இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-27
மீனாட்சி பாலகணேஷ்
பாண்டியன்மகள் ஊசலாடும் அழகு!
அரண்மனை நந்தவனம் இளம்பெண்களின் சிரிப்பொலியாலும், கிளிமொழியான அவர்கள் பேச்சொலியாலும் கலகலக்கிறது. அரசகுமாரி தடாதகைப்பிராட்டி நந்தவனத்தில் தன் தோழிகளுடன் ஊசலாடி விளையாடிக்கொண்டிருக்கிறாள். நந்தவனத்தில் மலர்ந்துள்ள பலவிதமான பூக்களிலும், இந்த இளம்மங்கையர் சூடியுள்ள பூக்களிலும் மூழ்கித் தேனைமாந்தி, ரீங்காரமிடுகின்றன வண்டுகள். அந்த ஓசை, ‘தடாதகையின் மெல்லிடை ஒசிகின்றதே, அது வருந்துமே,’ எனும் ஏக்கத்தால் அவை ஒலியெழுப்புவது போலுள்ளதாம். அதற்கேற்ப, அவளும் தான் அமர்ந்துள்ள பொன்னூஞ்சலை உதைத்து ஆடுகிறாள்.
காலில் அணிந்துள்ள பாதசரங்களும், தண்டையும் கிணுகிணுக்கின்றன. கால்களையும் மறைத்துத் தழையத்தழையக் கட்டியிருக்கும் பட்டாடை பாதங்களிலிருந்து சற்றே நெகிழ்ந்து விலகுகிறது. அருகாமையில் நிற்கும் தோழியர் எதனையோ கண்டுவிட்டனர். உடனே குதூகலித்துக் கூச்சலிடுகின்றனர்.
திருமகள், “வாணி, இங்கே வாயேன்; இவள் பாதத்தைப் பார்த்தாயா? இது என்னவாம் தழும்பு? வலம்புரிச்சங்க ரேகையோ? உனக்குத் தெரிகிறதா?” எனக் குறும்பாகக் கேட்டு முத்துப்போன்ற பல்தோன்றச் சிரிக்கிறாளாம். உண்மையில் அதுவென்ன தெரியுமா? கூன்பிறை எனப்படும் வளைந்த பிறையினைத் தழுவியதால் உண்டான தழும்பாகும். அதாவது இவள் (தடாதகை) தன் காதல்கொழுநனிடம் (சிவபிரானிடம்) ஊடல் கொண்டபோது, அவளுடைய ஊடலைத் தணிவிப்பதற்காக ஐயன் அவளுடைய பஞ்சினும் மென்மையான அடிகளில் தனது முடி படியுமாறு கிடந்து வணங்கியுள்ளான். அப்போது அவனது சடைமுடியிலணிந்த பிறைநிலா அம்மையின் பாதத்தினை அழுத்தியதால் அதில் பிறைக்கீற்றின் தழும்பு உண்டாகிவிட்டது! பாதத்தை மூடிய பட்டாடை விலகியதால் இப்போது அது பல்லோரும் கண்டு நகைக்க இடமாகிவிட்டது!
‘ஆகா! இதுவா சேதி?” என எல்லாரும் நகைக்கும்வகையில், அசதியாடுகின்றாள் திருமகள். அசதியாடுதல் என்பது கேலி செய்து நகைத்தல் எனப்பொருள்படும். நமது அரசிளங்குமரி என்ன செய்தாளாம்? அவளுடைய முடியோ வணங்காமுடி. பின்னே? இமயம் வரை சென்று, செல்லும் வழியெல்லாம், அரசர்களை வென்று வாகைசூடியவளாயிற்றே! ஆனாலும் தோழிகளின் இந்தக் குறும்பான அசதியாடலில் அந்த வணங்காமுடியும் மிகுதியான நாணத்தால் வணங்கித் தலைகுனிகின்றதாம். முகம் சிவக்க, கன்னங்கள் பூரிக்கத் தடாதகை நாணத்தில் தலைகுனியும் அழகை வருணிக்கவும் இயலுமா?
செவிலித்தாய்க்கு இதைக்கண்டு உள்ளம் நெகிழ்ந்துவிடுகிறது; தடாதகைக்கு உதவ முற்படுகிறாள். சிறுபெண்களையெல்லாம் ஒரு செல்ல அதட்டல்போட்டு நகர்த்திவிட்டு, தடாதகையின் அருகே சென்று அவள் கூந்தலை வருடிவிட்டு, வாய்மூடி மௌனியாகிவிட்டவளை, “அந்த வாயாடிகள் கிடக்கட்டும்; நீ பொன்னூசல் ஆடம்மா,” என வேண்டுகிறாள்.
