பவள சங்கரி

சற்றே வளர்ந்த விவரமான குழந்தைகளுக்கு:

சிறுவர் இலக்கியம்

உதாரணமாக, ஆர்.எஸ். மணி அவர்களின் “பாப்பாவுக்கு காட்டு மிருகங்கள்” என்ற குழந்தைகளுக்கான பொது அறிவு நூலில், சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, ஓநாய் போன்ற பல மிருகங்கள் பற்றிய சிறு குறிப்புகளை, தன் சொந்த ஓவியங்கள் மூலம் அழகாக விளக்கியிருப்பார். மிக எளிமையான வார்த்தைகளுடன் சுருக்கமான விளக்கங்களாக இருக்கும் அவைகள். உதாரணமாக இதோ …

ஓநாய்

“ஓநாய், அதன் பெயருக்கு ஏற்றவாரு நாயின் இனத்தைச் சேர்ந்தது. ஆனால் நாய்க்கு உள்ள நன்றி அறிவோ, பழகும் தன்மையோ ஓநாய்க்கு கிடையாது. நாய் ஒரு வீட்டு மிருகம். ஓநாய் பயங்கரமான காட்டு மிருகம். 

ஓநாயில் மிக பெரியது படத்தில் உள்ள சாம்பல் நிறமுள்ள ஓநாய். இதன் உடல் சுமார் ஐந்தடி நீளம் இருக்கும். வாலின் நீளம் இரண்டடி. இது அலாஸ்கா, கனடா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறம் கொண்ட ஓநாய்களும் உண்டு.

ஓநாய் சிறு கூட்டமாகச் சென்று வேட்டையாடும். அதன் ஆகாரம் சிறிய பிராணிகளாக இருந்தாலும், சில சமயங்களில் பல ஓநாய்களாகச் சேர்ந்து, பெரிய மிருகத்தைத் துரத்தும். அது வெகு தூரம் ஓடிக் களைத்தபிறகு அடித்துத் தின்னும். ஆகாரம் கிடைக்காவிட்டால் ஓநாய் மனிதர்களைக்கூடத் தாக்குவது உண்டு.

ஓநாய்க்குப் பசி அதிகம். அது எவ்வளவு உணவு கிடைத்தாலும் வயிறு புடைக்கத் தின்னும்.

பண்ணையிலுள்ள ஆடுமாடுகளை அடித்து விடுமாதலால் அதை மனிதனின் விரோதியாகக் கருகிறோம்.

ஆண் ஓநாயின் தலை பெண் ஓநாயின் தலையை விடச் சிறியது. ஓநாய் இடும் ஊளைச்சத்தம் இரவில் தனியாகப் பிரயாணம் செய்பவர்களுக்கு அச்சத்தைத் தரும்”

புரியும்வகையில் உள்ள எளிதான புனைவுகளும் கூட குழந்தைகளால் விரும்பப்படுகின்றன.

7 முதல் 10 வயது வரையிலான சிறார்களுக்கு 1,500 முதல் 15,000 வார்த்தைகள் கொண்ட நூல் அல்லது 40 முதல் 80 பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் படைக்கப்படுகின்றன. எட்டு முதல் பத்து சிறிய அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு, சற்று ஆழ்ந்த கருவுடன், புரியும்படியான கருத்துகளுடன் வடிவமைக்கப்படுகின்றன. பெரியவர்களின் வாசிப்பிற்கு நெருக்கமான வடிவமைப்பில் அமையும் நூல்களை பெரிதும் விரும்புகிறார்கள் இவர்கள்.

