கன்னியர் எழுவர் வழிபாடு
அ.அன்புவேல் எம்.ஏ.,எம்..ஃபில்.,பி.எட்.,(பி.எச்டி)
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(மகளிர்)
சங்ககிரி. சேலம் மாவட்டம்.
அலைப்பேசி: 96004 13310.
மின்னஞ்சல்-:anbuvelm@gmail.com
—————————–
அறிமுகம்
ஏழு கன்னிமார் என்பவை சகோதரத்துவ உறவுடைய தெய்வீக சக்திகளான ஏழு கன்னிமார்களின் தொகுதியாகும் இந்த ஏழு என்ற எண்ணிக்கையிலான பெண் குழுத்தெய்வங்கள் பல்வேறு சமூகங்களில் வழிபடப்பட்டு வருகின்றன. இனக் குழு மரபுகளிலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் மரபுகளிலும் கன்னடம், தெலுங்கு, போன்ற மொழிகள் பேசும் மக்கள் சமய மரபுகளிலும், வடமொழி மரபுகளிலும் ஏழு பெண் தெய்வங்கள் பற்றிய நம்பிக்கைகளும் வழிபாடுகளும் காணப்படுகின்றன.
தமிழகத்தில் கன்னியர் எழுவர்
மாதாக்கள் வழிபாடு தமிழகத்தில் பரவலாக இடம் பெற்றிருப்பதாகும் ஏழு கன்னிகளைப் போல தமிழ்நாட்டு வட்டாரத் தன்மைகளைக் கொண்டிராத இந்த சப்தமாதாக்கள்,தம்முடைய பெயர்கள், புராணங்கள், குணவியல்புகள் போன்ற இதர கூறுகள் அடிப்படையில் வடமொழி மரபுக்குரியனவாக விளங்குகின்றன. சைவ சமய சார்புடையவனவாகத் திகழ்கின்றன. குளக்கரை, காடு, மற்றும் வெட்டவெளிகளிலும் தனிக்கோயில் கொண்டிருக்கும் சப்தமாதக்கள், சிவன் கோயில்களின் பிரகாரங்களையும் அலங்கரிக்கின்றன. இங்கெல்லாம் அவை துணைத் தெய்வங்களாகவே உள்ளன. ஏனைய துணைத் தெய்வங்களுக்குப் பூசை செய்யப்படுவது போலவே இவற்றுக்கும் பூசை செய்யப்படுகிறது. சப்தமாதாக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பெயர்களும், விசேடமான இயல்புகளும் புராணக்கதைகளும் நூல்களில் பதிவாகியுள்ளன. அபிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி ஆகியவையே சப்தமாதாக்கள். சிவன் கோயில் பிரகாரங்கள் தனிக்கோயில்களில் இடம் பெற்றிருக்கும் சப்தமாதாக்களின் சிலைகள் தத்தமது உருவ இயல்பைச் சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் மரத்தடியில் வெட்டவெளியில் இருப்பதால் இவற்றிற்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதில்லை. இன்றைய சூழ்நிலையில் ஏனைய பலதெய்வங்கள் பெற்றிருந்த செல்வாக்கை இவை இழந்துவிட்டன எனலாம். ஆனால் புராணசமய வழிபாட்டைவிட நாட்டுப்புற சமய வழிபாடு வேறுபட்டது.
“நாட்டுப்புறசமயத்தில் தமிழகத்தின்; தென்மாவட்ட கிராமங்களில் மாரியம்மன், காளியம்மன், பத்ரகாளியம்மன், அரியநாச்சியம்மன் காந்தாரியம்மன், வண்டிமலைச்சியம்மன், உமையம்மாள் ஆகிய எழுவரை வழிபடுகின்றனர்” 1
என்று டாக்டர் துளசிராமசாமி குறிப்பிடுவதிலிருந்து தென்தமிழகத்தில். கன்னியர் எழுவருக்கும் வழங்கியப் பெயர்களை அறியமுடிகிறது.
ஆந்திரம் மற்றும் கருநாடகத்தில் கன்னியர் எழுவர்
கர்நாடகத்திலும் ஏழுசகோதரிகள் பற்றிய குறிப்பு இருக்கிறது. வொய்ட்கெட் என்பவர் தமது நூலில் எழுமாரித் தெய்வங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.
“அன்னம்மா, சந்தேஸ்வரம்மா, மாயேஸ்வரம்மா, மரம்மா, உடலம்மா, கொக்கலம்மா, சுகஜம்மா ஆகியவை அந்த ஏழுதெய்வங்களாகும். இந்த ஏழு தெய்வங்களுக்கும் துணைத்தெய்வமாக முனிஸ்வரர் என்ற ஆண் தெய்வம் இருக்கிறது”.2
ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் கண்டுகுறு வட்டத்தில் பொதுவாக கீழ்க் கண்டவாறு ஏழு சகோதிரிகள் பற்றி அழைக்கிறார்கள்.
“போலேரம்மா, அங்கம்மா, முத்தியாலம்மா, தில்லி, பொலசி, பங்காரம்மா, மாதம்மா ஆகியனவாகும், பாலேரம்மா என்பது அம்மை நோய் கடவுளாகும். இது நம் மாரியம்மன் போன்ற தெய்வமாகும். இந்த ஏழு தெய்வங்களுக்கும் துணைத்தெய்வமாக போத்திராஜ் என்ற ஆண் தெய்வம் இருக்கிறது”.3
ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலுள்ள ஏழு சகோதிரிகளும் வீட்டுத் தெய்வமாகவும், ஊர்த்தெய்வமாகவும் வழிபடப்படுகின்றனர் . இதுபோன்று தான் தமிழகத்திலும் வழிபடுகிறார்கள்.
புராணசமயத்தில்; கன்னியர் எழுவர்
காஸ்யப முனிவருக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். ஒருவன் ஹிரண்யாசன் மற்றொருவன் ஹிரண்யகசிபு ஆகியோராவர். திருமால் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாசனையும், நரசிம்மஅவதரம் எடுத்து ஹிரண்யகசிபுவையும் கொன்று விடுகிறார். ஹிரண்யாசனின் மகன் திருமால் பக்தனாக மாறி அரச வாழ்வை துறந்தான். அவனுக்குப்பின் ஆட்சி செய்த அந்தகாசூரன் தமது ஆழ்ந்த தவத்தின் பயனாக பிரம்மாவிடமிருந்து பலவித வரங்களைப் பெற்றான். அதன் காரணமாக அகங்காரமடைந்த அந்தகாசூரன் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவன் அவர்களின் புகார்களை கேட்டுக்கொண்டிருக்கும் போதே அந்தகாசூரன் பார்வதியை தூக்கிச் செல்வதற்காக கைலாய மலைக்கு வந்துவிட்டான். சிவன் மிகவும் கோபமுற்றார் அந்தகாசூரனை அழிப்பதற்கு பூதகணங்களுடன் முற்பட்டார். திருமால் மற்றும் கடவுள்கள் அனைவரும் புறமுதுகிட்டோடினர். சிவன் மட்டும் தனித்து நின்று அசுரன் மீது அம்பு மாறிகளை பொழிந்தார். அம்புகள் அசுரன் மீதுபாய்ந்து உடலை துளைத்தன. இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் மண்ணில் விழ விழ பல அந்தகாசூரர்கள் தோன்றினர். சிவன் தமது திரிசூலத்தால் உண்மை அந்தகாசூரனைக் கொன்றார்.
திருமால் சக்கராயுதத்தால் பிற அந்தகாசூரர்களைக் கொன்றுறொழித்தார். அந்தகாசூரர்களின் உடலில் இருந்து பீறிட்டு எழுந்த இரத்தம் மண்ணில் விழுவதைத் தடுப்பதற்காக சிவன் தமது வாயிலிருந்து எழும் தீயிலிருந்து யோகேஸ்வரி எனும் சக்தியை உருவாக்கினார். அதே காரணத்துக்காக இந்திரன் முதலானோர்களும் தங்களது சக்திகளை மனைவிகளை அனுப்பினர். அவர்களே பிராமணி, மகேஸ்வரி, கௌமாரி, வைஸ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டா ஆகியோர் ஆவர். இவர்கள் முறையே பிரம்மன், மகேஸ்வரர், குமரன், விஸ்ணு, வராகர், இந்திரன், எமன் ஆகியோரின் மனைவிகள் ஆவர் என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. ஆனால் வராக புராணம் மட்டும் தாய்மார்கள் எண்மர் என்று குறிப்பிடுகிறது. சிவன் தோற்றுவித்த யோகேஸ்வரியையும் இது சேர்க்கிறது. தாய்மார் எண்மர் கொண்டசிற்பம் ஒன்று திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் உள்ளது. இச்சிற்;பம் ‘அஸ்டமாத்திரிகா’ என்று அழைக்கப்படுகிறது இவர்கள் எண்மரும் எட்டுவகையான குணநலன்களை சித்தரிக்கின்றனர். அவை முறையே யோகேஸ்வரி காமத்தையும், பிராமண தற்பெருமையும், மகேஸ்வரி குரோதத்தையும், கௌமாரி மாகத்தையும், வைஸ்ணவி லோபத்தையும், வாராகி அசூயையும், இந்திராணி மாத்சார்யத்தையும், சாமுண்டா பொய்மையையும் குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.
“சும்ப–நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப் போர் புரியும்போது அவளுக்கு உதவியாக இத்தேவிகளை உற்பவித்தனர் என்று மார்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. மேலும் காளிதாசரின் குமாரசம்பவம் எனும் காவியததில் சப்தகன்னியர் சிவபெருமானின் பணிப்பெண்டிர் என்ற குறிப்பும் காணப்படுகிறது”4.
கன்னியர் எழுவர் பற்றி மற்றொரு புராணகதையில் மகிசாசூரன் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டும் என வரம் பெற்றிருந்தான். அதனால் தேவர்களும், முனிவர்களும் மகிசாசூரனால் துன்பமடைந்தனர். அனைவரும் சிவபெருமானிடம் சென்று தங்களை காத்தருளுமாறு வேண்டினர். உமையம்மையிடம் அனைவரையும் காத்தருளுமாறு வேணடினார் சிவபெருமான் அதனால் உமையம்மை தன்னிலிருந்து சப்தகன்னியர்களை தோற்றுவித்து மகிசாசூரனை அழித்தார். மகிசாசூரன் கொல்லப்பட்டதால் சப்தகன்னியர்களை கொலைப்பாவம் சூழ்ந்தது. அதனை நீக்கவேண்டி சிவபெருமானிடம் சப்தகன்னியர்கள் வேணடினர் சிவபெருமான் கோலியனூர் எனும் தலத்தில் தன்னை வழிபட்டுவருமாறு கூறினார். சப்தகன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான வீரபத்ரனை உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு தட்சணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்து கொலைப் பாவத்தைநீக்கினார் என்றும் கூறப்படுகிறது.
இவ்வெழுவர் உருவங்களும் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்கள் கொண்டு காணப்படும்; மேலிருகரங்களி;ல் அவைகளுக்குரிய படைக்கலன் களையும் கீழிருக்கைகள் அபயவரத நிலையையும் கொண்டிருக்கும். இடகாலை மடக்கி ஆசனத்தி;ன் மீது வைத்து வலக்காலை கீழே தொங்க விட்டநிலையில் காணப்படுவர். எழுவர் உருவங்களோடு சிவனது உருவம் யோகேஸ்வரராக அல்லது வீரபத்ரராகவும் இதனோடு விநாயகரது உருவமும் காணப்படும். தாய்மார் எழுவரும் அமர்ந்துயிருக்க அவர்களின் வலப்பக்கம் கடைசியில் வீரபத்ரரும் இடபக்கம் கடைசியில் விநாயகரும் அமர்ந்திருப்பர். அமர்ந்த நிலையில் காணப்படும் தாய்மார்கள் உருவங்கள் சில இடங்களில் நின்ற நிலையிலும் காணப்படுகின்றன. நான்கு கரங்கள் மூன்று தலைகள் எனப் பலவாறு பல இடங்களில் வைத்து வழிபாடு செய்கின்றனர். ஆயுதங்கள் ஏந்தியும் படைகலன்களைக் கொண்டும், வாகனங்களைக் கொண்டும் காட்சியளிக்கின்றனர். பாட்னா அருங்காட்சியகத்தில் உள்ள அன்னையர் எழுவர் சிற்பங்களில் அவைகளின் இடது தொடைகளின் மேல் குழந்தைகள் காணப்படுகின்றன. இவை கி.பி 12 ஆம் நூற்றாண்டுச் சார்ந்தவை எனக் கருதப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் குழந்தைகள் வைத்திருப்பது போன்ற சிலைகள் எங்கும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தமிழகத்தில் சப்தகன்னிகளாகத்தான் (மணமாகாதப் பெண்களாக) வழிபட்டிருக்கிறார்கள் என எண்ணுவதற்கு இடம் ஏற்படுகிறது.
தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரம் கலிங்கத்துப்பரணி, தக்கையாபரணி, திருமந்திரம் போன்ற இலக்கியங்களில் தாய்மார் எழுவர் பற்றியக் குறிப்புகள் காணப்படுகிறது. மேலும் ரிக் வேதத்திலும் தாய்மார் எழுவர் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.
கோயில்களில் கன்னியர் எழுவர்
சிவன் திருமால் கோயில்களிலும் ஐயனார், செல்லியம்மன் போன்ற சிறுதெய்வ வழிபாட்டுக் கோயில்களிலும் கன்னியர் எழுவர், கன்னிமார் எனவும் வைத்து வழிபட்டு வருகின்றனர். ஏழு கன்னிமார் வழிபாடு கிராமகோயில்களில் தொன்று தொட்டு மிக முக்கியமான வழிபாட்டுச் சடங்காகவே வழக்கிலிருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னிக்கோயில், கன்னிமார்கோயில், கன்னிமாரம்மன் கோயில் என்று சுட்டப்படும் கன்னிமார்க்கென்றே அமைந்த தனிக்கோயில்களில் மட்டுமின்றி இருபத்தொரு பந்தி தெய்வங்களில் இடம்பெறும் கோயில்களிலும் கன்னிமார் சிலைகள் இடம் பெறுகின்றன. ஏழு கற்கள் வைத்து வழிபடும் வழக்கம். இன்றும் கிராமப்புற பகுதிகளில் காணப்படுகின்றது. காடுறை தெய்வக் கோயில்களிலும், மலைப் பகுதிகளிலும் கன்னியர் எழுவரின் சிலைகள் வைத்து வணங்கப்படுகின்றது. சான்றாக சின்னக்கல்வராயன் மலைப் பகுதியில் கல்லூர் என்ற கிராமத்தில் கன்னிமார்களுக்கென்று தனி வழிபாட்டிடம் அடர்ந்த சோலைக்குள் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் கன்னிமார்க் கோயில்கள் நீர்நிலைகள் ஒட்டியே அமைந்துள்ளன. இன்றும் சில இடங்களில் கன்னிமார் ஆறு, கன்னிமார் ஓடை, கன்னிமார்ஏரி, கன்னிமார்க்;குளம் என்று நீர்நிலைகளுக்குப் பெயர் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டங்களிலும் கிராமப்புற மக்கள் மலைகளிலும், காடுகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் மாலை நேரங்களில் கன்னிமார்கள் நடமாடுவதாக நம்புகின்றனர்.
நிறைவாக
தமிழகத்தில் தாய்மார் எழுவர் வழிபாடு பல்லவர் காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து இருந்து வருகிறது. தாய்மார் எழுவரின் உருவ அமைப்புகள் சில காலகட்டங்களில் சில வித மாறுதல்களும் பெற்றிருக்கின்றன. இதனால் கன்னியர் எழுவர் வழிபாட்டு முறையானது பெருந்தெய்வ வழிபாட்டு முறையிலும், சிறுதெய்வ வழிபாட்டு முறையிலும் இன்றியமையாத ஒரு இடம் வகிக்கிறது என்பதை அறியமுடிகிறது. சோழர் காலத்திய கோயில்கள் அதற்கு முந்தையகால கோயில்களிலும் கன்னியர் எழுவர் சிற்றாலயங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. அதற்குப் பிற்காலத்தில் கன்னியர் எழுவர் வழிபாடு அருகிவிட்டது. கன்னியர் எழுவர் வழிபாடு இந்தியா முழுவதிலும் இருந்ததற்குச் சிற்ப ஓவிய செப்புப் படிமத் தடயங்கள் பல உண்டு. ஆனால் இவர்களுக்குத் தனிச் சிற்றாலயங்கள் எழுப்பும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமே உண்டு.
————————————–
அடிக்குறிப்புகள்
- 1. டாக்டர் துளசிராமசாமி, நாட்டுப்புறத்தெய்வங்கள்- பக்கஎண் – 48
- இந்திரன் (தொ.ஆ) வேரும் விழுதும; – பக்கஎண் – 20
- மேலது, பக்கஎண் – 21
- சப்தகன்னியர் வரலாறும் வழிபாடும் தினமலர் நாளிதழ்;சிறபபுத் தொகுப்பு டிசம்பர் – 2016
துணைநூற் பட்டியல்
- இந்திரன் (தொ.ஆ) வேரும் விழுதும்;
அலைகள் வெளியீடு
கோடம்பாக்கம் சென்னை– 17
முதற்பதிப்பு – 2000
- இராமசாமி துளசி. முனைவர் நாட்டுப்புறத்தெய்வங்கள்
விழிகள் பதிப்பகம்
வேளச்சேரிசென்னை– 42
முதற்பதிப்பு– 2000
இதழ்
- சப்தகன்னியர் வரலாறும் வழிபாடும் தினமலர் நாளிதழ்
சிறப்புத் தொகுப்பு
சென்னைபதிப்பு – 2016