகின்றது. இவ்வாறாகச் சிலப்பதிகாரத்தில் தூது பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளதனைக் காணமுடிகின்றது.

மணிமேகலையில் தூதுக் குறிப்புகள்

மணிமேகலையில் தூது குறித்த செய்திகள் வெளிப்படையாக எவ்விடத்திலும் இடம்பெறவில்லை. எனினும் குறிப்பால் தூதுப் பொருண்மையை உணர்த்தும் பகுதிகள் உள்ளன.

சித்ராபதி வயந்தமாலையை மாதவியிடம் ஊரலர் எடுத்துரைக்கச் சொல்லி அனுப்புவதும், தன்னிலைமையைச் சித்திராபதிக்கும், தோழிமார்க்கும் எடுத்துக்கூறி சொல்லி, வயந்தமாலையையே மாதவி அனுப்புவதும் தூதுப் பொருண்மையுடையன. இதனை,

‘‘நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள்

காவல் தெய்வம் தேவர்கோற்கு எடுத்த

தீவகச் சாந்திசெய்தரு நல்நாள்

மணிமேகலையொடு மாதவி வாராத்

தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர்

சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கல்

தத்துஅரி நெடுங்கண் தன்மகள் தோழி

வயந்தமாலையை வருக எனக்கூஉய்

பயன்கெழு மாநகர் அலர் எடுத்து உரை என”16

என்னும் பகுதியால் அறியலாம்.

‘‘மணிமேகலையை மணிபல்லவத் தீவில் வைத்துள்ள செய்தியை மாதவியிடம் கூறச்சொல்லி சுதமதியிடம் தெய்வம் கூறுவதும், அச்செய்தியைச் சுதமதி கூறுவதும் தூதுக் கூறுகளை வெளிப்படுத்தவல்லனவாகும். ஆனால் தூது என்ற சொல்லே மணிமேகலையில் வெளிப்படையாக இடம் பெறவில்லை என்பது நோக்கத்தக்கது”17 என்று அ. ஆனந்தநடராசன் தூது என்ற சொல் மணிமேகலையில் இடம்பெறாது இருப்பதைச் சுட்டியுள்ளார்.

மணிமேகலை தூதுப் பொருண்மையுடன் இடம்பெற்றிருப்பினும் அதில் தூது என்பது வெளிப்படையாக அமையவில்லை எனத் தெளியலாம்.

முடிவுரை

இரட்டைக் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆகிய இரண்டும் காப்பியத் தன்மை மிகுந்து தமிழின்பம் நல்கும் நூல்களாக அமைந்துள்ளன. இவற்றில் தூது பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளமை  அறியமுடிகின்றது.

சிலப்பதிகாரத்தின் கானல்வரியில் தூது பற்றிய செய்திகள் விளக்கமாக இடம்பெற்றுள்ளன.  மாதவி தன் ஆற்றாமையைத் தீர்த்து வைக்குமாறு குருகு, அன்னம் மாலைப்பொழுது போன்றவற்றைத் தூது விடுப்பதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.  இவை காமமிக்க கழிபடர் கிளவித்துறை சார்ந்தனவாகவும், தூது இலக்கியத் தன்மையைக் கொண்டவையாகவும் அமைந்துள்ளன.

சித்திராபதியின் தூதுவராக வயந்தமாலை மாதவியிடம் சென்றுள்ளதை மணிமேகலை வழி அறியமுடிகிறது. மணிமேகலையில் தூது என்ற சொல் இடம்பெறவில்லை.

இரட்டைக் காப்பியங்களிலும் தூது ஓர் காப்பிய அங்கமாகவே இடம்பெற்றுள்ளதையும், அவை கதையோட்ட்த்திற்குப் பெருந்துணை புரிந்துள்ளதையும் இவ்ஆய்வு கட்டுரையால் அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

  1. அடியார்க்கு நல்லார் (உ.ஆ) சிலப்பதிகாரம்

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

முதற்பதிப்பு – 1990.

 

  1. கலைக்களஞ்சியம் தொகுதி – 6

தமிழ் வளர்ச்சிக்கழகம்

சென்னை

முதற்பதிப்பு – 1955.

 

  1. இளவரசு, சோம., இலக்கிய வரலாறு

மணிவாசகர் பதிப்பகம்

சென்னை

ஐந்தாம் பதிப்பு – 2002.

 

  1. ஆனந்த நடராசன், அ., தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அண்ணாமலை நகர்

முதற்பதிப்பு – 1997.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.