நிறைய வசனங்களும், புதிய வார்த்தைகளும், சவால்களும், நீண்ட வரிகளும் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முன்னுரை, பொருள், முடிவுரை என்று வடிவமைக்கப்பட்டிருக்கும். நிறைய திருப்பு முனைகளும் அமைந்திருக்கலாம். சிறார்களின் வாழ்க்கையில் எதிர்நோக்கும் சவால்கள், குழப்பங்கள், அதிலிருந்து மீண்டு வரும் உபாயங்கள் என்பன போன்ற கருத்துகளுடன், பொழுதுபோக்கு அம்சங்களும், நகைச்சுவைகளும் நிறைந்திருக்கலாம். குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் புதினங்கள் நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

வளர் இளம் பருவத்தினரான 9 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கான புதினங்கள் பொதுவாக 60 முதல் 150 பக்கங்கள் வரை இருக்கலாம். அல்லது 15,000 முதல் 35,000 வார்த்தைகள் கொண்டதாக இருக்கலாம் என்கிறார்கள். அகன்ற சொல்லகராதிகளைக்கொண்ட படைப்புகளாக இருக்கலாம். கதைக்கருவுடன், துணைக்கருவும், நகைச்சுவைகளும், சில தீவிரமான விசயங்களும்கூட கையாளப்படுவதுண்டு.

12 வயதிற்கு மேல் இருக்கும் பருவத்தினருக்கான புதினங்கள் பொதுவாக 120 முதல் 250 பக்கங்களோ அல்லது சுமாராக 30,000 வார்த்தைகளோ கொண்டதாக இருக்கலாம். ஆழ்ந்த கருத்துகளோடு, மர்மங்கள், திகில் நிறைந்த படைப்புகளையும் ஆர்வமுடன் வாசிக்கிறார்கள். தங்கள் புத்தகங்கள் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருப்பதையே குழந்தைகள் விரும்புகின்றனர். நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்ற பேராவலில் உள்ள வளரும் பருவம் என்பதால் அனைத்து வகைப்படைப்புகளும் அவர்களால் வரவேற்கப்படுகின்றன.

ஆரம்ப எழுத்தாளர்களுக்கு ஏற்படும் பொதுவானதொரு ஐயம் என்றால் அது, படைப்புகள் வணிக நோக்கில் இருக்கவேண்டுமா அல்லது இலக்கிய நடையில் அமைந்திருக்க வேண்டுமா என்பதுதான். ஒரு நல்ல கருவை உள்வாங்கிக்கொண்டு சரளமாக எழுதத்தோன்றும் நடையில் எழுதிவிட்டு, தேவையான திருத்தங்களுடன் மீண்டும், மீண்டும் மேம்படுத்தி வெளியிடவேண்டியதுதான். வாசகர்களும், பதிப்பகத்தாருமே அதன் நடையை நிர்ணயம் செய்பவர்கள்.

அடித்தளம் ஆழமாக இருந்தால் கட்டிடம் உறுதியாக நிலைத்து நிற்கும்! தேவையான வடிவத்தில் அதைக் கட்டமைப்பதும் எளிதாகும்!

மேற்கண்ட இந்த சூத்திரம் கட்டிடங்களுக்கு மட்டுமல்லாமல் எந்தவொரு படைப்பிற்கும் இலக்கணமாக இருக்கும்.

இலக்கியப் படைப்புகளின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது ஏதோ ஒன்றினுள் எதையோத் திணிப்பது அன்று. தேர்ந்து எடுத்துக்கொண்ட களத்தை பாதை மாறாமல், கவனம் சிதறாமல், வளைவு நெளிவுகளுடன் சரியாக வடிவமைத்து கட்டமைப்பதேயாகும். தெளிவான, அழகான வடிவமைப்பு மட்டுமே ஒரு நூலுக்கு வாசிப்பனுவத்தை மகிழ்ச்சிகரமாக்குகிறது. இந்த வடிவமைப்பு என்பது வெளித்தோற்றத்தை மட்டும் குறிப்பிடுவதன்று. கதை சொல்லும் விதம், சம்பவங்களின் கோர்வை, அது பயணிக்கும் பாதை போன்றவற்றின் வடிவமைப்பே வாசகர்களை நொடிக்கு நொடி காட்சிக்கு காட்சி சுகமாக பயணிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தவல்லது.

