Blog

  • படக்கவிதைப் போட்டி 80-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    seawaves

    கரைநோக்கிப் பாய்ந்துவரும் கடலலைகளைத் தன் ஒளிப்படப்பெட்டிக்குள் அடக்கி நம் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கிறார் திரு. ராமச்சந்திரன். இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன்.  இவ்விருவரும் நம் நன்றிக்கு உரியவர்கள்!

    பொறுமைக்கு இலக்கணமான நிலமகளும், வாரி வழங்கும் வள்ளன்மைமிகு அலைமகளும், அவ்வப்போது தன்னிலை திரிந்து சீற்றம் கொண்டு, நிலநடுக்கத்தையும், ஆழிப்பேரலையையும் தோற்றுவித்து மக்களை நிலைகுலைய வைத்தாலும், பின்னர்ச் சீற்றம் தணிந்து, புவிவாழத் தம்மையே தந்துவிடும் தியாகவுள்ளத்தினர்!

    நிலமகளும் அலைமகளும் அரவணைக்கும் இவ்வினியகாட்சியின் மாட்சியில் உளந்தொலைத்த நம் கவிஞர்கள், தம் கருத்துப்பெட்டகத்தை நம்முன் கடைவிரிக்கக் காத்திருக்கின்றனர்; அவற்றைக் கண்டுகளித்து மனமகிழத் தடையேது நமக்கு!

    ***

    கடலில் தோன்றும் அலைகளைப் போன்றே நெஞ்சில் தோன்றிமறைகின்றன கணக்கற்ற ஆசை அலைகள். கொஞ்சுமொழிபேசிக் காதல்வளர்க்கும் இளையோர் தஞ்சம்புக ஏற்ற இடம் கவின்மிகு கடற்கரையே என்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி. 

    நேரமும் அலையும் மனிதனுக்காகக் காத்திருக்காது
    கடந்த காலமும், எய்த அம்பும் திரும்ப பெற முடியாது
    ஆசையே அலைபோலே, எனப் பாடினான் கவிஞன் ,
    அலையும் ஆசையும் செயலில் ஒன்றே என்றான் !
    கடலைப் பார்த்தாலே, நெஞ்சினிலே எண்ண அலைகள் தோன்றிடுமே
    […]
    கடலோரக் கவிதைக்கு என்றும் சிறப்புண்டு
    கடல் அலை அருகினில் மக்கள் செல்வதுண்டு
    மகிழ்ச்சியுடன் கடல் அலையில் கால்களை நனைப்பதுண்டு
    கால் தடத்தில் மண் பெயர்ந்து தடம் பதிப்பதுண்டு !
    நிலவும், மேகமும் ஒன்றையொன்று தழுவும் காட்சி
    கடல் அலைகளுக்கு இதனை காண்பதே மகிழ்ச்சி
    கடற்கரையே காதலர்களுக்கு ஓர் சொந்த வீடு
    தனியே கொஞ்சுமொழி பேசிட, காதலர்க்கில்லை கட்டுப்பாடு !

    *****

    கடலலைகளுக்கும் மனத்தில் தோன்றும் எண்ணஅலைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பட்டியலிட்டு மனத்தின் ஆற்றல் கடலினும் பெரிது எனக் கண்டுரைக்கிறார் திரு. நீலமேகம் சஹஸ்ரநாமன்.

    கடலின் அலைகள் ஓயாது
    மனதின் எண்ணங்களின் அலைகளும் ஓயாது
    கடலின் அடிப்பகுதியில் அமைதி நிலவுகின்றது
    மனதின் அடிப்பகுதியிலும் ஆத்மா அமைதி நிலவுகின்றது
    கடல் உறங்குவதில்லை
    மனித மனமும் உறங்குவதில்லை
    கடலின் அலைகலை கட்டுப்படுத்த முடியாது
    தனி மனதின் எண்ணங்களின் அலைகளை கட்டுப்படுத்த முடியும்
    தனி ஒரு மனிதன் தன் மனதை கட்டுப்படுத்தினால்
    நெருப்பிலும் நடக்கலாம்
    ஆகாயத்திலும் பறக்கலாம் மழையையும் வரவைழக்கலாம்
    எங்கும் வெற்றி எதிலும் வெற்றியடையலாம்

    *****

    ”மனிதனிடம் நல்ல மாற்றத்தை எதிர்பார்த்துக் கரைவந்த அலைகள் ஏமாற்றத்தைச் சந்தித்து விரக்தியோடு கடலுக்குத் திரும்பும் சோகக் காட்சியிது” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மாறி யிருப்பான் மனிதனென்று
    மீண்டும் அலைகள் கரைவந்தன,
    ஏறி யிருக்குது கணக்கினிலே
    எண்ணில் நில்லாக் குற்றங்கள்,
    நாறிக் கிடக்குது நிலமெல்லாம்
    நன்றி கெட்ட மனிதனாலே,
    மாற மாட்டான் மனிதனென்று
    மறுபடி சென்றன கடலுக்கே…!
     

    *****

    தன் முட்டாள்தனத்தாலும், மூர்க்க குணத்தாலும் தனக்குத்தானே தீங்கிழைத்துக்கொள்ளும் மனித இனத்துக்குக் கரையோரம் கிடக்கும் ’பாட்டில்’ (bottle) வழியாக எச்சரிக்கைவிடுக்கும் கடலைத் தன் ’பாட்டில்’ காட்சிப்படுத்தியிருக்கிறார் திரு. ஆனந்த்.

    எனக்குள் என்னை
    நம்பி இருக்கும்
    உயிர்களுக்கு
    ஏதும் நேரக்கூடாததென்று
    எத்தனை முறை
    உன்னை தூக்கி எறிவது ?
    முட்டாளே மனிதனுக்குதான்
    அறிவில்லை !
    உனக்குமா ?
    நீ மனிதனின்
    நீர் தாகம் தீர்க்க
    பிறந்தவன்…
    நான் இயற்கையின்
    வாழ்வாதாரமாக
    வந்தவன்….
    என்னில் இருந்து
    பிறந்தவன்
    புதிது புதிதாய்
    தீயவற்றை கண்டுபிடித்து
    எனைத் தீர்க்கப்பார்கின்றான்….
    என் மக்கள் என்று
    பொறுக்கமாட்டேன்..
    சொல்லி வை
    கோபம் தலைக்கேறினால்
    மறுபடியும் வருவேன்
    சுனாமியாய்!

    *****

    ’கடலாடு காதை’ பாடிய பண்டைத் தமிழினம் இன்று நாகரிகக் குப்பைகளால் கடலின் அழகிய உடலை அசுத்தப்படுத்தும் அவலங்கண்டு மனங்கசிகின்றார் முனைவர். மா. பத்ம பிரியா.

    ஆதி முதல் ஆண்டாண்டு காலமாக
    ஆழியே உன்னழகு
    இலக்கியத்தின் பாடுபொருளாக
    அகத்திய மாமுனி கமண்டலத்தில்
    அடக்கிய மாக்கடலே!
    சங்கச் சித்திரத்தில்
    நெய்தல் நிலமாக வளம்பெற்ற அலைமகளே!
    அற்றை நாளில்
    கடற்கானல் சோலையில்
    நண்டுலாவும் பாதையெல்லாம்
    உயிர்ப்பித்த களவுக் காதல்
    இற்றைப் பொழுதில்
    நாகரிகக் குப்பையால்
    களவாடிப் போனதென்ன?
    காவியங்கள் பாடிய
    கடலாடு காதைகள்
    கதையாகிப் போனதென்ன?

    அன்றொரு காலத்தில்
    புண்ணிய தீர்த்தமாட
    புனிதப் பயணம்
    உன்னைத் தேடி
    இன்றைய மானிடரோ
    பிளாஸ்டிக் கழிவுகளால் உம்மை
    கரைபடுத்த தயங்கவில்லை
    சிறுமை செய்வோரிடம்
    சினத்தைச் சுனாமியாகச் சுட்டினாலும்
    உம்மை புறகணிக்கும்
    உலகுக்கோர் மாமழை
    உம்மால் தானே தரமுடியும்.
     

    *****

    ”கடல்படு பொருள்களைக் கணக்கின்றி அள்ளித்தரும் கடலன்னை, மாந்தக்கூட்டம் மந்தபுத்திகொண்டு கழிவுகளை அள்ளிக்கொட்டித் தன்னை இழிவுபடுத்தினால் பொறுக்கமாட்டாள்; பொங்கியெழுவாள் சுனாமியாய்!” என்று வெகுண்டுரைக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    …பெரியவர் முதல்
    சிறியவர் வரை
    கால் நனைத்து
    கடலைகளில்
    களிப்புறுவர்

    உணவுச்சுவை
    உப்பைத் தருவது அந்த உப்பைத்தருவது கடல்
    கடற்கரை அழகுதான்

    தள்ளி நின்றால் காற்று
    அள்ளித்தருவது உப்பு
    வலை வீசினால் மீன்
    மூச்சை அடக்கினால் முத்து

    முன்னேறும் அலைகளில்
    பின்னூட்டமிட தொணும்
    விரிந்திடும் நெஞ்சம்
    சுரந்திடும் கவிதை

    இயற்கை காட்சியில்
    தோய்ந்தே
    வயப்படுவது
    வாழ்க்கை நிலை

    கழிவுகளை இட்டு
    இழிவு படுத்தினால்
    பொங்கி எழுவாள் கடல் கன்னி
    பெரும் சுனாமியாய் அதில் சிக்கி
    அனாதை ஆகும் உலகு…

    ***

    கரைதழுவும் அலையழகை, அது சொல்லிச்செல்லும் செய்திகளைத் தம் கவிதைகளில் சிறப்பாய்ப் பொதிந்து தந்துள்ள கவிஞர் குழாமுக்குப் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதை!

    வாழ்க்கையே போராட்டமாகி
    வசந்தம்
    இனி எனக்குக் கனாக்காலமே
    எனச் சாவைத்தேடி
    ஓடிய எனக்குக்
    கடல்
    தந்தது முற்றுப்புள்ளி!
    கரையில்
    நின்ற என் கால்களை ஸ்பரித்து முத்தமிட்டது அலைகள்!
    அலையின்
    அந்த ஸ்பரிசத்தில் வெடித்து சிதறியது ஒரு புரிதல்!மனிதா.. கடலில் உருவாகி, அலையாகி, ஓயாமல் முயன்று எழுகிறேன்
    இது
    சாதிக்கத் துடிக்கும் எழுச்சி!
    கடலும்
    அலையும் வேறல்ல
    கவலையும்
    வாழ்வும் வேறல்ல
    இரண்டும்
    பின்னிப் பிணைந்த இயற்கையே
    முத்து,
    சங்கு மட்டும் வாரி வருவதில்லை நான்
    குப்பைகளையும்
    சுமப்பது மட்டுமல்லாது பிணத்தையும்தான்!!
    விருப்பு
    வெறுப்பில்லாது… ஓயாது ஒழியாது ஓடிவந்து
    கடலிலே
    உருவாகிக் கரையைத் தொட்டதும்
    கரைந்து
    விடுகிறேன் கடலுக்குள்!
    எனக்குள்
    பேதமில்லை
    குப்பையும்
    முத்தும் ஒன்றே
    எதையும்
    பதுக்கி வைப்பதில்லை
    கரை
    சேர்ப்பதே என் கடமை
    என்னைப்போல்
    ஏற்றுக்கொள் எல்லாவற்றையும்
    அப்பொழுது
    வாழ்க்கையும் வசப்படும்
    உன்னிடம்
    வசந்தங்களும் வந்து சேரும்!

    விலைமதிப்பற்ற முத்துக்களையும் முடைநாற்றமெடுக்கும் குப்பைகளையும், ஏன்…அழுகிமிதக்கும் பிணங்களையும்கூட முகஞ்சுளிக்காது தன்னகத்தே சுமந்துநிற்கின்றது இந்த அற்புதக் கடல்!” என்று கடலுக்குப் பாராட்டு மடலளிக்கிறார் திருமிகு. ராதா. கடலின் இந்த அருங்குணம், தெய்வச் சேக்கிழார் புகழ்ந்திடும், ”ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்கும்” சிவநேசச் செல்வர்களின் பெருங்குணத்தை நினைவூட்டுகின்றது எனக்கு!

    கடலின் இயல்பைத் தன் கவிதையில் கவினுற வருணித்திருக்கும் திருமிகு. ராதாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்து மகிழ்கின்றேன்.

     

     

    Share
  • தமிழ் இலக்கியங்களில் தாவர அறிவியல்

    -சு.விமல்ராஜ்

    சங்க இலக்கியங்கள் பழையனவற்றைப் பாதுகாக்கின்ற ஆவணங்களாக விளங்குகின்றன. பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து அதன் முழுமைத்தன்மையைச் சிதைத்துவிடாமல் மிக நுணுக்கமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த இலக்கியங்கள் மிகச்சரியான சான்றுகளாக விளங்குகின்றன. தமிழர்களின் இந்த நுணுக்கம், வானியல்,தாவரவியல்,விலங்கியல்,உளவியல், மொழியியல் போன்ற பல்துறைப் புலமை இவைகளெல்லாம் பல நூற்றாண்டுகள் காடு, மலை, கடல், விலங்கு, பறவை, வானம் என்ற இயற்கையின் எல்லா நிலைகளையும் அதன் ஆழ அகலங்களில் நுழைந்து அனுபவித்து வாழ்ந்ததன் மூலம் பெற்ற பட்டறிவின் வெளிப்பாடே என்று சொல்லலாம்.

