இசைக்கவி ரமணன்

amman

ஏறெழுந்து வந்துநெஞ்சைக் கூறுபோடும் தங்கமே!
என்றன் கனவில் கவியில்வந்து இடிசிரிக்கும் சிங்கமே! என்னை
ஏறெடுத்துப் பார்த்துவிட்டால் ஏதுனக்கு பங்கமோ?
எனக்கும் உனக்கும் இடையினிலே எவர்வகுத்த சுங்கமோ!

தேரெழுந்த தாயிதயம் ஊர்திரண்ட தாகமனம்
யாரெந்தக் கொடியசைக்கக் காத்திருக்கிறாய்? அடி
யாமளையே யார்வரவைப் பார்த்திருக்கிறாய்?
தேரழுந்தித் தெருநொறுங்கி ஊர்சிரிக்கவா? என்றோ
தீர்ந்தகதை தொடர்தல்கண்டு பார்விழிக்கவா?

கார்குழலை மின்னெடுத்துக் கட்டமுயலும் அழகியே!
கட்டளைக்குக் கவிதைகேட்கும் கர்வமிக்க அரசியே!
ஊர்விழுந்து நானெடுத்த பிச்சையெலாம் போதுமே! உன்
உதடுபட்டென் உச்சிகுளிரும் ஒற்றைமுத்தம் வேண்டுமே!

சாத்திரங்கள் தோற்ற இடம் சதுர்மறைகள் ஏங்கும்பதம்
சாயங்காலக் கனவுகளில் காட்டியவள் நீ! நீ
சாம்பலையும் நின்றெரிக்கும் சாம்பவியாம் தீ!
தோத்திரங்கள் இன்னுமுனக் கலுக்கவில்லையா? கால்
தொட்டுச்சுட்ட கண்ணீரும் உலுக்கவில்லையா?

நீயெனக்கு நானுனக்கு நேர்ந்துகொள்ளுவோமே, ஒரு
நிமிடம்கூடப் பிரிந்திடாமல் சேர்ந்து வாழுவோமே
தாயெனக்கு நீயுனக்குத் தக்கபிள்ளை கவிஞனே, நீ
தள்ளிவைக்கத் தள்ளிவைக்கத் தழுவவருவ தொருவனே!

கூடெடுத்த தூழிக் கனல் குடிசையிலே சூறைப் புயல்
கூர்த்தகைகள் கொட்டிச் சிரிக்கும் குமரியல்லவா! எந்தக்
கோட்டுக்குள்ளும் சிக்காத அமரியல்லவா! இது
மூடநல்ல நேரம்திரை போட நல்லநேரம், என்னை
முன்பிலாமல் பின்பிலாமல் தீர்த்தருள்கவே! தாயே!
முத்தமொன்றில் தீர்த்துன்னுள் வார்த்தருள்கவே!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சிக்காத அமரியல்லவா!

  1. அன்புள்ள வல்லமை மின்னிதழ் ஆசியருக்கு சிக்காத அமரியல்லவா! (பாடலுக்கு) ஒலி வசதியை (cloud sound) ஏற்படுத்தி கொடுத்தால் பாடலை கேட்டு இன்பமடையலாம்

  2. கூகிள் உலாவி மூலம் பாடல் கேட்டு ஆனந்தம் அடைந்தேன். வல்லமை மின்னிதழ் ஆசிரியருக்கும், இசைக்கவி ரமணன் ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
    நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.