Blog

  • வாழ்ந்து பார்க்கலாமே – 7

    க. பாலசுப்பிரமணியன்

    தடங்கல்களை எப்படித் தாண்டிச் செல்வது ?

    வாழ்ந்து-பார்க்கலாமே

    கிம் பீக் (Kim Peek) என்பவர் 1951ம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தார். பிறக்கும் பொழுதே இவருடைய மூளையில் சில குறைபாடுகள் இருந்தன. இவருடைய தலை சாதாரணமாக இருப்பவர்களின் தலையைவிடச் சிறிது பெரிதாகவும் மற்றும் இவருடைய மூளையில் வலது இடது மூளைகளை இணைத்துச் செயல்படும் கார்பஸ்கால்சோம் (CorpusCallosum) என்ற பகுதி வளர்ச்சியடையாமலும் இருந்தது. இதனால் இவ்வருடய மூளையின் செயல்பாட்டில் பல தாக்கங்கள் இருந்தன. உதாரணமாக இவரது வலது மூளையும் இடது மூளையும் தனித்தனியாக வேலைபார்த்ததால் இணைந்த ஒருங்கிணைப்பு இல்லாமலும் இருந்தது. அதன் காரணமாக இவர் ஒரு புத்தகத்தைப் படிக்கும் பொழுது இவருடைய ஒரு கண் ஒரு பக்கத்தையும் மற்றொரு கண் மற்றொரு பக்கத்தையும் பார்த்ததால் இரண்டு பக்கங்களையும் ஒரே நேரத்தில் இவரால் படிக்க முடிந்தது. அது மட்டுமல்ல. மூளை வளர்ச்சி சற்றே குறைவாக இருந்தாலும் இவருக்கு அபரிமிதமான ஞாபக சக்தி இருந்ததால் படித்த புத்தகங்களை உடனே நினைவில் கொள்ளவும் அதை முழுவதுமாக திரும்பிச் சொல்லவும் முடிந்தது. பள்ளிக்கூடங்களில் இவர் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இவருடைய தந்தை இவரை அருகில் உள்ள ஒரு நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவர் தொடர்ந்து புத்தகங்களை படித்து ஒரு சிறிய காலத்திலேயே சுமார் 12000 புத்தகங்களை படித்தது மட்டுமென்றி அனைத்தையும் நினைவில் கொள்ளும் ஆற்றல் கொண்டார்.

    இவருடைய ஆற்றல்களை வெளிப்படுத்தும் வண்ணம் இவரை மையமாக  முன்னிறுத்தி ஒரு நிழற்படம் (cinema) எடுக்கப்பட்டது. “ரெயின் மேன்”(Rain Man ) எனப்படும் அந்தப் படம் ஒரு ஆஸ்கார் பரிசையும் பெற்றது. இவரை நேர்காணல் செய்த அந்தப்படத்தின் நடிகர்  காப்மான் (Hoffmaan) இவரைப் பற்றிச் சொல்லும் பொழுது ‘நானோ ஒரு நட்சத்திரமாக இருக்கின்றேன். நீங்களோ அதற்கு அப்பாற்பட்ட ஒரு சொர்க்கமாக இருக்கின்றீர்கள்” (I was only a Star. But you are from Heaven) என்றார். தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் அவருடைய உடல் இடர்ப்பாடுகளை பற்றிக் கேட்டபொழுது அவர் கூறினார் ” எந்த உடல் இடர்ப்பாடும் ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு தடங்கலாக இருக்க முடியாது” இவர் ஒரு சாதனை மனிதர். “வாழ வேண்டும்’ என்ற ஒரு தன்னம்பிக்கை, ‘சாதிக்க வேண்டும்” என்ற ஒரு ஈடுபாடு, இவரிடம் இருந்தன. ‘திறன்களை” முழுமையாக உபயோகித்தல் போன்றவை ஒருவருடைய வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றது என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.

    வாழ்க்கையிலே பிரச்சனைகளையும் தோல்விகளையும் வளர்ச்சிப்பாதையில் தடங்கல்களை சந்திக்காத மனிதர்களே கிடையாது. ஆகவே சிறு வயதிலிருந்தே குழந்தைகளை இவை அனைத்தையும் எதிர்பார்க்கவும் சந்திக்கவும் சமாளிக்கவும் தயார் படுத்த வேண்டும். வெறும் வெற்றிகளையும் சுகங்களையும் சந்தோஷங்களையும் மட்டுமே குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்தி வாழ்க்கையில் அவைகளை மட்டுமே சந்திக்கவேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கி வளர்த்தால் பிற்காலத்தில் அவர்கள் தோல்விகளையும் துயரங்களையும் பிரச்சனைகளையும் கண்டு துவண்டு விடுவார்கள். தன்னம்பிக்கையை இழந்து வாழ்வே தொலைந்து விட்டது என்ற எண்ணத்தில் மனநோயாளிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.

    பிறப்பிலே ஏற்பட்ட உடல் ஊனங்கள், வாழ்க்கைப் பாதையில் நோய்களாலோ அல்லது விபத்துக்களாலோ ஏற்பட்ட ஊனங்கள் மற்றும் மனநலக் கோளாறுகள் இவற்றைத் தாங்கிக்கொண்டு சாதனை படைத்தவர்கள் ஏராளம் .. ஏராளம்!  அமெரிக்காவில் அலபாமா என்ற இடத்தில் பிறந்த ஹெலன் கெல்லர் (Helen Keller) தன்னுடைய இரண்டு வயதிலேயே கண்களில் ஏற்பட்ட நோய் காரணமாகப் பார்வையை இழந்தார். ஆனால் அவருடைய சாதனைகள் உலகையே வியக்க வைக்கும் வகையில் அமைந்தன. லூயி ப்ரைல்லே தன்னுடைய சிறிய வயதில் ஒரு விபத்தின் காரணமாக ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக தன்னுடைய இரண்டு கண்களின் பார்வையை இழந்தாலும் தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்காக  பிரெய்லி எழுத்து (Braille system) முறையை வடிவமைத்து அவர்களுக்கு கற்றலுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

    குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கனவு காண வழிவகுக்க வேண்டும். அவர்கள் கனவுகளை ஏளனம் செய்தோ அல்லது நிராகரிக்கவோ கூடாது. அந்தக் கனவுகளை அடைய என்னென்ன வழிகள் என்பதைப்  பெற்றோர்கள் அருகில் அமர்ந்து விவாதிக்க வேண்டும். அந்த கனவுகளை அடையும் பாதையில் என்னென்ன கடினங்களை எதிர்கொள்ளவேண்டும். அதற்குத் தேவையான தயாரிப்புக்கள் என்ன என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

    குழந்தைகளின் வளர்ச்சி வெறும் மதிப்பெண்களை பெறுவதில் மட்டும் இருப்பதில்லை. இளம் பிராயத்தில் வாழ்க்கையின் உண்மைகளையும் தேவைகளையும் அறிந்து கொள்ளாவிட்டால் அவர்கள் தோல்வியைத் தழுவிக்கொண்டு இருப்பார்கள். இன்றைய சமுதாயத்தில் நல்ல பட்டம் பெற்ற பல பேர்கள் நேர்காணலில் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவதும், வேலையிலே சேர்ந்தபின் திறனற்றவர்களாகக் கருதப்படுவதும் நிதர்சனம்.

    வாழ்க்கை கல்வி வெறும் எழுத்தறிவு அல்ல. புத்தகங்களை படிப்பதும் காகிதங்களில் எழுதுவதும் மட்டும் கல்வியின் வெளிப்பாடாகக் கருத முடியாது. கருதவும் கூடாது. தன்னுள்ளே புதைந்து கிடக்கின்ற திறன்களை தகுந்த அளவில் தகுந்த வழியில் தகுந்த இடங்களில் வெளிப்படுத்துதல் கல்வியின் சீரிய நோக்கமாகும். இதற்குத் தன்னம்பிக்கையும் தன்னார்வமும் மிக அவசியம். சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார் ” நீ உன்னை நம்பு. உலகம் உன் காலடியில் நிற்கும்.” (Believe in yourself. The world will be at your feet) அலெக்சாண்டர் டூமாஸ் என்ற ஒரு மேதை கூறுகின்றார் : ” ஒரு நோயாளிக்கு மருந்துகள்  மற்றும் போதாது. நாம் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கை அதைவிட மிக்க அவசியம்”

    நாளைக் காலையில் நம்முடைய குழந்தைகள் தன்னம்பிக்கையும் முயற்சியும் உள்ள செல்வங்களாக எழுந்தால் நம்முடைய சமுதாயத்திற்கு வருங்காலத்திற்கான ஒளிவிளக்கு நிச்சயமாக ஏற்றப்பட்டிருக்கும்.

    (தொடரும்)

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (94)

    நிர்மலா ராகவன்

    நலம்-1-1-1

    `வெளிநாட்டுக்குப் போனோமா! ஒரு இடம் விடாமல் சுத்தினேன். இன்னும் ஒரு வாரத்திற்கு எழுந்திருக்க முடியாது!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாள் கமலா. `ஆனா, எங்க வீட்டுக்காரர் இருக்காரே, சுத்த மோசம்! எதுக்கு வீண் அலைச்சல்னு பாதி நேரம் ஹோட்டல்லேயே தங்கிட்டார்!’ என்று கண்டனம் தெரிவித்தாள்.

    இதில் யார் செய்தது புத்திசாலித்தனம்? உடல் நோக அலைந்த கமலாவா, தன்னால் இவ்வளவுதான் முடியும் என்று தன்னையே தடுத்துக்கொண்ட அவளது கணவரா?

    முன்பு எப்போதோ பயணித்தபோது, `உயிர் வாழ்வதே உணவருந்தத்தான்!’ என்று ஓயாது சாப்பிட்டு, உடல் நிலை சரியாக இல்லாமல் போக, பயணமே வேண்டாம் என்றிருப்பவர்களும் உண்டு. தவறு செய்தால் என்ன! அதிலிருந்து கற்கலாமே! அடுத்த முறை சற்று ஜாக்கிரதையாக இருந்தால் போயிற்று.

    இப்போது நம் தினசரி வாழ்க்கையை கமலாவின் பயணத்துடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். நம்மால் முடியுமா என்றே யோசிக்காது, எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொள்கிறோம். பிறகு உடல் ஓய்ந்துவிடுகிறது.

    கதை

    தம் மகன் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற பேராவல் தினேசனின் பெற்றோருக்கு. அவர்களிடம் அதற்கான பொருள் வசதியும் இருந்தது.

    பதினாறு வயதான தினேசனின் தினசரி நடப்பு இப்படி: காலை ஏழு மணிக்குப் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுவான். வீடு திரும்ப நாலரை மணி ஆகிவிடும். அவசர அவசரமாக எதையோ சாப்பிட்டுவிட்டு, டியூஷன் அல்லது பியானோ வகுப்பு. அதன்பின் வீட்டுப்பாடம். தூங்குமுன் அரைமணி தொலைகாட்சி.

    `இளம் வயதில்தான் கற்க முடியும். இல்லாவிட்டால், பெரியவனானதும் ரொம்பக் கஷ்டப்படுவாய்!’ என்று தந்தை தினமும் சொல்வதை ஏற்று, அதன்படி நடக்கிறான் பையன். ஆனாலும், தனக்கு ஏன் மகிழ்ச்சி இல்லை, எப்போதும் சோர்வாக இருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. தன் நலனுக்குத்தானே செய்கிறார்கள் என்று பெரியவர்களை எதிர்க்கத் தோன்றவில்லை.

    சுறுசுறுப்பு என்றால் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காது, எதையாவது செய்துகொண்டே இருப்பதல்ல. `பயனுள்ள காரியம்’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், நேரம் போகப்போக, தளர்ச்சி உண்டாக, எடுத்த காரியம் விரைவில் முடிவதில்லை. இப்போது மனமும் சோர்வடைய, பொறுமை மீறுகிறது. `ஏன்தான் ஆரம்பித்தோமோ!’ என்று நம்மையே நொந்துகொள்ளும் நிலை வருகிறது.

    இப்படி நம் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொள்ள நம்மையறியாது என்னென்னவோ செய்கிறோம்.

    என்ன சொல்வார்களோ!

    பிறர் என்ன சொல்வார்களோ என்று பயந்தே பலர் புதிய முயற்சிகளில் ஈடுபடத் தயங்குவது உண்டு. திறமை இருக்கலாம். ஆனால் வேண்டாத உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டு, அவர்கள் தம்மால் இயன்றதைச் செய்யத் தவறிவிடுகிறார்கள். பழி — அதிர்ஷ்டத்தின்மேல்.

    `குடும்பத்தில் நடப்பதையெல்லாம் இப்படி – உங்களைப்போல — வெளியில் சொல்ல முடியுமான்னு பயம். அதான் நான் எழுதறதில்லே!’ என்று என்னிடம் தெரிவித்தாள் திருமணமான பெண்ணொருத்தி.

    இவளுக்குத் தன்னால் ஏன் தைரியமாக எழுத முடிவதில்லை என்ற ஏக்கம். பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தால், நம் தரத்தைக் குறைத்து எடைபோட்டுவிடும் அபாயம் உண்டு.

    கதை

    “எனக்கு பேனா பிடிச்சு, ஒரு வார்த்தையாவது எழுதணும்னு ஆசை!” என்றாள் மாலதி. பெரிய படிப்பு படித்திருந்தாள். ஆனால் இப்போது கதைப்புத்தகம்கூட படிக்கப் பிடிக்காதாம்.

    இலக்கு இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படி அடைவது என்று முயற்சிக்க வேண்டாமா!

    “தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க, நிறையப் படிக்க வேண்டும். புதிய, பழைய புதினங்கள், பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாறு..,” என்று நான் அடுக்க, அதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொருத்தி, “நீங்க இப்பவும் படிக்கிறீங்களா!’ என்று அதிசயப்பட்டாள்.

    அவளுடைய ஆச்சரியம் என்னைத் தொற்றிக்கொண்டது. படிப்பதற்கு வயது ஒரு தடையா!

    “நான் எதை, எப்படி எழுதப்போகிறேன் என்று நண்பர்களிடம் விவாதிப்பேன்!” என்றார், எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த முத்து.

    அவர்கள் `இதெல்லாம் நன்றாக இல்லை. சுவாரசியமே இல்லை,’ என்றால் இவரது உற்சாகம் குன்றிவிடும். எழுதுவதற்குமுன்னரே தமக்குத் தடை விதித்துக்கொள்வார். உருப்படியாக எதையும் ஏன் எழுத முடியவில்லை என்று அவருக்குப் புரியவில்லை.

    ஏதாவது பேட்டி கொடுத்ததும் சிலர், `எப்படி எழுதப்போகிறீர்கள்?’ என்று விசாரிப்பார்கள். தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அது எழுத்தாளர்களின் கற்பனைக்கு இடையூறு.

    கதை

    மலேசிய நாட்டில் விவாகரத்தைப்பற்றி எனக்குப் புள்ளிவிவரம் சேகரித்துக் கொடுத்தவர், “எப்படி எழுதப்போகிறீர்கள்?” என்று விசாரிக்க, “தெரியாது!” என்று நான் பதிலளித்தேன்.

    என்னைப் பொறுத்தவரை, நான் எதை, எப்படி எழுதப்போகிறேன் என்று எழுதி முடிக்கும்வரை எனக்கே தெரியாது.

    அதை அவரால் நம்ப முடியவில்லை. கோபத்தை வெளிக்காட்டினார். “அது எப்படி, இப்படிச் சொல்கிறீர்கள்? நாங்கள் இவ்வளவு உதவி செய்கிறோம்..,” என்று ஆரம்பித்தார். நிறைய தாக்கினார்.

    வேண்டுமென்றே சண்டை போடுகிறாரா?

    “நான் எழுதுமுன் யாரிடமும் அதைப்பற்றிக் கூறுவதில்லை. If you want to argue..,” என்று இழுத்தேன். அவர் சட்டென்று அடங்கிப்போனார்.

    அவருடைய மேலதிகாரியின் உத்தரவுப்படி எல்லாம் கொடுத்தாயிற்று. இவளிடமின்று கழன்றுகொண்டால் போதும் என்று நினைத்திருப்பார்.

    பிறரது எதிர்பார்ப்பின்படி எப்போதும் நடப்பது நமக்கு உகந்ததா என்று எண்ணிப்பார்த்தால், அவசியமில்லாததைத் தவிர்க்க இயலும். வாழ்க்கைச் சக்கரத்திற்கு இன்னொரு எண்ணை.

    கதை

    சுதாவின் கணவருக்கு வெளிநாட்டிலிருந்து அவருடைய அலுவலகத்திற்கு வருகை புரிபவர்களைக் கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். அப்போதெல்லாம் நடக்கும் இரவு விருந்துபசாரத்தில் அவளும் கலந்துகொண்டாக வேண்டும். அது மரியாதை என்று கருதப்பட்டது.

    சுதாவோ வெளிவேலை செய்பவள். வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு பகல் நேரத்தைக் கழிப்பதை தவிர்க்க முடியாது. ஆனால் இரவிலும் அவர்களைப் பிரிந்து, முன்பின் பழக்கமில்லாதவர்களுடன் அர்த்தமில்லாமல் பேசிச் சிரிப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை. அத்துடன், மறுநாள் உடல் ஓய்ந்துவிடும்.

    தனக்குப் பிடித்ததில் மட்டும் ஈடுபடுத்திக்கொண்டு, கட்டுப்பாட்டுடன் இருந்ததில் சுதாவின் வாழ்க்கையில் சிக்கல் கிடையாது.

    `இவள் என்ன, இப்படி இருக்கிறாளே!’ என்று பிறர் நினைத்திருக்கலாம். அவர்களுக்கு அவளைப்போல் துணிச்சலாக நாம் இல்லையே என்ற ஏக்கம். அவள் பெற்ற குழந்தைகளுக்கோ, `அம்மாவுக்கு எங்களுடன் இருக்கத்தான் பிடிக்கும்!’ என்று கொள்ளைப்பெருமை.

    சிலர், வெளிப்படையாகவே தம்மிலிருந்நது மாறுபட்டவர்களைத் தாக்கி, அதில் அற்ப மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு பிறரின் மகிழ்ச்சியையும் சுயகௌரவத்தையும் பறிப்பவரிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால்தான் நிம்மதி.

    பிரச்னையா? தீர்வை யோசி!

    கானடா நாட்டில் சில பெண்மணிகளைப் பேட்டி கண்டேன்.

    காதரின் என்ற வெள்ளைக்கார பெண்மணி, “நான் இங்கிலாந்தில் பிறந்து வாழ்ந்தவள். கல்யாணத்திற்கு முன்பே என் கணவருக்கு இங்கு வருவதாக யோசனை இருந்திருக்கிறது. ஆனால் அதை என்னிடம் கூறவில்லை. முன்பே தெரிந்திருந்தால், நான் சம்மதித்திருக்கவே மாட்டேன்!” என்றாள் தீராத கசப்புடன்.

    அவளுக்கு அறுபது வயதுக்குமேலிருக்கும். முப்பது ஆண்டுகளாக கசப்பிலேயே உழன்றிருக்கிறாள்! மாற்ற முடியாது என்ற நிலையில், வந்ததை ஏற்றுக்கொண்டிருந்தால் புதிய சூழ்நிலையில் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கலாமே!

    மலேசியாவிலும் ஒரு பெண்மணி இப்படித்தான். “இங்க வந்து நன்னா மாட்டிண்டாச்சு!” என்று என்னிடம் சலித்துக்கொண்டாள். கணவருக்கு நல்ல ஊதியம் கிடைக்கும் என்று அயல்நாட்டுக்கு வரும்போது இருந்த எதிர்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.

    “இந்தியாவிலேயே இருந்திருந்தா, என் பெண்ணுக்கு பாட்டு, டான்ஸ் எல்லாம் கத்துக்குடுக்கலாம்!” என்ற மேலும் அரற்றியவளிடம், “இங்கேயும்தான் கத்துக்குடுக்கறவா இருக்காளே!” என்றேன், மெள்ள.

    `இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம்!’ என்றெல்லாம் நடக்காத காரியங்களை அடுக்குவதைவிட, இன்று என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கலாமே!

    சூழ்நிலைக்கு ஏற்ப நம்மைச் சிறிதளவாவது மாற்றிக்கொண்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். குறைந்த பட்சம், சிக்கல் இல்லாத வாழ்க்கையால் நிம்மதியாவது நிலைத்திருக்கும்.

    தொடரும்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_4258

    பார்த்தோர் பசுமையாய், பாராதோர் பூதமாய்,
    சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய், -ஆர்த்தொலிக்கும்,
    சங்கில் மவுனமாய், சக்கரத்தில் சீற்றமாய்,
    எங்கும் திகழ்வோனை ஏத்து….கிரேசி மோகன்….!

    Share
  • ’’சிவ ராத்திரி’’

    download (1)

     

    “இன்றுசிவ ராத்திரி ஈசன் இறைவியை
    மன்றில் கலந்து மகிழும்நாள் -ஒன்றாய் –
    நமச்சிவாய மந்திரத்தை நாளெல்லாம் ஓதி –
    உமைச்சுமையான் தாளிரெண்டை உன்னு “….கிரேசி மோகன் ….

     

    வெறுத்துப் பேசுவதாய், கார்முகில் வண்ணா
    அருத்தம் கொள்ளாதே , கேளென் -வருத்தத்தை,
    கண்ணனுனைக் காணாது போனாலென் கண்கள்முக்
    கண்ணனைக் காணப்போம் காண்….கிரேசி மோகன்….!

    சிவராத்ரியுடன் ‘’பனி’’ சிவசிவா என்று விலகும்…பனிக்குக் காரணமான பெருமாள்(மார்கழிக் கண்ணன்) சிவநாமம் ஜபிக்கிறார்….!

    ’’தாணு(சிவன்) சிவராத்ரி தூக்கமேனோ, பாற்கடலில்
    வேணு(திருமால்) தூக்கத்தை விட்டொழித்தார்: -மோன
    முனிகுரு தட்ஷிணா மூர்த்தியின் நாமம்
    பனிமார் கழியோன்ஜ பிப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    பாரதியாரின் ‘’குயில் பாட்டு’’…..!
    ————————————————————————-

    IMG_4257 (1)

    ’’கூட்டுக் குயிலுக்கோர், கீதையாம் பாட்டினை,
    கூட்டியிசை ஹார்மனி கண்ணனை: -கோட்டுக்குள்
    போட்டதற்கு வாஷிங்கை(WASHINGTON KESHAV) பூசிய கேசவ்கை
    போட்டிருக்கும் காப்பு பிரஷ்(BRUSH)’’….கிரேசி மோகன்…

    Share
  • இன்று ஒரு முகம் கண்டேன் !

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++

    unnamed

    இன்று ஒரு முகம் கண்டேன்

    கண்ட பொழுதை மறக்க முடியமா ?

    இருவரும் சந்தித்த இடத்தை

    மறக்க இயலுமா ?

    எனக்குத் தகுதி யானவள் அவளே;

    எமது சந்திப்பை

    இந்த உலகம் அறிய வேண்டுமென

    விழைபவன் நான்.

    வேறோர் நாளெனின் நினைவில் கொள்ளேன்.

    தெரியாமல் போகும்.

    இன்றென் கனவில் தோன்றுவாள் !

    வீழ்வேன் காதலில் ! ஆம் நான்

    வீழ்வேன் காதலில் !

    மீண்டும் என்னை அழைக்கிறாள்

    மறுபடி !

    இதுபோல் வேதனை இதுவரை

    எனக்கில்லை !

    தனித்துக் கிடந்தேன் !

    சிலவற்றை நான் இழந்தேன் !

    மற்ற பெண்டிரை நானினி நோக்கேன் !

    உன்னைப் போல் இல்லை

    அப்பெண்டிர்;

    மீண்டும் என்னை விளிக்கிறாள்

    மறுபடி !

    வீழ்ந்தேன் காதலில் ! ஆம் நான்

    வீழ்ந்தேன் காதலில் !

    ++++++++++++++++++

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 23

    -மேகலா இராமமூர்த்தி

    “ஒருவர் பொறை இருவர் நட்பு” என்பது  தமிழியம். தமிழ்மகள் அதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்திருக்கின்றாள். தமிழ்ச் சமுதாயம் பெண்குலத்தைப் பொறுமைக்குலமாக அன்று பயிற்றுவித்திருக்கின்றது.  ஆதலின் கணவனின் பரத்தமைக்காக மனைவி ஊடினாலும், அவனைக் கண்டித்தாலும் அவனை முற்றாய் வெறுக்கவில்லை; மனைவாழ்க்கையில் மீண்டும் இடந்தர மறுக்கவில்லை என்பதைச் சங்கப்பாடல்கள் பறைசாற்றுகின்றன.

    பரத்தைவீடு சென்ற தலைவன் தன் மனை புகவேண்டும்; தலைவியொடு இணைந்து வாழவேண்டும் என்பதே அவளின் வழிகாட்டியாகவும், நலம்விரும்பியாகவும் flowersதிகழ்கின்ற அறிவுசால் தோழியின் உட்கிடையாகவும் இருந்திருக்கின்றது. ஆதலால்தான் விதைவிதைத்த உழவர் நெல்லொடு பெயர்கின்ற, பல்வேறு பூக்கள் மலரும் ஊரனான தலைவனுடைய மனைவாழ்க்கை பொலிவுபெற வேண்டும் எனும் தன் வேட்கையை வெளிப்படுத்துகின்றாள்.

    நடைதவறிய தலைவனைத் துறந்து தலைவி தனித்தோ, வேறோர் ஆண் துணையைத் தேடிக்கொண்டோ வாழவேண்டும் என்று அவளும் விரும்பினாளில்லை.

    …..வித்திய  உழவர்  நெல்லொடு  பெயரும்
    பூக்கஞல்  ஊரன்  தன்மனை
    வாழ்க்கை  பொலிக  என வேட் டேமே. (ஐங்: 3 – ஓரம்போகியார்)

    அவ்வண்ணமே தலைவனும் சில காலத்தில் தன் தவற்றையுணர்ந்து திருந்தி, மனம்வருந்தி தலைவியொடு திரும்பவும் மனையறம் பேணத்தொடங்குவதாகவே அகப்பாடல்கள் அமைந்திருக்கின்றன. இதுவே அற்றைத் தமிழ்ப் பண்பாடு.

    இனி நம் தலைவி இல்லில் நிகழ்ந்தவற்றைக் கண்ணுறுவோம்!

    வாயில்கள் பயன்படாத நிலையில் தானே வீட்டினுள் துணிந்து நுழைந்துவிட்ட தலைவனைத் தலைவியும் மன்னித்து ஏற்றுக்கொண்டுவிடுகின்றாள். அவர்களின் மனைவாழ்க்கையில் மகிழ்ச்சிப் பூ மீண்டும் மலரத்தொடங்கியிருந்தது.

    மாலைக்காலம் அது!

    வானமேடையில் வலம்வரத் தொடங்கியிருந்த வெண்ணிலா தன் தண்ணொளியை பூமிக்கு அட்டியின்றிmoon அள்ளி வழங்கவே, மட்டிலா மகிழ்ச்சிகொண்ட பூமி அக்குளுமையில் குளித்தது; உளம் களித்தது. அப்போது அலர்ந்த அல்லிப்பாவையும் மலர்ந்தமுகத்தோடு தன் மோகனமுறுவலை நிலவரசனைப் பார்த்து இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தாள்.

    அவ்வேளையில் தலைவனைக் கண்டுசெல்ல முன்பு அவனுக்குத் தூதாய் வந்த பாணன் வீட்டுக்கு வந்திருந்தான். தோழியும் அப்போது வீட்டில்தான் இருந்தாள். பாணனைக் கண்டவள், அவனை வரவேற்றுவிட்டுத் தலைவன் தலைவியரின் இனிய இல்லறத்தைப் பாணனோடு பகிர்ந்துகொள்ள விழைந்தவளாய்,

    ”பாண காண்! இல்வாழ்க்கை அன்புடைமை எனும் பண்புடைத்து! வெற்றியையுடைய நம் தலைவன், மாலைக்காலத்தில் விரிந்த வெள்ளிய நிலவொளியில், குறுகிய கால்களையுடைய கட்டிலில் மணமிகு மலர்பரப்பிய படுக்கையில் விருப்பத்தோடு தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு கிடைகொண்ட களிற்றைப்போல் பெருமூச்சு விட்டனன்.  அப்புதல்வனின் தாயாகிய தலைவியோ புதல்வனைத் தழுவிக்கிடக்கும் தலைவனின் முதுகுப்புறத்தைத் தழுவினாள். மகிழ்ச்சிதரும் இந்நிகழ்ச்சி எத்துணை அழகுடையது!” என்றாள் பூரிப்போடு.

    கண்டிசின்  பாண  பண்புடைத்  தம்ம
    மாலை
     விரிந்த  பசுவெண்  ணிலவிற்
    குறுங்காற்
     கட்டில்  நறும்பூஞ்  சேக்கைப்
    பள்ளி
    யானையின்  உயிர்த்தனன் அசையிற்
    புதல்வன்  தழீஇயினன்  விறலவன்
    புதல்வன்  தாயவன்  புறங்கவைஇ  யினளே. (குறுந்: 359 – பேயன்)

    தலைவன் தலைவியரின் பள்ளியறையில் வலியநுழைந்து அவர்கள் பள்ளிகொண்டிருந்த காட்சியைக் கண்டே தோழி இவ்வாறு விவரித்தாள் என்று பொருள்கொள்ளுதல் கூடாது! அவ்விணையரும் மகவும் கொண்டிருந்த அன்புப் பிணைப்பை கற்பனையில் கண்டோ, தற்செயலாகப் பார்த்தோதான் அவள் பாணனுக்குச் சொல்லியிருக்கவேண்டும் என்று பொருள்கொள்வதே சாலப் பொருத்தமுடைத்தாகும்.

    இதே பொருள்தரும் பாடலொன்று ஐங்குறுநூற்றிலும் அமைந்திருக்கின்றது.

    புதல்வன்  கவைஇயினன்  தந்தை  மென்மொழிப்
    புதல்வன்  தாயோ  இருவரும்  கவையினள்
    இனிது  மன்றஅவர்  கிடக்கை
    நனியிரும்  பரப்பின்இவ்  உலகுடன்  உறுமே.   (ஐங்: 409)

    தலைவன் தலைவியரின் இல்லற மாண்பைக் காணவந்த செவிலித்தாய், அவர்களின் அன்பையும் அந்நியோன்யத்தையும் நாற்றாய்க்கு விளக்குகையில்,

    ”தலைவன், தலைவி, புதல்வன் ஆகிய மூவரும் ஒரே deersபடுக்கையில் கிடக்கும் காட்சியானது மான்பிணையானது தன் குட்டியோடும் ஆண் மானோடும் இணைந்திருக்கும் மாண்பினை ஒத்திருந்தது” என்று உளம்பூரித்துக் கூறுவதை ஈண்டு நாம் இணைத்துப் பார்க்கலாம்.

    மறியிடைப் படுத்த மான்பிணை போலப்
    புதல்வன் நடுவ ணாக நன்றும்
    இனிது மன்றஅவர் கிடக்கை
    முனிவின்றி 
    நீல்நிற
     வியலகங்  கவைஇய
    ஈனும்
    உம்பரும் பெறலருங்  குரைத்தே.   (ஐங்: 401)

    அன்பும் அறனும் உடைத்தாய்த் திகழவேண்டும் இல்வாழ்க்கை!
    அதன் பண்பும் பயனும் அதுதானே?

    தவறுதல் மனித இயற்கை; தன் தவற்றை என்ணி வருந்துதல் அறம்; அவ்வாறு வருந்துவோரை வன்மொழிகளாலும் புன்மொழிகளாலும் புண்படுத்தாது, அன்பாலும் பண்பாலும் பண்படுத்தும் குறுந்தொகைத் தலைவியை இங்கே நாம் காண்கிறோம்.

    அகவையில் இளையோளாக இருப்பினும் அறிவில் முதிர்ந்திருக்கும் அச்சிறுமுதுக்குறைவியை நாமும் வாழ்த்தி விடைபெறுவோம். அவள் இல்லறம் பார் போற்றும் நல்லறமாய்த் திகழட்டும்!

    நற்றமிழ்ப் புலவர் இயற்றிய நல்லகுறுந்தொகை, பழந்தமிழரின் காதல் வாழ்வையும், அவர்தம் விழுமியங்களையும், சீர்த்த நாகரிகத்தையும், இயற்கையோடும் இதர உயிர்களோடும் அவர்கள் கொண்டிருந்த இணையற்ற பிணைப்பையும், எதனையும் கூர்ந்துநோக்கும் அவர்தம் நுண்மாண் நுழைபுலத்தையும் நாம் அறிந்துகொள்ள நல்லதோர் வாய்ப்பை நல்குகின்றது.

    நான் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் உரையாசிரியர்களால் அதிக அளவில் மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் எனும் பீடும் பெருமையும் உடையது குறுந்தொகை. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் இளம்பூரணஅடிகள் குறுந்தொகையை 126 இடங்களில் பயன்படுத்தியுள்ளார். பேராசிரியர் 103 இடங்களில் இப்பாடல்களை மேற்கோள் காட்டுகின்றார். உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரோ அனைவரினும் அதிகமாய் 223 இடங்களில் குறுந்தொகையை எடுத்தாண்டுள்ளார் என்பதை அறியும்போது குறுந்தொகையின் பெருமை வெள்ளிடைமலையாய்த் துலக்கமாகின்றது அன்றோ?

    ”பெருந்தொகை தந்தாலும் குறுந்தொகைக்கு ஈடாய்
    ஒருபாடல் இயற்றக்கூட ஒருவரும் இல்லை நம்மிடம்!”

    அத்துணைச் சிறப்பு வாய்ந்த குறுந்தொகை நறுந்தேனிலிருந்து ஒருசில துளிகளை மட்டும் இக்கட்டுரைத் தொடரில் சுவைக்கத் தந்தேன்.
    மீதமுள்ள பாடல்களையும் ஊக்கத்தோடு படித்தின்புறுக என்பதை என் வேண்டுகோளாய் வைக்கின்றேன்.

    பழமென இனித்திடும்
    சங்கப் பனுவல் கற்றால்
    கிழம் போம்! கீழ்மை போம்!
    ஆதலினால் காதலோடு கற்பீர் அதனை!

    [முற்றும்]
     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_4256

    “வாமத்த்தில் தாம்பு, வலத்தால் தயிர்கடைய
    ஜாமத்தில் கண்ணன் ஜனித்தது, -பூமத்ய,
    பாரம் குறைக்கவல்ல, பாகவத ஓவியக்
    காரனிவன் கேசவ்கா க”….கிரேசி மோகன்….!

    Share
  • தமிழ் இயக்கக் கலந்துரையாடல்

    இனிய வணக்கம் நண்பர்களே!

    கொங்கு மண்டல தமிழ் இயக்க அமைப்புக் கூட்டக் கலந்துரையாடல், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ. முனைவர்.கோ.விசுவநாதன் அவர்கள் தலைமையில், கவிஞர் பதுமனார், கவிஞர்.அப்துல் காதர், திரு சுகுமாரன் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெற உள்ள நிகழ்வில் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள தமிழ் ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.

    IMG-20180203-WA0052

    IMG-20180203-WA0053
    இடம் – செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.
    நாள் : பிப்ரவரி 14, 2018
    நேரம் : காலை 10 மணி முதல்

    Share
  • திருப்பூர் அரிமா விருதுகள் 2018 * ரூ 25,000 பரிசு

    திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

    ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள் ( 2 பிரதிகள் ), திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி மார்ச் 15 , 2018.

    முகவரி:

    94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர், திருப்பூர் 641 604 .) /0421 2212210

    செய்தி: சாமக்கோடாங்கி ரவி * samakkodaonkey ravi@gmail.com

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 5

       தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    மறுநாள் காலை, சைமன் எழுந்த போது, மெட்ரீனா, அயல் வீட்டிலிருந்து ரொட்டி கடன் வாங்கச் சென்று விட்டாள். அந்தப் புதிய மனிதன், பெஞ்சின் ஒரத்தில் அமர்ந்து கைகளைக் கூப்பிக் கூரையை பார்த்த வண்ணமாக உட்கார்ந்திருந்தான். முகம் முந்தைய இரவை விடத் தெளிவாகவும் பிரகாசமாகவும் இருந்தது.

    சைமன், அவனைப் பார்த்து அவனுக்கு ஏதாவது தொழில் தெரியுமா என்று கேட்டான்.
    “எனக்கு ஒன்றும் தெரியாது”

    “உன் பெயரென்ன?

    “மைக்கேல்”
    “மைக்கேல், மனிதனுக்கு உணவும், உடையும் தேவை. உன்னைப் பற்றி நீ சொல்ல விரும்பாவிட்டால் பரவாயில்லை. ஆனால் ஏதாவது தொழில் செய்ய வேண்டும். செருப்புத் தைக்கும் வேலையை நீ கற்றுக் கொண்டால் என்னுடன் தங்கியிருக்கலாம். உணவும் உறையிடமும் கொடுக்கிறேன்” என்றான். மைக்கேலும் அதற்கு இணங்கினான். சைமன் செருப்புத் தைக்கச் சொல்லிக் கொடுத்த போது மைக்கேல் மிகவும் எளிதாகப் புரிந்து கொண்டான். இரண்டு மூன்று நாட்களில் மிகவும் திறமையுடன் சைமனின் உதவி இல்லாமல் செருப்புகள் தைக்கத் தொடங்கி விட்டான். அவன் தைத்த செருப்புகள் போல் இது வரையிலும் ஒருவரும் தைக்கவில்லையாதலால், அவன் புகழ் எங்கும் பரவியது. பிற ஊர்களிலிருந்து மக்கள் வந்து செருப்புத் தைக்கக் கொடுத்தனர். சைமனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.

    தொடரும்

    Share
  • பாப்பா நீ படி.. படி.. படி..!

    – ஆ. செந்தில் குமார்

    பாப்பா நீ படி.. படி.. படி..!  அதுதான்
    வாழ்கைக்கு ஏணிப்படி!
    வெற்றிப்படியை எட்டும்படி
    படிப்படியாய் நீ படி!

    அன்னை சொல்லும்படி                         babies
    தந்தை நினைக்கும்படி 
    ஆசிரியர் மெச்சும்படி
    படிப்படியாய் நீ படி!    (பாப்பா…)

    ஒழுக்கத்தில் சிறக்கும்படி
    இழுக்கென்பது இல்லாதபடி
    எழுச்சியாய் இருக்கும்படி
    படிப்படியாய் நீ படி!   (பாப்பா…)

    நல்லோரின் எண்ணப்படி
    எல்லோரும் போற்றும்படி 
    இல்லாமை நீங்கும்படி
    படிப்படியாய் நீ படி!    (பாப்பா…)

    தன் காலால் நிற்கும்படி
    தக்கோன் என விளங்கும்படி
    தரணிக்கு உதவும்படி
    படிப்படியாய் நீ படி!    (பாப்பா…)

    சான்றோனாய் மாறும்படி
    சாகாமல் பெயர் நிலைக்கும்படி
    சிறிதும் சலிக்காதபடி
    படிப்படியாய் நீ படி!   (பாப்பா…)

    நாள்தோறும் நல்லபடி
    நல்லது மனதில் பதியும்படி
    நாடு மேலும் உயரும்படி
    படிப்படியாய் நீ படி!      (பாப்பா…)

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_4255

    கீதைக் கடமையைக் கண்ணன் மறந்துகாதல்
    ராதைப் பலனை எதிர்ப்பார்த்து -போதை
    படபடப்பில் பார்க்கின்றான் பாவையோ பாதம்!
    அடகடவு ளேயென்ன திது….!

    ” காலில் கனத்தராதை, தோளிங்க நர்த்தனத்தால்
    காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்கு
    மாதைக் கால்சுமந்து காதல்கூத் தாடுகிறான்
    கீதை வரிகள் மறந்து”….!

    ” அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
    அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு
    கீதை, ஆவின்தன் கரணா கதிக்கு
    தாதை அளித்திடுவார் தாள்”….!
    கனிச்சுவை ராதை கமலஇதழ் கவ்வி
    துணிச்சலுடன் முத்தம் திணித்து -அனிச்ச
    மலராள் அலறும்முன் மன்னிப்பு கேட்பான்
    தளரான் எதற்கும் துணிந்து….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180205 - Yadava 20 Krishna Rukmini -lr Marriage of Rukmini and Krishna: Rukmini was bedecked with ornaments as though it meant to subdue her beauty. Krishna, in his leela, performed the rituals as was the custom. The agni (fire) in the altar went around the divine couple in reverence. Krishna went round the fire as though he went around himself in the form of fire.  He also looked up to see the star Arundathi (of the Ursa Majar constellation), the wife of Vasishta. This ritual was meant to emulate sage Vasishta and Arundathi’s ideal marriage. Dwaraka flourished in dharma because of the presence of the divine couple.
    180205 – Yadava 20 Krishna Rukmini -lr
    Marriage of Rukmini and Krishna: Rukmini was bedecked with ornaments as though it meant to subdue her beauty. Krishna, in his leela, performed the rituals as was the custom. The agni (fire) in the altar went around the divine couple in reverence. Krishna went round the fire as though he went around himself in the form of fire.
    He also looked up to see the star Arundathi (of the Ursa Majar constellation), the wife of Vasishta. This ritual was meant to emulate sage Vasishta and Arundathi’s ideal marriage. Dwaraka flourished in dharma because of the presence of the divine couple.

    ராதை புலம்பல்….கிருஷ்ண சமாதானம்

    ’’அம்மியில்லை, அண்ணாந்து அருந்ததி காட்டவில்லை,
    நம்முடைய சந்திப்போ நட்டநிசி -விம்மியழும்
    ராதைக்குக் கண்ணன் ரகசியமாய்க் கூறினார்,
    மாதேநீ ருக்கு மணி’’….கிரேசி மோகன்…..!

    Share