Blog

  • மகாத்மாவே மன்னியுங்கள்

     

    ரா.பார்த்தசாரதி

     

    கண்ணியம், ஒழுக்கமற்ற கனவான்களின்  விமர்சனமும்,

    தங்கள் கொள்கைகளை  மறந்து பின்பற்றுவது போன்ற நடிப்பும்

    உங்கள் பிறந்த நாளை விடுமுறைக்காக  ஏற்படுத்தினாலும்,

    உங்கள் புகழும் மாண்பும் மங்க போவதில்லை !

     

    அரிச்சந்திரன் நாடகத்தைப்  பார்த்து உண்மையை  கடைபிடித்தவரே

    உங்களிடம்  உண்மையே உன் விலை என்ன கேட்கும் கனவான்கள்  உள்ளனரே

    சத்ய சோதனை என்பது காட்சி பொருளாய்  இருப்பது புத்தகத்தில் மட்டுமே

    இன்றைய காலகட்டத்தில்   இது சோதனையாய் இருப்பது மட்டுமே !

     

    கைராட்டை சுற்றி ஆடை நெய்த காலம் மறைந்து விட்டது

    அயல்நாட்டு பொருட்கள் மனம் நாட்டம் கொண்டுவிட்டது

    ஆடம்பரத்தில் எங்களை நாங்கள் இழந்து விட்டோம்

    தங்கள் எளிய பாதையினை நாங்கள் மறந்துவிட்டோம் !

     

    அன்று சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்தினீர்கள்

    இன்று மாநில பிரிவினை போறே நடத்துகிறார்கள்

    அன்று தொடர்ந்த காஷ்மீர் பிரச்னை இன்றும் தீர்ந்தபாடில்லை

    என்று தீருமோ, போரில் முடியுமோ எனத் தெரியவில்லை !

     

    நீருக்கு சண்டை போட்டாலும், மது அருந்த சண்டை போடமாட்டோம்,

    தீண்டாமையை ஒழித்தாலும் , இனம், ஜாதியை,மறக்காத  மக்கள் மனம்

    விளம்பரத்திற்காக, சிலை வைத்தோம், கடற்கரையில் நிற்கவைத்தோம்,

    உங்கள் அருமை அறியாத எங்களை மன்னிக்க வேண்டுகின்றோம் !

    Share
  • ஆருக்கும் வாய்ப்பதில்லை

     

    (    எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

    காரிருக்கு வீடிருக்கு கையினிலும்  பணமிருக்கு

    பலபேரின் நட்பிருக்கு பரிசுகளும் குவிந்திருக்கு

    என்றாலும் மனத்தளவில் என்னவோ குறையிருக்கு

    எதுவென்று தெரியாமல் ஏக்கமே நிறைந்திருக்கு !

     

    முதுமைவரும் காரணமா முறுவல்வர மறுப்பதுவா

    தனிமைவரும் எனும்நினைப்பு தலைதூக்கி வருவதுவா

    ஓடியோடி உழைத்துவாங்கி உள்வீட்டில் சேர்த்ததெலாம்

    யாரினிமேல் பார்த்திடுவார் எனுமெண்ணம் எழுவதுவா !

     

    பிறந்தநாள் வருவதனை பெரும்பாலும் விரும்பவில்லை

    குறைந்தநாள் ஆகிடுமோ எனுமேக்கம் வந்துநிற்கும்

    பட்சணங்கள் செய்தாலும் பசிகூட வருவதில்லை

    இஷ்டமுடன் அதைச்சுவைக்க இனிப்புநோய் விடுவதில்லை !

     

    பிள்ளைகளோ அவர்பாட்டில் பேரர்களோ விளையாட்டில்

    மருமக்கள் எமைக்கண்டால் மெளனமாய் சிரித்திடுவார்

    எமையொத்த வயதுடையார் இயலாமை காரணத்தால்

    ஏங்கித் தவிப்பதனை இன்டர்நெட்டில் பார்த்துநிற்போம் !

     

    காலையில் எழுவதற்குக் காரணமும் தெரிவதில்லை

    மாலைவந்து விட்டதென மணிக்கூடு காட்டிநிற்கும்

    பாயிலே எமக்குமுன்னே நோய்வந்து படுத்துவிடும்

    பதறிநாம் துடித்தாலும் பார்த்தபடி சிரித்துநிற்கும் !

     

    கலைநிகழ்ச்சி கல்யாணம் காண்பதற்குச் சென்றாலும்

    பலபேரும் எம்பக்கம் பார்த்திடவே மாட்டார்கள்

    சிலவேளை பார்த்தாலும் திரும்பாமல் சென்றிடுவார்

    அதுவே எம்மனநிலையை அடியோடு மாற்றிவிடும் !

     

    முதுமைபற்றி நினைத்துவிட்டால்

    முகங்கூட மாறிவிடும்

    எதுவுமே எங்களுக்கு

    எதிரியாய்தான் தெரியும்

    உடல்தளர்ந்து போனாலும்

    உளம்தளர்ந்து போகாமல்

    உளம்நிறைய மகிழ்ச்சிதனை

    ஊற்றெடுக்கச் செய்திடுவோம் !

     

    எமையொதுக்கி நிற்பவரும்

    இந்நிலைக்கு வந்திடுவார்

    இலையுதிர்வு நிலையதனை

    இயற்கையே கொடுத்திருக்கு

    தலைநரைக்கும் பல்லுவிழும்

    தளர்வுவந்து தாக்கிவிடும்

    அதைத்தவிர்த்து வாழ்ந்துவிடல்

    ஆருக்கும் வாய்ப்பதில்லை !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    keshav2

    எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
    எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
    தின்னும் பசியவள் தீராத தாகமவள்
    உண்ணா முலையவளை உண்….(1)

     
    கத்தி , உடுக்கை,கபாலம், திரிசூலம்
    சக்தி கரமுற்ற ஆயுதங்கள் -பக்தி
    இலாதோர் இதயச் சிலாவைப் பிளந்து
    பலாவின் சுளையைப் புதைக்கும்….(2)

    அழுதாலும் பிள்ளைக்(கு) அவள்தான் பொறுப்பு
    பழுதான பின்பும் பரிவை -விழுதாய்ப்
    பொழிவாள் எமது பராசக்தி, நெஞ்சே
    தொழுவாய் அவளைத் தொடர்ந்து….(3)

    அச்சுறுத்தும் பூதமா? அன்றிமாத்ரு பூதமா?
    எச்சரிக்கை யோடுன்னை உச்சரிப்பதா? -நச்சரவம்
    மாண்டோர் கபாலங்கள் பூண்டோன் இடபாகி
    வேண்டாமே வேஷ விருப்பு….(4)

    முகிலாண்ட வெற்பாளும் முக்கண்ணன் கற்பாளும்
    அகிலாண்ட ஆனைக்கா அம்மே -நகிலுண்ட
    சம்பந்தன் போலெண்ணி செந்தமிழ்ப் பாலூட்டு
    இம்மந்தன் வாக்கில் இசைந்து….(5)

    இறையவள், நான்கு மறையவள், நாதர்க்(கு)
    அரையவள், தீவளிவான் அப்பு -தரையவள்
    பக்தித் துறையவள் முக்தி அறையவள்
    சக்தியுறை பாதம் சரண்….(6)

    Share
  • பிறந்தநாள் கொண்டாடவில்லை ; முதல்வர் நலம் பெற வேண்டும் அது போதும் : விஜய டி ராஜேந்தர் பேட்டி

    செல்வரகு

    atr2

    இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி ராஜேந்தர், தன் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துப் பேசினார். அவர் பேசிய போது,

    ” பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லையா ஏன்?

    இன்று என் பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை.கொண்டாடாததற்கு முதல்வர் உடல்நிலை காரணம். தமிழகமுதல்வர் மருத்துவமனையில் இருக்கிற இந்தச் சூழலில் அவர் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதைத் தவிர வேறு ஒரு செய்தியும் இல்லை.

    இதை நான் சொல்வதற்கு மனிதாபிமானம் ஒன்றைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அதிமுகவிடம் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட வாங்காதவன் நான்.

    அவர் ஈழத்தமிழர் சம்பந்தமாக தைரியமாகச் சட்டசபையில் ஒரு தீர்மானம் போட்ட வீராங்கனை. எனக்கு அவர் எதிரிகளை வீழ்த்தும் ஏவுகணையாக தெரிகிறார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், இதைப் பேசுகிறேன். எனக்கு யாரிடமும் சாதிக்க வேண்டியதில்லை காரியம். யாரிடமும் எதிர் பார்ப்பதில்லை ஒரு வாரியம் .

    atr

    atr1

    கலைஞர் மீது என்ன வருத்தம்?

    மறைந்து விட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போல நானும் தி.மு.கவுக்கு உழைத்திருக்கிறேன். கலைஞருக்கு மாடாய் உழைத்திருக்கிறேன் . ஓடாய்த் தேய்ந்திருக்கிறேன்.ஆனால் அவரால் காயப்பட்டிருக்கிறேன்.

    எம்.ஜி.ஆரையே தூக்கி வீசியவருக்கு நான் எம்மாத்திரம். என்னையும் தூக்கி வீசிவிட்டார்.

    கலைஞர், தான் பெற்றெடுத்த பிள்ளைக்காக எதையும் இழப்பார்.

    சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஈழத்தமிழருக்கு துரோகம் இழைத்த காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்றேன்.

    ‘நேற்று இன்று நாளை ‘ படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவதைப் போல கலைஞர் ‘ மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்,தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் ‘ என்றிருப்பவர்.

    தி.மு.கவில் நான் இருந்த போது என் 33 வயது பிறந்தநாளின் போது கலைஞர் ஒரு கடிதம் எழுதினார். அதில் திறமையிலும் சரி வயதிலும் சரி டி. ராஜேந்தர் என்னில் பாதி என்று எழுதியிருந்தார்.

    கலைஞரோடு முடிந்து விட்டது சரிபாதி. இனி கடவுள் விட்ட வழி சரிபாதி.

    பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆன்மா காட்டுகிறது வழி.

    உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

    ஏன் இந்தக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் ? வாழ்க்கையில் கர்மாதான் எல்லாவற்றுக்கும் காரணம்.

    யார் மீதும் நான் குற்றம் சொல்லவில்லை. நான் பிடிவாதக்காரன். இரட்டைவேடம் போட்ட போது கூட நடிப்பதற்கு தாடியை எடுக்காதவன் நான்.
    நோட்டை எதிர்ப்பார்த்து நான் போகவில்லை. !
    கடந்த சட்டமன்றத் தேர்தலில் அத்தனை கட்சியும் கூட்டணி என்று அமைத்தபோது என்னைக் கூப்பிடாமலா இருந்திருப்பார்கள்? ஓட்டை உடைக்க நோட்டை எதிர்ப்பார்த்து நான் போகவில்லை.

    அ.தி.மு.க.வில் கவுன்சிலர் சீட்டுக் கூட கேட்காதவன் நான்.

    இப்போது என்ன சொல்ல வேண்டும் என விரும்புகிறீர்கள்?

    என் கொள்கைக்குக் கிடைத்த மரியாதை என்ன?

    கர்நாடகத்தில் காங்கிரசின் சீத்தாராமையா காவிரி தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்கிறார்.

    இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் தி.மு.க .வுக்குக் கூட்டணி தேவையா?

    மத்தியிலுள்ள கர்நாடக அமைச்சர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் ஏன்?

    மோடி அரசு இதற்குப் பதில் சொல்ல வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு மீது மோடி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,? மோடி அரசு ஏன் தட்டிக் கேட்கவில்லை?

    கர்நாடகத்திற்கு ஒன்று,நீங்க உங்கள் மாநிலத்தை நேசியுங்கள் .நீருக்காக தமிழ்நாட்டையும் யோசியுங்கள். ஆனால் ஒன்று, மொழி உணர்வில் மாநில உணர்வில் கர்நாடகத்தில் மக்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.இதற்காக அவர்களின் திசைநோக்கி வணங்குகிறேன்.தமிழ்நாட்டில் ஆளுக்கு ஒன்று பேசலாம் .எது வேண்டுமானாலும் பேசலாம்.

    அந்த ஒற்றுமை ஏன் தமிழ்நாட்டில் இல்லை?

    அங்கே நடிகர்கள் ஒற்றுமையாக குரல் கொடுக்கிறார்களே ?

    அங்கே நடிகர்கள் ஒற்றுமையாக குரல் கொடுக்கிறார்கள்.எல்லா நடிகர்களும் ஒன்றாக இருக்கிறார்கள்.கர்நாடகத்தில் ஒரு திருட்டு விசிடி இருக்கிறதா? திருட்டு விசிடியை அங்கு வாங்கவே முடியாது . இங்கே இவ்வளவு டிவிக்கள் இருக்கின்றன. ஆனால் இங்கே கேபிள் டிவி யில் படம் போடுகிறார்கள் மீண்டும் அதையே பிரபல டிவிக்கு விற்க நினைக்கிறார்கள். இதை தயாரிப்பாளர் சங்கம் தட்டிக் கேட்க முடியாதா? உங்க துணிவு எங்கே போயிற்று? உங்கள் முதுகெலும்பு எங்கே?

    ஆந்திராவில் எல்லா தயாரிப்பாளர்களும் ஒன்றாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்களின் நிலை தத்தளிப்பாக இருக்கிறது.

    அண்மையில் வந்த தனுஷ், விஜய்சேதுபதி படங்கள் ‘தொடரி’யும் ஆண்டவன் கட்டளை’ யும் நெட்டில் போடுகிறான். ஏன் தடுக்க முடியவில்லை? ஏன் தட்டிக் கேட்க முடியவில்லை?

    உள்ளாட்சித்தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுமா?

    உள்ளாட்சித்தேர்தலில் பல முதலமைச்சர் வேட்பாளர்களே தத்தளித்துக் கொண்டிருக்கும் போது லட்சிய தி.மு.க.என்ன செய்யும்?நாங்கள் தேர்தலில் நிற்பதைவிட என் கருத்தை தைரியமாக எடுத்துச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைப்பேன்.” இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.

    Share
  • மேலாண்மை

    பவள சங்கரி

    தலையங்கம்

    images

    மத்திய அரசிற்கு உச்சநீதி மன்றம் நான்கு நாட்களுக்குள் காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. அப்போதைய அரசு வழக்கறிஞர் இதை ஏற்றுக்கொண்டு அரசிடம் கூறி ஆவண செய்வதாகக் கூறிவிட்டு வந்தார். ஆனால் நேற்று, அரசாங்க தலைமை வழக்கறிஞர் இதன் சார்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி பஞ்சாபையும், ஆந்திராவையும் மேற்கோள் காட்டி காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர். அதற்கு காரணங்கள் பலவற்றை சுட்டிக்காட்டுகின்றனர். காவேரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அதற்கு அவசர சட்டம் மூலமாக அங்கீகாரம் அளித்து அதை முன் தேதியிட்டு பாராளுமன்றங்களில் அங்கீகாரம் செய்ய முடியாதா. இதற்கு முன்னுதாரணங்களாக எத்தனையோ சட்டங்கள் அவசரச் சட்டமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவில்லையா. மத்திய நீர்பாசன அமைச்சகம் இதுவரை என்ன செய்துகொண்டிருக்கிறது. அவர்கள் நீர்பிடிப்புப் பகுதி, பாசனப்பகுதி இருப்பது பற்றி அறியமாட்டார்களா ? கடந்த மூன்று மாதங்களாக பல ஆயிரம் கோடி விரயமாக்கப்பட்டுள்ளது அறியாத ஒன்றா. அரசியல் ஆதாயங்களுக்காக தமிழினம் வஞ்சிக்கப்படுகிறதா? தமிழக விவசாயிகள் மத்திய அரசால் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறதா?தமிழகத்தைச் சார்ந்த பாரத சனதா கட்சியின் தலைவர்களின் நிலைப்பாடுகள் என்ன? தமிழிசை தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுப்பாரா? மத்திய அரசை எதிர்த்து இரயில் மறியல் போராட்டமும், மின் பகிர்மானத்தை எதிர்த்து போராடவும் முனைவாரா என்று தமிழக மக்கள் அனைவரும் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

    Share
  • என் காளிக்கு..

    இசைக்கவி ரமணன்

     

    kali

    பச்சைரத்தம் சொட்டச்சொட்டப்
    பட்டைநாக்கு பளபளக்கப்
    பரபரப்பாய் எதைவிழுங்கப் பார்த்திருக்கிறாய்? நீ
    படைக்குமுன்னே யாவும்விழுங்கித் தீர்த்திருக்கிறாய்!

    அச்சமஞ்சும் உன்வடிவை
    அகம்குலைக்கும் உன்னுருவை
    அள்ளிப்பருகத் துள்ளிவந்த பிள்ளையைப் பாராய்! அவன்
    அழகுத்தமிழின் மழலைகேட்க அம்மா வாராய்!

    இச்சைபோன்ற இடரையெலாம்
    மிச்சமின்றி விழுங்கிவிடு
    என்னையுன்றன் பிள்ளையாக வளையவரவிடு,
    என்றுமெதிரில் நின்றுனன்பில் அளையும்சுகம்கொடு!

    கச்சைக்கட்டிக் கொண்டுவரும்
    கவலையைப் பொசுக்கியந்தக்
    கனலையென்றன் கவிதையிலே சுருதியாக்கிடு! என்னைக்
    கன்னித்தமிழ் மின்னலுக்குக் கருவியாக்கிடு! (1)

    இந்த உலகம் நொந்த உலகம்
    இவர்மனத்தில் தினம்கலகம்
    இங்கெதற்கோ இறக்கிவைத்தாய் தெரியவுமில்லை
    இங்கெனக்கு வேலையென்ன புரியவுமில்லை

    கந்தனோடு பொய்கையிலே
    கவிதைபேசி ஆடியவன்
    சந்தையிலே காசும்பையு மின்றி நிற்கிறேன்
    சட்டையின்றிச் சவுக்கடிக்காய் என்னை விற்கிறேன்!

    எந்தவினை? ஏதுவிதி?
    எவரிடத்தில் இந்தச்சதி?
    உன்றன்பிள்ளை என்பதையே மறந்துவிட்டாயா? நானே
    ஊற்றித்தந்த கள்குடித்துக் கிறங்கிவிட்டாயா?

    அந்தமிலா ஓரிருளில்
    அந்தகார மாயெழுந்து
    வந்துநின்ற காட்சியினை எண்ணிப் பார்க்கிறேன், அந்த
    வாய்ப்புதவறிப் போனதென்று வருந்தி யழுகிறேன் (2)

    நிலவுநெகிழும் நிசியில் மனதில்
    உலவும் மின்ன லமிழ்த மாகக்
    குலவியென்றன் உயிரையெல்லாம் கொள்ளை யடிப்பாய்! இந்தக்
    குழந்தையிடம் குழந்தையாகச் சள்ளை படிப்பாய்

    கலகநடுவில் கண்விழிக்கும்
    கவிதையென்றன் காளியென்று
    உலகமறிய ஊர்நடுவே உடைத்துக் காட்டிடு! நம்
    உண்மையினைச் சந்தியிலே உடைத்துப் போட்டிடு!

    திலகமிட்ட சிறுமியாக
    சிரித்துக்கொன்ற குமரியாக
    திரைநரைத்த கிழவியாக வந்து நின்றனை
    திட்டமிட்டுத் திரும்பத்திரும்ப நின்று கொன்றனை

    உலகுபோதும் வாழ்வுபோதும்
    உறவுபிரிவுத் துயரம்போதும்
    உற்றபிள்ளை! பெற்றவளே ஓடி வந்திடு! காளீ
    உச்சிமுகர்ந் துன்மகவை உன்னில் சேர்த்திடு! (3)

    Share
  • நவராத்திரி நாயகியர் (4)

    க. பாலசுப்பிரமணியன்

     

    கன்னியாகுமரி தேவி குமரி அம்மன்

    wpe7

    நீலக்கடலோரும்  நிற்கின்ற நீலியே குமரியே !

    நிலமகளும் அலைமகளும் கலைகொடுத்த செல்வியே

    நிலவோடு கதிரும் எழுந்திடுமே நின்விழியிலே !

    நிழலான வாழ்விற்கு நிஜம்காட்டும் மாயே!

     

    அலையோசை கடலோரம் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க

    அரியணைகள் துறந்தோர் அடைக்கலமாய் காத்திருக்க

    அகத்தினையும் செகத்தினையும் வென்றிடவே வழிகாட்டி

    அருளாட்சி செய்கின்ற  எழில்ராணி அபிராமி  !

     

    கடல்காற்றின்  கானத்திற்கு காதணிகள் அசைந்திருக்க

    களையான மூக்குத்தி கலங்கரை ஒளிபெருக்க

    கருங்குழலை  அன்றலர்ந்த மலர்கள் அலங்கரிக்க

    கன்னிகையே! காலமெல்லாம் காலடியில் கண்விழிப்பேன் !

     

    கேரளத்து இளநீரால் நித்தம் நீராட்டி

    கார்மேக ஊஞ்சலிலே உன்னைத் தாலாட்டி

    கன்னித்தமிழ் சொல்லால் உன்னைப் பாராட்டி

    கண்மணியே! கண்ணிமைக்குள் நித்தம் காத்திருப்பேன் !

     

    பரமனைத் துறந்த துறவியே பார்வதியே !

    பக்தர்கள் குரலுக்குப் பணிந்திடும் பாரதியே !

    பாரெல்லாம் படைத்தாளும் பவானி பகவதியே !

    பாணனை அழித்திட்ட பரமேஸ்வரி பயங்கரியே !

     

    குமரியாய் நிற்கின்ற குலமகள் செல்லமே

    குவிந்திடும் நிலமெல்லாம் காலடி சரணமே

    கோலங்கள் பலகொண்டு  கூடிய பெண்மையே

    கொலுவிருக்க வருவாயே! குறைவின்றி அருள்வாயே !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    keshav3

    ”நவையூறும் நாவில் சுவையூறச் செய்து
    அவையேறும் வாழ்வை அளிப்பாய் -இவையாவும்
    பெற்றிட வெண்பாக்கள் குற்றம் குறையின்றி
    சொற்றுளியால் சீராய் செதுக்கு”….(1)….

     
    ”நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
    பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
    அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
    கலையாளை சேரக் கவி….(2)

    ”நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
    தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
    கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
    அலைபாய்ந் திடா(து) அடங்கு….(3)

    ”ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
    கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
    பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
    ஆய கலையாள் அருள்….(4)

    ”வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
    மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
    வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
    தேக்கும் வடிக்குமே தேன்….(5)

    ”பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
    தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
    நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
    வாணி வரமருளநீ வா”….(6)

    ”தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
    ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
    புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
    மனக்கிலேச யாழினை மீட்டு….(7)….

    ”வேதங்கள் நான்குமவள் காதணியும் குண்டலம்
    நாதப் பரப்பிரமம் நாசிக்காற்று -ஓதும்
    புராணங்கள் மேகலை பாதச் சிலம்பு
    சராசரங்கள் சேரும் சபை”….(8)….கிரேசி மோகன்….

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (81)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    14556050_1108520385868826_1718628947_n

    112795645n05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 08.10.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • பாதமலர் போதும்

    இசைக்கவி ரமணன்

     

    paduka_1

    மலருக்குத் தேனழகோ
    மணமழகோ நிறமழகோ? என்
    மனதுக்கு நீயன்றி
    மற்றழகொன் றேது?
    மறையெல்லாம் சொன்னாலும்
    மற்றொருசொல் லேது?

    சிலருக்கே திருவுண்டு
    சிலருக்கே அறிவுண்டு
    சிலருக்கோ நீசிரித்துச்
    சேர்ந்த அருளுண்டு
    சிறுபிள்ளை என்னெஞ்சில்
    நீதானே உண்டு!

    நாடகமாய் இவ்வையம்
    பூடகமாய் மனிதமனம்
    கூடெங்கும் நுழைந்துமலர்
    சூடுமுன் கரத்தால், உன்னைத்
    தேடுவதே இவரிங்கே
    ஆடுவதும் பாடுவதும்!

    தேடுவோர்கள் தேட, பதம்
    சூடுவோர்கள் சூட, நிதம்
    வாடுவோர்கள் வரிசையிலென்
    வாழ்க்கை ஆடுதே! இதில்
    ஏடும் இசையும் உன் திறவா
    வாசலானதே!

    போதுமடி அம்மா உன்
    பொல்லாப்பு! இக்கணமே
    மீதமின்றி மிச்சமின்றி
    என்னைத் தீர்த்திடு! உன்
    பாதமலர் போதுமதில்
    பரிந்து சேர்த்திடு!

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-27

    மீனாட்சி பாலகணேஷ்

    பாண்டியன்மகள் ஊசலாடும் அழகு!

    அரண்மனை நந்தவனம் இளம்பெண்களின் சிரிப்பொலியாலும், கிளிமொழியான அவர்கள் பேச்சொலியாலும் கலகலக்கிறது. அரசகுமாரி தடாதகைப்பிராட்டி நந்தவனத்தில் தன் தோழிகளுடன் ஊசலாடி விளையாடிக்கொண்டிருக்கிறாள். நந்தவனத்தில் மலர்ந்துள்ள பலவிதமான பூக்களிலும், இந்த இளம்மங்கையர் சூடியுள்ள பூக்களிலும் மூழ்கித் தேனைமாந்தி, ரீங்காரமிடுகின்றன வண்டுகள். அந்த ஓசை, ‘தடாதகையின் மெல்லிடை ஒசிகின்றதே, அது வருந்துமே,’ எனும் ஏக்கத்தால் அவை ஒலியெழுப்புவது போலுள்ளதாம். அதற்கேற்ப, அவளும் தான் அமர்ந்துள்ள பொன்னூஞ்சலை உதைத்து ஆடுகிறாள்.

    காலில் அணிந்துள்ள பாதசரங்களும், தண்டையும் கிணுகிணுக்கின்றன. கால்களையும் மறைத்துத் தழையத்தழையக் கட்டியிருக்கும் பட்டாடை பாதங்களிலிருந்து சற்றே நெகிழ்ந்து விலகுகிறது. அருகாமையில் நிற்கும் தோழியர் எதனையோ கண்டுவிட்டனர். உடனே குதூகலித்துக் கூச்சலிடுகின்றனர்.

    am1
    திருமகள், “வாணி, இங்கே வாயேன்; இவள் பாதத்தைப் பார்த்தாயா? இது என்னவாம் தழும்பு? வலம்புரிச்சங்க ரேகையோ? உனக்குத் தெரிகிறதா?” எனக் குறும்பாகக் கேட்டு முத்துப்போன்ற பல்தோன்றச் சிரிக்கிறாளாம். உண்மையில் அதுவென்ன தெரியுமா? கூன்பிறை எனப்படும் வளைந்த பிறையினைத் தழுவியதால் உண்டான தழும்பாகும். அதாவது இவள் (தடாதகை) தன் காதல்கொழுநனிடம் (சிவபிரானிடம்) ஊடல் கொண்டபோது, அவளுடைய ஊடலைத் தணிவிப்பதற்காக ஐயன் அவளுடைய பஞ்சினும் மென்மையான அடிகளில் தனது முடி படியுமாறு கிடந்து வணங்கியுள்ளான். அப்போது அவனது சடைமுடியிலணிந்த பிறைநிலா அம்மையின் பாதத்தினை அழுத்தியதால் அதில் பிறைக்கீற்றின் தழும்பு உண்டாகிவிட்டது! பாதத்தை மூடிய பட்டாடை விலகியதால் இப்போது அது பல்லோரும் கண்டு நகைக்க இடமாகிவிட்டது!
    ‘ஆகா! இதுவா சேதி?” என எல்லாரும் நகைக்கும்வகையில், அசதியாடுகின்றாள் திருமகள். அசதியாடுதல் என்பது கேலி செய்து நகைத்தல் எனப்பொருள்படும். நமது அரசிளங்குமரி என்ன செய்தாளாம்? அவளுடைய முடியோ வணங்காமுடி. பின்னே? இமயம் வரை சென்று, செல்லும் வழியெல்லாம், அரசர்களை வென்று வாகைசூடியவளாயிற்றே! ஆனாலும் தோழிகளின் இந்தக் குறும்பான அசதியாடலில் அந்த வணங்காமுடியும் மிகுதியான நாணத்தால் வணங்கித் தலைகுனிகின்றதாம். முகம் சிவக்க, கன்னங்கள் பூரிக்கத் தடாதகை நாணத்தில் தலைகுனியும் அழகை வருணிக்கவும் இயலுமா?

    செவிலித்தாய்க்கு இதைக்கண்டு உள்ளம் நெகிழ்ந்துவிடுகிறது; தடாதகைக்கு உதவ முற்படுகிறாள். சிறுபெண்களையெல்லாம் ஒரு செல்ல அதட்டல்போட்டு நகர்த்திவிட்டு, தடாதகையின் அருகே சென்று அவள் கூந்தலை வருடிவிட்டு, வாய்மூடி மௌனியாகிவிட்டவளை, “அந்த வாயாடிகள் கிடக்கட்டும்; நீ பொன்னூசல் ஆடம்மா,” என வேண்டுகிறாள்.

    இங்கு தடாதகையின் தலைநகராகிய மதுரையின் பெருமையை அச்செவிலியின் வாயிலாகப் புலவர் குமரகுருபரனார் கூறுவது மிகுந்த நயம்வாய்ந்து படிக்க இன்பமூட்டுகின்றது.

    இளைய சிறுமிகள் கூந்தலை விதம்விதமாக முடித்துள்ளனர். இதனை ஐம்பாற்கூந்தல் என்றார். (அதாவது முடி (முடிச்சு), கொண்டை, சுருள், குழல், பனிச்சை என ஐந்து வகைகளாக முடியப்படுமாம். கூந்தல் அலங்காரத்தில் மகளிரும் இளைய சிறுமிகளும் என்றுமேதான் ஆவல்காட்டியுள்ளனர் என இதனால் அறிகிறோம்!) ஆனால் அது கூதிர்காலத்தின் பனியில் ஆற்றாமலிருக்கிறதாம். ஈரமாக உள்ளதாம். ஆகவே அகில், சாம்பிராணி போன்றனவற்றைக்கொண்டு புகையை ஊட்டி அக்கூந்தலை உலர்த்துகின்றனர் அச்சிறுமியர். இப்புகையை மடுத்த வண்டுகள் ஆண்வண்டும் பெண்வண்டுமாகச் சேர்ந்து கூடித் தழுவுகின்றனவாம். அத்தகைய பெரிய வயல்களைக் கொண்ட மதுரை நகரின் தலைவியானவளே பொன்னூசல் ஆடுவாயாக! சொக்கநாதனான சிவபிரான் புழுகுநெய்யைப்பூசி சுந்தரனாக அழகுதிகழ இருக்கிறான். அவனுடைய அழகுக்கு கொடிபோன்ற உன்னையல்லால் வேறுயார் ஒத்தவர்? நீ பொன்னூசலாடுக!’ என்கிறாள் செவிலித்தாய்!

    தடாதகையாட, குமரகுருபரனாரின் அழகுத்தமிழும் அழகான கவிதை ஊசலேறி ஆடுகிறது!

    ஒல்குங்கொடிச்சிறு மருங்குற் கிரங்கிமெல்
    ஒதிவண்டார்த்தெழப்பொன்
    ஊசலைஉதைந்தாடும் அளவின்மலர் மகளம்மை
    உள்ளடிக்கூன்பிறைதழீஇ
    மல்குஞ்சுவட்டினை வலம்புரிக் கீற்றிதுகொல்
    வாணியென்றசதியாடி
    மணிமுறுவல்கோட்டநின் வணங்கா முடிக்கொரு
    வணக்கநெடுநாண்வழங்கப்
    பில்குங்குறும்பனிக்கூதிர்க் குடைந்தெனப்
    பிரசநாறைம்பாற்கினம்
    பேதையர்கள்ஊட்டும் கொழும்புகை மடுத்துமென்
    பெடையொடுவரிச்சுரும்பர்
    புல்குந்தடம்பணை உடுத்துமது ரைத்தலைவி
    பொன்னூசல்ஆடியருளே
    புழுகுநெய்ச்சொக்கர்திரு அழகினுக் கொத்தகொடி
    பொன்னூசல்ஆடியருளே
    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- ஊசற்பருவம்- குமரகுருபரர்)
    *********

    am2
    இறைவனான சிவபிரான் எல்லாமாக இருப்பவன்; எவ்வடிவிலும் உள்ளவன்; எங்கும் இருப்பவன்; என்றும் அம்பிகையை விட்டுப் பிரியாது நிற்பவன். ஊசலாடும் அன்னையைக் காணும் புலவர், அவளை இணைபிரியாத ஈசன் இங்கும் என்னென்ன வடிவில் உள்ளான் என படிப்போரின் மெய்சிலிர்க்க விளக்கியருளுகிறார். அன்னையிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது:

    “தடாதகை! உனது ஊஞ்சல் பெரிய மாணிக்கங்களை அழுத்திச் செய்த பொன்னூஞ்சல்; உன் புகழைப்பாடி நிற்கிறார்கள் தேவலோக மாதரான அரம்பை ஊர்வசி முதலியோர். அதனைக் கேட்டவண்ணமே நீயும் ஊஞ்சலில் ஆடியபடி புன்முறுவல் பூக்கிறாய். ஆகா! அந்த முறுவலுக்கும் விலையுண்டோ தாயே! அகில உலகங்களையும் அரவணைத்துக் கருணைபொழியும் புன்னகை அல்லவா அது?முழுநிலவொளியென விரியும் அதனை இடைவிடாது நுகர்கின்றது ஒரு சகோரப்பறவை- அதுவே எம்பெருமான். அப்புன்னகைக்கு முழுமுதல் உரிமையாளனும் அவனே அல்லவோ! அத்துடன் அவன் நின்றுவிடவில்லை. உன்னுடைய கூந்தலில் அணிந்துள்ள நறுமணம் பொருந்திய மலர்களின் தேனை உண்ணும் வண்டாகவும் இருந்து ரீங்காரம் செய்தபடி உன்னையே வளையவருகிறான். இன்னும் அவன் தன் தேவியான உன் அழகினை முழுவதாகக் கண்டு களிக்கவில்லை போலும். உன் திருக்கையில் நீ ஏந்திய பச்சைக்கிளியாகவும் அமர்ந்திருப்பதும் அவனே,” என்கிறார்.

    மதுரை மாநகரின் சிறப்பினையும் விளக்கப் புலவர் மறக்கவில்லை. அழகான தேவமங்கையர் துளைந்து நீராடியதனால் குங்குமச்சேறு அருவிநீரில் கரைந்துள்ளது. அதில் மூழ்கியெழுந்த ஒரு களிறு தன்னுடம்பில் அச்சேறு படிந்ததனால் தனது பிடியிடம் செல்ல அஞ்சி நிற்கின்றதாம்- ஏனெனில் ‘வேறொரு பிடியுடன் களித்து இன்புற்று வருகின்றது இக்களிறு’ என எண்ணுமாம் இதன் உரிமைப்பிடி. எவ்வாறு சிவபெருமான் மீனாட்சிக்கே உரியவரோ அதுபோன்றே இக்களிறும் தனது பிடிக்கே உரியதாகும்! “அத்தகைய அழகான, பொன்னாலான மாடங்கள் நிறைந்த கூடல் எனும் ஊரின் பெரும்செல்வியே! பொன்னூசலாடி அருளுக,” என வேண்டுகிறார்.

    கொன்செய்தசெழுமணித் திருவூசல் அரமகளிர்
    கொண்டாடஆடுந்தொறும்
    குறுமுறுவல் நெடுநில வருந்துஞ்சகோரமாய்க்
    கூந்தலங்கற்றைசுற்றும்
    தென்செய்தமழலைச் சுரும்பராய் மங்கைநின்
    செங்கைப்பசுங்கிள்ளையாய்த்
    தேவதே வன்பொலிவ தெவ்வுருவு மாமவன்
    திருவுருவின்முறைதெரிப்ப
    மின்செய்தசாயலவர் மேற்றலத் தாடிய
    விரைப்புனலின்அருவிகுடையும்
    வெள்ளானை குங்குமச் செஞ்சேறு நாறமட
    மென்பிடியைஅஞ்சிநிற்கும்
    பொன்செய்தமாடமலி கூடற் பெருஞ்செல்வி
    பொன்னூசல்ஆடியருளே
    புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக் கொத்தகொடி
    பொன்னூசல்ஆடியருளே

    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- ஊசற்பருவம்- குமரகுருபரர்)

    am
    அன்னை மீனாட்சி பொன்னூசல் ஆடுகிறாள்; நமது இதயங்களாகிய ஊசலிலும் அமர்ந்து இடையறாது ஆடி நம்மை வழிநடத்தியும் செல்கிறாள். அவள் திருவடிகளில் பணிந்து, இச்சிறு கட்டுரையை நவராத்திரி சமயம் அவளுக்குக் காணிக்கையாக்கி, இதில் காணும் முதல் பாடலின் கருத்திற்கேற்ப சில ஆண்டுகளுக்கு முன்பு நவராத்திரி கொலுவில் நான் செய்துவைத்திருந்த காட்சியின் புகைப்படத்தினை வாசகர்கள் கண்டு மகிழ இணைத்துள்ளேன்.

    இன்னும் தொடர்ந்து இத்தகைய பாடல்களைக் கண்டு களிப்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *************

    Share
  • நவராத்திரி நாயகியர் (3)

    க. பாலசுப்பிரமணியன்

     

    காசி ஸ்ரீ விசாலாட்சி

    images-17

    கங்கைக் கரையினிலொரு கலங்கரை விளக்கம்

    காசினி காத்திடும் கருணையின் வடிவம்

    கண்களில் அருளை வெள்ளமாய் பெருக்கும்

    கலங்கிடும் நெஞ்சிற்குக் காசியில் தரிசனம் !

     

    வேதங்கள் ஒலித்திடும்  வேஷங்கள் கலைந்திடும்

    வேள்விகள் வளர்ந்திடும் விளக்கங்கள் கிடைத்திடும்

    வென்றதும் வீழ்ந்திடும் வீழ்ந்ததும் வென்றிடும்

    விடியலில் கங்கையில் விசாலாட்சி தரிசனம் !

     

    அன்னையின் கண்களில் கருணையின் வெள்ளம்

    அம்மையின் கால்களை கங்கையே தழுவும்

    ஆசையைத் துறந்தோர் அவளிடம் புகலிடம்

    அடைக்கலம் பெற்றதும் முக்தியும் கிட்டிடும் !

     

    அன்னம்போல் அழகுடன் அமைதியே முகத்தினில்

    அன்னபூரணி ! அவளுக்கு நிகரில்லை உலகினில்

    அலைகின்ற மனதினில் மாயையை நீக்கியே

    அமைதியை அருளிடும் அவளிரு கண்விழி !

     

    சதியாய் வந்தவள் சக்தியின் சந்நிதி

    சாம்பவி சங்கரி சாமுண்டி யோகினி

    சங்கரன் துணைவி தர்மத்தின் தேவதை

    சலனங்கள் நீக்கியே சமநிலை தருவாள்!

     

    மலையனை மணந்தவள் மகிஷனை அழித்தவள்

    மன்மதன் வென்றவள் மங்கலம் நிறைந்தவள்

    மனதினில் நிறுத்தியே நிறைவுடன் அழைத்தால்

    மகிழ்வுடன் நிற்பாள் கொலுவினில் குணவதி !

     

     

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 224

    -மலர் சபா 

    மதுரைக் காண்டம் – அழற்படு காதை

    பவளம் போன்ற சிவந்த நிற மேனியுடையவன்;
    ஆழமான கடல்சூழ் உலகை
    ஆள்கின்ற மன்னனைப் போல
    முரசு, வெண்கொற்றக்குடை, வெண் சாமரம்,
    நெடுங்கொடி, புகழ்வாய்ந்த அங்குசம்,
    வடிவேல், வடிகயிறு
    இவற்றைக் கையில் ஏந்தியவன்;           king-2

    எண்ணில் அடங்காத
    பகை அரசர்களைப்
    போரில் புறமுதுகிட்டு ஓடச் செய்தவன்;
    இந்நிலவுலகம் முழுவதையும்
    தன் குடையின்கீழ்க் கொண்டுவந்து
    செங்கோல் செலுத்தி,
    தீவினைகளை அகற்றி,
    வெற்றிகள் கொண்டு,
    தன்பெயரை நிலைநிறுத்தும் வண்ணம்
    புகழினை வளர்த்துக்
    குறிஞ்சி, முதலிய நானிலம் காத்துப்
    பெரும்புகழும் சிறப்பும் வாய்ந்த
    ‘நெடியோன்’ என்னும் பெயர்கொண்ட
    பாண்டியனை ஒத்த
    அரச பூதங்களுக்குத் தலைவனான
    வெல்வதற்கு அரிய
    சிறந்த ஆற்றலையுடைய அரச பூதமும்…

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(140)

    -செண்பக ஜெகதீசன்

    அழுக்காறு எனவொரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்.     (திருக்குறள் -168: அழுக்காறாமை)

    புதுக் கவிதையில்…

    பொறாமை என்பது
    பெரும் பாவி,
    அது
    சேர்ந்தவரின்
    செல்வத்தையெல்லாம் அழித்து,
    செலுத்தி அவரைத் தீயவழியில்
    சேர்த்துவிடும் கொடுநரகில்!

    குறும்பாவில்…

    பொறாமைக் குணம் பெரும்பாவியாய்ப்
    போக்கடித்துச் செல்வத்தை, சேர்ந்தவர்க்குத்
    தீய வழிகாட்டித் தீர்த்துக்கட்டிவிடும்!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மனித வாழ்வினிலே
         -மற்றவர் மீது பொறாமையென்பது,
    கண்ணிய மில்லாப் பாவியாகிக்
         -கொண்டவன் சேர்த்த செல்வத்தையே
    மண்ணும் கூட மிஞ்சாமல்
         -முழுதும் அழித்தே அவன்வாடத்
    திண்ணமாய்த் தீவழி செலுத்தியேதான்
          -தள்ளிடும் கொடிய நரகினுக்கே!

    லிமரைக்கூ…

    செல்வத்தையே இல்லாமல் தீர்க்கும்,
    பொறாமைக்குணம் பெரும்பாவியாய் ஒருவனைத்
    தீயோனாக்கிக் கொடுநரகத்தில் சேர்க்கும்!

    கிராமிய பாணியில்…

    பாவிபாவி பெரும்பாவி
    பொறாமகொணமொரு பெரும்பாவி,
    அது
    பொறாமவுள்ளவன் சேத்துவச்ச
    பொருளயெல்லாம் அழிச்சிப்புடும்… 

    அதோட அவன உட்டுடாது,
    கெட்டவழில அவனத்தள்ளி
    கேடுகெட்ட நரகத்துக்கே
    கூட்டிக்கொண்டு உட்டுடுமே… 

    அதால,
    பாவிபாவி பெரும்பாவி
    பொறாமகொணமொரு பெரும்பாவி!

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 24

    நிர்மலா ராகவன்

    பொறுத்துப்போகவேண்டுமா, ஏன்?

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d
    சீனாவில் ஒரு நாளைக்கு இருநூறு பேர், `எங்கள் தாம்பத்தியம் தொடர்ந்து நடக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன்!’ என்று ஷி என்கிற கவுன்சிலரிடம் வந்தவண்ணம் இருக்கிறார்களாம். இவர்களில் எழுபது சதவிகிதம் படித்து, உத்தியோகம் பார்க்கும் பெண்கள். ஐந்து வருடங்களுக்குள் திருமணம் புரிந்தவர்கள். கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறான் என்பதுடன், ஒருவரை ஒருவர் எப்படிப் பொறுத்துப்போவது என்பதில்தான் குழப்பம். புக்கக்கத்தினருடன் ஒத்துப்போக முடிவதில்லை என்பதும் ஒரு காரணமாம். (ஆதாரம்: THE STAR, 21-9-16).

    இப்போது தமிழ்ப்பெண்களுக்கு வருவோம்.

    சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தாம் இலக்கியத்தில் படித்ததையும், வீட்டில் முதிய பெண்டிர் சொல்லி வந்ததையும் கடைப்பிடித்தவர்கள் நாம். அதுதான், `பெய்யெனப் பெய்யும் மழை,’ வீட்டில் நடப்பது நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும், பத்தினி ஒருத்தி கல்லால் ஆன நெல்லிக்காயை வேகவைத்தது, — இப்படி எவ்வளவோ மறைமுகமான அறிவுரைகளும் கதைகளும் இருக்கின்றனவே!

    சுருங்கச் சொன்னால், கணவன் கடவுளைப்போல் இல்லாவிட்டாலும், பொறுமையின் பூஷணமாகத் திகழ்ந்தார்கள். நிம்மதியும், மகிழ்ச்சியும் இருந்ததோ, என்னவோ, `நான் ஒரு நல்ல மனைவி!’ என்று பெருமிதம் கொண்டார்கள்.

    ஒரு முதிய மாது, `நான் பாட்டுக் கச்சேரிக்குப் போயிட்டு, லேட்டா வந்தேனா! `முண்டை’ என்று அவர் திட்டினாருடி!’ என்று பிற பெண்களிடம் பெருமையுடன் சொல்லிக்கொண்டதைக் கேட்டிருக்கிறேன். (`கணவரை இழந்தவள்’ என்ற பொருள்பட கணவரே திட்டிவிட்டால் சரியாகப் போயிற்றா?)

    `அது ஏன், பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முதலில் கணவனின் கை ஓங்கியிருக்கிறது, ஆனால் வயதானபின், சுதந்திரம் அற்றவன்போல் அவன் எல்லாவற்றிற்கும் மனைவியை நாடுகிறான்?’ நாற்பது வயதான ஒரு சீன மாது என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘என் பெற்றோரும் அப்படித்தான். ஆனால், இந்தத் தலைமுறையில் நாங்கள் எல்லோரும் காதல் கல்யாணம்தான்! நானும் என் கணவரும் மிகுந்த நட்புடனும், மரியாதையுடனும் ஒருவரை ஒருவரை ஒருவர் நடத்துவோம்,’ என்று தெரிவித்தாள்.

    அவள் சொன்னதுபோல், வயதான காலத்தில் கணவர் தன்னை நாடுவார் என்று பிறரைப் பார்த்துத்தான் நம்பிக்கையோடு பல பெண்கள் பொறுமைசாலிகளாக இருந்தனரோ?

    ஆனால் எல்லாப் பெண்களுமா இப்படி இருக்கிறார்கள்!

    கணவன் செய்வது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து, ஏளனம் செய்து, நான்கு பேர் முன்னிலையில் கண்டபடி பேசும் பெண்களும் நம்மிடையே இல்லாமலில்லை.
    ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று பார்த்தால், சில காரணங்கள் தட்டுப்படுகின்றன. அவர்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி கணவன் எதுவும் சாதித்துவிடவில்லை; ஏதாவது கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டு, சேமிப்பைத் தொலைத்துவிடுகிறான்; அல்லது என்ன காரணத்தாலோ ஆண்வர்க்கத்தின்மீதே அவர்கள் கொண்ட வெறுப்பு, அவநம்பிக்கை, இன்னும் பல.

    கதை: சுகன்யாவின் தாய் இப்படித்தான்.

    தந்தையோ குடும்பத்தில் எதற்கு வீண் குழப்பமென்று மனைவி எவர் முன்னாலும், என்ன ஏசிப் பேசினாலும் வாயைத் திறக்காது இருந்துவிட்டார்.

    அவரைக் கண்டு நொந்துபோய், `எனக்குக் கல்யாணம் ஆனால், நான் அம்மாவைப்போல் இல்லாது, அருமையான மனைவியாக இருப்பேன்,’ என்று தீர்மானம் செய்து கொண்டதுபோல் பரமசாதுவாக வளர்ந்தாள் சுகன்யா. வாய்த்தவன் எவ்வளவு கொடுமை செய்தாலும், தந்தையைப்போல் பொறுத்துப்போனாள்.

    இருபது, இருபத்தைந்து வருடங்கள் இப்படி துன்பத்தை அனுபவித்துவிட்டு, பிறகு சற்றுத் தெளிந்து, `அவர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். நான் என் வாழ்க்கையை என் விருப்பப்படி அமைத்துக்கொள்கிறேன்!’ என்பதுபோல், சுதந்திர உணர்ச்சியோடு வாழ்கிறாள்.

    காலம் மாறிவிட்டது. படித்து, பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்கள், `பெண் என்றால் விட்டுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?’என்று வாதம் செய்கிறார்கள்.

    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மூன்று பேரை நான் இந்த விவகாரத்திற்கென பேட்டி கண்டேன். எல்லாருமே முப்பது வயதைத் தாண்டியவர்கள்.

    `தன்னையே கிறக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணையே ஆண்கள் விரும்புகிறார்கள்!’ என்றாள் ஒருத்தி, கசப்புடன்.

    `நான் என்னைவிட குறைந்த படிப்பும், சம்பளமும் உள்ள ஒருவனையே மணப்பேன். அப்போதுதான் என் கை ஓங்கியிருக்கும்!’ என்றார்கள், ஒருமித்து.

    `ஒருக்கால், தாழ்மை உணர்ச்சியால் பாதிக்கப்பட்டு, அவன் உங்களை முதலில் மட்டமாக நடத்த ஆரம்பித்துவிட்டால்?’ என்று எதிர் கேள்வி கேட்டேன்.

    ‘முதலில் பழகிப்பார்த்துவிட்டுத்தானே மணப்போம்!’ என்று பதில் வந்தது.

    இவர்களில் ஒருத்தி குழந்தையே வேண்டாம் என்றிருக்கிறாள். இன்னொரு பெண்ணோ, குழந்தைகளைச் சரிவர கவனிக்காது, தன் முன்னேற்றம், தன் சம்பாத்தியம் என்று சுயநலத்துடன் வாழ்கிறாள். மூன்றாமவளின் திருமணம் ஒரு குழந்தைக்குப்பின் விவாகரத்தில் முடிந்தது.

    வேறொரு பெண் கல்யாணமான நாற்பத்தைந்தாவது நிமிடத்தில்(!), `நான் இவனுடன் வாழ முடியாது!’ என்று விவாகரத்து கோரினாளாம். காரணம்: திருமணம் முடிந்து எந்தக் காரில் வீடு செல்வது என்பதில் இருவரது கருத்தும் வேறுபட்டதாம்!

    உலகில் எட்டு சதவிகிதத்தினர், `அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? எங்கு தங்குவது?’ என்ற கலக்கம் இல்லாது வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதுதான். ஏனோ பலரும் தாமே அதைக் கடினமாக்கிக் கொள்கிறார்கள்.

    எதுதான் நல்ல தாம்பத்தியம்?

    மகிழ்ச்சியாகப் பல வருடங்கள் சேர்ந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்தால் ஒன்று புரிகிறது. குடும்பங்களில் யாரும் யாரையும் பொறுத்துப் போகவேண்டியது போன்ற நிலைமை இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தாமல், தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, நல்ல ஆலோசனையாக இருந்தால், `உன்னை யார் கேட்டது?’ என்று அலட்சியப்படுத்தாது ஏற்று, `பெண்ணின் வேலை’, `ஆணின் வேலை’ என்ற பாகுபாடு இன்றி எல்லாவற்றிலும் பங்கு போட்டுக்கொள்வது, ஒருவர் ஆத்திரப்படும்போது, மற்றவரும் சேர்ந்து கத்தாமல் விலகிப்போவது, கணினியைப்போல் என்றோ மனதில் பதிந்த வேண்டாத சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வராமல் இருப்பது போன்ற தன்மைகள் தம்பதியரின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும்.

    அவர்களுக்குள் சண்டையே வராது என்பதில்லை. ஆனால், அதிலிருந்து மீண்டுவரத் தெரிந்தவர்கள் இவர்கள்.

    இருவரில் ஒருவராவது, `நான் இப்படிச் செய்தால், அடுத்தவரின் உணர்ச்சிகள் பாதிப்படையுமோ?’ என்று யோசித்து நடந்தால், தானே மற்றவரும் அதேபோல் நடக்கத் தலைப்படுவார்.

    பிறரது உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்தவரால்தான் சுயநலமின்றி தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்க முடியும்.

    தொடருவோம்

    Share