குறளின் கதிர்களாய்…(140)
-செண்பக ஜெகதீசன்
அழுக்காறு எனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். (திருக்குறள் -168: அழுக்காறாமை)
புதுக் கவிதையில்…
பொறாமை என்பது
பெரும் பாவி,
அது
சேர்ந்தவரின்
செல்வத்தையெல்லாம் அழித்து,
செலுத்தி அவரைத் தீயவழியில்
சேர்த்துவிடும் கொடுநரகில்!
குறும்பாவில்…
பொறாமைக் குணம் பெரும்பாவியாய்ப்
போக்கடித்துச் செல்வத்தை, சேர்ந்தவர்க்குத்
தீய வழிகாட்டித் தீர்த்துக்கட்டிவிடும்!
மரபுக் கவிதையில்…
மண்ணில் மனித வாழ்வினிலே
-மற்றவர் மீது பொறாமையென்பது,
கண்ணிய மில்லாப் பாவியாகிக்
-கொண்டவன் சேர்த்த செல்வத்தையே
மண்ணும் கூட மிஞ்சாமல்
-முழுதும் அழித்தே அவன்வாடத்
திண்ணமாய்த் தீவழி செலுத்தியேதான்
-தள்ளிடும் கொடிய நரகினுக்கே!
லிமரைக்கூ…
செல்வத்தையே இல்லாமல் தீர்க்கும்,
பொறாமைக்குணம் பெரும்பாவியாய் ஒருவனைத்
தீயோனாக்கிக் கொடுநரகத்தில் சேர்க்கும்!
கிராமிய பாணியில்…
பாவிபாவி பெரும்பாவி
பொறாமகொணமொரு பெரும்பாவி,
அது
பொறாமவுள்ளவன் சேத்துவச்ச
பொருளயெல்லாம் அழிச்சிப்புடும்…
அதோட அவன உட்டுடாது,
கெட்டவழில அவனத்தள்ளி
கேடுகெட்ட நரகத்துக்கே
கூட்டிக்கொண்டு உட்டுடுமே…
அதால,
பாவிபாவி பெரும்பாவி
பொறாமகொணமொரு பெரும்பாவி!