க. பாலசுப்பிரமணியன்

ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்

hqdefault

கண்ணுக்குள் ஒளியாகி கொலுவிருக்கும் கல்யாணியே!

காலங்கள் முப்பொழுதும் கருணைதரும் காமாட்சியே!

கனவொடும் நனவோடும் உறவாடும் அருளாட்சியே !

கனிவான மனம்கொண்டு கைகொடுக்கும் கருமாரியே !

 

முத்தாகி வருவாய் உடலனைத்தும் வித்தே!

பித்தாகி உனைப்போற்ற சத்தாகும் அருமருந்தே!

கற்றாழை கருநாகம் புடைசூழ அமர்வாய்

புற்றேறி குடிகொண்டு புவனமே காப்பாய் !

 

தீச்சட்டி தந்தாலும் தீதில்லா அன்புடையோய்

தீமிதித்து வந்தோரை தினம்காக்கும் பண்புடையோய்!

தாயென்று உனைப்போற்றும் நித்தம் தரணியெல்லாம்

தயங்காமல் காத்திடுவாய் தன்பிள்ளை துயரெல்லாம்!

 

அறுசுவையும் அருள்சுவையாய் அடங்கிடவே வேப்பிலையில்

ஆடியிலே கூடிவந்தோர் கூடநின்றாய் கூழ்ச்சுவையில்

ஆகமங்கள் தேவையில்லை அம்மாயென அழைத்திடவே

அன்புடனே கைகூப்ப அணைத்திடுவாய் அதிசயமே !

 

உடுக்கை ஒலிகேட்டு ஓடிவரும் பரமேஸ்வரி

உனைக்கண்டால் திருநாளாம் தினமும் புவனேஸ்வரி

உறங்காமல் முப்பொழுதும் நினைத்தாலே ஞானேஸ்வரி

உறுதுணையாக நீயிருப்பாய் உறவே ! அகிலாண்டேஸ்வரி !

 

விண்ணிருந்து மண்காக்க வந்தாயே உருமாறி !

மண்ணிருந்து மனம்காக்கும் மங்கலமே மகமாயி !

உள்ளிருந்து உயிர்காக்கும் உன்னதமே ஓங்காரி !

ஓமென்ற மந்திரத்தில் ஒளிர்கின்ற கருமாரி !

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நவராத்திரி நாயகியர் (1)

  1. முத்தாகி வருவாய் உடலனைத்தும் வித்தே!

    பித்தாகி உனைப்போற்ற சத்தாகும் அருமருந்தே!

    கற்றாழை கருநாகம் புடைசூழ அமர்வாய்

    புற்றேறி குடிகொண்டு புவனமே காப்பாய் ! அன்னை ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்

    பாடலை நவராத்திரி நாளில் புனைந்ததற்கு

    நணபர் திரு க. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி

  2. நன்றி. இதுவும் அன்னையின் அருளே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *