க. பாலசுப்பிரமணியன்

கற்றலும் கற்பவர்களும்

education-1-1-1-1

காட்சிகள் மூலமாக கற்றுக்கொள்ளக்கூடியவர்கள், செவிப்புலன் சார்ந்து கற்றுக்கொள்ளக்கூடியவர்கள் போல செயல்கள் மூலமாகவும், தசை இயக்கங்கள் மூலமாகவும் கற்றுக்கொள்ளக்கக்கூடியவர்கள் சிலர் உண்டு.

பொதுவாக இந்த வகையைச் சார்ந்தவர்கள்

  1. மற்றவர்கள் பேசும் பொழுது ஏதாவது வேறு இடத்தில் கவனம் செலுத்தியோ அல்லது வேறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டோ இருப்பார்கள்
  1. ஒரு இடத்தில் உட்கார்ந்து படிப்பது இவர்களுக்கு பிடிக்காத பழக்கம்.
  1. பொதுவாக நடந்து கொண்டோ அல்லது சுவர் மற்றும் மரங்கள் அருகிலோ மேலோ உட்கார்ந்து கொண்டு படிப்பார்கள்.
  1. இவர்களுக்கு குறைவான பரப்புள்ள அறைகளுக்குள் உட்கார்ந்து படிப்பது இசைப்படாத செயல். ஆகவே திறந்த வெளிகள் மற்றும் வீட்டு மாடிகள் ஆகியவற்றில் சென்று படிக்கும் பழக்கம் உண்டு.
  1. படிக்கும் நேரத்தில் பென்சில், கம்பு அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளைக் கைகளில் வைத்துக்கொண்டு சிறிது கவனத்தை அவற்றின் மீது செலுத்திக் கொண்டு இருப்பார்கள்.
  1. படிக்கும் புத்தகங்களை மடித்தல், புத்தகங்களில் நோட்டுக்களில் இருக்கும் பேப்பர்களைக் கிழித்தல் இவர்களுக்கு கை வந்த கலை
  1. படிப்பதற்குக் குறிப்பெடுத்தல், படித்ததை திரும்பிச் சொல்லுதல். படித்ததை நடித்துக் காட்டுதல் போன்ற சில ஈடுபாடுகள் இவர்களின் கற்றலில் வெளிப்படையாகத் தெரியும்.
  1. படிப்பதைக் காட்டிலும் சோதனைச்சாலைகளில் செய்து கற்கும் கலைகள், நுணுக்கங்கள் இவர்களுக்குப் பிடித்தமானவை.
  1. பொதுவாகத் திறன்களை வளர்த்துக்கொள்வதிலும் திறனாய்வுகள் செய்வதிலும் திறன் சார்ந்த கற்றலில் ஈடுபடுவதிலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம்.
  1. நாடகம், விளையாட்டுக்கள் போன்றவற்றின் மூலமாக தங்கள் அறிவினை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் மிக்கவர்கள்.

மேற்கூறிய உதாரணங்கள் மூலமாக நமக்குத் புலப்படுவது கற்றல் என்பது ஒருதலைச் செயலல்ல. அது ஆசிரியர்களிடமிருந்து மட்டும் மாணவர்களுக்கு வருவதில்லை. அது ஒவ்வொரு மாணவனுக்கும் தனி மனிதருக்கும் மாறுபட்டிருக்கும் தனிப்பட்ட செயல். ஆகவே பள்ளிகளிலும் மற்றும் கற்றல் நடக்கும் எல்லா இடங்களிலும் ‘ஒருதலைப் பட்சமாக ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மட்டும் சொல்லிக்கொண்டு போகும் பொழுது கற்றல் சிறப்பாக நடைபெறுவதில்லை.

கற்றலைப் பற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் மூளை-நரம்பியல் மூலமாக கற்றல் ஏற்படும் விதங்கள், அதன் நிகழ்வுகள் ஆகிவயவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள ஒரு சிறந்த அறிவியல் நிபுணர் ஜான் மதீனா (John Medina) என்பவர் கூறுகின்றார்: “கற்பித்தல் என்ற ஒரு நிகழ்வுக்கு அதிக பட்ச சான்றுகள் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு மூளையும் கற்றலிலிலேயே ஈடுபடுகின்றது.”

ஆகவே ஒரு சிறந்த வகுப்பறையின் நோக்கம் கற்றலுக்கான சிறப்பான சூழ்நிலைகளை உருவாக்குவதே ஆகும். ஒரு கருத்தை எத்தனை விதங்கள், முறைகள், பரிமாணங்கள் மூலமாக ஆசிரியர்கள் முன் வைக்கின்றார்களோ அத்தனையும் தனிப்பட்ட மாணவரின் கற்றலுக்கு உறுதுணையாக இருக்கும். (Learning cannot be caused; Learning can only be facilitated)

கற்றலைப் பற்றிய ஆராய்ச்சிகள் பல விந்தையான சிந்தனையைத்  தூண்டக்கூடிய பல்லாண்டுகளாக நாம் ஏற்றுக்கொண்ட கருத்துக்களின் வேர்களை அசைக்கும் வகையில் அமைந்துள்ளன.  எவ்வாறு ஒரு யானையை அறிந்து விளக்குவதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்ட பத்து விழியற்றவர்கள், தங்கள் அனுபவங்களை வைத்து ‘இதுவே யானை’ என்று சொல்கின்றார்களோ அதே போன்று கற்றலின் பல பரிமாணங்களை பல பேர்கள் பல விதமாக விளக்குகின்றார்கள் என்ற கருத்து வலுவாகப் பரவி வருகின்றது. ஓரளவில் அதுவும் உண்மையே.

கற்றலைப் பற்றிய தன் கருத்துக்களை ஆணித்தரமாக விளக்கிய அரவிந்தர் தன்னுடைய மூன்று கருத்துக்களை இவ்வாறு முன்வைக்கின்றார்:

  1. கற்பித்தலின் முதல் முக்கிய கொள்கை என்னவென்றால் ” நாம் எதையும் கற்பிக்கமுடியாது என்பதே ” (The first True principle of Teaching is nothing can be taught)
  1. கற்பித்தலின் இரண்டாவது கொள்கை என்னவென்றால் “மூளையின் வளர்ச்சிக்கு அது தன்னைத் தானே சந்திக்கவேண்டும் (ஆலோசிக்கவேண்டும்z) ” (The second principle is that the mind has to be consulted for its own growth)
  1. கற்றலின் மூன்றாவது கொள்கை “கற்றல் எப்பொழுதும் அருகிலிருந்து தொலைவை நோக்கிச் செல்கின்றது.”. (The third principle of teaching is that learning always happens from near to far) 

ஆகவே மாணவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், திறன்கள், ஆர்வங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் முன்னிறுத்தியும் அவர்களுக்கான கற்றலின் தேவைகளுக்கு உறுதுணையையாக இருத்தலே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்காக ஆற்றும் சிறந்த பணியாக இருக்க வேண்டும்.

 (தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *