மீனாட்சி பாலகணேஷ்

குழந்தை முருகனின் பன்னிரு திருக்கரங்களின் பெருமையைச் சென்ற கட்டுரையில் கண்டோம். ஆறுமுகங்களின் அருமைபெருமைகளையும் கண்டுமகிழலாமே! முருகனைப்பாடுவோர் அனைவரும் தமது கற்பனைக்கேற்றவண்ணம் அவனுடைய திருமுகங்கள் செய்வதனைக் கூறிமகிழ்ந்தனர். அவர்களுடைய விளக்கங்கள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் அனைத்துமே அழகுறப் பல பொருள்களை விளக்கியருளுகின்றன.

2
முதலில் ஐங்கரன், முருகன் இருவரின் ஒரு சிறு விளையாட்டைக் கண்டு ரசிக்கலாம்.
ஐங்கரனான கணேசன் தன் தந்தையான அரனிடத்தில் வந்து, “ஐய! என் செவியை முருகன் கிள்ளினான்,” என முறையிடுகிறான். ஐங்கரனுடையது பெரிய முறம்போலும் யானைச்செவி. அது குறும்பனான முருகனின் கவனத்தைக் கவர்ந்தது. கிள்ளியும் விட்டான். தந்தை என்ன செய்வார்? தன் இளையமகனிடம், “ஏன் இப்படிச் செய்தாய்?” எனக்கேட்கவே, “அண்ணன் எனது ஆறுமுகங்களில் விளங்கும் கண்களை எண்ணினான்,” எனச் சிணுங்கினான். “ஓ! அப்படியா சேதி? நீ ஏனப்பா அவ்வாறு செய்தாய்?” என விநாயகனிடம் அண்ணல் கேட்க, “அவன் எனது தும்பிக்கையினை முழம் போட்டளக்கிறான் தந்தையே!” என்றிட, தாயும் தந்தையுமான அன்னையும் அத்தனும் இவ்வுரையாடலைக்கேட்டு நகைக்கின்றனராம். இது துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எனும் ஒரு பக்தரின் கற்பனை.

ஆறுமுகங்களும், வேழமுகமும் அடியார்களின் கற்பனைகளை எவ்வாறெல்லாம் விரிக்கின்றன?

‘அரனவ னிடத்திலே ஐங்கரன் வந்துதான்
ஐய!என் செவியைமிகவும்
அறுமுகன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனைநோக்கி
விரைவுடன் வினவவே, அண்ணன்என் சென்னியில்
விளங்குகண் எண்ணினன்என
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ அப்படியும்
விகடம்ஏன் செய்தாய்?என
மருவும்என் கைந்நீளம் முழம்அளந் தான்என்ன
மயிலவன் நகைத்துநிற்க
…………………………………………………’

(துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்)

சிவபிரானுடைய ஐந்து திருமுகங்கள் ‘பரத்’தையும் உமையம்மையின் திருமுகம் ‘இகத்’தையும் அளிக்கவல்லன. முருகப்பெருமானுடைய ஆறு திருமுகங்கள் இவையனைத்தும் சேர்ந்ததே! இவை இகபர நன்மைகளை அடியார்களுக்கு அளிக்க வல்லன.

1
அருணகிரிநாதர் முருகனின் ஆறுமுகங்களைப் பாடுகிறார். பெருமைவாய்ந்த மயில்மீதேறி திருவிளையாடல்கள் புரிந்தது உனது ஒரு முகம்தான்! சிவபிரானுக்கு பிரணவ உபதேசம் செய்ததும் உனது ஒருமுகமே! உனது பெருமைகளைக் கூறித்துதிக்கும் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்துவைப்பதும் உன் ஒருமுகம்தான். கிரவுஞ்சமலையை உருவும்படியாக வேலைச் செலுத்தி நின்றதும் உன் ஒருமுகமேதான்!

உன் எதிரியான சூரபதுமனை வதைத்ததும் உன் ஒருமுகமே! வள்ளியம்மையை மணம்புரிய வேண்டி விருப்புடன் வந்ததும் உன் ஒருமுகமே!

அவ்வாறாயின், நீ ஆறுமுகங்களைக் கொண்டு நீ விளங்குவதன் பொருளை எனக்கு உணர்த்தியருளுவாயாக!’ எனவொரு வேண்டுகோளையும் முன்வைக்கிறார் குருநாதர்.

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுகமானபொருள் நீயருளல் வேண்டும்
………………………………………………
(அருணகிரிநாதர் திருப்புகழ்)

ஐந்துபிராயம்வரை பேசாதிருந்து பின் முருகனருளால் பேசும்திறம் பெற்ற குமரகுருபரர், அச்சிறு வயதிலேயே முருகனருளால் அவன்மீது இயற்றிய முதல்நூலான கந்தர் கலிவெண்பாவில் அவனுடைய திருவடிவை அணுவணுவாகச் சுவைபட, பக்திரசம் பொங்கப் பாடியுள்ளார்.

