கிரேசி மோகன்
—————————————————-

ஆதித்தன் அம்புலிவிண் மீன்கள் மாயை
ஆடவரும் பெண்டிரும்அவ் அலிகள் மாயை
போதிமரத் தடிவாழும் புத்தரும் மாயை
புகன்றவந்த நிர்வாணப் பூச்சும் மாயை
வாதிட்டு வென்றசங் கரனும் மாயை
விளைந்தஷண் மதங்களும் மாயை மாயை
ஆதியந்த மிலாபிரமன் அடையா தோற்கு
அகமாயை சகமாயை அனைத்தும் மாயை….(1)

அதனாலோ இதனாலோ அதுயிங் கில்லை
அதுவாக அதற்குள் அதுவாய் ஆகி
அதன்பின்னே அதுஅலுத்து அதுவே றாகி
அதுவென்றும் இதுவென்றும் அதனால் மாறி
அதற்கப்பால் இதற்குள்ளே அதுபோய் நின்று
அதுஆதி இதுஅந்தம் எனப்பேர் கொண்டு
எதுஇதுவென்(று) எனஅதுவே எங்கும் தேடி
இதுஅதுவென்(று) அதுஅகமென்(று) அடங்கும் ஆன்மா….(2)
வைகுண்டம் கைலாஸம் வானம் பூமி
வார்த்தைகள் தானன்றி வேறே இல்லை
பொய்கொண்ட வாழ்க்கையைப் புறத்தே தள்ளி
புலன்களுக்கு அப்பாலே பார்த்துப் பார்த்து
மெய்கண்டு கொள்ளஅம் மாயை போகும்
முயல்கொம்பால் மலடிமகன் பேரை நீரில்
கைகொண்டு எழுதிடலாம் குருடன் என்று
கையெழுத்து காய்வதற்குள் காலம் மாறும்….(3)

காட்சிகளும் காண்போனும் காணும் கண்ணும்
கற்பிதமா சொப்பனமா கானல் நீரா
ஆட்சியிது ஐம்புலன்கள் ஆட்டம் அன்றோ
ஆதலினால் ஆன்மாவை ஆத ரித்து
சாட்சிபரி பாலனமாய் சான்றோர் போக்கில்
சுகதுக்க பேதமற சார்ந்தோர் உள்ளம்
சூழ்ச்சிபுரி காலன்தன் சூதை வென்று
சும்மாயி ருக்கலாமே சுகமாய் என்றும்….(4)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *