Blog

  • சித்திரை வந்தாள்

    விப்ரநாராயணன் 

    news-yr2_CI
    பிறந்தது புத்தாண்டு
    இறந்தது நம் ஆணவமும் பேராசையும்
    திறந்தது நம் உள்ளக் கதவு
    பறந்தது பகைமை யாவும்

    புயல் வந்தது புலம் பெயர்ந்தனர் மக்கள்
    வயல்கள் மறைந்தன வாழ்வும் அழிந்தது
    அயலார் எல்லாம் அண்மையில் வந்தனர்
    தயக்கமின்றி தன்னுயிர் ஈந்து வாழ்வளித்தனர்

    அரசியலில் மாற்றம் கண்டோம்
    ஆட்சியில் ஏமாற்றம் கண்டோம்
    அறவியலில் வளர்ச்சி கண்டோம்
    ஆசிரமங்கள் வளரக் கண்டோம்
    அறநெறி மறையக் கண்டோம்
    அறிவியல் விண்ணைத் தொட்டது
    அறிவோ மண்ணில் புதைந்தது
    மதங்கள் யாவும் ஒன்றே என்றனர்
    மனிதர்கள் யாவரும் ஒன்றே என்றனர்
    ஆனால் சண்டையும் பூசலும் தினமும்தான்
    எங்கும் தன்னலம் எதிலும் தன்னலம்
    வாங்கும் பொருளிலும் கலப்படம்
    ஆண்டுகள் பல சென்றன
    ஆனந்தம் தேடி அலைகின்றனர் மக்கள்
    ஆண்டவன் வருவேன் என்றான்
    அதர்மத்தை அழிப்பேன் என்றான்
    அதர்மத்தின் நாட்டியம்தான் எங்கும்
    இராமன் வந்தார் கிருஷ்ணர் வந்தார்
    இராமானுஜரும் சங்கரரும் வந்தார்
    இராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் வந்தார்
    காந்தி வந்தார் பாரதி வந்தார்
    காணவில்லை மக்கள் மனதில் அமைதியை
    காணவில்லை சத்தியமும் அன்பும்
    காணவில்லை நாணயமும் நேர்மையும்

    நம்புவோம் கண்ணன் வருவாரென்று
    நம்புவோம் புதுயுகம் பிறக்க வருவாரென்று
    நம்புவோம் நல்லவர்கள் வருவாரென்று
    நம்புவோம் நல்லது செய்வாரென்று

    பாரதநாட்டின் மாண்புகள் அழியாது காக்கவும்
    பாரினில் அமைதியும் அன்பும் வேரூன்றவும்
    பார்த்தனின் அருள்மொழிகள் பரவச் செய்யவும்
    பார்த்தசாரதியை வணங்குவோம் நம்பிக்கையுடன்

    Share
  • ஏனிந்த முடிவு?

     நிர்மலா ராகவன்

    தொலைபேசியைக் கையில் எடுத்தவுடனேயே அம்மா கூறினாள், முகமன்கூட இல்லாமல்: “திவா போயிட்டான்”.

    அக்குரலிலிருந்த தீர்மானம், இனி அவன் எங்கேயும் போகமுடியாது என்று ஒலிப்பதுபோலிருந்தது.

    “அண்ணன் குடும்பத்தோட சண்டையோ, பூசலோ, இந்தச் சமயத்தில விட்டுக்குடுக்கலாமா? நான் போய் பார்த்தேன். உடம்பெல்லாம் நீலம் பாரிச்சு..!”

    அதற்குமேல் கேட்க முடியவில்லை சுதாவால். இயற்கையான சாவு நேர்ந்தால் உடலில் உடனே நிறமாற்றம் உண்டாகுமா?

    `இது தற்கொலைதான்!’ என்று அவளது அந்தராத்மா கூவியது. ஏனெனில், இது திவாகரின் முதல் தற்கொலை முயற்சி அல்லவே!

    அம்மா தன்பாட்டில் பேசினாள்: “திவாவோட சாவுக்கு ஆளுக்கு ஒரு காரணம் சொல்றாங்க. விஷக்காய்ச்சல்னு சிலபேர். ரெண்டு தங்கைகளுக்கு கடன் வாங்கிக் கல்யாணம் செஞ்சு குடுக்கறதுக்காக வாங்கின கடனை அடைக்க முடியாம்போன அதிர்ச்சியில மாரடைப்புங்கிறாங்க மத்தவங்க”.

    ஏதாவது பேசியாக வேண்டுமே என்று சுதா வாயைத் திறந்தாள். “எப்படிப் போனா என்னம்மா? போயிட்டான். அவ்வளவுதான். கல்யாணமாகி ஒரு வருஷம்தானே ஆச்சு! பாவம், அவ!” தான் பார்த்தே இராத பெண்ணுக்காகப் பரிதாபப்பட்டாள்.

    “நீ வேற! பிணம் இந்தப் பக்கம் போகுது, அவன் பெண்டாட்டி அந்தப் பக்கம் அவங்கப்பா வீட்டுக்குப் போயிட்டா. சம்பிரதாயத்துக்குக்கூட அழவே இல்ல! என்னத்த சொல்றது! நல்லாவே இல்லே, போ!”

    அப்படியானால், அந்த தம்பதியருக்குள் எத்தகைய உறவு இருந்திருக்கும்? இத்தனைக்கும், ஓராண்டு காலம் ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள்! யோசிக்க ஆரம்பித்தாள் சுதா.

    அவளுடைய பெற்றோரின் வீடு மாடியும் கீழுமாக விசாலமாக இருந்தது. அங்கு அவனுக்கென்றே தனி அறையை விட்டிருந்தார்கள். சுவற்றை ஒட்டிய புத்தகங்களுடன் வாசகசாலையை ஒத்திருக்கும். அவனுடைய தாய் வீட்டில் ஒரே ஹாலில் சகோதரிகளுடன் படுப்பதைவிட இங்கு எவ்வளவோ சுகமாக இருந்தது. ராஜி அத்தைக்கு எந்த உதவி வேண்டுமானாலும் அவனைத்தான் அழைப்பாள்.

    “எதுக்கு அத்தை என்னை அவ்வளவு அவசரமா வரச்சொன்னீங்க?”

    “நம்ப வீட்டுக்கு ஒங்க மாமாவோட சிநேகிதர் வந்திருக்காருடா, திவா. எனக்கு முக்கியமான வேலை இருக்கு. ஒனக்குப் பள்ளிக்கூடம் லீவுதானே! அதான்! சுதாவை எப்படித் தனியா விட்டுட்டுப் போறதுன்னு யோசிச்சேன்”.

    திவாகர் சிரித்தான். “சுதாவுக்கு நான் காவலா? நல்ல வேடிக்கைதான்! அவகிட்ட வாலாட்டறவங்களை சும்மா விட்டுடுவாளா? ஒதைக்க மாட்டா?”

    என்னதான் மகள் தற்காப்புக் கலையில் கறுப்புப்பட்டி ஜெயித்திருந்தாலும், பதினெட்டு வயதுப் பெண்ணை யாரோ ஒரு ஆணுடன் தனியாக விடலாமா? தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

    “அட, இதுக்குப் போய் கெஞ்சணுமா? என்ன அத்தை நீங்க!”

    “நீ ஏதாவது புஸ்தகத்தை எடுத்துப் படிச்சுக்கிட்டிரு, திவா. சுதா கீழே படிச்சுக்கிட்டிருக்கா. பாத்துக்க. சீக்கிரமே அந்த அங்கிள்  வெளியில் கிளம்பிடுவார்,” என்று ரகசியக்குரலில் கூறிவிட்டு ராஜி அத்தை பறந்தாள்.

    மாடியில் தொலைகாட்சிமுன் அமர்ந்திருந்த மனிதர் அவனைக் கவனித்ததாகவே தெரியவில்லை. அடுத்து என்ன செய்வதென்று புரியாது, அவன் தன் அறைக்குப் போய் கட்டிலில் படுத்தான்.

    “திவா! கதவைச் சாத்திக்கிட்டு என்ன பண்ணிக்கிட்டிருக்கே?” இரண்டு நிமிடங்களுக்குமேல், கதவை உடைக்காத குறையாகத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்தாள் அவள். “எனக்கு அங்க ஒரு புஸ்தகம் வேணும். திறக்கப்போறியா, இல்லையா?”

    சிறிது தாமதமாக அவன் கதவைத் திறந்தபோது, கட்டிலில் படுத்திருந்த விருந்தாளி சற்று புரண்டு படுத்ததைக் கவனித்தாள்.

    உள்ளை போக யத்தனித்தவளிடம், “நீ இரு,” என்றவன் கதவை வெளியில் சாத்தினான். “தாங்க்ஸ்!” என்றான் முணுமுணுப்பாக.

    அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் சுதா. அவன் முகம் அழுவதுபோலிருந்தது. தலை மிகக் குனிந்திருந்தது.

    “அத்தைகிட்ட சொல்லிடாதே!” என்றான் கெஞ்சலாக. அவனுக்கிருந்த படபடப்பில், தவறு யார்மேல் என்று ஆராயத் தோன்றவில்லை.

    எவ்வளவு பெரிய இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றி இருக்கிறாள்! இவள் தனக்கு எந்த சந்தர்ப்பத்திலும் பக்கபலமாக இருப்பாள் என்ற நம்பிக்கை வந்தது.

    முதலில் படிப்பு, பின்பு சுதாவின் கல்யாணப்பேச்சு எடுக்கப்படும்போது தன் எண்ணத்தை அத்தையிடம் தெரிவித்தால் மறுக்கவா போகிறாள் என்று பொறுத்துப்போக எண்ணினான்.

    ஆனால் திவாகரால் நீண்ட காலம் பொறுமையாக இருக்க முடியவில்லை.

    ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள் ராஜி.

    “இந்த திவா என்ன நினைச்சுக்கிட்டிருக்கான்? எனக்கு காதல் கடிதம் எழுதியிருக்கான்மா. அதுவும் காலேஜூக்கு!”

    “எங்கே, கொண்டா!”

    “அது.. எனக்கு வந்த கோபத்திலே ஒடனே கிழிச்சுப் போட்டுட்டேன். பிரின்சிபல் கைக்குப் போயிருந்தா..?”

    “ரொம்ப நல்லவன்மாதிரி நடிச்சானே, ராஸ்கல்! இவனையெல்லாம் வீட்டிலேயே சேர்த்திருக்கக் கூடாது!”

    அந்த சிறிய சமாசாரம் பூதாகாரமாக உருவெடுக்க, அண்ணன் தங்கை உறவு அறுபட்டது. ஆனால், திவாகர் மனம் தளரவில்லை.

    “சுதா! நீ எனக்குப் பதிலே தரலியே?” கட்டைக்குரல் கீச்சுக்குரலோடு கலந்து ஒலித்தது. தன்னையுமறியாமல், அவ்வப்போது கீச்சுக்குரலில் பேசுவான். `வேடிக்கை’ என்றெண்ணி பிறர் சிரிக்க, அப்போதெல்லாம் அவமானத்தால் அவன் முகம் சிவந்துவிடும்.

    அவனை ஏறெடுத்துப் பார்த்த சுதா திகைத்தாள்.  முன்பு பார்த்துப் பழகிய திவாவா இவன்!

    உலகிலேயே அழகில் தன்னை மிஞ்சுபவர்கள் கிடையாது என்ற கர்வம் பதின்ம வயதினருக்கு எழுவது இயற்கை. திவாகர் தன் உருவத்தில் செலுத்திய கவனத்தால் பிற ஆண்பிள்ளைகளின் கேலிக்கு இலக்காகி இருந்தானே! ஈரத்தலை சொட்டச் சொட்ட அவன் அரைமணி நேரம் தலை சீவிக் கொண்டது மறக்கக்கூடியதா!

    இப்படி கலைந்த தலையும், குழிவிழுந்த கன்னங்களுமாக, ஏதோ பஞ்சத்தில் அடிபட்டவன்போல் காட்சி அளிக்கும்படி அப்படி என்ன நேர்ந்துவிட்டது?

    அவளுக்கு முன்பு எப்போதோ நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.

    `ஐயே! எங்க வீட்டில பொம்பளை ராஜ்ஜியம்! யாருக்கு அங்க இருக்கப் பிடிக்கும்!’ என்றான் திவா. அவனுக்கு மூன்று தங்கைகள், ஒரு அக்காள்.

    அப்போது சிரித்தபடி வந்தான் அண்ணன் சிவா. `அதான் நீயும் பொம்பளைமாதிரி ஆகிட்டியா, திவாகரி?’

    `அண்ணா! அசிங்கமாப் பேசாதே!”

    அவனுக்கு அன்று பரிந்ததைத் தவறாக எடுத்துக்கொண்டுவிட்டானோ! இப்படிச் சுற்றிச் சுற்றி வருகிறானே! தான் எப்போது, எங்கு போவோம் என்று கவனித்து, வாசகசாலைக்கும் வந்துவிட்டான்!

    “சுதா! நீ எனக்குப் பதிலே தரலியே?” மீண்டும் கேட்டான் திவாகர்.

    அண்ணனுடனும் அவனுடனும் சிறு வயதிலிருந்தே விளையாடி இருக்கிறாள். படித்த புத்தகங்களைப்பற்றி விவாதித்து இருக்கிறாள். ஒரே வயது மூத்தவனான அவனிடம் பாடங்களில் சந்தேகம் கேட்டிருக்கிறாள். இப்போதோ அவனைப் பார்த்தாலே அருவருப்பாக இருந்தது.

    “ஃபார் ஹெவன்ஸ் ஸேக்! (For heaven’s sake)”  என்று அடிக்குரலில் கர்ஜித்தாள். “என்னைத் தொந்தரவு செய்யாதே!”

    திவாகர் எந்த நிமிடமும் அழுதுவிடுவான் போலிருந்தது. தளர்நடையுடன் அங்கிருந்து சென்றான்.

    மறுநாள் வாசகசாலை நிர்வாகி, “ஒங்க சொந்தக்காரராமே! இதை ஒங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்!” என்று ஒரு சிறு கவரைக் கொடுத்தபோது, தன் முகபாவம் மாறாமலிருக்கப் பெரும்பாடு பட்டாள் சுதா.

    அதைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு விரைந்தாள்.

    அதில் ஒரே வரி: என் தற்கொலை முயற்சி என் நண்பர்களால் தடுக்கப்பட்டது.

    அந்த எழுத்துக்களின்மேல் ஒரு மெல்லிய கோடு. எழுதிவிட்டு, பிறர் கண்ணில் படாமலிருக்க அடிக்கிறானாம்!

    ராஜியும் சுதாவும் சேர்ந்து சிரித்தார்கள். “பைத்தியம் பிடிச்சிருக்கு இவனுக்கு!” என்றாள் ராஜி. “இனிமே நீ தனியா எங்கேயும் போகவேண்டாம், சுதா! பாக்கறவங்க லைப்ரரிக்காரன்தான் ஒனக்கு லவ் வெட்டர் எழுதி, எழுதிக் குடுக்கிறான்னு நினைக்கப்போறாங்க!”என்றவள், `சீக்கிரமே இவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைச்சுடணும். இல்லாட்டி இது எங்கே போய் முடியுமோ!’  என்று முடிவெடுத்தாள்.

    `பட்டப்படிப்பு முடிந்ததுமே கல்யாணமா!’ என்று சுதா அடம் பிடிக்கவில்லை. இனி திவாவின் தொல்லை இருக்காது என்ற நிம்மதி பிறந்தது.

    “திவாகருக்கு கல்யாண இன்விடேஷன் அனுப்ப வேண்டாம்னு பாக்கறேன்!”

    தாயின் யோசனையை ஏற்கும்விதமாக சுதா தலையசைத்தாள்.

    அடுத்த ஆண்டே ஒரு பெரிய காகித உறை — அழகிய பூ வேலைப்பாட்டுடன், சரிகை மின்ன, பூமாலையணிந்த ஆணும் பெண்ணும் கைகோர்த்த நிலையில் இருந்த படத்துடன் — தபாலில் வந்தது. பிரிக்காமலேயே அது யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று புரிந்து போயிற்று சுதாவுக்கு.

    வேறு யார்! `உன்னைவிட்டால் எனக்கு வேறு பெண்ணே கிடைக்கமாட்டாளோ?’ என்று திவாதான் சவால் விட்டிருக்கிறான்!

    திவாகரை, `திவாகரி,’ `பொம்பளை’ என்று பிற பையன்கள் பலவாறாக கேலி செய்ததில் ஏதோ உண்மை இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அன்று அந்த மனிதர் அவ்வளவு துணிச்சலுடன் அவனிடம் முறைகேடாக நடக்கத் துணிந்திருப்பாரா?

    தானே ஒத்துக்கொள்ள விரும்பாத இயல்பை அவன் உணர்ந்து அதிர்ந்த தருணமோ அது?

    அதை ஏற்கத் துணிவில்லாது, `ஒரு பெண்ணை மணந்தால் எல்லாம் சரியாகிவிடும்!’ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும். அந்த பயத்தில்தான் தன்னை அப்படித் துரத்தியிருக்கிறான்!

    அப்படியானால், கல்யாணமாகி ஒரு வருடத்துக்குள் ஏனிந்த முடிவை எடுத்தான்?

    சுதாவின் கற்பனை கட்டுக்கடங்காமல் ஓடியது.

    திவாகரால் இன்னொரு பெண்ணுடன் இணைந்து, ஓர் ஆண்மகனாக வாழ முடியாமல் போயிருக்கும். எந்தப் பெண்ணுக்கும் உற்ற கணவனாக அவனால் இருக்க முடியாது என்ற உண்மை தந்த அதிர்ச்சியைத் தாங்காதுதான்..!

    “பாவம், திவா!” என்றாள் சுதா. உரக்கவே.

    Share
  • எங்கும் மங்கலம் பொங்குக!

    பவள சங்கரி

     

    புத்தாண்டு

    ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
    ஆதியை அமரர் தொழுதேத்தும்
    சீலந்தான் பெரிதும் உடையானைச்
    சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
    ஏலவார் குழலாள் உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
    காலகாலனைக் கம்பன் எம்மானைக்
    காணக் கண் அடியேன் பெற்றவாறே.
    என்று சுந்தரமூர்த்தி நாயனாரும்,
    தூயானைத் தூயவா யம்மறை யோதிய
    வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
    தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
    மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.
    என்று திருஞானசம்பந்தப்பெருமானும்,
    மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து
    ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்து, அருள்
    நோக்குவான்; நமை நோய்வினை வாராமே
    காக்கும் நாயகன்—கச்சி ஏகம்பனே.
     அப்பர் சுவாமிகள்

     

    காசு அணிமிங்கள், உலக்கைஎல்லாம் காம்பு அணிமிங்கள் கறைஉரலை
    நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தி,
    தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி
    பாச வினையைப் பறித்து நின்று, பாடி பொற்கண்ணம் இடித்தும் நாமே!
     மாணிக்கவாசகப் பெருமான்

    Share
  • கண்ணதாசன்..

    நாகினி
    (சிந்தியல் வெண்பா)

     

    கண்ணெனத் தத்துவங்கள் காலமெல்லாம் நீண்டிருக்கப்
    பண்ணென ஏட்டில் படங்களில்.. கண்ணிமை
    வண்ணமானார் கண்ணதாசன் வாழ்ந்து!

    காவியம் ஆக்கிய கண்ணதாசன் என்றென்றும்
    ஓவியம் என்றே ஒயிலாகப் .. பாவிகளின்
    நாவிலும் பாட்டாவார் நம்பு!

    பாவங்கள் நீக்கியே பண்படுத்தும் தத்துவம்
    காவலாக எந்நாளும் கண்ணதாசன்.. பாவலம்
    ஏவலாகி வந்திடும் ஏற்பு!

    ஆவலுடன் பாடிட ஆனந்த கீதமென
    நாவரசு கண்ணதாசன் நற்றமிழ் .. நாவலும்
    பாவலரால் ஏற்றிடும் பாட்டு!

    … நாகினி

    Share
  • தேய்மானங்கள்

    க. பாலசுப்பிரமணியன்

    அந்தத் தங்கச் சங்கிலியை பொற்கொல்லர் தன்னிடமிருந்த கல்லில் தேய்த்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

    “கொஞ்சம் மெதுவாக.. …நீங்க தேய்க்கிற வேகத்திலே தங்கமெல்லாம் அப்படியே உதிர்ந்து விழுந்திடும் போல இருக்கு” என்று சிரித்துக்கொண்டே பைரவி அவரிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்

    “சரிபாக்கறப்போ கொஞ்சம் தேய்மானம் இருக்கத்தாம்மா இருக்கும்” என்று அவரும் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.  “நிறைய அழுக்கு ஏறியிருக்கு,,”

    “பின்னே என்ன. மூன்று தலைமுறையாக இவங்க வீட்டிலே ஒவ்வொருவர் கழுத்திலேயும் தொங்கிக்கொண்டிருக்கேனே.. ” என்று அந்த தங்கச் சங்கிலி தனது மனதிற்குள் முணுமுணுத்தது.

    “இது எங்க பாட்டி போட்டுக்கொண்டிருந்தது. அப்பொறம் எங்க அம்மா போட்டுண்டா. பின்னாலே என் கல்யாணத்தின் போது அம்மா என் கழுத்திலே போட்டுவிட்டா…” பைரவி பக்கத்திலுள்ளவர்கள் காதிலே விழும்படி பெருமையாகச் சொன்னாள்.

    “இது ரொம்ப ராசியான சங்கிலி ” பைரவி முகத்தில் ஒரு பெருமிதம் வெளிப்பட்டது.

    “ஆமா.. ஆமா .. அதனால் தான் ஊரிலே கல்யாணம் எங்கே நடந்தாலும் பைரவியோட சங்கிலி என்று என்னை கழுத்தில் போட்டு அல்லாட விட்டவர்கள் எத்தனை பேர்…” அந்தச் சங்கிலி அலுத்துக்கொண்டது .

    “இது நாலரைப் பவுன் இருக்கும்மா.. ” பொற்கொல்லர் தொடர்ந்தார்.

    “அய்யயோ… இது மொத்தம் அஞ்சு பவுனாச்சே.. ” பைரவி அலறினாள்.

    “அம்மா.. எத்தனை வருஷமா உபயோகிச்சிருக்கீங்க.. தேய்மானம் இருக்காதா… அதுக்கும் வயசாகறதில்லே.. “

    “அதுக்காக.. அதன் எடை இவ்வளவா குறையும்…” இது பைரவி.

    ‘அதான் சொன்னேனேம்மா.. நாளாக நாளாகத் தேய்மானம் அதிகமாகும் ” அவர் சமாதானப் படுத்தினார்

    “எவ்வளவு நாள் வெயில், மழை, வியர்வை என்று எதிலெல்லாம் குளிச்சிருக்கேன். உழைச்சு உழைச்சு உடம்பு குறுகிப்போச்சு.. ” என்று அந்தச் சங்கிலியும் அலுத்துக்கொண்டது.

    “என்னவோ.. இதை போட்டுட்டு புதிதாகத் தான் வாங்கணும் .” பைரவியின் ஆசைக்கு அடுத்த பரிமாணம்.

    “கொஞ்சங்கூட நன்றி இல்லை பாருங்க.. எவ்வளவு உழைச்சிருக்கேன்.. எத்தனை முறை இவளுக்காக நான்  சேட் கடையிலே துணிப்பைக்குள்ள வாயைமூடிக்கொண்டு படுத்துக்கொண்டிருக்கேன். இவள் மானத்தை காப்பாத்தியிருக்கேன்.  பையனை படிக்க வைக்கப் பணம்.. …அவ புருஷனோட தங்கச்சி கல்யாணத்துக்குப் பணம்.. வீடுகட்ட பணம்…. அவளோட பணத்துக்காக என்னை அடகு வெச்சு வாழ்க்கை நடத்தினவ.. இன்னிக்கு கையிலே காசு வந்துட்டதுன்னு, நன்றி கெட்டு என்னைத் தூக்கி எறியறாளே. ” அந்தத் தங்க சங்கிலியின் மனக்குறை யாருடைய காதிலும் விழவில்லை. ..

    “அப்போ உறுக்கிடட்டுங்களா” பொற்கொல்லர் கேட்டார்.

    “உருக்கணுமா என்ன?..” பைரவி.

    “ஆமாங்க.. அப்போதான் அழுக்கெல்லாம் போனவிட்டு என்ன சரியான எடை இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும் “

    தன்னுடைய உருவத்தின் கடைசி காலத்தில்  அந்தத் தங்கச் சங்கிலி தன்னுடைய பழைய நாட்களை நினைத்து பெருமை பட்டுக்கொண்டிருந்தது..

    “உருக்க எவ்வளவு நேரம் ஆகும்? எனக்கு கொஞ்சம் வெளியிலே போகணும்.. ” பைரவி தன்னுடைய அவசரத்தை வெளிப்படுத்த்தினாள்

    ” ஒரு மணி நேரம் ஆகும்.. மத்த வேலையெல்லாம் இருக்குல்ல.. நீங்க எங்கேயாவது வெளியிலே போயிட்டு வருதுன்னா வாங்க.. “

    பைரவியின் மனதில் உலவும் சந்தேகத்தை உணர்ந்துகொண்ட சங்கிலி சொன்னது.. “ஏன் பயப்படறே.. இவர் ஒன்னும் செய்ய மாட்டார்.. நீ எத்தனை தடவை நம்ப முடியாதவங்களுக்கெல்லாம் என்னை தாரை வார்த்திருக்க.. ..தைரியமாய் போ.. ” காதில் ஏதோ அடைப்பது போலிருந்ததால் பைரவி தன் காதுகளை தேய்த்துக் கொண்டாள்

    “ஏம்மா.. ரொம்ப தூரம் போணுமா…?” பொற்கொல்லர் கேட்டார்.

    ” இல்ல.. இல்ல.. இங்கே பக்கத்திலேதான்.. அந்த ரெசிடென்சி  வரைக்கும்.. “

    பொற்கொல்லர் புரியாமல் கண்களை உயர்த்திப் பார்த்தார்.

    “அதாங்க.. அந்த முதியோர் இல்லம் வரைக்கும். அங்கேதான் எங்க மாமியார் இருக்காங்க. மாசத்துக்கு ரெண்டுதடவை நானும் அவரும் போய் பார்த்திட்டு வருவோம்.. அதான்.. இவ்வளவு தூரம் வந்துட்டோமே.. அது பக்கத்திலே தானே இருக்கு .. இங்கே பாருங்க.. அந்த சன்னலிலிருந்து பார்த்தா தெரியும்.. “

    அந்த தங்கச் சங்கிலி சிரித்தது..

    அந்த மூதாட்டியின் தேய்மானத்தைவிட தன்னுடைய தேய்மானம் மிகக்குறைவுதான் என்று உணர்ந்தது.

    “என்ன. வரீங்களா .. அம்மாவைப் பார்க்கப்போலாமா? ” என்று சற்றுத் தள்ளி நாற்காலியில் அமர்ந்து அமைதியாக பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டிருந்த தன் கணவனிடம் அவள் கேட்டாள்

    அவன் தலையசைத்தான்.

    அந்தத் தங்கச் சங்கிலி உருகுவதற்குத் தன்னை தயார் செய்துகொண்டது.

    Share
  • யாருக்கும் வெட்கமில்லை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நம்மை ஆண்ட பிரித்தானியர்கள் நமக்குச் சுதந்திரம் கொடுக்க நினைத்து அதற்கான திட்டங்களை 1920களில் ஆரம்பித்தபோது அரசுப் பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிராமணர்களே அதிக அளவில் இருந்தனர். அரசியலில் ஒரே கட்சியான காங்கிரஸில் பிராமணர்களின் ஆதிக்கமே இருந்தது.  பிராமணரல்லாத சில நிலச்சுவான்தார்களும், பெரும் வணிகர்களும், படித்து முன்னுக்கு வந்த சில பிரமுகர்களும் பிராமணரல்லாதவர்களுக்கும் கல்வியிலும், அரசு வேலையிலும் அரசியலிலும் பங்கு வேண்டும் என்று போராடத் தொடங்கினர்.  அவர்களுடய ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து விலகிவந்து அந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார் பெரியார்.  சமூகச் சமத்துவமே அவருடைய குறிக்கோள்.  இதை அடைய இந்து மதம் தடையாக உள்ளது என்று கருதியதால் அதை எதிர்த்தார்.  இந்து மதத்தின் தலைமை ஸ்தானத்தில் இருந்த பிராமணர்களையும் எதிர்த்தார்.  சமூகச் சீர்திருத்தம் பிரித்தானிய ஆட்சியின் உதவியோடுதான் செய்ய முடியும் என்று நம்பினார்.  சுதந்திர இந்தியாவின் ஆட்சி பிராமணர்களின் கைக்குப் போகும்; சமூகச் சமத்துவம் ஏற்பட முடியாது என்று நினத்ததால், பிரித்தானியர் நம்மை விட்டுச் சென்ற நாளைத் துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.  பிராமணர் ஆதிக்கத்தை, அதை நியாயப்படுத்தும் இந்து மதத்தின் ஆதிக்கத்தை, ஒழிக்க வேண்டும் என்று அவர் ஆரம்பித்த கட்சிதான் திராவிடர் கழகம்; ஆரபித்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். .

    திராவிடர்களின் உரிமைகளைப் பாதுக்காப்பதற்காக ஆரம்பித்த திராவிடர் கழகம் அரசியலில் நுழைந்தால் பதவியில் இருப்பதற்காகக் கொள்கையில் சமரசம் செய்துகொள்வது தவிர்க்க முடியாதது என்பதால் திராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடுவதைப் பெரியார் விரும்பவில்லை.  அவருடன் இருந்த அவருடைய சிஷ்யர்களுக்கோ அரசியலில் நுழைந்து அதிகாரம் பெற்றுச் சமூக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று ஆசை.  அதைக் கூறாமல் வயதான காலத்தில் பெரியார் திருமணம் செய்துகொண்டதைக் காரணம் காட்டித் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினர்.  தேர்தலிலும் பங்கேற்கத் தொடங்கினர்.  அரசியல் பதவி ஊழலுக்கு வழி வகுக்கும என்று பெரியார் நினைத்தாரா என்று தெரியவில்லை.

    தேர்தலில் பங்கேற்கத் தொடங்கிய புதிதில் சட்ட மன்றத்தில் நிறைய இடங்கள் கிடைக்கவில்லையென்றாலும், 1967-இல் நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று ஆட்சியும் அமைத்தனர்.  திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தலைவராக விளங்கிய அண்ணாதுரை உயிரோடு இருந்திருந்தால், அவருடைய கட்சியில் பின்வந்த ஊழல்கள் நடந்திருக்காதோ என்னவோ?  காந்திஜியோடு இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பணியாற்றிய காங்கிரஸ்காரர்களே ஊழல் புரிந்தார்கள் என்றால் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

    கருணாநிதியைக் கணக்குக் காட்டும்படி தட்டிக் கேட்ட எம்.ஜி.ஆர். புதிய கட்சியைத் தொடங்கி ஊழல் இல்லாத நல்ல ஆட்சியைத் தரப் போவதாகக் கூறினார்.  அவர் காலத்தில் ஊழல்கள் பெருகினவேயொழியக் குறையவில்லை.  அதன் பிறகு பதவிக்கு வந்த அ.தி.மு.க. தலைவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  அவர்கள் அடித்த கொள்ளைகள் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமண்றம் அளித்த தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.  ஊழல்கள் பெருகிக்கொண்டே போய் அண்மையில் காலமான அம்மையாரின் காலத்தில் உச்சத்தைத் தொட்டது ஊர் அறிந்த ஒன்று.  எதற்காக அரசியலில் நுழைவது தவறு என்று பெரியார் நினைத்தாரோ அந்த அரசியலில் நுழைந்து ஊழலை வளர்த்தது தி.மு.க.வில் தொடங்கி அ.தி.மு.கவில் பூர்த்தி அடைந்தது.  சொத்துக் குவித்த ஊழலுக்காகக் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்ட தலைவருக்குத் தேவாலயம் கட்ட வேண்டும் என்னும் அளவுக்குப் போயிருக்கிறது.

    இப்போது அந்த அம்மையாரின் ‘வாரிசுகள்’ அவரையே மிஞ்சிவிடுவார்கள் போல் தெரிகிறது.  மொத்த அ.தி.மு.க. கூட்டமும் –அதன் பல பிரிவுகளும்- எப்படியும் ஆர்.கே.நகர் தொகுதியைக் கைப்பற்றிவிடத் தீர்மானித்து வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் பணமழை பொழிந்திருக்கிறார்கள்.  இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஊழலற்ற மோதி என்ற பிம்பத்தை ஏற்படுத்தி,  பி.ஜே.பி. தமிழ்நாட்டு அரசியலில் நுழையத் திட்டமிடுகிறது.  பணப்புழக்கம் அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி தேர்வாணையம் ஆர்.கே.நகர். தேர்தலை இப்போதைக்கு ரத்து செய்திருக்கிறது.  இந்த முடிவில் பி.ஜே.பி.யின் பங்கு இருக்கலாம்.  இந்துத்துவக் கொள்கையை மூச்சாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.தான் இன்று பி.ஜே.பி.யை ஆட்டுவிக்கிறது.  இவர்களின் கைக்குள்தான் மொத்த இந்தியாவும் போய்க்கொண்டிருக்கிறது.  வட இந்தியாவில் பல மாநிலங்களைப் பிடித்துவிட்ட இவர்கள் இப்போது தென்னிந்தியா மீது தங்கள் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள்.  அதிலும் தமிழ்நாட்டைக் கைப்பற்றுவது இவர்களின் கனவுகளில் ஒன்று.

    இவர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்றிவிட்டால் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் – அவர்கள் அனுதாபிகள்தான் – பதவியில் அமருவார்கள்.  இவர்களில் பிராமணரல்லாதவர் இருந்தாலும் பிராமணர்களுடய ஆதிக்கம்தான் இருக்கும்.  இந்த ஆதிக்கத்தை ஒழித்து கீழ் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று பெரியார் பாடுபட்டார்.  அவருடைய அந்தக் கனவை அவருடைய கொள்கை வழியில் வந்ததாகக் கூறிக்கொள்ளும் திராவிடக் கட்சிகளே இன்று அழிப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.  அவர்களுடைய ஊழல் இதற்குத் துணைபோகிறது.

    சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியாரின் வழியில் வந்ததாகக் கூறிக்கொள்ளும் அவருடைய வாரிசுகளில் பலருக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.  வட இந்தியர்களின் ஆதிக்கமே வேண்டாம் என்று தனித் திராவிட நாடு கேட்டவர்களின் வாரிசுகள்  வடக்கத்தியர்களுக்கு, பிராமணர்களுக்குத் அடிபணியத் தயாராகிவிட்டனர்;. தமிழ்நாட்டையே தாரைவார்க்கத் தயாராகிவிட்டனர்.

    தமிழர்களின் சுய மரியாதையை அடகுவைத்துவிட்டதற்கு இது ஒரு உதாரணம்.  உத்தரப் பிரதேசத்தில் நோய்டா ஊரில் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் படிக்க வந்திருக்கும் மாணவர்கள் தாக்கப்பட்ட செய்தியைப் பற்றி பி.ஜே.பி.யைச் சேர்ந்த தருண் விஜய்  விளக்குகையில், ‘ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நல்லுறவு நிலவுகிறது.  அப்படி இருக்கும்போது நாம் ஏன் அங்கிருந்து வந்திருக்கும் மாணவர்களைத் தாக்கும் செயல்களில் ஈடுபடப் போகிறோம்?  இந்தியா இனத்துவேஷ நாடு அல்ல.  கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களோடு நாங்கள் சுமுக உறவு கொண்டாடவில்லையா?’ என்று கேட்டிருக்கிறார்.  எவ்வளவு திமிர்!  இவர் தான் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன திருவள்ளுவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவதாக நடித்தவர்.  அப்படிப் பேசிவிட்டு வாய் தவறிப் பேசியதாக வேறு கூறி மன்னிப்புக் கோருகிறார்.  எவ்வளவு தாழ்வாக தென்னிந்தியர்களை மதிப்பிடுகிறார்.  இதைக் கேட்டு திராவிடக் கட்சியினர் பொங்கி எழவில்லை.

    இவரைப் போன்ற பி.ஜே.பி.காரர்களிடமல்லவா தமிழ்நாடு தன்னை ஒப்படைக்கப் போகிறது.  இதுதானா பெரியார் கண்ட கனவு.  இதற்காகவா அவர் தன்னுரிமைப் போராட்டத்தைத் தோற்றுவித்தார்?

    Share
  • நித்யாபரணங்காதை

    -இன்னம்பூரான்

     

    nithya

    உங்களுக்கெல்லாம் தெரியாமா, தெரியாதா என்று எனக்குத் தெரியாது. கோட்டையூரில், நித்யா, நித்யான்னு ஒரு பொண்ணு இருக்கா. நித்தம் நித்தம் சமத்தா இருப்பதால் தான் அந்த பெயர் வைத்தோம் என்று அப்பங்காரன் சொன்னாங்க. அம்மாக்காரி அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அவ நிமிஷத்துக்கு, நிமிஷம் சமத்து என்றாள்; ஒரு புன்னகை உதிர்த்தாள். எனக்குப் புரிஞ்சு போச்சு, ரெண்டு பேரும் பொய் சொல்றாங்கன்னு. அப்புச்சிக்கும் ஆச்சிக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு; தாத்தாவுக்கு அவளொரு ப்ளாட்டினம் குஞ்சு. பின்ன என்னங்க? உள்ளதை உள்ளப்படி சொல்லுவோம்.

    ஆதவன் உதிப்பதற்கு முன்னாலே, காஃபி எடுத்து வருவாள்; கூடவே காஃபி டிக்காக்ஷனையும் எடுத்து வந்து, அதிலிருந்து சிக்கனமாக இரண்டு சொட்டுப்போட்டு, நுறைவரவரைக்கும் ஆற்றிப்படைத்து, இது உங்க ‘இன்னம்பூரான் காஃபி’ என்று புன்னகைத்துக்கொடுப்பாள். நாம டவராவைக் கீழே வைக்கறத்துக்குள்ளே, காணாமல் போயிருப்பா. ‘என்னது இது? என்று கேக்கறதுக்கு முன்னாலே, அந்த குட்டி ஓடிப்போயிருப்பாள். சிரிப்பு மட்டும் தான் கேக்குமையா, சிவனாரே. அப்றம் அந்தி மங்கினப்பிறகு தான் நித்யா தரிசனம். நீ ஏன் மீட்டிங்குக்கு வரலை? அறுசுவை உண்டிக்கு வரல்லை? என்று கேட்டால், ஆஃபீஸ்லெ ஏழு மீட்டிங்க், ஐயா. ஆக மொத்தம் ஒம்பது கிளிப்பிள்ளைகள் மாதிரி, அந்தகாலத்து ஹெச்.எம்.வி.கிராமஃபோன் மாதிரி, அத்தையும் இத்தையும் திருப்பி,திருப்பி சொல்லுதாக. நானும் நோட்ஸ் எடுத்தேன் என்று சால்ஜாப்பு கட்றேன். என்னத்தை சொல்ல, போங்கள்! மின்தமிழ் வாசாலகர்களை நினைத்துக்கொண்டேன்.

    மின் தமிழிலே, ‘எக்ஸ்ட்ரா’ வாத்தியார் ‘வினை தீர்க்கிறேன்’ பேர்வழியாகிய சொனா வீனா அவர்கள். [அவுக வீட்லே திண்டியா சாப்ட்டு விட்டு, இப்டி பேசினால் தப்பு என்ன?] வினைதீர்த்தான் தம்பதி வினை தீர்ப்பதுமில்லாமல், அதை மூட்டை கட்டி மச்சுலெ போட்றுவாக. He gave us good company throughout.

    ‘என்ன குட்டி என்று சொல்கிறீர்கள்? கல்கியும், பிரியமான தாத்தா பாட்டி தான் அப்படி கூப்புடுவாக. அதெல்லாம் மின்தமிழுக்கு ஒவ்வாமை’ என்று சவுண்டு கொடுத்தால், நாலு கிலுகிலுப்பை சத்தம் வரும். ‘ஐயா! குட்டி = பொடியன் + . அடுத்தபடி நந்திகேஸ்வரர் சொல்லுவார், ‘அவ எங்க மின்னாள் கொடுத்த வரம்.’. பெத்தெடுத்த நாகேஸ்வரி, ‘எங்க அப்பா வச்ச பேருங்க.’ என்று சொல்லுவதற்கு முன், மின்தமிழ் சேசாத்திரி போல பேச்சை மாத்திடுவாக. அவருக்கு, இதான் சாக்கு என்று ஆறுதல் அளிக்கிறோம். நம்ம மின்தமிழிலே, எல்லா மொழிக்கும் தடாலடியா ‘வாதம், பேதம்,  வாதபேதம்,மீதம் எல்லாம் பீடுநடை போடும் போதும்,  வைஷ்ணவ சான்றோன் ந.சுப்பு ரெட்டியார் அவர்கள், வேறொரு இடம், பொருள், ஏவல் பொருட்டு கூறியதெல்லாம் வரும். ஆனா ஒண்ணு. சுந்தர்பிச்சை கிட்டேயிருந்து ஒரு தனி மடல் வந்ததுங்க. ‘இன்னிக்கு நாங்க போட்ட படம் பாத்தீங்களா?’ என்று கேட்டார். நான் மையமாக, ‘நல்லாயிருந்தது, சுந்தர்.’ என்றேன். உன்னை உய்விக்கும் பொருட்டு ‘பச்சை’, ‘நீலம்’ கலர்கள நீக்கிட்டோம் என்றார். அவருக்கு நன்றி கூறியது சன்னமாத்தான் கேட்டது. ஏன்னா? ஆயிரமாயிரம் குல்லாக்கள் களையப்பட்டு எறிந்து விட்டது, ஒரு குல்லா இமயமாக எழுந்து நின்றது. எழுப்பிய சத்தம் அப்டிங்க. டில்லிலெ ‘வாய்வாழி எலிகளையெல்லாம்’ ஓட்ற சத்தம், வானை பிளந்தது. பாத்தீங்களா?  அவர் ஆரை சொல்றீக? பச்சை, நீலம்லாம் பெருமாள் கலர் ஆச்சே என்று கேட்டார். ‘எல்லாம் உங்க பிராந்தியம்தான் தம்பி. கணினிப் பெண்மணிகள் எல்லாம் அங்கிட்டுதானே என்ற நான், கூகில் மேப் காட்டவில்லை. கூகிள்லெ தேடிக்கப்பா என்றேன். மட்டுறுத்திடுவாங்களோ என்ற பீதி. ஒண்ணு சொல்ல வந்தா எழுத்து, அதுவாகவே, எங்கெங்கும் ஓடுகிறது! இது நிற்க.

    நம்ம  நித்யாவுக்கு விமரிசையாக திருமணம் நடந்தது. ‘சந்தோஷமா’ ஒரு பொடியன். அடுத்தது பொண்ணா பொறந்திருக்கணும். புவனேஸ்வரி என்று நாமம் சூடியிருக்கலாம். பொடியனா போச்சா. சர்வேஸ்வரன் ஆனான். நல்ல பசங்க. மாப்பிள்ளை விவரமான ஆளு. இப்பவே பசங்களுக்கு பேலியோ டயட், செல்வபெருந்தகையே. குமுதம் வாங்கி படிப்பாங்கா. இளந்தாரியாக ஆனபிறகு பசங்க படத்தையெல்லாம் பாக்கட்டும். அது வரை வம்பை விலைக்கு வாங்கவேண்டாம் என்று காசிஶ்ரீ அவர்கள் கோந்து வாங்கி அதையெல்லாம் ஒட்டி வருகிறார் (நானும், அவரும் பாத்தப்பறம் தான்).

    அதிசயமாக ஒன்று நடந்தது. ‘அறிவியலகு’ க்கு அப்பாற்பட்டது.  ஒரு சிசு ஜனனம், அவங்க வீட்டில். சர்வேஸ்வரினின் அருள் என்று எல்லாரும் வியந்து சந்தோஷப்பட்டார்கள். கின்னஸ் ரிக்கார்ட்லெ போட்லாங்க. பிறக்கச்சயே அவனுக்கு 83 வயசு. ஆனா, எஜமானியம்மா எங்க அப்பா வந்த மாதிரிதான் இருக்கு என்கிறார்கள்.

    வழக்கம் போல், இறுதி உரை, இன்னம்பூரானது. என் வாழ்க்கையிலேயே மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கொடுத்த நிகழ்வு எது என்று சேர்மன் மாணிக்கவாசகர் பள்ளி மாணவர்கள் கேட்டால், இதைத் தான் சொல்லுவேன்.

    ஒரு குறிப்பு: ‘வரவு பத்தணா! செலவு எட்டணா!

    ***

    சித்திரத்துக்கு நன்றி:
    http://kungumam.co.in/Ap-image/2015/20150516/18.jpg

     

     

    Share
  • தமிழ் புத்தாண்டே வருக

     

    101

    தமிழ் ஆண்டுகளின் எண்ணிக்கை அறுபதே

    ஹேமவிளம்பி ஆண்டும் இன்று பிறந்ததே

    விரும்பியதை பெற தமிழ்ப்புத்தாண்டு மலரட்டும்

    தீயவை அழிந்து நல்லவை பெருகட்டும் !

    நாட்டிலும், மாநிலத்திலும், புதிய திட்டம் உண்டாகட்டும்

    அரசியல் தலைவர்கள் நன்மனங்கொண்டு நடக்கட்டும்

    மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடட்டும்

    தமிழ்ப் புத்தாண்டால் தமிழகம் நன்மை அடையட்டும் !

    ஆறுகள் இணைந்து தண்ணீர் பிரச்சனை தீரட்டும்

    மாநிலங்கள் கைகோர்த்து மக்களுக்கு நன்மை செய்யட்டும்

    நாட்டுக்கு நாடு சமாதானம் தானமாய் கிடைக்கட்டும்

    வேற்றுமையில் ஒற்றுமை நம்மிடையே ஓங்கட்டும் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி- 8

     –மீனாட்சி பாலகணேஷ்

    ‘மோகத்தைக் கொன்று விடு -அல்லால் என்றன் மூச்சை நிறுத்தி விடு
    தேகத்தைச் சாய்த்து விடு -அல்லால் அதில் சிந்தனை மாய்த்து விடு–‘

    **************************

    காரை விட்டிறங்கி மாடியை அண்ணாந்து பார்த்தாள் ஷீலா. அவளுடைய செல்வச் செழிப்பைப் பறைசாற்றுவது போல பளிங்குக்கல் வாசலும் வராந்தாவும், அகன்ற பால்கனிகளும், அடர்ந்த தோட்டமுமாகக் கம்பீரமாக நின்றது அந்தப் பங்களா. ஆனால் இன்றென்னவோ வெறுமை வழிவதை உணர்ந்தாள் ஷீலா. காரணமும் தெரியும்.

    அருண் வெளியேறி இருப்பான் என்பது அவள் எதிர்பார்த்தது தான். ஆனால் ஏற்றுக் கொள்ள இயலாமல் மனம் தவித்தது.

    மொட்டையாக நான்காக மடிக்கப்பட்ட ஒரு கடிதம். ‘ஷீலா’ என்ற பெயரெழுதப்பட்டு டெலிஃபோனின் அருகே இருந்தது. “ஷீலா, வாழ்க்கைப் பயணத்தில் நீயும் நானும் சந்தித்து சில காலம் இன்பமாக இருந்தோம். இனிமை கசப்பாக மாறும் முன்பே பிரிவது தான் சரி- நான் என் எதிர்காலத்தை நோக்கி ஓடும் திசை வேறாக இருக்கிறது. உலகம் உருண்டையானது. என்றேனும் எங்காவது சந்திப்போம். எல்லாவற்றுக்கும் உன் அன்புக்கும் நன்றி. அருண் சர்மா.”

    கையில் பிடித்திருந்த காகிதம் கையுடனும் உதடுகளுடனும்சேர்ந்து சில நொடிகள் படபடவெனத் துடித்தது.

    தொண்டைக் குழியில் அடைத்துக் கொண்ட பந்தை அழுந்த ஒருமுறை விழுங்கித் தன் தவிப்பையும் விழுங்கப் பார்த்தாள். தலை திடீரென்று ‘விண் விண்’ணென்று தெறித்தது. வயிற்றைப் புரட்டியது. அவ்வப்போது அழையாத விருந்தாளியாய் வரும் ‘மைக்ரேன்’ இது என உறைத்தது. கைப்பையைத் திறந்து இந்தத் தலைவலிக்காகப் பிரத்தியேகமாக டாக்டர் பரிந்துரைத்திருந்த மாத்திரையை எடுத்து விழுங்கினாள். மெல்ல மாடியேறி அருண் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த அறையை நோக்கி நடந்தாள். கதவை எப்போதும் போல- அதாவது அருண் சித்திரம் தீட்டிக் கொண்டிருக்கும் சமயங்களில் தான் உள்ளே புக நேர்ந்தால் நாசுக்காக மெல்லத் தட்டி விட்டு நுழைவது போலத் தட்டி விட்டுத் தள்ளித் திறந்தாள்…. காலியாக இருந்த அறை ‘ஹோ’வென அவளைப் பார்த்து அரக்கத்தனமாக இளித்தது.

    சுவரில் அவள் மாட்டியிருந்த ஒரு ‘ஃப்ரென்ச் இம்ப்ரெஷன்’ பெயின்டிங், இந்தப் பக்கம் ஒரு ‘பிகாஸோ’வின் நகல் ஆகியவை மட்டும் அப்படியே இருந்தன. தனது ஒரே ஒரு சித்திரத்தை மட்டும் அறையின் ஒரு மூலையில் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டுப் போயிருந்தான் அருண்.

    சென்ற ‘வாலன்டைன்ஸ் டே’ அதாவது காதலர்கள் தினத்தன்று அவளுக்கு அருண் பரிசாக அளித்தது அது. எப்போதும் போலவே இப்போதும் கூட, இத்தனை மனச்சஞ்சலத்திலும் ஒரு அரை நிமிடமாவது அதில் லயிக்க அவள் மனது மறக்கவில்லை. அத்தனை உணர்ச்சிகளை அந்தச் சித்திரம் அவளுக்கு உண்டு பண்ணியது. இத்தனைக்கும் ஒரு சாதாரணச் சித்திரம் அது.

    அலைவீசும் கடல் ஒருபுறம், பெரும் காற்றில் அலைபாயும் மரங்கள், அடர்ந்த, தொலைதூர மலைப் பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு நிற்கப் பளிச்சிட்டு அலறும் ராக்ஷஸ மின்னல்கள், பயந்தோடும் பறவைக் கூட்டங்கள், ஊழித்தாண்டவம் போன்ற ஒன்றின் விசுவரூப தரிசனங்கள் தத்ரூபமாக அமைந்த பெரிய சித்திரத்தின் ஒருகோடியில் ஆணா பெண்ணா என்று அறிய இயலாத ஒரு மனித உருவம், இலக்கின்றி, ஆனால் உறுதியுடன் நடைபோட்டு முன்னேறி வருவதாக வரைந்திருந்தான். கருமேகங்களிலும் மின்னல்களிலும், பொங்கி ஆர்ப்பரிக்கும் கடலலைகளிலும் ஊடாடி ‘ஸிலுவெட்’ எனும் நிழலாக ஒரு முகம்- உணர்ச்சியற்றது போல் இருந்தாலும், ஒரு கோணத்தில் ‘கல் மனதை’ப் பிரதிபலிக்கும் அலட்சிய முகபாவம் எல்லாமாகத் தெரிந்தது.

    இதற்கு ஷீலா தன் மனத்தினுள் வைத்திருந்த பெயர்- ‘முடிவற்ற தேடல்’. தன்னை, தன் வாழ்வை, மனநிலையைப் பிரதிபலிப்பதாக அச்சித்திரம் இருப்பதாக அவள் கருதியதால் தான் ஒரு ரகசியமாக அதை இவ்வளவு ரசித்தாள்.

    ‘நான் எங்கே போகிறேன்? எதைத்தேடுகிறேன், ஏன் இங்கு வந்தேன்? நான் செய்யும் காரியங்களின் பொருள் என்ன?,’ என்று எப்போதோ ஒருமுறை மனதில் கேள்வி எழுமே, அதற்கான விடை இந்தச் சித்திரத்தில் பொதிந்துள்ளதாக எப்போதும்போல் எண்ணி, இயலாமை கலந்த ஆவலுடன் அவசரமாக இப்போதும் தேடினாள்.

    அரை நிமிஷம் கூட இல்லை. திறந்து பார்த்த வாசனைத் திரவிய பாட்டிலை வாசனை போய்விடப் போகிறதே என்று பயந்து அவசரமாக அழுந்த மூடிவைப்பது போலப் படீரென்று அவளுடைய மனக்கதவு மூடிக் கொள்ள, அதன் மேல் அழுத்தமாக நாதாங்கியை இழுத்துச் சார்த்தினாள் ஷீலா. வழக்கமான ஒரு தலைச்சிலுப்பலுடன் அறையை விட்டு வெளியேறினாள். ‘குக்கூ’ கடிகாரம் ஆறுமுறை கூவி நேரத்தை அறிவித்தது.

    பங்களாவின் பின்புறம் இருந்த ஒரு சிறிய கட்டிடத்தை நோக்கி நடந்தாள். ராஜு நாய்களுக்கான உணவை அவைகளின் தட்டில் பரிமாறிக் கொண்டிருந்தான். ஷீலா உயர்ஜாதி நாய்களை வளர்த்துப் பராமரிப்பதில் நகரில் முதலிடம் வகித்தாள். அவளுடைய நாய்கள் பரிசு வாங்காத ‘டாக் ஷோ’ கிடையவே கிடையாது. அவற்றை அன்போடு பராமரிக்கவும், உணவளித்துக் கருத்தோடு கவனித்துக் கொள்வதற்காகவும் ராஜு அவன் மனைவி வனஜா இருவரும் வேலையில் அமர்த்தப் பட்டிருந்தனர்.

    ‘கிரேட் டேன்’ என்ற மிக உயர்த்தி ஜாதி இனத்தைச் சேர்ந்த, கன்றுக்குட்டி போன்ற நாய்கள் ஆணும் பெண்ணுமாக இரண்டு, ‘பாக்ஸர்’ இனத்து நாய்கள் இரண்டு, ‘ஐரிஷ் ஸெட்டர்’ என்ற வகையில் ஒன்றுமாக அந்த நன்றியுள்ள ஜீவன்களால் அந்தப் பெரிய அறை ‘கலகலப்பா’க இருந்தது.

    “டெபீ, எப்படி இருக்கே?’, என கிரேட் டேன் பெண் நாயைக் கட்டிக் கொண்டு முகத்தோடு முகம் பதித்து முத்தாடினாள் ஷீலா. டெபி குட்டி போடப் போகிறது. நாய்ப்பிரியர்களின் வட்டாரம் இந்தக் குட்டிகளுக்காக ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது.

    “சாப்பிடத் தகராறு செய்யுது மேடம். வழக்கத்தை விட ஏனோ கம்மியாத்தான் சாப்பிடுது. இதுக்கு மட்டும் மட்டன் ஜாஸ்தியாகவே தான் தர்றேன். நாளன்னிக்கு டாக்டர் வரப்ப டானிக் எதாச்சும் தரச்சொல்லணும்,” என்றான் ராஜு.

    ‘இந்த மாதிரி சாயந்திர வேளையில் மேடம் நாய்களைப் பார்க்கவே வர மாட்டாங்களே. ஞாயிறுகாலை பதினோரு மணிக்கு வந்து ஒரு அரைமணி நேரம் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுப் போயிடுவாங்களே. இன்னிக்கு என்ன ஆச்சு,’ என மனதிற்குள் வியந்து கொண்டான்.

    நான்கில் ஒரு குழந்தையைக் கொஞ்சியதும் எல்லாம் ஓடி வந்து தாயின் அன்புக்காகப் போட்டியிடுவது போல எல்லா நாய்களுமாக வந்து ஷீலாவைச் சூழ்ந்து கொண்டன. ஒன்று அவள் முகத்தை நக்கியது. இன்னொன்று கையைச் செல்லமாகக் கவ்விற்று.

    எல்லாவற்றையும் தட்டிக் கொடுத்தும், தடவியும் குசலம் விசாரித்த பின்பு, “வரேன் ராஜு. பத்திரமாப் பார்த்துக்கோ,” என்றபடி திரும்பப் பங்களாவை நோக்கி நடந்தாள்.

    உள்ளே நுழைந்ததும் டிராயிங் ரூமின் ஒரு புறத்தில் ஐரோப்பிய பாணியில் அமைக்கப் பட்டிருந்த ‘மினி பாரை’ நோக்கிப் போனவள், சிறிய ஃப்ரிஜ்ஜைத் திறந்து கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஐஸ்கட்டிகளை நிரப்பிக் கொண்டாள். “நான் எனக்காக வாழ்கிறேன். ஹூ இஸ் அருண்? வாட் இஸ் லைஃப்?” என முணுமுணுத்தபடி ‘ஷிவாஸ் ரீகலை’க் கையில் எடுத்தாள்.

    ஏதோ ஞாபகம் வரவே, டேபிள் மீது அப்படியே வைத்து விட்டுத் தன் ‘அப்பாயின்ட்மென்ட்ஸ்’ டயரியைப் பிரித்து, மாலை ஏழு மணிக்கான குறிப்பைப் பார்த்தாள்.

    ஸ்டோர்ஸ் சூபரின்டெண்ட் சுந்தரமூர்த்தியின் பெண்ணுடைய பரத நாட்டிய அரங்கேற்றம் நகரின் பிரபல ஆடிட்டோரியத்தில் நடைபெறுகின்றது. செக்ரெடரி ப்ரியா நூறு தடவை நினைவுபடுத்தி அனுப்பி இருந்தாள். சுந்தரமூர்த்தி நல்ல மனிதர் பாவம், மேடம் போகாவிட்டால் மிகவும் மனவருத்தப் படுவார். அவர் மனைவி மாலதியோ அதை விட வெகுளி. அடுத்த முறை சந்திக்கும் பொழுது அழுதேவிடுவாள். இவள் போனால் ஏதோ கடவுளே வந்துவிட்டது மாதிரி சந்தோஷத்தில் மிதப்பார்கள். ‘ஒரு மாறுதலுக்காகப் போய்ப் பார்க்கலாமே,’ என நினைத்தாள் ஷீலா. அருண் அவள் வாழ்வில் புகுந்த பிறகு அவள் தனக்குத்தானே போட்டுக்கொண்ட திரையும், தன் கடந்த காலப் பயணத்தின் நிழல் கூட அண்ட விடாமல் கட்டிக்காத்த போலிவேஷங்களும் ரொம்பவே அதிகமாகி விட்டிருந்தன.

    இப்போது மனதில் பாறாங்கல்லாகக் கனத்த சுமையைச் சிறிது நேரம் கீழிறக்கி வைக்க இது ஒரு வடிகால் என்ற எண்ணம் பிறக்கவே, ‘ஷிவாஸ் ரீக’லைத் திரும்ப அதன் யதாஸ்தானத்தில் வைத்து விட்டு, எப்போதும் அவளுடைய உத்தரவின்படி சமையல்காரரால் தயார் செய்யப்பட்டு ரெடியாக ஃப்ரிஜ்ஜில் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸை கிளாசில் நிரப்பிக்கொண்டாள்.

    அப்படியே வெளியே செல்ல தயாராவதற்காகத் தன் அறையை நோக்கி நடந்தாள். அலமாரியைத் திறந்து நோட்டமிட்டாள். தான் வருடக் கணக்காகச் சீந்தாத வண்ண வண்ணப் புடைவைகள் கண்ணில் பட்டன. அவற்றில் ஒன்றை எடுப்பதற்குக் கை நீண்டது. ஜிலீரென்று தொண்டையில் இறங்கிய ஆரஞ்சுச்சாற்றின் குளிர்ச்சியும் புளிப்பும், சிறிது இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவையில் உடல் சிலிர்த்தது.

    உடல் சிலிர்க்கும் போதெல்லாம். தலையைச் சிலுப்பிக் கொண்டு மனமூடியை அழுத்தப் பழகிக் கொண்டிருந்தவளாதலால் இப்போதும் அதையே செய்தாள். புடைவையை எடுக்க நீண்ட கை பின்வாங்கியது.

    ஒரு அழகான பெண்ணின் உடலழகைச் சிறப்பாக எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்த ‘கஃப்தான்’ போன்ற கருநீல ‘ரா ஸில்க்’கினாலான உடையை எடுத்து அணிந்து கொண்டாள். அதற்குப் பொருத்தமான ஒரு இளநீல வண்ண ஸ்கார்ஃப் கழுத்தைச் சுற்றியது.

    சின்ன ஒரு கறுப்பு நிறப் புள்ளியை நெற்றியில் பதித்துக் கொண்டவள், ரத்தச்சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை அணிந்து ‘பெர்ஃப்யூம்’ ஸ்பிரே செய்து கொண்டதும் கிளம்பத் தயார்.
    தன் அந்தரங்கங்களில் குறுக்கிடாமல் டீஸன்டாக எட்டி நின்ற படியே அந்தப் பங்களாவிலேயே கீழே ஒரு அறையில் குடியிருந்த வண்ணம் பங்களாவை நிர்வகித்து வரும் ரமணி அம்மாளைக் கூப்பிட்டு, “நான் டான்ஸ் புரோக்ராமிற்குப் போய் விட்டு வருகிறேன். டின்னர் தேவையில்லை. ஒரு கிளாஸ் பால், சில பழங்கள், சில பிஸ்கட்ஸ் போதும், பை பை,” என ஒரு ஸ்வீட் ஸ்மைலுடன் காரில் ஏறிக் கொண்டதும், மாத்யூ காரைக் கிளப்பினார்.

    ******************************

    ஷிவா மேடத்தைப் பார்த்ததும் சுந்தரமூர்த்திக்கும் மாலதிக்கும் உச்சி குளிர்ந்து விட்டது. ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்காத குறையாக விழுந்து விழுந்து உபசரித்து முதல் வரிசையில் கொண்டு அமர்த்தினார்கள். நிகழ்ச்சி துவங்கியிருந்தது. அலாரிப்பு முடிந்து அடுத்த அயிட்டம் ஆடிக் கொண்டிருந்தாள் பெண்- பதினைந்து வயதிருக்கலாம். நன்றாகவே லயித்து ஆடினாள். நட்டுவாங்கமும் வீணை புல்லாங்குழலுடன் பாடிய ஆண்குரலின் கம்பீரமும் இனிமையும் மனதைக் கொள்ளை கொண்டன.

    ame
    மேடையில் வீணா என்ற பெண் ஆடிக் கொண்டிருக்க சைலஜா என்ற பதின்மூன்று வயதுப் பெண் ஷீலாவின் மனமேடையில் ஆடினாள்.

    இது என்ன விந்தை! அடுத்தபடி சைலஜா என்ன ஆடுவாள் என்று ஷீலாவுக்கு நன்றாகத் தெரியும். உள்ளம் படபடக்க, ஒருவிதமான பதட்டம் நிறைந்த எதிர்பார்ப்பில் அமர்ந்திருந்தாள்.

    வீணையும் குழலும் ஒரு சுருக்கமான மாஞ்சி ராக ஆலாபனையைக் குழைத்தன. உருக்கமான ஒரு சூழ்நிலை உருவாகியது. கணீரென்றிருந்த பாடகரின் குரல் இப்போது குழைவுடன், ‘வருகலாமோ அய்யா’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடலைத் துவங்கியது. முகத்தில் தவிப்பு, பக்தி, ஏக்கம், சோகம் அத்தனையுமாக சைலஜா (வீணா தான்) வெளியிட்டு அபிநயித்தாள். ஷீலா தனது கடந்த காலத்தில் சஞ்சரித்தாள்.

    ஜிம்மின் அமைதி நிறைந்த முகம் மனக்கண்ணில் தோன்றியது. பரிவோடு வருடும் பார்வை, வேதனையோடு அவளைத் தொட்டுத்தொட்டு மீண்டது. ஷீலா ஒரு நைந்த துணி பொம்மையென மாறித் தன் சக்தி எல்லாம் உறிஞ்சப்பட்டு விட்டது போல ஸீட்டில் தொய்ந்தாள். மனசு பால் போலப் பொங்கி, மூடியைத் தள்ள எத்தனித்தது. ‘எதைத் தேடி என் பயணம்?’ திரும்பவும் வினா உள்ளத்தில் விஸ்வரூபம் எடுத்தது. பணம், புகழ், பதவி, வசதி எல்லாம் அனுபவித்தாயிற்று. அன்பைக் கூட இவற்றால் வாங்கி அனுபவிக்க முடிந்ததே! இன்னும் எதைத் தேடுகின்றேன்- உள்ளம் பொருமியது- மனமேடையில் ஆடிய சைலஜா, நிஜ மேடையிலிருந்த பெண்ணுக்கு ஜோடியாக அபிநயம் பிடித்தாள், தன் உணர்வுகளைக் கொட்டிக் கலந்த வண்ணம்…….. பெருமூச்செறிந்தாள்.

    அவள் தானே ஜிம்மின் அன்பைத் துறந்து, தங்கள் ஒரே மகளின் மழலையையும் மறந்து அமெரிக்காவிலிருந்து ஓடி வந்தாள். எதைத் தேடி வந்தாள்? அந்தத் தேடல் இன்னுமே தொடர்கிறது. தேடுவது என்னவென்று புரியாததால் தான் இந்தத் துக்கமும், உணர்ச்சிகளும் பொங்குகின்றன. தான் திசைதெரியாமல் தடுமாறுவதை மறைக்கத்தான் இந்தப் போலி வேஷங்கள். அடைத்து அடைத்து மூடி வைக்கும் மனது ஒரு நாள் எரிமலையென வெடித்துக் குமுறுமோ? வேஷதாரியாகி மமதையும் கர்வமும் பொங்க, ‘என்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்,’ என்று ஒரு ஒழுங்கு முறையற்ற வாழ்வை அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்- ஆனால், பொய்மை மிக்க மனது அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே!

    மனமூடியை அழுத்தித் தாளிட்டவள், கும்பலுடன் சேர்ந்து கை தட்டினாள். உபசாரமாக, சுந்தரம் குடும்பத்தினருடன் ஐந்து நிமிடங்கள் பேசி விட்டு, பெண்ணைப் பாராட்டிப் பரிசும் அளித்துவிட்டு, வீடு திரும்பினாள் ஷீலா.

    ‘இன்று மாலை ஏதேதோ உணர்வுகள் பொங்கி என் மனதை அலைக்கழிக்கின்றன.’ சிந்தனைகளின் ஊடே அவசரமாகத் தன் சொற்ப உணவை முடித்துக் கொண்டவள் ‘வாக்மேனை’த் தேடி எடுத்துக் கொண்டாள். காஸட் அலமாரியைக் குடைந்து நாட்டியப் பாடல்கள் நிறைந்த காஸட்டுகளை எடுத்துப் பக்கத்தில் அடுக்கிக் கொண்டாள்.

    இரவின் யாருமற்ற தனிமையில், முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு சுயரூபத்துடன் உலவ அவள் தயங்கவில்லை. ‘நடனமாடினார்’ என்ற பாடலைக் கேட்டபடி உடலும் மனமும் இசைந்து ஆட, கால ஓட்டத்தை மீறிய மன ஓட்டத்தில் மிதக்கலானாள் ஷீலா என்ற சைலஜா.

    (தொடரும்)

    *********************

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170413 - Gopala vimshati 02 -lores

    பல்லில்லா பாலகன் என்றெண்ணி பூதனை
    கொல்லவந்த கண்ணனைக் கண்டதும் -இல்லம்
    புகுந்து முலைதிணித்துப் பார்த்திட வாய்க்குள்
    முகுந்தனுக்கு முப்பத்தி மூணு’’(நமக்கு 32)….!

     
    முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
    கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தோன்
    அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
    நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….!

     
    சூழ்ச்சி யுடன்வந்த பேய்ச்சி முலைபற்றி
    மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில்
    கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • பெட்ரோலியப் பொருட்களுக்கு அன்றாட விலை நிர்ணயம்

    பவள சங்கரி

    மே 1 முதல் பாண்டிச்சேரி, விசாகப்பட்டினம், உதயபூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகார் ஆகிய ஐந்து நகரங்களில், அனைத்து பெட்ரோலியப் பொருட்களுக்கும் பரிட்சார்த்த முறையில் தினசரி விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. பின் படிப்படியாக அனைத்து நகரங்களிலும் இந்த முறை தொடரும். 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மிகுந்த இலாபத்தை ஈட்டி வரும் இந்த நிறுவனங்கள் விலைவிதிப்பிலும் தனிக்கொள்கைகளை கடைபிடித்து போட்டிச் சந்தையை ஏன் உருவாக்குவதில்லை?

    Share
  • பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளின் விபரீதம்

    பவள சங்கரி

    பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமிது. வங்காளத்தில் அபாட் எனும் பன்னாட்டு மருந்து நிறுவனம் ஆண்டிற்கு 2,300 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்து சுமாராக 350 கோடி ரூபாய் இந்தியாவில் மட்டும் வருமானம் பார்க்கும் இந்நிறுவனம் காலாவதியான மருந்துகளை திரும்பப் பெற்றுக்கொள்ள மறுக்கின்றது. இப்படி காலாவதியான மருந்துகளை அழிப்பதற்கான முறைகளும் அவர்களிடமே உள்ளன. இது தொடர்பாக மேற்கு வங்காள அரசு அறிவுறுத்தியும் திரும்பப்பெற மறுக்கின்றது. இது தொடர்பாக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் உத்தரகாண்ட் அரசு, மேற்கு வங்க அரசு, குஜராத் அரசு போன்றோர் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் அந்த பன்னாட்டு நிறுவனம் எடுக்கவில்லை என்பது உண்மை. இதுபோல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியர்களுக்காக மட்டும் தனிப்பட்ட முறையில் வாகனங்கள், குளிர்பானங்கள், மின்னணு சாதனங்கள் போன்ற அனைத்தையும் மிக மட்டமாகத் தயாரித்து இந்தியாவின் வாங்குவோர் சந்தையையே குப்பையாக்கிவிடுகின்றனர். நாமும் கடைக்காரர்களையே மருத்துவர்களாக்கி அவர்கள் கொடுக்கும் மருந்தைக்கூட கண்ணை மூடிக்கொண்டு வாங்கிப் பயன்படுத்தி பின்விளைவுகளைச் சந்தித்தாலும் அது பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருக்கிறோம். இது பற்றி நடுவண் அரசோ அல்லது மாநில அரசோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே வேதனைக்குரிய செய்தி. தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலரும் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை..

    Share
  • ஹேவிளம்பி ஆண்டு….!

    tamilnewyear
    விரும்பியவை சேர விரும்பாதன போக
    கரும்பதனைக் கூலியோடு கொள்ள -வரும்புதி
    ஹேவிளம்பி ஆண்டே ஹடக்கிரீவர் கண்ணனால்
    வாவிளம்பு தீதைத்த விர்த்து’’….!
    OXYMORON TYPE வெண்பா
    ———————————————

    குருட்டு மலடி குழந்தையைப் பெற்றாள்
    திருட்டுத் தனமாய்க் கனவில் -இருட்டில்
    பிறந்தஅப் பிள்ளைக்குப் பாலூட்டும் போது
    விருந்தானாள் வாய்க்குள் விழைந்து….

    பாயில்ட் வெஜிடபில்ஸ், பச்சரிசி சாதத்தில்
    ஆயில்ட் சாம்பார் அடிக்கரைசல் -சாயில்ட்
    சாத்தமுது சாதம் சுவையா ணநீர்மோர்
    ஆத்தமுதே என்ஸ்பெஷல் ஆம்….

     

    ஆச்சார்ய ஸ்வாமிகள் மேல் எழுதியது….
    ————————————————–
    வானிடம் விட்டிந்த வையத்தில் சங்கரன்
    மானுடமாய் வந்தயெம் மாமுனியே -ஊணுடல்
    ஏகினும் வாஞ்சையாய் ஏளினாய்க் காஞ்சியில்
    பாஹிமாம் பாதாம் புஜம்.

    அரியவா காப்பில், அரனவா சேர்ப்பில்
    குறியவா அன்பே கடவுள் -பெரியவா
    பட்டுத் தறியவா விட்டு வறியவா
    கட்டும் கதரவா கட்டு….
    பரணீதரனின் ”அன்பே அருளே” படித்த போது….
    —————————————————————–
    அன்பே, அருளே, அரனே, அறம்பொருள்
    இன்பம் வசிக்கும் இருப்பிடமே -பண்பே
    பெரியவா நின்னைப் பணிந்தேன், மனதில்
    சிரிஅவா பொங்கிடச் செய்….
    குருவாரம் ஆச்சார்யாள் ஜெயந்தி….
    ————————————————————-

    ”காலடி மைந்தனாய் கோவிந்த FATHERரின்
    காலடியில் கற்க, கயிலையின் -ஆலடி
    சங்கரனே அத்வைதம் ஸ்தாபிக்கத் தோன்றினன்:
    இங்கரனே வந்தநாள் இன்று’’….கிரேசி மோகன்…

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170412 - Gopala vimshati 01-lores
    ”வேதப் பரிபுரை வீற்றிருக்க , கோபாலர்
    காதைவெண் சங்கால் குடைகிறார்: -வேதாந்த
    தேசிகரின் விம்சதி தேவி மகாத்மியத்தை,
    கேசவ் வரைந்த கவி’’….கிரேசி மோகன்….!

    ”காதாகி கோபாலர் வேதாந்த விம்சதியை
    ஊதுவது ஞானத்தின் உற்சாகம், -போதமர்(போது -மலர்)
    வாணியும் கூடவே வாசிக்கிறாள், சாரங்க
    பாணிமடி பாரதிப்(சரஸ்வதியின் இன்னொரு பெயர் பாரதி) பூ’’….கிரேசி மோகன்….!

    Share
  • விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம்

     

    முனைவர் மு.இளங்கோவன்

    muelangovan@gmail.com

    Gods_AS

         இந்த முறை திருப்பூர் சென்றிருந்தபொழுது குடந்தை ப. சுந்தரேசனாரின் சமய ஈடுபாட்டை, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்குத் தெரிவித்து, உரையாடிக்கொண்டிருந்தேன். ப. சு. ஆவணப்படத்திற்காக ஒரு புல்லாங்குழல் செய்யும் கலைஞரைத் தேடி, கேரளாவில் திருச்சூரை அடுத்த குன்னங்குளம் சென்ற கதையையும் அக்கலைஞரின் ஒத்துழைப்பால் புல்லாங்குழல் செய்தமையைப் படம் பிடித்தமையையும் குறிப்பிட்டேன். அப்பொழுது தமக்கு அறிமுகமான விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம் பற்றி சுப்ரபாரதிமணியன் எடுத்துரைத்தார்.

    cho     அண்மையில் புலவர் வீ. சொக்கலிங்கம் நிகழ்த்திய பெரியபுராணச் சொற்பொழிவில் ஆனாய நாயனார் புராணத்தை விளக்கும்பொழுது ஒரு புல்லாங்குழல் கலைஞரை அழைத்துவந்து மேடையில் அருகமர்த்தி, புல்லாங்குழல் செய்வது பற்றியும், அதன் வாசிப்பு முறைகள் குறித்தும் அவையினருக்குச் செய்முறை விளக்கம் அளித்தார் என்று குறிப்பிட்டவுடன்  புலவர் அவர்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலிட்டது. ஏனெனில் ஆனாய நாயனார் புராணம் புல்லாங்குழல் குறித்த அரிய உண்மைகளைப் பொதிந்து வைத்திருக்கும் பகுதியாகும்.

         என் ஆசிரியர் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் ஆனாய நாயனார் புராணத்தில் பொதிந்துகிட்டும் குழல்செய்யும் முறை, குழல் துளைகளின் அளவு, இடைவெளி, குழல் துளைகளின் பெயர், மாறுமுதல் பண்ணல், கோடிப்பாலை உருவாக்கும் முறை, துளைகளில் கைவைத்து ஊதும் முறை, இசைக்கு உயிரினங்கள் மயங்குதல் குறித்து எடுத்துரைத்த கருத்துகள் பலவாண்டுகளுக்குப் பிறகு எனக்கு நினைவிற்கு வந்தன. தமிழிசைக் கலைக்களஞ்சியம் முதல் தொகுதியிலும் (பக்.152, 179), மூன்றாம் தொகுதியிலும் இவை இடம்பெற்றுள்ளன. பெரியபுராணத்தில் இசைக்குறிப்புகள் என்னும் தலைப்பிலும் ( III 290-291), புகல் நான்கு என்னும் தலைப்பிலும்( III பக். 288) வீ.ப.கா.சு. வரைந்துள்ள  விளக்கங்களை ஆர்வலர்கள் அங்கே காண்க.

         பெரியபுராணத்தின் துணைக்கொண்டு புல்லாங்குழல் குறித்து விளக்குவதற்குத் தமிழ்நாட்டில் ஒருவர் உள்ளார் என்பதைக் கேட்டதும் புலவரைக் காணும் வேட்கை மீதூரப்பெற்றேன். ஏனெனில் இன்றைய கல்விப்புலங்கள் தக்க அறிஞர்கள் இல்லாமல் இருண்டுக்கிடக்கும் அவல நிலையை எண்ணி எண்ணி உலைந்து வரும் எனக்குப் புலவரின் ஆற்றல் பளிச்செனத் தெரிந்தது.

         உடல்நலம் இல்லாமல் புலவர் வீட்டில் இருப்பதால் அவரைக் காணும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அடுத்த முறை பார்க்கலாம் என்றும் எனக்குச் சுப்ரபாரதிமணியன் கூறினார். திருப்பூருக்கும் புலவர் வீ. சொக்கலிங்கம் இல்லத்திற்கும் இருபது கல் தொலைவு இருக்கும் என்றும் அவர் இன்று வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் எனக்கு அமைதி கூறினார். அப்படி என்றால் நாம் சென்று புலவரைச் சந்திப்போம் ஐயா!; இது என் விடை.

         எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் சிறுமுயற்சி எடுத்துப் புலவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என் வருகை பற்றியும் மாலையில் நடைபெறும் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையீடு பற்றியும் சொன்னார். என்னையும் புலவருடன் பேசும்படித் தூண்டினார். புலவரிடம்  நான் பேசினேன். என்னை அறிமுகம் செய்துகொண்டேன். குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் பற்றியும் அவர்தம் தமிழிசை வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைத்தேன். புலவர் சொக்கலிங்கம் அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. புலவர் அவர்கள் நம் பண்ணாராய்ச்சி வித்தகரை இரண்டுமுறை பார்த்துள்ளதாகவும், அவருடன் பழகிய நாள்கள் இன்னும் தம் மனக்கண்ணில் இருப்பதாகவும் குறிப்பிட்டு, அப்பர் பெருமானின்

    “கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

    கொடுமைபல செய்தன நானறியேன்

    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

    பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

    குடரோடு துடக்கி முடக்கியிட

    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

    வீரட்டா னத்துறை அம்மானே”

    எனத் தொடங்கும் கொல்லிப்பண் பாடலைப் பாடியும், பண் விளக்கம் சொல்லியும் பண்ணாராய்ச்சி வித்தகர் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்ததை நினைவூட்டினார். அவர் பாடியபொழுது வயிற்றுவலி வந்தோன் அடையும் துன்பத்தைக் கண்முன் பாடிக்காட்டி நடித்துப் புலப்படுத்தியதைப் பகிர்ந்துகொண்டார். மேலும் சிதம்பரத்தில்

    அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

    பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை

    என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற

    இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே?

    என்னும் பாடலை உழவாரப்பணியின் பொழுது, உழவாரம் கொண்டு புல்லைச் செதுக்கி எடுப்பதுபோல் பாடிக்காட்டியதாகப் புலவர் தொலைபேசியில் உரையாடியபொழுது குறிப்பிட்டமை எனக்குப் பெரும் மகிழ்வாக இருந்தது.

         புலவர் அவர்களின் உடல்நலம் நோக்கி, அவரை இல்லம் சென்று நாங்கள் பார்க்க நினைத்தோம். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் மேல் கொண்ட பற்றின் காரணமாகவும், தமிழிசையின்மேல் கொண்டு ஈடுபாட்டின் காரணமாகவும் தாமே உரிய இடத்திற்கு வருவதாகப் புலவர் அவர்கள் வாக்களித்தார். சொன்னபடியே ஆவணப்படம் திரையிடும் இடத்திற்கு முதலாமவராக வந்து  நம் புலவர் காத்திருந்தார். புலவர்முன் கைகுவித்து வணங்கி, ’மாறிப்புக்கு இதயம் எய்தினோம்’. தம் தமிழ்ப் புலமையையும் சமய ஈடுபாட்டையும் இலக்கியப் பயிற்சியையும் புலவர் அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

    விசயமகங்கம் புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை:

         திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டை என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர் வீரபத்திரன், ஆச்சியம்மாள் ஆகியோரின் தலைமகனாக 22.05.1940 இல் வீ. சொக்கலிங்கம் பிறந்தவர். இவருடன் ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாக உடன் பிறந்தவர்கள் உண்டு. பிறந்த ஊரான செங்கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர் (1958).  பெரும்புலவர்களை வாட்டும் வறுமைச்சூழல் காரணமாகச் சிலவாண்டுகள் கடையொன்றில் குற்றேவலராகப் புலவர் சொக்கலிங்கம் இளமையில் பணிபுரிந்தார். சிலவாண்டு இடைவெளியில் செங்கோட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ( 1960-62) பயிற்சி பெற்றவர்.

         1962 இல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் விசயமங்கலம் என்னும் ஊரை அடுத்துள்ள கினிப்பாளையம் என்னும் ஊரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியில் இணைந்து, பணி நிறைவுக்காலம் வரை அந்தப் பள்ளியில் பணிபுரிந்தார். இவரின் ஆசிரியப் பணியைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டு அரசு நல்லாசிரியர் விருது (1994-95) வழங்கிச் சிறப்பித்துள்ளது. பணியில் இருந்தபடியே தம் புலமையை வளர்த்துக்கொள்ள, புலவர் (சென்னைப் பல்கலைக்கழகம்), இலக்கிய இளையர் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), கல்வியியல் இளையர், முதுகலை (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பட்டங்களைப் பெற்றவர்.

         வாழ்வியல் தேவைக்கு ஆசிரியப் பணிபுரிந்தாலும் உள்ளம் முழுவதும் ஆன்மீக ஈடுபாட்டிலும், இலக்கிய இன்பத்திலும் மூழ்கிக் கிடந்தது. எனவே ஓய்வு நேரங்களில் சொற்பொழிவாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

         சமய இலக்கியங்கள், காந்தியம், பாரதிப் பாடல்கள், காமராசர் வாழ்வியல் குறித்து உரையாற்றுவதில் நம் புலவருக்குப் பெரிதும் ஈடுபாடு உண்டு. “நீரதன் புதல்வர்” என்னும் பாரதியார் பாடலடிகளைத் தலைப்பாக்கி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் எழுச்சியுரையாற்றுவதில் வல்லவர். படித்தவர்களையும் படிக்காதவர்களையும் கவர்ந்திழுக்கும் சொல்லாற்றல் கொண்டவர். ’ஆன்மீகமும் மக்கள் வாழ்க்கையும்’, ’ஒரு ஊதுகுழலின் உலாக்கோலம்’, ’தெய்வச் சேக்கிழார் சுவாமிகளின் திட்பமும் நுட்பமும்’ என்னும் தலைப்புகளில் இவராற்றிய உரைகள் மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம்பெற்றவையாகும். இலக்கியங்களில் அமைந்துள்ள நுணுக்கமும் நுட்பமும் காணும் பேராற்றல் கொண்டவர் என்பதும் அவற்றை வெளிப்படுத்துவதில் வல்லவர் என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

         பேரூர் திருமடத்தில் அருளாட்சி செலுத்தும் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் மெய்த்தொண்டினை நினைவூட்டி, இவர் எழுதிய “தவம் செய்த தவம்” என்னும் நூல் அடியவர்களால் விரும்பிப் பயிலப்படும் நூலாகும். திருக்குற்றாலச் சாரலின் இயற்கை எழிலை வருணித்து இவர் வரைந்துள்ள “கவிச்சரம்” என்னும் நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கு இனிய விருந்தாகும். 32 கவிதைகள் இந்த நூலின் உள்ளடக்கமாக உள்ளன.

         சென்னை, நெல்லை, நாகர்கோயில் உள்ளிட்ட ஊர்களில் இலக்கியப் பேருரையாற்றிய இவர் மலேசியாவுக்குச் சென்று இருபத்தைந்து நாள் தங்கிச் சமய நூல்கள் குறித்தும், இலக்கியச் சுவையுணர்வு குறித்தும் உரையாற்றி மீண்ட பெருமைக்குரியவர்.

         புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்கள் சைவ சமய ஈடுபாடு கொண்டவர் எனினும் வடநாட்டிலிருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் சுற்றுப்பயணம் வரும் சமணர்கள் தங்கிச் செல்லும் வகையில் இவரின் வீட்டுக் கதவம் எப்பொழுதும் திறந்திருப்பதும் அவர்களை விருந்தோம்பி வழியனுப்புவதும், வருவிருந்துக்குக் காத்திருப்பதும் இவரின் உயர்ந்த மாந்த நேயத்தை வெளிப்படுத்துவன. சமயங்கடந்து, அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழும் தமிழுள்ளம் வாய்த்த புலவர் பெருமான் நலம்பல பெற்று, நீடு வாழ வாழ்த்துவம்!

    Share