வடிவமைப்பின் அடிப்படைக் கூறுகள் என்றால் அது ஒரு கதையின் முன்னுரை, பொருள், முடிவுரை என்பன. கதைக்கு மட்டுமின்றி ஒவ்வொரு காட்சிக்கும் இதேபோன்று முன்னுரை, பொருள், முடிவுரை என்று உள்ளது. அதை எப்படி, எவ்வளவு சுவையாக ஒரு படைப்பாளர் வழங்குகிறாரோ அதைப் பொறுத்தே அந்த படைப்பின் வெற்றி அமைந்திருக்கிறது. எந்த ஒரு படைப்பும் பயிற்சியின்றி எளிதாக வெற்றி கொடுத்துவிடுவதில்லை என்பதை உணர்தல் அவசியம். முயற்சி திருவினையாக்கும் என்ற சத்தியத்தைக் கருத்தில்கொண்டு, ஒரு படைப்பை எழுதி முடித்தவுடன் திரும்பத் திரும்ப வாசித்து மேம்படுத்திக்கொண்டே வரவேண்டும். முழுமையான திருப்தி ஏற்படும்வரை அந்த முயற்சியிலிருந்து பின்வாங்கக் கூடாது.

நல்லதொரு படைப்பை வடிவமைக்கும் வழிமுறைகள்:

⦁ எளிமையான வடிவமைப்பு வாசிப்பிற்கு இனிமை. ஒரு கதை முன்னுரை, பொருள், முடிவுரை என்ற வரையறைக்குள் வடிவமைக்கப்பட்டாலும், அதன் மையக்கருவை இந்த மூன்று பகுதிகளுக்கும் இயல்பாகப் பொருந்துமாறு வடிவமைப்பது முக்கியம். அதாவது கதையின் முன்னுரையில் கதை நாயகனின் விருப்பமும், அதை அவன் விரும்பும் காரணமும் விளக்கப்படவேண்டும். அடுத்த இடைப்பகுதியில் நாயகனுக்கு ஏற்படும் தடைகளும், தன் இலக்கை அடையும்பொருட்டு அவன் அவைகளை முறியடிக்கும் விதமும் சுவைபட விளக்கப்படவேண்டும். இறுதியாக அச்சூழலில் யதார்த்தத்தை உணர்த்தும் வகையில் முடிச்சுகளை விடுவித்து நம்பும்படியாகவும், தர்க்கரீதியான வழியிலும் அமையவேண்டும். மனதில் தெளிவாக உள்வாங்கிக்கொண்டு கதையை ஆரம்பித்தால் கருவோடு இணைந்து அது மனம், இதயம், ஆன்மா என்ற வகையில் அழகான வடிவில் அமைந்துவிடும்.

⦁ நம் புத்தகம் எதைச்சொல்ல வருகிறது என்ற தெளிவான குறிக்கோள் கொள்ளவேண்டும். பாத்திரங்கள், காட்சியமைப்புகள் பற்றிய சிறு குறிப்புகள் எடுக்கலாம்.

⦁ ஒரு கதைக்களம் அமைத்த பின்பு அதனைத் தலைமையாகக்கொண்டு அடுத்தடுத்த உப களங்கள் பொறிதட்டினாற்போன்று பளிச்சென்று தோன்றலாம். முன்னேற்பாடுகளின்றி சட்டென தோன்றும் சூழல் கதையின் போக்கில் மீப்பெரும் திருப்பம் ஏற்படுத்தலாம். பல நேரங்களில் சில எழுத்தாளர்களுக்கு இது போன்று அமையும் களங்களே வெற்றி வாகை சூட்டலாம். ஆனாலும் தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் தோன்றிய வண்ணம் ஆரம்பித்து மேலும் அதை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்படலாம். இருண்ட குகையினுள் மெல்லிய விளக்கேந்தி வெகு தொலைவில் உள்ளதைத் தேடிக்காண்பதைப் போன்றொரு சிரமம் ஏற்படலாம். இது போன்ற சூழலில் முதலில் கதை நாயகனை அறிமுகம் செய்து தொடர்ந்து ஆரம்பத்திலேயே கதையின் மையப்புள்ளியையும் தொட்டு, பின் பாத்திரங்களைப் பேசவிட்டு, உங்கள் கற்பனைகளை நடமாடச் செய்யலாம். இந்த முறையில் நீங்கள் அதிக கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். பாத்திரங்கள் பேசவேண்டிய வசனங்கள், அவர்களின் இரகசியத் திட்டங்கள் போன்றவற்றில் கூர்ந்த ஞானம் கொள்ளவேண்டியது அவசியம். பரிணாம வளர்ச்சியைப் போன்ற வகையில் ஒரு கதையை உருவாக்க முனையும்போது அது உங்கள் ஆழ்மனச் சக்தியை உசுப்பிவிட்டு ஆகச்சிறந்த படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது.

⦁ கதைக்களம் சவாலாக அமைந்துவிட்டால், கதையை சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம். முதல், இடை, கடைப்பகுதி என்று திட்டமிட்டுக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக நிரப்பலாம். ஒரு வினையை ஏற்படுத்தி அதற்கேற்ற எதிர்வினையை அந்தந்த பாத்திரங்களின் வாயிலாக, அவைகளின் குணாதிசயங்களுக்கேற்ப வசனங்களை அமைத்துக்கொள்ளலாம். புதினம் என்றால் பல வினைகள், எதிர்வினைகள் என்று படிப்படியாக விரிவுபடுத்திக்கொண்டே, ஆரம்பம், இடை, முடிவு என போகலாம்.

⦁ ஒரு நூல் எழுத ஆரம்பிக்கும்முன் செய்ய வேண்டியது, அந்த நூல் குறித்த ஒரு வரை படத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டியது. அதாவது ஒவ்வொரு பகுதியாக பிரித்துக்கொண்டு அது பற்றிய சிறு குறிப்பை உள்வாங்கிக்கொண்டு, ஒரு வரைமுறையுடன் எழுத ஆரம்பிக்கவேண்டும். எழுத ஆரம்பித்தவுடன் பல நேரங்களில் ஆச்சரியப்படும் வகையில் பல புதிய கருத்துகள் உதிப்பதும் உண்டு. திறந்த மனதுடன் புதிய ஆச்சரியங்களை வரவேற்கத் தயாராக இருக்கவேண்டும். கதாப்பாத்திரங்களும் புதிய பாதையில் செல்ல முனையக்கூடும். அந்த மாற்றங்களை ஏற்பதற்கும் அஞ்சத் தேவையில்லை. சில நேரங்களில் அதுவே கதையின் ஒரு முக்கிய திருப்புமுனையாகக்கூட அமைந்துவிடலாம்.

⦁ நாடக வடிவிலான பாரம்பரிய முறை எழுத்துகளையும் தவிர்க்காமல் அதிலும் புதிய பாணியை சற்று கலந்து சுவைபட அமைக்கலாம்.

⦁ புதிய பல நடைகளையும் உருவாக்கி முயற்சிக்கலாம். எழுத்து நடையின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமல் கதையின் சூழலுக்கேற்ப புதிதாகவும் உருவாக்கிக்கொள்ளலாம்.

⦁ இறுதியாக, எந்தவிதமான நடை நம் கதையை சிறந்த முறையில் முடிக்கக்கூடிய நம்பிக்கையை வளர்க்கிறதோ, எந்த முறையில் எழுதுவது நமக்கு இயல்பாக அமைகிறதோ, எந்த விதம் கதையை முன்னுரை, பொருள், முடிவுரை என்ற இலக்கணத்துடன் பொருந்தி வருகிறதோ, எந்த முறை எழுத்தாளரின் இயல்பிற்கு ஒத்து வருகிறதோ அந்த முறையே சிறந்ததொரு முறையாகக் கருதி தொடரவேண்டியது ஆக்கப்பூர்வமானது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *