-கவியோகி வேதம்

ஆசைஎன்னும்  பள்ளத்தில்  தெரிந்தே  வீழ்வோம்!
–ஆத்மாவாம் மேட்டினிலோ  இருட்டைச் சேர்ப்போம்!
பாசமென்னும்  பள்ளத்தில்  மகிழ்ந்தே பாய்வோம்;
–பாசங்கள் எதிர்த்தாலோ  அழுதே மாய்வோம்!
ஓசைமனப் பள்ளத்துள்   ‘த்யானம்’- சேர்ப்பாய்;
–ஒளியிலங்கே இறைவன்வந்து சிரிப்பான் என்றால்
வாசம்கொள் அவ்வார்த்தை  கசப்பாய் நிற்கும்;
–வானவில்லில்  அழகெங்கே? என்றே  கேட்போம்!

குயில்வந்தே சோம்பலுடன்  காக்கைக் கூட்டில்
–குறுமுட்டை இட்டுவிட்டே  வாழ்வ தொப்ப
ஒயிலான   சுகவாழ்வைத்  தேடு கின்றோம்!
–உலையினில்நீர்  மட்டு(ம்) இட்டால்  பசியா போகும்?
வெயிலினிலே  வேலைசெய்வோன்  உழைத்த பின்பு
–வீடுவந்தே  உணவுண்ட  சிரிப்பே தெய்வம்!
பயில்கின்ற மூதுரைகள்  வாழ்(வு) அச் சாணி!
–பாதகரின்  பசப்புரைகள் வறுமைக் கேணி!.

நாகரிகம், விஞ்ஞானம் — கருவி  எல்லாம்
–நச்சுத்தூள் கலந்துவாழ்வில் பள்ளம்  ஆச்சு!
நாகரிகக்  கருவிகளை  அளவாய்க் கொண்டால்
–நல்லதொரு  ‘ சுக’-மேட்டை யாரும் காண்பர்!
வாகனங்கள் நேரத்தை  மிச்சம் செய்யும்!
–வக்கணையாய்க் கையாண்டால், வாழ்வே உய்யும்!
தோகையில்லாப்  பெண்மயிலும் துவள்வ துண்டோ?
–துள்ளல்கொண்ட  ஆணவம்தான் ஜெயிப்ப துண்டோ?

பள்ளத்தில்  இறங்கிடினும்  அருவி  நன்மை!
–பாவத்தில் இறங்கிவிட்ட உயிர்கள் தீமை!
வெள்ளிமலைப்  பனிமேட்டால் பயனே  இல்லை!
–வெள்ளமெனக் கருணைவந்தால்  உலகே போற்றும்!
’சுள்’எனவே  வரும்கோபம் குணத்தில் பள்ளம்!
–தூய்மையெனும் மனமேடோ வாழ்வு யர்த்தும்!
‘வள்’ என்றே  விழும்செல்வர்  சுமைப்பள்  ளம்தான்!
–வள்ளலெனும்  பணமேடோ   வைரப் பள்ளம்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *