மக்களாட்சியின் மேன்மையை நிலைநிறுத்தும் புதிய தேர்தல் வழிமுறை
மக்களாட்சியின் மேன்மையை நிலைநிறுத்தும் புதிய தேர்தல் வழிமுறை:
மக்களாட்சியின் உச்சகட்ட கேலிக் கூத்தினை நம் அன்னைத் தமிழகம் எதிர்கொண்டு வரும் இவ்வேளையில், இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்காதா? என்று இயலாமையில் பெருமூச்சு விடும் சாமானிய மனிதனின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் கடமை, ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களை கூண்டோடு கடத்திச் செல்வதும், மிரட்டுவதும், விலை பேசுவதும் உச்சகட்ட கேலிக்கூத்து என்றால், இந்த கேலிக்கூத்தின் ஊற்றுக்கண் என்பது, மக்களின் அறியாமையும், இந்த அறியாமையைப் பயன்படுத்தி, வாக்குகளை விலைபேசும் தற்போதைய தேர்தல் நடைமுறையுமே ஆகும். ஊற்றுக்கண்ணில் நஞ்சைப் பாய்ச்ச அனுமதித்துவிட்டு, உச்சாணிக் கொம்பில் நச்சுக்காய் காய்க்கிறதே என்று வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை.
ஒரு குறிப்பிட்ட தேர்தல் தேதியை அறிவித்து, அந்த நாளில் காலை 7.00 முதல் மாலை 6.00மணி வரை வரிசையில் நின்று ஓட்டுப் போட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னால், அரசியல்வாதிகளில் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து காணப்படும் இன்றைய காலகட்டத்தில், 100% வாக்குப் பதிவு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும்.
மாற்று வழியில் புதிய தேர்தல் நடைமுறை:
ATM ல் பணம் எடுப்பது போல, நியாய விலைக் கடைக்குச் சென்று அரிசி, சர்க்கரை வாங்குவது போல ஓட்டுப் போடுவதும் மிக இயல்பான எளிமையானதாக மாற்றப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாளில் வரிசையில் நின்றுதான் ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலையை மாற்றி, தான் நினைத்த நேரத்தில் தனக்கு வசதியான இடத்தில் ஓட்டுப் போடும் உரிமையை வாக்காளனுக்கு உருவாக்கிக் கொடுத்தால், சர்வ நிச்சயமாக 100% வாக்குகள் பதிவாகும்.
BIOMETRIC MACHINES:
இதனை சாத்தியமாக்குவதற்கு நம் முன்னர் இருக்கும் எளிய வழிமுறை, BIOMETRIC எனப்படும் கைரேகை பதிவின் மூலம் வாக்களிக்கும் நடைமுறையைக் கொண்டு வருவதாகும். தொடுதிரை(Touch sreen)(ATM machine போல) வசதியுடன் இவை இருக்க வேண்டும் இந்த கைரேகைப் பதிவு இயந்திரத்தை ஒரு MAIN SERVER உடன் இணைக்க வேண்டும். இந்த server தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திலோ அல்லது குடியரசுத் தலைவரின் மாளிகையிலோ வைத்து உயர்ந்தபட்ச பாதுகாப்புடன் பராமரிக்கப் படலாம். கைரேகை இயந்திரத்தில் பதியப்படும் தகவல்கள் சர்வரில் உடனுக்குடன் சேமிக்கப்படும்.
இந்த கைரேகை பதிவு செய்யும் இயந்திரங்களை அனைத்து ATM நிலையங்களிலும் நிறுவ வேண்டும். மேலும் பேருந்து நிலையங்கள் இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், அரசுப் பொது மருத்துவமனைகள், வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவககங்கள், விதை வங்கிகள் மற்றும் முக்கியக் கடை வீதிகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நிறுவ வேண்டும்.
சுயமாக இந்த இயந்திரத்தை பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கும் மக்களுக்கு, ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியுடன் வாக்களிக்க வைக்கலாம்.
செயல்படுத்தும் விதம்:
நடப்பு ஆட்சி, மூன்று ஆண்டு ஒன்பது மாதங்களை நிறைவு செய்ததும், அடுத்த தேர்தலை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும், வேட்பாளர்களை அறிவிப்பதற்கும் மூன்று மாத கால அவகாசம் வழங்கலாம்.
அதன் பிறகு பனிரெண்டு மாதங்களுக்கு மக்களுக்கு ஓட்டுப்போட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தான் விருப்பப்படும் நேரத்தில் நாட்டின் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும்.
49 ‘O‘:
ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை “யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை” என்னும் 49’O’ வாக்குகளை மட்டும் கண்காணித்து, ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டிற்கும் மேல் அதிகமாக இருந்தால், அந்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து, புதிய வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்து வாய்ப்பளிக்கலாம். இவ்வாறு ஒரு வருடத்தில் குறைந்தது மூன்று முறை புதிய புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும்.
சமூக விரோத செயல்கள் தடுக்கப்படும்:
இந்த ஒரு ஆண்டில் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்பதால், அரசியல் கட்சிகளின் தற்போதைய தேர்தல் பிரசார முறைகள் தோல்வியைத் தழுவும். அவர்களில் உண்மையான செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். தேர்தலுக்கு முந்தைய நாள் மக்களுக்குப் பண விநியோகம் செய்யும் சட்ட விரோத, சமூக விரோத செயல்கள் முற்றிலும் தடுக்கப்படும். கள்ள ஓட்டுப் போடுவதும் இறந்தவர்களின் ஓட்டுக்களைப் பதிவதும் அடியோடு தடுக்கப்படும்.
வேட்பாளரைப் பற்றிய தகவல்கள்:
வேட்பாளரின் BIO-DATA, தகவல்கள் தொடுதிரை வசதி கொண்ட கைரேகை பதிவு இயந்திரங்களில் அனைத்து இந்திய மொழிகளிலும் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களில் தேர்தல் வாக்குறுதிகளும் பதிவு செய்யப்பட வேண்டும். வாக்களிக்கும் முன் இவற்றை நிதானமாகப் படித்துப் பார்த்து, ஆராய்ந்து வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும்.
அனைத்து இந்திய மொழிகளிலும் வேட்பாளர் பற்றிய தகவல்கள் இருப்பதால்,, அண்டை மாநிலங்களின் அரசியல் நிலவரங்களையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் அங்கு இருக்கும் நல்ல திட்டங்களை தங்கள் மாநிலத்திற்கும் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் குரல் எழுப்ப முடியும்.
தொகுதிகளுக்கு சிறப்பு தகுதிகள்: (SPECIAL STATUS)
அதிக விழுக்காடுகள் வாக்குப் பதிவான தொகுதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தத் தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 95% மேல் அதிகமான வாக்குகள் பதிவான தொகுத்களுக்கு சிறப்பு தகுதி (SPECIAL STATUS) வழங்கப்பட வேண்டும். அரசின் புதிய தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் பூங்காக்கள் ஆகியவை இந்தத் தொகுதிகளில் தொடங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். இதனால் வாக்கு எண்ணிக்கை விழுக்காடு கணிசமாக உயரும்.
தொகுதிவாரியாகப் பதிவான வாக்குகளின் விழுக்காட்டை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வையும், ஆரோக்யமான போட்டி மனப்பான்மையையும் உருவாக்கி வாக்கு எண்ணிக்கையை மேலும் மேலும் உயர்த்தலாம்.
அரசை கலைப்பதற்கும் மக்களுக்கு உரிமை:
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகள் பெருவாரியான மக்களுக்கு விரோதமாக இருக்கும் சமயத்தில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து , ஆட்சியை திரும்பப் பெறும் வழிமுறைகள் இந்த கைரேகை பதிவு இயந்திரங்கள் மூலம் எளிமையாக்கப்படும்.
மாநிலத்தின் முதல்வர் மரணம் போன்ற அசாதாரண சூழல்களிலும், மறுதேர்தல் வேண்டுமா? வேண்டாமா? என்பதை இந்த முறை மூலம் மக்களே தீர்மானிக்க முடியும். தற்போது நடப்பது போன்ற ஒரு கேலிக்கூத்து எதிர்காலத்தில் நடக்காமல் நிச்சயம் தடுக்க முடியும்.