இங்கு தடாதகையின் தலைநகராகிய மதுரையின் பெருமையை அச்செவிலியின் வாயிலாகப் புலவர் குமரகுருபரனார் கூறுவது மிகுந்த நயம்வாய்ந்து படிக்க இன்பமூட்டுகின்றது.
இளைய சிறுமிகள் கூந்தலை விதம்விதமாக முடித்துள்ளனர். இதனை ஐம்பாற்கூந்தல் என்றார். (அதாவது முடி (முடிச்சு), கொண்டை, சுருள், குழல், பனிச்சை என ஐந்து வகைகளாக முடியப்படுமாம். கூந்தல் அலங்காரத்தில் மகளிரும் இளைய சிறுமிகளும் என்றுமேதான் ஆவல்காட்டியுள்ளனர் என இதனால் அறிகிறோம்!) ஆனால் அது கூதிர்காலத்தின் பனியில் ஆற்றாமலிருக்கிறதாம். ஈரமாக உள்ளதாம். ஆகவே அகில், சாம்பிராணி போன்றனவற்றைக்கொண்டு புகையை ஊட்டி அக்கூந்தலை உலர்த்துகின்றனர் அச்சிறுமியர். இப்புகையை மடுத்த வண்டுகள் ஆண்வண்டும் பெண்வண்டுமாகச் சேர்ந்து கூடித் தழுவுகின்றனவாம். அத்தகைய பெரிய வயல்களைக் கொண்ட மதுரை நகரின் தலைவியானவளே பொன்னூசல் ஆடுவாயாக! சொக்கநாதனான சிவபிரான் புழுகுநெய்யைப்பூசி சுந்தரனாக அழகுதிகழ இருக்கிறான். அவனுடைய அழகுக்கு கொடிபோன்ற உன்னையல்லால் வேறுயார் ஒத்தவர்? நீ பொன்னூசலாடுக!’ என்கிறாள் செவிலித்தாய்!
தடாதகையாட, குமரகுருபரனாரின் அழகுத்தமிழும் அழகான கவிதை ஊசலேறி ஆடுகிறது!
ஒல்குங்கொடிச்சிறு மருங்குற் கிரங்கிமெல்
ஒதிவண்டார்த்தெழப்பொன்
ஊசலைஉதைந்தாடும் அளவின்மலர் மகளம்மை
உள்ளடிக்கூன்பிறைதழீஇ
மல்குஞ்சுவட்டினை வலம்புரிக் கீற்றிதுகொல்
வாணியென்றசதியாடி
மணிமுறுவல்கோட்டநின் வணங்கா முடிக்கொரு
வணக்கநெடுநாண்வழங்கப்
பில்குங்குறும்பனிக்கூதிர்க் குடைந்தெனப்
பிரசநாறைம்பாற்கினம்
பேதையர்கள்ஊட்டும் கொழும்புகை மடுத்துமென்
பெடையொடுவரிச்சுரும்பர்
புல்குந்தடம்பணை உடுத்துமது ரைத்தலைவி
பொன்னூசல்ஆடியருளே
புழுகுநெய்ச்சொக்கர்திரு அழகினுக் கொத்தகொடி
பொன்னூசல்ஆடியருளே
(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- ஊசற்பருவம்- குமரகுருபரர்)
*********
இறைவனான சிவபிரான் எல்லாமாக இருப்பவன்; எவ்வடிவிலும் உள்ளவன்; எங்கும் இருப்பவன்; என்றும் அம்பிகையை விட்டுப் பிரியாது நிற்பவன். ஊசலாடும் அன்னையைக் காணும் புலவர், அவளை இணைபிரியாத ஈசன் இங்கும் என்னென்ன வடிவில் உள்ளான் என படிப்போரின் மெய்சிலிர்க்க விளக்கியருளுகிறார். அன்னையிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது:
