நலம் .. நலமறிய ஆவல் – 24
நிர்மலா ராகவன்
பொறுத்துப்போகவேண்டுமா, ஏன்?
சீனாவில் ஒரு நாளைக்கு இருநூறு பேர், `எங்கள் தாம்பத்தியம் தொடர்ந்து நடக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன்!’ என்று ஷி என்கிற கவுன்சிலரிடம் வந்தவண்ணம் இருக்கிறார்களாம். இவர்களில் எழுபது சதவிகிதம் படித்து, உத்தியோகம் பார்க்கும் பெண்கள். ஐந்து வருடங்களுக்குள் திருமணம் புரிந்தவர்கள். கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறான் என்பதுடன், ஒருவரை ஒருவர் எப்படிப் பொறுத்துப்போவது என்பதில்தான் குழப்பம். புக்கக்கத்தினருடன் ஒத்துப்போக முடிவதில்லை என்பதும் ஒரு காரணமாம். (ஆதாரம்: THE STAR, 21-9-16).
இப்போது தமிழ்ப்பெண்களுக்கு வருவோம்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தாம் இலக்கியத்தில் படித்ததையும், வீட்டில் முதிய பெண்டிர் சொல்லி வந்ததையும் கடைப்பிடித்தவர்கள் நாம். அதுதான், `பெய்யெனப் பெய்யும் மழை,’ வீட்டில் நடப்பது நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும், பத்தினி ஒருத்தி கல்லால் ஆன நெல்லிக்காயை வேகவைத்தது, — இப்படி எவ்வளவோ மறைமுகமான அறிவுரைகளும் கதைகளும் இருக்கின்றனவே!
சுருங்கச் சொன்னால், கணவன் கடவுளைப்போல் இல்லாவிட்டாலும், பொறுமையின் பூஷணமாகத் திகழ்ந்தார்கள். நிம்மதியும், மகிழ்ச்சியும் இருந்ததோ, என்னவோ, `நான் ஒரு நல்ல மனைவி!’ என்று பெருமிதம் கொண்டார்கள்.
ஒரு முதிய மாது, `நான் பாட்டுக் கச்சேரிக்குப் போயிட்டு, லேட்டா வந்தேனா! `முண்டை’ என்று அவர் திட்டினாருடி!’ என்று பிற பெண்களிடம் பெருமையுடன் சொல்லிக்கொண்டதைக் கேட்டிருக்கிறேன். (`கணவரை இழந்தவள்’ என்ற பொருள்பட கணவரே திட்டிவிட்டால் சரியாகப் போயிற்றா?)
`அது ஏன், பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முதலில் கணவனின் கை ஓங்கியிருக்கிறது, ஆனால் வயதானபின், சுதந்திரம் அற்றவன்போல் அவன் எல்லாவற்றிற்கும் மனைவியை நாடுகிறான்?’ நாற்பது வயதான ஒரு சீன மாது என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘என் பெற்றோரும் அப்படித்தான். ஆனால், இந்தத் தலைமுறையில் நாங்கள் எல்லோரும் காதல் கல்யாணம்தான்! நானும் என் கணவரும் மிகுந்த நட்புடனும், மரியாதையுடனும் ஒருவரை ஒருவரை ஒருவர் நடத்துவோம்,’ என்று தெரிவித்தாள்.
அவள் சொன்னதுபோல், வயதான காலத்தில் கணவர் தன்னை நாடுவார் என்று பிறரைப் பார்த்துத்தான் நம்பிக்கையோடு பல பெண்கள் பொறுமைசாலிகளாக இருந்தனரோ?
ஆனால் எல்லாப் பெண்களுமா இப்படி இருக்கிறார்கள்!
கணவன் செய்வது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து, ஏளனம் செய்து, நான்கு பேர் முன்னிலையில் கண்டபடி பேசும் பெண்களும் நம்மிடையே இல்லாமலில்லை.
ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று பார்த்தால், சில காரணங்கள் தட்டுப்படுகின்றன. அவர்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி கணவன் எதுவும் சாதித்துவிடவில்லை; ஏதாவது கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டு, சேமிப்பைத் தொலைத்துவிடுகிறான்; அல்லது என்ன காரணத்தாலோ ஆண்வர்க்கத்தின்மீதே அவர்கள் கொண்ட வெறுப்பு, அவநம்பிக்கை, இன்னும் பல.
கதை: சுகன்யாவின் தாய் இப்படித்தான்.
தந்தையோ குடும்பத்தில் எதற்கு வீண் குழப்பமென்று மனைவி எவர் முன்னாலும், என்ன ஏசிப் பேசினாலும் வாயைத் திறக்காது இருந்துவிட்டார்.
அவரைக் கண்டு நொந்துபோய், `எனக்குக் கல்யாணம் ஆனால், நான் அம்மாவைப்போல் இல்லாது, அருமையான மனைவியாக இருப்பேன்,’ என்று தீர்மானம் செய்து கொண்டதுபோல் பரமசாதுவாக வளர்ந்தாள் சுகன்யா. வாய்த்தவன் எவ்வளவு கொடுமை செய்தாலும், தந்தையைப்போல் பொறுத்துப்போனாள்.
இருபது, இருபத்தைந்து வருடங்கள் இப்படி துன்பத்தை அனுபவித்துவிட்டு, பிறகு சற்றுத் தெளிந்து, `அவர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். நான் என் வாழ்க்கையை என் விருப்பப்படி அமைத்துக்கொள்கிறேன்!’ என்பதுபோல், சுதந்திர உணர்ச்சியோடு வாழ்கிறாள்.
காலம் மாறிவிட்டது. படித்து, பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்கள், `பெண் என்றால் விட்டுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?’என்று வாதம் செய்கிறார்கள்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மூன்று பேரை நான் இந்த விவகாரத்திற்கென பேட்டி கண்டேன். எல்லாருமே முப்பது வயதைத் தாண்டியவர்கள்.
`தன்னையே கிறக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணையே ஆண்கள் விரும்புகிறார்கள்!’ என்றாள் ஒருத்தி, கசப்புடன்.
`நான் என்னைவிட குறைந்த படிப்பும், சம்பளமும் உள்ள ஒருவனையே மணப்பேன். அப்போதுதான் என் கை ஓங்கியிருக்கும்!’ என்றார்கள், ஒருமித்து.
`ஒருக்கால், தாழ்மை உணர்ச்சியால் பாதிக்கப்பட்டு, அவன் உங்களை முதலில் மட்டமாக நடத்த ஆரம்பித்துவிட்டால்?’ என்று எதிர் கேள்வி கேட்டேன்.
‘முதலில் பழகிப்பார்த்துவிட்டுத்தானே மணப்போம்!’ என்று பதில் வந்தது.
இவர்களில் ஒருத்தி குழந்தையே வேண்டாம் என்றிருக்கிறாள். இன்னொரு பெண்ணோ, குழந்தைகளைச் சரிவர கவனிக்காது, தன் முன்னேற்றம், தன் சம்பாத்தியம் என்று சுயநலத்துடன் வாழ்கிறாள். மூன்றாமவளின் திருமணம் ஒரு குழந்தைக்குப்பின் விவாகரத்தில் முடிந்தது.
வேறொரு பெண் கல்யாணமான நாற்பத்தைந்தாவது நிமிடத்தில்(!), `நான் இவனுடன் வாழ முடியாது!’ என்று விவாகரத்து கோரினாளாம். காரணம்: திருமணம் முடிந்து எந்தக் காரில் வீடு செல்வது என்பதில் இருவரது கருத்தும் வேறுபட்டதாம்!
உலகில் எட்டு சதவிகிதத்தினர், `அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? எங்கு தங்குவது?’ என்ற கலக்கம் இல்லாது வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை எளிதுதான். ஏனோ பலரும் தாமே அதைக் கடினமாக்கிக் கொள்கிறார்கள்.
எதுதான் நல்ல தாம்பத்தியம்?
மகிழ்ச்சியாகப் பல வருடங்கள் சேர்ந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்தால் ஒன்று புரிகிறது. குடும்பங்களில் யாரும் யாரையும் பொறுத்துப் போகவேண்டியது போன்ற நிலைமை இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தாமல், தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, நல்ல ஆலோசனையாக இருந்தால், `உன்னை யார் கேட்டது?’ என்று அலட்சியப்படுத்தாது ஏற்று, `பெண்ணின் வேலை’, `ஆணின் வேலை’ என்ற பாகுபாடு இன்றி எல்லாவற்றிலும் பங்கு போட்டுக்கொள்வது, ஒருவர் ஆத்திரப்படும்போது, மற்றவரும் சேர்ந்து கத்தாமல் விலகிப்போவது, கணினியைப்போல் என்றோ மனதில் பதிந்த வேண்டாத சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வராமல் இருப்பது போன்ற தன்மைகள் தம்பதியரின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும்.
அவர்களுக்குள் சண்டையே வராது என்பதில்லை. ஆனால், அதிலிருந்து மீண்டுவரத் தெரிந்தவர்கள் இவர்கள்.
இருவரில் ஒருவராவது, `நான் இப்படிச் செய்தால், அடுத்தவரின் உணர்ச்சிகள் பாதிப்படையுமோ?’ என்று யோசித்து நடந்தால், தானே மற்றவரும் அதேபோல் நடக்கத் தலைப்படுவார்.
பிறரது உணர்ச்சிகளை மதிக்கத் தெரிந்தவரால்தான் சுயநலமின்றி தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்க முடியும்.
தொடருவோம்