பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

16831666_1240788995975297_1240254648_n

112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.02.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on "படக்கவிதைப் போட்டி – 100"

  1. சித்திரப்பாவையின் விழிகள் இரண்டும்
    செப்புமொழிகளைப் பேசுதடி….
    இதழ்கள் இரண்டில் மொழிவார்த்தையின்
    இனிமை கூடுதடி…
    தோள்களின் வனப்பில் இலக்கணம்
    நழுவிப்போகுதடி…
    கைவிரல் எழிலில் பாக்கள்
    பரதம் ஆடுதடி…
    மெல்லிய இடைதனில்
    நளினங்கள் ஆயிரம் கூடுதடி…
    பாதங்களின் பாதையில்
    இலக்கியம் நடை பயிலுதடி…..
    கூந்தலின் இழையில் காப்பியம்
    உயிர்த்துவம் பெற்றதடி…..!

  2. திருக்கரம் உயர்த்திடும் தமிழ்த்தாய் வாழ்க!

    ————————————————————————

    கரகம் மயிலொயி லாட்டக் கலையென,

    பரதமும் பாமர மனங்களைத் தொடும்படி,

    மரபு மடைகளை உடைத்துத் தகர்த்து,

    தெருவில் துணிவுடன் மேடை அமைத்து,

    இரவும் பகலும் நடனம் தொடுத்து,

    பரவும் தமிழரின் அவலம் துடைக்க,

    உரிமைக் குரலை எழுப்பிய நிறைவில்,

    விரிசெங் கனகப் புன்னகை சிந்தித்,

    திருக்கரம் உயர்த்திடும் தமிழ்த்தாய் வாழ்க!

  3. ஆடு மயிலே…

    ஆண்டவன் தொடங்கிய ஆட்டமிது
    அணங்கிவள் தொடர்வது அழகன்றோ,
    காண்பவர் வியந்திடும் கண்ணழகும்
    காட்சிக் கினிய முகமதுவும்,
    வேண்டிய உணர்ச்சி காட்டிடுமே
    வேதனை மனத்தில் தீர்த்திடுமே,
    தூண்டிடும் இன்பம் நிலைத்திடுமே
    தெய்வக் கலையிது வாழியவே…!

    -செண்பக ஜெகதீசன்…

  4. பெண்மை
    ****************
    நறுமுகை ஏகிய குழலும் – அணி
    கலன்கள் பூட்டிய உடலும் – குறு
    மென்னகை நெளியும் இதழும் – நூல்
    இடையில் பட்டுடைக் கட்டும் தவழ
    மருளும் விழிக ளுடனே வந்திடும்
    பெண்ணின் இனமே யென
    நினைத் தாயோ தமிழ்மகனே!
    தேவை யொன்று வந்தால் – மென்
    தோள்களும் மலையென நிமிரும்! மலர்
    வளைகளும் போர் கலனாகும்! யெம்
    சிரிப்பினில் தீச்சுடர் தெறிக்கும்!
    குளிர சுரக்கும் நீர் தான்
    ஆழிப் பேரலை யாகும் – யாம்
    விளக்காய் வெளிச்சம் தரவோ – எரி
    தழலாய் சுழன்று வரவோ – அது
    உந்தன் கைவிரல் முனையில்

  5. ” ஆடல் காணீரோ ” நர்த்தனம் ஆடும் நங்கை இவள்!
    உலக இயக்கத்தின் ஆதி இவள்!
    அந்தமே இல்லாத
    சோதி இவள்!
    சிவனுக்கே சீவன் தந்த
    சக்தி இவள்!
    இதயம் நடமிடும் பெண்ணாலே !
    மயிலின் நடனம் பெண்ணாலே!
    காற்றின் நடனம் பெண்ணாலே!
    அன்பின் நர்த்தனம் பெண்ணாலே!
    பெண்ணின் ஆட்டம் என்றும்
    அகிலத்தை காப்பதற்கே!
    தாளம் தப்பாத ஆட்டம்!
    தன்னலமில்லா ஆட்டம்!
    கண்ணசைவில் கடவுளின்
    கருணை தெரியுதம்மா!
    காலசைவில் கடவுளின்
    பாதம் தெரியுதம்மா!
    அனைத்தும் அன்னையின் கையில்
    என அழகாய் புரியுதம்மா!

  6. நாட்டிய அரங்கேற்றம்
    =======================

    ஆசானிடம் ஆசிபெற்று பரதமெனும்..
    **ஆடற்கலை அறவேபயின்ற அற்புதமேயுன்..
    அரங்கேற்றம்கண்ட கலைஞர்கள் பலரால்..
    **அரங்கம் நிரைந்து வழிந்ததம்மா!

    ஆடும்கலைபயின்று அபிநயம்காட்டு முன்னழகால்
    **ஆடற்கலைக்கு நீயோர் எடுத்துக்காட்டானாய்
    நடனத்தின் தலைவன் நடராசனின்
    **நல்லாசிகள் என்றுமுனக்கு உண்டு!

    உன்விழிகள் பேசுமதன் பொருளை..
    **உணர பன்புலமை வேண்டுமம்மா!
    உன்நடனத்தைக் கண்டுவிட்டால் ஒருகணம்..
    **தன்னிலை மறந்து தடுமாற்றம் கொள்ளுதம்மா!

    கணுக்காலை கண்தரிசிக்க உடல்வளையும்..உன்
    **கைக்குறிகள் நடனசூட்சுமத்தை விளக்கும்!
    நடனத்தால் பேசுகின்றயுன் நளினத்தால்..
    **நடனரங்கம் இமயம்போல் மெளனமாகும்!

    பாடலின் வரிகளுக்கேற்ப வளைந்தயுன்புருவம்..
    **பாவம்ராகம்தாளம் ஸ்ருதியனைத்தும் சேர்க்குதம்மா!
    தத்தித்தத்தி நீயாடும் நடனத்தால்..விழி..
    **பொத்திப்பொத்திமூடாமல் காண்பவரைக் காக்குதம்மா!

    அரங்கம் வியக்க ஆனந்தக்கூத்தாடி..உன்
    **அங்கமாறின் அபிநயத்தால் பரதக்கலையெழும்!
    பாதங்கள் பலமாய் தரையையுதைக்கும்..
    **பாவம்தனைக்கண்டு கைதட்டும் ரசிகர்கூட்டம்!

    உன் சதங்கைகளின் சத்தத்தால்..
    **உள் அரங்கத்தின் அமைதி அதிகமாகும்!
    உன் கைவிரல்பல முத்திரைகாட்ட..அந்த..
    **ஆடலறங்கமிப்போது ஆசிவழங்கும் அரங்கமானதோ?.

  7. நாட்டியப் பேரொளி

    சி. ஜெயபாரதன், கனடா

    நாட்டியப் பேரொளி
    நடிகை பத்மினியோ ?
    நளின நர்த்தகி
    வைஜயந்தி மாலாவோ ?
    நாட்டியக்
    கலையரசி கமலாவோ ?
    காலைத் தூக்கி
    கரத்தில் கனல் ஏந்தி
    ஞாலத்தில்
    அசுரன் மேல்
    ஒற்றைக் காலில் ஆடும்
    நெற்றிக்கண்
    தில்லைப் பெருமானா ?
    அண்ட சராசரங்கள் அத்தனையும்
    ஆடும் அகிலத்தில்
    உன்னாட்டம் அரங்கேறுதா ?
    கலைக் கண்ணால்
    சுட்டுக் கோவலனை
    மயக்க வந்த
    மாதவியா ? இல்லை
    மகரிஷியின்
    தவங் கலைக்க வந்த
    மேனகையா ?
    மீன்விழி ஊர்வசியா ?
    நிறுத்தாமல் ஆடு !
    நெஞ்செல்லாம் கொதிக்க !
    உன்னாட்டம் நின்றால்
    என்னிதயம்
    நின்று விடும்
    பரதக் கலை மயிலே !

    +++++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.