“தடாதகை! உனது ஊஞ்சல் பெரிய மாணிக்கங்களை அழுத்திச் செய்த பொன்னூஞ்சல்; உன் புகழைப்பாடி நிற்கிறார்கள் தேவலோக மாதரான அரம்பை ஊர்வசி முதலியோர். அதனைக் கேட்டவண்ணமே நீயும் ஊஞ்சலில் ஆடியபடி புன்முறுவல் பூக்கிறாய். ஆகா! அந்த முறுவலுக்கும் விலையுண்டோ தாயே! அகில உலகங்களையும் அரவணைத்துக் கருணைபொழியும் புன்னகை அல்லவா அது?முழுநிலவொளியென விரியும் அதனை இடைவிடாது நுகர்கின்றது ஒரு சகோரப்பறவை- அதுவே எம்பெருமான். அப்புன்னகைக்கு முழுமுதல் உரிமையாளனும் அவனே அல்லவோ! அத்துடன் அவன் நின்றுவிடவில்லை. உன்னுடைய கூந்தலில் அணிந்துள்ள நறுமணம் பொருந்திய மலர்களின் தேனை உண்ணும் வண்டாகவும் இருந்து ரீங்காரம் செய்தபடி உன்னையே வளையவருகிறான். இன்னும் அவன் தன் தேவியான உன் அழகினை முழுவதாகக் கண்டு களிக்கவில்லை போலும். உன் திருக்கையில் நீ ஏந்திய பச்சைக்கிளியாகவும் அமர்ந்திருப்பதும் அவனே,” என்கிறார்.
மதுரை மாநகரின் சிறப்பினையும் விளக்கப் புலவர் மறக்கவில்லை. அழகான தேவமங்கையர் துளைந்து நீராடியதனால் குங்குமச்சேறு அருவிநீரில் கரைந்துள்ளது. அதில் மூழ்கியெழுந்த ஒரு களிறு தன்னுடம்பில் அச்சேறு படிந்ததனால் தனது பிடியிடம் செல்ல அஞ்சி நிற்கின்றதாம்- ஏனெனில் ‘வேறொரு பிடியுடன் களித்து இன்புற்று வருகின்றது இக்களிறு’ என எண்ணுமாம் இதன் உரிமைப்பிடி. எவ்வாறு சிவபெருமான் மீனாட்சிக்கே உரியவரோ அதுபோன்றே இக்களிறும் தனது பிடிக்கே உரியதாகும்! “அத்தகைய அழகான, பொன்னாலான மாடங்கள் நிறைந்த கூடல் எனும் ஊரின் பெரும்செல்வியே! பொன்னூசலாடி அருளுக,” என வேண்டுகிறார்.
கொன்செய்தசெழுமணித் திருவூசல் அரமகளிர்
கொண்டாடஆடுந்தொறும்
குறுமுறுவல் நெடுநில வருந்துஞ்சகோரமாய்க்
கூந்தலங்கற்றைசுற்றும்
தென்செய்தமழலைச் சுரும்பராய் மங்கைநின்
செங்கைப்பசுங்கிள்ளையாய்த்
தேவதே வன்பொலிவ தெவ்வுருவு மாமவன்
திருவுருவின்முறைதெரிப்ப
மின்செய்தசாயலவர் மேற்றலத் தாடிய
விரைப்புனலின்அருவிகுடையும்
வெள்ளானை குங்குமச் செஞ்சேறு நாறமட
மென்பிடியைஅஞ்சிநிற்கும்
பொன்செய்தமாடமலி கூடற் பெருஞ்செல்வி
பொன்னூசல்ஆடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக் கொத்தகொடி
பொன்னூசல்ஆடியருளே
(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- ஊசற்பருவம்- குமரகுருபரர்)
அன்னை மீனாட்சி பொன்னூசல் ஆடுகிறாள்; நமது இதயங்களாகிய ஊசலிலும் அமர்ந்து இடையறாது ஆடி நம்மை வழிநடத்தியும் செல்கிறாள். அவள் திருவடிகளில் பணிந்து, இச்சிறு கட்டுரையை நவராத்திரி சமயம் அவளுக்குக் காணிக்கையாக்கி, இதில் காணும் முதல் பாடலின் கருத்திற்கேற்ப சில ஆண்டுகளுக்கு முன்பு நவராத்திரி கொலுவில் நான் செய்துவைத்திருந்த காட்சியின் புகைப்படத்தினை வாசகர்கள் கண்டு மகிழ இணைத்துள்ளேன்.
இன்னும் தொடர்ந்து இத்தகைய பாடல்களைக் கண்டு களிப்போம்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
*************