இசைக்கவி ரமணன்

 

14445941_904534546319371_2553612008051880227_n

உந்தன் பிள்ளை நான், என்றும்
எந்தன் அன்னை நீ
ஏங்கியேங்கி அழுவதுதான் என்றன் வாழ்க்கையோ?
என்னைப் பார்த்துச் சிரிப்பதுதான் உன்றன் பாசமோ?
என்ன சொந்தமோ? என்று
வந்த பந்தமோ?

மந்திரங்க ளாலுனக்கு மாலை சூட்டுவார், கனல்
மணமணக்கும் சொல்லெடுத்துக் காலில் தூவுவார்
சந்திரனை சூரியனைச் சடையில் பூட்டுவார், அந்தி
சாயும்பொழுதில் தேன்குழைத்துச் சாந்து சாற்றுவார்

ஏதுமின்றி அம்மாநான் ஏங்கி நிற்கிறேன்
எல்லோரும் சென்றபின்பும் எதிரில் நிற்கிறேன்

உன்னையன்றிக் காரணங்கள் இருக்க முடியுமா? உன்முன்
கன்மஜென்மத் தோரணங்கள் கலகலக்குமா?
இன்றுநாளை என்றுநாளைத் தள்ளலாகுமா? உயிர்
சென்றபின்பு தெரியாமல் அள்ளலாகுமா?

இந்தக்கணம் அம்மாநீ என்னைத் தழுவிடு! இந்த
விந்தை வாழ்க்கை போதுமென்னை விரைந்து தழுவிடு

கண்பனிக்கக் கவியிசைக்கும் வரம்கொடுக்கிறாய், நெஞ்சில்
காதலற்ற இவ்வுலகில் கதறவைக்கிறாய்
எண்ணமிலாப் பெருவெளியை எட்டவைக்கிறாய், என்னை
ஏழையாக்கி எவரெவரோ குட்டவைக்கிறாய்

தாங்கவில்லை அம்மாஉன் தாளில் வீழ்கிறேன், உயிர்
நீங்குகின்ற தருணம்வேண்டி நீண்டுவாழ்கிறேன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உன்றன் பிள்ளை நான் (பாடல்)

  1. உன்னையன்றிக் காரணங்கள் இருக்க முடியுமா? உன்முன்
    கன்மஜென்மத் தோரணங்கள் கலகலக்குமா?
    இன்றுநாளை என்றுநாளைத் தள்ளலாகுமா? உயிர்
    சென்றபின்பு தெரியாமல் அள்ளலாகுமா அற்புதமான வரிகள் இசைக்கவி ரமணன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *