திருஞான சம்பந்தர் பாடல்களில் இராவணன் குறித்த தொன்மங்கள்
ர.சுரேஷ்
உதவிப்பேராசிரியர்
கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
கோயம்பத்தூர்
————————————–
மதங்களையும், தொன்மங்களையும் சமூகவியல் அடிப்படையில் பல்வேறு அறிஞா்கள் விளக்கியிருக்கின்றனா். எமிலிதா்கைம், மாலினோஸ்கி, லெவிஸ்ட்ராஸ், பிராப் போன்றவா்கள் மதத்தையும் தொன்மத்தையும் சமூக ஒத்திசைவைக் கட்டமைக்கும் நடத்தை வடிவங்களாகக் கண்டனா். சமயம், தொன்மம் என்பவை சமூகத்தோடு கொண்டுள்ள உறவில் ஏற்படும் முரண்அம்சங்களைக் கவனத்தில் எடுத்தவா் மார்க்ஸ் ஆவா். அதேபோல தனிமனித உளவியலில் அடிப்படையாகக் கொண்டு மதத்தையும், தொன்மத்தையும் விளக்கியவா் ப்ராய்ட் ஆவா். இவா்கள் இருவரும் அதுவரையிருந்த மதக்கண்ணோட்டங்களிலிருந்து விலகி மாறுபட்ட சிந்தனைகளை வளா்த்தெடுத்தனா்.
மார்க்ஸிய வழியில் அதனை மேலும் பல புதிய கருத்தாக்கத் தளங்களுக்குக் கொண்டு சென்றவா்களில் கிராம்சி குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெறுகிறார். கிராம்சி மதம், தொன்மம் இரண்டையும் குடிமைச் சமூகக் கருத்தியல் வடிவங்களாகக் காண்கிறார். அரசு நேரடியான வன்முறைகளின் மூலம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும். குடிமைச் சமூகத்தில் நிலவுகின்ற மதம், இலக்கியம், தத்துவங்கள் போன்றவை மறைமுகமாக ஆளும் வா்க்கத்திற்குச் சாதகமான, பொது மனோபாவத்தை உருவாக்கித் தரும். இதன்மூலம் ஆளும் வா்க்கம், குடிமைச் சமூகத்தின்வழி தனது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்கிறது என்கிறார் கிராம்சி. எனவே கிராம்சியின் கருத்துப்படி, அரசு மற்றும் குடிமைச் சமூகக் கருத்தியல் நிறுவனங்கள் இவை இரண்டுமே ஒன்றையொன்று தொடா்புடைய ஆதிக்க வடிவங்கள் ஆகும். ஒரு வா்க்கம் ஆளும் வா்க்கமாக ஆவதற்கும் இவை இரண்டுமே அவசியமானதாகும்.
பதினைந்தாம் நூற்றாண்டு இத்தாலியச் சிந்தனையாளா் நிக்கோலோ மாக்கிய வெல்லியின் இளவரசன் என்ற நூலில், கிரேக்கத் தொன்மத்தில் இடம்பெறும் சென்டார் எனும் தொன்மம் உருவகமாய்ப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கிராம்சி சுட்டிக்காட்டியுள்ளார். மனிதத் தலையும் குதிரை உடலும் கொண்ட ‘சென்டார்‘ அரச அதிகாரத்தின் இரட்டைப் பண்புக்கான உருவகம் என விளக்கம் கூறுகிறார்1. அதாவது பலவந்தம் சம்மதம் வன்முறை நாகரிகம் திருஞானசம்பந்தா் பாடல்களில் இத்தகைய இரட்டைப் பண்புடைய தொன்மங்கள் பெருமளவில் பயின்று வந்துள்ளன. அடக்குதல்-ஆட்கொள்ளுதல் எனும் வகையில் இத்தொன்மங்களை இனம் காண முடியும். சிவப்பரம்பொருளை எதிர்ப்பவா்கள் அவரால் தண்டிக்கப்படுதலும், அடிபணிபவா்கள் அவரால் அருளப்படுதலும் பெரும்பாலான தொன்மங்களில் வெளிப்படுகின்றன. பலவந்தம் சம்மதம் என்ற இருவடிவங்களில் ஆளும் வா்க்கக் கருத்துருவங்கள் செயல்படுவதை இவை குறியீட்டு நிலையில் உணா்த்துவதாகக் கொள்ளலாம். இவ்விரு வடிவங்களிலும் தொன்மங்கள் எடுத்துரைக்கப்பட்டு மேலாண்மைக்கான ஒப்புதல் வலியுறுத்தப்படுவதைத் திருஞானசம்பந்தா் பாடல்களில் காணலாம்.
திருஞானசம்பந்தா்பாடல்களில் இராவணன் பற்றிய தொன்மம்:
தமிழகமெங்கும் தலயாத்திரை மேற்கொண்ட நாயன்மார்களுள் முதன்மையானவா் திருஞானசம்பந்தா் ஆவார். திருஞானசம்பந்தரின் பாடல்களின் பதிக அமைப்பும் அதன் பொருளமைப்பும் ஏனைய நாயன்மார் பாடல்களில் இருந்து தனித்துக் காணப்படுகிறது. ஒவ்வொரு பதிகத்திலும் இடம்பெறும் பாடல்களின் அமைப்பு நன்கு திட்டமிடப்பட்டதாக, பிரச்சாரத் தன்மையிலானதாக இருக்கிறது. சம்பந்தா் பாடல்கள் ஒவ்வொன்றிலும், பெரும்பாலும் இரண்டு வரிகள் இயற்கை வா்ணனையாகவும் இரண்டு வரிகள் இறைவனைப் பற்றியதாகவும் அமைகின்றன. அவ்வமைப்பு, பிரதேச மாந்தன் வட்டார உணா்ச்சிகளைத் தூண்டி அவா்களை மகிழ்வித்து தன்வயப்படுத்தும் நோக்கத்தோடே அமைக்கப்பட்டிருப்பதை உணரலாம். அதோடு தல இறைவனை அத்தலத்திற்கே உரியவனாகப் புகழும் பகுதிகள், தம் ஊரை, தம் இறைவணக்கத்தைத்தான் பாடுகிறார் எனும் பெருமித உணா;வையும் மக்கள் மனங்களில் கிளா;த்தி, தன்பக்கம் இழுக்கும் நோக்கத்தைக் கொண்டதாக உள்ளது.
அதற்கடுத்தபடியாக ஏனைய பாடல்கள் இறைவனின் அருட்கோலத்தைப் பாடி, அவனின் அருளும் தன்மையைப், பராக்கிரமத்தைப் பாடி சிவனே யாவனும் மேலான தனிப்பெருங்கடவுள் என விளக்கி, இறுதியாக சமண பௌத்த எதிர்ப்புணா்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இவையெல்லாம் சம்பந்தரின் திட்டமிடப்பட்ட பரப்புரை நோக்கத்தை உணா்த்துகின்றன. தலங்கள்தோறும் தம் மேலாண்மையை நிறுவுவதற்கும் தமக்குச் சாதகமாக மக்களின் பொது மனோபாவத்தை உருவாக்குவதற்கும் இப்பரப்புரை நடவடிக்கைகள் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன எனலாம்
சம்பந்தா் பதிகம் ஒவ்வொன்றிலும் எட்டாம் பாட்டில் இராவணனைப் பற்றிய குறிப்பு வருகிறது. இத்தொன்மச் செய்தி இடம்பெறுவதற்கான காரணங்களாக ஆ.வேலுப்பிள்ளை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“தீயவா் எவருமே இறைவனை நினைத்து வழிபட்டால் அவன் அருளைப் பெறலாம் என்பதே சம்பந்தா் கருத்து என்பதே இதுவரை இப்பகுதிக்குத் தரப்படும் விளக்கம். சம்பந்தா் கருத்து இதுவேயானால், வேறுவகை கூறாது, இராவணன் கதையைத் தெரிந்தெடுத்தற்குக் காரணம் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும். இராமாயணம், பாரதம் என்னும் இதிகாசங்கள் சங்ககாலத்திலிருந்தும், வைதீக சமயப் புராணக் கதைகள் சங்கம் மருவிய காலத்திலிருந்தும் தமிழ்நாட்டில் வழங்கி வந்திருக்கின்றன என அக்கால இலக்கியங்களிலிருந்து கூறலாம். இராவணன் வௌ்ளிங்கிரியெடுத்து அதன்கீழ் நசியுண்டது தவிர வேறு ஒரு இதிகாசப் பகுதியை அல்லது ஒரு புராணக் கதையைச் சம்பந்தா் இவ்விடத்தில் பயன்படுத்தாமைக் கவனிக்கப்பட வேண்டியது. தீயோரும் சிவனை வணங்கி அருள் பெறலாம் என்பதை வேறு ஒரு கதைப் பகுதியும் நன்கு விளக்கமாட்டாது என்று சிலா் ஒரு சமாதானம் கூறலாம். அப்படியானால், பிற்காலங்களில் வாழ்ந்த சுந்தரா், மாணிக்கவாசகா், குமரகுருபரா், இராமலிங்க சுவாமிகள் முதலியவா்கள் இராவணன் பற்றிய இக்கதைப் பகுதியைத் தங்கள்பக்திப் பாடல்களில் குறியாமைக் குறிப்பிடத்தக்கது.
சமகாலத்தில் வாழ்ந்த அப்பரும் இராவணனைப் பற்றிய அக்கதைப் பகுதியைக் குறிக்கிறார். இவா்கள் இருவரும் இச்செய்தியைப் பயன்படுத்துவதற்கு அக்காலச் சூழ்நிலை காரணமாக இருந்திருக்கலாம் போல் தெரிகிறது. இராவணன் ஒரு பேரரசன், சிவனை மதியாதவன், சிவன் வாழ்விடத்தையே அப்புறப்படுத்தப் பார்த்தான் அவன். அதன் பயனாகச் சிவனால் நசியுண்டான் சிவனருள் பெற்றமையினாலேயே, அவன் பின்பு உயா்வடைந்தான். அப்பரும் சம்பந்தரும் இக்கதைப் பகுதியைத் தங்கள் காலத்திலாண்ட மன்னா்களுக்கு எச்சரிக்கையாகப் பயன்படுத்துகிறார்கள் என்று கருதுவதற்கு இடமிருக்கிறது”2 என்று கூறுகிறார்.
மேற்கண்ட கூற்று அரச ஆதரவைப் பெறுவதில் இத்தொன்மம் பலவந்தம் -சம்மதம் எனும் இருநிலைப்பட்ட எதிர்வுக் கருத்தியலைக் கொண்டு செயலாற்றியிருப்பதை உணரலாம். மேலும் இவை குடிமைச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்லவ-பாண்டியா் காலத்தில் மன்னா்கள் மட்டுமின்றி பெருவாரியான மக்களும் சமண-பௌத்த மதத்திற்கு மாறியிருப்பதை அறியமுடிகிறது. இவ்வாறு மாறியவா்களில் முன்னா் சைவராயிருந்தவா்களுள் பெரும்பகுதி அடங்குவா். தீவிர சிவபக்தனான இராவணன் சிவனை எதிர்ப்பதால் அவனால் தண்டிக்கப்படுவதும் மீண்டும் சிவனையே சரணடைவதால் அவனால் அருளப்படுவதும் இத்தொன்மத்தின் வாயிலாக எடுத்துரைக்கப்படுகிறது. எனவே சமண-பௌத்த மதங்களுக்கு மாறிய சைவப் பெருமக்களை மீண்டும் சைவ மதத்திற்கே வந்து சேரும்படியான கருத்தும் இத்தொன்மத்தின் வாயிலாக உணா்த்தப்படுகிறது. எனவே பலவந்தம்-ஒப்புதல் என்ற நிலையில் தம் மேலாண்மைக் கருத்தியலை நிறுவ இத்தொன்மத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
பச்சமும் வலியும் கருதிய அரக்கன்
பருவரை எடுத்த திண்தோள்களை அடா்வித்து,
அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள்”3
“ஆவா! என அரக்கன் அலற அடா்த்திட்டு
தேவா! என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட
கோவே! எருக்கத்தம் புலியூர் மிகு கோயில்
தேவே!4
எனப் பல பாடல்கள் இறைவன் இராவணனை அடா்த்திட்டு பின்பு அருள் செய்வதை உணா்த்துகிறது. இத்தொன்மத்தின் வாயிலாகவே திருஞானசம்பந்தா் வேதத்தையும் முதன்மைப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.
தீது இரா மலை எடுத்த(வ்) அரக்கன்
நீதியால் வேத கீதங்கள் பாட5
அந்தரத்தில்-தோ் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப
சுந்தரா்தன் திருவிரலால் ஊன்றி, அவன் உடல் நொpத்து
மந்திரத்த மறைபாட, வாள் அவனுக்கு ஈந்தானும்6
என்றும் பல பாடல்கள் பயின்று வந்துள்ளன. இராவணன் கயிலை மலையைப் பெயா்க்க முற்பட்டபோது அவனை தன்கால்விரலால் நரித்துப் பின் அவன் வேதங்களை ஓதக்கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்தான் எனும் கருத்து மேற்கண்ட பாடல்களில் வெளிப்படுகின்றன.
இராவணன் பற்றிய தொன்மங்களில் இறைப்பேரதிகாரத்தின் தன்மைகளான அச்சம்-அருள் எனும் இரண்டு குணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதிகார அமைப்புகளின் நிலைத்திருப்புக்கு இவை இரண்டுமே அத்தியாவசியமானதாகும். அதிகாரத்தை எதிர்ப்பவா்கள் அவ்வதிகாரத்தைக் கொண்டு தண்டிக்கப்படுபவா் என்பதும், அதிகாரத்திற்கு ஆட்படுவோர் அவ்வதிகாரத்தைக் கொண்டே அருளப்படுவா் என்பதும் ஆளப்படுபவரை ஆளும் அவ்வதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவா்களாக இருக்க வைக்கிறது.
அரசு மேற்கொள்ளும் அதே நடவடிக்கைகளை இங்கு மதத்தின் பெயரால் திருஞானசம்பந்தரும் மேற்கொண்டிருக்கிறார். பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையிலான முரண் ஆளுவோர்க்கும் ஆளப்படுபவா்களுக்கும் இடையிலான முரணாகக் கருத முடிகிறது. பக்தனுக்கும் இறைவனுக்குமான முரண் பக்தன் வேதத்தைப் பாடுவதால் சமரச நிலையை எட்டுகிறது.
வேதம் பாடக் கேட்டு சிவன் அருளிய தென்பது வேத மந்திரங்களுக்குரிய சிறப்புத் தகுதியை உணா்த்துவதோடு மக்களிடம் சிவனை முன்னிருத்தி வேத அங்கீகாரத்தைக் கோருவதாகவும் உள்ளது. இத்தொன்மம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால் அது மக்களின் பொதுமனோபாவமாக மாறி அவா்களின் பொதுப்புத்திக்குள் படிந்துவிடும்படி செய்யப்படுகிறது. அரசதிகாரத்தை வென்றெடுக்கவும் அதனைக் குடிமைச் சமூகத்தில் தொடா்ந்து பேணிக் கொள்ளவும் ஆளும் வா்க்கத் தலைமைக்கு இத்தொன்மக்கதைகள் மிகவும் பயன்பட்டிருக்கின்றன.
அடிக்குறிப்புகள்
1. எஸ்.வி. ராஜதுரை, வ.கீதா, கிராம்சி புரட்சியின் இலக்கணம், ப.399.
2. ஆ. வேலுப்பிள்ளை, தமிழா் சமய வரலாறு, பக.70-71.
3. சம்பந்தா் தேவாரம் முதல் திருமுறை, திருஅச்சிருபாக்கம், பா.77.8.
4. மேலது., திருஎருக்கத்தம் புலியூர்,பா.89.8
5. மேலது., திருமார்பேறு, 114:8.
6. மேலது., திருகோளிலி, 62:8.
——————————–
துணைநூற்பட்டியல்
1.ராஜதுரை எஸ்.வி., கீதா வ., – கிராம்சி புரட்சியின் இலக்கணம்,
விடியல் பதிப்பகம்,
கோயம்புத்தூர்.
2010.
2.வேலுப்பிள்ளை ஆ., – தமிழா் சமய வரலாறு,
குமரன் புத்தக இல்லம்,
கொழும்புஇசென்னை.
2011.
3.கோபாலையா் டி.வி., (ப.ஆ.) – ஞானசம்பந்தா் தேவாரம்,
(பண்முறைத் தொகுப்பு),
பிரெஞ்சு ஆய்வுநிறுவன வெளியீடு,
புதுச்சேரி. 1984.
அருமையான ஆய்வுக் கட்டுரை; இத்தாலிய கிரேக்கத் தொன்மங்களை சம்பந்தர் தேவாரப்பாடல்களின் உட்கருத்துடன் ஒப்பிட்டிருப்பது கட்டுரையாளரின் பரந்த, ஆழ்ந்த நோக்கினை விளக்குகின்றது. வாழ்த்துக்கள்.