Blog

  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

     

    பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

    aj

    [52]

    சுல்தான் மரணத் தளம் வெற்றுப் புதைக்கூடம்,

    சொந்தமான பூமியாய் அவர்க் கெழுதப் பட்டது;

    எழுகிறார் சுல்தான்; அவரது கறுப்புத் தொண்டர்

    கொன்று அடுத்தவரைப் புதைக்கத் தயாரிப்பார்.

    [52]
    But that is but a Tent wherein may rest
    A Sultan to the realm of Death addrest;
    The Sultan rises, and the dark Ferrash
    Strikes, and prepares it for another guest.

    [53]

    என் ஆத்மாவை அனுப்பினேன் இறப்புக்குப்

    பின்னே புலம்பெயரும் மாய உலகுக்கு;

    பலநாள் கடந்து திரும்பிய ஆத்மா பகரும்,

    “பார், சொர்க்கம், நரகம் கண்ட என்னை.”

    [53]
    I sent my Soul through the Invisible,
    Some letter of that After-life to spell:
    And after many days my Soul return’d
    And said, ‘Behold, Myself am Heav’n and Hell.’

    [54]

    சொர்க்க ஒளிக்காட்சி நிறைவேற்றும் இச்சை,

    நரக நெருப்பில் எரிந்த ஆத்மாவின் நிழல்,

    இருள்வெளியே வார்த் தெடுத்த நம்முடல்,

    தாமதமாய் வந்தாலும் விரைவில் அழியும்.

    [54].
    Heav’n but the Vision of fulfill’d Desire,
    And Hell the Shadow of a Soul on fire,
    Cast on the Darkness into which Ourselves,
    So late emerg’d from, shall so soon expire.

    +++++++++++++++++++

    Share
  • தாலாட்ட ஆசை

    நௌஷாத் கான்.லி

     

    நான் பெற்றெடுக்காத
    முதல் குழந்தையே
    என் மாமன் பெத்த மாணிக்கமே
    கவலை மறந்து என் தோளில் சாயடி
    நிச்சயம் உனக்கு நல்ல தோழனாக நானிருப்பேன்
    இச்சை இன்றி உன்னை நித்தம் காதல் செய்யும்
    மச்சான் கூப்பிடுறேன்
    அருகே வா ..உயிரே வா …
    என் மடி மீது உறங்கி குழந்தையாய் மாறடி
    உனக்கான தாலாட்டை பாடுறேன் அன்னையாய் !!!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed (2)

    ”மாட்டை இருத்தி மடிதனில்,தாலாட்டுப்
    பாட்டைப் படிக்கின்றார் பாகவதர்: -காட்டில்
    வசிக்கின்ற இதுதான் , ரசிக்கின்ற ராதை:
    நிசிநிறத் தோனை நினை’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170620 -Dialogue with Arjuna- A4wac - high res
    ”பாலமுது கீதையை பார்த்தனுக்(கு) ஊட்டுகிறார்
    காலமுது கொள்ளை குதிரைக்கு -பாலனாய்
    வண்ணம் சிறுத்தாலும், எண்ணம் சிறுக்காத
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்!

    அன்பு நண்பர்களுக்கு

    காவிரிமைந்தனின் கனிவான வணக்கம்!

    மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக முதல் கட்டுரைப் போட்டியாக வல்லமையில் நாங்கள் நடத்திய “என் பார்வையில் கண்ணதாசன்” கட்டுரைகள் 35 வரப்பெற்றதும் அவற்றை பேராசிரியர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள் நடுவராக இருந்து தேர்வு தந்தமையும் நினைவிருக்கும் என்று கருதுகிறேன்.

    unnamed (2)

    அக்கட்டுரைகளை அடுத்து.. அவற்றை இன்னும் வளர்த்து.. இன்னபிற எழுத்தாளர்கள்.. படைப்பாளர்களிடமிருந்து பெற்று நூறு கட்டுரைகள் என்கிற அளவில்.. ஒவ்வொரு கட்டுரைக்கும் காவிரிமைந்தன் எனது பின்னூட்டம் வரையப்பட்டு… இதோ..

    “என் பார்வையில் கண்ணதாசன்” என்கிற நூலாக வெளியிடப்பட இருக்கிறது.. கவியரசு கண்ணதாசன் விழாவில்.. 01.07.2017 (அழைப்பிதழ் இணைப்பில்)…வாய்ப்பு உள்ளவர்கள் நிகழ்ச்சிக்கு நேரில் பங்கேற்று பெருமை சேர்க்க வேண்டுகிறேன்!

    unnamed (1)

    இது தவிர.. நூலைப் பெற விரும்புவோர் தபால் கட்டணம் உட்பட ரூ.750 அனுப்பி வைத்தால்.. உங்கள் இல்லம் தேடி இந்த நூல் அனுப்பப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

    அனுப்ப வேண்டிய முகவரி 01.07.2017 நூல் வெளியீட்டிற்குப் பின் தரப்படும்!

    unnamed (3)

    நூலின் விலை ரூ.950 எனினும் உங்களுக்கான சிறப்பு விலை ரூ.750 (தபால் கட்டணம் உட்பட) என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

    Share
  • பொறியியல் மாணவர்களுக்கு நல்ல செய்தி!

    பவள சங்கரி

    தலையங்கம்

    30 சதவிகிதத்திற்குக் குறைவாக தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் மாணவர்களை தேர்ச்சியடையச் செய்யத் தவறும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று AICTE தலைவர் அறிவித்துள்ளார்.

    பொறியியல் கல்லூரியில் பணியில் அமர்பவர்கள் 4 மாத பயிற்சியில் தேர்ச்சியடைய வேண்டியது அவசியம். இல்லையென்றால் கல்லூரிப் பணியில் அமர முடியாது!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி!
    வந்தேகிச் செல்லும் விளையாடி -உன்தேகம்,
    பொய்யென்(று) உணர்ந்து புகலடை ”யாதவன்கால்”,
    மெய்யுணர் மானுட மாடு’’….கிரேசி மோகன்….

    Share
  • சந்தக் கவி

     

    எழுவதுகளில் சொல்லையும் கொடுத்து சொல்லியும் கொடுத்த
    சந்தக் கவி சு.ரவி உந்தப் புனைந்தது….
    —————————————————————————-
    தானதான தந்ததந்த தானதான தந்ததந்த
    தானதான தந்ததந்த -தனதான

    ”சூரனோடு சண்டைகொண்டு வீரவேலெ றிந்தஅந்த
    வேலனார் அருந்துகின்ற -அமுதூறும்
    பாரமான கொங்கைதங்கு மேனியோட சைந்துயிங்கு
    வேகமாய்ந டந்துவந்து -அருள்வாயே
    கோரமாக வந்துநின்ற மாலிநீலன் சண்டமுண்டன்
    மேனியாவை யும்பிளந்த -திரிசூலி
    ஆலகாலம் உண்டசம்பு மேனிபாதி தங்குகின்ற
    ஆதிகாளி உன்னையென்றும் -மறவேனே

    மாறனோடு தொந்திகொண்ட வேழநாய கன்வளர்ந்த
    மாலனோட யன்வணங்கு -மகமாயி
    வாசமாலை தங்குகின்ற வேதனார்உ டம்பணைந்த
    வாலைநீலி தஞ்சைதங்கு -சிவகாமி

    நேரகால மின்றியுன்னை நாளும்நாடும் அன்பர்நெஞ்சை
    நாடியோடு கின்றமங்கை -மகராணி
    ஆசைநாய கன்பரந்த மேனியோடி டும்குளிர்ந்த
    ஆலவாய மர்ந்தஅன்னை -அபிராமி
    ————————————————————————————————————————

    தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
    தத்ததன தத்ததன -தனதான

    முத்துநகை மொட்டுயிதழ் பொற்சிலையை ஒத்தவுடல்
    முக்கனியும் வெட்கும்மொழி -அமுதூறும்
    கச்சைமுலை சிற்றிடையி ணைத்தவுடை பட்டுவுடல்
    உற்றஅணி பத்துவிரல் -கணையாழி

    கொத்துமலர் உற்றகுழல் அத்தனையும் புத்தியினில்
    வைத்துருகும் பித்தனவன் -உமையோளே
    நித்தம்குற தத்தையவள் முத்தணித னத்தையிறு
    கத்தழுவு வெற்றிகுகன் -குணமாதா

    சித்தமொரு மித்துவுனை பத்தியொடு முத்திபெற
    வைத்திடும்ம னத்தைவுடை -அடியார்கள்
    வெற்றிபல பெற்றுபிற விப்பிணிஅ கற்றிவுயர்
    நற்கதியி லுற்றுபுக -ழடைவாரே

    சத்திதரு மத்திமவு னத்தியிள கச்சணிமு
    லைச்சிகரு ணைச்சிசிவ -சுகுமாரி
    பச்சைநிற முற்றபவ ளக்கொடியி டைச்சிபதி
    சொக்கருடன் கச்சியுறை -அபிராமி….கிரேசி மோகன்….!

    Share
  • எண்சீர் விருத்தங்கள்….

    கிரேசி மோகன்
    —————————————————-

    ஆதித்தன் அம்புலிவிண் மீன்கள் மாயை
    ஆடவரும் பெண்டிரும்அவ் அலிகள் மாயை
    போதிமரத் தடிவாழும் புத்தரும் மாயை
    புகன்றவந்த நிர்வாணப் பூச்சும் மாயை
    வாதிட்டு வென்றசங் கரனும் மாயை
    விளைந்தஷண் மதங்களும் மாயை மாயை
    ஆதியந்த மிலாபிரமன் அடையா தோற்கு
    அகமாயை சகமாயை அனைத்தும் மாயை….(1)

    அதனாலோ இதனாலோ அதுயிங் கில்லை
    அதுவாக அதற்குள் அதுவாய் ஆகி
    அதன்பின்னே அதுஅலுத்து அதுவே றாகி
    அதுவென்றும் இதுவென்றும் அதனால் மாறி
    அதற்கப்பால் இதற்குள்ளே அதுபோய் நின்று
    அதுஆதி இதுஅந்தம் எனப்பேர் கொண்டு
    எதுஇதுவென்(று) எனஅதுவே எங்கும் தேடி
    இதுஅதுவென்(று) அதுஅகமென்(று) அடங்கும் ஆன்மா….(2)
    வைகுண்டம் கைலாஸம் வானம் பூமி
    வார்த்தைகள் தானன்றி வேறே இல்லை
    பொய்கொண்ட வாழ்க்கையைப் புறத்தே தள்ளி
    புலன்களுக்கு அப்பாலே பார்த்துப் பார்த்து
    மெய்கண்டு கொள்ளஅம் மாயை போகும்
    முயல்கொம்பால் மலடிமகன் பேரை நீரில்
    கைகொண்டு எழுதிடலாம் குருடன் என்று
    கையெழுத்து காய்வதற்குள் காலம் மாறும்….(3)

    காட்சிகளும் காண்போனும் காணும் கண்ணும்
    கற்பிதமா சொப்பனமா கானல் நீரா
    ஆட்சியிது ஐம்புலன்கள் ஆட்டம் அன்றோ
    ஆதலினால் ஆன்மாவை ஆத ரித்து
    சாட்சிபரி பாலனமாய் சான்றோர் போக்கில்
    சுகதுக்க பேதமற சார்ந்தோர் உள்ளம்
    சூழ்ச்சிபுரி காலன்தன் சூதை வென்று
    சும்மாயி ருக்கலாமே சுகமாய் என்றும்….(4)….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர் (227)

     செல்வன்

    வீர வாஞ்சி

    ஜூன் 17 வீர வாஞ்சி என அழைக்கப்பட்ட வாஞ்சிநாதனின் 106வது நினைவுதினம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ம் தேதி.2

    1886ஆம் ஆண்டில் ரகுபதி அய்யருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். செங்கோட்டையில் பள்ளிப் பருவத்தினை முடித்தவர். திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெறுகிறார். படிக்கும்போதே சீதாராமய்யரின் மகள் பொன்னம்மாளை மணந்தார். பின்னர் திருவனந்தபுரம் புனலூர் காட்டுப்பகுதியில் வனக் காவலராகவும் பணியாற்றினார். இவருக்கு பிரிட்டிஷ் அரசின்மீது கோபமும் வெறுப்பும் இருந்தது. அதனால் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்டு தன்னையும் சுதந்திரப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, தன் அரசு வேலையை விட்டதாக வரலாறு கூறுகிறது. புதுவையில் வ.வே.சு.ஐயர் வீட்டில் சென்று தங்குவது, மகாகவி பாரதியுடன் உரையாடல், மேலும் பாரதமாதா இயக்கத்துடன் தன்னை இணைத்து போராட்டம் எல்லாம் அவரை ஆங்கிலேயருக்கு எதிராக போராடத் தூண்டுகிறது.

    இந்தச் சூழலில் சுதேசி கப்பல் நிறுவனம் நடத்திய சிதம்பரனாரை கலோனிய ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்து செக்கிழுக்க வைத்து கொடுமைப்படுத்தியது. இதைக் கேள்விப்பட்ட வாஞ்சிநாதன் மற்றும் அவரது பாரதமாதா சங்கத்தினரின் இரத்தம் கொதித்தது. சிதம்பரனாருக்கு ஏற்பட்ட இந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான ஆங்கிலேய அரசுக்கு புத்தி புகட்டும் நோக்கில் இதற்கெல்லாம் காரணமாக இருந்த திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் என்பவரை கொல்வது என்று வாஞ்சி சார்ந்திருந்த பாரதமாதா சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, வாஞ்சிநாதனே இந்தப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானம் ஆனது.

    1911, ஜூன் 17. அன்று காலை 10.45 மணி. திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள மணியாச்சி ரயில்நிலைய சந்திப்பில் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தார். அதுவே சரியான தருணம் என்று எண்ணிய வாஞ்சி, ஆஷ்துரையை தன் துப்பாக்கியால் சுட்டார். கலெக்டரை காப்பாற்ற ரயிலை திருநெல்வேலிக்கு திருப்பியும் பயனின்றி தன் மனைவியின் மடியில் படுத்தபடி உயிரை விட்டார் ஆஷ்.

    ஆஷை சுட்டுக்கொன்றுவிட்டு, காவலர்களிடம் பிடிபட்டால் தான் சார்ந்திருக்கும் பாரதமாதா சங்கம் பற்றிய ரகசியம் தெரிந்துவிடும் என்பதால், அருகே இருந்த கழிப்பிடம் நோக்கி ஓடினார் வாஞ்சி. அதனுள் சென்றவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் இருந்த துண்டுக் கடிதத்தில், ஆஷ்துரையை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்.1

    திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும். பிற போராட்டங்கள் போலன்றி இது ஆங்கில அரசின் அனைத்து மட்டங்களிலும் மரணபீதியை உருவாக்கியது. மிகக் கொடூரமான ஒடுக்கு முறைகளை கடைபிடித்தே பாரதமாதா சங்கத்தையும், வாஞ்சிநாதனின் நண்பர்களையும் ஆங்கிலேயே அரசால் ஒடுக்க முடிந்தது. வீர வாஞ்சிநாதனின் நினைவு மக்கள் மனதில் நிற்கும் வண்ணம், குமரி அனந்தன் அவர்கள் முன் முயற்சியால் வாஞ்சி வீரமரணம் எய்திய மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி – மணியாச்சி சந்திப்பு என்ற பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் கம்பீரமான உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. அவரது நினைவு நாளில் வாஞ்சியின் செயலுக்கும் வீரத்துக்கும் மரியாதை செலுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக வந்து, வாஞ்சியின் சிலைக்கு மாலை அணிவித்து சபதம் எடுக்கிறார்கள்.

    வாஞ்சிநாதனின் வரலாற்றை ரகமி 1980களில் தினமணியில் தொடராக எழுதியது வாஞ்சிநாதனின் வரலாற்றை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க உதவியது.

    வீரத்துக்கும், விவேகத்துக்கும், தேசபக்திக்கும், போராட்ட குணத்திற்கும் உதாரணமான வாஞ்சிநாதன் விடுதலை வேட்கை கொண்ட அனைவருக்கும் முன்னுதாரணம் ஆவார். அவரது 106வது நினைவுதினத்தில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]​

    Share
  • பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலையும் பரிதாபமான மாணவர்களும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    தமிழ் நாட்டில் மொத்தம் இருப்பது 535 பொறியியல் கல்லூரிகள். மருத்துவப் படிப்பிற்கு அடுத்ததாக பொறியியல் வல்லுநர் ஆவதே இன்றைய சமுதாயத்தின் பெருங்கனவாக உள்ள நிலையில் பெரும்பாலான கல்லூரிகள் வணிக நோக்கில் மட்டுமே செயல்படுவது வருத்தமளிக்கக்கூடியது.

    தேர்வுகளில் மொத்த கல்லூரி மாணவர்களில் ஒருவரைக்கூட வெற்றி பெற வைக்க இயலாத பொறியியல் கல்லூரிகளை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது? (தமிழ்நாட்டில் தற்போது இரண்டு கல்லூரிகள் இந்த மோசமான நிலையில் உள்ளன)

    கல்லூரியின் மொத்த மாணவர்களில், ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டும் தேர்வில் தேர்ச்சி பெறச்செய்த சுமாராக 20 கல்லூரிகளும், இரட்டை இலக்கத்தில் 20 மாணவர்கள் எண்ணிக்கைக்குள் (சுமாராக 40 முதல் 50 கல்லூரிகள்) தேர்ச்சி பெறச்செய்த கல்லூரிகளை தகுதி நீக்கமோ அல்லது பல கல்லூரிகளை இணைத்து ஒரே கல்லூரியாக்கி அதனுடைய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் தரத்தையும் சரிசெய்தால் தீர்வுக்கான வழியாக இருக்கலாம்.

    மாணவர்களின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அரசு, கல்லூரிகளின் உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களுடைய தகுதிகளையும் AICTE உதவியோடு தரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய அளவில் உருவாக்கவேண்டியது அவசியம்.

    பள்ளிகளில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறச்செய்யும் கல்வி நிறுவனங்களைப்போல தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 535 கல்லூரிகளில் ஒரு கல்லூரிகூட நூறு சதவிகித மாணவர்களை தேர்ச்சி பெறச்செய்வதில்லை. அதிகபட்சமாக 2 அல்லது மூன்று கல்லூரிகளே 90 சதவிகிதம் தேர்ச்சி பெறச்செய்துள்ளனர். அனைத்திந்திய அளவில் சிறந்த நூறு கல்லூரிகளில் 2 அல்லது 3 கல்லூரிகளே தமிழ்நாட்டில் இடம் பெற்றிருப்பதும், உலக அளவில் பார்க்கும்போது சுமார் 4 அல்லது 5 கல்லூரிகளே இந்தியாவில் உலக அளவு தரத்தோடு இருப்பதும் பொறியியல் கல்வித்துறையில் நம் கல்வித்தரம் உயர்வதற்கு மேம்பட்ட செயல்பாடுகள் அத்தியாவசியம் என்பதை உணர்த்துகின்றன.

    இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு முன்பு அக்கல்லூரிகளின் தரத்தை ஆய்வு செய்த பின்னரே குழந்தைகளைச் சேர்ப்பது நலம்.

    Share
  • அடையாளம் !!

    நௌஷாத் கான் .லி

     

    நரை முதுமையின் அழையா விருந்தாளியா ?

    நரை இறப்பின் முன் எச்சரிக்கையா ?

    மாற்றி யோசித்து பழகி கொள் மனிதா

    நரை அனுபவத்தின் அடையாளம் !!!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (116)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    19397831_1352736194780576_1187322604_n

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.06.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (60)

    நிர்மலா ராகவன்

    பள்ளியில் BULLY

    நலம்-1-1
    நான் மலேசியாவிற்கு வந்தபின் ஒரு புதிய ஆங்கில வார்த்தையைக் கற்றேன்: BULLY.
    அப்படியென்றால், ஒருவரை மிரட்டியோ, அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ அவருக்கு இணக்கமில்லாத காரியத்தைச் செய்யவைப்பது.

    இதனால் பாதிக்கப்பட்டவர் மனம் நோகும். பல சந்தர்ப்பங்களில், உடல் நிலையும் நீண்ட காலம் பாதிக்கப்படலாம். ஏன், மரணத்தில்கூட முடியலாம்.

    உண்மைக் கதை (ஆதாரம்:THE STAR, ஜூன், 2017)

    பதினைந்து வயதாக இருந்தபோது, பினாங்கிலுள்ள பள்ளிக்கூடத்திற்குச் சென்ற மகன், நவீன், அலங்கோலமாக வீடு திரும்பியதைக் கண்டு தாய் திடுக்கிட்டாள்.

    விசாரித்தபோது தெரிந்தது, இவனைச் சில மாணவர்கள், ஆண்பிள்ளைத்தனமாக இல்லை, `கோழை’ என்று கேலி செய்தனர் என்று. வன்முறைக்கு ஆளாக்கினால், அவன் மாறிவிடுவான் என்று நினைத்தவராக அடித்துப் போட்டிருக்கிறார்கள். `ஆசிரியர்களிடம் சொன்னால், இன்னும் அடி வாங்குவாய்!’ என்று மிரட்டியிருக்கிறார்கள்.

    மறுநாளே தாய் பள்ளிக்கூடத்திற்குச் சென்று அந்தப் பையன்களைக் கண்டித்திருக்கிறாள்.

    `இன்னும் இரண்டு வருடங்களில் படிப்பு முடிந்துவிடும்!’ என்று மகனுக்கு ஆறுதல் அளித்தாள்.

    நவீனுக்கு இசைதான் உலகமே. பரம சாது. பதினெட்டு வயதில்

    பள்ளி வாழ்க்கை முடிந்து, தாற்காலிகமாக உத்தியோகமும் தேடிக்கொண்டான்.

    ஆறு மாதங்கள் கழிந்தபின், இவனைக் கொடுமைப்படுத்தியவர்களை மீண்டும் சந்திக்க நேர்ந்தது என்று தாயிடம் தெரிவித்த நவீன், அவர்களிடம் எதுவும் கேட்கவேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறான்.

    அப்போது அவளுக்குத் தெரியவில்லை, முதல் முறை அவள் கண்டித்தபோது, மகனுடைய தலையை சுவற்றில் மோதி அவர்கள் பழி தீர்த்துக்கொண்டார்கள் என்று.

    இதை அமைப்பதைக் கற்க கோலாலம்பூரில் ஒரு கல்லூரியில் அடுத்த வாரம் சேருவதாக இருந்தான் நவீன். ஆனால் அது நடக்கவில்லை.

    அண்மையில், (ஜூன்12) ஏதோ தின்பண்டம் வாங்க கடைக்குச் சென்ற நவீனுடன் அவனுடைய நெருங்கிய நண்பன் ஒருவனும் இருந்தான். அப்போது பள்ளியில் அவர்களுடன் படித்த அந்த ஆறு பேரும் சேர்ந்து இருவரையும் ஹெல்மெட்டால் அடித்திருக்கிறார்கள். நண்பன் தப்பிக்க, நவீனை எரித்து, பாலியல் வதைக்கும் ஆளாக்கிவிட்டார்கள்.

    நண்பன் அடையாளம் காட்ட அவர்கள் பிடிபட்டுவிட்டாலும், brain dead என்று முதலில் அறிவிக்கப்பட்ட நவீன் மூன்று நாட்களுக்குப்பின் இறந்துபோனான். (தனித்து வாழும் அவன் தாய்க்கு ஒரு மகள் இருக்கிறாள்).

    ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

    பிறரைத் தொடர்ச்சியாக வன்முறைக்கு ஆளாக்குபவர்கள் உண்மையில் பயந்தாங்கொள்ளிகள். (இவர்களேகூட வன்முறைக்கு ஆளாகி இருக்கக்கூடும்).

    தம்மைப்போன்ற பிறரைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, கோழை என்று தாம் நினைப்பவரை, அல்லது உடல்வலிமையிலோ சமூக நிலையிலோ தம்மைவிட குன்றியவரை அடையாளம் கண்டுகொண்டு, பலவிதமாக நோகடிப்பார்கள். அப்படிச் செய்யும்போதெல்லாம் தம் வலிமை கூடுவதுபோன்ற பிரமை உண்டாகும். இதுவும் ஒருவித போதைதான்.

    இப்போது கணினிவழி பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் கிளம்பிவிட்டார்கள். இதை CYBER BULLYING என்கிறார்கள். நீண்ட காலம் இப்படிப்பட்டவர்களுக்கு இலக்காகுபவர்கள் எளிதில் நிம்மதி பெறமுடியாது போகும்.

    கதை

    ஒரு பெண்ணைப்பற்றி கண்டபடி இணையத்தில் எழுதிப் பரப்பினாள் கூடப் படிக்கும் பெண்ணொருத்தி. அவை உண்மை இல்லையென்றாலும், பாதிக்கப்பட்டவளுக்கு மனம் நொந்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குப் போய்விட்டாள்.

    வேறு சிலர் எப்படி இந்தக் கொடுமையைத் தவிர்ப்பது என்று புரியாது, தன்னம்பிக்கை இழந்து, மது, போதைப்பொருள், வன்முறை ஆகியவைகளை நாடுகிறார்கள். அல்லது, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொள்கிறார்கள்.

    பள்ளிக்கூடத்தை விட்டுவிட்டாலும், கணினிமூலம் விளையாடுபவர்கள், மின்னஞ்சல் வைத்திருக்கும் இளைஞர்கள் ஆகியோர் பாலியல் வதை (வேண்டாத விவரங்களை அனுப்புவது) உட்பட ஏதோ ஒருவித வதைக்கு ஆளாகிறார்களாம். இதனால், இளைஞர்கள் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று அவர்களுடைய பெற்றோர் கண்காணிப்பது அவசியமாகிறது.

    (வீட்டில் கணினி வசதி இல்லாதவர்கள் கடைக்குப் போய், கண்ட விளையாட்டுகளில் ஈடுபடுவது கூடுதலான அபாயம் விளைவிக்கும்).

    தற்போதைய கணினி யுகத்தில் இது உலகளாவிய பிரச்னை ஆகிவிட்டது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று Stop cyerbullying Day அனுசரிக்கப்படுகிறது.

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -82

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலும் கற்பவர்களும்

    education-1-1-1-1

    காட்சிகள் மூலமாக கற்றுக்கொள்ளக்கூடியவர்கள், செவிப்புலன் சார்ந்து கற்றுக்கொள்ளக்கூடியவர்கள் போல செயல்கள் மூலமாகவும், தசை இயக்கங்கள் மூலமாகவும் கற்றுக்கொள்ளக்கக்கூடியவர்கள் சிலர் உண்டு.

    பொதுவாக இந்த வகையைச் சார்ந்தவர்கள்

    1. மற்றவர்கள் பேசும் பொழுது ஏதாவது வேறு இடத்தில் கவனம் செலுத்தியோ அல்லது வேறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டோ இருப்பார்கள்
    1. ஒரு இடத்தில் உட்கார்ந்து படிப்பது இவர்களுக்கு பிடிக்காத பழக்கம்.
    1. பொதுவாக நடந்து கொண்டோ அல்லது சுவர் மற்றும் மரங்கள் அருகிலோ மேலோ உட்கார்ந்து கொண்டு படிப்பார்கள்.
    1. இவர்களுக்கு குறைவான பரப்புள்ள அறைகளுக்குள் உட்கார்ந்து படிப்பது இசைப்படாத செயல். ஆகவே திறந்த வெளிகள் மற்றும் வீட்டு மாடிகள் ஆகியவற்றில் சென்று படிக்கும் பழக்கம் உண்டு.
    1. படிக்கும் நேரத்தில் பென்சில், கம்பு அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளைக் கைகளில் வைத்துக்கொண்டு சிறிது கவனத்தை அவற்றின் மீது செலுத்திக் கொண்டு இருப்பார்கள்.
    1. படிக்கும் புத்தகங்களை மடித்தல், புத்தகங்களில் நோட்டுக்களில் இருக்கும் பேப்பர்களைக் கிழித்தல் இவர்களுக்கு கை வந்த கலை
    1. படிப்பதற்குக் குறிப்பெடுத்தல், படித்ததை திரும்பிச் சொல்லுதல். படித்ததை நடித்துக் காட்டுதல் போன்ற சில ஈடுபாடுகள் இவர்களின் கற்றலில் வெளிப்படையாகத் தெரியும்.
    1. படிப்பதைக் காட்டிலும் சோதனைச்சாலைகளில் செய்து கற்கும் கலைகள், நுணுக்கங்கள் இவர்களுக்குப் பிடித்தமானவை.
    1. பொதுவாகத் திறன்களை வளர்த்துக்கொள்வதிலும் திறனாய்வுகள் செய்வதிலும் திறன் சார்ந்த கற்றலில் ஈடுபடுவதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம்.
    1. நாடகம், விளையாட்டுக்கள் போன்றவற்றின் மூலமாக தங்கள் அறிவினை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் மிக்கவர்கள்.

    மேற்கூறிய உதாரணங்கள் மூலமாக நமக்குத் புலப்படுவது கற்றல் என்பது ஒருதலைச் செயலல்ல. அது ஆசிரியர்களிடமிருந்து மட்டும் மாணவர்களுக்கு வருவதில்லை. அது ஒவ்வொரு மாணவனுக்கும் தனி மனிதருக்கும் மாறுபட்டிருக்கும் தனிப்பட்ட செயல். ஆகவே பள்ளிகளிலும் மற்றும் கற்றல் நடக்கும் எல்லா இடங்களிலும் ‘ஒருதலைப் பட்சமாக ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மட்டும் சொல்லிக்கொண்டு போகும் பொழுது கற்றல் சிறப்பாக நடைபெறுவதில்லை.

    கற்றலைப் பற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் மூளை-நரம்பியல் மூலமாக கற்றல் ஏற்படும் விதங்கள், அதன் நிகழ்வுகள் ஆகிவயவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள ஒரு சிறந்த அறிவியல் நிபுணர் ஜான் மதீனா (John Medina) என்பவர் கூறுகின்றார்: “கற்பித்தல் என்ற ஒரு நிகழ்வுக்கு அதிக பட்ச சான்றுகள் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு மூளையும் கற்றலிலிலேயே ஈடுபடுகின்றது.”

    ஆகவே ஒரு சிறந்த வகுப்பறையின் நோக்கம் கற்றலுக்கான சிறப்பான சூழ்நிலைகளை உருவாக்குவதே ஆகும். ஒரு கருத்தை எத்தனை விதங்கள், முறைகள், பரிமாணங்கள் மூலமாக ஆசிரியர்கள் முன் வைக்கின்றார்களோ அத்தனையும் தனிப்பட்ட மாணவரின் கற்றலுக்கு உறுதுணையாக இருக்கும். (Learning cannot be caused; Learning can only be facilitated)

    கற்றலைப் பற்றிய ஆராய்ச்சிகள் பல விந்தையான சிந்தனையைத்  தூண்டக்கூடிய பல்லாண்டுகளாக நாம் ஏற்றுக்கொண்ட கருத்துக்களின் வேர்களை அசைக்கும் வகையில் அமைந்துள்ளன.  எவ்வாறு ஒரு யானையை அறிந்து விளக்குவதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்ட பத்து விழியற்றவர்கள், தங்கள் அனுபவங்களை வைத்து ‘இதுவே யானை’ என்று சொல்கின்றார்களோ அதே போன்று கற்றலின் பல பரிமாணங்களை பல பேர்கள் பல விதமாக விளக்குகின்றார்கள் என்ற கருத்து வலுவாகப் பரவி வருகின்றது. ஓரளவில் அதுவும் உண்மையே.

    கற்றலைப் பற்றிய தன் கருத்துக்களை ஆணித்தரமாக விளக்கிய அரவிந்தர் தன்னுடைய மூன்று கருத்துக்களை இவ்வாறு முன்வைக்கின்றார்:

    1. கற்பித்தலின் முதல் முக்கிய கொள்கை என்னவென்றால் ” நாம் எதையும் கற்பிக்கமுடியாது என்பதே ” (The first True principle of Teaching is nothing can be taught)
    1. கற்பித்தலின் இரண்டாவது கொள்கை என்னவென்றால் “மூளையின் வளர்ச்சிக்கு அது தன்னைத் தானே சந்திக்கவேண்டும் (ஆலோசிக்கவேண்டும்z) ” (The second principle is that the mind has to be consulted for its own growth)
    1. கற்றலின் மூன்றாவது கொள்கை “கற்றல் எப்பொழுதும் அருகிலிருந்து தொலைவை நோக்கிச் செல்கின்றது.”. (The third principle of teaching is that learning always happens from near to far) 

    ஆகவே மாணவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், திறன்கள், ஆர்வங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் முன்னிறுத்தியும் அவர்களுக்கான கற்றலின் தேவைகளுக்கு உறுதுணையையாக இருத்தலே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்காக ஆற்றும் சிறந்த பணியாக இருக்க வேண்டும்.

     (தொடரும் )

    Share