    தமிழிலக்கியத்தில் இருக்கக்கூடிய தாவார அறிவியல் உண்மைகள், தாவர மேலாண்மை, சுற்றுச்சூழல் அல்லது இயற்கை மீதான முழுமையான அன்பு இவைகளைப் பார்ப்பதற்குமுன்னால் தமிழர்களின் உயிர்க்கொள்கையைச் சற்று நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். காரணம், அந்த உயிர்க்கொள்கையே மிக அற்புதமானது. மேலைநாட்டு அறிஞர் பெருமக்கள் உயிர்க்கொள்கை, தாவரம் சார்ந்த கொள்கை இவைகளைப் பதிவுசெய்தது 19ஆம் நூற்றாண்டு. ஆனால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக இலக்கிய இலக்கண நூல்களின் வாயிலாகப் பல்வேறு அறிவியல் நுணுக்கங்களைத் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

    ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
    இரண்டறி வதுவே அவற்றோடு நாவே
    மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
    நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
    ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
    ஆறறி வதுவே அவற்றோடு மனனே
    (தொல்.மர.1526)

    என்று உயிர்களை அதன் அறிவின் தன்மைக்கேற்ப வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். கரோலஸ் லின்னேயஸ் உலக உயிர்களை இரண்டு பிரிவாக பிரித்தார். ஒன்று தாவர உலகம், மற்றொன்று விலங்கு உலகம். தொல்காப்பியர் சுட்டும் ஓரறிவு உயிர் தாவர உலகம். ஏனைய நான்கு உயிர்களும் விலங்கு உலகத்தைச் சார்ந்தது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களின் அறிவுகளை வைத்தே உயிர்களின் வகைப்பாட்டியலைத் தொல்காப்பியர் முன்வைக்கிறார். ஆறாவது புலனாக மனத்தைச் சுட்டியே மனத்தின் ஆற்றல் பயன்படுத்தப்படுகிற உயிராக மனித விலங்கை அடையாளப்படுத்துகிறார். அதுமட்டுமின்றி மனிதனை உயர்திணை என்று பிரித்துக்காட்டி, மனிதனைத் தவிர்த்த ஏனைய உயிர்களை அல்திணை என்றார் அவர். ஹிப்போகிரேட்டஸ், அரிஸ்டாடில், தியோஃபரஸ்டஸீம், ப்ளைனி த எல்டர், ஜான்ரே, கரோலஸ் லின்னேயஸ், அகஸ்டின் பாரமஸ்டின் கண்டோல் ஆகிய இவர்களெல்லாம் உயிரினம் தொடர்பாகவும், தாவரத்தின் வகைப்பாடுகள் தொடர்பாகவும் விதியைப் படைத்தவர்கள்.

    தொல்காப்பியர் புலன் அறிவை வைத்துப்பேசுகிறார். மேலை நாட்டு அறிஞர் பெருமக்கள் உயிர் இயங்குதல் அல்லது திசுக்களின் அடிப்படையில் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டில் வார்மிங் நீர்வாழ் தாவரங்கள், இடைனிலைத் தாவரங்கள், வறள்நிலத் தாவரங்கள் என்று மூன்றாகப் பிரித்தார். தாவர வகைப்பாடு என்பது அதன் வளரும் தன்மையை வைத்துத்தான் பிரிக்கப்படுகிறது. தாவரங்கள் வளரும் இடம், அதன் சூழல் எது என்பதை வைத்து அதன் தன்மையைப் பிரிக்கிறார்கள் அறிவியலாளர்கள். தமிழர்களின் தாவர வகைப்பாடு வளர்நிலை அடிப்படையில் இருந்தது, மேலை நாட்டு வகைப்பாடும் வளர்நிலை அடிப்படையில் இருந்தபோதும் 18-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகத் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. தமிழில் இத்தகைய செயல்முறை அறிவியல் வளர்ச்சி இல்லை.

    மேனாட்டு அறிஞர்களின் பார்வையில் தாவரங்கள் தாலோபைட்டா, பிரையோபைட்டா, டெரிட்டோபைட்டா என்று மூன்று பெரும்பிரிவாகப் பார்க்கப்படுகிறது. தாலோபைட்டாவை தகட்டுத்தாவரங்கள் என்றும் பிரையோபைட்டாவை பாசத்தாவரங்கள் என்றும் டெரிட்டோபைட்டாவை குழாய்த்தாவரங்கள் என்றும் தமிழில் அழைப்பர். குழாய்த்தாவரம் என்னும் அமைப்பில்தான் பெரும்பாலான புல், மரம், செடி, கொடி ஆகிய அனைத்தும் அடங்கும். மேலும் விதைமூடிய தாவரம் விதைமூடாத தாவரம் என்றும் சுட்டுவர். விதை மூடியது ஆஞ்சியோஸ்பெர்ம் என்னும் பொதுவானது. விதை மூடாதது ஜிம்னோஸ்பெர்ம். இது குளிர்பகுதிகளில் வளரக்கூடியது.

    இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று அறிஞர்கள் கருதும் தொல்காப்பியர் ஓரறிவு உடையது என்று தாவரத்தையே சுட்டுகிறார். “புல்லும் மரனும் ஓரறி வினவே”(தொல்.மர.1527) என்கிறார். இந்த இடத்தில் புல் என்றும், மரம் என்றும் தாவரத்தை இரண்டாக பிரிக்கிறார். புறக்காழ் உடையது புல், அகக்காழ் உடையது மரம், காழ் என்பதை வைரம் என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள். இந்த வகைப்பாடு உள்ளீடு அடிப்படையிலானது. உலகில் உள்ள அனைத்துத் தாவரங்களையும் இந்த வகைப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பது தொல்காப்பியரின் எண்ணம். புறவயிர்ப்பு உடைய புல்லின வகைத் தாவரத்திற்குரிய உறுப்புகளைக் குறிப்பதற்கென்று தனியே பெயர் வழக்குகள் உள்ளனவென்பதைத் தொல்காப்பியர்,

    தோடே மடலே ஓலை என்றா
    ஏடே இதழே பாளை என்றா
    ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
    புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்
    (தொல்.மர.1586)

    என்று குறிப்பிடுகிறார். புல்லினத்தின் இலை தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்னும் பெயர்களால் வழங்கப்படுகிறது. அவற்றின் பூவுறுப்பு பாளை எனப்படுகிறது. பழம் கொத்தாகத் தோன்றுவதால் அவை குலை என்று பெயரிட்டுக் கூறப்படுகிறது. நீண்ட இலையின் மைய நரம்புகள் ஈர்க்கு என்று அழைக்கப்படுகிறது.

    அகவயிர்ப்பு உடைய மரவகைத் தாவரத்திற்கு உரிய உறுப்புகளைக் குறிப்பதற்கு தொல்காப்பியர்,

    இலையே முறியே தளிரே தோடே
    சினையே குழையே பூவே அரும்பே
    நனையே உள்ளுறுத்த அனையவை எல்லாம்
    மரனோடு வரூஉம் கிளவி
    (தொல்.மர.1587) என்கிறார்.

    புல்லினம் மரஇனம் என்ற இரண்டிற்கும் பொதுவான உறுப்புகளைச் சுட்டிக்காட்டுவதற்கு,

    காயே பழமே தோலே செதிளே
    வீழோடு என்றாங்கு அவையும் அன்ன
    (தொல்.மர.1588)

    என்கிறார். தென்னையும் கமுகு என்னும் பாக்கும்  புல்வகையைச் சார்ந்தது இதன் காய் தேங்காய் கமுகங்காய் எனப்படுகிறது. வேம்பு மருதம் இவ்விரண்டும் மரவகையைச் சார்ந்தது. இதன் காய் வேப்பங்காய் மருதங்காய் எனப்படுகிறது. பழத்திற்கும் இதையே கூறுவர். பனை புல்வகையைச் சார்ந்தது; வேம்பு மரவகையைச் சார்ந்தது. இவ்விரண்டிற்கும் பனந்தோல், வேப்பதந்தோல், பனஞ்செதில் வேப்பஞ்செதில் என்பன பொதுவாக உள்ளன.

    புல் மரம் என்ற பகுப்பு அதன் உள்ளீடு தொடர்பானது. அதுமட்டுமல்லாமல் தமிழில் வளரியல்பு நோக்கில் தாவரம் வகைப்படுத்தப்படுகிறது. அவை மரத்தாவரம், கொடித்தாவரம், நிலத்தாவரம், நீர்த்தாவரம் என்பனவாகும். இந்த வகைப்பாடு பூவை முன்னிலைப்படுத்தியே பிரித்துப்பார்க்கப்படுகிறது. இந்த அடிப்படையில் பூவை மரத்தில் பூக்கக்கூடிய கோட்டுப்பூ, கொடிப்பூ, செடி அல்லது புல்லினங்களில் பூக்கக்கூடிய நிலப்பூ, நீர்ப்பூ என்று நான்காக வகைப்படுத்தப் படுகிறது.

    கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப் பூவொடு
    புதல்பூ
    என்று இவை நால்வகைப் பூவே ( பிங். நிகண்.2781) என்கிறது பிங்கல நிகண்டு. இந்த நான்குவகை அடிப்படையில் பல்வேறு சான்றுகளைத் தாங்கி நிற்கிறது சங்க இலக்கியங்கள். கோங்க மரத்தின் பூந்தாதினைச் சொல்லும்பொழுது அகநானூற்றில் ‘சினைப் பூங் கோங்கின் நுண் தாது’ (அகம்.25.10) என்று இடம்பெற்றிருக்கிறது. சினை என்பது மரத்தாவரத்தின் உறுப்புப்பெயர். வண்டுகள் மாலை நேரத்தில் கூம்பும் இயல்புடைய நீர்ப்பூக்களில் இருந்து விலகி மரத்தின் பூக்களைப் போய்ச்சேர்ந்தன என்னும் செய்தியை அகநானூற்றின் ஒரு பாடல் வழியே பெறமுடிகிறது.

    அதாவது,
    வண்டினம்
    சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர
    (அகம்.71.4) என்று சுட்டுகிறது.

    புதலில் பூக்கள் பூத்திருந்ததைப் புறநானூற்றுப்பாடல் “வயலகம் நிறைய புதல்பூ மலர” (புறம்.117.3) என்கிறது.

    சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடிய வகைப்பாடுகளை எடுத்துக்கொண்டால், மரம், கொடி, புதல், செடி, பூண்டு, பயிர், நீர்த்தாவரம், புல், பாசி, காளான், நார், புலன் உணர்வுத்தாவரங்கள், விரிவாக எடுத்துக்கொண்டால் அதில் மரங்கள் வளரியல்பு அடிப்படையில் எடுத்தாளப்படுகிறது. மரம் என்ற சொல் திராவிட மொழிகளில் மரம், மரனு, மர, மேன், மர்ம், மாக், மக் என்று ஒரே பொருளை உணர்த்தியும் ஒலித்திரிபு அடைந்தும் வழங்கப்படுகிறது. மரவழிபாடுதான் மிகப்பழமையான வழிபாடு.

    சங்க இலக்கியம், வாவல் பழுமரம் (குறுந்.172), காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த ( நற்.256), மரம் தலை மணந்த நனந்தலை கானத்து ( நற்.246) என்று மரவகையைச் சுட்டி நிற்கிறது. மரவகைக்கு மேலை நாட்டு அறிவியல் அறிஞர்கள் கூறும் நெறிமுறைகள் சங்கத்தமிழில் நிறைந்து காணப்படுகிறது. பராரை (அகம்.69) என்னும் அதன் திண்மையுடைய வைரம் அகநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. மீமிசைச்சாந்து (நற்.1), வான் பொரு நெடுஞ்சினை ( நற்.3) என்ற நற்றிணைப்பாடல் வரிகள் மரம் உயர்ந்து வளரக்கூடியது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தொல் மூதாலம் (குறுந்.15) என்னும் குறுந்தொகைக் கவிதை மரம் நீண்டநாள் உயிர் வாழக்கூடியது என்பதை உணர்த்துகிறது. காழ் என்னும் மரத்தின் வயிர்ப்பை உணர்த்துவது போல் வெளிறுஇல் காழ்வேலம் [வேல மரம்] (நற்.302.), நறுங்காழ் ஆரம் [சந்தன மரம்] ( நற்.5) புறக்காழ் உடைய புல் இனமான மூங்கிலைக் குறுந்தொகைப்பாடல் (304) ‘முளிவெதிர் நோன்காழ்’ என்கிறது.

    அரைப்புல்லுருவி வகையாகச் சந்தனத்தைக் கூறுகிறது,

    குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
    நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப
    ( நற்.5) என்பது நற்றிணைப்பாடல். இது தமக்கு உரிய உணவைத் தயாரித்துக்கொண்டு மீதமுள்ள உணவுக்கு ஏனைய தாவரங்களில் இருந்து எடுத்துக்கொள்ளும். புல்லுருவி வகை என்பது உண்டு. இது தமக்கு உரிய உணவைத் தாமே தயாரிக்கும் ஆற்றல் இல்லாமல் பிற தாவரம் அல்லது உயிர்களைச் சார்ந்து அவற்றிலிருந்து உணவைப் பெறுபவை ஆகும். இதைப் புல்லுருவி அல்லது சாறுண்ணி என்று அழைப்பர்.

    அடுத்து கொடிவகைகள் நீண்டு வளரக்கூடியவை. ஆனால் தாமாகவே தனித்து நிற்கும் ஆற்றல் இல்லாமல் பிறவற்றைச்சார்ந்து நிற்கக்கூடியது. இவற்றின் தண்டுப்பகுதி மிக மெல்லியவை. கயிறு போன்று இருக்கக்கூடியவை. வேர்க்கொடி, படர்க்கொடி, பற்றுக் கம்பிக்கொடி, சுற்றுக்கொடி, பெருங்கொடி என்று ஐந்துவகையாகக் கொடியைப் பிரிப்பர். கொடியின் மெலிந்த தன்மையை நுண்கொடி(அகம்.237), புன்கொடி(மலைபடு.101), மென்கொடி(குறுந்தொ.186) என்பனவும், பரூஉக்கொடி (மலைபடு.216) தண்டின் பருத்த தன்மையைக் காட்டுகிறது. நெடுங்கொடி(ஐங்குறு.6),  மாக்கொடி(குறுந்தொ.256) என்பன கொடியின் வளமான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. வெண்கொடி(ஐங்.456),கருங்கொடி(மலைபடு.521),செங்கொடி(ஐங்குறு.25),பைங்கொடி(பெரும்பாண்.337) என்பன கொடியின் நிறத்தை உணர்த்துகிறது. நறுங்கொடி தாமலம்(நற்.292) என்பது மணத்தைக் குறிக்கிறது. இவர் கொடிப்பீரம் (ஐங்.464), இவர்ந்த அதர்கொடி அதிரல் (அகம்.159), இவர்ந்த பைங்கொடி அவரை (குறுந்தொ.240), தவழ்கொடி(கலி.102), நெடுங்கண் ஆரத்து அலங்குசினை வலந்த பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்  ( நற்.292),  குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் நறுங்காழ் ஆரம் சுற்றுவன( நற்.5) என்னும் இடங்கள் எல்லாம் படரியல்பு அடிப்படையில் படர்கொடி இதனை ஆங்கிலத்தில் கிரீப்பர் என்பர், ஏறுகொடி என்பதை ஆங்கிலத்தில் கிளைம்பர் என்பர். இவ்வகை கொடிக்கு இவை சான்றாக அமைகின்றன. கொடிக்கு பவர் என்னும் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    புதல் வகையை எடுத்துக்கொண்டால் செடி என்|றும் பொருள் கொள்ளலாம். ஏனெனில் இது நிலத்தில் புதர் புதராய் மண்டி வளரக்கூடியது.  சிறு செடிகளையும், குற்று மரங்களையும் செடி என்று வழங்குவர். செடியை அவற்றின் வாழ்நாள் அடிப்படையில் ஒரு பருவச்செடி, இருபருவச்செடி, பல பருவச்செடி என்று மூன்றாகக்கொள்வர். ஒரு பருவச்செடி ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தோன்றிச் சிலவாரம் அல்லது மாதங்களில் இலையும், பூவும் கனியும் உண்டாகி விதைமுற்றி அப்பருவத்திலேயே பட்டுப்போகும். இருபருவச் செடியில் முறையே சேமித்தல் முதல் பருவத்திலும் அவ்வுணவைக் கொண்டு பூவும் கனியும் உண்டாக்குதல் இரண்டாம் பருவத்திலும் நிகழும். இரண்டாம் பருவத்தின் முடிவில் அத்தாவரம் முழுமையும் பட்டுப்போகும். பல பருவச்செடியில் ஒருமுறை செடி தோன்றியபின் அது வளர்ந்து பூ, கனிகளை உண்டாக்கியதும் மேற்புறமிருக்கும் தண்டுக்கிளை மட்டுமே அழிந்து போகும். நிலப்பரப்பின் உட்புறம் உள்ள கிழங்கு அல்லது மட்டத் தண்டுக்கிழங்கு முதலியவற்றிலிருந்து புதிய தண்டுக்கிளை முளைத்து வளரும் இத்தகைய வளர்ச்சி முறை மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வரை நிகழும். இந்த பகுப்பை வைத்துப்பார்த்தால் பலபருவச்செடி என்பது குறுமர வகுப்பு அல்லது புதலை குறிப்பதாகும். இருபருவ வாழ்விகளை செடி என்று கொள்ளலாம். ஒரு பருவ வாழ்விகளைப் பூடு என்று அழைக்கலாம்.

    அணிலின் வால்போல் கதிர்கொண்ட ஊகம்புல், மணமிக்க புல்லாகிய நரந்தம், பசும்புல், நுண்புல் முற்றா இளம்புல், முளிபுல் என்று ஊகம்புல்லும், நரந்தம்புல்லும், பொது நிலையில் புல்லின் வளரி இயல்பும் கோடிட்டுக்காட்டப்படுகிறது.

    விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா
    வழும்பு கண் புதைத்த நுண்ணீர்ப் பாசி
    அடிநிலை தளர்க்கும் அருப்பம்
    (மலைபடு.220-22) என்ற மலைபடுகடாம் வரிகள் பாசித்தாவரத்தின் வழுக்கும் இயல்பை வழும்பு என்ற சொல்லால் குறிக்கிறது. பாசியின் வழுக்கும் தன்மைக்குக் காரணம் மியூக்கஸ் என்னும் நெய்ப்புத்தன்மையுடைய ஒரு திரவம்தான். அந்த மியூக்கஸை வழும்பு என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறித்துவைத்திருக்கிறது.

    கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான்யாற்று
    கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ (நற்.65.2-3) என்று நீரின் அலையால் பிரிந்தும் சேர்ந்தும் பரவும் தன்மைக்கொண்ட பசிய நிறமுடைய பச்சைப்பாசியை குறிக்கிறது., இவை அன்றி இழைப்பாசி, கொட்டைப்பாசி ஆகியனவும் காட்டப்படுகிறது. பசுங்கனிகங்கள் பொருந்தித் தம் உணவைத் தாமே தயாரித்துக்கொள்ளும் இயல்பால் அமைந்த இதைத் தாவரமாக உணர்ந்து பாசி என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர் சங்கக்கவிஞர்கள்.

    தம் உணவைத் தாமே தயாரிக்காமல் பிறவற்றைச் சார்ந்து வாழக்கூடியவை காளான்கள். இது பெசிடியோமைசீட் என்னும் வகையைச் சார்ந்தது. சங்க இலக்கியத்தில் காளான்கள், காளான், ஆம்பி என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ளது.

    ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
    உறையமை தீந்தயிர் கலக்கி நிரைதெரிந்து
    (பெரு.157-58)

    ஆடு நனி மறந்த கோடுயர் அடுப்பின்
    ஆம்பி பூத்த
    (புறம்.164)

    புல்லென் அட்டில்
    காழ் சேர்முது சுவர்க் கணச்சிதல் அரித்த
    பூழி படர்ந்த புழற்காளாம்பி
    (சிறுபாண்.132-34)

    என்று காளான் குறிக்கப்படுகிறது. காளானின் தன்மை ஈரப்பசை பொருந்திய இருண்ட இடங்களில் குறிப்பாக புழுதியில் தோன்றுவன. அதையே, பல நாள்கள் அடுதொழில் நடைபெறாத அடுப்பு, சமையலறைச் சுவர்கள் ஆகியவற்றின் மீது முளைத்திருப்பதைக் காட்டியிருக்கிறது.

    நார் என்பது மிக முக்கிய ஒன்றாகும். தாவரங்களின் சத்துக்களைக் கடத்துவதற்கு இந்த நார் பங்குவகிக்கிறது. முருங்கை மரத்தின் நார் தொடர்ச்சியற்றது. இதை,

    சுரம் புல்லென்ற அற்ற அலங்குசினை
    நாரில் முருங்கை நவிரல் வான்பூ
    (அகம்.1)

    என்ற அகநானூற்றுப்பாடல் சுட்டிக்காட்டுகிரது. எளிதில் முறியும் இயல்பினாலே இது முருங்கை என்னும் பெயர் பெற்றதென்பர்.

    வாழை, தென்னை, மரல், சணல், பாலை, ஆம்பல் ஆகியவற்றில் நீர் கடத்தும் நார் பற்றிய உண்மை சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புலன் உணர்வுபெற்ற தாவரங்களாக நெருஞ்சி, அனிச்சம் ஆகியன காட்டப்பெறுகிறது. தரைத்தாவரமான நெருஞ்சி மலர்ந்ததும் கதிரவனின் ஒளியை நோக்கி திரியும் தன்மையை,

    சுடரொடு திரிதரும் நெருஞ்சி(அகம்.336)

    பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு(புறம்.155)

    என்ற பாடல் வரிகளும்,

    தூநீர் பயந்த துணையமை பிணையல்
    மோயினள் உயிர்த்த காலை மாமலர்
    மணியுரு இழந்த அணி அழிதோற்றம் (அகம்.5)

    என்ற வரிகளும் தாவரங்களின் புலன்உணர்வை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.

    உலகில் தற்போது வாழ்ந்து வரும் தாவரங்கள் ஏறத்தாழ 3,63,730 தாவரப் பேரினங்களில் அடங்கும். இவை பரிணாம முறையில் நுண்மங்கள், பாசிகள், காளான்கள், ஈரற்செடிகள், பெரணைகள், விதை மூடாத தாவரங்கள் பூக்கும் தாவரங்கள் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பூக்கும் தாவரங்களில் மட்டும் 96,680 பேரினங்கள் உலகெங்கிலும் வளர்கின்றன. ஒரு பேரினத்தில் பல சிற்றினங்கள் உண்டு. பண்டைய இந்திய நாட்டில் மட்டும் வளரும் சற்றேறக்குறைய 47,200 சிற்றினங்கள் பற்றிய விளக்கங்களை ஜெ.டி.ஹூக்கர் (1897) என்பவர் எழுதியுள்ளார்.பழைய சென்னை மாநிலத்தில் 9300 சிற்றினங்கள் பற்றிய விளக்கங்களை ஜெ.எஸ். காம்பில்(1915) எழுதியுள்ளார். இம்மாநிலத்தில் வளரும் ஏறக்குறைய 10,640 மரம், செடி, கொடிகளின் தாவரச் சிற்றினப் பெயர்களையும் அவற்றின் தமிழ்ப்பெயர்களையும் ஏ.டபுள்யூ.லஷிங்டன் (1915) என்பவர் பட்டியலிட்டுள்ளார்.

    சங்க இலக்கியங்களில் மட்டும் 210 மரம் செடி கொடிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட தாவரங்கள், இனி புதிய தாவரத்தைக் கண்டறிந்தாலும் அதை இண்டர்நேஷனல் கொட் ஆஃப் பொடான்னிகல் நோமென்க்லேச்சர்- ஐ சி பி என் என்ற விதிமுறைக்கு உட்பட்டே பகுக்கின்றனர். புதிய அனுமதி பெறுவதற்கு லண்டல் கியூ நிறுவனத்தை நாடவேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தாவரப்பட்டியல் வெளியிடப்படுகிறது., அதற்கு இண்டெக்ஸ் கெவென்சிஸ் என்று பெயர்.

    பழந்தமிழர்கள் இயற்கையை மிக ஆழமாக நேசித்திருக்கிறார்கள். தங்களின் ஒவ்வொரு அசைவையும் இயற்கையின் விதியை மீறாமல் நடத்தியிருக்கிறார்கள். இன்று இயற்கையை மதியாத பல விதிமீறல்கள்  நடைபெறுவதால் தான் வானம் பொய்க்கிறது; இல்லையேல் காலம் மாறிப் பெய்கிறது. சுற்றுச்சூழலை மனிதன் மதித்து நடக்கவேண்டும். கவிஞர் வைரமுத்து அவர்கள் மரத்தின் பயனாகா பட்டியலிடுவார்,

    “பிறந்தோம்
    தொட்டில்
    மரத்தின் உபயம்
    நடந்தோம்
    நடைவண்டி
    மரத்தின் உபயம்
    ………………………………………
    இறந்தோம்
    சவப்பெட்டி பாடை
    எரிந்தோம்
    சுடலை விறகு
    மரத்தின் உபயம்”(இ.பூ.168)

    மரம் மனிதனுக்குக்கொடுப்பது…..

    உண்ணக்கனி- ஒதுங்க நிழல்
    உடலுக்கு மருந்து – உணர்வுக்கு விருந்து
    அடையக்குடில் – அடைக்கக் கதவு
    அழகு வேலி – ஆடத்தூளி
    தடவத் தைலம் – தாளிக்க எண்ணெய்
    எழுதக் காகிதம் – எரிக்க விறகு (இ.பூ.166)

    இத்தனைப் பயன்களையும் பெற்றுக்கொண்டு இயற்கையை

    மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான் என்று மரத்தை உயர்த்தியும் மனிதனின் தவற்றை உணர்த்தியும் கூறியிருக்கிறார். இயற்கையை இனிது போற்றுவோம்; எழிலார்ந்த வாழ்வை கூடிப்பெறுவோம்.

    *****

    சு.விமல்ராஜ்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி(தன்.)
    மன்னன்பந்தல்.
    அலை:8220470590
    மின்:thamizvimal@gmail.com

     

     

    Share
  • உலக இதய நாள்

    சித்ரப்ரியங்கா ராஜா
    itayam

    அடே மனிதா நினைவில் நிறுத்து

    ஆபத்தான புகையை குறைத்து

    இதயத்தை நீ தான் காத்திடுவாயே

    ஈடில்லா வாழ்வு வாழ்ந்திடுவாயே

    உள்ளம் என்பது கோயில் ஆகும்

    ஊறு தான் வரின் இதயமே வாடும்

    எல்லா நாளும் கவலையை குறைத்து

    ஏறு போல் வலிமை இதயத்தே நிறுத்து

    ஐயம் தவிர்த்து இதயம் பல வெல்வாய்

    ஒற்றுமை பேணியே நல்வழி செல்வாய்

    ஓய்வெடுத்து நீயும் இதயத்தை காத்து

    கோவிலாய் அதில் நீ சுடரேற்றிடுவாய்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    keshav4
    படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
    மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
    கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாய்,
    வேலொத்து பாயும் வசவு ….(1)

    வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
    தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
    மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
    ஞானத்தை நானுற நல்கு ….(2)

    அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
    பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
    ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
    மாற்றுத் துணியாய் மனது ….(3)

    கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
    வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
    கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
    தலைவானில் நிற்கும் திமிர்ந்து ….(4)

    வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
    மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
    அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
    முளைத்திடு முண்டகம் மா ….(5)

    முண்டகம் -தாமரை

    கீரன் திருமுரு காற்றுப் படையவள்,
    மாரன் திருவாய் மொழியவள், -சூரன்
    மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு,
    தகாதோர் செவிக்கவள் திட்டு’’….(6)

     
    ”வித்யா வினய சம்பன்னே”…..”சகல கலாவல்லி, சங்கீத சாம்ராட்,
    அகல விடாதுனை ஆட்கொண்டு, -இகபர,
    சுகங்க ளுடனே சுவிகாரம் கொள்வாள்,
    அகங்கார நெஞ்சை அழித்து”….கிரேசி மோகன்….

    Share
  • எளிமை – வலிமை!

    பவள சங்கரி

    lal-bahadur-shastri

    நம் முன்னாள் பிரதமர் உயர்திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் இன்று பிறந்த தினம். அவர் சிறுவனாக பள்ளி செல்லும்போது அவரும் நம் இந்தியாவும் மிகவும் ஏழ்மையில் இருந்த காலகட்டம் 🙁 அப்பொழுது ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் நிலைமை. பாலம் கட்ட வசதியில்லாத நம் பாரத மாதா.. சாஸ்திரிக்கு படகில் செல்ல காசில்லாமல், புத்தகங்களை துணியில் கட்டி தலையில் சுமந்துகொண்டு, ஆற்றில் நீச்சல் அடித்து அன்றாடம் அதே ஈர உடையுடன் பள்ளி செல்வாராம்.. அப்படியெல்லாம் கடினப்பட்டு படித்துதான் சிறந்த அறிவாளியாக நம் நாட்டை வழிநடத்தினார்..

     
     
    Share
  • கைகோத்துக் காத்துநிற்போம்!

    -எம் .ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

     

    mahatma-gandhi

     

    பசித்திருந்தார் தனித்திருந்தார்
    விழித்திருந்து செயற்பட்டார்
    பழிபாவம் தனைவெறுத்துப்
    பக்குவமாய் வாழ்ந்திருந்தார்!

    தனக்கெனவே பலகொள்கை
    இறுக்கமாய்க் கடைப்பிடித்தார்
    தளர்ந்துவிடும் வகையிலவர்
    தனைமாற்ற விரும்பவில்லை!

    பொறுப்புகளைப் பொறுமையுடன்
    பொறுப்பேற்றே ஆற்றிநின்றார்
    வெறுத்தாலும் பலவற்றை
    விருப்பமுடன் அவர்செய்தார்!

    மற்றவரை மனம்நோக
    வைக்காமல் இருந்துவிட
    மனத்தளவில் வேதனையை
    வைத்துவிட்டார் மாமனிதர்!

    தன்வீட்டை நினையாமல்
    தாய்நாட்டை நினைத்துநின்றார்
    தாய்சொல்லைத் தட்டாத
    தனயனாம் காந்திமகான்!

    தாய்சொல்லே வேதமாய்
    தான்மனத்தில் கொண்டதனால்
    தாய்நாட்டின் விடுதலைக்காய்
    தனையிழக்கத் துணிந்துநின்றார்!

    உடையை மாற்றினார் உணவை மாற்றினார்
    படையை மாற்றினார் பாதைகூட மாற்றினார்
    ஆயுதத்தை மாற்றினார் அஹிம்சைதனை ஏற்றினார்
    அகிலம்பார்த்து வியந்துநிற்க அரக்கத்தையும் ஓட்டினார்!

    நீதிபார்த்து நின்றுநின்று நிமிர்ந்து செயலாற்றினார்
    சாதிபேதம் தனையுடைத்துச் சமத்துவத்தைப் போற்றினார்
    பாதியாடை தானுடுத்திப் பார்வியக்கச் செய்திட்டார்
    பாரதத்தை மீட்டெடுத்த பாரதத்தின் பொக்கிஷம்!

    பண்புகாத்து பலரும்போற்ற பாரதத்தை உருவாக்க
    பட்டபாடு கொஞ்சமல்ல காந்திமகான் வாழ்வினிலே
    காந்திபட்ட பாடெல்லாம் கடுகளவு நினையாமல்
    காற்றிலே பறக்கவிட்டுக் கவலையின்றித் திரிகின்றார்!

    நீதியொரு பக்கம் நிட்டூரம் மறுபக்கம்
    சாதியொரு பக்கம் சதிகாரர் நாற்பக்கம்
    கள்ளமின்றிச் சிரிக்கின்ற காந்திபடம் காசுதனில்
    கள்ளப்பண முதலைகளோ நல்லவராய் உலவுகிறார்!

    காசுபற்றி நினையாத காந்திமகான் இப்போது
    காசுதனில் இருந்தாலும் கவலையுடன் தானிருப்பார்
    காந்திதனைக் காசில்வைத்துக் கலப்படங்கள் செய்வாரைக்
    காந்தி ஜயந்திதனில் கல்லெறிந்து கொல்லல் வேண்டும்!

    மதுவெறுத்த காந்திமகான் மனம்மகிழ வைப்பதற்கு
    மதுக்கடையை ஒழித்துவிட மனத்திலெண்ணம் வருமாயின்
    புதிதான பாரதத்தைப் பூமியிலே கண்டிடலாம்
    அதுதானே காந்திமகான் ஜயந்திக்கே அர்த்தமாகும்!

    கொடியேற்றம் மலர்வளையம் கொண்டாட்டம் பேச்சரங்கம்
    வெளிவேஷம் எல்லாமே காந்திக்குப் பொருத்தமல்ல
    பழிபாவம் தருகின்ற பாதகங்கள் தனையொழித்துப்
    பாரதத்தை மீட்டுவிட்டால் காந்திக்குப் பெருமைவரும்!

    காந்தி ஜயந்திதனைக் கருத்துடனே மனத்திருத்திக்
    காந்தி மனம்விரும்பும் காரியங்கள் செய்துநிற்போம்
    காந்தி மகான் கண்டெடுத்த கண்ணான சுதந்திரத்தைக்
    காந்தி மகான் வாழ்த்திநிற்கக் கைகோத்துக் காத்துநிற்போம்!

     

    Share
  • சிக்காத அமரியல்லவா!

    இசைக்கவி ரமணன்

    amman

    ஏறெழுந்து வந்துநெஞ்சைக் கூறுபோடும் தங்கமே!
    என்றன் கனவில் கவியில்வந்து இடிசிரிக்கும் சிங்கமே! என்னை
    ஏறெடுத்துப் பார்த்துவிட்டால் ஏதுனக்கு பங்கமோ?
    எனக்கும் உனக்கும் இடையினிலே எவர்வகுத்த சுங்கமோ!

    தேரெழுந்த தாயிதயம் ஊர்திரண்ட தாகமனம்
    யாரெந்தக் கொடியசைக்கக் காத்திருக்கிறாய்? அடி
    யாமளையே யார்வரவைப் பார்த்திருக்கிறாய்?
    தேரழுந்தித் தெருநொறுங்கி ஊர்சிரிக்கவா? என்றோ
    தீர்ந்தகதை தொடர்தல்கண்டு பார்விழிக்கவா?

    கார்குழலை மின்னெடுத்துக் கட்டமுயலும் அழகியே!
    கட்டளைக்குக் கவிதைகேட்கும் கர்வமிக்க அரசியே!
    ஊர்விழுந்து நானெடுத்த பிச்சையெலாம் போதுமே! உன்
    உதடுபட்டென் உச்சிகுளிரும் ஒற்றைமுத்தம் வேண்டுமே!

    சாத்திரங்கள் தோற்ற இடம் சதுர்மறைகள் ஏங்கும்பதம்
    சாயங்காலக் கனவுகளில் காட்டியவள் நீ! நீ
    சாம்பலையும் நின்றெரிக்கும் சாம்பவியாம் தீ!
    தோத்திரங்கள் இன்னுமுனக் கலுக்கவில்லையா? கால்
    தொட்டுச்சுட்ட கண்ணீரும் உலுக்கவில்லையா?

    நீயெனக்கு நானுனக்கு நேர்ந்துகொள்ளுவோமே, ஒரு
    நிமிடம்கூடப் பிரிந்திடாமல் சேர்ந்து வாழுவோமே
    தாயெனக்கு நீயுனக்குத் தக்கபிள்ளை கவிஞனே, நீ
    தள்ளிவைக்கத் தள்ளிவைக்கத் தழுவவருவ தொருவனே!

    கூடெடுத்த தூழிக் கனல் குடிசையிலே சூறைப் புயல்
    கூர்த்தகைகள் கொட்டிச் சிரிக்கும் குமரியல்லவா! எந்தக்
    கோட்டுக்குள்ளும் சிக்காத அமரியல்லவா! இது
    மூடநல்ல நேரம்திரை போட நல்லநேரம், என்னை
    முன்பிலாமல் பின்பிலாமல் தீர்த்தருள்கவே! தாயே!
    முத்தமொன்றில் தீர்த்துன்னுள் வார்த்தருள்கவே!

    Share
  • நவராத்திரி நாயகியர் (2)

     

    மாங்காடு  ஸ்ரீ காமாட்சி அம்மன்

    mangadukamakshi1

    மங்காத  ஒளிப்பிழம்பே ! மாதவனின் உடன்பிறப்பே !

    மலையரசன் குலவிளக்கே ! மாங்காட்டின் தவத்திருவே !

    மகேசனின் மனம்கவர்ந்த மாமதுரை மீனாட்சி

    மலரடி போற்றுகின்றேன் ! மனமிறங்கி வந்திடுவாய் !

     

    செங்கமலம் கரும்பேந்தி நின்றாயே காமாட்சி

    சீறிவரும் கங்கைக் கரையினிலே விசாலாட்சி

    செவ்விதழ் கிளியேந்தி கைகொடுக்கும் மீனாட்சி

    சிந்தையிலே கோலோச்சும் சிவகாமி அரசாட்சி !

     

    அழகுக்குப் பொருளாகி அகிலமெல்லாம் காப்பவளே

    அகமெல்லாம் உள்ளடக்கி மோனத்தில் முதிர்ந்தவளே!

    அசையாத உயிரெல்லாம் ஓடிவரும் ஆடித்தவசினிலே

    அருள்சுரக்கும் உனைக்காண ஆனந்த  பைரவியே !

     

    ஓரிரவில் நீவந்தாய் உலகாளும் கலைமகளே

    ஓரிரவில் நீவந்தாய் உளங்கவர்ந்த திருமகளே

    ஓரிரவில் நீவந்தாய்  உமையாள்  மலைமகளே

    ஒன்றாக நீயிருக்க இரவெல்லாம் உன்னருளே !

     

    பூவாலே உனைப்போற்றப் புன்சிரிப்பால் உளம்கவர்ந்தாய்

    பொன்னாலே அலங்கரிக்கப்  பொழுதெல்லாம் முன்னின்றாய் !

    பூந்தமிழில் உனைப்பாடப் புலனெல்லாம் உயிர்தந்தாய் !

    புரியாத மொழிகேட்டும்  பூரணியே! அருள்சுரந்தாய் !

     

    கண்ணுக்குள் நீயிருந்தால் கதிரவனின் ஒளிவருமே !

    கற்பனையில் நீயிருந்தால் காவியங்கள் உயிர்பெறுமே !

    சொல்லிடையில் நீயிருந்தால் சொந்தங்கள் பிறந்திடுமே !

    சுவையெல்லாம் நீயிருந்தால் சுகமான அனுபவமே !

     

     

     

     

     

    Share
  • 2030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம்.

    aj

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village

    ++++++++++++++++

    நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்
    கால் வைத்து
    நாற்பது ஆண்டுகள் கடந்து
    நாசா மீண்டும்
    விண்ணுளவுப் பயணம் துவங்கும்
    வெண்ணிலவில் குடியேற !
    நுண்ணிய ஏழு கருவிகள்
    மண்தளப் பரப்பை விரிவாய்ப்
    பதிவு செய்யும்.
    துருவப் பகுதியில்
    ராக்கெட் ஒன்றை நிலவுமேல்
    தாக்கிடச் செய்து
    தளத்தில் குழி பறித்து
    தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள்
    மண்ணுளவு செய்யும் !
    வெண்ணிலவில் குடியேறத்
    திட்டமிட்டுள்ளது ரஷ்யா  !
    நிலவில் ஓய்வெடுத்து
    நிரந்தர ஆய்வுகள் புரிய ஏதுவாகும் !
    செவ்வாய்க் கோள்
    செல்லும் விமானி கட்கு
    ஆய்வு  நிலையம் அமைக்க
    மீண்டும் ஈசா தொடங்கும்
    நீண்ட காலத் திட்டம் !

    ++++++++++++

    esa-moon-village-4

    நமக்கு நிலவு ஓர் ஆய்வுக்கூடம்.  சூரிய குடும்ப வரலாற்றின் தொகுப்பகம்; விண் எரிகற்கள், வால்மீன்கள் தாக்கம், பரிதிப் புயலடிப்பு யாவும் அதன் மண் தளத்தில் எழுதப்பட்டுள்ளன.  ஒரு நிலவுச் சிற்றூர் [Moon Village] அமைப்பு விஞ்ஞானிகளுக்கு அதன் கோள் பண்பாடுகளைத் தேடி அறியவும், பூர்வீகப் பூமித் தோற்றம் அறியவும்  உதவி செய்யும்.

    ஈசாவின் குறிக்கோள் : நிலவுப் பயண நிலையம் திறந்த அகில நாட்டுப் பயன்பாடாய்ச் சிறிது சிறிதாய்ப் பெரிதாக வேண்டும் என்பதே.  வரும் நாட்களில் மனிதருக்குத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் கட்டப் பட்டு, அவர் பாதுகாப்பாய்ச் சூரிய  மண்டலத்துக்கும் அப்பால் செல்லும் பயிற்சியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    யான் வொர்னர் [Jan Worner, Director, European Space Agency (ESA)]

    esa-moon-village-5

    நிலவிலே பயண  நிலையம் அமைத்தபின் என்ன செய்வது ?  ஒன்று மனித விண்வெளித் தேடல் நிறுத்தப் பட்டு எதுவும் நிகழாதிருப்பது.  அல்லது அடுத்தோர் நிலையம் அமைப்பது.  அதை நினைத்துப் பார்ப்பதே கடினம். அல்லது வேறெங்காவது போவது.  நான் உறுதியாக நம்புவது : நிலவே நமது அடுத்த ஆய்வு உலகம்.

    நாம் வேறெந்த தூரக் கோளுக்கோ, அல்லது செவ்வாய்க் கோளுக்கோ போகத் துணிவதற்கு முன்னால், மனிதர் தூசித் தளத்தில், பரிதிக் கதிர்வீச்சு மிக்கச் சூழ்வெளியில் மீண்டெழும் பயிற்சியைப் பெறவேண்டும். செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்புவதற்கு விண்வெளிப் பயணப் பொறிநுணுக்கத்தில்  மன ஊக்கம் அடைய வேண்டும்.  நிலவுக்குச் சென்று மீள்வதும் ஆபத்தானதுதான்.  ஒரு நிறைபாடு என்ன வென்றால், நிலவுப் பயணத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், மனிதரை மீட்டுக் கொண்டு வர முடியும்.  மூன்று நாள் பயணத் தூரத்தில்தான் நிலவு உள்ளது.  பாதுகாப்பு மீட்சி முறைகள் எல்லாம் கைவசம் உள்ளன.

    இயான் கிராஃபோர்டு [Professor, Planetary Science, University of London]

    esa-moon-village-3

    செவ்வாய்க் கோளைத் தேடிச் செல்லும் நமது ஆர்வத்தைத் திருப்புவதற்கு அல்ல, நிலவுப் பயண நிலையம்.  1960-1973 ஆண்டுகளில் அமெரிக்க புரிந்த அப்பொல்லோ மனிதப் பயணங்கள், நிலவைத் தொட்டும் தொடாமல் ஒரு சில  நாட்களில் முடிந்து பரபரப்பூட்டியவை;  பற்பல விஞ்ஞானப் பயன்கள் அளித்தவை. ஆனால் அண்டவெளி உலகிலே, நீண்ட நாட்கள் பயிற்சி அனுபவம் பெற வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை.

    காத்ரீன் ஜாய் [Lunar Scientist, Manchester University]

    அடுத்த நிலவுப் பயண நிலைய அமைப்பு பற்றி ஈசா ஆளுநர்

    ஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையகத்தின் புதிய ஆளுநர் யான் வொர்னர் [Jan Worner], 150 பில்லியன் டாலர் அகில நாட்டு விண்வெளி நிலையம் முறிந்து, தீப்பற்றிப் பசிபிக் கடலில் வீழ்ந்து, விண்வெளி விமானிகளைத் தனியே தவிக்க விட்ட பிறகு,  அடுத்த துணிவு முயற்சி நிலவுப் பயண நிலைய அமைப்பு என்று நினைக்கிறார்.

    esa-moon-village-6

    ‘கார்டியன்’ செய்தித்தாள் நிருபரிடம், பொதுத்துறை, தனித்துறைத் தொழில்நுணுக்க அதிபர்கள் முன்பாக, யான் வொர்னர் நிலவுச் சிற்றூர் [Moon Village] பற்றிப் பேசினார். “அகில நாட்டு குழு ஒன்று நிலவின் மறுபுறத்தில், பூவியின் மின்காந்த அடிப்புத் தாக்காதவாறு, ஒருபெரும் தொலைநோக்கிக் கூடத்தைக் கட்ட வேண்டும்.

    ஒரு தனிப்பட்ட குழு சூரியக் கதிர்வீச்சு பாதிக்கா நிலவுக் குடியகங்களைச் [Moon Habitats] தூரத்தில் தூண்டிச் சுயமாய் இயங்கும் யந்திரங்கள் [Robots] அமைக்க முடியுமா வென்று பார்க்கலாம்.  மற்றொரு தொழில்நுணுக்க அமைப்பகம் துருவப் பகுதியிலிருந்து பனிநீர் உருக்கி, ஹைடிரஜன், ஆக்சிஜென் ஆகிய வாயுக்களைப் பிரித்து ராக்கெட் எரிசக்தி ஆக்க முடியுமா வென்று பார்க்கலாம்.  அடுத்தொன்று நிலாச் சுற்றுப் பயண  வசதிகளை ஏற்படுத்தலாம்.

    Moon Russian Colony

    2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது.  நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும்.  மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும்,  நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப்  பயண முயற்சி செய்யவும்,  நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.

    டெமிட்ரி  ரோகோஸின்,  ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர்.  [ஏப்ரல் 11, 2014]

    அண்டவெளித் தேடலின் நிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony].   ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது.  ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், புவிக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது.  நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.

    ஐவன்  மோய்செயவ் [Chief Scientist, Institute of Space Policy]

    Moon Colony Extension

    Moon Research Colony

    நிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார்  கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்ட நிதித் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது.   அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள்  தனியார் கூட்டுமுறையில் அமைக்கப் படுகின்றன.

    ஆன்ரே  லொலின் [Russian Academy of Cosmonautics Member]  

    நிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள் 

    1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து  அண்டவெளியுகம் புலர்ந்ததற்கு முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன.  1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ்  என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை”   [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார்.  ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 – 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.

    Moon Camp ground

    இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி,  1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லியிருக்கிறார்.  1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது.   அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன.   பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்பதாகப் புனைகதை வடித்துள்ளார்.  ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நிலவுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார்.  1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.

    Moon Colony Model -1

    Moon Control centre

    நிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன.  1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன.  2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார்.   அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி வருகிறது.   ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.

    “நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன.  ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது.  நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”

    டாட் மே (Todd May, Manager Lunar Presursor Robotic Program)

    Fig 1 Lunar Reconaissancs Mission

    “நாசாவின் இந்த இரண்டு விண்ணுளவுக் குறிப்பணிகளும் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) நமது அண்டைக் கோளான நிலவைப் பற்றிக் கிளர்ச்சி யூட்டும் புதிய தகவலை அளிக்கப் போகின்றன.  தேவையான தளக் காட்சிப் படப் பதிவுகள் (Images), பாதாள தளச் சரிவுகள் (Lunar Landscapes) ஒரு மீடர் துல்லிமத்தில் நோக்கப்படும்.  அவ்விதத் தகவல் அடுத்து நாசா குறிவைக்கும் தளங்களுக்கு விபரங்கள் தரும்.  அந்த இரண்டு விண்ணுளவிகளைத் தயாரித்த குழுவினர் உன்னத டிசைன் செய்து சாதனங்களைப் படைத்துள்ளனர்.

    டக்ளஸ் குக் (Douglas Cooke, Associate Administrator of NASA’s Exploration Systems)

    “நிலவு தள ஆய்வு விண்கப்பல் (LRO) நுணுக்கமான ஓர் உன்னத விண்ணுளவி.  அந்த ஏழு கருவிகளின் விண்சிமிழ் நிலவின் தள மண்டலத்தில் எமக்குப் பல்லாண்டுகள் தேவைப்பட்ட தகவலைத் தொடர்ந்து அனுப்பி வரும்.”

    கிரெய்க் டூலி (Craig Tooley, LRO Project Manager at NASA)

    Fig 1A Atlas Rocket Launch“நிலவின் குழிகளை நோக்கி உளவும் “லகிராஸ்” துணைக்கோள் (LCROSS) நிலவைக் கோலாகலமாக நெருங்கப் போகும் (அக்டோபர் 2009) காட்சியையும், அதன் அடித்தளத்திலே நீர் உள்ளதா என்று முதன்முதல் ஆராயப் போவதையும் உலகப் பொதுமக்கள் கண்டு களிக்க எதிர்நோக்கி யுள்ளோம்.”

    டானியல் ஆன்டிரூஸ் (Daniel Andrews LCROSS Project Manager NASA)

    “நிலவின் தளத்திலே புதைபட்ட பூர்வச் சுவடுகளின் [Fossils] கண்டுபிடிப்பே ஓர் பரபரப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது !  ஒருவேளை ஆதியில் உண்டான உயிரினத் தோற்றங்களின் ஆர்கானிக் துணுக்குகளும் அங்கே இருக்கலாம். ஆனால் அவை யாவும் அபூர்வமாகவே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.”

    குயிலர்மோ கன்ஸாஸ், பௌதிகத் துணைப் பேராசிரியர் [Guillermo Gonzalez, Iowa State University]

    நிலவை நோக்கி மீண்டும் நாசாவின் பயணம்

    2009 ஜூன் மாதம் 17 ஆம் தேதி நாசா பிளாரிடா கனாவரல் முனை (Cape Canaveral) விமானப்படை ஏவு தளத்திலிருந்து மனிதரற்ற இரண்டு துணைக்கோள்களை அட்லாஸ்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவை நோக்கி அனுப்பியுள்ளது.  அவற்றின் முக்கிய குறிக்கோள்கள் : 2020 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் தடம் வைக்கப் போகும் நாசா விண்வெளி விமானிகள் தங்கும் ஓய்வுக் கூடத்துக்கு இடம் தேடுவது, நிலவின் அடித்தளத்தில் நீர் உள்ளதா, எரிசக்திக்கு ஹைடிரஜன் வாயு இருக்கிறதா என்று ஆய்வுகள் செய்வது.  நாசாவின் இரட்டைத் துணைக்கோள்கள் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) அவற்றை இன்னும் ஓராண்டில் கண்டுபிடிக்கும்.  அந்த இரண்டு துணைக்கோள்களும் ராக்கெட் ஏவிய 45 நிமிடங்கள் கழித்துப் பிரிந்து சென்றன.  நிலாவின் விண்வெளிச் சுற்றித் துணைக்கோள் LRO இப்போது நிலவின் ஈர்ப்பாற்றலில் சிக்கி 50 கி.மீடர் (30 மைல்) உயரத்தில் வட்டவீதியில் சுற்றி வருகிறது.  இரண்டாவது கட்ட சென்டார் ராக்கெட்டில் (Centaur Rocket) செல்லும் துணைக்கோள் LCROSS நான்கு மாதங்கள் கழித்து (அக்டோபர் 2009) நிலவை நெருங்கித் துருவப் பகுதிகளில் சுற்றி இரு கணைகளால் தளத்தைத் தாக்கித் துளையிட்டு நீருள்ளதா என்று ஆராயும்.  முதன்முதல் புரியும் இந்த அற்புத இரட்டைச் சோதனைக்கு ஆகும் நிதிச் செலவு சுமார் 583 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) !

    Fig 1B Second Stage Centaur Rocket

    சூரிய சக்தி பயன்படும் LRO துணைக்கோள் பயணம் செய்து நாலரை நாட்களில் நிலவின் ஈர்ப்பு மண்டத்தில் சிக்கியது.  பிறகு அது நிலவின் துருவப் பகுதிகளில் 2 மணிக்கு ஒருதரம் 30 மைல் (50 கி.மீ) உயரத்தில் சுற்றி வந்தது.  நாசாவின் இந்த விண்வெளிப் பயணம் இரண்டு அவசியமான தகவலை அறிந்து கொள்ள உதவும்,  ஒன்று நிலவின் துருவத்தில் ஆழ்குழி பறித்து அடித்தளத்தில் நீருள்ளதா என்று கண்டுபிடிப்பது;  இரண்டாவது எரிசக்தி அளிக்கும் ஹைடிரஜன் வாயு நிலவில் உள்ளதா என்று ஆய்வு செய்வது.  விண்வெளித் தேடற் பயணங்களில் சந்திரனுக்கு ஒரு பவுண்டு எடைப் பொருளைத் தூக்கிச் செல்ல நாசாவுக்கு 50,000 டாலர் செலவாகிறது.  ஆகவே விண்வெளி விமானிகளுக்குப் பேரளவில் நீர் கொண்டு செல்வதோ, ராக்கெட்டுக்கு எரிசக்தித் திரவத்தை ஏற்றிச் செல்வதோ பெரும் நிதிச் செலவை உண்டாக்கும் தேவைகளாக இருக்கின்றன.

    புதிய நிலவுத் தேடலில் கதிர்வீச்சு, ஹைடிரஜன் வாயு ஆராய்தல்

    1969 ஆம் ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலாவில் தடம் வைத்த பிறகு 1972 ஆண்டு வரை நாசா மொத்தம் 12 விண்வெளி விமானிகளை நிலவில் உலவிடச் செய்துள்ளது.  1959 ஆண்டு முதல் 2009 வரை ஐம்பது ஆண்டுகளாக உலக நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டு, ஜப்பான், சைனா, இந்தியா) நிலவை நோக்கி 17 பயணங்களைச் செய்திருக்கின்றன.  ஆனால் நிலவில் இதுவரைத் தடம் வைத்த எல்லா விண்வெளி விமானிகளும் அமெரிக்கர் ஒருவரே ! அவ்விதம் அமெரிக்க விண்வெளி விமானிகள் இதுவரைக் கால்வைத்த இடங்கள் ஆறு. அந்தத் தளங்கள் யாவும் விமானிகளால் பகலில் மட்டுமே வாகனங்கள் மூலம் தேடப் பட்டன !  2020 ஆண்டில் மறுபடியும் நாசா தனது விமானிகளை நிலவுக்கு அனுப்ப இதுவரைத் தேடாத இடங்களை இப்போது நிலவில் ஆராயத் திட்டமிட்டுள்ளது.

    Fig 1E NASA Lunar Satellite

    LRO துணைக்கோள் ஓராண்டு நிலவைச் சுற்றி வந்து 50 குறிப்பிட்ட தளங்களின் தகுதியை எதிர்காலப் பயணங்களுக்கு ஒப்புநோக்கும்.  “LRO துணைக்கோள் அனுப்பும் உயர் நுணுக்கத் தளப் படங்கள் (High Resolution Maps) எதிர்கால நிலவுப் பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்” என்று LRO திட்ட விஞ்ஞானி ரிச்சர்டு வான்டிராக் (Richard Vondrak) கூறுகிறார்.  நிலவுக்குச் செல்லும் எதிர்கால விண்வெளி விமானிகளைத் தாக்கும் கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் கருவிகளும், சாதனங்களும் அதில் அடங்கி யுள்ளன,  மேலும் ஹைடிரஜன் வாயுச் சேமிப்பு மிக்க பகுதிகளைத் தேடும் கருவிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன.  LRO துணைக்கோள் (50 கி.மீ.) 30 மைல் உயரத்தில் ஓராண்டு சுற்றி வந்து நிலவின் தளப் பண்புகளையும் சூழ்வெளியையும் தொடர்ந்து ஆராய்ந்து வரும்.

    LCROSS துணைக்கோள் நீர் இருப்பை ஆராய்தல்

    LRO துணைக்கோள் துரித உந்துகணைகள் மூலம் நிலவை நெருங்க நாலரை நாட்கள் கடந்தன. ஆனால் இரண்டாவது துணைக்கோளான LCROSS மெதுவாக நகர்ந்து நிலவை நெருங்க நான்கு மாதங்கள் எடுக்கும்.  LCROSS துணைக்கோளில் இரண்டு தனித்தனிப் பாகங்கள் உள்ளன. ஒன்று 41 அடி நீளமுள்ள பளுவான இரண்டாம் கட்ட சென்டார் ராக்கெட் (Second Stage Centaur Rocket).  அடுத்தது அத்துடன் இணைக்கப் பட்ட சிறு துணைக் கோள் (Shepherding Spacecraft).  2009 அக்டோபர் மாதம் முதலில் சென்டார் ராக்கெட் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும்.  முதல் ராக்கெட் தாக்குதல் நிகழ்ந்து 4 நிமிடங்கள் கழிந்து சிறு துணைக்கோளும் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும்.  அவை உண்டாக்கும் குழிகள் நிலவின் அடித்தளத்தின் தன்மைகளைக் காட்டுவதோடு அடியில் நீர் உள்ளதா என்பதையும் கருவிகள் கண்டுபிடிக்கும்.

    Fig 2 LCROSS to Impact on Moon

    சென்டார் ராக்கெட் தாக்குவதற்கு முன்னால் அது நிலவுக்கு மேல் 54,000 மைல் (87,000 கி.மீ.) உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.  அது நிலவைத் தாக்கும் போது அதன் பளு குறைந்தது 4958 பவுண்டு (2249 கி.கிராம்) முதல் உச்சம் 5216 பவுண்டு (2366 கி.கிராம்) வரை இருக்கும்.  சிறு துணைக்கோள் 1369 பவுண்டு (621 கி.கிராம்) முதல் 1909 பவுண்டு (866 கி.கிராம்) வரை இருக்கும்.  சென்டார் தாக்குதல் நிலவின் தளத்தில் 66 அடி நீளம், 13 அடி விட்டமுள்ள(20 மீடர் நீளம், 4 மீடர் விட்டம்) பள்ளத்தை உண்டாக்கும்.  அது போல் சிறு துணைக்கோள் உண்டாக்கும் துளை : 46 அடி நீளம் 6 அடி விட்டமுள்ள (14 மீடர் நீளம், 2 மீடர் விட்டம்) குழி.  முதல்முதல் இவ்விதம் இரட்டைத் தாக்குதல் செய்து நிலவில் நிகழும் அதிர்ச்சிக் காட்சிகளை நாசாவின் LRO துணைக்கோள், ஹப்பிள் தொலைநோக்கி மற்றமுள்ள துணைக்கோள்களும் தொலைநோக்கிகளும் படமெடுத்து உலக மக்களுக்கு அறிவிக்கும்.

    நிலவுத் தளப்பதிவு துணைக்கோளில் உள்ள ஏழு நுட்பக் கருவிகள்

    LRO துணைக்கோளில் ஏழு நுட்பக் கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன :

    1.  (CRATER) (Cosmic Ray Telescope for the Effcts of Radiation) :  கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் அகிலக்கதிர் தொலைநோக்கி.

    விண்வெளி விமானிகள் சந்திர தளத்தில் நடமாடும் போது அவருக்கு ஏதேனும் கதிர்வீச்சுப் பாதிப்புகள் விளையுமா என்பதை அறியும் சாதனம்.  மனிதத் தசை போன்ற பிளாஸ்டிக் மற்றும் கவசங்கள் கதிர்வீச்சால் தாக்கப்பட்டால் என்ன நேரும் என்பதைக் காணும் சாதனங்களையும் கொண்டது.  அதன் மூலம் சிறந்த கவசங்கள் தயாரிக்க நாசாவுக்குத் தகவல் கிடைக்கும்.

    2.  (DLRE) (Diviner Lunar Radiometer Experiment) : வெப்ப எதிரொளிப்புச் சோதனைக் கருவி

    Fig 6 LRO Instruments

    நிலவின் தள வெப்பம், அடித்தள வெப்பம் ஆகியவற்றை சுற்றுவீதியிலிருந்து அறியும் கருவி.

    இது குளிர்ந்த பிரதேசங்களில் உள்ள பனிப்படிவு (Ice Deposits) கரடு முரடான கற்பகுதி, பாறைப் பகுதிகளை அறியும்.  இவை எதிர்கால நிலவுத் தேர் (Lunar Landing Module) இறங்கும் இடங்களைத் தேர்தெடுக்க உதவும்.

    3.  (LAMP) (Lyman Alpha Mapping Project) லைமன் ஆல்·பா தளப்பதிப்புத் திட்டம்.

    புறவூதா ஒளிப்பட்டைக்குக் கடந்த (In the Far Ultraviolet Spectrum) நிலையில் நிலவின் தளம் முழுவதும் நோக்கிப் பதிவு செய்யும் கருவி.  துருவப் பகுதிகளில் பனிப்படிவு, பனிப் படர்ச்சியும் (Ice & Frost) காணும் கருவி.  நிரந்தரமாய் பரிதி ஒளிவிழாத நிழலில் இருந்து பிறக் கோள் வெளிச்சம், வாயு ஒளிகள் எதிரொளிக்கும் பகுதிகளைப் படமெடுக்கும்.

    4.  (LEND) (Lunar Exploration Neutron Detector) : நிலவுத் தேடலில் நியூட்ரான் உளவும் கருவி.

    நிலவுச் சூழ்வெளியில் ஹைடிரஜன் பரவியுள்ளதைப் பதிவு செய்வது.  சந்திரனில் உணரப்படும் கதிர்வீச்சு அரங்குகளில் நியூட்ரான் பரமாணுக்களை அறியும் கருவி.  இதன் மூலம் சந்திர தளத்தில் நீர்ப்பனி இருப்பைக் கண்டு கொள்ளலாம்.

    5.  (LOLA) (Lunar Orbiter Laser Altimeter) : நிலவுத் தேர் இறங்கும் பகுதிகளின் சரிவை (Landing Site Slopes) அளக்கும் கருவி.

    தளத்தின் கரடுமுரடான தன்மைகளையும் அறியும்.  நிரந்தரமாய் வெளிச்சமுள்ள வெளிச்சமில்லா பகுதிகளையும் அடையாளம் காணும் தளக்கருவி.  எதிர்கால நிலவுத் தேர் இறங்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்க இந்தத் தகவல் உதவும்.

    6.  (LROC) (Lunar Reconnaissance Orbiter Cameras) :  நிலவுத் தளப் பரப்பு உளவியின் மூன்று காமிராக்கள்.

    ஒரு மீடர் துல்லிமத்தில் கறுப்பு-வெள்ளைப் படமெடுக்கும் இரு நுட்பக் குறுங்கோணக் காமிராக்கள் (Two Narrow-angle High Resolution Cameras) அமைக்கப் பட்டுள்ளன.. 100 மீடர் துல்லிமத்தில் விரிவு கோணக் காமிரா ஒன்று. (One Wide-anglle Camera)

    7.  (Mini-RF) (Miniature Radio Frequency) (Technology Demonstration)  சிறு வடிவு ரேடியோ அதிர்வலைக் காமிரா.

    துருவப் பகுதிகளில் நீர்ப்பனி அமைப்பைப் படமெடுக்கும்.  பிறகு இது பூமியில் உள்ள துணைக் கோள் கட்டுப்பாடு அரங்குகளுடனும் தொடர்பு கொள்ள வசதி அளிக்கும்.

    Fig 3 LRO & LCROSS Together

    நாசா சந்திரனை மீண்டும் தேடிச் செல்லக் காரணம் என்ன ?

    முதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே ! அத்துடன் பூமிக்கும் நிலவுக்கும் இடையே விமானிகள் ஓய்வெடுக்கத் தற்போது புவியைச் சுற்றிக் கொண்டிருக்கும் “அகில நாட்டு விண்வெளி நிலையமும்” (International Space Station) தயாராகப் போகிறது.  ஏற்கனவே பன்னாட்டு விமானிகள் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத்துக்குப் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது விண்வெளி வாகனங்களில் அனுப்பி அளித்து வருகின்றன. குறிப்பாக 2010 ஆண்டில் நாசா பயன்படுத்தும் “விண்வெளி மீள்கப்பல்கள்” (Space Shuttles) நிரந்தர ஓய்வு எடுக்கும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது..

    ஆதலால் நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பிப் பயிற்சிகளைத் தொடர்வது. இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைப்பது. மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத் தயாரிப்பது. இம்மூன்று முக்கியப் பணிகளை நிறைவேற்றத்தான் நாசாவின் “ஓரியன் விண்வெளித் திட்டம்” இப்போது மும்முரமாய்த் தயாராகி வருகிறது.

    Fig 4 LRO & LCROSS in Lunar Orbits

    நிலவிலிருந்து செவ்வாயிக்குத் தாவும் முயற்சிகள்!

    ஒவ்வோர் ஆண்டிலும் இரண்டு முறைகள் நிலவை நோக்கிச் சென்றுவர நிரந்தர நிலவுக் கூடாரத்தை விரைவில் அமைக்கப் போகிறார்கள்.  பூமியிலிருந்து நிலவுக்குப் போகும் காலம், நாலரை நாட்கள்!  நிலவுப் பயணக் குழுவினர் நீண்ட காலம் தங்கிச் சந்திர தளத்தில் கிடக்கும் புதைக் களஞ்சியங்களை ஆராய்வார்கள்.  நிலவுக்குப் பளு ஏற்றிச் செல்லும் பார வாகனம், பண்டங்களை இறக்கிய பிறகு திரும்பி பூமிக்கு வந்துவிடும்.  நிலவில் ஆய்வுகள் நடத்தி வரும் ஆராய்ச்சிக் குழுவினர் ஆறாறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் அடைவர்.  நாசா நிலவின் தென் துருவத்தில் ஹைடிரஜன் எரிவாயு கிடைக்கும் நீர்ப்பனிப் பாறைகளை எதிர்பார்க்கிறது.  நிலவில் பரிதியின் ஒளி வெப்பத்தைப் பயன்படுத்திப் பேரளவு மின்சக்தி பெற விமானிகளுக்கு வாய்ப்புள்ளது.  அதைக் கொண்டு நிலவுக் கூடாரத்தை ஒளிமயமாக்க முடியும். பனிப்பாறைகளை உருக்கி நீர் பெற்றுக் கொள்ள முடியும்.  நீரைப் பிரித்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயுக்களைச் சேமித்துக் கொள்ள முடியும்.  நிரந்தர நிலவுக் கூடார அமைப்பின் முக்கிய காரணம், செவ்வாய் கோளுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் மனிதர் பயணம் செய்து கால் தடம் வைத்து மீள்வது.  பிறகு செவ்வாய்க் கோளில் நிரந்தரக் கூடாரம் அமைத்து செவ்வாய்க் கோளை ஆராய்வது.  அதற்குத் தேவையான அசுர உந்து சாதனங்கள், விண்வெளி விமானிகளுக்கு வேண்டிய பயிற்சிகள் யாவும் நாசாவிடம் தயாராக உள்ளன.

    Fig 5 Future Plan to the Moon

    21 ஆம் நூற்றாண்டில் சந்திரனுக்கு மீண்டும் பயணம் போகும் நாசா !

    1969 ஆம் ஆண்டில் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதலில் நிலவில் பாதம் வைத்துப் பாதுகாப்பாய்ப் பூமிக்குத் திரும்பிய பிறகு அமெரிக்கா மேலும் ஐந்து தடவைகள் சந்திரனில் தடம் வைத்தது. 240,000 மைல் தூரத்தில் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கைத் துணைக் கோள் நிலவு ஒன்றுதான். அநேக முறை 20 ஆம் நூற்றாண்டில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய நாசா மீண்டும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நிலவுப் பயணத்தை மீண்டும் துவக்கி இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறதல்லவா ? பல மில்லியன் டாலர் செலவில் பழைய சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் நாசா சந்திரனுக்குப் போவதின் காரணம் என்ன ? சோவியத் ரஷ்யாவின் சந்திரத் தளவுளவி இறங்கி நிலவின் மாதிரி மண்ணை அள்ளி வந்தாலும், ரஷ்ய அகிலவெளித் தீரர்கள் நிலவின் தளத்தில் இதுவரைத் தடம் வைக்க வில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் குழுவின் ஈசா, ஜப்பான், சைனா, இந்தியா ஆகிய ஆறு நாடுகள் சந்திரனைத் தேடிச் சென்று தகவலைச் சேமித்தாலும், அமெரிக்கா ஏன் மறுபடியும் ஏராளமான நிதியைச் செலவழித்து மனிதப் பயணத்தை துவங்குகிறது என்ற கேள்வி எல்லாருக்கும் எழுகிறது !

    LCROSS Impacting the Moon

    ************************

    http://www.bbc.com/future/story/20150712-should-we-build-a-village-on-the-moon  [July 13, 2015]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; Time Magazine.

    1. Returning to the Moon By: Jeffrey Kluger Time Magazine [March 20, 2006]
    2. Apollo Missions (11-17) First Man on the Moon [www.panoramas.dk/]
    3. (a) http://www.thinnai.com/science/sc0505022.html [Authors Article on First Moon Landing (May 5, 2002)]
    3 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811271&format=html (NASA’s Moon Trip)
    3 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603311&format=html (NASA’s Trip to Moon Again)
    4. Return to the Moon Frequently Asked Questions [www.space-frontier.org/projects/moon]
    5. NASA How We will Get Back to the Moon [www.nasa.gov./mission_pages/exploration/spacecraft/]
    6. BBC Science News: Space Agencies Take New Look at Moon [July 27, 2002]
    7. The Space Review- Return to the Moon By: Anthony Young [Jan 3 2006]
    8. Moon -Astronomical Data [www.amastro.org/at/mo/mod.html] [May 15, 2001]
    9 Space & Earth Explorations : NASA Details Plans for Lunar Exploration Robotic Missions (May 22, 2009)
    10 Rocket Launches NEW U.S. Moon Probes By Tariq Malik (June 18, 2009)
    11 BBC News – Lift off for NASA’s Lunar Probes By Paul Rincon (June 18, 2009)
    12 NASA Lunar Reconnaissance Orbiter Fact Sheets LRO & LCROSS Space Probes (2009)
    13 U.S. Lunar Probes Lift off on Mission to Scout Water, Landing Sites (June 22, 2009)

    14 http://en.wikipedia.org/wiki/Colonization_of_the_Moon  [May 6, 2014]

    15. http://www.bbc.com/future/story/20150712-should-we-build-a-village-on-the-moon  [July 13, 2015]

    16.http://www.moondaily.com/reports/Russia_to_begin_Moon_colonization_in_2030_999.html [May 12, 2014]

    17. http://www.space.com/32375-international-moon-village-is-way-to-go-according-to-european-space-agency-video.html

    18. http://player.ooyala.com/iframe.js#pbid=91ac0f6dcbdf466c84659dbc54039487&ec=9yYzljMjE68_r5ghjcAQDsQh3aXKR-Ue

    19. http://www.news.com.au/technology/science/space/europe-to-build-moon-town-by-2030-in-bid-to-discover-alien-life/news-story/fe74f5e1f00c6730c0c5a4dcb5946395  [January 4, 2016]

    20. http://www.space.com/32695-moon-colony-european-space-agency.html  [April 24, 2016]

    21.  http://www.sciencealert.com/europe-plans-to-build-a-moon-village-by-2030-space-agency-announces [January 5, 2016]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) September 30, 2016 [R-2]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    keshav6

    “பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த
    பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்;
    வீடு வரையுறவு வீதி வரைமனைவி
    காடு வரைநெற்றிக் காசு”

    “சாந்த சொரூபியாய் ஆந்தையின் மீதமர்ந்த
    கோந்தை இவள்பேர்சொல் கேசவா; -தாந்திரிக
    அன்னையே வாஞ்சையாய் ஆரோ கணிக்கவா
    என்னையுன் வாகனமாய் ஏற்று”….கிரேசி மோகன்….

     
    Share
  • காக்கும் வரமருளும் அன்னையே!

    பவள சங்கரி

    bhuvaneshwari

    பிள்ளைகள் பலகோடி, அத்தனையும்
    உனைநாடி உன்பதம் தேடி
    வாழும்வழி தாங்கும்கதி தேடும் உயிர்கள்!
    சூழும்துயர் நீங்கும்சதி நாடும் மனங்கள்
    காக்கும்வரம் நாளும் தரும் அன்னையே!
    வீழ்த்தும் கபடம் தாக்கும் பாகாசுரன்களை

    பாட்டுக்கொரு புலவனும் பாருக்கொரு ஞானியும்
    ஊர்தோறும் உழவனும் சோறுக்கென சேறும்
    வாழ்வுக்கொரு வீணையும் பாரதத்திற்கொரு வீரமும்
    அளித்தவள் அவளே அன்னை பராசக்தி!

    வினையகற்றும் வீரமாகாளியாய்
    பசியாற்றும் அன்னபூரணியாய்
    வழிகாட்டும் வாணியாய்
    குடிகாக்கும் கோமாதாவாய்
    தயைபுரியும் தாமரைக்கண்ணியாய்
    மகாபைரவி, சாம்பவி, நாதரூபிணி,
    நாராயணி, ஓங்காரி, சுந்தரி,
    வாராகி, திரிசூலி, அங்கையற்கண்ணி

    சங்கொலி முழங்க டமருகம் ஒலிக்க
    இகம்பரம் எனதனைத்தும் உமதாட்சியே
    தக்கயாகப்பரணி தலைவியே தவப்பயனே
    சகலகலாவல்லி சதுர்முகி சாந்தமருள்வாயே
    திரிபுரமெரித்த விரிசடையோனின் நாயகியே

    சகல செல்வத்துடன் புவனமனைத்தும்
    பூக்காடாய் மணம்வீச ககனமெலாம்
    உன்நாமம் இசைபாட திருவடியே சரணமம்மா!
    புவனமாளும் பயங்கரியே காத்தருளுமம்மா!!
    வீரமுண்டு! விவேகமுண்டு! வெற்றியுமுண்டு!
    வாழ்வுமுண்டு! வரமுமுண்டு! வாழிய வாழியவே!!!

     

    Share
  • உன்றன் பிள்ளை நான் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    14445941_904534546319371_2553612008051880227_n

    உந்தன் பிள்ளை நான், என்றும்
    எந்தன் அன்னை நீ
    ஏங்கியேங்கி அழுவதுதான் என்றன் வாழ்க்கையோ?
    என்னைப் பார்த்துச் சிரிப்பதுதான் உன்றன் பாசமோ?
    என்ன சொந்தமோ? என்று
    வந்த பந்தமோ?

    மந்திரங்க ளாலுனக்கு மாலை சூட்டுவார், கனல்
    மணமணக்கும் சொல்லெடுத்துக் காலில் தூவுவார்
    சந்திரனை சூரியனைச் சடையில் பூட்டுவார், அந்தி
    சாயும்பொழுதில் தேன்குழைத்துச் சாந்து சாற்றுவார்

    ஏதுமின்றி அம்மாநான் ஏங்கி நிற்கிறேன்
    எல்லோரும் சென்றபின்பும் எதிரில் நிற்கிறேன்

    உன்னையன்றிக் காரணங்கள் இருக்க முடியுமா? உன்முன்
    கன்மஜென்மத் தோரணங்கள் கலகலக்குமா?
    இன்றுநாளை என்றுநாளைத் தள்ளலாகுமா? உயிர்
    சென்றபின்பு தெரியாமல் அள்ளலாகுமா?

    இந்தக்கணம் அம்மாநீ என்னைத் தழுவிடு! இந்த
    விந்தை வாழ்க்கை போதுமென்னை விரைந்து தழுவிடு

    கண்பனிக்கக் கவியிசைக்கும் வரம்கொடுக்கிறாய், நெஞ்சில்
    காதலற்ற இவ்வுலகில் கதறவைக்கிறாய்
    எண்ணமிலாப் பெருவெளியை எட்டவைக்கிறாய், என்னை
    ஏழையாக்கி எவரெவரோ குட்டவைக்கிறாய்

    தாங்கவில்லை அம்மாஉன் தாளில் வீழ்கிறேன், உயிர்
    நீங்குகின்ற தருணம்வேண்டி நீண்டுவாழ்கிறேன்

    Share
  • நவராத்திரி நாயகியர் (1)

    க. பாலசுப்பிரமணியன்

    ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்

    hqdefault

    கண்ணுக்குள் ஒளியாகி கொலுவிருக்கும் கல்யாணியே!

    காலங்கள் முப்பொழுதும் கருணைதரும் காமாட்சியே!

    கனவொடும் நனவோடும் உறவாடும் அருளாட்சியே !

    கனிவான மனம்கொண்டு கைகொடுக்கும் கருமாரியே !

     

    முத்தாகி வருவாய் உடலனைத்தும் வித்தே!

    பித்தாகி உனைப்போற்ற சத்தாகும் அருமருந்தே!

    கற்றாழை கருநாகம் புடைசூழ அமர்வாய்

    புற்றேறி குடிகொண்டு புவனமே காப்பாய் !

     

    தீச்சட்டி தந்தாலும் தீதில்லா அன்புடையோய்

    தீமிதித்து வந்தோரை தினம்காக்கும் பண்புடையோய்!

    தாயென்று உனைப்போற்றும் நித்தம் தரணியெல்லாம்

    தயங்காமல் காத்திடுவாய் தன்பிள்ளை துயரெல்லாம்!

     

    அறுசுவையும் அருள்சுவையாய் அடங்கிடவே வேப்பிலையில்

    ஆடியிலே கூடிவந்தோர் கூடநின்றாய் கூழ்ச்சுவையில்

    ஆகமங்கள் தேவையில்லை அம்மாயென அழைத்திடவே

    அன்புடனே கைகூப்ப அணைத்திடுவாய் அதிசயமே !

     

    உடுக்கை ஒலிகேட்டு ஓடிவரும் பரமேஸ்வரி

    உனைக்கண்டால் திருநாளாம் தினமும் புவனேஸ்வரி

    உறங்காமல் முப்பொழுதும் நினைத்தாலே ஞானேஸ்வரி

    உறுதுணையாக நீயிருப்பாய் உறவே ! அகிலாண்டேஸ்வரி !

     

    விண்ணிருந்து மண்காக்க வந்தாயே உருமாறி !

    மண்ணிருந்து மனம்காக்கும் மங்கலமே மகமாயி !

    உள்ளிருந்து உயிர்காக்கும் உன்னதமே ஓங்காரி !

    ஓமென்ற மந்திரத்தில் ஒளிர்கின்ற கருமாரி !

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    DHAIRYA LAKSHMI….!
    ————————————-

    kesav

    ’’வரிசங்கு, வீச்சாழி, வாள்கே டயம்,பாசம்
    வரஅபயம், வாரிசம் வீற்றெண் -கரத்தாள்,
    வறுமை சிவப்பணிந்த வீர(தைர்ய லஷ்மி) இலக்குமியை
    பெருமையாய் சென்று பணி’’….

    எட்டு லஷ்மிகளுக்கும் சேர்த்து….
    ———————————————————

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
    ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
    மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
    முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….

    மூவர்க்கும் சேர்த்து முதற்பாடல்….!
    ———————————————————————–

    “படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
    இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
    ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
    பாகப் பிரிவினையில் பார்ப்பு”….

    “பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
    நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
    சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
    தாரங் களின்தயவால் தான்”….கிரேசி மோகன்….!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (211)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    patience
    அன்பான வணக்கங்கள் இதோ அடுத்தவாரத்தில். மனிதராகப் பிறந்த நாமெல்லோரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் கோபம் எனும் உணர்ச்சியினால் தாக்கப்படுவது தவிர்க்கப்படமுடியாதது. ஆனால் அது எந்தச் சந்தர்ப்பத்தில் , யாருக்கு எதிராக, எதனால் உருவாகிறது என்பதன் அடிப்படையில் அதனைக் கட்டுப்படுத்தும் வல்லமை எம் அனைவருக்குள்ளும் மறைந்துள்ளது.

    மறைந்த என் தந்தை எனக்கு அடிக்கடி கூறும் வாசகம் ஒன்று, “ கோபத்தில் வேதனை , பொறுமையில் சாதனை ! “ என்பதுவே அது.

    கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என்று சொல்வார்கள். ஆமாம் ! மனதினைக் கோபம் என்னும் உணர்வு கவ்விக் கொள்ளுவதற்கு எம்மிடம் அனுமதி கோருவதில்லை. ஆனால் அந்தக் கோபம் கிளப்பி விடும் உணர்வலைகளைச் சமாளிக்க, அவற்றின் விளைவுகளை மட்டுப்படுத்த எமக்குத் தேவையான பொறுமையை எம்மிடம் ஏற்படுத்த நாம் அதீத முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது.

    பல வாசகர்களின் மனதில் இந்நிமிடம் எழும் கேள்வி என் காதுகளில் மெளன ஒலிகளாக காற்றலைகளின் மூலம் வந்து விழுகிறது.

    ” என்னட? இவன் பாட்டுக்கு கோபிக்காதே ! பொறுமையாக இரு என்று சொல்கிறானே ! எமக்கு நடந்த விடயங்களை இவன் அனுபவித்திருக்கிறானா? அப்புறம் என்ன பெரிசா பொறுமையைப் பற்றிப் பேசுறானே “ என்ற உங்கள் அங்கலாய்ப்பு புரிகிறது.

    பொறுமையைக் கடைப்பிடிப்பதில் உள்ள சிக்கல்கள் எனக்கு நன்றாகப் புரிகிறது. எத்தனையோ சமயங்களில் நான் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாமல் கைவிட்ட நிகழ்வுகள் உண்டு. இத்தகைய சிக்கல்களுக்குள் நானும் உழல்பவன் என்னும் ஒரே ஒரு காரணத்தினால்தான் இக்கருத்துப் பகிர்தலை ஆரம்பித்தேன்.

    பொறுத்துக் கொண்டிருக்கும் போது எம்மீது தான் அனைத்துப் பாரங்களும், வாழ்வின் சுமைகளும் விழுவது போலும், பொறுமையை எள்ளளவும் கடைப்பிடிக்காமல் எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்பவர்கள் தாம் நினைத்ததை நடத்திக் கொண்டு செல்வது போலும் தோன்றுவது வழக்கம்.

    வாழ்க்கையில் நாம் நினைத்ததை நடத்துவதற்காகவே வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக பாடுப்பட்டு உழைக்கிறோம் பின்னே எதற்காக பொறுமையின் பெயரால் நாம் அனுபவிக்க நினைக்கும் செயல்களை விட்டுக் கொடுக்க வேண்டும்? இதனால் சாதிப்பது என்ன ?

    இந்தக் கேள்விகள் மனதில் சாதாரணமாக எழுவது இயற்கையே !

    உண்மைதான் வாழ்க்கையில் நாம் நினைப்பது சரியோ, தவறோ அதை நாம் நினைத்தவகையில் நிகழ்த்திக் கொண்டு போவதே வாழ்க்கையின் நோக்கம் எனக் கருதினால் அப்படிப்பட்டவர்கள் எதையோ சாதிப்பது போலத்தான் இருக்கும், ஆனால் அதுதான் உண்மையா? அத்தகையவைகளைத்தான் நாம் சாதனை என்கிறோமா?

    கோபம் என்னும் அந்த உணர்வு எம்மனதின் வீரியத்தை அப்படியே உறிஞ்சி விடுகிறது. கோபம் என்னும் அந்தக் குறுகிய உணர்ச்சி பொங்கி வெளியாகியவுடன் எமது மனங்களில் தோன்றும் வெறுமையின் வெப்பம் எத்தகையது என்பதை அதை அனுபவித்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

    கோபத்தின் ஆரம்பமே விரக்தியாகும். எம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் அளவெடுத்தால் விரக்தியை மிக விரைவாக உண்டு பண்ணக்கூடிய சந்தர்ப்பங்கள் சுற்றி வியாபித்திருப்பதை உணரலாம்.

    உதாரணத்திற்கு ஒரு உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்று அமர்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். எம்மை உட்காரவைக்க அந்த வெயிட்டர் எடுக்கும் நேரம், எமது உணவுகளுக்கான ஆர்டரை எடுக்க வரும் பணியாளரின் தாமதமான வருகை, அதன் பின்பு அவர்களின் செய்கையில் இருக்கும் தளர்வு, அருகிலிருப்போரின் உரையாடலின் தொனி இவையனைத்தையுமே எமக்கு விரக்தி உண்டு பண்ணக்கூடிய காரணிகளாகக் கொள்ளலாம்.

    அதே போல சூப்பர் மார்க்கட்டிற்கு போகிறோம் என்று வையுங்கள், நாம் மிகவும் அவதானமாக தேவையான பண்டங்களை மட்டும் தெரிவு செய்து கொண்டு விரைவாக பணம் செலுத்துமிடத்திதிற்கு வருகிறோம், அங்கே வரிசையில் நிற்கும் போது எமக்கு முன்னாலிருப்பவர் தமது முறை வரும் போதுதான் தான் வாங்க வந்து மறந்து போன பண்டத்தின் நினைவு வந்தவராக இதோ வந்து விடுகிறேன் என்று ஓடுகிறார் எம்மை ஒரு பத்து நிமிடங்கள் காத்திருக்க வைக்கிறார்.

    சரி அதுதான் முடிந்தது என்று கவுண்டருக்கு வந்தால் அதிலே உட்கார்ந்திருக்கும் பெண் மிகவும் ஆறுதலாக ஒவ்வொரு பொருளாக மேலும் கீழும் பார்த்து அதை ஸ்கெனரில் ஸ்கேன் செய்கிறாள்.

    நேரத்தை விரயம் செய்யக்கூடாது என்று ஓடி வந்த நமக்கு என்ன நிகழ்கிறது? விரக்தி பொங்குகிறது, இரத்தம் ஜிவு, ஜிவுவென்று சூடேறுகிறது. ஆனாலும் பல்லைக் கடித்துக் கொள்ள வேண்டிய நிலைமை.

    சரி இதே நிலைமைகளைத் திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

    அதே உணவகத்தில் நாம் நடக்கும் நிகழ்வுகளை ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வெயிட்டரின் இடத்தில் எம்மை உட்கார்த்தி நாம் எப்படி இருந்திருப்போம் என்று ஒரு கற்பனை உலகை உருவாக்கிப் பார்த்துக் கொள்வோம் என்று வையுங்கள். எமக்கு நேரம் போவதே தெரியாது.

    விரக்தி என்னும் மனப்பான்மையே அருகில் கூட எட்டிப்பார்க்காது.

    அதேபோல அந்த சூப்பர் மார்க்கெட் நிலையில் கூட அனைத்தையும் எம்மை மீறி நடக்கும் செயல்கள் நாம் ஆத்திரப்படுவதால் எதுவும் நடந்து விடாது என்று மனதைச் சாந்தப்படுத்தப் பழகிக் கொண்டால் உள்ளம் அமைதி கொள்ளப் பழகிவிடும்.

    கோபம் என்னும் கோலம் கொண்டுவிட்டால் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க முடியாது. வார்த்தைகள் வாயிலிருந்து விழுந்து விட்டால் பின்னே அள்ளியெடுத்து உள்ளே திணித்துக் கொள்ள முடியாது.

    கோபம் கொள்வதினால் எம்மையே நாம் தாக்கிக் கொள்கிறோம், எமது சக்தியையே நாம் விரயம் செய்து கொள்கிறோம். நாம் சொல்ல வந்ததை அதைச் செவிமடுப்பவர் புரிந்து கொள்ள முடியாத வகை செய்து விடுகிறோம்.

    கோபம் எமது புத்தியையே மழுங்கடித்து விடுகிறது. எதையும் யதார்த்தமாக சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறோம்.

    கோபம் மனிதனை மிருகமாக்கி விடுகிறது. அராஜகச் செயல்களுக்கு நியாயம் கற்பித்து விடுகிறது.

    ஆனால் பொறுமையோ எம்மை மேம்பட்ட மனிதராக்கி விடுகிறது. மனதினை மென்மை என்னும் போர்வையால் மூடிவிடுகிறது. எம்மையிட்டு நாமே பெருமை கொள்ள வைக்கிறது.

    பொறுமையால் அடைந்த வெற்றிக்கு இருக்கும் மதிப்பே தனியானது ஏனென்றால் அது தானென்னும் மமதையின் அடிப்படையில் வந்ததாக இருக்காது.

    பொறுமையின் உதாரணங்களை எடுத்துக்கொண்டால் தாய்மை, பூமி, கருணை என இணையில்லாத பல தனிப்பண்புகளின் தரிப்பிடமாக இருப்பதைக் காணலாம்.

    பொறுமையின் உச்சகட்டமே பூமியாகும். ஆத்திரத்தாலும், அவசரத்தாலும் தன்னை இழக்கும் மனிதரா இல்லை பொறுமையையே தன் ஆயுதமாகக் கொண்டிருக்கும் பூமி மாதாவா வாழ்க்கையில் வெற்றியடைவார்கள்? இந்தக் கேள்வியின் விடை அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

    கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடலொன்று,

    “ மண்ணின் மீது மனிதனுக்காசை
    மனிதன் மீது மண்ணுக்காசை
    மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது ” என்று வரும்.

    எத்தனை உண்மையான வரிகள்.

    நிச்சயமான, உண்மையான வாக்கியம் ” கோபத்தில் வேதனை ! பொறுமையில் சாதனை ! “

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share