நாகேஸ்வரி அண்ணாமலை

நம்மை ஆண்ட பிரித்தானியர்கள் நமக்குச் சுதந்திரம் கொடுக்க நினைத்து அதற்கான திட்டங்களை 1920களில் ஆரம்பித்தபோது அரசுப் பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிராமணர்களே அதிக அளவில் இருந்தனர். அரசியலில் ஒரே கட்சியான காங்கிரஸில் பிராமணர்களின் ஆதிக்கமே இருந்தது.  பிராமணரல்லாத சில நிலச்சுவான்தார்களும், பெரும் வணிகர்களும், படித்து முன்னுக்கு வந்த சில பிரமுகர்களும் பிராமணரல்லாதவர்களுக்கும் கல்வியிலும், அரசு வேலையிலும் அரசியலிலும் பங்கு வேண்டும் என்று போராடத் தொடங்கினர்.  அவர்களுடய ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து விலகிவந்து அந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார் பெரியார்.  சமூகச் சமத்துவமே அவருடைய குறிக்கோள்.  இதை அடைய இந்து மதம் தடையாக உள்ளது என்று கருதியதால் அதை எதிர்த்தார்.  இந்து மதத்தின் தலைமை ஸ்தானத்தில் இருந்த பிராமணர்களையும் எதிர்த்தார்.  சமூகச் சீர்திருத்தம் பிரித்தானிய ஆட்சியின் உதவியோடுதான் செய்ய முடியும் என்று நம்பினார்.  சுதந்திர இந்தியாவின் ஆட்சி பிராமணர்களின் கைக்குப் போகும்; சமூகச் சமத்துவம் ஏற்பட முடியாது என்று நினத்ததால், பிரித்தானியர் நம்மை விட்டுச் சென்ற நாளைத் துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.  பிராமணர் ஆதிக்கத்தை, அதை நியாயப்படுத்தும் இந்து மதத்தின் ஆதிக்கத்தை, ஒழிக்க வேண்டும் என்று அவர் ஆரம்பித்த கட்சிதான் திராவிடர் கழகம்; ஆரபித்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். .

திராவிடர்களின் உரிமைகளைப் பாதுக்காப்பதற்காக ஆரம்பித்த திராவிடர் கழகம் அரசியலில் நுழைந்தால் பதவியில் இருப்பதற்காகக் கொள்கையில் சமரசம் செய்துகொள்வது தவிர்க்க முடியாதது என்பதால் திராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடுவதைப் பெரியார் விரும்பவில்லை.  அவருடன் இருந்த அவருடைய சிஷ்யர்களுக்கோ அரசியலில் நுழைந்து அதிகாரம் பெற்றுச் சமூக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று ஆசை.  அதைக் கூறாமல் வயதான காலத்தில் பெரியார் திருமணம் செய்துகொண்டதைக் காரணம் காட்டித் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினர்.  தேர்தலிலும் பங்கேற்கத் தொடங்கினர்.  அரசியல் பதவி ஊழலுக்கு வழி வகுக்கும என்று பெரியார் நினைத்தாரா என்று தெரியவில்லை.

தேர்தலில் பங்கேற்கத் தொடங்கிய புதிதில் சட்ட மன்றத்தில் நிறைய இடங்கள் கிடைக்கவில்லையென்றாலும், 1967-இல் நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று ஆட்சியும் அமைத்தனர்.  திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தலைவராக விளங்கிய அண்ணாதுரை உயிரோடு இருந்திருந்தால், அவருடைய கட்சியில் பின்வந்த ஊழல்கள் நடந்திருக்காதோ என்னவோ?  காந்திஜியோடு இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பணியாற்றிய காங்கிரஸ்காரர்களே ஊழல் புரிந்தார்கள் என்றால் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

கருணாநிதியைக் கணக்குக் காட்டும்படி தட்டிக் கேட்ட எம்.ஜி.ஆர். புதிய கட்சியைத் தொடங்கி ஊழல் இல்லாத நல்ல ஆட்சியைத் தரப் போவதாகக் கூறினார்.  அவர் காலத்தில் ஊழல்கள் பெருகினவேயொழியக் குறையவில்லை.  அதன் பிறகு பதவிக்கு வந்த அ.தி.மு.க. தலைவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  அவர்கள் அடித்த கொள்ளைகள் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமண்றம் அளித்த தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.  ஊழல்கள் பெருகிக்கொண்டே போய் அண்மையில் காலமான அம்மையாரின் காலத்தில் உச்சத்தைத் தொட்டது ஊர் அறிந்த ஒன்று.  எதற்காக அரசியலில் நுழைவது தவறு என்று பெரியார் நினைத்தாரோ அந்த அரசியலில் நுழைந்து ஊழலை வளர்த்தது தி.மு.க.வில் தொடங்கி அ.தி.மு.கவில் பூர்த்தி அடைந்தது.  சொத்துக் குவித்த ஊழலுக்காகக் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்ட தலைவருக்குத் தேவாலயம் கட்ட வேண்டும் என்னும் அளவுக்குப் போயிருக்கிறது.

இப்போது அந்த அம்மையாரின் ‘வாரிசுகள்’ அவரையே மிஞ்சிவிடுவார்கள் போல் தெரிகிறது.  மொத்த அ.தி.மு.க. கூட்டமும் –அதன் பல பிரிவுகளும்- எப்படியும் ஆர்.கே.நகர் தொகுதியைக் கைப்பற்றிவிடத் தீர்மானித்து வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் பணமழை பொழிந்திருக்கிறார்கள்.  இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஊழலற்ற மோதி என்ற பிம்பத்தை ஏற்படுத்தி,  பி.ஜே.பி. தமிழ்நாட்டு அரசியலில் நுழையத் திட்டமிடுகிறது.  பணப்புழக்கம் அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி தேர்வாணையம் ஆர்.கே.நகர். தேர்தலை இப்போதைக்கு ரத்து செய்திருக்கிறது.  இந்த முடிவில் பி.ஜே.பி.யின் பங்கு இருக்கலாம்.  இந்துத்துவக் கொள்கையை மூச்சாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.தான் இன்று பி.ஜே.பி.யை ஆட்டுவிக்கிறது.  இவர்களின் கைக்குள்தான் மொத்த இந்தியாவும் போய்க்கொண்டிருக்கிறது.  வட இந்தியாவில் பல மாநிலங்களைப் பிடித்துவிட்ட இவர்கள் இப்போது தென்னிந்தியா மீது தங்கள் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள்.  அதிலும் தமிழ்நாட்டைக் கைப்பற்றுவது இவர்களின் கனவுகளில் ஒன்று.

இவர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்றிவிட்டால் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் – அவர்கள் அனுதாபிகள்தான் – பதவியில் அமருவார்கள்.  இவர்களில் பிராமணரல்லாதவர் இருந்தாலும் பிராமணர்களுடய ஆதிக்கம்தான் இருக்கும்.  இந்த ஆதிக்கத்தை ஒழித்து கீழ் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று பெரியார் பாடுபட்டார்.  அவருடைய அந்தக் கனவை அவருடைய கொள்கை வழியில் வந்ததாகக் கூறிக்கொள்ளும் திராவிடக் கட்சிகளே இன்று அழிப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.  அவர்களுடைய ஊழல் இதற்குத் துணைபோகிறது.

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியாரின் வழியில் வந்ததாகக் கூறிக்கொள்ளும் அவருடைய வாரிசுகளில் பலருக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.  வட இந்தியர்களின் ஆதிக்கமே வேண்டாம் என்று தனித் திராவிட நாடு கேட்டவர்களின் வாரிசுகள்  வடக்கத்தியர்களுக்கு, பிராமணர்களுக்குத் அடிபணியத் தயாராகிவிட்டனர்;. தமிழ்நாட்டையே தாரைவார்க்கத் தயாராகிவிட்டனர்.

தமிழர்களின் சுய மரியாதையை அடகுவைத்துவிட்டதற்கு இது ஒரு உதாரணம்.  உத்தரப் பிரதேசத்தில் நோய்டா ஊரில் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் படிக்க வந்திருக்கும் மாணவர்கள் தாக்கப்பட்ட செய்தியைப் பற்றி பி.ஜே.பி.யைச் சேர்ந்த தருண் விஜய்  விளக்குகையில், ‘ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நல்லுறவு நிலவுகிறது.  அப்படி இருக்கும்போது நாம் ஏன் அங்கிருந்து வந்திருக்கும் மாணவர்களைத் தாக்கும் செயல்களில் ஈடுபடப் போகிறோம்?  இந்தியா இனத்துவேஷ நாடு அல்ல.  கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களோடு நாங்கள் சுமுக உறவு கொண்டாடவில்லையா?’ என்று கேட்டிருக்கிறார்.  எவ்வளவு திமிர்!  இவர் தான் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன திருவள்ளுவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுவதாக நடித்தவர்.  அப்படிப் பேசிவிட்டு வாய் தவறிப் பேசியதாக வேறு கூறி மன்னிப்புக் கோருகிறார்.  எவ்வளவு தாழ்வாக தென்னிந்தியர்களை மதிப்பிடுகிறார்.  இதைக் கேட்டு திராவிடக் கட்சியினர் பொங்கி எழவில்லை.

இவரைப் போன்ற பி.ஜே.பி.காரர்களிடமல்லவா தமிழ்நாடு தன்னை ஒப்படைக்கப் போகிறது.  இதுதானா பெரியார் கண்ட கனவு.  இதற்காகவா அவர் தன்னுரிமைப் போராட்டத்தைத் தோற்றுவித்தார்?

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “யாருக்கும் வெட்கமில்லை

  1. பிராமணர்களை எதிரிகளாக இன்னும் எவ்வளவு காலத்திற்கு முன்னிறுத்தப் போகிறீர்கள்? அரசியல் களத்தில் அவர்களின் இடம் தேய்ந்து, மறைந்து விட்டதே. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், பிராமணர் செல்வாக்கு ஓங்கும் எனச் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் சாதியைப் பார்த்தே கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. திருமண விளம்பரங்களில் சாதி முதன்மைப் பொருளாய் இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் சாதி உணர்வு இன்னும் அதிகரித்து வலிமை பெற்றுள்ளது. இந்தச் சாதியப் பித்து, எல்லாச் சாதியாரிடமும் உள்ளது. பிராமணரைப் பூச்சாண்டி காட்டி, இதர சாதிகளின் ஆதிக்கத்தையும் அடக்குமுறையையும் வசதியாகப் பலரும் மறைக்கின்றனர். இந்தக் கட்டுரை, ஊழலையும் சாதியையும் தேவையில்லாமல் கலந்து குழப்பியிருக்கிறது.

  2. இந்தக் கட்டுரை ஜாதிகளைப் பற்றியதல்ல. ஊழலைப் பற்றி மட்டும்தான். அதனால் ஜாதியையும் ஊழலையும் குழப்பும் பேச்சுக்கே இடமில்லை. பெரியாரின் வழியில் வந்தவர்களே அவருடைய கொள்கைகளுக்கு நேர்மாறான கொள்கையுடையவர்களிடம் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கப் போகிறார்களே என்ற ஆதங்கம்தான் கட்டுரையின் சாரம். ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைளைப் பின்பற்றும் பி.ஜே.பி. பெரியாரின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. பெரியாரின் கனவை அழிப்பதற்கு அவருடைய வழியில் வந்த கட்சிகளே காரணமாக அமைந்துவிட்டன என்பதுதான் என் வேதனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *