க. பாலசுப்பிரமணியன்

அந்தத் தங்கச் சங்கிலியை பொற்கொல்லர் தன்னிடமிருந்த கல்லில் தேய்த்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“கொஞ்சம் மெதுவாக.. …நீங்க தேய்க்கிற வேகத்திலே தங்கமெல்லாம் அப்படியே உதிர்ந்து விழுந்திடும் போல இருக்கு” என்று சிரித்துக்கொண்டே பைரவி அவரிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்

“சரிபாக்கறப்போ கொஞ்சம் தேய்மானம் இருக்கத்தாம்மா இருக்கும்” என்று அவரும் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.  “நிறைய அழுக்கு ஏறியிருக்கு,,”

“பின்னே என்ன. மூன்று தலைமுறையாக இவங்க வீட்டிலே ஒவ்வொருவர் கழுத்திலேயும் தொங்கிக்கொண்டிருக்கேனே.. ” என்று அந்த தங்கச் சங்கிலி தனது மனதிற்குள் முணுமுணுத்தது.

“இது எங்க பாட்டி போட்டுக்கொண்டிருந்தது. அப்பொறம் எங்க அம்மா போட்டுண்டா. பின்னாலே என் கல்யாணத்தின் போது அம்மா என் கழுத்திலே போட்டுவிட்டா…” பைரவி பக்கத்திலுள்ளவர்கள் காதிலே விழும்படி பெருமையாகச் சொன்னாள்.

“இது ரொம்ப ராசியான சங்கிலி ” பைரவி முகத்தில் ஒரு பெருமிதம் வெளிப்பட்டது.

“ஆமா.. ஆமா .. அதனால் தான் ஊரிலே கல்யாணம் எங்கே நடந்தாலும் பைரவியோட சங்கிலி என்று என்னை கழுத்தில் போட்டு அல்லாட விட்டவர்கள் எத்தனை பேர்…” அந்தச் சங்கிலி அலுத்துக்கொண்டது .

“இது நாலரைப் பவுன் இருக்கும்மா.. ” பொற்கொல்லர் தொடர்ந்தார்.

“அய்யயோ… இது மொத்தம் அஞ்சு பவுனாச்சே.. ” பைரவி அலறினாள்.

“அம்மா.. எத்தனை வருஷமா உபயோகிச்சிருக்கீங்க.. தேய்மானம் இருக்காதா… அதுக்கும் வயசாகறதில்லே.. “

“அதுக்காக.. அதன் எடை இவ்வளவா குறையும்…” இது பைரவி.

‘அதான் சொன்னேனேம்மா.. நாளாக நாளாகத் தேய்மானம் அதிகமாகும் ” அவர் சமாதானப் படுத்தினார்

“எவ்வளவு நாள் வெயில், மழை, வியர்வை என்று எதிலெல்லாம் குளிச்சிருக்கேன். உழைச்சு உழைச்சு உடம்பு குறுகிப்போச்சு.. ” என்று அந்தச் சங்கிலியும் அலுத்துக்கொண்டது.

“என்னவோ.. இதை போட்டுட்டு புதிதாகத் தான் வாங்கணும் .” பைரவியின் ஆசைக்கு அடுத்த பரிமாணம்.

“கொஞ்சங்கூட நன்றி இல்லை பாருங்க.. எவ்வளவு உழைச்சிருக்கேன்.. எத்தனை முறை இவளுக்காக நான்  சேட் கடையிலே துணிப்பைக்குள்ள வாயைமூடிக்கொண்டு படுத்துக்கொண்டிருக்கேன். இவள் மானத்தை காப்பாத்தியிருக்கேன்.  பையனை படிக்க வைக்கப் பணம்.. …அவ புருஷனோட தங்கச்சி கல்யாணத்துக்குப் பணம்.. வீடுகட்ட பணம்…. அவளோட பணத்துக்காக என்னை அடகு வெச்சு வாழ்க்கை நடத்தினவ.. இன்னிக்கு கையிலே காசு வந்துட்டதுன்னு, நன்றி கெட்டு என்னைத் தூக்கி எறியறாளே. ” அந்தத் தங்க சங்கிலியின் மனக்குறை யாருடைய காதிலும் விழவில்லை. ..

“அப்போ உறுக்கிடட்டுங்களா” பொற்கொல்லர் கேட்டார்.

“உருக்கணுமா என்ன?..” பைரவி.

“ஆமாங்க.. அப்போதான் அழுக்கெல்லாம் போனவிட்டு என்ன சரியான எடை இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும் “

தன்னுடைய உருவத்தின் கடைசி காலத்தில்  அந்தத் தங்கச் சங்கிலி தன்னுடைய பழைய நாட்களை நினைத்து பெருமை பட்டுக்கொண்டிருந்தது..

“உருக்க எவ்வளவு நேரம் ஆகும்? எனக்கு கொஞ்சம் வெளியிலே போகணும்.. ” பைரவி தன்னுடைய அவசரத்தை வெளிப்படுத்த்தினாள்

” ஒரு மணி நேரம் ஆகும்.. மத்த வேலையெல்லாம் இருக்குல்ல.. நீங்க எங்கேயாவது வெளியிலே போயிட்டு வருதுன்னா வாங்க.. “

பைரவியின் மனதில் உலவும் சந்தேகத்தை உணர்ந்துகொண்ட சங்கிலி சொன்னது.. “ஏன் பயப்படறே.. இவர் ஒன்னும் செய்ய மாட்டார்.. நீ எத்தனை தடவை நம்ப முடியாதவங்களுக்கெல்லாம் என்னை தாரை வார்த்திருக்க.. ..தைரியமாய் போ.. ” காதில் ஏதோ அடைப்பது போலிருந்ததால் பைரவி தன் காதுகளை தேய்த்துக் கொண்டாள்

“ஏம்மா.. ரொம்ப தூரம் போணுமா…?” பொற்கொல்லர் கேட்டார்.

” இல்ல.. இல்ல.. இங்கே பக்கத்திலேதான்.. அந்த ரெசிடென்சி  வரைக்கும்.. “

பொற்கொல்லர் புரியாமல் கண்களை உயர்த்திப் பார்த்தார்.

“அதாங்க.. அந்த முதியோர் இல்லம் வரைக்கும். அங்கேதான் எங்க மாமியார் இருக்காங்க. மாசத்துக்கு ரெண்டுதடவை நானும் அவரும் போய் பார்த்திட்டு வருவோம்.. அதான்.. இவ்வளவு தூரம் வந்துட்டோமே.. அது பக்கத்திலே தானே இருக்கு .. இங்கே பாருங்க.. அந்த சன்னலிலிருந்து பார்த்தா தெரியும்.. “

அந்த தங்கச் சங்கிலி சிரித்தது..

அந்த மூதாட்டியின் தேய்மானத்தைவிட தன்னுடைய தேய்மானம் மிகக்குறைவுதான் என்று உணர்ந்தது.

“என்ன. வரீங்களா .. அம்மாவைப் பார்க்கப்போலாமா? ” என்று சற்றுத் தள்ளி நாற்காலியில் அமர்ந்து அமைதியாக பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டிருந்த தன் கணவனிடம் அவள் கேட்டாள்

அவன் தலையசைத்தான்.

அந்தத் தங்கச் சங்கிலி உருகுவதற்குத் தன்னை தயார் செய்துகொண்டது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தேய்மானங்கள்

  1. அருமையான கதை. சங்கிலியின் கதை என்று நினைத்துப படித்துக்கொண்டிருந்தால், உண்மையான தேய்மானம் யாருக்கு என்று இறுதியில் மனதைத் தொடும் உபமானம்.

  2. தங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published.