’’நீர்கீரிப் பிள்ளை(OTTER) நிமிர்ந்துதன் பிள்ளைக்காய்,
சார்கூறிக் கேட்டு சலாமிட(கும்பிட) , -தார்கரி
வண்ணனை, கீரிக்கும் வாத்சல் யம்காட்டும்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 36
மீனாட்சி பாலகணேஷ்
அடியவரின் ஆவலான கேள்விகள்!
குழந்தை செங்கீரையாடுதலுக்கு இருவிதமாகப் பொருள் கூறப்படுகின்றது. முதலாவது, தவழும்பருவத்துக் குழந்தை, ஒருகாலை மடித்தும், மறுகாலை நீட்டியும் தலையை உயர்த்திப் பார்த்தும் தன் பவளவாயிலிருந்து அமுதத்திற்கு ஒப்பான உமிழ்நீர் ஒழுகத் தவழும் அழகினை விளக்குவது; மற்றொன்று, பொருளற்ற ஓசைகளை எழுப்பித் தாய்தந்தையரை மகிழ்விப்பது. கீர் என்றால் சொல் என்பது பொருள். நக்கீரர் என்பது நல்ல சொற்களைக் கூறுபவர் எனப் பொருள்படும். திருத்தமான பொருளற்ற மழலையொலி குழந்தை எழுப்புவதாம். இத்தகைய மொழியைக் கூறுதல் என்பது மங்கல வழக்காகச் செங்கீரை ஆடுதல் எனப்பட்டது. இந்த ஒலியை எழுப்பும் பருவமே செங்கீரையாடும் பருவம் எனவும் கூறலாம்.

‘ங்க்கா’ ‘ங்க்கு’ என நீரொழுகும் வாயைத்திறந்தும், பேசுவதனைப்போல் தலையை ஆட்டியபடியும், உற்சாகத்தில் குழந்தை தவழ்ந்தாடும். இதனைக் கண்ட தாயும் மற்றவர்களும் அக்குழந்தை எதனையோ பேச முயல்வதாகக் கருதி மகிழ்வார்கள். தாய் தலையசைத்துப் பேசுவதனைப்போலத் தானும் செய்ய முனையும்; முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் இதனைப் ‘போலச்செய்தல்,’ எனக் குறிப்பிடுவார்கள் என்கிறார்.தாய் குழந்தையிடம் உரையாடுவது போன்றுஅடியார்கள் குழந்தை வடிவாகத் தாம் காணும் அன்னை தெய்வத்திடம் வரம் கேட்கிறார்கள். இதனைத் தாய் உளவியல் அல்லது அடியார்களாகிய மானிடர்களின் உளவியல் எனலாம். எப்போதுமே சிறுகுழந்தையை தெய்வவடிவாகக் காண்பது இந்தியப் பாரம்பரிய எண்ணம். அதிலும் பிள்ளைத்தமிழ் நூல்கள் தெய்வத்தைக் குழந்தையாக்கிப் பாடும்போது, தமது எல்லையற்ற அன்பை அக்குழந்தைமீது சொரிந்தும், தமது துன்பங்களைத் துடைக்கும் பரம்பொருளாக அத்தெய்வக்குழந்தையைக் கண்டு வேண்டுவதாகவும் பாடுவார்கள். தெய்வம் ஒன்றே நமது பிறவித்துயரைத் துடைக்கவல்லது என்பது இந்துக்கள் தீவிரமாக நம்பும் ஒரு கருத்து. அத்தெய்வத்தைக் குழந்தையாக்கி வழிபடும்போதிலும் பிறவித்துயரைத் துடைக்கவேண்டுவார்கள். இந்த உளவியல் கோட்பாட்டினை ஒற்றியே பிள்ளைத்தமிழ் நூல்களில் சில பருவங்களில் பாடல்கள் அமைந்துள்ளது சிந்திக்கத்தக்கது.
கோவை கவியரசு கு. நடேச கவுண்டர் எழுதியுள்ள சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் நூலில் இக்கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள செங்கீரைப்பருவப் பாடல்கள் இரண்டினை நாம் இங்கு காணப்போகிறோம்.
பெண்மகவு தனது வாயில் தேன்போலும் உமிழ்நீர் ஒழுக, தவழ்ந்தாடி வருகிறாள். “என்னிடம் ஓடிவா தாயே!” என அன்புமீதூர அழைக்கும் தாயினிடம் ஓடோடிச் செல்கின்றாள். நிமிர்ந்து தாயை நோக்கும் தலை; ஆசையும் அன்பும் பாசமும் பெருகத் தாய் (அடியார்) தனது குழந்தையை நோக்குகிறாள். அன்னை பராசக்தியே அங்கு அவள் கண்களுக்கு குழந்தையாகத் தென்படுகிறாள். பக்தியினால் புளகாங்கிதமுற்ற (அடியாரெனும்) அன்னை கேட்கிறாள்:
“நான் உனது அடியவள்; நீயே எனக்கு எல்லாம் என இருப்பவள்; ஆகவே, என்னை இனிமேலும் அன்னையர் வயிறாகிய பிறவிச்சேற்றினில் (அளறு- சேறு) திரும்பத் திரும்பப் பிறக்குமாறு செய்வாயா? எண்ணுதற்கு அரிய துயரங்களை எமக்களித்து பிறப்பு எனும் தண்டனையை எமக்குக் கொடுப்பாயா? எம் உடலில் பொருந்தியிருந்து மாறிமாறி எம்மை மயக்கும் ஐம்பொறிகள் காட்டும் வழியில் உழலுமாறு எம்மைச் செய்து விடுவாயா? பெண், பொன், மண் எனும் மூவாசைகள் (வேடணைகள்) எம்மை விடாமல் தொடர்ந்து வந்து துயர்செய்ய விடுவாயோ? உன்னுடைய மலரடிகளைப் பணிகின்ற அன்பில்லாதவர்களின் குழுவில் நாங்களும் சேர்ந்துநின்று உன்னையே மறந்துவிடச் செய்குவையோ?” எனக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்(ள்). ‘இவ்வாறெல்லாம் எம்மைச் செய்துவிடாதே,’ எனும் ஆதங்கம் இவ்வடிகளில் தொனிப்பதனைக் காணலாம்.
ஒரு ஆதங்கத்தில், பக்திப்பெருக்கில், இவ்வாறு வினவிய தாய், பின்னர் இது வாய்திறந்து மறுமொழி உரைக்க இயலாத சிறுகுழந்தை என (ஒரு தாயின் போக்கில்) உணர்ந்து குழந்தையின் தலையசைப்பையே தனக்கு அது கூறும் மறுமொழியாகக் கருதுகிறாள். அதற்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறாள்.
“நான் கேட்கும் இந்த வினாக்களுக்கெல்லாம் நீ தயை புரிந்து எதிர்மறையாக விடைதருவது போல (அதாவது ‘இல்லை இல்லை! இவ்வாறெல்லாம் செய்ய மாட்டேன்’ எனக்கூறுவது போல) உனது தலையை (சென்னியை) இருபுறமும் அசைத்து, எனதன்னையே! நீ செங்கீரையாடி வருவாயாக!” என வேண்டி உள்ளம் கசிந்து பாடுகிறார். கேட்கவே இனிமையாக இல்லையா? உள்ளம் உருகவில்லையா?
குழந்தையும் தாய் தன்னிடம் ஏதோ கேட்பதைக் கண்டு தலையை இப்படியும் அப்படியும் அசைக்கிறது. தாயின் உடலும் உள்ளமும் மறுமொழி கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சியில் சிலிர்க்கிறன.இன்னுமுன் அடியரெமை அன்னையர் வயிற்றளறில்
இருமென்று புகவிடுவையோ?
எண்ணுதற் கரியதுயர் பண்ணிவெளி வருபிறப்
பென்றதண் டனையிடுவையோ!
மன்னிநின் றெமைமாறி மாறிமயல் செய்பொறிகள்
வழியிலே உழல்விப்பையோ?
மாதர்பொன் மண்ணென்ற வேடணைகள் வீடாது
வந்துதுயர் செயவிடுவையோ?
நின்மலர்த் தாள்பரவு மன்னுமன் பிலர்குழுவில்
நின்றுனை மறப்பிப்பையோ?
நீதயை புரிந்துமொழி கெனும்வினா வுக்கெதிர்
நிகழ்த்திமறை விடைவிடுதல்போற்
சென்னியிரு புறமசைத் தென்னவென் னன்னையொரு
செங்கீரை யாடியருளே!
சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
செங்கீரை யாடியருளே!(சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- நடேச கவுண்டர்)

இதற்கு சைவசித்தாந்த அருளாளர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஒரு அருமையான விளக்கம் அளித்துள்ளார்: அவருடைய சொற்களிலேயே அதனைக் காண்போமே! :: சிவசக்தியாகிய அருட்சத்திதான் உயிர்களின் சீவத்துவத்தை நீக்கிச் சிவத்தை அளிப்பதற்காக மாயையிலிருந்து உடல், கருவி, உலகு, போகங்கள் ஆகியவற்றை அளித்துப் பிறப்பு- இறப்பில் செலுத்துகின்றது எனச் சைவசித்தாந்தம் கூறுகின்றது. உயிரறிவை விளக்கும்பொருட்டுக் கூட்டப்பட்ட மாயை, உயிரின் ஆணவமல சம்பந்தத்தால் அறிவை மயக்கம் செய்கின்றது. அந்த மயக்கம் தீர, திருவருளாகிய சிவசத்தியின் துணைவேண்டும். அடியான் தன் அச்சத்தைக் கூறி இத்தகைய துன்பத்தில் யான் புக என்னை விடுவையோ என வினா நிகழ்த்தி, குழந்தையாகிய சிவசத்தியிடம், ‘நான் அப்படிச் செய்யமாட்டேன்’ என்ற எதிர்மறை விடையைத் தலையை இருபுறம் அசைப்பதிலிருந்து பெற விழைகின்றான். சிவபக்தி நிறைந்த ஒருவர், தம்முடைய மானுடக்குழந்தையிடம் இவ்வினாக்களைக் கேட்டு, அக்குழந்தை எதிர்மறை விடையாகத் தலையசைக்க சிவசத்தியே தம்மைத் தெளிவிப்பதாகக் கருதி இன்பம் அடைவார்.ஆசையுடன் அருமையாகப் பெற்றெடுத்த தன் குழந்தையே தாய்க்குப் பெரும் செல்வம். அக்குழந்தையைத் தனது தவப்பயனாகவும், குலதெய்வமாகவும், தன்னை வாழவைக்க வந்த பரம்பொருளாகவும், தனது உயிர் என்றும், கண் என்றும், கண்ணின் ஒளி எனவும், தான் பெற்ற பெருஞ்செல்வம் என்றும், தன்னைப்பெற்ற தாயாகவும் போற்றிக் கொண்டாடுவாள் அன்னை.
இந்த உளக்கருத்தில் இவ்வுத்தியை தாயின் நிலையில் நின்று கவிஞர் கையாண்டு அழகுறப்பாடுகிறார்:
“முன்பு ஒரு காலத்தில் தேவர்கள் குழு தம்மில் யார் பெரியவர் என்று வாதமிட்டுக் கொண்டிருந்தது; அப்போது அங்குசென்று அவர்களிடையே ஒரு துரும்பை நட்டு அவர்களுடைய அகந்தையை அழித்தானே அந்தச் சிவபிரான்தான் உனது மேனியின் ஒரு பாகத்தைக் கொண்டவனோ தாயே? அவனுடைய அருள் என விளங்கும் குணமும் நீயேதானோ?*
(* ‘ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்,’ எனும் திருமந்திர வரிகள் ஈண்டு நினைவுகூரத் தக்கன. ஒன்றேயான பரம்பொரும் உயிர்களுக்கு அருள்செய்யும்பொருட்டு இரண்டாகி, அவனது அருளாகி, சக்தி எனும் பெயரும் வடிவும் கொண்டு நிற்கின்றதாம்)
“என்றென்றுமே, பிறப்பு, இறப்பு, இவை தொடர்பான மலங்கள் முதலியன இல்லாமலிருத்தல் என்பதுதான் உமது இயல்போ? எண்ணிறந்த சராசரங்களாகிய உலகங்களை ஈன்றெடுத்து அவற்றில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நீ இனிய நற்கதியைத் தருவீர் அல்லவோ?

“உனது திருக்கோவிலில் நின்று கண்ணில் காணும் காட்சியாக உன்னைத்தொழுது வணங்கும் எளிய அடியாருக்கும் நீ அருளுவது உன்னுடைய வழக்கம் அல்லவா? இங்ஙனம் எல்லாம் அருளி எம்மை நீ எப்போதும் வாழ்விப்பாயா என நாங்கள் விருப்பமுற்றுக் கேட்டு நிற்கிறோம். ‘ஆம்’ எனும் விடை வழங்கும் முகமாக நீ உனது திருமுகத்தினை அசைத்து எங்களுக்குக் குறிப்புணர்த்தியபடி செங்கீரையாடியருள்வாயாக! (சென்ற பாடலில் எதிர்மறை விடையினை வேண்டித் தலையசைப்பை எதிர்பார்த்த தாய் இப்பாடலில் ‘ஆம்’ எனும் குறிப்பைத் தலையசைப்பினால் உணர்த்த வேண்டி நிற்கிறாள்).“சீகாழியில் மேவும் திருநிலைநாயகியாகிய சுந்தரவல்லியே, செங்கீரையாடி அருளுவாயாக,” என வேண்டுகிறார் கவிஞர். இவ்வாறு குழந்தையின் தலையசைவுகளுக்கேற்ப மறுமொழிகளைக் கொண்டு மகிழ்ச்சியடையும் தாயின் இயல்பு அடியவராகிய கவிஞருக்கு அந்தப் பரம்பொருளின் பெருமைகளைப்பாடி மகிழும் உத்தியாக அமைகிறது.
இப்பாடல்கள் தாயினுடையவும், அவள் நிலையில் தம்மை இருத்திப் பரம்பொருளைக் குழந்தையாகக் கண்டு வணங்கும் பக்தனுடையவும் ஆகிய இருவருடைய மனநிலைகளையும் அவற்றில் எழும் சிந்தனைகளையும் மிக அழகாக விளக்குகின்றன. பாடப்படும் இப்பாட்டுடைத்தலைவி, குழந்தையா தெய்வமா எனும் சந்தேகத்திற்கே இடமில்லை. இருவரும் ஒன்றே- குழந்தையும் தெய்வமும் போற்றப்படவேண்டியவர்களே என்பது நன்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றமர் குழுவினிடை சென்றொரு துரும்புநட்
டவரகந் தையையழித்த
ஆற்றல்மிகு மாண்டகையு னொருபுறத் தான்கொலோ
அவனருட் குணமுநீயோ!
என்றுமுதி யாமைமரி யாமைமல மில்லாமை
என்பனவும் மியல்கொலோ?
எண்ணில சராசரந் தம்மையீன் றுயிர்களுக்
கினியகதி தருவீர்கொல்லோ?
மன்றினிடை நின்றுவெளி கண்டுதொழு வார்க்கருள்
வழங்குவது முண்டுகொல்லோ?
வாழ்விப்பி ரோவென வினாவினோம் விதிவிடை
வழங்குதிரு முகமசைத்தே
தென்றலி லிளம்பசிய கொடியென்ன அம்மையொரு
செங்கீரை யாடியருளே!
சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
செங்கீரை யாடியருளே!!(வெளி- மேற்பார்வைக்குக் காணும் காட்சி)
(சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- நடேச கவுண்டர்)
ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் பெரும்பாலானவை கடவுள்கள் மீதானவையே! இப்பிள்ளைத்தமிழ் நூல்களில் ஒவ்வொரு பருவத்தினையும் புலவர்கள் பாடும்போது அப்பருவத்திற்கான பத்துப்பாடல்களில் சில, அழகான கதைகளையும் தொன்மங்களையும் இணைத்தும், வேறு சில, சந்தநயம் மிகுந்தும், இன்னும் சில பாட்டுடைத்தலைவனின்/ தலைவியின் கடவுட்தன்மையைப் போற்றியும் பாடப்படும். இத்தகைய பாடல்களில், அவை அன்னையைப் பற்றிய பிள்ளைத்தமிழ் நூலாக இருப்பின், சைவசித்தாந்தக் கருத்துக்கள் பொதிந்து பொலிவனவாகப் பாடுவது பெரும்புலவோரின் தனிச்சிறப்பு. அவ்விதத்தில் கவியரசு நடேச கவுண்டர் அவர்கள் தமது சைவசித்தாந்தப் புலமையையும் பற்றையும் இலைமறைகாயாக இப்பாடல்களில் மிகவும் எளிமையாக ஆயினும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியவையாகக் காட்டியுள்ளது வியக்கத்தக்கதாம்.
இவை போலும் சிறப்புகளை வெவ்வேறு பிள்ளைத்தமிழ் நூல்களில் இனிவரும் அத்தியாயங்களில் தொடர்ந்து காண்போம்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}********************************
-
தமிழக மக்களே உஷாராகுங்கள்
நாகேஸ்வரி அண்ணாமலை
தமிழ்நாடில் சில காலமாக நடக்கும் நிகழ்ச்சிகளும் காதலர் தினத்தன்று அதிரடியாக உச்சநீதிமனறம் அளித்த தீர்ப்பும் தமிழ்ப் படம் ஒன்றை இடைவேளைவரை பார்த்த ஒரு உணர்வை நம்மிடையே ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் மீதிப் படமும் க்ளைமேக்ஸும் பாக்கியிருக்கின்றன.
இதற்கிடையில் தமிழக மக்களை அடுத்த தேர்தலுக்குத் தயார்படுத்துவது சமூகத்தில் இருக்கும் சில சிந்தனையாளர்களின் கடமை ஆகிறது.
பிப்ரவரி 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு நம் முன் சில உண்மைகளை வைத்திருக்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். பதினாலாம் தேதிய தீர்ப்பு மிகத் தாமதமான தீர்ப்பு என்றாலும் முழுமையாக மறுக்கப்பட்ட நீதி என்று சொல்ல முடியாது. வழக்கில் தண்டிக்கப்பட வேண்டிய ஒருவர் இறந்துவிட்டாலும் மற்ற மூவரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு நிம்மதியைத் தருகிறது.
தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா சசிகலாவைத் தன்னுடன் வைத்துக்கொண்டது அவருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அல்ல என்றும் தான் சட்டத்திற்குப் புறம்பாக பல ஊழல்கள் புரிந்து சேர்த்த பணத்திலிருந்து தமிழக மக்களை அச்சுறுத்தி வாங்கிய சொத்துக்களை மறைப்பதற்குத் தேவையான பினாமிகளை ஏற்பாடு செய்யவும் மற்றும் சில தவறுகளை மறைக்கவும் சசிகலாவைத் தன்னோடு வைத்துக்கொண்டார் என்றும் கூறியிருக்கிறார்கள். (இதற்கு ஆதாரத்தை என்னால் கொடுக்க முடியாது. ஆதாரங்களின் அடிப்படையில்தான் நீதிபதிகள் இதைக் கூறியிருக்கிறார்கள்.) ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதற்காக அவர் மீதுள்ள எந்தக் குற்றங்களையும் குறைத்து மதிப்பிடவில்லை நீதிபதிகள். ஊழல் புரிந்தவர் என்று கடுமையாகவே சாடியிருக்கிறார்கள். மற்ற குற்றவாளிகளையும் நடு நிலையில் நின்று அவர்கள் புரிந்த குற்றங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். மேலும் நாட்டில் அரசியல் ஊழல்கள் மலிந்துவருவதாகவும் மக்கள் விழிப்புடன் இருந்து இனிமேலாவது ஊழல்செய்பவர்களை அவர்கள் அப்படி ஊழல் செய்யாமல் தடுக்கவேண்டும் என்றும் இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இந்த அறிவுரையைத்தான் நான் தமிழக மக்களுக்கு வழங்க விரும்புகிறேன்
ஊழல் புரிவதில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்றும் சொல்லப்போனால் ஜெயலலிதா முதல் சூத்திரதாரி என்றும் சசிகலா அவருக்குத் துணைபோன இரண்டாவது சூத்திரதாரி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது இப்படி இருக்க ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல் மந்திரி பதவி வகிக்க நியமிக்கப்பட்ட பன்னீர்செல்வம் (பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியைப் பறித்துக்கொள்ள மாட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஜெயலலிதா அவரை முதல் மந்திரி பதவியில் அமர்த்தினாரேயொழிய அவர் மீது இருந்த அதி அன்பினாலோ அவருடைய திறமையினாலோ அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.) ஜெயலலிதாவை ஊழலே புரியாத அரசியல்வாதி போலவும் எல்லா ஊழல்களுக்கும் காரணகர்த்தா சசிகலா போலவும் பேசிவருகிறார். அன்றுவரை சசிகலாவுக்கு அடிபணிந்தவர் திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று நாற்பத்து ஐந்து நிமிஷம் தியானத்தில் மூழ்கி ‘அம்மாவின்’ ஆசி பெற்று சசிகலாவை எதிர்க்கத் துணிந்தாராம்! சசிகலா ஊழல் புரிந்தவர் என்றால் ஜெயலலிதா அவரைவிடப் பெரிய ஊழல் புரிந்தவர் என்றுதானே நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை புடம் போட்ட தங்கமாக ஜெயலலிதா மட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிவந்திருக்கிறார். இது எப்படி சாத்தியம்? சசிகலா சிறைக்குச் செல்வது சரிதான் என்று கூறும் பன்னீர்செல்வம் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்? இது என்ன முரண்பாடு? ஜெயலலிதாவின் கொள்கைகளைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஒரு பொற்காலத்தை உருவாக்கப் போகிறாராம்! அவரைவிட அதிக ஊழல்கள் புரிந்து தமிழ்நாட்டை ஊழல் சக்கரவர்த்திகளின் கூடாரமாக மாற்றப் போகிறாரோ என்னவோ.
தமிழக மக்களே, தயவுசெய்து சிந்தியுங்கள். தமிழக சட்டசபை கலைக்கப்பட்டு புதுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அம்மாவின் வழியில் வந்த யாருக்கும் ஓட்டுப் போட்டுவிடாதீர்கள். நீதிமன்றமே அம்மாவைப் பற்றிய இந்த மதிப்பீட்டை வழங்கிய பிறகு இனிமேலாவது ‘அம்மா தெய்வம், தெய்வத்தைத் தண்டிக்க மனிதனால் முடியாது’ என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்காதீர்கள். (உங்களது இதய தெய்வமான அம்மாவை மனிதனால் தண்டிக்க முடியாது என்பதால்தான் அவர் இறந்துவிட்டார் என்று கூறினாலும் கூறுவீர்கள்.) தமிழ்நாட்டில் எதிலும் எங்கும் ஊழல் நீக்கமற நிறைவதற்கு வித்திட்டுத் தன்னை ஏழைகளின் நலன்களில் அக்கறை செலுத்துபவர் என்று காட்டிக்கொண்ட அம்மாவின் சுயரூபத்தைப் புரிந்துகொள்ளுங்கள். ஏழைகளுக்கு இலவசங்கள் வழங்கியதன் மூலம் தன்னைத்தானே எப்படி வளப்படுத்திக்கொண்டார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். சசிகலா ஊழல் பேர்வழி என்றால் ஜெயலலிதா அவரைவிடப் பெரிய ஊழல்வாதி என்னும் உண்மையை மறைக்கும், இரட்டை வேடம் போடும் பன்னீர்செல்வம் போன்ற அரசியல்வாதிகளைப் பொதுவாழ்வில் இருந்தே நீக்குங்கள். அம்மாவின் வழியைப் பின்பற்றுவதாகச் சொல்லும் எந்த அரசியல்வாதியையும் நம்பாதீர்கள்; அவர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள். இதை நீங்கள் செய்யத் தவறினால் தமிழ்நாடு இதைவிடப் பெரிய ஊழல் நாடாக மாறும். அ.தி.மு.க. மட்டுமல்ல, மற்ற எந்த ஊழல் கட்சி வேட்பாளர் என்றாலும் அவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள். இப்போது பண மதிப்பு நீக்கம் அமலில் இருந்தும் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு யார் முதல்வர் நாற்காலியைப் பிடிப்பது என்ற போட்டியில் ‘குதிரை பேரம்’ நடக்கிறது, கோடிக்கணக்கில் பணப்புழக்கம் இருக்கிறது. இதுவரை இந்தக் கட்சிகள் நம்மை முட்டாளடித்தது போதும் இனியாவது அப்படிச் செய்யாமல் நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம். எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது. நாம் இவர்களுக்கு ஓட்டுப் போட்டு நம்மை ஆள அனுமதி கொடுத்தால்தானே இவர்கள் நம்மைச் சுரண்டுவார்கள்.
ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளில் ஒருவரான அமிதவா ராய் கூறியுள்ள அறிவுரையைக் கேளுங்கள். ஊழல் கொடிய நோய் போல் சமூகத்தில் பரவிவரும்போது ஊழல் புரிபவர்கள் மக்களிடம் ஒரு பயத்தையும் பக்தியையும் உண்டாக்கிவிடுகிறார்கள். அப்போது நேர் வழியில் போக நினைக்கும் மனிதர்களுக்கு மூச்சுத் திணறுகிறது. அவர்களின் நிலை என்ன என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஊழல் புரிபவர்களை சமூகத்திலிருந்து நீக்குவதற்கு ஒட்டுமொத்தமாக எல்லோரும் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளுங்கள். சுதந்திர இந்தியாவுக்காக போராடியது போல இந்த ஊழலுக்கு எதிராகவும் மிகப் பெரிய போராட்டத்தில் தன்னலம் இல்லாமல் அனைவரும் ஈடுபட வேண்டும். இது ஒவ்வொரு குடிமகனின் கடமையும்கூட என்கிறார் நீதிபதி.