4
‘அசுரர்களால் போற்றப்பட்ட சூரபதுமனைக் கொன்ற வீரம் பொருந்திய திருமுகம்;
ஊழ்வினையைக் களைந்து அழியாத பேரின்பப் பெருவாழ்வினைத் தரும் சிவந்த தாமரைமலர் போன்ற அருள்சிந்தும் முகம்;

உயிர்களைப் பிணிக்கும் ஆணவமெனும் இருளை ஓட்டிடப் பல கதிரவர்கள் ஒன்றாகத் திரண்டது போன்ற கருணையொளி வீசும் திருமுகம்;

நீங்காத பாச இருளை அகற்றிப் பல கதிரவர்கள் போலத் திகழும் வதனமாகிய மண்டலமுகம்;

அன்புடன் தன்னை அடைய விரும்பும் வள்ளியம்மைக்கும் தெய்வயானை எனும் மங்கைக்கும் விருப்பையளிக்கும் காதல்முகம்;

ஆறாவன்புடன் வந்து தனது திருவடியில் சேர்ந்தோர் மகிழுமாறு அவர்கள் வேண்டும் பல வரங்களைத் தரும் தெய்வமுகம்,’ எனவெல்லாம் போற்றுகிறார் குமரகுருபரர்.

‘வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூரனைத் தடிந்து
தெவ்வர் உயிர்சிந்தும் திருமுகமும் ……………………
……………………………………………………………..’

(கந்தர் கலிவெண்பா- குமரகுருபரர்)

இது பக்தியின் பெருக்கில் விளைந்த கவிதைநயம்!

உமையன்னை மீதான பிள்ளைத்தமிழ் நூல்களில் அவளுடைய குழந்தைகள் செய்யும் குறும்பு விளையாட்டுகள் குறிப்பிடப்படுவது வழக்கம். அவ்வகையில் அழகிய சொக்கநாத பிள்ளை அவர்கள் இயற்றிய நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழில் நயம் மிகுந்ததோர் வருகைப்பருவப்பாடல்:

3
ஐங்கரத்தோனாகிய கணேசன் தன் தம்பியை நோக்கி, “உனக்கு ஏன் ஆறுமுகங்கள்?” எனக் கேட்க, அவன் அதற்கு, “நம்மை ஈன்றவர் என்னைச் சேர்த்தெடுத்து அள்ளியணைத்து முத்தங்கொடுத்து விளையாடுவதற்கு,” என மொழிகிறான். குழந்தைமையின் பேதைமை செறிந்த சுட்டிப்பேச்சு! அத்துணை கன்னங்களிலும் முத்தம் கிடைத்தால் பேரானந்தம் தானே அக்குழந்தைக்கு? இதைக்கேட்ட உமையம்மை, “இவ்வாறான காரணத்தை இன்றல்லவோ நானறிந்தேன் செல்வா,” என அவனை அள்ளியணைத்து உச்சிமுகர்ந்து முத்தமிடுகிறாளாம்.

‘கலையை வளைத்த பிறைக்கோட்டு ஐங்கரத்தோன்
துணைவன்தனை நோக்கி
கவின்தோய் முகமாறு உன் உருவின்
காணும் நிமித்தம் கழறுக……
……………………………………………
தலையை வளைத்து முத்தமிடும் சயிலக்
குயிலே வருகவே!
சாலிப்பதிவாழ் காந்திமதித் தாயே
வருக வருகவே!
(நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்)

இதனை முத்தப்பருவமும் வருகைப்பருவமும் இணைந்திலங்கும் பாடல் எனக் கொள்ளலாமா?

புலவர் நடேச கவுண்டர் இயற்றிய திருநிலைநாயகி பிள்ளைத்தமிழின் முத்தப்பருவப் பாடலொன்று முதலில் நாம்கண்ட துறைமங்கலத்தாரின் பாடலைப்போன்றே நகைச்சுவைமிகுந்து விளங்குகிறது!

மதம்பெருகும் வாரணமுகனின் தும்பிக்கையைப் பிடித்திழுத்து முழம்போட்டு அளக்கும் தம்பி முருகன், “இவன் மூக்கு மிகப்பெரிது,” என நகையாடுகிறான். கணேசன் வாளாவிருப்பானா? “இவனுக்கு எத்தனை முகங்கள்! சளிபிடித்தால் எப்படிப்பட்ட துன்பம்? எத்தனை மூக்குகளை சமாளிக்க வேண்டும்?” எனக்கேட்டு நகைக்கிறான். இவ்வாறு கலகமிட்டு வரும் இருகுழந்தைகளையும் பார்த்து திருநிலை நாயகியான உமையம்மை, “இது என் யானைக்குட்டி! இது என் சிங்கக்குட்டி!” என்று கொஞ்சி மகிழ்கிறாள், எனப்பாடியுள்ளார் புலவர்.

பெருகு மதவா ரணமுகத்துப்
பிள்ளைமுகத்துக் கையிழுத்துப்
பிடித்து முழம்போட் டையவிவன்
பெரிய மூக்க னெனநகைக்க
………………………………………….
முந்நீர் மிதந்த தோணிபுர
முதல்வீ முத்தம் தருகவே!
(திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் முத்தப்பருவம்- நடேச கவுண்டர்)

படிக்குந்தோறும் புதிது புதிதாய்க் காணும் பல்வேறு சுவைகள்! இலக்கிய நயங்கள்!
இவையே பிள்ளைத்தமிழின் அள்ளக்குறையாத அருஞ்சுவையாகும்!

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
***********

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.