Blog

  • கட்டன்ஹாவும் மனைவியும்

    (அங்கோலா நாட்டுச் சிறுகதை
    எழுதியவர் – ராஉல் டேவிட்)

    ராஉல் டேவிட் (Raúl David) பற்றிய சிறுகுறிப்பு:

    ராஉல் மாத்யூ டேவிட் எனும் முழுப் பெயர் கொண்ட எழுத்தாளர் ராஉல் டேவிட் 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அங்கோலா நாட்டிலுள்ள பெங்குஎலா மாகாணத்தில் காண்டா எனும் பிரதேசத்தில் பிறந்தார். தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர் மேற்படிப்புக்காக கலாங்கு எனும் நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயர்கல்வியைப் பூர்த்தி செய்ததும் அரச சேவையில் இணைந்து பல தரங்களிலும் பணியாற்றியுள்ளார்.

    பணி நிமித்தம் நாட்டின் பல பிரதேசங்களுக்கும் பயணிக்க வேண்டியிருந்த காரணத்தால் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளவும் கிராமப்புறப் பண்ணைத் தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகவும், அவர்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ளவும் அவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவற்றை கட்டுரைகளாகவும் இலக்கியப் படைப்புக்களாகவும் எழுதி வந்தார். அவை பின்னாட்களில் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

    அங்கோலா எழுத்தாளர்கள் சங்கம் (UEA) உருவாகுவதற்கான பிரதான  காரணகர்த்தாவான இவர், பல்வேறு கலாசார, இலக்கிய செயற்பாடுகளிலும், ஆப்பிரிக்க – ஆசிய எழுத்தாளர்களின் ஒன்றுகூடலிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    இவரது தொகுப்புக்கள்:

    Colonized and settlers (1974), Poems (1977), Traditional Tales of Our Land (I) (1978); Narratives at random (1979), Traditional Tales of Our Land (II) ( 1981), Against the law and the flock (1988), Song of Our People, written versions of songs and poems in language Umbundu (1988), Song of Yesterday to Listen and Tell (1989), From Traditional Justice of Umbundus (1997), Benguela in time and space (2000) and Old Owl history.

    ***

     தமிழில்  -எம்.ரிஷான் ஷெரீப்

                அந்தச் சம்பவம் நடைபெறும்போது கட்டன்ஹா – டொம்பூலா தம்பதி, இஸாக் ஆற்றுக்கும், உலம்பு மலைக்குமிடைப்பட்ட செழிப்பான நிலப் பகுதியில் எழில் வாய்ந்த கிராமமான ‘டுங்கா’வில் வசித்து வந்தனர். நரைத்த தலைமயிரையும் நீண்ட அனுபவங்களையும் கொண்ட, அப் பிரதேசத்தில் பிரசவம் பார்க்கும் முதியவளான நெகும்மின் உதவியோடு அந்தக் குடும்பத்துக்கு குழந்தைகள் மூவர் இணைந்தனர்.

                அவர்களுக்கு வேண்டிய அனைத்துமே பரிபூரணமாக இருந்ததால், கட்டன்ஹாவோ டொம்பூலாவோ குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமான பல ஹெக்ரயர்கள் விசாலமான விவசாய நிலத்தில் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. விலங்குப் பண்ணையிலிருந்தும் நல்லதொரு வருமானம் கிடைத்தது.

                1937 வரைக்கும் அவர்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். 1937இல் திடீரென நடந்த ஒரு சம்பவத்தின் பலனாக அவர்களது அமைதியும் சந்தோஷமும் நிறைந்த உலகம் சிதறிப் போனது. அடிமைகளாக வேலை செய்விக்க மனிதர்களைப் பிடித்துப் போகும் சமயத்தில் கட்டன்ஹாவும் சிக்கிக் கொண்டான்.

    இவ்வாறாக மனிதர்களைப் பிடித்து அடிமை வேலைகளுக்காகக் கொண்டு செல்வதென்பது தேச மக்களுக்கு பெருந் துயரத்தைத் தருமொன்றாக இருந்ததோடு, ஓரோர் குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. வரிகளைக் கட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகியன மக்களை இவ்வாறு பிடித்துச் செல்வதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும் உண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சாந்தோம், ப்ரின்ஸஸ் தீவுகளில் அடிமை வேலைகளுக்காக ஆட்களைப் பெற்றுக் கொள்வதற்கேயாகும்.

                பிடித்துக் கொள்ளப்பட்டிருந்த மற்றவர்களோடு கட்டன்ஹாவும் ஆட்சியாளர் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டான். இவ்வாறு பிடித்துக் கொண்டு வரப்பட, தான் என்ன தவறு செய்தோமென கட்டன்ஹாவுக்குத் தெரியவில்லை. கையில் ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பிற்பாடு அவனுக்கு ‘சாந்தோம்’ நோக்கிச் செல்லும் கப்பலில் ஏற நேர்ந்தது.

                எல்லோரும் சாந்தோமில் இறக்கி விடப்பட்டனர். கட்டன்ஹா, கோப்பி மற்றும் கொக்கோ தோட்டமொன்றில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டான். அது மிகவும் கடினமானதொன்றாக இருந்தது. இரவில் திரும்ப முகாமுக்கு வருகையில் அவனுக்கு எவ்வளவு களைப்பாக இருப்பினும், அதையெல்லாம் மறந்து அவனது பிறந்த பூமியான டுங்கா பற்றி நினைத்துக் கொண்டிருப்பான். அவனது உடல் சாந்தோமில் இருந்த போதிலும், அவனது இதயமும், எண்ணங்களும் முழுமையாக அவனது மனைவியிடமும், மூன்று குழந்தைகளிடமுமே வசித்தன. அவன் தனிமையை உணர்ந்தான். எப்பொழுதாவது விடுதலை கிடைத்து திரும்பிச் செல்லும் இலக்கோடு அவன் தைரியமாக வேலை செய்தான். அவனது தைரியம் உறுதிப்பட்டுக் கொண்டு வந்ததோடு, அவன் ஐந்து வருடங்கள் சாந்தோமில் வேலை செய்திருந்தான்.

               ஐந்து வருடங்கள் மட்டுமே கழிந்து போயிருந்தன.  தனித்திருந்ததன் காரணத்தால் அவன் அந்த வருடங்களைப் பத்தாக உணர்ந்திருந்தான். இதற்கிடையில் அவனது மனைவி டொம்பூலா பற்றி எந்தத் தகவலையும் அவனால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் தனது குழந்தைகள் மூவருடனும் இன்னொருவனுடன் வாழத் தொடங்கியிருந்தாள்.

                டொம்பூலா மனம் கவரும் அழகுடன் கூடிய இளம் யுவதியாக இருந்தாள். செழிப்பாக வளர்ந்த மேனியைக் கொண்ட அவள் அப்பாவித் தோற்றமுடையவளாக இருந்தாள். அதனால் இம்மனிதன் அவள் பின்னால் சென்றது ஆச்சரியப்படத்தக்க விடயமொன்றல்ல. தனது மனதைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவள் ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்த போதிலும், பிறகு அவனது யோசனையை ஏற்றுக் கொண்டாள். அன்பானவனாக இருந்த அவன், அவளையும் மூன்று குழந்தைகளையும் நன்றாகக் கவனித்துக் கொண்டான்.

                சாந்தோமில் கட்டன்ஹா ஆறு நாட்களும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவன் ஓய்வெடுத்தான். வீடு குறித்த வருத்தம் இருந்தபோதிலும் அவன் சுற்றுச் சூழலுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டான். கௌரவமான குடும்பமொன்றிலிருந்து வந்த அவனுக்கு அது இலகுவாகவும் இருந்தது.

                காலங்கள் கழிந்தன. வழமை போல ஓர் தினம், விடியலுக்கு முன்பு அவன் வரிசையில் இணைந்திருந்தான். கொக்கோ பழங்களைச் சேகரிக்கும் பை அவனது தோளைச் சுற்றித் தொங்கிக் கொண்டிருந்தது. கை விளக்கொன்றை வைத்திருந்த மேற்பார்வையாளர், தோட்டத்தில் வேலை செய்யும் எல்லாத் தொழிலாளர்களையும் முகாமையாளர் அழைத்துவரச் சொல்லியிருப்பதாக அறிவித்தார். எதிர்பார்த்திராத இந்த அழைப்பு குறித்து அம் மனிதர்கள் அச்சமுற்றனர். இதற்கு முன்பு நிகழ்ந்தது போல இதுவும் அவர்களுக்கு துயரம் விளைவிக்கும் நோக்கோடு அழைக்கப்படும் அழைப்பாக இருக்கக் கூடும்.

                முகாமையாளரின் அலுவலகத்துக்கு அருகில் வரும்போது மற்றத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் அங்கு கூடியிருப்பதை அவர்கள் கண்டனர். ஒருவருக்கொருவர் கதைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டிருந்ததால், அவர்கள் அச்சத்தோடு அமைதியாக இருந்தனர்.

                அவர்கள் மீண்டும் வரிசையில் ஒன்று கூடினர். நீண்ட நேரத்துக்குப் பிறகு அலுவலகத்தின் கீழ் மாடி யன்னலில் முகாமையாளர் தோன்றினார். அவர் கண்களைக் கசக்கி முற்றத்தில் கூடியிருந்த மக்களைப் பார்த்து விட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றார்.

                அரை மணித்தியாலமளவில் கழிந்த பிறகு திரும்பவும் அவர் யன்னலின் முன்னால் தோன்றினார். அவரது மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றிய மேற்பார்வையாளரும் அவரது அருகிலேயே நின்றார். மேற்பார்வையாளரின் கரங்களில் கடதாசித் தாள்களின் கட்டொன்று இருந்ததோடு, அவர் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார். அவரது பெயர் சொல்லி அழைக்கும் ஓசையோடு அங்கிருந்த அமைதி சிதறிப் போனது.

                டொங்குவா – இருக்கிறேன்
    மெகிண்டோ – இருக்கிறேன்
    நயீம் – இருக்கிறேன்
    உகம்பா – இருக்கிறேன்
    டுன்கோ – இருக்கிறேன்
    கொரன்கா – இருக்கிறேன்
    உலொம்பா – இருக்கிறேன்
    கலொன்கா – இருக்கிறேன்

              அநேகமாக நூறு பெயர்கள் தாண்டிய பின்பு கட்டன்ஹாவின் பெயரும் அழைக்கப்பட்டது. நீண்ட நேரமாக பெயர் கூப்பிட்டு முடிந்ததன் பிற்பாடு முகாமையாளர் உரையாற்றினார். அவர் ஒவ்வொரு வசனமாக தெளிவாக உச்சரித்து அறிவிப்பொன்றை நிகழ்த்தினார். வரிசையில் நின்றிருந்த மக்கள் தங்கள் கழுத்துக்களை நீட்டி முகாமையாளர் சொல்வதை மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளருக்கு செவிமடுத்தனர்.

                “இப்பொழுது உங்களால் அங்கோலாவுக்குத் திரும்பிச் செல்ல முடியும். நீங்கள் இங்கு இருக்க வேண்டிய காலம் நிறைவடைந்து விட்டது. உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தொகை இப்பொழுது கிடைக்கும். அதன் பிறகு உங்களால் கப்பலேற முடியும். புரிந்ததா?”

               மேற்பார்வையாளரின் மொழிபெயர்ப்பு முடிவதற்கும் முன்பு, மக்களிடையே தவழ்ந்த அமைதி உடைந்து போயிற்று. அவர்களது உடனடி ஆரவாரத்தை, நீண்ட காலம் சிறையிலிருந்து விடுதலையாகும் ஒருவராலேயே புரிந்துகொள்ள முடியும். கட்டன்ஹாவின் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர் நிலத்தோடு கலந்தது. இப்பொழுது அவர்கள் மீண்டும் பயணத்துக்குத் தயாராக வேண்டும். அவர்களுக்கு பணத்தின் ஒரு பகுதி கிடைத்ததோடு, நகரத்துக்குச் சென்று அப் பணத்தால் ஏதாவது விலைக்கு வாங்கிக் கொள்ளவும் முடியுமாக இருந்தது. மீண்டுமொரு முறை பெயர் கூப்பிடப்பட்டு, அவர்களுக்கு கடற்பிரயாண அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டது.

                பணமும், அனுமதிப் பத்திரமும் கிடைத்ததன் பிற்பாடு ‘லுஸிலா’ எனும் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. ‘லுஸிலா’ கப்பலானது நிறைய துறைமுகங்களில் பொருட்களை இறக்குவதற்காகவும், ஏற்றுவதற்காகவும் தரித்திருந்ததன் காரணத்தால், அதற்கு ‘லெபிடோ’ துறைமுகத்துக்கு வந்து சேர மூன்று வாரங்கள் பிடித்தது.

                கப்பலிலேறிய இருபத்தோராவது நாளின் மாலை ஆறு மணிக்கு ‘லுஸிலா’ கப்பலானது, அங்கோலாவுக்கு வந்து ‘லெபிடோ’ துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியது. அதன்பிறகு அம் மக்களுக்கு துறைமுகத்தின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. சுங்கப் பரிசோதனைகளின் பிற்பாடு அவர்கள் வெளியே திறந்து விடப்பட்டார்கள்.

                கட்டன்ஹாவும் இன்னும் சிலரும் பேருந்தொன்றில் ‘பொகோய்’ நகருக்குச் சென்று, அவர்களது வருகை குறித்து அங்கிருந்த குடியுரிமை நிலையத்தில் தெரிவித்தார்கள். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கடைத் தெருவுக்குச் சென்றார்கள். அங்கு கட்டன்ஹாவுக்கு அவனது பழைய நண்பர்கள் சிலரையும், நெருங்கிய உறவினர்கள் சிலரையும் சந்திக்கக் கிடைத்தது. கட்டன்ஹாவின் பிறந்த ஊரான ‘டுங்கா’ கிராமத்திலிருந்து வியாபார நிமித்தம் பொகோய் நகரத்துக்கு வந்திருந்த கட்டன்ஹாவின் மிக நெருங்கிய உறவினரொருவனும் இவர்களிலொருவன்.

                வியப்போடு ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்ட கட்டன்ஹாவும், அவனது உறவினனும் கதைப்பதற்கு நிறைய விடயங்கள் இருந்தமையால் அருகிலிருந்த மதுபானச்சாலைக்குச் செல்லத் தீர்மானித்தனர். அங்கு அவர்கள் காலமானவர்கள் குறித்தும், காணாமல் போனவர்கள் குறித்தும் கதைத்ததோடு, இறுதியில் அவனது மனைவி குறித்தும் கதைத்தனர். நன்றாக மதுவெறியிலிருந்த கட்டன்ஹாவின் உறவினன் உளறத் தொடங்கினான்.

                “டொம்பூலா இப்பொழுது பெங்குலாவின் மனைவி. அவள் இப்பொழுது மூன்று பிள்ளைகளோடும் பெங்குலாவுடன்தான் இருக்கிறாள். அவர்களுக்கும் இப்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.”

       கட்டன்ஹாவின் முள்ளந்தண்டினூடு வேதனையொன்று பெருக்கெடுத்துச் சென்றது. மின்சாரம் தாக்கியது போல அவன் உணர்ந்தான். மது அருந்தியிருந்ததால் அவனால் கதைக்க முடியவில்லை. கட்டன்ஹா அதியுச்ச தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இந்த அசுபத் தகவல் குறித்து கதைக்க முயற்சித்தான்.

                “அதற்குப் பரவாயில்லை. நான் இதனை மிக நல்ல முறையில் தீர்த்து வைக்கிறேன். எப்படியிருப்பினும் அவள் எனது பிள்ளைகளின் தாய் அல்லவா!”

               அவனது உறவினன் தனது முட்டாள்தனம் குறித்து கவலையுற்றதோடு அது பற்றித் தொடர்ந்தும் கதைப்பதைத் தவிர்க்க முயற்சித்தான். கட்டன்ஹாவின் பொறுப்புணர்வு அவனை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. டொம்பூலா, தான் முகம் கொடுக்க நேர்ந்திருக்கும் விதிக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தாள். அவள் தனது வாழ்வில் மிகத் துன்பகரமான நிலைமைக்கு முகம் கொடுத்திருந்தாள்.

                பெங்குலாவும் இந் நிலைமைக்கு முகம் கொடுக்கத் தயாராகவேயிருந்தான். குழாயை உறிஞ்சியபடியிருந்த அவனது மனதில் பல வித எண்ணங்கள் நிரம்பி வழிந்தன. கட்டன்ஹாவின் மீள்வருகை குறித்து அறியக் கிடைத்ததன் பிற்பாடு அவன் மோசமான செயல்களுக்குக் கூடத் தயாராக இருந்தான். கட்டன்ஹாவுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் அவன் தீர்மானித்திருந்தான்.

           தனக்கு தகவலைச் சொன்ன உறவினனுக்கு விடைகொடுத்த பிறகு, கட்டன்ஹா நடந்தே டுங்கா நோக்கி வந்தான். அவன் தனது குலத்தில் பெரியவரான ‘க்விடபோ’விடம் வரும்போது இருள் சூழ்ந்திருந்தது. நாய்கள் குரைக்க ஆரம்பித்ததோடு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஆண்பிள்ளைகள் இருவர் யாரென்று பார்க்க வெளியே வந்தனர். கட்டன்ஹாவை வரவேற்க பெரியவர்கள் முன்னே வந்தனர். அவர்கள் மிக மகிழ்வோடு கட்டன்ஹாவை வரவேற்றனர்.

             மறுநாட்காலையில் அதிகளவு மக்கள் அங்கு கூடினர். அபாயங்களுக்கு முகங்கொடுக்காமல் பத்திரமாகத் திரும்பி வர முடிந்ததையிட்டு அவர்கள் கட்டன்ஹாவை வாழ்த்தினர். சில தினங்கள் கட்டன்ஹாவுக்கு உறவினர்களிடமிருந்து பரிசுப் பொருட்கள் கிடைத்தன. அவனால் தனது வீட்டுக்குச் செல்வதை அதற்கு மேலும் தாமதப்படுத்த முடியவில்லை.

                அவன் பயணித்த ஒற்றையடிப் பாதையானது மேடுபள்ளங்களால் நிறைந்தது. மலையுச்சிக்குச் சென்ற பொழுது கீழுள்ள பிரதேசம் மிக அழகாகக் காட்சியளித்தது. எதுவும் மாறியிருக்கவில்லை. வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட அவன் வெட்டியிருந்த வாய்க்கால்கள் அப்படியே இருந்தன. அவன் தனது வீட்டுக்குச் செல்லும் பாதையில் திரும்பினான். உண்மையில் அங்கு வீடொன்று இருக்கவில்லை. அங்கிருந்தது, அவனது அழிவுற்ற பழைய வீட்டின் சேதாரங்கள் மட்டுமே. அவனது உடைமைகள் அனைத்தும் சேதமுற்றிருந்தன.

              வேலி உடைந்து வீழ்ந்திருந்தது. வாசலருகே இருந்த கற்தொடர்களைக் கொண்டுதான், வீடு இருந்த இடத்தை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. வீட்டின் கூரை, நிலத்தில் வீழ்ந்து கிடந்தது. அவன் தனது கரங்களால் நீண்ட காலத்துக்கு முன்பு கட்டிய வீடு, அழிவுற்ற சேதாரங்களின் குவியலாக இருந்தது. அவனது கண்களில் கண்ணீர் நிறைந்தது. முன்பிருந்தவாறே வீட்டைக் கட்டியெழுப்ப அவன் தீர்மானித்தான்.

                ஆனால் எல்லாவற்றும் முன்பு, அவன் டொம்பூலாவைக் காண வேண்டும். அவளும், அவளது பிள்ளைகளும் அவன் உயிர்வாழ்வதைக் காணும் மகிழ்வை அனுபவிக்க வேண்டும். அவர்கள் முன்பு போலவே மகிழ்வோடு இருக்க வேண்டும். அவனால் இன்னும் பார்த்திருக்க முடியாது. அவசரமான தீர்வொன்றை எடுக்க வேண்டும்.

                அவனது மனைவி சம்பந்தமாக எடுக்கக் கூடிய மிகச் சிறந்த தீர்வு குறித்து அவன் மிக ஆழமாகச் சிந்தித்தான். அவனுக்கு இப் பிரச்சினையை தனது மனைவியுடன் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள முடியுமெனினும், அவளது புதிய கணவனின் எதிர்வினை எவ்வாறானதாக இருக்கும்? இப் பிரச்சனையைச் சட்டத்தின் முன் வைக்குமிடத்து அங்கு எழும் தர்க்கங்களுக்கும், வேண்டுகோள்களுக்கும் முடிவற்றுப் போகும். உண்மையில் இரு சாராருக்கும் சாட்சிகள் இருக்கிறார்கள். எனினும் இறுதியில் ஒரு சாரார் தோற்றுப் போவர்.

                பைத்தியக்காரனொருவனைப் போலத் தனது மனைவியையும், பிள்ளைகளையும் கட்டன்ஹா நேசித்தான். அவர்கள் எப்பொழுதும் தனக்காகவே இருப்பார்களென அவன் நம்பினான். தான் வழக்கில் வெல்வதென்பது நிச்சயமென அவனுக்குத் தோன்றியது.

                அடுத்தநாள் காலை அவன் பணத்தையும் எடுத்துக் கொண்டு பொனோய் நகருக்குச் சென்று குடியுரிமை நிலையத்துக்குள் நுழைந்தான். அன்றைய தினமே மாலையில் அவன் நீதிமன்றத்தில் மொழிபெயர்த்துச் சொல்பவரைச் சந்தித்தான். கட்டன்ஹா, தான் வந்திருக்கும் காரணத்தை முழுமையாக அவரிடம் கூறினான். கட்டன்ஹாவுக்குத் தேவை, அவனது மனைவியையும் பிள்ளைகளையும் அவனிடமே பெற்றுக் கொள்வதுதான்.

                மறுநாட்காலை கட்டன்ஹா குடியுரிமை நிலையத்தின் வாயிலருகிலிருந்த வரிசையில் இணைந்து தனது முறை வரும்வரை காத்திருந்தான். மொழிபெயர்த்துச் சொல்பவருடன் கலந்துரையாடியதன் பிற்பாடு கட்டன்ஹாவின் வழக்கு முன்னிறுத்தப்பட்டது. பெங்குலாவுக்கும், டொம்பூலாவுக்கும் நீதவான் மூலம் அழைப்பாணைக் கடிதத்தை அனுப்புவதற்கு குடியுரிமை நிலைய அதிகாரி கட்டளையிட்டார்.

                அவர்களிடம் அழைப்பாணைக் கடிதத்தை கொண்டு சேர்ப்பதற்கு நீண்ட தூரம் செல்லவேண்டியிருந்ததால் அதற்காகவே ஒரு நாள் செலவழிந்தது. அழைப்பாணைக் கடிதமானது, பெங்குலா எதிர்பார்த்திருந்த ஒன்றே. என்ற போதிலும் அவன் இதற்குச் சற்றுப் பயந்தான். ஏனெனில் நீதி நிலைநாட்டப்படுவது மிகவும் அபூர்வமானது என்பதனால்தான். டொம்பூலா, பெங்குலாவின் எதிர்வினையை அறிந்துகொள்ள விரும்பினாள் எனினும் அவனிடம் செல்லும் வழிமுறை அவளுக்குத் தெரியவில்லை.

                அவர்கள் இருவருக்கும் பொனோய் நகருக்குச் செல்ல ஒரு தினம் எடுத்தது. முதலாவதாக அவர்கள் மொழிபெயர்ப்பாளரைச் சந்தித்து, வழக்கை விசாரிப்பதற்கான தினமொன்றைக் குறித்துக் கொண்டனர். குடியுரிமை நிலையத்தின் அதிகாரி விசாரிப்பதெல்லாம் அவசர வழக்குகளை மாத்திரமே. கிடைக்கும் முறைப்பாடுகளைப் பரிசீலிப்பதிலேயே அவரது காலம் கழிந்தது.

                பெங்குலாவும் டொம்பூலாவும் மூன்று நாட்கள் அங்கு இருந்ததோடு இறுதியில் அவர்களது வழக்கு விசாரிக்கப்பட்டது. முதலில் கட்டன்ஹாவும் அடுத்தது பெங்குலா, டொம்பூலா மற்றும் ஐந்து பிள்ளைகள் என முறைப்படி விசாரிக்கப்பட்டனர். முறைப்பாட்டையும் சித்தாஸியையும் வாசித்துப் பார்த்த நீதவான் எல்லோரையும் நோக்கினார்.

                ” இங்கு கட்டன்ஹா என்பது யார்?”

                ” நான்”

                “அவ்வாறெனில் உனது கதையைச் சொல்.”

                கட்டன்ஹா அவனது கதையை விவரித்தான். தான் சாந்தோமுக்கு அனுப்பப்பட்ட விதத்தையும், அங்கு ஐந்து வருடங்களைக் கழிக்க நேர்ந்த விதத்தையும் அவன் விவரித்தான். அவன் வீட்டைவிட்டு வெளியே இருந்த காலத்தில் வீட்டிலிருந்து எந்தத் தகவலும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் திரும்பவும் வந்தபோது அவனது மனைவி இன்னுமொருவனைத் திருமணம் செய்திருப்பதை அறியக் கிடைத்தது.

               நீதவான் அவனது உரையின் மொழிபெயர்ப்பைக் கேட்டுக் கொண்டிருந்தார். இது மற்ற வழக்குகளைப் போலவே அவருக்குச் சாதாரணமான ஒன்று. அவரது முப்பது வருட சேவை அனுபவத்தில் இவ்வாறான சம்பவங்கள் இத்தேச மக்களிடத்தில் சாதாரணம்.

              ” உனக்கு உனது முதல் மனைவி அவசியமாக இருப்பது ஏன்?” அவர் வினவினார்.

               “எனக்கு அவள் அவசியமானவள். அவளை எனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.” தயங்காது கட்டன்ஹா பதில் கூறினான். கட்டன்ஹாவின் பதிலிலிருந்து அவனுக்குள்ளிருந்த குருட்டுத்தனமான நம்பிக்கை தெளிவாக வெளிப்பட்டது.

      “எதிராளியிடமிருந்து நஷ்ட ஈடாக என்ன பெற்றுக்கொள்ள விரும்புகிறாய்?”

               “எனக்கு அவனிடமிருந்து எதுவுமே தேவையில்லை. நான் சாந்தோமிலிருந்த ஐந்து வருடங்களிலும் எனது குழந்தைகளை அவன் பராமரித்ததற்கு நான் அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்” கட்டன்ஹா பதிலளித்தான்.

          எதிர்பாராத இப் பதிலால் எல்லோருமே ஆச்சரியத்துக்குள்ளானார்கள். ஒரு கணம் அமைதி நிலவியது. நீதவான் விழிகளைச் சுழற்றி ஆச்சரியத்தோடு பார்த்தார்.

                “டொம்பூலா நீயா?”

                “ஆமாம்”

                ” நீ என்ன சொல்ல விரும்புகிறாய்? இவர்களில் யாரை நீ கணவனாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறாய்? கட்டன்ஹாவையா? மற்றவனையா?”

             “நான் முதல் கணவனைத் தேர்ந்தெடுக்கிறேன். அவர் எனது மூத்த குழந்தைகளின் தந்தை” டொம்பூலா தயங்காது பதிலளித்தாள்.

                அந்தக் கணத்திலேயே கட்டன்ஹாவின் பிள்ளைகள் மூவரும் தமது தந்தையின் பக்கம் சென்றனர்.

                “சரி. உனக்கு, உனது இரண்டாவது திருமணத்தின் மூலமும் இன்னும் குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா?” டொம்பூலாவின் எதிர்வினையைப் பார்த்தவாறு நீதவான் வினவினார்.

                “ஆமாம். இன்னும் இருவர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எனது மூத்த குழந்தைகளின் சகோதரர்கள்தானே”

                வழக்கு வேறோர் திசைக்கு திரும்புவதைப் போலத் தோன்றியது. இதனால் எதிராளியை அழைப்பதற்கு நீதவான் தீர்மானித்தார்.

               “இப்பொழுது உனது தீர்மானம் என்ன?”

            “நான் தீர்மானமொன்றை எடுப்பதில்லை. நான் இப் பெண்ணைத் திருமணம் முடித்தது அவள் தனியாக இருந்த காலத்திலேயே. இப்பொழுது அவளது சட்டபூர்வமான கணவன் வந்திருப்பதால் என்னால் எதுவும் சொல்ல இயலாது. உங்களது முடிவை வேண்டுகிறேன்.”

                குழம்பிப் போன நீதவான் மீண்டும் கட்டன்ஹாவை அழைத்தார்.

         “கட்டன்ஹா, இதற்குப் பிறகு எதிராளியின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது யார்?”

              “நான் அந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிறேன். அப் பிள்ளைகள் எனது மனைவி பெற்ற பிள்ளைகள். ஆகவே அந்தப் பிள்ளைகளின் உரிமை எனக்குத்தான். அவனுக்கு எந்த நேரத்திலும் வந்து அப் பிள்ளைகளைப் பார்த்துச் செல்லலாம்.”

               நீதவான் தலையசைத்தார். அமைதி மீண்டும் அரசாண்டது. இப்பொழுது நீதவான் புத்திசாலித்தனமான, கருணை மிக்க  முடிவொன்றை எடுக்கவேண்டிய நிலையிலிருந்தார். அவர் சிறிது நேரம் சிந்தித்தார்.

              “சிலவேளை நீ இதன்பிறகு எதிராளியுடன் பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வாயா?”

              “எதற்காக? எனது பிள்ளைகளை வளர்த்தெடுத்ததற்கு நான் அவனுக்குக் கடன்பட்டிருக்கிறேன். நான் அவனை எனது நண்பனொருவனாகத்தான் உபசரிப்பேன். அவனும் அப்படியே எண்ணுவானென நான் நினைக்கிறேன்.”

                “பெண்ணே, நீ பெங்குலாவிடம் பராமரிப்புப் பணம் ஏதாவது கேட்கவில்லையா?”

                “இல்லை. ஏனெனில் அவர் இன்றிலிருந்து எனது மூத்த பிள்ளைகளின் சகோதரர்களுடைய தந்தை.”

                “ம்ம்”

                எல்லோருக்குமே ஒற்றுமையாக வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைத்ததோடு எவரிடமிருந்தும் எந்தக் கட்டணமும் அறவிடப்படவுமில்லை.

    Share
  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

     

     

    aj

    பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

    ++++++++++++++++++

     

    28] முதிய கயாமுடன் வா, ஞானிகள் பேசட்டும்.

    ஒன்று மட்டும் உறுதி, ஓடுகிறது வாழ்க்கை

    மற்றவை பொய்யாகும் என்பதும் உறுதியே

    ஒருமுறை உதிர்ந்த பூ நிரந்தரச் சருகு !

    XXVIII. [28]
    Oh, come with old Khayyam, and leave the Wise
    To talk; one thing is certain, that Life flies;
    One thing is certain, and the Rest is Lies;
    The Flower that once has blown forever dies.

    +++++++++++++++

    [29] அடிக்கடி வாலிபத்தில் ஆர்வமாய் வாதிப்பேன்

    அதைப் பற்றித்தான் மேதையர், புனித ரோடு;

    தருக்கம் மீண்டும் மீண்டும் புரிந்தும் என்றும்

    திரும்பத் திரும்ப வந்தேன் புகுந்த வாசல் வழி !

    XXIX. [29]
    Myself when young did eagerly frequent
    Doctor and Saint, and heard great Argument
    About it and about; but evermore
    Came out by the same Door as in I went.

    ++++++++++++

    [30] ஞான விதைகளை விதைத்தேன் அவருடன்,

    மெய்வருந்தி உழைத்து அவற்றை வளர்த்தேன்;

    கிடைத்த அறுவடை எனக்கிது மட்டுமே:

    நீராக வந்தது, காற்றாகப் பறந்தது.

    XXX. [30]
    With them the Seed of Wisdom did I sow,
    And with my own hand labour’d it to grow:
    And this was all the Harvest that I reap’d –
    ‘I came like Water and like Wind I go.’

     

    +++++++++++++++

    Share
  • படக்கவிதைப் போட்டி – 100

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    16831666_1240788995975297_1240254648_n

    112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.02.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (44)

    நிர்மலா ராகவன்

    கோபம் பொல்லாத வியாதி

    நலம்-2-1
    கோபம் மனித இயற்கை. சிறு குழந்தைகூட பசி வரும்போது, அழுது, தன் தேவையை வெளிப்படுத்தும். உடனே பால் கிடைக்காவிட்டால், கோபம் அதிகரிக்க, அழுகையும் பலக்கும்.

    `நான் கோபக்காரன். அதற்கு என்ன செய்வது? கோபம் இயற்கைதானே!’ என்று, கோபத்தை அடக்கத் தெரியாது, வன்முறையில் இறங்குபவர்களும் உண்டு.

    இது எந்த விதத்தில் சரி? கோபம் ஆத்திரமாக மாறும்போது, பிறரும் அதனால் பாதிக்கப்படுகிறார்களே!

    தார்மிக கோபம்

    தீயது என்று தெரிந்தே சிலர் செய்யும் காரியங்களால் நாம் அடையும் கோபம் இது.

    `ஒன் வே’ (One Way) என்று போட்டிருந்தாலும், எல்லாரும் தவறான வழியில் அத்தெருவில் காரோட்டிப் போகும்போது, `நான்தானே சரியாகப் போகிறேன்!’ என்ற மிதப்புடன் ஒருவன் சென்றால் யாருக்குக் கெடுதல் விளையும்? அவர்களைப் பின்தொடராது, வேறு வழியைப் பார்த்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

    பதின்ம வயதினல் பலரும் உலகம் எப்படியெல்லாம் சிறந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்திருப்பார்கள். அது பொய்த்து, `உலகம் இவ்வளவுதானா!’ என்று தோன்றிப்போவதை ஏற்க முடியாதபோது, கோபம் வருவது இயல்பு.

    ஆனால், அதை மாற்ற முடியாது என்கிற உண்மை புரியும்போதும் அந்தக் கோபத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருப்பதால் யாருக்கு நன்மை? கோபத்தை ஒத்திப்போட்டால், அதன் தீவிரம் குறையும். மாற்று வழியும் புலப்படும்.

    கதை

    ஒரு முறை நாங்கள் குடும்பத்துடன் மிருகக்காட்சி சாலைக்குப் போயிருந்தபோது, மலாய் இளைஞன் ஒருவன் தன் கைநிறைய சிறு சிறு கற்களை வைத்துக்கொண்டு, கூண்டுக்குள் இருந்த குரங்குக்குட்டிமேல் எறிந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அது வலியில் துடித்துக் கத்தியபடி வேறு இடத்துக்குத் தாவியபோது, உரக்கச் சிரித்தான். பக்கத்திலிருந்த காதலியைப் பார்த்துப் பெருமிதத்துடன் பார்த்தான் — என்னமோ தன் வீரத்தால் அவளை அசத்த நினைத்தவன்போல்.

    எங்களால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

    அவன் காதில் படும்படி, “மிருகங்களைப் பிடிக்காதவர்கள் இங்கு (Zoo) வந்திருக்கவே கூடாது!” என்று ஆங்கிலத்தில் கடுமையாகச் சொன்னாள் என் மகள்.

    முகம் சிறுத்துப்போக, அவன் அங்கிருந்து விரைந்தான்.

    நிராசையே கோபம்

    ஒன்றரை வயதுக் குழந்தையான பாலன் ஓயாது ஏதேதோ பேசினான். மழலையில் அவன் கூறியது தாய்க்கு விளங்கவில்லையே என்று அழுதும் பார்த்தான். அப்படியும் பலனில்லாது போகவே, நிராசை கோபமாக மாறியது.

    அம்மாவைக் கோபித்துக்கொள்ள முடியுமா?

    தன்மேலேயே கோபம் வர, நெற்றியைச் சுவற்றில் முட்டிக்கொள்ள ஆரம்பித்தான். நெற்றி புடைத்துப்போயிற்று. ஆனாலும் அம்மாவுக்கு அவன் மொழி புரியவில்லை. `அப்படிச் செய்யாதே!’ என்று அவள் மன்றாடியும், அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை.

    அதனால், அவன் சுவற்றருகே போகும்போதெல்லாம் தன் கையை அதன்மேல் வைத்து, அவனுடைய நெற்றியைப் பாதுகாப்பாள் தாய்!

    தெருவில் நெரிசல் அதிகமாக இருக்கும்போது, எல்லா வாகன ஓட்டிகளும் பல்வேறு ஒலிகளை எழுப்புவார்கள். இதனால் முன்னாலிருப்பவர்கள் வேகமாகப் போய்விடுவார்களா, என்ன? பிறர் தான் நினைத்தபடி நடக்கவில்லையே என்ற ஆத்திரத்தை வெளிப்படுத்த ஏதோ ஒரு வழி!

    இதேபோல், பதவியிலிருக்கும் சிலர் செய்யும் அக்கிரமங்களை பார்ப்போரிடமெல்லாம் கூறிக் கூறி அங்கலாய்ப்பார்கள் சிலர். இதற்கென்றே டீக்கடைகளுக்குப் போகிறவர்களும் உண்டு!

    ஒருவர் அடையும் கோபத்தால் பிறரை மாற்றிவிடுவது நடக்காத காரியம்.

    கதை

    எவ்வளவோ எதிர்பார்ப்புகளுடன் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்திருந்தாள் துர்கா. ஆனால், அவள் கணவன் ஈச்வரனோ, எப்போதும்போல் தன் நண்பர்களுடனேயே பெரும்பொழுதைக் கழித்தான்.

    இரவில் நேரங்கழித்து அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் துர்கா தன் கோபத்தில் உழன்று கொண்டிருப்பாள். அவர்களுக்குடையே விவாதம் முற்றும். அவளைத் தவிர்க்க, இன்னும் அதிக நேரத்தை வெளியில் செலவிட்டான் ஈச்வரன்.

    துர்காவின் ஆரோக்கியம் கெட்டது. மன இறுக்கம் தலைவலி, வயிற்றுக்கோளாறு, இளைப்பு என்று பல உபாதைகள்.

    சில வருடங்களுக்குப் பிறகு, கணவனை மாற்ற முடியாது என்று புரிந்துகொண்டாள். செய்ய முடியாத காரியத்திற்காகத் தன் உடலை எதற்காகக் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஞானோதயம் பிறக்க, தோழிகளுடன் நேரத்தைச் செலவிட ஆரம்பித்தாள்.

    `விவாகரத்து,’ என்று வழிகாட்டினர் சிலர். துர்கா ஒப்பவில்லை.

    எந்த எதிர்பார்ப்பையும் விடுத்து, தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட்டாள். மனமும் தெளிந்தது.

    இவள் சுமுகமாக, ஈச்வரனும் அதிகப் பொழுதை வீட்டில் கழிக்க ஆரம்பித்தான். (இது நடக்க பல வருடங்கள் ஆயின).

    நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால்

    போட்டியில் பரிசு பெறாதவன் நீதிபதிகளைக் குற்றம் சாட்டுவதும், உற்றவர் இறந்துவிட்டால், மருத்துவர்மேல் கோபம் கொள்வதும் இயற்கை. ஆனால் அந்தக் கோபம் நீண்ட காலம் நம்மைப் பாதிக்க விடுவது அபாயம். பரிசும் கிடைக்கப் போவதில்லை, இறந்தவர் மீண்டு வரப்போவதுமில்லை.

    கையாலாகாத்தனத்தால் வரும் கோபம்

    கதை

    “தெருவில நடக்கும்போது மனைவி என் கையைப் பிடித்து அழைச்சுட்டுப்போறா! எப்படிங்க!”
    “இவரு தன்பாட்டில நடுரோட்டில நடக்கிறாருங்க! பயமா இருக்கே!”
    அத்தம்பதிகள் இருவரும், மாறி, மாறி, என்னிடம் முறையிட்டார்கள்.

    கணவருக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் இருதயத்தில் அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. `இனிமே நீ என்கூட வராதே!’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு, தனியாகப் போக ஆரம்பித்திருந்தார்.

    மனைவியின் பயம் நியாயமானதுதான் என்றாலும், எந்த ஆணுக்குத்தான் மனைவி தன்னைக் குழந்தைபோல் நடத்துவதை ஏற்க முடியும்?

    “சின்னக் குழந்தைக்குச் சொல்றதுமாதிரி ஒவ்வொண்ணையும் அவருக்குச் சொல்லிக் குடுக்காதீங்க! ஃப்ரீயா விடுங்க!” என்று நான் எடுத்துச் சொன்னேன்.

    “அவங்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க,” என்று அவர் மனைவிக்குப் பரிந்தார்!

    கணவனும், மனைவியும் இப்படி ஒருவருக்காக மற்றவர் கவலைப்படுவதைப் பார்க்க நிறைவாக இருந்தது. சிரிப்பும் வந்தது. எங்கள் வாழ்வில் இல்லாத பூசல்களா!

    ஏமாற்றமே கோபமாக

    எல்லாருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் கோபம் வரத்தான் செய்யும். அத்தருணங்களில் ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் அவரது குணத்தை எடைபோட முடியும்.

    எங்கள் வீட்டருகே இருந்த கடையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாகப் பொறுக்கி வாங்கினேன்.

    `கொஞ்சம் குறைகிறதே!’ என்று கடைக்காரர் கரிசனமாக தானே ஒரு கிழங்கை எடுத்துப்போட்டார்.
    வீட்டுக்கு வந்து பார்த்தால், அந்தக் கிழங்கு அழுகல்!

    கடைக்காரர் தான் மிகவும் பக்திமான் என்று சொல்லிக்கொள்வார். ஒரு பள்ளிக்கூடத்தில் மதபோதகர் வேறு!

    எதிலிருக்கும்போதே ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்ற கோபம் என்னுள் வினாடிக்கு வினாடி அதிகரித்தது. திரும்பக்கொடுப்பது என்று முடிவெடுத்ததும் மனம் சமாதானமாக, வேறு காரியங்களைக் கவனித்தேன்.

    ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் கடைக்குப் போய், “நீங்கள் போட்ட கிழங்கைப் பாருங்கள்,” என்று காட்டினேன், கடுமையாக.
    “நீங்கள்தானே எடுத்துக்கொண்டீர்கள்?” என்றார், பதிலுக்கு.

    விடாப்பிடியாக, “நீங்கள் இப்படிச் செய்தது நன்றாகவேயில்லை,” என்றதும், “சரி, சரி. வேறு எடுத்துக்கொண்டு போங்கள்!” என்றார் அசுவாரசியமாக.

    சிறு விஷயம்தான் என்றாலும், என் கோபம் வெற்றிச் சிரிப்பாக மாறியது.

    கோபம் என்பது ஒருவர் அடையும் பயத்தால், வருத்தத்தால் வருவது.

    கதை

    பதினேழு வயதான மாலினியை அவளுடைய பாட்டு வாத்தியாரே கெடுக்க முயற்சித்தார். அவள் தப்பித்துவிட்டாலும், தான் பெரிதும் மதித்த ஒருவர் இப்படிச் செய்துவிட்டாரே என்ற வருத்தம் நாளடைவில் கோபமாக மாறியது.

    நடந்த சம்பவத்தைப் பிறரிடம் பகிர்ந்து, ஆறுதல் தேடவும் பயம். `அவருடைய நடத்தைக்கு நீதான் காரணம்!’ என்று பழியைத் தன்மீதே போட்டுவிட்டால் என்ன செய்வது? இதனால் பார்க்கும், பழகும் ஆண்களையெல்லாம் சந்தேகப்பட ஆரம்பித்தாள்.

    (முன்னெச்சரிக்கையாக, மாலினி ஒரு தோழியுடன்தான் சென்றிருந்தாள். `அவளையும் ஏன் அழைச்சுண்டு வந்தே?’ என்று அவர் ஆத்திரப்பட்டபோதே அவளுக்குச் சந்தேகம் எழுந்திருந்ததால் தப்பிக்க முடிந்தது).

    பல வருடங்கள் கழித்து, மாலினி தன் துயரக்கதையை என்னிடம் பகிர்ந்துகொண்டாள், `யாரிடமும் சொல்லிவிடாதே!’ என்ற கெஞ்சலுடன்.

    `இதில் உன் தவறு எதுவுமில்லை,’ என்று சுட்டிக்காட்டினேன். ஓர் அறியாப்பெண்ணைத் தனியாகத் தன் வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டு, அவளை பலாத்காரம் செய்ய முயன்றவர்தான் — அதிலும், அவளைவிட இருபது வயது மூத்தவர் _ குற்றமிழைத்தவர்.

    `பாடவே பிடிக்காமல் போய்விட்டது!’ என்று ஒப்புக்கொண்டாள். பல பிரபலமான ஆசிரியர்களிடம் இசை பயின்று, நல்ல பாண்டித்தியம் கொண்டவள்.

    `வாத்தியார் கெட்டவராக இருந்தால், அதுக்கு (கர்னாடக சங்கீத மாமேதைகள்) தியாகராஜரும், தீக்ஷிதரும் என்ன செய்வார்கள்? அவர்கள்மேல் உனக்கு என்ன கோபம்?’ என்று எடுத்துரைத்தேன்.

    சற்றுத் தெளிந்து, `அதுவும் சரிதான்,’ என்று மீண்டும் பாட ஆரம்பித்தாள். கோயில்களில் மட்டும் மனமுருகிப் பாடுவாள்.

    நமக்கு ஆத்திரம் விளைவித்தவரின்மீது நாம் எவ்வளவுதான் கோபப்பட்டாலும், அவருக்கு அதனால் ஒரு பாதிப்பும் கிடையாது.

    கெடுவது என்னவோ கோபத்தைத் தமக்குள்ளேயே அடக்கிவைத்தவர்களின் உடலும், மனமும்தான். திறமைகளும் வெளிப்படாமலேயே போய்விடும்.

    என்றோ நடந்தது

    `சிறு வயதில் அப்பா காரணமின்றி அடித்தார், ஆசிரியை திட்டினாள்,’ என்று நடந்து முடிந்தவைகளை (அவை நடந்தபோது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்) பெரியவர்களானபோதும் ஓயாது அசைபோட்டு வாடுவார்கள் சிலர். இவர்களது நிகழ்காலம் மட்டுமன்றி எதிர்காலமும் வீணாகாதா!
    “கோபம் அடைவதால், பிறர் நம்மைத் தண்டிக்கப்போவதில்லை. கோபமே நம்மைத் தண்டித்துவிடும்” (யாரோ).

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 66

    க. பாலசுப்பிரமணியன்

    வளரும் பருவத்தில் கற்றல் சூழ்நிலைகள்

    education-1

    பொதுவாக மழலைகளின் கற்றல் சூழ்நிலைகள் இயற்கையோடு இணைந்ததாக இருக்கவேண்டும். அவர்கள் கற்கும் இடம், கற்கும் பாடங்கள், கற்கும் முறைகள் அனைத்தும் இயற்கைக்கு உகந்ததாகவும் அதோடு ஒருங்கிணைந்ததாகவும் இருத்தல் அவசியம். இந்த வயதினிலே மூளையின் வளர்ச்சியைப் பற்றிய ஆரய்ச்சிகள் இந்தக்கருத்தை வலுப்படுத்துகின்றன.

    இதனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக பள்ளியில் ஒதுக்கப்படும் பள்ளி அறைகள்- மரங்கள், செடிகொடிகள், நீரோட்டங்கள், மற்றும் ஒளி காற்று ஆகியவற்றின் சரியான பங்கீட்டைக் கொண்டதாக அமைக்கப்படுகின்றது. பள்ளிக்கட்டிடங்களைக் காட்டும் பொழுதே இந்தக் கருத்தை நிலைப்படுத்தி அதற்கான வடிவமைப்புக்கள் செய்தல் மேன்மையானது.

    இதேபோல் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் இயற்கையைச் சார்ந்ததாகவும் இயற்கையின் பல்வேறு வெளிப்பாடுகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாகவும் இருத்தல் அவசியம். தற்போதைய பாடத்திட்டங்களில் இந்தக் கருத்து வலுப்படுத்தப்பட்டிருந்தாலும் அது சரியாக பின்பற்றப்படுவதில்லை. இயற்கையை பற்றிய கருத்துக்களை கரும்பலகையிலோ அல்லது வெறும் ஒளி-ஒலி காட்சிகளாக மட்டும் காட்டாமல் அதற்கான நேரிடையான உண்மையான அனுபவங்களை குழந்தைகளுக்கு கொடுத்தால் அந்தக்  கற்றல் மேன்மையானதாகவும் அனுபவபூர்வமானதாகவும் இருக்கும்.

    ஒரு மரத்தையோ அல்லது செடியையோ அல்லது இலை/பூ/ காய்களைப்பற்றியோ கரும்பலகையில் அல்லது படங்கள் மூலமாகக் காட்டப்படுவதைவிட அதன் உண்மையான நேரிடையான அனுபவம் கொடுக்கும் பொழுது கற்றல் உணர்வுபூர்வமாக நிலைப்படுகின்றது. பூக்களின் அசைவுகள், பழங்களின் மணம், காய்-கீரை வகைகளின் உண்மைநிலைகள் வாழ்க்கை கல்விக்கு அடிப்படையாக அமைகின்றன.

    சுவாமி அரவிந்தர் கற்றலின் நோக்கங்களை விளக்கும் பொழுது “கற்றல் எப்பொழுதும் அருகாமையிலிருந்து தொலை தூரத்தை நோக்கிச் செல்லவேண்டும்” என்கிறார். (Learning always happens from Near to Far) ஆகவே லண்டனில் இருக்கின்ற ஒரு மணிக்கூண்டின் பெருமையை அறிந்துகொள்வதைவிட வீட்டிற்கு அருகாமையில் உள்ள மணிக்கூண்டைப் பற்றி தெரிந்துகொள்ளுதல் சாலச் சிறந்தது. இந்தத் தேடுதல் கற்றலின் ஆக்கத்தையும் வேகத்தையும் அதிகரிப்பதுமட்டுமின்றி அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு ஒரு எளிதான வழியாக அறியப்பட்டுள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக இந்தமாதிரியான கற்றலின் போக்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கணினிகள், வலைத்தளங்கள் மற்றும் இதர அலைசார் கற்றல் மரபுகள் கற்றலின் போக்கையும் சூழ்நிலைகளையும் வெகுவாக மாற்றியுள்ளன. இந்த மாற்றங்கள் நன்மை பயக்கக்கூசுடியனவா இல்லையா என்பது பற்றிய உலகளாவிய விவாதங்கள் ஆரய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் நம்முடைய தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கை அடிப்படைகளை வெகுவாக பாதித்தும்  மாற்றியும் விட்டதால் இனி நாம் பின்னோக்கி செல்ல சிறிதளவும் வாய்ப்பில்லை. ஆகவே இந்த மாற்றங்களையும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் முறைகளையும் எவ்வாறு காலந்தொட்டு வருகின்ற கற்றல் முறைகளின் நல்லகோட்பாடுகளோடு இணைத்து செயல்பட முடியும் என்பதை பற்றிய சிந்தனைகள் வளம்பெற வேண்டும்.

    கணினி மற்றும் வலைத்தளங்களை சார்ந்த தேடுதல்கள் இப்பொழுது ஐந்து ஆறு வயதிலே ஆரம்பித்தது விட்டன. இந்தத் திறன்கள் குழந்தைகளிடம் இருப்பதைக் கண்டு பெருமிதம் அடைகின்ற பெற்றோர்களின் எண்ணிக்கை சிகரங்களை வீழ்த்திக்கொண்டிருக்கின்றது. உண்மையில் இது இந்த வயதிற்குத் தேவையா, அப்படியானால் எவ்வளவு தேவை என்பதை பற்றி சிந்திப்பதற்கு அஞ்சுகின்றோம். இந்த மரபுசாராக் கல்வி முறைகளும் தேடுதல்கள் மூலம் கிடைக்கும் சில அறிவுத்துணுக்குகளும் குழந்தைகளின் உணர்வு நிலைகளில் பெரிதளவு மாற்றங்கள் ஏற்படுவதை ஆராய்ச்சி மூலமாக உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

    இந்த மாற்றங்கள் அறிவு மற்றும் உணர்வுகளின் திசைகளையும் போக்கையும் வேகத்தையும் தாக்குவதால் பல குழந்தைகளுக்கு இதனால் வயதுக்கு முந்திய முதிர்ச்சி நிலைகள் (Pre-maturation) வருவதை கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக வளரிளம் பருவம் (adolescence) கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளிலிருந்து இருப்பதாக கணிக்கப்பட்டது, தற்போது ஒன்பது வயதிலேயே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு முந்திய முதிர்ச்சிநிலைகள் இப்பொழுது இன்னும் சிறிய வயதிலேயே இருப்பதாக ஆரய்ச்சிகள் தெறிவிக்கின்றன.

    ஆனால் இந்த மாறிய கல்விமுறையால்தான் ஒருவர் சிறப்பான கல்விகற்க முடியுமென்றோ அல்லது அவர்கள் புத்தி கூர்மை சிறைப்படையுமென்றோ வாதிடுதல் சரியானதல்ல. இந்தக் கருவிகள் நிச்சயமாக தேடலின் வளத்தையும் நேரத்தையும் நுணுக்கங்களும் வளமைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை நாம் எவ்வாறு பயனுள்ளதாக ஆக்கிக்கொள்கிறோம் எவ்வாறு இவைகளுக்கு நாம் அடிமையாகாமல் இருக்கின்றோம் என்பதையும் கண்காணித்தல் அவசியம். இந்தக் கருவிகளின் பயன்பாட்டால் நம்முடைய மூளையின் சில அற்புதத் திறன்களும் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை மூளைநரம்பியல் வல்லுநர்கள்  உணர்த்தி வருகின்றார்கள்

    (தொடரும் )

    Share
  • மக்களாட்சியின் மேன்மையை நிலைநிறுத்தும் புதிய தேர்தல் வழிமுறை

    மக்களாட்சியின் மேன்மையை நிலைநிறுத்தும் புதிய தேர்தல் வழிமுறை:

                                             மக்களாட்சியின் உச்சகட்ட கேலிக் கூத்தினை நம் அன்னைத் தமிழகம் எதிர்கொண்டு வரும் இவ்வேளையில், இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்காதா? என்று இயலாமையில் பெருமூச்சு விடும் சாமானிய மனிதனின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் கடமை, ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளது.

                                           சட்டமன்ற உறுப்பினர்களை கூண்டோடு கடத்திச் செல்வதும், மிரட்டுவதும், விலை பேசுவதும் உச்சகட்ட கேலிக்கூத்து என்றால், இந்த கேலிக்கூத்தின் ஊற்றுக்கண் என்பது, மக்களின் அறியாமையும், இந்த அறியாமையைப் பயன்படுத்தி, வாக்குகளை விலைபேசும் தற்போதைய தேர்தல் நடைமுறையுமே ஆகும். ஊற்றுக்கண்ணில் நஞ்சைப் பாய்ச்ச அனுமதித்துவிட்டு, உச்சாணிக் கொம்பில் நச்சுக்காய் காய்க்கிறதே என்று வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை.

                                        ஒரு குறிப்பிட்ட தேர்தல் தேதியை அறிவித்து, அந்த நாளில் காலை 7.00 முதல் மாலை 6.00மணி வரை வரிசையில் நின்று ஓட்டுப் போட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னால், அரசியல்வாதிகளில் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து காணப்படும் இன்றைய காலகட்டத்தில், 100% வாக்குப் பதிவு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும்.

    மாற்று வழியில் புதிய தேர்தல் நடைமுறை:

                                          ATM ல் பணம் எடுப்பது போல, நியாய விலைக் கடைக்குச் சென்று அரிசி, சர்க்கரை வாங்குவது போல ஓட்டுப் போடுவதும் மிக இயல்பான எளிமையானதாக மாற்றப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாளில் வரிசையில் நின்றுதான் ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலையை மாற்றி, தான் நினைத்த நேரத்தில் தனக்கு வசதியான இடத்தில் ஓட்டுப் போடும் உரிமையை வாக்காளனுக்கு உருவாக்கிக் கொடுத்தால், சர்வ நிச்சயமாக 100% வாக்குகள் பதிவாகும்.

    BIOMETRIC MACHINES:

                                        இதனை சாத்தியமாக்குவதற்கு நம் முன்னர் இருக்கும் எளிய வழிமுறை, BIOMETRIC எனப்படும் கைரேகை பதிவின் மூலம் வாக்களிக்கும் நடைமுறையைக் கொண்டு வருவதாகும். தொடுதிரை(Touch sreen)(ATM machine போல) வசதியுடன் இவை இருக்க வேண்டும் இந்த கைரேகைப் பதிவு இயந்திரத்தை ஒரு MAIN SERVER உடன் இணைக்க வேண்டும். இந்த server தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திலோ அல்லது குடியரசுத் தலைவரின் மாளிகையிலோ வைத்து உயர்ந்தபட்ச பாதுகாப்புடன் பராமரிக்கப் படலாம். கைரேகை இயந்திரத்தில் பதியப்படும் தகவல்கள் சர்வரில் உடனுக்குடன் சேமிக்கப்படும்.

                                 இந்த கைரேகை பதிவு செய்யும் இயந்திரங்களை அனைத்து ATM நிலையங்களிலும் நிறுவ வேண்டும். மேலும் பேருந்து நிலையங்கள் இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், அரசுப் பொது மருத்துவமனைகள், வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவககங்கள், விதை வங்கிகள் மற்றும் முக்கியக் கடை வீதிகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நிறுவ வேண்டும்.

                                  சுயமாக இந்த இயந்திரத்தை பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கும் மக்களுக்கு, ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியுடன் வாக்களிக்க வைக்கலாம்.

    செயல்படுத்தும் விதம்:

                               நடப்பு ஆட்சி, மூன்று ஆண்டு ஒன்பது மாதங்களை நிறைவு செய்ததும், அடுத்த தேர்தலை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும், வேட்பாளர்களை அறிவிப்பதற்கும் மூன்று மாத கால அவகாசம் வழங்கலாம்.

                               அதன் பிறகு பனிரெண்டு மாதங்களுக்கு மக்களுக்கு ஓட்டுப்போட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தான் விருப்பப்படும் நேரத்தில் நாட்டின் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும்.

    49 ‘O‘:

                            ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை “யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை” என்னும் 49’O’ வாக்குகளை மட்டும் கண்காணித்து, ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டிற்கும் மேல் அதிகமாக இருந்தால், அந்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து, புதிய வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்து வாய்ப்பளிக்கலாம். இவ்வாறு ஒரு வருடத்தில் குறைந்தது மூன்று முறை புதிய புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும்.

    சமூக விரோத செயல்கள் தடுக்கப்படும்:

                             இந்த ஒரு ஆண்டில் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்பதால், அரசியல் கட்சிகளின் தற்போதைய தேர்தல் பிரசார முறைகள் தோல்வியைத் தழுவும். அவர்களில் உண்மையான செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். தேர்தலுக்கு முந்தைய நாள் மக்களுக்குப் பண விநியோகம் செய்யும் சட்ட விரோத, சமூக விரோத செயல்கள் முற்றிலும் தடுக்கப்படும். கள்ள ஓட்டுப் போடுவதும் இறந்தவர்களின் ஓட்டுக்களைப் பதிவதும் அடியோடு தடுக்கப்படும்.

    வேட்பாளரைப் பற்றிய தகவல்கள்:

                               வேட்பாளரின் BIO-DATA, தகவல்கள் தொடுதிரை வசதி கொண்ட கைரேகை பதிவு இயந்திரங்களில் அனைத்து இந்திய மொழிகளிலும் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களில் தேர்தல் வாக்குறுதிகளும் பதிவு செய்யப்பட வேண்டும். வாக்களிக்கும் முன் இவற்றை நிதானமாகப் படித்துப் பார்த்து, ஆராய்ந்து வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும்.

                               அனைத்து இந்திய மொழிகளிலும் வேட்பாளர் பற்றிய தகவல்கள் இருப்பதால்,, அண்டை மாநிலங்களின் அரசியல் நிலவரங்களையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் அங்கு இருக்கும் நல்ல திட்டங்களை தங்கள் மாநிலத்திற்கும் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் குரல் எழுப்ப முடியும்.

    தொகுதிகளுக்கு சிறப்பு தகுதிகள்: (SPECIAL STATUS)

                               அதிக விழுக்காடுகள் வாக்குப் பதிவான தொகுதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தத் தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 95% மேல் அதிகமான வாக்குகள் பதிவான தொகுத்களுக்கு சிறப்பு தகுதி (SPECIAL STATUS) வழங்கப்பட வேண்டும். அரசின் புதிய தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் பூங்காக்கள் ஆகியவை இந்தத் தொகுதிகளில் தொடங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். இதனால் வாக்கு எண்ணிக்கை விழுக்காடு கணிசமாக உயரும்.

                               தொகுதிவாரியாகப் பதிவான வாக்குகளின் விழுக்காட்டை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வையும், ஆரோக்யமான போட்டி மனப்பான்மையையும் உருவாக்கி வாக்கு எண்ணிக்கையை மேலும் மேலும் உயர்த்தலாம்.

    அரசை கலைப்பதற்கும் மக்களுக்கு உரிமை:

                               தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகள் பெருவாரியான மக்களுக்கு விரோதமாக இருக்கும் சமயத்தில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து , ஆட்சியை திரும்பப் பெறும் வழிமுறைகள் இந்த கைரேகை பதிவு இயந்திரங்கள் மூலம் எளிமையாக்கப்படும்.

                               மாநிலத்தின் முதல்வர் மரணம் போன்ற அசாதாரண சூழல்களிலும், மறுதேர்தல் வேண்டுமா? வேண்டாமா? என்பதை இந்த முறை மூலம் மக்களே தீர்மானிக்க முடியும். தற்போது நடப்பது போன்ற ஒரு கேலிக்கூத்து எதிர்காலத்தில் நடக்காமல் நிச்சயம் தடுக்க முடியும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(156)

    –செண்பக ஜெகதீசன்

    உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
    மரமக்க ளாதலே வேறு. (திருக்குறள் -600: ஊக்கமுடைமை) 

    புதுக் கவிதையில்…

    ஊக்கமே ஒருவனுக்கு
    உறுதியான அறிவு,
    ஊக்கமற்றோர்
    வெறும் மரங்களே… 

    உருவிலவர்
    மனிதரைப் போலிருப்பது
    மட்டுமே வேறுபாடு…! 

    குறும்பாவில்…

    ஊக்கமுடைய மனிதர் மட்டுமே
    உறுதியான அறிவுடையோர்,
    ஊக்கமிலார் மனிதவுருவில் மரங்களே…! 

    மரபுக் கவிதையில்…

    ஊக்கம் ஒன்றே ஒருவன்தன்
         -உறுதி யான அறிவாகும்,
    ஊக்க மில்லா மனிதரெல்லாம்
         -ஒன்றும் பயனிலா மரமாவர்,
    நோக்கில் காணும் வேறுபாடு
         -நிற்கு மந்த மரமெல்லாம்
    நோக்க மனிதர் உருவிலேதான்
         -நிற்ப தன்றி வேறிலையே…! 

    லிமரைக்கூ…

    ஊக்கமிலாரை மரமெனவே கூறு,
    ஊக்கமே உறுதியான அறிவு, மரமவைதான்
    மனிதவுருவன்றி வேறுபாடில்லை வேறு…! 

    கிராமிய பாணியில்…

    ஊக்கம் வேணும் ஊக்கம் வேணும்
    வாழ்க்கயில மனுசனுக்கு ஊக்கம் வேணும்…
    ஊக்கம் ஒண்ணே மனுசனுக்கு
    உண்மயான அறிவாவும்… 

    ஊக்கமில்லா மனுசரெல்லாம்
    ஒண்ணும் ஓதவாத மரந்தானே,
    மனுசன்போல உருவத்தில மரந்தானே,
    வேறயில்ல வித்தியாசம்… 

    அதால,
    ஊக்கம் வேணும் ஊக்கம் வேணும்
    வாழ்க்கயில மனுசனுக்கு ஊக்கம் வேணும்…!

     

     

     

    Share
  • பள்ளமும் மேடும்!

     -கவியோகி வேதம்

    ஆசைஎன்னும்  பள்ளத்தில்  தெரிந்தே  வீழ்வோம்!
    –ஆத்மாவாம் மேட்டினிலோ  இருட்டைச் சேர்ப்போம்!
    பாசமென்னும்  பள்ளத்தில்  மகிழ்ந்தே பாய்வோம்;
    –பாசங்கள் எதிர்த்தாலோ  அழுதே மாய்வோம்!
    ஓசைமனப் பள்ளத்துள்   ‘த்யானம்’- சேர்ப்பாய்;
    –ஒளியிலங்கே இறைவன்வந்து சிரிப்பான் என்றால்
    வாசம்கொள் அவ்வார்த்தை  கசப்பாய் நிற்கும்;
    –வானவில்லில்  அழகெங்கே? என்றே  கேட்போம்!

    குயில்வந்தே சோம்பலுடன்  காக்கைக் கூட்டில்
    –குறுமுட்டை இட்டுவிட்டே  வாழ்வ தொப்ப
    ஒயிலான   சுகவாழ்வைத்  தேடு கின்றோம்!
    –உலையினில்நீர்  மட்டு(ம்) இட்டால்  பசியா போகும்?
    வெயிலினிலே  வேலைசெய்வோன்  உழைத்த பின்பு
    –வீடுவந்தே  உணவுண்ட  சிரிப்பே தெய்வம்!
    பயில்கின்ற மூதுரைகள்  வாழ்(வு) அச் சாணி!
    –பாதகரின்  பசப்புரைகள் வறுமைக் கேணி!.

    நாகரிகம், விஞ்ஞானம் — கருவி  எல்லாம்
    –நச்சுத்தூள் கலந்துவாழ்வில் பள்ளம்  ஆச்சு!
    நாகரிகக்  கருவிகளை  அளவாய்க் கொண்டால்
    –நல்லதொரு  ‘ சுக’-மேட்டை யாரும் காண்பர்!
    வாகனங்கள் நேரத்தை  மிச்சம் செய்யும்!
    –வக்கணையாய்க் கையாண்டால், வாழ்வே உய்யும்!
    தோகையில்லாப்  பெண்மயிலும் துவள்வ துண்டோ?
    –துள்ளல்கொண்ட  ஆணவம்தான் ஜெயிப்ப துண்டோ?

    பள்ளத்தில்  இறங்கிடினும்  அருவி  நன்மை!
    –பாவத்தில் இறங்கிவிட்ட உயிர்கள் தீமை!
    வெள்ளிமலைப்  பனிமேட்டால் பயனே  இல்லை!
    –வெள்ளமெனக் கருணைவந்தால்  உலகே போற்றும்!
    ’சுள்’எனவே  வரும்கோபம் குணத்தில் பள்ளம்!
    –தூய்மையெனும் மனமேடோ வாழ்வு யர்த்தும்!
    ‘வள்’ என்றே  விழும்செல்வர்  சுமைப்பள்  ளம்தான்!
    –வள்ளலெனும்  பணமேடோ   வைரப் பள்ளம்!

     

     

     

    Share
  • மாற்றம் – பகுதி 2

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா

    “திருப்புகழ்” எங்கள் சமயத்துக்குக் கிடைத்த மற்றொரு வரப்பிரசாதமாகும்.  கோவில்களிலே திருமுறை ஓதும்போது திருப்புகழும் சேர்க்கப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் அதன் அமைப்பும், இறைவன் புகழைக் கூறும் விதமுமாகும்.  தமிழ்மொழியில் இப்படிப் பாடமுடியுமா என்னும் அளவுக்கு மிகமிக அற்புதமாக அமைந்திருப்பதுதான் திருப்புகழ்.

    அந்தத் திருப்புகழைத்தந்த அருணகிரியார் பற்றிப் பார்க்கும்பொழுது அவர் யாவரும் வெறுக்கும்படியான அருவருக்கத்தக்க இழிவான முறையில் வாழ்ந்தார் என்று அறியமுடிகிறது. யாவரும் வெறுத்து ஒதுக்கிய நிலையில் இருந்தவரை மாற்றியது எது? அதுதான் இறைவனின் திருவருள்! அருணகிரியாரின் மாற்றம் அவருக்கு மட்டும் பயன்பட்டதா? இல்லவே இல்லை! யாவருக்கும் பயன்பட்டது. அவரது மாற்றத்தினால் திருப்புகழோடு – கந்தர் அனுபூதி, கந்தரலங்காரம் என்னும் அரிய தத்துவங்களும் பாடல்களாக வந்து சேர்ந்தன. நாளும்பொழுதும் கோவில்கள்தோறும் பயபக்தியுடன் ஓதப்படுகின்றன். பலருக்கும் பக்திக்கு வழிகாட்டியும் நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும்.

    நல்லைநகர் தந்த நாவலர் பெருமானை சைவர்கள் தமது ஐந்தாவது குரவராக கொண்டுள்ளனர்.

    “நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல்
    சொல்லு தமிழ் எங்கே சுருதியெங்கே
    எல்லரிய வேதமொடு ஏத்து ஆகமங்களெங்கே” – என்று போற்றும் வண்ணம் நாவலர் பெருமான் சைவ சமயத்துக்குத் தொண்டாற்றியுள்ளார். நாவலர் மட்டும் இல்லறத்தில் இறங்கி அதன்வழி சென்றிருப்பாரேயானால் அவரின் ஆற்றல்கள் இந்தளவுக்கு எமது சமயத்துக்கு உதவியிருக்குமா என்பது கேள்விக்குரியதே! ஆனால் நாவலர் தனது வாழ்க்கைப் போக்கையே மாற்றினார்.

    மாற்றம் பெற்றதன் விளைவால்தான் அவரால் சைவத்தைக் காப்பாற்றவும், சைவம் இன்றும் ஈழத்தில் தழைத்து நிற்கவும் முடிகிறது எனலாம். தான் மாறியது மட்டுமன்றி – மற்றவர் மனங்களிலும் நல்ல சமயமாற்றம் வரவும் பெரும் பங்காற்றினார்.

    புராணங்களையும், இதிகாசங்களையும், கோவில்களில் சாதாரண மக்களும் விளங்கும்படிப் பிரசங்கம் மூலம் எடுத்து விளக்கினார். பெரிய புராணத்தை யாவரும் விளங்கும்படி வசனநடையில் ஆக்கினார். கந்தபுராணத்தைக் கோவில்கள் தோறும் விளக்கினார். சமய அனுட்டானங்கள் பற்றி நீண்ட விரிவுரைகளை கோவில்களில் ஆற்றினார். நாவலர் தனது சமயப்பணியை மேற்கொள்ளத் தேர்ந்தெடுத்த இடம் கோவில்கள்தான்.

    சம்பந்தரும் அப்பரும் கோவில்கள்தோறும் சென்று இறைபுகழைப் பாடி சமயம் வளர்த்து மக்களிடையே மாற்றம் வரச்செய்ததுபோல – நாவலர் தனது பேச்சைக் கோவில்கள்தோறும் நிகழ்த்தி மக்கள் மனத்தில் நல்ல மாற்றம் வரச் செய்தார்.

    நாவலர் ஏற்படுத்திய மாற்றத்தால் நாவலர் கலாசாரம் என்ற ஒன்றும் – கந்தபுராணக் கலாசாரம் என்ற ஒன்றும் ஈழத்தில் உருவாகி நல்ல மாற்றம் வருவதற்கு வழிவகுத்தது எனலாம்.

    எம்மிடையே வாழ்ந்து இறையடி சேர்ந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அவர் தனது வாழ்க்கையை மாற்றி அதனை இறைவழிபாட்டிலும், சமயவளர்ச்சியிலும் செலுத்தினார். ஊரெல்லாம் சென்றார். இறைவன் பற்றியும், பக்தி பற்றியும், வாழ்வாங்கு வாழுதல் பற்றியும், தர்மம் பற்றியும், அன்னதானம் பற்றியும் எடுத்துச் சொன்னார். சொன்னதோடு நின்றுவிடாமல் – நாவலர் பெருமான் போன்று செய்தும் காட்டினார்.

    தேடிய பொருளையெல்லாம் தெய்வப்பணிக்கே அர்ப்பணம் செய்தார். உலகு எங்கும் சென்றுவந்தார். அவரது இறைபக்தியினால் பலர் மாற்றம் அடைந்தனர். சமூகத்தில் மாற்றங்களுக்கு அவரின் செயற்பாடுகள் பெரிதும் உதவியது. அவர் தனது கதாப்பிரசங்கங்களை நிகழ்த்துவதற்குத் தேர்ந்தெடுத்த இடம் கோவில்கள்தான். கோவில்கள் காந்தசக்தி மிக்கன. யாவரையும் தன்வயமாக்கக் கூடியன. எனவேதான் நாவலரைப் போன்று வாரியார் சுவாமிகளும் கோவிலைத் தெரிவு செய்தார். இதனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றமும் ஓரளவுக்கு நிகழ்ந்தது எனலாம்.

    இன்பம் கிடைக்கும் நிம்மதி கிடைக்கும் என்றெண்ணி – உல்லாச விடுதி களை நோக்கிச் செல்லுகின்றனர். அங்கு சென்றால் உல்லாசமாக இருக்க முடியும் என்றே எண்ணுகின்றனர். பொழுதை ஒரு வழியாகப் போக்கிவிட்டோம் என்றும் எண்ணுகின்றனர்.

    ”பொழுது” என்பது பெறுமதியானது.பொழுதைப் போக்கிவிட்டோம் என்பது அர்த்தமற்றதாகும். பொழுதைப் பொருத்தமான முறையில், பயன்தரும் வகையில் பயன்படுத்த வேண்டும். பொழுதை நாம் பொருந்தா வகையிலே செலுத்த முற்பட்டால் – எமது மனம், சிந்தனை, செயற்பாடு யாவுமே தடம் புரண்டே போய்விடும். இங்கெல்லாம் சென்று எமது அரிய பொழுதினை வீணடிக்கின்றோமேயன்றி பயனுடையதாக்குகின்றோமல்ல என்பதை யாவரும் உணருதல் அவசிமானதாகும். கேளிக்கைகளும், களிப்பாட்டங்களும் என்றுமே நல்ல மாற்றங்களைத் தரவே மாட்டாது என்பதையும் நாமனைவரும் கட்டாயமாக மனத்தில் பதித்துக் கொள்ளுதல் வேண்டும்.

    “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்பதை யாவரும் அறிவோம். அப்படி அரிய பிறவியில் வந்த நாங்கள் சுதந்திரமாக வாழலாம். விலங்குகளுக்கு வாழ்க்கைபற்றி எதுவுமே தெரியாது. நாகரிகம், பண்பாடு, கலை, கலாசாரம், உயர்வு, தாழ்வு, படிப்பு, உழைப்பு, தானம், தர்மம், இவையாவும் மனித சமூகத்துக்கே உரியன. இவை பற்றி விலங்குகள் நினைத்தே பார்ப்பதும் இல்லை.

    இதனால் மாற்றம் என்பதுபற்றி அவைகள் அலட்டிக் கொள்வதே இல்லை.  ஆனால் மாற்றம் என்பது மனித சமூகத்துக்கு மிகவும் அவசியமானதாகும். அந்த மாற்றமும் நல்ல மாற்றமாகவே அமைவதும் மிகவும் கட்டாயமாகும். அந்த வகையில் சமூகத்தில் எப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன அவை சமூகத்துக்கு எப்படியெல்லாம் நல்ல வழியாக அமைந்தன என்பதையெல்லாம் பார்த்தோம்.

    எதை எப்படிச் செய்தால் நன்மைவரும் அல்லது தீமைவரும் என்று அறியும் ஆற்றல் மனிதனுக்கே இருக்கிறது. நல்லபடி வாழ நல்ல மாற்றங்கள்தானே அவசியமானது. அந்த மாற்றங்களை நாமும் எமக்குள் ஏற்படுத்திவிடலாம்.

    பயப்படாதீர்கள்! இன்று – உலகம் போகும் போக்கில் எத்தனையோ மார்றங்கள்! என்னதான் செய்யமுடியும் என்று நீனைக்கிறீர்களா! சற்று நின்று நிதானியுங்கள்! சஞ்சலங்கள் மிகுந்து விட்டதா? நித்திரையும் வர மறுக்கின்றதா? எல்லாமே வெறுமையாகத் தோன்றுகிறதா?

    இவையாவும் தீர வழியைத் தேடுகிறீர்களா? நல்ல மருந்தையும் நாடு கிறீர்களா? யாவற்றுக்கும் – நல்ல மருந்தும், மாற்று வழியும் உங்கள் அருகிலேயே இருக்கிறது. அது ஏன் இன்னும் உங்களுக்குப் புலப்படவில்லை என எண்ணுகிறீர்களா? நீங்கள் இன்னும் அந்த இடத்தின் அருமையைப் பெருமையை அறியவில்லை. அதனை நாடவில்லை! தேடி ஓடவில்லை!

    கவலைப்படாதீர்கள்! அந்த இடம் எங்கும் இல்லை. உங்கள் இருப்பிடத் துக்கு அருகிலோ அல்லது சற்றுத் தூரத்திலோ அமைந்திருக்கும் ” கோவில்கள்” தான். கோவில்களுக்கு இன்னுமொரு சிறந்த பெயர்தான் ” சாந்திநிலையம். ” அன்பு, பொறுமை, கருணை, இரக்கம், பாசம், நேசம், சாந்தி, சமாதானம், அமைதி, அடக்கம், ஆனந்தம், ஆரோக்கியம், அத்தனையையும் இலவசமாக வழங்கி நிற்கும் இடம் கோவில்கள்தான்.

    கோவிலுக்குச் சென்றால் மனப்பாரம் குறையும்; சஞ்சலங்கள் மறைந்துவிடும்; மூர்க்க குணங்கள் அடங்கிவிடும். மற்றவர்மீது பற்றும் பாசமும் ஏற்படும். தாய்மை உணர்வு உருவாகும். தாழ்மை உணர்வு ஏற்படும். சகோதரத்துவம் வந்துவிடும். உயர்வு தாழ்வு ஓடிவிடும். போட்டியும் பொறாமையும் தவிடு பொடியாகிவிடும். போலிக் கெளரவம் பொசுங்கிவிடும். மனமெல்லாம் தூய்மையான உணர்வு எழுந்துநிற்கும். அமைதி தானாய்வந்து நிற்கும். அங்கு ஒருவித ஆனந்தம் பொங்கிப் பிரவாகிக்கும்.

    இந்தப்பிரவாகத்தில் தினமும் நாம் நம்மை இணைத்துக் கொண்டால் வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாறிவிடும். மாறிவிடுவதை உணருகின்ற வேளை – எம்முள் இன்பவெள்ளம் பாயும். அதுதான் இறைவனின் பெருங் கருணை. இந்த உணர்வைத்தான் பகவான் இராமகிருஶ்ண பரமஹம்சர் அடைந்தார் என அறிகிறோம்.

    “தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!” இது ஒரு நல்ல மாற்றம் அல்லவா? மனம் மாற்றம் அடைய உடலும் மாற்றம் அடைந்து செயற்பாடும் மாற்றம் அடைந்து – தூய்மையும் இறையும் ஒன்றாகும் இடம் கோவில்தான்.

    இன்னுமே மாற்றம் அடையாது இருப்பவர்களே – அனைவரும் வாருங்கள்! கோவிலுக்குச் செல்லுவோம்! மனம் மாற்றம் ஏற்படுத்தும் மருந்து கோவிலில் தானிருக்கிறது. ஆலயத்தைத் தொழுவோம்! ஆண்டவனை நினைப்போம்! சமயவழியில் செல்லுவோம்! மாறாத மனமெல்லாம் நிச்சயம் மாற்றம் அடையும். மாற்றம் என்பது நடந்தே தீரும்! அதுவும் நல்ல மாற்றம் என்பதே நல்ல வாழ்வுக்கும் தேவையாகும். அதனைத் தந்தது சமயமும் கோவில்களும்தான். இன்றளவில் தந்து கொண்டிருப்பதும் சமயமும் கோவில்களுமேயாகும்.

    (முற்றும்)

    Share
  • சுமையும் சுகமும்!

    -கவியோகி வேதம்

    பாடச்  சுமைகள் அழுத்திய  போது
    –பள்ளி வாழ்க்கை கசந்ததே!
    தேடி அதனால்  வேலை வந்ததும்
    –தேன்போல் சுகமாய் இனித்ததே!

    முயல்க  முயல்க முன்னேறு என்கையில்
    –மூச்சும்  சுமையாய்ப் போனதே!
    முயற்சி வெற்றியும் பணமும் குவித்ததில்
    –மொத்தமும் சுகமாய் ஆனதே!

    வயிற்றில் பலரும்  ஏய்த்தே அடித்ததில்
    –வாழ்வே  சுமையாய் மாறிற்றே!
    மயிலாய் நல்லோர்  வந்தே  அணைக்க
    –மனதும் சுகத்தில்  தேறிற்றே!

    திருமணம்  வேண்டாம்  என்றே ஒதுங்கினேன்!
    –தேவையும்  குறைந்தே இனித்ததே!
    உறவுகள் நெருக்க  ஒருத்தியைத் தேடினேன்;
    –உலகே   சுமைபோல்  கசந்ததே!

    விதியின்  சுமையை  நினைத்தே  ஓடினேன்!
    –விரக்தியும்  என்னை   அணைந்ததே!
    மதிகொள்  குருஎன்னைப் பார்த்ததும்  ‘ தெய்வமே’
    –மனத்துள் சுகமாய் இணைந்ததே!!

     

     

     

    Share
  • காதலெனும்  சோலை 

     -ரா.பார்த்தசாரதி

    காதலெனும்  சோலையிலே  கண்டடெடுத்த  ரோஜாவே
    காதலனிடம்  காதலை  வெளிப்படுத்திய  ரோஜாவே
    காதலெனும்  போதையிலே  கண் மயங்கும் ராஜாவே
    என் மனதை கவர்ந்திடும்   இனிய  ராஜாவே!

    காதலெனும் சோலையில்  கானக்குயில் பாடுதே
    ஆதியும் அந்தமுமில்லாமல்  அமரகீதம் பாடிடுதே
    வண்ணமலர்கள் மனதை தென்றல் வாரி வீசிடுதே
    கடலாகிய  அலைதன்னில் கவிதை பாடி ஓடிடுதே!

    உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும்  போதினிலே
    கொள்ளும் இன்பமே  சொர்க்கம் வாழ்வினிலே
    கொஞ்சும்  சோலைக்குருவி  சொந்தம் பேசுமே
    குறைவில்லாமலே  எல்லா இன்பமும் தருமே!

    இரு இதயங்கள்  இவ்வுலகில்  ஒன்றாகி
    என்றும் அழியாமல்   காதலாகிக்  கசிந்துருகி
    கண் மூடும் வேளையிலே கலை என்ன கலையோ
    கண்ணே உன் பேரழகிற்கு உலகம் தரும் விலையோ !

    உன்னை நினைத்தாலே என் மனம் காதல்கீதம் பாடிடுமே
    உன் மதிமுகம் இரவினிலே நன்கு தெரிந்திடுமே
    உன்னிடத்தில் என் இதயத்தை தந்துவிட்டேனே
    காதலியே
    என் இதயத்தைப் பாவை நீயும் எடுத்துச்
    சென்றுவிட்டாயே!

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 99-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    காளையைத் தொழுதுநிற்கும் காளையைத் தன் படப்பெட்டிக்குள் அள்ளிவந்திருப்பவர் திரு. ராஜ்குமார். இந்த அழகிய படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்து அளித்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் நம் நன்றி!

    bull

    காளையொடு தமிழருக்குள்ள நெருங்கிய தொடர்பு பன்னூறாண்டுகள் கடந்த பழமையானது. மாடுகளே தமிழரின் தலையாயச் செல்வமாய்த் திகழ்ந்தகாலம் அது!

    இன்றோ (தமிழ்)நாட்டுமாடுகளை முற்றாய் அழித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அந்நியநாட்டைச் சேர்ந்த அமைப்புகள் சில, தம்மை மிருகவதைத் தடுப்பாளர்கள்(!) என்று அழைத்துக்கொள்ளும் நகைமுரணைக் காணவேண்டிய சூழல் நமக்கு.

    அது கிடக்க.

    இரண்டு காளைகளை ஒருங்கே கொண்ட இந்தப் படத்தைக் கண்ட நம் கவிஞர்கள் தம் கற்பனைகளை எவ்வாறு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் என்று அறிந்துவருவோம்!

    ***

    உழவர் பெருமையை உயரத்தில் ஏற்றிய உன்னதக் காளையைப் போற்றிப் பாடியிருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    காளையே…!

    மானம் காக்கும் காளையிது
    மாணவர் சக்தியைக் காட்டியது,
    சேனையாய்க் காளையர் கூடிவந்தே
    செயித்துக் காட்டும் காளையிது,
    வானம் பொழியும் பூமியிலே
    வளத்தைப் பெருக்கும் காளையிது,
    கோனெ உழவர் தரத்தினையே
    கோபுரம் ஏற்றிடும் காளையிதே…!

    ***

    ”வீரமறவன் ஆரத்தழுவிட அன்பில் நெகிழ்ந்த காளையும் பசுவான மாயமென்ன! குடும்பம் தழைக்க உழைக்கும் காளையரும், உழவன் பிழைக்க உழைக்கும் காளைகளும் உலகில் தோன்றிய ஒப்பிலா உயிரினங்கள்!” என்று நெகிழ்ந்துரைக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    நேயம் மனிதன் நட்பைச் சொல்லும் நிழற்படம்!
    அன்பின் பெருமையை நமக்கு
    உணர்த்தும் அற்புதப் பாடம்! ஈசன் ஏறிய வாகனம்!
    இருந்தும் இல்லை தலைக்கனம்!
    காளை உழைப்பின் இலக்கணம் !
    உயிரினம் எல்லாம் ஒன்றெனச்
    சொல்லும் இனிய தருணம்!
    மனித நேயத்தின் அழகான காட்சி இது!
    தமிழரின் அன்பை உணர்த்தும்
    சாட்சி இது!
    காளையை தெய்வமாய்
    தொழுபவன் தமிழன்!
    தமிழனை, தோழனாய்
    நினைப்பது காளை!
    இவர்களை பிரிக்க நினைத்தது
    சில வீணர்களின் வேலை!
    அற வழி இணைந்தனர் இளைய தலை முறை!
    அரும்பாடு பட்டு மீட்டனர்!
    சல்லிக்கட்டெனும் ஏறு தழுவலை !

    ஏறு தழுவுதலை இப்படியும்
    கொள்ளலாமோ?
    வீர மறவனின் அரவணைப்பில்
    காளை மயங்கி நிற்கிறதே!
    முரட்டுக் காளை கூட பசுவாய்
    மாறியது எப்படி?
    அன்பிற்கு எத்தனை வலிமை!
    ஆண் மகனும் அப்படித்தான்!
    அன்பிற்கு ஆட்படுவான்!
    அடக்க நினைத்தால்!
    வீறு கொண்டெழுவான் !
    காளையின் மனமறிந்த
    காளை இவன்!
    குடும்பத்தை காத்திருக்க
    இறைவன் அனுப்பிய தூதன்!
    உடல், பொருள், ஆவி
    அத்தனையும் தந்திடுவான் !
    மனைவி, மக்கள் மகிழ்ந்திருக்க
    மாடாய் உழைத்திடுவான் !
    ஒளியை தருவதற்கு
    மெழுகாய் கரைந்திடுவான் !
    தனக்கென வாழா உயிரினம்
    இரண்டுக்கும் உண்டு புகழிடம்!

    ***

    ”உன் கொம்பைப் பிடிக்கவரும் இளைஞரிடம் உன் தெம்பைக் காட்டு! உன் வாலைப் பற்றினால் வால்பிடிக்கும் வாழ்க்கை வேண்டாமென்று உன் காலால் எட்டியுதைத்து உணர்த்து!” எனச் சல்லிக்கட்டில் கட்டிளங் காளையரோடு மல்லுக்கட்டவிருக்கும் காளைக்கு வீரவுரை பகர்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    ஜல்லிக்கட்டுக் காளைக்கு வீரஉரை:

    அடங்காத காளையேநீ!
    ***அடங்காதே யாருக்கும்!
    நெற்றிப் பொட்டில் திலகமிட்டு வீரத்துடன்…களத்தில்
    ***வெற்றி முத்தமிட்டபின் உனைவீழ்த்த யாருமில்லை!

    வீரமூட்டி வளர்த்துன்னை மைதானத்தில் விடுகிறேன்..
    ***வீரர்களை முட்டி நிதானமாயப் பரிசுவென்று வா!
    கட்டவிழ்த்து விட்டவுடன்..கட்டோடெதிர்..
    ***கண்டவரைக் காயமின்றிச் சாய்த்துவிடு!

    அகிம்சையால் நாம்பெற்ற சுதந்திரம்போல்..உனையடக்க..
    ***ஆயுதமின்றி எதிர்கொண்டுவரும் வீரர்களைவென்றுவா!
    உன்திமில்பிடித்து திமிர் அடக்கநினைத்தால்..
    ***தன்தமிழ் வீரம்பெரிதன்று தக்கபடி எடுத்துச்சொல்லு!

    மல்லுக் கட்டும் வீரர்கள் மத்தியில்..
    ***ஜல்லிக்கட்டொன்றுதான் வீரமெனப் புரியவை!
    ஈராண்டாய்க் கட்டுண்டிருந்த காளையே..
    ***இன்றுன் வீரத்தை இருநொடியில் காட்டு!

    களைப்பறியா உன் கொம்பைப் பிடித்தால்..
    ***அளப்பரிய யுன்தெம்பை எடுத்துக்காட்டு!
    வால் பிடிக்கும் வாழ்க்கை வேண்டாவென..
    ***உன் வாலைப் பிடிப்பவனை எட்டிஉதை!

    பார்வைபடாமல் பக்கத்தில்வரும் வீரர்களையுன்..
    ***வஞ்சகம்வேண்டா வென வயிற்றில் முட்டு!
    சீராட்டிப் பாராட்டி வளர்த்தயுன் உடம்பை தொட்டால்..
    ***சீறியவனை துவம்ஸம் செய்து சிலிர்த்துநில்!

    விளையாடிக் களைக்கும்போதுநீ..எனைப்பார்!
    ***காளையுனை வீரத்தோடு வளர்த்த நானிருக்கிறேன்!
    நூறுமீட்டர் ஓடவேண்டாம் உலகசாதனைசெய்ய..
    ***ஒருமீட்டர் ஓடிப்பாருங்கள் காளையோடு அதுவேசாதனை!

    ஈதொரு வீர விளையாட்டென்று சொல்லிங்கே!
    ***ஓர்கோழைக்கு துளிஇடமில்லை என்றுசொல்!
    அயலார் வியந்துகளிக்கு மிவ்விளையாட்டில்..
    ***அயலினம் நுழைய அனுமதியோம் மென்றுரை!

    பாட்டில் குற்றமிருக்கலாமானால்..உன்
    ***விளையாட்டில் குற்றமென்று..
    கூறும் கயவர்களை யினியுன்
    ***கூரான கொம்பால் குத்திக் கிழித்துவிடு!

    சொப்பனமே கண்டிடுவார் உனைவெல்ல..
    ***தப்பனவே உணர்ந்திடுவார் தோல்விகண்டபின்னே!
    வீழ்ச்சியுறா வெற்றிபெற…காளையடக்கும் வீர்ர்களே..
    ***சூழ்ச்சியின்றி விளையாட சூதறியாது வரவேண்டும்!

    தோற்றபிறகு எங்களைக் கொல்வதென்பது…
    ***அயலார் வகுத்த கோழைத்தனமெனில்…
    தோற்றாலுமினி உங்களைக் கொல்லாமலிருப்பது..
    ***காளையெங்கள் வீரத்தனமென்று பறைசாற்று!

    ***

    சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சல்லிக்கட்டுத் தடைக்கெதிரான  மக்கள் எழுச்சி, இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக் கவிதைகளிலும் எதிரொலிக்கக் காண்கின்றேன்.

    அடுத்து வருவது, இவ்வாரப் படக்கவிதைப் போட்டியில் சிறந்ததெனத் தேர்வாகியிருக்கும் கவிதை…

    ஊறு விளைவிக்கும் கயவர் செய்கையால்,
    ஆறு கைநழுவி உழவு பொய்த்தாலும்,
    ஏறு தழுவும் நம் இதய உரிமையை,
    வேறு பணிமறந்து வீதியில் திரண்டு,
    நூறு தடைதகர்த்த வீரரில் ஒருவன்,
    நீறு தவழும் திருமுகத்துடன் வரவே,
    சீறும் குணம் மறந்து காளையும் நன்றி
    கூறும் காட்சியை உலகுக்குக் காட்டும்,
    பேறு பெற்றதே இந்தப் புகைப்படம்!

    தமிழகத்துக்கு ஊறுசெய்வதையே தம் தொழிலாகக் கொண்ட கயவரின் செய்கையால் காவிரியால் புரக்கப்பட்ட தமிழ்நாடு இன்று கையற்று நிற்கின்ற சூழலிலும், ஏறுதழுவும் நம் மரபுரிமையை  அறப்போரிட்டு மீட்டிருக்கிறார்கள் வேறுபணி மறந்து வெள்ளமெனத் திரண்ட எழுச்சி வீரர்கள். அத்தகு வீரர்களில் ஒருவன் நீறுதவழும் முகத்தோடு எதிர்வரவே, சீறும் குணங்கொண்ட காளையும் அவனைத் தழுவி நன்றி நவில்கின்றது” எனும் அழகிய கற்பனையைக் கச்சிதமாய்க் கவிதையில் ஏற்றியிருக்கும் திரு. சச்சிதானந்தத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் ஆனந்தம் கொள்கின்றேன்.

     

    Share
  • இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் உலகிலே முதன்மையாக ஒரே ஏவு கணையில் 104 துணைக் கோள்களை ஏவியுள்ளது

     

    aj

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    https://youtu.be/iz80BJVDlAM

    வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! ……
    ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
    ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்!

    மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

    Image result for Aryabhata Satellite

    “முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

    டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

    isro-achievement-1

    [Click to Enlarge]

    புவிச்சுற்று இணையியக்க ஏவு வாகனப் பூத ராக்கெட்  [Geosynchronous Launch Vehicle , GSLV Mk III Rocket] பயன்பாடுகள், பெருத்த பளுவுள்ள துணைக் கோள் அன்னிய டாலர் நாணய மாற்று நிதிச் [Foreign Exchange] சேர்ப்பைப் பேரளவு தரும். இப்போது விண்வெளி ஆணையகம் 4 டன் எடை தூக்கும் கனமான ராக்கெட் [GSLV Mk III] 2017 ஜனவரியில் முதன்முதல் இயங்கப் போகிறது.

    ஏ. எஸ். கிரண் குமார் [Indian Space Research Organization Chairman]

    இந்திய விண்வெளி ஆய்வகத்தின் முதன்மையான சாதனை

    2017 பிப்ரவரி 15 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வகம் ஒரே ஏவுகணை மூலம் 104 துணைக்கோள்களைச் சுமந்து சென்று, சிக்கனச் செலவில் பூமியின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக விட்டு வந்துள்ளது. ஏவுகணை தென்னிந்திய கிழக்குக் கடற்கரை ஊர் ஶ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்பட்டது.  இந்த வெற்றிக்குக் காரணமான ஏவுகணைச் சாதனம் துருவத் துணைக்கோள் ஏவுகணைச் சாதனம் [Polar Satellite Launch Vehicle (PSLV)] என்று அழைக்கப் படுகிறது.  அன்று காலை 9:28 மணிக்கு ஏவப்பட்டு வேகம் மணிக்கு 16,777 மைல் [27,000 கி.மீ.] பயணத்தில் 104 துணைக்கோள்களைச் சுமந்து 30 நிமிடங்களில் புவிச்சுற்றுப் பாதையில் திட்டப்படி இட்டதாக அறியப்படுகிறது.

    Image result for India puts record 104 satellites into orbit

    ஏவுகணையின் பிரதான தூக்குப் பளு [Payload] : 714 kg எடையுள்ள புவி நோக்குத் துணைக்கோள், மற்றும் 664 kg எடையுள்ள 103 சின்னஞ்சிறு [Nano] துணைக்கோள்களில் 96 எண்ணிக்கை இஸ்ரேல், காஜக்ஸ்தான், சுவிட்ஜர்லாந்து, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவை.  அவற்றில் 90 துணைக்கோள்கள் அமெரிக்காவின் ஸான் பிரான்சிஸ்கோ நகரைச் சார்ந்த விண்கோள் கம்பேனிக்கு [Planet Inc] உரியவை. மூன்று துணைக்கோள்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.

    2015 ஆண்டில் “பாரத விண்பணிக் குதிரை” [India’s Space Work Horse] எனப்படும் துருவத் துணைக் கோள் ஏவுகணை  [PSLV]  தனது 39 ஆவது பயண வெற்றியாக முதன்முதல் 23 துணைக் கோள்களைச் சுமந்து சென்றது.  இந்த 2017 ஆண்டு இந்திய வெற்றித் துணைக்கோள் முதன்மைப் பயணம், 2014 ஜூனில் ரஷ்ய ஏவுகணை தூக்கிச் சென்ற 39 துணைக்கோள் பயணத்தை விடப் பன்மடங்கு மிஞ்சியுள்ளது.

    isro-launch-site

    இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள் சிக்கனச் செலவில் சிறப்பாகச் செய்து முடிக்கப்படுகின்றன.  உதாரணமாக 2013 ஆண்டில் இந்தியா செந்நிறக் கோள் செவ்வாயிக்கு அனுப்பிய விண்ணுளவிக்கு நிதிச் செலவு வெறும் 73 மில்லியன் டாலர்.  அதே செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க நாசா மேவன் விண்ணுளவிக்குச் [NASA MAVEN Mars Mission] செய்த நிதிச் செலவு : 671 மில்லியன் டாலர் [சுமார் 9 மடங்கு மிகை]. இத்தகையச் சிக்கனச் செலவில் இப்போது இந்திய விண்வெளி ஆய்வகம் அடுத்து பூதக்கோள் வியாழன், சூட்டுக்கோள் சுக்கிரன் [வெள்ளி] [Venus] ஆகிய இரண்டையும் நோக்கி நெடும் பயணம் துவங்கப் போகிறது.

    isro-achievement

    ஐரோப்ப, அமெரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் தம்தம் துணைக்கோள்களை அனுப்பும் வினைகளை இந்திய விண்வெளி ஆய்வகம் சிக்கனச் செலவில், நம்பத்தக்க நிலையில் திட்டப்படி முடித்துக் காட்டுகிறது. அதனால் அன்னிய நாணய மாற்று டாலர் நிதி இந்தியா தனது விண்வெளித் தேடல் பணிகளில் ஆண்டுதோறும் சம்பாதிக்கிறது.

    அபாய நிற்பு உந்து எஞ்சின் [Scramjet Engine] சூழ்வெளி ஆக்சிஜனை உறிஞ்சிக் கொண்டு எரித்திரவத்தை எரித்து ஏவு ஆற்றல் உண்டாக்கும். அதனால் ராக்கெட்டின் சுயப்பளு குறைகிறது.  அதே சமயம் ராக்கெட் தூக்கிச் செல்லும் பளு மிகையாகக் கூடுகிறது.  அதனால்  ராக்கெட் தயாரிப்புச் செலவும் பேரளவு குறைகிறது.  அன்னிய நாடுகளின் துணைக் கோள்களைக் குறைந்த செலவில் ஏவிச் செல்ல இந்தியா விண்வெளி ஆணையகத்துக்கு ஏதுவாகிறது.

    கே. சிவன் [ஆளுநர்,  விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்]

     

    indian-rockets

    இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகத்தின் துணிகர முயற்சி

    2016 ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகத்துக்கு [ISRO – Indian Space Research Organization] பேரதிர்ஷ்டப் பொறிநுணுக்கச் சாதனை வெற்றி பெற்ற வருடமாகக் கருதப்படும்.  ஒரே சமயத்தில் ஒரே இந்திய ஏவுகணையில் 20 துணைக்கோள்கள் ஒரே பாதையில் சுற்ற ஏவப்பட்டன ! அத்துடன் முதன்முதல் “மீள்பயன்பாடு ஏவுகணை வாகனம்” [Reusable Launch Vehicle (RLV)]  & “அபாய நிற்பு உந்து எஞ்சின்” [Scramjet Engine] பயன்படுத்தப் பட்டன.  ஆக மொத்தம் 33 துணைக்கோள்கள் இந்திய ஏவுகணைகளில் ஏவப்பட்டன.  அவற்றில் 22 துணைக்கோள்கள் அயல் நாடுகளைச் சேர்ந்தவை. 11 துணைக்கோள்கள் இந்தியாவுக்குச் சொந்தமானவை.  அவற்றால் இந்தியாவுக்கு வருமானம் : 500 கோடி ரூபாய் [73 மில்லியன் டாலர்]. அயல் நாடுகளின் அடுத்து ஓர் ஆணை [Order] மேலும் 500 கோடி ரூபாய் வரவுக்கு வந்திருக்கிறது.  அகில நாட்டுத் துணைக்கோள்கள் எதிர்கால ஏவு நிதி மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர் ! அதில் பன்முறை எரிப்பு நுணுக்கம் [Multi-burn Technology] பயன்படுத்தும் இந்தியாவுக்குப் பங்கெடுத்துக் கொள்ள பெரு வாய்ப்பு உள்ளது.

    Image result for Astrosat

    2017 முதல் காலாண்டு இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம், முதன்முறையாக ஒரே ராக்கெட் ஏவுதலில் 104 துணைக்கோள்களைத் தூக்கிக் கொண்டு ஓரிரு சுற்றுப் பாதைகளில் ஒரே சமயத்தில் இறக்கி விடப் போகிறது !  இதுவரை எந்த மேனாடும் இத்துணிகர முயற்சியைச் செய்து காட்டியதில்லை.  இந்திய விண்வெளி வல்லுநருக்கு இவ்வாறு பற்பலத் துணைக்கோள்களை ஒரே ராக்கெட் ஏவுதலில் நல்ல அனுபவம் உள்ளது.  கடந்த ஓராண்டாகப் பன்முறைச் செய்து காட்டிய பயிற்சிதான் இந்தச் சாதனை முயற்சிக்கு அடிகோலியது.  2017 ஆண்டு ஜனவரியில் முதன்முறையாக கனமான புவிச்சுற்று இணையியக்கத் துணைக்கோள் [Geosynchronous Satellite]  அனுப்ப பூத ராக்கெட் [Geosatellite Launch Vehicle (GSLV Mk III)] சோதிக்கப்படப் போகிறது.  அது 4 டன் பளு தூக்கும் ஆற்றல் உள்ளது.  அந்த ராக்கெட்தான் 2017 ஆண்டில் முதன்முறை 83 துணைக் கோள்களைச் சுமந்து செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    Image result for ISRO Orbital Vehicle

    பாரத விண்வெளி ஏவுகணைகளின் ஒப்புமைத் திறன்பாடு

    உலகத்தில் விண்வெளித் திட்டங்களை மும்முரமாகச் செய்துவரும் நிர்வாகத் துறைகளான அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவில் ஈசா, ஜப்பானில் ஜாக்ஸா [NASA, ESA, JAXA (Japan Aerospace Expolation Agency)] மற்றும் ரஷ்யா, பிரான்ஸ், சைனா, பிரேஸில் ஆகிய நாடுகளின் வரிசையில் இப்போது பாரதமும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. 2006 நாணய மதிப்பில் அமெரிக்கா: 16 பில்லியன் டாலர், ஐரோப்பா: 3.5 பில்லியன் டாலர், ஜப்பான்: 1.8 பில்லியன் டாலர், சைனா: 1.2 பில்லியன் டாலர், ரஷ்யா: 900 மில்லியன் டாலர், பாரதம்: 700 மில்லியன் டாலர், கனடா: 300 மில்லியன் டாலர், பிரேஸில்: 35 மில்லியன் டாலர் பணத்தை விண்வெளித் தேடலுக்கு நிதி ஒதுக்கு செய்துள்ளன. உலகத்தில் முன்னேறிவரும் நாடுகளில் பாரத தேசம் தற்போது முதன்மையாக விண்வெளிப் பயணத் திட்டங்களில் நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணி புரிந்து பெரும் சாதனைகளை வெற்றிகரமாக முடித்துத் தன் தலை நிமிர்த்தி வந்திருக்கிறது.

    Image result for ISRO Orbital Vehicle

    ஆசியாவிலே விண்வெளித் திட்டங்களைத் தீவிரமாகச் செய்துவரும் சைனா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு ஒப்பிட்டால், பாரத நாடு தயாரித்த அசுர விண்வெளி ஏவுகணை GSLV-III [Geostatioanry Satellite Launching Vehicle-III] அவற்றுக்கு ஏறக்குறைய சமமான உந்தாற்றல் உடையதாகக் கருதப் படுகிறது. அத்துடன் பாரதம் ஒருமித்த ஆற்றலில் தயாரித்த ஏவுகணைகள் மற்றவற்றை விட மலிவான நிதியில் ஆக்கப்பட்டவை.  நாசா, ஈசா, ஜாக்ஸா ஆகிய உலகப் பெரும் விண்வெளித் துறையகங்கள் துணைக்கோள் ஒன்றை அண்டவெளியில் ஏவிடத் தேவைப்படும் நிதித் தொகையில் பாதி அளவே பாரதம் தனது துணைக்கோள் ஒன்றை அனுப்பச் செலவு செய்கிறது.

    Image result for ISRO Orbital Vehicle

    விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ஏவுகணை

    அண்டை நாடான சைனாவின் பண்டை கால ஏவுகணைத் தொழில் நுணுக்கத்தைப் பின்பற்றிப் பாரதத்தின் ஏவுகணைப் படைப்புத் திட்டங்கள் உதயமாகின.  இந்தியச் சைனா கூட்டுறவின் போது பண்டத் தொழில் நுணுக்கத் துறை மாற்றல் உடன்படிக்கையில் விருத்தியான பட்டுப்பாதைத் [Silkroute] திறமை அது.  1804 ஆம் ஆண்டில் பிரிட்டனை எதிர்த்துப் போரிட்ட மைசூர் மன்னர் திப்பு சுல்தான் முதன்முதல் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தினார்.  அதுவே வில்லியம் கங்கிரிவை [William Congreve], காங்கிரிவ் ராக்கெட் கண்டுபிடிக்கத் தூண்டியதாக வரலாற்றில் அறியப் படுகிறது.  பாரதம் விடுதலை அடைந்த பிறகு, இந்திய விஞ்ஞானிகளும், பண்டித நேரு முதலாக மற்றும் பிற அரசியல் வாதிகளும் ராக்கெட் பொறித்துறை வளர்ச்சியின் எதிர்கால ராணுவ ஆயுத மேம்பாடுகளை உணர்ந்து அவற்றைத் தொடர்ந்து பேரளவில் விருத்தி செய்தனர்.  மேலும் ஏவுகணைகள் மூலம் துணைக் கோள்களை விண்வெளியில் அனுப்பி வானிலைத் தொலைத்தொடர்பு, தூர உளவு ஏற்பாடு, அண்டவெளி ஆய்வு போன்ற துறைகளும் முன்னேற்றம் அடைந்தன.

    Image result for India puts record 104 satellites into orbit

    பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு 1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research (INCOSPAR)] நிறுவனம் செய்து, அதன் அதிபராக டாக்டர் விக்ரம் சாராபாயை நியமித்தார்.  அதன் திட்டப்படி முதலில் தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தை [Thumba Equatorial Rocket Launching Station (TELRS)], விக்ரம் சாராபாய் திருவனந்த புரத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் மத்திய காந்த ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது!  இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட்டை டிசைன் செய்து, பல்வேறு அங்கங்களை இணைத்து, அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார்.  அடுத்து செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டங்களை வகுத்தார்.  அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் தற்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.  துணைக்கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார், விக்ரம் சாராபாய். 1963 நவம்பர் 21 ஆம் தேதி சுதந்திர பாரத்ததின் முதல் ராக்கெட் சோடியம் ஆவிப் பளுவுடன் [Sodium Vapour Payload] அண்டவெளியைத் துளைத்துகொண்டு உயரத்தில் ஊடுறுவிச் சென்றது.

    Image result for Astrosat Satellite

    Image result for Astrosat Satellite

    ஆரம்ப காலத்தில் ஏவிய முதல் ஏவுகணைகள், துணைக்கோள்கள்

    அகமதாபாத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌதிக ஆராய்ச்சிக் கூடம், விண்வெளிப் பயன்பாடு மையம் [Physical Reseach Laboratory & Space Application Centre], திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பௌதிக ஆய்வகம் [Space Physics Laboratory], பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பகம் [Indian Space Research Organization] ஆகிய மையங்களில் செயற்கைத் துணைக் கோள்கள் [Satellites], ஏவுகணை வாகனங்கள் [Launch Vehicles], உளவு ராக்கெட்டுகள் [Sounding Rockets] ஆகிய விண்வெளிச் சாதனங்களின் ஆராய்ச்சி, விருத்திப் பணிகள் நிகழ்ந்து வருகின்றன.  முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ரஷ்ய ராக்கெட்டில் ஏறிக் கொண்டு போய்ச் சுழல் வீதியில் சுற்றிவர விடப்பட்டது.  அடுத்து மூன்று துணைக் கோள்களும் [பாஸ்கரா-I, பாஸ்கரா-II, ஆப்பிள்] ரஷ்ய ராக்கெட் மூலமே [1979-1981] ஆண்டுகளில் எடுத்துச் செல்லப் பட்டன.  ஐந்தாவது துணைக் கோள் ரோகினி முதன் முதல் இந்திய ராக்கெட் SLV-3 முன்பகுதியில் வைக்கப்பட்டு விண்வெளியில் விடப்பட்டது.

    இதுவரை 40(?) துணைக் கோள்களை இந்தியா அண்டவெளியில் ஏவி இருக்கிறது. அவற்றில் 23 துணைக்கோள்களை இந்தியாவில் அமைக்கப் பட்ட நான்கு வித ராக்கெட்டுகள் SLV-3 [Satellite Launch Vehicle-3], ASLV [Augmented Satellite Launch Vehicle], PSLV [Polar Satellite Launch Vehicle], GSLV [Geo-Synchronous Satellite Launch Vehicle] வெற்றிகரமாக விண்வெளியில் தூக்கிச் சென்றுள்ளன.  மற்ற 17(?) துணைக் கோள்களை, ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச், ஈரோப்பியன் ராக்கெட்டுகள் சுமந்து சுழல்வீதிகளில் எறிந்துள்ளன.  1993 இல் ஏவப்பட்ட ஒரே ஒரு துணைக்கோள் [Indian Remote Sensing Satellite (IRS-1E)] மட்டும் சுழல்வீதியைத் தொட முடியாது தவறிப்போய் இழக்கப் பட்டது!

    செயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்

    1983 ஆகஸ்டு 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] இன்சாட் [INSAT-1B] இந்தியத் துணைக்கோளைத் தூக்கிச் சென்று சுழல்வீதியில் விட்டது.  ஏவப்பட்ட பல இன்சாட் வலைப்பணித் துணைக்கோள்களில் [INSAT Network Satellites] அதுவும் ஒன்று.  இந்திய தேசியத் துணைக்கோள் தொடர்பு ஏற்பாடு [Indian National Satellite System] உள்நாட்டுத் தொடர்பு, சூழகக் காலநிலைக் கண்காணிப்பு [Meteorology], நேரடித் துணைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பி [Direct Satellite Television Broadcasting] ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது.  இன்சாட் வலைப்பணியில் [INSAT Network] 167 தொலைத் தொடர்பு முனைகள் [Telecommunication Terminals], ஏறக்குறைய 4172 இருவழிப் பேச்சு இணைப்புகளை [Two-Way Speech Circuits] ஏற்படுத்த முடியும். இன்சாட் இணைப்பு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கிராமியத் தொலைப்பதிவு ஏற்பாடை [Rural Telegraphy] ஏற்கனவே நிலை நாட்டியுள்ளது.  இன்சாட் துணைக்கோள் இணைப்பு, சமிக்கைகளை 650 தொலைக்காட்சி அலை அனுப்பிகளுக்குப் [TV Transmitters] பரிமாறி, 80 சதவீத இந்திய மக்களுக்குக் கலைக் காட்சிகளையும், செய்திகளையும் அனுதினமும் அனுப்பி வருகிறது.

    குறிப்பாக துணைக்கோள் மூலம் தொடர்பு கொள்ளவும் [Communication through Satellite], காலநிலை முன்னறிவிப்பு செய்யவும் பூகோளச் சூழக ஆய்வு [Meteorology] புரியவும் செயற்கைத் துணைக்கோள்கள் உதவு கின்றன.  சூறாவளி, கடற்புயல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை கரைப்புற ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக்கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடுக்கும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மையான மக்களையும், ஆடு மாடு போன்ற விலங்குகளையும் காப்பாற்றி யுள்ளன.

    Image result for India puts record 104 satellites into orbit

    அத்துடன் விண்வெளித் தூர உளவு [Remote Space Sensing] வேளாண்மை, நீர்வளம், நிலவளம், தாதுக்கள் [Minerals], வனவியல் [Forestry], சூழக வெளி, [Environment], கடல்துறை வளர்ச்சி [Ocean Development], வெள்ளத்தால் சேதங்கள், மழையற்ற பஞ்சப் பகுதிகளின் விளைவுகள் போன்ற வற்றையும் கண்காணிக்க உதவுகிறது.  2002 செப்டம்பர் 12 இல் ஏவப்பட்ட மெட்சாட் [METSAT] துணைக்கோள் முதன் முதல் பூகோளச் சுற்றிணைவு மாற்றுச் சுழல்வீதியில் [Geo-synchronous Transfer Orbit] வெற்றிகரமாக எறியப்பட்டது.  அது 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் போது பூமியின் ஒரே முகத்தை நோக்கிக் கொண்டு தேவையான வானலைச் சமிக்கைகளை அனுப்பி வரும்!  மெட்சாட் மிகுந்த உயரத்தில் பறந்து செல்லும் போது, பூகோளம் முழுவதையும் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பியுள்ளது!

    Image result for Aryabhata Satellite

    +++++++++++++++++++

    (தொடரும்)

    தகவல்:

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
    3. Indian Space Program By: Subhajit Ghosh
    4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]
    9. Indian Space Program : Wikipedia WebSite
    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
    11 New Scientist – India Special: Space Program Presses Ahead By: Anil Ananthaswamy [FEb 19, 2005]
    12 An Overview of the Indian Space Program By: N. Clarkson [Jan 14, 2007]

    13. http://www.spacedaily.com/reports/ISROs_World_record_bid_Launching_83_satellites_on_single_rocket_999.html#ifrndnloc  [November 2, 2016]

    14. http://www.spacedaily.com/reports/India_achieves_advances_multiple_space_systems_in_2016_999.html  [December 23, 2016]

    15. http://www.spacedaily.com/reports/ISRO_Creates_World_Record_PSLV_Takes_Off_With_104_Satellites_999.html  [February 15, 2017]

    16. http://www.atimes.com/article/india-puts-record-104-satellites-orbit/  [February 15, 2017]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  February 18, 2017 [R-2]

    Attachments area
    Preview YouTube video India Puts Record 104 Satellites Into Orbit, Meizu M5s Launched, and More (Feb 15, 2017)

    India Puts Record 104 Satellites Into Orbit, Meizu M5s Launched, and More (Feb 15, 2017)
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”ஏகதெய்வம் கண்ணனவர், ஏரார்ந்தக் கண்ணியின்
    பாகவதத் தாம்பில் பிணைப்புற்ற, -ராகமொன்று,
    தாளங்கள் வேறாய், தவகோ பியர்களுடன்
    நீல யமுனா நதி”….கிரேசி மோகன்….!

    Share
  • அப்பாவி பொதுசனத்தின் புலம்பல்!

    பவள சங்கரி

    பிரகாசம் ரெட்டி, குமாரசாமி ராஜா, காமராசர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். போன்றோர் ஆட்சி செய்த தமிழ்நாட்டில் பினாமி ஆட்சி தேவையா? எந்தக் கொள்கையின் அடிப்படையில் இந்த ஆட்சி? திராவிடர் நல்வாழ்விற்காக ஏற்படுத்தப்பட்ட ஆட்சியின் நிலை என்ன? காமராசர் ஆறாம் வகுப்பு படித்தவர்தான். கல்விக் கண்ணை திறந்துவைத்தார். ஆனால் பதினோறாம் வகுப்பு படித்துள்ள நமது கல்வியமைச்சர் நீட் தேர்வுகளிலும், தொழில்நுட்பத் துறை, சி.பிஎஸ்,சி யிலும் என்ன கொள்கை முடிவு எடுத்து செயல்படப் போகிறார்? கர்நாடகாவில் காவேரியின் குறுக்கே மேகதூதில் இரண்டு அணைகள் கட்டுவதற்காக 5000 கோடி பணம் ஒதுக்கி பணியைத் துவங்கிவிட்டனர். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆரம்பித்துவிட்டனர். கொங்கு பிரதேசத்தின் முதுகெலும்பான பவானியில் கேரள அரசு அணை கட்டுகிறது. பொதுப்பணித் துறையையும் கவனித்துக்கொண்டிருக்கும் முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார். தங்கள் பதவியைக் காக்கும் போராட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு இருக்கப்போகிறார்களா? தமிழகத்தின் நலனில் சிறுதுளியேனும் அக்கறை கொள்வார்களா?

    Share