பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலையும் பரிதாபமான மாணவர்களும்!
பவள சங்கரி
தலையங்கம்
தமிழ் நாட்டில் மொத்தம் இருப்பது 535 பொறியியல் கல்லூரிகள். மருத்துவப் படிப்பிற்கு அடுத்ததாக பொறியியல் வல்லுநர் ஆவதே இன்றைய சமுதாயத்தின் பெருங்கனவாக உள்ள நிலையில் பெரும்பாலான கல்லூரிகள் வணிக நோக்கில் மட்டுமே செயல்படுவது வருத்தமளிக்கக்கூடியது.
தேர்வுகளில் மொத்த கல்லூரி மாணவர்களில் ஒருவரைக்கூட வெற்றி பெற வைக்க இயலாத பொறியியல் கல்லூரிகளை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது? (தமிழ்நாட்டில் தற்போது இரண்டு கல்லூரிகள் இந்த மோசமான நிலையில் உள்ளன)
கல்லூரியின் மொத்த மாணவர்களில், ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டும் தேர்வில் தேர்ச்சி பெறச்செய்த சுமாராக 20 கல்லூரிகளும், இரட்டை இலக்கத்தில் 20 மாணவர்கள் எண்ணிக்கைக்குள் (சுமாராக 40 முதல் 50 கல்லூரிகள்) தேர்ச்சி பெறச்செய்த கல்லூரிகளை தகுதி நீக்கமோ அல்லது பல கல்லூரிகளை இணைத்து ஒரே கல்லூரியாக்கி அதனுடைய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் தரத்தையும் சரிசெய்தால் தீர்வுக்கான வழியாக இருக்கலாம்.
மாணவர்களின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அரசு, கல்லூரிகளின் உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களுடைய தகுதிகளையும் AICTE உதவியோடு தரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய அளவில் உருவாக்கவேண்டியது அவசியம்.
பள்ளிகளில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறச்செய்யும் கல்வி நிறுவனங்களைப்போல தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 535 கல்லூரிகளில் ஒரு கல்லூரிகூட நூறு சதவிகித மாணவர்களை தேர்ச்சி பெறச்செய்வதில்லை. அதிகபட்சமாக 2 அல்லது மூன்று கல்லூரிகளே 90 சதவிகிதம் தேர்ச்சி பெறச்செய்துள்ளனர். அனைத்திந்திய அளவில் சிறந்த நூறு கல்லூரிகளில் 2 அல்லது 3 கல்லூரிகளே தமிழ்நாட்டில் இடம் பெற்றிருப்பதும், உலக அளவில் பார்க்கும்போது சுமார் 4 அல்லது 5 கல்லூரிகளே இந்தியாவில் உலக அளவு தரத்தோடு இருப்பதும் பொறியியல் கல்வித்துறையில் நம் கல்வித்தரம் உயர்வதற்கு மேம்பட்ட செயல்பாடுகள் அத்தியாவசியம் என்பதை உணர்த்துகின்றன.
இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு முன்பு அக்கல்லூரிகளின் தரத்தை ஆய்வு செய்த பின்னரே குழந்தைகளைச் சேர்ப்பது நலம்.
அன்புமிக்க பவளா,
இந்தக் கட்டுரையை வல்லமை குழுவுக்கும் அனுப்புங்கள்.
நன்றி.
சி. ஜெயபாரதன்