Blog

  • தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம்

    unnamed (8)

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று ஜீலை மாதம் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனி சித்திரை நட்சத்திரம் ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் மாபெரும் சுதர்சன ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது

    இந்த யாகத்தில் தீர்க்கஆயுசு பெறவும் பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், பசுவிருத்தி ஏற்படவும் வீட்டில் உள்ள பசு அதிகம் பால்சுரக்கவும், பசுவை எந்த நோயும் அண்டாது இருக்கவும், சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், பசுவிருத்தியாகவும், எதிரிகள்தொல்லை நீங்கவும், மன நலம் குணமாகவும், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தனியவும், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் பிரார்த்தனை செய்யபட்டது.

    இந்த யாகத்தில் வெண்கடுகு, எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம், அருகம்புல், சர்க்கரை பொங்கல், தயிர், நாயுருவி, ஆலமரசமித்து, நெய், பஞ்சகவியம், கருநொச்சி, இருமுள், நீல ஊமத்தபூ, வெள்ளை புலாச்சு, குக்கிலு, சம்மதபூ, வெண்பட்டு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டது.

    மேலும் சுதர்சன பெருமாளுக்க 16 விதமான அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச அர்ச்சனையும் நடைபெற்று தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவிதனர்.

    Share
  • சொந்தமண் இழந்தும் நம்பிக்கை இழக்கவில்லை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    வாழ்வாதாரத்தையே தொலைத்துவிட்டு தமிழ் ஈழம் இழந்து 10 ஆண்டுகளுக்கு முன் தாயகத்திற்கு அகதிகளாக வந்து, சென்னை, ஈரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தும், அல்லது அங்கிருந்து வெளியே வந்து தங்கியிருந்தும் கல்வி ஒன்றே தங்கள் நிலையான எதிர்காலம் என்பதை உணர்ந்துகொண்டு மிகச்சிறந்த முறையில் 10 ஆம் வகுப்பில் 92%, 12ஆம் வகுப்பில் 95%, குறிப்பாக பெண்கள் அதிகளவில் வெற்றி பெற்றும், இளநிலை பட்ட வகுப்பில் 500 பேருக்கு மேல் தேர்ச்சி பெற்றும், முதுநிலை பட்ட வகுப்பில் 250 பேரும், நல்ல தேர்ச்சி பெற்றும், 5 பேர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு நிலையான தங்குமிடமோ, மற்ற வசதிகளோ கிடையாது என்றாலும் தங்கள் எதிர்காலமே கல்வியில்தான் என்பதை மனதில்கொண்டு இந்த உயரிய சிறப்பைப் பெற்றுள்ளதைக்கண்டு தாய்த்தமிழ் நாடே பெருமை கொள்கிறது. தமிழ் ஈழம் செல்ல விரும்புபவர்களுக்கு விமான பயணச்சீட்டு, தாங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஆகும் செலவுத்தொகை மற்றும் இலங்கையில் விமான நிலையத்திலிருந்து அவர்கள் செல்லவேண்டிய பகுதிவரை அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்வதும் மகிழ்வான செய்தி. இவர்களுக்கு அங்குள்ள இலங்கை அரசு 6 மாதத்திற்குரிய தேவையான உணவுப் பொருட்களையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளது. இதைத் தவிர்த்து தமிழகத்திலேயே தங்க விரும்புபவர்களை தமிழக மக்களாகவே ஏற்றுக்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது. அகில உலக அளவில் இதுபோன்ற அகதிகள் முகாமில் பென்களுக்கு இதுவரை எந்தவிதமான இன்னல்களும் ஏற்படவில்லை என்பதும் மகிழ்ந்து குறிப்பிடத்தக்கது!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    தூங்க வருகவே
    —————————

    170702 - VAtsalya -drawing -Orangutan studies -lores

    ”பாரதப் போரில் பார்த்தனின் தேரை
    சாரத்யம் செய்து சோர்ந்துக் களைத்தவன்
    நாரத மாமுனி நாவிருப்போன் என்
    மாரதில் புரண்டு தூங்க வருகவே”….கிரேசி மோகன்….!

    Share
  • நாட்டுக்குத் தேவை !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     

     
    ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு
    ஒற்றுமை அகன்றிடின்
    அனைவர்க்கும் தாழ்வு
    என்றிடும் வாக்கினை
    மனத்தினில் இருத்தி
    இணைந்திட நினைப்போம்
    ஏற்படும் உயர்வே !

    கூட்டுறவென்பது நாட்டுயர்வாகும்
    கூடிடும்போது கூடிடும்வலிமை
    நாடுகள் பிரிந்தால்
    நன்மைகள் உடையும்
    கேடெலாம் சூழ்ந்து
    நாடெலாம் குலையும்
    குலைவினைத் தடுத்திட
    கூட்டுறவதனை தலையெனக்கொண்டு
    நிலைபெறச் செய்வோம் !

    ஒருமித்து நின்றால்
    உன்னதம் விளையும்
    உடைந்துமே போனால்
    உயர்வெலாம் சரியும்
    கூடிடும் பொழுதில்
    குறையெலாம் அகலும்
    கூட்டுற வென்பது
    நாட்டுக்குத் தேவை !

    பொதுநலனை வளர்ப்பதற்கு
    புறப்பட்டு வந்த
    புத்தூக்கம் கூட்டுறவு
    புதுப்பாதை அன்றோ
    அதைவளர்க்க பலபேரும்
    ஆண்டாண்டு காலம்
    அயராது உழைத்ததனை
    அகம்நிறைத்து வைப்போம் !

    தனிமனித கூட்டுறவு
    சமுதாய கூட்டுறவு
    பொருள்விரியக் கூட்டுறவு
    போரகற்றக் கூட்டுறவு
    கூட்டுறவு எனும்கருத்து
    மொட்டாக இல்லாமல்
    மலர்ந்விடும் வேளைதனில்
    மாவிளைவைத் தந்துநிற்கும் !

    பலசபைகள் அமைக்கின்றார்
    பலசட்டம் தீட்டுகிறார்
    உலகசமாதனம் என்று
    உரத்தெல்லாம் உரைக்கின்றார்
    கலவரமோ நாடெல்லாம்
    கனத்ததீயாய் எழுகிறது
    கூட்டுறவை வளர்த்திருந்தால்
    குழப்பங்கள் வந்திராதே !

    ஆதிக்கம் ஆதிகாராம்
    ஆணவத்தால் உலகமெலாம்
    அழிவான பாதைசென்று
    ஆக்கமெலாம் இழக்கிறது
    கூட்டுறவு எனும்கருத்தை
    நாடெல்லாம் கடைப்பிடித்தால்
    ஆட்டிநிற்கும் ஆணவங்கள்
    அடியற்றுப் போகுமன்றோ !

    Share
  • வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சனிசாந்தி ஹோமம் நடைபெற்றது

    unnamed (5)

    unnamed (6)

    பெரும்பாலான ஜாதகருக்கு சனிதிசை, சனிபுக்தி, சனி அந்தரத்தினாலும் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 01.07.2017 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சனி ப்ரீத்தி ஹோமம் காலதோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெற்றது இந்த ஹோமம் பித்ரு தோஷ நிவர்த்திக்காகவும், ஆயுள் அபிவிருத்திக்காகவும் நடைபெற்றது இந்த யாகத்தில் கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொரி, நல்லெண்ணைய், வெல்லம் வன்னி, சமித்து போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு காலசக்கர பூஜை பைரவர் பூஜை சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை சுதர்சன ஜயந்தியை முன்னிட்டு மஹா சுதர்சன ஹோமம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். பெற்றது.

    Share
  • வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ராகு & கேது பெயர்ச்சி யாகம் !

    வருகிற 27.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ளது

    ‘நம் கையில் சொத்து பத்து இல்லை என்றாலும், வியாதி வெக்கை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்’ என்பதுதான் இன்றைய தேதியில் அனைவரது பிரார்த்தனையாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது. பக்தர்களுக்கு இத்தகைய ஒரு வரத்தை அருளும் பீடமாக விளங்கி வருகிறது வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்.

    ‘நோயில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்’ என்பதே இந்த ஆரோக்ய பீடத்தின் குறிக்கோள். இதன் ஸ்தாபகரான ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இதற்காக எண்ணற்ற ஆராய்ச்சிகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் இங்கே நடத்தி வருகிறார். ஹோமப் புகையில் கனன்று கொண்டிருக்கும் மூலிகைகளின் வாசமும், பிரமாண்டமான மூலிகைப் பண்ணையில் இருந்து வரும் சுகமான காற்றும் பக்தர்களின் மனதை வருடுகின்றன.

    வேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக் குறை தீர்க்கும் மையம் என்றே பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு இங்கு வந்து செல்லும் அனைவரும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளாலும், டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியாலும் பலன் அடைகிறார்கள். வைத்தியத் துறையின் தந்தையான ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளும் இந்த ஆரோக்ய பீடத்தில் 73க்கு மேற்பட்ட திருச்சந்நிதிகள் உள்ளன.

    அவற்றுள் ராகு & கேது சந்நிதியும் சிறப்பான ஒன்று. ‘ஏக சரீர ராகு & கேது-வாக தரிசனம் தரும் இந்த ராகு & கேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது. சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது போல் இந்த ஏக சரீர ராகு & கேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும் இந்த அன்னத்தை உண்டால், உடல் செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.

    நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும்,சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.

    ராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.

    பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே!ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.

    குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு & கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு & கேது பெயர்ச்சி என்கிறோம். வருகிற 27.07.2017 வியாழன் அன்று சிம்மம் ராசியிலிருந்து இருந்து கடகராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் கும்பத்திலிருந்து மகரத்திற்கு இடப்பெயர்சி செய்கிறார்

    அடுத்த ஒண்ணரை வருட காலத்துக்கு இவர்கள் இந்த ராசியிலேயே இருப்பார்கள். இந்தக் காலத்தில் அவரவர் தசாபுக்திக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் தருவார்கள். வாலாஜாவில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு & கேது பெயர்ச்சி போன்ற வைபவங்கள் சிறப்பு ஹோமங்களுடன் நன்றாகவே நடந்து வருகின்றன.

    இந்த முறையும். பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும்.‘ராகு & கேது பெயர்ச்சி’ விமரிசையாக வருகிற 27.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறஉள்ளது. அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்.

    மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் ராகு & கேது பெயர்ச்சி அன்று உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. சங்கல்ப காணிக்கையாக ஒரு ராசிக்கு ரூபாய். 500/-மட்டும் செலுத்தி பங்கேற்று பலன் பெற ப்ரார்த்திக்கின்றோம்.

    யாகத்தின் பலன்கள்.

    திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுக்குப் பலன் வேண்டுபவர்கள் இந்தப் பெயர்ச்சியில் கலந்து கொண்டு பிரார்த்தித்துப் பலன் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு:
    ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
    ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
    அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டை,
    வாலாஜாபேட்டை . 632 513.
    வேலூர் மாவட்டம்.
    போன்: 04172 – 230033,
    மொபைல்: 94433 30203

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170701 - Bamboo notes -lores

    “வானிடை சூரியன் வேகின்ற வேளையில்
    ஆநிரை காத்து மேய்த்துக் களைத்தவன்
    தூணிடை சிங்கன் எந்தன் துரும்பு
    மேனியில் ஒளிந்து தூங்க வருகவே”….கிரேசி மோகன்….!

     

    Share
  • பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு

    பவள சங்கரி

    பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு. முந்தைய கட்டணத்தைவிட சுமாராக 20% அதிகரித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 50,000 லிருந்து 55,000 ரூபாய் வரையிலும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கட்டணங்கள் ரூ 80,000 லிருந்து 85,000 வரையிலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    மாணவர்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்த அரசு AICTE அறிவித்த உள்கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் நியமனம் போன்றவைகளை நிறைவேற்றியிருந்தால் மட்டுமே இந்தக் கட்டண உயர்வு பொருந்தும் என்று அறிவிக்காதது ஆச்சரியமாக உள்ளது.
    Share
  • ஆறு முகமான பொருள்!

    மீனாட்சி பாலகணேஷ்

    குழந்தை முருகனின் பன்னிரு திருக்கரங்களின் பெருமையைச் சென்ற கட்டுரையில் கண்டோம். ஆறுமுகங்களின் அருமைபெருமைகளையும் கண்டுமகிழலாமே! முருகனைப்பாடுவோர் அனைவரும் தமது கற்பனைக்கேற்றவண்ணம் அவனுடைய திருமுகங்கள் செய்வதனைக் கூறிமகிழ்ந்தனர். அவர்களுடைய விளக்கங்கள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் அனைத்துமே அழகுறப் பல பொருள்களை விளக்கியருளுகின்றன.

    2
    முதலில் ஐங்கரன், முருகன் இருவரின் ஒரு சிறு விளையாட்டைக் கண்டு ரசிக்கலாம்.
    ஐங்கரனான கணேசன் தன் தந்தையான அரனிடத்தில் வந்து, “ஐய! என் செவியை முருகன் கிள்ளினான்,” என முறையிடுகிறான். ஐங்கரனுடையது பெரிய முறம்போலும் யானைச்செவி. அது குறும்பனான முருகனின் கவனத்தைக் கவர்ந்தது. கிள்ளியும் விட்டான். தந்தை என்ன செய்வார்? தன் இளையமகனிடம், “ஏன் இப்படிச் செய்தாய்?” எனக்கேட்கவே, “அண்ணன் எனது ஆறுமுகங்களில் விளங்கும் கண்களை எண்ணினான்,” எனச் சிணுங்கினான். “ஓ! அப்படியா சேதி? நீ ஏனப்பா அவ்வாறு செய்தாய்?” என விநாயகனிடம் அண்ணல் கேட்க, “அவன் எனது தும்பிக்கையினை முழம் போட்டளக்கிறான் தந்தையே!” என்றிட, தாயும் தந்தையுமான அன்னையும் அத்தனும் இவ்வுரையாடலைக்கேட்டு நகைக்கின்றனராம். இது துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எனும் ஒரு பக்தரின் கற்பனை.

    ஆறுமுகங்களும், வேழமுகமும் அடியார்களின் கற்பனைகளை எவ்வாறெல்லாம் விரிக்கின்றன?

    ‘அரனவ னிடத்திலே ஐங்கரன் வந்துதான்
    ஐய!என் செவியைமிகவும்
    அறுமுகன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும்
    அத்தன்வே லவனைநோக்கி
    விரைவுடன் வினவவே, அண்ணன்என் சென்னியில்
    விளங்குகண் எண்ணினன்என
    வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ அப்படியும்
    விகடம்ஏன் செய்தாய்?என
    மருவும்என் கைந்நீளம் முழம்அளந் தான்என்ன
    மயிலவன் நகைத்துநிற்க
    …………………………………………………’

    (துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்)

    சிவபிரானுடைய ஐந்து திருமுகங்கள் ‘பரத்’தையும் உமையம்மையின் திருமுகம் ‘இகத்’தையும் அளிக்கவல்லன. முருகப்பெருமானுடைய ஆறு திருமுகங்கள் இவையனைத்தும் சேர்ந்ததே! இவை இகபர நன்மைகளை அடியார்களுக்கு அளிக்க வல்லன.

    1
    அருணகிரிநாதர் முருகனின் ஆறுமுகங்களைப் பாடுகிறார். பெருமைவாய்ந்த மயில்மீதேறி திருவிளையாடல்கள் புரிந்தது உனது ஒரு முகம்தான்! சிவபிரானுக்கு பிரணவ உபதேசம் செய்ததும் உனது ஒருமுகமே! உனது பெருமைகளைக் கூறித்துதிக்கும் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்துவைப்பதும் உன் ஒருமுகம்தான். கிரவுஞ்சமலையை உருவும்படியாக வேலைச் செலுத்தி நின்றதும் உன் ஒருமுகமேதான்!

    உன் எதிரியான சூரபதுமனை வதைத்ததும் உன் ஒருமுகமே! வள்ளியம்மையை மணம்புரிய வேண்டி விருப்புடன் வந்ததும் உன் ஒருமுகமே!

    அவ்வாறாயின், நீ ஆறுமுகங்களைக் கொண்டு நீ விளங்குவதன் பொருளை எனக்கு உணர்த்தியருளுவாயாக!’ எனவொரு வேண்டுகோளையும் முன்வைக்கிறார் குருநாதர்.

    ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
    ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
    கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
    குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
    மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
    வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
    ஆறுமுகமானபொருள் நீயருளல் வேண்டும்
    ………………………………………………
    (அருணகிரிநாதர் திருப்புகழ்)

    ஐந்துபிராயம்வரை பேசாதிருந்து பின் முருகனருளால் பேசும்திறம் பெற்ற குமரகுருபரர், அச்சிறு வயதிலேயே முருகனருளால் அவன்மீது இயற்றிய முதல்நூலான கந்தர் கலிவெண்பாவில் அவனுடைய திருவடிவை அணுவணுவாகச் சுவைபட, பக்திரசம் பொங்கப் பாடியுள்ளார்.

    4
    ‘அசுரர்களால் போற்றப்பட்ட சூரபதுமனைக் கொன்ற வீரம் பொருந்திய திருமுகம்;
    ஊழ்வினையைக் களைந்து அழியாத பேரின்பப் பெருவாழ்வினைத் தரும் சிவந்த தாமரைமலர் போன்ற அருள்சிந்தும் முகம்;

    உயிர்களைப் பிணிக்கும் ஆணவமெனும் இருளை ஓட்டிடப் பல கதிரவர்கள் ஒன்றாகத் திரண்டது போன்ற கருணையொளி வீசும் திருமுகம்;

    நீங்காத பாச இருளை அகற்றிப் பல கதிரவர்கள் போலத் திகழும் வதனமாகிய மண்டலமுகம்;

    அன்புடன் தன்னை அடைய விரும்பும் வள்ளியம்மைக்கும் தெய்வயானை எனும் மங்கைக்கும் விருப்பையளிக்கும் காதல்முகம்;

    ஆறாவன்புடன் வந்து தனது திருவடியில் சேர்ந்தோர் மகிழுமாறு அவர்கள் வேண்டும் பல வரங்களைத் தரும் தெய்வமுகம்,’ எனவெல்லாம் போற்றுகிறார் குமரகுருபரர்.

    ‘வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூரனைத் தடிந்து
    தெவ்வர் உயிர்சிந்தும் திருமுகமும் ……………………
    ……………………………………………………………..’

    (கந்தர் கலிவெண்பா- குமரகுருபரர்)

    இது பக்தியின் பெருக்கில் விளைந்த கவிதைநயம்!

    உமையன்னை மீதான பிள்ளைத்தமிழ் நூல்களில் அவளுடைய குழந்தைகள் செய்யும் குறும்பு விளையாட்டுகள் குறிப்பிடப்படுவது வழக்கம். அவ்வகையில் அழகிய சொக்கநாத பிள்ளை அவர்கள் இயற்றிய நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழில் நயம் மிகுந்ததோர் வருகைப்பருவப்பாடல்:

    3
    ஐங்கரத்தோனாகிய கணேசன் தன் தம்பியை நோக்கி, “உனக்கு ஏன் ஆறுமுகங்கள்?” எனக் கேட்க, அவன் அதற்கு, “நம்மை ஈன்றவர் என்னைச் சேர்த்தெடுத்து அள்ளியணைத்து முத்தங்கொடுத்து விளையாடுவதற்கு,” என மொழிகிறான். குழந்தைமையின் பேதைமை செறிந்த சுட்டிப்பேச்சு! அத்துணை கன்னங்களிலும் முத்தம் கிடைத்தால் பேரானந்தம் தானே அக்குழந்தைக்கு? இதைக்கேட்ட உமையம்மை, “இவ்வாறான காரணத்தை இன்றல்லவோ நானறிந்தேன் செல்வா,” என அவனை அள்ளியணைத்து உச்சிமுகர்ந்து முத்தமிடுகிறாளாம்.

    ‘கலையை வளைத்த பிறைக்கோட்டு ஐங்கரத்தோன்
    துணைவன்தனை நோக்கி
    கவின்தோய் முகமாறு உன் உருவின்
    காணும் நிமித்தம் கழறுக……
    ……………………………………………
    தலையை வளைத்து முத்தமிடும் சயிலக்
    குயிலே வருகவே!
    சாலிப்பதிவாழ் காந்திமதித் தாயே
    வருக வருகவே!
    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்)

    இதனை முத்தப்பருவமும் வருகைப்பருவமும் இணைந்திலங்கும் பாடல் எனக் கொள்ளலாமா?

    புலவர் நடேச கவுண்டர் இயற்றிய திருநிலைநாயகி பிள்ளைத்தமிழின் முத்தப்பருவப் பாடலொன்று முதலில் நாம்கண்ட துறைமங்கலத்தாரின் பாடலைப்போன்றே நகைச்சுவைமிகுந்து விளங்குகிறது!

    மதம்பெருகும் வாரணமுகனின் தும்பிக்கையைப் பிடித்திழுத்து முழம்போட்டு அளக்கும் தம்பி முருகன், “இவன் மூக்கு மிகப்பெரிது,” என நகையாடுகிறான். கணேசன் வாளாவிருப்பானா? “இவனுக்கு எத்தனை முகங்கள்! சளிபிடித்தால் எப்படிப்பட்ட துன்பம்? எத்தனை மூக்குகளை சமாளிக்க வேண்டும்?” எனக்கேட்டு நகைக்கிறான். இவ்வாறு கலகமிட்டு வரும் இருகுழந்தைகளையும் பார்த்து திருநிலை நாயகியான உமையம்மை, “இது என் யானைக்குட்டி! இது என் சிங்கக்குட்டி!” என்று கொஞ்சி மகிழ்கிறாள், எனப்பாடியுள்ளார் புலவர்.

    பெருகு மதவா ரணமுகத்துப்
    பிள்ளைமுகத்துக் கையிழுத்துப்
    பிடித்து முழம்போட் டையவிவன்
    பெரிய மூக்க னெனநகைக்க
    ………………………………………….
    முந்நீர் மிதந்த தோணிபுர
    முதல்வீ முத்தம் தருகவே!
    (திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் முத்தப்பருவம்- நடேச கவுண்டர்)

    படிக்குந்தோறும் புதிது புதிதாய்க் காணும் பல்வேறு சுவைகள்! இலக்கிய நயங்கள்!
    இவையே பிள்ளைத்தமிழின் அள்ளக்குறையாத அருஞ்சுவையாகும்!

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}
    ***********

    Share
  • இந்த வார விகடன் இண்டெர்நெட் பேட்டி….!

    எத்தனை ஜெனரேஷன் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் ரகமான படத்தை எடுப்பதுதான் இயக்குநர்களுக்குச் சவாலான காரியம். அந்தச் சவாலான விஷயத்தில் அசால்ட் செய்த படம்தான் ‘பஞ்சதந்திரம்’. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல் நடித்த இந்தப் படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதினார். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இந்தத் திரைப்படம் வெளிவந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது.

    எல்லாத் தலைமுறையினரும் கொண்டாடும் படங்கள் லிஸ்ட்டில் இந்தப் படத்துக்கு எப்போதுமே இடமுண்டு. மாடர்னான ஃப்ரேமில் எடுக்கப்பட்ட எக்காலத்துக்கும் ஏற்ற மாடர்னான திரைப்படம்தான் ‘பஞ்சதந்திரம்’. படத்தின் கதையே பெங்களூர் சென்றபிறகுதான் ஆரம்பிக்கும். போகும் நோக்கத்தில் வல்காரிட்டி நிறைந்திருந்தாலும் அந்த விஷயம் ஒரு காட்சியில் கூட பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்காமலும் அந்த ஐவருடன் சேர்த்து நம்மையும் பயணிக்க வைக்கும் இந்தப்படம். ‘அட இதுதானா இந்தப் படத்தின் கதை?’ என்ற எண்ணம் நமக்குள் தோன்றலாம். ஹீரோவுக்கு கல்யாணம் நடந்த பிறகும் பிரச்னை வந்து பிரிஞ்சு வாழ்றாங்க… ஹீரோவின் நான்கு நண்பர்கள் சேர்ந்து, மனைவியோடு மனஸ்தாபத்தில் இருக்கிற ஹீரோவை எப்படி மீட்டெடுக்குறாங்க… ஒரு பெண்ணை மறக்க இன்னொரு பெண்தான் உதவணும்ங்கிற இவங்களோட கான்செப்ட்… அதுக்காக இவங்க பெங்களூர் போறாங்க… அங்க இவங்க மாட்டுற பிரச்னையில இருந்து எப்படித் தப்பிச்சு எப்படி ஹீரோயினோட டூயட் பாடுறாங்க… அட போங்க பாஸ் இதெல்லாம் பாகவதர் காலத்து கதைனு யோசித்தால் கரெக்டான விஷயம்தான். ஆனால் அதே கதையை எப்படி ருசிகரமாக ரசிகர்களுக்குக் காட்டுவது? காட்சிகள் ஒவ்வொன்றையும் எப்படி அழகாகக் காட்டுவது? நட்பில் நடக்கும் இயல்பான காமெடி கலாட்டாவை எப்படி ரசிகர்களுக்குக் கொண்டு சேர்ப்பது? இதுபோன்ற ஏராளமான கதைகளுக்கு அழகான ஒரு எடுத்துக்காட்டுதான் இந்தத் திரைப்படம். அந்தப் படத்தின் இயக்குநரே நினைத்தாலும் இனி ‘பஞ்சதந்திரம்’ போன்ற ஒரு படத்தை எடுப்பதென்பது கஷ்டமான காரியம். அந்த அளவுக்கு ஒரு மேஜிக் நிறைந்த படம்தான் இது. அந்தப் படத்தின் வசனகர்த்தா கிரேஸி மோகன் பகிர்ந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள்.

    ”கமல் சாருக்கும் உங்களுக்கும் இருக்குற வேவ் லென்த் இந்தப் படத்துல எப்படி..?”

    ”இந்தப் படம் டிஸ்கஸ் பண்ணின சமயத்தில் கமல் சார் ஹாங்காங்ல இருந்தார். வழக்கமா ஒரு படத்தைப் பத்தி பேசணும்னா எதாவது ஒரு ஹோட்டல், இல்லேன்னா யாரோட ஆபீஸ்லேயாவது டீம் மொத்தமும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணுவோம். கமல் சார் எனக்கு ஹாங்காங்ல இருந்து ஸ்க்ரிப்ட் அனுப்பினார். அந்தப் படம் தொடர்பாக நாங்க வீடியோ சாட்லதான் டிஸ்கஸ் பண்ணினோம். மானிட்டர்ல அவரைப் பார்த்து நான் டயலாக் சொல்லுவேன். அவரும் கேட்டுட்டு எதாவது மாற்றம் இருந்தா சொல்லுவார், நானும் என்னோட விருப்பத்தைச் சொல்லுவேன். பொதுவா எல்லா ஆணோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. எனக்கும் அதே மாதிரி, வெற்றிக்குப் பின்னாடி ஒரு பெண்தான். என்ன கொஞ்சம் வித்தியாசமாக அவர் ஒரு பெண் வேடம் போட்ட ஆண்… அது வேற யாரும் இல்ல நம்ம அவ்வை சண்முகி.”

    ”முன்னாடி பின்னாடி’ காமெடிக்கு பின்னாடி இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு எதிர்பார்த்தீங்களா?”

    ”படத்துல எல்லா காமெடிகளுமே நல்லா வந்துருந்தது. குறிப்பா அந்த ‘முன்னாடி, பின்னாடி’ காமெடிதான் எல்லாரோட ஃபேவரைட்டா இருக்கும். அந்தக் காமெடிக்கு பின்னாடி நடந்த கதையை இப்போ உங்க முன்னாடி சொல்றேன். அதைப் பின்னாடி நீங்க எப்படி எழுதணுமோ அப்படி எழுதிக்கோங்க. எனக்கு ராம்நாத்னு ஒரு நண்பன் இருக்கான். செம ஹ்யூமர் சென்ஸ் அவனுக்கு. அவன் ஒரு நாள் நான் காருக்கு முன்னாடி நின்னுட்டு இருக்கும் போது ‘ஏன்டா எலுமிச்சம் பழம் மாதிரி முன்னாடி நிக்குற… காரை விட்டு ஏத்திறப் போறேன்டா நகரு’ன்னு சொன்னான். எனக்கு அப்போ சிரிப்புத் தாங்க முடியல. அதை இன்ஸ்பிரேஷனா வெச்சுத்தான் அந்த ‘முன்னாடி பின்னாடி’ காமெடியைப் படத்துல சேர்த்தேன். முன்னாடி அந்த சீன்ல நான்தான் நடிக்க வேண்டியதா இருந்தது. பின்னாடி எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு, அதனால அதுக்குப் பின்னாடி விக்ரம் வாசு அந்த காமெடியில நடிச்சிருந்தார். பின்னாடி அதை நெனச்சு நான் ரொம்ப ஃபீல் பண்ணேன். இன்னமும் கே.எஸ்.ரவிகுமார் சார் என்கிட்ட சொல்லுவார். அந்த ரோலை மிஸ் பண்ணிட்ட… நீயே அதைப் பண்ணியிருக்கலாம். கமல் – கே.எஸ்.ரவிகுமார் படத்துல நடிக்காமப் போனது என்னோட காஸ்ட்லி மிஸ்தான். பின்னாடிதான் எனக்கு இது புரிஞ்சது.”

    ”மூஞ்சியில துப்பிட்டான்னா?’ங்கிற டயலாக் எப்படி ‘துப்பில மூஞ்சிட்டான்னா?’னு மாறுச்சு?”

    ”அது வழக்கமா எங்களுக்குள்ள நடக்குற காமெடிதான். எங்க ட்ரூப்ல ஒரு பையன் இருக்கான். அவன் பேசுற டயலாக்கை எல்லாமே மாத்தி மாத்தித்தான் சொல்லுவான். ‘பிறவியிலே குருடா?’னு கேட்குறதுக்குப் பதில் ‘குறவியிலே பிருடா?’ன்னு கேட்பான். அந்த மெத்தர்டை எல்லா படத்துலயுமே அங்கங்க வெச்சுருப்பேன். ‘அவ்வை சண்முகி’ படத்துல கூட ‘ஜானகி அம்மா வீட்டுக்கு போறேன்’னு சொல்றதுக்கு பதில் ‘மானகி ஜம்மா வீட்டுக்கு போறேன்’னு கமல் சார் ஒரு டயலாக் சொல்லுவார். இந்த மாதிரி எல்லா படங்கள்லேயுமே டச் வெச்சுகிட்டேதான் இருப்பேன். இது ஒரு நிமிஷம் நிறுத்தி கவனிச்சுக் கேட்டாதான் புரியும். சிம்பிளா இதுல ஹ்யூமர் பண்ணிட்டு போயிடலாம்.”

    ”படத்துக்குத் தேவையான ஹ்யூமர் கன்டென்ட் எல்லாம் எங்க இருந்து எடுக்குறீங்க?”

    ”நம்ம வாழ்க்கையே பெரிய ஹ்யூமர்தான் தம்பி. இதை விட கன்டென்ட்டுக்கு எங்க தேடி அலையச் சொல்றீங்க. எனக்கு மௌலி ராம்பத்திரம்னு ஒருத்தர் நல்ல பழக்கம். ஆனால் இப்போ காலமாகிட்டார். அவர் கடைசிக்காலத்துல பாத்ரூம் போகும்போது ‘துணைக்கு நான் வேணும்னா வரவா?’னு கேட்டேன். அதுக்கு அவர் ’60 வருஷமா நான் தனியாதான போயிட்டு இருக்கேன் திடீர்ன்னு என்ன துணை?’னு கேட்டார் அதையே நான் நாகேஷ் சார் காமெடியில டயலாக்கா வெச்சேன். இதே மாதிரிதான் முன்னாடி, பின்னாடிங்கிற வார்த்தை விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும் அதுவும் இந்தப் படத்துல இடம்பெற்றது. இது ஆடியன்ஸ் மத்தியிலயும் எதிர்பாராத ஹிட் அடிக்கும். ஷூட் டைம்ல அதை நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல. என் பெயருக்கு முன்னாடி இருக்குற கிரேஸிக்கு பின்னாடி பெயர் வாங்கிக் கொடுத்தது பஞ்சதந்திரம்தான். எனக்கு எப்பவுமே ரொம்ப ஸ்பெஷலான ஒரு படம் இது” என்று நெகிழ்ந்தார் கிரேஸி மோகன்.”

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170630 -Yamuna Kaliya and Lakshman Rekha-lores

    காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
    காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
    கோளரி மாதவன் கோவிந்தன் என்வீட்டுத்
    தூளியில் ஆடித் தூங்க வருகவே….கிரேசி மோகன்….!

    Share
  • OH, INDIA – ஓ, இந்தியா

     

    பவள சங்கரி

    INDIA & OTHER POEMS (KOREAN)

    கொரிய மூலம் :  கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் – கிம் ஜின் -சுப்

    தமிழ் மொழியாக்கம் : பவள சங்கரி

    unnamed (3)

    OH, INDIA
    ஓ, இந்தியா

     

    ஓ, இந்தியா
    வெந்து தணிந்த மண்துகள்களுடன்
    மஞ்சள் பூமி
    ஏழ்மையில் வாடும் சடங்களாய் குழவிகள்
    ஆயினும்
    நிமிர்ந்த நன்னடையும்
    வஞ்சமிலா புன்னகையும்
    தெள்ளத்தெளிந்த நயனங்களும்
    கொண்டோரவர்.
    மெய்மையில் சுகந்தமாய் மலரும்
    கமலமல்லவோ அவர்கள்?

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 92

    தேசிய அருங்காட்சியகம் டப்லின், அயர்லாந்து

    முனைவர் சுபாஷிணி

    ​கெல்ஸ் நூல் (The book of Kells) எனப்படும் கிறிஸ்துவ கோஸ்பல் பாடல்கள் கொண்ட நூல் பற்றி ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இது 9ஆம் நூற்றாண்டில் முழுதாக வடிவமைக்கப்பட்ட ஒரு நூல். எழுதிய நூல் என்று சொல்வதை விட வடிவமைக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட நூல் என்று சொல்வது இதற்கு மிகப் பொருந்தும். இந்நூலில் இலத்தீன் மொழியில் புதிய டெஸ்டமனில் உள்ள நான்கு கோஸ்பல்கள் அடங்கியுள்ளன. இவற்றுடன் பல வாசகங்களும் ஓவியங்களும் நிறைந்துள்ள ஒரு கலைநயம் மிக்க நூல் இது.

    ​1

    இந்த நூல் கெல்ட்டிக் பாரம்பரியத்தில் தோன்றி பின்னர் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்ட பாதிரிமார்களால் உருவாக்கப்பட்டது. இந்த நூலின் காலம் ஏறக்குறை கி.பி 800 அல்லது அதற்கும் முந்தைய ஆண்டுகளாக இருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். இந்த நூலின் சிறப்பு என்னவென்றால், கோஸ்பல் பாடல்களையும் விளக்கங்களையும் வாசகங்களையும் சுற்றி தீட்டப்பட்டுள்ள கவின்மிகு ஓவியங்கள் தாம் எனலாம். இவை செல்ட்டிக் பாரம்பரியத்தின் தாக்கத்தை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக உள்ளமையே இதன் சிறப்பு.

    புக் ஆஃப் கெல்ஸில் அடங்கியுள்ள ஓவியங்கள் கிறித்துவ பாரம்பரிய சின்னங்களை உள்ளடக்கியதாகவும் அதே வேளை கெல்ட்டிக் பாரம்பரியத்தின் மிக முக்கிய சின்னங்களான மனித உருவங்கள், மிருகங்கள், சுற்றி வளைத்து சூழும் பாம்பு, மாய உருவங்கள் ஆகியனவற்றையும் கொண்டிருக்கின்றது. அதோடு கெல்ட் பாரம்பரியத்தின் அடிப்படை சின்னமான கெல்ட்டிக் முடிச்சு மிகத் தெளிவான கவர்ச்சியான வர்ணங்களில் நூல் முழுவதும் இடம் பெறுகின்றது. அயர்லாந்துக்கு ஆறாம் நூற்றாண்டில் புதிதாக நுழைந்த கிறிஸ்துவ சமயம் அயர்லாந்தின் பாரம்பரிய செல்ட்டிக் வழக்கங்களை ஏற்றுக்கொண்டு எவ்வாறு புதிய வகையில் வளம் பெற்று வளர்ந்தது என்பதற்குச் சான்றாகவும் அமைகின்றது.

    2
    ​

    நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்த நூல் தற்சமயம் டப்ளினில் உள்ள ட்ரினிட்டி கோலேஜ் நூலகத்தில் (Trinity College Library) பாதுகாக்கப்படு வருகின்றது. இந்த நூலகம் இருக்கும் அருங்காட்சியகம் தான் அயர்லாந்து தேசிய அருங்காட்சியகம்.

    அயர்லாந்தின் மிகப் பெரிய பொக்கிஷமாக இந்த நூல் இன்று கருதப்படுகின்றது. புக் ஆஃப் கெல்ஸ் நூல் மிகப் பிரபலமானதாகவும், மிக நுணுக்கமாகவும் தயாரிக்கப்பட்ட ஒரு நூல் என்பதும் முக்கிய குறிப்பாகும். ஐயோனா தீவு, மற்றும் அயர்லாந்தின் கெல்ஸ் நகரில் மடம் அமைத்து இங்கு கிறுத்துவ மதத்தைப் பரவச் செய்த பாதிரிமார்களின் அரிய ஒரு கலைப்படைப்பு இந்த நூல்.

    ​3

    இந்தாருங்காட்சியகத்திலேயே உள்ள ட்ரினிட்டி கோலேஜ் நூலகத்தில் இந்த நூலின் அசல் இருந்தாலும் இந்த நூலின் அச்சுப் பிரதிகளும் வெளியிடப்பட்டன என்பதும் ஒரு செய்திதான். மிகக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மட்டுமே இவை பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. 1990ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் உள்ள செய்தியின் அடிப்படையில் 1990 ஆம்ஆண்டில் இந்த அச்சு நூல் ஒன்றின் விலை $18,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இன்னூலின் விலை மேலும் அதிகரித்திருக்கலாம் என நம்பலாம்.

    இந்த நூல் எப்படி ட்ரினிட்டி கோலேஜ்க்கு வந்தது என பார்ப்போம்.

    அடிப்படையில் இது கையால் வர்ணம் தீட்டி எழுத்துக்களைக் கோர்த்து வடிக்கப்பட்ட ஒரு நூல். இதன் பக்கங்கள் அனைத்திலும் இருக்கும் வர்ண ஓவிய வேலைப்பாடுகளை மூன்று பாதிரிமார்கள் செய்திருக்கின்றனர். எழுத்துக்களை நான்கு பாதிரிமார்கள் வடித்திருக்கின்றனர். கி.பி 800ம் ஆண்டு வாக்கில் முடிக்கப்பட்ட இந்த நூல் அயர்லாந்தின் கெல்ஸ் நகரில் உள்ள கிறிஸ்துவ மடத்தில் நிறைவு செய்யப்பட்டதால் அந்த நகரின் பெயரிலே வழங்கப்படுகிறது. அயர்லாந்துக்கும் ஸ்கோட்லண்டுக்கும் இடையில் உள்ள ஐயோனா (Iona) என்ற தீவில் உள்ள கிறிஸ்துவ மடத்தில் இதன் ஆரம்ப கட்ட உருவாக்கப்பணிகள் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

    ​4

    ஐயோனா (Iona) வில் கொள்ளையர்கள் மடத்தில் நுழைந்து தாக்கி அங்கிருந்த பொருட்களைச் சூறையாடிச் சென்று மடத்தையும் தீவைத்து கொளுத்தி நாசப்படுத்திய போது பாதிரிமார்கள் அங்கிருந்து சில முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு கடல் வழி பயணித்து அயர்லாந்தின் கெல்ஸ் நகருக்கு வந்திருக்கின்றனர்.

    அங்கு கெல்ஸ் மடத்தில் இப்பணியைத் தொடர்ந்து செய்து நிறைவேற்றி முழு நூலையும் முடித்திருக்கின்றனர். இந்த நூலில் ஆக மொத்தம் 680 பக்கங்கள் உள்ளன. அதில் இரண்டு பக்கங்களில் மட்டும் தான் வர்ணம் இல்லை. ஏனையவை முழுக்க முழுக்க செல்ட்டிக் கலாச்சார ஓவியங்களைப் பிரதிபலிக்கும் சின்னங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    1661ம் ஆண்டு தொடங்கி இந்த நூல் ட்ரினிடி கோலேஜில் (Library of Trinity College – Dublin) ல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

    இடைப்பட்ட காலத்தில் இந்த நூல் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டாலும் பாதுகாப்பு முறைகள் சரியாக அமைந்திருக்கவில்லை. ஆக 1953ம் ஆண்டில் இந்த நூல் முறையாக தூய்மை செய்யப்பட்டு அசல் நூல் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சிறிதாக்கப்பட்டு வைக்கப்பட்டது. இந்த நூலின் அசலின் 2 பாகங்கள் ட்ரினிடி கோலேஜின் நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றது. இதன் மேலும் இரண்டு பாகங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதில்லையென்றாலும் அவை முக்கிய ஆய்வாளர்களின் பார்வைக்கு மட்டும் என்ர வகையில் அனுமதி வழங்கப்படுகின்றது. ட்ரினிடி கோலேஜில் உள்ள 2 பாகங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் திருப்பப்பட்டு காட்சிக்கு வைக்கப்படுகின்றது. இதனால் தினம் நூலகத்துக்கு வந்து இந்த நூலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தை வாசித்துச் செல்லலாம்.

    இந்த நூலை மறுபதிப்பு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட சுவிஸர்லாந்தின் Faksimile Verlag (Fine Art Facsimile Publishers) நிறுவனத்தினர் இந்த நூலை கையில் தொடாமல் ட்ரினிடி காலேஜிலிருந்து வெளியே எடுக்காமல் ஒரு சிறப்பு கருவியை பயன்படுத்தி இதன் பக்கங்களைத் தொடாமலேயே காமெராவில் பதிவு செய்து இந்த நூலினை மின்னாக்கம் செய்து எண்மப் பதிவாக்கி முழுமைபடுத்தினர். ட்ரினிடி காலேஜ் சிறு எண்ணிக்கையில் இந்த நூலை சிறப்பு வெளியீடு செய்தனர். இந்தப் பதிப்பு நிறுவனத்துக்கு இந்தக் கருவியை உருவாக்க கால் 1/4 மில்லியன் சுவிஸ் ப்ராங்க் தேவைப்பட்டதாம். இந்தக் கருவி கொண்டு 1986ம் ஆண்டில் சில நாட்கள் தொடர்ந்து இப்பணி செய்து முடிக்கப்பட்டிருக்கின்றது.

    ​5

    இவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்த நூலை இந்த அருங்காட்சியகத்தில் நேரில் பார்க்க முடிந்த நாளில் என் மனம் அடைந்த ஆச்சரியத்தை இன்றும் உணர்கின்றேன். இந்த அருங்காட்சியகத்தில் இந்த அரிய பொக்கிஷமான கெல்ஸ் நூல் மட்டுமல்ல, ஏராளமான் ஆஅய்வுக் கருவிகள், அதிலும் குறிப்பாக உடற்கூறு சம்பந்தமான மருத்துவ சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு அறுவைச் சிகிச்சை கருவிகள், அறிவியல் துரை சார்ந்த குறிப்பிடத்தக்க சாதனக்கள் என வருவோரை பிரமிக்க வைக்கும் ஒரு அருங்காட்சியகமே இது. டப்ளின் செல்பவர்கள் கட்டாயம் தவறவிடாமல் நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்து வரவேண்டும்.

    Share
  • சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (8)

    பவள சங்கரி

    சற்றே வளர்ந்த விவரமான குழந்தைகளுக்கு:

    சிறுவர் இலக்கியம்

    உதாரணமாக, ஆர்.எஸ். மணி அவர்களின் “பாப்பாவுக்கு காட்டு மிருகங்கள்” என்ற குழந்தைகளுக்கான பொது அறிவு நூலில், சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, ஓநாய் போன்ற பல மிருகங்கள் பற்றிய சிறு குறிப்புகளை, தன் சொந்த ஓவியங்கள் மூலம் அழகாக விளக்கியிருப்பார். மிக எளிமையான வார்த்தைகளுடன் சுருக்கமான விளக்கங்களாக இருக்கும் அவைகள். உதாரணமாக இதோ …

    ஓநாய்

    “ஓநாய், அதன் பெயருக்கு ஏற்றவாரு நாயின் இனத்தைச் சேர்ந்தது. ஆனால் நாய்க்கு உள்ள நன்றி அறிவோ, பழகும் தன்மையோ ஓநாய்க்கு கிடையாது. நாய் ஒரு வீட்டு மிருகம். ஓநாய் பயங்கரமான காட்டு மிருகம். 

    ஓநாயில் மிக பெரியது படத்தில் உள்ள சாம்பல் நிறமுள்ள ஓநாய். இதன் உடல் சுமார் ஐந்தடி நீளம் இருக்கும். வாலின் நீளம் இரண்டடி. இது அலாஸ்கா, கனடா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

    சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறம் கொண்ட ஓநாய்களும் உண்டு.

    ஓநாய் சிறு கூட்டமாகச் சென்று வேட்டையாடும். அதன் ஆகாரம் சிறிய பிராணிகளாக இருந்தாலும், சில சமயங்களில் பல ஓநாய்களாகச் சேர்ந்து, பெரிய மிருகத்தைத் துரத்தும். அது வெகு தூரம் ஓடிக் களைத்தபிறகு அடித்துத் தின்னும். ஆகாரம் கிடைக்காவிட்டால் ஓநாய் மனிதர்களைக்கூடத் தாக்குவது உண்டு.

    ஓநாய்க்குப் பசி அதிகம். அது எவ்வளவு உணவு கிடைத்தாலும் வயிறு புடைக்கத் தின்னும்.

    பண்ணையிலுள்ள ஆடுமாடுகளை அடித்து விடுமாதலால் அதை மனிதனின் விரோதியாகக் கருகிறோம்.

    ஆண் ஓநாயின் தலை பெண் ஓநாயின் தலையை விடச் சிறியது. ஓநாய் இடும் ஊளைச்சத்தம் இரவில் தனியாகப் பிரயாணம் செய்பவர்களுக்கு அச்சத்தைத் தரும்”

    புரியும்வகையில் உள்ள எளிதான புனைவுகளும் கூட குழந்தைகளால் விரும்பப்படுகின்றன.

    7 முதல் 10 வயது வரையிலான சிறார்களுக்கு 1,500 முதல் 15,000 வார்த்தைகள் கொண்ட நூல் அல்லது 40 முதல் 80 பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் படைக்கப்படுகின்றன. எட்டு முதல் பத்து சிறிய அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு, சற்று ஆழ்ந்த கருவுடன், புரியும்படியான கருத்துகளுடன் வடிவமைக்கப்படுகின்றன. பெரியவர்களின் வாசிப்பிற்கு நெருக்கமான வடிவமைப்பில் அமையும் நூல்களை பெரிதும் விரும்புகிறார்கள் இவர்கள்.

    நிறைய வசனங்களும், புதிய வார்த்தைகளும், சவால்களும், நீண்ட வரிகளும் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முன்னுரை, பொருள், முடிவுரை என்று வடிவமைக்கப்பட்டிருக்கும். நிறைய திருப்பு முனைகளும் அமைந்திருக்கலாம். சிறார்களின் வாழ்க்கையில் எதிர்நோக்கும் சவால்கள், குழப்பங்கள், அதிலிருந்து மீண்டு வரும் உபாயங்கள் என்பன போன்ற கருத்துகளுடன், பொழுதுபோக்கு அம்சங்களும், நகைச்சுவைகளும் நிறைந்திருக்கலாம். குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் புதினங்கள் நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

    வளர் இளம் பருவத்தினரான 9 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கான புதினங்கள் பொதுவாக 60 முதல் 150 பக்கங்கள் வரை இருக்கலாம். அல்லது 15,000 முதல் 35,000 வார்த்தைகள் கொண்டதாக இருக்கலாம் என்கிறார்கள். அகன்ற சொல்லகராதிகளைக்கொண்ட படைப்புகளாக இருக்கலாம். கதைக்கருவுடன், துணைக்கருவும், நகைச்சுவைகளும், சில தீவிரமான விசயங்களும்கூட கையாளப்படுவதுண்டு.

    12 வயதிற்கு மேல் இருக்கும் பருவத்தினருக்கான புதினங்கள் பொதுவாக 120 முதல் 250 பக்கங்களோ அல்லது சுமாராக 30,000 வார்த்தைகளோ கொண்டதாக இருக்கலாம். ஆழ்ந்த கருத்துகளோடு, மர்மங்கள், திகில் நிறைந்த படைப்புகளையும் ஆர்வமுடன் வாசிக்கிறார்கள். தங்கள் புத்தகங்கள் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருப்பதையே குழந்தைகள் விரும்புகின்றனர். நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்ற பேராவலில் உள்ள வளரும் பருவம் என்பதால் அனைத்து வகைப்படைப்புகளும் அவர்களால் வரவேற்கப்படுகின்றன.

    ஆரம்ப எழுத்தாளர்களுக்கு ஏற்படும் பொதுவானதொரு ஐயம் என்றால் அது, படைப்புகள் வணிக நோக்கில் இருக்கவேண்டுமா அல்லது இலக்கிய நடையில் அமைந்திருக்க வேண்டுமா என்பதுதான். ஒரு நல்ல கருவை உள்வாங்கிக்கொண்டு சரளமாக எழுதத்தோன்றும் நடையில் எழுதிவிட்டு, தேவையான திருத்தங்களுடன் மீண்டும், மீண்டும் மேம்படுத்தி வெளியிடவேண்டியதுதான். வாசகர்களும், பதிப்பகத்தாருமே அதன் நடையை நிர்ணயம் செய்பவர்கள்.

    அடித்தளம் ஆழமாக இருந்தால் கட்டிடம் உறுதியாக நிலைத்து நிற்கும்! தேவையான வடிவத்தில் அதைக் கட்டமைப்பதும் எளிதாகும்!

    மேற்கண்ட இந்த சூத்திரம் கட்டிடங்களுக்கு மட்டுமல்லாமல் எந்தவொரு படைப்பிற்கும் இலக்கணமாக இருக்கும்.

    இலக்கியப் படைப்புகளின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது ஏதோ ஒன்றினுள் எதையோத் திணிப்பது அன்று. தேர்ந்து எடுத்துக்கொண்ட களத்தை பாதை மாறாமல், கவனம் சிதறாமல், வளைவு நெளிவுகளுடன் சரியாக வடிவமைத்து கட்டமைப்பதேயாகும். தெளிவான, அழகான வடிவமைப்பு மட்டுமே ஒரு நூலுக்கு வாசிப்பனுவத்தை மகிழ்ச்சிகரமாக்குகிறது. இந்த வடிவமைப்பு என்பது வெளித்தோற்றத்தை மட்டும் குறிப்பிடுவதன்று. கதை சொல்லும் விதம், சம்பவங்களின் கோர்வை, அது பயணிக்கும் பாதை போன்றவற்றின் வடிவமைப்பே வாசகர்களை நொடிக்கு நொடி காட்சிக்கு காட்சி சுகமாக பயணிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தவல்லது.

    வடிவமைப்பின் அடிப்படைக் கூறுகள் என்றால் அது ஒரு கதையின் முன்னுரை, பொருள், முடிவுரை என்பன. கதைக்கு மட்டுமின்றி ஒவ்வொரு காட்சிக்கும் இதேபோன்று முன்னுரை, பொருள், முடிவுரை என்று உள்ளது. அதை எப்படி, எவ்வளவு சுவையாக ஒரு படைப்பாளர் வழங்குகிறாரோ அதைப் பொறுத்தே அந்த படைப்பின் வெற்றி அமைந்திருக்கிறது. எந்த ஒரு படைப்பும் பயிற்சியின்றி எளிதாக வெற்றி கொடுத்துவிடுவதில்லை என்பதை உணர்தல் அவசியம். முயற்சி திருவினையாக்கும் என்ற சத்தியத்தைக் கருத்தில்கொண்டு, ஒரு படைப்பை எழுதி முடித்தவுடன் திரும்பத் திரும்ப வாசித்து மேம்படுத்திக்கொண்டே வரவேண்டும். முழுமையான திருப்தி ஏற்படும்வரை அந்த முயற்சியிலிருந்து பின்வாங்கக் கூடாது.

    நல்லதொரு படைப்பை வடிவமைக்கும் வழிமுறைகள்:

    ⦁ எளிமையான வடிவமைப்பு வாசிப்பிற்கு இனிமை. ஒரு கதை முன்னுரை, பொருள், முடிவுரை என்ற வரையறைக்குள் வடிவமைக்கப்பட்டாலும், அதன் மையக்கருவை இந்த மூன்று பகுதிகளுக்கும் இயல்பாகப் பொருந்துமாறு வடிவமைப்பது முக்கியம். அதாவது கதையின் முன்னுரையில் கதை நாயகனின் விருப்பமும், அதை அவன் விரும்பும் காரணமும் விளக்கப்படவேண்டும். அடுத்த இடைப்பகுதியில் நாயகனுக்கு ஏற்படும் தடைகளும், தன் இலக்கை அடையும்பொருட்டு அவன் அவைகளை முறியடிக்கும் விதமும் சுவைபட விளக்கப்படவேண்டும். இறுதியாக அச்சூழலில் யதார்த்தத்தை உணர்த்தும் வகையில் முடிச்சுகளை விடுவித்து நம்பும்படியாகவும், தர்க்கரீதியான வழியிலும் அமையவேண்டும். மனதில் தெளிவாக உள்வாங்கிக்கொண்டு கதையை ஆரம்பித்தால் கருவோடு இணைந்து அது மனம், இதயம், ஆன்மா என்ற வகையில் அழகான வடிவில் அமைந்துவிடும்.

    ⦁ நம் புத்தகம் எதைச்சொல்ல வருகிறது என்ற தெளிவான குறிக்கோள் கொள்ளவேண்டும். பாத்திரங்கள், காட்சியமைப்புகள் பற்றிய சிறு குறிப்புகள் எடுக்கலாம்.

    ⦁ ஒரு கதைக்களம் அமைத்த பின்பு அதனைத் தலைமையாகக்கொண்டு அடுத்தடுத்த உப களங்கள் பொறிதட்டினாற்போன்று பளிச்சென்று தோன்றலாம். முன்னேற்பாடுகளின்றி சட்டென தோன்றும் சூழல் கதையின் போக்கில் மீப்பெரும் திருப்பம் ஏற்படுத்தலாம். பல நேரங்களில் சில எழுத்தாளர்களுக்கு இது போன்று அமையும் களங்களே வெற்றி வாகை சூட்டலாம். ஆனாலும் தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் தோன்றிய வண்ணம் ஆரம்பித்து மேலும் அதை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்படலாம். இருண்ட குகையினுள் மெல்லிய விளக்கேந்தி வெகு தொலைவில் உள்ளதைத் தேடிக்காண்பதைப் போன்றொரு சிரமம் ஏற்படலாம். இது போன்ற சூழலில் முதலில் கதை நாயகனை அறிமுகம் செய்து தொடர்ந்து ஆரம்பத்திலேயே கதையின் மையப்புள்ளியையும் தொட்டு, பின் பாத்திரங்களைப் பேசவிட்டு, உங்கள் கற்பனைகளை நடமாடச் செய்யலாம். இந்த முறையில் நீங்கள் அதிக கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். பாத்திரங்கள் பேசவேண்டிய வசனங்கள், அவர்களின் இரகசியத் திட்டங்கள் போன்றவற்றில் கூர்ந்த ஞானம் கொள்ளவேண்டியது அவசியம். பரிணாம வளர்ச்சியைப் போன்ற வகையில் ஒரு கதையை உருவாக்க முனையும்போது அது உங்கள் ஆழ்மனச் சக்தியை உசுப்பிவிட்டு ஆகச்சிறந்த படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது.

    ⦁ கதைக்களம் சவாலாக அமைந்துவிட்டால், கதையை சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம். முதல், இடை, கடைப்பகுதி என்று திட்டமிட்டுக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக நிரப்பலாம். ஒரு வினையை ஏற்படுத்தி அதற்கேற்ற எதிர்வினையை அந்தந்த பாத்திரங்களின் வாயிலாக, அவைகளின் குணாதிசயங்களுக்கேற்ப வசனங்களை அமைத்துக்கொள்ளலாம். புதினம் என்றால் பல வினைகள், எதிர்வினைகள் என்று படிப்படியாக விரிவுபடுத்திக்கொண்டே, ஆரம்பம், இடை, முடிவு என போகலாம்.

    ⦁ ஒரு நூல் எழுத ஆரம்பிக்கும்முன் செய்ய வேண்டியது, அந்த நூல் குறித்த ஒரு வரை படத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டியது. அதாவது ஒவ்வொரு பகுதியாக பிரித்துக்கொண்டு அது பற்றிய சிறு குறிப்பை உள்வாங்கிக்கொண்டு, ஒரு வரைமுறையுடன் எழுத ஆரம்பிக்கவேண்டும். எழுத ஆரம்பித்தவுடன் பல நேரங்களில் ஆச்சரியப்படும் வகையில் பல புதிய கருத்துகள் உதிப்பதும் உண்டு. திறந்த மனதுடன் புதிய ஆச்சரியங்களை வரவேற்கத் தயாராக இருக்கவேண்டும். கதாப்பாத்திரங்களும் புதிய பாதையில் செல்ல முனையக்கூடும். அந்த மாற்றங்களை ஏற்பதற்கும் அஞ்சத் தேவையில்லை. சில நேரங்களில் அதுவே கதையின் ஒரு முக்கிய திருப்புமுனையாகக்கூட அமைந்துவிடலாம்.

    ⦁ நாடக வடிவிலான பாரம்பரிய முறை எழுத்துகளையும் தவிர்க்காமல் அதிலும் புதிய பாணியை சற்று கலந்து சுவைபட அமைக்கலாம்.

    ⦁ புதிய பல நடைகளையும் உருவாக்கி முயற்சிக்கலாம். எழுத்து நடையின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமல் கதையின் சூழலுக்கேற்ப புதிதாகவும் உருவாக்கிக்கொள்ளலாம்.

    ⦁ இறுதியாக, எந்தவிதமான நடை நம் கதையை சிறந்த முறையில் முடிக்கக்கூடிய நம்பிக்கையை வளர்க்கிறதோ, எந்த முறையில் எழுதுவது நமக்கு இயல்பாக அமைகிறதோ, எந்த விதம் கதையை முன்னுரை, பொருள், முடிவுரை என்ற இலக்கணத்துடன் பொருந்தி வருகிறதோ, எந்த முறை எழுத்தாளரின் இயல்பிற்கு ஒத்து வருகிறதோ அந்த முறையே சிறந்ததொரு முறையாகக் கருதி தொடரவேண்டியது ஆக்கப்பூர்வமானது.

    தொடருவோம்

    Share