க. பாலசுப்பிரமணியன்

வளரும் பருவத்தில் கற்றல் சூழ்நிலைகள்

education-1

பொதுவாக மழலைகளின் கற்றல் சூழ்நிலைகள் இயற்கையோடு இணைந்ததாக இருக்கவேண்டும். அவர்கள் கற்கும் இடம், கற்கும் பாடங்கள், கற்கும் முறைகள் அனைத்தும் இயற்கைக்கு உகந்ததாகவும் அதோடு ஒருங்கிணைந்ததாகவும் இருத்தல் அவசியம். இந்த வயதினிலே மூளையின் வளர்ச்சியைப் பற்றிய ஆரய்ச்சிகள் இந்தக்கருத்தை வலுப்படுத்துகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக பள்ளியில் ஒதுக்கப்படும் பள்ளி அறைகள்- மரங்கள், செடிகொடிகள், நீரோட்டங்கள், மற்றும் ஒளி காற்று ஆகியவற்றின் சரியான பங்கீட்டைக் கொண்டதாக அமைக்கப்படுகின்றது. பள்ளிக்கட்டிடங்களைக் காட்டும் பொழுதே இந்தக் கருத்தை நிலைப்படுத்தி அதற்கான வடிவமைப்புக்கள் செய்தல் மேன்மையானது.

இதேபோல் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் இயற்கையைச் சார்ந்ததாகவும் இயற்கையின் பல்வேறு வெளிப்பாடுகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாகவும் இருத்தல் அவசியம். தற்போதைய பாடத்திட்டங்களில் இந்தக் கருத்து வலுப்படுத்தப்பட்டிருந்தாலும் அது சரியாக பின்பற்றப்படுவதில்லை. இயற்கையை பற்றிய கருத்துக்களை கரும்பலகையிலோ அல்லது வெறும் ஒளி-ஒலி காட்சிகளாக மட்டும் காட்டாமல் அதற்கான நேரிடையான உண்மையான அனுபவங்களை குழந்தைகளுக்கு கொடுத்தால் அந்தக்  கற்றல் மேன்மையானதாகவும் அனுபவபூர்வமானதாகவும் இருக்கும்.

ஒரு மரத்தையோ அல்லது செடியையோ அல்லது இலை/பூ/ காய்களைப்பற்றியோ கரும்பலகையில் அல்லது படங்கள் மூலமாகக் காட்டப்படுவதைவிட அதன் உண்மையான நேரிடையான அனுபவம் கொடுக்கும் பொழுது கற்றல் உணர்வுபூர்வமாக நிலைப்படுகின்றது. பூக்களின் அசைவுகள், பழங்களின் மணம், காய்-கீரை வகைகளின் உண்மைநிலைகள் வாழ்க்கை கல்விக்கு அடிப்படையாக அமைகின்றன.

சுவாமி அரவிந்தர் கற்றலின் நோக்கங்களை விளக்கும் பொழுது “கற்றல் எப்பொழுதும் அருகாமையிலிருந்து தொலை தூரத்தை நோக்கிச் செல்லவேண்டும்” என்கிறார். (Learning always happens from Near to Far) ஆகவே லண்டனில் இருக்கின்ற ஒரு மணிக்கூண்டின் பெருமையை அறிந்துகொள்வதைவிட வீட்டிற்கு அருகாமையில் உள்ள மணிக்கூண்டைப் பற்றி தெரிந்துகொள்ளுதல் சாலச் சிறந்தது. இந்தத் தேடுதல் கற்றலின் ஆக்கத்தையும் வேகத்தையும் அதிகரிப்பதுமட்டுமின்றி அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு ஒரு எளிதான வழியாக அறியப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக இந்தமாதிரியான கற்றலின் போக்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கணினிகள், வலைத்தளங்கள் மற்றும் இதர அலைசார் கற்றல் மரபுகள் கற்றலின் போக்கையும் சூழ்நிலைகளையும் வெகுவாக மாற்றியுள்ளன. இந்த மாற்றங்கள் நன்மை பயக்கக்கூசுடியனவா இல்லையா என்பது பற்றிய உலகளாவிய விவாதங்கள் ஆரய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் நம்முடைய தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கை அடிப்படைகளை வெகுவாக பாதித்தும்  மாற்றியும் விட்டதால் இனி நாம் பின்னோக்கி செல்ல சிறிதளவும் வாய்ப்பில்லை. ஆகவே இந்த மாற்றங்களையும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் முறைகளையும் எவ்வாறு காலந்தொட்டு வருகின்ற கற்றல் முறைகளின் நல்லகோட்பாடுகளோடு இணைத்து செயல்பட முடியும் என்பதை பற்றிய சிந்தனைகள் வளம்பெற வேண்டும்.

கணினி மற்றும் வலைத்தளங்களை சார்ந்த தேடுதல்கள் இப்பொழுது ஐந்து ஆறு வயதிலே ஆரம்பித்தது விட்டன. இந்தத் திறன்கள் குழந்தைகளிடம் இருப்பதைக் கண்டு பெருமிதம் அடைகின்ற பெற்றோர்களின் எண்ணிக்கை சிகரங்களை வீழ்த்திக்கொண்டிருக்கின்றது. உண்மையில் இது இந்த வயதிற்குத் தேவையா, அப்படியானால் எவ்வளவு தேவை என்பதை பற்றி சிந்திப்பதற்கு அஞ்சுகின்றோம். இந்த மரபுசாராக் கல்வி முறைகளும் தேடுதல்கள் மூலம் கிடைக்கும் சில அறிவுத்துணுக்குகளும் குழந்தைகளின் உணர்வு நிலைகளில் பெரிதளவு மாற்றங்கள் ஏற்படுவதை ஆராய்ச்சி மூலமாக உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த மாற்றங்கள் அறிவு மற்றும் உணர்வுகளின் திசைகளையும் போக்கையும் வேகத்தையும் தாக்குவதால் பல குழந்தைகளுக்கு இதனால் வயதுக்கு முந்திய முதிர்ச்சி நிலைகள் (Pre-maturation) வருவதை கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக வளரிளம் பருவம் (adolescence) கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளிலிருந்து இருப்பதாக கணிக்கப்பட்டது, தற்போது ஒன்பது வயதிலேயே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு முந்திய முதிர்ச்சிநிலைகள் இப்பொழுது இன்னும் சிறிய வயதிலேயே இருப்பதாக ஆரய்ச்சிகள் தெறிவிக்கின்றன.

ஆனால் இந்த மாறிய கல்விமுறையால்தான் ஒருவர் சிறப்பான கல்விகற்க முடியுமென்றோ அல்லது அவர்கள் புத்தி கூர்மை சிறைப்படையுமென்றோ வாதிடுதல் சரியானதல்ல. இந்தக் கருவிகள் நிச்சயமாக தேடலின் வளத்தையும் நேரத்தையும் நுணுக்கங்களும் வளமைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை நாம் எவ்வாறு பயனுள்ளதாக ஆக்கிக்கொள்கிறோம் எவ்வாறு இவைகளுக்கு நாம் அடிமையாகாமல் இருக்கின்றோம் என்பதையும் கண்காணித்தல் அவசியம். இந்தக் கருவிகளின் பயன்பாட்டால் நம்முடைய மூளையின் சில அற்புதத் திறன்களும் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை மூளைநரம்பியல் வல்லுநர்கள்  உணர்த்தி வருகின்றார்கள்

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.