தமிழக மக்களே, இனி மேலாவது விழித்தெழுங்கள். நம் உரிமைகளைக் காத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
-
மாற்றம் – பகுதி 1
-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா
மாற்றம் என்பது மனிதவாழ்வில் இன்றியமையாதது. மாற்றம் இல்லாவிடில் அதில் அர்த்தமும் இருக்காது. அந்த மாற்றமும் – தேவையான மாற்றமாகவே இருக்கவேண்டும். சிலவேளை – ஏன் இப்படியான மாற்றம் வந்ததோ என எண்ணத்தோன்றும். இதனால் – மாற்றம் என்பது வந்தால், யாவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கவேண்டும். அப்படிவரும் மாற்றம்தான் நல்ல மாற்றம். அந்த மாற்றம் ஒரு சமுதாயமே பயன்பெறுமளவுக்கு இருக்குமானால் அதுவே சிறந்த மாற்றம் எனக் கருதப்படும்.
அப்படியான மாற்றங்கள்பற்றி நாம் அறிவது அவசியம் அல்லவா? அப்படியான மாற்றங்கள் எந்தவகையில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அனைவரும் மனத்தினுள் பதிக்க வேண்டும் என்பதே மாற்றம் பற்றிச் சிந்திப்பதற்கு வழிவகுத்திருக்கிறது எனலாம்.
சமயம் என்றால் என்ன? அது ஒரு “வாழும்நெறி.” வாழ்க்கை என்றால் என்ன? எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதுதான் வாழ்க்கை. எப்படியும் வாழலாம் என்றால் – அதனை வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளமுடியாது. விலங்குகள் போல மனிதன் வாழமுடியாது.
விலங்களுக்கு வாழ்க்கைபற்றி எதுவுமே தெரியாது மட்டுமல்ல, புரியவும் மாட்டாது. ஆனால் பகுத்தறிவு மிக்க மனிதனுக்கு வாழ்க்கை பற்றித் தெரிய வேண்டும். தெரியாமலும், புரியாமாலும் வாழும் வாழ்வு மனித வாழ்வு அல்ல. இது விலங்கு வாழ்வேயாகும். அந்த விலங்கு வாழ்வைவிட்டு – மனிதன் மனிதனாக வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தும் வல்லமை சமயத்துக்கே உண்டு. இதனால்தான் சமயம் என்பது ஒரு வாழ்க்கை நெறியாகவும் வாழும் நெறியாகவும் அமைந்திருக்கிறது.
சமயம் உண்மையா? பொய்யா? கடவுள் உண்டா? இல்லையா? இப்படிப்பட்ட கேள்விகள் காலங்காலமாகக் கேட்கப்பட்டுக் கொண்டே வருவதைக் காண்கின்றோம். இதற்கான சரியான பதில்களும் அவ்வப்போது உரியவர்களால் கொடுக்கப்பட்டும் வந்திருக்கிறது.
ஆனால் உரிய பதில் அளிக்கப்பட்டபோதும் – இம்மாதிரியான குதர்க்கத்தன
மான கேள்விகள் இன்றும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனினும் சமயம் சம்பந்தமான நடவடிக்கைகளோ, கோவில்கள் கட்டி வழிபாடுகள் செய்யும் நிலைகளிலோ – எந்தவிதமான தடங்கல்களும் இல்லை. பதற்றமும் இல்லை. யாவும் அதன் வழியில் செம்மையாக நடைபெறுவதைப் பார்க்கின்ற பொழுது – இதனை ஒரு மாற்றம் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?இன்றைய உலகில் விஞ்ஞானம் பெரும்பகுதியில் வியாபித்து நிற்பதைக் காண்கின்றோம். மனித இயக்கம் முழுமையும் விஞ்ஞானத்தை அண்டியே அமைந்திருப்பதும் கண்கூடு. விஞ்ஞானமில்லாவிடின் மனிதனே வாழ முடியாது என்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய வாழ்வை விஞ்ஞானத்துடன் இணைத்து விட்டான். இதனால் வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றாகிவிட்டது.
விஞ்ஞானத்தின் உச்சியில் நிற்கும் பல மேல்நாட்டவர்கள் தமது வாழ்க்கையைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கின்றோமோ என்று எண்ணத் தலைப்பட்டு விட்டனர். மேல்நாட்டவர் வழியையே போற்றிநின்ற கீழ்நாட்டவரும் தமது நிலைபற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதைக் காணமுடிகிறது.
எதனால் எல்லாமே செய்யமுடியும் என்று எண்ணியவர்கள் எல்லாம் – சற்று நின்று நிதானித்து நிற்க முயல்வதைக் காணமுடிகிறது. அதாவது – ”விஞ்ஞானம், விஞ்ஞானம்” எனப் பேரொலி எழுப்பிய நாடுகளும் – விஞ்ஞானம் சார்ந்தவர்களும், விஞ்ஞானம்தான் எல்லாமென எண்ணியவர்களும் – விஞ்ஞானத்துக்கு அப்பாலும் அதைவிடச் சக்திவாய்ந்த ஒன்று இருக்கிறது என்று உணரத் தலைப்பட்டமையைக் காணமுடிகிறது.
அவர்கள் யாவரும் மெய்ஞ்ஞானம் பற்றியறியவும் – அதன்வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் – அதனால்தான் அர்த்தமுள்ள வாழ்வுகிட்டும் என உணரத் தலைப்பட்டு மெய்ஞ்ஞான மார்க்கத்தை நாடி,தேடி, ஓடி வந்துகொண்டிருப்பது – ஒரு பெரிய மாற்றம் அல்லவா?
வாழ்க்கையில் இரண்டுவிதமான அமைப்புகள் காணப்படுகின்றன. முதலாவது உலகியல் சார்ந்தவாழ்கை. மற்றையது உலகியலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை. உலகியல் சார்ந்த வாழ்க்கையைத்தான் யாவரும் விரும்புகின்றோம். அதில்தான் பெரும்பாலானவர்களின் நாட்டமும் செல்கிறது.
அதற்காகவேதான் நாளெல்லாம் உழைக்கின்றோம். அதுவும் ஓய்வற்ற உழைப்பெனலாம். உழைப்பின் முடிவில் காண்பதுதான் என்ன என்பதுதான் முக்கிய கேள்வியாகும்! இதற்கு நாமெல்லோரும் நம்பியிருக்கின்ற விஞ்ஞானத்தால் விடை சொல்ல முடியாமல் இருக்கிறது.
விஞ்ஞானம் என்பது ஓர் அளவுடன் தனது பணியை முடித்துக் கொள்கின் றது. அதற்கு அப்பால் செல்ல வேண்டுமானால் மெய்ஞ்ஞானம்தான் கைகொடுக்க வேண்டும். மெய்ஞ்ஞானத்தால் அது முடியும் என்று கருதும் நிலை இன்று பரவலாகி வருவதும் நல்லதொரு வரவேற்கத்தக்க மாற்றம்தானே!
சமயமும் கோவிலும் மாற்றத்துக்கு வழிவகுக்குமா? இது ஒரு முக்கியமான கேள்விதான். அதேவேளை இவையிரண்டையும் விட – நல்லமாற்றத்துக்கு வழிவகுக்கக்கூடிய வேறு சாதனங்கள் இல்லையென்று யாவரும் நம்புகின்றனர்.
விஞ்ஞானம் மூலம் ஏற்படும் மாற்றங்கள் நிரந்தரமற்றவை. மெய்ஞ்ஞானம் மூலம் ஏற்படும் மாற்றங்களோ நிரந்தரமானவை. இதனால்தான் “மெய்ஞ்ஞானம்” என்று சொல்லப்படுகிறது. மனிதவாழ்வில் எத்தனையோ நல்ல மாற்றங்களுக்கு எல்லாம் சமயமும், அதனைத் தாங்கிநிற்கும் கோவில்களும் என்றுமே உறுதுணையாகி நின்றன. தற்போதும் நிற்கின்றன என்பதை மறுத்துவிட முடியாது.
மனிதவாழ்வின் அடிநாதமே இறையுணர்வுதான். அதை ஊட்டியதும், காட்டியதும், சமயந்தான். இறையுணர்வுஅற்று வாழும் வாழ்வு ஒரு வாழ்வு அன்று; உயிர்த்துடிப்பற்ற வாழ்வாகவே அது அமையும். அதனை வாழ்வு என்று சொல்லவே முடியாது.
உயிர்த்துடிப்புக்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் இறைவனுக்கு உருவம் கொடுத்து – அந்த உருவங்களில் திருவருட் சக்தியை உருவேற்றி அவற்றை வைத்து – வழிபாடு என்னும் மடைமாற்றத்தை ஏற்படுத்த வழிசமைக்க உதவி நிற்பனதான் கோவில்கள். இதனால்தான் –
“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” – என்று சொல்லப்பட்டதோ என என்ணத்தோன்றுகிறது.
சமூகத்தின் மையமாகக் கோவில்கள் திகழ்கின்றன. இந்த நிலையை அன்று தொடக்கம் இன்றுவரை காணக்கூடியதாக இருக்கிறது. எனவேதான் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ ஊர்கள் தோறும் கோவில்கள் அமைக்கப்பட்டன.
கோவில்களை மையமாகக் கொண்டு கிராமங்கள் வளர்ந்தன. நகரங்களும் வளர்ந்தன. நாடும் வளர்ந்தது. ஆலயத்தை அரணெனக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை அர்த்தம் மிக்கதாக அமைந்தது.
எதைச் செய்தாலும் – அதனை ஆரம்பிக்கும் முன்னர் ஆலயம் சென்று வழிபட்ட பின்னரே செய்யும் வழக்கம் பண்டுதொட்டு நிலவிவந்தது. அதனை தற்போது – சிலர் தேவையற்ற ஒன்று என்றும், மூடத்தனமானது என்று சொல்லுவதையும் கேட்க முடிகிறது. கோவில் என்றும், ஆலயம் என்றும் இறைவனது சன்னிதானத்தை அழைப்பதில் கூட மிகச்சிறந்த பொருள் பொதிந்து இருக்கின்றது.
“கோ’ என்றால் தலைவன். “இல்” என்றால் இருக்குமிடம். எனவே “கோவில்” என்றால் உலகத்துக்கும், உயிர்களுக்கும் எல்லாம் தலைவன் ஆகிய இறைவன் இருக்குமிடம் என்ற பொருளாகின்றது.” ஆலயம் ” என்பதன் பொருள் – ஆன்மா லயிப்பதற்கு உரிய இடம் என்பதாகும். எங்களது பாரம்பரியத்தில் – வாழையடி வாழையாகக் கோவில்கள் – நல்ல திருப்பத்துக்கும், மனமாற்றத்துக்கும் உறுதுணையாகவே வந்துள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.
வாழ்க்கை வாழ்வதற்கேயன்றி வீழ்வதற்கு அல்ல. வாழ்க்கையை – வாழ்க் கையாக எண்ணி வாழ்கின்ற மனிதன் – மனத்தை உடையவன். அந்த மனத்தில் நல்ல சிந்தனைகள் எழுதல் வேண்டும்.
“எதை நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகிவிடுகிறாய்” என்னும் வேத வாக்கை நாம் புறந்தள்ளிவிடமுடியாது. மனதில் தோன்றும் எண்ணங்கள் ஒரு கூட்டமாகக் கூடி எமது முழு இயக்கத்தையுமே மாற்றிச் சிதைத்துவிடும் வல்லமை பெற்றன. அகத்தோடு தோன்றும் எண்ணங்கள் வழி – புறச் செயற்பாடுகளும் அமைந்து விடுகின்றன. இதனால் அகச் சிந்தனைகள் நல்ல மாற்றம் பெற வேண்டும். அகம் நல்ல மாற்றம் பெறவும் – அதன்வழி புறச் செயற்பாடுகள் நல்லபடி அமைவதற்கான மடைமாற்றம் செய்யக் கோவில்கள் உதவுகின்றன. சமயமும் கோவிலுடன் இணைந்து நின்று மாற்றத்துக்கு வலுவூட்டி நிற்கிறது.
புராணங்களும், இதிகாசங்களும் எமது சமயத்தின் கருவூலங்கள். இவை யாவும் கற்பனையிலுதித்த கதைகள். விசித்திரமானவை. விளங்க முடியாதவை என்றெல்லாம் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் – அவை யாவும் – மனிதகுல மாற்றத்துக்கு அருந்துணையானவை. அருமருந்தாய் என்றும் விளங்குகின்றன.
ஆதிகாவியமான இராமாயணத்தைப் பாடிய வான்மீகி பற்றிய ஒரு சம்பவம் கதையானாலும் – முக்கியக் கருத்தொன்றை வெளிக்காட்ட உதவுகிறது எனலாம். களவுத்தொழிலையே வாழ்க்கை ஆக்கிக் கொண்டிருந்த வான்மீகி – புனிதமான இராமாயணத்தைப் பாடி சமூகமாற்றத்துக்குப் பலவழிகளில் உதவிநின்றபாங்கு – வான்மீகியிடம் ஏற்பட்ட மாற்றமேயாகும். அப்படியொரு மாற்றம் ஏற்பட்டதை வரலாற்றின் வாயிலாக அறியும் பொழுது – நமக்கெல்லாம் நல்லதொரு பாடம் கிடைக்கின்றதல்லவா?
ராம நாமத்தையே உச்சரிக்க முடியாத அளவுக்கு கல்வியறிவற்ற கசடன் ஆகவும், கடையனாகவும், இருந்தவனை – மரா மரா என உச்சரிக்கச் செய்து முடிவில் அந்த உச்சரிப்பு “ராம ராம” என உருமாறி ராமாயணம் பாடப்பட்டது என்பது வரலாறாகும். இது கட்டுக்கதையாகக் கூட இருக்கலாம். ஆனால் இதன்மூலம் வெளிப்படும் கருத்தே முக்கியமானதாகும். இறைநாமத்தின் பெருமையும், அதனை உச்சரிப்பதால் எப்படிப்பட்ட மனமும் மாறிவிடும் என்பதும் – அப்படி ஏற்படும் மாற்றம் ஒருவருக்கும் மட்டுமே பயன் கொடுக்காது உலகத்துக்கே பயனாகி – உலகிலே பரந்துபட்டளவிலான மாற்றங்களுக்கு வழிவகுத்தது என்பதை மறுக்கத்தான் முடியுமா?
வான்மீகி ராமாயணம் பல மொழிகளில் தழுவி மொழிமாற்றம் செய்யப்பட்டோ எப்படியோ எல்லாவிடங்களிலும் பரவிவிட்டது. அக்காவியம்- தான் எழுந்த காலத்திலிருந்து இன்றுவரை தன்னிகரற்றதாகவே யாவராலும் ஏற்றிப் போற்றப்படுகிறது. இராமாயணத்தில் வரும் இராமன் – தெய்வமாகிவிட்டான்; குடும்பங்கள் அனைத்தும் – இராமனைப்போலவே தங்கள் பிள்ளைகளும் இருக்கவேண்டும் என்று எண்ணத் தொடங்கிவிட்டனர். சீதை கற்புக்கு எடுத்துக்காட்டாகி விடுகிறாள். எத்தகைய வல்லமைகள் இருந்தாலும் நல்லவழியில் செல்லாவிட்டால் யாவும் பயனற்று விடுவதோடு – முடிவில் அழிவையே தந்துவிடும் என்பது – இராவணன் வாயிலாக உணர்த்தப்படுகிறது. இவை எல்லாம் இராமயணம் சமூகத்துக்குக் காட்டும் நெறிகளல்லவா!
வான்மீகி மாறினான். இராமாயணம் பிறந்தது. இராமாயணத்தால் மாற்றங்க ளுக்கு வழியுமேற்பட்டது. இம்மாற்றமானது சமயத்துடன் இணைந்து சமூகத்துக்கும் சென்றுவிட்டது. இதனால்தான் கோவில்கள்தோறும் இராமாயணம் கதையாகவும், கதாப்பிரசங்கமாகவும், வில்லுப்பாட்டாகவும், நாடகமாகவும் நிகழ்த்தப் பட்டுவருகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.
இராமாயணம் மாற்றத்துக்கு எப்படி வழிகோலியதோ – அதே போன்றுதான் மகாபாரதமும் அமைகிறது. அரச வம்சங்களின் போட்டா போட்டி, சண்டைபற்றி மகாபாரதம் கூறினாலும்- அதில் இடம்பெறும் “பகவத்கீதை” இந்துக்களின் வேதமாகவும், இருதயமாகவும் விளங்குகின்றது.
வாழ்க்கையெனும் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் யாவருக்கும் பகவத்கீதை மருந்தாக அமைகின்றது. மனத்தில் ஏற்படும் எண்ணங்கள் செயலைத் தீர்மானிக்கின்றன. அந்த எண்ணங்கள் நல்லதாக அமையின் செயல் நல்லபடி அமையும். அல்லாவிடின் தீய விளைவுகள் ஏற்படும். எனவே மனந்தான் யாவற்றுக்கும் அடிப்படை. மனத்தை நல்வழிப்படுத்தக் கீதை வழி சொல்லுகிறது.
