நவராத்திரி நாயகியர் (3)
க. பாலசுப்பிரமணியன்
காசி ஸ்ரீ விசாலாட்சி
கங்கைக் கரையினிலொரு கலங்கரை விளக்கம்
காசினி காத்திடும் கருணையின் வடிவம்
கண்களில் அருளை வெள்ளமாய் பெருக்கும்
கலங்கிடும் நெஞ்சிற்குக் காசியில் தரிசனம் !
வேதங்கள் ஒலித்திடும் வேஷங்கள் கலைந்திடும்
வேள்விகள் வளர்ந்திடும் விளக்கங்கள் கிடைத்திடும்
வென்றதும் வீழ்ந்திடும் வீழ்ந்ததும் வென்றிடும்
விடியலில் கங்கையில் விசாலாட்சி தரிசனம் !
அன்னையின் கண்களில் கருணையின் வெள்ளம்
அம்மையின் கால்களை கங்கையே தழுவும்
ஆசையைத் துறந்தோர் அவளிடம் புகலிடம்
அடைக்கலம் பெற்றதும் முக்தியும் கிட்டிடும் !
அன்னம்போல் அழகுடன் அமைதியே முகத்தினில்
அன்னபூரணி ! அவளுக்கு நிகரில்லை உலகினில்
அலைகின்ற மனதினில் மாயையை நீக்கியே
அமைதியை அருளிடும் அவளிரு கண்விழி !
சதியாய் வந்தவள் சக்தியின் சந்நிதி
சாம்பவி சங்கரி சாமுண்டி யோகினி
சங்கரன் துணைவி தர்மத்தின் தேவதை
சலனங்கள் நீக்கியே சமநிலை தருவாள்!
மலையனை மணந்தவள் மகிஷனை அழித்தவள்
மன்மதன் வென்றவள் மங்கலம் நிறைந்தவள்
மனதினில் நிறுத்தியே நிறைவுடன் அழைத்தால்
மகிழ்வுடன் நிற்பாள் கொலுவினில் குணவதி !