கீதையின் போக்கே தனித்துவமானது. அதனால்தான் யாவரும் பொன்னேபோல் அதனைப் போற்றுகின்றனர். உலகியல் நடைமுறையில் சென்று – உள்ளத்தைத் திருத்தி உள்ளுக்குள் உறைந்துகிடக்கும் அழுக்குகளை அகற்றி – உலப்பிலா ஆனந்தம யமான இறையுணர்வை ஏற்படுத்தும் பெருமாற்றத்தை இன்றளவும் “பகவத்கீதை” ஆற்றிக் கொண்டிருக்கிறது. பாரதத்தில் இடம்பெறும் பஞ்ச பாண்டவர்கள் அறத்துக்கு எடுத்துக்காட்டாகவும், நூற்றுவரான துரியோதனன் ஆகியோர் மறத்துக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றனர். நோயைக் குணப்படுத்தும் மருந்து அளவில் சிறியதானாலும் – அதன் செயற்பாடு மிகப் பெரியது. இத்தத்துவம் மகாபாரதத்தால் உணர்த்தப்படுகிறது. அருமருந்தாக விளங்கும் இவைகள் மாற்றங்களுக்கு என்றும் வழிவகுத்தபடியேதான் இருக்கின்றன என்பது உண்மையல்லவா?
‘பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ ” – என்று போற்றப்படுபவர் சேக்கிழார். அரசபதவி வகித்தபோதும் அவர் மனத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் அரனடியையே சரணடைந்தார்.
கவித்துவம் மிக்க சேக்கிழார் – தனது சிந்தனையைச் சிவனடியார் பற்றிச் சொல்லுவதில் செல்லவிட்டார். அதன் விளைவாக எமது சமயம் பெற்ற வரப்பிரசாதம்தான் “பெரியபுராணம்” ஆக அமைகிறது. தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பதற்கு ஒப்ப – சிவனடியார்களின் வாழ்விலேற்பட்ட சம்பவங்களையும், அதனால் அவர்கள் எவ்வாறு மன மாற்றம் பெற்றார்கள் என்பதையும் – சேக்கிழார் காட்டும் விதத்தால் நிச்சயம் நாமும் மாற்றத்துக்கு ஆளாகிவிடுவோம்!
பெரியபுராணத்தில் வரும் அடியார்களின் மாற்றங்கள் யாவும் நிகழ்வதற்கு நிலைக்களனாக அமைந்தன சமயமும் கோவில்களும்தான்.
நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தரை மாற்றியதும் கோவில். நாவுக்கரசரை மாற்றியதும் கோவில். சுந்தரத் தமிழ்பாடிய சுந்தரர் மனம்மாறி ஆட்கொள்ளப்பட்ட இடமும் கோவில்தான். முதல் அமைச்சராக இருந்தவர் பட்டம், பதவி, அந்தஸ்து அத்தனையும் உதறிவிட்டு மனம் மாறிவந்து மணிவாசகராகி மணிமணியான திருவருட் பொதிந்த வார்த்தைகளை வழங்கினாரென்றால் அதற்கு வழிவகுத்ததும் கோவில்தான்.
அறுபத்துமூன்று நாயன்மாரின் வாழ்க்கையே மாற்றம் பெற்றமைக்கு – சமய நன்னெறியும் கோவில்களும்தான் முக்கியமான காரணமெனலாம்.இதனால்தான் அவர்கள் தமது வாழ்க்கையை இறைபணியிலும், கோவிலுடனும் இணைத்துக் கொண்டார்கள்.இவர்களது மாற்றம் சமூகத்தில் மாற்றத்துக்கும்- கோவில்கள் வளர்ச்சிபெறவும் பெருந்துணையாக இருந்தது எனலாம்.
சம்பந்தப்பெருமான் தொடக்கம் பல அடியார்களால் பாடப்பட்ட இறைவன் புகழ்சேர்க்கும் பக்திப் பனுவல்கள்தான் எமது சைவத் திருமுறைகள். கோவில்தோறும் அடியார்கள் சூழ்ந்துவரச்சென்று உழவாரப் பணிசெய்தும், இன்னும் பல தொண்டுகள் செய்தும் – இறைவன் பெரும்புகழைப் பரவிப் பாடியமைதான் திருமுறைகள்.
இவ்வாறு பாடப்பட்ட திருமுறைகள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பலரை மாற்றமுறச் செய்தது. இதனால் நன்னெறி வளர்ந்தது. கோவில் வழிபாடும் சிறப்படைந்தது. நாயன்மார்களின் தோற்றமும் அவர்களது செயற்பாடுகளும்தான் – இன்றளவும் நாங்கள் நல்லதொரு சமய வாழ்வை வாழவும் – அறவழியில் செல்லவும் – உதவியதை மறக்கமுடியாது. இவை நல்ல மாற்றங்கள்தானே!
(தொடரும்)
-
கேசவ் வண்ணம் – கிரேசி மோகன்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
தம்புரா(நாரதர்) சொன்னபடி தாவி விசும்பேறி(விசும்பு -வான்)
எம்பிரான் மீனால்(மச்சாவதாரர்)விண் மீன்’’….!மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
ஆணில்(புருஷோத்தமர்) சிறந்தோன் அளிப்பு….கிரேசி மோகன்….! -
கிளி ஜோஸ்யம் போய்ப் பாரீர்!
-கவியோகி வேதம்
கிளி ஜோஸ்யம் பார்ப்போனைக் கிறுக்(கு) என்பர்;
விஞ்ஞானம் வெளிச்சமிட்டுக் கூச்சலிடும் வேளை
இன்று!
அது மூடநம்பிக்கைதான்! எனினும், நண்பர்களே கெஞ்சுகிறேன்!
கும்பிடுவேன் உம்மைநான்! கூண்டுவைத்துப்
பிழைப்பவனைக்
கிறுக்கனாகப் பாராமல் கிளி ஜோஸ்யம் பாருமய்யா!
அருமையாய்க் குறிகேட்க அமருகிற வேளையில்தான்,
‘பறவை’ அதுஒருநிமிடம் பார்க்கிறது சுதந்திரத்தை!
குறி சொல்லி முடிந்தபின்போ, கொறிக்கிறது ஒரு நெல்லை!எங்கெல்லாம் கிளிக்கூண்டோ அங்கெல்லாம் போம் அய்யா!
அங்கு போய்ப் பாரும் உமததிர்ஷ்டத்தை இறைஞ்சுகிறேன்!
பிச்சைஎடுக்காமல் ஓர் பிழைப்பும் தெரியாமல்
எச்சில் கூட்டி உம்வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்
வறுமைஎனும் கூண்டிற்குள் வத்தலைப் போல் மெலிந்திருக்கும்
பிறருக்கே குறிசொல்லும் பித்தனையே போய்ப் பாரும்!அடிக்கடிப் போனால் இறை அடியாரே நீர் அன்றோ?
படி அளக்கும் பரமனுக்குப் பலதொண்டு செய்வதினும்,
பறவைக்கும், மனிதனுக்கும், ஒரே சமயம் உதவுவதால்
சொர்க்கத்தின் இருகதவை ஒரேகையால் திறக்கின்றீர்! -
மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்வு – 18 02 2017 சனிக்கிழமை
நாள்: 18 . 02. 2017 சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 – 7.30 வரை
இடம்: இந்திய அலுவலர் சங்கக் கட்டிடம்
69, திரு.வி.க. நெடுஞ்சாலை
இராயப்பேட்டை , சென்னை – 600014
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :
டாக்டர்.திருமதி. மணிமேகலை கண்ணன்
தொடர்பு எண்கள் : 9841036222 , 8939462185 -
10.01 மில்லியன் குழந்தைகள் சாவு!
பவள சங்கரி
இந்தியாவில் மட்டும் ஆண்டிற்கு 10.01 மில்லியன் குழந்தைகள் சுற்றுச்சூழல் (AIR POLLUTION) பாதிப்பினால், காற்று மாசுபாட்டின் காரணமாக உயிர் துறக்கிறார்கள். இது சீனாவைவிட அதிகம். தில்லியில் இதுபோல் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுத்ததுபோல இந்தியா முழுவதும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
-
VALENTINE DAY வாழ்த்துக்கள்….!
கிரேசி மோகன்
—————————————————————-
”சேனை தளபதியாய் ,சூரனைக் கொன்றுதெய்
வானை கரம்பிடித்து, வெட்டியாக. -கானிலே
வேலன்TIME PASSசெய்ய வள்ளியைக் காதலிக்க
VALENTINE DAYயாச்சு வே”(நெல்லைத் தமிழ்)….காதலும் துறவும்….!
—————————————–
’’ஊரைவிட்(டு) ஓடலால், ஒன்றிக் கலத்தலால்
யாரிடமும் கூறாமல் ஏற்பதால் -பாரினில்
சாதலை வென்று சமாதியில் நிற்பதால்
தீதிலாக் காதல் துறவு’’….கிரேசி மோகன்….VALENTINE DAY WALKING வெண்பா வழி வாழ்த்துக்கள்….!
—————————————————————-”வாக்கிங் வெண்பா”…..
——————————-‘’ஓடிடும் முப்பது, ஓய்வெடுக்கும் மூப்பது,
தேடிடும் டீனேஜ் துணையை, -மாடொடுநாய்,
பேச்சேதும் பேசாது பன்னே(BUN) குறிக்கோளாய்,
பீச்சில் அலையும் பசிக்கு”….கிரேசி மோகன்….”சேனை தளபதியாய் ,சூரனைக் கொன்றுதெய்
வானை கரம்பிடித்து, வெட்டியாக. -கானிலே
வேலன்TIME PASSசெய்ய வள்ளியைக் காதலிக்க
VALENTINE DAYயாச்சு வே”(நெல்லைத் தமிழ்)…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்அப்
பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலன்டைம்ஸ் நமக்கு என்றும் ‘’கேசவ்வால்’’….!”VALENTINE நாளின்று வேழம் முதலையை
மாலன்டைம்ஸ் ஆக்கி மடியிருத்தும் -நீலன்
பழகிடப் ஆனையே, பாய்ந்திடப் பல்முதலை
அழகிய சிங்கா அருள்….கிரேசி மோகன்….! -
எழிலரசி கிளியோபாத்ரா -2
எழிலரசி கிளியோபாத்ரா
[பேரங்க நாடகம்]
மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷாதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++
வயது ஏறினும் வாடாது அவள் மேனி
வழக்க மரபுகளால் குலையாதவள் எழில்.
வரம்பிலா விதவித வனப்பு மாறுபாடு!
அவளது உடல் வனப்பை விளக்கப் போனால்,
எவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது !
தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில்
ஆரணங்கு படுத்திருந்தாள், பொன்னிற மேனி !
இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம்,
வீனஸ் அணங்கினும் மேம்பட்ட சிலை !வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]
பெர்னார்ட் ஷாவின் சீஸர் & கிளியோபாத்ரா நாடகத் துவக்கவுரை
[மெம்ஃபிஸில் எகிப்தின் தேவாதிபதி கழுகுத் தலையுடைய “ரா” தெய்வத்தின் ஆலயம் [Chief Egyptian Deity “Ra”] இருளடைந்து போயுள்ளது. அங்கிருந்து ஓர் அசரீரிக் குரல் எழுகிறது]
“அமைதி! அமைதி! கேளுங்கள் நான் கூறப் போவதை! எகிப்த் நாடு ரோமாபுரிச் சாம்ராஜியத்தின் கீழிருந்தது. நான்தான் “ரா” தெய்வ அதிபதி. எகிப்த் நாட்டில் ஃபெரோ வேந்தர்களின் உன்னதப் பராக்கிரமக் கடவுளாக இருந்தவன், ஒரு காலத்தில்! நான் வணங்கப்பட்ட போது ரோம் நகரம் பண்டைய ரோமாபுரி, புதிய ரோமாபுரி என்று துண்டு பட்டிருந்தது! இரண்டிற்கும் இடையே ரோமானிய மாந்தர் நசுக்கப்பட்டுக் குழப்பத்தில் திண்டாடினர்! பண்டைய ரோமாபுரி ஏழ்மையானது, பேராசை பிடித்தது, கொடூரமானது! தீய எண்ணங்கள் மிக்கது! பாழடைந்த அதன் மனது குறுகியது! சிறுமையும், வறுமையும், இல்லாமையும் நிரம்பியது! பிச்சைக்காரன் குதிரையில் ஏறி அமர்ந்தைப் போலிருந்தது! குதிரையில் உட்கார்ந்த பிச்சைக்காரன் நேராக பிசாசுகளை நோக்கிச் செல்வான், என்று ஒரு பழமொழி சொல்கிறது!
பண்டைய ரோமாபுரி வெறுங்கையில் வாளேந்திச் செல்வம் திரட்டும் வழியும், புகழடையும் முறையும் எதுவென்றால், ஏழ்மை நாடுகள் மீது படை யெடுத்துத் திருடிக் கொள்ளை அடிப்பது, மெலிந்தோரை அடிமையாக்கி மிதிப்பது! ரோமானியர் ஏழை மக்களின் நிலங்களைப் பறித்து ரோமாபுரியோடு சேர்த்துக் கொண்டே வந்தார். எகிப்தில் அவ்விதம் ரோமா புரிக்கு அடிமை ஆனபோது, நான் வேதனையில் குமுறிச் சிரித்தேன். காரணம், ரோமானியர் சாம்ராஜியம் பெருகிக் கொண்டே வருகையில், சிறுத்துப் போன அவரது நெஞ்சங்களின் பரிமாணம் மாறாமல் அப்படியே இருந்தது! அடிக்க அடிக்கத் தலை குனியும் எகிப்துக்கு ஆதரவாக ஜூலியஸ் சீஸர் விஜயம் செய்தார்.
ரோமானிய மாந்தர் இரண்டுபட்ட ரோமுக்கு இடையே முரண்டு செய்த போது, வல்லமை கொண்ட போர்த் தளபதி பாம்ப்பி என்பவர் ரோமாபுரியில் மேலோங்கி வந்தார். பாம்ப்பி பண்டைய ரோமைக் கட்டுப்படுத்தி ஆண்டுவந்த தளபதி! படையாட்கள் யாவரும் நோக்கிப் போவது மரணத்தை! படைத் தீரர்களே சமூகத்தில் மேலோங்கி வரமுடியும்! பிறகு அதே சமயத்தில் போர்த் தளப்தி ஜூலியஸ் சீஸர் மேலோங்கி வந்தார். ஆனால் அவர் புதிய ரோமாபுரியின் தீரர்! கடவுளாகப் போற்றப்படும் ஃபெரோ மன்னரின் எகிப்தியப் பரம்பரைகள் புதிய ரோமையும், புதிய ரோமா புரியின் வீரர் ஜூலியஸ் சீஸரையும் ஆதரித்து வரவேற்றனர்! பாம்ப்பேயின் நண்பரான ஜூலியஸ் சீஸர் எகிப்திய மன்னர் சார்பில் பண்டைய ரோமின் குறுகிய கட்டுப்பாடுக்கு அப்பால் புதிய வழியில் சென்றார். சீஸர் ஒரு பெரும் பேச்சாளர், சிறந்த அரசியல்வாதி! அண்டை நாடுகளைக் கைப்பற்றிப் பொன்னும், பொருளும் ஏராளமாகச் சேமித்து ரோமில் கொட்டினார்! மேலும் நாடுகளைக் கைப்பற்றிப் போர் வெற்றிகளை அடுத்தடுத்துச் சீஸர் கொண்டு வரவேண்டும் என்று ரோமானியர் எதிர்பார்த்தனர். சீஸர் அந்த வாணிபத்தில் இறங்கி வெற்றிமேல் வெற்றி பெற்றுப் போரில் பலரைக் கொன்றார். கிரேக்க வீரர் மகாஅலெக்சாண்டரைப் போல், வெற்றிப்படைத் தீரனாகப் பேரும் புகழும் பெற்றுத் தன் பெயரை நிலைநாட்டினார்.
ஆனால் ரோமானியர் சட்டம், கடமை பற்றி எப்போதும் பேசிய பாம்ப்பியின் மீது சலிப்புற்றனர். “பண்டைய ரோமின் கடூரச் சட்டங்களை முறிக்க வேண்டும். அப்போது தான் நான் புதிய ரோம சம்ராஜியத்தை ஆள முடியும்! அவ்விதம் நேராவிட்டால் கடவுள் எனக்களித்த நாடாளும் கொடைப்பரிசு பலன் தராது அழிந்து விடும்,” என்று சீஸர் கலங்கினார். நாளடைவில் நண்பர்கள் பகைவர் ஆயினர்! பாம்ப்பி மறுத்துக் கூறினார்: “சட்டந்தான் எல்லாவற்றும் மேலானது. அதை நீ முறித்தால், நீ உயிரிழக்க வேண்டிய திருக்கும்.” என்று சீஸருக்கு எச்சரிக்கை செய்தார்! சீஸர் நிமிர்ந்து சொன்னார், “சட்டத்தை முறிக்கிறேன் நான்! யார் என்னைக் கொல்ல வருகிறார் என்று பார்க்கிறேன்,” என்று சவால் விட்டு சட்டத்தை முறித்தார்.பழைய ரோமின் விதிகளைப் பாதுகாக்கப் பாம்ப்பி பெரும் படை திரட்டிச் சீஸர் மீது போர் தொடுத்தார். சீஸர் ஏட்டிரியாடிக் கடலைத் தாண்டி நழுவி ஓடி விட்டார்! சீஸரைக் கவிழ்த்து, உலகத்தின் முன்பு அவர் முகத்தில் கரியைப் பூச பழைய ரோம் புறப்பட்டது! அதே சமயத்தில் சட்டத்தைப் பின்பற்றும், உன்னத உள்ளம் படைத்த பாம்ப்பியை உயர்த்தினர், பழைய ரோமானியர். பாம்ப்பி சீஸரை விரட்டிக் கொண்டு எகிப்துக்குச் சென்றார். சீஸர் பாம்ப்பியை எதிர்த்து எகிப்தில் போரிட்டார். கடைசியில் இரண்டு ரோமனியப் படைகளும் மோதின! பாருங்கள் பாம்ப்பியின் ரோம் ஒருபுறம்! சீஸரின் ரோம் எதிர்ப்புறம்! இரண்டில் எப்போர் வீரன் மிக்க வலிமை கொண்டவனோ, எகிப்து அவனோடு சேர்ந்து கொண்டு நலிந்தவனை நசுக்க முற்பட்டது. போரின் முடிவில் பாம்ப்பியின் பேராற்றல் நொறுங்கிச் சிதைந்தது. பாம்ப்பியை வஞ்சகமாக வரவேற்ற ரோமானியத் தளபதி லூசியஸ் செப்டிமியஸ் அவனைத் தோற்கடித்தான். முடிவில் பாம்ப்பி கொல்லப் படுகிறான். எகிப்து வெற்றி வீரர் சீஸரை வரவேற்று உபசரித்தது!
ரோமானியரின் உட்புறச் சண்டைகளைக் கேட்டு சலிப்படைந்தீரா? பாருங்கள், இதோ வருகிறாள், கிளியோபாத்ரா! அந்த ஒழுக்கமற்ற நங்கையின் கதையைக் கேட்க வேண்டுமா? வசீகர மங்கை கிளியோபாத்ராவின் வரலாறைக் கேட்க ஆசைப் படுகிறீரா? அவள் வாலிபம் பெறாத ஓர் வனப்பு மங்கை! ஆயா ஒருத்தி ஆட்டிப் படைக்கும் கைப்பொம்மை அவள்! எமது எகிப்து நாட்டில் சீஸர் இப்போது கால்வைத்திருக்கிறார். இனிமேல் வரும் கதையை நான் சொல்ல மாட்டேன். நீங்களே அதைக் காணப் போகிறீர்! அமைதியாக அமர்ந்து நாடகத்தைப் பாருங்கள். வருகிறேன் நான்! தயவு செய்து எனக்குக் கைதட்டாதீர்!
******************************
அங்கம்: 1 பாகம்: 2
நாடகப் பாத்திரங்கள்:ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]ஃபிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூஃபியோ: சீஸரின் லெஃப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]அபெல்லோடோரஸ்: ஒரு ஸிசிலியன்
பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அஃப்பிரிஸ்: மெம்ஃபிஸ் “ரா” தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்++++++++++++++++
நாடகக் காலம், நேரம், இடம்:
கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள பாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது!
நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், அவரது லெஃப்டினன்ட் ரூஃபியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான்.
பெல்ஸானர்: அதோ ரோனியப் படையினர்! யாரது ரோமானியப் படைகள் முன்னே பீடு நடையிட்டு வருவது? எங்கோ பார்த்த முகம் போல் தெரிகிறது. யாராக இருக்க முடியும்? போருடை அணியாத வயதான மனிதராகத் தெரிகிறது! அடே அப்பா! என்ன உயரம்? என்ன கம்பீரமான தோற்றம்? பின்னால் வருவர் யாரென எனக்குத் தெரியும். ராணுவ உடையில் இருப்பவர் ரூஃபியோ. ஜூலியஸ் சீஸரின் ரோமானிய லெஃப்டினென்ட்! ரூஃபியோவுக்கு முன்னால் சிங்கம் போல் நிமிர்ந்து வருபவர் யார்?
உதவிக் காப்டன்: காப்டன்! பார்த்தால் ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸர் போல் தெரிகிறது. ஆமாம், அவருக்குப் பின்னால் வருபவர் நிச்சயம், லெஃப்டினன்ட் ரூஃபியோதான். ஆனால் சீஸர் எதற்காக போருடை யின்றி, மாறு வேடத்தில் வருவது போல் வர வேண்டும்? … அதோ சீஸர் சிங்கச் சிற்பத்தின் முன்பாக நிற்கிறார். மனிதச் சிங்கத்தை உற்று உற்றுப் பார்க்கிறார் சீஸர்! அதன் கம்பீரத் தோற்றத்தைக் கண்டு பிரமித்து நிற்கிறார்!
ஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே! கால வெள்ளம் அடித்துச் செல்லாத ஸ்ஃபிங்ஸ் சிற்பமே! பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே! வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாக நிமிர்ந்து கண்ணிமைக்காது படுத்திருக்கிறாய்! முதிய உன் வயதுக்கும், பெருத்த உன் வடிவுக்கும் நான் தலை குனிந்து வணங்குகிறேன். பல நாடுகளைக் கைப்பற்றி நான் இப்போது உன் முன் நிற்கிறேன். உன் நாட்டை எங்கள் ரோமாபுரி அடிமைப் படுத்தினாலும், உன் முன் நான் தவழ்ந்து வரும் ஒரு சிறுவனே! பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டி ஃபெரோ மன்னர் உன்னைப் பாலைவனத்தில் உருவாக்க எத்தனை ஆண்டுகள் எடுத்தனரோ? எத்தனை ஆயிரம் பணியாட்கள் உன்னையும், உன் பின்னால் நிற்கும் பிரமிடையும் எழுப்பினாரோ? எத்தனை பேர் உங்களைப் படைக்கும் போது செத்தனரோ? உன்னை விட வயதில் நான் சின்னவன் ஆயினும், இந்தப் பாலை வனத்தில் உனக்கு நிகரானவன் நான்! சமமான வல்லமை படைத்தவன் நான்! நீ படுத்தே கிடக்கிறாய்! போர் தொடுத்தே நான் வாழ்கிறேன்! பொறுமையாக அமர்ந்து வேடிக்கை பார்க்கிறாய் நீ!
போராடிக் களைத்து ஓய்வெடுக்க வந்துள்ளேன் நானிங்கு! மகத்தான மனிதச் சிங்கமே! நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! சிறுவனாக உள்ள போது நான் உன்னைப் பற்றி அறிவேன்! உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு! இன்று அக்கனவு மெய்யானது! உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி! ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளம்! ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு! ரோம் உங்களது நாட்டால் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது! ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று! உன் மகத்துவம், உன்னதம் வாழ்க! உனது நாட்டுக்கு இரண்டு மன்னர்! ஆண் மன்னர் டாலமி! பெண் மன்னர் கிளியோபாத்ரா! அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட விழிப்பாக உள்ளார்! யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை! அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு 12 வயதாமே! அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா? விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான்? ஆமாம் கிளியோபாத்ராக்கு 20 வயதாமே! கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி?
+++++++++++++++++
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“பகவான் உவாச “….!
————————————————-”என்னை மறக்கா(து) எதையும் நினைக்காதே
உன்னைநான் உச்சிக்(கு) உயர்த்துவேன் -எண்ணை
திரியின்றி தானாய் எரியா(து) அதுபோல்
திரிநீஎண் ணைநான் தெளி’’….
“வேரோடு கிள்ளி விருட்சம் அகந்தையொடு –
போரோடு போராகப் போராடு -வீராநீ! –
வெற்றி உனக்கதை வீழ்த்துதல் தானன்றி –
சுற்றியுள்ள நூறு சடங்கு “…..கிரேசி மோகன் ….! -
அ.இ.அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவினரின் அபாரப் பணி!
பவள சங்கரி
தமிழக முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, ‘மிஸ்ட் கால்’ திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது 9289222028 என்ற கைபேசி எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்து விருப்பப்பட்ட பொது மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களில் 35 இலட்சம் மக்கள் மிஸ்ட் கால் அதாவது தவறவிட்ட அழைப்புகள் மூலமாக தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதில் 3 இலட்சம் அழைப்புகள் வெளி மாநிலங்கள் மற்றும் 2 இலட்சம் அழைப்புகள் வெளி நாடுகளிலிருந்தும் வந்துள்ளதாம். இதுமட்டுமன்றி நேரில் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ள பொது மக்களின் சுய விவரங்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அவைகளும் இதுவரையில் 3 இலட்சங்களைத் தாண்டியுள்ளதாம். தவறவிட்ட அழைப்புகள் மூலம் தமக்கு ஆதரவு தெரிவித்த பொது மக்கள் ஒவ்வொருவருக்கும் தமது குரல் பதிவு மூலம் நன்றியும் தெரிவித்துள்ளார் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் தேர்தல் காலங்களில் தமக்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கு தமது குரல் பதிவின் மூலம் நன்றி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.













